Saturday 3 October 2020

எஸ்.பி.பியும் இயக்குனர் ஸ்ரீதரும் -

ஆயிரம் நிலவே வா 4 எஸ்.பி.பியும் இயக்குனர் ஸ்ரீதரும் இயக்குனர் ஸ்ரீதர் தமது படங்களில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர். அவர் பாடல்களைப் படமாக்கும் விதமும் புதுமையானது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் பாடல்களைப் பார்த்தால் தெரியும் .நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலை ஒரு கதவு மூடி திறப்பதை காட்சிப்படுத்தி படமாக்கிய விதம் அருமையானது. அதே போல் பெரும்பாலும் இன்டோரில் ( வீட்டுக்குள் அல்லது மருத்துவமனைக்குள்) நடப்பது போன்ற காட்சியமைப்புகளுக்கு ஏற்ப பாடல்களைப் படமாக்கியதில் மிகப்பெரிய கலைஞர் அவர். ஸ்ரீதர் தாம் தயாரித்த உத்தரவின்றி உள்ளே வா மற்றும் தாம் இயக்கிய அவளுக்கென்று ஓரு மனம் , சாந்தி நிலையம் போன்ற படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வாய்ப்பு தந்தார். அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்ற பாடலை மழையில் ஜெமினி கணேசன் பாடுவதாக ஸ்ரீதர் படமாக்கியிருப்பார். அதில் தொடக்கத்தில் எஸ்.பி.பி பாடிய நீளமான ஹம்மிங் திரையில் ஒலிக்கத் தொடங்கியதுமே பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. ரசிகர்கள் பாடல்களுக்காகவே படத்துக்கு மீண்டும் மீண்டும் வந்தனர். அதே போன்று சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற டூயட்டை பி.சுசிலாவுடன் எஸ்.பி.பி பாடினார். இன்று வரை மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. உத்தரவின்றி உள்ளே வா படத்தை ஸ்ரீதர் இயக்கவில்லை. என்ற போதும் அதில் உத்தரவின்றி உள்ளே வா என்ற டைட்டில் பாடலுக்கு டி.எம்.எஸ். எஸ்.பி.பி. எல்.ஆர் ஈஸ்வரியை பாட வைத்தார் எம்.எஸ்.வி. நாகேஷ்க்கு டி.எம்.எஸ் குரலையும் ரவிச்சந்திரனுக்கு இளமையான எஸ்.பி.பியும் பாட பாடல் செம ஹிட்டானது. அதே படத்தில் உன்னைத் தொடுவது இனியது என்ற பாடலையும் பாடிய எஸ்.பி.பி பாடலின் ஒரு சிறிய பிட்டுக்கு நாகேஷூக்கும் குரல் கொடுத்திருப்பார். எஸ்.பி.பி குரலில் நாகேஷ் பாடியதும் இதுதான் முதல் முறை. மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி என்று எஸ்.பி.பி. பிசுசிலா பாடிய பாடலும் இப்படத்தில் மிகவும் பிரபலமானது. பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஸ்ரீதர் எஸ்.பி.பியை பாட வைத்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்று இளையராஜா இசையில் வாலி எழுதிய பாடல் அற்புதம். பாடலின் தொடக்கத்திலேயே படத்தில் ஸ்ரீபிரியா கமலிடம் வாட் எ லல்வி சாங் என்பார் .உண்மைதான். அதே படத்தில் வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொகையறாவுடன் என்னடி மீனாட்சி என்று எஸ்.பி.பி. பாடிய பாடல் இன்றளவில் மேடைப்பாடல்களில் தனி இடம் பெற்றுள்ளது. கமலின் நடிப்பும் நடனமும் ரஜினிகாந்த்தின் ரியாக்சனும் இதில் சிறப்பாக இருந்ததும் ஒரு காரணம். தென்றலே என்னைத் தொடு படத்தில் கவிதை பாடு குயிலே குயிலே, புதிய பூவிது பூத்தது என்ற பாடல்களை எஸ்.பி.பி. மோகனுக்காக பாடினார். அதை விட முத்தாய்ப்பாக நினைவெல்லாம் நித்யாவில் பனிவிழும் மலர்வனம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், தோளின் மேலே பாரம் இல்லை , நீதானே எந்தன் பொன் வசந்தம் என்று எஸ்.பி.பி பாடிய பாடல்கள் தேனிசையாக இனித்தன. பாடல்களை வைரமுத்து எழுத இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதர் எம்.ஜி.ஆருக்கு இயக்கிய மீனவ நண்பன் படத்திலும் எஸ்.பி.பியின் நேரம் பவுர்ணமி நேரம் என்ற இனிமையான பாடல் இடம் பெற்றது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...