Tuesday 25 October 2016

கேள்வி-பதில் 1

பல விஷயங்களை பேச விரும்பினாலும் வாய்ப்பு அருகி விடுகிறது. எனவே வாரம் ஒருமுறையாவது கேள்வி பதில் மூலம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பர்களும் கேள்விகளை அனுப்பி வைக்கலாம்
செந்தூரம் ஜெகதீஷ்

--------------------------------------------------------------------

கே. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் பரப்புவதால் கைது செய்வது சரிதானா...

பதில்- ஒருவரின் உடல்நிலை மோசமாகிவிடும்போது அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என வேண்டுவதே மனித பண்பு. வதந்திகள் பரப்புவோர் சாடிஸ்ட்டுகள்தாம்.

கே. மேன் புக்கர் விருது கருப்பின எழுத்தாளர் பால் பீட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து....

பதில் -  பால் பீட்டி கருப்பின எழுத்தாளர். அமெரிக்கர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. தி செல் அவுட் நாவலுக்காக சுமார் 70 ஆயிரம் டாலர் பரிசு பெறுகிறார். நாவலின் தொடக்கமே நான் கருப்பின மனிதன் ,ஆனால் எதையும் திருடவில்லை என்பது நம்ப முடியாமல் இருக்கும் உங்களுக்கு என்று ஆரம்பிக்கிறார். நகைச்சுவையான சாடல்களுக்காக இந்த நாவலுக்கு பரிசு கிடைத்திருக்கிறது

கே. சென்னையில் இலக்கியக் கூட்டங்கள் எப்படி நடக்கின்றன....
பதில்-  நானும் செந்தூரம் இலக்கிய வட்டம் சார்பில்  நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அவை தினமணி, செந்தூரம் ஆகிய இதழ்களில் பதிவு செய்யப்பட்டதுடன் சரி. வெளியே யாருக்கும் தெரியாமல் காற்றோடு போய் விட்டது. நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் என்ற வாலியின் வரிகள்தான் மிச்சம். கூட்டம் நடத்திய செலவில் பத்து புத்தகம் போட்டிருந்தால் புத்தகக் கடைகளின் அலமாரிகளில் எனது நூல்களும் கிடைத்திருக்கும். இப்போது நான் புத்தகமே எழுதாத வெளியிடாத எழுத்தாளனைப் போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். தற்போது நிறைய செலவுகளை செய்து சிற்றுண்டி காபியுடன் இலக்கியக்கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு ஏராளமான புரவலர்களும் அள்ளி தருகிறார்கள். சில பேருக்கு மட்டும்தான் கூட்டம் கூடுகிறது.

கே. சமீபத்தில் படித்த புத்தகம்

கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ஹிமாலயம் என்ற பயண நூல். குருநித்ய சைதன்ய யதியின் சீடரான ஷௌகத் என்பவர் கீதா என்ற தோழியுடன் இமய மலைப் பயணம் பற்றி எழுதியது. மிகவும் சுவையான அற்புதமான அனுபவங்களின் தொகுப்பு. ஆன்மாவையும் இயற்கையையும் இணைக்கும் மையப்புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பதால் இதர பயண நூல்களை விடவும் சிறப்பாகவே உள்ளது. அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு. அவசியம் படிக்க வேண்டிய நூல் .இந்நேரத்தில் குரு நித்ய சைதன்ய யதியை நேரில் அறிமுகம் செய்து அவருடன் சில நாட்களை கழிக்கச் செய்த நண்பர் ஜெயமோகனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

கே. குரு நம்பிக்கை உண்டா உங்களுக்கு

குரு என எனது மதம் எனக்கு போதித்தது குருநானக்கை. நான் பிறப்பால் சீக்கியன்தான். ஆனால் இந்துக்களின் வழி நடப்பவன். குருநானக்கிற்குப் பிறகு நான் இலக்கிய ஆசானாக வரித்துக் கொண்டது பாரதியை. அதன் பிறகு ஓஷோ. என் மானசீக குரு அவர்தான். அடுத்து நித்ய சைதன்ய யதியையும், சென்னை சூஃபி தர் ஆலய தாதா ரத்தன்சந்த் ஆகியோரையும் நிஜ வாழ்வில் குருவாக மதித்து கால்பணிந்திருக்கிறேன். குரு ஒரு வழிகாட்டி பல நேரங்களில் மனசாட்சியும் அற உணர்வும்தான் குருவாக வழிகாட்டி ஆசிகளைப் பொழிகிறது.

Monday 3 October 2016

கவிதை-எனது மரணம்

எனது மரணம் -செந்தூரம் ஜெகதீஷ்


எப்படி நிகழும் எனது மரணம்?
மாரடைப்பா
தற்கொலையா
கொலை செய்யப்படுவேனா
சாலை, ரயில் விபத்தில் பலியாவேனா
நிலநடுக்கம், மழை,புயலில் வீழ்வேனா
அல்லது
வன்முறை, தீவிரவாதத்தால் சாய்க்கப்படுவேனா?
தெரியவில்லை.
எப்படியும் ஒருநாள் இறக்கத்தான் போகிறேன்.
எப்படி இறப்பேன் என்பதை அறிவதில் என்னவோ ஆர்வம்
இறப்பதற்கு முன் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளம்.
சோம்பலாக கழிக்கும் நேரங்களை சுறுசுறுப்பாக்க வேண்டும்.
சோகங்களை சுகங்களுக்காக தேடிப் பெற்றேன்,
அவற்றை சுமக்கப் பழக வேண்டும்
சும்மா இருந்தாலும் சும்மா இல்லாமல்
ஓராயிரம் விடயங்களுக்காக அல்லாடுகிறேன்
அதில் அமைதியை காண வேண்டும்.
செல்போன், நட்புவட்டங்களை தாண்டி
தனிமையில் என்னை இருத்திக் கொள்ள வேண்டும்.
யாரும் யாருடனும் இல்லை என்ற வாழ்வின் தரிசனத்தை
ஒவ்வொரு கணந்தோறும் கற்றுணர வேண்டும்.
எப்படி நிகழும் எனது மரணம்
எப்போது நிகழும் எனது மரணம்.
எந்த நாள், எந்த தேதி, எந்த ஆண்டு எந்த கணம்  என்பது
எனக்குத் தெரியாது.
தெரிய வேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
ஏதேனும் ஒருநாளில் அது நிகழ்ந்துவிடும்.
நான் இல்லாமல் போனாலும் எழுதிய இந்தக் கவிதை இருக்கும்.
இக் கணத்தில் பதிவாகி.

உலக சினிமா -மரணத்திற்கு முந்தைய கணங்கள்

குமுதம் தீராநதி அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது.....

உலக சினிமா 
THE NOTE 
மரணத்திற்கு முந்தைய கணங்கள்....
செந்தூரம் ஜெகதீஷ்
மூலக்கதை -ஏஞ்சலா ஹன்ட் எழுதிய நாவல்
-இயக்குனர் -டவுக்லஸ் பார்


விமான விபத்தில் உயிரிழந்த யாரோ ஒருவர் தனது மகளுக்கோ மகனுக்கோ கடைசி சில கணங்களில் உருக்கமான ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். எழுதியவர் யார். யாருக்காக எழுதினார். ஏன் எழுதினார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி திரைப்படம் தி நோட். இது பிரிட்டனின் ஹால்மார்க் சேனலில் வெளியாகி பின்னர் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் 2007 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மரணம் நிச்சயமாகிவிட்ட நிலையில் உங்கள் பிரியமானவர் ஒருவருக்கு நீங்கள் கூற விரும்பும் கடைசி செய்தி என்ன என்று இப்படம் கேள்வி எழுப்புகிறது.
மிடில்புரோ டைம்ஸ் நாளிதழின் பத்தி எழுத்தாளரான பியட்டன் என்ற நடுத்தர வயது பெண்மணிக்கு அலுவலகத்தில் மரியாதை குறைவு. காரணம் அவருடைய ஹார்ட் ஹீலர் என்ற இதயத்திற்கு இதம் அளிக்கும் பத்திக்கு வாசகர்கள் எண்ணிக்கை குறைவு. மற்ற பத்தி எழுத்தாளர்களுக்கு தினமும் ஆயிரம் மெயில் வரும் போது இவருக்கு நூறு மட்டுமே வருகிறது. ஒரு பெரிய பத்திரிகையின் உள்ளே அமர்ந்து சிறுபத்திரிகை போல் அவர் தமது பத்தியை நடத்தி வருகிறார். மேலதிகாரியான பெண்மணி அவருக்கு கிறிஸ்துமஸ் வரை 3 வார கால கெடு தருகிறார். அதற்குள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் கிறிஸ்துமஸ் முதல் பத்தி நிறுத்தப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.
அந்த நேரத்தில்தான் ஒரு விமான விபத்து குறித்த செய்தி பரவுகிறது.PT 818 என்ற பயணிகள் விமானத்தின் விமானி அறையில் தீப்பிடித்தது. அந்த விமானம் தரையிறக்க அவசரமாக முயன்றும் முடியவில்லை.விமானம் தீ்ப்பிடித்து எரிந்து கடலுக்குள் விழுந்துவிடுகிறது.இதில் 137 பயணிகள் உயிரிழக்கின்றனர்.விமானம் எங்கே விழுந்தது என்று கடலுக்குள் தேடுகிறார்கள். விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க ஒருவாரகாலமாகலாம். அல்லது கிடைக்காமலே போகலாம். கடலின் ஆழத்திற்குள் விமானம் கரைந்துவிட்ட கதைகளை அண்மையிலும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
விமானம் விழப்போகிறது. அனைவரும் உயிரிழக்கப் போகிறோம் என்ற நிச்சயமான நிலை ஏற்பட்டு விட்ட பிறகு விமானத்தில் உள்ள 137 பயணிகளும் கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் என்ன நினைத்திருப்பார்கள்?வாழ்க்கையில் தாங்கள் தவறிய விஷயங்களுக்காக வருந்துவார்களா...பிரியமான உறவுகளை இழப்பதற்காக அழுவார்களா...சிறிய விஷயங்களுக்காக கணவனுடனோ மனைவியுடனோ குழந்தைகளுடனோ சண்டை போட்டதற்காக வேதனைப்படுவார்களா....முடிக்க வேண்டிய காரியங்களை முடிக்காமல் போகிறோமே என்று ஆற்றாமையில் அலறுவார்களா....
இந்த சிந்தனைதான் அப்போது பியட்டனை ஆக்ரமிக்கிறது. கடற்கரையில் வேதனையுடன் தங்கள் உறவுகளுக்கா மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திருக்கும் ஓரிருவரை சந்தித்துப் பேச முயற்சிக்கிறார். அப்போது டிரம்ப் ஹாரிஸ் என்ற தொலைக்காட்சி செய்தியாளர் குறுக்கிட்டு மைக்கை நீட்டி பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பொருட்படுத்தாமல் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பதைப் பார்த்து பியட்டன் பொருமுகிறார். எப்படி இந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக் கொள்கிறார்கள். தாயையோ தந்தையையோ மகனையோ மகளையோ பறிகொடுத்து கண்ணீர் சிந்தும் ஒருவர் முன் மைக்கை நீட்ட இவர்கள் மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது என்று பியூட்டன் தமது அலுவலக சகியான மேகியுடன் பேசும்போது கூறுகிறார். ஆனால் டாம் ஹாரிஸ் ஒரு தொலைக்காட்சி நட்சத்திரம். மிகப்பெரிய நட்சத்திரம்.
அப்போது பியட்டனின் மனதுக்குள் ஒரு பழைய நினைவு ஓடுகிறது. சில போலீஸ்காரர்கள் மழை கொட்டும் ஒருநாளில் அவர் வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். உங்கள் கணவர் கார்விபத்தில் இறந்து விட்டார் என்று அவர்கள் கூற பியட்டன் மயங்கி விழுவதாக அக்காட்சி ஓடி மறைகிறது.
விபத்தில் உற்றாரை இழக்கும் வேதனையை பியட்டன் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததையே இக்காட்சி சித்தரிக்கிறது. கதைக்கு இதுவே முக்கிய காட்சியாகவும் பின்னர் மாறுகிறது.
விபத்து நடந்த கடலின் கரையில் வழக்கம் போல் ஈரமான நினைவுகளுடன் பியட்டன் நடந்து வரும்போது கடல் அலையில் ஒதுங்கிய சிறிய பிளாஸ்டிக் உறை அவர் காலில் தட்டுப்படுகிறது. அதை எடுக்கிறார். அதனுடன் கடலில் விழுந்த விமானத்தின் சிறிய துண்டு ஒன்றும் இருக்கிறது. எனவே இந்த பிளாஸ்டிக் உறை விபத்துக்குள்ளான  விமானத்திலிருந்து விழுந்ததுதான் என்று உறுதி கொண்டு அதை எடுத்துப் பார்க்கும் பியட்டனுக்கு அது ஒரு தங்கப்புதையல் என்று புரிகிறது. தமது மகனுக்கோ மகளுக்கோ விபத்தில் உயிரிழந்த ஒரு தந்தையின் இறுதிக் குறிப்புதான் அந்த  பிளாஸ்டிக் உறைக்குள் இருக்கிறது.
டி என்ற பெயருடைய நபருக்கு அவருடைய தந்தை எழுதியதாக அந்த குறிப்பு உள்ளது. அந்த பிளாஸ்டிக் உறையில் சில குக்கிஸ் ( பிஸ்கட்) துண்டுகள் இருக்கின்றன. குக்கிஸ் சாப்பிட்ட உறையில் அந்த குறி்ப்பை அந்த கடைசி மூன்று நிமிடங்களில் எழுதி தமது மகனுக்கோ மகளுக்கோ அந்த தந்தை அனுப்பி வைத்துள்ளார். அதை கொண்டு போய் உரியவரிடம் சேர்க்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமக்கு இருப்பதை பியட்டன் உணர்கிறார். ஆனால் யாருக்கு...
இந்த கேள்வியுடன் அவர் தமது பத்தியில் எழுதுகிறார். அவர் எழுத்தை பல்வேறு விபத்துகளில் உறவினர்களை பறிகொடுத்த பல்லாயிரம் பேர்கள் மட்டுமல்ல, இதயத்தில் ஈரம் உலராத பல லட்சம் வாசகர்களும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். யாருக்காக அந்த குறி்ப்பு யாரால் எழுதப்பட்டது என்ற ஆர்வம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது.
மேன்டியின் உதவி மூலம் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை தேடிக் கண்டுபிடிக்கிறார். அதில் மூன்று பெயர்களுக்கு மட்டுமே டி என்ற பெயரில் மகனோ மகளோ இருப்பதாக அறிகிறார். அந்த மூன்று பேரை சந்திக்க திட்டமிடுகிறார் பியட்டன்.
இந்நிலையில் பியட்டனின் அலுவலக நண்பர் புலிட்சர் பரிசு பெற்ற மற்றொரு எழுத்தாளர் கிங்ஸ்டன் என்ற கிங் பியட்டனுக்கு துணையாக இருக்கிறார். கணவரை விபத்தில் பறிகொடுத்த உனக்கு விபத்தால் உயிருக்கு உயிரானவர்களை பறிகொடுத்தவர்களின் வேதனை புரியும். எழுது என்று அவர் ஊக்குவிக்கிறார். படிக்கட்டில் அமர்ந்து அவர்கள் பேசும் போது என்னைப்பற்றிய விவரம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று பியட்டன் கேட்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் நீ வேலைக்கு சேர்ந்த போது கூகுள் மூலம் உன்னைப் பற்றிய விவரம் சேகரித்தேன் என்கிறார் கிங்.அடப்பாவி நாலு வருஷமா என்னை சைட் அடிச்சு பின்தொடர்கிறாயா என்று சந்தோஷமாக சிரிக்கிறார் பியட்டன். இரண்டு நெருங்கிய நண்பர்களுக்கு இடையில் காதல் மெலிதாய் மலர்கிறது.
கிங்கின் மனைவி வசதியான ஒருவன் கிடைத்ததும் ஓடிப்போனாள்.அவருடைய 19 வயது மகன் தூரத்தில் கல்லூரியில் படித்து வருகிறான். ஆனால் தாயைப் பிரிய நேர்ந்ததற்கு தந்தைதான் காரணம் என்று அவர் மீது அவனுக்கு கோபம். பலமுறை அவனை வீட்டிற்கு வருமாறு அழைத்தாலும் அவன் வருவதில்லை.
இது ஒருபுறமிருக்க பியட்டனிடம் தொலைபேசியில் பேசும் டிரம்ப் ஹாரிஸ் இந்த தேடலை இருவரும் சேர்ந்து செய்யலாம் என்று கோரிக்கை விடுக்கிறார். தொலைக்காட்சி மூலம் தேடினால் பல லட்சம் பேர் பார்க்க வாய்ப்பு இருக்கும் உடனடியாக தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகிறார் டிரம்ப். ஆனால் பியட்டன் ஏற்கவில்லை. என்னிடம் உள்ள குறிப்பு உங்களிடம் இல்லை .எனவே இது முழுவதும் எனக்கே சொந்தமான தேடல் என்று நிராகரித்து விடுகிறார். அப்போது மேன்டியைப் பயன்படுத்தி டிரம்ப் பியட்டனின் பயணத் திட்டங்களை அறிகிறார். பியட்டனை பின்தொடர்கிறார்.
டி- யார் என்று தேடும் பணியை தொடங்குகிறாள் பியட்டன். அலுவலகத்தில் அவர் மதிப்பு கூடுகிறது. வாசகர்கள் எண்ணிக்கை பெருகுகிறது. அவருடைய பத்தியைப் படித்த நிர்வாகஇயக்குனர் பியட்டன் பயணம் செய்ய விரும்பினால் செலவுகளை ஏற்கத் தயார் என்று தெரிவிக்கிறார். உற்சாகமாக தமது பணியைத் தொடங்குகிறார் பியட்டன். முதல் பயணமாக அவர் செயின்ட் லூயிசுக்குப் போகிறாள். அந்த சிற்றூர் ஒரு ஆன்மீகத் தலம். அங்குள்ள  கிறித்துவ தேவாலயம் பிரசித்தி பெற்றது.அதில் பாதிரியாராக இருப்பவர்தான் சகோதரர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ரெவரண்ட்  டிம் .அவருடைய அப்பாவும் அந்த விமான விபத்தில் பலியானார். மூன்று பேரில் முதல் டி இவர்தான் .ஆனால் அந்தக் குறிப்பின் நகலைப் பார்த்து அது தன் தந்தையின் கையெழுத்தல்ல என்றும் தமது தந்தை தம்மை டி என்று அழைப்பதில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் அந்த குறிப்பு அவருக்குள் தந்தையை குறித்த நினைவுகளைத் தூண்டி விடுவதாக கூறுகிறார். சிறுவயது முதல் தாம் அந்த தேவாலயத்தில் வளர்ந்ததாகவும் இறைவன் மீது தமது தந்தை தமக்கு நம்பிக்கையை விதைத்ததாகவும் அவர் இடத்தில் இன்று தாம் தேவாலயத்தின் பொறுப்பு வகிப்பதாகவும் பாதிரியார் கூறுகிறார். தேடுகிறவர்களுக்கு வழிகாட்ட தேவன் வானத்திலிருந்து ஒரு நட்சக்திரத்தை அனுப்புவாராமே என்ற பியட்டனின் கேள்வியை ஆமோதித்து அங்கு கிறிஸ்துமசுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த வெள்ளி காகித நட்சத்திரங்களில் ஒன்றை பியட்டனுக்குத் தருகிறார் பாதிரியார். மனப்பூர்வமான தேடல்தான் அந்த நட்சத்திரம் என்பது அவருடைய பதில். உன் கையி்ல் உள்ள குறி்ப்பே உன் தேடல் அதுவே உன் வழிகாட்டும் வெள்ளி நட்சத்திரம் என்கிறார் சகோதரர் டிம்.
ஒரு நிமிடம் பொறுங்கள். இந்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நட்சத்திரங்கள் யார் என்று அறிய வேண்டாமா....பியட்டனாக நடித்தவர் ஜெனி பிரான்சிஸ் . பியட்டனின் அலுவலக நண்பர் கிங்ஸ்டனாக நடித்தவர் டெட்மிக் கிங்லி. தொலைக்காட்சி செய்தியாளர் டிரம்ப்பாக நடித்தவர் ரிக் ராபர்ட்ஸ். பியட்டனின் அலுவலக சகியான மேன்டியாக நடித்த நீக்ரோ பெண் கெண்டில் வில்லியம்ஸ். மிகவும் அற்புதமான இந்த நடிகர் நடிகைகளுடன் பாதிரியராக நடித்த ஜிம் கார்டிங்டனை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். சிறிய காட்சியே ஆனாலும் அந்த சில நிமிடங்களில் இறைமை கிறித்துவம் குறித்த தமது நம்பிக்கை ததும்ப அவர் பேசும் காட்சி ஒரு அழகிய சித்திரம். எல்லாம் இறைவனின் செயலே என்ற மாறாத நம்பிக்கை கொண்ட ஒரு மென்மையான மனிதனின் தூய்மையான அன்பும் பாசமும் தந்தையின் மீதான மதிப்பும் நம்மை நெகிழ வைக்கிறது. பியட்டன் மறுநாள் எழுதப்போகும் பத்தியிலும் இந்த விஷயங்கள் இடம் பெற உள்ளன. பியட்டன் ஒரு மகத்தான எழுத்தாளராக பரிணமிக்கிறார்.
ஆனால் பாதிரியார் பியட்டனை வழியனுப்ப கதவைத்திறந்ததும் மரியாதையே இல்லாமல் மைக்கை நீட்டி காத்திருக்கிறார் டிரம்ப். நீங்கள் அந்த குறிப்பைப்பற்றிஎன்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்க அதை பியட்டனிடமே வி்ட்டு விட்டேன் என்று பாதிரியார் கைக்காட்ட பியட்டனோ நோ கமெண்ட்ஸ் என்கிறாள். கேமரா முன்பு பிடுசி ( பீஸ் டூ கேமரா ) தரும் டிரம்ப், இந்த பாதிரியார்தான் அந்த குறிப்புக்குரியவரா என்பதை அறிய நாளை காலை செய்தித்தாளில் பியட்டனின் பத்திக்காக காத்திருக்க வேண்டும் என்று சைன் ஆஃப் பண்ணுகிறார்.
ஆனால் மேன்டி மூலம் தகவல் கறந்து டிம் பாதிரியார் அந்த குறிப்புக்குரியவர் அல்ல என்று தொலைக்காட்சியில் செய்தி பிளாஷ் நியூசாக வெளியாகிறது. எனது உழைப்பை திருடி விட்டார் டிரம்ப் என்று குமுறும் பியட்டன் தமது பத்தியில் முன்பு சொன்ன பாதிரியாருடனான நெகிழ்ச்சியான உரையாடலை தமது எழுத்தாற்றலால் மெருகூட்டுகிறார். வாசகர்கள் உருகிப் போய் விடுகிறார்கள். நெகிழ்ச்சியடைகிறார்கள். அந்த உருக்கத்தையும் நெகிழ்ச்சியையும் எழுத்தால்தான் தர முடியும், தொலைக்காட்சி ரிப்போர்ட்டிங்குகளால் தர முடியாது என்பதை நிரூபிக்கிறாள் பியட்டன்.
தமது பத்தியில் பியட்டன் பாதிரியார் டிம்மை சந்தித்தது பற்றி எழுதுகிறாள்...
"பாதிரியார் டிம்மை சந்தித்து விமானத்தில் திரும்பும் போது நினைத்தேன். இந்த விமானமும் விபத்துக்குள்ளானால் யாரிடம் நான் குட்பை சொல்ல விரும்புவேன். அப்படி ஒரு ஆன்மா கூட எனக்கு இறைவன் மி்ச்சம் வைக்கவில்லை. யாருமில்லாமல்தான் நான் தனித்து வாழ்ந்து வருகிறேன்.அப்போது தோன்றியது ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாள் போல் நினைத்து வாழ வேண்டும் என்று."
பியட்டனின் எழுத்துக்கு இரண்டாயிரம் இமெயில்கள் வருகின்றன. அப்போது மீண்டும் ஒரு பிளாஷ் பேக் ....கணவரை விபத்தில் இழந்த பியட்டன் தூக்கமாத்திரைகள் உண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். .மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை பார்த்துக் கொள்ளக் கூட முடியாத பலவீனமான நிலையில் அவர் இருந்ததால் ,அந்த குழந்தை ஒரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்படுகிறது.
இப்போது டிரம்ப் ஹாரிஸ் வேறு விதமான நெருக்குதலை பியட்டனுக்கு தருகிறார், அவருடைய பத்திரிகையின் சகோதர நிறுவனமான தொலைக்கைாட்சி சேனலில்தான் டிரம்ப் பணியாற்றுகிறார். எனவே அவருடன் இணைந்து டி யார் என்று கண்டுபிடிக்குமாறு பத்திரிகையின் மேலதிகாரிகள் மூலம் கார்ப்பரேட் நெருக்குதல் வருகிறது. ஆனால் திட்டவட்டமாக நிராகரித்து விடும் பியட்டன் இது முழுவதும் தமக்கே சொந்தமான தேடல் என்று கூறி தாம் வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று வெளியேறுகிறார். ஆனால் நிர்வாக இயக்குனர் 30 ஆண்டுகளாக அச்சு பத்திரிகைத்துறை சார்ந்தவர். அவர் பியட்டனின் உறுதியை மதிக்கிறார்.
பியட்டன் சந்திக்கும் இரண்டாவது நபர் டி பெயரில் உள்ள ஒரு பெண். டெய்லர் குவிஸ்ட் என்ற அந்தப்பெண் ஒரு இசைக்கலைஞர் பியானோவில் பாடல் இசைப்பவர். பாடல்களை எழுதுபவர். தன் பூனையுடன் தனியாக வாழும் டெய்லர் குவிஸ்ட் தம்மைப் போலவே பியட்டனும் பூனையுடன் தனியாக வாழும் நடுத்தர வயதுப் பெண் என்பதை அறிந்து இணக்கம் கொள்கிறார்.இருவரும் நெருங்கிய தோழிகளைப் போல் உரையாடுகிறார்கள். இந்த குறிப்பு தமது தந்தை எழுதியதல்ல என்கிறார் டெய்லர். தமக்கு 16 வயது ஆன போதே தமது காதல் விவகாரத்தால் தந்தை தம்மை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் கணவருடன் பிரிந்த பின் தனிமையில் இசையிலும் கவிதையிலும் ஆறுதல் அடைவதாகவும் டெய்லர் தமது வாழ்க்கையை விவரிக்கிறார்.இளம் வயதில் நாம் நம்மைப் பற்றியே அதிகமாக நினைக்கிறோம். நமது பெற்றோரின் உணர்வுகளையோ அவர்களின் தியாகங்களையோ அவர்களுக்கு நம்மீதுள்ள அக்கறையையோ பார்க்கத் தவறி விடுகிறோம். பெற்றோர் உண்மையான மனிதர்களாக இருப்பதைப் பார்க்க முடியாமல் இளமையின் அதிகாரம் நம்மைத் தடுத்து விடுகிறது. அவர்களின் கனவுகளை நிராகரித்து அவர்களை காயப்படுத்தி விடுகிறோம் என்று அந்த குறிப்பைப் பார்த்து தமது எண்ணங்களை கூறுகிறார் டெய்லர் குவிஸ்ட்.
குறிப்பு அவர் தந்தை எழுதியதல்ல என்ற போதும் தந்தையைப் பற்றிய இரண்டாவது மறுமதிப்பீட்டை செய்ய அது உதவியதாக கூறுகிறார். தமது தந்தையை மறுபரிசீலனை செய்ய வைத்ததாக கண்ணீர் விடுகிறார்.
உடைந்து போன வாழ்க்கையின் ஏதோ ஒரு இழையை மீண்டும் கோர்த்துக் கொள்ள அந்த குறிப்பு அது உரியவர்களல்லாதவர்களுக்கும் உதவுவதை பியட்டன் எழுதிக்கொண்டே போகிறார். அந்த எழுத்துகள் அவரையும் வாழ்க்கையில் தவற விட்ட அன்புமிக்க தருணங்களை மீண்டும் தேடுவதற்கான இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது. கிங்குடன் காதலை வெளிப்படுத்தி முத்தமிடுகிறார் பியட்டன். உங்கள் மகனை கிறிஸ்துமசுக்கு வீட்டுக்கு அழையுங்கள் நானே விருந்து சமைக்கிறேன் என்று கூறும் பியட்டனுக்கு தம்மைப்பற்றிய தகவல்கள் எப்படித்த தெரியும் என்று ஆச்சரியப்படுகிறார் கிங். நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் சேர்ந்த போது புலிட்சர் விருது பெற்ற ஒரு எழுத்தாளர் பணிபுரிவதை அறிந்து ஆர்வத்துடன் கூகுள் மூலம் கிங் பற்றிய விவரத்தை சேகரித்ததை ஒப்புக் கொள்கிறார் பியட்டன். இருவருக்குமிடையில் காதல் முழுதாக மணம் வீசுகிறது. இனி நீ தனியாக இல்லை. துணையாக நானிருப்பேன் என்று அணைத்துக் கொள்கிறார் கிங்.
இதனிடையே இரண்டு பேரை சந்தித்த பியட்டன் மூன்றாவதாக சந்திக்க உள்ள நபர் யார் என்பதை டி என்ற முதல் வார்த்தை மூலம் அனுமானித்து விடும் டிரம்ப் அந்த நபரை சந்தித்து போலியாக நீதான் அந்த குறிப்புக்கு உரியவர் என்பதை ஒப்புக்கொள். லைவ் நிகழ்ச்சியி்ல் உன் பிரச்சினையைத்தீர்த்து வைக்கிறேன் என்று பேரம் பேசுகிறார். மூன்றாவது டி நபரான டேனர் வால்ட்டனுக்கு தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையில் சொத்தை தந்தை அவரது அண்ணனுக்கு  எழுதிக் கொடுத்து விட்டார். அண்ணனும் பொறுப்பாக வியாபாரத்தை கவனித்து செல்வத்தைப் பெருக்கி விட்டார். ஊதாரியாகவும் தறுதலையாகவும் வளர்ந்த டேனர் வால்ட்டன் தந்தையின் சொத்தில் உரிமைகோரி அண்ணன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் அவருக்குத் தடையாக இருப்பது தந்தைக்கு அவர் மீதான கோபம்தான். இந்த இறுதி மரணக்குறிப்பில் டி அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது உன் தந்தை என்று எழுதப்பட்டிருப்பதால் அதைக் காட்டியே வழக்கில் ஜெயித்துவிட முடியும் என்பது டேனரின் திட்டம். இதற்கு உதவுகிறார் டிரம்ப் ஹாரிஸ்.
ஆனால் அந்த குறிப்பு அவருடையது அல்ல என்று பியட்டனுக்கு நிச்சயமாக தெரிகிறது. உங்கள் தந்தை உங்களை டி என்று அழைப்பாரா என்று கேட்கும்போது இல்லை அவர் முழுப்பெயரான டேனர் என்றுதான் அழைப்பார் என்று அந்த இளைஞர் கூறும்போதே இந்த குறிப்புக்குரியவர் அவர் அல்ல என்று பியட்டனுக்கு உறுதிபடத் தெரிந்துவிடுகிறது.
ஆனால் அவரோ அது தமது தந்தையின் குறிப்புதான் என்று கூறுகிறார். டி என்ற பெயரில் வேறு யாருமில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்புகிறார் பியட்டன். அவர் விரும்பிய ஒரு முடிவு அந்த தேடலுக்கு கிடைக்கவில்லை. யாருக்கோ ஒரு அற்புதமான கிறி்ஸ்துமஸ் பரிசாக அந்தக் குறிப்பு கிடைக்கும் என்று நம்பிவந்த பியட்டன் தமது ஏமாற்றத்தை தமது வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்டால் இத்தனை நாளாக பரபரப்பாக வாசிக்கப்பட்ட அந்த பத்தி புஸ்வானம் போல் ஆகி விடும் என்றும் தாம் மீண்டும் பழைய மதிப்பற்ற நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என்றும் உணர்கிறார்.ஆனால் வேறு வழியில்லை.
இந்நிலையில் ஒரு திடீர் திருப்பம் நேரிடுகிறது. பத்தியை எழுதி முடித்து விட்டு அலுவலகத்திலிருந்து கொட்டும் மழையில் வீடு திரும்பும் பியட்டனிடம் ஒரு இளம் பெண் வந்து பேசுகிறாள். தமது பெயர் கிறிஸ்டின் என்று கூறும் அந்தப்பெண் தமது தந்தை எழுதிய அந்த குறிப்பு தமக்குரியது என்கிறாள்.உன் பெயர் கிறிஸ்டின்தானே என்று கேட்டால் ஆம் என் தந்தை என்னை செல்லமாக டி என்று அழைப்பார் என்கிறாள் அந்தப்பெண். அப்போது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவலை அந்த இளம்பெண் கூறுகிறாள். 16 ஆண்டுகளுக்கு முன்பு தமது உண்மையான தந்தை விபத்தில் பலியானதால் தமது உண்மையான தற்கொலைக்கு முயன்றதால் தம்மை இந்த வளர்ப்புத் தந்தை எடுத்து வளர்த்து வந்ததாக கூறுகிறாள் அந்தப்பெண். உடனடியாக அந்த இளம் பெண் தனது மகள்தான் என்று அடையாளம் தெரிகிறது பியட்டனுக்கு. யாருக்கோ கிறிஸ்துமஸ் பரிசாக தர தாம் பாதுகாத்து வைத்த குறிப்பு தமக்கே மிகப்பெரிய பரிசாக கிடைத்ததை நினைக்கிறாள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.
உண்மையான தாய் யார் என்று கூறாவிட்டால் இனி பேசமாட்டேன் என்று தந்தையுடன் தாம் சண்டையிட்டபோது அவர்  தொழில் நிமித்தமாக விமானத்தில் பயணித்தார் என்றும் தம்முடன் கோபமாக இருந்தார் என்றும் கூறும் கிறிஸ்டின் தம்மீதான கோபத்தை மறந்து தாயை அடையாளம் காட்ட நினைத்த தந்தை விமானம் விபத்துக்குள்ளானதையறிந்து டி அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற குறிப்பை எழுதியிருக்கலாம் என்றும் கிறிஸ்டின் கூறக்கூற அது முழுவதும் அச்சு அசலான உண்மை என்பது நிரூபணமே தேவையில்லாமல் புரிந்து விடுகிறது பியட்டனுக்கு.
மீண்டும் அலுவலகத்திற்கு விரைந்து சென்று முந்தைய பத்தியை ரத்து செய்ய வைத்து உண்மையான உரிமையாளரைப் பற்றி எழுதுகிறாள் பியட்டன்.
அப்போது கிங்கின் மகன் தாம் கிறிஸ்துமசுக்கு வீட்டுக்கு வருவதாக தந்தைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான். பத்தியைப் படித்து விட்டு தாயைத் தேடிமகளும் வருகிறாள். கிங் மற்றும் பியட்டன் ஒரு மகன், ஒருமகளுடன் புதிய குடும்பமாக கிறிஸ்துமசை கொண்டாட காத்திருக்கிறார்கள். அவள் கையில் இருந்த வெள்ளி காகித நட்சத்திரம் அவள் வாழ்க்கைக்கு ஒரு இனிய வழிகாட்டி விட்டதாக படம் முடிகிறது.
வாழ்க்கையில் நாம் தவற விட்ட அற்புதமான தருணங்கள், உறவுகளுக்கு இரண்டாம் வாய்ப்பு நமக்கு கிடைப்பதே இல்லை. போனது போனதுதான். பிரிந்தது பிரிந்ததுதான். அதனால் எதை ஒன்றை இழக்கும் போதும் பிரியும் போதும் இதை இழக்காமல் இருக்க முடியுமா பிரியாமல் இருக்க முடியுமா என்று நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ள இந்தப் படம் தூண்டுகிறது. ஒருவேளை தவிர்க்க முடியாமல் பிரிய நேர்ந்துவிட்டாலோ இறப்பது உறுதியாகிவிட்டாலோ மரணத்திற்கு முந்தைய எஞ்சிய கணங்களில் மகத்தான கருணையுடன் பிறரின் தவறுகளை மன்னிக்கும் மனம் நமக்கு வாய்க்குமா.....
இதுதான் இப்படம் எழுப்பும் கேள்வி.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...