Tuesday 21 April 2015

ரஜினி -கமல் சேரும் படம்

ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக குமுதம் இதழில் வந்த தகவலையடுத்து தமிழ் இதழ்களி்ல் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மைதானா என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில் ஒரு யோசனை அப்படியே கமலும் ரஜினியும் இணைய வேண்டுமானால் ஷோலே படத்தை இப்பவும் ரீமேக் செய்யலாம். அற்புதமான திரைக்கதை உடைய ஆக்சன் படம். கமலுக்கு அமிதாப் வேடம் கச்சிதமாக அமையும்.அதிகம் பேசாமல் அழுத்தமாக காதலிக்கும் பாத்திரம், ரஜினிக்கு தர்மேந்திராவின் காமெடி பிளஸ் ஆக்சன். செம்மையாயிருக்கும். சஞ்சீவ் குமார் வேடத்திற்கு சிவாஜி கணேசன் இருந்திருககலாம். காலம் தவறி விட்டது. என்ன செய்வது இருப்பினும் ராஜேஷ், ராஜ்கிரண், சரத்குமார் , பிரபு. சத்யராஜ் போன்ற நடிகர்கள் அதை ஓரளவு செய்ய முடியும். அம்ஜத்கான் கப்பர்சிங்தான் சவாலான பாத்திரம். இதனை ஏற்று நடிக்க நானா பட்டேகர் அல்லது பிரகாஷ்ராஜ் பொருந்துவார்களா என பரிசீலிக்கலாம். கணடிப்பாக இளையராஜா குரலில் பலானது ஓடத்தின் மேலே பாணியில் மெகபூபா பாடல் இடம் பெற வேண்டும்.அந்த குத்துப்பாட்டுக்கு ஐஸ்வர்யா ராய் அல்லது தீபிகா படுகோன் ஆடலாம். ஷங்கருக்கு ஐயை விட நல்ல படமாக இது அமையும். வசனம் ஜெயமோகனை எழுத வைக்கலாம். சலீம் ஜாவேத்துக்கு மறக்காமல் நன்றி என ஒரு கார்டு போட வேண்டும். இதை சீரியஸாக ஏற்றாலும் சரி ஜோக்காக சிரித்தாலும் சரி அப்படியொன்றும் மோசமான யோசனை அல்லதான்.

Thursday 9 April 2015

அஞ்சலி - ஜெயகாந்தன் மறைவு

காலையில் 6 மணி்க்கெல்லாம் எழுந்துவிடும் வழக்கம் உடையவன் நான். இன்று-(09-04-2015) காலையும் வழக்கம் போல் எழுந்து எலிசபெத் டெய்லர் நடித்த ஒரு பழைய ஆங்கிலப் பட டிவிடியைப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். விக்கி டியூசன் போக அழைத்தான். படத்தை நிறுத்தி அவனை அனுப்பி விட்டு வரும் போது இந்து ஆங்கில பேப்பரை வாசலில் இருந்து எடுத்து வந்து தலைப்பைப் பார்த்து கீழே பார்வையை ஓடவிட்டதும் அந்த அதிர்ச்சிகரமான செய்தி காத்திருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமாகிவிட்டார். நம்ப முடியவில்லை, கண்களை கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். உண்மைதான். இனி ஜே.கே என்ற அந்த கம்பீரமான மனிதரை பார்க்க முடியாது என்ற யதார்த்தம் உறைந்தது. நீண்ட நேரம் குளிக்காமல் இருந்தேன். சாவு வீட்டுக்குப் போகும் மனம் இல்லை.போகலாமா என நண்பர் சூர்யாவைக் கேட்ட போது, வரவில்லை. வழக்கம் போல நானும் ஜெயகாந்தன் சாகவில்லை என்று சமாதானம் செய்துக் கொண்டு அவரது இறுதிச்சடங்கைப் பார்க்க போகவில்லை
ஜெயகாந்தனுடன் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரயிலில் அவரும் தோழர் நல்லகண்ணும் இருக்கும் போது அவர்களுடன் கோவை வரை பயணித்திருக்கிறேன். சொல் புதிது இதழுக்காக நண்பர் ஜெயமோகனுடன் சேர்ந்து நீண்டதொரு பேட்டி எடுக்க உதவியிருக்கிறேன்.அவரைப் பற்றிய பகிர்தல்கள் ஏராளமாக இருக்கின்றன.மனம் அடைத்துக் கொண்டிருக்கிறது. அடைப்பு நீங்கி அழுவேனா எனத் தெரியவில்லை

Friday 3 April 2015

ஜே.கே எனும் நண்பனின் வாழக்கை







இயக்குனர் சேரன் நேரடியாக டிவிடியில் வெளியிட்ட ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஒரிஜினல் டிவிடியை 50 ரூபாய் கொடுத்து ஒரு கடையிலிருந்து வாங்கி வந்தேன்.படம் பார்க்கும் ஆர்வமே இல்லாமல் சில நாட்கள் தூங்கிக் கொண்டிருந்த டிவிடியை தேடி எடுத்து முழுப்படத்தையும் பொறுமையாகப் பார்த்தேன்.
இந்தப்படத்தில் எனக்கு என்னென்ன பிடித்தது என்று முதலிலேயே சொல்லி விட்டால் அப்புறம் சேரனைப் பற்றி கடுமையான எனது விமர்சனத்தை கூறலாம்.
எனக்குப் பிடித்த நடிகை நித்யா மேனன் சும்மா ஜம்முன்னு இருக்காங்க.முகம் மட்டும் லேசாக முத்திப் போன மாதிரி இருந்தாலும் அழகுதான்
கதாநாயகன் சர்வா மிகச்சிறப்பான நடிகராக வரும் அறிகுறி தெரிகிறது. பல இடங்களி்ல் நடிகர் சேரனின் நகலாகவே இருந்தாலும் ஒரு புதுமுக நடிகர் என்ற அளவில் மனதை கவர்கிறார்.
மனோபாலா கலகலப்பாக பேசி கைத்தட்டல் பெறும் நடிகர். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத ஊமையாக மனம் கவர்கிறார். ஒரு சிறிய கண்சிமிட்டலில் கண்கலங்கவும வைக்கிறார்.
டிவிடியை போட்டதும் பலமுறை சேரன் பேசுவதும் ,எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவதும் ரிபீட் ஆகிக்கொண்டே இருக்கிறது. பத்து நிமிடம் போராடிய பின்னர் தான் படத்திற்கு செல்லும் தொழில்நுட்ப அறிவு எனக்கு கிட்டியது.

படம், கதை கார்ப்பரேட் நிறுவனங்களின் வானுயர்ந்த கற்பனைகளில் மிதக்கும் உயர் நடுத்தர ரக இளைஞர்களைப் பற்றியது. பேஸ் புக்கிலிருந்து மீண்டு வரும் கதாநாயகன், சாட்டிங்கிலிருந்துவிடுபட்டு புதிய தொழிலறிவை வளர்த்து முன்னேறி லட்சங்களை சம்பாதிக்கும் கதை இது. ஒரு தலைமுறையின் தவறான லட்சியத்துக்கு தீனி போடும் படம் என்பதால் எனக்குப் பிடிக்கவில்லை

நமது மூதாதையர்கள் விவசாயிகளாக, கூலித் தொழிலாளர்களாக, அங்காடித் தெருக்களில் சேல்ஸ்மேன்களாக, ஆட்டோ ஓட்டுபவர்களாக கட்டுமானத் தொழிலாளர்களாக வாழ்ந்தார்களே அவர்கள் பெரும்பாலோர் வாழ்க்கையில் ஒரு லட்சத்தை கூட பார்த்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கார் கதவை திறக்க கூடத் தெரியாத ஒரு தலைமுறை அது. எனக்கும் இன்றும் எப்போதாவது காரில் அமர்ந்தால் கதவு பிடி எங்கேயிருக்கு எதை திருகினால் திறக்கும் என்பதில் சிறிய குழப்பம் உள்ளது.
எளிய மனிதர்களுக்கு எந்த இலட்சியமும் இருந்ததில்லை. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நன்றாக வாழ வைக்கவேண்டும் என்பதைத் தவிர. அந்த பிள்ளைகள் வளர்ந்து லட்சங்களாக சம்பாதித்து தங்களுக்கான இலக்காக அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

படத்தின் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் போனதால் விபத்தில் சி்க்கி மண்டை உடைந்து பலியாகிறது. மற்றொரு முக்கிய பாத்திரமாக இருக்கு்ம் படத்தின் நாயகனும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மரணத்தை உணர்ந்த பறவையைப் போல தனது உறவுகளைவிட்டு தனிமையைத்தேடி போவதுடன் படம் முடிகிறது.

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சேரா?







Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...