Sunday 28 January 2018

பயணம் -புனே

புனே நகருக்கு சிலமுறை ஏற்கனவே சென்றிருக்கிறேன். இம்முறை கடந்த 2017 டிசம்பர்மாதம் இறுதியில் போன போது 14 ஆண்டுகள் இடைவெளி ஆகி விட்டது.புனே நிறைய மாறிவிட்டது. ரயில் நிலையம் அருகே நான் எதிர்பாராமல் ஒரு பாலம் முளைத்திருந்தது. 20 ரூபாய்க்கு போவா எனப்படும் அவல் உப்புமா அன்று ருசித்த  அதே ருசியில் கிடைத்தது. மலாய் போட்ட அற்புதமான டீயும் ரயில் நிலையம் எதிரே இருந்த ஒரு கடையில் கிடைத்தது.
அங்குள்ள உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு போனோம். புனேயைஏரியல் வியூவில் பார்க்கும்படி 11 வது மாடியில் குடியிருப்பு. சில ஷாப்பிங் மால்கள் அழைத்துப் போனார்கள். பீனிக்ஸ், சீசன்ஸ் போன்ற மால்களில் நான் தேடிய இந்திய டிவிடிக்கள் கிடைக்கவில்லை. பழைய பாடல்கள் ஆடியோ சிடிக்கள் மூன்று 100 ரூபாய்க்கு கிடைத்தன.
பின்னர் காரில் சதாராவுக்குப் பயணம். சதாரா புனே-கோவா நெடுஞ்சாலையில் வருகிறது. மலையைக் கடந்து போக வேண்டும். சுமார் ஒன்றரை மணி நேரம் பிறகு சதாராவை அடையலாம். வழியில் உள்ள உணவத்தில் அசைவ உணவு ஓரளவு தரமாக இருந்தது.
சதாரா அருகே தான் அன்னா ஹசாரே வசிக்கிறார். அவரை சந்திக்கும் ஆவல் இருந்த போதும் நேரம் இருக்கவில்லை. மராத்தி தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஒருவரின் படப்பிடிப்பை சிறிது நேரம் பார்த்து விட்டு திரும்பி விட்டேன்.
மறு நாள் ஓஷோ கம்யூனுக்கு போக வேண்டும் என்று திட்டமிட்டு காலை 9 மணிக்குள் அங்கு ஆட்டோ பிடித்து போய் சேர்ந்துவிட்டேன். மூங்கில் காடுகளுடன் மணம் வீசும் பிரதேசமாக இருந்தது.
ஆனால் ஓஷோவின் ஆசிரமத்தில் உள்ளே நுழைய அனுமதி இல்லை. தியான குழுவில் சேர கிட்டதட்ட  2 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் என்றார்கள் சுத்திப் பார்க்க முடியாத இரும்புக்கோட்டையாகிவிட்டது அந்த இடம். நான் ஓஷோவின் 5 நூல்களை மொழிபெயர்த்தவன் என்று கூறியது எதுவும் பலன் தரவில்லை.மீண்டும் ஆட்டோவுக்கு செலவழித்து திரும்பியதுதான் மிச்சம். இனி ஓஷோ கம்யூன் செல்லமாட்டேன், அவர் புத்தகங்களையும் படித்து கழித்துக் கொண்டிருக்கிறேன் .சேமிக்கும் எண்ணமில்லை. ஓஷோவே சொன்னது போல் கடந்து செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டேன். நிறுவனமயாக்கப்பட்ட எதன் மீதும் எதன் பொருட்டும் நம்பிக்கை வைப்பது சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடிக்காதது.காவி உடை அணிந்து தியானம் செய்தால்தான் நான் ஓஷோவைப் புரிந்துக் கொண்டதாக  அர்த்தமில்லை. இதெல்லாம் ஒரு ஜோக்குதான் என்று அவரே கூறியிருக்கிறார்.
பின்னர் புனேயின் மூர்மார்க்கெட் போன்ற ஜூனா பஜார் பக்கம் போனேன்.அங்கு ஞாயிறு மற்றும் புதன்கிழமையன்று சந்தை கூடுமாம். எல்லாப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கும் என்றார்கள். நான் போனதோ திங்கட்கிழமை. அங்கு இருந்த சில கடைகளில் சுற்றிய போது கிராமப்போன்களும் பழைய இசைத்தட்டுகளும் லதா மங்கேஷ்வர், முகமது ரபி, முகேஷ் போன்றோரின் பிரேம் போட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களும் கண்டேன்.வாங்க ஆர்வம் இருந்தாலும் வீட்டில் இடம் நெருக்கடியாக உள்ளதால் தவிர்த்துவிட்டேன்.
பின்னர் புதுவார்ப்பேட்டை பஜாரில் சுற்றி ரயில் நிலையம்செல்ல ஆட்டோ பிடித்த போது ஒரு சிறிய பகுதிக்குள் நுழைந்தது. சுக்கரவார்ப்பேட்டை என்று நினைக்கிறேன் .அங்கு வழிநெடுக பெண்கள்  அரைகுறையாக நின்று பாலியல் தொழிலுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு தமிழ்ப்பெண்ணையும் கண்டேன். அப்பட்டமாக அவர்முகத்தில் தமிழ ச்சி சாயல் இருந்தது. பரிதாபம், அச்சம், காமம் என பல்வேறு உணர்சசிகளுடன் அல்லாடியபடியே ரயிலேறி சென்னைக்குத் திரும்பும் வரை அந்தப் பெண்களின் உடல்களும் முகங்களும் மிகவும் சலனப்படுத்திக் கொண்டே இருந்தன.




இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்

இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்து கௌரவித்துள்ளது. மிகவும் தாமதமாக அவர் கிட்டதட்ட ஓய்வு பெறும் நிலையில் உள்ள போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் வாழும் காலத்திலேயே அவருக்கு அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சி..

இளையராஜாவிடம் பிடிக்காத பல விஷயங்கள் உண்டு. தன்னை ஞானி போல் கருதுவது, பேத்தல்களை தத்துவம் என நினைப்பது,, அகந்தை, பாடல் எழுதும் கவிஞர்களை( வைரமுத்து) தூசு போல் தூக்கியெறிவது, நல்ல வரிகள் தந்த வாலி மறைந்த பிறகு அவர் இடத்தை நிரப்ப இன்னொருவரை கண்டு அடையாமல் இருப்பது, இளந்தேவன், பொன்னடியான், அறிவுமதி போன்ற தீவிரப்படைப்பாளிகளால் ஏற்கப்படாத  பலரை வைத்து வைரமுத்து இடத்தை நிரப்ப முயற்சித்தது என்றெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், எதுகை மோனை மட்டும் தெரிந்த சொந்த சகோதரர் கங்கை அமரனை வான் அளவு புகழுக்கு உயர்த்தியதும் பின்னர் திடீரென கழற்றி விட்டதும் கூட இளையராஜாவை வியப்பும் கசப்புமாக பார்க்க வைத்தது. அதே போல் எஸ்.பி.பி யிடம் ராயல்டி கேட்டு தனது பாடல்களைப் பாட தடைவிதித்தது.

ஆனால் நிச்சயமாக அவர் இசை மேதைதான். ஒவ்வொருநாளும் அவர் பாடல்களைக் கேட்டுத்தான் உயிர் வாழ்கிறேன்.

இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்ல வயது குறைவுதான். ஆனாலும் அந்த கலைஞனுக்கு நன்றியும் வாழ்த்தும் இப்போது கூறாவிட்டால் எப்போது கூறுவது?

Monday 22 January 2018

சென்னை புத்தகக் காட்சி 2018

சென்னை புத்தகக் காட்சிக்கு 13 நாட்களில் ஏழெட்டு நாட்கள் சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன், காலச்சுவடு கண்ணன், காலசுப்ரமணியம், அகரம் கதிர், செல்வி, கே.பி.ஷைலஜா, சூத்ரதாரி, க.மோகனரங்கன், மகுடேசுவரன், முத்து காமிக்ஸ் விஜயன், சூர்யராஜன், அழகிய சிங்கர், பெருந்தேவி, இவள் பாரதி, இமையம், தமிழ்மணவாளன், பா. உதயக்ண்ணன், விஜயேந்திரா,  உள்பட ஏராளமான படைப்பாளிகளுடன் பேச முடிந்தது. என் வீட்டில் இருந்த புத்தகக் குவியலில் தமிழ்நூல்களை ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்ததால் என்ன இல்லை என்ன வாங்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. இதன்படி நகுலனின் விட்டுப் போன நூல்கள் யாவும் தேடிப்பிடித்தேன். நகுலன் கட்டுரைகள் மட்டும் வாங்கவில்லை .அது காவ்யா பதிப்பகத்தில் உள்ளது.
இந்த ஆண்டு கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள் மீது ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இதே போல் இன்குலாப்.மனுஷ்யப்புத்திரனின் 510 கவிதைகள் அடங்கிய பெருந் தொகுப்பை வாங்கினேன். அவர் நிறைய எழுதிக் குவிக்கிறார். பயமாக இருக்கிறது. கவிதையில் ஜெயமோகன் இவர்,
ஜெயமோகனின் ஈழ இலக்கியம் , சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள், நாஞ்சில் நாடன் கதைகள், அராத்துவின் பிரேக் அப், அம்பையின் உடலெனும் வெளி, ஆத்மார்த்தியின் புலன் மயக்கம் 1,2 பிரமிளின் வெயிலும் நிழலும் , விடுதலையும் கலாசாரமும், மகுடம்மலர், பீர்முகமதுவின் எட்வர்ட செய்தும் கீழைத் தேய தேடலும்,சந்திராவின் பூனைகள் இல்லாத வீடு,தேவதேவனின் பள்ளத்தில் உள்ள வீடு, கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புலகம் தொகுப்புகள், ஹசீனின் பூனை அனைத்தையும் உண்ணும், பாலுமகேந்திரா பற்றிய செ,கணேசலிங்கனின் புத்தகம்,இன்குலாப்பின் மணிமேகலை, காந்தள் நாட்கள், இடைமருதூர் மஞ்சுளாவின் நிம்மதி , என்.எஸ்.ஜெகனாதனின் என்னைக் கேட்டால்,கண்மணி குணசேகரனின் அஞ்சலை,குமாரசெல்வாவின் கயம், குமரகுருபனின் இன்னொருவன் கனவு,எம்.டி.முத்துக்குமாரசாமியின் பிரபஞ்சம் உயிர்சக்தி அறிவுத்தோற்றம். சி.மணியின் எழுத்தும் நடையும்,நகுலனின் நிழல்கள், நாய்கள், இரு நீண்ட கவிதைகள், நாகார்ஜூனனின் மறுதுறை மூட்டம், ஷோபா சக்தியின் பாக்ஸ் கதைப்புத்தகம். எம்.ஜி.ஆர். கொலைவழக்கு, பிரேம் ரமேஷின் கட்டுரையும் கட்டுக்கதையும்,அ.கா.பெருமாளின் சீதையின் தூக்கமும் தமயந்தியின் ஆவேசமும், கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுப்பு, எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை, எழுத்தே வாழ்க்கை, என்னருமை டால்ஸ்டாய், குறத்திமுடுக்கின் கனவுகள்,வாசக பாவம்,கைலாசபதியின் கநாசு கும்பல் குறித்த விமர்சனநூல்-திறனாய்வுப் பிரச்சினைகள், எம்.ஏ.நுக்மானின் சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்,ஆர்.கே.யின் நித்திய வெளி, சுகிர்தராணியின் காமத்திப்பூ, திரிலோக சீதாராமின் கந்தருவ கானம், உமாஷக்தியின் திரைவழிப்பயணம், ச.விஜயலட்சுமியின் எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை, ராகுல் சாங்கிருந்தயாயனின் வால்காவில் இருந்து கங்கை வரை, தாஜ் சீல்ஸ்தாத்தின் உடைந்த குடை, எமிலி ஜோலாவின் காதல்தேவதை, வீரம் விளைந்தது உட்பட ஏராளமான நூல்களை வாங்கி வந்தேன்.
எனது புத்தகங்கள் ஏதுமில்லை இந்த கண்காட்சியில் என்ற ஏக்கம் மிச்சமிருந்தது. இந்த ஆண்டிலாவது சில புத்தகங்கள் அச்சாகி அடுத்த புத்தகக் காட்சியில் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...