Thursday 26 March 2015

பக்தி குறையும் காலம்

வயதாக வயதாக பக்தி அதிகமாகும் என்பார்கள். பெரியாருக்கு முதிர்ந்த வயது வரை பக்தி பழுக்கவே இல்லை.பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இளமையில் நாத்திகம் பேசி முதுமையில் கோவிலுக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன். கமல்ஹாசன் கூட நாத்திகர்தான். ஆனால் அவர் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. முகுந்தா முகுந்தா என தசாவதாரத்தில் பக்தி மழை பொழிந்தார். படத்தின் பெயரே தசாவதாரம்தான். கவிஞர் வைரமுத்துவும் நாத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் என்று எழுதினார். அண்ணாதுரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பகுத்தறிவுக் கொள்கைக்கு புதிய விளக்கம் அளித்தார்.இதெல்லாம் போகட்டும் என்னுடைய அனுபவம் வேற மாதிரி.
35 வயது வரை நாத்திகமும் மார்க்சியமும் தான் எனது பாதை. எந்தக் கோவிலுக்கும் போனதி்ல்லை, கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை.எனக்குக் கிடைத்த நண்பர்கள் கூட நாத்திகர்கள்தாம். கோவையில் ஒரு தோழி, ராம்நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கடவுளை கும்பிட வைத்து நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். என்குடும்பத்தினர் அனைவருக்கும் பக்தி அதிகம். ஆனால் குடும்பத்துடன் தாமரை இலை நீர்போலவே வாழ்ந்ததால் கடவுளும் ஒட்டவே இல்லை. 35 வயதுக்குப் பின் ஓஷோ மூலம் மார்க்சியம் வெளிறத் தொடங்கிய போதுதான் கோவிலுக்குப் போகலானேன். தனியாகவும் .குடும்பத்துடனும்.
தனியாக கோவிலுக்குப் போன அனுபவங்களை வைத்து திருவேங்கடம் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென 50 வயதை கடந்த பின் ஒரு பின்-ஞானோதயமாக சமீபத்தில் கோவிலும் கடவுளும் எனக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை கடவுள் தந்தார் என்றால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.ஆனால் இ்ப்படி நினைக்கும் போது விக்கி என் முன்னால் வந்து நிற்கிறான். இந்த அழகான குழந்தையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
என் விக்கியை நல்லா வாழ வை என்று கேட்கவாவது கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

Sunday 15 March 2015

இளையராஜாவும் இசைத்திருட்டும்

இசைஞானி இளையராஜா தமது பாடல்கள் உரிமம் பற்றி கிட்டதட்ட ஓய்வு பெறும் வயதில் ஞானோதயம் வந்தவராக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். சில நிறுவனங்களின் மீது உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதாக வழககும் போட்டிருக்கிறார்.
நிச்சயமாக தமது படைப்புக்கான உரிமை கோருவதில் படைப்பாளிக்கு முழு தகுதி உண்டு. இளையராஜா தமது பாடல்களுக்காக வாங்கிய ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். நான் ஏர்டெல் மொபைலில் ராஜா சாரின் நல்லதோர் வீணை காலர் டியூனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். மாதம் அதற்காக 30 ரூபாய் கட்டணம் செலுத்தி வருகிறேன். எதி்ல் எத்தனை சதவீதம் பணம் அவருக்குப் போய்ச் சேருகிறது?
இப்படி அவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இசைத்தட்டு, ஆடியோ கேசட்,சிடி,விசிடி, டிவிடி வடிவில் உரிமம் பெறாமல் பதிவாகி பல லட்சம் லட்சமாக விற்பனையாகி அதி்ல் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்...அது மட்டுமின்றி இணையத்தில் யூடியூப்பில் ஏற்றி விட்ட புண்ணியவான்கள் எத்தனை.
ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையும் அவர் படைப்புக்கான லாபத்தில் பெரும் பங்கும் தரப்பட வேண்டும். இதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களுக்கு அப்படி கிடைக்காமல் போனது ஏன் என்று யோசி்ப்பது அவசியமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, விகுமார், கேவிமகாதேவன் போன்ற முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு நேர்ந்ததுதான் இது. ஏ.ஆர.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட இனியும் பலருக்கு நேரக்கூடியதுதான்.
முதலில் இந்தப் பாடல்கள் வெளியிட்டு மக்களை சென்றடையும் முறையிலேயே கோளாறு உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பல லட்சம் செலவு செய்து நடத்துகிறார்கள். கிட்டதட்ட நூறு ரூபாய் விலைக்கு ஆடியோ சிடிக்கள் வெளியிடப்படுகின்றன. யார் வாங்குவார்கள்.?
பாடல்கள் ஹிட்டாக இருந்தால் ஓரளவு லாபம் காணலாம். இல்லையென்றால் அது பத்து ரூபாய்க்கு கூட தேறாமல் பழைய குப்பைகளி்ல் போய் விடும்.

இரண்டு வருடங்களுக்கு மேல் இனி எந்த ஒரு திரைப்படப் பாடலும் உயிர் வாழுமா என்ற சந்தேகமான நிலையில் திரையிசை தேய்ந்துக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அன்றை கொரித்து செரிக்கிற பாப்கார்ன் மாதிரி சினிமா பாடல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதை நம்பி எந்த ரசிகனும் ஒருநாள் முழுதும் உழைத்துப் பெற்ற காசிலிருந்து நூறு ரூபாயை ஆடியோ சிடிக்காக செலவழிப்பானா? திருட்டு சிடியில் எம்பி 3 வடிவில் 200 இளையராஜா பாடல்களை அவன் சுலபமாக 20 ரூபாய்க்கு வாங்கி விட முடிகிறது அல்லவா? இது இளையராஜாவுக்குத் தெரியவே தெரியாதா?

ஒவ்வொரு திரைப்படத்துடன் திரைப்பட கட்டணத்திலேயே பத்து அல்லது இருபது ரூபாயை கூடுதலாக தந்தால் பாட்டு புத்தகமும் ஆடியோ சிடியும் படத்தின் டிக்கட்டுடன் வழங்கப்படும் என்றால் அது பலன் தருவதாக இருக்கும்.இதை செய்வதற்கு திரைப்படத்துறைக்கு எது தடையாக இருக்கும் என்று தெரியவில்லை.

திரைப்படம் பார்க்கும் செலவுகள் அதிகமாகி திருட்டி சிடி தொழில் ஓகோ என வளர்ந்ததற்கு காரணம் திரைப்படத்துறையும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். தப்பை தங்கள் மேல் வைத்துக் கொண்டு வியாபாரிகளையும் பொதுமக்களையும் குறை சொல்லக்கூடாது. விற்க கூடிய சரக்கை விற்கத்தான் செய்வார்கள் வியாபாரிகள்.
சேரன் ஒரு முயற்சி செய்தார்.ஜே.கே.என்ற நண்பனின் கதை திரைப்படத்தை நேரடியாக டிவிடியாக விற்பனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் என்ன நேர்ந்தது? 50 ரூபாய் விலை குறிக்கப்பட்ட அது அடுத்த நாளே 20 ரூபாய்க்கு திருட்டி டிவிடி வடிவில் வந்துவிட்டது. யார் 50 ரூபாய் கொடுப்பார்கள்? அதை அவர் வெளியிடும்போதே 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்க வேண்டும். படத்தயாரிப்பு செலவுகள், தனிநபர் வருமானம் போன்றவற்றால் அவருக்கு அது சாத்தியமாகி இருக்காது . போகட்டும் பத்து லட்சம் டிவிடிக்கள் விற்பனையானதாக விளம்பரப்படுத்துகிறார்களே அது உண்மைதானா. உண்மை என்றால் இந்த முயற்சி வளரட்டும்.



















Sunday 1 March 2015

BADLAPUR movie பத்லாபூர் இந்தி படம்

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் பத்லாபுர் பார்த்த அனுபவம் மனதில் நிற்க கூடியது. அடர்த்தியான ஒரு கிரைம் கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இவர் ஏற்கனவே எடுத்த ஓரிரு படங்கள் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் இந்தப் படம் பேசப்படும். காரணம் இதில் உள்ள பழிவாங்கும் கதையை சொன்ன விதம். THE AXE FORGETS BUT TREE REMEMBERS கோடாரி மறந்தாலும் மரம் மறக்காது என்ற ஆப்பிரிக்க பழமொழியே இதன் கரு சாக்லேட் பாயாக இருந்த வருண் தாவனுக்கு இதில் கனமான பாத்திரம். நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாநாயகியர் 4 பேர் இருப்பினும் அவர்களில் மூவர் உடல் அழகை காட்டவே பயன்படுத்தப்படுகிறார்கள். ராதிகா ஆப்தே பிராவும் ஜட்டியுமாக காட்சியளிக்கிறார். திவ்யா தத்தா இடுப்பையும் முதுகையும் காட்டி ஒரு அழுத்தமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். யாமி கவுதம் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அழகாக சிரிக்கிறார். இருப்பினும் ஹூமா குரேஷி விலைமாதுவாக வந்து மனம் கவர்கிறார்.
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் அற்புதமான நடிகர் ஜெயிலை விட்டு போகும் போது சக கைதிகளை நக்கலடிக்கும் காட்சியிலும் மீண்டும் சிறைக்கு வரும் போது துபாயில் எல்லாமே அற்புதமாக இருந்தது என்று பீலா விடும் காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கவுதம் கார்த்திக் நடிக்கலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். நல்ல சாய்ஸ்< நவாசுதீன் கேரக்டருக்கு வடிவேலு அபாரமாக பொருந்துவார். திவ்யா தத்தா கேரக்டருக்கு சிநேகா யாமி கவுதம் கேரக்டருக்கு மீரா நந்தன் ஹூமா குரேஷி ரோலுக்கு நயனதாரா> நல்லாத்தான் இருக்கும்







Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...