Friday 31 July 2015

அரிதினும் அரிதுகேள் 12- உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

சென்னையில் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் எனது மேல்நிலைக் கல்வி முடிவு பெற்றது. கடைசியாக படித்தது பதினோராம் வகுப்பு. அங்கு எனக்கு சில நண்பர்கள் இருந்தனர். சார்லஸ், ஜோசப், ரங்கராஜன், மேத்யூ போன்ற சிலரின் பெயர்களும் முகங்களும் நினைவில் உள்ளன.
ரங்கராஜன் வித்தியாசமானவன், அவன் கையெழுத்து கோழிக்கிறுக்கல் போல இருக்கும், ஆள் கருப்புதான். சுருட்டை முடி. இங்க் பேனாவை தனது மெல்லிய விரல்களால் அவன் அழகாகப் பிடித்து எழுதுவான். எனக்கு இங்க் பேனாவைப் பிடிக்கவே வராது. நான் வேறொருமாதிரியாக பிடித்து எழுதுவேன். ரங்கராஜனுக்கு எம்ஜிஆரைப் பிடிக்கும் எனக்கும் சிறுவயதில் எம்ஜிஆரும் ரவிச்சந்திரனும்தான் பிடித்த ஹீரோக்கள். சிவாஜியை எப்போதாவது பிடிக்கும். சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள மகாலட்சுமி திரையரங்க உரிமையாளர் மகன் பாலாஜியும் எங்களுடன் படித்து வந்தார். மாலை நேரங்களில் அவர் தயவில் இலவச சினிமாக்கள் பார்க்க முடியும். பட்டணத்தில் பூதம், ரகசிய போலீஸ் 115 போன்ற படங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. எதிரே சரஸ்வதி தியேட்டர் இருந்தது. அதிலும் குறத்தி மகன், சரஸ்வதி சபதம் போன்ற படங்களைப் பார்த்த நினைவு இருக்கிறது. உலகம் சுற்றும் வாலிபனும் நேற்று இன்று நாளையும் மகாலட்சுமியில் பார்த்தேன்.
நான் படிப்பை முடித்த ஆண்டு 1978. ஆனால் 1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி என்ற படம் வெளியாகியிருந்தது. ரங்கராஜன் சொல்லி நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். முதல்நாள் போன போது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த கெயிட்டி திரையரங்கம் காலியாக இருந்தது. படமும் கருப்பு வெள்ளி.சிவகுமார் சுஜாதா தேங்காய் சீனிவாசன் நடித்தது. இசை இளையராஜா என்ற புதியவர்

படத்தின் முதல் காட்சியில் சிவகுமார் கிராமத்துக்கு வருகிறார். எஸ்.வி.சுப்பையாவை சந்திக்கிறார். ஆசிரியர் வேலைக்கு வந்திருப்பதாக கூறுவார். கடிதம் எழுதியதாகவும் குறிப்பிடுவார். ஆனால் கடிதம் வரலேயே என சுப்பையா சொல்லும் போதே தபால்காரர் கடிதத்தை கொடுப்பார். அடடே நீங்க வந்த பிறகு உங்க கடிதம் வருதே என்பார் சுப்பையா. படம் கலகலப்பை ஏற்படுத்தி நிமிர வைத்தது. அடுத்து சுஜாதா அறிமுகம் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே....ஆறுமாசம் ஒன்பதேசம் ஆவரம்பூ மேனி வாடுதே என பாடுவார். வழக்கமான பி.சுசிலாவின் குரலில் இருந்து தனித்து ஒலித்தது எஸ்.ஜானகியின் அழகான குரலும் அவர் செய்த ஹம்மிங்கும். இசை மயக்கியது. அடுத்தடுத்து அந்தப்படத்தில் மச்சானைப் பார்த்தீங்களா, சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேண்டும், சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை என பாடல்கள் மெய் மறக்க வைத்தன. பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்
ஆனால் கடைசியில் இடம் பெறும் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற இரண்டாவது சோகப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருப்பார். அந்தப் பாடல் என் உள்ளே புகுந்து என்னைக் கிழித்து காயம் ஏற்படுத்தியது. இனம் புரியாத அந்த பதின்பருவத்தில் ஒரு துன்பமும் இல்லாத பொழுதில் ஏதேதோ பல ஜென்மங்களாக சுமந்து வந்த காதலின் இழப்பையும் துன்பத்தையும் கண்ணீரையும் அந்தப்பாடல் எனக்குள் பெருகச் செய்தது.

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றிலாடுதே

நதியோரம் பிறந்தாள் கொடிபோல வளர்ந்தாள்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தாள்
புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி புளியம் பூ சேலைக்காரி
நெல்லறுக்கப் போகையில் யார் கண்ணில் உந்தன் காதலடி

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே

கனவோடு சில நாள்
நினைவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே

இந்தப் பாடலைப் போலவே பி.சுசிலாவின் குரலில் ஒலித்த சொந்தமில்லை பந்தமில்லை பாடலும் மனத்தை பாதித்தது.

பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பாலும் இந்த குருவி மட்டும் பாவங்களை செய்ததென்று பரிசாக
கண்ணீரைத் தந்தானே நாள் முழுதும் கண்ணீரைத் தந்தானே
அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம்


பள்ளியின் இறுதிநாள் நிகழ்ச்சியில் ஆளுக்கொரு பாட்டு பாடினோம்.அப்போது நான் தேர்வு செய்த பாடல் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற டி.எம்.எஸ் பாட்டுதான். இன்று வரை அந்தப் பாடலின் சோகம் என்னை ஆட்கொண்டு விடுகிறது. இளையராஜாவின் இசை அன்று கேட்டது போல இன்றும் புதிதாக ஒலிக்கிறது.




Saturday 25 July 2015

அரிதினும் அரிது கேள் 11 அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான்.....

   
சங்கர்-கணேஷ் பல படங்களுக்கு இசையமைத்தனர். அதில் ஒன்று நீயா...இளையராஜா உச்சத்தில் இருக்கும்போது சங்கர் கணேஷ், பின்னுக்குத் தள்ளப்பட்டனர். சில படங்களில் சங்கர் கணேஷ் இளையராஜா போலவே இசையமைக்க முயற்சித்தனர். ஆயினும் தனித்து நின்றது பாலைவனச்சோலை, கன்னிப் பருவத்திலே மாதிரி படங்களில் தான்.எம்.எஸ்.வி காலத்திலும் எம்ஜிஆருக்காக இதயவீணை, நான் ஏன் பிறந்தேன் படங்களுக்கு இசையமைத்தனர். அந்தப் பாடல்களை கேட்டால் எம்.எஸ்.வி பாடல்கள் போலவே இருக்கும்.சில பாடல்கள் தழுவலாகவும் இருக்கும் எனினும் எனக்கு சங்கர் கணேஷின் இனிய பாடல்கள் யாவும் அத்துப்படிதான்.
நீயா படத்திற்கு சங்கர் கணேஷ்தான் இசை. இந்தப் படம் இந்தியில் வெளியான நாகின் படத்தின் தழுவலாகும். இந்தியில் சுனில்தத், பெரோஸ் கான், சஞ்சய் கான், ஜித்தேந்திரா, கபீர் பேடி, வினோத் மெஹ்ரா போன்ற முன்னணி நடிகர்களும் ரீனாராய், ரேகா, மும்தாஜ், ஆஷா சச்தேவ் போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் கோஹிலி மல்டி ஸ்டார் படங்களுக்கு புகழ் பெற்றவர் . பல நடிகர்கள் பணம் வாங்காமலே அவர் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக் கொடுப்பார்கள். நீயா அவரது மகத்தான வெற்றிப்படம். இப்படத்தின் இசை கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
இந்தியில் வெளியான இரண்டு முக்கியமான டியூன்களை அப்படியே வைத்துக் கொண்டு சங்கர்-கணேஷ் தமிழுக்கு இசையமைத்தனர். படத்தின் இயக்குனர் துரை.
துரை தீவிர எம்ஜிஆர் விசுவாசி. கையில் அதிமுக கொடியை பச்சைக் குத்தியவர்களில் அவரும் ஒருவர். எம்.ஜிஆர் படத்தில் பாடல்கள் எழுதிய வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு போன்றோருக்கு பாடல் எழுத நீயாவில் வாய்ப்பளித்தார். இதில் ஒரு பாடல் மட்டும் கண்ணதாசன் எழுதினார். அதுதான் படத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாட்டு

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா......
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா...

பெ : ஓ.... ஓ....ஓ... 
     ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
      ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
     ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
    ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

                    இசை

பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே பெ: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான் ஆ: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே பெ: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை 
    வாராய் கண்ணா...ஆ...
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
              இசை   
ஆ: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன பெ: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க ஆ: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் பெ: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
       தேர் கொண்டு வா....
     கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
       ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

                  இசை   

பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும் பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
      வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்
பெ: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும் ஆ: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே... பெ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.

இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும். எஸ்.பி.பி குரலை லாவகமாக வளைத்து வளைத்துப் பாட அவருககு ஈடு கொடுத்து வாணி ஜெயராம் தனது தேன் குரலால் பாடலின் தரத்தை உயர்த்திவி்ட்டார். இந்தியில் லதாவும் கிஷோரும் பாடிய அந்த டூயட் தமிழில் தனியொரு அனுபவமாக மாறியதற்கு காரணம் சங்கர் கணேஷ்

சுனில் தத் வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். ஆனால் படத்தின் இந்த முக்கியமான பாடல் பாம்பாக வரும் ஸ்ரீப்ரியாவிற்கும் அவர் காதலனாக நடித்த ஜெய்கணேசுக்கும் தான் கிடைத்தது.ரவிச்சந்திரன், விஜயகுமார், ஸ்ரீகாந்த், தீபா போன்றவர்களும் இப்படத்தில் நடித்தனர். பாம்பு வேடத்தில் நடித்த ஸ்ரீப்ரியா சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் இந்திப் படமான நாகின் படத்தைப் பார்த்து தாமே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார்.
கமலுக்கு ஜோடி எம்ஜிஆர் நாயகியான லதா....லதாவுக்கு இந்தியில் ரேகா நடித்த வேடம். இந்தியில் முகமது ரபியும் ஆஷா போன்ஸ்லேயும் பாடிய ஒரு பாடலுக்கு தமிழில் கமலும் லதாவும் நடித்தார்கள். அது இப்படத்தின் இரண்டாவது அற்புதமான பாடலாக மாறியது. இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பியும் பி.சுசிலாவும்.

நான் கட்டில் மேல் கண்டேன் வெண்ணிலா....

ஆண்      :  நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
                 எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
                 நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
                 எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
                 ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
                 விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
                 ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
                 சீறுது சிணுங்குது ஏன்

ஆண்      :  நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
                 எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

                       (இசை)                          சரணம் - 1

பெண்     :   காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
                 கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
                 காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
                 கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்

ஆண்     :   அது புரியாததா நான் அறியாததா
                 அது புரி....யாததா நான் அறியாததா
                 உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

பெண்     :  எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
                 எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
                 நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
                 உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

                   (இசை)                          சரணம் - 2

ஆண்     :   ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
                 வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
                 ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
                 வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

பெண்     :  ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
                 ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
                 ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

ஆண்     :  அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
                அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

ஆண்     :  நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
                எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா


இ்வ்விரு பாடல்களைத் தவிர இந்தப் படத்தில் உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை( புலமைப்பித்தன்) ஒரு கோடி இன்பங்கள்( ஆலங்குடி சோமு) போன்ற பாடல்கள் இடம்பெற்றாலும் இந்த இரண்டு பாடல்களும் மீண்டும் ஒருமுறை கண்ணதாசன், வாலியின் திறமைக்கு சான்றாக விளங்கின.



Tuesday 21 July 2015

அரிதினும் அரிது கேள் 10 - எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

                                       

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களில் இயக்குனர் ஸ்ரீதர் படங்களுக்கு எழுதிய பாடல்களில் அழுத்தமான கதாபாத்திரங்களின் உணர்வுகள் பதிவாகியதால் அந்தப் பாடல்கள் தனித்துத் தெரிந்தன. நெஞ்சிருக்கும் வரை படத்தில் சிவாஜி கணேசன் கே.ஆர்.விஜயாவை காதலிப்பார்.ஆனால் தனது நண்பனுக்கு காதலியை தாரை வார்த்து அவரை சகோதரியாக ஏற்றுக் கொள்வார். சகோதரியாக நினைத்த சிவாஜியை சந்தேகிப்பார் கே,ஆர்.விஜயாவை மணந்த முத்துராமன். இதனால் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். ஒரு பண்புள்ள மனைவியாக அவரை கே.ஆர்.விஜயா அணைத்து அரவணைத்து ஒரு தாய் போல் கவனித்துக் கொள்ளும் பாடல் ஒன்றை கவிஞர் எழுதினார். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் பி.சுசிலா

      எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத்தானே கொண்டு வந்தேன் என் கண்ணோடு
என் கண்ணோடு

வாசலிலே உன் காலடி ஓசையை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல் 
என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்


காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும் 
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன் 
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்

நாட்டில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் குடிபோதையில் உழலும் தங்கள் கணவருக்காக உருகி உருகி உயிராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தாய்க்குலத்தின் பெருமையை விளக்கும் இப்பாடல் மனைவியை தாயின் அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடிய உயர்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது. 
       

அரிதினும் அரிது கேள் 9 வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம்

                                                             
                                       

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் நடிப்பதற்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான புதிதில் அவர் கதாநாயகனாகவும் நடித்தார். ஜெயலலிதாவின் முதல் திரைப்பட கதாநாயகன் அவர்தான். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடையில் நடித்தவர் ஸ்ரீகாந்த்
வாய்ப்புகள் குறைந்த பின்னர்  அவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக இந்தியில் வெளியான ராதா சலூஜா நடித்த தோரகா படத்தின் தமிழ் ரீமேக்கான அவள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தோரகா கதை குடும்பப் பெண்ணின் கற்பழிப்புக்கு காரணமாக உள்ள உல்லாச வாழ்க்கை மோகத்தை சித்தரிக்கும் கதை. இந்திப்படத்தில் கற்பழிப்புக்காட்சி மிகவும் அப்பட்டமாக இருந்தது. இந்தி வில்லன் ரூபேஷ்குமார் ராதா சலூஜாவின் பிராவை பிய்த்து எறியும் வரை கற்பழிப்பு காட்சி கேமராவில் பதிவானது. இந்த படத்தைப் பார்த்துதான் எம்ஜிஆரும் ராதா சலூஜாவை இதயக்கனியிலும் இன்று போல் என்றும் வாழ்க படத்திலும் கதாநாயகியாக்கியிருப்பார். இரண்டு படங்களிலும் தோரகாவிலும் ராதா சலூஜா நீச்சலுடையில் நடித்தார்
தமிழ்ப்படமான அவள் படத்தில் ராதாசலூஜா வேடத்தில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா.கதாநாயகன் தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற போய் உயிரிழந்த சசிகுமார். இப்படத்தில்தான் வில்லனாக நடித்து ஸ்ரீகாந்த் தோரகா வில்லனாக புகழ் பெற்றார். தமிழில் கவர்ச்சி குறைவுதான். ஆனால் ஸ்ரீகாந்த் நடித்த ஒவ்வொரு படத்திலும் ஒரு ரேப் இடம் பெற்றது. இந்த இமேஜை உடைத்தெறிய அவர் படாத பாடு பட்டார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மகனாக வில்லனாக நடித்து பெயர் பெற்றார். இதே போல் தனிக் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த்.அந்தப் படங்களில் ஒன்றுதான் ராஜநாகம்
இதில் இரண்டு கதாநாயகிகள் மஞ்சுளா, சுபா. மஞ்சுளா எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். சுபாவும் எம்ஜிஆரின் நவரத்தினம், ஜெய்சங்கரின் அன்று சிந்திய ரத்தம் போன்ற படங்களில் நடித்தவர். இப்படம் கன்னட படம் ஒன்றின் ரீமேக். மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என மாணவனாக ஸ்ரீகாந்த் புதிய அவதாரம் எடுத்தார். அவர் காதலிக்கும் பெண் கிறித்துவப் பெண்ணான மஞ்சுளா இப்படத்தில் ஒரு பாடல் வரும் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
முதலில் வரும் தொகையறாவில்
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே உமது நாமம் ரட்சிப்பதாக எனத் தொடங்கும் அந்தப் பாடலில் அடுத்து பகவத் கீதையின் ஸ்லோகம் ஒலிக்கும் பரித்ராநாய சம்பவாமி யுகே யுகே.......


தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒருபாதையில் இங்கு சங்கமம்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

மாதாவின் வாழ்த்துகள் மணியோசை சொல்லட்டும் காதல் வாழ்கவென்று
கண்ணன் எங்கே ராதை அங்கே குழலோசை வாழ்த்தும் உண்டு
நீவேறு நான் வேறு அன்று
நீயின்றி நானில்லை இன்று

ஒரு பாடலில் இங்கு சங்கமம்

நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் வாழும் சிலுவை நீயன்றோ
வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம் கண்ணே உன் கண்ணில் உண்டோ
தட்டுங்கள் கேளுங்கள் என்றும் உண்டு
தருமங்கள் எங்கேயும் ஒன்று

ஒரு பாடலில் இன்று சங்கமம்


என்று பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பி,சுசிலாவும் அற்புதமாக பாடியிருப்பார்கள். பாடலாசிரியர் வாலி இசை வி.குமார்





கண்ணன் கீதையும் தேவன் வேதமும் ஒரு பாடலில் சங்கமிக்கிற இந்த இனிய பாடல் சிறு வயது முதலே என்னை மிகவும் ஆள்கின்ற பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இப்பாடல் மோசர் பேர் முன்னர் வெளியிட்ட ராஜநாகம் டிவிடியில் கிடைக்கலாம். அல்லது பழைய எஸ்.பி.பி கலெக்சன்களில் இருக்கலாம். தேடி கேட்டுப்பாருங்கள் கீதையும் பைபிளும் சேர்ந்து படித்த சந்தோஷம் கிடைக்கும் 

Saturday 18 July 2015

எவருக்கோ இறைவன் தந்தான்.

எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு படத்தில் ஒரு பாடல். நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் அந்த நாலு பேருக்கு நன்றி என தலைவர் ரயிலில் தன் தாயை நினைத்துப் பாடுவார். பாடியவர் டி.எம்.எஸ். இசை எம்.எஸ்.வி, பாடலாசிரியர் கண்ணதாசன்.

நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி

உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை யிருந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி


அந்தப் பாடலுக்கு முன் ஒரு தொகையறா வரும்

உள்ளத்தில் இருப்பதையெல்லாம் சொல்ல ஓர் வார்த்தை இல்லை
நான் ஊமையாய்ப் பிறக்கவில்லை, உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி சுமந்து நான் செல்ல எனக்கொரு பந்தமில்லை. 
எவருக்கோ இறைவன் கொடுத்தான்......

இதில் இந்த கடைசி வரி எவருக்கோ இறைவன் கொடுத்தான் என்ற வரியை எனது வாழ்க்கையில் பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்கிறேன்.
அழகான இளம் பெண் ஒருவருக்கு நகை வாங்கித் தந்த கணவரை பார்க்கும் போது இந்த வரி தோன்றும். செல்வமும் பாலியல் சுகமும் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி அவர்
ஐஸ்வர்யா ராய் போன்ற அழகிகளின் கணவர்களை நினைத்து பரிதாபமும் பட்டிருக்கிறேன். ஆனால் அந்த அழகு தேவதைகளை அனுபவிக்கக் கூடிய ஆண் மகன்களை எண்ணிப் பொறாமையும் பட்டிருக்கிறேன்.
அழகான குழந்தைகளை கொஞ்சும் பெற்றோரைப் பார்க்கையிலும் அந்த ஏக்கம் ஏற்படும். எவருக்கோ இறைவன் கொடுத்தான் .

பெற்றால்தான் பிள்ளையா படத்திலும் மெல்லிசை மன்னர்கள் இசையில் வாலி எழுதிய பாடல் செல்லக்கிளியே மெல்லப் பேசு....இதுபோன்றதொரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எம்ஜிஆர் அடிபட்டுக் கிடக்க சரோஜா தேவி உருகி அழுவார் அப்போது அதே செல்லக்கிளியே பாடலை சோகம் ததும்ப டி.எம்.எஸ் வேறொரு வரியிலிருந்து பாடுவார்

யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய்......

இந்தப்பாடலை கலைஞர் தொலைக்காட்சியின் செய்திகள் சேனலில் நான் நிகழ்த்திய புதையல் நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்திய போது பலரை அது உலுக்கியது.

வாழ்க்கையில் எல்லாம் அடைந்தவர்கள் எதையும் அடையாதவர்களை ஒருகணம் எண்ணிப் பார்க்க வைத்த வரிகள் இவை.

எதையும் அடையாதவன் நான். வாழவே தகுதியில்லாதவன் நான். எவருக்கோ இறைவன் கொடுத்த புகழ், பணம், இன்பம், பிள்ளைப்பேறு போன்றவற்றை எண்ணி எண்ணி நாளும் பெருமூச்சுகளிலும் ரகசிய கண்ணீரிலும் கழியும் காலம் எனக்கு நிறைய உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன் எதிர்வீட்டுத் தொட்டிலில் இருந்து என் வாழ்வில் விக்கி வந்துவிட்டான். அவனால் என் துன்பம்  இன்பமாக மாறுகிறது.

என் விக்கியும் நான் படித்த ஓஷோவும்தான் என்னை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
யாரோ தவமிருந்து யாரோ மடி சுமந்து வேறோர் மனை விளங்க ஏன் பிறந்தாய் .........
ஏன் பிறந்தாய் மகனே என விக்கியை நோக்கி நான் பாடவே மாட்டேன். அவன் என் உயிரைத் தக்கவைக்கவே பிறந்தான்.

நான் இறந்தாலும் எனக்கு தோள் கொடுத்து தூக்கிச் செல்ல அவன் மகனாக இருப்பான். அதை நினைத்து இப்போதும் ஆனந்தமாக அழுகிறேன்
தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் அந்த நான்கு பேரில் மீதியுள்ள 3 பேரை நான் இனிமேல்தான் தேட வேண்டும்.











அஞ்சலி- எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தமது ஆத்ம நண்பர் கண்ணதாசனுடன் சங்கமமாகி விட்டார். இந்த இருவரும் தமிழ்த்திரைக்கு அளித்த கொடை கொஞ்ச நஞ்சமல்ல இன்னும் ஓரிரு நூற்றாண்டுக்கு இவர்களின் புகழ் அழியாது என்றே தோன்றுகிறது.
எம்.எஸ்.வியை நேரில் பார்த்தது கிடையாது. பார்க்க பல முறை ஆசைப்பட்டு அவரது சாந்தோம் இல்லத்திற்கு சென்று சாலையின் எதிர்ப்பக்கம் நீண்ட நேரம் அவர் வீட்டையே பார்த்தபடி மணிக்கணக்கில் நின்று திரும்பி வந்திருக்கிறேன். கல்யாணமாகிப்போன ஒரு காதலியைக் காண வரும் முன்னாள் காதலன் போல.
அந்த மாபெரும் கலைஞர் முன் நிற்கக் கூட எனக்குத் திராணி இல்லை. இதே போன்ற ஒரு பிறழ்வு சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் சொல்புதிது வெளியீட்டு விழா மேடையில் பார்த்த போது எனக்கு நிகழ்ந்தது. கிட்டதட்ட எனது புற உலகம் முழுவதும் காலகாலங்கள்  யாவும் அந்த ஒரு கணப்பொழுதினில் உறைந்துப் போனது போல் கண்களில் எப்போது கண்ணீர் உதிருமோ என நின்றிருந்தேன். இதே போன்ற அனுபவம்தான் எம்.எஸ்.வி அவர்களைக் காணச் செல்லும் போது எனக்கு பலமுறை நிகழ்ந்தது.உள்ளே சீழ்ப்பிடித்து கிடந்த ரணங்கள் கதறிக்கொண்டிருந்தன. வலி வலி வலி என உள்ளே பிடித்து ஆட்டிய ஒரு பெரும் பேயை மெல்லிய தென்றல் போல ஏதோ ஒரு இசை தாலாட்டிக் கொண்டிருந்தது.
நண்பர் ஆர்.கே.ரவி ( சிற்றிதழாளர் ) ஒரு முறை வீட்டுக்கு வந்தபோது எம்.எஸ்.வியைப் பார்க்கலாமா எனக் கேட்டேன். அவரை வைத்தாவது என் கால்கள் மெல்லிசை மன்னரின் வீட்டை நோக்கி நடக்காதா என்ற ஆசைதான்.
எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை எம்.எஸ்.வியால் தெளிவுபடுத்த முடியும் என்ற காரணமும் இருந்தது.
குடியிருந்த கோவில் படத்தில் குங்குமப் பொட்டின் மங்கலம் என்ற பாடலை குமாரி ரோஷனாரா பேகம் எழுதியதாகவும் தமிழ்த்திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். அந்த ரோஷனரா பேகம் பெயரில் இஸ்லாமியப் பெண் போல தெரிகிறது. ஆனால் குங்குமப் பொட்டின் மங்கலம் என பல்லவி எழுதியது முரண் அல்லவா.
என்னுடைய சந்தேகம் அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார் என்று. ஏனென்றால் கண்ணதாசன் பாட்டை விஸ்வநாதன் உரிமைக்குரலில் வாலியின் பெயரைப் பயன்படுத்தி எம்ஜிஆரை ஏமாற்றியிருப்பார். விழியே கதை எழுது என்று அந்தப் பாடல் பின்னர் எம்ஜிஆரின் கவனத்தில் இது கண்ணதாசன் பாட்டு எனத் தெரிய வர பெருந்தன்மையுடன் ஒரு கலைஞனை இருட்டடிப்பு செய்யாதீர்கள் என கண்ணதாசன் பெயரைப் போட அனுமதித்தார்.
ஆனால் குடியிருந்த கோவில் பல ஆண்டுகள்  முன்னாடி வந்த படம். இந்தப் படத்தில் வாலி நீயேதான் என் மணவாட்டி, என்னைத் தெரியுமா, உன்விழியும் என் வாளும், துள்ளுவதோ இளமை போன்ற பாடல்களையும் புலமைப்பித்தன் நான் யார் நான்யார் என்ற பாடலையும் ஆலங்குடி சோமு ஆடலுடன் பாடலைக் கேட்டு, பாடலையும் எழுதினர். இதில் ரோஷனரா பேகம் பெயரில் வெளியான பாடல்தான் குங்குமப் பொட்டின் மங்கலம்.
சரி யார் இந்த ரோஷனரா பேகம். முதன் முதலாக எம்ஜிஆர்-ஜெயலலிதா படத்துக்கு எம்.எஸ்.வி இசையில் பாட்டு எழுதுவது என்பது லாட்டரியில் கோடி ரூபாய் கிடைத்த அதிர்ஷ்ட்டம் போன்றது. அதுவும் அந்தப்பாடல் சூப்பர் ஹிட்டானது. சுமாரான சில பாடல்கள் தந்த தாமரையே இத்தனை பாட்டு எழுதிக் குவிக்கும் போது முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமை வேறு பெற்ற ரோஷனரா பேகம் அதன் பின்னர் பாட்டு எழுதாமல் போனது ஏன்.
அவரைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை.
இதைப் பற்றி விஸ்வநாதனிடம் கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. ஒருவேளை நான் சந்தேகப்படும் படி கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதியிருந்தால் இந்நேரம் சொர்க்கத்தில் கவிஞரும் மெல்லிசை மன்னரும் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்களோ......

எம்.எஸ்.வியின் பாடல்கள் என் வீட்டில் தினமும் ஒலிக்கின்றன. என் வாழ்க்கையுடன் மட்டுமின்றி தமிழறிந்த ஏனைய மக்களின் வாழ்வுடனும் அவருடையே ஏதோ ஒரு பாடல் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக நான் அறிவேன்.

விஸ்வநாதன் பாடல்களில் சில நூறு பாடல்கள் மீண்டும் மீண்டும் டிவிக்களில் ஒலிக்கின்றன. இதில் கே.வி.மகாதேவன், வி.குமார் பாடல்களும் விஸ்வநாதன் பாடல்கள் என தவறாக பேசப்படுகின்றன. என்னுடைய வேண்டுகோள் அதற்கு அப்பாலும் மறைந்துக்கிடக்கும் பொக்கிஷம் போல விஸ்வநாதனின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நான் திரையிசையில் ஊறியவன்.என் அனுபவத்தில் விஸ்வநாதனின் பல அரிய பாடல்கள் டிவிக்களில் வரவே இல்லை. தனியாக ஒரு கலெக்சன் வைத்து விஸ்வநாதனின் அரிய பாடல்களை சேகரித்துவிட்டேன். அதை இப்பகுதியில் அரிதினும் அரிது கேள் என்ற தொடரிலும் இதர கட்டுரைகளிலும் வெளிப்படுத்துகிறேன்.
மறைந்த எம்.எஸ்.வி அவர்களுக்கு ஒரு எளிய ரசிகனின் கண்ணீர் அஞ்சலி








Sunday 12 July 2015

குருதத்தின் இருண்ட உலகம்


குருதத்தின் பியாசாவும் காகஸ் கே பூல் படமும் மனதில் நகரமுடியாத இடத்தில் அமர்ந்துவிட்டன.பலமுறை மீண்டும் மீீண்டும் இவ்விருப்படங்களைப் பார்க்கிறேன். பல பதிப்புகள் வாங்கி வைத்துவிட்டேன். சாகும் வரை என்னோடு இருக்க வேண்டிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் பாதுகாக்க தொடங்கி மற்றதை கழிக்க ஆரம்பித்துவிட்டேன். குருதத்தின் இவ்விரு படங்களும் என்னோடு என்றும் இருக்கும். அவரது மற்ற படங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன். இவ்விரு படங்களும் என் வாழ்க்கையுடன் மிகுந்த நெருக்கமான தொடர்புடையவை என்பதால் இவை மட்டுமே இப்போது முக்கியமாகப்படுகின்றன.
குருதத், பிரான்ஸ் காப்கா, ஹென்றி மில்லர் ஆகியோரின் எழுத்துகள், படைப்புகள் என் வாழ்க்கையுடன் நெருக்கமாக உள்ளன. அவர்கள் தரிசித்த ஒளிமிக்க ஒரு இருண்ட உலகை நானும் தரிசிக்கிறேன். அவர்களின் துடிதுடிப்பும் தவிப்பும் என்னிடமும் உள்ளன. சார்லி சாப்ளின்,  சுப்பிரமணிய பாரதி,ஓஷோ ஆகியோரிடம் நான் கொண்ட ஈடுபாடும் இத்தகையதே.எல்லாக் கலைஞர்களும் கண்ணீர்சிந்த கற்றுக் கொடுத்தார்கள். ஓஷோ மட்டும்தான் கண்ணீரைப் புன்னகையாக மாற்றக்கூடிய ரசாயனத்தை சொல்லிக் கொடுத்தார்.இந்த மகத்தான கலைஞர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கமும்.
குருதத் பற்றி ஒருசிறு கட்டுரைத் தொடரை இப்பகுதியில் தொடங்க விருப்பம். கவனித்துக் கொண்டே இருங்கள். அடுத்தடுத்து காப்கா, ஹென்றி மில்லர், ஓஷோ பற்றியும் எழுத ஆசைதான்.

Thursday 9 July 2015

பயணம் 4 -திருப்பதி, திருமலை


திருப்பதிக்கும் திருமலைக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். நாத்திகனாக, ஆத்திகனாக, இரண்டும் சமன் செய்த மனத்துடையவனாக என்று.
திருப்பதி யாத்திரை செய்யும் பக்தர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கில் வருவதும், அதை நம்பி கீழ்த்திருப்பதியில் பலலட்சம் குடும்பங்கள் வாழ்வதும் ஆழமாக யோசிக்க வைத்திருக்கிறது. மக்கள் ஆட்டு மந்தைகளா.....மடையர்களா.....கண்மூடித்தனமாக பக்தியின் வயப்பட்டவர்களா எனக் கேள்விகள் என்னைத்துளைத்ததுண்டு.தெளிவான பதில்கள் இல்லை. பதில்கள் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன. 
கடவுளை நம்பாத சிறுவயதில் ஒரு முறை வீட்டுடன் முறுக்கிக் கொண்டு இரண்டு நாள் வீட்டை விட்டு செல்ல வேண்டிய மனநிலையுடன் திருப்பதிக்குப் புறப்பட்டு விட்டேன்.இரண்டு நாள் என் வீட்டார் என்னைத் தேட வேண்டும் என்பதுதான் நோக்கம். அப்போது எனக்கு  பதினெட்டு வயது இருக்கும்.இளமையின் அலைபாயும் விழிகள் திருப்பதிக்கு வந்த அழகழகான ஆந்திர பெண்களையும் வட இந்தியப் பெண்களையும் வட்டமிட்டது. திருமலையில் உள்ள குளத்தில் பெண்கள் அரை நிர்வாணமாக அப்போது குளித்துக் கொண்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்களும் பெண் காவலர்களும் இல்லாத காலம் அது. பெண்களும் பொது இடம் என்பதை மறந்து விட்டனர். பல மணி நேரம் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் நானும் குளித்து தரிசனம் செய்தேன். பெருமாளை முதன் முறை தரிசிக்கும் போது உடலில் ஒரு சிலிர்பபு ஏற்பட்டது. அந்த சிலிர்ப்பை இன்றும் பெருமாளை தரிசிக்கும்போது உணர்கிறேன். அன்று திருப்பதியிலிருந்து திரும்பும் போது திருத்தணியில் இ்றங்கி விட்டேன்.திருத்தணியில் கோவில் திருவிழா நடந்த நேரம்,நள்ளிரவு வரை தெருக்கூத்து, நாடகம் என கலகலத்தது, அங்கேயே ஒரு மரத்தை ஒட்டிய மேட்டில் தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்தபோது என் கைக்கெடிகாரம் காணவில்லை. புதிதாக சம்பாதிக்க ஆரம்பித்து வாங்கியது. மனது கஷ்டமாக இருந்தது. பலரிடம் கேட்டுப் பார்த்தேன். பலரும் தங்கள் நகையைக் காணவில்லை, பர்சை காணவில்லை எனப் புலம்பினர். பின்னர் திருத்தணியில் சாமி கும்பிட போனப்போது குளக்கரையில் ஒருவர் வழி கேட்டார். சொன்னேன். அப்புறம் மலைக்குன்றின் படிமீது நடந்த போது நாலைந்து பேர் என்னை சுற்றி வளைத்தனர். நான்தான் கோவில் திருவிழாவில் திருடியவன் என்றும் வழிகேட்டவன் என் கூட்டாளி என்றும் அவனிடம் திருடிய பொருட்களை நான் தந்து அனுப்பிவிட்டேன் என்றும் பழி சுமத்தப்பட்டது. ஊரே கூடி நின்று உதைத்தது. தரும அடிதான். என் தரப்பு நியாயத்தை யாரும் கேட்பதாக இல்லை. திருப்பதி லட்டு காட்டிய போதும் யாரும் நம்பவில்லை.மனது ஓ வென கதறி அழுதது. அடிவாங்கி முகம் இறுகிக்கிடந்தது. போலீசில் ஒப்படைப்பதாக சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. அடித்தே கொன்றுவிடக்கூடிய வெறியர்கள் இவர்கள். இவர்களிடம் சிக்கியவனின் நியாயத்தை கேட்கும் கருணை யாரிடமும் இல்லை. வெறி பிடித்த ஒரு வேங்கைக்கூட்டத்திடம் சிக்கிய மானின் நிலைதான் என் நிலை.அப்போதுதான் பெருமாளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டேன். பெருமாளே உன் கோவில் குளத்தில் குளித்த பெண்களை வக்கிரமாக பார்த்ததற்கு எனக்கு சரியான தண்டனை தந்து விட்டாய்.இனி நான் உன் கோவிலுக்கு புனிதமான மனசுடன்தான் வருவேன். என்னைக்காப்பாற்று என்று உளம் உருகக் கேட்டுக் கொண்டேன். திருத்தணி முருகனையும் வேண்டிக் கொண்டேன். 
அப்போது வெங்கடேசன் என்பவர் என்னை அழைத்துச் சென்று தன் வீட்டில் தங்க வைத்தார். சாப்பாடும் போட்டார். பிறகு பொறுமையாக என்னைப்பற்றி விசாரித்தார்.நான் திருடவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. என்னை பஸ்சுக்கு பணம் தந்து சென்னைக்கு பேருந்து ஏற்றி விட்டார்.

இது கடவுளின் கருணைதான் என வியந்தேன். மன்னிப்புக் கேட்ட அடுத்த பத்து இருபது நிமிடத்தில் இப்படியொரு விடுதலை கிடைத்தது. 
பின்னர் பலமுறை திருத்தணிக்கும் திருப்பதிக்கும் திருமலைக்கும் சென்று விட்டேன். பல நல்ல அனுபவங்களையும் ஆன்மீக பேறும் பெற்றேன். திருமலை வேங்கடாசலபதியைப் பற்றி நிறையப் படித்தேன். அதில் பக்தியும் வளர்ந்தது. அதிகமான நம்பிக்கை பிறந்து ஆண்டுதோறும் என்பிறந்தநாளில் திருப்பதி-திருமலை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பே எனது நடுத்தர வயதில் இளமைக்காலங்களின் நினைவுகளுடன் மீண்டும் என் மனைவி என் விக்கியுடன் திருமலை சென்று வந்தேன்.
திருப்பதி-திருமலை பயணம், அனுபவம், வாசிப்பு தொடர்பாக எழுதுவதற்கு ஆயிரமாயிரம் பக்கங்கள் உள்ளன. அதை ஒரு நாவலாக வடிக்க முயன்று வருகிறேன். அன்னமாச்சார்யா முதல் அலமேலுமங்கா புரம் வரை பல கதாபாத்திரங்களும் கதைகளும் பிணைந்த அந்த நாவலை ஜெயமோகன் போல் யாராவது முந்திக்கொண்டு எழுதி விட முடியும். ஆனால் அசோகமித்திரன் ஒருமுறை கூறியது போல என் கதையை நான் மட்டுமே எழுத முடியும்.
திருவேங்கடம் என்ற தலைப்பில் நான் எழுதும் நாவலை முடிக்க அந்த ஏழுமலையான் அருள் பாலிக்கட்டும்
திமலா என்ற சுஜாதாவின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இன்னொரு நூற்றாண்டில் கணினியுடன் தானும் பணம் சம்பாதிக்கிற கணினியாகிப்போன ஒரு கணவனுக்கு கடந்த நூற்றாண்டின் சிந்தனை கொண்ட மனைவி திமலாவுக்கு அழைத்துச் செல்ல அடம்பிடிப்பதும், வான் டாக்சி ( ஹெலிகாப்டர்தான் டாக்சியாகிவிட்டது ) திமலா போவதும் கன்வேயர் பெல்ட்டில் நகரும் கியூவில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதும் ஆழ்வார் பாடல்களைப் பாடுவதும்தான் கதை.திமலா என்பது திருமலையின் கணினி சுருக்கப்பெயராம்.





ஏக்கம், தாகம், தவிப்பு

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா
ஆமாம். இல்லை

பணம் இருக்கா
குறைகிறது

ஊடகப் பணியில் நாட்டம் உண்டா
ஓரளவுக்கு

பெண் காதல் இன்பம் ஏதும் உண்டா
தனிமை, தனிமை,தனிமை

துணை கிடைத்தால் ஏற்பேனா
அவள்தான் என்னை ஏற்க வேண்டும்.

பிடித்தது என்ன
படம் பார்த்தல், படித்தல், எழுத்து, குழந்தைகள், இசை, பயணம்

உடனடித் தேவை
மனம் விட்டுப் பேச ஒரு நிச்சயமான நட்பு

நண்பர்கள் இல்லையா
இருக்கிறார்கள், துரோகங்களின் வலியால் நல்ல நண்பர்கள் மீதும் நம்பி்க்கை வருவது இல்லை

கசப்பு தருவது எது
அரசியல், காவல்துறை வன்முறை
பாலியல் வன்கொடுமைகள் கொலைகள்

நம்பிக்கை தருவது எது
அன்பு , குழந்தைகளின் புன்னகை

பெண்கள் பற்றி.....
தெய்வங்களாக மாறலாம். ஆனால் மனுஷிகளாக கூட இல்லை


அப்படி என்றால் என்ன அர்த்தம்

பெண்கள் தங்களுக்காக தேர்வு செய்யும் ஆண்களை வைத்தே அவர்களின் இயல்பை அறியலாம். அறிவு, அன்பு, பகிர்தலை விட பணம், சொகுசு, உடல் அழகை நாடிப் போகிறார்கள்.இதில் பலரை ஏமாற்றி தாங்களும் ஏமாறுகிறார்கள்

திடீரென இத்தனை வியாக்கியானம் ஏன்
கொரோனாவால் உயிர் வாழ்தல் மீது பயம் வருகிறது.


(( நானே கேள்வி நானே பதில் பாணியில் எழுதியது ))





Saturday 4 July 2015

உலக சினிமா - Definitely maybe நிச்சயமாக இருக்கலாம்

உலக சினிமா
நிச்சயமாக, இருக்கலாம் - Definitely Maybe



வாழ்க்கையில் எந்த முடிவையும் நிச்சயமாக எடுக்க முடிவதில்லை. எதிலும் சந்தேகம் தொக்கி நிற்கிறது.தாயின் அன்பும் மனைவியின் காதலும் சந்தேகத்திற்கு ஆளாகிவிட்ட காலம் இது.நிச்சயமாக அறிந்த உண்மைகளையும் குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.இதன் விளைவுகளை இப்படம் விளக்க முயற்சி்க்கிறது.இது சற்று சிக்கலான பிரச்சினைதான். உளவியல் ரீதியானது.முடிச்சு மேல் முடிச்சு போட்டு மனத்தையும் அதன் ரகசியங்களையும் இறுகி மூடி வைக்கும் மனிதர்கள், ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே அப்பட்டமாக தரிசிக்கும் தருணங்களும் வாய்க்கின்றன.அவை உன்னதமானவையாகவும் இருக்கலாம், வலி தருவதாகவும் இருக்கலாம்.
இப்படத்தின் நாயகன் வில் ஹேஸ்.வயது 30 .மனைவியிடம் விவாகரத்து பெற்றவன். தனது பத்து வயது மகளுக்கு அவள் அம்மாவை சந்தித்த கதையை கூறுகிறான். 3 பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தில் அந்த குழந்தையின் அம்மா எந்தப் பெண் என சஸ்பென்ஸ் வைத்து திரைக்கதை நகர்கிறது.தனது தாய் யார் என அந்தக் குழந்தை கொண்ட ஆர்வம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு பள்ளிக்கூடம்.பாலியல் கல்வியை பள்ளிகளில் போதிக்கலாமா கூடாதா என விவாதங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் எட்டு வயது முதல் பத்துவயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லாம் உடல் உறுப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உடல் உறவு, விந்து வெளியேறுதல், போன்ற பிரச்சினைகளை அந்தக் குழந்தைகள் வெட்கமே இன்றி விவாதிக்கின்றன. ஆசன உடல் உறவு என்பது குறித்தும் பேச்சு வருகிறது. நாயகன் வில் ஹேஸின் மகள் 10 வயது சிறுமி மாயா அந்தப் பள்ளியில் படிக்கிறாள். இயல்பாக அவளுக்கும் சிறுவயதிலேயே பாலியல் தொடர்பான விழிப்புணர்வும் வெட்கமின்றி விவாதிக்கும் மனமும் வாய்த்து விடுகிறது.தன் பள்ளியில் படித்ததை தந்தை முன்பு கூச்சமின்றி அந்த சிறுமி சத்தமாக  பொது இடத்தில் படித்துக்காட்டுகிறாள்.ஆண்குறி(penis)குறித்து அவள் படிக்கிற போது அந்தப்பக்கம் நடந்துப் போகிறவர்கள் அதிர்ச்சியுடன் அந்தக்குழந்தையை திரும்பிப் பார்க்கிறார்கள்.
" எனக்கு இப்போது காதல், கலவி பற்றியெல்லாம் தெரியும். நீ இத்தனை நாளாக நான் சிறுபிள்ளை என எண்ணிக் கூறாத உன் காதல் கதையை ஒரு கணம் கூட மறைக்காமல் கூறு.என் அம்மாவை சந்தித்த முதல் நாளிலிருந்தே கூறு ,நான் எப்படி பிறந்தேன். என் தாயை ஏன் விவாகரத்து செய்தாய்? என் தாய் யார்?" என அந்தச் சிறுமி அடுக்கடுக்காக தந்தையிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்.
ஏப்ரல், சம்மர், மிச்சேல் ஆகிய மூன்று பெண்களை தான் காதலித்த கதையை கூறுகிறான் தந்தை.
அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் பில் கிளிண்டனுக்குப் பணிபுரிய வேண்டும் என்ற காதலி மிச்சேலின் ஆசையை நிறைவேற்ற நியுயார்க் செல்கிறான் வில். முதலில் எடுபிடி வேலைகள் செய்யப் பணிக்கப்படுகிறான். பில் கிளிண்டனுக்கு தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கி படிப்படியாக அவன் தேர்தல் ஆலோசகராக பதவி பெறுகிறான். ஒரு புத்தகக் கடைக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு பணிபுரியும் ஏப்ரல் என்ற அழகான பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது.ஏப்ரல் அருமையான சிநேகிதியாக மாறுகிறாள். இருவரும் மழையை ரசிக்கிறார்கள். புகை பிடிக்கிறார்கள். ஜேன் ஆஸ்டினின் நாவல்கள் பற்றி பேசி மகிழ்கிறார்கள்.
ஏப்ரலின் தந்தை சில வரிகளை எழுதி பரிசளித்த ஜேன் ஆஸ்டினின் நாவலை பொக்கிஷம் போல் ஏப்ரல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்தப் புத்தகம்  தந்தையின் மறைவுக்குப் பிறகு எப்படியோ தொலைந்துவிடுகிறது. பல மாதங்களாக அதைத் தேடி வருவதாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் பிரதியை என்றைக்காவது கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில்தான் பழைய புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறுகிறாள் ஏப்ரல்.அந்தப் புத்தகம் "நிச்சயமாக உனக்கு அந்தப் புத்தகம் கிடைக்கும் என்று நீ நம்புகிறாயா" என்று கேட்கிறான் வில். may be என்பது அவள் பதில்( படத்தின் தலைப்பு)
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. எல்லாமே மே பி தான். சந்தர்ப்பம் எப்படி என்பதைப் பொருத்துதான். எந்த கணம் என்ன நிகழும் என்ற மர்ம முடிச்சு அவிழ்ந்துவிட்டால் வாழ்க்கையின் சுவையே போய்விடும். கடந்த காலத்தை நாம் பின்னோக்கி பல ஆண்டுகளாக அசை போட முடியும் மிக அருகில் இருக்கும் அடுத்த நொடியை நம்மால் சரியாக கணித்துவிட முடியுமா? சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் அந்த கணத்தை அறிந்திருந்தால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும்?
ஏப்ரலும் வில்லும் பேசும் ஒரு காட்சியில் வைர மோதிரம் வாங்கி வரும் வில் தனது காதலி மிச்சேலுக்கு அளித்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்கப்போவதாக கூறுகிறான். இப்ப நீ தான் மிச்சேல் நான் வில் , வா நாம் ஒரு ஒத்திகை பார்க்கலாம் எனத் தன் தோழியை அவன் அழைக்கிறான்.
அவள் மிச்சேலாக, அவன் வில்லாகவே தனது திருமண ஆசையை வெளிப்படுத்த நாடகம் என்பதை மறந்து நிஜமாகவே அவர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாறிப்போகின்றன. அவர்கள் அறியாத அடுத்த கணம் அவர்களை நட்பிலிருந்து காதலுக்கு தள்ளி விடுகிறது.
இத்தகைய சூழலி்ல் உண்மையான மிச்சேல் நியுயார்க் வந்துவிடுகிறாள். அவளை சந்தித்து வில் பேசுகிறான். " என் அப்பா அம்மாவை சந்திக்கும் போது காதலுடன்தான் இருந்தார். ஆனால் மணமுடிக்கும் போது அந்தக் காதல் இல்லை. அவர் மனத்தில் வேறு பெண் இடம் பிடித்துவிட்டாள். எனவே திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதா இல்லையா என முடிவெடுக்க முடியாமல் அவர் தவித்தார்.கடைசியில் குடும்பத்தின் விருப்பத்திற்காக அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டிய  திருமண மோதிரத்தை கடைசியில் என் தாயிடம் கொடுத்து விட்டார். இப்போது நானும் உன்னை திருமணம் செய்யும் படி கேட்டு இந்த மோதிரத்தை உனக்கு அளிக்கிறேன் " என்று வில் மிச்சேலிடம் மோதிரத்தை கொடுக்கிறான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த மோதிரத்தை ஏற்க மிச்சேல் மறுத்துவிடுகிறாள். அவள் ஒரு ரகசியத்தைப் போட்டு உடைக்கிறாள். "நானும் வேறொரு ஆணுடன் உடல் உறவு கொண்டு விட்டேன்." என்று கூறி திருமண அழைப்பை நிராகரித்து விடுகிறாள்.
ஆனால் மிச்சேல் வந்துவிட்டதால் ஏப்ரலும் சுற்றுலா சென்று விடுகிறாள்.சுற்றுலாவிலிருந்து திரும்பி வரும் போது அவள் புதிதாக ஒரு பாய்பிரண்டுடன் வந்துவிடுகிறாள்.
அப்போதுதான் சம்மர் என்ற பெண் மீது வில்லின் கவனம் திரும்புகிறது. சம்மருக்காக திருமண மோதிரம் வாங்க அவன் ஏப்ரலை அழைக்கும் போது உன் புதிய காதலியை ஏன் எனக்கு அறிமுகம் செய்யவில்லை என அவள் கோபிக்கிறாள்.
மிச்சேல், ஏப்ரல் ஆகியோர் விலகிச்சென்றதையடுத்து சம்மரையே திருமணம் செய்துக் கொள்ள எண்ணும் வில்லின் மனத்தை உடைத்தெறிந்து, அவன் காதலையும் நிராகரித்து,சம்மர் அவன் வாழ்விலிருந்து வெளியேறுகிறாள்.
இப்போது வில்லின் மகள் தந்தையிடம் ஒரு கேள்வி கேட்கிறாள். " நீயோ மூன்று பெண்களையும் தனித்தனியாக உண்மையாக காதலித்தாய். யாருமே உன் காதலை மதிக்கவில்லை, உன்னை ஏமாற்றி விட்டார்கள்.தங்கள் சுயநலத்திற்காக உன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் இல்லையா?"
மனம் உடைந்த விரக்தி நிலையில் மீண்டும் சம்மரை சந்திக்கிறான் வில்,அப்போது சம்மரும் மிச்சேலும் பால்ய கால தோழிகள் என்றும் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் வில் அறிகிறான். இன்னொருவனுடன் உடல் உறவு கொண்டதாக மிச்சேல் கூறியது பொய் என்றும் அவளுடைய ஓரினச் சேர்க்கை தோழி சம்மர்தான் என்றும் அவன் தெரிந்துக் கொள்கிறேன். தன்னால்தான் மிச்சேலும் வில்லும் பிரிந்தனர் என்ற குற்ற உணர்வைப் போக்க மிச்சேலை சந்தித்துப் பேசும் சம்மர் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறாள்.
மிச்சேலும் வில்லும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆகா என் தாய் மிச்சேல்தானே என்று துள்ளி குதிக்கிறாள் சிறுமி மாயா.ஆனால் வில் புதிர் போடுகிறான்.நான் பெயர்களை மாற்றியல்லவா கதையை சொன்னேன் என்கிறான்.
rewind the scene என்கிறாள் மகள்.
மிச்சேலை திருமணம் செய்ய வில் கேட்கும் காட்சி.அப்போது மிச்சேல் தனது காதருகில் உள்ள தலைமுடியை ஒற்றை விரலால் கோதிவிடுகிறாள்.
இதே பழக்கம் தனக்கும் இருப்பதாக கூறும் சிறுமி எமிலி மிச்சேல் தான் தன் தாய் என்பதை மீண்டும் உறுதி செய்துக் கொள்கிறாள். விவாகரத்து பெற்று வேறு மணம் முடித்து வாழும் தன் தாயையும் சந்திக்கிறாள் சிறுமி மாயா.
பிறகு அப்பாவிடம் கூறுகிறாள்" நீ என் அம்மாவின் பெயரையும் சம்மர் என்ற இன்னொரு பெண்ணின் பெயரையும் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைத்தாய். ஆனால் ஏப்ரலின் பெயரை மட்டும் மாற்றாமல் அவளுடைய உண்மையான பெயரால் அழைத்தாய். நீ ஏப்ரலை அல்லவா உண்மையாக காதலித்தாய். பின் ஏன் முடிவெடுக்க முடியாமல் தவித்தாய்?"
மூன்று பெண்களையும் காதலித்து தனிமையில் வாழும் தனது தந்தைக்காக பரிதாபப்படுகிறாள் மகள்.
இதனிடையே அப்போது தற்செயலாக ஒரு புத்தகக்கடையில் ஏப்ரலின் தந்தை கையெழுத்திட்ட ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை வில் கண்டெடுக்கிறான்.அதை ஏப்ரலிடம் கொடுக்க செல்லும் போது அவள் வீட்டில் அந்த புதிய பாய்பிரண்ட் இருந்ததால் திரும்பி வந்துவிடுகிறான்.
அந்தப் புத்தகப் பிரதி உன்னைத் தேடி வந்து அடைந்தது ஏன் தெரியுமா என்று கேட்கிறாள் சிறுமி மாயா.போய் ஏப்ரலிடம் உன் உண்மையான காதலைக் கூறு என்றுவற்புறுத்துகிறாள். வில்லும் பாய்பிரண்டை விட்டு விலகி விட்ட ஏப்ரலை சந்திக்கிறான். ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதியை அவளிடம் கொடுத்து நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அவன் ஆசையை அவள் ஏற்க மறுக்கிறாள்.நாம் நண்பர்களாகவே இருப்போம் என்கிறாள் ஏப்ரல்.
ஏப்ரலிடம்தான் வில் உண்மையான காதல் கொண்டிருந்தான். ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்தாலும் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவன் ஆழ்மனத்தில் ஓயாமல் சுடர்விடும் முகம் ஒன்று இருக்கும். அந்த முகம் ஏப்ரலின் முகம்தான் என்பதை மகளின் சொற்கள் மூலமாக தரிசிக்கிறான் வில்.ஏப்ரல் மீது கொண்ட காதல் அவனுக்கே தெரியாமல் இருந்தது.தனது காதலியை அவன் சம்மரிடமும் மிச்சேலிடமும் தேடிக் கொண்டிருந்தான். அது ஏமாற்றம் அளித்தது. ஏப்ரலும் அதே போல் வில்லிடம்தான் உண்மையான காதல் கொண்டிருந்தாள். அவளும் தனது காதலை யாரிடமோ தேடி ஏமாற்றம் அடைந்தாள். வில்லுடனான காதலை நட்பு என அவள் எல்லை வகுத்துக் கொண்டாள்.சுற்றுலா சென்ற இடத்தில் வேறு ஒருவனுடன் பழகி அவனுடன் சிலகாலம் வாழ்ந்து பிரிந்துவிட்டாள். அப்போதுதான் வில்லின் அருமையை அவளும் உணர்கிறாள். ஆனால் வில்லின் காதல் மீது அவளுக்கு நிச்சயமில்லை. மே பி தான். சந்தேகிக்கிறாள். "நீதான் எப்போதும் கையில் மோதிரத்துடன் ஒரு காதலியைத் தேடிக் கொண்டே இருக்கிறாயே" என்று கிண்டலடிக்கிறாள்.ஆனால் தொலைந்து போன தனது தந்தையின் அன்புப் பரிசான ஜேன் ஆஸ்டினின் நாவல் பிரதி மீண்டும் வில் மூலமே கிடைக்கும் போதுதான் அவளுக்கும் ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது.வில்லின் மகள் மாயாவும் தனது தந்தையை மணமுடிக்கும் படி ஏப்ரலிடம் கெஞ்சுகிறாள். மாயாவின் களங்கமற்ற அன்பில் கரைந்துப் போகும் ஏப்ரல் அவள் சொற்களில் உள்ள நிச்சயமான அன்பை புரிந்துக் கொள்கிறாள்.
தந்தையை காதலியுடன் இணைத்து விட்டு மகள் வெளியேற காதலர்கள் இருவரும் முத்தமிடுவதுடன் படம் முடிகிறது.
மிகவும் நுட்பமான மனச்சிக்கல்களை நிச்சயமற்ற உறவுநிலைகளை நிச்சயப்படுத்த முடியாத மனங்களை மிகுந்த நேர்த்தியுடன் இப்படம் கையாள்கிறது. தமிழின் இந்த படத்தின் சாயலில் கேளடி கண்மணி என்றொரு படத்தை இயக்குனர் வஸந்த் இயக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை வசனங்களும் திரைக்கதையும் கூடுதல் பலம், வில்லாக நடித்துள்ள ரயன் ரெனால்டின் நடிப்பும் அபாரம். மாயாவாக வரும் சிறுமி பிரெஸ்லின் மறக்க முடியாத பாத்திரமாக மாறி விடுகிறாள்.
மூன்று காதல் கதைகளை இணைத்து பிணைத்து பாத்திரங்களில் ஏப்ரலை தனித்து இடம் பெறச் செய்கிறார் இயக்குனர். ஏப்ரலாக நடித்த இஸ்லா பிஷரும் சம்மராக நடித்த ராக்கெல் வேசும், மிச்சேலாக நடித்த எலிசபெத்தும் பேரழகிகள். மூவரையும் பார்த்து காதல் வசப்படாமல் இருக்க முடியாது.
உடல்ரீதியான ஈர்ப்புகளை மீறி உண்மையான காதலையும் கவித்துவம் மிக்க அன்பையும் அதற்கு இவ்வுலகில் நீங்காது இருக்கும் தனி மதிப்பையும் இப்படம் விளக்குகிறது. காணாமல் போன ஒரு புத்தகம் திரும்ப கிடைப்பதன் மூலம் பிரிந்துப் போன காதலர்களும் ஒன்று சேர்வதன் மூலம் இதனை இயக்குனர்  ஆடம் புரூக்ஸ் விளக்குகிறார். கிளிண்ட் மான்சலின் இசை படத்தின் மூடுக்கேற்ப மெதுவாக நம்மை வசீகரிக்கிறது. பீட்டர் டெஸ்சரின் தேர்ச்சி மிக்க எடிட்டிங்கும் பிளோரியனின் துல்லியமான கேமரா ஒளிப்பதிவும் இப்படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.
ஆனால் இப்படத்தின் இயக்குனரும் வசனகர்த்தாவும் திரைக்கதை எழுதியவருமான ஆடம் புரூக்ஸ்தான் எல்லோரையும் விட கவனத்தில் பதிந்துவிடுகிறார்.
மிகுந்த மனநிறைவைத் தந்த படம் இது. வாழ்க்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிச்சயமின்மை தொக்கி நிற்கும் போது நான் மே பி என அதை சந்தேகத்தால் ஒத்திவைப்பதை இனியாவது நிச்சயமாக நிராகரிக்க வேண்டும்.

நன்றி- குமுதம் தீராநதி ஜூலை 2015

Wednesday 1 July 2015

அரிதினும் அரிது கேள் 8 என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே

அமிதாப் பச்சன் இந்தியில் நடித்துள்ள எண்ணற்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்ட அமர் அக்பர் ஆன்டனி, தீவார், ஷோலே, நமக் ஹராம், நாஸ்திக், குத்தார், அபிமான் போன்ற சிறந்த படங்களின் வரிசையில் முக்கியமான ஒரு படம் முக்கந்தர் கா சிக்கந்தர்.

இந்தப்படத்தின் கதை மிகவும் நீளமானது. ஆனால் சுவையானது. ஐந்து முக்கியப் பாத்திரங்கள். அருமையான பாடல்கள், நேர்த்தியான திரைக்கதை, பல இடங்களில் பரவசமூட்டும் வசனங்கள். அமிதாப் சிறுவயது முதல் ராக்கியை காதலிப்பார். ராக்கியும் அவர் அப்பாவும் அவரை புரிந்துக் கொள்ளாமல் வெறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பல உதவிகள் செய்வார் அமிதாப். ராக்கியோ அமிதாப்பின் நண்பர் வினோத் கன்னாவை காதலிப்பார். இதை அறிந்ததும் உடைந்து நொறுங்கிப் போவார் அமிதாப் , அவர் மன உளைச்சலுக்கு ஆறுதலாக இருப்பவர் நடன மங்கையான ரேகா. ரேகாவின் மீது தீராத காதல் கொண்ட வில்லன் அம்ஜத்குமார் தனக்கு தடை அமிதாப் என நினைத்து அவரைக்குத்திக் கொலை செய்வார். நண்பனையும் காதலியையும் இணைத்து வைத்து அமிதாப் தியாகியாகிவிடுவார்.

அபத்தமான சினிமா கதை போலத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்ட மகத்தான காவியம்.காரணம் படத்தின் நேர்த்தியும் அமிதாப், ராக்கி, ரேகா, வினோத் கன்னா,அம்ஜத்கான் நடிப்பும் பாடல்களும்தான்.
படத்தில் எனக்குப்பிடித்த அம்சங்களை தொகுத்துத் தர முயற்சிக்கிறேன். முதன் முதலாக பால்ய கால காதல். ராக்கி சிறு பெண். தாய் இறந்துவிடுவார். காரணம் வேலைக்காரன் ஒருவன் நகைக்காக அவளை கொன்று விடுகிறான். இதனால் ராக்கியின் தந்தை ஏழை சிறுவர்களை வெறுப்பார்.ராக்கி குழந்தைத்தனமான அன்புடன் சிறுவயது அமிதாப்புடன் பழகுவாள். அமிதாப்பும் அவள் மீது உயிரை வைத்திருப்பான். அவள் ஒரு பொம்மையை பார்த்து ஆசைப்படுவாள். அந்த பொம்மையை வாங்கித்தர அமிதாப் முயற்சித்தாலும் பணம் போதாது. ஒருவழியாக பொம்மையுடன் அமிதாப் அவள் பிறந்தநாளுக்கு வரும் போது ராக்கி அவனை நினைத்து ஒ சாத்தி ரே என உருக்கமாக பாடுவாள்- குரல் ஆஷா போன்ஸ்லே, இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி
அமிதாப் பொம்மையுடன் வரும் போது திருடன் என விரட்டுவார்கள். நீயும் என் அம்மாவைக் கொன்ற திருடன் போன்றவன்தானா என் முகத்திலேயே முழிக்காதே என ராக்கி விரட்டிவிடுவாள். அவள் அப்பா அவளை அழைத்து வேறு ஊருக்குப் போய்விடுவார்.

அனாதாயான சிறுவன் அமிதாப் தன் பால்ய சகியைத் தேடி மும்பைக்கு வருவான். அங்கு நிருபமா ராய் பணத்தைப் பறிக்கும் பொறுக்கிப் பயல்களுடன் சண்டைபோட்டு பணத்தை மீட்டுத் தருவான். இதனால் அவனை மகனாக பாவித்து அந்த தாய் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். உன் பெயர் என்ன என்று அவர் கேட்கும்போது எனக்கு என் பெயரே தெரியாது. சிலர் பொறம்போக்கு என அழைப்பார்கள். சிலர் தேவடியா பையா என்பார்கள் சிலர் டேய் என்பார்கள்.யார் எப்படி அழைத்தாலும் என் பெயர் சொல்லி யாரும் அழைத்ததில்லை என்பான் சிறுவன்.
அவனுக்கு விஜய் என பெயரிடுகிறாள் அந்தத் தாய். அவனுக்கு ஒரு தங்கையும் கிடைக்கிறாள். தாய் இறந்த நாளில் துக்கம் தாளாமல் சுடுகாட்டில் அழும் அமிதாப்புக்கு ஒரு சூஃபீ பக்கீர்( காதர் கான்) ஆறுதல் சொல்வார். துன்பம் வரும்போது அழாதே, சிரிக்கப்பழகு. துன்பத்தைக் கண்டு சிரிப்பவன்தான் விதியை வெல்லும் வீரனாக மாறுவான்(( முக்கந்தர் கா சிக்கந்தர் ))
சிறுவன் சிரிப்பான். சிரிக்க சிரிக்க மும்பையின் நெடுஞ்சாலையில் பெரியவனாகி, அமிதாப் பச்சன் ரோத்தே ஹூவே ஆத்தே ஹை சப் என கிஷோர் குமார் குரலில் பாடிக் கொண்டே வருவார்.அழுதுக் கொண்டே பூமியில் பிறக்கிறார்கள், சிரித்துக்கொண்டே போகிறவன் எவனோ அவனே விதியை வெல்லும் வீரனாவான். என பாடலை எழுதியிருப்பவர் அன்ஜான்.
அந்தப் பாடலை பஸ் ஸ்டாண்டில் நின்று கேட்பார் ராக்கி. அதே பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வினோத் கன்னாவும் பாடலின் வரிகளைக் கேட்டு வியப்பார்

ஒரு சவ ஊர்வலம் அமிதாப்பின் மோட்டார் பைக்கை கடந்து செல்லும். அமிதாப் மிக ஸ்டைலாக ஒரு காலை தரையில் ஊன்றி நிற்பார். பாடல் இப்படி தொடரும்
ஜிந்தகி தோ பேவபா ஹை.....அதாவது வாழ்க்கை ஒரு துரோகி ஒருநாள் உன்னைக் கைவிட்டு விட்டு போய் விடும்
மரணம் உன் காதலியைப் போல் உன்னைத் தழுவிக் கொண்டு அழைத்துச் செல்லும்.
இறந்தபின்னும் வாழ்பவன் எவனோ அவன்தான் உலகத்திற்கு பாடமாக இருப்பான்.

இந்தப் படத்தில் ரேகாவின் கதாபாத்திரம் அற்புதமானது. ரேகா அற்புதமான நடிகையும் கூட. ஒரு கட்டத்தில் ரேகாவிடம் அமிதாப் மயங்கிக் கிடப்பதாக கருதும் நண்பர் வினோத் கன்னா உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் அவனை மறக்க என பேரம் பேசுவார். தொகையை உயர்த்திக் கொண்டே செல்ல அவ்வளவுதானா உங்கள் நண்பரின் விலை எனக் கேட்பார் ரேகா. அந்த விலைக்கு அவருடைய புகைப்படத்தைக் கூட நான் விற்கமாட்டேன் என்பார்.

அமிதாப் ரேகாவை காதலிக்கவில்லை என்றும் தான் காதலிக்கும் ராக்கியைத்தான் சிறுவயது முதலே காதலிக்கிறார் என்றும் அறியாதவர் வினோத் கன்னா.
ஒரு நிகழ்ச்சியில் மேடையேறும் அமிதாப் பச்சன் சிறுவயதில் ராக்கி பாடிய அதே பாடலை மேடையில் பாடுவார்
ஓ சாத்தி ரே தேரே பினாபீ க்யா ஜீனா.....குரல் கிஷோர் குமார்

இந்தப் படம் என் நினைவில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. இதே படத்தை தமிழில் எடுத்தார்கள். அமிதாப் வேடத்தில் சிவாஜி கணேசன். ராக்கி வேடத்தில் மாதவி.நடனக்காரி ரேகா வேடத்தில் ஸ்ரீப்ரியா, வினோத் கன்னா வேடத்தில் ஜெய்கணேஷ், படத்தின் பெயர் அமரகாவியம். இயக்குனர் அமிர்தம். தற்போது ராஜ் வீடியோ விஷனில் இதன் டிவிடி அநியாய விலைக்கு கிடைக்கிறது.



இந்தியைப் போல தமிழில் பாடல்கள் அதிகமாகப் பிரபலமாகவில்லை. பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதினர். இசை மெல்லிசைம ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் ஓ சாத்தி ரே பாடலுக்கு தமிழில் எழுதப்பட்ட பாடல் தனித்துவம் மிக்க பாடலாக அமைந்துவிட்டது. இதே பாடலை பெண் குரலில் எஸ்,பி.ஷைலஜா மிக அழகாகப் பாடியிருக்கிறார். என்றாலும் டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலில் அடர்த்தியான துயரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆழமான காதலை, அன்பை கவியரசர் கண்ணதாசன் வரிகளாக வடித்திருக்கிறார்.




செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்
உன்னைத்தானே நினைக்கிறேன்
என் ஆசையின் ஊஞ்சலும் நீயே
அதில் ஆடிடும் கனவுகள் நீயே
அதில்தானே வாழ்கிறேன்.

நான்பாடும் கீதம்
நீ தந்த ராகம்
நீ சொல்லும் பாடம்
என் வாழ்வில் வேதம்
நாள்தோறுமே ஆதாரமே நீயல்லவோ
நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ


நீ எந்தன் வானம்
நான் அங்கு நீலம்
நீ எந்தன் வாசல்
நான் அங்கு கோலம்
பாலாறு நான்
தேனாறு நீ பூமன்றமே
காணாவிட்டால் ஆறாதம்மா என் நெஞ்சமே

இந்தப் பாடல் மனதுக்குள் அற்புதமான ரீங்காரம் செய்வதற்கு மெல்லிசை மன்னரின் தாலாட்டும் இசைதான் காரணம்
எப்போதும் பால்ய கால காதலுக்கு உள்ள துயரம் மிக்க ஒரு இனிமை இந்தப்பாடலிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
------------------------------------------------





Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...