Saturday 3 October 2020

ஆயிரம் நிலவே வா 1 -எஸ்.பி.பியும் கேவி.மகாதேவனும்

SPB ஆயிரம் நிலவே வா. .. செந்தூரம் ஜெகதீஷ். 1.கே.வி. மகாதேவன் 1969ம் ஆண்டு அடிமைப் பெண் படத்தில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இருபதுகளில் இருந்த எஸ்.பி.பியை அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்பு அவர் எம்.எஸ்.வி.இசையில் சாந்தி நிலையம் குழந்தை உள்ளம் படங்களில் பாடியிருக்கிறார். ஆனால் அடிமைப் பெண் முதலில் வந்து விட்டது. இதனால் ஆயிரம் நிலவே வா தான் எஸ்.பி.பி.யின் முதல் பாடலாகும்.புலவர் புலமைப்பித்தன் எழுதிய இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து பாடினார்.எஸ்.பி.பியின் குரலைக் கேட்டதுமே எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது. பி.பி.ஸ்ரீ நிவாஸ் ஏ எம் ராஜா போன்ற பாடகர்களை விட எஸ்.பி.பி.யின் இளமையான குரலை பரிசோதனை செய்து பார்க்க எம்.ஜி.ஆர் துணிந்து விட்டார்.வழக்கமான டி.எம்.எஸ் பி சுசிலா டூயட்டிலிருந்து புதிய பூங்காற்றாக பாலசுப்பிரமணியத்தின் குரல் ரசிகர்களைத் தாலாட்டியது.அதில் வரும் ஹம்மிங் எஸ்.பி.பியின் தனித்துவமாக அவர் பின்னர் பாடிய பெரும்பாலான பாடல்களிலும் அவர் குரலுடன் குரலாகப் பொருந்திப் போனது.எஸ்.பி.பியின் குரலுடன் அவருடைய ஹம்மிங் பிரிக்க முடியாததாகி விட்டது. தொடர்ந்து கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பி.பாடிய சில அற்புதமான பாடல்கள் வெளியே தெரியாமல் போய்விட்டன. சங்கராபரணம் போன்ற தெலுங்கு படங்களில் கே.வி.எம். பாலாவை பாட வைத்தார்.அதை யாராவது தெலுங்கு தெரிந்தவர் கூறினால் கேட்போம்.தமிழில் சிவாஜி,கமல்,ஜெயசித்ரா நடித்த சத்யம் படத்தில் கமலுக்கு இரண்டு டூயட்டுகளைப் பாடினார் எஸ்.பி.பி. இரண்டு பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார் . அழகாம் கொடி சிறிது அதிலும் உந்தன் இடை சிறிது...என்ற பாடலும் கல்யாண கோவிலில் தெய்வீகக் கலசம் என்ற பாடலும் மிகவும் இனிமையானவை.இதே போன்று வாணி ராணி படத்தில் முத்துராமனுக்கு முல்லைப் பூ பல்லக்கு போவதெங்கே பாட்டும் பூமியில் தென்றல் பல்லாண்டு பாடுது பாடலும் கேட்க கேட்க தேனமுது.ஏணிப்படிகள் படத்தில் சிவகுமாருக்கு எஸ்.பி.பி.பாடிய பூந்தேனில் கலந்து.....ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு பாடல்கள் கே.வி.எம் இசையில் கொட்டிய முத்துக்கள். உத்தமன் படத்தில் படகு படகு ஆசைப் படகு பாடலும் இனியது. லைலா அனார்கலி காதல் பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலில் மணல்வெளி மேலே மனமகன் இருக்க மணமகள் பல்லாக்கில் போகின்றாள் மனதையும் கல்லாக்கி போகின்றாள் என்று எஸ்.பி.பி உருகிப் பாடியதைக் கேட்டால் இழந்த காதல் நினைவுகள் நம்மை அழச் செய்துவிடும். ஞானக்குழந்தை அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை போன்ற இன்னும் சில படங்களில் கே.வி.எம்.இசையில் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார். எழுபதுகளில் மெல்லிசை மன்னர் உச்சத்துக்கு போய் கே.வி.எம்முக்கு வாய்ப்புகள் குறைந்ததால் எஸ்.பி பியால் அதிகமாக அவரது இசையில் பாட முடியவில்லை.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...