Saturday 31 December 2016

புத்தாண்டு 2017



நாளை மற்றொரு நாளே என்ற ஜி.நாகராஜனின் நாவல் தலைப்பு மனதுக்குள் நிறைந்துள்ளது. அதனால் புத்தாண்டு, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின் போது கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்த ஆண்டும் எனக்கு காதலில் வெறுமையும் ஏமாற்றமும் நீடிக்கும் என்று ராசிபலன் கூறுகிறது. எந்த உற்சாகத்தில் வாழ்த்துக் கூறுவது என்றே தெரியவில்லை. நண்பர்கள் ஓயாமல் தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்தி மகிழ்கிறார்கள். தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன். எங்கே மனிதன் யாருமில்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற கண்ணதாசனின் அழுகுரலும் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. திடீரென நேற்றிரவு முதலே துயரமான மனநிலைக்கு ஆட்பட்டு விட்டேன். கடந்த 2016ம் ஆண்டு தந்தையை இழந்தது ஒரு சோகத்தை உருவாக்கியது ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் எனது உணர்வுகளால் மற்றவர்களின் உற்சாகத்துக்கு தடை சொல்ல முடியாது. என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday 30 December 2016

பயணம் 7 -பாலக்காடு

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா என்ற பாடல் வியட்நாம் வீடு படத்திற்காக கண்ணதாசன் எழுதியது. ஆனால் அது எம்.எஸ்.விக்காக எழுதப்பட்டிருக்கலாம். ஏனென்றால் எம்.எஸ்.வி பாலக்காடு மாவட்டம் பாறா பகுதியைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு சென்றிருந்தேன். ஒரு இலக்குமில்லாத பயணங்களில் இதுவும் ஒன்று நினைத்தபோது நினைத்த ஊருக்குப் போய்விடுவேன். கோவை போனதும் எங்கே போகலாம் என யோசித்து பாலக்காடு சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊராக இல்லை. ரயில் நிலையம் முதல்  பேருந்து நிலையம் வரை பல மாற்றங்கள்,
ரயிலில் மதுக்கரை, கஞ்சிக்கோடு என பார்த்த பகுதிகளை மீண்டும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் காய்கறிகளை கவரில் போட்டு விற்பது இன்றும் தொடர்கிறது. திரும்பி வரும் போது கோவைக்கு கே.எஸ்.ஆர்டிசி பேருந்து செல்ல வேண்டும் என டவுன் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள்.
அதற்கு முன்பு  சில மணி நேரங்களுக்கு ஊரை
சுற்றி வந்தேன். இரண்டு கடைகளில் பழைய மலையாள டிவிடிக்கள் வாங்கினேன். ராமு காரியாட்டின் நெல்லு அதில் ஒன்று பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தது. கனகதுர்காவும் ஜெயபாரதியும் நடித்த படம். அதே போல் கமல்ஹாசன் நடித்த ஈட்டா உள்ளிட்ட 4 மலையாளப் படங்கள் ஒரே டிவிடியில் கிடைத்தன.

கேரள வாழைக்காய் சிப்ஸ், தேநீர் ருசியுடன் என் நினைவுகள் பின்னோக்கி்ச் சென்றன. பாலக்காட்டில் சில நண்பர்கள் இருந்தனர். இப்போது ஷாராஜ் மட்டுமே தொடர்பில் இருக்கிறார். சித்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியரான வேதசகாயகுமார் நாகர்கோவில் சென்றுவிட்டார். பாறா பகுதியைச்ம சேர்ந்த நோம்பிக்கோடு என்.மனோகரன் சித்தூர் அரசுக்கலை கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக தெரிகிறது. சந்திக்கவில்லை. மற்ற நண்பர்களுக்கு வயதாகி டீன் ஏஜில் பெண் குழந்தையோ ஆண்குழந்தையோ இருப்பதை அறிகிறேன். எனக்கும் 15 வயது மகன் விக்கி இருக்கிறான்.

காலம் எத்தனையோ சுவடுகளை அழித்து விடுகிறது. சில வலிகளையும் நீக்கி விடுகிறது. சில துளி கண்ணீரை மட்டும் விழிகள் தக்கவைத்துள்ளன. சில நினைவுகளை உள்ளம் ஆழமாகப் புதைத்து விட்டது. சில உணர்வுகளை நானே ரத்து செய்யத் தொடங்கிவிட்டேன். சில கனவுகள் மட்டும் இருக்கின்றன. அவையும் அர்த்தமற்றவை. சில சந்திப்புகளுக்கான ஏக்கம் இருக்கிறது. சில நண்பர்களுக்கான உறவுக்கு என் கைகள் இன்றும் நீள்கின்றன. ஆனால் மறுமுனையில் வெறுமைதான் எஞ்சியிருக்கிறது.
கோவையும் பாலக்காடும் எனது கடந்தகாலத்தின் ரணங்களைக் கீறிச் சென்றாலும் இன்றும் அதன் வசியம் குறைந்துவிடவில்லை


Saturday 24 December 2016

தமிழ்மணவாளன் கவிதை நூல்

நண்பர் கவிஞர் தமிழ்மணவாளனின் புதிய கவிதை நூல்- உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் வெளியீட்டுவிழா டிசம்பர் 24-2016 சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபஞ்சன், எஸ்.சண்முகம் ஆகியோரின் அடர்த்தியான உரைகள் நவீன கவிதைகள் குறித்த பொது அபிப்ராயங்களை கேள்விக்குட்படுத்தி நீண்ட விவாதத்திற்கு வழி வகுத்தன. லதா ராமகிருஷ்ணன், சொர்ணபாரதி, சூரியதாஸ்,விஜயேந்திரா உள்ளிட்ட படைப்பாளிகளும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கல்கி துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா, தளம் இதழ் ஆசிரியர் பாரவி உட்பட ஏராளமான இலக்கிய முகங்களை காண முடிந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு நிறைவான இலக்கிய நிகழ்வு. சாத்தியமாக்கிய தமிழ் மணவாளனுக்கு நன்றியும் வாழ்த்தும்

Wednesday 21 December 2016

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி

கல்யாண்ஜி என்ற பெயரில் அகரம் பதிப்பகம் வெளியிட்ட புலரி தொகுப்பு முதல் கல்யாணசுந்தரத்தை பரிச்சயம் செய்து சில சந்தர்ப்பங்களி்ல் நேரிலும் கலந்துரையாடியிருக்கிறேன். (அவருடைய தந்தை திகசியுடனும் இணக்கமான நட்பு இருந்தது. திருநெல்வேலி டவுனில் உள்ள சுடலைமாடன் வீதிக்கு திகசியை சந்திக்க ஓரிரு முறை போயிருக்கிறேன்.)
வண்ணதாசன் என்ற பெயரில் கல்யாண்ஜி எழுதும் ஏராளமான கதைகளை வாசித்தும் இருக்கிறேன், கோவை ஞானியின் களம் கூட்டங்களில் வண்ணதாசன் படைப்புகள் குறித்து பேசியிருக்கிறோம். அவருடைய கடிதங்கள் தொகுதிக்கு நிகழ் இதழில் விமர்சனமும் எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வண்ணதாசன் ஒருவர். மென்மையான உணர்வுகளுடைய அற்புதமான மனிதர் என்பதை வாசிப்பிலும் அனுபவத்திலும் அறிந்திருக்கிறேன்.அவருக்கு தாமதமாகவேனும் சாகி்த்ய அகாடமி அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருதுடன் அவருக்கு சாகித்ய அகாடமி கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் மானசீகமாக நன்றி. வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.

Thursday 8 December 2016

அஞ்சலி -ஜெயலலிதா




தமிழக மக்களின் அபிமானத்தைப் பெரிய அளவில் பெற்றவர் ஜெயலலிதா.அவருடைய அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எம்ஜிஆரால் அழைத்து வரப்பட்டவர் என்றும் எம்ஜிஆரைப் போல் தம்மை அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் கூறப்படுவது உண்மைதான். திராவிட இயக்கங்களால் தமிழகம் வறட்டுத்தனமான பெரியாரின்நா த்திகப் பாதைக்குத் திரும்பிவிடாமல் ஆன்மீகப் பாதைக்கு அழைத்து வந்ததில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பங்கு  முக்கியமானது என்று கூறப்படுவதை மறுக்க முடியாது. எனக்கு நடிகையாக பார்த்த ஜெயலலிதாவின் திறன்கள் நடனம், அபிநயம், அழகு எல்லாமே மறக்க முடியாத பதிவுகள். தமிழக முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் குறைவாக இருப்பினும் மக்களின் அன்பை முழுமையாகப் பெற்றவர். இன்னும் பல காலம் வாழ வேண்டியவர் போய் விட்டது நம்ப முடியாததாக உள்ளது. கடைசியில் வாழ்க்கையை மரணம் தான் ஜெயித்து விடுகிறது.



ஜெயலலிதாவின் பாடல்களில் கட்டழகுத் தங்க மகள் திருநாளோ என்ற காவல்காரன் படப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். வாலி எழுதிய இந்தப் பாடலில் என் கண்களில் நீ தரும் தரிசனமோ என்ற வரிகளில் நெகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.


ஜெயலலிதா நடித்த சிறந்த படங்கள் என பட்டியலிட்டால் எம்ஜிஆருடன்
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், அன்னமிட்டகை, நம்நாடு, ராமன் தேடி சீதை, தேடி வந்த மாப்பிள்ளை, காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், சந்திரோதயம் , ஒருதாய் மக்கள் ,என் அண்ணன், ரகசிய போலீஸ் 115
போன்ற படங்களை சொல்லலாம்
சிவாஜி கணேசனுடன்
ராஜா, சுமதி என் சுந்தரி, எங்கிருந்தோ வந்தாள், அவன்தான் மனிதன், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, தெய்வமகன் ,எங்க ஊர் ராஜா , எங்க மாமா, கலாட்டா கல்யாணம், போன்ற படங்கள் நினைவில் நிற்கின்றன.
கமலுடன் ஒரே ஒரு படத்தில் ( அன்பு தங்கை ) மேனகையாக நடனமாடியிருக்கிறார் ஜெயலலிதா. ரஜினியுடன் தமது கடைசி படமான நதியைத் தேடி வந்த கடல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் படத்தில் சரத்பாபு நடித்தார்.

முத்துராமனோடு சூரியகாந்தி. ஜெய்சங்கருடன் யார்நீ, பொம்மலாட்டம், வைரம்,  ரவிச்சந்திரனுடன் நான், மூன்றெழுத்து, குமரிப்பெண், ஜெமினி கணேசனுடன் அன்னை வேளாங்கண்ணி என்று பலதரப்பட்ட படங்களில் பலவித வேடங்களில்  ஜெயலலிதாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

அவர் மிகச்சிறந்த பாடகியும் கூட. அம்மா என்றால் அன்பு பாடல் நல்ல உதாரணம், ஆனால் அந்தப் பாடலை எழுதிய வாலி மறைந்த போது ஒரு இரங்கல் குறிப்பைக் கூட முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடவில்லை. அதே போல் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்காக வந்த வடிவேலு திருப்பி அனுப்பப்பட்டதும் ஜெயலலிதாவுக்கு குரல் கொடுத்த பி.சுசிலா பத்துடன் பதினொன்றாக கூட்டத்தில் வந்து போனதும் தான் மனதுக்கு வருத்தமளிக்கிறது. மகத்தான கலைஞர்களை மதிக்க வேண்டாமா.......

Saturday 3 December 2016

உலகசினிமா -கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்

குமுதம் தீராநதி -டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா -
கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்......
செந்தூரம் ஜெகதீஷ்
Letters to Juliet








அவன் தனதுஇருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தான். அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் முகம் பரிச்சயமானதாக தெரிந்தது. வண்டியின் வேகத்தை குறைத்து அவளை நெருங்கிச் சென்று வண்டியை நிறுத்தினான். அவள் முகத்தில் புன்னகை. ஆம் அது அவளே தான் சுமார் 25 ஆண்டுகள் கழித்து அவன் சந்திக்கும் பெண் அவள். இள வயதில் நான்கு ஆண்டுகள் அவள் கையைப் பிடித்து சென்னை நகரம் முழுவதையும் அவன் பேருந்திலும் கால் நடையாகவும் சுற்றியிருக்கிறான். வள்ளுவர் கோட்டத்திலும் மியூசியத்திலும் யாருமில்லாத இடங்களில் முத்தமிட்டிருக்கிறார்கள். சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள். இலக்கே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ கால் வலிக்க வலிக்க நடந்து போயிருக்கிறார்கள். அவளுக்குத் திருமணமாகி விட்ட பிறகு கண்ணீருடன் அவளை ஒருமுறை சந்தித்து அவள் எழுதிய காதல் கடிதங்களை ஒரு பையில் போட்டு அவளிடம் கொடுத்து விட்டான். அவளுக்குத் தெரியாமல் ஒரே ஒரு கடிதத்தை அவள் நினைவுக்காக அவன் எடுத்து வைத்துக் கொண்டான். அது கடிதம் கூட அல்ல. அவன் பெயரையும் அவள் பெயரையும் ஒவ்வொரு எழுத்தாக கோர்த்து அவள் வடித்த ஒரு மலர் மாலையின் சித்திரம். அவளுக்கு அரசு ஊழியருடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு ஒழுக்கம் கருதி அந்த உறவு துண்டிக்கப்பட்டது.வேலையில்லாமல் திரிந்த இவன் அவளை அதன் பிறகு சந்திக்கவே இல்லை. ஒரு ஊரில் இருந்தாலும் அரை மணி நேரத்தில் பார்த்து விடக்கூடிய தூரத்தில் இருந்தாலும் அவர்கள் சந்திக்கவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு பேருந்து நிறுத்தத்தில் தற்செயலாக நிகழ்கிறது சந்திப்பு . எங்கே போக வேண்டும் வா என்றழைக்க தயக்கத்துடன் அவள் அவன் வண்டியில் ஏறுகிறாள். அவள் பட்டுப்புடவையின் சலசலப்பும் பல ஆண்டுகள் கழித்து பட்ட அவள் ஸ்பரிசமும் சாலையில் அவனுடைய வாகனத்தை பறக்கச் செய்கின்றன. ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரிப்பதற்குள் அவள் செல்ல வேண்டிய இடம் வந்து விடுகிறது. இறங்கிப் போகிறாள். அவள் கையைப் பிடிக்க மனம் அலைபாய்கிறது. நாளை புத்தாண்டு என நினைவு வர புத்தாண்டு வாழ்த்துகள் என அவன் கையை நீட்டுகிறான். அவள் கைகுலுக்குகிறாள். ஆனால் அந்த கையில் பழைய மென்மை இல்லை. பழைய அன்பு இல்லை. பழைய சலனங்கள் இல்லை. மரத்துப் போன ஒரு இரும்புக் கரத்தை அவன் பற்றி குலுக்குவது போல் உணர்கிறான். அவன் தொட்டுத் தழுவிய பெண் அவள்அல்ல என்பது போல் தோன்றுகிறது.முதுமையும் காலமும் அவளை மாற்றி விட்டது. அவன் மனம் தான் மாறவே இல்லை. அப்படியே அந்தக் காலத்தில் நிலைத்து நின்று விட்டது.அவள் நடந்து செல்வதை அவன் கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்று விட்டான்.

இது ஒரு நிஜவாழ்க்கை அனுபவம், இந்த காதலை என்னவென்று சொல்வது. இது உடல் கவர்ச்சியா, உள்ளத்தின் பரிதவிப்பா இரண்டும் கலந்ததுதானா....வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்கிறார் வாலி.....அன்பு மட்டும்தான் மாறுவதில்லை. மற்றதெல்லாம் மாறி விடுகிறது.
உலகின் மிகவும் புகழ் பெற்ற காதல் கதைகளான ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு போன்றவைகளில் காதலர்கள் சேராமல் மடிந்துப் போனார்கள். மொகலே ஆசம் படத்தில் பியார் கியா தோ டர்னா கியா என்று லதா மங்கேஷ்கரின் எதிரொலி கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட மாளிகை முழுவதும் எதிரொலிக்க மதுபாலா ஆடிக் கொண்டிருக்கிறாள். இந்த காதல் காவியங்களில் கண்ணீர் ததும்பிக் கிடக்கிறது.
இந்த படமும் கண்ணீர் நிரம்பிய காதலர்களின் கதைதான். 15 வயதில் ஒருவனை காதலிக்கும் ஒருத்திக்கு அந்த காதல் முதிராமல் உதிர்ந்துப் போகிறது. ரோமியோவை ஜூலியட் காதலித்த போது அவளுக்கு வயது 14 தான். என்ன செய்வது மிகமிக இள வயதில்தானே பால்யம் காலாவதியாகி காதல் மலர்கிறது. இருவரும் வயல்வெளி, ஆற்றங்கரை என எங்கெங்கோ கையைப் பிடித்தும் முத்தமிட்டும் திரிகிறார்கள். புல்தரையில் படுத்து வானத்து நட்சத்திரங்களுடன் உரையாடுகிறார்கள். காலமெல்லாம் இணைந்து வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆசையுடன் ஒருவருக்கு ஒருவர் கடிதங்களை எழுதிக் கொள்கிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு எழுந்த போது வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்று காதலன் அழைக்கிறான். காதலியோ வரவில்லை. இளவயதின் அச்சங்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. தன் தாயையும் தந்தையையும் துடிக்க விட அவள் மனம் விரும்பவில்லை. காதலனை ஏமாற்றுவது தான் அவளுக்கு முடிகிறது. அவள் வீட்டுக்குப் பயந்து தன் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுவிடுகிறாள். அங்கு வேறொரு செல்வந்தனுடன் அவளுக்குத் திருமணம் ஆகிறது. 50 ஆண்டுகள் வாழ்ந்து பேரன் பேத்தி எல்லாம் எடுத்த பிறகு திடீரென அவள் தனது முதுமைப்பருவத்தில் காதலனைத் தேடி செல்கிறாள். 50 வருடம் கழித்து தன்னைத் தேடி வந்த வயது முதிர்ந்த காதலியை காதலன் ஏற்றுக் கொண்டானா..... லெட்டர்ஸ் டூ ஜூலியட் என்ற இந்த திரைப்படம் இக்கதையை மிகுந்த கலாரசனையுடன் காட்சிகளாக்கியுள்ளது.2010ம் ஆண்டில் இப்படம் வெளியான போது முதல் வாரத்தில் வசூலில் சக்கை போடு போட்டது. ஆனால் இரண்டாவது வாரத்தில் ஐயன் மேன், ராபின் ஹூட் போன்ற படங்கள் ரிலீசானதால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
லெட்டர்ஸ் டூ ஜூலியட் படத்தில் ஆரம்பத்தில் நாம் அழகான ஒரு இளம் பெண்ணை சந்திக்கிறோம். படத்தில் அவள் பெயர் சோஃபி. அமெரிக்காவின் நியுயார்க்கர் இதழில் வரும் தகவல்களை சரிபார்ப்பதே அவள் பணி .ஒரு டிடெக்டிவ் போல் ஆராய்ச்சி செய்து உண்மை எது பொய் எது என்பதை புட்டு புட்டு வைக்கிறாள். அதற்காக அவளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அவளுக்கோ எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை. தன் காதலனுடன் அவள் விடுமுறை நாட்களைக் கழிக்க இத்தாலியின் வெரனோவா செல்லத் திட்டமிடுகிறாள். காதலன் நியுயார்க்கில் ஒரு உணவகம் நடத்துகிறான். உணவைத் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. அருகில் இருக்கும் காதலியை விடவும் அவனுக்கு சமையலில் உப்பு மணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதில்தான் அக்கறை....இத்தகைய காதலனுடன் விடுமுறையை கழிக்க அவள் வெரோனா நகருக்கு செல்கிறாள். வெரோனா ரொமாண்டிக்கான நகரம், ஷேக்ஸ்பியர் படைத்த மகத்தான காதலர்களான ரோமியோவும் ஜூலியட்டும் வாழ்ந்த இடம். திருமணத்திற்கு முன்பே காதலனுடன் ஹனிமூனா என்று அலுவலகத் தோழியர் கிண்டலடிக்கிறார்கள்.ஆனால் அந்த தேனிலவில் அவள் தனியாகத்தான் இருக்கிறாள். காதலனோ தன் சமையல் உலகில் நிலைக்கிறான். ஒரு மஷ்ரூம் விளைவதைப் பார்க்க 120 கிலோ மீட்டர் பயணம் செல்கிறான். திராட்சைத் தோட்டத்தை காண ஒரு நாளை வீணாக்குகிறான். ஒயின் ஏலத்தில் பங்கேற்க பல நாள் காணாமல் போகிறான்....
சோஃபி தன் தனிமையில் வெரோனை வலம் வருகிறாள். அப்போதுதான் அவள் ரோமியோ ஜூலியட்டைக் காண செடி கொடிகளை பிடித்து பால்கனியில் ஏறிச் சென்ற பழைய காலத்து வீடு ஒன்றை காண்கிறாள். ஆம் அதுதான் ஜூலியட் வாழ்ந்த வீடு. ஒரு காவிய காதல் நாயகியின் துயரம் தோய்ந்த அந்த வரலாற்றை ஷேக்ஸ்பியர் ஒரு கண்ணீர் நிரம்பிய காதல் கதையாக வடித்திருந்தார். அந்த வீட்டின் பழைய செங்கல் இடுக்குகளில் பல காதல் கடிதங்கள் அன்பு முத்தங்களுடன் வைக்கப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் காதலரை நினைத்து கண்ணீருடன் கடிதங்களை எழுதி அந்த செங்கல்களின் இடுக்குகளில் செருகி செல்கின்றனர். மாலை நேரத்தில் ஒரு பெண் கூடையுடன் வருகிறாள்.அந்த சுவர்களில் செருகப்பட்ட கடிதங்களை கூடையில் சேகரித்து எடுத்துச் செல்கிறாள். அந்த பெண்ணை ஆர்வத்துடன் பின்தொடர்கிறாள் சோஃபி. அந்த கடிதங்கள் என்னவாகின்றன என்பதை கண்டுபிடிக்க அவள் முயற்சிக்கிறாள்.
ஒரு வீட்டிற்குள் அந்தப் பெண் நுழைகிறாள். அங்கு ஒரு வரவேற்பறையில் மேலும் சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலோர் வயதானவர்கள். தங்கள் திருமண வாழ்க்கையை சபிக்கிறவர்கள். தங்கள் கணவரை நாயை விடக் கேவலமாக மதிப்பவர்கள். தங்களுக்காக உயிரைக் கொடுக்கவும் காதலிக்கவும் யாரும் இல்லையே என்று ஏங்குபவர்கள்....
அவர்கள் அந்த காதல் கடிதங்களுக்கு கவிதை நடையில் பதில் எழுதுகிறார்கள். ஒருவகையில் அவர்கள் குட்டி எழுத்தாளர்கள். காதலின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறுவதுதான் அவர்களின் வேலை. ஜூலியட் எழுதும் பதில்களாக அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நீங்கள் என்ன ஜூலியட்டா அவள் பெயரில் கடிதம் எழுதுவதற்கு என சோஃபி கோபப்படுகிறாள். இல்லை நாங்கள் ஜூலியட்டின் காரியதரிசிகள் என்பது அவர்களின் பதில். சோஃபிக்கு இத்தொழிலில் ஆர்வம் எழுகிறது. அவர்களுடன் சேர்கிறாள். மறுநாள் கூடையில் கடிதங்களை சேகரிக்கும் பெண்ணுடன் அவளும் சென்று செங்கல் இடுக்குகளில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான வண்ணவண்ண கடிதங்களை அவள் கூடையில் அள்ளிப் போடுகிறாள். அப்போது தற்செயலாக ஒரு கல் தகர்ந்து விழுகிறது. அந்தக் கல் விழுந்த இடத்தில் ஒரு பொந்து இருக்கிறது. அந்த இடுக்கில் ஒரு பழைய தூசுபடிந்த காதல் கடிதத்தை சோஃபி கண்டெடுக்கிறாள்.
அக்கடிதம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதம். தன் காதலனுக்காக அந்த 15 வயது பெண் மன்னிப்பு கோரி எழுதிய கடிதம். லண்டன் சென்று செல்வந்தனை மணந்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அவள் கண்ணீருடன் எழுதி வைத்த கடிதம் 50 ஆண்டுகள் கழித்து சோஃபியின் கைகளில் சிக்கியுள்ளது. இப்போது அவள் என்னவாக இருப்பாள்.....இந்த கடிதத்திற்கு பதில் எழுதினால் என்ன என்று எண்ணுகிறாள் சோஃபி. 50 ஆண்டுகள் கழித்தா ஒரு கடிதத்திற்கு பதி்ல் போடுவது என்று சக தோழிகள் வியக்கிறார்கள். எழுதினால் என்ன என்று எழுத ஆரம்பிக்கிறாள் சோஃபி. எல்லோரும் இயந்திரத்தனமாக இதர கடிதங்களுக்கு இனிக்க இனிக்க ஜூலியட்டின் பெயரால் கடிதங்களை எழுதி வைக்க இவளோ ஒரே கடிதத்திற்கு பதில் எழுதுவதில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் மனதில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை விழித்துக் கொள்கிறது. அந்த கடிதம் தான் அவளுடைய முதல் எழுத்து அனுபவமாகவும் மலர்கிறது.
சில நாட்கள் கழித்து சார்லி என்ற இளைஞன் ஒருவன் அந்தப் பெண்களைத் தேடி வருகிறான். நீங்கள் தான் ஜூலியட்டின் செயலாளர்களா என விசாரிக்கிறான்.கிளேர் என்பவருக்கு கடிதம் எழுதியது யார் என விசாரிக்கிறான். சோஃபி ஆர்வத்துடன் நான்தான் என முனஅவருகிறாள். இதுபோன்ற அபத்தத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என கோபமாக சொல்லி அவன் வெளியேறுகிறான். சோஃபி அவனைப் பின் தொடர்ந்து ஓடுகிறாள். இதைச் சொல்லவா லண்டனில் இருந்து வெரோனாவா வரை இத்தனை தூரம் வந்தாய் என்று சார்லியை கேட்கிறாள் சோஃபி. நான் ஏன் இங்கே வருகிறேன். என் பாட்டி கிளேர் தான் அழைத்து வந்தார் என்று கூறுகிறான் சார்லி.
என்னது கிளேர் இங்கே வந்திருக்காங்களா.....சோஃபியால் நம்பவே முடியவில்லை. ஆமாம் எனக் கூற எதிரே அந்த 65 வயது பாட்டி கிளேர் நாகரீக ஆடைகளில் நிற்பதைக் காண்கிறாள் சோஃபி. அவளுக்கு ஒரே ஆச்சரியம். தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. 50 ஆண்டு கழித்து காதல் கடிதத்திற்கு பதில் எழுதியது யார் என காண அந்தப் பெண் தேடி வந்திருக்கிறார்.15 வயதில் தன் வீட்டை விட்டு ஓடிப்போக முடியாமல் அச்சத்துடன் பின்வாங்கி லண்டன் சென்ற பெண்ணாக அவள் வரவில்லை. மாறாக வெரோனா அருகில் உள்ள துஸ்சான் டவனுக்கு தன் காதலனைத் தேடி ஒரு மூதாட்டியாக திரும்பி வந்திருக்கிறார். லாரன்சோ என்ற அந்த காதலரை தேடும் பணியில் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் சோஃபி.
இத்தனை ஆண்டுகள் கழித்து அவரை கண்டுபிடிக்க முடியுமா எனக் கேட்கிறாள் சோஃபி .முடியும் என்பது கிளேரின் நம்பிக்கை. ஏனென்றால் லோரன்சோ தனது நிலத்தை மிகவும் நேசித்தவர் .தன் நிலத்தை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார் என்கிறார் கிளேர் .
பல லோரன்சோக்களை சந்திக்கிறார்கள். சிலர் பெண் பித்தர்களாக இருக்கிறார்கள். சிலர் பெண்களையே வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு என்னைவிட்டு ஓடிப்போன சண்டாளியை நினைவுபடுத்த வந்தீர்களா என கத்தும் ஒரு லோரன்சோவைக் கண்டு அவர்கள் மூவரும் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். இந்த பயணங்களின் போது சார்லிக்கும் சோஃபிக்கும் இடையே ஒரு அந்நியோன்னியம் பிறக்கிறது. ஒரு மெல்லிய காதல் அங்கு மலர்கிறது.
கடைசியில் ஒரு லோரன்சோவின் கல்லறையில் சார்வி வெடித்தெழுகிறான் .இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவே இல்லையா....இதுதான் முடிவு. இந்த கல்லறைதான் கடைசி .இன்னொரு லோரன்சோவை தேடி நான் செல்ல விரும்பவில்லை. எனது விடுமுறை நாட்கள் முழுவதையும் ஒரு அபத்தமான தேடலுக்காக இழந்துவிட்டேன் என அவன் குமுறுகிறான். தனது பாட்டி ஒவ்வொரு முறையும் லோரன்சோவை சந்திக்க பரபக்கும் போதும் அந்த லோரன்சோ அவர் அல்ல என ஏமாற்றத்துடன் திரும்பும் போதும் அவர் மனம் தவிப்பதை தன்னால் காண முடியவில்லை என்கிறான் சார்லி
ஆனாலும் ஏனோ அவன் பிறகு தன் செயலுக்கு வருந்துகிறான். சோஃபியிடம் மன்னிப்பு கேட்கிறான் ,இன்னும் எத்தனை லோரன்சோக்கள் இந்தப் பகுதியில் இருந்தாலும் தேடிப்பார்த்து விடலாம் என்கிறான்.
இரவில் புல்தரையில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி சார்லி படுத்திருக்க சோஃபியும் அருகில் வந்து படுக்கிறாள்.பேசிக் கொண்டே இருவரும் திடீரென முத்தமிட்டுக் கொள்வதை தனது அறை ஜன்னல் வழியாகப் பார்க்கிறார் கிளேர். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது.
நீ வேறொருவனுக்கு நிச்சயித்த பெண். உன்னை முத்தமிட்டது தப்பு .அது உணர்ச்சிவசப்பட்ட தவறு வேண்டாம். இனி நாம் பழக வேண்டாம் என்று தடை போடுகிறான் சார்லி. சரி என அவள் கூறினாலும் அவள் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. உணவகத்தின் தேவைகளுக்காக தன்னைத் தனியாக விட்ட காதலனையும் தன் பயணத்துணையாக வந்து பிரிய முடியாத தோழனாகிவிட்ட சார்லியையும் அவள் எடை போடத்தொடங்குகிறாள். அவள் எழுதிய கதையை சார்லி ரசித்துப் படிக்கிறான் . நீ அற்புதமான எழுத்தாளர். மிக நன்றாக எழுதுகிறாய் என ஊக்கபப்டுத்துகிறான். அவள் ஒரு எழுத்தாளராக மலர்ந்துக் கொண்டிருப்பதை குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாத பொருட்படுத்தாத காதலனை நினைத்து அவள் பெருமூச்சு விடுகிறாள்.
கடைசியாக அவர்கள் ஒரு வயல்பகுதிக்கு செல்லும் போது வயலில் வேலை செய்யும் ஒரு இளைஞனை கையைக் காட்டி இவர்தான் லோரன்சோ என்கிறார் கிளேர். ஆம் அவன் லோரன்சோவின் இள வயது தோற்றத்தில் இருந்த அவர் பேரன்.அவனிடம் விசாரி்க்கிறார்கள் .தன் தாத்தா குதிரை சவாரிக்கு போயிருப்பதாகவும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்றும் கூறுகிறான் அந்த இளைஞன். அதுவரை தன் காதலரை சந்திக்க துடித்த கிளேருக்கு உள்ளம் பதறுகிறது. கைகள் நடுங்குகின்றன. அவர் என்னை நினைவில் வைத்திருக்காவிட்டால் என்ன செய்வது. நீ யார் என கேட்டுவிட்டால் என்ன செய்வது ....அந்த நினைவை அவரால் தாங்க முடியவில்லை. வோரன்சோ வருவதற்குள் போய் விடலாம் என்று சார்லியையும் சோஃபியையும் அழைக்கும் போதே லோரன்சோ குதிரை மீது சவாரி செய்தபடி வந்து இறங்குகிறார். தன்னைப் பற்றி யாரோ விசாரிக்கிறார்கள் என்பதையறிந்து அவர்கள் பக்கம் திரும்புகிறார். ஒரே கணத்தில் அவரால் கிளேரை அடையாளம் காண முடிகிறது. 15 வயதில் பருவம் கனியாத ஒரு பருவத்தில் பார்த்த அதே பெண்ணை 65 வயது முதிர்ந்த கோலத்திலும் அவரால் மறக்க முடியவில்லை. அதே முகம் .அதே புன்னகை.அதே கண்கள்.....அதே அன்பு
லோரன்சோ அளிக்கும் உபசரிப்பு விருந்தில் அவருடைய பேரன் பேத்திகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள். அப்போது அந்த கூட்டத்தின் மத்தியில் சோஃபி தனக்கு ஜூலியட்டின் பெயரால் எழுதிய கடிதம்தான் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த பயணத்தை மேற்கொள்ள வைத்ததாக கூறுகிறார் கிளேர். கடிதத்தின் சில வாக்கியங்களை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
WHAT - IF  என்று ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. இவை தனித்தனியாக இருக்கும் போது தனி அர்த்தங்கள் தோன்றலாம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துவிட்டால் அதன் அர்த்தமே மாறி விடும். அப்படி நடந்தால்தான் என்ன என்று கேள்வி எழும். அந்த கேள்விக்கு விடை காணச் சென்றால் அது வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிடும்.
அப்படியொரு மாற்றம் இங்கே நிகழ்ந்திருக்கிறது என்று கூறுகிறார் கிளேர். வயதான பிறகு தடைகள் ஏதுமில்லை. காதலர்கள் இணைகிறார்கள். இன்னொரு புறம் மலரத் தொடங்கிய காதலை மொட்டிலேயே நசுக்கி சார்லியும் சோஃபியும் பிரிகிறார்கள்.
அப்போது பேரனின் வாடிய முகத்தைப் பார்த்து கூறுகிறார் கிளேர் . உலகில் ஒரு சோஃபிதான் உண்டு. போ . என்னைப் போல் 50 ஆண்டுகள் காத்திருக்காமல் இப்போதே போய் உன் காதலை சொல்லி விடு....
சோஃபியைத் தேடி மீண்டும் வெரோனா செல்லும் சார்லி பால்கனியில் சோபியும் அவள் காதலன்  விக்டரை முத்தமிடுவதைப் பார்த்து திரும்புகிறான். முத்தமிட்ட அடுத்த கணமே காதலனை வெறுக்கத் தொடங்கி விடும் சோஃபியோ சார்லியை மறக்க முடியாமல் பால்கனியில் பார்க்கும் போது தொலை தூரத்தில் திரும்புகிறது சார்லியின் கார். அவளால் அதை பார்க்க முடியவில்லை.,
லோரன்சோவுக்கும் கிளேருக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. சோஃபிக்கு அழைப்பிதழ் வருகிறது. திருமணத்திற்கு செல்ல விரும்புவதாக கூறும் சோஃபி விக்டருடனான தனது உறவை முறித்துக் கொள்கிறாள். நிரந்தரமாக அவனுக்கு குட்பை சொல்லி விட்டு அவள் தன் அடக்க முடியாத மனத்துடன் வெரோனவா பயணிக்கிறாள். ஆனால் திருமண விருந்து நிகழ்ச்சியில் சார்லி பாட்ரிசியாவை அறிமுகம் செய்கிறான். பாட்ரிசியாவை தான் காதலித்து அவளை ஏற்க மறுத்துவிட்டதாக ஒருமுறை சார்லி கூறியது அவளுக்கு நினைவுக்கு வருகிறது.
இப்போது அவளால் மனம் திறக்க முடியவில்லை., அவள் அழுதுக் கொண்டே செல்லுவதைப் பார்த்து சார்லி தொடர்கிறான். பால்கனியில் நிற்கும் சோஃபியாவை கீழே இருந்தபடியே அழைக்கிறான் சார்லி
சார்லி நான் உன்னை காதலிப்பதை சொல்லத்தான் ஓடி வந்தேன். ஆனால் நீ மீண்டும் பாட்ரிசியாவுடன் இணைந்துவிட்டாய் .ஆனாலும் சொல்லி விடுகிறேன். ஐ லவ் யூ என கண்ணீருடன் கூறுகிறாள் சோஃபி
அடிப்பாவி அந்த பாட்ரிசியா வேறு இவள் என் சகோதர முறையிலான பெண் என சார்லி கூற இருவரும் சிரிக்கிறார்கள். சோஃபியை அடைய ரோமியாவாக மாறுகிறான் சார்லி, அங்குள்ள கொடியை பிடித்து பால்கனியில் ஏற அவன் முயற்சிக்கையில் கொடி அறுந்து கீழே விழுகிறான். ஆனால் புல்தரை என்பதால் அடிபடவில்லை.
சோஃபி அவனை நோக்கி ஓடிவருகிறாள். இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் .அதைக் காண கிளேருடன் வோரன்சோவும் திருமணத்திற்கு வந்த அத்தனை விருந்தினர்களும் திரண்டுவிடுகிறார்கள்.
இப்படத்தில் சோஃபியாக தனது அழகா ன கண்களாலேயே நடித்திருப்பவர் அமன்டா செய்பிரீட் ,காரில் அவர் சார்லியுடன் பயணிக்கும் போது பின்சீட்டில் அமர்ந்திருக்கும் போது சார்லி அவளை பார்த்து ரசிப்பதையும் இன்னொரு காட்சியில் சார்லியின் முகத்தை கண்ணாடியில் அவள் பார்த்து ரசிப்பதையும் இயக்குனர் கேரி வினிக் அற்புதமான கவிதையாக படமாக்கியுள்ளார். அமன்டாவுக்கு சார்லியாக நடித்த கிறிஸ்டோபர் ஈகன் கிளைமாக்சில் கொடுக்கும் அழுத்தமான முத்தம் நம்மை கிளர்ச்சியுறச் செய்கிறது. காதலின் முத்தங்களுக்காக உதடுகள் ஏங்குகின்றன.
கிளேராக நடித்திருப்பவர் மூத்த ஹாலிவுட் நடிகை வானேசா . அவர் சிறுவயதில் தொலைத்து முதுமையில் மீட்ட காதலர் லோரன்சோ பாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் நீரோ.  இவரை ஜாங்கோ கௌபாய் படங்களின் சண்டைக்காட்சிகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
14 வயதில் ரோமியோவை காதலித்து ரோமியோலை அடைய முடியாத குடும்ப பகையால் உயிரைத் துறந்த ஜூலியட் என்ற காதல் தேவதையின் சடலத்தைக் கண்டு கதறுகிறான் ரோமியோ. அவனும் தன்னை வாளால் வெட்டி மாய்த்துக் கொள்கிறான். காதலர்களின் கண்ணீருடனும் ரத்தத்துடனும் ஷேக்ஸ்பியரின் காதல் கதை துயரத்தில் முடிவடைந்தது. ஆனால் அந்த காதல் தேவதையான ஜூலியட்டின் பெயரால் எழுதப்பட்ட ஒரு கடிதம் 50 ஆண்டுகள் கழித்து ஒரு காதல் ஜோடியை இணைத்து வைக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் ஒன்றாக வாழப்போகும் ஒரு காதல் ஜோடியையும் அது உருவாக்கியுள்ளது.
காதல் நிகழ்வது கணப்பொழுதில்தான். ஆனால் சில நேரங்களில் அந்தக் கணம் நித்தியத்துவமாகி நிரந்தரமாய் நிலைபெற்று விடுகிறது.

Thursday 1 December 2016

அஞ்சலி- கவிஞர் இன்குலாப்

கவிஞர் இன்குலாப்பை எனக்கு 80 களில் இருந்தே தெரியும். அவர்தான் என்னை முதன்முதலாக வழிநடத்தியவர். கவிதையை புரட்சிகரமாக எழுதும் பித்து அந்தக் கால இளம் கவிஞர்கள் பலருக்கும் இருந்தது. எனக்கும்தான். அப்போது எங்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருந்தவர் இன்குலாப். கண்மணி ராஜம் கவிதையில் பீட்டர் சாலை பெரிய சாலைஎன்று தொடங்கும் அந்த வர்ணனை மனதுக்குள் எத்தனையோ அதி்ர்வுகளை ஏற்படுத்தியது. மனுசங்கடா என்று அவர் பாடும் போது மேடையில் மார்க்சீய உணர்வு பெருகி பார்வையாளர்களை எழுச்சியுறச் செய்தது. சோசலிக் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்ற சில மொழிபெயர்ப்புகளையும் இன்குலாப் செய்திருந்தார். அதே போல் இன்குலாப் கவிதைகள் என்று அகரம் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இளவேனில் எழுதிய நீண்ட முன்னுரை கவிதைகள் குறித்த ஒரு அற்புதமான ஆவணமாகவே இருக்கிறது.
இன்குலாப்பை செந்தூரம் இதழுக்காக சந்தித்து  நீண்ட பேட்டி ஒன்று எடுத்திருக்கிறேன். அது இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக வந்தது. நான் எப்போது அழைத்தாலும் பிரியத்துடன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் கூட்டத்திற்கு வந்து அருமையாகப் பேசி கடைசி வரை இருந்துவிட்டு செல்வார். ஜானி ஜான் கான் தெருவில் இருந்த அவர் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அருமையான டீ ஒன்றை தருவார். அப்போது அவர்  பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். தொண்ணூறுகள் வரை இன்குலாப்பின் சிஷ்யன் எனக்கூறுமளவுக்கு அவருடன் நெருங்கி பழகியவன் தொண்ணூறுகளில் ஓஷோவால் மார்க்சியம், புரட்சி கோஷங்களில் இருந்து விலக ஆரம்பித்தேன். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கோவை ஞானி, பிரபஞ்சன், பெரியார்தாசன் என்று பலருடன் நட்பு வட்டம் வளர்ந்ததில் இன்குலாப்பின் இடம் விலகிப் போனது.
பல ஆண்டுகளாக நானும் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இலக்கியம், சினிமா குறித்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் .கிடங்குத்தெரு என்ற மிக முக்கியமான படைப்பையும் தமிழுக்கு தந்துள்ள திருப்தி இருக்கிறது. பல மொழிபெயர்ப்புகளையும் செய்து வருகிறேன். ஊடகத்துறையில் மனுஷ்யப்புத்திரன், டாக்டர் கவுசல்யா போன்றவர்கள் இன்று அடிக்கடி தென்படுவதற்கு ஒரு வகையில் நானும் காரணம்.
ஆனால் நான் காணாமல் போய்விட்டதாக பலரும் கருதுவதுண்டு. என் இயக்கம் ஒருநிமிடம் கூட ஓய்ந்ததில்லை.
பல ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைக்கழக வாயில் அருகே கவிஞர் இன்குலாப்பை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஜெகதீஷ் நீங்க எப்படிப்பட்ட ஆக்டிவான ஆளு நீங்க எங்கே காணாமல் போயிட்டீங்க , நீங்க இல்லாதது இலக்கியத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று  அவர்  கேட்டார். தன் உலகை விட்டு வெளியுலகை அவர் எட்டியே பார்க்கவில்லை என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
அவர் மறைவு வரை மீண்டும் அவரை சந்திக்கவில்லை.அதற்காக மிகவும் வருந்துகிறேன். இன்குலாப் எப்போதும் மதிக்கக்கூடிய ஆளுமை. முரண்பட்டாலும் கூட.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி குறைவாக இருக்கும் மனிதர்களில் இன்குலாப்பின் இடம் முதலிடம்தான். கடைசி இடத்தைக் கூட கொடுக்க முடியாத ஒருவர் இருக்கிறார். யார் என்பதை நீங்களே ஊகி்த்துக் கொள்ளலாம்.

Saturday 5 November 2016

புதையல் -புதுமைப்பித்தன் கதைகள்

புதையல்
செந்தூரம் ஜெகதீஷ்
1. புதுமைப்பித்தன் கதைகள்


(( கல்வெட்டு அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை ))



காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்திய படைப்பாளி புதுமைப்பித்தன். 1906ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சொ.விருதாசலம்  கூத்தன் ,நந்தன் போன்ற பல பெயர்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வந்தாலும் அவரே கூறியது போல் அமெரிக்காவின் விளம்பரத்தன்மை வாய்ந்த புதுமைப்பித்தன் என்ற பெயரை சூடிக் கொண்ட பிறகுதான் கவனம் பெற்றார்.
பல ஊர்களுக்கு மாற்றலான புதுமைப்பித்தனின் பெற்றோர், கடலூருக்கு அருகில் இருந்த திருப்பாதிரிப்புலியூரில் இருந்தபோதுதான் புதுமைப்பித்தன் பிறந்தார்.தாய் காலமான போது பு.பிக்கு வயது எட்டுதான். தாயின் அன்பையும் அரவணைப்பையும் இழந்த அவர் பின்னாளில் தமது துணைவியாரைத்தான் தாய் வடிவில் கண்டார்.
1931ம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு புதுமைப்பித்தன் கமலாம்பாளை மணமுடித்தார். மணிக்கொடி பத்திரிகை அவருக்கு எழுதுவதற்கு வாசலைத் திறந்தது. ஒரு கதை பிரசுரமானால் இரண்டு ரூபாய் கிடைக்கும். இதை நம்பித்தான் அவர் தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை மணிக்கொடி இதழில் பிரசுரமானது.
"மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் கிரஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிபல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப்பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை வளர்ப்பதற்காக நானும் பி.எஸ்.ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் " என்று மணிக்கொடி இதழ் பற்றி 1947ம் ஆண்டில் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.
"மணிக்கொடி இதழில் எழுதியவர்களில் மிகவும் கேலிக்கும் நூதனம் என்பதனால் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான் .கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை.அது தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது. அதனைக் கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாக பாஷைக்குப் புதிது...." என்று தமது கதைகளைப் பற்றி புதுமைப்பித்தன் கூறுகிறார்.
பொன்னகரம் என்ற கதையில்  விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறார் புதுமைப்பித்தனர். முக்கால் ரூபாய் துட்டுக்காக சோரம் போகும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதுகையில் "என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் அய்யா பொன்னகரம்" என்ற அக்கதையின் இறுதி வரிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் புதுமைப்பித்தன். குழந்தைகளின் ரகசியமாய் சாக்கடையில் மிதந்து வரும் ஆப்பிளைப் பற்றியும் மிகவும் நுட்பான அவதானிப்புடன் குறிப்பிட்டார் புதுமைப்பித்தன். ( வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நல்லதோர் வீணை படத்தில் சாக்கடையில் விழுந்து வரும் ஒரு ஆப்பிளுக்காக ஏராளமான பட்டதாரிகள் கமல் கையிலிருந்து அதை பிடுங்கும் காட்சி பொன்னகரத்தின் பாதிப்பாக இருக்கலாம்)
மிஷின் யுகம் மனிதன் இயந்திரமாக மாறிக் கொண்டிருப்பதையும் ஒரு கணத்தில் அவன் மனிதனாக மீள்வதையும் மிக அழகாக சொன்ன சிறிய கதை. சாபவிமோசனம் கதை புதுமைப்பித்தனை சர்ச்சையில் சிக்க வைத்தது. அகலிகைக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீராமன் சீதையின் கற்பை பரிசோதிக்க அக்னிப்பிரவேசம் செய்ய சொன்னான் என்ற தகவலை அறிந்த அகலிகை , அவனா, ராமனா சொன்னான் என்று அதிர்ச்சியில் மீண்டும் கல்லாகிப் போனாள்  என எழுதியது அப்போதைய முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு முரணாக தோன்ற புதுமைப்பித்தன் கதைகளை அந்தக்கால  பத்திரிகைகள் வெளியிட மறுத்தன.இதனால் புதுமைப்பித்தன் பலநாட்கள் பட்டினி கிடக்க நேரிட்ட கதைகள் நம் கண்களை கசிய வைக்கின்றன.
செல்லம்மாள் கதை நோயுற்ற மனைவி மீது அளவு கடந்த பிரியம் வைத்துள்ள கணவனைப் பற்றிய கதை. ஆனால் மனைவி இறந்ததும் அவனுக்கு விட்டுவிடுதலையாகும் உணர்வு பிறப்பதாக உளவியல் ரீதியான ஒரு தர்க்கத்தை இக்கதை எழுப்பியது. சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் போன்ற பலர் புதுமைப்பித்தனின் இக்கதையே அவரது மற்ற கதைகளை விடவும் சிறந்தது என்று மதிப்பிடுகின்றனர்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எள்ளல்( satire) கதைகளில் ஒன்று. அதுவரை எழுதப்பட்ட கதைகளில் இதுவே அந்த பாணியில் முதல் கதை.
மேலகரம் மே.ரா.கந்தசாமிப் பிள்ளை என்ற ஏழை கதாசிரியர் ஒருவர்  பிராட்வே எஸ்பிளனேட் பகுதியில் டிராமுக்காக காத்திருப்பதாக கதை தொடங்குகிறது. டிராமுக்கு காலணா தேவை என்ற யோசனை அவருக்கு.கையிருப்போ காலணா. அதை டிராமுக்கு கொடுத்துவிட்டால் வெற்றிலைக்கு என்ன செய்வது என்பது அவர் பிரச்சினை. பக்கத்து கடையில் வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்துவிடலாம். அல்லது பேருந்தில் ஏறி நடத்துனரை ஏமாற்றிக் கொண்டே சென்ட்ரலை கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கி திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை கப் காபி குடித்து விட்டு வீட்டுக்குபோகலாம் ( மயக்கம் அடையாதீர்கள். இவை எல்லாமே காலணாவில்தான் ) ஆனால் வெற்றிலை கிடைக்காது.இதில் எதைத் தேர்வு செய்வது என்பதுதான் அவருடைய யோசனை. டிராம்ப் அல்லது வெற்றிலையுடன் நடைப்பயணம், அல்லது பேருந்தும் காபியும்.
இந்த இருத்தலியல் சி்க்கலுடன் நிற்கும் கந்தசாமிப் பிள்ளைக்கு கடவுள் மனித ரூபத்தில் பிரசன்னமாகி பேச்சுக் கொடுக்கிறார். கடவுளின் வயது 60 ஆயிரமாக இருக்கலாம்.ஆனால் அத்தனை வருஷமும் நன்றாக தின்றுக் கொழுத்து கொழு கொழு என்று மேனி வளப்பத்துடன் தோன்றும் கடவுளை புதுமைப்பித்தனின் பேனா சரியான எள்ளல் செய்கிறது. கடவுள் கந்தசாமியை சாப்பிட அழைக்கிறார். பில்லை நம் தலையில் கட்டிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துக் கொண்டே போகிறார் கந்தசாமி. ஹோட்டலின் சுகாதாரம் புதுமைப்பித்தனின் பேனாவிடம் சிக்கிக் கொள்கிறது. காபி பவுடர் கலப்படம், சில்லரைத் தட்டுப்பாடு. போன்ற லௌகீக பிரச்சினைகளுடன் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. ஆயுளைப் பற்றிய உரையாடலுக்குப் பிறகு தமது தீபிகை என்ற சிறுபத்திரிகைக்காக ஆயுள் சந்தா கேட்கிறார் கந்தசாமி. யாருடைய ஜீவியம் என்று கேட்கிறார் கடவுள். அப்போதும் கந்தசாமி கடவுளிடம் கூறுகிறார். " உங்கள் ஆயுள்தான்.பத்திரிகையின் ஆயுள் அழியாத வஸ்து" கடைசியில் ரிக்சாவில் ஏறி இருவரும் செல்கின்றனர். கடவுள் தான் யார் என்பதை கூறுகிறார். கடவுள் தந்த கூலி ஒரு ரூபாயை வாங்கிய ரிக்சாக்காரன் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்று கடவுளுக்கே ஆசி கூறுகிறான்.
கந்தசாமிக்க வரும் தர விரும்புகிறார் கடவுள். அந்த வித்தை எல்லாம் என்கிட்ட செல்லாது என்கிறார் கந்தசாமி. வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல என்று கூறுகிறார் அவர். அப்பா என்று உறவு கொண்டாட விழையும் கந்தசாமியை கடவுள் அப்பா என்று அழைக்காதே என்றும் பெரியப்பா என்று அழைக்கும்படியும் கடவுள் கூறுகிறார். தமது சொத்தை கந்தசாமி கேட்பாரோ என்ற பயம் கடவுளுக்கு. வரம்வேண்டாம். எங்கள் கூட இருந்து எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார் என்கிறார் கந்தசாமி.கடவுள் மனிதனின் முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். உங்களிடமிருந்து எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது என்கிறார் கடவுள். உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு என்று கந்தசாமி கடவுளை விரட்டி விடுகிறார்.
எழுத்தையே முழுநேர வாழ்வுக்கும் வருமானத்திற்கும் நம்பிய ஒரு தமிழ் எழுத்தாளனான புதுமைப்பித்தன், வறுமையுடனும்  வணிக இலக்கியத்துடனும் போராடித் தோற்றார்.
எழுத்தாளனின் வறுமையை சித்தரிக்க அவர் எழுதி மற்றொரு கதை ஒருநாள் கழிந்தது. இதுவே புதுமைப்பித்தனின் சிறந்த கதை என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சி.சு.செல்லப்பாவோ சிற்பியின்  நரகத்தையே புதுமைப்பித்தனின் சிறந்த கதையாக தேர்வு செய்கிறார். சி.சு.செல்லப்பா பற்றி அறியாமல் நானும் இக்கதையே புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த கதையாக முன்னிறுத்தினேன்.
சிற்பியின் நரகம் உண்மையான கலைஞனின் பசியைப் பற்றியது. உண்மையான கலையையும் கலைஞனையும் போலித்தனம் மிக்க உலகமும் நகல் கலைஞர்களும் அதிகாரம் செலுத்தும் கதை .
மலையத்த நடிகையின் முக சாந்தி, நீலமலைக் கொடுங் கோலன் சிரச்சேதம் செய்யப்பட்ட போது அவனது இடைத் துவளுதல் போன்ற பாவனைகளை இணைத்து வடிக்கிறான் ஓர் அபூர்வமான சிற்பத்தை.சிற்பம் அரசனிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.சிற்பி பயணம் போய் விடுகிறான். பல ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது சிற்பி தனது உன்னத கலைப்படைப்பு இருண்ட அறைக்குள் தூசு படர்ந்து கிடப்பதைக் கண்டு மனம் வாடுகிறான்.கோவில் பிரகாரத்தில் ஏதோ ஒரு சிற்பம் தெய்வமாக பூஜிக்கப்படுகிறது.உண்மையான கலை புறக்கணிக்கப்பட்டு போலியான நகல் கலை ஆராதிக்கப்படுகிறது.எனக்கு மோட்சம் மோட்சம் என்று அழுகின்றது இருட்டறையில் கிடந்த அவனது சிற்பம். சிலை மீது தலையை மோதி ரத்தம் பீறிட கலைஞன் தனது படைப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்கிறான்.
மொத்தம் 97 கதைகளை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.ஏராளமான கட்டுரைகள், கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்புகளையும் பணத்தேவையின் பொருட்டு அவர் செய்துள்ளார்.இறுதிக்காலத்தில் கடும் நெருக்கடியில் தவித்த புதுமைப்பித்தன் பணம் சம்பாதிக்க திரைப்படத் துறையை நாடி வந்தார். அவரது முழுமைப் பெறாத ஒரு நாடகம் பின்னர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க சரஸ்வதியின் சபதமாக வெளியானது.
ராசாத்தி மாதிரி தனது மனைவி கமலாம்மாவை வைத்திருக்க நினைத்த புதுமைப்பித்தன் வறுமையையே அவருக்குப் பரிசாக அளித்தார். தமது மனைவிக்கு அவர் எழுதிய கடிதங்களை நூலாக தொகுத்துள்ளார் கவிஞர் இளையபாரதி.
இரவில் நிம்மதியற்ற மனநிலையில் பயங்கர சொப்பனங்கள் கண்டு திடீர் திடீர் என விழித்துக் கொள்வதாக எழுதுகிறார் புதுமைப்பித்தன். தனது மனைவிக்கு ஸ்டாம்பு கூட வாங்கி அனுப்ப முடியாததால் கடிதம் எழுத முடியாத நிலையிலும் தனது குழந்தையின் நோய் குறித்து கவலைப்படுகிறார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று குமுறலை வெளியிடுகிறார். வறுமை, நோய் காரணமாக மிக இளம் வயதிலேயே தமது 42 வது வயதில், 1948ம் ஆண்டு புதுமைப்பித்தன் காலமானார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று எழுதினார் அவருடைய நெருங்கிய நண்பரான தொ.மு.சி.ரகுநாதன்.
புதுமைப்பித்தன் மறைவுக்குப்பிறகு கமலா அம்மையார் தமது 3 வயது குழந்தையுடன் உறவினரிடம் அடைக்கலம் நாடி சென்னைக்கு ரயிலில் செல்லும் போது தாமிரபரணி பாலத்தில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள எண்ணியிருக்கிறார். ஆனால் அப்போது புதுமைப்பித்தனின் வரி ஒன்று அவர் மனதுக்குள் ஓடியிருக்கிறது. ஒளிநிச்சயம் வரும். ஒளி வரும்போது நான் இல்லாவிட்டால் என்ன என்ற வரியின்மூலம் மீண்டும் நம்பிக்கையை மீட்டு கமலா அம்மையார் தினகரியுடன் சென்னை வந்தார். பிற்காலத்தில் அக்குடும்பம் லாட்டரி டிக்கட்டில் 2 லட்சம்ரூபாய் பரிசு கிடைக்க நிம்மதியாக வாழத் தொடங்கியது.
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
அய்யா நான்
செத்ததற்குப்பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண்
என்று புலம்பாதீர்.
அத்தனையும் வேண்டாம் .
அடியேனை விட்டு விடும்.
என்று புதுமைப்பித்தன் எழுதினாலும் தமிழ்ச்சூழ் உலகம் அவரை இன்று விடுவதாக இல்லை. வாழும் போது அசல் படைப்பாளிகளுக்கு ஒரு துரும்பைக் கூட தராத தமிழ்க்கூறு நல்லுலகம் மறைந்த பிறகு அவருக்கு அமரத்துவம் அளித்து விடுகிறது. இதுவும் புதுமைப்பித்தன் எழுத மறந்த ஒரு கதைதானோ.....


---------------------------------------------------------------


உலக சினிமா -கலை உழைக்கும் மக்களுக்கே

ஆந்திராய் தார்க்கோவஸ்கியின்
THE STREAMROLLER AND THE VIOLIN
குமுதம் தீராநதி நவம்பர் 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை....











உலக சினிமா  
ஆந்திராய் தார்க்கோவஸ்கி யின் திரைப்படம்
STREAM ROLLER AND THE VIOLIN ( Russia)
கலை என்பது உழைக்கும் மக்களுக்காகவே...
செந்தூரம் ஜெகதீஷ்


கலை கலைக்காக என்றும் கலை மக்களுக்காக இரு அணிகளாக அறிவாளிகள் திரண்ட காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. சோவியத் புரட்சி நிகழ்ந்ததையடுத்து முதலாளித்துவ கலையை ஒழிப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் குறியாக இருந்தனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பாதையை பின்பற்றிய லெனின் மக்கள் கவிஞனாக அறியப்பட்ட புரட்சிக் கவிஞன் மாயகோவஸ்கியை விடவும் புஷ்கின் கவிதைகள் தரமானவை என்று அபிப்ராயம் கொண்டிருந்தார். இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சியளித்தது. காரணம் புஷ்கினை அவர்கள் பூர்ஷ்வா என கருதியிருந்தனர். 
கலையில் வர்க்க பேதத்தை புகுத்துவதில் லெனினுக்கு இருந்த தயக்கம் அவரது நெருங்கிய சகாக்களான ஸ்டாலினுக்கும் டிராட்ஸ்கிக்கும் இருக்கவில்லை. கலையை ஆடம்பரமான செல்வந்தர்களின் பொழுதுபோக்காகவே அவர்கள் கருதினார்கள். மாக்சிம் கார்க்கி போன்ற கலைஞர்களால் மக்களுக்காகவும் கலையை படைக்க முடியும் என்ற புதிய சிந்தனை ஊற்றெடுத்தது. தல்ஸ்தோய் போன்ற மகா கலைஞர்களையும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் ஒருசாரார் நிராகரித்தனர். அந்தோன் செக்காவ் , மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற கலைஞர்கள் மக்களின் பக்கம் நிற்பதாக மரியாதை செலுத்தினர். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியத் துறைகளுக்கே கம்யூனிஸ்ட்டுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்கு கடுமையான அக்னிப்பரீட்சை நிகழ்ந்த இக்காலத்தின் தொடக்கத்தில் சினிமா என்ற காட்சி ஊடகமும் ஐரோப்ப நாடுகளின் தாக்கத்தால் ரஷ்யாவில் புத்தெழுச்சி பெற்றது. செர்கய் ஐசன்ஸ்டினின் போர்க்கப்பல் போட்டம்கின், கார்க்கியின் தாய் போன்ற படைப்புகள் சினிமாவாக  வடிவமெடுத்து சோசலிச சோவியத் ரஷ்யாவின் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்தின.
இத்தகைய சூழலில் தான் ஆந்திராய் தார்க்கோவஸ்கி சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார்.1917 ரஷ்ய புரட்சிக்குப் பிந்தைய சோசலிச ரஷ்யாவில் லெனினின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார். மக்களுக்காக இயங்காத, கம்யூனிஸ்ட் கட்சியில் சேராத கலைஞர்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. மென்மையான கலைஞர்கள் தலைமறைவாகவும் நாடு கடத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டும் வாழ்ந்து வந்தனர். 1932ம் ஆண்டில் பிறந்த தார்க்கோவஸ்கியின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 






அவருடைய பால்ய காலத்தின் போது இரண்டாம் உலகப் போர் மூண்டது. இதில்அவர் தந்தை உடல் உறுப்புகளை இழந்தார். பின்னர் அவர் மறைந்தார். இந்த இரண்டு சமூக, தனிப்பட்ட நிகழ்வுகள் தார்க்கோவஸ்கியின் பால்ய காலத்தை வெகுவாக பாதித்ததை அவருடைய திரைப்படங்கள் பிரதிபலித்தன.
திரைப்படங்கள் குறித்த கல்வி வளர்ந்து வந்த நேரம் அது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சினிமாவை பயிற்றுவித்த வந்த மைக்கேல் ரோம் என்பவருடன் தார்க்கோவஸ்கி சினிமா கலையை பயின்றார். மாஸ்கோவில் குடிபுகுந்ததால் நிறைய திரைப்படங்களையும் பல திரைப்பட மேதைகளையும் சந்தித்து பேசும் வாய்ப்பை தார்க்கோவஸ்கி பெற்றார். 
1953ம் ஆண்டில் ஸ்டாலின் மறைந்த பிறகு கலைஞர்கள் மீதான கெடுபிடிகள், இறுக்கங்கள் தளர்த்தப்பட்டன. முதலில் இலக்கியமும் பின்னர் சினிமாவும் சுதந்திரமான வெளிக்கு வந்தனர். ஆனால் அதற்குள் படங்களை இயக்கத் தொடங்கி விட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கிக்கு அவமதிப்புகள் ,புறக்கணிப்புகள் நிகழ்ந்தன. 1990ம் ஆண்டு கோர்பசேவின் புதிய அரசியல் பாதைகளால் சோவியத் யூனியனின் இறுகிய கட்டுமானம் நொறுங்கத் தொடங்கியது. அப்போது ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துவிட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் முதன் முதலாக ரஷ்யாவில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவாளிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டன. கோர்பசேவ் அரசும் தார்க்கோவஸ்க்கிக்கு லெனின் நினைவுப் பரிசை வழங்கி சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு கௌரவம் அளித்தது. அதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அவரை அவர் தாய்நாடு அங்கீகரித்தது. 
தமது வயதான காலத்தி்ல் நோய்வாய்ப்பட்ட நிலையில் தமது படங்களுக்கு ரஷ்யாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை அறிந்து அவர் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க தார்க்கோவஸ்கி மறுத்து விட்டார்.
" உயிருடனோ பிணமாகவோ நான் என் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பவில்லை, அத்தனை அவமானமும் புறக்கணிப்பும் வலியும் வேதனையும் அந்நாட்டு  மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள், நான் என்னை ரஷ்யன் என்று உலக அரங்கில் சொல்லிக் கொண்டாலும் சோவியத் யூனியனைச் சேர்ந்தவன் என்று ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார் தார்க்கோவஸ்கி.
தார்க்கோவஸ்கியின் இவானின் குழந்தைப் பருவம் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுடன் மிகவும் அதிகமான கவனம் பெற்ற படம் ஸ்ட்ரீம் ரோலர் அண்ட் தி வயலின் என்ற குறும்படம். ஆம் இது ஒரு குறும்படம் தான். ஆனால் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய மிக நீளமான குறும்படம் அல்லது மினி திரைப்படம் என்று இதனை அழைக்கலாம்.1961ம் ஆண்டில் இதனை இயக்கினார் அவர்.
தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் கவித்துவ அழகும் காட்சியின் அழகும் பெற்றவை. கலை மரணத்திற்காக மனிதனை தயாரிக்க வேண்டும் என்று அவர் கருத்து கொண்டிருந்தாலும் வாழ்க்கையின் மீதும் அதன் அழகியல் மீதும் வெகுளியான மனிதர்கள் மீதும் உழைக்கும் வர்க்கம் மீதும் குழந்தைகள் மீதும் அவர் அலாதியான பிரியம் கொண்டிருந்தார். அதை தமது திரைப்படங்களில் பதிவு செய்ய அவர் தவறவில்லை. வாழ்க்கையை ஒரு கனவு போல் தமது படங்களில் சி்த்தரித்தார் ஆந்திராய் தார்க்கோவஸ்கி என்று மற்றொரு உலகப் புகழ் பெற்ற இயக்குனரான இங்மர் பெர்க்மென் பாராட்டியுள்ளார்.
குழந்தைகளுக்காக தார்க்கோவஸ்கி இயக்கிய படம் இது. சாலையில் தாரை போட்டு அதன் மீது ஸ்ட்ரீம் ரோலரை ஓட்டி சமன்படுத்தும் உழைப்பாளி ஒருவனுக்கும் வயலின் கற்றுக்கொள்ள இசைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் ஏழு வயது சிறுவனுக்கும் ஏற்படும் நட்புதான் இதன் மையம்.
தந்தை இல்லாத அந்த சிறுவன் தாயால் வளர்க்கப்படுகிறான்.
வயலினுடன் இசைப்பள்ளிக்குச் செல்லும் சிறுவன் சாஷாவை டீசிங் செய்யும் பெரிய பையன்களிடமிருந்து சாஷாவை மீட்டு தோழமை கொள்கிறான் செர்கய். இவன் ஸ்ட்ரீம் ரோலர் ஓட்டுவதைப் பார்த்து தமக்கும் கற்றுக் கொடுக்குமாறு சிறுவன் கேட்க, செர்கய் அவனுக்கு ஸ்ட்ரீம் ரோலரின் தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறான், பதிலுக்கு செர்கய் தன் உழைப்பின் களைப்பை மறக்க சாஷா அவனுக்காக வயலின் வாசிக்கிறான், 
கையில் கிரீஸ் கரையுடன் வீடு திரும்பும் சாஷாவை தாய் அதட்டுகிறாள். செர்கயுடன் தமது மகன் பழகுவதைஅவள் விரும்பவில்லை. முரட்டுத்தனமான தொழிலாளிகள் யாவரும் தீயவர்கள் என்பது அவள் எண்ணம். ஆனால் சாஷாவுக்கோ தந்தை இல்லாத தனது தனிமையைப் போக்க வந்தவன்தான் அந்த தொழிலாளி. தொழிலின் மீது சாஷாவுக்கு ஏற்படும் ஆர்வம் ஒரு மழைக்காலத்தில் படமாக்கப்படுகிறது. இடிந்த ஒரு கட்டடத்தை இரும்பு குண்டு கொக்கியில் வைத்து தாக்கி இடித்து நொறுக்கும் காட்சியை பரவசத்துடன் பார்க்கிறான் சாஷா. மனித உழைப்புதான் மாட மாளிகைகளை உருவாக்குகிறது. உலகை படைக்கிறது என்ற சிறுவயது முதலே உழைக்கும் வர்க்கத்தின் மீது சாஷாவுக்கு ஈர்ப்பு ஏற்பட இக்காட்சி உதவுகிறது. இக்காட்சியும் ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் கவித்துவமான கனவே போன்ற சினிமா மொழியில் மழை மழை ஈரம் படிந்த மணல், மணலில் தெரியும் சூரிய ஒளி, புறாக்களின் பறத்தல் , சிறுவனின் பிம்பம் என காட்சி வழியாக கவிதைகளைக் கொட்டிக் கொண்டே செல்கிறது.
தனது புதிய நண்பனுடன் சினிமா பார்க்க சாஷாவிரும்புகிறான். ஆனால் தாய் அவனை  செர்கயுடன் சினிமாவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சாஷாவுக்காக திரையரங்க வாசலில் காத்திருக்கும் செர்கய்க்கு குழந்தை வரவில்லை என்ற கவலை தோய்ந்திருக்க புதிதாக முளைத்த இளம் பெண் ஒருத்தி ஸ்நேகமாகிறாள். தனக்கும் அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் என அவள் அழைக்க அரை மனத்துடன் சாஷாவை தேடும் விழிகளுடன் செர்கய் தன் புதிய  தோழியுடன் படம் பார்க்க போகிறான். வீட்டில் தனியாக அடைபட்டிருக்கும் சாஷா கண்கலங்குகிறான், அவன் கண்ணீர் கண்ணாடி திரையில் நீர்பிம்பங்களாக காட்சிவடிவத்தை கலங்கடிக்கிறது. அப்போது கனவு போன்றதொரு காட்சியில் செர்கயின் ஸ்ட்ரீம் ரோலரை நோக்கி சாஷா ஓடிக் கொண்டிருக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது.






கலை கடைசியாக சேர வேண்டியது உழைக்கும் மக்களுக்குதான் என்ற குறியீட்டுத் தன்மையுடன் படம் முடிகிறது.
தந்தை இல்லாத குழந்தைக்கு தந்தை போல் பாசத்தையும் உழைப்பையும் கற்றுத் தந்த ஒரு இளைஞனுடனான நட்பைத் துண்டித்து அந்த குழந்தையின் இளம் பருவக் கனவுகளைக் கலைத்து விட்ட தாய் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. அந்த ஏக்கம் சாஷாவின் கண்களில் இருந்து வயலின் இசை வரை நம்மை உறுத்துகிறது.
இந்தப் படத்துக்கு அமோகமான பாராட்டுகள் உலக அளவில் கிடைத்தன.தார்க்கோவஸ்கியின் கைவிரல் ரேகைகள் படம் முழுவதும் பதிவாகி இருப்பதாக விமர்சகர்கள் எழுதினார்கள். மனித சுபாவம் மற்றும் சூழலை மையமாகக் கொண்ட கவித்துவமான திரைப்படம் என்று பாராட்டினார்கள். தமது படங்களில் நாடகத்தன்மையான காட்சிகள்இருக்க வேண்டுமே தவிர இலக்கியப் படைப்பு போன்ற அடர்த்தியோ ஆழமோ தேவையில்லை என்று கருதியவர் தார்க்கோவஸ்கி. இலக்கியம் வேறு சினிமா வேறு என்று அவர் நினைத்திருக்கலாம். இப்படத்தின் காட்சிகள் நீண்ட டேக்குகளாக இருப்பதை சில புகழ் பெற்ற இயக்குனர்கள் விமர்சித்தனர். ஆனால் ஆந்திராய் தார்க்கோவஸ்கி அவர்களுக்கு கூறிய பதில் இது...
இயல்பான அளவு கொண்ட ஒரு காட்சியை சற்று நீட்டித்தால் போர் அடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் இன்னும் சிறிது நேரம் நீட்டித்தால் அதில் ஆர்வம் ஏற்படும். இன்னும் சற்று நேரம் நீட்டித்தால் அது புதிய பரிமாணத்தை எட்டி விடும். அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பி விடும் என்று அவர் கூறிய விளக்கம் ஷாட் ஷாட்டாக பட்டாசு போல் வெட்டி வெட்டி பாய்ந்தோடும் இன்றைய திரைப்படங்களுக்கு எதிரானது. இன்றைய இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் கூட ஒரு குளோசப்பையும் வைப்பதில்லை. சில நொடிகள் சஸ்டெய்ன் பண்ணக்கூடிய ஷாட்டுகளை வைப்பதி்ல்லை .மனித உணர்ச்சியை விடவும் தொழில்நுட்பம் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று இன்றைய இயக்குனர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் படத்தை விட்டு வெளியே வந்ததும் நடிகர்களின் முகம் கூட நமக்கு மறந்துப் போகிறது. ஆனால் சாஷா போன்ற ஒரு சிறுவனை பழைய படத்தில் நாம் சந்திக்க நேரும் போது அந்த முகமும் அவன் விழிகளும் அதில் தேக்கிய கண்ணீரும் கனவும் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை.  UNSENTIMENTEL LYRICSM என்று இதனை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். 
வாழ்க்கையும் பலநேரங்களில் இப்படித்தான் ஒரு உணர்ச்சியற்ற கவித்துவம் போல் காட்சிளிக்கிறது.

Tuesday 25 October 2016

கேள்வி-பதில் 1

பல விஷயங்களை பேச விரும்பினாலும் வாய்ப்பு அருகி விடுகிறது. எனவே வாரம் ஒருமுறையாவது கேள்வி பதில் மூலம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பர்களும் கேள்விகளை அனுப்பி வைக்கலாம்
செந்தூரம் ஜெகதீஷ்

--------------------------------------------------------------------

கே. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் பரப்புவதால் கைது செய்வது சரிதானா...

பதில்- ஒருவரின் உடல்நிலை மோசமாகிவிடும்போது அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என வேண்டுவதே மனித பண்பு. வதந்திகள் பரப்புவோர் சாடிஸ்ட்டுகள்தாம்.

கே. மேன் புக்கர் விருது கருப்பின எழுத்தாளர் பால் பீட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து....

பதில் -  பால் பீட்டி கருப்பின எழுத்தாளர். அமெரிக்கர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. தி செல் அவுட் நாவலுக்காக சுமார் 70 ஆயிரம் டாலர் பரிசு பெறுகிறார். நாவலின் தொடக்கமே நான் கருப்பின மனிதன் ,ஆனால் எதையும் திருடவில்லை என்பது நம்ப முடியாமல் இருக்கும் உங்களுக்கு என்று ஆரம்பிக்கிறார். நகைச்சுவையான சாடல்களுக்காக இந்த நாவலுக்கு பரிசு கிடைத்திருக்கிறது

கே. சென்னையில் இலக்கியக் கூட்டங்கள் எப்படி நடக்கின்றன....
பதில்-  நானும் செந்தூரம் இலக்கிய வட்டம் சார்பில்  நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அவை தினமணி, செந்தூரம் ஆகிய இதழ்களில் பதிவு செய்யப்பட்டதுடன் சரி. வெளியே யாருக்கும் தெரியாமல் காற்றோடு போய் விட்டது. நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் என்ற வாலியின் வரிகள்தான் மிச்சம். கூட்டம் நடத்திய செலவில் பத்து புத்தகம் போட்டிருந்தால் புத்தகக் கடைகளின் அலமாரிகளில் எனது நூல்களும் கிடைத்திருக்கும். இப்போது நான் புத்தகமே எழுதாத வெளியிடாத எழுத்தாளனைப் போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். தற்போது நிறைய செலவுகளை செய்து சிற்றுண்டி காபியுடன் இலக்கியக்கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு ஏராளமான புரவலர்களும் அள்ளி தருகிறார்கள். சில பேருக்கு மட்டும்தான் கூட்டம் கூடுகிறது.

கே. சமீபத்தில் படித்த புத்தகம்

கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ஹிமாலயம் என்ற பயண நூல். குருநித்ய சைதன்ய யதியின் சீடரான ஷௌகத் என்பவர் கீதா என்ற தோழியுடன் இமய மலைப் பயணம் பற்றி எழுதியது. மிகவும் சுவையான அற்புதமான அனுபவங்களின் தொகுப்பு. ஆன்மாவையும் இயற்கையையும் இணைக்கும் மையப்புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பதால் இதர பயண நூல்களை விடவும் சிறப்பாகவே உள்ளது. அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு. அவசியம் படிக்க வேண்டிய நூல் .இந்நேரத்தில் குரு நித்ய சைதன்ய யதியை நேரில் அறிமுகம் செய்து அவருடன் சில நாட்களை கழிக்கச் செய்த நண்பர் ஜெயமோகனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

கே. குரு நம்பிக்கை உண்டா உங்களுக்கு

குரு என எனது மதம் எனக்கு போதித்தது குருநானக்கை. நான் பிறப்பால் சீக்கியன்தான். ஆனால் இந்துக்களின் வழி நடப்பவன். குருநானக்கிற்குப் பிறகு நான் இலக்கிய ஆசானாக வரித்துக் கொண்டது பாரதியை. அதன் பிறகு ஓஷோ. என் மானசீக குரு அவர்தான். அடுத்து நித்ய சைதன்ய யதியையும், சென்னை சூஃபி தர் ஆலய தாதா ரத்தன்சந்த் ஆகியோரையும் நிஜ வாழ்வில் குருவாக மதித்து கால்பணிந்திருக்கிறேன். குரு ஒரு வழிகாட்டி பல நேரங்களில் மனசாட்சியும் அற உணர்வும்தான் குருவாக வழிகாட்டி ஆசிகளைப் பொழிகிறது.

Monday 3 October 2016

கவிதை-எனது மரணம்

எனது மரணம் -செந்தூரம் ஜெகதீஷ்


எப்படி நிகழும் எனது மரணம்?
மாரடைப்பா
தற்கொலையா
கொலை செய்யப்படுவேனா
சாலை, ரயில் விபத்தில் பலியாவேனா
நிலநடுக்கம், மழை,புயலில் வீழ்வேனா
அல்லது
வன்முறை, தீவிரவாதத்தால் சாய்க்கப்படுவேனா?
தெரியவில்லை.
எப்படியும் ஒருநாள் இறக்கத்தான் போகிறேன்.
எப்படி இறப்பேன் என்பதை அறிவதில் என்னவோ ஆர்வம்
இறப்பதற்கு முன் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளம்.
சோம்பலாக கழிக்கும் நேரங்களை சுறுசுறுப்பாக்க வேண்டும்.
சோகங்களை சுகங்களுக்காக தேடிப் பெற்றேன்,
அவற்றை சுமக்கப் பழக வேண்டும்
சும்மா இருந்தாலும் சும்மா இல்லாமல்
ஓராயிரம் விடயங்களுக்காக அல்லாடுகிறேன்
அதில் அமைதியை காண வேண்டும்.
செல்போன், நட்புவட்டங்களை தாண்டி
தனிமையில் என்னை இருத்திக் கொள்ள வேண்டும்.
யாரும் யாருடனும் இல்லை என்ற வாழ்வின் தரிசனத்தை
ஒவ்வொரு கணந்தோறும் கற்றுணர வேண்டும்.
எப்படி நிகழும் எனது மரணம்
எப்போது நிகழும் எனது மரணம்.
எந்த நாள், எந்த தேதி, எந்த ஆண்டு எந்த கணம்  என்பது
எனக்குத் தெரியாது.
தெரிய வேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
ஏதேனும் ஒருநாளில் அது நிகழ்ந்துவிடும்.
நான் இல்லாமல் போனாலும் எழுதிய இந்தக் கவிதை இருக்கும்.
இக் கணத்தில் பதிவாகி.

உலக சினிமா -மரணத்திற்கு முந்தைய கணங்கள்

குமுதம் தீராநதி அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது.....

உலக சினிமா 
THE NOTE 
மரணத்திற்கு முந்தைய கணங்கள்....
செந்தூரம் ஜெகதீஷ்
மூலக்கதை -ஏஞ்சலா ஹன்ட் எழுதிய நாவல்
-இயக்குனர் -டவுக்லஸ் பார்


விமான விபத்தில் உயிரிழந்த யாரோ ஒருவர் தனது மகளுக்கோ மகனுக்கோ கடைசி சில கணங்களில் உருக்கமான ஒரு சிறு குறிப்பு எழுதுகிறார். எழுதியவர் யார். யாருக்காக எழுதினார். ஏன் எழுதினார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி திரைப்படம் தி நோட். இது பிரிட்டனின் ஹால்மார்க் சேனலில் வெளியாகி பின்னர் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் 2007 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மரணம் நிச்சயமாகிவிட்ட நிலையில் உங்கள் பிரியமானவர் ஒருவருக்கு நீங்கள் கூற விரும்பும் கடைசி செய்தி என்ன என்று இப்படம் கேள்வி எழுப்புகிறது.
மிடில்புரோ டைம்ஸ் நாளிதழின் பத்தி எழுத்தாளரான பியட்டன் என்ற நடுத்தர வயது பெண்மணிக்கு அலுவலகத்தில் மரியாதை குறைவு. காரணம் அவருடைய ஹார்ட் ஹீலர் என்ற இதயத்திற்கு இதம் அளிக்கும் பத்திக்கு வாசகர்கள் எண்ணிக்கை குறைவு. மற்ற பத்தி எழுத்தாளர்களுக்கு தினமும் ஆயிரம் மெயில் வரும் போது இவருக்கு நூறு மட்டுமே வருகிறது. ஒரு பெரிய பத்திரிகையின் உள்ளே அமர்ந்து சிறுபத்திரிகை போல் அவர் தமது பத்தியை நடத்தி வருகிறார். மேலதிகாரியான பெண்மணி அவருக்கு கிறிஸ்துமஸ் வரை 3 வார கால கெடு தருகிறார். அதற்குள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் கிறிஸ்துமஸ் முதல் பத்தி நிறுத்தப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.
அந்த நேரத்தில்தான் ஒரு விமான விபத்து குறித்த செய்தி பரவுகிறது.PT 818 என்ற பயணிகள் விமானத்தின் விமானி அறையில் தீப்பிடித்தது. அந்த விமானம் தரையிறக்க அவசரமாக முயன்றும் முடியவில்லை.விமானம் தீ்ப்பிடித்து எரிந்து கடலுக்குள் விழுந்துவிடுகிறது.இதில் 137 பயணிகள் உயிரிழக்கின்றனர்.விமானம் எங்கே விழுந்தது என்று கடலுக்குள் தேடுகிறார்கள். விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க ஒருவாரகாலமாகலாம். அல்லது கிடைக்காமலே போகலாம். கடலின் ஆழத்திற்குள் விமானம் கரைந்துவிட்ட கதைகளை அண்மையிலும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
விமானம் விழப்போகிறது. அனைவரும் உயிரிழக்கப் போகிறோம் என்ற நிச்சயமான நிலை ஏற்பட்டு விட்ட பிறகு விமானத்தில் உள்ள 137 பயணிகளும் கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் என்ன நினைத்திருப்பார்கள்?வாழ்க்கையில் தாங்கள் தவறிய விஷயங்களுக்காக வருந்துவார்களா...பிரியமான உறவுகளை இழப்பதற்காக அழுவார்களா...சிறிய விஷயங்களுக்காக கணவனுடனோ மனைவியுடனோ குழந்தைகளுடனோ சண்டை போட்டதற்காக வேதனைப்படுவார்களா....முடிக்க வேண்டிய காரியங்களை முடிக்காமல் போகிறோமே என்று ஆற்றாமையில் அலறுவார்களா....
இந்த சிந்தனைதான் அப்போது பியட்டனை ஆக்ரமிக்கிறது. கடற்கரையில் வேதனையுடன் தங்கள் உறவுகளுக்கா மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திருக்கும் ஓரிருவரை சந்தித்துப் பேச முயற்சிக்கிறார். அப்போது டிரம்ப் ஹாரிஸ் என்ற தொலைக்காட்சி செய்தியாளர் குறுக்கிட்டு மைக்கை நீட்டி பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பொருட்படுத்தாமல் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பதைப் பார்த்து பியட்டன் பொருமுகிறார். எப்படி இந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக் கொள்கிறார்கள். தாயையோ தந்தையையோ மகனையோ மகளையோ பறிகொடுத்து கண்ணீர் சிந்தும் ஒருவர் முன் மைக்கை நீட்ட இவர்கள் மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது என்று பியூட்டன் தமது அலுவலக சகியான மேகியுடன் பேசும்போது கூறுகிறார். ஆனால் டாம் ஹாரிஸ் ஒரு தொலைக்காட்சி நட்சத்திரம். மிகப்பெரிய நட்சத்திரம்.
அப்போது பியட்டனின் மனதுக்குள் ஒரு பழைய நினைவு ஓடுகிறது. சில போலீஸ்காரர்கள் மழை கொட்டும் ஒருநாளில் அவர் வீட்டுக் கதவை தட்டுகிறார்கள். உங்கள் கணவர் கார்விபத்தில் இறந்து விட்டார் என்று அவர்கள் கூற பியட்டன் மயங்கி விழுவதாக அக்காட்சி ஓடி மறைகிறது.
விபத்தில் உற்றாரை இழக்கும் வேதனையை பியட்டன் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததையே இக்காட்சி சித்தரிக்கிறது. கதைக்கு இதுவே முக்கிய காட்சியாகவும் பின்னர் மாறுகிறது.
விபத்து நடந்த கடலின் கரையில் வழக்கம் போல் ஈரமான நினைவுகளுடன் பியட்டன் நடந்து வரும்போது கடல் அலையில் ஒதுங்கிய சிறிய பிளாஸ்டிக் உறை அவர் காலில் தட்டுப்படுகிறது. அதை எடுக்கிறார். அதனுடன் கடலில் விழுந்த விமானத்தின் சிறிய துண்டு ஒன்றும் இருக்கிறது. எனவே இந்த பிளாஸ்டிக் உறை விபத்துக்குள்ளான  விமானத்திலிருந்து விழுந்ததுதான் என்று உறுதி கொண்டு அதை எடுத்துப் பார்க்கும் பியட்டனுக்கு அது ஒரு தங்கப்புதையல் என்று புரிகிறது. தமது மகனுக்கோ மகளுக்கோ விபத்தில் உயிரிழந்த ஒரு தந்தையின் இறுதிக் குறிப்புதான் அந்த  பிளாஸ்டிக் உறைக்குள் இருக்கிறது.
டி என்ற பெயருடைய நபருக்கு அவருடைய தந்தை எழுதியதாக அந்த குறிப்பு உள்ளது. அந்த பிளாஸ்டிக் உறையில் சில குக்கிஸ் ( பிஸ்கட்) துண்டுகள் இருக்கின்றன. குக்கிஸ் சாப்பிட்ட உறையில் அந்த குறி்ப்பை அந்த கடைசி மூன்று நிமிடங்களில் எழுதி தமது மகனுக்கோ மகளுக்கோ அந்த தந்தை அனுப்பி வைத்துள்ளார். அதை கொண்டு போய் உரியவரிடம் சேர்க்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமக்கு இருப்பதை பியட்டன் உணர்கிறார். ஆனால் யாருக்கு...
இந்த கேள்வியுடன் அவர் தமது பத்தியில் எழுதுகிறார். அவர் எழுத்தை பல்வேறு விபத்துகளில் உறவினர்களை பறிகொடுத்த பல்லாயிரம் பேர்கள் மட்டுமல்ல, இதயத்தில் ஈரம் உலராத பல லட்சம் வாசகர்களும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். யாருக்காக அந்த குறி்ப்பு யாரால் எழுதப்பட்டது என்ற ஆர்வம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது.
மேன்டியின் உதவி மூலம் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை தேடிக் கண்டுபிடிக்கிறார். அதில் மூன்று பெயர்களுக்கு மட்டுமே டி என்ற பெயரில் மகனோ மகளோ இருப்பதாக அறிகிறார். அந்த மூன்று பேரை சந்திக்க திட்டமிடுகிறார் பியட்டன்.
இந்நிலையில் பியட்டனின் அலுவலக நண்பர் புலிட்சர் பரிசு பெற்ற மற்றொரு எழுத்தாளர் கிங்ஸ்டன் என்ற கிங் பியட்டனுக்கு துணையாக இருக்கிறார். கணவரை விபத்தில் பறிகொடுத்த உனக்கு விபத்தால் உயிருக்கு உயிரானவர்களை பறிகொடுத்தவர்களின் வேதனை புரியும். எழுது என்று அவர் ஊக்குவிக்கிறார். படிக்கட்டில் அமர்ந்து அவர்கள் பேசும் போது என்னைப்பற்றிய விவரம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று பியட்டன் கேட்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் நீ வேலைக்கு சேர்ந்த போது கூகுள் மூலம் உன்னைப் பற்றிய விவரம் சேகரித்தேன் என்கிறார் கிங்.அடப்பாவி நாலு வருஷமா என்னை சைட் அடிச்சு பின்தொடர்கிறாயா என்று சந்தோஷமாக சிரிக்கிறார் பியட்டன். இரண்டு நெருங்கிய நண்பர்களுக்கு இடையில் காதல் மெலிதாய் மலர்கிறது.
கிங்கின் மனைவி வசதியான ஒருவன் கிடைத்ததும் ஓடிப்போனாள்.அவருடைய 19 வயது மகன் தூரத்தில் கல்லூரியில் படித்து வருகிறான். ஆனால் தாயைப் பிரிய நேர்ந்ததற்கு தந்தைதான் காரணம் என்று அவர் மீது அவனுக்கு கோபம். பலமுறை அவனை வீட்டிற்கு வருமாறு அழைத்தாலும் அவன் வருவதில்லை.
இது ஒருபுறமிருக்க பியட்டனிடம் தொலைபேசியில் பேசும் டிரம்ப் ஹாரிஸ் இந்த தேடலை இருவரும் சேர்ந்து செய்யலாம் என்று கோரிக்கை விடுக்கிறார். தொலைக்காட்சி மூலம் தேடினால் பல லட்சம் பேர் பார்க்க வாய்ப்பு இருக்கும் உடனடியாக தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகிறார் டிரம்ப். ஆனால் பியட்டன் ஏற்கவில்லை. என்னிடம் உள்ள குறிப்பு உங்களிடம் இல்லை .எனவே இது முழுவதும் எனக்கே சொந்தமான தேடல் என்று நிராகரித்து விடுகிறார். அப்போது மேன்டியைப் பயன்படுத்தி டிரம்ப் பியட்டனின் பயணத் திட்டங்களை அறிகிறார். பியட்டனை பின்தொடர்கிறார்.
டி- யார் என்று தேடும் பணியை தொடங்குகிறாள் பியட்டன். அலுவலகத்தில் அவர் மதிப்பு கூடுகிறது. வாசகர்கள் எண்ணிக்கை பெருகுகிறது. அவருடைய பத்தியைப் படித்த நிர்வாகஇயக்குனர் பியட்டன் பயணம் செய்ய விரும்பினால் செலவுகளை ஏற்கத் தயார் என்று தெரிவிக்கிறார். உற்சாகமாக தமது பணியைத் தொடங்குகிறார் பியட்டன். முதல் பயணமாக அவர் செயின்ட் லூயிசுக்குப் போகிறாள். அந்த சிற்றூர் ஒரு ஆன்மீகத் தலம். அங்குள்ள  கிறித்துவ தேவாலயம் பிரசித்தி பெற்றது.அதில் பாதிரியாராக இருப்பவர்தான் சகோதரர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ரெவரண்ட்  டிம் .அவருடைய அப்பாவும் அந்த விமான விபத்தில் பலியானார். மூன்று பேரில் முதல் டி இவர்தான் .ஆனால் அந்தக் குறிப்பின் நகலைப் பார்த்து அது தன் தந்தையின் கையெழுத்தல்ல என்றும் தமது தந்தை தம்மை டி என்று அழைப்பதில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் அந்த குறிப்பு அவருக்குள் தந்தையை குறித்த நினைவுகளைத் தூண்டி விடுவதாக கூறுகிறார். சிறுவயது முதல் தாம் அந்த தேவாலயத்தில் வளர்ந்ததாகவும் இறைவன் மீது தமது தந்தை தமக்கு நம்பிக்கையை விதைத்ததாகவும் அவர் இடத்தில் இன்று தாம் தேவாலயத்தின் பொறுப்பு வகிப்பதாகவும் பாதிரியார் கூறுகிறார். தேடுகிறவர்களுக்கு வழிகாட்ட தேவன் வானத்திலிருந்து ஒரு நட்சக்திரத்தை அனுப்புவாராமே என்ற பியட்டனின் கேள்வியை ஆமோதித்து அங்கு கிறிஸ்துமசுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த வெள்ளி காகித நட்சத்திரங்களில் ஒன்றை பியட்டனுக்குத் தருகிறார் பாதிரியார். மனப்பூர்வமான தேடல்தான் அந்த நட்சத்திரம் என்பது அவருடைய பதில். உன் கையி்ல் உள்ள குறி்ப்பே உன் தேடல் அதுவே உன் வழிகாட்டும் வெள்ளி நட்சத்திரம் என்கிறார் சகோதரர் டிம்.
ஒரு நிமிடம் பொறுங்கள். இந்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நட்சத்திரங்கள் யார் என்று அறிய வேண்டாமா....பியட்டனாக நடித்தவர் ஜெனி பிரான்சிஸ் . பியட்டனின் அலுவலக நண்பர் கிங்ஸ்டனாக நடித்தவர் டெட்மிக் கிங்லி. தொலைக்காட்சி செய்தியாளர் டிரம்ப்பாக நடித்தவர் ரிக் ராபர்ட்ஸ். பியட்டனின் அலுவலக சகியான மேன்டியாக நடித்த நீக்ரோ பெண் கெண்டில் வில்லியம்ஸ். மிகவும் அற்புதமான இந்த நடிகர் நடிகைகளுடன் பாதிரியராக நடித்த ஜிம் கார்டிங்டனை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும். சிறிய காட்சியே ஆனாலும் அந்த சில நிமிடங்களில் இறைமை கிறித்துவம் குறித்த தமது நம்பிக்கை ததும்ப அவர் பேசும் காட்சி ஒரு அழகிய சித்திரம். எல்லாம் இறைவனின் செயலே என்ற மாறாத நம்பிக்கை கொண்ட ஒரு மென்மையான மனிதனின் தூய்மையான அன்பும் பாசமும் தந்தையின் மீதான மதிப்பும் நம்மை நெகிழ வைக்கிறது. பியட்டன் மறுநாள் எழுதப்போகும் பத்தியிலும் இந்த விஷயங்கள் இடம் பெற உள்ளன. பியட்டன் ஒரு மகத்தான எழுத்தாளராக பரிணமிக்கிறார்.
ஆனால் பாதிரியார் பியட்டனை வழியனுப்ப கதவைத்திறந்ததும் மரியாதையே இல்லாமல் மைக்கை நீட்டி காத்திருக்கிறார் டிரம்ப். நீங்கள் அந்த குறிப்பைப்பற்றிஎன்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்க அதை பியட்டனிடமே வி்ட்டு விட்டேன் என்று பாதிரியார் கைக்காட்ட பியட்டனோ நோ கமெண்ட்ஸ் என்கிறாள். கேமரா முன்பு பிடுசி ( பீஸ் டூ கேமரா ) தரும் டிரம்ப், இந்த பாதிரியார்தான் அந்த குறிப்புக்குரியவரா என்பதை அறிய நாளை காலை செய்தித்தாளில் பியட்டனின் பத்திக்காக காத்திருக்க வேண்டும் என்று சைன் ஆஃப் பண்ணுகிறார்.
ஆனால் மேன்டி மூலம் தகவல் கறந்து டிம் பாதிரியார் அந்த குறிப்புக்குரியவர் அல்ல என்று தொலைக்காட்சியில் செய்தி பிளாஷ் நியூசாக வெளியாகிறது. எனது உழைப்பை திருடி விட்டார் டிரம்ப் என்று குமுறும் பியட்டன் தமது பத்தியில் முன்பு சொன்ன பாதிரியாருடனான நெகிழ்ச்சியான உரையாடலை தமது எழுத்தாற்றலால் மெருகூட்டுகிறார். வாசகர்கள் உருகிப் போய் விடுகிறார்கள். நெகிழ்ச்சியடைகிறார்கள். அந்த உருக்கத்தையும் நெகிழ்ச்சியையும் எழுத்தால்தான் தர முடியும், தொலைக்காட்சி ரிப்போர்ட்டிங்குகளால் தர முடியாது என்பதை நிரூபிக்கிறாள் பியட்டன்.
தமது பத்தியில் பியட்டன் பாதிரியார் டிம்மை சந்தித்தது பற்றி எழுதுகிறாள்...
"பாதிரியார் டிம்மை சந்தித்து விமானத்தில் திரும்பும் போது நினைத்தேன். இந்த விமானமும் விபத்துக்குள்ளானால் யாரிடம் நான் குட்பை சொல்ல விரும்புவேன். அப்படி ஒரு ஆன்மா கூட எனக்கு இறைவன் மி்ச்சம் வைக்கவில்லை. யாருமில்லாமல்தான் நான் தனித்து வாழ்ந்து வருகிறேன்.அப்போது தோன்றியது ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் கடைசி நாள் போல் நினைத்து வாழ வேண்டும் என்று."
பியட்டனின் எழுத்துக்கு இரண்டாயிரம் இமெயில்கள் வருகின்றன. அப்போது மீண்டும் ஒரு பிளாஷ் பேக் ....கணவரை விபத்தில் இழந்த பியட்டன் தூக்கமாத்திரைகள் உண்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். .மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை பார்த்துக் கொள்ளக் கூட முடியாத பலவீனமான நிலையில் அவர் இருந்ததால் ,அந்த குழந்தை ஒரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்படுகிறது.
இப்போது டிரம்ப் ஹாரிஸ் வேறு விதமான நெருக்குதலை பியட்டனுக்கு தருகிறார், அவருடைய பத்திரிகையின் சகோதர நிறுவனமான தொலைக்கைாட்சி சேனலில்தான் டிரம்ப் பணியாற்றுகிறார். எனவே அவருடன் இணைந்து டி யார் என்று கண்டுபிடிக்குமாறு பத்திரிகையின் மேலதிகாரிகள் மூலம் கார்ப்பரேட் நெருக்குதல் வருகிறது. ஆனால் திட்டவட்டமாக நிராகரித்து விடும் பியட்டன் இது முழுவதும் தமக்கே சொந்தமான தேடல் என்று கூறி தாம் வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று வெளியேறுகிறார். ஆனால் நிர்வாக இயக்குனர் 30 ஆண்டுகளாக அச்சு பத்திரிகைத்துறை சார்ந்தவர். அவர் பியட்டனின் உறுதியை மதிக்கிறார்.
பியட்டன் சந்திக்கும் இரண்டாவது நபர் டி பெயரில் உள்ள ஒரு பெண். டெய்லர் குவிஸ்ட் என்ற அந்தப்பெண் ஒரு இசைக்கலைஞர் பியானோவில் பாடல் இசைப்பவர். பாடல்களை எழுதுபவர். தன் பூனையுடன் தனியாக வாழும் டெய்லர் குவிஸ்ட் தம்மைப் போலவே பியட்டனும் பூனையுடன் தனியாக வாழும் நடுத்தர வயதுப் பெண் என்பதை அறிந்து இணக்கம் கொள்கிறார்.இருவரும் நெருங்கிய தோழிகளைப் போல் உரையாடுகிறார்கள். இந்த குறிப்பு தமது தந்தை எழுதியதல்ல என்கிறார் டெய்லர். தமக்கு 16 வயது ஆன போதே தமது காதல் விவகாரத்தால் தந்தை தம்மை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் கணவருடன் பிரிந்த பின் தனிமையில் இசையிலும் கவிதையிலும் ஆறுதல் அடைவதாகவும் டெய்லர் தமது வாழ்க்கையை விவரிக்கிறார்.இளம் வயதில் நாம் நம்மைப் பற்றியே அதிகமாக நினைக்கிறோம். நமது பெற்றோரின் உணர்வுகளையோ அவர்களின் தியாகங்களையோ அவர்களுக்கு நம்மீதுள்ள அக்கறையையோ பார்க்கத் தவறி விடுகிறோம். பெற்றோர் உண்மையான மனிதர்களாக இருப்பதைப் பார்க்க முடியாமல் இளமையின் அதிகாரம் நம்மைத் தடுத்து விடுகிறது. அவர்களின் கனவுகளை நிராகரித்து அவர்களை காயப்படுத்தி விடுகிறோம் என்று அந்த குறிப்பைப் பார்த்து தமது எண்ணங்களை கூறுகிறார் டெய்லர் குவிஸ்ட்.
குறிப்பு அவர் தந்தை எழுதியதல்ல என்ற போதும் தந்தையைப் பற்றிய இரண்டாவது மறுமதிப்பீட்டை செய்ய அது உதவியதாக கூறுகிறார். தமது தந்தையை மறுபரிசீலனை செய்ய வைத்ததாக கண்ணீர் விடுகிறார்.
உடைந்து போன வாழ்க்கையின் ஏதோ ஒரு இழையை மீண்டும் கோர்த்துக் கொள்ள அந்த குறிப்பு அது உரியவர்களல்லாதவர்களுக்கும் உதவுவதை பியட்டன் எழுதிக்கொண்டே போகிறார். அந்த எழுத்துகள் அவரையும் வாழ்க்கையில் தவற விட்ட அன்புமிக்க தருணங்களை மீண்டும் தேடுவதற்கான இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது. கிங்குடன் காதலை வெளிப்படுத்தி முத்தமிடுகிறார் பியட்டன். உங்கள் மகனை கிறிஸ்துமசுக்கு வீட்டுக்கு அழையுங்கள் நானே விருந்து சமைக்கிறேன் என்று கூறும் பியட்டனுக்கு தம்மைப்பற்றிய தகவல்கள் எப்படித்த தெரியும் என்று ஆச்சரியப்படுகிறார் கிங். நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் சேர்ந்த போது புலிட்சர் விருது பெற்ற ஒரு எழுத்தாளர் பணிபுரிவதை அறிந்து ஆர்வத்துடன் கூகுள் மூலம் கிங் பற்றிய விவரத்தை சேகரித்ததை ஒப்புக் கொள்கிறார் பியட்டன். இருவருக்குமிடையில் காதல் முழுதாக மணம் வீசுகிறது. இனி நீ தனியாக இல்லை. துணையாக நானிருப்பேன் என்று அணைத்துக் கொள்கிறார் கிங்.
இதனிடையே இரண்டு பேரை சந்தித்த பியட்டன் மூன்றாவதாக சந்திக்க உள்ள நபர் யார் என்பதை டி என்ற முதல் வார்த்தை மூலம் அனுமானித்து விடும் டிரம்ப் அந்த நபரை சந்தித்து போலியாக நீதான் அந்த குறிப்புக்கு உரியவர் என்பதை ஒப்புக்கொள். லைவ் நிகழ்ச்சியி்ல் உன் பிரச்சினையைத்தீர்த்து வைக்கிறேன் என்று பேரம் பேசுகிறார். மூன்றாவது டி நபரான டேனர் வால்ட்டனுக்கு தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையில் சொத்தை தந்தை அவரது அண்ணனுக்கு  எழுதிக் கொடுத்து விட்டார். அண்ணனும் பொறுப்பாக வியாபாரத்தை கவனித்து செல்வத்தைப் பெருக்கி விட்டார். ஊதாரியாகவும் தறுதலையாகவும் வளர்ந்த டேனர் வால்ட்டன் தந்தையின் சொத்தில் உரிமைகோரி அண்ணன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் அவருக்குத் தடையாக இருப்பது தந்தைக்கு அவர் மீதான கோபம்தான். இந்த இறுதி மரணக்குறிப்பில் டி அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது உன் தந்தை என்று எழுதப்பட்டிருப்பதால் அதைக் காட்டியே வழக்கில் ஜெயித்துவிட முடியும் என்பது டேனரின் திட்டம். இதற்கு உதவுகிறார் டிரம்ப் ஹாரிஸ்.
ஆனால் அந்த குறிப்பு அவருடையது அல்ல என்று பியட்டனுக்கு நிச்சயமாக தெரிகிறது. உங்கள் தந்தை உங்களை டி என்று அழைப்பாரா என்று கேட்கும்போது இல்லை அவர் முழுப்பெயரான டேனர் என்றுதான் அழைப்பார் என்று அந்த இளைஞர் கூறும்போதே இந்த குறிப்புக்குரியவர் அவர் அல்ல என்று பியட்டனுக்கு உறுதிபடத் தெரிந்துவிடுகிறது.
ஆனால் அவரோ அது தமது தந்தையின் குறிப்புதான் என்று கூறுகிறார். டி என்ற பெயரில் வேறு யாருமில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்புகிறார் பியட்டன். அவர் விரும்பிய ஒரு முடிவு அந்த தேடலுக்கு கிடைக்கவில்லை. யாருக்கோ ஒரு அற்புதமான கிறி்ஸ்துமஸ் பரிசாக அந்தக் குறிப்பு கிடைக்கும் என்று நம்பிவந்த பியட்டன் தமது ஏமாற்றத்தை தமது வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்டால் இத்தனை நாளாக பரபரப்பாக வாசிக்கப்பட்ட அந்த பத்தி புஸ்வானம் போல் ஆகி விடும் என்றும் தாம் மீண்டும் பழைய மதிப்பற்ற நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என்றும் உணர்கிறார்.ஆனால் வேறு வழியில்லை.
இந்நிலையில் ஒரு திடீர் திருப்பம் நேரிடுகிறது. பத்தியை எழுதி முடித்து விட்டு அலுவலகத்திலிருந்து கொட்டும் மழையில் வீடு திரும்பும் பியட்டனிடம் ஒரு இளம் பெண் வந்து பேசுகிறாள். தமது பெயர் கிறிஸ்டின் என்று கூறும் அந்தப்பெண் தமது தந்தை எழுதிய அந்த குறிப்பு தமக்குரியது என்கிறாள்.உன் பெயர் கிறிஸ்டின்தானே என்று கேட்டால் ஆம் என் தந்தை என்னை செல்லமாக டி என்று அழைப்பார் என்கிறாள் அந்தப்பெண். அப்போது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவலை அந்த இளம்பெண் கூறுகிறாள். 16 ஆண்டுகளுக்கு முன்பு தமது உண்மையான தந்தை விபத்தில் பலியானதால் தமது உண்மையான தற்கொலைக்கு முயன்றதால் தம்மை இந்த வளர்ப்புத் தந்தை எடுத்து வளர்த்து வந்ததாக கூறுகிறாள் அந்தப்பெண். உடனடியாக அந்த இளம் பெண் தனது மகள்தான் என்று அடையாளம் தெரிகிறது பியட்டனுக்கு. யாருக்கோ கிறிஸ்துமஸ் பரிசாக தர தாம் பாதுகாத்து வைத்த குறிப்பு தமக்கே மிகப்பெரிய பரிசாக கிடைத்ததை நினைக்கிறாள். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.
உண்மையான தாய் யார் என்று கூறாவிட்டால் இனி பேசமாட்டேன் என்று தந்தையுடன் தாம் சண்டையிட்டபோது அவர்  தொழில் நிமித்தமாக விமானத்தில் பயணித்தார் என்றும் தம்முடன் கோபமாக இருந்தார் என்றும் கூறும் கிறிஸ்டின் தம்மீதான கோபத்தை மறந்து தாயை அடையாளம் காட்ட நினைத்த தந்தை விமானம் விபத்துக்குள்ளானதையறிந்து டி அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற குறிப்பை எழுதியிருக்கலாம் என்றும் கிறிஸ்டின் கூறக்கூற அது முழுவதும் அச்சு அசலான உண்மை என்பது நிரூபணமே தேவையில்லாமல் புரிந்து விடுகிறது பியட்டனுக்கு.
மீண்டும் அலுவலகத்திற்கு விரைந்து சென்று முந்தைய பத்தியை ரத்து செய்ய வைத்து உண்மையான உரிமையாளரைப் பற்றி எழுதுகிறாள் பியட்டன்.
அப்போது கிங்கின் மகன் தாம் கிறிஸ்துமசுக்கு வீட்டுக்கு வருவதாக தந்தைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான். பத்தியைப் படித்து விட்டு தாயைத் தேடிமகளும் வருகிறாள். கிங் மற்றும் பியட்டன் ஒரு மகன், ஒருமகளுடன் புதிய குடும்பமாக கிறிஸ்துமசை கொண்டாட காத்திருக்கிறார்கள். அவள் கையில் இருந்த வெள்ளி காகித நட்சத்திரம் அவள் வாழ்க்கைக்கு ஒரு இனிய வழிகாட்டி விட்டதாக படம் முடிகிறது.
வாழ்க்கையில் நாம் தவற விட்ட அற்புதமான தருணங்கள், உறவுகளுக்கு இரண்டாம் வாய்ப்பு நமக்கு கிடைப்பதே இல்லை. போனது போனதுதான். பிரிந்தது பிரிந்ததுதான். அதனால் எதை ஒன்றை இழக்கும் போதும் பிரியும் போதும் இதை இழக்காமல் இருக்க முடியுமா பிரியாமல் இருக்க முடியுமா என்று நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ள இந்தப் படம் தூண்டுகிறது. ஒருவேளை தவிர்க்க முடியாமல் பிரிய நேர்ந்துவிட்டாலோ இறப்பது உறுதியாகிவிட்டாலோ மரணத்திற்கு முந்தைய எஞ்சிய கணங்களில் மகத்தான கருணையுடன் பிறரின் தவறுகளை மன்னிக்கும் மனம் நமக்கு வாய்க்குமா.....
இதுதான் இப்படம் எழுப்பும் கேள்வி.

Saturday 17 September 2016

உலக சினிமா - தி பர்ம் ( THE FIRM)

குமுதம் தீராநதி செப்டம்பர் இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது..

உலக சினிமா
சட்டத்தின் இருட்டறையில் ஒளிவிளக்கு
THE FIRM based on a novel by john grishm
செந்தூரம் ஜெகதீஷ்
உலகில் அதிகம் விற்பனையாகும் நாவல்களில் ஜான் கிரிஷமின் நாவல்களுக்கும் சிறப்பிடம் உண்டு. தமிழில் ஆயிரம் பிரதிகள் புத்தகங்கள் அச்சிட்டு அவற்றை 5 ஆண்டுகளுக்கு விற்கக் கூடிய சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமி்ல்லை. சில துறை சார்ந்த நூல்களும் பிரபல எழுத்தாளர்களின் நூல்களும் மட்டும் சில ஆயிரம் பிரதிகள் விற்கின்றன. ஆனால் ஜான் கிரிஷம் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் புத்தகங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றன. பல லட்சம் பிரதிகள் விற்கப்படுகின்றன. எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கடையிலும் எந்த பிளாட்பாரத்தின் பழைய புத்தக அடுக்குகளிலும் ஜான் கிரிஷமின் நூல்களை கண்டெடுப்பது எளிதானது. இணைய வழி விற்பனையும் இப்போது கிடைக்கிறது.ஆனால் மலிவாக கிடைப்பதால் இந்த நூல்கள் மலிவானவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் தமிழில் நாம் ஆயிரமாயிரம் பக்கம் எழுதிக் குவிக்கப்படும் நவீன இலக்கிய, காப்பிய குப்பைகளை புத்தகக் கண்காட்சிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து வாங்குவதை விட இந்த புத்தகங்களை வாங்குவது புத்திசாலித்தனமானது.
ஜான் கிரிஷமின் நாவல்கள் சட்டத்தை பின்புலமாக கொண்டவை. சட்டம் அதன் ஓட்டைகள், அதனை வளைப்பதறகான நுட்பமான வாதங்கள், ஆதாரங்கள். சூழல்கள், அசாதாராணமான கதாபாத்திரங்கள் யாவும் நம்மை கட்டிப் போட்டு விடுகின்றன. ஆங்கில அறிவு சுமாராக இருப்பவரும் படித்து புரிந்துக் கொள்ளத்தக்க உயிர்ப்பான மொழிநடையில் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் புத்தகங்கள் இவை.கூடவே ஏராளமான புதிய தகவல்கள் சட்டத்துறை அறிந்தவர்களுக்கு மட்டுமின்றி அறியாதவர்களுக்கும் அதன் சாதகங்களையும் பாதகங்களையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன இந்த நாவல்கள்.
வணிக ரீதியான எழுத்து என்று நிராகரிப்பது சுலபம். ஆனால் ஒன்று வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பதே காரணமாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு , மக்களால் நடத்தப்படும் தேர்தல்கள், மக்களால் செல்வாக்குப்பெறும் திரைப்பட நட்சத்திரங்கள், மக்களால் செல்வாக்குப் பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மக்கள் விரும்பி படிக்கும் பத்திரிகைககள், மக்கள் பெருவாரியாக வாசிக்கக் கூடிய எழுத்தாளர்கள் இவை யாவும் தீண்டத்தகாதவையல்ல. அப்படி கலையின் பெயரால் இவற்றை ஒதுக்குபவர்கள் ஒன்று கலை அறியாதவர்கள். அல்லது வணிக ரீதியாக தோல்வியடைந்தவர்கள்.
எழுத்து ஒரு மகத்தான கலை. தன் எழுத்தை லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்க வேண்டும் அது திரைப்படமாக வேண்டும் என்று நினைக்காத எழுத்தாளன் யாராவது இருப்பானா....புதுமைப்பித்தனுக்கே அந்த கனவு இருந்ததே.
ஜான் கிரிஷமின் நாவல்களும் திரைப்படங்களாகியுள்ளன. இதில் தி ஃபர்ம் என்ற இந்த நாவலும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரமான டாம் க்ரூஸ் இதன் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் கதையை பார்க்கலாம். மிட்ச் மிக்தீரே ஒரு இளம் சட்டக் கல்லூரி மாணவன். மிகவும் ஏழ்மையான நிலையில் சிரமப்பட்டு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று மிகச்சிறந்த மாணவனாக புகழ் பெற்றுள்ளான். அவன் படிப்பை முடிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ முறையில் ஏராளமான சட்ட ஆலோசனை நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முன்வருகின்றன. அப்போது பென்டினி லாம்பர்ட் &லோக்கே என்ற நிறுவனம் அவனுக்கு ஒரு அரிய வேலை வாய்ப்பை வழங்குகிறது. மெம்பிஸ் நகரில் உள்ள அதன் அலுவலகத்தில் பணியாற்ற அழைக்கப்படுகிறான் மிட்ச். பெரும் செல்வந்தர்களின் வருமான கணக்கு, வரி, தொடர்பான சட்டச்சிக்கல்களை தீர்ப்பதே இந்நிறுவனத்தின் பணி. இதையடுத்து தன் கணவனுடன் திருப்தியடையாத அபியை அழைத்துக் கொண்டு அவன் மெம்பிஸ் நகரில்  கம்பெனியால் தரப்பட்ட புதிய காரில் தன் புதிய வீட்டிற்கு குடிபெயர்கிறான்.தன் மனைவி என்றே அபியை அறிமுகம் செய்கிறான். அபியாக நடித்தவர் ஜீனி டிரிப்பிள் ஹார்ன் என்ற மிக அழகான நடிகை. இவர் பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியில் சூட்டை கிளப்பியவர்.









இந்தப் படத்தில் ஓரிரு முத்தக்காட்சிகளுடன் சரி. ஒரு படுக்கையறை காட்சி இருப்பினும் அதிக நிர்வாணத்தை காணமுடியவில்லை. படத்தின் மையக்கருவிலிருந்து திசைதிருப்ப இயக்குனர் விரும்பவில்லை போலும். ஆனால் மிட்ச்சுக்கு இன்னொரு பெண்ணுடன் தற்செயலாக ஒரு நட்பும் அதைத் தொடர்ந்து உடல் உறவும் ஏற்படுகிறது. கடற்கரையில் சில குடிகாரர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அந்தப் பெண்ணை அவன் காப்பாற்றுகிறான். அப்போது அவள் அவன் கைககளை தன் மார்பில் வைக்கிறாள். அழகான பெண்ணைப் பார்த்து தடுமாறும் அவனும் அந்தக் கையை அவள் சட்டைக்குள் செலுத்துகிறான். இநத காட்சியும் வழக்கமான ஆங்கிலப் படங்களின் உடலுறவுக் காட்சிகளில் பத்து சதவீதம் கூட படமாக்கப்படவில்லை. இந்த இரண்டாவது அழகியாக நடித்தவர் கரீனா லோம்பார்ட்.. இவர் இந்தக் காட்சிக்குப் பிறகு படத்தில் காணாமல் போய்விடுவார். அவர் யார் என்று பின்னால் தெரிய வரும்.
தான் பணியாற்றும் நிறுவனம் பற்றி மிட்ச் அறிகிறான்.மிகப்பெரிய பணக்காரர்களே இதன் குறி. இவர்களிடமிருந்து பெரும் தொகையை கறப்பதே இந்த நிறுவனத்தின் உத்தி. இதற்காக இந்த நிறுவனம் பல்வேறு சட்ட மீறல்களிலும் குற்றச்செயல்களிலும் மறைமுகமாக ஈடுபடுவதை அவன் கண்டுபிடிக்கிறான். ஒவ்வொரு ஊழியரும் கேமரா, மைக் மூலம் கண்காணிக்கப்படுவதையும் பின்தொடரப்படுவதையும் அவன் அறிகிறான். கடற்கரையில் அவன் பெண்ணுடன் உறவு கொண்டதும் படமாக்கப்பட்டு விட்டது. இந்தப் படங்களை வைத்து அபியிடமிருந்து மறைத்த ரகசியத்தை அம்பலப்படுத்தாமல் இருக்க சில காரியங்களை செய்யும் படி அவனுடைய நிறுவனம் அவனை பிளாக் மெயில் செய்கிறது.
தான் மிகப்பெரிய சிலந்தி வலையில் சிக்கியிருப்பதை மிட்ச் அறிகிறான். இந்த நிறுவனத்தை விட்டு விலக நினைத்த இரண்டு பேர் படகில் செல்லும் போது குண்டு வெடித்து இறந்ததையும் அவன் அறிகிறான். நிறுவனத்தின் ரகசியங்களை அறிந்த யாரும் அதை விட்டு விலகிப்போய் விடமுடியாது. போக நினைத்தால் மரணம்தான் அதன் ஒரே வழி.
அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களும் அதன் உயர் அதிகாரிகளும் மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருப்பதை அவன் கண்டுபிடிக்கிறான். குற்றச் செயல்களுக்காக பெரும் தொகையை கைமாற்றுவதிலும் இந்த நிறுவனம் சில போலியான நபர்களின் பெயர்களில் நிழல்மறைவு காரியங்களை செய்து வருகிறது. இந்த ரகசியத்தை அறிந்ததால்தான் அந்த இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBI அதிகாரிகள் சிலர் மிட்ச்சை நெருங்குகின்றனர். தனி இடத்தில் வைத்து அவனிடம் பேரம் பேசுகின்றனர். நிறுவனத்தின்  மிகப் பெரிய பணக்கார வாடிக்கையாளரான மொரால்டோ  தொடர்பான வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத காரியங்கள் குறித்த ஆதாரங்களை அளித்தால் மிட்ச்சுக்கு சட்டத்தால் எந் த தொந்தரவும் ஏற்படாது என்று உறுதியளிக்கின்றனர். இப்போது மிட்சுக்கு இரண்டு பக்கமும் பிளாக் மெயில். நெருக்குதல் மொரால்டோவை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவினால் நிறுவனத்திற்கு துரோகம் செய்ய வேண்டியிருக்கும். தான் படித்த சட்டத்துறையில் தனது கிளையன்ட்டின் ரகசியங்களை காப்பேன் என்று அளித்த உறுதிமொழியை மீற வேண்டும். புலனாய்வு அதிகாரிகளின் உதவியை நிராகரித்தால் என்றைக்காவது தனது நிறுவனத்தின் சட்டவிரோத செயல்களில் படகில் குண்டுவெடித்து இறந்தவர்களைப் போல் தானும் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை அவன் உணர்கிறான். தன் வாழ்க்கை ஒரு முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டு இருப்பதை அவன் உணர்கிறான். இப்படியும் நகரமுடியாமல் அப்படியும் போக முடியாமல் இக்கட்டான நிலையில் அவன் தன் உயிரையும் தன் மனைவியையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறான். பல லட்சம் டாலர் ஊதியம் என்று ஆசை காட்டிய எதிர்காலமும் பொய்த்துப் போன வேதனையையும் அவன் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
அப்போது தற்செயலாக ஒரு வாடிக்கையாளர் அவன் பணியாற்றும் நிறுவனம் தன்னிடம்  5 மணி நேரத்திற்குரிய கூடுதலான தொகையை வசூலித்துள்ளதாக புகார் அளிக்கிறார். தனது நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பில் தொகையை கூட்டி வசூலி்ப்பதையும் அவன் கண்டுபிடிக்கிறான் .ரகசியமாக அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இமெயிலில் அனுப்பிய பில்களை காப்பியடித்து ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வளவு தொகை அதிகமாக வசூலிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ஆவணத்தை சேகரிக்கிறான்.
இத்தகைய சூழலில் வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனையுடன் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க முடிவு செய்கிறான் . பதினைந்து லட்சம் டாலர் பணம் தரவேண்டும் மற்றும்  பாலியல் பலாத்காரத்திற்காக தண்டனை பெற்று சிறையில் உள்ள தனது அண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை புலனாய்வு அதிகாரிகளுக்கு விதிக்கிறான். அதே நேரத்தில் தன்னை எப் பி ஐ அதிகாரிகள் பின்தொடர்வதாகவும் தனது நிறுவனத்தின் கூடுதல் பில்லிங் குறித்த தகவல்களை கேட்பதாகவும் கூறி நிறுவனத்திடமும் அந் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளரான மொரால்டோவிடமும் நன்மதி்ப்பை பெறுகிறான். எப்பிஐ கேட்கும் ஆவணங்களைக் கொடுத்தால் மொரால்டோவின் இதர சட்ட விரோத செயல்களை மறைத்துவிடலாம் என்று அழகாகப் பேசி அவர்களை நம்ப வைத்து அவர்களின் பில்லிங் பைல்களை நகல் எடுக்கும் அனுமதியைப் பெறுகிறான். தம்மை ஏமாற்றி கூடுதலாக பில்லை வசூலித்த நிறுவனத்தை அழித்து அதிலிருந்து மிட்ச்சை காப்பாற்றுவதற்கு உறுதியளிக்கிறது மொரோல்டோ சகோதரர்களின் நிறுவனம்.
எப்.பி.ஐ தந்த பணத்தை விடுதலையான தனது சகோதரனுக்குக் கொடுத்துவிட்ட மிட்ச் சட்டத்துறையில் கிளையண்டின் ரகசியத்தையும் காப்பாற்றி எப்பிஐ யையும் ஏமாற்றி தனது சட்டவல்லுனர் பதவியையும் காப்பாற்றிக் கொண்டு தனது மனைவியுடன் அதே புதிய காரில் பாஸ்டனுக்கு திரும்புவதாக கதை முடிகிறது.
ஒரு மர்மக் கதையின் திரில்லுடன் அடுத்தடுத்து தொடரும் சம்பவங்களுடன் இந்தப்படம் நம்மை அசர வைக்கிறது. கடற்கரையில் தன் உயிருக்குயிரான மனைவிக்கு துரோகம் செய்து இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டதை அவளிடம் விளக்கும் காட்சியும் அழகானது. ஆவேசம் கொண்டு அவள் அவனை விட்டுச் செல்வதும், பின்னர் அவன் ஒரு பொறியில் சிக்க வைக்க அந்தப் பெண் பயன்படுத்தப்பட்டதையும் புரிந்துக் கொண்டு அவனுக்கு உதவுவதற்காக அவளிடம் வழியும் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் படுக்கையறை வரை சென்று ஒரு முத்தத்துடன் அவனை தூக்க மாத்திரையால் உறங்க வைத்து தப்பி விடுவதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத வலையில் சிக்கிய தனது காதல் கணவனை காப்பாற்ற அபி இன்னொரு கிழவனின் இச்சைக்கு பலியாகி விடுவாளோ என்று நாம் பதற வைக்கிறது அந்தக் காட்சி. அநத் கிழவன் அவளை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அவள் கவுனை கழற்றுகிறான். பிராவுடன் நிற்கும் அபி அவனை நெருங்கி அவன் உதட்டை பிடித்து அழுத்தமாக முத்தமிடுகிறாள். அய்யோ என நமக்கு பதற்றம் அதிகரிக்கிறது. ஆனால் அடுத்த கணம் பட்டென அந்தக் கிழவன் விழுந்துவிடுகிறான். முந்தைய காட்சியில் மதுவில் ஏதோ ஒரு மாத்திரையை அபி கலந்தது நமக்குநினைவுக்கு வருகிறது. பெருமூச்சு விடுகிறோம்.
எந்த ஒரு நல்ல திரைப்படமும் நுட்பமான மனித உணர்வுகளை நிராகரிப்பதில்லை. கணவன் தனக்கு துரோகம் இழைத்தவன் என்ற கோபத்தால் பிரிந்துப் போன மனைவி கூட கணவனுக்கு துரோகம் இழைக்கவில்லை. அந்த காதலின் தூய்மையை இக்காட்சி விளக்கிவிடுகிறது.
இப்படத்தின் இயக்குனர் சிட்னி போலாக் .இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி்க்குவித்த படங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில் விமர்சகர்களிடமிருந்தும் அமோகமான வரவேற்பை பெற்றது. நாவல்களைப் படமாக்கும் போது அதிலிருப்பதை மொத்தமும் எடுத்துக் கொள்ளாமல் சினிமாவுக்குத் தேவையான அளவுக்கே எடுத்துக் கொண்டு அதனை வெற்றிகரமான படமாக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபணம் செய்தது.
நல்ல சினிமா அனுபவத்தையும் இது அளிக்க தவறவில்லை.
--------------------------------------------------------------------

K Jagadish

Wednesday 7 September 2016

எழுத்தாளனுக்கு ஊதியம்

நண்பர் சாரு நிவேதிதா  எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படும் ஊதியம் குறித்த பதிவுகளை தமது இணையதளத்தில் வெளியிட்டதை வாசிக்க நேர்ந்தது. இது நீண்ட காலமாகவே உள்ள  பிரச்சினைதான். மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா தமது கும்பகோணம் வீட்டுத் திண்ணையில் புத்தகம் விற்று அன்றைய அடுப்பு பொங்க வைப்பார் என்று எம்.வி.வி,அவர்கள் என்னிடம் கூறியதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. நண்பர் பிரபஞ்சன் தமது புத்தகங்களை பதிப்பிக்கும் பதிப்பாளர்களிடம் போய் பொங்கல் தீபாவளி இனாம் கேட்பது போல் பிச்சை எடுத்து அந்த வள்ளல்கள் கருணையால் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுவருவதை  நேரில் கண்டிருக்கிறேன். பிரபஞ்சன் கையில் பணம் இருக்கும் போது சரவண பவனில் நல்ல காபி ஒன்று வாங்கிக் கொடுப்பார் அவர் செலவில்.
( அதே பதிப்பாளர் என் புத்தகத்தையும் போட்டு பணம் தரவே இல்லை என்பது தனிக்கதை ) பிரபஞ்சன் போன்ற முழு நேர எழுத்தாளர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றபோதும் இந்த நிலை என்றால்  சிற்றிதழ் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த சுகன், ஷாராஜ், சூர்யராஜன், மு.நந்தா, சொர்ணபாரதி, ,  யூமா வாசுகி, திலீப்குமார்,  போன்ற எண்ணற்ற  எழுத்தாள நண்பர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. சுகன் மறைந்தே விட்டார். சிற்றிதழ் நடத்திய காசில் அவர் ஒரு வீடு கட்டி தனது குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருக்கலாம். தமிழுக்கு இது எந்த கங்கையிலும் கரையாத தீராத பாவம்தான்.
நானும் அவ்வப்போது பத்திரிகைகளில் கதை கட்டுரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன் ,கல்வெட்டு ,சுகன் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதில் ஒரு பிரச்சினையும் எனக்கில்லை. ஒருபைசா கூட நான் எதிர்பார்க்கவே மாட்டேன். முடிந்தால் 500 அல்லது 1000 ரூபாய் அனுப்பி வைக்க முயற்சிப்பேன். அதுகூட முடியாமல் போன தருணங்கள் உண்டு.
ஆனால் பெரிய வணிக இதழ்களி்ல் எழுதும்போது எழுத்தாளனுக்கு ஊதியம் அல்லது சன்மானம் தர வேண்டும் என்ற நேர்மை எத்தனை இதழ் ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
குங்குமம் இதழில் பணியாற்றும் போது துணை ஆசிரியர் பரத் துணுக்கு எழுதுகிறவருக்குக் கூட 50 ரூபாய் சன்மானமும் இலவச இதழும் அனுப்பி வைக்கும் பணியில் முழு மூச்சாக உழைப்பதை கண்டு பாராட்டியிருக்கிறேன், குங்குமம் நிர்வாகமும் பாராட்டுக்குரியதுதான்.
குமுதம் தீராநதியில் உலக சினிமா கட்டுரைகளை 20 இதழ்களுக்கு மேல் எழுதி வருகிறேன் . தவறாமல் பணம் வந்துவிடுகிறது. ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு நன்றி,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் நடிகர் ஷம்மி கபூர் மறைந்த போது ஒரு கட்டுரை எழுதினேன். அதற்கு ஒருமுறை என்பெயரில் 500 ரூபாய்க்கு ஒரு காசோலை வந்தது. ஆனால் உடனே ஒரு போன் அழைப்பு. காசோலையை போட்டு விடாதீர்கள் அது உங்களுக்கானது அல்ல. வேறு எழுத்தாளருக்கு பதிலாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது திருப்பி அனுப்பினால் உங்களுக்கான காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று யாரோ பேசினார்கள். சரி என கூரியரில் எனது செலவில் அந்த காசோலையை அனுப்பி வைத்தேன். இன்று வரை எனக்கான காசோலை வரவே இல்லை. அது எந்த எழுத்தாளருக்குப் போய் சேர்ந்ததோ சினிமா எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கே வெளிச்சம்.
அதை விட கொடுமை சினிமா எக்ஸ்பிரஸ் போட்டியில் சிறந்த பட விமர்சனத்திற்காக 250 ரூபாய் பரிசு என என் பெயர் போட்டு பிரசுரமான அரைப்பக்க செய்திக்கும் இதுவரை பணம் கிடைக்கவில்லை.சினிமா எக்ஸ்பிரசும் இப்போது வருவதில்லை.யாரிடம் கேட்பது.?
இது போன்ற அனுபவங்கள் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும். சாரு அதிகமாக எழுதுவதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அவர் உணர்வைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
புலவர்களை யானை மீதேற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பொன்னும் வெள்ளியும் அள்ளிக் கொடுத்த மன்னர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் படித்திருப்போம். இந்தக் காலத்தில் அத்தகைய மன்னர்களும் இல்லை என்பதால் வேலையில்லாத பட்டதாரியைப் போல்தான் அவமானங்களுடன் எழுத்தாளன் தனது சொந்த  வீட்டில் கூட தலைமறைவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். கண்ணதாசன் கூறியது போல் தினம் ஒரு நோட்டீஸ் தினம் ஒரு கடன்காரன், தினம் ஒரு வழக்கு.
புதுமைப்பித்தனுக்கு ஒருநாள் கழிந்ததுபோல்தான் எழுத்தாளனுக்கு ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஆனால் எழுத்தின் மீதான ஆசை மட்டும் குறையவே இல்லை.

ஒருமுறை ஜெயகாந்தனுடன் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் எழுத்தாளனுக்கு கூலி கொடு. அச்சுக் கோர்ப்பவன், தட்டச்சு செய்பவனுக்கு கூலி தருவான் எழுத்தாளனுக்கு தரமாட்டான். பேசாமல் நானும்  அச்சுகோர்க்கிறேன் .கூலி கொடு. நீ அச்சுக் கோர்ப்பவனை விட்டு எழுத்தை வாங்கு பார்க்கலாம்.

பதிப்பகங்கள் யாவும் இப்படி என்றால் புத்தக விற்பனையாளர்கள் அதை விட மோசம். பல நூறு பிரதிகள் செந்தூரம் விநியோகித்து இதுவரை பணம் வரவில்லை. இன்னும் மிச்சமிருப்பவை, கிடங்குத் தெரு, சிறகுப் பருவம், எனது அண்மையில் வெளியான இரண்டு சினிமா புத்தகங்கள் எதற்கும் யாரும் பணம் அனுப்பவில்லை, புத்தகங்களும் திருப்பித் தரப்படவில்லை. அது ஒரு பொருட்டாகவே யாருக்கும் தோன்றியதில்லை.

அழகிய சிங்கர் மட்டும்தான் நேர்மையாக கணக்கை பைசல் செய்தார்.
கொரோனாவுக்குப் பின்னர் இன்னும் நிலைமை மோசம். தினசரி பத்திரிகைகளில் பக்கங்கள் குறைந்துவிட்டன. கட்டுரைகள் எழுத ஆள் இல்லை. எழுதினாலும் சன்மானம் இல்லை. பத்திரிகை விற்பனையும் இல்லை. குமுதம் 10 பிரதிகளும் குங்குமம் 5 பிரதிகளும் வாடிக்கையாளர்களுக்காக வாங்குவதாக எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர் கூறினார். கொரோனாவுக்கு முன்பு குமுதம் 150 பிரதிகள் வரையும் குங்குமம் 50 பிரதிகள் வரையும் விற்றதாக அவர் கூறினார்.
பல லட்சம் பிரதிகள் என்ற கணக்கில்தான் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கிடைக்கும். இப்போது தொலைக்காட்சிகளுக்குத்தான் விளம்பரங்கள் அதிகளவில் இருக்கின்றன. சினிமா காட்சிகள் இல்லாததால் தினத்தந்தி கூட மெலிந்துவிட்டது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் இணைப்பு ஒரு பக்கத்துடன் முடிந்துவிட்டது.பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு பலநூறு நண்பர்கள் பணி இழந்து தவிக்கின்றனர். எனக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டு தினமும் மூன்று நான்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
யாரும் வேலை தருவதாக இல்லை.

இத்தகைய சூழலில் அச்சிதழ்கள், சிற்றிதழ்கள் புத்தகங்கள் வெளியிடும் சாத்தியங்கள் குறைந்து மின்னிதழ்கள் அதிகமாகி வருகின்றன. அவையும் எழுத்தாளனுக்கு கூலி கொடுக்க இயலாத சூழல்தான் நிலவுகிறது.

ரேஷன் பொருள் முதல் இலக்கியம் வரை அனைத்தையும் ஓசியில் பெறும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டோம். சினிமாவையும் ஓசியில் போனில் டவுன்லோடு செய்து பார்ப்பதையே செய்கிறோம்.

முழு நேர எழுத்தாளனாக வாழ்வது தற்கொலைக்கு சமம் என்று புதுமைப்பித்தன். குபரா, எம்.விவி, என நீளும் எழுத்தாளர் வரிசை வரை பார்த்து விட்டோம். பிரபஞ்சன் சொன்னது போல எழுத்தாளனாக வாழ முடியாது .எழுத்தாளனாக சாகலாம்.

---------------




Sunday 14 August 2016

அஞ்சலி நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார் என்று தொலைபேசியில் வந்த தகவலை நம்ப முடியவில்லை. எனக்கு முத்துக்குமாரை நன்கு தெரியும்.
முத்துக்குமாரை முதன் முதலாக காஞ்சிபுரத்தில் பார்த்தேன். இலக்கிய வட்டம் வெ.நாராயணன் ( அவரும் இன்று இல்லை) ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். அது தோப்பில் முகமது மீரானின் சாய்வுநாற்காலி விமர்சனக்கூட்டம் . அதில் பேசினேன். அப்போதுதான் நா.முத்துக்குமார் அறிமுகமானார். அண்ணே உங்க கதை ஒண்ணு கல்கியில் வந்திருக்கு என்றார். அப்படியா தெரியாதே என்றபோது ஓடிப்போய் தன் காசில் கல்கியை வாங்கி வந்தார். கொடூரக் கனவுகள் பெயரில் வெளியான அந்தக் கதையை நான் தலைப்பு வேறு வைத்து என் தொகுப்பில் இணைத்திருக்கிறேன்.
அதன் பிறகு ஓரிருமுறை சென்னை இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர் கவிதையை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த போது கைகுலுக்கி வாழ்த்தினேன். தொடர்ந்து பட்டாம் பூச்சிகள் விற்பவன் என்ற கவிதை நூலை வெளியிட்டார். அவருடைய பட்டாம் பூச்சிகள் விற்பவன் வெளியீட்டு விழாவில் நான் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சு சர்ச்சைக்கு ஆளாகி அறிவுமதி போன்றவர்களுடன் முரண்பட்டு சிறிய சண்டை சர்ச்சைகளுக்குப் பிறகு நாங்கள் சமாதானமாகிப் போனோம். நாம் நண்பர்களாகவே நீடிப்போம் என்று அண்ணன் அறிவுமதி புத்தகக் கண்காட்சியில் கைகுலுக்கினார்.பின்னர் இன்னொரு முறை நண்பர் ஃபீலிக்ஸ் ஜெரால்டின் திருமண விழாவில் முத்துக்குமாரை பார்த்த போது மிகப்பிரபலமான பாடலாசிரியராகி விட்டார். ஆனாலும் அகம்பாவம் ஏதுமில்லை. கூப்பிட்ட போது என்ன அண்ணே என்று அதே பிரியத்துடன் பேச வந்தார். என் கணிப்புகள் பொய்யாகி விட்டன முத்து. நீங்க ஜெயிச்சுட்டிங்க நான் தோத்ததுல ரொம்ப சந்தோஷம். நல்லா எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்க என்று கைக்குலுக்கி பேசினேன். அவர் முகம் மலர்ந்தது. தன் விசிட்டிங் கார்டை கொடுத்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்க என்றார்.

அதன் பிறகு ஓரிரு சந்திப்புகள். ஓரிரு தொலைபேசி உரையாடல்கள். அவர் இத்தனை சிறிய வயதில் காலமாகி விடுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாக இதை நான் விரும்பவேயில்லை. நான் செத்துப் போயிருக்கலாம். வாழ்க்கையை ஒரு வெறுமையுடனும் சூன்யத்துடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.பெயர் , புகழ். அழகான குடும்பம் வெற்றி என எல்லாம் இருந்த முத்துக்குமார் சாக வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அழுகிறது. நான் செத்தால்  அதிகபட்சம் பத்து இருபது பேர்தான் உண்மையாக  அழுவார்கள்.

மிகவும் வருத்தம் தான் முத்துக்குமார் .ஏன் போய்விட்டாய் நண்பனே...





Saturday 13 August 2016

செந்தூரம்

செந்தூரம் என்றால் ஏதோ ஒரு ஊர் என்று நினைத்துக் கொண்டு என்னை சென்னைவாசி அல்ல என்று முடிவு கட்டி விட்டாராம் ஒரு நண்பர். அவர் காலச்சுவடு அலுவலகத்திலும் போய் கேட்டிருக்கிறார். செந்தூரம் என்ற ஊர் எங்கே என்று. அவர் என்னிடம் கூறிய போது இப்படியும் அறியாமையா என்று கருதினேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
செந்தூரம் கையெழுத்துப்  பத்திரிகையிலிருந்து அச்சானது. செந்தூரம் இதழில் இன்குலாப், பெரியார்தாசன், பிரபஞ்சன், எம்ஜி வல்லபன், இயக்குனர் ஜெயபாரதி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சூர்யராஜன், ஷாராஜ், வா.மு.கோமு போன்ற பலரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
 19 செந்தூரம் இதழ்கள் மற்றும் செந்தூரம் இலக்கிய வட்டத்தின் நூற்றுக்கணக்கான புத்தக வெளியீட்டுவிழாக்கள், நிகழ்ச்சிகளில் எனது பெயர் செந்தூரம் என்ற பெயருடன் ஒட்டிக் கொண்டது. இதனால் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதுவும் இருபது வருடங்களாகி விட்டது.




பல நூறு கட்டுரைகள், இரண்டு கவிதைப்புத்தகங்கள், கிடங்குத்தெரு நாவல், மாசோக்கிசம் பற்றிய மொழிபெயர்ப்பு நாவல், சிறகுப்பருவம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவும் வெளியாகி உள்ளன. மேலும் இணையத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த வலைப்பக்கத்தில் 185 க்கும் மேற்பட்ட பதிவுகளை செய்து சுமார் 21 ஆயிரம் வாசகர்களை எட்டியிருக்கிறேன்.என்னைப் பற்றிய விவரம் ஒரு சிலவே ஆயினும் கூகுள் தேடலிலும் கண்டுபிடிக்க முடியும். ஓஷோவை தீவிர வாசகர்கள் மற்றும் சிற்றிதழ் வட்டத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட முதல் நபர் நான்தான். அதே போல் சீரியஸான சினிமா சிறப்பிதழ் தயாரித்த முதல் சிறுபத்திரிகையும் செந்தூரம்தான். அதன் பின்னர் தான் சலனம் முதல் காட்சிப்பிழை வரை பல பத்திரிகைகள் தோன்றின.

முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவன் என்ற முறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயர் பதிவானது. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங்களையும் சிற்றிதழ்களின் வரலாற்றையும் 22 வாரங்களுக்கு அரைமணி நேரம் நிகழ்ச்சியாக வழங்கியிருக்கிறேன். அசோகமித்திரன், ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தன், வாமு,கோமு, மனுஷ்யபுத்திரன், வாமனன் போன்ற பலரின் பேட்டிகளையும் அதில் பதிவு செய்திருக்கிறேன்.






இனிமேல் செந்தூரம் பற்றியோ செந்தூரம் ஜெகதீஷ் பற்றியோ யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் .இதற்காகவே இந்த பதிவு .இது கூகுளில் போய் சேர்ந்து விடும.இனி தமிழில் செந்தூரம் என்று யாராவது டைப் செய்தாலே போதும் இந்த பதிவு கூகுளில் தோன்றும். 

என்னைத் தொடர்பு கொள்ள  சிருஷ்டி 6 புரசை நெடுஞ்சாலை சென்னை 6000007 என்ற முகவரிக்கு எழுதலாம். அல்லது இமெயில் மூலம் இணையலாம். jagdishshahri@gmail.com 
பேஸ்புக்கில் senthuram jagdish



Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...