Thursday 31 December 2015

அரிதினும் அரிது கேள் 22 - கால் போன பாதைகள் நான் போன போது.....


அது ஒரு இனிய வசந்தகாலம்.....இலைகளில் இளமை துளிர்க்கும் கோலம். ஓர் ஏப்ரல் மாதத்தில் அவன் பேருந்துக்காக காத்திருந்தான். அப்போது முன்னால் நின்ற பெண் மீது அவன் கவனம் திரும்பியது. கருப்பு புடவையும் கருப்பு ரவிக்கையும் அணிந்து கருகமணி மாலை போட்ட அவள் பின்னங்கழுத்தையும் ரவிக்கைக்கு கீழ் இருந்த இடுப்பின் பின்பக்கத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென அவன் கவலைகள், துயரங்கள் அத்தனையும் மறந்துப் போனது. அந்தப் பெண்ணுடன் பேசினான். அவள் ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவள்தான். ஒரு கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா என்று அழைத்த போது வந்தாள். இருவரும் நடந்தார்கள். பேசினார்கள், இருவருக்குள்ளும் அந்நியத்தன்மை மறந்து நட்பு மலர்ந்தது.
அப்புறம் அவள் வீட்டுக்கு அவன் போனான். ஒரு முறை முத்தமிட்டான். அத்துமீற முயன்ற போது அவள் தடுத்து விட்டாள். வேண்டாம் என்றாள் .ஏனென்றால் அவனுக்கு ஏற்கனவே மணமாகி விட்டது.
மனைவிக்கும் அவனுக்கும் கடும் சண்டை. இருவரும் ஒன்று சேரவே வழியில்லாத இடைவெளி அடைத்துக் கொண்டிருந்தது. இருவரும் தனித்தனி படுக்கையில் படுத்தனர். அவனை வார்த்தைகளால் அவள் தினமும் சுட்டெரித்தாள்.
அவன் பெண் ஸ்பரிசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். 25 வயதில் திருமணமாகாத அவளும் ஆண்துணை தேடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் நெருங்கியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் அவள் சமூகத்திற்காக பயந்தாள். தினமும் வேலை இல்லாமல்  நூலகத்தில் பசியோடு புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அவள் கீரையும் ரசம் சாதமும் கொண்டு வருவாள். அப்போது அந்த அன்பும் அவள் தரும் பத்து இருபது ரூபாய்களும் சொர்ககம். ஒரு முறை மியூசியம் உள்ளே அழைத்துச் சென்று அவளை திமிங்கலத்தின் எலும்புக்கூட்டுக்கு நடுவே வைத்து அவன் முத்தமிட்டான்.  இன்னொரு முறை வள்ளுவர் கோட்டத்திலும் முத்தமிட்டார்கள். திருக்குறளின் காமத்துப் பால் கல்வெட்டுகளுக்குப் பின்னால் அவர்களின் உதடுகள் தாகத்துடன் ஒன்றை ஒன்று பருகின. ஒருமுறை ஒருமழை நாளில் அவன் விருப்பத்திற்காக அவள் பாவாடை தாவணி அணிந்து தேவதை போல் அவனுக்காக வந்தாள். கோவிலுக்குப் போனார்கள்.
இருவரும் நான்கைந்து சினிமாவும் பார்ததார்கள். பாலுமகேந்திராவின் வீடு, பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
புதுப்புது அர்த்தங்கள் அவர்களின் கதையேதான்.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்றமுதல் பாடலில் நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே என்ற வரிக்காக அவன் அழுதபோது அடையாறு கணபதிராம் தியேட்டரின் இருட்டில் அவள் அவனுக்கு ஆறுதல் தந்து கண்ணீரைத் துடைத்தாள். கைவிரல்களுடன் விரல்களைக் கோர்த்துக்கொண்டாள்.
கேளடி கண்மணி பாட்டில் நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா என்ற வரிக்காக மீண்டும் அழுதான்.

அவள் மீண்டும் ஆறுதல் தந்தாள்
இப்படியே நான்கு ஆண்டுகள் அவர்கள் பழகினார்கள்.....

அந்தப்பாடல் அவனுக்கு மறக்க முடியாத பாடல், அவள் மறந்துவிட்டாள்.  

வேறொரு வசதியான மாப்பிள்ளை வாய்த்தும் அவன் உறவைத்துண்டித்து அவள் போன நாளில் அவன் அதே பேருந்து நிலையத்தில் தனித்து நின்றிருந்தான்.  

கண்போன போக்கிலே கால் போகலாமா 
 கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா


என்ற எம்ஜிஆரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.  

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்,  
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும், 
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் 

என்று வாலி எழுதிய வரிகள் ஒலித்த போது,அவனுக்குள் இருந்த காதலன் செத்துப் போய் ஒரு புத்தன் பிறந்தான். இன்றும் அந்தப் பேருந்து நிலையத்தில் அவன் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவளை அதன் பிறகு பார்க்கவே இயலவில்லை. அவள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்று எங்கேயோ வாழ்ந்து வருகிறாள்

அவன் யார் என்று கேட்காதீர்கள்,. மு.மேத்தாவின் கவிதை வரி போல் இந்த ஊருக்கு பழி சொல்ல தெரியும் வழி சொல்ல தெரியாது. ......அவன் தன் கதையை என்னிடம் கூற அதிலிருக்கும் என் கதையை நான் உங்களிடம் சொல்லி விட்டேன்.

இதோ அந்தப்பாடல், பாடலாசிரியர் கால்போன பாதையில் மனம் போகலாமா என்று எழுதிய அதே வாலி தான்.
இசை இளையராஜா பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கோவாவின் கண்களை அள்ளும் கடற்கரையில் சித்தாரா அந்தப் பெண்ணின் திரைவடிவமாகவே தோன்றினாள். ரகுமானாக அவன் மாறிப்போனான்.


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நாள் முழுதும் நான் எழுதும் ஓர் கவிதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி

எந்நாளும் தான்தேநீர் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்

இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல்பாடல்தான்
 
கானல் நீராய் தீராத தாகம், கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை,நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி........
நீங்காத பாரம்என் நெஞ்சோடுதான்....நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்....நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது.....
கால் போன பாதையில் நான் போன போது.....நீதானே கைசேர்த்து மெய்சேர்த்த மாது.....
கேளடி கண்மணி பாடகன் சங்கதி.......



 

Wednesday 30 December 2015

அஞ்சலி - இந்தி நடிகை சாதனா

பழம் பெரும் இந்தி நடிகை சாதனா டிசம்பர் மாதத்தின் இறுதியில் காலமானார். அவருக்கு வயது 74
சிறுவயதில் நான் பார்த்த சில இந்திப்படங்களில் சாதனா என்ற நடிகை மனதில் நின்றார்.
முதன்முதலாக மும்பை சென்ற போது எனக்கு வயது 20 கூட ஆகவில்லை. அ்போது மேரா சாயா படம் அங்கிருந்த நாவல்டி திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதே அது பழைய படம்தான். பழைய படங்கள் திரையரங்கில் ஓடும் காலத்தைத்தான் நாம் காலாவதியாக்கிவிட்டோமே
மேரா சாயாவில் சாதனா மிகுந்த அழகும் திறமையும் கொண்டு நடித்திருந்தார். லதா மங்கேஷ்கரின் இனிமையான நான்கைந்து பாடல்களுக்காகவும் சாதனாவுக்காகவும் அநத்ப் படம் மனதைக் கவர்ந்தது. நைனோன் மே பத்ரா சாயே என்ற பாடல் இன்றும் எனக்குப் பிடித்த அருமையான பாடல் . சித்தார் இசையும் ஓர் எதிரொலி போல் ஒலிக்கும் லதாவின் குரலும் காதுகளில் ரீங்காரம் இசைக்கும்.

டைட்டான சுடிதார், லெகிங்ஸ், சல்வார் கமீஸ் என்று தமிழச்சிகள் உட்பட இந்தியப் பெண்கள் அணியும் இன்றைய நாகரீக ஆடைகளுக்கும் அவர்தான் முன்னோடி. பிறப்பில் சிந்தி இனத்தவரான சாதனா இயல்பாக என் கவனத்தைக் கவர்ந்தார். நானும் சிந்தி இனத்தில் பிறந்தவனாக இருப்பினும் இது சாதி இனப்பற்றை மீறிய ஈர்ப்புதான்.
சாதனாவை மீண்டும் ரசித்தது வக்த் என்ற படத்தில் மேரா சாயாவில் சுனில் தத்துடன் நடித்த அதே சாதனா அதே சுனில்தத்துடன். ஆனால் இந்தப்படத்தில் கூடுதலான கிளாமர். ஒருகாட்சியில் பிராவும் ஷார்ட்சும் அணிந்து நீச்சல் குளத்திலிருந்து எழுந்து வருவார். பல இரவுகளில் தூக்கம் கலைத்த காட்சி அது.
.யார் நீ என்ற இந்திப்படத்தின் மூலமான வோ கோன் தீ படத்தில் ஜெயலலிதா நடித்த வேடத்தில் நடித்தவர் சாதனா. இதிலும் லதா மங்கேஷ்கரின் இனிமையான பாடல்கள் அதே மதன்மோகன் இசையில் இடம் பெற்றிருந்தன. தமிழில் இதே பாடல்களை வேதா இசையமைத்து பி.சுசிலாவைப் பாட வைத்திருந்தார்.
இதே போல் ஏக் ஃபூல் தோ மாலி படத்தில் சஞ்சய் கானின் ஜோடியாக நடித்த சாதனா அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்திலும் ஒரு மழைக்காட்சியில் ஈரம் சொட்ட சொட்ட தனது அழகை சொட்டினார்.
ஆர்சூ என்ற படத்தில் ராஜேந்திர குமாருடன் இணைந்து ஒரு சோகமான காதல் பிரிவை நடித்துக்காட்டி கண்ணீர் ததும்ப வைத்தார். தனது ரசிகர்கள் தனது இளமையான அழகான தோற்றம் குறித்த கற்பனையை கலைத்து விடக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக தனது முதிய உருவத்தின் புகைப்படத்தைக் கூட அச்சிட அவர் அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அவருடைய சில முதுமைப்படங்கள் பத்திரிகைகளில் இடம் பெற்றன. அண்மையில் இவர் காலமான போதுதான் வயதான காலத்தில் சாதனா எப்படி காட்சியளித்தார் என்பதை ரசிகர்கள் தெரிந்துக் கொண்டனர்.

ஒரு தேவதைபோல் இந்தி சினிமாவில் வலம் வந்த அழகான பெண்ணின் மறைவுக்காக வருந்தலாம்.



Wednesday 23 December 2015

சந்திப்பு 9 எம்ஜிஆர்





24,10.2015 எம்ஜிஆரின் 28வது நினைவு தினம்



மக்கள் திலகம் எம்ஜிஆரின் ரசிகன் நான். சிறுவயதில் பார்த்த அவர் திரைப்படங்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை என என்வாழ்க்கைக்கு புதிய பாதையை வகுத்துள்ளன. இன்று ஓஷோ முதல் பாரதி வரை நான் அறிஞர்களின் பாதையில் நடக்க காரணம் இந்த வரிகளும் எம்ஜிஆரும்தான்.

அண்ணா நினைவிடத்திற்கு எம்ஜிஆர் அஞ்சலி செலுத்த வந்த போது  அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். கையில் மக்கள் குரல் நாளிதழில் எம்ஜிஆர் பற்றி டி.ஆர்.ஆர் .கட்டுரை.

சமாதியில் அவர் வந்து காரில் இறங்கிய போது உற்சாகமாக கையசைத்த ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு பதினெட்டு வயது. ஆனால் எப்படியோ என் கையில் இருந்த மக்கள் குரல் நாளிதழை கவனித்து விட்ட எம்ஜிஆர் அத்தனை கூட்டத்திலும் என்னைத் தேடி அருகில் வந்து என் கன்னத்தை செல்லமாக தட்டிச் சென்றார். அன்றே ஜென் ம சாபல்யம் அடைந்து விட்டேன்.
இன்று அதே அண்ணா சமாதி அருகே எம்.ஜி.ஆரின் சமாதிக்கு செல்லும் போதெல்லாம் அவர் என் கன்னத்தைத் தொட்டு தட்டிய ஸ்பரிசம் கண்களில் ஈரம் கோர்க்கிறது. அரசியலுக்கு அப்பால் ஒரு அற்புதமான மனிதரை ஒருநாளாவது வாழ்வில் சந்தித்த மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தான் தவற விட்டு விட்டேன். சந்திக்க முடியவே இல்லை.

----------------------------------
ஜனவரி மாதம் 2016ல் உரிமைக்குரல் இதழின் சார்பி்ல் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாளும் அன்பே வா படத்தின் பொன் விழாவும் சென்னை திநகர் பிட்டி தியாகராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இசைக்குயில் பி.சுசிலா, வசனகர்த்தா ஆரூர்தாஸ், பாடலாசிரியர் முத்துலிங்கம் போன்றவர்கள் எம்ஜிஆர் பற்றியும் இப்படத்தைப் பற்றியும் தங்கள் அனுபவங்களைப் பேசினார்கள். பொதுவாக எம்ஜிஆரின் கருணை மனம், வள்ளல் குணம் போன்றவையும் வாழ்வில் அவர் அடைந்த வெற்றிகளும் குறித்தே பேச்சுகள் இருந்தன.எம்ஜிஆர் பாடல்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அன்பே வா படத்தைப் பொருத்த வரை நான் எனது பள்ளிப்பருவத்தில் மடியில் எனது சிறிய தம்பியை அமர வைத்து பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது. அதன்பிறகு இப்படத்தை குறைந்தது ஏழெட்டு தடவை பார்த்து விட்டேன். பாடல்கள் மனனம் செய்து விட்டேன் .உள்ளம் என்றொரு கோவிலிலே பாடலும் ஏய் நாடோடி பாடலில் எம்ஜிஆரின் துள்ளலான நடனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. மெல்லிசை மன்னரும் வாலியும் மாயாஜாலம் பண்ணியிருக்கிறார்கள். சரோஜாதேவி கொள்ளை அழகு. காஷ்மீர் சிம்லா காட்சிகள் தீவிரவாதத்தால் நாம் இழந்த சொர்க்க்த்தை ஏக்கத்துடன் காணச் செய்கின்றன. நாகேஷூம் இ்ப்படத்தில் மி்க அற்புதமாக நடித்திருப்பார். லவ் பேர்ட்ஸ் பாடலில் அபிநய சரஸ்வதியின் விரல் அசைவுகளை பல ஆண்டுகள் கழித்து மாதுரி தீக்சித் சாஜன் படப்பாடலில் பயன்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார்.
எம்ஜிஆரின் அரசியலில் எனக்கு பெரிய நாட்டமில்லை என்றாலும் அவரது படங்களும் பாடல்களும் இன்றும் எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருபவையாக உள்ளன.



சந்திப்பு 8 பிரபஞ்சன் என்ற மனிதர்

இலக்கிய உலகில் புதிதாக நுழைந்த போது, 1980களில், எனக்கும் நண்பர் சூர்யராஜனுக்கும் சமகாலத்தின் ஆதர்ச எழுத்தாளர்களாக இருந்தவர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் மற்றும் திலீப்குமார் ஆகியோர் மட்டுமே. லாசரா, சுஜாதா, போன்ற சிலரையும் தீவிரமாக வாசித்தோம்.இதில் ஜெயகாந்தனுடனும் சுந்தரராமசாமியுடனும் அசோகமித்திரனுடனும் பழகும் வாய்ப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது. ஆனால் பிரபஞ்சனும் திலீப்குமாரும் மிகவும் நெருக்கமாக மாறிப் போனார்கள். அதற்கு காரணம் அவர்களின் இயல்பான சுபாவம்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத, எந்த ஒரு மனிதரையும் அலட்சியப்படுத்தாத, எந்த ஒரு பகிர்தலையும் இருதரப்புக்கும் சாத்தியமாக்க முடிந்த அற்புதமான மனிதர்களாக திலீப்குமாரும் பிரபஞ்சனும் இருந்தனர்.
பிரபஞ்சன் என்ற ஆகிருதியை அவரது பிரும்மம் கதையைப் படித்ததும் நொடிப்பொழுதும் தாமதமின்றி புரிந்துக் கொண்டேன். அப்போது அவர் நாவல்களை அதிகம் எழுதியிருக்கவில்லை,மணிமணியான சிறுகதைகள் எழுதியிருந்தார்.குங்குமம், குமுதம் என பத்திரிகைகளில் பணியாற்றி தனக்கான அக வெளியைத் தேடி வெளியேறியிருந்தார். குமுதம் குவார்ட்டர்சை அவர் காலி செய்த போது, மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து அவரது மூட்டை மூட்டையான புத்தகங்களை சுடும் வெயிலில் கே.கே.நகரில் புதிய வீட்டிற்கு அவர் எடுத்துச் செல்ல உதவியபோது அவருடனான நெருக்கம் அதிகரித்தது.
அது 1986ம் ஆண்டு. எனக்கு திருமணமான புதிது. பிரபஞ்சனை வாரம் ஒரு முறையாவது பார்த்து விட துடிப்போம் நானும் சூர்யாவும். திருமணமான புதிது என்பதால் மனைவியிடம் சொல்லாமல் எங்கேயும் போகமுடியவில்லை. என் நண்பர்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள் என்ற பிம்பம் என்மீது படிந்திருந்ததால், நண்பர்களை சந்திப்பதை என் அம்மாவும் மனைவியும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி முடிவெட்டப் போவதாகவும் சினிமாவுக்குப் போவதாகவும் பொய் சொல்லி பிரபஞ்சனை கே.கே.நகருக்குப் போய் பார்த்து வருவேன்.
குடும்பத்தை பாண்டிச்சேரியில் பிரிந்து தனியாக இருக்கும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு போட ஆசைப்பட்டு ஒருநாள் மனைவியிடம் பிரியாணி செய்யச் சொல்லி அவரை அழைத்து வந்தேன். அப்போது பிரியாணி முழுவதும் தீய்ந்து கருகி விட்டது. அரைக்கிலோ கறியையும் பாஸ்மதி அரிசியையும் என் மனைவி வீணாக்கமாட்டாள் என்பதால் இதை தற்செயல் என்று நம்பினாலும், அதன் பிறகு அவர் வீட்டுக்கு வருவதில்லை. ஒருமுறை நான் வீடு காலி செய்யும் போது வந்து, ஆட்டோவில் ஏராளமான புத்தகங்களை அள்ளிச்சென்றார்.
பின்னர் அவர் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, சந்தியா என பல நாவல்களை எழுதி சாகித்ய அகடமி வரை பேசப்பட்டார்.
எப்போதும் பண நெருக்கடியுடனும், வாழ்க்கையின் சோர்வுடனும், பெண்கள் மீதான மதிப்பு கலந்த காதலுடனும் இருந்த அவரை நாங்கள் எப்போதுமே உடன்பிறவா சகோதரராகவே நேசித்திருக்கிறோம்.
வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் அவருக்கும் எனக்குமான இடைவெளிகளை அதிகரித்துவிட்ட நிலையில் ஒருமுறை அவரது தொலைபேசி அழைப்பு. இப்போது பீட்டர் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற போது வழக்கம் போல சரவண பவன் வரை காபி சாப்பிட அழைத்துப் போனார். இப்படி நூற்றுக்கணக்கான பேருடன் காபி சாப்பிட நடந்துப் போன அனுபவங்களையும் பேசிய விஷயங்களையும் அவரால் தொகுக்க முடிந்தால் அது சமகால இலக்கியத்திற்கு மிகப் பெரிய கொடையாக இருக்கும்.
பத்திரிகைகள் கதைகளை பிரசுரிப்பதை, தீராத பாவமாக கருதுகின்றன என்பதால் முன்பு போல உற்சாகமாக எழுத முடியாமல் தவிக்கிறார்.மனைவியை இழந்தது, மகன்களை வெளிநாடு அனுப்பி பிரிந்து வாழ்வது போன்ற குடும்பச் சூழல்களும் பல்வேறு இழப்புகளும் அவரது இருப்பைக் குலைத்திருக்க கூடும். ஆனால் பிரபஞ்சன் என்ற படைப்பாளியும் மனிதரும் அப்படியே இருந்தனர். கூடவே அவர் வாசிப்பும். வீடுநிறைய இப்போதும் புதிய புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன.
உயிர் எழுத்து இதழில் தொடராக இளம் படைப்பாளிகளைப் பற்றி எழுதி வரும் பிரபஞ்சன் எனது கிடங்குத் தெரு நாவலைப் பற்றி எழுதவும் விருப்பம் தெரிவித்தார். அந்தப் புத்தகம் வந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. பாஷா பாரதி சம்மான், தஞ்சை பிரகாஷ் என விருதுகள் கிடைத்தன. அந்த நாவலையும் அதில் எழுதப்படாத பல விஷயங்களையும், தழுவி எடுக்கப்பட்ட வசந்தபாலனின் அங்காடித்தெருவும் வந்து போய்விட்டது. அந்த புத்தகத்தை மறுபதிப்பு போட பதிப்பாளர்கள் முன்வரவில்லை. மீண்டும் தமிழினியே போடலாம், என்னிடம் சில ஆயிரங்கள் இருந்தால் சாத்தியமாகலாம். என் நாவல் பற்றி பிரபஞ்சன் எழுதும் அளவு நான் வளர்ந்து விட்டேனா அல்லது எழுத வேண்டிய காலம் தவறி்ப்போய் விட்டதா என்று தெரியவில்லை.மறுபதிப்பு வரட்டும்.அப்புறம் பார்க்கலாம் சார்.




சந்திப்பு 7 அசோகமித்திரன்

எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மீது மிகவும் ஈர்ப்பு இளம் வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பல முறை தமிழின் மிகச்சிறந்த மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிறகு வளர்ந்த எழுத்தாளர்களில் முதல் இடத்திற்கு தகுதியானவர் சுந்தர ராமசாமியா, லா.ச.ராவா , ஜெயகாந்தனா, அசோகமித்திரனா என நான்கைந்து பெயர்களே முன்னுக்கு வந்து மெல்ல மெல்ல அசோகமித்திரனே வலிமை பெற்றதை உணர்ந்திருக்கிறேன்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் கனவு அசோகமித்திரன் சிறப்புிதழ் தயாரி்ப்பில் இருந்த ஜெயமோகன் என்னிடம் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு பற்றி கட்டுரை கேட்டார். அப்போது அந்த நாவலை ஆழமாக வாசித்தேன். அசோகமித்திரன் என்னுள் நீங்காமல் இடம் பெற்று விட்டார். அரசியலை துவேசம் இன்றியும் சார்பு இல்லாமலும் அதன் போக்கி்ல் விவரிக்கும் பாணி, மதரீதியான மோதல்களில் தொலைந்து போன மனிதநேயம் குறித்த அடங்கிய தொனியிலான விமர்சனம், நல்ல இனிப்பில் தூவிய முந்திரிப்பருப்பு போல ஆங்காங்கே மெலிதான நகைச்சுவை என அசோகமித்திரன் வடிக்கும் ஒவ்வொரு படைப்பின் செய் நேர்த்தியும் அதன் ஆழமான கருத்தியலும் என்னை கிறங்கடித்துள்ளன.
இளம் வயதில் காதல், காமம் நிரம்பிய சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை தேடித் தேடிப் படித்திருப்பேன். அது வயது கோளாறு. இலக்கியத்தின் பால் உண்மையான மதிப்பும் மரியாதையும் கூடிய போது புதுமைப்பித்தனும் குபராவும் மௌனியும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது.
அப்போதெல்லாம் அசோகமித்திரன் கவனத்தில் பதியாமல் போனது வயதுக் கோளாறும் அதீத ஆர்வமும்தான். சரோஜாதேவி புத்தகம் போல வணிக இலக்கியங்களில் பிரா, ஜட்டி, மார்பகங்களைத் தேடியதால் வந்த வினை. அசோகமித்திரன் கதைகள் டாக்குமென்ட்ரி படம் போலும் சத்யஜித்ரே போன்றோரின் ஆர்ட் பிலிம் போலும் அச்சமூட்டிய காலம் அது. ஆனால் பின்னர் உண்மையான கலை எது என்று தெளிவு வாசிப்பு அனுபவத்தாலேயே ஏற்பட்டு விட்டது.
முதன்முதலாக அசோகமித்திரனின் தி.நகர் வீட்டிற்கு எண்பதுகளின் இறுதியில் நண்பர்கள் சூர்யராஜன், நந்தா, அறிவுமணி உட்பட ஆறேழு பேருடன் சென்றேன். அவர் எனது செந்தூரம் இதழுக்கு கடிதம் போட்டதால் மிகவும் பெருமையாகவும் இருந்தது. அந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி அவரை சந்திக்க விரும்பிய நண்பர்களைத் திரட்டி அவர் வீட்டை அடைந்தேன். கதவைத் திறந்ததும் அதிர்ச்சியில் யாரோ அடிக்க வந்தது போல் அலறிய அசோகமித்திரன் இத்தனை பேர் ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு வரலாமா என கேட்டார். கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார். சார் உங்க கதைகளை எழுத்தெண்ணி படித்திருக்கிறேன் என்ற சூர்யாவின் குரலும் அவர் காதுகளில் விழவே இல்லை.
மீண்டும் அதே வீட்டில் ஜெயமோகனுடன் அசோகமித்திரனை சந்தித்த போது மனம் விட்டு நீண்ட நேரம்  நாங்கள் அவருடன் பேசினோம்.
கோவையில் ஞானி நடத்திய நிகழ் கூட்டத்தில் ஒருமுறை அசோகமித்திரன் படைப்புகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் அவரும் கலந்துக் கொண்டார். அப்போது மிகவும் நட்புடன் என் கரங்களைப் பிடித்து அன்பொழுக பேசினார். அந்த நினைவுடன் இருந்த அவர் ஜெயமோகனுடன் சந்தித்த போது நீங்க கோயமுத்தூர் காரரா எனக் கேட்டார். இல்லை என விளக்கினேன்.
தொடர்ந்து சில இலக்கியக்கூட்டங்களிலும் அசோகமித்திரனை பார்த்திருக்கிறேன். சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விஷ்ணுபுரம் வெளியீட்டு விழா நடத்திய போது பார்வையாளர்களில் ஒருவராக  அசோகமித்திரன் அமர்ந்திருந்தார்.
ஒரு இலக்கியக்கூட்டத்தில் அசோகமித்திரனுக்கு ரூ 25 ஆயிரம் பணமுடிப்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தை விட்டு அவசரமாக அவர் வெளியேறிய காட்சியைக் கண்டு பணத்தை மீண்டும் பிடுங்கிக் கொள்வார்களா என்ற பயத்தில் அவர் ஓடுவதாக நண்பர்கள் சிலர் கிண்டலடித்தனர்
கலைஞரைப் பாராட்டி நடந்த கூட்டத்தில் நவீன எழுத்தாளர்கள் பலர் அவரைப் பாராட்டி பேசிய போது அசோகமித்திரனும் பேசினார். பின்னர் அதுகுறித்த வருத்தம் அவருக்கு இருந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சிக்காக அவரை வேளச்சேரி வீட்டில் சந்தித்த போது பி.எஸ்.ராமையா பற்றியும் அவரது குதிரைப்பந்தய ஆர்வம் பற்றியும் அசோகமித்திரன் பேசியவை இன்றும் மனதுக்குள் இனிய நினைவாக பதிந்துள்ளன. வெற்றி குதிரையின் மூக்கு குறித்து ராமையாவின் அவதானிப்பு பற்றியும் அவர் பேசினார்.
செந்தூரம் இதழ் மீண்டும் வெளியான போது வெளியீட்டுவிழாவுக்கு அவரை அழைத்தேன் அன்புடன் வந்து வாழ்த்தினார். அசோகமித்திரன் போல எனக்கும் இந்தி சினிமாவில் அதிகமான ஈடுபாடு உண்டு ,முகநூலில் ஒரு குறிப்பிட்ட பழைய இந்திப்படப் பாடலைப் பற்றிய விவரம் கேட்டார். தெரிவித்தேன்.
பழகிய நாட்கள் குறைவே ஆனாலும் அசோகமித்திரன் என்ற பிரம்மாண்டமான ஆலமரத்தின் நிழலில் சிறிது காலம் வாழ்கிற சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன். அனுமனைப் போல் தன் பலம் அறியாத அற்புதமான மனிதர், எழுத்தாளர் அசோகமித்திரன் .

Sunday 20 December 2015

பயணம் -5 கூகே சுப்பிரமணியபுரம் ரோடு- தர்மஸ்தலா

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் கூகே சுப்பிரமணியம். இங்கு சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஆயுதங்களை குமார பர்வதம் ஆற்றில் கழுவிய சுப்பிரமணியன் விநாயகர் வீரபாகு சகிதமாக இங்கு வந்ததாக புராணம் குறிப்பிடுகிறது. இ்ங்குதான் நாக தேவனின் மகள் யசோதாவையும்  இந்திரனின மகள் தேவசேனாவையும் சுப்பிரமணியர் மணம் முடிக்க மும்மூர்த்திகளும் திரண்டு வந்து வாழ்ததினர். என்பார்கள்.கருடனால் ஆபத்து நேரிட்டபோது சர்ப்பங்கள் யாவும் சுப்பிரமணியனிடம் அடைக்கலம் தேடிப் புகுந்த தலம் என்பதும் புராணம் கூறும் விளக்கம்.குமார பர்வதம் எனப்படும் மலைத்தொடரில் அழகான இடத்தில் இநத்க் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து யஷ்வந்த் புர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து கார்வார் செல்லும் விரைவு ரயிலில் ஏறினால் அழகான மலைப்பகுதிகளையும் அருவிகளையும் குகைகளையும் கடந்து இந்தக் கோவிலை 9 மணி நேரத்தில் அடையலாம். வழியில் அரிசிகேரியில் இட்லி தோசை நல்ல ருசி.
கோவிலிலும் அருமையான அன்னதானம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. கர்நாடக உடுப்பி சுவை மணக்கும் ரசமும் கேரட் சாம்பாரும் மனம் கவர்கிறது.சாதத்தை சுடச்சுட பரிமாறுகிறார்கள். கோவிலுக்குள் சட்டை பனியன் கழற்றி செல்ல ஆண்களுக்கு கட்டளை. பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் இல்லை. கோவிலை சுற்றி கடைகளும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. பிரம்மாண்டமான தேர் ஒன்று முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கூகே சுபபிரமணியம் ரோடு ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் இந்தக் கோவிலை அடையலாம். கேரள பாணியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு 41 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அற்புதமான சைவத்திருத்தலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயம். இங்கு சிவபெருமான் பார்வதியுடன் காட்சியளிக்கிறார். தஙகும் விடுதிகள் 100 முதல் 200 ரூபாய்க்கு அறைகளைத் தருகின்றன. அறைகள் காலியாக இல்லாவிட்டால் பாயும் தலையணையும் தருகின்றன. கூடத்தில் படுத்துக் கொள்ளலாம். இங்கும் சுவை மணக்கும் ரசம் போட்டு அற்புதமான சாப்பாடு போடுகிறார்கள். இரவு பத்துமணி வரை திருப்பதி போல, சில மணி நேரம்  நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தரிசனம் செய்து அன்னமருந்தி செல்கிறார்கள்.அருகில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் குளியல் போடுவது சுகமான அனுபவம். ஆற்றில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியானது.



 






ஹேமாவதி ஆற்றுப் படித்துறை அருகே மற்றொரு பிரம்மாண்டமான கோவிலும் உள்ளது. இங்கு ராமர், சீதாப்பிராட்டி, கிருஷ்ணன், அனுமன் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் மிகவும் சுத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

Saturday 19 December 2015

DILWALE -SHAHRUKH KHAN -ஹீரோயிசம்



இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானும் காஜோலும் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் பல ரசிகர்களின நினைவில் பசுமையாக இருக்கும். அபாரமான அந்த காதல் கதையும் நட்சத்திர ஜோடியின் அழகும் கண்ணை யும் மனத்தையும் விட்டு அகலாது. இனிய பாடல்களின் தாலாட்டும் உண்டு
மும்பை மராத்தா மந்திர் படத்தில் 22 ஆண்டுகளாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது இந்திய சினிமா வரலாற்றில் முதலும் கடைசியுமாகும்.

எனக்கும் ஷாருக்கான் படங்கள் மிகவும் பிடிக்கும். அற்புதமான நடிகர் அவர். அமீர்கானின் அபாரமான புத்திசாலித்தனமான நடிப்பில் கமல்ஹாசனின் சாயல் தென்படும். ஆனால் ஷாருக்கான் தனித்துவமானவர். அமிதாப் பச்சனுக்குப் பிறகு மனம் கவர்ந்த இந்திப் பட நாயகன் அவர்தான்.

காஜோலுடன் அவர் இணைந்த படங்கள் விசேஷமானவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. அஜய் தேவகனை மணமுடித்த பிறகு 2  குழந்தைகளுக்கு தாயான காஜோல் இந்த படத்தில் கிளிவேஜ் ( மார்பகம்) தெரிய சட்டையும் மினி ஸ்கர்ட்டும் அணிந்து ஷாருக்கானுடன் நெருக்கமான டூயட்டுகளைப் பாடுகிறார் .துப்பாக்கி எடுத்து ஷாருக்கானின் நெஞ்சைப் பிளக்கிறார். அவ்வப்போது தமது குளிர்ச்சியான சிரிப்பால் பல்கேரியாவின் குளிர் பிரதேசங்களில் அனல் மூட்டுகிறார்.

இதே போல் இன்னொரு கதாநாயகியான கீர்த்தி சனோனும் அழகு, சினிமாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு தேவதை

வருண் தாவனுக்கு பத்லாபுர் போன்ற சீரியசான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். ஷாருக்கானின் பாசமுள்ள தம்பியாகவும் உண்மையான காதலனாகவும் மனம் கவர்கிறார். அவரும் அவர் நண்பர் குழுவும் அடிக்கும் லூட்டிகள் படத்தை கலகலப்பாக்குகின்றன. குறிப்பாக பழைய காமெடி நடிகர் ஜானி லீவர் மணிபாய் பாத்திரத்தில் பின்னி பெடலெடுக்கிறார். போமன் இரானி காமெடி வில்லன், படத்தின் வசனங்களும் பொருள் பதிந்த பாடல்களும் மிகவும் சிறப்பான பங்களிப்பு செய்கின்றன
ஆனாலும் படத்தின் வெற்றிக்கு காரணம் ஷாருக்கான்தான். முன்னாள் டானாக தோன்றும் இடத்தில் அற்புதமான முகபாவங்கள். மெலிந்த உருவத்திலும் ஆக்சன் காட்சிகளி்ல் காட்டும் அபாரம். கார்கள் உடைந்து நொறுங்கும்போதும் துரோகம் புரிந்த காதலியால் சுடப்படும் போதும் ஷாருக்கான் உள்ளத்தை மீண்டும் வருடுகிறார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதாக படத்தில் காஜோல் கூறும் போது, 15 ஆண்டுகள் பத்துமாதங்கள் 20 நாட்கள் என துல்லியமாக தான் பிரிந்த நாள் கணக்கு வைத்து சொல்லும் போது காதலனாக ஷாருக்கான் கண்கலங்க வைக்கிறார்.
 ரோகித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் என்க்குப்பிடிக்கவிலலை. மிகவும் அபத்தமாக இருநத்து.இநத்ப்படமும் வேறு வகையில் அபத்தமானதுதான். முந்தைய தில்வாலேயின் வெகுளித்தனமான இனிய காதல் கதை இதில் இல்லை. வன்முறை மிக்க வேறொரு காதல்தான் இருக்கிறது. ஆனாலும் இப்படத்தை ரசிக்க முடிந்தது.

Thursday 17 December 2015

அரிதினும் அரிது கேள் 21 காதல் என்பது கற்பனையோ காவியமோ


ரஜினிகாந்தின் அழுத்தமான நடிப்புக்கு பலரும் உதாரணம் காட்டும் படம் ஆறிலிருந்து அறுபது வரை . படத்தில் ஜெயகாந்தனின் நாவல்கள் பிடிக்கும் என்று கூறுகிற தொழிலாளியாக நடித்திருப்பார் ரஜினி. சிறுவயது முதலே உழைப்பால் உயர்ந்து குடும்பத்தை கரை சேர்த்து வைக்கு முதுமையில் யாருடைய துணையுமின்றி தனிமைக்கு தள்ளப்படும் பல்லாயிரம் நடுத்தரக் குடும்பத்தலைவர்களின் சோகமான காவியம் இப்படம். 

ஆண்பிள்ளை என்றாலும் சாண் பிள்ளைதான் அன்றோ என்ற தொடக்க பாடலே கண்களில் நீர் சுரக்க வைக்கும்.ஜென்சியும் சசிரேகாவும் இசைஞானியின் இசையில் பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளுக்கு உயிர் தந்தனர்

வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன , காலத்தின் கோலம் புரிந்தது , ஞானிதானே நானும் என்ற பாடலை ஜெயச்சந்திரன் மிகவும் உருக்கமாக பாடியிருப்பார்

இப்படத்தில் ஒரே ஒரு காதல் டூயட். எஸ்பி.பாலசுப்பிரமணியமும் எஸ்.ஜானகியும் பாடிய இந்த டூயட்டிலும் சோகம் உண்டு. படத்தின் ஒரு கட்டத்தில் தீவிரமாக காதலித்த ரஜினியை விட்டு பிரிந்து செல்லும் சங்கீதாவுடன் ரஜினி கனவில் பாடும் டூயட் இது.

 சங்கீதா சற்று புஷ்டியான அழகான நடிகை. இப்படத்தில் இந்தப் பாடலில் அவர் கவர்ச்சி விருந்து படைத்திருப்பார், வாளிப்பான தொடைகளையும் தொப்புளையும் பட்டாசு போல் பொறிதட்டும் புன்னகையுமாக சங்கீதா மனதைக் கவர்கிறார். ஆனால் ரஜினியை ஏங்க வைத்து விட்டு சென்றுவிடுகிறார். அதனால்தான் காதல் என்பது கற்பனையோ காவியமோ என பாட வைத்து விடுகிறார். 

அழகான பெண்ணின் காதல் கிடைப்பதும்  அது கிடைக்காமல் பிரிந்து விடுவதும் வாலிப வயதில் ஏற்படும் பெரும் சோகம் . சிலருக்கு அது வயதான கோலத்திலும் நிகழ்கிறது.

  

கண்மணியே காதல் என்பது

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்


(கண்மணியே)
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்- உந்தன்
தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

சந்தி்ப்பு-6 ஆ.மாதவன்



திருவனந்தபுரம் சாலை தெருவில் ஆ.மாதவன் அவர்களை அவரது பாத்திரக்கடையில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அது தொண்ணூறுகளின் ஆரம்பக் காலம். நானும் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். புதிய பார்வை, கணையாழி, செந்தூரம் இதழ்களில் எனது படைப்புகளுடன் ஆ.மாதவனுக்கு அறிமுகம் ஆனேன். சுந்தர ராமசாமியை சந்தித்து வந்ததை சொன்ன போது மிகுந்த அன்புடன் அமர வைத்து பேசினார். தமது கடைக்கு வந்த நவீன கவிஞர் ஒருவர் குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும் பஸ், உணவுக்கு மட்டும் பணம் தருவேன் என்ற தமது கொள்கையை விளக்கியதாகவும் ஆமாதவன் கூறினார். ஆனால் குடிக்க பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கடையில் இருந்த சாமான்களையெல்லாம் தூக்கி எறிந்து வீதியில் அதகளம் பண்ணி மண்ணை வாரி சபித்து விட்டுச் சென்றாராம் அந்தக் கவிஞர். சொல்லி மாளவில்லை மாதவனுக்கு. எனக்கு சிரிப்பு வந்தபோதும் அந்த கவிஞருக்காகவும் மாதவனுக்காகவும் மனதுக்குள் அழுதேன். எனக்கும் இதுபோன்ற சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன
அவரது சிறுகதைகளை அப்போதே பழைய புத்தகங்களில் தேடிக் கண்டுபிடித்து தனித்தனி தொகுதிகளில் படித்திருக்கிறேன். பல கதைகள் அற்புதமாக இருந்ததையும் வாசிப்பு அனுபவத்தில் இன்றும் பசுமையாக உள்ளன. கடந்த வாரம் ஒருமுறை வீட்டில் புத்தகங்களை சுத்தம் செய்த போது ஆ.மாதவனின் முழுத் தொகுப்பு சிக்கியது. நண்பர் தமிழினி வசந்தகுமார் இதனை வெளியிட்டுள்ளார். வேதசகாயகுமாரின் விரிவான முன்னுரை ஒவ்வொரு கதையாக அலசுகிறது.ஆனால் வி.எஸ்.கே சாரின் இலக்கியப் பார்வையுடன் பல முறை நான் மிகுந்த மரியாதையுடன் முரண்பட்டிருக்கிறேன். சில நேரங்களில் அவரும் ஜெயமோகனைப் போல் தடாலடியாக மதிப்பீடுகளை வைப்பார்

ஆ.மாதவன் கதைகளை மீண்டும் படிக்கலானேன். சில நல்ல கதைகளை குறித்து விரிவாக எழுதவும் நினைத்தேன். கூடவே ஜெயமோகன் எழுதிய கடைத்தெரு கலைஞன் என்ற விமர்சன நூலையும் எடுத்து வைத்தேன்.

இந்நிலையில்தான் நேற்று( 17.12.21015) ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக குறுஞ்செய்தி கிடைத்தது. மகிழ்ச்சியடைந்தேன்,
ஆனால் அவருக்கு இந்த சாகித்ய அகாடமி விருது சிறுகதைகளுக்காகவோ, கிருஷ்ணப் பருந்து போன்ற நாவலுக்காகவோ கிடைக்கவில்லை. இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக கிடைத்திருக்கிறது. இநத் தொகுப்பை நண்பர் உதயகண்ணன் தமது அன்னை ராஜேஸ்வரி புத்தக நிலையம் மூலம் வெளியிட்டுள்ளார். இதே பதிப்பகம்தான் எனது சிறகுப் பருவம் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டது.



ஆ.மாதவன் சாருக்கு மானசீகமாக வாழ்த்து கூறிக் கொண்டேன்.நுட்பமான படைப்பாளிகளை ஏதோ ஒரு நகரத்தின் மூலையில் ஏதோ ஒரு பிழைப்பு நடத்தி வாழ விதித்துள்ள தமிழ்சாதி அவரை பிரபல எழுத்தாளராக்கி விருது கிடைத்ததை சிலாகிக்கிறது.

இன்னும் எத்தனை மாதவன்களையும் செந்தூரம் ஜெகதீஷ்களையும் நாம் விருதுகள் மூலமாக மீட்டெடுக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. இந்த விருதுகளும் பாராட்டுகளும் அவரது படைப்புகளுக்கு கிடைத்த மரியாதை என்று கொள்ள வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ஆ.மாதவனை தீவிரமாகப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்

விருதுகளால் படைப்பாளிக்கு சில பலன்கள் கிடைக்கும். அவரது புத்தகங்களுக்கு பதிப்பாளர்கள் கிடைப்பார்கள்.பழைய நூல்கள் மறுபிரசுரம் ஆகும். வீட்டில் கொஞ்சம் மரியாதை கிடைக்கும். விலகிப் போன நண்பர்கள் தேடி வருவார்கள். கொஞ்சம் பணம் கிடைக்கும். அப்புறம்.......
மீண்டும் அவர் ஏதோ ஒரு மூலையில் பெட்டிக்கடையோ பாததிரக்கடையோ வைத்து பிழைப்பை பார்க்க போக வேண்டியிருக்கும்.




Tuesday 15 December 2015

அரிதினும் அரிதுகேள் 20 மாயனின் லீலையில் மயங்குது உலகம்




அன்னக்கிளியைத் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த பாலூட்டி வளர்த்த கிளி, கவிக்குயில், சிட்டுக்குருவி போன்ற பறவை பெயரில் படங்கள் வந்தன, அதிலும் இளையராஜா சலிக்காமல் அபாரமான பாடல்களை தந்தார். தாம் இசையமைக்க வந்த போது சுசிலா டிஎம்எஸ் போன்றவர்கள் புதிய தலைமுறை நடிகர்களுக்கு பொருந்தாமல் போனதாக கூறியுள்ளார். அதனால் எஸ்.பி.பி. எஸ்.ஜானகி ஆகியோரையே தாம் அதிகமாக சார்ந்திருக்க நேர்ந்தது என்றும் இசைஞானி குறிப்பிட்டுள்ளார். கவிக்குயில் வந்த போது ஸ்ரீதேவிக்கு இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. அவருக்கு எஸ் ஜானகியின் குரல் அற்புதமாக பொருந்தியது. சின்னக்கண்ணன் அழைக்கிறான், குயிலே கவிக்குயிலே போன்ற எஸ்.ஜானகியின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக இருந்தன. உதயம் வருகின்றதே மலர்கள் மலர்கின்றதே என்று இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஹம்மிங்குடன் ஜானகி பாடிய பாடலும் படத்தில் இடம்பெறாத நிலையிலும் செம்மை ஹிட் பாடலாக மாறியது. பாடகி சுஜாதா ஒருபாட்டு பாடினார், இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் புல்லாங்குழலும் கையுமாக இருப்பார்.அன்னக்கிளியைப் படைத்த இயக்குனர்கள் தேவராஜ் மோகன், இசையமை்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அணி இப்படத்திலும் அன்னக்கிளியைப் போல் அனைத்துப் பாடல்களுக்கும் பெண் குரலைப் பயன்படுத்தி ஒரு பாட்டுக்கு மட்டும் ஆண்குரலை அதாவது டிஎம்எஸ் குரலைப் பயன்படுத்தினர். இதே போல் கவிக்குயில் படத்திலும் பெரும்பாலான பாடல்களையும் பெண் குரலுக்கு - எஸ்.ஜானகிக்கு தந்து ஒரு பாடலை ஆண்குரலில் தந்தனர். அந்தப் பாடல் சின்னக்கண்ணன் அழைக்கிறான். ஆண்குரலுக்கு சொந்தக்காரர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. அவருடைய அடர்த்தியான குரல் இப்பாடலுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனைக் கோடி
எந்தன் காதலைக் கொண்டாடும் காவியமே இளமை அழகின் புதுமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா 
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்

 அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் என்ற மாய வரிகளில் பஞ்சு மயக்க, இசையால் இசைஞானி உருக வைக்க பாலமுரளியின் குரல் தேவமயக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது.
இதே பாடலை கிளைமேக்சில் ஜானகியம்மா பாடினார்.
பாலமுரளி கர்நாடக இசைக் கலைஞர் அவரை முதன்முதலில் இயக்குனர் ஸ்ரீதர் கலைக்கோவில் படத்தில் தங்கரதம் வந்தது வீதியிலே என்ற பாடல் மூலம் பிரபலப்படுத்தினார். தொடர்ந்து பாலசந்தர் படத்தில் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே என்றும் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் படத்தில் குருவிக்கார மச்சானே என்றும் திருவிளையாடலில் கே.வி.மகாதேவன் இசையில் ஒருநாள் போதுமா என்றும் பாடிய பாலமுரளிகிருஷ்ணாவை நம்மால் மறக்க முடியாது.
இப்பாடல் இளையராஜா இசை என்பதால் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் ஸ்ரீதேவி, சிவகுமாரின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. பதினாறு வயது பருவ மயிலாக ஸ்ரீதேவியின்  உருவம் அவரது தாவணியில் படர்ந்த மெல்லிய இடை கணுக்கால் அழகு யாவும் இன்று வரை கண்களில் இருந்து அகலவில்லை. படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது அவர் சிறிய நடிகர்.

--------------------------------





Monday 14 December 2015

அரிதினும் அரிது கேள் 19 -நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.....



வாழ்வே மாயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த சில பாடல்கள் உண்டு. அதில் நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்ற பாடல் அற்புதம்
கங்கை அமரன் இசையில் வாலி எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமையான குரலில் இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நான் ஒருதலையாக காதலித்த ஒரு பெண்ணின் முகம் என் கண் முன்னே நிழலாடிச் செல்கிறது. படத்தில் அது ஒரு கல்யாண காட்சி. அம்பிகா கௌரவ நடிகையாக மணப்பெண்ணாக இருப்பார். ஸ்ரீதேவி பூவும் பட்டுப் புடவையுமாக மகாலட்சுமி போல மங்களகரமாக இருப்பார். கமலும் செம ஸ்மார்ட். இந்தப் பாடலின் ஒரு பகுதியில் கமல் முன்னகர்ந்து பாடியபடியே வர ஸ்ரீதேவி தயங்கி பின்னகர அருகில் மின்விளக்குகள் எரியும். அதில் அவர் மோதுவதைக் கண்டு கமல் பாடலை நிறுத்தாமல் ஜாடையிலேயே சுட்டிக் காட்டி ஸ்ரீதேவி விலகிச் செல்லும் காட்சி ஒரு மௌன கவிதை, இப்பாடலே உள்ளுக்குள் மௌனத்தை சுமந்த ஒரு இசைக்காவியம் என்று கூறலாம், பாடலின் இடையே வரும் பியானோ, வயலின்,கிட்டார், ஷெனாய் இசை ஒரு கல்யாண கச்சேரியின் காட்சிக்கு ஏற்ப இசை தாண்டவமாடுகின்றது.



நீளவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவி தாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
ஸ்ரீதேவியே என் ஆவியே ஊடல் ஏன் கூடும் நேரம்



நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்

விழியில் ஏன் சோகமோ
விரகமோ தாபமோ
நீயில்லையேல் நானில்லையே
தோளில் சாய்ந்து கூடும் நேரம்

இந்தப் படத்தில் வாழ்வே மாயம் என்ற தலைப்பு பாடல் ஜேசுதாஸ் பாடியது,இதுவும் வாலி எழுதிய பாடல்தான். தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரம் அம்மா என்ற வரிகள் கண்ணதாசன் பாடல் என்று எண்ண வைத்தன. பின்னர் இவை வாலி எழுதிய வரிகள் என்று தெரிந்தது.
கருவோடு வந்தது தெருவோடு போவது என்பது கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கூட நேர்ந்து விட்டதே. சாவே உனக்கொரு சாவு வராதா....

Sunday 13 December 2015

சிறகுப் பருவம் பற்றிய ஒரு விமர்சனம்


செந்தூரம் என்னும் சிற்றிதழ் வழி இலக்கிய உலகில், வெகுவாக அறியப்பட்டவர் ஜெகதீஷ். ‘செந்தூரம் ஜெகதீஷ்’ என்று பெயர் பெற்றவர். கிடங்குத் தெரு, செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகள் என்னும் தொகுப்புகளைத் தொடர்ந்து ‘சிறகுப் பருவம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பை அளித்துள்ளார். மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
‘வலியறிதல்’ முதல் கதை. சக எழுத்தாளர், தன்னால் உயர்வு பெற்றவன், தன்னை நினையாமல், மதியாமல் போனதால் ஏற்பட்ட வலியைக் கூறுகிறது. 'ஒரு நண்பனாயிருப்பது எத்தனை பெரிய வலி. ஒரு நல்ல மனிதனாக இருப்பது போன்ற வேதனைiயும் வலியும் வேறு எதிலும் உண்டா? வேலை இழப்பது ஒரு வலியில்லையா?’ என மற்ற வலிகளையும் பேசியுள்ளது. ஆசிரியர் கூற்றாக அமைந்துள்ளது. இரண்டாம் கதையும் ‘வலி’ பற்றியதே. வேலைக்கார பெண்ணின் தாய் இறந்ததற்காக மிகவும் வருந்தி தன் பிரிய மகளின் பிறந்த நாளைக் கவலையுடன் கொண்டாடுகிறான். ஆனால் அந்த வேலைக்காரப் பெண் படு எதார்த்தமாக பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறாள். இதனால் நாயகனுக்கு வலிக்கிறது. இது வேறுவிதமான வலி.
ஆசிரியரின் ‘குரல்’ வடிவத்தில் மாறுபட்டுள்ளது. கடித வடிவில் எழுதப்பட்டுள்ளது. மறுத்த, புறக்கணித்த காதலியின் குரலைக் கேட்க விரும்பும், கேட்டு அனுபவித்த ஒரு காதலனின் உணர்வு. ஆயினும் குரலில் வலிமை இல்லை.
இயல்புக்கு புறம்பாக புனையப்பட்டுள்ளது ‘கொல்லிப் பாவை’. கோவை குண்டு வெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளியைக் காட்டுக்குள் தேடிச் சென்ற ஒரு பத்திரிக்கையாளனை காட்டில் இருக்கும் ‘கொல்லிப் பாவை’ வசீகரித்து தழுவுகிறது. இவர்களைக் காடு விழுங்கி விடுவதாக கதை முடிகிறது. மாயையாக உள்ளது. கதையின் முன் பாதி மறைந்த சந்தன வீரப்பனைத் தேடிக் காட்டுக்குள் சென்ற ஒரு பத்திரிக்கையாளனை நினைவூட்டுகிறது.
'வாழ்க்கையில் துக்கம் வரும் போதெல்லாம் மனிதர்கள் பசுமை நிறைந்த பால்ய காலங்களை எண்ணி மகிழ்வர். அந்த நினைவுகள் நீங்காமல் மனித வாழ்வின் ஆதாரமாகவே இருக்கக்கூடும்' என்னும் தத்துவத்துடன் தொடங்குகிறது ‘சிறகுப்பருவம்’. ஒருவன் தீவிர இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் சேமிக்கிறான். புத்தகங்கள் பழைமையானவை. மற்றவன் காமிக்ஸ், துப்பறியும் நாவல்கள், சாகசக் கதைகள் தொடர்பான நூல்கள் சேமிக்கிறான். இவை புதியவை. பாதுகாக்கவும் ஓர் அறை. முன்னவனை பின்னவன் பரிகாசிக்கிறான். கேலிக்கிறான். வாழக்கையையே தொலைத்ததாக கிண்டலிக்கிறான். ஆனால் தீவிர இலக்கியம் பேசியவன் மேதைமையை இழக்காமல் ‘‘மேதைமை ஏழைகளுக்கு மட்டுமே உரிய செல்வம் ‘‘ என்று பெருமையுடன் கூறிச் செல்கிறான். இலக்கியவாதிகளைப் பெருமைப்படுத்துகிறது. ‘மயிலிறகு’ கதையும் புத்தகச் சிறப்பையே பேசுகிறது. புத்தக அருமைத் தெரியாமல் புத்தகங்களை எடைக்கு வாங்கி விற்கும் ஒரு பழைய புத்தக வியாபாரி. அங்கு வரும் நல்ல நூல்களை விலை கொடுத்து வாங்கி வாசிக்கும் ஓர் இலக்கியவாதி. கம்பராமாயணம் வாசிக்கும் ஓர் ஆட்டோக்காரன். புத்தகங்கள் விலை மதிப்பற்றவை என்று கதை உணர்த்துகிறது. புத்தக பிரியல்களை போற்றுகிறது. இடையே நூலகத்தையும் விமரிசிக்கிறது.
மருமகளை மற்றவன் தவறாக பார்ப்பதை விரும்பாத மாமனார். மாமனாரே தவறாக பார்க்கிறார் என குற்றம் கூறும் மருமகள். துணை போகும் மகன். மூன்று பாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை ‘முறிவு’. மழையை ரசிக்கும் மென்மையான குணம் கொண்டவர் மீதான களங்கம். முதியோர்களின் பிரச்சனைகளைப் பேசியள்ளது.
‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும். அதுதான் வளர்ச்சி’ என ஒரு திரைப்பட பாடல் உண்டு. இந்நூலாசிரியர் எழுத்தை ‘வளர்ச்சி’ என்கிறார். 'எழுத்தும் ஒரு மனிதன். அது ஒரு மன வளர்ச்சி. மன முதிர்ச்சி’ என எழுத்தின் அவசியத்தை ‘வளர்ச்சி’ மூலம் அறிவுரைத்துள்ளார். எழுத்தின் மூலம் வெற்றிக் கிட்டும் என் இக்கதைச் சுட்டுகிறது.
‘தும்சே களூP இக் பாத்’ என்னும் தலைப்பில் ஒரு கதை. இது ஒரு சினினா பாடல் வரி. ‘இந்தி சினிமா பார்ப்பதுண்டா மீனாட்சி?' என்னும் உரையாடலுடன் கதைத் தொடங்குகிறது. கதையே மீனாட்சி யார் என்பது தான். பல வருடங்களுக்கு முன் ஒரு விளம்பரத்தில் கண்ட பெண் முகமே தற்போது மீனாட்சியாக கனவில் வந்துள்ளது என்கிறார். 'தமிழிலேயே படிக்க வேண்டிய புத்தகங்களும் பார்க்க வேண்டிய படங்களும் குவிஞ்சிக் கிடக்கிறன்றன. ஆனால் தமிழையும் சேர்த்துதான் புறக்கணிக்கிறோம். ஆனாலும் வாய்க்கிழிய தமிழ் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஒரு மொழி எப்போதும் இன்னொரு மொழிக்கு விரோதமல்ல. ஒரு மதம் மற்றொரு மதத்துக்கு விரோதமானது அல்ல. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எதிரியல்ல் என உரையாடலின் வழி அரிய கருத்துக்களை அலசியுள்ளார்.
ஒரு குடும்பத்தில் முதல் ஆண் மகனாக பிறப்பது எவ்வளவு சிரமம் என்னும் பொருளில் அமைந்த கதை ‘மிதப்பு’. குடும்பத்துக்காக பல தியாகங்களை செய்தும் இறுதியில் அவன் குடும்பம் ‘அதாவது அவனும் மனைவியும்’ ஆதரவற்ற நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் அவன் தோற்கடிக்கப்பட்டதாக கதைக் கூறுகிறது.
எதார்த்த வாழ்க்கைக்கும் இலக்கிய மனத்துக்கும் எவ்வளவு இடைவெளி என அளந்து காட்டியது ‘கனவு தேசத்து ராஜாக்கள்’. வாழ்க்கை என்னும் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் இலக்கியவாதியின் நிலையைக் காட்டியது. ஓர் இலக்கியவாதியை எந்த பெண்ணும் மணக்க முன்வர மாட்டாள் என்று கூறும் கதை ‘கனவுகள்’. கவிதை மயத்துக்கும் கணித மயத்துக்கும் ஒத்து வராது என்கிறார். எதார்த்த வாழ்வினர் இலக்கிய வாழ்விற்குள் வரமாட்டார் என்றும் விவரிக்கிறது.
ஓரு புதிய தரிசனத்தை ஏற்படுத்தியது ‘தரிசனம்’. கடவுள் பக்தி மிகுந்த அம்மா. நம்பிக்கை இல்லை எனினும் அம்மாவிற்காக கடவுளை வணங்குகிறான். ஒரு கலவரத்தில் வெட்டுப்பட்டும் பிழைத்தவனை அல்லா காப்பாற்றியாக குறிப்பிடும் மருத்துவர். முடிவில் பிரசாதத்தை மகன் தந்தும் நெற்றியில் வைத்துக் கொள்ளவில்லை அம்மா. கடவுள் இல்லை என்னும் கருத்துடன் அம்மாவே தெய்வம் என்னும் உண்மையையும் புலப்படுத்துகிறது. நதியை, குருவியை, தவளையை தெய்வம் என்றும் ‘இயற்கையோடு ஒன்றி வாழ்வதெல்லாமே தெய்வீகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
மனம் ஒரு குரங்கு என்பர். செந்தூரம் ஜெகதீஷ் ‘மனம் ஒரு பறவை’ என்கிறார். ஆனால் அப்பறவை ஒரு குரங்கின் கையில் சிக்கியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை ‘மனப்பறவை’. சந்தேகப் படுபவன் மனைவியையும் படுவான் மற்றவரையும் படுவான் என்று உணர்த்துகிறது. சந்தேகர்களைச் சாடுகிறது. பறவை என பொதுவாகச் சொல்லாமல் அமைதியான வேளையில் புறா என்றும் ஆர்ப்பாட்ட சூழலில் கழுகு என்றும் குறிப்பிடலாம் என்கிறார்.
இரத்தல் இழிவு என்பர். இழிவு மட்டுமல்ல கடிதுமாகும். இரப்பவரின் ‘மனசு’ என்ன பாடுபடும் என காட்டுகிறது மனசு. பசிக்கிறது என்றவரை ஒரு பெண்மணி உழைக்க அறிவுறுத்தி சோறு போட மறுத்து காக்கைக்கு உணவிடுகிறார். மற்றொருவன் உதவாமல் மார்க்சியம் பேசி பிரச்சாரம் செய்கிறான். ஒரு சிறுமி மட்டுமே தன்னிடமிருந்த முறுக்கை உடைத்துத் தருகிறது. அவனுக்கு மனமும் வயிறும் நிறைகிறது. சிறியதாயினும் பல்வேறாய்ச் சிந்தனைகளை விரியச் செய்கிறது..
ஒரு நல்ல கலைஞன் ஒரு நல்ல மனிதனாக இல்லை என எழுதத்தோவியமாய்க் காட்டுகிறது ‘முரண்’. ‘கலைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள முரண்களின் குரூரம் என்னை உலுக்கி விட்டது ் என்கிறார். வாசகரையும் உலுக்கச் செய்கிறது.
மரணம் நெருங்கும் நிலையிருக்கும் ஒரு மனிதன் விற்பனையாளனிடமிருந்து ஒரு ‘கூண்டுப்பறவை’யை வாங்கி பறவையையும் சுதந்திரமாக பறக்கச் செய்து கூண்டையும் தொடர் வண்டி சக்கரத்தில் வீசி நசுக்கச் செய்து விடுகிறான். சிறைச் சாலைகளையும் திறந்து விட வேண்டும் என்கிறார். முடிவில் ‘காயத்ரி’ கூண்டுக் கிளியாக வாழ்வதற்கு வருந்துகிறான். பல ‘காயத்ரி’கள் கூண்டுக்கிளிகளாகத்ததானே வாழ்கிறார்கள். இக் ‘கிளிக்கூண்டு’ அனைத்து உயிர்களுக்குமே சுதந்திரம் வேண்டுகிறது.
‘மின்தடை’யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ‘குழப்பமும் தெளிவும்’. ஒரு குடிமகனின் நியாயமான கோபத்தையும் புலம்பலையும் காட்டி அரசு ஊழியர்களையும் அமைச்சர்களையும் விசாரணைச் செய்துள்ளார்.
இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்கக் கதை ‘மூர் மார்கெட்’. மூர் மார்கெட் எரிந்து சாம்பலான போது பல இலக்கியவாதிகள் பெரிதும் கவலைப்பட்டார்கள். இக்கதையாசிரியரின் கவலையே இச்சிறுகதையாக வெளிப்பட்டுள்ளது. கதை நெடுக இளம் பிராய அனுபவங்களை நினைவுக் கூர்ந்ததுடன் மூர் மார்க்கெட் சிறப்பையும் சொல்லியுள்ளார். ்இன்று நாம் பார்க்கிறது நாளைக்கு இருக்கும்னு நிச்சியமில்ல. உத்தரவாதம் கிடையாது. ஒரு முறை மூர் மார்கெட்டைப் பார்த்துடலாம்’’ என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையற்று வாழ்பவன் ஒருவன். நம்பிக்கையுடன் இயங்குபவன் மறுவன். முன்னவனின் மனம் இருளாகவே இருக்கிறது. ஒர மனநோயாளியாக நடமாடுகிறான். பின்னவன் நேர்மாறாக உள்ளான். ஆனால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டான் இரண்டாமவன் என கதையை முடித்து அதிர்ச்சியேற்படுத்துகிறார். ஒரு கணத்தின் முடிவே தற்கொலைக்கு போதுமானது என்கிறார். மனிதர்களின் மனப்போக்கைக் காட்டுகிறது
‘சிறகுப் பருவம்’ என்னும் இத்தொகுப்பில் இருபது கதைகள் உள்ளன. இருபதிலும் எழுத்தாளாpன் இளகிய மனமும் இலக்கிய மணமும் வெளிப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகளை இலக்கிவாதியை மையப்படுத்தியே எழுதியுள்ளார். எழுத்தையும் எழுத்தாளனையும் உயர்வாகவே காட்டியுள்ளார். எதார்த்தமான வாழ்வுக்குள் சிக்கிச் சுழலும் மனிதர்களின் உணர்வுகளையே பேசியுள்ளார். வாழ்வின் முரண்களையும் மனிதர்களிடையேயுள்ள வேறுபாடுகளையும் கதைகளின் வழி அறியச் செய்துள்ளார். எழுத்தாளரின் சித்தரிப்புகளில் காணப்படும் மனிதர்கள் சராசரியாக சமூகத்தில் இயங்குபவர்களே என்பது கவனிப்பிற்குரியது. ஒன்றிரண்டு கதைகள் புனைவாக ஒரு மாய உலகத்தைக் காட்டுகின்றன. ஆசிரியரின் கூற்றாகவே அனேகக் கதைகள் அமைக்கப்பட்டு ஒரு நல்ல ‘கதை சொல்லி’யாக விளங்குகிறார். கதைகள் எழுதிய காலங்கள் பல ஆகி விட்டதால் வீரியத் தன்மை குறைந்துள்ளதை மறுப்பதிற்கில்லை. ்சில கதைகள் தவிர என்னுடைய முத்திரைக் கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன் என்கிறார் என்னுரையில் செந்தூரம் ஜெகதீஷ். தொடர்ந்து முத்திரைப் பதிக்க வாழ்த்துக்கள்.
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 41 கல்யாண சுந்தரம் தெரு பெரம்பூர் சென்னை 600011
விலை ரூ 70.00

கிடங்குத் தெரு நாவல் அட்டையும் பின் அட்டையும்
















இந்த நாவலுக்காக எனக்கு பாஷா பாரதி விருதை CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES மைசூரில் நடைபெற்ற விழாவில் வழங்கியது. இதே விழாவில் நீல பத்மனாபனும் மலையாள மொழிக்கான விருதைப் பெற்றார். கவிஞர் சச்சிதானந்தன், கரம் ஹவா படத்தை இயக்கிய எம்.எஸ்.சத்யூ உள்ளிட்டோர் விழாவை சிறப்பித்தனர். கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற விழா இது .
----------------------------------------------------------------------------------------------------
கிடங்குத் தெருவுக்கு விருது


Thursday, 23 June , 2005, 10:10

சென்னை

"செந்தூரம்' ஜெகதீஷ் எழுதிய "கிடங்குத் தெரு' நாவலுக்கு "பாஷா பாரதிய சம்மான்' விருது கிடைத்துள்ளது.

மத்திய அரசின் இந்திய மொழிகள் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.
 sify.com வெளியிட்ட செய்தி-


-----------------------------------------------------------------------------------
தமிழ் இந்துவில் அண்மையில் வெளியான எனது பேட்டி

இப்போது படிப்பதும் எழுதுவதும் - செந்தூரம் ஜெகதீஷ், எழுத்தாளர்

Comment   ·   print   ·   T+  


எனது முந்தைய நாவலான ‘கிடங்குத் தெரு’வைக் கூடுதல் பக்கங்களோடு இன்னும் சற்றே விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடவே, திருப்பதி ஏழுமலையானின் சரித்திரப் பின்னணி கொண்ட ஆன்மிக நாவலொன்றையும், நவீன இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் தொடர்புபடுத்தும் நாவலொன்றையும் ஒரே சமயத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஈழத்துப் பெண் கவிஞர் அவ்வை எழுதிய ‘எதை நினைந்து அழுவதும் சாத்தியமில்லை’ கவிதை நூலை சமீபத்தில் வாசித்தேன். இளவயதில் கனவாய்த் தொலைந்துபோன காதல், வயது கடந்த பிறகு உண்டாகும் காதல் என்று சுயமனதோடு வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளே கவிதைகளாக்கியுள்ளன. ‘அன்பைத் தேடு, பூவாய் மலர்வேன்’ என்கிற அவ்வையின் கவித்துவமான வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.
-----------------------------------------------------------------------------------
Saturday March 29, 2003

சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

ஜெயமோகன்



என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள பதிப்பகங்கள் இவையே. நான் படிக்காத நூல்களை சேர்க்கவில்லை. பல நூல்கள் முன்பே படித்தவை. அச்சுக்கோவையிலேயே சென்ற வருடம் படித்த நூல்களும் உள்ளன.பட்டியல் முழுமையல்ல. இது வாசகர் தகவலுக்காக மட்டும்தான் .


கிடங்குத் தெரு - செந்தூரம் ஜெகதீஷ்[தமிழினி பதிப்பகம்]


[ஆசிரியரின் முதல்நாவல். அப்பட்டமான நேர்மையான ஒரு சுய பதிவு சாத்தியமாகியுள்ளமையினால் முக்கியமான படைப்பாகிறது
-------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய இதர பதிவுகள்
என் பயணம் கட்டுரை பெங்களூர் - இதே வலைதளத்தில் பார்க்கலாம். 





Sunday 6 December 2015

Tamasha -பால்ய காலத்தை கொன்று விடாதிருக்க

விளையாட்டுத்தனம், சுடடித்தனம்,நாடகத்தன்மை, கனவுகள், கற்பனைகள், ஆபத்தில்லாத குறும்புகள், வெகுளித்தனம், கலாபூர்வம் நிறைந்தது பால்ய காலம். ஆனால் ஒரு குழந்தை வளரும்போதே நன்றாகப படிக்க வேண்டும் நிறைய மார்க்குகள் வாங்க வேண்டும் படித்து ஆளாகி பெரிய உத்தியோகம் பார்த்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பெற்றோரின் இலக்கு குழந்தைகள் மீது சுமத்தப்படுகிறது. படிப்படியாக அந்தக் குழந்தை வளர வளர தனது பால்ய காலத்தை கழுத்தை நெறித்தும் காலால் நசுக்கியும் கொன்று விடுகிறது. தான் யார் என்பதை மறந்து என்னவோ ஒன்றாக மனிதன் ஆகிப்போகிறான். இந்த சோகத்தை சொல்லும் படம்தான் தமாஷா.
பாடகராக மாறி ஆட்டோக்காரனாக பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை மனிதனின் கனவுகள் கலைந்துபோன துயரத்தை ஒரே காட்சியில் காட்டிவிட்டு பணக்கார இளைஞன் ஒருவனின் டையில் அவனது மூச்சு இறுகுவதை படம் முழுவதுமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ரன்பீர் சிங்கின் தோழியாக வந்து காதலியாக மாறி அவரது தன்னிலையை உணர வைக்கும் அருமையான பாத்திரம் தீபிகா படுகோனேவுக்கு.படத்தின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் கோஸ்டரிகாவில் கண்கவரும் பாறைகளும் கடல்களும் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் கண்களை வி்ட்டு அகலமறுக்கின்றன. குட்டியான ஷார்ட்சும் ஸ்கர்ட்டும் அணிந்து தொடைகளை பளபளப்பாக காட்டும் தீபிகா முத்தக்காட்சிகளிலும் மெய் மறக்க வைக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் ஏ.ஆர்.ரகுமானின் அற்புத இசையும் இஸ்மாயில் தர்பாரின் பாடல்களும். தமிழ்ப்படங்களில் நாம் கேட்ட ரகுமானின் இசையல்ல இது. பஞ்சாபி இசையும் பிரெஞ்ச் இசையும் கலந்து புதிய மாயாஜாலம்  நிகழ்த்துகிறார் இசைப்புயல்

இப்படத்தின் இயக்குனர் இம்தியாஸ் அலி , முன்னர் எடு்த்த படங்களில் சொன்ன சுயத்தை இழக்காதிருத்தல் கதையை இதிலும் சொல்லியிருக்கிறார். ராமாயண காட்சிகளும் ரோமியோ ஜூலியட் காட்சிகளும் கதை சொல்லியாக வரும் தாத்தாவும் அவர் உருவாக்கும் பிரம்மாண்டமான புனைவுலகமும் இய்க்குனரை நம்பிக்கையுடன் வரவேற்க செய்கின்றன.ரன்பீர் கபூர் தமது தந்தையிடம் பால்ய காலத்தை பெற்றோர் நசுக்குவதை விவரிக்கும் காட்சி அற்புதம். நடிப்பில் ரன்பீரும் தீபிகாவும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி கொளுத்தியிருக்கிறது.

இ்ப்படி மிகவும் ரசிக்கத்தக்க படம் பார்த்து எத்தனை நாளாச்சு

Saturday 5 December 2015

உலக சினிமா -THE SEVENTH SIGN-தீமையை அழிக்க வரும் தீர்க்கதரிசி


உலக சினிமா
ஏழாவது சின்னம் - தீமையை அழிக்க வந்த தீர்க்கதரிசி
செந்தூரம் ஜெகதீஷ்

மனிதன் மிருகமாக மாறுகிற காலம் கலியுகம். சக மனிதன் மீது ஈரம் சுரக்காத இதயம் கொண்டு அடுத்தவனை அழித்து சுகம் காண்பான். இறைவன் இருப்பதை மறந்து பாவங்களை செய்வான். அரசியலில் ஏழை மக்களின் எதிர்காலத்தை சுரண்டுவான். சினிமாவில் பெண்களின் ஒழுக்கத்திற்கு புகழ் ஆசை காட்டி விலை பேசுவான். வணிகத்திலும் தொழிலிலும் நேர்மையின்றி பணவேட்டையாடுவான். சகோதரியை புணர்வான். மோசஸ் காட்டிய பத்துக்கட்டளைகளையும் பலமுறை மீறுவான். அது பற்றிய குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருப்பான்.
இத்தகைய யுகத்தில் உலகையே அழிக்க தேவன் கோபம் கொண்டு சீறி எழுகின்றான். உலகை அழித்து விட்டு புதிய உலகம் படைக்க இறைவன் விரும்புகிறான். இயற்கைப் பேரிடர்கள், நிலநடுக்கங்கள், பிரளயங்கள் ஏற்படுகின்றன. அணு ஆயுதப் போர்கள் வெடிக்கின்றன. தீவிரவாதம், மத வன்முறைகள் தூண்டி விடப்படுகின்றன. மனிதனால் மனிதகுலம் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
உலகின் அழிவு இருப்பது குறித்து பகவத் கீதை, பைபிள், குரான், ஜரதூஷ்டிரனிசம்  போன்ற பல்வேறு மதங்களும் கூறுகின்றன. ஒவ்வொரு மதமும் இறைவன்இறுதியில் உலகை அழித்து விடுவான் என்றுநம்புகின்றன. நாம் கோவிலுக்குப் போகிறோம், தேவாலயங்களுக்கு போகிறோம். மசூதிகளில் தொழுகிறோம். குருதுவாராக்களில் வழிபடுகிறோம். ஆனால் யாருமே உலகை அழிக்கும் வேலையை நாம் தீவிரமாக செய்துக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்து கவலைப்படுவதே இல்லை. நமது நம்பிக்கைகளும் நமது வாழ்வியல் தேவைகளை சார்ந்ததாகி விட்டது. இறைவனின் எச்சரிக்கையை நாம் மதிப்பதே இல்லை.
உலகின் அழிவை சித்தரிக்கும் ஏழு அடையாளங்களை இறைவன் மனிதர்களுக்கு எச்சரிக்கையாக காட்டுகிறான் என்கிறது பைபிளின் புதிய ஏற்பாடு.அந்த ஏழு சின்னங்களை அடிப்படையாக கொண்டு ஒரு திரில்லர் படமாக எடுக்கப்பட்டதுதான் THE SEVENTH SIGN
இப்படத்தின் கதாநாயகி ஆபி குவின் (டெமிமூர் ) அவளுக்கு ஒரு முறை கர்ப்பம் கலைந்து மீண்டும் கருத்தறிக்கிறாள். இம்முறை குழந்தையை ஆரோக்கியமாகவும் உயிருடனும் பெற்றெடுக்க பதைக்கும் ஒரு தாயாக அவள் இருக்கிறாள், குழந்தை கர்ப்பத்தில் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 29ம் தேதி ஒரு லீப் ஆண்டில் அரிதினும் அரிதான தேதியில் குழந்தை பிறக்க இருக்கிறது.
அப்போது அந்தக் குழந்தையை அழிக்க நினைக்கிற ஏதோ ஒரு மாய சக்தியை அவள் உணர்கிறாள். அவள் வீட்டின் ஒரு பகுதியில் குடித்தனம் வந்துள்ள டேவிட் மீதுதான் அவளுக்கு சந்தேகம் எழுகிறது. டேவிட் ஒரு சிறிய பெட்டியுடன் குடிபுகுந்து வந்திருக்கிறான். அவனிடம் ஒரு டிவி கூட இல்லை. ஸ்டிரியோ இல்லை ஒரு தொலைபேசி கூட இல்லை. என்று ஆபி தனது கணவரிடம் கூறுகிறாள்.
ஆனால் டேவிட்டின் பேச்சு அவளுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த வீட்டில் ஒரு குருவி பறந்து வ ந்து சிறகடிக்க அதை விரட்ட துடைப்பம் எடுக்கிறாள் ஆபி. அப்போது வேண்டாம் அதை காயப்படுத்தாதே என்று குரலை உயர்த்தி கட்டளையிடுகிறான் டேவிட். இல்லை நான் குருவியை ஒன்றும் செய்ய நினைக்கவில்லை என்று அச்சத்துடன் அவள் கூறுகிறாள். அப்போது அவன் ஒரு புராதன ஹூப்ரூ மொழி குட்டிக்கதையை கூறுகிறான். இறைவனின் கஃப் என்றொரு மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் தூய்மையான ஆன்மாக்களை இறைவன் பாதுகாத்து வைத்திருக்கிறான். உலகிற்கு புதிதாக ஒரு குழந்தை பிறக்க வரும் போது இறைவன் அந்த தூய்மையான ஆன்மா ஒன்றை பிறக்க இருக்கும் குழந்தைக்கு அளிக்கிறான். இந்த தகவல் சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமே தெரியும். அதனால் அவை ஒரு குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியைக் கொண்டாட பாடி மகிழ்கின்றன.
அழகான கதையல்லவா என்கிறாள் கணவரிடம் ஆபி.
கணவன் ஒரு லாயர்
அவனுக்கு ஒரு விசித்திர வழக்கு கிடைக்கிறது. தாய் தந்தையை கொன்று குவித்த ஒரு பதின் பருவத்து சிறுவனுக்கு விஷவாயு அறையில் வைத்து மரண தண்டனை விதிக்க  கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுகிறது. அவனைக் காப்பாற்ற அவன் மன நலம் சரியில்லாதவனாக நிரூபிக்க முயற்சிக்கிறார் ஆபியின் கணவரான வழக்கறிஞர் மைக்கேல்( ரஸ்ஸல் குவின் ) அந்த சிறுவனோ ஒத்துழைக்க மறுக்கிறான்.நான் தெரிந்தேதான் முழு சுயநினனைவுடன்தான் கொலை செய்தேன் என்கிறான். அதற்கு அவன் கூறும் காரணம் தனது தாயும் தந்தையும் சகோதர முறை உறவினர்கள். இருவரும் காதலித்து மணம் முடித்து இறைவனின் கோபத்துக்கு ஆளாகியவர்கள். அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைக் கொல்வதற்காகவே இறைவன் அவர்கள் பாவத்திலிருந்து தன்னை படைத்திருக்கிறான். இதுதான் அந்த சிறுவனின் வியாக்கியானம். கடவுளின் கட்டளையை நான் நிறைவேற்றினேன் என்பதுதான் அவன் வாதம்.
அவனை ஒரு மத அடிப்படைவாதி என நாம் நினைத்து விடலாம். ஆனால் அவனோ உளப்பூர்வமாக கடவுளின் கட்டளையை நிறைவேற்றியதாக நம்புகிறான். அதற்காக மனிதர்களின் நீதிமன்றம் தனக்குமரண தண்டனை விதிப்பதுகூட ஒரு பொருட்டில்லை அவனுக்கு.
குழந்தையை பாதுகாக்க டெமி மூர் படாத பாடு படுகிறாள். டேவிட்தான் தன் குழந்தையை அழிக்க வந்ததாக நினைக்கிறாள். அவன் செயல்பாடுகள் மர்மமாக இருக்கின்றன. அவனைப் பின் தொடர்ந்து போகும் போது வயிற்றில் தீராத வலி வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள், கர்பப்த்தில் இருக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எப்படியோ அவளும் குழந்தையும் உயிர் பிழைக்கின்றனர்.
ஆனால் வாட்டிகளில் இருந்து வந்ததாக கூறும் பாதிரியார் லூசி தான் ( பீட்டர் ப்ரீட்மேன்) வில்லன் என்பது படத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும் போது பார்வையாளர்களுக்குத் தெரிகிறது.
பைபளின் புதிய ஏற்பாடு உலகின்அழிவைக்குறிக்கிறது. நோவா ஒருமுறை உலகில் பிரளயம் ஏற்பட்ட போது இறைவனின் கட்டளைப்படி மனிதர்களையும் உயிரினங்களையும் ஒரு படகில் ஏற்றி காப்பாற்றினாள். அப்போது இறைவன் ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் .இனி ஒரு போதும் உலகை நான் முழுவதுமாக அழித்துவிட மாட்டேன். இந்த வாக்குறுதியை இறைவனுக்கு நினைவூட்டவே மழை வரும் போது வானவில் தோன்றுகிறது. இறைவனி கோபம் தணிகிறது.
ஆனால் உலகம் இறுதியில் அழிந்துவிடும் என்று பைபிள் கூறுகிறது. ஏனெனில் மனிதன் பாவங்களைச் செய்கிறான் இறைவனின் கோபத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கிறான்.
உலகம் எப்போது அழியும்? கஃப் எனப்படும் இறைவனின் சொர்க்க மாளிகையில் தூய்மையான ஆன்மாக்கள் காலியாகி விடும் போது. அப்போது இறைவன் உலகை அழித்து புதிய உலகைப் படைக்கும் ஒரு தீர்க்கதரிசியாக அவதரிப்பான்.
இந்தப் பின்னணியில் ஆபியின் கடந்த காலம் அவளது கனவுகளில் குழப்பமான காட்சிகளாக சித்தரிக்கப்படுகிறது.
ஏசு சிலுவையில் அறையப்படும் நாள். 12 சீடர்களில் யூதாஸ் ஏசுவைக் காட்டிக் கொடுக்க அவருக்கு யூதர் மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுகிறது. ஏசுவை சிலுவையில் அறைகிறார்கள். தேவனின் மைந்தன் ரத்த வெள்ளத்தில் சிலுவையில் உயிர்த்துறக்கிறான். ஏசு சாகும் முன்பு அவரது தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முயல்கிறாள் ஒரு பெண்.அவள் பெயர் செராபியா. அவள் கையிலிருந்த மண் பானையை உடைத்து வீசுகிறான் ஒரு கொடியவன். அவன்தான் ரோமானிய வீரனான கார்ட்டபளிஸ் . ஏசுவின் உயிர் பிரிய அவன் அடிக்கும் கடைசி அடிதான் காரணமாகிறது. தேவமைந்தனை கொன்ற பாவக்கறை அவன் மீது படர்கிறது. தேவனால் அவன் சபிக்கப்படுகிறான். ஏசு கிறித்து ஒரு தீர்க்கதரிசியாக இவ்வுலகை வலம் வரும் வரை அவன் அக்கணத்திலேயே உறைந்துக்கிடப்பான். அவனுக்கு வயதாகாது,மரணம் வராது. வாழ்க்கை நரகமாக இருக்கும். வாழ்க்கையே போதும் போதும் என அவன் மரணத்துக்காக கெஞ்சுவான். இதுதான் இவனுக்கு விதிக்கப்படும் சாபம். சரி. இறைவன் எப்போது தீர்க்கதரிசியாக மீண்டும் அவதிப்பார்.....அவரது சொரக்க மாளிகையான கஃப்பில் எல்லா புனித ஆன்மாக்களும் காலியாகி அவரிடம் உலகிற்கு அனுப்ப ஆன்மா இல்லாமல் போகும் போது கோபத்துடன் உலகை அழித்துவிட இறைவன் தீர்க்கதரிசியாக அவதரிப்பார். உலகை அழித்து அதன் அழிவை பார்த்து அவர் சொர்க்கத்திற்கு திரும்பும் போதுதான் கார்ட்டபளிசுக்கு சாபவிமோசனம் கிடைக்கும்.
உலகின் அழிவை அவன் தூண்டிவிடுகிறான். இறைவனின் கஃப் சொர்கக மாளிகை காலியாக இருக்கக்கூடாது என ஏசுவே ஒரு குழநதை வடிவாக தனக்கு தண்ணீர் கொடுக்க முயன்ற செராபியாவின் வயிற்றில் மகனாக பிறக்கிறார். அந்தக் குழந்தை ஏசு என்பதை அறியாமல் அதை அழித்து விடவே பாதிரியால் லூசியாக வந்திருக்கிறான் கார்ட்டபளிஸ் . ஆனால் தேவனால் அந்த குழந்தையை பாதுகாக்க அனுப்பப்பட்டவர்தான் டேவிட்
இறைவனின் ஏழாவது சின்னம்தான் நீ. என்கிறார் டேவிட் இந்த சின்னத்தை அழிக்கத்தான் லூசி முயற்சிக்கிறார். அதாவது 5 வது சின்னம் தாய் தந்தையை கொன்ற சிறுவன். அவன் அழிந்தால் ஆறாவது சின்னமாக நிலநடுக்கம் போன்றவை ஏற்படும். இதை ஒரு பண்டைய ஹூப்ரூவின் ரகசிய குறிப்பு மூலம் ஆபி அறிகிறாள். அந்த குறிப்பு அவளுக்கு டேவிட்டின் வீட்டில் கிடைக்கிறது. அந்த குறிப்பை படித்து அவளுக்கு விளக்க உதவுகிறான் ஒரு இளைஞன்.
இறைவனின் 5 வது எச்சரிக்கை சின்னம் தனது கணவரின் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சிறுவன் என்பதை அறியும் ஆபி அந்த சின்னத்தை அழிய விடக்கூடாது என்று மரண தண்டனை அளிக்கப்படும் இடத்திற்கு தனக்கு உதவும் இளைஞனுடன் விரைகிறாள். அவனுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையை தடுக்க முயல்கிறாள். ஆனால் அங்கே வந்துவிட்ட பாதிரியார் லூசியோ துப்பாக்கியால் சுட்டு அந்த சிறுவனை கொன்று விடுகிறான். ஆபியின மார்பிலும் குண்டு பாய்கிறது. 5 வது சின்னம் அழிந்ததால் ஆறாவது சின்னம் அழிவை உணர்த்துகிறது. நிலநடுக்கம் ஏற்படுகிறது.நிலச்சரிவுகள், கடல் கொந்தளிப்புகள், பெருமழை ஊழித்தாண்டவமாடுகிறது.
பைபிள் கூறுவது போல் நிலவு செந்நிறமாகிறது .சூரியன் கருப்பாகி விடுகிறது.உலகின் அழிவு நள்ளிரவில் வரும் ஒரு திருடன் போல் நுழைந்து விடும் என்று தேவமைந்தன் ஏசு பைபிளில் கூறுகிறார்.
மார்பில் குண்டடி பட்ட நிலையில் கடும் இயற்கைப் பேரிடர் தாக்கிய சூழலில் ஆபிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
இறைவனின் இறுதி ஏழாவது சின்னத்தையாவது காப்பாற்றி விடத்துடிக்கிறாள் ஆபி. தனது ஆன்மாவை இறைவனுக்கு தனது குழந்தைக்கு அளித்து அவள் உயிர் பிரிகிறது. அவளது இறை நம்பிக்கை அவளது குழந்தையை காப்பாற்றிவிடுகிறது. தீமையை நன்மை அழித்துவிடுகிறது. சாபவிமோசனம் பெற முயற்சித்த பாதிரியார் லூசியும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் மரணமே வராமல் மரணத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கப் போகிறான். ஏசுவின் உயிர்பிரிய தாக்கிய அவன் மீண்டும் தேவனின் குழந்தையை அழிக்க முயன்று பெரும் சாபத்துக்கு ஆளாகிவிடுகிறான்.
டேவிட் கூறுகிறார். உலகில் ஒரே ஒருவரின் நம்பிக்கைக் கூட உண்மையாக இருந்தால் போதும் அது இந்த உலகை அழிந்துவிடாமல் காத்து விடும். ஆபியின் தியாகத்தாலும் உண்மையான இறை நம்பிக்கையாலும் காலியாகி விட்ட இறைவனின் கஃப் மீண்டும் புனித ஆன்மாக்களால் நிரம்பி விட்டது. இனி உலகை தேவன் அழிக்க மாட்டான். உலகை அழிக்க மாட்டேன் என்ற தனது வாக்குறுதியை நினைவுபடுத்த இறைவன் வானவில்லை படைத்து மழை பெய்யும் போது அதை வானத்தில் மிதக்க வைக்கிறான்.
படம் டிசம்பர் 25ம் தேதி ஏசு கிறிஸ்து பிறந்த நாளிலிருந்து தொடங்குகிறது. ஹைதி கடற்கரையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. கடலில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் செத்துக் கிடக்கிறது. கடலே செத்துப் போனது. அந்த கடற்கரையில் டேவிட் என்பவர் வந்து ஒரு சின்னத்தை இரண்டாக உடைத்துப் போட்டுவிட்டு போகிறான். இறைவனின் முதல் எச்சரிக்கை இயற்கை அழிவது. சுற்றுச்சூழல் மாசுபடுவது. உயிரினங்கள் அழிவது. கடலில் மீன்கள், ஆமைகள், நண்டுகள் உட்பட அனைத்தும் மடிகின்றன. அறிவியல் ரீதியாக அது மாசு என நாம் விளக்கம் கொண்டு விடலாம். எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவியல் பூர்வமான விளக்கங்கள்இருக்கின்றன. ஆன்மீகமாக பார்த்தால் அது இறைவனின் எச்சரிக்கை. அறிவியலாக பார்த்தால் அது சூழலியல்.
இயற்கையை அழிக்கும் வேலையை மனிதன் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன. தனக்குத் தானே கல்லறை தோண்டிக்கொண்டிருக்கிறது மனித குலம். கார்பன் ஆக்சைட் அதிக அளவில் உற்பத்தியாக தொழில் கழிவுகளாக பனிப்பாறைகள் உருகுகின்றன. துருவங்களில் பனி உருகி விஞ்ஞானிகளை அலற வைக்கிறது. கடல்,நதிகள், குளங்கள் யாவும் கழிவுகளால் மாசு படுகின்றன. மழை குறைகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. வயல்கள் வறண்டு போகின்றன. விவசாயம் மடிகிறது. விவசாயிகள் கடன்களைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தொலைக்காட்சிகளில் ஆபி செய்திகளைப் பார்க்கும் ஒரு காட்சி படத்தில் இடம் பெறுகிறது. தீவிரவாதம் குண்டு வீசித்தாக்குதல், கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற செய்திகளே இடம் பெறுகின்றன. எந்த சானலை திருப்பினாலும் இவைதான் விவாதிக்கப்படுகின்றன.
இறைவனின் எச்சரிக்கையை நாம் உணர்ந்தோமா......
இத்திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தற்போது 52 வயதாகும் ஹாலிவுட்டின் செக்ல் பாம் டெமி மூர் மிக இளமையான தோற்றத்தில் இப்படத்தில்நடித்திருந்தார் .அவர் கர்ப்பமாக இருக்கும் காட்சிகள் தத்ரூபமாகவே படமாக்கப்பட்டன. நிஜமாகவே அவர் கர்ப்பத்துடன்இருந்த போது இப்படத்தில் நடித்துக் கொடுத்தார். ஆங்கில இதழ்களில் நிறைமாத வயிற்றுடன் முழுநிர்வாணக் கோலத்தில் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் டெமி மூர் .படத்திலும் இதுபோன்ற ஒரு நிர்வாணக் குளியல் காட்சியில் நிறைமாத கர்ப்ப வயிற்றுடன் அவர் தனது அழகை அள்ளித்தருகிறார்.
இப்படம் வெளியான போது பல்வேறு கிறித்துவ அமைப்புகளின் விமர்சனத்துக்கு ஆளானது. சிலர் இதை மகத்தான படம் என பாராட்டினார்கள். பைபிளின் ஒரு நம்பிக்கையை அடிப்படையாகவே கதை நகர்கிறது.
இப்படத்தின் இயக்குனர் காரல் சல்ட்டஜ் ( CARL SHULTZ)
தீமை மேலோங்கி அதை தண்டிக்க முடியாத சமூகம் நன்மையின் பக்கம் நிற்பவர்களையும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவர்களையும் தண்டிக்கும் நிலை வரும் போது உலகை அழிக்க தேவன் ஆன்மா இல்லாத குழந்தையாக அவதரிப்பான். அவன் கஃப் சொர்க்க லோகம் ஆன்மாக்கள் இல்லாமல் காலியாகி கிடக்கும் போது ஆன்மா இல்லாத ஒரு குழந்தை உலகின் அழிவுச்சின்னமாக பிறக்கும்.
ஆனால் இன்னும் தேவனின் கையிருப்பு காலியாகிவிடவில்லை என்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது களங்கமற்ற புன்னகையுடனும் ஆன்மாவின் ஒளியுடனும் உலகிற்கு வானவில்லாக நம்பிக்கையை சுடர்வீச செய்துக் கொண்டிருக்கிறது.
இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி.
ஒளியைக் கூட்டுவோம். இருளை வெல்வோம். பைபிள், குரான், கீதையைப் படிக்கும் நாம் அழிவிலிருந்து உலகைக் காக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

--------------------குமுதம் தீராநதி டிசம்பர் 2015 இதழில் வெளியானது---------

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...