Sunday 15 July 2018

மெரீனா




ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் என்று புகழ் பெற்றது நம்ம சென்னையின் மெரீனா கடற்கரை. 
அண்மையில் புனேயில் இருந்து வந்த சில உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் மெரீனாவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள போன போது ஏற்பட்ட அனுபவம் உகந்ததாக இல்லை.
எங்கு நோக்கினும் மணல் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், எஞ்சிய உணவுகள், பாட்டில்கள், மலம் 
சிறுவயதில் மண்ணில் தேடித் தேடி கிளிஞ்சல்களைப் பொறுக்கிய நினைவு வந்தது. இனி கிளிஞ்சல்கள் கூட இருக்காது.

மும்பையின் ஜூஹூ கடற்கரையும் இதுபோலத்தான் இருந்து, ஆனால் தொடர் முயற்சியின் காரணமாக இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது என்றார் உறவினர்.
உணவகங்கள், கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு கடற்கரையின் சுத்தம் பேணப்படுகிறது. அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை அழைத்து கடற்கரையை சுத்தம் செய்ய மும்பை மாநகராட்சி நிர்வாகம் பிரச்சாரம் செய்கிறது. மாணவர்களையும் சமூக நல ஆர்வலர்களையும் இயற்கை காவலர்களையும் அழைத்து குப்பைகளை அள்ளுகிறது.
இந்த முறையை ஏன் சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை என்று தெரியவில்லை. மிகப்பெரிய திறந்தவெளி குப்பைத்தொட்டியாக காட்சியளித்த மெரீனாவை ஏக்கத்துடன் பார்த்தபடி திரும்பினேன்.
அண்மையில் ஜல்லிக்கட்டு  போன்ற இத்துப்போன பழைமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களால் போலீ்ஸ் கெடுபிடியும் அதிகமாக உள்ளது. வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிரமப்பட்டு காரை நிறுத்த இடம் பிடித்தோம்.

அங்கு வி்ற்பனை செய்யப்பட்டவற்றில் விவேகானந்தா காபி அற்புதம். ஆனால் வடமாநிலத்தவரிடம் எங்கள் கிராமத்து உணவு என பீற்றிக் கொண்டு வாங்கிக் கொடுத்த வரகு புட்டு யாரையும் கவரவில்லை. ருசியும் இல்லை விலையும் அதிகம். அரிசி புட்டு இல்லையாம். வடகு, கம்பம் போன்ற புட்டு விற்ற நபரைச் சுற்றி நூறு பேர் காத்திருந்தனர். அரை மணி நேரம் காத்திருந்து வாங்கிய கேழ்வரகு புட்டு 40 ரூபாயை தண்டமாக்கி விட்டது.

எப்படியெல்லாம் அழிக்கிறார்கள் எங்கள் மெரீனாவை.....

Saturday 14 July 2018

சந்திப்பு -கி.அ.சச்சிதானந்தம்

அஞ்சலி / சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம பார்ப்பதற்கு எளிமையாக காட்சியளிக்கும் இலக்கியவாதி அவர். மௌனியின் கதைகளை முதன் முதலாக அவர் தான் பதிப்பித்தவர். மௌனி, கநாசு போன்ற ஜாம்பவான்களுடன் நேராக பழகும் வாய்ப்பை பெற்றவர். எந்த ஒரு பெரிய மேதையும் இப்படித்தான் எளிமையாகக் காட்சியளிக்கிறார்கள். இவர்களின் எளிமையைக் கண்டு நாம் இவர்களை சாதாரண மனிதர்களாக எண்ணி ஏமாந்துவிடுகிறோம். ஆனால் இவர்கள் அசாதாரணமானவர்கள், அவர்கள் தாம் தமிழையும் இலக்கியத்தையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். சச்சிதானந்தம் அத்தகைய ஒரு எளிய மனிதர். எனக்கு எம்.வி.வெங்கட்ராமை பார்க்கும் போதும் சிசுசெல்லப்பாவை பார்க்கும் போதும் , வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோரை பார்க்கும் போதும் தோன்றியதுதான்.....சச்சிதானந்தம் போன்றோரை பார்க்கும் போதும் ஒரே அலைவரிசையில் எண்ணுவது இதுதான். அவர்களைை தொட்டு வணக்கம் சொல்ல வேண்டும்.ஏற்கனவே சச்சிதானந்தத்தை திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் பலமுறை பார்த்திருக்கிறேன். கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சிக்காக மௌனியைப் பற்றி அவரிடம் ஒரு நீண்ட பேட்டியும் எடுத்திருக்கிறேன். இம்முறை சந்தித்த போது வயதால் தளர்ந்திருந்தார். வண்டியில் உட்கார சிரமப்பட்டார். அருகில் உள்ள அச்சகத்தில் கொண்டு போய் விடச் சொன்னார். அச்சகத்தில் வங்க எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கை சுயசரிதத்தை அச்சிடக் கொடுத்தாராம். அவரே பதிப்பிக்கிறாரா என அறிய முற்பட்ட போது புத்தகம் பதிப்பித்து பட்ட கடன்களையும் , பரண்களில் அடுக்கி வைத்த புத்தகக் கட்டுகளையும் ,குடும்பத்தில் பட்ட வேதனைகளையும் சுருக்கமாக சொன்னார். வயதாயிருச்சு இனி அந்த மாதிரி தவறெல்லாம் செய்ய முடியாது என்று சிரித்தார். இப்போதுதான் பிரிண்டிங் ஆன் டிமாண்ட் சிஸ்டம் வந்துருக்கே என்றேன். ஒரு பிரதி கூட அச்சிடலாம் என்று அவருக்கு புரிய வைத்தேன். என்ன செலவாகும் என விசாரித்தார்.கிடங்குத் தெரு மறுபதிப்புக்காக நான் விசாரித்த தகவலை கூறினேன். 160 பக்கங்கள் புத்தகம் 100 பிரதிகள் எனில் 4 ஆயிரம் ரூபாய் ஆகலாம் என கூறினேன். அப்படியா ....விசாரிக்கணும் என்றார். எழுத்தாளனே பதிப்பாளனாகவும் அவனே தனது நூல்களின் சேல்ஸ்மேன் ஆகவும் வாழும் பரிதாபம் குபரா காலம் முதல் சச்சிதானந்தம் காலம் வரை மாறவே இல்லை. கொரோனாவால் 3.10.2020 காலையில் மறைந்துவிட்ட சச்சிதானந்தத்திற்கு என் மனப்பூர்வமான அஞ்சலி

Friday 6 July 2018

நடனம் ஆடினேன்

நடனம் ஆடினேன்
ஒரு பழைய பதிவு...கொரோனா காலத்தில் பலரும் நடனம் ஆடி வீடியோக்களைப் பதிவேற்றி வருவதைப் பார்க்கும் போது இது பொருந்துவதாக இருக்கிறது...
முன்பு ஒரு முறை உறவினர் திருண நிகழ்ச்சியில் பலரும் கட்டாயப்படுத்தியதன் பேரில் நடனம் ஆடினேன். வாழ்க்கையில் நான் இரண்டு முறை மட்டும் பொது இடத்தில் நடனம் ஆடியிருக்கிறேன்.வீட்டில் பலமுறை தனியாக இருக்கும் போது ஆடுவது தனி டிராக்.
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இது பொது இடத்தில் நான் ஆடிய நடனம். சில ஸ்டெப்ஸ்தான். ஆனால் நன்றாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். ஒரு அழகான பெண்ணிடம் போய் எத்தனை மதிப்பெண்கள் என கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நூற்றுக்கு நூறு என்றாள். ரொம்பவும் அதிகம்தான்.
பல்வேறு நடனங்களை நான் திரையிலும் மேடைகளிலும் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீநிதியின் கதக் நடனம், மீனாட்சி சேஷாத்திரியின் பாம்பு நடனம் , சுதா சந்திரனின் ஒற்றைக்கால்நடனம், கமல்ஹாசனின் குரூப் நடனம், மிதுன் சக்ரவர்த்தியின் டிஸ்கோ டான்ஸ், அமிதாப் பச்சனின் பங்கரா நடனம் விஜய் ஆடும் நடனம், அஜித்தின் டோலுமா டாலுமா, சிலுக்கு ஸ்மிதாவின் கிக்கேற்றும் நடனம்,ஜிமிக்கி கம்மல் நடனம் ,சின்னக் குழந்தைகளின் நடனம், குத்துப்பாட்டு நடனம், சாவு நடனம் என பார்த்தவை பல.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத் தெரியுமா
என்று சூர்யா ஆடிப்பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே என்ற சூப்பர் ஸ்டாரின் நடனமும் மிகவும் பிடிக்கும்.
பல நிஜவாழ்வில் போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரின் அதிகார நடனங்களையும் பார்த்திருக்கிறேன்.
வீட்டில் தனியாக இருக்கும் போது எனக்குப் பிடித்த ஒரு பாட்டைப் போட்டு நடனமாடுவது என் வழக்கம்.
நடனம் உற்சாகம்,மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் கே.பாலசந்தர் இயக்கிய ஏக் தூஜே கேலியே படத்தில் கமல்ஹாசனுக்கு அது துயரத்தைக் கொட்டுவதற்காக ஆடும் தெரபி.
தகிட தகிட தில்லானா என்று சலங்கை ஒலியிலும் இளையராஜா இசையில் கமல் கிணற்றின்மேல் ஏறி ஆடுவார் அல்லவா
நடனத்தைப் பற்றி ஓஷோநிறைய பேசியிருக்கிறார். அவர் கூறுவது ஆன்மாவின் நடனங்கள் பற்றி.நிஜிலன்ஸ்கி என்ற நடனக்கலைஞன் நடனமாடி ஆடி ஆடி தானே நடனமாக, நடனமும் கலைஞனும் பிரிக்க முடியாத ஒரு கட்டத்திற்குப் போய்விடுவதை விவரிப்பார்.
நண்பர் அண்ணாச்சி கவிஞர் விக்ரமாதித்தியன் தில்லாலங்கடி தில்லாலங்கடி டோய் தெம்மாங்கு பாடும் மனசைத் தொலைச்சிடாதே டோய் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.
எழுத்தாளர் சுஜாதாவிடம் அந்தக் கவிதையை காட்டிய போது வாங்கி குமுதத்தில் பிரசுரம் செய்தார்.
தெம்மாங்கு பாடும் மனசுடன் வீட்டில் தனியாக ஆடிய நடனம் தான் ஒரு மேடையில் அரங்கேறியது.
மனதில் இருந்த துன்பங்கள் ரத்தமாகவும் சீழாகவும் கண்ணீராகவும் வழிந்ததை யாரும் பார்க்கவில்லை.

Thursday 5 July 2018

படித்தது -குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

படித்தது -

குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

புலவர் தில்லை எழிலனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் புலவர் சங்கரலிங்கம். புலவர் சங்கரலிங்கம் புலமைப்பித்தனிடம் உதவியாளராக இருந்து பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நீண்ட காலம் உதவியாளராகப் பணிபுரிந்தார். சங்கரலிங்கம் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் பூங்குன்றனும் ஜெயலலிதாவிடம் பணிபுரிந்து இப்போது விசாரணை, வருமான வரி சோதனை என சோதனையான காலங்களில் இருக்கிறார்.
நிற்க.
புலவர் தில்லை எழிலன் பெரம்பூர் பிருந்தா திரையரங்கு அருகே உள்ள டான் பாஸ்கோவில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். நாங்கள் அழைத்ததன் பேரில் சில கவியரங்களில் கலந்துக் கொண்டார். மரபுக்கவிதை எழுதக்கூடியவர். இப்போது அவர் எங்கே என எனக்குத் தெரியாது.30 ஆண்டுகளாக அவர் பெயரை எங்குமே நான் கேள்விப்பட்டதில்லை.
அவர் எழுதிய குன்று நில மக்கள் எனும் புத்தகம் பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. தில்லை எழிலன் என்ற பெயரைப் பார்த்து ஆர்வமாக எடுத்தேன். 
குன்று நில மக்கள் என்பது குறிஞ்சி நில மலைப்பகுதியைச் சார்ந்து வாழ்ந்துவரும் குறவன் என்றழைக்கப்படும் ஒரு இனத்தைப்பற்றியது. மனித இனத்தின் முதல்குடியாகவும் ஆதிகுடியாகவும் தோன்றியவர்கள் இவர்களே என்கிறார் நூலாசிரியர்.
முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்ப்பெண் குறத்திதான் என்று கூறுகிறார்.மறத்தி என்பது குறப்பெண்ணே என்பது அவர் கூற்று.

நரிக்குறவர்கள் குறவர்களா என்றொரு அத்தியாயம். ஏறத்தாழ 30 ஆயிரம் நரிக்குறவர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதாக 1995 ல் வெளியான நூலில் அவர் பதிவு செய்கிறார். 

ஒளிவிளக்கு படத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏ சிங்கா ஏசிங்கி எனப்பாடி ஆடும் பாடலினால் அவர்கள் அனைவரின் வாக்குகளும்இரட்டை இலைக்கே போய்விடுகின்றன.

குறவர்கள் வேறு நரிக்குறவர்கள் வேறு என்று கூறுகிறார் ஆசிரியர்.தமிழ்க்கடவுளான முருகன் குறவரே என்றும் அகத்தியர் குறவரே என்றும் விளக்குகிறார்.ராமாயணத்தில் குகன், மகாபாரதத்தில் ஏகலைவன் உள்ளிட்டோரும் குறவர் இனத்தவரே என்பதும் ஆசிரியரின் முடிவு
குறி சொல்லும் குறவர்களின் சோதிட அறிவு போன்றவற்றையும் வேட்டைத் தொழிலையும் ஆசிரியர்விளக்குகிறார்.
நாட்டு வைத்தியத்தின் முன்னோடிகளாகவும் குறவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.அவர்களின் பச்சைக் குத்துதல். பூப்படைதல், பஞ்சாயத்து, திருமணம், மரணச்சடங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ள தில்லை எழிலன் கூடைபின்னுதல், வேட்டையாடுதல் போன்ற அவர்களின் தொழில்களையும் பட்டியலிடுகிறார். தொல்காப்பியம், திருக்குறள் ,சங்கநூல்கள் தொட்டு பாரதி வரை இலக்கியத்தில்குறவர்கள் பற்றிய பதிவுகளையும் நினைவுகூர்கிறார்.இறுதியாக குறவர்கள் பற்றிய ஆங்கிலநூல்களின் பட்டியலையும் தந்துள்ளார்.
நமது முன்னோடிகளை அறியாமல் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்று இந்நூல் உணர்த்துகிறது.


Tuesday 3 July 2018

தனியே செல்லும் பயணி

தனியே செல்லும் பயணி 

இந்த வரியை எங்கே படித்தேன் என்று தோன்றவில்லை. ஏனோ இது என் ஆழ்மனத்தில் இருந்து அடிக்கடி மேல் விளிம்புக்கு வந்து திரும்பிச் செல்கிறது. வாழ்க்கையில் நான் தனிமையில் தான் அதிககாலம் வாழ்ந்திருக்கிறேன். உறவுகள் நட்புகள்  இருந்தாலும் கூட கூட்டத்திலும் தனிமையே உணர்ந்திருக்கிறேன். அரங்குகளில் தனியாக அமர்ந்திருக்கிறேன். கிடங்குத் தெரு நாவலில் சல் அகேலா என்ற முகேஷின் பாடல் ஒன்றை நாவலின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டேன். சல் அகேலா என்றால் தனியாக செல் 

தனியாக செல் தனியாக செல் 
உன் திருவிழாக் கூட்டம் பின்னால் நின்று விட்டது
நீ தனியாக செல்

இதே போல் ஆலங்குடி சோமுவும் இரவும் வரும் பகலும் வரும் பாடலில் 
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் என எழுதியுள்ளார்.
இந்த தனிமையைப் பற்றி ஒருநெடுங்கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. இதே தலைப்பில் இக்கதையை நீங்கள் ஏதேனும் ஒரு பத்திரிகையில் படிக்க நேரிடும் போது எனக்கு நாலு வரி எழுதிப் போட மறக்காதீர்கள்.

Monday 2 July 2018

தமிழ்மணவாளனின் மகன் திருமண இலக்கிய விழா

கடந்த ஜூன் 30ம் தேதி பெரியார் திடலில் முனைவர் ம. எத்திராசு என்ற கவிஞர் தமிழ்மணவாளன் தமது மகன் விமலாதித்தன்- மணமகள் கா.நித்யகுமாரி திருமண விழாவை இலக்கிய விழாவாகவே நடத்தி விட்டார்.
வாசலில் வரவேற்கும் பேனர்களில் பெண் படைப்பாளர்களின் முகங்கள், இலக்கிய அமைப்புகளின் பட்டியல் என்றும் உள்ளே அரங்கில் ஒளித்திரையிலும் இலக்கிய எழுத்தாள திரைப்பட நண்பர்களுக்கு வரவேற்பு

வாசலிலேயே நண்பர்- கவிஞரும் கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியருமான சொர்ணபாரதி தமது வாழ்த்து மடலுடன் வரவேற்றார். உள்ளே நுழைந்தால் திருமணவிழாவா இலக்கிய விழாவா என வியப்பூட்டும் இலக்கியமுகங்கள்
சூர்யராஜன், நிமோஷிணி, இளம்பிறை, பழனிபாரதி, வே.எழிரசு, பா. உதயகண்ணன். மணிஜி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், அழகிய சிங்கர், ரவிசுப்பிரமணியம், க்ருஷாங்கினி, பாரவி, என திரும்பிய இடமெல்லாம் இலக்கிய நண்பர்கள்.
இசை கச்சேரி அருமை .பழைய விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களை சன் ஸ்ருதி இசைக்குழுவினர் வாத்தியங்களில் இசைத்து மயங்க வைத்தனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்தும் பரிசும் வழங்க நின்றிருந்த கூட்டம் தமிழ்மணவாளன் அன்புக்கு சாட்சியமாக இருந்தது. மாப்பிள்ளையுடன் கைகுலுக்கி வாழ்த்தும் போது சொன்னேன் உன் தந்தையைப் போல் நீயும் அன்பை சம்பாதித்து வை என்று.
பெரியார் திடல் திருமணம் என்பதால் அதுவும் சனிக்கிழமை மாலை என்பதால் பிரியாணி இருக்கும் எனநினைத்துவிட்டேன். மனைவியையும் விக்கியையும் அழைத்துச் செல்லவில்லை.விக்கி பிரியாணி இருந்தால் போன் பண்ணு வந்துவிடுவேன் என்றான். நான் அசைவத்தை அதிகமாக விரும்பி உண்ண மாட்டேன்.
ஆனால் திருமணத்தில் வழக்கமான சைவ உணவுதான். ருசி ஓகேதான் என்ற போதும் எனக்கு உள்ள சர்க்கரை , பல்வலி போன்ற பிரச்சினைகளால் குறைவாகத்தான் சாப்பிட்டேன்.
சூர்யராஜன் சாப்பிடாமலேயே சென்றுவிட்டார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
கடைசியில் உணவை முடித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமையும் வெத்தலையையும் ஏக்கத்துடன் பார்த்தபடி வீட்டுக்குத்திரும்பினேன்.





Sunday 1 July 2018

படித்தது -மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், சிற்பியின் ஒளிச்சிற்பம், வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்குலாப் கவிதைகள் போன்ற புத்தகங்களுக்கு முக்கிய இடம் உண்டு. எழுத்தின் பக்கமும் இலக்கியத்தின் பக்கமும் என்னை இழுத்ததில் இந்தப் புதுக்கவிதை புத்தகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. அன்றைய இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் இது போன்ற கவிதை நூல்களை கையில் வைத்திருப்பார்கள். அன்னம், அகரம், விஜயா பதிப்பகம், போன்ற பதிப்பகங்கள் இத்தகைய நூல்களைப் பதிப்பித்தன. 
மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் வந்த புதிதிலேயே வாசித்தவர்களில் நானும் ஒருவன். 
கவிஞர் எஸ். அறிவுமணி புரசைவாக்கத்துப் பேனாக்காரன் என்றொரு கவிதைத் தொகுப்பை போட்டிருந்தார். அவர் வீட்டுக்குப் போய் பார்த்த போது அன்புடன் பழகி நட்புடன் ஒட்டிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் கவிதைப் புத்தகம் போட்டாலேயே பெரிய கவிஞர் என்ற பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. அப்படி நினைத்திருந்த அறிவுமணி இப்படி ஒரு பிள்ளை மனத்துடன் இருப்பார் எனநினைக்கவில்லை.
அறிவுமணியின் உதவியால் பலரதுநட்பு  கிடைத்தது. பேராசிரியர் பெரியார்தாசன், சூர்யராஜன்,மு.நந்தா போன்றவர்களுடன் நல்லநட்புநிலை உருவானது. ஒருமுறை பிரசிடன்சி காலேஜ் அழைத்துப் போய் கவிஞர் மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினார். 
மேத்தாவை அப்போது புதுக்கவிதையின் தாத்தா என எதுகைக்காக பாராட்டுவார்கள். அந்தக் கால கவிஞர்கள் போல் அவர் பேனாவுடன் போஸ் கொடுக்கும் படங்கள் அவரை பெரிய கவிஞராக சித்தரித்தன.






மேத்தா தமது கண்ணீர் பூக்களுக்கான ஒரு விமர்சன வாசக கூட்டத்தை நடத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நானும் பங்கேற்று கண்ணீர்ப் பூக்களில் எனக்குப் பிடித்த கவிதைகளை வாசித்து கருத்துகளை முன்வைத்தேன். 
இதைத் தொடர்ந்து மாதவரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கவியரங்கில் மு.மேத்தா என்னை கவிதை பாட அழைத்தார். அதுவரை முழுதாகஒரு கவிதையைக் கூட கவிதை எனக் கூறும்படி எழுதவில்லை. மேத்தா தலைமையில் பாடப்போகிறோம் என்று ஒரு கவிதையை எழுதினேன். உருவகம் மேத்தா பாணிதான்.
எனக்கொரு அம்மா வேண்டும் என்ற அக்கவிதை தாய்க்காக ஏங்கும் ஒரு தாயில்லா பிள்ளையின் உருக்கமான குரலாக வெளிப்பட்டது.அது மேத்தாவின் உள்ளத்தைத் தொட்டது. தொடர்ந்து அறிவுமணி நடத்திய குறிஞ்சி இலக்கிய வட்டக் கூட்டத்தில் மு.மேத்தா, நா.காமராசன் , முத்துலிங்கம் போன்ற கவிஞர்கள் முன்னிலையில் கவிபாடினேன். 

இன்குலாப்புடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த போது மேத்தாவிடமிருந்தும் அவர் போன்ற கவிஞர்களிடமிருந்தும் விலக ஆரம்பித்தேன்.நாளையே தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கப் போகிறது என்று மூளைச்சலவைக்கு ஆளானேன். கம்யூனிசப் புத்தகங்கள், தீவிரமான எழுத்துகள், ரஷ்யமொழிபெயர்ப்புகள் தவிர வேறு எதையுமே படிக்கத் தோன்றவில்லை. 

என் மனைவி கைவளையல்களை கழற்றினாள் .நீங்கள் கண்ணீர்ப்பூக்களைப் படிக்கிறீர்கள் என்று மேத்தா எழுதியிருந்தார். இன்குலாப் ஒரு கூட்டத்தில் கேட்டார் உங்கள் மனைவி அடகுவைத்த வளையல்களைத் திருப்பிக் கேட்டதால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா மேத்தா ....

ஒரு கவியரங்கில் மேத்தா முன்னிலையில் சிவப்புக் கவிதை படித்த போது பழனி பாரதி என்னை ஏமாற்றி விட்டார் .ஆனால் ஜெகதீஷ் சின்னத் தீக்குச்சியாக சுட்டார் என்று பாராட்டினார்,.இன்னொரு கூட்டத்தில் எங்களுக்கு மேத்தாக்களும் வைரமுத்துகளும் தேவையில்லை மார்க்சுகளும் லெனின்களும் தான் தேவை என்று அவர் முகத்துக்கு எதிரேயே படித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு மேத்தா ஒதுங்கினார். கவிஞர் நந்தாவின் நாளை வேறு சூரியன் நூல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு அழைக்க நான், சூர்யராஜன், நந்தா மூவரும் பிரசிடன்சி கல்லூரி போய் மு.மேத்தாவை சந்தித்த போது, அதுதான் ஜெகதீஷ் இருக்காரே நான் எதற்கு என நழுவினார்.

பலபலப் பல ஆண்டுகள் கழித்து மு.மேத்தாவை தஞ்சையில் சந்தித்தேன். சுந்தர சுகன் உயிருடன் இருந்தபோது தமது தாயாரின் நினைவாக நடத்திய கூட்டத்தில் நான் கலந்துக் கொண்ட போது மு.மேத்தாவும் வந்திருந்தார். அடையாளம் கண்டு பேசினார். வயதான தோற்றத்துடன் இருந்த மேத்தா என்னைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போது நான் கம்யூனிசத்தை விட்டும் வெகு தூரம் விலகி ஓஷோவுக்கு வந்து ஓஷோவை விட்டும் வெகு தூரம் வந்துவிட்டேன். அதன் சாயையை அவர் என்முகத்திலும் பேச்சிலும் கண்டுபிடித்திருக்கக் கூடும்.

கண்ணீர்ப்  பூக்களை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன் சொல் அலங்காரங்கள் ,சின்ன சின்ன நுட்பங்கள் அப்படியே இருக்கின்றன .சின்ன வயசில் ருசித்து சாப்பிட்ட ஒரு பலகாரம் போல இன்றும் கண்ணீர்ப் பூக்கள் இனிக்கின்றன. ஆனால் அத்தகைய கவிதைகளில் இருந்தும் நான் வெகுதூரம் விலகி வந்துவிட்டேனே.தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி கவிதையை இப்போதும் ஒதுக்காமல் படிக்க முடியும்.அதே போல் செருப்புடன் ஒரு பேட்டியும் நல்ல வார்ப்புதான்.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த ஒரு நல்ல கவிதை

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்.

அக்காலத்தில் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. இக்கால கவிஞர்கள் பெண் வீட்டார் சப்பையான ஒரு பெண்ணுக்குக் கூட மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா , அரசு உத்தியோகம் இருக்கா, பேங்க் பேலன்ஸ் இருக்கா என கேட்டு செய்யும் அளப்பறைகளை எழுதினால் என்ன...

மு.மேத்தா இப்போதும் காலாவதியாகி விடவில்லை. ஆனால் அவருடைய காலத்தில் அவர் முடிசூடா மனனன்தான்.

ஆனாலும் வண்ண நிலவன் போல் மேத்தாவை நோக்கி வீசப்படும் ரோஜாக்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கட்டும்  என்று கூற ஆசைப்படுகிறேன். 

Thursday 28 June 2018

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கிறது என்று டி.எம்.எஸ் பாடிய 5 லட்சம் படப்பாடல் கேட்டிருப்பீர்கள். இப்போது வளையல்களைக் குலுங்க குலுங்க யாரும் போடுகிறார்களா தெரியவில்லை. ஆனால் பெண் வாசனை எங்கும் உண்டு.
இருசக்கர வாகனங்களில் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து பருத்த தொடைகளை காலின் வளைவுகளை சதைக் கோளங்களை அல்குல் இணையும் இடத்தை புட்டத்தை காட்டி விட்டு விர்ரென பறக்கும் மங்கையரை துரத்துவது வேடிக்கையான விளையாட்டாகப் போய் அது மோகத்தீயாகி விடுகிறது.
பெண் ஒரு போகப்பொருளாக ஏன் தன்னை ஆக்கிக் கொள்கிறாள் என்று புரியவில்லை. பார் பார் என் உடலை என்று அத்தனை விதமாக அதை ஆண் பார்வைக்கு படையல் வைக்கிறாள். ஜீன்ஸ், டைட் லெகிங்ஸ்,மினி ஸ்கர்ட் இப்போது ஷார்ட்ஸ் கூட போடுகிறார்கள். சேலை கட்டினாலும் இடுப்பை தாராளமாக காட்டுவதும் முதுகு தெரிய ரவிக்கை அணிவதும் இயல்பானதாகி விட்டது.
அண்மையில் மலையாள பத்திரிகையின் அட்டைப்படத்தில் திறந்த மார்புடன் பாலூட்டும் ஜில்லு ஜோசப் என்ற மாடல் பெண்ணின் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஆபாசம் பார்ப்பவரின் பார்வையில் இருக்கிறது என்று தீர்ப்பளித்தார். தமிழக அரசோ பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறையைக் கட்டிக் கொடுத்துள்ளது.
பத்திரிகைகள், இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் என பல இடங்களில் பிகினி அணிந்த பெண்கள், டாப்லெஸ் நடிகைகள் என நாளொரு மேனி பொழுதொரு வண்ணம். அதிலும் இலியானாவின் டூ பீஸ் நீச்சலை பார்க்காதவர்கள் துரதிர்ஷ்ட்டசாலிகள்.
மோகத்தை எப்படிஅடக்குவது....பெண்ணுடன் உடல் உறவு அத்தனை சுலபமல்ல.பலவித மன உளைச்சல்களைத் தரக்கூடும். 
காமுகன் பட்டம் தரும் .பணத்தை செலவழிக்க வைக்கும். பொய்யான காதல் நாடகமாட வைக்கும். பாலியல் வழக்குகளில் அலைய வைக்கும். 
எனில் எதற்காக என்னைத் தூண்டுகிறாய் பெண்ணே.....
ஜஸ்ட் லைக் தட் செக்ஸ் ஓகே எனக் கூறும் பெண்ணிடம் பயம் வருகிறது. அப்படியொரு பெண்ணை பார்க்கவில்லை என்றாலும். 

முகநூலில் நட்புடன் ஒரு பெண் பழகினால் அடுத்து அவள் தொலைபேசி எண், நேரில் சந்திப்பதற்கான ஒரு தேதி, என அடுத்த கட்டத்திற்கு வேகமாக போய் விடுகிறோம். 
13 வயதுப் பெண் ஒருத்தி என்னை சந்திக்க வருவதாக தேதி .இடம் குறித்துவிட்டாள். நான் போகாமல் தவிர்த்து விட்டேன். அவளை என் முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து நீ்க்கினேன். 
இதுவே 30 வயதுப் பெண்ணாக இருந்தால் போயிருக்கக் கூடும்.

எப்போதும் மனசாட்சி சுத்தமாக இருக்குமா எனத் தெரியவில்லை. 
மோகத்தீ என்னை எரித்துக் கொன்று விடும் போலிருக்கிறது.

பெண் என்பவள் ஸ்பரிசம், சுகம் எனக்கு பழகியதுதான் என்றபோதும் கடந்த பல ஆண்டுகளாக அதற்கு ஏங்கியபடிதான் வாழ்க்கை கழிகிறது.
அதற்குக் காரணம் உடலைத் தாண்டி மனதுக்குள் ஒரு பசி இருக்கிறது என்று கூறினால் அது பொய்யல்ல.
பணம் தந்து பேரின்பம் தரும் மசாஜ் சென்டர்களின் அழைப்பு தொலைபேசியில் தினமும் குறுஞ்செய்தியாக வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அணுகியதில்லை.
மும்பையில் காமதிபுராவிலும் புனேயில் சுக்கரவார்ப்பேட்டையிலும் வரிசையாக சாலையில் நிற்கும் பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னையிலும் அண்ணா நகர், தங்கசாலை பகுதிகளில் பேருந்து நிலையத்தில் அழைத்த அழகான பெண்களை ஏனோ அணுகாமல் ஓடி வந்துவிட்டேன்.

அப்படியானால் பெண்ணை நான் விரும்பவில்லையா என்றால் அதிகமாக விரும்புகிறேன் என்றுதான் பதிலளிப்பேன்.

நான் அதிகமாக விரும்பும் ஒரு பெண் என்னை அழைத்தால் என்னால் எப்படி மறுக்கமுடியும். அப்படி நான் நேசிக்கக் கூடிய பெண்ணைத்தான் இத்தனைப் பெண்களிடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ

Tuesday 26 June 2018

படித்தது- யுகபாரதியின் தெருவாசகம்

யுகபாரதியின் தெருவாசகம்

நண்பர் கவிஞர் யுகபாரதியின் தெருவாசகம் கவிதைத் தொகுப்பை படிக்க நேர்ந்தது. உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தொகுப்பு. விகடனில் தொடராக வந்து புத்தகம் ஆகியுள்ளது.

யுகபாரதியின் மனப்பத்தாயம் படித்திருந்தேன். தஞ்சை ப்ரகாஷின் ஆசி பெற்ற கவிஞர் என்று அவர் மீது பிரியமும் உண்டு. ஆனால் கவிதைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இளம் வயது, படிப்பு அனுபவம் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும் பழனிபாரதி அறிவுமதி நா.முத்துக்குமார் வகையறாவில் சேராமல் தனித்து இருக்க வேண்டும் என ஆசை. அது அளித்த ஏமாற்றத்தால் பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசும் போது யுகபாரதியின் கவிதைகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும். இப்போதுள்ள நிலையில் இந்தக் கவிதைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று நான் பேசினேன். இந்த விமர்சனத்தால் மேடையில் இருந்த ஆண்டாள் பிரியதர்சினி கொதித்து எழுந்தார். அதை தீர்மானிக்க நீங்கள் யார். காலம் தீர்மானிக்கட்டும் என்று பேசினார். நான் சொன்னேன்.நான்தான் காலம். காலம் என் வாய் வழியாகத்தான் பேசுகிறது.நாங்கள்தான் தீர்மானிக்கிறோம் என்று.
இறுதியாகப் பேசிய நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் , நான் அறிந்தவரை செந்தூரம் ஜெகதீஷ் சிறந்த படைப்பாளி நிறைய படிக்கக் கூடியவர்.கவிதைகளின் தரம் அறிந்தவர் அவர் விமர்சனம் நியாயமாக இருக்கும். தவிர யுகபாரதி மேல் அவருக்கு எந்த காழ்ப்புணர்வும் கிடையாது. அவர் கருத்தை நாம் ஏற்கிறோமோ இல்லையோ அதற்குரிய மதிப்பு தரப்பட வேண்டும் எனப் பேசினார்.
தெருவாசகம் தொகுப்பிலும் அதே கருத்தைத்தான் மீண்டும் கூற வேண்டியிருக்கிறது. கவிதைகள் எனில் பிரம்மராஜன், பிரமிள், பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், அபி,  பசுவய்யா, ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், தேவதேவன்,  சுகுமாரன், வில்வரத்தினம், சேரன், வ.ஐ.செ.ஜெயபாலன், ராணிதிலக், யூமா வாசுகி, லட்சுமி மணிவண்ணன், கண்டராதித்தன், காலபைரவன், விக்ரமாதித்யன், சங்கர் ராமசுப்பிரமணியன், கல்யாண்ஜி, கலாப்ரியா, நகுலன், ஷண்முகசுப்பையா, சி.மணி, கௌரிஷங்கர்,  என என்னிடம் ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் யுகபாரதி இல்லை. ஆனால் அப்துல்ரகுமான், மு.மேத்தா,வைரமுத்து, நா.காமராசன், எஸ்.அறிவுமணி, மீரா, புவியரசு, சிற்பி என்று இன்னொரு பட்டியல் போட்டால் அதில் யுகபாரதிக்கும் முக்கியமான இடம் உண்டு. பிரச்சினை அவர் எந்தப் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்பதுதான். தஞ்சை ப்ரகாஷ் போன்ற நுட்பமான படைப்பாளியிடம் பழகி அவர் வழியாக வளரக்கூடிய இளம் கவிஞர் என்றுதான் யுகபாரதியை நினைத்திருக்கிறேன்.

அவர் எழுதிய சினிமா பாடல்களில் காதல் பிசாசே (ரன்) கண்ணம்மா, கண்ணை காட்டு போதும் ( றெக்கை) கூடை மேல கூடை வச்சு , பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், செந்தூரா செந்தூரா போன்ற பாடல்களை நான் பலமுறை விரும்பிக் கேட்கிறேன் .அவர் மிகச்சிறந்த பாடலாசிரியராக மலர்ந்துவிட்டார். மகிழ்ச்சிதான். வைரமுத்துவும் நல்ல பாடலாசிரியர்தான்.ஆனால் கவிதை மதிப்பீட்டில் அவர் எங்கே இருப்பார் என்பதை காலத்திடமே விட்டுவிடுகிறேன் .காலத்தின் குரலாக நான் பேசினால் பலர் சண்டைக்கு வருவார்கள்.

தெருவாசகம் தொகுப்பிலும் கரகாட்டக்காரி முதல் இஸ்திரி போடுபவன், போக்குவரத்து காவலர், உதவி இயக்குனர் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்நிலையை கவிதையாக்க முயற்சித்துள்ளார் .எஞ்சியது வெறும் சொல் வளமும் ஓசை நயமும்தான் .கவிதைக்கான பாதையில் அவர் பயணித்தாலும் அதன் இலக்கை அவர் எட்டவில்லை. 

நீ என்ன பெரிய கவிஞனா என்று கேட்பது தெரியும். ஒரு கவிதை உதாரணம் சொல்லவா....
பயணங்கள் என்றொரு கவிதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமானது. எனது அந்தக் கவிதை தொகுப்பிலும் இடம் பெற்றது. கவிதை சாதாரணமானதுதான் . ஓடும் பேருந்துகளில் ஒரு சேல்ஸ்மேனாக நான் பயணித்த அனுபவம்தான் கவிதை. ஆனால் அது கவிதையாகி விடாது. அதனால்தான் இறுதி வரியை இப்படி அமைத்தேன்

ஓடும் சக்கரங்களில் ஒருகணம் ஓடாமல் மனத்தை இருக்க செய்தபடி தொடர்கின்றன எனது பயணங்கள் 

இங்குதான் கவிதை எட்டிப்பார்க்கிறது. ஒரு அனுபவம் அகவயப்படும்போது புறம் அகமாகும்போது கவிதை பூக்கிறது. 





படித்தது -சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள்

படித்தது

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள் 




சுஜாதா எழுதிய பழைய கட்டுரைகளின் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் சின்ன சின்ன கட்டுரைகள் என வெளியிட்டது. பழைய எனக் குறி்ப்பிடுவதன் காரணம் கணையாழியில் 80 களில் படித்த ஒரு கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது.
டெலிவிஷனில் இரண்டு சானல் வந்துவிட்டது. முதல் சானலில் ராஜீவ் காந்தியும் இரண்டாவது சானலில் ராஜீவ் காந்தியும் காட்டுகிறார்கள் ..... என்று உள்ளது.
இப்போதைய தொலைக்காட்சியில் ஆயிரம் சேனல்களுக்கு மேல் உள்ளன. ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன.
இதே போன்று புதுக்கவிதை, கம்ப்யூட்டர் போன்ற கட்டுரைகளும் அலாதிப் பழையது. புதுக்கவிதையின் கைடு போல் தன்னை நினைத்துக் கொண்டு அபத்தமாக எதையாவது உளறுவது சுஜாதாவின் வாடிக்கை. அப்படித்தான் இதில் உள்ள புதுக்கவிதை கட்டுரையில் கவிதைக்கு நான்கு மரபுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
மோஸாட்டின் வாழ்க்கையை சித்தரிக்கும் உலக சினிமாவான அமேடியன் பற்றிய கட்டுரை சிறப்பு.
தான் பார்த்த திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், நியுயார்க் அனுபவங்கள் என பல பதிவுகளை சுஜாதா இதில் செய்துள்ளார்.
தமது கதைகள் திரைப்படமாக்கப்பட்ட அனுபவம் பற்றிய சுஜாதாவின் வரிகள் அவருக்கே உள்ள நகைச்சுவை கலந்த ஐரனியுடன் (irony )எழுதப்பட்டுள்ளன.
விக்ரம் படம் உருவான கதையை அவர் விவரித்துள்ளார் .கமல் கதை கேட்ட விதம், ராஜசேகர் சுஜாதா கமல் மூவரும் விக்ரமுக்காக சீன் சீனாக யோசித்து எழுதிய அம்புலிமாமா கதை என சுஜாதாவின் விளையாட்டை ரசிக்கலாம். அம்ஜத்கான் ,ஜனகராஜ் காமெடி தமாஷாக இருந்ததாம். சகிக்கவில்லை படத்தில்.
இதே போல் தமது கரையெல்லாம் செண்பகப்பூ கதை ஆனந்த விகடனில் தொடராக வந்து முடிந்த போது அந்தக் கதையை படமாக்க உரிமம் கேட்டு ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் தமது வீட்டை வட்டமிட்டதை எழுதிய அவர் காகித சங்கிலிகள் சாவியில் வந்த போது நேரிட்ட அனுபவத்தை விவரிப்பது கிளாஸ்.
முதலில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கமல் அம்பிகா முதலிரவு காட்சியுடன் படமானது. ஆட்டுக்கிடா வெட்டும் காட்சியும் வந்தது. கதையில் ஆட்டுக்கிடா இல்லையே என பஞ்சுவிடம் விசாரித்த போது அது காமெடி டிராக் என விளக்கம் தரப்பட்டதாம். படத்தில் அதை இதை என எதை எதையோ மாற்றி விட்டார்கள். கடைசியில் அது என் கதையே இல்லை என சுஜாதாவே சந்தோஷமாக கை கழுவிவிட்டாராம்.
இரண்டாவதாக இதே கதையை படமாக்க சி.வி.ராஜேந்திரன் வந்தார். லீகல் பிரச்சினைகள் வராமல் இருக்க பஞ்சு அருணாசலத்திடம் பேசி அக்கதையை சுலக்சணாவை வைத்து படமாக்கினார்கள். வைரமுத்து பொய்முகங்கள் என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப உருகி உருகி அத்தனை பொய்முகங்களையும் பட்டியலிட்டு பாடல் எழுதினார்.
மூன்றாவதாக ஒருவர் காகிதச் சங்கிலிகள் கதையை படமாக்க தொலைபேசியில் அழைத்த போது சுஜாதா என்ன செய்தார்? ராங் நம்பர் எனக் கூறி தொலைபேசி வயரையே பிடுங்கி எறிந்துவிட்டாராம்.
பழைய சோறுதான் ஆனால் ஆங்காங்கே பச்சைமிளகாய் போல் சுஜாதா டச் இல்லாமல் இல்லை.

Sunday 24 June 2018

கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன்

இன்று கண்ணதாசன் -எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்

24 ஜூன்
கண்ணதாசன் பாடல்களுடன் வளர்ந்தவன் நான். அந்தப் பாடல்களுக்கு இசையமைத்து என் மனம் கவர்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

கண்னதாசன் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ் என பலருக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இதே போல் எம்.எஸ்.வி.யும் வாலி, புலமைப்பித்தன் உள்பட ஏராளமானோரின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இருந்தாலும் எம்.எஸ்.வி -கண்ணதாசன் காம்பினேசன் அற்புதங்களை நிகழ்த்தியது.
எனக்குப் பிடித்த பாடல்கள் ஏராளம்...இதோ ஒரு சிறிய பட்டியல்

1ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா -அவன்தான் மனிதன்
2.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாச மலர்
3 நீ வருவாய் என நான் இருந்தேன் -சுஜாதா
4. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் - நெஞ்சிருக்கும் வரை
5 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் -நெஞ்சில் ஒரு ஆலயம்
6.இருமனம் கொண்ட திருமண வாழ்வில் -அவர்கள்
7.ஏழு ஸ்வரங்களில் எத்தனைப் பாடல் -அபூர்வ ராகங்கள்
8 கேட்டதும் கொடுப்பவனே - தெய்வமகன்
9. உள்ளத்தில் நல்ல உள்ளம் -கர்ணன்
10.பொன்னை விரும்பும் பூமியிலே -ஆலயமணி
11. கண்ணா நீயும் நானுமா -கௌரவம்
12.அம்மம்மா தம்பி என்று நம்பி -ராஜபார்ட் ரங்கதுரை
13. சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் - மன்னவன் வந்தானடி
14. எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் -எங்கமாமா
15 நான் உன்னை அழைக்கவில்லை -எங்கிருந்தோ வந்தாள்
16. கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான் -ராமு
17 எங்கே நிம்மதி -புதிய பறவை
18 பார்த்த ஞாபகம்இல்லையோ -புதிய பறவை
19 தேவனே என்னைப் பாருங்கள் -ஞான ஒளி
20 சின்னவளை முகம் சிவந்தவளை -புதிய பூமி
21 ஓடும் மேகங்களே -ஆயிரத்தில் ஒருவன்
22 ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
23 பூமாலையில் ஓர்மல்லிகை -ஊட்டி வரை உறவு
24. கிண்கிணி என வரும் மாதா கோவில் மணி ஓசை- தவப்புதல்வன்
25 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -குழந்தையும் தெய்வமும்
26 மயக்கமா கலக்கமா -சுமைதாங்கி

இந்தப் பாடல்கள் ஒலித்தால் என் உலகம் ஸ்தம்பித்து விடுகிறது. என்மனம் அற்றுப்போகிறேன்.மிதக்கிறேன். காற்றாகவும் இசையாகவும் கவிதை வரியாகவும் ஆகிப் போகிறேன்.


Saturday 23 June 2018

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடியப் போகிறதா.?

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிகிறதா...?செந்தூரம் ஜெகதீஷ்






தற்போது தமிழ் சினிமாவில் வசூலை வாரிக் குவிக்கும் நாயகர்களின் காலம் முடிவுக்கு வந்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம். ரஜினியே ஆனாலும் படத்தின் கதையோ திரைக்கதையோ தொய்வடைந்தால் படம் அவ்வளவுதான் என்பதை ஏற்கனவே பாபா மாதிரியான படங்கள் நமக்கு சொல்லி விட்டன.
ஒரு கதைக்கும் கதாசிரியருக்கும் யாரும் மெனக்கெடவில்லை. கதைதான் படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்ள நமது சூப்பர் ஸ்டார்களின் மனசாட்சியும் அகந்தையும் இடம் கொடுப்பதில்லை. இயக்குனர்களும் அமெச்சூர்த்தனமான சிந்தனைகளையே பெரிய காவிய கனவுகளாக கண்டுவருகின்றனர்.
எந்த ஒரு கதாசிரியரை அழைத்து திரையுலம் மரியாதை செய்திருக்கிறது? எந்த படைப்பாளியை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது.?
சுஜாதாவுக்கே தமது கதைகள் சினிமாவில் படமாக்கப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை. இப்போது சினிமாவில் எழுதிக் கொண்டிருக்கும் நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் கவிதையே ஒழுங்காக எழுதத்தெரியாத பாடலாசிரியர்களுக்கும் சினிமா பற்றிய ரசனையும் அறிவும் சூன்யம்தான் என்பதைத்தான் மீண்டும்மீண்டும் தமிழ்த்திரைப்படங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சினிமாவில் புதுமைப்பித்தனும் முயற்சி செய்து தோற்றார். ஆனால் இப்போதும் சினிமாவாக்கக் கூடிய பல நல்ல கதைகள் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் உள்ளன. எப்போதோ ஒருமுறை மகேந்திரன் போன்ற இயக்குனர்கள்தாம் உதிரிப்பூக்கள் என்ற தரமான வெற்றிப்படத்தைத் தந்து கதை புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்று நேர்மையாக டைட்டில் கார்டு போடுவார்கள்.
ஜெயகாந்தன் சினிமாவிலும் பெரிதாகப் பேசப்பட்டார். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பீம்சிங் இயக்கியது என்பதால் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஜெயகாந்தன் இயக்கிய சில படங்கள் அதிக கவனம் பெறவே இல்லை. காரணம் சினிமா குறித்த தேர்ச்சியும் பயிற்சியும் ஜே.கே.வுக்கு இல்லை.
கு.ப.ரா. , க.நா.சு., லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரின் புகழ்பெற்ற கதைகள் கூட சினிமாக்கப்படவில்லை. அந்த எழுத்தாளர்களை எந்த இயக்குனரும் எந்த சூப்பர் ஸ்டாரும் மரியாதை செய்யவில்லை. அவர்களின் கதைகளை படமாக்குவது பற்றி கனவுகூட கண்டதில்லை. பாலுமகேந்திரா கதை நேரம் என தொலைக்காட்சித் தொடர் இயக்கிப் பார்த்தார். முன்னதாக இயக்குனர் ஸ்ரீதர் பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள் கதையைப் படமாக்கினார்.
கதைகளை சுட்டு சினிமா எடுக்க உதவி இயக்குனர்கள் பரபரக்கிறார்கள். சிலர் மற்றவர்களின் கதைகளையே தங்கள் கதைகளாக விற்று விடுகிறார்கள். சிலர் பாடல்களைக் கூட திருடி பிழைக்கிறார்கள். இசை பற்றி சொல்லவே வேண்டாம். இளையாராஜா கூட இசைத்திருட்டிலிருந்து தப்பவில்லை. கஸ்மே வாதே பியார் வஃபா என்ற மன்னாடேயின் உப்கார் பட இந்திப் பாடலைத்தான் ஜேசுதாசை பாட விட்டு கனவு காணும் வாழ்க்கை யாவும் என்று இளையராஜா இசைத்தார்.
கதைகள், கவிதை வரிகள், இசை என எல்லாவற்றையும் சுட்டு விடத்தான் தமிழ் சினிமா தேர்ச்சி பெற்றுள்ளது. சில நேரம் ஹாலிவுட்டிலிருந்து சில நேரம் பாலிவுட்டிலிருந்து சில நேரம் நமது அப்பாவி தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து.






அப்போது எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற இயலும்? ஷங்கர், மணிரத்னம், பாலா , பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களில் உயிர்ச்சத்து எங்கிருந்து வரும். ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும், வாலியும்  வைரமுத்துவும் பல படங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆர்.சுந்தரராஜன், பாக்யராஜ், கலைமணி, ஆர்.செல்வராஜ் போன்ற பல சிறந்த கதாசிரியர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். இவர்களையும் சினிமா சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சினிமா முதலில் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். சினிமா பார்க்க வரும் ரசிகன் முதலில் தனது சில மணி நேரங்களை சுவாரஸ்யமாகக் கழிக்கத்தான் வருகிறான். அந்த சுவாரஸ்யம் சில நேரம் ரஜினி மூலம் ,சில நேரம் இளையராஜா மூலம் சில நேரம் சந்தானம் மூலம் சிலநேரம் மணிரத்னம் மூலம் அவனுக்குக் கிடைக்கும் போது மகிழ்கிறான். இல்லையென்றால் அவன் யாரையும் பார்க்காமல் தூக்கிப் போட்டு போய்விடுகிறான்.
சினிமாவை திரையரங்கில் பார்ப்பது என்பது இப்போது ஒரு நபருக்கு 300 ரூபாய் செலவாகிறது. பாதி டிக்கட்டுக்கு போய்விடும். பார்க்கிங், ஆட்டோ, பெப்சி, பாப்கார்ன் என்று இதர செலவுகளுக்கு இந்தப் பணம் போதாது. திருட்டு சிடி மலிவானது. அதைவிட இலவசமாக டவுன்லோடு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்போனிலேயே பலர் சினிமா பார்க்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கை நாடி ரசிகனை வரவழைக்க நல்ல கதைகளும் நல்ல நட்சத்திரங்களும் நல்ல இயக்குனர்களும் இணைந்துதான் முயற்சிக்க வேண்டும். நல்ல இசையும் பாடல்களும் இருந்தால் இரண்டாவது முறையும் திரையரங்குக்கு வருவார்கள்.
இவை யாவும் இன்று குறைந்து வருகிறது. நல்ல நடிகர்களே இல்லையா என்று கேட்குமளவுக்கு நாளொரு புதுமுகம். ஒரு படம் இரண்டு படத்துடன் அவர் அம்பேல். உடலைக்காட்டும் கதாநாயகிகள் பத்து முதல் 30 படங்கள் வரை தாக்குப் பிடிக்கிறார்கள். பாடலாசிரியர்கள் ஏராளமானோர் வந்துவிட்டாலும் பாடல்களே இல்லாமல் தான் படங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒலிப்பவை எல்லாம் குத்துப்பாடல்கள் ,கானா பாடல்கள் தாம். அவை டாஸ்மாக் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் கேட்டு மகிழ முடியாதவை.
மிகப் பெரிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி ஏமாற்றத்தில் முடியும் போது சினிமாவில் சூப்பர் ஸ்டார்களின் காலம் இருக்கா இல்லையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.  ரஜினி, கமல், விஜய், அஜித் நடித்த படங்களும் இந்த அக்னிப் பரீட்சையில் தீக்குளிக்கத்தான் வேண்டும்.
சில தயாரிப்பாளர்களின் பேராசை. இரண்டு மூன்று நாட்களிலேயே நூறு முதல் 200 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கக் கூடிய வணிகபுத்தி, திரையரங்குகளின் அடாவடித்தனம். கட்டணக் கொள்ளை. எதையும் விலை கொடுத்து வாங்கி விடத்துடிக்கும் ஐடி நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, கவர் கொடுத்தால் நாலு நட்சத்திரம் தந்து விமர்சனம் எழுதும் பத்திரிகைகள், நாளுக்கு நூறு முறை டிரைலரையும் படக்காட்சிகளையும் போட்டு பார்வையாளர்களை அதிகப்படுத்த நினைக்கும் தொலைக்காட்சிகள் என சினிமாவை எல்லோருமே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கவும் .தமிழ் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் கன்னடம் தவிர மற்ற மொழிகளிலும் ஹாலிவுட்டிலும் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.தென்இந்தியப் படங்கள் தமிழ்சினிமாக்களின் நகல்களாகவே இருக்கின்றன.
வங்காளப் படங்களும் இந்திப் படங்களும் அபூர்வமான ரசாயன மாற்றத்துக்கு ஆளாகி வருகின்றன. ரஜினியை விட பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன் இப்போது வயதான கிழவனாக ஒரு பழைய ஸ்கூட்டரை எட்டி உதைத்தபடி வில்லனிடமிருந்து அடிவாங்காமல் தப்புவதற்கு  ஒளிந்து செல்லும் சாதாரண மனிதராக நடிக்கிறார். நூற்றுக்கணக்கான படங்களில் வில்லன்களை புரட்டி எடுத்தவர்தான் அமிதாப்.ரஜினியும் கமலும் அப்படி நடிக்கத் தயாரா என்று தெரியவில்லை.
 தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு ரசிகர்களை மனநலம் பிறழ்வுடயைவர்களாக மாற்றும் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் துணிந்து நடிக்கிறார். விஜய்யும் அஜித்தும் அப்படி நடிப்பார்களா என்று தெரியவில்லை.
சத்யஜித்ரே, மிர்ணாள் சென், ரித்விக் கடக் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய வங்காள படங்கள் இன்று மெல்ல மெல்ல ஹாலிவுட் படங்களின் பாலியல், படுக்கையறைக் காட்சிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அங்கு எடுக்கப்படுவது புளுபிலிம்கள் அல்ல , மீனவர்களின் வாழ்க்கையும் கிராமப்புற பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், பெண்ணியமும்தான் இந்த திரைப்படங்களின் அடிநாதமாக உள்ளது.
சினிமாவை இரண்டு விதமாக பார்க்கலாம்.  கலையம்சம் மாறாமல் குறைந்தபட்ச வணிக சமரசங்களுடன் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள். தமிழில் இத்தகைய படங்களாக சில முன்னுதாரணங்களை சொல்ல முடியும்.
அவள் அப்படித்தான், அவர்கள், அழியாத கோலங்கள், நிழல்கள், சின்னத்தாயீ, சில நேரங்களில் சில மனிதர்கள், உதிரிப்பூக்கள்,அழகி,  சாட்டை, போன்ற படங்கள் காலம் தோறும் வந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு வகை பெரிய நட்சத்திரங்களை வைத்து வணிக ரீதியான படங்கள். இவை பொழுதுபோக்கையே பிரதான அம்சமாக கொண்டிருக்கும். இதற்கும் ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. சில நடிகர்களின் மிகச்சிறந்த சில படங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
எம்ஜிஆர் (அன்பே வா) சிவாஜி ( பாசமலர்) ரஜினி ( பாட்சா ) கமல் ( நாயகன்) விஜய்( குஷி ) அஜித் ( காதல் கோட்டை) சூர்யா ( மௌனம் பேசியதே) விக்ரம் ( ஐ) சிம்பு ( விண்ணைத்தாண்டி வருவாயா ) தனுஷ் ( காதல் கொண்டேன்) சிவகார்த்திகேயன் ( எதிர்நீச்சல் )
இந்தப் படங்களில் பொதுவான அம்சம் சிறந்த நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை ,நெளிய வைக்காத காட்சிகள், அருமையான பாடல்கள், மயக்கும் இசை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த வகைப்  படங்கள்தாம் இந்த நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. இந்த வகைப் படங்கள்தாம் இந்த நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்குகின்றன. இந்தப் படங்களில் கதைக்காகத்தான் ரசிகர்கள் இந்த நட்சத்திரங்களையும் ரசித்தார்கள்.
பல திரைப்படங்களை பார்க்கவே முடியவில்லை. மிகச்சிறந்த படங்கள் என விருது வாங்கிய படங்களும் சரி ஆகா ஓகோ என பத்திரிகைகளால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட அண்மைக்கால படங்களும் சரி, மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் சரி சகிக்கவே முடியாதபடி தான் பலபடங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.
எனில் சூப்பர் ஸ்டார்களின் காலத்தைத் தக்க வைக்க ஒரு சினிமா நல்ல கதையம்சம், நல்ல நடிப்பு, நல்ல திரைக்கதை, நல்ல இசை, பாடல்கள், நல்ல இயக்குனர் ஆகியவற்றுடன் பணம் பிடுங்காத திரையிடல் தேவை. இதுதான் சூப்பர் ஸ்டார்களை சூப்பர் ஸ்டார்களாக தக்க வைக்கும். இதில் ஓரம்சம் குறைந்தாலும் அது ரஜினி படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி ரசிகர்கள் கைவிட்டு விடுவார்கள்.இதை உணர வேண்டியவர்கள் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் அவர்களை வைத்து இயக்கும் சூப்பர் இயக்குனர்களும்தான். ரசிகர்களை குறை சொல்லி பயனில்லை. நல்ல சரக்குதான் சந்தையில் விலை போகும். இது ஒரு சாதாரண வியாபாரிக்குக்கூடத் தெரியும்.

Friday 22 June 2018

மந்திரம் கோடி இயக்குவோன் -1

மந்திரம் கோடி இயக்குவோன் தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குனர்கள் 1 ஏ.சி.திருலோகசந்தர் செந்தூரம் ஜெகதீஷ் நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச்சுடர் வானில் செல்வோன் நான் பாரதி சிறுவயதில் மோரல் சயன்ஸ் வகுப்பில் பாடப்புத்தகமாக இருந்தது விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் நாவலின் சுருக்கப் பதிப்பு.நாவலைப் புரிந்துக் கொள்ள ஆங்கில ஆசிரியை அளித்த உரைகள் மிகவும் உதவிகரமாக இருந்தன.முழுக்கதையும் இப்போது நினைவில் இல்லை என்றாலும் ஒரு சம்பவம் மனதுக்குள் அழுத்தமாக சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. தேவாலயத்தில் வெள்ளி விளக்குகளைத் திருடுவான் நாயகனான ஜீன் வால்ஜின். அவன் தப்பிச்செல்லும் போது போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்வான். போலீசார் அவனை பாதிரியாரிடம் அழைத்து வருவார்கள். அவனை பாதிரியார் முன்னிலையில் விசாரிக்கும் போது, தான் திருடவில்லை என்று கூறி அவன் தப்ப முயற்சிப்பான். அப்போது பாதிரியாரும் அவன் திருடவில்லை .தான் பரிசாகத்தான் இரண்டு வெள்ளி விளக்குகளை ஜீன் வால்ஜினுக்கு தந்ததாக கூறுவார். இக்காட்சி பகைவனுக்கருள்வாய் என்ற ஏசுவின் போதனையை வெளிப்படுத்தியது. இதனால் மனம் திருந்தி ஜீன் வால்ஜின் பாதிரியாரின் கால்களைப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதான். திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலில், வறுமை நினைத்து பயந்துவிடாதே,திறமை இருக்கு மறந்துவிடாதே என்பார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றும் அதே பாடலில் பொன் எழுத்துகளால் பதித்துவைத்தார்.
விக்டர் ஹ்யூகோவின் நாவலைத் தழுவி திரைப்படமாக தமிழில் ஏழை படுத்தும் பாடு எடுக்கப்பட்டது. பின்னர் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய ஞான ஒளி படத்திலும் இந்த நாவலின் பாதிப்பு கதையோட்டத்தில் இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்ச்சிகரமான நடிப்பும் சட்டத்தின் நீண்ட கரங்களுடன் விரட்டும் மேஜர் சுந்தர்ராஜனின் பாத்திரமும் காவலே சட்ட வேலியே உன்பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ என்ற கண்ணதாசனின் காவிய வரிகளும் இப்படத்தை கருப்பு வெள்ளையில் கிடைத்த கட்டித் தங்கமாக ஜொலிக்க வைத்தன. ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு சிறந்த படம் அவன்தான் மனிதன். இதிலும் கண்ணதாசனின் பாடல் வரிகளை மிஞ்சிய நடிப்பை சிவாஜி வெளிப்படுத்தினார். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலும் சரி மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என்ற பாடலும் சரி படத்தின் வைர மகுடங்கள். மனிதன் நினைப்பதுண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் தனியாக கூறப்பட வேண்டியது. ஒரு காட்சியில் கடற்கரையில் சிவாஜி பாடியபடி நடந்து வர எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைப்புறா ஒன்று சிவாஜியின் தோளிலும் முழங்கையிலும் அமர சிவாஜி நடந்து செல்லும் உடல்மொழியின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் கண்முன்னே அந்தக் காட்சி நிழலாடுகிறது. கண்ணதாசன் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதியி்ல் கவியரசரிடம் ஒரு வாசகர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். நான்கு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகிறோம் என்ற வரிக்கு அர்த்தம் கேட்ட அந்த கேள்வியில் இரண்டு கைகள், இரண்டு கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் மனிதன் நடனமாடுகிறான் என்ற பொருளை வாசகர் அர்த்தப்படுத்தியிருந்தார். இதுகுறித்து கவியரசரிடம்விளக்கம் கேட்ட போது அவர் மற்றொரு விளக்கமும் அளித்தார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை பற்றி திருக்குறள் போதிக்கிறது. இந்த மூன்றிலும் தேர்ந்த மனிதன்தான் வீடுபேறு அடைவதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆனால் இவை நான்கும் கூட மனிதனை ஆட்டிப் படைக்கும் விலங்குகள்தாம் என்று கண்ணதாசன் தெரிவித்தார். எம்ஜிஆரின் அன்பே வா படத்தையும் ஏசி திருகோலசந்தர் இயக்கினார். டாக்டர் சிவா, பத்ரகாளி ,தெய்வமகன், ராமு, எங்க மாமா, அதே கண்கள்,பாரத விலாஸ்,பாபு, தர்மம் எங்கே, எங்கிருந்தோ வந்தாள், அவள், இருமலர்கள், தங்கை, வணக்கத்துக்குரிய காதலியே, விஸ்வரூபம்( சிவாஜி கணேசன் நடித்தது) போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார். இப்படங்களில் எனக்குப் பிடித்த பல விஷயங்களைப்பட்டியலிட முடியும். அன்பே வா எம்ஜிஆருக்கு ஒரே ஒரு சண்டைக்காட்சியுடன் எடுக்கப்பட்ட படம். முழுநீளவண்ணப்படம். கிட்டதட்ட பத்துபாடல்கள். எம்ஜிஆரும் சரோஜாதேவியும் திரையை அத்தனை அழகாக மாற்றுவார்கள். என் பள்ளிப்பருவத்தில் இப்படத்தைப் பார்த்த நினைவுகள் பசுமையானவை. பள்ளிக்கூட அரங்கி்ல் என் கடைசி தம்பியை மடியில் வைத்து அன்பே வா படத்தைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் பல முறை டிவிடியில் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்றும் அப்படம் உயிர்ப்புடன் உள்ளது. உள்ளம் என்றொரு கோவிலிலே என்ற பாடல்  காதலியின் பிரிவுக்கு கட்டியம் கூறும் பாடல். அசோகனின் கதாபாத்திரம் அபாரமானது. டாக்டர் சிவா தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மருத்தவரின் கதை. ஆனால் அப்படம் அந்தக் காலத்தில் சரியாகப் போகவில்லை என்று கேள்வி. மலரே குறிஞ்சி மலரே என்ற அற்புதமான பாடல் இதில் இடம் பெற்றது. நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் பாடலில் மஞ்சுளா டூ பீஸ் பிகினி அணிந்து தமிழ் சினிமாவை பாலிவுட் ரேஞ்சுக்கு மாற்றினார்.இப்படத்தின் பாடல்களையும் வாலிதான் எழுதினார். பாபு படம் மற்றொரு உதாரணம். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடலில் வாலியும் விஸ்வநாதனும் மாயாஜாலம் செய்தார்கள். ஒரு ரிக்சா ஓட்டியின் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை இது. தர்மம் எங்கே படத்தில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். விடுதலைக்காகப் போராடும் புரட்சிக்காரர்களின் கதை. சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா .படுகவர்ச்சியாக ஒரு கேபரே ஆட்டம் ஆடியிருப்பார். சிவாஜியுடன் முத்துராமனும் நடித்தார். சிவாஜிக்கு அறிமுகப் பாடல் ஒன்று உள்ளது சுதந்திர பூமியில் பலவகை மலர்கள் என்ற அந்தப் பாடலில் சூரியன் செல்லும் திசையின் எல்லாம் செல்லும் சூரியகாந்தி என்றும் திறமை இருப்பவன் எங்கிருந்தாலும் உலகம் அவனிடம் ஓடும் என்றும் கண்ணதாசன் எழுதியிருந்தார். வீரம் எனும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள், பள்ளியறைக்குள் வந்த புள் ளி மயிலே போன்ற இனிய பாடல்களும் இப்படத்தில் இடம் பெற்றன. எங்கிருந்தோ வந்தாள் இந்தியில் கிலோனா என்ற பெயரில் சஞ்சீவ் குமார் மும்தாஜ் நடித்த படத்தின் ரீமேக். தமிழில் சிவாஜியும் ஜெயலலிதாவும் நடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவாஜி நடித்திருப்பார் .இப்படத்திலும் பாடல்களை கண்ணதாசனே எழுதினார். இப்படத்திலும் என்ன தவறு செய்து விட்டேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை. வந்து பிறவந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை போன்ற அற்புதமான வரிகளை கவியரசர் எழுதினார். ஏசி திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு படம் அவள். இதில் சசிகுமார் கதாநாயகனாகவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஸ்ரீகாந்தும் நடித்தனர். இதுவும் இந்தியில் தோரகா என்ற பெயரில் வெளியான படம் .இந்தியில் ராதா சலூஜாவும் அனில்தாவனும் நடித்தனர். ராதா சலூஜா பின்னர் எம்ஜிஆருடன் இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க படங்களில் நடித்தார். தோரகா என்றால் அந்தக் காலத்தில் கற்பழிப்பு எனப் பொருள்படும் படி பத்திரிகைகள் எழுதின. ஆனால் தோ-ரஹா என்பது இரண்டு பாதைகள் எனப் பொருள்படும்.கற்பழிப்பு காட்சிகள் அதிகளவில் இடம் பெற்ற திரைப்படங்களின் காலத்தை அப்படம் உருவாக்கியது. நாகரீக வாழ்க்கைக்கு அடிமையாகும் கணவன் மனைவியை காமுகனிடம் பறி கொடுக்கும் கதை.இந்தியில் பலாத்கார காட்சி-ரூபேஷ்குமார் என்ற வில்லன் நடிகர் ராதா சலூஜாவின்  வெள்ளை பிராவை கிழித்து எறியும் வரை கோரமாக படமாக்கப்பட்டிருந்தது. தமிழில் இந்த வில்லன் வேடத்தை ஸ்ரீகாந்த் ஏற்றார். இந்திப்படம் அளவுக்கு இதில் பலாத்கார காட்சி அத்தனை குரூரமாக இல்லை. வெண்ணிற ஆடை நிர்மலாவும் கூடிய வரை கிளாமராக நடிக்க முயன்றார். ஆனால் ராதா சலூஜா அளவுக்கு எடுபடவில்லை. இப்படத்தின் நாயகனான சசிகுமார் பின்னர் தீ விபத்து ஒன்றில் மனைவியைக் காப்பாற்ற முயன்று தானும் தீயில் கருகி உயிரிழந்தார். தெய்வ மகன் படத்தில் கேட்டதும் கொடுப்பவனே பாடலும் ராமு படத்தில் கண்ணன் வந்தான் பாடலும் உருக்கமான பக்தி கீதங்கள், இரண்டுமே கண்ணதாசனின் பாடல்கள் தாம். இ்ததகைய பாடல்களைத் தேர்வு செய்து படமாக்குவதில் ஏ.சி திருலோகசந்தர் தனித்துவம் பெற்றவராக இருந்தார். வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்த படம். ராஜேந்திரகுமார் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை. தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் வாக்கை ஊர்மக்கள் நம்புவதும் வாக்கு பலிக்காத போது போலி என வெறுப்பதும் கதை.
பத்ரகாளியும்  எழுத்தாளர் மகிரிஷி எழுதிய கதை. தன்னை அழித்தவனை பத்ரகாளி அவதாரமாக பழி வாங்கும் பெண்ணின் கதை. சிவகுமாருடன் ஜோடியாக நடித்திருந்த ராணி சந்திரா என்ற மலையாள நடிகை விமான விபத்தில் பலியானார்.
விஸ்வரூபம் படத்தில் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அற்புதமானது. அநேகமாக அந்தப் பாடல் யாரிடமும் இருக்காது. ஜெயம் ஆடியோஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட டிவிடியில் சுமரான ஒரு பிரிண்டில் கிடைக்கிறது. கிடைத்தால் அதிர்ஷ்ட்டம்தான் அள்ளிக்கொள்ளுங்கள். சிவாஜியும் சுஜாதாவும் நடித்த இப்படத்தில் அந்தப் பாடல் இதுதான்.... நான் பட்ட கடன் எத்தனைையோ பூமியில் பிறந்து அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்தும்-செல்வம் ஆயிரம் இருந்தும்... தாயிடம் பெற்ற கடன் ,தகப்பனிடம் பெற்ற கடன் என்று ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற்ற கடன்களைப் பட்டியலிட்ட கவிஞர், எந்தக் கடனிலும் மிகப்பெரியது நல்ல மனைவியின் சேவை. அந்த கடனை அடைப்பதற்கு பல பிறவிகள் தேவை என்று பாடலை முடிப்பார். ஏசி திருலோகசந்தர் எனக்கு எப்போதும் பிடித்த இயக்குனர். அவர் மறைந்தாலும் அவர் திரைப்படங்கள் காவியங்களாக தமிழ் சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

Thursday 21 June 2018

ழான் பால் சார்த்தர்

ழான் பால் சார்த்தர்- 

JEAN PAUL SARTRE 

சார்த்தர்- பிறந்தநாள் 21 ஜூன் 
சார்த்தரின் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி சேகரித்துள்ளேன். அதிலும் being and nothingness புத்தகம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றழைக்கப்படும் இருத்தலியல் குறித்த புத்தகம் என்பதால் அதன் கடுமையான மொழி நடையை மீறி பல முறை வாசித்து பாதியில் நிறுத்திவிட்டேன். அந்தப் புத்தகம் ஒரு பழைய பேப்பர் கடையில் 5 ரூபாய்க்கு வாங்கினேன் என்பதுதான் வேடிக்கை.

சார்த்தர் பற்றி நண்பர்- எழுத்தாளர் பிரபஞ்சன் பல மேடைகளில்  பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சார்த்தரை கைது செய்ய பிரான்ஸ் போலீசார் நடவடிக்கை எடுத்த போது அதை ரத்து செய்த அப்போதைய பிரெஞ்ச் அதிபர் சார்த்தர்தான் பிரான்ஸ் பிரான்சையே கைது செய்வீர்களா எனக் கேட்டாராம்.
சார்த்தரின் சில தமிழ் பதிப்புகளும் வந்துள்ளன. அவற்றின் மொழிபெயர்ப்புகள் இலகுவாக இல்லை என்பதுடன் சார்த்தரே இலகுவாக வாசிக்கக் கூடிய நபரல்ல என்பதும் முக்கியம்.
வெ.ஸ்ரீராம் போன்ற சிலர்தான் ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் போன்றவர்களை சிறப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.
சார்த்தரின் இலக்கிய மதிப்பீடுகள், மார்க்சீய கண்ணோட்டங்கள், இருத்தலியல் கோட்பாடுகள் போன்றவை முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவுகள். சைமன் டி போவர் என்ற பெண்மணியுடன் சார்த்தர் கொண்டிருந்த நட்பும் பெரிதாக பேசப்பட்டது. பெண்ணிய நூல்களின் ராணியாக திகழ்ந்தவர்தான் சைமன் டி போவர்.
நோபல் பரிசு அளிக்கப்பட்ட போதும் அதனை வாங்க மறுத்தவர் சார்த்தர். ஒரு எழுத்தாளன் ஒருபோதும் நிறுவனமாகிவிடக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
மிகப் பெரிய ஆளுமையாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய சார்த்தரின் உலகை இன்னும் ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்போதைக்கு சுபம்.

Wednesday 20 June 2018

மாத நாவல்கள் படிக்கலாமா ?

மாத நாவல்கள் படிக்கலாமா?


இன்று காலை முதல் பல்வேறு யோசனைகள். ஏதாவது லைட்டாக படிக்க வேண்டும். குமுதத்தைப் புரட்டியாகிவிட்டது. மனம் நிரம்பவில்லை
பலநாட்களாக படிக்கலாமா வேண்டாமா என்று எடுத்து வைத்திருந்த பத்து பன்னிரண்டு மாத நாவல்களை எடுத்து ஒரே மூச்சாக படிக்கலானேன்.
எல்லாமே பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. தமிழ்ச்செல்வி, ஆர்.கீதாராணி, பத்மா துரை, சி.வி. இந்திராணி, லதா சரவணன் என்றெல்லாம் பெயர்களை நீங்களும் அறிந்திருக்கலாம்.
பெரும்பாலும் ஒரே மாதிரியான எழுத்து. சினிமா பாட்டை தலைப்பாக கொண்டது, காதல், தனிக்குடித்தனம், மாமனார் மாமியார்., குழந்தை வளர்ப்பு, கணவருடன ் பிரிவு ,முன்னாள் காதலன், நட்பு, தோழிகள், குடும்பம் என்று ஒரே செக்கில் சுற்றிவரும் மாடுகள் போல் இந்த நாவல்கள்.
இந்தப் பெண்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன். பெண்ணின் மனதுக்குள் ஆண்தான் மறைந்திருக்கிறான். ஆண்களின் குரூரம் சிறிதும் குறையவில்லை. ஆண்களின் உலகிலே வளர்ந்த பெண்கள் ஆண்களைப் போல் சிந்திப்பது தவிர்க்க முடியாதது.
அவர்கள் எழுதும் வர்ணனைகள், பாலியல் உறவு யாவும் இப்படித்தான்.
உதாரணமாக லதா சரவணன் எழுதிய உன் பேரைச் சொல்லும் போதே நாவலில் சில வரிகள்...
அவன் கைககளைப் பிடித்துக் கொண்டாள் வர்ணிகா. என்மனம் என்றுமே உங்கள் வசம்தான் சித்து என்று சொல்வதைப் போல.வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலையில் அவனை அணைத்துஅவன் உதடுகளோடு தேன் இதழ்களை அவள் பொருத்த அவன் நெகிழ்ந்து போய் இனிய அதரங்களை சுவைத்தான்.
அப்பப்பா என்ன முரட்டுத்தனம்
பொய்யான சலிப்போடு விலகினாலும் அவன் கைகள் அணைப்பை விடுவிக்காததால் அவன் விருப்பம் அறிந்து மீண்டும் முகம் பொருத்த இந்த முறை முரட்டுத்தனம் அவளிடமிருந்தது.

இப்படி எழுதுவது இளம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆதிகாலத்து பழை யஉத்தி. இதை எழுத்தாளர்கள் இன்னும் கைவிடவில்லை. அதிலும் பெண்கள்..

அந்தக் காலத்திலும் மாத நாவல்கள் வந்தன. ஜெயகாந்தனின் புகழ் பெற்ற நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள், இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் நாவல்களும், பாலகுமாரனின் புருஷ விரதம், இரவல் கவிதை போன்றவை மாத நாவல்களில் படித்ததுதான்.
தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கநாசு, சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி, கல்கி, போன்ற பலரின் புகழ் பெற்ற நூல்களும் மாத நாவல்களாக வெளியாகி உள்ளன.
அந்த காலத்தில் பிடிசாமி, சந்திரமோகன் ,மேதாவி போன்ற திகில் எழுத்தாளர்கள் எழுத்துகள் தான் ஆரம்ப கால வாசிப்புக்கு துணை நின்றன. நடராஜ் திரையரங்கு ( இப்போது இடிக்கப்பட்டு விட்டது.) வாசலில் பாட்டு புத்தகமும் மாதநாவலும் விற்கிற ஒரு வியாபாரி இருந்தார். அருகில் புளியந்தோப்பு பகுதியில் அவர் வீடு. அப்போது நடராஜா தியேட்டரில் தர்மேந்திரா, அமிதாப் , ஜித்தேந்தர் நடித்த இந்திப் படங்கள் தான் வெளியாகும். அவற்றைப் பார்க்க போனால் சினிமா செலவுடன் மாத நாவலுக்காகவும் பணம் எடுத்துச் செலல்வேன். புளியந்தோப்பில் உள்ள தமது வீட்டுக்கு அந்த வியாபாரி அழைத்துப் போவார். கட்டுக் கட்டாக இருக்கும் பழுப்பு நிறப்பக்கங்கள் கொண்ட மலிவான மாத நாவல்களையும் பாட்டுப்புத்தகங்களையும் அள்ளி வருவேன் .ராஜேஷ்குமாரிந் எழுத்தில் ஒரு வசீகரம் இருந்தது. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா , போன்ற சிலர் படிப்பில் சுவை கூட்டியவர்கள். ராணி முத்து அந்தக் காலத்தில் வெளியிட்ட மு.வரதராசன், கல்கி, சாண்டில்யன் போன்றோரின் மாத நாவல்கள் இப்போது பொக்கிஷம் போல தோன்றுகின்றன.
மாத நாவல்களில் என்னதான் இருக்கு என்றறிய இளம் வயதில் மூர்மார்க்கெட் போய் 300 மாதநாவல்களை வாங்கி வந்து படித்துப்பார்த்திருக்கிறேன், ராஜேஷ்குமார் , சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன், ராஜேந்திர குமார், போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் நூற்றுக்கு 5 மட்டுமே மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. தாஜ்மகாலுக்கு குண்டு வைக்கும் ஒரு தீவிரவாதி பற்றிய சுபாவின் நாவலும் நரேன் சுசிலா துப்பறியும் நாவல்களும் பரத் சுசிலா துப்பறியும் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களும் வாசிக்க சுவையாக இருந்தன. சிலவற்றை திரைப்படமாகவும் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானவை தரமில்லாத மொக்கை எழுத்துகள்.

அப்போதே அவற்றை தூக்கிப் போட்டு விட்டேன்.

ஆனால் பெண் எழுத்தாளர்களின் வருகையால் மீண்டும் புற்றீசல்கள் போல் மாத நாவல்கள் பெருகிவிட்டன. இவற்றின் வாசகர்களும் பெண்கள்தாம்.
அம்பையைப் போல் . ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, ஆர்.சூடாமணி, உமா மகேஸ்வரியைப் போல யாராவது எழுதினால் பரவாயில்லை. அப்படி யாரும் இல்லை என்பதுதான் ஏமாற்றமாய் இருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஒரு நூறு நாவல்களை இனி தொடர்ந்து வாசிக்கப் போகிறேன். சொ,கலைவாணி, பத்மா கிரகதுரை, முத்துலட்சுமி ராகவன், டெய்சி மாறன், அனிதா குமார் என ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இதில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலர் யார் என்றே தெரிவதில்லை. சிலரை முகநூலில் காண முடிகிறது.


எந்த ஒரு நாவலும் வித்தியாசமாக இருந்தால் கட்டாயம் குறிப்பிடுகிறேன். இல்லையானால் இருக்கவே இருக்கு பழைய பேப்பர் கடை.....
===========================










Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...