Wednesday 22 July 2020

அஞ்சலி -கோவை ஞானி

தமிழுக்கு என் வணக்கம் கோவை ஞானிக்கு அஞ்சலி - செந்தூரம் ஜெகதீஷ் கோயமுத்தூருக்கு நைட்டியும் சுடிதாரும் விற்பதற்கு கடை கடையாக செல்லும் பணியின் நிமித்தமாக அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். அது தொண்ணூறுகளின் இடைக்காலம். கோவையில் உறவினர்கள் இருந்ததால் தங்குவதற்கு சிக்கல் இல்லை என்று கூடுதலாக ஓரிருநாட்கள் தங்குவேன். அப்போது இலக்கிய அமுதசுரபியாக இருந்த விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள், சிற்றிதழ்கள் வாங்குவேன். அதில் ஒரு இதழ் நிகழ். ஆசிரியர் கி.பழனிசாமி முகவரி காளீஸ்வரன்நகர் காட்டூர். விசாரித்த போது சில நண்பர்கள் அழைத்துப் போனார்கள். ஒற்றைப் படிக்கட்டு ஏறி முதல் மாடியில் மேலே போனால் ஒரு சிறு அறை. அறை முழுக்க புத்தகங்கள். முற்றம் தள்ளி ஒரு வீடு. வீடு என்பதால் அங்கு ஒரு புத்தகமும் இல்லை. அந்த வீட்டுக்குள் பலர் போயிருக்கவும் மாட்டார்கள்.ஆனால் பழக்கம் ஏற்பட்ட பின்னர் உரிமையுடன் அந்த வீட்டுக்குள்ளும் ஞானி அய்யா என்னை அனுமதித்தார். பல முறை அவர் திருமதி எனக்கும் இட்லியும் காபியும் கொடுத்திருக்கிறார். அவர் மகனும் என்னுடன் பேசுவார். சில நாட்களில் ஞானியின் குடும்பத்தினருள் ஒருவராக ஆகிப்போனேன். அவருக்கு புத்தகம் படித்து காட்டுவது, நிகழ் பணிகளில் படைப்புகளைத் தேர்வு செய்வது, புதிய புத்தகங்களைப் பற்றி அவருக்கு தெரியப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. நிகழ் பணியில் நான் கூட இருந்த போது தேர்வு செய்து சில படைப்புகளை வெளியிட்டோம். அதில் ஒன்றுதான் மனுஷ்யப்புத்திரனின் கால்களின் ஆல்பம் என்ற புகழ் பெற்ற கவிதை. அக்கவிதையை சுஜாதா எடுத்துக்காட்டிய பின்னர் மனுஷ் பிரபலமானார். அதற்கு முன்பு அவர் மணிமேகலை பிரசுரமாக ஒரு மரபுக் கவிதை நூலை மட்டும் வெளியிட்டிருந்ததாக நினைவு. புத்தகங்கள் படித்து விமர்சனம் எழுதிக் கொடுப்பேன். நானும் மார்க்சீயத்தை ஓரளவு முறைப்படி கற்றுத் தேர்ந்திருந்தேன். எனவே ஞானிக்கு என் மீது கூடுதலான பிரியம் இருந்தது. நிறைய படிக்கிறவனாகவும் அவர் என்னை புரிந்துக் கொண்டதன் விளைவாக தன்னுடன் அதிக நேரம் இருக்கும்படி கேட்டுக் கொள்வார். எல்லாவற்றையும் மார்க்சீய மெய்யியல் என்ற ஒற்றைக் கோட்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்று ஞானி என்னுடன் உரையாடுவார். கடவுள் நம்பிக்கையை எப்படி அய்யா மார்க்சீயத்துக்கு உட்படுத்த இயலும் என்று கேட்பேன் .அதையும் மார்க்சீய மெய்யியலுக்குள் கொண்டு வரலாம் என்று உரைப்பார் ஞானி. அந்தவகையில் தமிழில் அவர் தான் எனக்கு நேரடியான ஆசான். ஒரு முறை இந்தியா டுடே நடத்திய கலந்துரையாடலுக்காக அவர் சென்னை வந்திருந்தார். இதழின் ஆசிரியரான வாஸந்தி ஞானி தங்குவதற்காக அறை போட்டு கொடுத்திருந்தார். ஆனால் அவர் ரயிலில் இருந்து இறங்கியதும் என் கையைப் பிடித்தபடி என் வீட்டுக்கு வந்து விட்டார். இரவில் சில நண்பர்களும் ஞானி அய்யாவை சந்திக்க வந்துவிட்டனர். விடிய விடிய இலக்கிய அரட்டைதான். என் மனைவியுடன் அன்புடன் பேசி உன் வீட்டுக்காரை எப்படிம்மா சகிச்சுக்கறே என்றார். உங்க மனைவி உங்களை சகிச்சுக்கிட்ட மாதிரிதான் என்று கூறிய பதில் கேட்டு கலகலவென சிரித்தார். அப்போது செல்போன்கள் இல்லை. வீட்டில் லேண்ட் லைனும் கிடையாது. ஒரு அறைதான். அதுவே கூடம். அதுவே முழுவீடு. ஆனால் அசௌரியகங்களை அவர் பொருட்படுத்தவில்லை. இடையில் வாஸந்தி ஞானி எங்கே போனார் என பலரிடம் கேட்டு ஒருவழியாக என்வீட்டில் இருப்பதை அறிந்து -யார் இந்த செந்தூரம் ஜெகதீஷ் - அவரைப் போன்ற பெரிய பத்திரிகையின் ஆசிரியரான பெரிய எழுத்தாளருக்கு நிகழில் எழுதக் கூடிய எழுத்தாளனை எப்படி தெரியும் - யார் இந்த செந்தூரம் ஜெகதீஷ் என்று ஆத்திரத்தில் வெடித்தார். ஒரு வழியாக என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு நம்பரை பெற்று அங்கு போன் செய்து ஞானியை அழைத்தார் வாஸந்தி. பேசிவிட்டு வந்த ஞானியிடம் அய்யா உங்கள் மீது வாஸந்தி ரோபமாக இருப்பாங்களே என்று கேட்டேன். ஆமாம் ஜெகதீஷ். ரூம் போட்டுக் கொடுத்திருக்காங்க நான் இங்கே உங்க வீட்டுக்கு வந்தது சுத்தமாகப் பிடிக்கலே. யார் இந்த ஜெகதீஷ்னு கேட்டாங்க....என்னை விட இந்தியா டுடேயைவிட ஜெகதீஷ் வீடு முக்கியமான்னும் கேட்டாங்க.....ஆமாம் முக்கியம்தான் என்று கூறிவிட்டேன். நாளை கலந்துரையாடலில் வரவேண்டாம் என்று சொன்னால் கூட கவலையில்லை என்றும் கூறிவிட்டேன் என்றார் ஞானி. மறுநாள் என்னையும் அழைத்துத்தான் இந்தியா டுடே கலந்துரையாடலுக்கு போனார் ஞானி. பிரபஞ்சன், சாரு நிவேதிதா போன்றோரும் அதில் பங்கேற்றனர். என்னை கலந்துரையாடலில் பங்கேற்க விடாமல் ஓரமாக ஞானியின் உதவியாளராகவே உட்கார வைத்து விட்டார் வாஸந்தி.ஆனால் அப்புறம் ஞானியும் நானும் வாஸந்தி வீட்டுக்குச் சென்ற போது நன்றாகவே உபசரித்தார். -------------- என் கவிதை நூலான இன்னும் மிச்சமிருப்பவைக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையின் சரடு ஒன்று எனது கவிதைக்குள் ளும் ஓடுகிறது என்பது அவருடைய முக்கியமான விமர்சன வரி. கிடங்குத் தெருவை படிக்க வைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை நான் எழுதியிருக்கக்கூடாது என்பது போன்ற அன்பும் அக்கறையும் தொனித்த விமர்சனம் அது. சில தனிப்பட்ட நபர்களால் அதை நான் பிரசுரம் செய்யவில்லை. . ஒன்று நான் எழுத வேண்டும்.அல்லது தற்கொலை செய்ய வேண்டும்.நான் இரண்டாவது வாய்ப்பை மூன்று நான்கு முறை தேர்வு செய்து தோற்றுவிட்ட பின்னர் முதல் வாய்ப்பைத் தேர்வு செய்தேன். அது ஞானிக்குப் புரியும். அந்த புத்தகம் அதிகமாக காயப்படுத்தியிருந்தது என்னைத்தான். அவர் வேறு சிலரை எண்ணியிருக்கலாம். ------------------ ஞானியுடன் என் சந்திப்புகள் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் குறைந்துவிட்டன. காரணம் கோவை போனது குறைந்துவிட்டதுதான். கடந்த டிசம்பர் மாத இறுதியில் கோவை போயிருந்த போது இரண்டு பேரை பார்க்க மனம் துடித்தது. ஒன்று விபத்தில் சிக்கிய என் நண்பர் ஷாராஜை. இன்னொன்று கோவை ஞானியை. என்னிடம் இருந்த நேரமோ ஒன்றரை நாட்கள். ஒரு உறவினரின் வீடு சொத்துரிமை தொடர்பாக எம்.எல்.ஏ. அமைச்சர், தாசில்தாரர் என்று அலைய வேண்டியிருந்தது. உறவினர்களிடம் பத்து நிமிடம் தலைகாட்டி தப்பிவிட வேண்டிய சூழல், இரண்டு நாள் லீவு போட்டு வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. இரண்டு பிரச்சினைகள் கையிருப்பில் பணம் இல்லை. இன்னொரு பிரச்சினை இப்போது கோவை வந்தால் தங்குவதற்கு இடம் இ்லலை. எனவே ஷாராஜையும் பார்க்க முடியாமல் ஞானியையும் சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். அதற்குப் பின் கோவிட் 19 லாக் டவுன்கள் ரயில்கள் ரத்து இப்போது கூட போக முடியாத நிலை. ஞானியின் எழுத்துகள் வாழும். அதனுடன் இனி வாழ்வேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...