Tuesday 21 June 2016

சூஃபி கவிதைகள்

சில சமயங்களில்
அவள் அழகு என்னைப் பைத்தியமாக்குகிறது.
அவளுடைய குரூரமான பிரியங்களை
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளிடமிருந்து
கண்ணாடியை மறைத்து வையுங்கள்.
அவள் என் துயரத்தை இரட்டிப்பாக்கி விடுவாள்.

-கோமின்
----------------------------------
மரணத்தின் வாள் நுனியிலிருந்து
நான் தப்பி ஓட மாட்டேன்
அதன் கூர்ந்த பார்வையைக் கண்டும்
அஞ்சப்போவதில்லை
அது ஒரு பெருமூச்சு மட்டுமே.
உறக்கத்தில் புரண்டு படுப்பது மட்டுமே.
-  அமீர்

-----------------------------------------

அழுகின்ற கண்களே
அதிருப்தியால் எழும் உங்கள்
வெள்ளங்கள் பெருகினாலும்
அமைதியை நீங்கள் பெறவில்லை.
உங்கள் அலைகளை
அடங்கச் செய்யுங்கள்
அல்லது துயரக் கடல்களில்
இவை உலகையே மூழ்கடித்து விடும் -
-பிகான் (1748)

சுந்தர சுகன் இதழில் பிரசுரமானவை
தமிழாக்கம் -செந்தூரம் ஜெகதீஷ்

சூபியிசம் -ஞானத்தின் நடனம்

கல்வெட்டு பேசுகிறது சிற்றிதழ் -ஜூன் மாதம் இதழில் வெளியான எனது கட்டுரை

சூஃபியிசம் -ஞானத்தின் நடனம்
செந்தூரம் ஜெகதீஷ்
மனிதன் கடலில் தோன்றினான் என்று சூபிக்கள் நம்புகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சூபி ஞானிகள் பாலைவனங்களில் தோன்றிய ஆன்மீக பூஞ்சோலைகள்.இஸ்லாமே இதன் அடிப்படையாக இருப்பினும் அல்லா ஒருவனே இறைவன் என்ற அடிப்படைவாத இஸ்லாமியத்தை விட்டு ஒருவனே தேவன் என்ற மதசார்பின்மையை உயர்த்தி பிடித்தவர்கள் சூபிக்கள். கோவில், தேவாலயம், மசூதி என எங்கும் ஒரே வடிவில் இறைவனை காண முடியும் என்று நம்புகிறவர்கள் சூபிக்கள். இதனால் உருவ வழிபாட்டை மறுக்கும் இஸ்லாமிய நெறியிலிருந்து இவர்கள் வேறு பாதையில் கிளை பிரிந்தனர்.இவர்களை காபிர்கள்( துரோகிகள்) என இஸ்லாமியத் தலைவர்கள் விலக்கி வைத்தனர். மன்சூர் போன்ற சூபி ஞானிகளுக்கு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டன. சூபிக்களின் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் இஸ்லாமியத்தின் பிரிக்க முடியாத ஒரு பந்தமாக சூபியிசம் நிலைத்துவிட்டது. பரந்த மனம் கொண்ட இஸ்லாமியர்களும் அறிவுஜீவிகளும் கலைஞர்களும் சூபிக்களின் பாதையில் திரும்பினர். ஜலாலுதீன் ரூமி, உமர் கய்யாம், முல்லா நசுரூதின், ஹபீஸ், சா ஆதி, புல்லே ஷா என சூபியிசம் வழங்கிய கலைக் கொடைகள் அந்த பாதையை செப்பனிட்டன.
சூபியிசம் என்ற சொல் soof என்ற உருதுச் சொல்லில் இருந்து தோன்றியது. அதாவது கம்பளி. ஆடு மேய்ப்பவர்களாக இருந்த சூபிக்களால் இந்த சொல் வழங்கப்பட்டிருக்கலாம்.அக்காலத்தில் சூபி துறவிகள் கம்பளி ஆடைகளை அணிவதும் வழக்கில் இருந்தது.
இறைவனை பள்ளி வாசலிலும் தர்காவிலும் நாடி
சொர்க்கத்திற்கு கனவு காண்கின்றனர்.
நரகத்தைக் கண்டு அச்சம் கொள்கின்றனர்.
ஆயினும் இறைவனின் ரகசியத்தை அறிந்தவர்கள்
இத்தகைய விதைகளை இதயத்திற்குள் விதைப்பதில்லை
என்று உமர் கய்யாம் பாடினார். சூபி கருத்தியலை விளக்க ரூமியின் மானஸ்வி போன்ற பல நூல்கள் எழுதப்பட்டன. இதில் முல்லா நசுரூதீன் கதைகள் மிகவும் பிரசித்தி பெற்று விட்டன.மேலோட்டமாக காணும் போது எளிய நகைச்சுவை கதைகளாக இவை தோன்றினாலும் ஈசாப் கதைகளைப் போல மெல்லிய ஞானத்தின் ஒளிரேகையை இவை கொண்டிருக்கின்றன.
முல்லாவும் ஒரு சூபிதான். வாழ்வின் அபத்தத்தையும் அவலத்தையும் அவன் கேலி செய்கிறான். ஜலாலுதீன் ரூமி, ஹகிம் சினாய், அல் கசலி போன்ற மகாகவிகளின் கவிதைகள் சூபியிசத்தின் பாதைக்கு ஒளிவிளக்குகளாக ஒளிர்கின்றன.
ஒரு சூபி என்பவர் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர். சொற்களுடனான உறவை துண்டித்தவர் என்கிறார் தன் தூன் என்ற கவிஞர்.
சூபிக்கு உடைமை ஏதுமில்லை.யாருக்கும் சொந்த பந்தமானவர் அல்ல அவர் என்கிறார் நூரி.
சேவை, தேடல், கலை, இசை, நடனம், கவிதை என சூபிக்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.எந்த மதத்தில் பிறந்தவராயினும் அன்பும் இறைவனின் மீதான நம்பிக்கையும் கொண்டவர்கள் சூபிக்களாக தங்களை அடையாளப்படுத்தலாம்.
உருவ வழிபாட்டை சூபிக்கள் எதிர்ப்பதில்லை. இறைவன் உள்ளத்தில் இருக்கிறான் என்பதே அவர்களின் அனுபூதி
இறைவன் உண்டு என்ற நம்பிக்கையே அடிப்படை. இறைவன் ஒருவனே என்பதும் சூபிக்களின் நம்பிக்கை. உள்ளத்தால் இறைமையை உணரும் அனுபவமே ஆன்மீகம் என்பது சூபிக்களின் முடிவு.
சூபி என்பவர் ரோஜாக்களுக்கு மத்தியில் ரோஜாவாகவும் முட்களுக்கு மத்தியில் முள்ளாகவும் மாறி விடுவார் என்கிறார் சிராஜூதீன்.
தேளின் வாசனையை அறிய விரும்புகிறவர் அதன் கொடுக்கிலிருந்து தப்ப முடியாது என்கிறார் மற்றொரு சூபி படைப்பாளி
ஹசன் தனது ஆன்மீக அனுபவத்தை இவ்வாறு விளக்குகிறார். " நான் ஒரு குழந்தையை விளக்குடன் கண்டேன். அதைப்பார்த்து கேட்டேன். இந்த விளக்கின் ஒளி எங்கிருந்து வந்தது ?"
குழந்தை ஊதி விளக்கை அணைத்துவிட்டு சொன்னது " இப்போது இந்த ஒளி எங்கே போனதோ அங்கிருந்துதான் அது வந்தது."



-------------------------------------------------------------

காலிப் கவிதைகள்


Ghalib
காலிப் கவிதைகள்

தமிழாக்கம் செந்தூரம் ஜெகதீஷ்

பிரிவின் முட்பாதை எத்தனை கடினமானது? காலம் தொடங்கியது முதலே அதில் தடுமாறிச் செல்கின்றான் மனிதன்.

வாழ்க்கையின் இந்த வியாபாரத்தில் மனிதனாக பாத்திரம் வகிப்பதுதான் எத்தனை சிரமமானது?

என் எளிய குடிசையின் சிதிலமான சுவர்களின் வழியாகவும் திறந்த கதவுகளின் வழியாகவும் குரூரம் நுழைகின்றது. தனிமையின் உறைந்த மழை நீராய் விழுந்து சிதறுகிறது.

பித்தான ஆசையே, உன் நெருப்பு எரிவது ஏன்?என் இதயமே ஏன் மேலும் மேலும் காதலியிடம் சென்று ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் திரும்பி வருகின்றாய்?

அவள் முகத்தில் ஒளிரும் வெளிச்சம் கண்டு காணும் கண்கள் யாவும் ஆராதி்க்கின்றன.அவள் அழகைக் கண்ட ஒவ்வொரு கண்ணாடியும் அவளை தன் சட்டகத்திற்குள் படமாக்கி விட ஆசைப்படுகின்றது.

துயருற்ற காதலர்களே, குரூரமான சந்தர்ப்பத்தின் அடிமைகள். இந்த பலிபீடத்தில் அவள் புன்னகையை காண்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றாய் இதயமே.

நான் என் கடைசி மூச்சை இழுக்கும்போது, என்னைக் கொலை செய்ததற்காக அவள் மன்னிப்பு கேட்கின்றாள். அய்யோ என் மரணத்திற்குப் பிறகு எவ்வளவு விரைவாக அவள் வருத்தம் மறைந்துவிட்டது!


2
நீ என்னை முழுவதுமாக மறந்துவிட மாட்டாய்

நீ நியாயமற்றவனாக இருக்க மாட்டாய்

என் பிரார்த்தனையை கேட்காவி்ட்டால்

நான் செத்து அர்த்தமற்ற புழுதியாகி விடுவேன்


3
காதலினால் நான் வாழ்வின் சுவையறிந்தேன்

ஒரு வலிக்கு நிவாரணியாக இருந்த காதல்

மற்றொரு வலியை தந்துவிட்டு சென்றது.


4
இன்று மீண்டும் அந்த மொட்டு மலரத்துடிப்பதைக் கண்டேன்

முன்பு தொலைந்து போயிருந்த இதயத்தையும் நான் கண்டேன்

இப்போது அது காயங்களுடன் குருதி வடித்துக் கொண்டிருக்கிறது.


5
இப்போது என் இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் கடல்

ரத்தக் கடலாக கரைபுரள்கிறது

முன்பு அது மலர்களையே வெட்கப்படச் செய்யும் படி

வண்ணமயமானதாக இருந்தது


6
யாரிடம் போய் என் தரித்திரத்தை பேசுவேன்?

சாகவேண்டும் என்று நான் நினைத்தால்கூட

நிறைவேற மாட்டேனென்கிறது.


7
காலம் அனுமதித்தால் என் இதயத்தின் ஒவ்வொரு வடுவையும்

திறந்து காட்டுவேன்.

அது ஒளிவிளக்கின் எண்ணெய்க்கான வித்தாக இருக்கும்.


8
மௌனத்திற்குள் மறைந்திருக்கும் ஆயிரமாயிரம் ஆசைகள்

அவை ரத்தம் வடிந்துவிட்டன.

நான் அமைதியாக இருக்கிறேன்.

அந்நியனின் கல்லறையில் விளக்கேற்றுபவனைப் போல.


9
அளவுக்கதிகமாக சோர்வடைந்து விட்டேன் என்றாலும்

எனது அலைதலை அது நிறுத்தி விட முடியாது.

அலைகளில் ஏற்படும் ஒவ்வொரு நீர்க்குமிழியும் எனது

பாதச்சுவடுகள் தாம்.


10
நேற்றிரவு என் இதயத்தில் எழுந்த மின்னல் வேதனையுடன்

வான் மேகங்களை உரசியது

ஒவ்வொரு துளியிலும் அது தீயாய் பொழிந்தது.


11
இந்த உலகில் எல்லாம் கடினமாகிக் கொண்டிருக்கிறது.

மனிதனால் மனிதாக கூட இருக்க முடிவதில்லை


12
என்னை கொடுவாளால் கொன்று முடித்த பிறகு அவள்

இனி கொலை செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தாள்

அடடா வருந்துவதை முன்பே வருந்தியிருக்கக் கூடாதா?


13
லைலாவை சுவர்களுக்குள் நடமாட விடாமல் அடைத்து வைத்தது யார்?

மஜ்னுவின் வீடு சுவர்களே இல்லாதது

அவன் பாலைவனங்களில் அல்லவா திரிந்துக் கொண்டிருக்கிறான்.


14
என் இதயத்தின் பெருமூச்சுகள்

என் இதய காகிதத்தின் சிறு துண்டுகளாக

காற்றில் உதிர்கின்றன.

அதன் நினைவுகளோ எழுதப்படாத ஒரு கவிதைத் தொகுப்பு

போல் குவிந்துக் கிடக்கின்றன.








காலி்ப்
 
ஆசிய துணைக் கண்டத்தில் உருதுக் கவிதைகளைப் படைத்த கவிஞர். பெரும்பாலும் ஓரிரு வரிகளில் மட்டுமே கஜல் பாடல் வடிவில் காதலையும் இறைமையையும் எழுதிச் சென்ற காலிப் உருது கவிஞர்களில் தனியிடம் பெற்றவர்.உருதுகவிகளில் இரண்டு மகாகவிகள் இக்பாலும் காலிப்பும்தான் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.



 

 

 

 

 

 

 

 

 

 
 


 
 










 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...