Tuesday 20 October 2020

இன்று வாசித்த புத்தகம் 1-6

இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ----------------- 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா? --------------------------- 3 லியோ டாலஸ்டாயின் நீதிக் கதைகள்.தமிழாக்கம் முல்லை முத்தையா. போரும் அமைதியும்,புத்துயிர்ப்பு,அன்னா கரீனினா போன்ற பிரம்மாண்டமான நாவல்களை எழுதியவர் டாலஸ்டாய்.மகாத்மா காந்தி தனது அகிம்சை கொள்கையை டால்ஸ்டாய் மூலம் பெற்றதாக குறிப்பிட்டார். டால்ஸ்டாய் எழுத்துகளை தமிழில் கு.ப.ரா.உள்பட பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.என்னிடம் சுமார் 30 தமிழாக்கங்கள் உள்ளன.அதில் ஒன்று முல்லை முத்தையா மொழிபெயர்த்த நீதிக் கதைகளின் தொகுப்பு. உழைப்பு,ஊக்கம், அன்பு, எளிமை,ஏழ்மை,தெய்வசிந்தனை,கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்கிறார் முல்லை முத்தையா.எளிமையான தமிழ் நடையில் டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைகள் வாசிக்க சுகம் அளிக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற கதையான ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும் என்ற கதை இத்தொகுப்பில் பேராசைக்காரன் என்ற பெயரில் உள்ளது.அதே போல கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கதை அழகானது.ஒரு பாரசீக துறவி தனது நாத்திக கருத்துகளால் மன்னரால் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் சூரத் நகருக்கு வருகிறார்.அவர் உதவிக்கு ஒரு கருப்பின அடிமையையும் அவர் அழைத்து வந்துள்ளார். அங்கு ஒரு டீ ஷாப்பில் பல்வேறு நாட்டவர் இருக்க அடிமை ஒரு சிறிய விக்ரகத்தை தன்னை எப்போதும் காக்கும் கடவுள் என்று கூற தர்க்கம் உருவாகிறது. ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு மதத்தவரும் தனது தெய்வம் தான் உயர்ந்தது என்று வாதாடுகின்றனர்.ராகு கேது குறித்தும் கூட ஒருவர் பேசுகிறார். நடுநிலையுடன் அனைவரின் வாதங்களையும் கேட்டு கப்பல் கேப்டன் ஒருவர் டால்ஸ்டாயின் குரலாக தனது கருத்தை முன் வைக்கிறார்." எல்லா மதங்களையும் இணைப்பதற்காக கடவுள் தாமே தோற்றுவித்த ஆலயம் இந்த உலகம் தான் .அதற்கு நிகரான ஆலயத்தை மனிதர்கள் கட்டிவிடவில்லை.கடவுளைப் பற்றி மனிதனுடைய கருத்து எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடியும் என்றும் கப்பல் தலைவர் கூறுகிறார். தெளிவான சிந்தனை யுடன் கதையை முடிக்கிறார் டால்ஸ்டாய். ------------------------------------------------------------------ 4 நா.காமராசனின் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள். எண்பதுகளில் சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் அப்துல் ரகுமான் தலைமையில் நான் கவிதை வாசித்த போது என் கவிதையில் பெரிய உருது கவிஞர்களின் தாக்கம் இருப்பதாக கூறிய அப்துல் ரகுமான் நா.காமராசன் போல ஜெகதீஷ் வளர்வார் என்று கூறினார். அதுவரை நா.காமராசனை பெரிய கவிஞர் என்று எண்ணியதில்லை.முதல் சந்திப்பிலேயே என்னை நா.காமராசனுடன் ஒப்பிட்டு விட்டாரே என்று கருப்பு மலர்களை மீண்டும் படித்தேன்.ஆனால் அது என்னை கவரவில்லை. சரி கவிக்கோ சும்மா ஒரு புகழ்ச்சிக்கு சொன்னது என்று எண்ணி மறந்து விட்டேன்.நா.காமராசன் கவியரசு பட்டம் போட்டுக் கொண்டார். கண்ணதாசனை விட தான் பெரிய கவிஞர் என்று பேட்டி கொடுத்தார்.இதே போல வைரமுத்துவும் கவியரசு பட்டத்துக்கு ஆசைப்பட்டு கடும் எதிர்ப்பு எழுந்ததால் கலைஞர் அவருக்கு கவிப்பேரரசு பட்டம் கொடுத்ததும் தனிக் கதை.நல்ல வேளை கண்ணதாசன் தப்பினார். என்னைப் பொருத்தவரை கவியரசு என்றால் அது கண்ணதாசன் மட்டும்தான். நா.காமராசனின் இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.பல ஆண்டுகள் கழித்து படிக்கும் போது நா.காமராசன் எழுத்தில் ஒரு ஆழமான தேடலும் எளிமையான தத்துவமும் இருப்பதை உணர முடிகிறது.இதைத்தான் அன்று கவிக்கோ குறிப்பிட்டார் போலும்.இது ஒரு வசன கவிதை புத்தகம். நட்பு,தாய்,புரட்சி, காதல் ,குழந்தைகள் என்று நா.காமராசன் வடித்த சொற் சித்திரங்கள் இதில் உள்ளன.மகாபலிபுரம் பற்றி எழுதிய வரிகள் படித்து ரசிக்கத் தக்கவை.கவிஞர்களின் நூல் நிலையமே கடற்கரை என்கிறார். பன்னீர் மலர்கள் உதிர்வதை வெவ்வேறு காலங்களில் வேறு வேறு அர்த்தத்தில் காண்கிறார். நட்பை கூறுகையில் யாரோ ஒருவன் தனிமைத் தீவுக்குப் போகும் போது ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களை எடுத்துச் செல்ல விரும்பினானாம்.எனக்கு மட்டும் அப்படி ஒரு தனிமை பாக்கியம் கிடைக்கும் என்றால் வேதனைகளெல்லாம் கரைகிறவரை அழுவதற்குத் தேவைப்படுகிற கண்ணீரை என் கண்களில் எடுத்துச் செல்வேன் என்று கூறுகிறார் நா.கா .மனிதனை அதிகமாக அழ வைப்பது காதல் என்றால் அந்த கண்ணீரைத் துடைப்பது நட்பின் கரங்கள் அல்லவா... ஆனால் நம்மை நமது நண்பர்கள் கூட சில நேரங்களில் அழச் செய்து விடுகிறார்கள். அதனால்தான் எப்போதாவது யாருடைய உள்ளத்தையாவது நான் புண்படுத்தியிருந்தால் அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள் என்று விடைபெறுகிறான் கவிஞன். ----------------------------- 5 இயக்குனர் சேத்தன் ஆனந்த் நடிகர் தேவ் ஆனந்தின் அண்ணன். கைடு படத்தை இயக்கும் போது தேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். இதனால் அந்தப் படத்தை கடைசி தம்பியான விஜய் ஆனந்த் இயக்கினார். சேத்தன் இயக்கிய 18 படங்களும் முக்கியமானவை. இந்த புத்தகத்தில் தமது திரைப்பட அனுபவங்களை வழங்கியுள்ளார்.போட்டோ ஆல்பம் போல ஏராளமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் படங்கள் கொண்ட இந்த புத்தகத்தை நேற்று மூர்மார்க்கெட்டில் வாங்கி வந்து கீழே வைக்க மனமில்லாமல் படித்தேன்.சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹஸ்தே ஜக்கம் ( புன்னகைக்கும் காயங்கள் ) டாக்சி டிரைவர், ஹக்கீகத் ( யதார்த்தம்) ஹீர் ராஞ்சா போன்ற படங்கள் நினைவுத் திரையில் ஓட இந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியது சிலிர்க்க வைத்த அனுபவம். முகமது ரஃபி ,லதா மங்கேஷ்வர் போன்ற அற்புதமான பாடகர்கள் பாடிய மிகச்சிறந்த சில படங்கள் சேத்தன் படங்களில் இடம் பெற்றன.ஹீர் ராஞ்சா வில் ரஃபி பாடிய யே துனியா என்ற பாடல் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய பாடல்.காதலில் தோல்வி யடைந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தை நாடி புனித யாத்திரை செல்வதாக இப்பாடல் பல புண்ணிய தலங்களிலும் பாலைவனத்திலும் படமாக்கப்பட்டது.ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ஆறு மனமே ஆறு என்ற பாடலும் அப்படிப்பட்டதுதான். இதே போல ஹஸ்தே ஜக்கம் படத்தில் லதா மங்கேஷ்வர் பாடிய பேதாப் தில்கீ தமன்னா என்ற பாடல் ஆழம் மிக்கது.இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு சேத்தன் ஆனந்துக்கு ஒரு சல்யூட் வைப்போம். ------------------- 6 வ.ரா.வை ஒரு தலைமுறையே அறியாமல் இருப்பது துரதிர்ஷ்ட்டம். தமிழ் உரைநடை முன்னோடி அவர் .புனைவு அல்லாத எழுத்தை சுவையாக எழுதினார். அவரது சொர்க்கத்தில் சம்பாஷனை ஒரு கற்பனை சித்திரம்.சொர்க்கத்தில் பச்சையப்பரும் பட்டினத்தாரும் சந்தித்து பேசுகிறார்கள்.பெண்களை பேய் என்று கூறிய பட்டினத்தாரைக் கண்டிக்கிறார் பச்சையப்பர். தன்மயக்கத் தால் (ஈகோவால்) ஏற்படும் யுத்தங்கள், ஆண் பெரியவன் என்ற பைத்தியக்காரத்தனங்களை விவாதிக்கிறார்கள்.கண்ணகியும் ஆண்டாளும் சந்தித்து பேசும்போது தமிழின் சிறப்பை சிலாகிக்கிறார்கள்.மீண்டும் தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்படுகிறார்கள்.பாரதியும் கம்பனும் அம்பிகாபதியை அருகில் வைத்து காதலின் பெருமை பேசுகிறார்கள்.தெனாலிராமன்/காளமேகம், இளங்கோ/சாத்தனார், மாதவி /தமயந்தி என பல்வேறு உரையாடல்கள் வ.ரா.வின் தெளிந்த நீரோட்டம் போன்ற எழுத்து நடையால் மனம் கவர்கின்றன. வ.ரா.வின் நூல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...