Saturday 10 October 2020

எஸ்.பி.பியும் வைரமுத்துவும்

ஆயிரம் நிலவே வா 12 எஸ்.பி.பி.யும் வைரமுத்துவும் இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் வைரமுத்துவின் திரையுலக வாழ்க்கைக்கு இளையராஜாவும் பாரதிராஜாவும் வாசலைத் திறந்து வைத்தனர். அந்தப் பாடலை ஒரு தரமான பாடலாக மாற்றினார் எஸ்.பி.பி. ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் என்றும் வானம் எனக்கொரு போதி மரம் என்றும் வைரமுத்துவின் உயிர்ப்பான வரிகளுக்கு தன் குரலால் அழகு செய்தார் எஸ்.பி.பி. தொடர்ந்து பல படங்களில் வைரமுத்து பாடல்களுக்கு எஸ்.பி.பியின் குரல் வரமாக அமைந்தது. பாலைவன ரோஜாக்களில் எங்களின் கதை உள்பட இரண்டு பாடல்கள் இடம் பெற்றன. இசை சங்கர் கணேஷ். விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தின் தலைப்பு பாடலையும் எஸ்பிபி பாடினார். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாரதிராஜா படங்களுக்கு வைரமுத்து எழுதி எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகவும் உயர்ந்த இசைக் கோர்வை கொண்டவை. சில பாடல்கள் வருணையால் வரம்பு மீறினாலும்.... கடலோரக் கவிதைகளில் போகுதே போகுதே என் பைங்கிளி் வானிலே -இளையராஜா கேப்டன் மகள் படத்தில் எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று -ஹம்சலேகா வேதம் புதிது படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா - தேவேந்திரன் போன்ற பாடல்களும் காதல் ஓவியம் படத்தில் இளையராஜா இசையில் எழுதிய நதியில் ஆடும் பூவனம், சங்கீத ஜாதி முல்லை, குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ போன்ற பாடல்கள் கிளாஸிக் ரகம். மண் வாசனையில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலும் எஸ்.பி.பி. குரலில் இளையராஜா இசையில் ரசிகர்களை தாலாட்டிய காதல் மெலோடி. தலைவாசல் படத்தில் உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி என்று பாலபாரதி இசையில் பாடினார் எஸ்.பி.பி. அருமையான டூயட் பாடல் இது. கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரன் இயக்கி நடித்த பருவ ராகம் படத்தில் ஹம்சலேகா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன .அதற்கு வைரமுத்துவின் வரிகளும் முக்கியக் காரணம். பாடும் இளம் குயில்களே பாடல் எனக்குப் பிடித்த பாடல். இளமைத் துள்ளல் மிக்கது. பூவே உன்னை நேசித்தேன் போன்ற இதர பாடல்களும் இனிமையானவை. சங்கர் குரு படத்தில் என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறே என்ற பாடல் இடம்பெற்றது. இசை சந்திரபோஸ். ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நினைவெல்லாம் நித்யாவில் இளையாராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். தோளின் மேலே பாரமி்ல்லை, பனிவிழும் மலர்வனம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், நீதானே எந்தன் பொன்வசந்தம் போன்ற பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரோஜா படத்தின் காதல் ரோஜாவே பாடலும் புகழ் பெற்றது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து ஜென்டில் மேன் படத்தில் என் வீட்டுத் தோட்டத்தில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாடல்களும் பிரசித்தி பெற்றவை. ஜோடி படத்தில் பிரசாந்த் நடிப்பில் வெள்ளி மலரே பாடலும் ரசிக்கத்தக்கது. ஸ்டார் படத்தில் மனசுக்குள் ஒரு புயல் அடித்தது பாடலையும் ரசிகா ரசிகா என்ற பாடலையும் வைரமுத்து எழுதி எஸ்.பி.பி பாடினார். அல்லி அர்ஜூனா படத்தில் சொல்லாயோ சோலைக்கிளியும் ஒரு இனிய கானம். இதே போன்று கே.பாலசந்தர் இயக்கத்தில் அஞ்சலி அஞ்சலி , காதலே என் காதலே என்று டூயட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையின் பாடல்களும் வைரமுத்துவுக்கு வாய்த்த வைரங்கள். கமல் ரஜினி அஜித் , சத்யராஜ், மோகன், விஜயகாந்த் , கார்த்திக் போன்ற பல நடிகர்களுக்கும் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். அதை வரும் அத்தியாயங்களில் விரிவாக காண்போம். கண்ணதாசன், வாலி ,வைரமுத்து, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன், பாடல்களையும் மணிரத்தினம், பாரதிராஜா, பாக்யராஜ் இயக்கத்திலும் எஸ்பிபி பாடிய பாடல்களும்ஏராளமாக உள்ளன. இளையராஜா இசை ,ஏ.ஆர். ரகுமான் ,சங்கர் கணேஷ், தேவா , பரத்வாஜ், வித்யாசாகர் , எஸ்.ஏ.ராஜ்குமார் , டி.ராஜேந்தர் இசையிலும் இதர இசையமைப்பாளர்கள் இசையிலும் பல கவிஞர்களின் பாடல்களையும் எஸ்பிபி பாடியுள்ளார். இவற்றை ஒரு குறுக்கு வெட்டு வரலாறாக தொகுக்க முயலுகிறேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...