Friday 6 February 2015

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு,
நட்புடன்தான் அழைக்கிறேன். அவமரியாதையாக கருத வேண்டாம். இதயத்துடன் நெருக்கமான நண்பரைப் போல் பல நேரம் உங்கள் எழுத்து உணரச் செய்கிறது.
ஆனால் தடாலடியான சில கருத்துகளும் முரணான வாழ்க்கையும் உங்களை விட்டு தள்ளி நிற்க செய்து விட்டது. மது அருந்த மாட்டேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
25 ஆண்டுகளாக எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் முதலே உங்கள் எழுத்தைப் படித்து வருகிறேன். இப்போதும் எக்ஸைல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராசலீலா வாங்க பணமில்லை என்பதே உண்மை.
உங்கள் எழுத்து குறிப்பாக fiction மற்றும் நீங்கள் குறிப்பிடும்
trans gressive writer போன்ற சொற்கள் எனக்கு உகந்ததாக இல்லை. ஒரு அவசரக் கோலம்,ஆறாத தாகம் தெரிகிறது. ஆனால் கட்டுரைகளில் நீங்கள் ஒரு
ஜீனியஸ்தான்.கு.ப.ராவைப் போல உருவ அமைதி உங்கள் புனைகதையில் இல்லை என்பது எனது கருத்து. ஒரு முறை குபரா போன்றவர்களையே தயிர்வடை எழுத்து என நீங்கள் நிராகரித்ததாக ஞாபகம் அல்லது குழப்பம்.

உங்களுடன் பல வகையில் முரண்பட்ட போதும் நண்பராக சக படைப்பாளியாக ரசித்தும் வந்திருக்கிறேன். சில முறை என்னிடம் நீங்கள் பேசியதும் பேட்டியளித்ததும் அந்த நட்பினால் என்று நம்புகிறேன்.

தமிழ்ச்சூழல் எழுத்தாளரை மதிக்கவில்லை என்பது உண்மைதான். நானும்
எழுத்தின் மீது நம்பி்க்கை இழந்து வருகிறேன்.நான் எழுதியவற்றை
தேடிப்படிக்க உங்களை கட்டாயப்படுத்தவும் மாட்டேன்.

புத்தகக் கண்காட்சியில் உங்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கிறேன். மனுஷ்யப்புத்திரன் தெளிவாக எதிர்வினையாற்றியிருக்கிறார். இனி உங்கள் கூட்டத்தில் உங்கள் பக்கம் நானும் இருக்க விரும்புகிறேன். ரவுடிகளை அடிக்கும் பலம் எனக்கும் இல்லை என்றாலும் மாரல் சப்போர்ட்டுக்காக
நன்றி
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்

Tuesday 3 February 2015

இடியட்

பியோதர் தாஸ்தேயவஸ்கியின் இடியட் நாவலின் செம்பதி்ப்பு ஆங்கிலத்தில் சில ஆண்டுகளுககு முன்பு ஆதம்பாக்கம் பழைய புத்தகக் கடையிலிருந்து 250 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். அதைப் படிக்கவே இல்லை. பலமாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த புத்தகப் பரணில் அது தூங்கி்க் கொண்டிருந்தது. அண்மையில் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்கள் வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டியிருக்கின்றன. புத்தகப் படிப்பு , நேர்மை போன்றவற்றில் எனது நம்பிக்கை குறைந்து வருகிறது. இது பெரும் அலைக்கழிப்பை ஏற்படுத்தி எனது அரை நூற்றாண்டு வாழ்ககையை கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் ஆக்கியிருந்தது. மதிப்பீடுகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. தவற விட்ட இன்பங்களும் எஞ்சிய தனிமையும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. பெண் சுகத்தை கிட்டதட்ட உடம்பு மறந்தே போய்க் கொண்டிருக்கிறது.பணம் கொடுத்து பரத்தையரை நாடும் கொழுப்பும் இல்லை, பணமும் இல்லை.நட்புக்கு கூட நேரமில்லாமல் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இத்தகைய நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரணை சுத்தம் செய்ய நேர்ந்த போது இடியட் என் கண்களை கவர்ந்தது.

எடுத்து படிக்க உட்கார்ந்தால் பரபரவென பாதி புத்தகம் ஓடி வி்ட்டது. தஸ்தேயவஸ்கி சித்தரிக்கும் பண்ணைக்கால ரஷ்யாவின் வாழ்க்கை முறை, பெருங்கதையாடல்கள், உரையாடல்கள் யாவும் சலிக்க வைத்தாலும் ஊடாக அவர் வாழ்வின் தரிசனமும் வரிகளில் நுட்பமாக பதிவாகியுள்ளது. எனது குழப்பமான சிந்தனைகளுககு ஒரு தெளிவையும் என் எண்ணம், பாதை மீதான நம்பிக்கையை மீட்கவும் இடியட் உதவியது. கிறித்துவ நம்பிக்கைகளின் அடிப்படையி்ல் சில அவதானிப்புகளை தாஸ்தேயவஸ்கி பதிவு செய்கிறார். அதில் ஒன்று becoming என்பதையே உலகம் நாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கிறித்துவம் being என்பதையே குறிப்பிடுவதாக ஓரிடத்தில் தாஸ்தேயவஸ்கி கூறுகிறார். எதையும் செய்யாமல் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இரு என்று ஆத்மா நாம் எழுதிய கவிதையும் சும்மா இருந்தாலும் புல்தானாகவே முளைக்கிறது என்ற ஜென் கவிதையும் நம்மை மீறிய ஏதோ ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கூறுகின்றன.இருத்தலே பெரும் இன்பம் எதுவோ ஒன்றாக ஆவதில் இல்லைஎன்ற துணிபு மீண்டும் ஏற்படுகிறது. இன்னும் அரை நூற்றாண்டு வாழ்வையும் வீணாக்கி பார்த்து விடலாம் என்றும் தோன்றுகிறது.சார்த்தர் சொன்னது போல் being and nothingness

இடியட்டின் நாயகனான மிஷ்கின் தனது குடும்பத்தின் வேர்களை நாடி தொடங்கும் பயணத்திலிருந்து ஆசிரியர் பல்வேறு பாத்திரங்களை அறிமுகம் செய்தபடி போகிறார்.....முழு நாவலைப் படிப்பேனா என தெரியவில்லை ஆனால் படிக்க படிக்க பரவசம் தருகிறது. படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. பல பதில்கள் கிடைக்கின்றன. மகத்தான இலக்கியம் எது என்பதையும் அது தனிநபர் மீது ஏற்படுத்தும் பாதி்பபு எது என்பதையும் மீண்டும் தாஸ்தேயவஸ்கியின் மூலம் அனுபவமாகியுள்ளது

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கன்னிமாரா நூலகத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது கையில் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்துடன் வந்த இளைஞன் தற்கொலை செய்யும் முடிவில் இருந்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவன் திருநெல்வேலியிலிருந்து ஓடி வந்துவிட்டான்.
அந்தப் புத்தகம் அவனை அலைக்கழித்திருந்தது. என்னையும் பின்னர் மிகவும் பாதிக்க வைத்த புத்தகம். ஆனால் அப்போது அந்த இளைஞனுக்கு நம்பிக்கைகளை விதைத்து ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

புத்தகங்களை வெறும் காகிதங்களாகப் பார்க்க கூடாது என்பதை மீண்டும் பதிவு செய்யலாம். அது பலரின் வாழ்வு, எண்ணம், தரிசனங்கள், தவிப்புகளை கொண்டுள்ளது.
நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் எனக்கு அண்மையில் ஒரு இமெயில் அனுப்பியிருக்கிறார். அதில் என்னைப் பற்றி அடிக்கடி நினைப்பதாகவும் எனது குடோன் தெரு ( எனது நாவல் கிடங்குத் தெரு ) பற்றி நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். இதை விட வேறு மகிழ்ச்சி இல்லை ஒரு படைப்பாளிக்கு.
இடியட் என்ற நாவலின் தலைப்பே என் போன்ற இடியட்டுகளுக்ககாவே படைக்கப்பட்டதோ என்னவோ









Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...