Thursday 12 September 2013

Albert Camus -அபத்த வாழ்வும் தற்கொலை எண்ணமும்


அபத்த வாழ்வும் தற்கொலை எண்ணமும்

( ஆல்பர்ட் காம்யூவின் தத்துவார்த்த தர்க்கத்தை பின்தொடர்ந்து.......)

வாழ்க்கை அபத்தமானது என்பதை சுயசிந்தனை கொண்ட மனிதன் ஒருமுறையாவது உணர்ந்திருப்பான். வாழ வேண்டுமா இல்லையா என்ற கேள்வி ஒரு தத்துவார்த்த பிசாசாக விஸ்வரூபமெடுத்து ஹேம்லட்டை போல தன்னை உலுக்கிக் கொண்டிருப்பதை அவன் கட்டாயம் உணர்ந்திருப்பான்.
தற்கொலை உணர்வு மிகவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கும் நேரிடுகிறது. பாலியல் இன்பம், புகழ், பணம், ராஜபோக வாழ்வு எல்லாம் இருந்தும் நடிகைகள் தற்கொலை செய்வதைப் படிக்கிறோம்.
மனம்தான் தற்கொலையின் விதை ரகசியமாக வளரும் மண். அது வளர்வதே நமக்குத் தெரியாது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. திடீரென ஒருநாள் காலையில் ஒருவர் தூக்குமாட்டிக் கொள்வதோ, கடலிலோ ரயிலிலோ பாய்ந்து உயிரை விடுவதோ அந்தக்கணத்தில் நிகழ்ந்த தீர்மானம் போல தெரிந்தாலும் அக்கணத்திற்கான மனநிலையை அவன் பலமுறை அடைந்திருக்கிறான். தள்ளிப் போட்டும் தவிர்த்தும் வந்திருக்கிறான்.
ஆல்பர்ட் காம்யூ இருத்தலியலின் நவீன வாழ்க்கை சிக்கல்களை எழுதிய படைப்பாளி. தமது படைப்பு அனுபவம், தத்துவார்த்த தேடல் மூலம் அவர் தற்கொலையின் வேர்களை இனம் காண முயற்சிக்கிறார்.
தி மித் ஆப் சிசிபஸ் என்ற அவரது கட்டுரை தொகுப்பு இத்தேடலில் திளைக்கிறது.
படைப்பு மனதுக்குள் ரகசியமாக கிளர்வதைப் போலத்தான் தற்கொலை உணர்வும் முளைத்து வருகிறது என்கிறார் காம்யூ.
சிசபஸ் ஒரு கிரேக்க வீரன்.அவனுடைய கதை குறியீட்டுத் தன்மை கொண்டது. பெரும் பாறை ஒன்றை மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டு போன அந்த பலசாலி வீரன் உச்சியை அடைந்தாலும் பாறையை அதன் இடத்தில் பொருத்தி விட முடியாமல் தன் கரங்களால் தாங்கி சுமந்தபடி மலைமுகட்டில் நிற்கிறான். கையை விட்டால் பாறை அவனையும் சேர்த்து உருட்டிக் கொண்டு போய் அதலபாதாளத்தில் தள்ளி அவனை புதைத்து விடும். எனவே வாழ்நாள் முழுவதும் உருண்டுவிடாதபடி அந்தப் பாறையைத் தாங்கிப் பிடிக்கும் சாபத்திற்கு ஆளாகிவிட்டான். தற்கொலை செய்பவனின் மனநிலையை சிசபசுடன் பொருத்துகிறார் காம்யூ,
வீணாகிப் போன உழைப்பும் அவநம்பிக்கையும் எஞ்சும் சிசபசை கடவுள் கண்டித்தாராம். வாழ்க்கையை வீணடித்துவிட்டாயே என்று மனதும் கண்டிக்கிறது.
வாழ்க்கை பலமுறை அபத்தமாக இருக்கிறது. மனிதன் அபத்தமானவனாக இருக்கிறான். அபத்தமான இந்த வாழ்க்கையை நுட்பமான உணர்வுடைய மனிதன் மறுக்கிறான். இயற்கையின் விதியாக இதை அவன் ஏற்கவில்லை. அப்படி விதிக்கப்பட்டால் அதை நான் தூக்கியெறிகிறேன் என்று தற்கொலையாளனும் ஒரு கலகக்காரனாகிறான். காரணங்களால் நிறைந்திருக்கும் உலகில் வாழ்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும் எனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை நான் சுமக்க கட்டாயப்படுத்தப்படும்போது தற்கொலை என்பது அதிலிருந்து விடுதலை அளிப்பதுடன் நிர்ப்பந்த வாழ்வுக்கு எதிரான கலகமாகவும் காட்சியளிப்பதாக ஆல்பர்ட் காம்யூ விவரிக்கிறார்.
படைப்பாளிகளிடம் தற்கொலை உணர்வும் இத்தகைய கலகத்தன்மையும் அதிகமாக காணப்படுகிறது. தஸ்தயேவஸ்கியின் டைரி ஆப் மேட்மேன் கதையில் வரும் கிரிலோவையும் காப்காவின் குற்ற உணர்வு கிறித்துவத்தின் அறத்திற்கு எதிராக கிளர்ந்து அவரது விசாரணை கதையில் உச்சத்தை தொட்டதையும் காம்யூ அபாரமான வாசக ஞானத்துடன் விவரிக்கிறார்.
தற்கொலை மட்டுமின்றி கொள்கைக்காக மதங்களுக்காக அரசியலுக்காக நிகழ்த்தப்படும் கொலைகளையும் ஆல்பர்ட் காம்யூ மன நிர்ப்பந்தமாக காண்கிறார். அத்தகைய வெறித்தனமான செய்கைகளுக்கு சிறுவயது முதலே கொலையாளியின் மனம் தயாராகி வருவதை அவர் குறிப்பிடுகிறார். திடீரென அது தன் வன்முறையை ஒருநாள் கட்டவிழ்த்துவிடுகிறது.
தற்கொலை செய்பவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தீங்கு இழைத்துக் கொள்கிறான். ஆனால் கொலையாளியோ இச்சமூகத்திற்கே தீங்கு விளைவித்து மனித உயிர்களின் மதிப்பையே குறைத்துவிடுகிறான்.
----------------------------


Wednesday 11 September 2013

The Book of mirdad - Mikhail Naimy

மைக்கேல் நேமி



மீர்தாத்தின் புத்தகம்

லெபனான் நாட்டு மகாகவி கலீல் கிப்ரானின் ஆப்த நண்பர் மைக்கேல் நேமி. இவரது கற்பனைப் பாத்திரம் தான் மீர்தாத். இந்த மீர்தாத் தான் கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசி ( Prophet) என்று கூறுபவர்கள் உண்டு.
மிகப் பெரிய ஆன்மீகப் பொக்கிஷமாக கருதப்படும் மீர்தாதின் புத்தகத்தை என்னைப் போல கோவை நண்பர் ராஜேந்திரனும் தேடி வந்தார். இருவரும் தனித்தனியாக அதை கைப்பற்றினோம்.
தற்போது அது ஆங்கிலத்திலும் தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தில் சுமாரான மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தை புரிந்துக் கொள்வது சற்று சிரமம். மிகவும் எளிமையான கவித்துவம் நிரம்பிய வரிகள்தாம். ஆனால்  அதை உள்வாங்கிக் கொள்ள ஏதோ ஒரு ஆத்ம நிவேதனம் இருக்க வேண்டும். ஓஷோ படிக்கும் நண்பர்களுக்கு அது எளிதில் வசப்படலாம்.
இந்த புத்தகத்தை பைபிள் போலவோ கீதையைப் போலவோ படிக்காதீர்கள் என்பார் ஓஷோ.கவிதைப் புத்தகத்தை படிப்பது போல தியானத்திலிருந்து எழுந்தவர் பேசுவதைக் கேட்பது போல படியுங்கள் என்பார்.
மீர்தாத்துக்கும் அவர் சீடர்களுக்கும்  இடையே நடைபெறும் உரையாடல்தான் இந்தப் புத்தகம்.அவரது பிரதான சீடர் நரோன்டாவின் கேள்விகளுக்கு மீர்தாத் பதிலளிக்கிறார்.
மனித உறவுகள், அன்பு, பணம், மரணம், நோய் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்நூலில் அலசப்படுகின்றன. ஒரு புனைகதையின் சுவாரஸ்யத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது.
தாவோவைப் போல முரண் வாக்கியங்களில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அபத்தங்களையும் மீர்தாத்தின் சொற்கள் வெளிப்படுத்துகின்றன.
கைத்தடி இல்லாமல் நடப்பவன் தடுமாறி விழுவதில்லை.
வீடற்றவர்களே மகிழ்ச்சியானவர்கள், அவர்களே வீடுபேறு அடையத் தக்கவர்கள்.
என்று இதில் கூறப்படுகிறது. லௌகீகங்களுக்குப் பற்று இல்லாதவர்களே உண்மையான வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கும் நிலத்தை வளைப்போருக்கும் சொத்து குவிப்போருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. அதை ஒப்புக் கொள்ள அதிசுத்தமான நேர்மையும் வெகுளித்தனமும் வேண்டும்.
உண்மையில் மகத்தானது என்பது மிகவும் தாழ்த்தப்பட்டிருப்பதுதான்.
மிகச்சிறந்த வேகம் என்பது மெதுவாக செல்லுதல்தான்.
மிகவும் உணர்வுப்பூர்வமான மனிதன் பேசா மடந்தையாயிருப்பான்.
வழிகாட்டியே இல்லாமல் நடப்பவன் நிச்சயமான வழிகாட்டியாக மாறுவான்.
தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுக்கத் தயாராக இருப்பவனே எல்லாவற்றையும் அடையும் பேறு பெற்றவன்.
மனிதர்கள் தங்களுக்குள் இடித்துத் தரைமட்டமாக்கி விட்ட ஆன்மீக கோவிலை மீண்டும் கட்டியெழுப்புபவராக மீர்தாத் வருகிறார். மனிதர்கள் மறந்துவிட்ட மனிதத்தை அவர் உயிர்ப்பிக்கிறார்.
உங்கள் கண்களுக்கு முன்னால் ஏராளமான மூடுதிரைகள் தொங்கி உங்கள் பார்வையை மறைக்கின்றன.
உங்கள் உதடுகளில் ஏராளமான பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் மேலும் பூட்டுக்களை போட்டுக் கொண்டிருக்கிறது என்பார் மீர்தாத்.
கடவுள் மனிதனை விட்டுப் பிரிவதே இல்லை. ஆனால் நான் என்ற உள்ளுணர்வில் அவன் இருப்பதை பார்க்க தவறிவிடுகிறோம். ஒவ்வொரு தவறையும் அவன் உள்ளிருந்து சுட்டிக் காட்டுகிறான். ஒவ்வொரு சரியான செயலுக்கும் அவன் உள்ளிருந்து பூரிக்கிறான்.
நமது செயல்கள் மூலம் நாம் இறைவனுக்கு எதிராக இருக்கிறோமா அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறோமா என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் உள்மனமே பதில் கூறும்.
மனிதர்களோ நிஜத்தை காண மறுக்கிறார்கள். மெய்மையை தரிசிக்கும் அதனை ஏற்றுக் கொள்ளும் திராணி அவர்களுக்கு இல்லை. எனவே மீர்தாத் கூறுகிறார்
தன் நிழலாலேயே மனிதன் தடுக்கி விழுகின்றான்.
இருட்டு என்பது குறைந்த ஒளி என்று மகாகவி பாரதி கூறியதைத்தான் மீர்தாத்தும் கூறுகிறார். உலகில் இருள் என்பதே இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான வெளிச்சத்தை இறைவன் தந்திருக்கிறான். இரவு வேறு உயிரினங்களுக்கு வெளிச்சமாகிறது.
அன்புதான் இறைவனின் ஒரேயொரு சட்டம் என்பார் மீர்தாத். அன்பு மூலம்தான் இறைவனை அடைய முடியும் என்பதையும் அவர் கூறுகிறார்.
நீதிபதிகளாக இருந்து ஒருவரின் நிறை குறைகளை எடை போடாதீர்கள். யாவர் மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தப் பழகுங்கள் என்கிறார்.
அன்புக்காக எந்தப் பரிசையும் பாராட்டையும் எதிர்பார்க்காதீர்கள். அன்புக்கு அன்பே போதுமானது என்கிறார் மீர்தாத். அது கொடுப்பதோ பெறுவதோ அல்ல,விற்பதோ வாங்குவதோ அல்லகொடுப்பதே அதன் பெறுதல், எனவே எக்காலத்திற்கும் அது மாறாதது.
காதல் குருடானது என்பார்கள். மீர்தாத் சொல்கிறார் அத்தகைய காதல்தான் தெளிவான பார்வை கொண்டது என்று.
இதயத்திற்குள் ஆலயத்தை காணாதவன் எந்த ஆலயத்திலும் இறைவனின் இதயத்தை கண்டுபிடிக்க முடியாது என்பது மீர்தாத்தின் உபதேசம்.
பணம் கடன் தருவது பற்றியும் மீர்தாத் பேசுகிறார். பணத்தை அன்பளிப்பாக கொடுங்கள் என்கிறார். வாழ்க்கை என்ற மகத்தான பரிசு உங்களுக்கு இலவசமாக அன்பளிப்பாகத்தானே தரப்பட்டிருக்கிறது?
மரம் தன் நிழலை கடனாக தருகிறதா...உனக்கு தேவைப்படும் வரை அதன் நிழலை அனுபவிக்க அது இலவசப் பரிசுதானே.
மேகம், மழை, சூரியன் எல்லாமே இலவசமாக கிடைக்கிறது.இவை இல்லாமல் வாழ முடியுமா. இத்தனை மகத்தான தேவைகள் இலவசமாக கிடைக்கும் போது பணத்தை மட்டும் சொந்தம் கொண்டாடி கடனாக கொடுத்து வட்டிகள் வசூலித்து அடுத்த உயிரை வதைப்பது சரியா என்பது மீர்தாத்தின் கேள்வி
ஒரு போதும் கடன்காரர்களாக வாழாதீர்கள் என்றும் மீர்தாத் கூறுகிறார்.
மனிதனின் மகத்துவம் அவன் மனிதனாக இருப்பதில்தான் என்றும் உண்மையான விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் உள்ளத்தின் உள்ளே நிகழ்வதுதான் என்றும் மீர்தாத் அறிவுறுத்துகிறார்.

-------------------------------------------


Franz Kafka - alternative suicide

....
வாழ்க்கையின் மாற்று தற்கொலை
காப்காவின் வரிகளில் இருந்து பல முறை தற்கொலையின் வாடையை நுகர்கிறேன்.

காப்காவின் கடிதங்கள் சா.தேவதாசின் வளமான மொழியாக்கத்துடன் வ உசி நூலம் வெளியிட்டுளளது. இதில் பல வரிகள் அபாரமாக பதிவாகியுள்ளன. காப்கா தன்னால் ஒரு போதும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது என்றும், தன் எழுத்து, தனிமை பற்றியும் குறிப்பிடும் வரிகள் மனதை அலைக்கழிக்கின்றன.

காப்காவின் வரிகளுடன் பல இடங்களில் என்னை அடையாளப்படுத்த முடிகிறது. மிகுந்த மனச்சிக்கல் மிக்க மனிதனாக இருப்பினும் மிக உயர்ந்த கலை மேதையாக மிளிரும் காப்காவா நான் என பல முறை யோசனையும் வந்துள்ளது.மறுபிறவிகளில் நம்பிக்கை இருந்தால் நான்தான் காப்கா என்று சொல்லி விடுவேன்.

Saturday 7 September 2013

ஏன் அழுதாய் மகனே

நேற்றிரவு கனவில் மிக அதிகமாக அழுதேன். விழித்துப் பார்த்தால் வெற்று மௌனம். வெறுமை. கண்களைத் தொட்டால் ஈரமில்லை. எல்லாம் கனவுக் கண்ணீர்.
திடீரென இரத்தத் திலகம் படப்பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

நீ அழுத நிலை அறிந்து வான் நிலவும் அழுததம்மா
வானமும் அழுததம்மா
வண்ணமலரும் வாடுதம்மா
கானம் அழுததம்மா
கானகமும் கலங்குதம்மா....
யாரை அழித்தேன்
யார் குடியை நான் கெடுத்தேன்.....

அது சரி கனவில் நான் ஏன் அழுதேன்....துணுக்குச் சிதறல்களாய் யார் யாரோ முகங்கள்....நண்பர்கள், துரோகிகள், காதலிகள், களவாணிகள், உறவுகள் உயிராய் இருப்பவர்கள் என எத்தனையோ முகங்கள் கண்ணில் முகம்காட்டி சென்றன. யாருக்காக அழுதான் என ஜெயகாந்தனின் தலைப்பை வைத்து என்னை நானே கேட்டேன். எனக்காக அழுதேனா என்றும் தெரியவில்லை,. இந்த சிந்தனைகளுடன் டிவிடியில் பாடல்கள் கேட்டபோது அமீர்கானின் தில் சாஹதா ஹை படத்தில் தன்ஹாயி...என்ற பாடல் சோனு நிகாமின் உச்சஸ்தாயி குரலில் ஓங்கி அழுகிறது.







கனவில் நான் பார்த்தேன் ஒரு முந்தானையை
அது என் கைகளில் தவழ்ந்திருக்க கண்டேன்.
கண்விழித்துப் பார்த்தால் அது கண்ணாடி என்றும் உடைந்து விட்டது என்றும் உணர்ந்தேன்.
அதன் கண்ணாடித் துண்டுகள் கண்களில் குத்திக்கிழித்துக் கொண்டிருந்தன.
இதை யாரிடம் போய் நான் சொல்லுவேன்......

இவ்வளவுதான் இப்ப சொல்லத் தோணுது. வலிகள் குறைந்தபின் வரிகள் தொடரலாம்........



Friday 23 August 2013

தமிழ்ச்சூழ் நல்லுலகு




இலக்கியக் கூட்டங்கள் செந்தூரம் ஜெகதீஷ்
ஒரு மீள் பதிவு
சாகித்ய அகடமி மொழிபெயர்ப்பு விருதுகள் 2012 அழைப்பிதழ் திடீரென தேடி வந்தது. என்னை மறந்துப் போகாத யாரோ ஒரு நண்பர் ஞாபகமாக அனுப்பி விட்டார்.போனேன். தி.நகர் பிட்டி தியாகராஜர் அரங்கம் ஏசியிலும் புழுங்குமளவு கூட்டம் நிரம்பியிருந்தது. எனது அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் மட்டும் வெள்ளை வேட்டி குர்தா சகிதம் எழுத்தாளர் போல இருந்தார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர் வீட்டில் பூத்தொட்டி வைத்திருப்பதாக எனக்கு நினைவில்லை.
மேடையில் இருந்த மற்ற எல்லோரும் கோட்டு சூட்டு டை, பட்டுப் புடவை, ஆடம்பர ஆடைகள் அணிந்து ஏதோ சிஎம் மாநாட்டுக்கு வந்த மினிஸ்டர்கள் மாதிரி பளபளப்பாக இருந்தார்கள். வடமாநில எழுத்தாளர்கள் வசதியானவர்கள்தாம் போலும்.
நானும் இப்படி ஒருமுறை ஒருமேடையி்ல் அமர்ந்தேன்.
மைசூரில் எனக்கு பாஷா பாரதி விருது எனது கிடங்குத் தெரு நாவலுக்காக வழங்கப்பட்டது. அப்போது நானும் சுமாரான ஆடைகளுடன் மேடையில் பளபளப்பாக அமர்ந்திருந்தேன். பெரிய ஷால் போர்த்தி, ஷீல்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் தந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆனால் மற்றபடி எனது இலக்கியக் கூட்ட அனுபவங்கள் மிகவும் சிரமமும் வேதனையும் தருபவை.
அதிகபட்சமான மாத வருமானம் பத்து ஆயிரத்தைக் கூட தாண்டாத போது, 150 இலக்கியக் கூட்டங்களை சொந்தக் காசில் நடத்தியிருக்கிறேன். அசோகமித்திரன் பார்வையாளராக வந்துள்ளார். ஜெயமோகன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பெரியார்தாசன், சா.கந்தசாமி, வ.ஐ.செ.ஜெயபாலன், மு.மேத்தா, புலவர் சங்கரலிங்கம், மாலன், வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், இன்குலாப், சு.வேணுகோபால், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, லதா ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, பாத்திமா பாபு ,இயக்குனர் வஸந்த், உட்பட எத்தனையோ படைப்பாளர்கள் வந்து பேசியுள்ளனர்
ஒவ்வொரு கூட்டமும் ஒரு போராட்டம்தான். கையில் ஹால் கட்டணம் கட்ட 40 ரூபாய் கூட இருக்காது. தேவநேய பாவாணர் நூலக அரங்கில் சிறிய அறைக்கு அப்ப இதுதான் கட்டணம். பெரிய அரங்கு அப்போது ஆயிரம் ரூபாய். அது நம்மால் முடியாதது.
வானதி மாதிரி பெரிய பதிப்பகங்கள் வேண்டுமானால் நடத்தலாம். பின்னர் எங்களுக்கும் சிலநூறு செலவு செய்ய முடிந்த போது வசதியான நல்ல அரங்குகள் கிடைத்தன
எல்.எல்.ஏ.வின் அந்த சிறிய ஹால் 40 பேர் அமர தோதானது. இலக்கியக் கூட்டத்திற்கு இதுபோதும். கூட்டம் நடத்த பிட்நோட்டீஸ் அச்சிட இருநூறு ரூபாயாவது ஆகும். தபாலில் அனுப்ப மேலும் 200, நிகழ்ச்சியில் பேச்சாளர்களுக்கு தர தண்ணீர், பிஸ்கட், காபிக்கும் நண்பர்கள் கூட்டம் முடிந்து தண்ணியடிக்கவும் காசு எடுத்து வைக்க வேண்டும். பிரபஞ்சன் போன்ற மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய முழு நேர எழுத்தாளர்களுக்கு ஆட்டோ கட்டணத்தையாவது தரவேண்டும். இப்படியாக எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகி விடும். பசியுடன் வீடு திரும்பும் போது மணி இரவு பன்னிரண்டு ஆகி விடும். கையில் சல்லிக்காசு மிச்சமிருக்காது. வீட்டிலும் சாப்பாடு போடாமல் மனைவி சண்டை போட்டு முதுகைக்காட்டி படுத்திருப்பாள். இலக்கிய சேவை செய்த திருப்தியுடன் படுத்துத் தூங்கி மறுநாள் பஸ்சுக்காக பழைய பேப்பர் புத்தகங்களை கடையில் போட்டு சமாளிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இப்பவெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் களை கட்டுகின்றன. தமிழ் அறிஞர்கள் காரில் வந்து இறங்குகின்றனர். ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் வரத்தயார் என்றால் விமான டிக்கட்டும், சொகுசு அறை வாடைகையும் அளிக்க தயாராக பலர் உள்ளனர். இதே ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளியீட்டு விழாவை தேவநேய பாவாணர் நூலக சிறிய அறையில் நடத்தியபோது, ஜெயமோகன் எனது விருந்தினராக எனது வீட்டின் ஒரே அறையில் தங்கியிருந்தார். விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் திரண்டனர். அப்போது ஜெயமோகன் பிரபலமானவர் இல்லை, வந்தவர்களில் பலர் எனது சொந்த அழைப்பின் பேரில் வந்தவர்கள்தாம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் விஷ்ணுபுரமும் பரவலாக தெரிய ஆரம்பித்து, ஜெயமோகனும் பெரிதாகப் பேசப்பட்டார்.
இப்போது எல்லோரும் வசதியாகி விட்டார்கள். எல்லோரும் மறந்துவிட்டனர். அதே தேவநேயப் பாவாணர் அரங்கில்( பெரிய ஹால்) இன்னொரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜெயமோகன் பார்க்கிங்கில் ஓரிரு விநாடி நலம் விசாரித்து முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டார். அப்போது நான் பெட்ரோலுக்கும் காசில்லாமல் வேலை இல்லாமல் இருந்தேன்.
எல்லோரும் சொந்த வீடு கார் வசதிகளுடன் இருக்கின்றனர், நான் மட்டும் இப்போதும் இலக்கியக் கூட்டம் நடத்தவும் பத்திரிகை நடத்தவும் காசில்லாமல் உள்ளத்தில் உற்சாகமும் இல்லாமல், எனது புத்தகங்களை அச்சிட ஆள் கிடைக்காமலும் அப்படியே இருக்கிறேன்.
--------------------------------------
இலக்கியம் என்பதன் பொருள் ஏணிப்படி சிலருக்கு.
சிலருக்கு அது சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு
சிலருக்கு அது சீரியல்களில் எழுதுவதற்கான அடையாளம்...
ஒரு நண்பர் கிரைம் தொடருக்கு சிற்றிதழ் பின்னணி உள்ள ஒருவர் இருந்தால் சொல்லுங்கள்...ஒரு எபிசோட்டுக்கு 3 ஆயிரம் தருவார்கள் என்றார். கூச்சத்தை விட்டு எனக்காக கேட்டேன். நான் எழுதட்டுமா என்பதை அவரால் ஜீரணி்க்க முடியவில்லை. தயக்கமாக பார்த்தார்.சிரித்தபடி சமாளித்து பாப்புலரான ஆளாப் பார்க்கிறீங்களா....மனுஷ்யபுத்திரன் கிட்ட கேட்கட்டுமா என்றேன். இல்லை இல்லை....நீங்க எழுதலாம் என்றவர் கேட்டு சொல்கிறேன் என்று காணாமல் போய்விட்டார்.
இப்படி கேட்டும் கேட்காமலும் எத்தனை பேர் வந்துப் போய்விட்டனர் என்பதை அறியாதவனல்ல நான்.
சிற்றிதழ், இலக்கியக் கூட்டம், தீவிர வாசிப்பு, கையிலிருக்கும் கடைசி பைசா வரை புத்தகம் வாங்கும் பித்து போன்றவை என்னைப் போன்ற பைத்தியங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பின் நான்தான் என்ன செய்ய முடியும்...
எண்பதுகளில் தமிழ், தொண்ணூறுகளில் தமிழ் என்றெல்லாம் தலையணை சைசில் புத்தகம் வெளியிடும் ஆய்வாளர்களுக்கு இந்த நிகழ்கால வரலாறு கண்ணுக்குத் தெரிவதே இல்லை.
அண்மையில் பாரதி பதிப்பகம் வெளியிட்ட மிகப் பெரிய தொகுப்பு நூலில் கூட எனது புத்தகங்கள் இடம் பெறவில்லை. டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்ச்செல்வன் போல எனக்கு எழுதத் தெரியாமல் இருப்பதால்தான் நிராகரிக்கிறார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஒரு ஆய்வு நூலை வெளியிடும்போதும் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான போக்குகள் நிலவி வருகின்றன. நண்பர்கள், பிரபலமானவர்கள், இசம் சார்ந்த இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே படைப்பாளிகள் என்றால் என்னதான் செய்வது..
இன்றைக்கும் எனது கிடங்குத் தெரு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மிகவும் முக்கியமான புத்தகம் என்று பேசப்படுகிறது. திலீப்குமார், நாஞ்சில் நாடன், பிரம்மராஜன், பிரபஞ்சன், க.மோகனரங்கன், தங்கமணி, ஜெயவேல், சுகுமாரன், வசந்தகுமார் போன்ற சிலர் நட்புமுறையில் கிடங்குத் தெருவை மனம்திறந்து பாராட்டி இருப்பினும் என்னால் அதை விட பெரிய அங்கீகாரமாக நினைக்கத் தோன்றுவது பாஷா பாரதிக்காக இது தேர்வு செய்யப்பட்டதுதான். எனக்குப் போட்டியாக இருந்தது கி.ராஜநாராயணன். தாய்மொழி தமிழ் அல்லாத படைப்பாளிக்கான விருது அது. எனது தாய்மொழி சிந்தி. கி.ரா தெலுங்கு.
ஆனால் இப்புத்தகம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கி.ரா.வை வென்றது.. அந்த ஒரு ஓட்டு அளித்தவர் மைசூர் மத்திய மொழிவளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான உதய நாராயணசிங் அளித்த ஓட்டுதான். அவர் என்னை முன்பின் அறிந்திருக்காதவர். முதன்முறை சந்திக்கிறார். அப்போது அவர் கூறிய வாசகம் மிகவும் ஆழமாக மனதுக்குள் பதிந்துவிட்டது. இரவில் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். விடியும் வரை தூக்கம் போய்விட்டது. மனதை மிகவும் அலைக்கழித்தது. பரிசு தருவதானால் இதற்குத்தான் தரவேண்டும் என்று முடிவு செய்தேன் என்றார்.
இதுதான் உண்மையான அங்கீகாரம். இதே போல் நண்பர் சௌந்தர சுகன் பரிந்துரையின்பேரில் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருதும் எனது நாவலுக்கு கிடைத்துள்ளது.
ஆனால் படைப்பின் ஆளுமை, இலக்கிய நேர்மை, சொந்தக் காசில் கூட்டம் நடத்தும் பத்திரிகை நடத்தும் இயக்க மனநிலைகளுக்கு அப்பால் கனடா, யுஎஸ், இலங்கை போன்ற என் ஆர் ஐக்களின் பணமும் மீடியா வெளிச்சமும்தான், அதில் கரையேறியவர்கள்தான் புகழ்ப்பெற்ற இலக்கியவாதிகள் என்றால் நான் அப்படியல்ல.
அய்யா உங்கள் டெரிலீன் சட்டை அவன் அடிவயிற்றிலிருந்து திருடியதுதானே என்ற புதுமைப்பித்தனின் எதிரொலிதான் நான்.
இன்றும் கூட கையில் பணம் இல்லாமல் பட்டினி கிடக்கும் நாட்களை சந்திக்கிறேன். இன்றும் தேவைகள் பெருகிக் கிடக்கின்றன. கடன்கள் வாட்டுகின்றன. இன்றும் நான் கண்ணாடி வாங்கவும் பல் கட்டவும் பணம் கிடைக்காமல் அல்லாடுகிற போதும் மூர்மார்க்கெட் போய் ரூமியின் வாழ்க்கையை பற்றிய புத்தகம் 150 ரூபாய்க்கு வாங்கி வந்து படிக்கிறேன்.
இன்றும் நான் நானாகவே இருக்கிறேன். குழந்தையாகவும் ஞானியாகவும். எனது தவறுகளை ஆழமாக பரிசீலிப்பவனாக இருக்கிறேன். மற்றவர்களை மன்னிக்கும் மனம் கொண்டிருக்கிறேன்.
அன்புக்காக இன்றும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் டாஸ்மாக்குகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் இலக்கிய வியாக்கியானங்களிலும் எனக்கு கிடைக்காதது அந்த அன்புதான்.





Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...