Tuesday 3 January 2023

புத்தகக் காட்சிகளில் எனது அனுபவங்கள் செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு புத்தகத்தை வாங்கி அதைப் படிக்காமல் வைத்திருந்தால் அந்த எழுத்தாளரை கொல்வதற்கு சமம் என்று எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு இப்படி கொலை செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாக வாய்க்கின்றன. வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வாசிக்கும் புத்தகங்களை விட பல மடங்கு அதிகம் என்பதால் இப்படி நேர்கிறது. வருடம் தோறும் புத்தகக் காட்சிகளில் புதிய புதிய புத்தகங்கள் வாங்கி வருவதும் அதில் கால்வசி படிக்கும் முன்பே ஓராண்டு ஓடி விடுவதும் தான் நிகழ்கிறது. இன்னும் புத்தகங்கள் வாங்க வேண்டுமா என்ற கேள்வியும் பணத் தட்டுப்பாடும் எழும் போது தான் சற்று வேகம் குறைகிறது. ஆனாலும் புத்தகக் காட்சிகளுக்கு செல்வதை ஓராண்டும் தவறவிட்டதில்லை. புத்தகக் காட்சி நடைபெறும் நாட்களில் கூடுதலான உற்சாகம் கவ்விக் கொள்கிறது. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சியாம்….என்ன சர்வதேசமோ தெரியவில்லை. வெளிநாட்டு தமிழர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா…குறிப்பாக ஈழ எழுத்தாளர்கள்… கழிவறை பார்க்கிங் உணவகங்கள் போன்றவற்றை மேம்படுத்தாமல் ஏசி செல்போன் சிக்னல் வசதி ஏற்படுத்தாமல் அது எப்படி உலகத்தரமான புத்தகக் காட்சி ஆகும் என்றும் புரியவில்லை. நானும் 30 ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எனது புத்தகங்களுக்கு புத்தகக் காட்சியில் இடம் கிடையாது. எங்கு தேடினாலும் கிடைக்காது. விருட்சம் போன்ற நண்பர்கள் அரங்கில் எப்போதாவது ஒன்றிரண்டு புத்தகங்களை கொடுத்து இருப்பேன். மற்ற அரங்குகளில் புத்தகங்கள் கொடுத்தாலும அதை டிஸ்பிளேவில் கண்ணுக்குத் தெரியும் படி வைக்க மாட்டார்கள். விற்றால் பணமும் தரமாட்டார்கள். கலக்கல் ட்ரீம்ஸ் தமிழ் வெளி வாசகசாலை போன்ற அரங்குகள் இப்போது என்னைப் போன்ற நட்சத்திர அடையாளம் இல்லாத எழுத்தாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக உள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் எனது எட்டு நூல்கள் பல அரங்குகளில் கிடைத்தன. புத்தகக் காட்சியும் நண்பர்களும். கடந்த ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள் எனக்கு ஓய்வற்ற நாளாக அமைந்தது. சனிக்கிழமை இரவு ஷிப்ட் முடித்து கண் அசராத அயர்ச்சியுடன் குளித்து காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சூர்யராஜனை பிடித்து விட்டேன். எப்படியோ நிமோஷினியை தவற விட்டு விட்டோம். மெட்ரோ சுரங்க பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காதது முக்கிய காரணம். எப்படியோ அவரும் வந்து சேர்ந்து விட்டார். வழியில் வண்ணை வளவனும் இணைந்தார். புத்தகக் காட்சிக்கு வெளியே இருந்த பழைய புத்தகக் கடைகளில வேட்டையாடினோம். உரத்தநாடு சங்கரலிங்கம் என்று மறைந்த எனது பழைய நண்பரின் மரபுக் கவிதை தொகுப்பை வளவன் எடுத்துக் கொடுத்தார். உரத்தநாடு சங்கரலிங்கம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற தமிழாசிரியராவார். சங்கரலிங்கம் மறைந்த பின்னர் அவருடைய மகன் திரு. பூங்குன்றனும் பின்னர் அம்மையாருக்கு உதவியாளராக பணியாற்றியவர். யார் யாருடன் எல்லாம் பழகி இருக்கிறேன் என்று எண்ணினால் பெரும் வியப்பு . புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பெயர் தெரிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களுக்கு கையெழுத்திட்டு செல்பி எடுப்பதில் பிஸியாக இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து மிகுந்த பிரியமான ஒரு புன்னகையுடன் என்னிடம் சில சொற்களை பேசினார். கடும் உழைப்பு, அபாரமான எழுத்தாற்றல், அரியதான படைப்பாற்றலால் உச்சம் தொட்ட எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் முதன்மையான படைப்பாளி. தற்போதைய படைப்பாளிகளில் நான் அவருக்குத்தான் முதலிடம் தருவேன். அவர் படைப்புகள் குறித்து ஒரு நான்கு மணி நேரம் கருத்தரங்கம் நடத்த ஆசை இதே போன்று புத்தகக் காட்சியில் இன்னொரு முக்கிய எழுத்தாளரை சந்தித்தேன். அவர்தான் ஷோபா சக்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புத்தகங்கள் யாவையும் வாசித்து அவரை ஒரு வாசகராக பின்தொடர்ந்திருக்கிறேன். முதன் முறையாக கருப்புப் பிரதிகள் அரங்கில் அவரை சந்தித்தது எதேச்சையானது என்றாலும் என் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். நான் வாங்கிய அவருடைய இச்சா நாவலில் கையெழுத்திட்டு தந்தார்..சென்னையில் ஒரு நாள் அவருடன் உரையாட ஆசை. நேரம் வாய்க்குமா பார்க்கலாம். அடுத்து சந்தித்த முக்கியமான நண்பர் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த என் முக்கிய நண்பர்களில் ஒருவரான தங்கமணியால் அறிமுகம் செய்யப்பட்ட அருமையானநண்பர் ஜெயவேல். கிடங்குத் தெருவைப் பற்றி அத்தனை பெரிய ஈடுபாட்டை ஜெயவேலை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மொழி ஆற்றலுடன் கிடங்குத் தெருவை எழுதி சினிமா கினிமா என எழுதிட்டிருக்கீங்க ,கிடங்குத் தெருவை மீண்டும் வெளியிடுங்கள். புதிய நாவலை எழுதித்தாருங்கள் என்று அன்புடன் கடிந்துக் கொண்டார் ஜெயவேல், அடுத்த புத்தகக் காட்சியில் உங்கள் 2 நாவல்களும் வராவிட்டால் வந்து அடிப்பேன் என்று கூட உரிமையுடன் திட்டினார். அவருடைய அன்புக்கும் வாசிப்புக்கும் தலைவணங்குகிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரேயொரு வாசகன் கிடைப்பதும் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நண்பர் சூர்யராஜன் பெரும் நோயிலிருந்து மீண்ட சோர்வால் நடக்கமுடியாமல் அமிர்தா பதிப்பக அரங்கில் நண்பர்களுடன் உட்கார்ந்துவிட்டார். புத்தகமும் வாங்கவில்லை. மனது கவலைப்பட்டது. சூர்யராஜன்மிகச்சிறந்த எழுத்தாளர். பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளின் ரசிகர். பல முக்கிய படைப்பாளிகளை ஒரு கணத்தில் கடந்துசெல்லக் கூடிய படைப்பாற்றல், திரைப்பட அறிவு, தேனீயைப் போன்ற சுறுசுறுப்பு கொண்ட ஒரு நண்பர் இப்படி நோய் நிதிப்பற்றாக்குறை, முதுமையால் தளர்வதை என்னால் காண முடியவில்லை. நலமாக வாழ்க சூர்யராஜன் வாசக சாலையில் கவிஞர் மனுஷியையும் அவர் நகமும் சதையுமான அகிலா ஸ்ரீதரையும் சந்தித்தேன். பிரபஞ்சன் இறுதி ஊர்வலம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போது பேண்ட்டும் டிசர்ட்டும் போட்டு சின்னஞ்சிறு பெண் போல மழைக்கு ஒதுங்கியிருந்த மனுஷியை சற்று தூரத்தில் பார்த்தேன். பேசவில்லை. பிரபஞ்சன் அடிக்கடி குறி்பபிடும் பெண் படைப்பாளிகள் பெயரில் மனுஷிக்கும் தமயந்திக்கும் முக்கிய இடமுண்டு. பல முறை அவருடன் பேச முயற்சி. பெண்களைக் கண்டால் விலகிவிடும் என்புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். எங்கே பெரிய பையுடன் வருவீங்கன்னு பார்த்தா மூனே மூணு புத்தகங்களுடன் வருகிறீர்கள் என கேட்டார் மனுஷி. எனக்கொரு இமேஜ் அப்படி இருக்கு எனத் தெரியும். பெரிய பையுடன்தான் வந்தேன். சுமக்க முடியாமல் நண்பரின் புத்தகக் கடையில் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துக் கொண்டேன். . நிறைய புத்தகங்களை வாங்கினேன் ,நாஞ்சில் நாடன்,சோ.தருமன், நெய்வேலி ராமலிங்கம், மந்திர மூர்த்தி அழகு, உதயகண்ணன் ,அழகிய சிங்கர், கிருபாகரன், ஆசு என நிறைய நட்புகளுடன் சில மணித்துளிகள். நான்கரை மணிக்கு கண்ணில் தூக்கம் சொக்க விடைபெற்றேன். ஆறு மணிக்கு வீட்டுககு வந்துவிட்டேன். பசி தூக்கம் தனிமை...வாழ்க்கையின் சூட்டுக்கு எத்தனை பெரிய இளைப்பாறுதல் இந்த நட்புகளும் புத்தகக் காட்சியும்.... தொடர்ந்து நான்கு நாட்களாக புத்தகக் காட்சி விஜயம். முதலில் சந்தித்தது கவிஞர் ஈழவாணியை. அவர் பெயரை அறிந்திருக்கிறேன். பார்ப்பதற்கு சற்று குண்டாக இருந்தாலும் அத்தனை இனிமையானவராக இருக்கிறார். அவர் நடத்தும் பூவரசி கலைவிழாக்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். எனக்கு பத்து ரூபாய் கடன் தரக்கூட ஆளில்லை. நான் யாரை சொல்வேன். ஆனாலும் கேட்டுக் கொண்டேன். அவரை விட்டு நகர மனம் வரவில்லை. இத்தனை நல்ல மனிதத்துவம் ஒரு மனிதர் பெண் உடலில் இருப்பதால் அதை விட்டு எத்தனை காலம் தூரமாக இருந்துவிட்டேன் என நினைத்துக் கொண்டேன். கொஞ்சமாக வயதாகி விட்டதல்லவா...இனி பெண்களுடன் தயக்கமின்றி பேச வேண்டும். அவருடைய புதிய நாவலை விலை கொடுத்து வாங்கினேன். கவிதைத் தொகுப்பை பரிசாக தந்தார். நானும் என் சினிமா நூல்களை அவருக்குப் பரிசளித்தேன். இத்தகைய புதிய நட்புகளுக்கு புத்தகக் காட்சி வழிவகுக்கிறது. அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு எழுதுகிறேன். அப்புறம் நண்பர் உதயா கண்ணனை பார்த்தேன். புத்தகக் காட்சியில் பொங்கல் நாளில் கூட கூட்டமில்லை. ஏன் என்று கேட்டால் அவரும் அதே கேள்வியை வேதனையுடன் திருப்பிக் கேட்டார். என் பங்குக்கு அவர் புத்தகக் கடையில் 125 ரூபாய் வியாபாரம் செய்து வந்தேன். புத்தகக் காட்சி பற்றி நிறைய விமர்சனங்கள், கண்டனங்கள் எழுகின்றன. இருக்கட்டும். ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களுக்கும் மதி்ப்பளிக்கத்தான் வேண்டும். எனக்கும் சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. வெளியே ஒரு பெரிய மேடை இருக்கிறது. நூல் வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள். முதலமைச்சர் முதல் இந்த ஆண்டு தலைதூக்கிய கடைக்குட்டி எழுத்தாளன் வரை எவர் எவரோ அதில் பேசிமுழக்குகிறார்கள். வெளியே பாப்கார்னும் சிக்கன் சூப்பும் சாப்பிடும் கூட்டம் கேட்கிறதா தெரிவியவில்லை. நடந்து களைத்து இளைப்பாற நாற்காலிகளில் உட்காருபவர்கள் கேட்கக் கூடும். நானும் தான் 35 ஆண்டுகளாக நாவல் ,சிறுகதை ,கவிதை, திரைப்படம் ,சிற்றிதழ் சார்ந்து இயங்கி வருகிறேன் .என் பெயரை பபாசி அறியுமா... ஒருமுறையாவது மேடையில் என்னை அழைத்தார்களா என்றால் இல்லை. அத்துடன் 20 ஆண்டுகளாக ஊடகத்துறையில முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியும் நான் அடையாளமற்றவனாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் உண்மையான படைப்புச் சூழல் தமிழ்ச்சூழல் .தமிழுக்காக கத்தி கத்தி தொண்டை வெந்தவர்கள் இதற்காக பேச மாட்டார்கள். முரசொலியும் துக்ளக்கும் தான் அவர்களுக்குப் பிரச்சினை. தமிழில் தீவிரமாக இயங்கக் கூடிய ஒரு படைப்பாளி தனது புத்தகங்களை வெளியிடவே பல ஆண்டுகளாகி விடுகின்றன. அவை விற்பனையாகி தீர்வதற்கு பல ஆண்டுகள். 2004ம் ஆண்டு வெளியான எனது கிடங்குத் தெரு நாவல் 2006ம் ஆண்டில் பாஷா பாரதிய சம்மான், தஞ்சை பர்காஷ் இலக்கிய விருது பெற்றது. எத்தனை பேர் அதை படித்தார்கள் .... மிகுந்த வலியுடன் எழுதப்பட்ட ஒருதமிழ் கிளாசிக் அந்தஸ்து மிக்க நாவலுக்கு கிடைக்கக் கூடிய எதிர்வினைகளே இதுதான். கிடங்குத் தெரு தமிழின நூறு சிறந்தநாவல்களில் ஒன்று என நிறைய பேர் பேசுவதை கேட்கிறேன். ஒரு தமிழ்ப் படைப்பாளி வேறு ஒரு வேலை அல்லது தொழிலை நம்பி இயங்க வேண்டியிருக்கிறது. அத்தொழில் அவனை கழுத்தை நெறித்து கொன்றுவிடும் வரை அவன் முடிந்தவரை தனது படைப்புகளை தருகிறான். பிரபஞ்சன் வேறு வேலை இல்லாததால் முழு நேர எழுத்தாளரானார். அவர் உயிரைப் பறிக்க அதுவும் ஒரு காரணமாகி விட்டது.மிகுந்த ஆனந்தமாகவும் மன உளைச்சலுடனும் பிரபஞ்சனை பல்வேறு தருணங்களில் சந்தித்து இருக்கிறேன். புத்தகங்கள் யாருக்காக எழுதப்படுகின்றன. யார் வாசிக்கிறார்கள் முகநூலில் வேறு யார் பிறர் புத்தகங்களை பற்றிய பதிவுகளை போடுகிறார்கள் ..அதனை எத்தனை பேர் படித்து எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்துவது பற்றி நாம் யோசிக்கலாம். இதுான் இன்றைய சிந்தனை. --------------------

புத்தகக் காட்சி 2023 காகிதங்களின் காட்டில் தொலைவோம்...... செந்தூரம் ஜெகதீஷ்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்கு பள்ளிப்பருவத்திலேயே படிக்க கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்று விட முடியாது. கல்வியைத் தாண்டியும் படிக்க வேண்டியவற்றின் மீதா ன நமது கவனமும் ரசனையும் தான் புத்தக வாசிப்பின் முதல் அஸ்திவாரம், புத்தகக் காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துப் போவது சாலச் சிறந்தது. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை மிகப்பெரியது .அதனால் அதற்கு பெரிய மைதானம் தேவைப்படுகிறது. மைதானம் என்றால் மண். மண் பகுதி என்பதால் அடிப்படை வசதிகள் சாலைகள் பார்க்கிங் இடங்களுக்கு எப்போதும் நெருக்கடிதான். தவிர வரும் கூட்டமும் அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரி அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரி என கல்லூரிவளாகத்தில் புத்தகக் காட்சிகள் நடைபெறும் . அதிகமான ஸ்டால்களும் புத்தக அச்சாக்கமும் அப்போது இருக்காது. குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே புதிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வரும் .சாரு நிவேதிதா, ம.வே.சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகக் கட்டுகளை சுமந்துக் கொண்டு புத்தகக் காட்சிகளுக்கு மூச்சிரைக்க ஓடி வரும் காட்சிகள் சகஜம். இப்போது அச்சுத்தொழிலில் அசுரப் பாய்ச்சல் ஏற்பட்டது காரணமாக குடிசைத் தொழில் போல பதிப்பகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக மாறி விட்டனர். இதனால் அதிகளவில் புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன .அதற்கு ஏற்ப ஸ்டால்களும் அதிகரித்துள்ளன. இடத்துக்கான தேவையும் அதிகரித்து புத்தகக் காட்சிகள் கல்லூரி வளாகத்தில் இட நெருக்கடியால் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அரசு ஒரு முறையான வளாகத்தை அனைத்து வசதிகளுடனும் புத்தகக்காட்சிகள், சர்வதேச திரைப்பட விழாக்கள், நூல்வெளியீடுகள், பொருட்காட்சிகள் நடத்த அமைத்துத் தரலாம். எந்த அரசும் செய்யவில்லை. தீவுத்திடல் அரசியல் மற்றும் கேளிக்கைக் கூட்டங்களுக்கு மட்டும் பயன்படுகிறது. சென்னையின் இட நெருக்கடியால் புத்தகக் காட்சிகள் அவஸ்தையோடு தான் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் புத்தகக்கட்டுகளை சுமந்து ஆட்டோக்களிலும் கார்களிலும் குறுகிய பாதைகளில் செல்வதைக் காண முடியும். வாசகர்களும் பொதுமக்களும் நந்தனம் பகுதியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு பேருந்துகள், மெட்ரோ ரயில் , ஆட்டோக்களில் எளிதாக வந்து சேர்கின்றனர். ஆனால் அவர்கள் வாசலில் இருந்து உள்ளே சென்று வெளியில் வருவது என்பது ஒரு தனி தேசாந்திரப் பயணம். குடி நீர் கழிவறை வசதிகள் கட்டாயம் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம். மலை உச்சியிலும் சிக்னல் கிடைப்பதாக விளம்பரப்படுத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புத்தகக் காட்சியில் புகுந்தவர்களுக்கு சிக்னலை நிறுத்தி விடுகின்றன. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சி என்று அரசு அறிவித்துள்ளது. அதற்காகவாவது உலகத்தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக வசதிகள் ஒருபுறமிருக்க புத்தகக்காட்சிகளின் அவசியம் அதன் சமூகப்பங்களிப்பு பண்பாட்டு தாக்கம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்தகக்காட்சி சென்னையில் மிகப்பெரியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கில் அரங்குகள், லட்சக்கணக்கில் புத்தகங்கள், கோடி்ககணக்கான ரூபாய்க்கு விற்பனை. ஆனால் ஒருமுறை மட்டும் அங்கு போய் முழுதாக சுற்றிப்பார்த்து விட முடியாது. பகுதி பகுதியாக பலமுறைதான் முழு புத்தகக்காட்சியைக் காண வேண்டும். புத்தகக் காட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், கல்வி சார்ந்த பிரிவு ஒன்று .இது மாணவர்கள் பேராசிரியர்கள் போன்றோருக்கான இடமாக இருக்கும். அங்கு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் , கூட்டங்கள், கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்தப்படலாம் .முக்கியமாக நீட் போன்ற அசுரனிடமிருந்து அச்சப்படும் உயிர்களை பாதுகாக்கலாம், இன்னொரு பிரிவு இலக்கியத்துக்கு என்று முழுமையாக ஒதுக்கலாம். அதிகளவில் விற்பனையாகும் நவீன இலக்கியங்களுடன் நாளிதழ்கள் வார இதழ்களின் அரங்குகள் இடம் பெறலாம். இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் அந்தப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்த்து வெளியே வர அது உதவியாக இருக்கும். தேவையில்லாமல் பல முறை பல தேவையில்லாத இதர பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது . புதிய புத்தக வெளியீடுகள், கவியரங்குகள், உரையாடல் எழுத்தாளருடன் சந்திப்பு புத்தக விமர்சனம் என்று சிறிய அரங்குகள் அமைத்து புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தலாம். மூன்றாவது பகுதியை கேளிக்கை பகுதியாக வைக்கலாம் .உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கீழடி அரங்கு, தொல்லியல் ஆய்வுகள், கோவில் சிற்ப வரலாறுகள், ஓவியக்காட்சிகள், குறும்படங்கள் திரையிடல் போன்றவை பலரை உற்சாகப்படுத்தும். இவற்றை சில நாட்கள் இடைவெளியில் தனித்தனியாகவும் நடத்தலாம். எல்லாவற்றையும் கலந்து ஒரே அரங்கில் வைக்கும் போது புத்தகக் காட்சியின் இட நெருக்கடி அதிகரிக்கிறது. ஆனால் என்னதான் நெருக்கடி வசதி குறைபாடு இருந்த போதும் தஞ்சைப் பரகாஷ் கூறியது போல விதியின் பின்னால் புறப்பட்டுச் சென்றுவிட்ட 300 பேர் எப்போதும் சிற்றிதழ் இலக்கியம் நாடி புத்தகக்காட்சிகளுக்கு வந்துக் கொண்டே இருப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இளம் வாசகர்கள் என்று இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்காக இருக்கலாம். இவர்கள் தான் புத்தகக் காட்சிகளின் அடிப்பை சுவாசக்காற்றாக உலா வருகிறார்கள் . ஒருவர் டிராலியில் ஜெயமோகனின் அத்தனை நூல்களையும் வாங்கிக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு அதிர்ச்சியும் நமக்கு ஏற்படலாம். மலிவுப்பதிப்பில் புதுமைப்பித்தன், குபரா படைப்புகள், ப.சிங்காரம் நாவல்கள், என்று புத்தகங்கள் புதிய வாசகர்களுக்கு புதையல்களாகக் கிடைக்கின்றன. இந்த ஆண்டு திரைப்படத்தின் வருகையால் பொன்னியின் செல்வன் அதிகளவில் விற்பனையாகும். எப்போதும் போல எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா ,ஷோபா சக்தி, பா.ராகவன் போன்ற தனி வாசகர்கள் கொண்ட எழுத்தாளர்களின் புதிய நூல்களும் அவற்றை வாங்குவதற்காக வரும் வாசகர்களும் இந்தப் புத்தகக் காட்சியைக் கொணடாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைவரிடமும் இந்நேரம் வாங்க வேண்டியநூல்களின் ஒரு பட்டியல் கையில் தயாராக இருக்கும். இந்த முறை புத்தகக் காட்சியில் வாங்கக்கூடிய புத்தகங்கள் அலமாரிகளில் தூங்கிக் கொண்டு அடுத்தப் புத்தகக் காட்சியில் தான் தூசு தட்டும் நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வாசகர்கள் பொறுப்பு. நல்ல புத்தகங்களை அடையாளம் காணுதல் .அவற்றை பதிப்பித்த பதிப்பாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குதல், வாங்கிய ஒரு மாதத்திற்குள் வாசித்து விடுவது. அதைப்பற்றி பேஸ்புக் அல்லது இணைய இதழ்களில் ஒரு சிறு மதிப்பீடாவது செய்வதுதான் புத்தகக் காட்சி என்ற செயல்பாட்டுக்கு நாம் செய்யக்கூடிய அணில் பங்காகும். சேகரிப்புக்கு என்றும் தனியாக நூல்களை வாங்கி வைக்கலாம், நூலகங்களுக்கு நல்ல நூல்களை வாங்கிப் பரிசளிக்கலாம். புத்தகம் வாங்க முடியாத நண்பர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கித் தரலாம். புத்தகங்களைத் தவிர ஏராளமான மனிதர்களை சந்திப்பதற்கும் தயக்கங்களை உடைத்து நேரடியாக உரையாடவும் புத்தகக்காட்சி தரும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியது. நல்ல நட்புகளையும் இந்த புத்தகக் காட்சி ஏற்படுத்தித் தருகிறது. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு கருத்தியலை சிந்தனையை அனுபவத்தை வாழ்க்கையை உள்வாங்கிக் கொள்வதுதான். அதனுடன் நமது கருத்தியலும் சிந்தனையம் அனுபவமும் வாழ்க்கையும் புத்துணர்வு பெறுகிறது. புத்தகங்களுடனான வாழ்க்கை என்பது தனிமையின் மிகப்பெரிய வரமாக இருக்கும். எப்போதும் எந்த மனநிலையிலும் ஒரு புத்தகத்தின் வாசிப்பு நம்மை இலகுப்படுத்தும் ஒரு செயல்பாடு என்பது என் அனுபவம். புத்தகக் காட்சிகளை ஊக்கப்படுத்துவோம். குறைகள் இருக்கும் .இருந்த போதும் இது ஒரு திருவிழா. அறிவுத்திருவிழா. புத்தகங்கள் இல்லாத வீடுகள் ஜன்னல் இல்லாத வீடுகளை விடவும் இறுக்கமானவை. புத்தகங்கள் காடுகளில் இருந்து வரும் காகிதங்களில் தான் அச்சிடப்படுகின்றன. ஒரு நல்ல புத்தகம் ஒரு நிறைவான கானக அனுபவம்தான். இசையைப் போல மனிதனின் வன்மங்களைத் தணித்து மனத்தை சமன்படுத்த புத்தகங்களால் தான் முடியும். புத்தக விழாக்களைக் கொண்டாடுவோம். ஆறாம் அறிவை வீணடிக்க வேண்டாம். இந்த ஆண்டு புத்தகக் காட்சி நிறைய எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது. எத்தனையோ அச்சகங்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான புதிய படைப்புகள் எழுதப்படுகின்றன. எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் வாழப்பழகுவோம். அதைப் பழக்கப்படுத்த குடும்பத்துடன் வாருங்கள் புத்தகக்காட்சிகளுக்கு. ஒரு அறிவின் சுடர் உங்களுக்கு அருளக் காத்திருக்கும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...