Tuesday 13 October 2020

எஸ்.பி.பியும் கமல்ஹாசனும்

ஆயிரம் நிலவே வா...13 எஸ்.பி.பி.யும் கமல்ஹாசனும். இந்த தலைப்பு அச்சம் தருகிறது.காரணம் அத்தனை இனிய பாடல்களை எஸ்.பி.பி.யும் கமலும் தந்துள்ளனர். எதை சொல்வது எதை விடுவது? ஆரம்ப கால கமலுக்கு எஸ்.பி.பி.பாடிய சில பாடல்கள் மிகவும் இளமைத் துள்ளலுடன் இருப்பவை. பட்டிக்காட்டு ராஜாவில் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதிய உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில், சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலும் வாலி எழுதிய கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம், அவள் ஒரு தொடர்கதை படத்தில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கடவுள் அமைத்து வைத்த மேடை, மோகம் 30 வருஷம் படத்தில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய சம்சாரமாம் சங்கீதமாம், பட்டாம்பூச்சி படத்தில் பசி எடுக்கிற நேரத்தில் உன்னைப் பார்க்கணும் என்ற புலமைப்பித்தன் பாடலை சங்கர் கணேஷ் இசையிலும் தங்கத்தில் வைரம் படத்தில் என் காதலி யார் சொல்லவா என்று ஜேசுதாசுடன் பாடியதும் இனிய பாடல்கள்.மாலை சூடவாவில் வாலி எழுதி விஜயபாஸ்கர் இசையமைத்த பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் , மன்மத லீலையில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ். வி.இசையமைத்த மன்மதலீலை மயக்குது ஆளை ,சுகம்தானா சொல்லு கண்ணே என பல பாடல்கள் நினைவில் ஆடி வரும்.லலிதா படத்தில் தன் அக்காவாக நடித்த சுஜாதாவுடன் கமல் நடனமாட மெல்லிசை மன்னரின் மயங்க வைக்கும் பியானோ இசையில் கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல் ஒன்று உள்ளது. சொர்க்கத்திலே முடிவானது என்ற அந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் பாடினார்கள். மறக்க முடியாத பாடல் இது.இதே போல நீலமலர்கள் படத்தில் எம்.எஸ்.வி/கண்ணதாசன் கூட்டணியில் கமலுக்கு தன் இனிமையான ஹம்மிங்குடன் எஸ்.பி.பி.பாடிய பாடல் பேசும் மணிமொட்டு ரோஜாக்களே...குரு படத்திலும் இதே போல இளையராஜா இசையில் ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டு கள் என்ற பாடலும் குழந்தைகளுடன் ஆடிப்பாட வைக்கும் அழகான பாடல். அதே படத்தில் பேரைச் சொல்லவா, பறந்தாலும் விட மாட்டேன் போன்ற பாடல்கள் சக்கை போடு போட்டன. ஆடுபுலி ஆட்டம் படத்தில் வானுக்குத் தந்தை எவனோ என்ற கண்ணதாசனின் பாடல் என் நினைவை விட்டு நீங்காது. கோவில் பார்த்து சொல்லு உந்தன் கவலை.போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை. வானில் மூன்றாம் பிறை வரும் போது வாசலில் துண்டை இட்டு திருக் குரான் ஓது. துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை என்று அற்புதமாகப் பாடினார் எஸ்.பி.பி.அபாரமாக நடித்தார் அன்றைய கமல்.இன்றைய பகுத்தறிவு கமல் இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.இதே படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய உறவோ புதுமை பாடலும் இனிமையானது.இசை விஜயபாஸ்கர். நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான்,இலக்கணம் மாறுதோ போன்ற கண்ணதாசன் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை .இசை விஸ்வநாதன் .அவர்கள் படத்தில் எஸ் பி.பி.பாடிய ஜூனியர் ஜுனியர், அங்கும் இங்கும் பாதை உண்டு ஆகிய கண்ணதாசன்/MSV பாடல் களும் பேரின்பம் தருபவை. பாலு மகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் படத்தில் மாபெரும் இசை மேதை சலீல் சௌத்ரி இசையில் கங்கை அமரன் எழுதிய நான் எண்ணும் பொழுதில் ஏதோ சுகம் என்ற பாடலையும் பாடிய எஸ்.பி.பி. நீயா படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதிய நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா என்ற மிகமிக இனிய பாடலை பாடினார் ...இந்த பாடலில் அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை என்ற வரியில் கமல் வென்றாரா எஸ்.பி.பி.வென்றாரா என பந்தயமே கட்டலாம்.என்னைப் பொருத்தவரை இருவருமே வென்றனர்.இப்படத்தில் ஒரு கோடி இன்பங்கள், உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை பாடல்களை ரவிச்சந்திரன் மற்றும் விஜயகுமார் பாடி நடித்தனர்.கண்ணதாசன் எழுதிய இன்னொரு அற்புதமான எஸ்.பி.பி.யின் பாடல் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா பாடலுக்கும் கமல் வாயசைக்கவில்லை... வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு கண்ணதாசனின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலையும் பாரதியின் தீர்த்தக்கரையினிலே, நல்லதோர் வீணை செய்தே பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி நம்மை மகிழ்வித்தார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாரதி கண்ணம்மா,யாதும் ஊரே,எங்கேயும் எப்போதும் , இனிமை நிறைந்த உலகம் இருக்கு,காத்திருந்தேன் காத்திருந்தேன்,நிழல் கண்டவன் நாளும் இங்கே,யூ ஆர் லைக் எ ஃபவுண்டன்,போன்ற இனிய பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. எஸ்.ஜானகியுடன் வெறும் ஹம்மிங்கில் நினைத்தாலே இனிக்கும் பாடலைப் பாடி அசதாதினார்.பாடல்கள் கண்ணதாசன் இசை எம்.எஸ்.விஸ்வநாதன். உல்லாசப் பறவைகள் படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த ஜெர்மனி யின் செந்தேன் அழகே பாடலும் பல முறை கேட்டு ரசிக்கத் தக்கது.இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இளையராஜா இசையில் வாலி எழுதிய ஒரே நாள்,என்னடி மீனாட்சி ஆகிய இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.சட்டம் என் கையில் படத்தில் சொர்க்கம் மதுவிலே பாடலும் ஹிட்டாக வும் ஹாட்டாகவும் இருந்தது. மீண்டும் கோகிலா படத்தில் ராதா ராதா நீ எங்கே பாடலும் இளையராஜா இசையில் மயக்கியது.வாலி எழுதிய 3 பாடல்களை எஸ்.பி.பி.ராம் லட்சுமண் படத்தில் இளையராஜா இசையில் பாடினார். விழியில் உன் விழியில் ,நடக்கட்டும் ராஜா,நான்தான் உன் அப்பன்டா, ஆகிய வாலியின் பாடல்களுடன் வைரமுத்து எழுதிய ஓணான் ஒன்று, வாலிபமே வா வா ஆகிய பாடல்களையும் இப்படத்தில் எஸ்.பி.பி.பாடினார்.இதே போல் இளையராஜா இசையில் எஸ்.ஜானகியுடன் பாடிய வைரமுத்து பாடல் அந்திமழை பொழிகிறது பாடலும் அபாரமானது. சிம்லா ஸ்பெஷல் படத்தில் எம்.எஸ்.வி. இசையில் வாலி எழுதிய உனக்கென்ன மேலே நின்றாய் பாடலில் கமல் தவளையைப் போல நடனமாடி சொதப்பினாலும் எஸ்.பி.பி.தன் குரலால் உயிர் தந்து பாடலை தூக்கி நிறுத்தினார். சங்கர்லால் படத்தில் வைரமுத்து எழுதி இளையராஜா இசையமைத்த தெரியும் தெரியும் விஷயம் தெரியும் பாடலும் புலமைப்பித்தன் எழுதிய இளங்கிளியே இன்னும் விளங்கலியே பாடல்களும் ரசிக்கக் கூடியவை. சட்டம் படத்தில் கங்கை அமரன் இசையில் வாணி ஜெயராமுடன் எஸ்பிபி பாடிய வா வா என் வீணையே,அம்மம்மா சரணம் உன் பாதங்கள்,பாடல்கள் சுகமானவை. இப்படத்தில் ஒரு நண்பனின் கதையை அற்புதமாகப் பாடினார் எஸ்.பி.பி. மலேசியா வாசுதேவனுடன் இணைந்து நண்பனே எனது உயிர் நண்பனே பாடலையும் எஸ்பிபி பாடினார். பாடல்கள் எழுதியவர் வாலி. தாயில்லாமல் நானில்லை படத்தில் நடிகனின் காதலி நாடகம் ஏனடி என்ற பாடலை சங்கர் கணேஷ் எஸ்.பி.பி. பாட வாலி எழுதினார். எனக்குள் ஒருவன் படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடல் ஆட வைக்கும். எங்கே எந்தன் காதலி , முத்தம் போதாதே ஆகிய டூயட் பாடல்களும் இனிமையானவை. ஒரு கைதியின் டைரி படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் நான்தான் சூரன் பாடல் கமலுக்கான ஹீரோயிச பாட்டு. காக்கிச் சட்டையில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஹிட்டான பாடல்களாகின. புலவர் புலமைப்பித்தன் எழுதிய கண்மணியே பேசு பாடலும் வாலி எழுதிய நம்ம சிங்காரி சரக்கு பாடலும், நா.காமராசன் எழுதிய வானிலே தேனிலா ஆடுதே பாடுதே ஆடலாமா பாடலும் அவினாசிமணி எழுதிய பூப்போட்ட தாவணி பாடலும் பலமுறை கேட்டாலும் சலிக்காதவை. இதே போன்று உயர்ந்த உள்ளம் படத்தில் வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே பாடலை எஸ்.பி.பி பாடினார். ஓட்டச் சட்டிய வச்சுக்கிட்டு , என்ன வேணும் தின்னுங்கடா என்ற ஜாலியான பாடல்களும் இதில் இடம் பெற்றன. பாடலாசிரியர் வாலி, இசை இளையராஜா. ஜப்பானில் கல்யாணராமன் படத்திலும் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி கமலுக்காகப் பாடினார். நானும் ஒரு தொழிலாளி என்று ஸ்ரீதர் இயக்கிய படத்தில் 5 பாடல்களை எஸ்.பி.பி. பாடியுள்ளார். காதல் பரிசு படத்தில் புலமைப்பித்தன் எழுதிய கூக்கூ என்று குயில் கூவாதோ பாடலும் முத்துலிங்கம் எழுதிய காதல் மகராணி கவிதைப் பூ விரித்தாள் பாடலும் இனிமையான பாடல்கள். கமலின் நடனமும் நவரஸமும் ரசிக்கத்தக்கது. அம்பிகாவும் ராதாவும் இந்தப் பாடல்களில் கொள்ளை அழகு. அந்த ஒரு நிமிடம் படத்தில் வேங்கை வெளியே வருது வருதுவருது விலகு விலகு என்ற பாடலும் இளையராஜா இசையில் வாலி எழுதி புகழ் பெற்ற பாடல். சத்யா படத்தில் லதா மங்கேஷ்கருடன் வளையோசை கல கலவென பாடலை வாலி எழுத, இளையராஜா இசையில் எஸ்.பி.பி .பாடினார். உன்னால் முடியும் தம்பி என்ற கே.பாலசந்தர் படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு , உன்னால் முடியும் தம்பி, அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா பாடல்களை எஸ்பிபி மிக அழகாகப் பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் பாடல்களை புலமைப்பித்தன் எழுதினார். இதழில் கதை எழுதும் நேரமிது என்ற முத்துலிங்கம் எழுதிய டூயட்டையும் சித்ராவுடன் பாடினார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கையை வச்சா, உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன், புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, வாழ வைக்கும் காதலுக்கு ஜே ஆகிய பாடல்களையும் எஸ்.பி.பி. கமலுக்கு மகுடம் சூட்டி வைரங்களாகப் பதித்துத் தந்தார். பாடல்களை வாலி எழுத இளையராஜா இசையமைத்தார். உன்னை நினைச்சேன் பாடல் பழைய கிளிஷே வரிகளுடன் இருந்தாலும் கூட எஸ்.பி.பியின் சோகம் ததும்பும் குரலும் கமலின் குள்ளர் நடிப்பும் பாடலின் மீது பெரும் இரக்கத்தை வரவழைத்தன. வெற்றி விழாவில் வாலி இளையராஜா கூட்டணியில் பூங்காற்று உன் பேர் சொல்ல என்ற நினைவில் ஆடக்கூடிய டூயட்டையும கமல் எஸ்.பி.பியின் குரலில் பாடினார். தேவர் மகன் படத்தில் சாந்துப் பொட்டு, வானம் தொட்டுப் போனான் பாடல்களையும் வாலி எழுதி இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். கலைஞன் படத்திலும் சிங்காரவேலனிலும் கமலுக்காக எஸ்.பிபி பாடியிருக்கிறார். மகா நதி படத்தில் ஷோபனா என்ற கர்நாடக பாடகி மகளாக நடிக்க கமல் பாடிய ஸ்ரீரங்க நாதனின் பாதம் பாடல் காவிரியின் மண் மணத்தையும் கொண்டு வந்து வீசுகிறது. இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.பி.பியும் பிசுசிலாவும் பாடிய வாலியின் பாடல் கப்பலேறிப் போயாச்சு .... ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் கேட்கக்கூடிய பாடலாக இது இருக்கும். இந்தப் படத்தில் மாயா மச்சிந்தரா பாடலும் சிறப்பானது. அவ்வை சண்முகியில் வேலை வேலை ஆம்பளைக்கும் வேலை என்ற பாடலையும் கமலுக்கு எஸ்.பி.பி பாடினார். இசை தேவா. இதில் தந்தைக்கு இங்கு தாய் வேஷம் என்ற வரியில் எஸ்.பி.பியின் குரலுக்கு கமலின் கண்கள் மட்டுமல்ல நமது கண்களும் கலங்கத்தான் செய்தன. வாழ்வே மாயம் படத்தில் நீலவான ஓடையில் பாடலையும் வந்தனம் என் வந்தனம் பாடலையும் தேவி ஸ்ரீதேவி பாடலையும் வாலி எழுத கங்கை அமரன் இசையில் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...