Thursday 28 July 2016

இந்திய சினிமா - உடுத்தா பஞ்சாப் -UDTA PUNJAB

நிழல் சினிமா பத்திரிகையின் 2016 ஜூலை இதழில்  வெளியான எனது கட்டுரை
                                

UDTA PUNJAB

நாகரீகம் என்பது எல்லாம் போதையான பாதை அல்ல.....
செந்தூரம் ஜெகதீஷ்



உட்தா பஞ்சாப் என்றால் பறக்கும் பஞ்சாப் என்று பொருள். மிதக்கும் பஞ்சாப் என்றும் பொருள் கொள்ளலாம். மிதப்பு போதையினால் .சாதாரணமாக பெட்டிக்கடைகளில்  50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு போதை ஊசி முதல் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் 3 கிலோ ஹெராயின் வரை பல வகை போதைப் பொருட்களுடன் நான்கைந்து கதாபாத்திரங்கள் தனித்தனியாக நடத்தும் யுத்தம்தான் இந்த படத்தின் மையக்கரு.
பாப் பாடகனான டாமி சிங் காப்ரூ என்ற பட்டப்பெயரில் அழைக்கப்படுகிறான். காப்ரு என்றால் பஞ்சாபியில் என்ன அர்ததம் என்று தெரியவில்லை. கிங் என்பதாக இருக்கலாம். அதுபோல் ஆணவம் தொனிக்கும் ஒரு சொல்...நான்தான்டா ராஜா என்கிற மாதிரி. அவன் பாடிய பாடல்கள் யாவும் போதையின் பாதையில் இளைஞர்களை போகத்தூண்டுபவை. போதையேற்றும் இசையால் போதைக்கு அடிமையாக்குகிறான் இளைஞர்களை. ஒரு காட்சியில் சிறையில் இருக்கும் போது டாமிசிங்கிடம் சில சிறுவர்கள் கூறுகிறார்கள். நாங்க எட்டாவது படிக்கும்போது நீங்கள் முதல் பாடலைப் பாடினீர்கள். அதைக் கேட்டுதான் முதன்முதலாக போதைப்பொருளுக்கு அடிமையானோம்.....இந்த ஒரு காட்சிதான் படத்தின் ஜீவனாக உள்ளது.மற்றதெல்லாம் சினிமா.
இன்னொரு காட்சியில் டாமிசிங்கின் பிறந்தநாள் பார்ட்டியில் தாராளமாக போதைப் பொருள் புழங்குவதை அறிந்து ரெய்டு நடத்த வருகிறது போலீஸ் படை. டாமிசிங் போதையில் கிறங்கிப் போய் கழிவறைக்குள் விழுந்துக் கிடக்கிறான். போலீசார் அவன் எங்கே என தேடும் போது அவன் மாமா கூறுகிறார் அவன் நேற்றிரவே லண்டனுக்குப் போயிட்டானே என்று.
அப்போது டாமிசிங்கிற்கு விழிப்பு வருகிறது. கழிவறை நீரில் தனது பிம்பத்தைப் பார்த்து போதையில் பிதற்றுகிறான். என்னடா பத்து நாள் சாப்பிடாத மாதிரி முணுமுணுக்குறே என அவன் தன்னையே கேலி செய்துக் கொண்டு உச்சஸ்தாயியில் நான்தான் காப்ரூ என கத்துகிறான். கீழே  இருக்கும் போலீசாருக்கு அவன் குரல் கேட்கிறது. மாமா முகத்தில் அசடு வழிய அவன் லண்டனுக்குப் போகலீயா என பணியாட்களை கேட்கிறார். பின்னர் சமாளித்து டாமிசிங் இப்போதெல்லாம் போதைப்பொருட்களைத் தொடுவதே இல்லை என்கிறார். ஆனால் அதையும் பொய்ப்பித்து டாமி கீழே இறங்கி வருகிறான். ஆவேசமாக போதையில் நான்தான் காப்ரு என பிதற்றுகிறான். போலீஸ் அவனை கைது செய்கிறது. படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைக் காட்சி இது.
டாமிசிங்காக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறார் ஷாகித் கபூர். உடலெல்லாம் பச்சைக் குத்தி தலைமுடியின் ஒரு பக்கத்தை வழித்து விட்டு சிறிய குடுமி காது கடுக்கன், ஆடம்பர ஷூ கார் என சொகுசு வாழ்வில் சீரழிந்த ஒரு விஐபியை இத்தனை தத்ரூபமாக வேறு படத்தில் பார்த்ததாக நினைவில்லை.
இன்னொரு ஜீவனுள்ள பாத்திரம் படத்தின் கடைசி காட்சியில் தனது பெயர் மேரி ஜேன் என்று கூறும் அலியா பட். பீகாரிலிருந்து ஹாக்கி வீராங்கனையாகும் கனவுடன் பஞ்சாப் வரும் அவர் தந்தையின் மறைவால் வயல்காடுகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாகிறார். ஒருநாள் இரவு இயற்கை உபாதையை தீர்க்க வயல்காட்டுக்குசெல்லும் போது பொத்தென ஒரு பொட்டலம் விழுகிறது. அது 3 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பவுடர். அந்த போதைப் பவுடர் எல்லையின் அந்தப்பக்கத்திலிருந்து விழுகிறது. வேலிக்கு இந்தப் பக்கம் அதைத் தேடி வரும் ஒருவன் போலீசைக் கண்டதும் ஓடி விடுகிறான். பீகார் பெண்ணிடம் கிடைத்த போதைப் பொருளின் விலையை அறிந்துக் கொள்ளும் அவள் அதை விற்பதற்காக அந்த சரக்குக்கு உரிமையாளரிடமே பேரம் பேசுகிறாள். அப்போது வில்லன்கள் அவளைத் துரத்துவதால் அதை கிணற்றுக்குள் கொட்டி நாசம் செய்துவிடுகிறாள். அதன் பிறகுதான் அதன் உண்மையான மதிப்பு ஒருகோடி ரூபாய் என்று புரிகிறது அவளுக்கு. ஒரு கோடி ரூபாயை நட்டமாக்கி விட்ட அவளை சிறைப்பிடிக்கும் வில்லன் கோஷ்டியினர் தனியறையில் அடைத்து வைத்து அவளை மாறி மாறி பலாத்காரம் செய்கின்றனர். பணத்துக்காக அவளை அந்த ஊர் காவல்துறை உயரதிகாரி உட்பட பலரிடம் கூட்டியும் கொடுக்கின்றனர். இதில் சோனு என்ற ரவுடி அவளிடம் ஆசை கொள்கிறான். கடைசியில் சுவரிலிருந்து பிடுங்கிய பெரிய ஆணியால் அவனை அவள் குத்தி குத்தி குத்தி குத்தி கொல்லும் வெறித்தனம் வன்முறைதான் என்றாலும் அந்தப்பெண்ணின் மனநிலையை அதைவிட பெரிதாக காட்சிப்படுத்தி விட முடியாது. அலியா பட்டுக்கு இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடிய அற்புதமான கதாபாத்திரம். பின்னி எடுத்து தான் மிகச்சிறந்த நடிகை, பிகினி உடையில் பார்க்கக்கூடிய அழகுப்பதுமை அல்ல என்று நிரூபித்திருக்கிறார். அவர் கிணற்றி்ல் விழுந்து நீந்தும் காட்சியிலும் படத்தின் இறுதியில் கோவா கடலில் இறங்கி நீந்தும் காட்சியிலும் பிகினியுடன் அலியா பட்டை காட்டியிருக்கலாம். ஆனால் சல்வாருடன் தான் நீந்துகிறார். போனால் போகட்டும் என்று அலியாவின் ரசிகர்களுக்காக ஷாகித் கபூருடன் ஒரு அழுத்தமான முத்தக்காட்சி மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு நியாயம் கற்பிக்க அவள் கூறுகிறாள் எனக்கு இது ஒன்று மட்டும் கிடைக்கலே .மீதி எல்லாத்தையும் செஞ்சிட்டாங்க பாவிங்க....காமத்தில் முத்தமில்லை. களவியின் வெறித்தனம் வசனமாகிவிட்ட காட்சி இது.
ஷாகித்திடம் உன்பெயர் என்ன என்று கேட்கும் போது அவன் டாமி என்று கூற நாயா என்று கேட்பது அரங்கத்தை அதிர வைக்கிறது, 
படத்தின் இன்னும் மூன்று கதாபாத்திரங்களை கண்டிப்பாக சொல்லத்தான் வேண்டும். பல்லி (bhalli) என்ற பதின்பருவத்து சிறுவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி கொலைகாரனாக மாறும் வரை அவனது போராட்டம் நம்மை நிலைகுலைய வைக்கிறது. போலீஸ் காவலராக உள்ள அண்ணன் சர்தாஜ் சிங் தரும் செலவுக்காசு நூறு ரூபாயில் இரண்டு பாட்டில்கள் போதை மருந்தை வாங்கி ஊசியில் செருகிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான் .அங்கு அவனுக்கு போதையிலிருந்து விடுபட சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் ப்ரீத் சஹானி.
ப்ரீத் சஹானியாக நடித்துள்ள கரீனா கபூரும் சர்தாஜ் சிங்காக நடித்துள்ள தில்ஜித் தோசன்ஜ் மற்றும் பல்லியாக நடித்துள்ள பிரப்ஜோத்சிங் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக் காட்டியுள்ளனர். குறி்ப்பாக சர்தாஜ் சிங் டாக்டரிடம் தனது காதலை போதையில் உளறும் காட்சி ஒரு கவிதை.
கரீனா கபூரும் கிளாமரை கைவிட்டு முப்பது வயது பெண் டாக்டராக மனம் கவர்கிறார். பல்லியை மீட்க அவர் போராடுவதும் சர்தாஜூக்கு உதவியாக ஜேம்ஸ்பாண்ட் வேலைகள் செய்வதும் போதைப் பொருள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டுவதும் கறை படிந்த போலீசாரை நம்பாமல் தேர்தல் ஆணையத்திடமும் மீடியாவிடமும் உண்மைகளை அம்பலப்படுத்த கூறும் அறிவுபூர்வமான ஆலோசனை கூறுவதும் அந்தப் பாத்திரம் ஒரு பொம்மை பாத்திரமல்ல என்று அழுத்திக்கூறுகிறது. படத்தின் முடிவில் அவர் பல்லியை தடுக்கமுயன்று கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்தம் சிந்தி உயிரை விடும் காட்சி சினிமாத்தனமாக இருந்தாலும் ஒரு அழுத்தமான உணர்வைத் தர தவறவில்லை.
சர்தாஜாக நடித்த தில்ஜித்துக்கும் இப்படம் ஒரு சிறந்த அறிமுகம். காதல் , ஹீரோயிசம், தம்பி மீது பாசம் என எல்லாம் இருந்தபோதும் ஒரேயொரு ஸ்டார் மட்டும் சட்டையில் உள்ள சாதாரண போலீஸ்காரனால் இந்த போதைப் பொருள் கும்பலையும் அதற்கு துணையாக உள்ள அரசியல்வாதிகளையும் தனது மூத்த அதிகாரிகளையும் எதிர்க்க முடியாமல் பொருமும் இடமும் கடத்தல் பேர்வழிகளை அடித்து உதைக்கும் காட்சியிலும் அபாரமான நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் வெளி்ப்படுத்துகிறார் . கடைசி காட்சியில் அவர் மாமாவான உயரதிகாரி என் பெயரையும் சேர்த்து ஆவணங்களை தயாரித்தது ஏன் என்று கேட்பார். என் பெயரைக்கூட சேர்த்திருக்கிறேன். நானும் வாரம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறேன் என்று கூறுவார் சர்தாஜ். யாருக்காக இதை செய்தாய் என்ற அடுத்த கேள்விக்கு பஞ்சாபுக்காக என்பார்.
போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கியுள்ள பஞ்சாப் இளைஞர்களை மீ்ட்டெக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதால் படத்தின் பல காட்சிகள் பிரச்சாரம் போல் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் முதல் பத்து இருபது நிமிடக் காட்சிகள் டெரர், போதைப் பொருள் பயன்படுத்தாதோரையும் தூண்டக்கூடியவை. 
இப்படத்திற்கு தணிக்கைத்துறை 89 இடங்களில் வெட்ட வேண்டும் என்று படத்துக்கு தடை விதித்தது. ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் ஒரேயொரு வெட்டுடன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தது. இளைஞர்களை இந்தப் படம் கெடுக்க நினைக்கிறதா திருத்த நினைக்கிறதா என்று பட்டிமன்றம் வைத்தால் இருதரப்பினருக்கும் வாதிட ஏராளமான காட்சிகள் உண்டு.
படத்தில் அமித் திரிவேதியின் இசை அற்புதமானது. பாடல்களால் அதிகம் கவராத போதும் பின்னணி இசையிலும் தீம்மியூசிக்கிலும் கடைசியில் டாமிசிங் அலியாவை நினைத்துப் பாடும் ஒரு பாடலிலும் இசையமைப்பாளர் பாராட்டுக்குரியவராகிறார்.
அபிசேக் சவுபேயின் இயக்கம் படத்தின் ஜீவனை காப்பாற்றுகிறது. பாத்திரங்களை வர்ததக சமரசமின்றி அப்படியே படைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒருநல்ல படத்திற்கான ஓட்டமும் காட்சியமைப்பும் படத்தில் இருக்கிறது.
இப்படத்தை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் காட்டக்கூடாது என்று சில பெரியவர்கள் சொன்னார்கள். நான் எக்ஸ்பிரஸ் அவின்யூ எஸ்கேப் திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கும் போது படம் வந்து இரண்டுவாரங்களாகிவிட்ட போதும் நாற்காலிகள் நிரம்பியிருந்தன. எல்லோரும் ஜீன்ஸ் டைட்ஸ் அணிந்த இளைஞர் இளைஞிகள்தாம். கையில் நூறு ரூபாய்க்கு பாப்கார்னும் 150 ரூபாய்க்கு கோக்கும் வாங்கி டிரேக்களில் கொண்டு வந்து சாப்பிட்டபடியே படம் பார்க்கும் பணக்கார இளைய தலைமுறையினர்தான் அதிகம். படம் முடித்து போதையில் சிக்கிய இளைஞர்களை எண்ணியவாறு டாஸ்மாக் கடைகளை கடந்து கெயிட்டி பேருந்து நிலையத்தில் 29 ஏ பேருந்துக்காக காத்திருந்த போது ஒரு மனநலம் தவறிய முதியவர் குப்பையில் போட்ட வாழை இலையை எடுத்து வந்து வேகம்வேகமாக அதில் இருந்த கலப்படமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் சாப்பிடுவதை நிறுத்தி நான் அவரைப் பார்ப்பதை உற்று பார்த்தார். பின்னர் மீண்டும் வேகமாக சாப்பிட்டு விட்டு எதிர்திசையில் ஓடி விட்டார். என்னால் அந்த சோற்றில் ஒரு பருக்கையை சாப்பிட முடியாது வாந்தி எடுத்து ஆஸ்பத்திரியில் கிடப்பேன். ஆனால் அவர் அதை முழுவதும் சாப்பிட்டு இலையை நக்கி துடைத்து தூக்கியெறிந்துவிட்டார். ஒருநல்ல முழு சாப்பாடு நூறு ரூபாய்க்கே கிடைக்கும் . படத்தில் காட்டியபடி ஒரு கிராம் போதைப் பொருள் 300 ரூபாய் தான். பாப்கார்ன்விலை யும் 100 ரூபாய்தான். கோக்கின்விலை 150 ரூபாய்.
குழப்பமான நினைவுகளுடன் நீண்டநேரம் போராடிக்கொண்டிருந்தேன். எச்சிலை இலையில் சாப்பிட்ட அந்த மனநலம் தவறிய மனிதரும் டாஸ்மாக் அல்லது போதையால் அடிமையாகி அப்படி ஆகிவிட்டாரோ..... அவர் உற்றுப்பார்த்து என்னிடம் என்ன சொல்ல நினைத்தார் ?
-----------------------------------------------


அஞ்சலி -கவிஞர் ஞானக்கூத்தன்

தமிழ் நவீனக் கவிதைகளின் முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். தமது 78வது வயதில் காலமானார். ( 28.07.2016 )
முதல்முறை அவரை எங்கே சந்தித்தேன் என்று நினைவில்லை.ஆனால் பலமுறை சந்தித்துப் பேசியது நினைவில் உள்ளது. ஜெயமோகனுடன் ஒருமுறை பெரம்பூர் ஜமாலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டேன். அக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் எங்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் எனது கவிதைத் தொகுப்பான இன்னும் மிச்சமிருப்பவை வெளியீட்டு விழாவுக்கு அழைத்தேன். வருவதாக கூறி மறந்துவிட்டார். பெரியார்தாசன் பெயரை போட்டதால் அவர் வரவில்லை என்று சில நண்பர்கள் கூறினார்கள். ஏன் வரவில்லை என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் கூறவில்லை. ஆனால் என் கவிதைகளைப் பற்றி நேரில் பாராட்டினார்.
செந்தூரம் சார்பில் நடைபெற்ற பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஞானக்கூத்தன் முன்வரிசையில் வந்து அமர்ந்திருப்பார். சில கூட்டங்களில் கலந்துக் கொண்டு பேசியும் இருக்கிறார்.
திருப்பூரில் ஒருமுறை இலக்கிய நிகழ்வொன்றில் கோவை ஞானியுடன் அவரை சந்தித்தபோதும் நீண்ட நேரம் உரையாடியது மனதுக்குள் நிழலாடுகிறது. அப்போது அங்கு வந்த கவிஞர் கனிமொழியின் கவிதைகள் குறித்து ஞானக்கூத்தன் அவரிடம் பேசிக் கொண்டிருந்ததை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். கனிமொழி பயன்படுத்திய கறுக்கு மருதாணி என்ற சொல் பிரயோகத்தைப் பற்றி அவர் கூறிக் கொண்டிருந்தார். ஒருமுறை கணையாழியில் ஞானக்கூத்தன் கட்டுரையொன்றில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வலியுறுத்த அந்த இடத்தை சுழியிட்டு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டதை நண்பர் சூர்யராஜன் ரசித்துப் படித்து என்னிடம் கொண்டு வந்து காட்டினார். அன்றும் கனிமொழியின் கறுக்கு மருதாணியை அவர் சுழியிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சியில் அவரை பேட்டி கண்டேன். தமிழின் மிகச்சிறந்த பேட்டிகளில் அதுவும் ஒன்று. அதன் பிரதி என்னிடம் இல்லை என்று மனம் வருந்துகிறது.
ஓரிருமுறை திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கிங் செல்லும் அவரை சந்தித்து பேசியிருக்கிறேன்.அவர் வீடுகளுக்கும் ஓரிரு முறை போயிருக்கிறேன்.

ஞானக்கூத்தன் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் மனம் இருப்பு கொள்ளவில்லை. நண்பர் ஆர்.கே.ரவியை அழைத்துக் கொண்டு அவர் வீடு இருந்த ஈஸ்வரதாஸ் தெருவைத் தேடிச் சென்ற போது புதிய தலைமுறை, தந்தி டிவி நண்பர்கள் கேமராவும் கையுமாக அவர் தெரு முனையில் நின்றிருந்தனர். எழுத்தாளர்கள் பாலகுமாரன், சா.கந்தசாமி, ஆர்.ராஜகோபால் போன்றோரும் அங்கு இருந்தனர். மீடியாக்கள் பாலகுமாரனையும் கந்தசாமியையும் பேட்டி எடுத்தன. தமிழின் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன் என்று பாலகுமாரன் கூறினார். உண்மைதான் என்பது சற்று அழுத்தமாக மனதுக்குள் பதிந்தது.
ஞானக்கூத்தனுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி



Sunday 24 July 2016

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்
வசனத்தில் உறைந்த மௌனங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்ற வி.சி.கணேசன் சினிமாவில் சிவாஜி கணேசனாக மாறி விஸ்வரூபம் எடுத்த வரலாற்றை நினைத்துப் பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.மேடையில் கணேசனின் நடிப்பைப் பார்த்து பாராட்டிய பெரியார் அவருக்கு சிவாஜி பட்டத்தை தர அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.
பராசக்தி படம் மூலம் திரையுலக இன்னிங்சை தொடங்கிய சிவாஜி அடித்ததெல்லாம் சிக்சர்தான்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் ..சிதம்பரம் பிள்ளை, கைகொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார், சொர்க்கம் படத்தில் சாக்ரடீஸ், திருவிளையாடலில் சிவபெருமாள், திருவருட்செல்வரில் நாவுக்கரசர், சரஸ்வதி சபதத்தில் நாரதர், கந்தன் கருணையில் வீரபாகு, ராஜபார்ட் ரங்கதுரையில் ஷேக்ஸ்பியர், திருப்பூர் குமரன், போன்ற புராண, வரலாற்று பாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் சிவாஜிதான். சிவாஜியின் முகத்தை மறைத்து இந்த பாத்திரங்களை நம்மால் இனி கற்பனையே செய்ய முடியாது. அதுமட்டுமா ?கர்ணன், ராஜாராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன்,ஹரிச்சந்திரன், தெனாலி ராமன், அம்பிகாபதி போன்ற பாத்திரங்களிலும் சிவாஜி காட்டிய நடிப்பின் பன்முகத்தன்மையை இன்று வரை எந்த ஒரு நடிகனும் இத்தனை கலாபூர்வமாக ஈடு செய்ததில்லை. கமல்ஹாசன் ஓரளவு நெருங்கி வந்தாலும் செயற்கையான நெடி வீசும் நடிப்பையே அவரது சில படங்களில் காண முடிந்தது. அது சிவாஜி கணேசனிடம் துளிக்கூட இல்லை. கண் புருவம் முதல் விரல் அசைவு வரை அத்தனை பாவனைகளும் இயல்பாகவே வெளியான பிறவிக்கலைஞர் அவர். உலகிலேயே சிவாஜி கணேசனுக்கு ஈடான இன்னொரு நடிகரை நான் பார்த்ததில்லை. உலகின் புகழ் பெற்ற பல நடிகர்கள் அவர் கால் சுண்டு விரலுக்கு ஈடாக மாட்டார்கள்.
சமூகத் திரைப்படங்களிலும் சிவாஜி கணேசனின் நடிப்பு புதிய திரைப்பட நடிப்புக்கான அகராதியை எழுதியது.வசந்தமாளிகையில் உருகும் காதலனாகவும் தங்கப்பதக்கத்தில் பாசத்திற்கும் கடமைக்கும் இடையே போராடும் காவல்துறை அதிகாரியாகவும் கௌரவம் படத்தில் பாசத்திற்கும் நீதிக்கும் இடையே போராடும் இருவேறு பாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகர் நம் கண்முன்னே தோன்றி செலுலாய்ட் ஸ்க்ரீனையே தீப்பிடிக்க வைத்தார். தெய்வமகன், ராஜபார்ட் ரங்கதுரை, எங்கிருந்தோ வந்தாள், சிவந்தமண், பாசமலர், பாவமன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும், பிராப்தம், புதிய பறவை, ஆலயமணி, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை, எங்க மாமா, சொர்க்கம், பாரத விலாஸ், பாகப்பிரிவினை , இமயம், பாட்டும் பரதமும், எங்கள் தங்கராஜா மன்னவன் வந்தானடி ,டாக்டர் சிவா, தியாகம், தீபம், அவன்தான் மனிதன், அண்ணன ஒரு கோவில், திரிசூலம், நான் வாழ வைப்பேன் , பட்டாக்கத்தி பைரவன் , ரோஜாவின் ராஜா, விஸ்வரூபம், என் மகன் , மோகனப் புன்னகை, பாட்டும் பரதமும், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என நீளும் 200க்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சிவாஜி கணேசனைப் போல் யாரும் நம்மை அதிகமாக கவர்ந்ததில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு தோற்றம், ஒரு ஸ்டைல், ஒரு ஆளுமை, ஒரு அழகு என பெண்களே பொறைமைப்படும் விதமாக தோன்றியவர் சிவாஜி கணேசன்.







காதலின் கொண்டாட்டத்தை மட்டுமின்றி வாழ்க்கையின் தத்துவத்தையும் சிவாஜி கணேசனின் பாத்திரங்கள் வெளிப்படுத்தின. வாழ்க்கையைத் துறந்த ஒரு பக்குவப்பட்ட ஞானியை ஆண்டவன் கட்டளையின் ஆறுமனமே ஆறு பாடலில் வெளிப்படுத்திய அவர்தான் வேதாந்தியாக பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போடா என்று பாடினார். அவரே தான் ஞான ஒளியில் உன் பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ என ஏசுவிடம் உருகுகிறார்.இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு கொடுக்க எதுவுமில்லை ஒரு குழப்பம் முடிந்ததடா என்கிற விச்ராந்தியாக அவன்தான் மனிதனில் நம்மை கலங்க வைத்தார். மருமகளிடம் உண்மையைக் கூறாமல் தத்தளிக்கும் பெரியவராக கீழ்வானம் சிவக்கும் படத்தில் நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை என்று கண்ணீருடன் வாழ்த்துகிற அந்த பாத்திரத்திலும் சிவாஜி ஜொலித்தார், பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் என்று பாடுகிற காதலனாக தியாகம் படத்திலும் பிரகாசித்தார். மருமகனுக்கு மாமன் நாளை அரண்மனை கட்டி வைப்பான் என்று மன்னவன் வந்தானில் சொர்க்கத்தில் தொட்டில் கட்டினார்.
சிவாஜி கணேசன் நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை சார்ந்த கதைகளே. தங்கைக்காக உருகும் ஒரு பாசமலரையும் எந்த கடனிலும் மிகப்பெரிது நல்ல மனைவியின் சேவை என்று விஸ்வரூபத்திலும் , அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று பழனியிலும் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் பிள்ளைக் குலமடியோ என்று வியட்நாம் வீடு படத்திலும், அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் தெய்மே என்று தாயின் அன்புக்காக உருகும் பிள்ளையாக தெய்வமகனிலும் , சிவாஜி கணேசன் காட்டிய சொந்த பந்தங்கள் நம் அருமையான சொந்தங்களை நினைத்து அவர்கள் உறவுகளுக்காக ஏங்க வைப்பவை.
புராணப்படங்களில் சிவாஜியைப் போல் இன்னொரு நடிகரை காட்ட முடியாது. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் சிவாஜி கணேசனின் பொன் முத்துகள்.
சிவாஜி கணேசன் ஆக்சன் படங்களிலும் நடித்தார். திருடன் படத்தில் திருடனாக வருவார். தங்கச்சுரங்கம் படத்திலும் ராஜா விலும் காவல்துறை அதிகாரியாக சண்டைக் காட்சிகளில் நடித்தார். சிவந்த மண் படத்திலும் நம்பியாருடன் பறக்கும் பலூனில் சண்டை போட்டார். தர்மம் எங்கே படத்தில் சுதந்திர போராட்ட வீரனாக வாள் சண்டைகள் போட்டார்.
சிவாஜி நடித்த சிவந்தமண் படம் இந்தியில் எடுக்கப்பட்ட போது முத்துராமன் நடித்த புரட்சிக்காரன் பாத்திரத்தில் இந்தியில் சிவாஜியை நடிக்க வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர். சிவாஜி நடித்த பிரதான பாத்திரத்தில் இந்தியில் நடித்தவர் அப்போது ஸ்ரீதரின் அபிமான நடிகராயிருந்த ராஜேந்திரகுமார்.( ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தி ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார்)
தச்சோளி அம்பு என்ற மலையாளப்படத்திலும் சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால் அவரது திரைப்பட வாழ்வும் வரலாறும் தமிழ்த்திரைப்படங்களுடனே பிணைக்கப்பட்டு விட்டதால் இந்திய அளவில் கூட தெரியாமல் போய்விட்டது. தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் . 12 முறை தேசிய விருது என மத்திய அரசு அவரை கௌரவித்த போதும் இன்னும் பலப்பல விருதுகளுக்குத் தகுதியானவர் சிவாஜி . பிரான்ஸ் அரசு அவருக்கு செவாலியே விருது அளித்து மகிழ்ந்தது.
எம்ஜிஆருடன் கூண்டுக்கிளி என்ற படத்தில் மட்டும் சிவாஜி கணேசன் சேர்ந்து நடித்தார். எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் அந்த நாள் படத்திலும் கே.பாலசந்தரின் எதிரொலி படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் தேவர்மகன், நாம் பிறந்த மண், சத்யம் ஆகிய படங்களிலும் ரஜினியுடன் ஜஸ்டிஸ் கோபிநாத், படிக்காதவன், விடுதலை, படையப்பா, நான் வாழ வைப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் ஒரு படத்திலும் சத்யராஜூடன் இரண்டு படங்களிலும் விஜய்யுடன் ஒன்ஸ்மோர் படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். பாக்யராஜூடன் தாவணிக் கனவுகளிலும் பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதையிலும் சிவாஜி கணேசன் நடிப்பில் புதிய பரிமாணங்களை வெளியிட்டார்.
ருணாநிதியின் கதை வசனத்தில் பராசக்தி, மனோகரா போன்ற படங்களில் நடித்த சிவாஜியின் வசன உச்சரிப்புகள் பிரசித்தி பெற்றவை. வீரபாண்டி கட்டபொம்மன் படத்தில் அவர் பேசும் வசனம் ஒலிக்காத பட்டி தொட்டி இல்லை. அதே போல் திருவிளையாடலில் கருமியாக நடித்த நாகேஷூடன் சிவாஜி பேசும் வசனங்கள். ஆனால் சிவாஜியின் நடிப்போ இந்த வசனங்களில் உறைந்திருக்கும் மௌனங்களாலேயே மனம் கவர்ந்தது.
சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி காலமானார். ஆனால் சினிமாவில் சிவாஜிக்கு காலமில்லை. அவர் காலம் கடந்த நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டவர் .அந்த நடிப்பை இன்னொரு தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் சிவாஜியி்ன் நடிப்பை புரிய வைக்கும் ரசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அவருடைய படங்களின் டிவிடிக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் சிவாஜி கணேசனின் படங்களுக்கும் பாடல்களுக்கும் மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கக் கோர வேண்டும். அனைத்துப் பத்திரிகைகளும் ஆண்டுக்கொரு சிவாஜி கணேசன் சிறப்பிதழை வெளியிட வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சிவாஜி கணேசன் பாடமாக்கப்பட வேண்டும்.
சினிமா உள்ள வரை சிவாஜி கணேசன் இருக்க வேண்டும். இதுதான் ஒரு எளிய ரசிகனின் ஆசை.
--------------------------------------------
 
 
 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...