Tuesday 12 December 2017

அஞ்சலி -சசிகபூர்

அஞ்சலி
இரண்டாம் நாயகன் - சசிகபூர்
செந்தூரம் ஜெகதீஷ்

இளம் பள்ளிப்பருவத்தில் சினிமா ஆசைகள் துளிர்விட்ட காலம் அது. தர்மேந்திரா நடித்த அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மெல்லிய மீசை முளைத்த  பதின் பருவத்தில் காதல் காட்சிகளுடன் கூடிய இளமையான இந்திப்படங்களையும் ரசிக்கப் பழகியிருந்தேன். ஆனால் திருச்சியில் இருந்து சென்னை குடியேறி வந்து இந்திப்படங்களைப் பார்ப்பதே அரிதினும் அரிதாகி விட்டது. காரணம் தமிழ்ப்படங்களை குறைந்த கட்டணத்தில் ராக்சியிலோ புவனேசுவரியிலோ மேகலாவிலோ பார்த்துவிடலாம். ஆனால் இந்திப்படங்களைப் பார்க்க தேவி தியேட்டருக்குத்தான் போக வேண்டும். தேவி பாரடைசில் இந்திப்படங்கள் போடுவார்கள். ஆனால் பால்கனி டிக்கட் 2 ரூபாய் 90 காசுகள், பேருந்து வழிச்செலவு எல்லாம் சேர்த்தால் குறைந்தது ஆறு ஏழு ரூபாய் இருந்தால்தான் பார்க்க முடியும். எங்கள் பட்ஜெட் 40 காசுகள் தந்து சரஸ்வதியில் குறத்தி மகன் பார்ப்பதுடன் திருப்தி அடையும். எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு 50 நாட்கள் கழித்துதான் குறைந்த விலையில் டிக்கட் கிடைக்கும். அப்போது சவுகார்ப்பேட்டை வட இந்தியர்களை நம்பி சால்ட் குவார்ட்டர்ஸ் நடராஜாவிலும் தற்போது நேரு ஸ்டிடேயம் உள்ள இடத்திற்கு எதிரே முன்பு இருந்த அசோக் தியேட்டரிலும் (( பின்னர் சிவசக்தி என்று பெயர் மாறியது)) செகன்ட் ரன் எனப்படும் இரண்டாம் சுற்றுக்கு இந்திப் படங்களைத் திரையிடுவார்கள். அதைப் பார்க்க ஓடுவோம்.
அப்போது அறிமுகமான நடிகர்தான் சசிகபூர். கபி கபி,  தீவார் போன்ற அமிதாப் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக வந்து மனதைக் கவர்ந்த அந்த மென்மை மிக்க முகம் மறக்கமுடியாத வகையில் பதிந்து விட்டது. அவருடைய காந்தக் கண்கள், புன்னகைக்கும் உதடுகள், சிவந்த நிறம், கோட்டு சூட்டு அணியும் போது எந்தப் பெண்ணும் ஆசை கொள்ளச் செய்யும் பேரழகு என இந்திப்பட உலக எம்ஜிஆர் போலத்தான் இருந்தார் சசிகபூர். 
பல படங்களில் இரண்டாம் நாயகனாகவும் ஷர்மிளி, ஃபகீரா, ஜப் ஜப் ஃபூல் கிலே , சத்யம் சிவம் சுந்தரம், போன்ற படங்களில் அவர் முதல் நாயகனாகவும் நடித்திருந்தார். ஏற்ற வேடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் தமது முதிர்ந்த நடிப்பால் மனநிறைவை தந்த நடிகர் அவர்.
தீவார் படம் அவருக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த படம். இயக்குனர் யஷ் சோப்ராவின் இந்தப் படத்தின் கதை வசனகர்த்தாக்கள் சலீம்-ஜாவேத். சலீம் நடிகர் சல்மான் கானின் அப்பா. ஜாவேத் இன்றும் முக்கியமான பாடலாசிரியர். அப்படத்தில் அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய வசனங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் சசிகபூருக்காவும் ஒரு வசனம் எழுதப்பட்டது. அந்த வசனம் அமிதாப்பின் அத்தனை வசனங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அண்ணன், தம்பியாக நடித்த சசிகபூரும் அமிதாப்பும் பிரிந்துவிடுவார்கள். அமிதாப் கள்ளக் கடத்தல் கோஷ்டியுடன் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிப்பார். சசிகபூர் தனது ஏழைத்தாயுடன் நேர்மை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியாக வருவார். ஒரு கட்டத்தில் அமிதாப் தனது அண்ணன் மற்றும் தாயை அடையாளம் கண்டு தம்முடன் வந்து வாழும் படி அழைப்பார். அம்மா மறுத்துவிடுவார். கறை படிந்த உனது சொர்க்கம் வேண்டாம் எனது இந்த சின்ன வீடு எனக்கு சொர்க்கம் என்று அந்த அம்மா கூறுவார். அப்போது சசிகபூருக்கும் அமிதாப்புக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறும். என்னிடம் கார் இருக்கிறது, பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது.சேவை செய்ய சேவகர்கள் இருக்கிறார்கள் உன்னிடம் என்ன இருக்கிறது என்று அமிதாப் வெடித்து எகிற அமைதியாக ஒற்றை வசனத்தில் சசிகபூர் அமிதாப்பை எதிர்கொள்வார் " என்னிடம் அம்மா இருக்காங்க"
சசிகபூரின் பண்பட்ட நடிப்புக்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கபி கபியில் தனது மனைவியின் முன்னாள் காதலை அறிந்த கணவனாக அதைக் காட்டிக் கொள்ளாமல் மனைவி மீது அளவற்ற பிரியம் செலுத்துபவராக நடிக்க சசிகபூரால் முடிந்தது. அந்த கதாபாத்திரத்தின் அற்புதம் சொல்லில் அடங்காதது. இதே போன்று மனோஜ் குமார் நடித்து இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் படத்திலும் சசிகபூர் மனோஜ்குமாரின் காதலியான ஜீனத் அமனை பணத்தால் கவர்ந்து நிச்சயம் செய்யும் காட்சியில் ஜீனத் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் போது சசிகபூரி்ன் ஆளுமை இவர் கதாநாயகன்-நாயகி இடையே வந்த வில்லன் அல்ல இரண்டாம் நாயகன்தான் என்று எண்ண வைக்கும்.
இரண்டாம் இடத்தில் இருப்பதில் வலி உள்ளது .மகாபாரதத்தில் அந்த வலி பீமனுக்கு இருந்ததை எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல் சித்தரித்தது. அரசியல் கட்சிகளில் இரண்டாம் இடங்களில் இருப்பவர்களை கேட்டால் சொல்வார்கள். எத்தனை அவமானங்களையும் வலிகளையும் அவர்கள் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் சினிமாவில் பெரும்பாலான படங்களில் இரண்டாம் நாயகனாகவே நடித்த சசிகபூருக்கு அந்த வலி இல்லை. மாறாக அவருடைய பாத்திரங்கள்தாம் ரசிகர்களின் மனங்களில் தீராத இன்பத்தையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தின.
சசி கபூருக்கு சினிமா மீது அதீத காதல் இருந்தது போலவே நாடகத்திலும் பெரும் ஈடுபாடு இருந்தது. ஒருபுறம் வணிக ரீதியான வெற்றிப் படங்களில் கனவானாக அவர் வந்தாலும் மறுபுறம் வித்தியாசமான பாத்திரங்களிலும் அவர் நடித்தார். ஷியாம் பெனகலின்  ஜூனூன், இஸ்மாயில் மெர்ச்சன்ட் இயக்கிய ஹீட் அண்ட் டஸ்ட், அபர்ணா சென் இயக்கிய 36 சவுரங்கி லேன் போன்ற படங்களில் வித்தியாசமான சசிகபூராக அவதாரம் எடுத்தார். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ் பெற்ற நாவலை படமாக எடுத்த அவர் தாமே இயக்கிய சித்தார்த்தா என்ற அந்தப் படத்தில் இந்திய சினிமாவின் முழு நிர்வாணக் காட்சியையும் படமாக்கினார்.
பலத்த கண்டனங்கள், விமர்சனங்களை மீறி கலைக்கு ஆபாசம் என்பதே காண்பவர் பார்வையில்தான் என்று வாதாடினார். நடிகை சிமி துணிச்சலுடன் அந்த நிர்வாணக்காட்சியில் முழு உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்திருந்தார்.
சசிகபூர்  நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் இளைய சகோதரர். தமது தந்தை பிருத்வி ராஜ் கபூருடன் பல நாடகங்களிலும் அவர் பணியாற்றினார். திரைப்பட பாரம்பரியம் மி்க்க கபூர் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்கினார் சசிகபூர் , ஷம்மி கபூருக்கு வயது அதிகமாகி உடல் பருக்க தொடங்கிய நிலையில் சசிகபூரே ரோமாண்டிக்கான பாத்திரங்களுக்கு வெகுவாகப் பொருந்தினாார். பின்னாளில் சசிகபூருக்கும் அதே போன்ற பிரச்சினைகள் உருவான போது பாபியில் அறிமுகமான ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார். இன்று ரன்பீர் கபூர் வரை அந்த நடிப்பு பாரம்பரியம் தொடர்கிறது.
பத்மபூஷண், தாதாசாகேப் பால்கே விருது போன்ற உயரிய கௌரவங்களைப் பெற்றுள்ள சசிகபூர் பலமாதங்களாக நோய் காரணமாக சக்கர நாற்காலியில் தான் காட்சியளித்தார். வயது முதிர்ந்த நிலையிலும் அவரை யாராலும் ஒதுக்கி விட முடியவில்லை. வீடு தேடி அவருக்கு தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கியது.

தமது 79வது வயதில் சசிகபூர்  டிசம்பர் 4ம் தேதி மாலை 5.50 மணியளவில் காலமாகி விட்டார். இவர் மறைவு திரையுலகின் மிகப்பெரிய வெற்றிடம் என்று இரங்கல் செய்திகள் குவிகின்றன. வழக்கமான சம்பிரதாயமான இரங்கல் சொற்கள்தாம். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே மிகப் பொருத்தமானவையாக மாறுகின்றன. சசிகபூர் அத்தகைய மேன்மை மிக்க மனிதர்.
சசி கபூர் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் சசிகபூர் இல்லாத சினிமா எப்படி இருந்திருக்கும் என்று அவரை ரசித்த என்போன்ற நடுத்தர வயது ரசிகர்கள் கற்பனை கூட செய்ய முடியாது. அழகான அந்த முகமும் புன்னகையும் நினைவில் என்றும் சிரித்துக் கொண்டே நிழலாடிக் கொண்டிருக்கும்.

Sunday 3 December 2017

பயணம் 10 -ராஜமுந்திரி -ஆந்திரா

உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் ராஜமுந்திரிக்கு பயணித்தேன். ராஜமுந்திரி பற்றி எனக்கு என்ன தெரியும்? அங்கு கோதாவரி நதி ஓடுகிறது. மிகப்பெரிய ரயில் பாலம் இருக்கிறது. ராஜமுந்திரி அருகே பாலியல் தொழில் புரியும் ஒரு கிராமம் -பெத்தாபுரம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சுகுமாரன் குங்குமம் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நண்பர்கள் வட்டத்தில் பெத்தாபுரம் போகணும் என்பது ஒரு லட்சியக் கனவாக இருந்த இளமைக்காலமும் ஒன்று இருந்தது. எந்த ஆசையும் வெறும் கனவாகவே நின்று போனது போல இதுவும் அங்கேயே முடிந்து போனது.
அப்புறம் ராஜமுந்திரி அருகே அரக்கு பள்ளத்தாக்கின் இயற்கை அழகைப் பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை படித்திருந்தேன். ரயில் நிலையத்திலும் அரக்கு பள்ளத்தாக்கு செல்பவர்கள் இங்கே இறங்கவும் என்று பலகை இருப்பதை கவனித்தேன்.
இரவு தன்பாத் வண்டியில் சென்ட்ரலில் இருந்து பயணம் -கிளம்பும் போது கிட்டதட்ட 2 மணி நேரம் தாமதம். அதனால் பகலில் 11 மணிக்கு பதிலாக 1 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். வழியில் தெனாலி ரயில் நிலையம் பார்த்தேன். தெனாலி ராமன் கதைகள் நினைவிலாடின. விஜயவாடாவுக்கு ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். ஆனாலும் கிருஷ்ணா நதியின் அழகான பாலம், மலைக்குன்றுடன் கூடிய அந்த நகர ரயில் நிலையம் அருகே இருக்கும ்பி.எஸ்.என்.எல் கட்டடம் அந்த நகரை நான் ஒருநாள் சுற்றிப்பார்த்த நினைவுகளை கோர்க்க முயன்றது. விஜயவாடாவில் மழை தூறும் ஒரு நாள் அது. நண்பர் தேவராஜூடன் சுற்றி வந்து அருமையான ஆந்திரா சாப்பாடு சாப்பிட்டதும் நினைவுக்கு வந்தது. ருசிகள் மறக்காதவை. அப்போது மலையாள பிட்டு படம் ஒன்று தெலுங்கில் டப்பிங் செய்து ஓடிக் கொண்டிருந்தது. மழைக்கு அங்கேதான் ஒதுங்கினோம். சென்னையில் இருந்து சுமார் ஏழு மணி நேர ரயில் பயணத்தில் எளிதாக அடையக்கூடிய விஜயவாடா போன்ற நகரங்களை ஏன் மீண்டும் பார்க்கத் தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக போக வேண்டும்.
விஜயவாடாவை கடந்து ராஜமுந்திரியை சென்றடைந்தோம். கல்யாண மண்டபத்தில் அறை. அருமையான உணவு வகைகள், அற்புதமான அலங்காரம் ,இசை ,நடனம் அழகான மனிதர்கள் என பொழுது ரம்மியமாகவே இருந்த போதம் மனம் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தது. பெத்தாபுரம் தானா என்று என்னை நான் கேட்டுக் கொண்டேன். இல்லை. வேறு என்ன , இலக்கியம், சினிமா,ஆன்மீகம், ஆந்திரா சாப்பாடு, கடைவீதிகள் என வழக்கமாக ஒவ்வொரு பயணத்திலும் நான் தேடும் பல்வேறு ரசனைகள் நினைவில் தோன்றின. ஆட்டோ பிடித்து புறப்பட்டு விட்டேன். கடைவீதியில் ஒன்றும் கிடைக்கவில்லை. சில வகை ஊறுகாய்கள், பொடிகள், அப்பளம் வாங்கி வந்தோம். பேக்கரிகளில் சில ருசியான கேக்குகள் கிடைத்தன. காதிம்ஸ் கடையில் ஒரு ஷூ வாங்கினேன். அப்புறம் செய்தித்தாள்கள், இளநீா் சர்பத், ராஜமுந்திரியின் ஓட்டல் ருசியறிய ஆட்டோக்காரனிடம் கேட்டு சத்யா என்றொரு டிபன் ஓட்டலுக்குப் போனோம். அங்கு பெசரட் ஆர்டர் செய்தால் நம்மூர் ஆனியன் தோசை போல் ஏதோ ஒன்றுவந்தது. ஒரேயொரு தேங்காய் சட்னி தவிர மற்ற எல்லா சட்னிகளும் சாம்பாரும் இனிப்பாய் இனித்தன.வாயில் வைக்க முடியவில்லை. அய்யோ ஆநதிராவே உன் மிர்ச்சி எங்கே?
மறுநாள் காலையிலேயே கோதாவரி பார்க்க புறப்பட்டோம். கோதாவரி கரையில் உடைகளைக் களைந்து நீராடிய அனுபவம் ஹரித்துவாரை நினைவுபடுத்தியது. ஆனால் கோதாவரி படிகளில் பாசி படர்ந்து இருந்ததால் அதிகமாக ஆற்றுக்குள் இறங்க பயமாக இருந்தது. சில படிகள் மட்டும் இறங்கி கம்பியை பிடித்தபடி நீராடினேன். ஒரு நதியில் இரண்டு முறை இறங்க முடியாது என்று ஹெராகுலிட்டிஸ் கூறியதை மனதில் ஓடவிட்டு ஓடும்நீரைப் பார்த்துக் கொண்டே குளித்து முடித்தேன்.



அங்கு காணப்பட்ட பிரம்மாண்டமான சிவலிங்கத்தைக் கண்டு சிவன் கோவில் எங்கே என்று விசாரித்த போது பக்தர் ஒருவர் பரவசத்துடன் கோடி லிங்கங்கள் கோதாவரியில் மிதந்து வந்ததை விவரித்தார். அந்த லிங்கங்கள் காசிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய அவர் ஒரே ஒரு லிங்கம் அருகில் உள்ள கோடிலிங்கம் கோவிலில் வைத்து வணங்கப்படுவதாக கூறியதால் ஆர்வத்துடன் ஆட்டோ பிடித்து கோதாவரி கரையோரம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த கோடிலிங்கம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தரிசித்தோம்.

மீண்டும் கல்யாண மண்டபத்தில் அடைக்கலமாகி மறுநாள் காலை கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை மழையில் நனைய திரும்பினோம்.

மீண்டும் ராஜமுந்திரிக்குப் போவேனா என யோசித்தேன். மீண்டும் மீண்டும் பெத்தாபுரம் தான் மனதில் ஆடியது. ஒரு கிராமமே பாலியல் தொழில் செய்வது எத்தனை வேதனையான விஷயம் என்றுதான் இப்போது தோன்றுகிறது. பாலியல் இச்சைகள் என்றுமே பூர்த்தியாகாது என்றபோதும் , ஏனோ கோடி லிங்கங்கள் குறித்து எண்ணிய போது பெத்தாபுரத்தை விரைப்புடன் வட்டமிட்ட  ஆண்குறிகளையும் அது பற்றி எழுதித் தீர்த்த பத்திரிகைகளையும் இளம் வயதுகளில் அது ஏற்படுத்திய சலனங்களையும் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...