Saturday 2 July 2016

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை
உலக சினிமா
LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன்
இயக்குனர்-சார்லி சாப்ளின்
-செந்தூரம் ஜெகதீஷ்
ஊமைப் படங்களின் நாயகன் சார்லி சாப்ளின். சொற்களால் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்க முடியாது என பலகாலம் நம்பிக் கொண்டிருந்தவர் அவர். சொல் அலங்காரமானது, பொய்யானது, அடுத்த கணமே மாற்றிப் பேசக்கூடியது. ஆரவாரமானது. அதன் ஓசைகளும் உச்சரிப்புகளும் ஒரு மனிதனுடைய தரம் தாழ்த்தவோ உயர்த்தவோ கூடியது. சொற்களால் அரசியல் வளர்ந்தது. சொற்களால் கலை தேய்ந்தது. சொற்களால் ஆன்மீக அனுபங்கள் பொய்த்தன. சொற்களால் வியாபாரம் வளர்ந்தது. லாபம், பேராசை, ஆணவம், அதிகாரம் யாவும் மனிதனுக்குள் வேர் விட்டது. பொய்யான வாதங்களால் வழக்குகளில் நீதி தோற்றது. இத்தனையும் புரிந்துக் கொண்ட மகத்தான கலைஞனான சார்லி சாப்ளின் மௌனங்களின் பக்கமே நின்றார்.
ரிஷிகள் மௌனத்தை நாடி மலைகளுக்குச் சென்ற சூட்சுமம் இதுதான். கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே புதைந்திருக்கும் மௌனங்களை தியானம் மூலம் நாம் அடைய முடியும். மோனம் தியான நிலை. அது மெய்மை தரிசனம். கலைஞன் எப்போதும் மெய்மையை தரிசிப்பவன்.
ஆனால் காலப்போக்கில் காலத்தின் இழுப்புக்கு கலைஞன் வீழ்கிறான். மரணம் எல்லோரையும் வென்றுவிடுவதுபோலவே காலமும் கலைஞனை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது. சாப்ளினும் தமது கடைசி காலங்களில் தி கிரேட் டிக்டேட்டர் போன்ற பேசும் படங்களை எடுத்தார்.
கிரேட் டிக்டேட்டரில் இறுதியி்ல் படத்தில் ஹிட்லர் போல் உருவ ஒற்றுமையால் அதிகாரத்தை கைப்பற்றிய கதாநாயகன் சாப்ளின் பேசும் நீண்ட உரை படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. வானொலி மூலம் தனது குரலைக் கேட்கும் பல லட்சம் மனிதர்களுக்கு படத்தின் வசனம் மூலம் சாப்ளின் சொன்ன செய்திமிகவும் முக்கியமானது. நாம் மிக அதிகமாக பேசுகிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம் என்றார் சாப்ளின்.
அதிகாரம் மறைந்துவிடும். சர்வாதிகாரிகள் அழிந்து விடுவார்கள் .ஆனால் மக்கள் நிரந்தரமானவர்கள். மக்கள்தான் மன்னர்கள் என்று சாப்ளின் உரத்த குரலில் தெரிவித்தார். மௌனம் கலைத்த சாப்ளினின் திரைப்படங்கள் உரத்த குரலில் உலகின் அதிகார அரசியலை எதிர்த்தது. இதனால் அவர்மீது கம்யூனிச முத்திரை குத்தப்பட்டு அமெரிக்கா அவருக்கு தடை விதித்தது. அவர் படங்கள் அமெரிக்காவில் திரையிடப்படவே இல்லை. சாப்ளினும் தனது குடியிருப்பை பிரிட்டனுக்கு மாற்றிக் கொண்டார்.
அக்காலக்கட்டத்தில் சாப்ளின் எழுதி நடித்து இயக்கிய முக்கியமான சில படங்களில் ஒன்றுதான் லைம் லைட் என்ற படம்.
இந்தப் படம் கலைஞனின் தோல்வி மற்றும் வெற்றிநிலைகளைப் பற்றி அலசுகிறது. 1952 ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. ஆனால் இதே படம் 1972ம் ஆண்டில் சாப்ளினுக்கு ஆஸ்கர் விருதுகளை குவித்தது. சாப்ளினை விரோதி என்று self exile ல் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்திய அதே அமெரிக்காதான் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. இந்தப்படம் 1972ல் தான் அமெரிக்காவில் திரையிடப்பட்டது.
இப்படம் லண்டனை மையமாக வைத்து புனையப்பட்டது. வழக்கமான சார்லி சாப்ளின் ஸ்லாப் ஸ்டிக் காமெடி எனப்படும் குறும்புத்தனங்கள் படத்தில் இ்ல்லவே இல்லை. அவரது மீசை, தொப்பி, வாக்கிங் ஸ்டிக் போன்ற அடையாளங்களும் இல்லை. முகத்தை மழித்த ஒரு வயதான குண்டான மனிதராக சாப்ளின் தனது அசல் தோற்றத்தில் படத்தில் நடித்திருந்தார். அவர் படத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடிக் காட்சிகளை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதிர்ச்சி. படத்தின் தொனி சோகம். தோல்வி. ஏமாற்றம், விரக்தி என இருந்தது.
நாடகத்தில் ஸ்லாப் ஸ்டிக் காமெடி செய்யும் கலைஞன் காவெல்ரே ஒரு காலத்தில் புகழ்பெற்ற மேடை கோமாளியாக இருக்கிறான். ஆனால் எல்லா கோமாளிகளும் காலாவதியாகி விடுவது போல் கால மாற்றம். தொழில்நுட்ப வளர்ச்சியால் அவனது கலை புறக்கணிக்கப்படுகிறது. சின்ன வயதில் நாம் சர்க்கஸ் கோமாளிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனால் இப்போது கோமாளிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலோ கிறுக்குத்தனமான ஆபரேஷன்கள் செய்தாலோ நமக்கு சிரி்ப்பு வருவதில்லை. மாறாக வடிவேலுவின் வசனத்தை கேட்டால் சிரிக்கிறோம். சந்தானம் கெச்சு பிச்சு என எதையாவது பேசினால் வயிறு குலுங்க சிரிக்கிறோம்.
மௌனங்களின் நாயகன் புறக்கணிக்கப்படுகிறான். பேசுகிறவர்கள் ஜெயிக்கிறார்கள். வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்ற தெனாலிராமனை உலகம் விதூஷகனாகப் போற்றுகிறது.
தோல்வியால் காவெல்ரேயின் நம்பி்க்கை தளர்கிறது. விரக்தி கூடுகிறது. புறக்கணிக்கப்படும் கலைஞன் தனக்குத்தானே அந்நியமாகிப் போகிறான். மதுவும் சோம்பலும் அவனை சுருண்டுவிழச்செய்கிறது. யாருக்கும் பயனற்ற உதவாக்கரையாக அவன் கடன்களில் தத்தளிக்கிறான். அடுத்தவர்களின் கருணையை நாடி வாழும் துர்ப்பாக்கியமான வாழ்வுக்குத் தள்ளப்படுகிறான்.
இந்நிலையில் காவெல்ரே தெரசா என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறான். அந்தப் பெண் அவனது குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு வீட்டில் இருக்கும் ஒரு நடன மங்கை. தனக்கு திரைப்படங்களிலும் மேடை நாடகங்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விரக்தியால் அவள் தூக்கு மாட்டிக் கொண்டு சாக முயற்சி்ப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்ட காவெல்ரே ஓடிப்போய் அவளைக் காப்பாற்றுகிறான்.
நான் ஏன் வாழணும் என அவள் அழுகிறாள். அப்போது காவெல்ராவாக நடித்த சாப்ளின் அவளுக்கு நம்பிக்கையளிக்கிறார். அதற்கு அவர் படத்தின் வசனத்தையே பயன்படுத்துகிறார். சொற்களை அவர் வெறுக்கவில்லை. அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். மந்திரம் போல் சொல் வேண்டும் என்று பாரதி கேட்டது போல்தான் அது.
மந்திரம் போன்ற ஒரேயொரு சொல்லால் அந்தப் பெண்ணின் மனத்தை மாற்றுகிறார் சாப்ளின். அந்த சொல் எது தெரியுமா .....வாழ்க்கை
சாகப்போகிற பெண்ணுக்கு வாழ்க்கையின் அருமையை , கிடைத்தற்கரிய மனிதப்பிறவியின் பெருமையை வாழ்க்கை என்ற சொல்லை பல உச்சரிப்புகளில் உச்சரித்து விளக்குகிறார் சாப்ளின். LIFE ....LIFE....LIFE என அவர் தமது நாடகபாணியைப் பயன்படுத்தி ஒரு மகத்தான கலைஞனின் உடல்மொழி, பாவனைகளுடன் வாழ்க்கையை உணர்த்துகிறார். தானே மிகப்பெரிய விரக்தியில் இருந்தாலும் அந்த விரக்தியின் துயரத்தின் நிழல் சிறிது கூட படாத ஒரு மகத்தான நம்பிக்கை வெளிச்சத்தை அவரது அந்த சொல்லாடல் கொண்டு வருகிறது.அவள் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் தனது முயற்சிகளைத் தொடர்கிறாள். அவளுக்குப் புகழ் கூடுகிறது. வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன. அந்தப் பெண் சாப்ளினை மானசீகமாக நேசி்க்கிறாள். ஆனால் வயது வித்தியாசம் காரணமாக அவள் இளமைக்கு தனது முதுமை பொருந்தாது என முடிவெடுக்கும் சாப்ளின் அவளது சக நடிகனுடன் அவளை இணைத்து வைத்து வாழ்த்துகிறார்.
இந்த சமயத்தில் மெதுவாக காவெல்ரேயும் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கிறான். தன்னால் மீண்டும் கலாப்பூர்வமான வெற்றிகளை சாத்தியமாக்க முடியும், காலத்தை வெல்ல முடியும் என்று அவன் நம்புகிறான்.
வீதிகளில் மக்களை மகிழ்விக்கிறான். அவனது காமெடியைக் கண்டு மக்கள் சிரிக்கிறார்கள். சிறுவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அப்போது அவரைத் தேடி வரும் ஒரு முன்னாள் சகா தன்னுடன் இணைந்து பணியாற்றும்படி காவெல்ரேயை அழைக்கிறார். அந்த நபர் மௌனப்பட உலகின் மற்றொரு புகழ்பெற்ற காமெடி நடிகரான பஸ்டன் கீட்டன்.
இருவரும் மேடையில் ஒரு இசை நாடகத்தில் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.மீண்டும் புகழின் உச்சத்திற்குப் போகிறான் காவெல்ரே.ஆனால் அந்த மேடையிலேயே அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மீண்டும் தனது சிறகுகளை மீட்டெடுத்த கலைஞன் அந்த சிறகு வானில் உச்சத்தில் பறக்கத் தொடங்கியதுமே தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறான்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் உலகப் புகழ் பெற்ற இரண்டு மாபெரும் மௌனப்பட நாயகர்கள் முதலும் கடைசியுமாக ஒன்றாகத் திரையில் தோன்றினார்கள்.
சாப்ளினுக்காக கீஸ்டனின் காட்சிகள் குறைக்கப்பட்டதாக சில விமர்சகர்கள் எழுதினார்கள். ஆனால் அப்படத்தில் நடித்த சாப்ளினின் மகன் இதனை மறுத்தார். மிகச்சிறிய பாத்திரமாக இருந்ததால் அதில் பஸ்டன் கீட்டன் என்ற மிகப்பெரிய நடிகரை நடிக்க வைக்க சாப்ளின் தயங்கினார். ஆனால் பெருந்தன்மையுடன் கீட்டன் சாப்ளினுடன் இணைந்து நடிக்கும் ஆர்வத்தால் அந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்.
படத்தின் கிளைமேக்ஸ் இசை நடனக்காட்சியின் போது இருபெரும் கலைஞர்களை ஒன்றாக கண்ட ரசிகர்கள் திரையின் உள்ளேயும் திரையரங்கிலும் ஆர்ப்பரித்தார்கள்.
சாப்ளினின் வழக்கமான ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்காட்சிகள் படத்தின் இறுதியான பத்து நிமிடங்களில் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து படத்தின் குறையைத் தீர்த்து விட்டன.
அநேகமாக சாப்ளின் எடுத்த மிகவும் சீரியசான படம் முதலும் கடைசியுமாக இதுவே.
அசலான கலைஞன் எல்லா காலங்களுக்குமானவன். அவனை காலத்தால் கட்டிப்போட்டு விட முடியாது. ஒருகாலத்தில் அவன் கலை தோற்கலாம். ஆனால் இன்னொரு காலத்தில் அவன் கொண்டாடப்படுவான். ஒரு காலத்தில் அவன் கலைப்படைப்புகள் தடைசெய்யப்படலாம். ஆனால் இன்னொரு காலத்தில் அதே படைப்புகள் ஆஸ்கரை பெறலாம்.
கலைஞன் காலவெளியில் தனது சிறகுகளை விரித்து பறக்கக்கூடியவன். தனது லைம்லைட் படத்தின் மூலமும், தனது சொந்த வாழ்க்கையின் மூலமும் சாப்ளின் இதனை உலகிற்கு அழுத்தமாக சொல்லிவிட்டார்.
இப்படத்தில் வாழ்க்கையின் அருமையை உணர்த்தி தற்கொலை செய்யும் கலை உள்ளங்களுக்கு புதிய நம்பிக்கையையும் சாப்ளின் தந்துள்ளார். ஒரு காலத்தில் மிகப்பெரிய துன்பமாக தெரியும் ஒரு விஷயம் இன்னொரு காலத்தில் காமெடியாக மாறிப்போகும்.
இதனால்தான் தி லைப் இதழுக்கு அளி்த்த இறுதிப்பேட்டியில் சாப்ளின் கூறினார் வாழ்க்கை லாங் ஷாட்டில் காமெடியானது. குளோசப்களி்ல் துயரமானது.
சினிமாவும் வாழ்க்கையும் குளோசப்களும் லாங் ஷாட்டுகளும் நிறைந்து கிடப்பதுதான்.
0--------------------------------------------------------------------------------0

 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...