Wednesday 12 September 2012

இறைவனை அடைதல்



                                                               



வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - செந்தூரம் ஜெகதீஷ்


தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் 75 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் இன்று 8.6.2020 திறக்கப்பட்டன. அடையாத கதவுகள் கூட அடைபட்ட நிலையில் பக்தர்களின் உணர்வுகளை கூற வார்த்தையில்லை. நாத்திகம் பேசி நாறடிக்கும் கூட்டங்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நானும் 37 வயது வரை கோவில் வாசலை மிதிக்காதவன்தான். ஆனால் ஓஷோவும் மருதமலை முருகனும் என்னை ஆத்திகனாக மாற்றியது எனது அனுபவம். திருப்பதி ஏழுமலையான் நான் வணங்கும் தெய்வம். இந்நிலையில் ஒரு முறை நான் எழுதிய ஆன்மீகக் கட்டுரையை இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரை திருத்தி எழுதப்பட்டது.....

இறைவனை அடைய பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.சூரிய வழிபாடு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை இறைவழிபாடு இயற்கை சார்ந்த வழிபாடாகவே இருக்கிறது. ஆனால் ஸ்தூலமான உலகின் காட்சிமயமான இறைவழிபாட்டை கடந்து, இறைமையை உள்ளத்தாலும் உணர்வாலும் அறியும் சில முறைகளும் உள்ளன. அற்புதமான குளிர் மாருதம் வீசும்போது நான் இறைவனைத் தொட்ட பரவசத்தை அடைந்திருக்கிறேன். மழைத் துளியின் ஸ்பரிசத்திலும் அவனது சருமத்தை உரசியிருக்கிறேன். எதுவம் அற்ற ஒரு சூன்ய வெளியிலும் ஆழ்ந்த நித்திரையிலும்கூட இறைமையையும் அவன் கருணையையும் அறிந்திருக்கிறேன்.

அடிக்கடி திருப்பதி செல்லும் வழக்கம் எனக்கு உள்ளது. 4 மாதங்களில் மூன்று முறை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பயணம் மேற்கொண்டேன். இரண்டு முறை குடும்பத்துடனும் ஒருமுறை தனியாகவும்.

முதல் முறை சென்றது திட்டமிடாதது. எனவே ரயிலில் முன்பதிவு இல்லாமல் மூன்றரை மணி நேரமும் சிரமப்பட்டு பின்னர் களைப்புடனே மலையேறினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 ரூபாய், 300 ரூபாய் தரிசனம் எல்லாம் இல்லை என்று சுமார் 8 மணி நேரம் பொதுவரிசையில் நின்றிருந்தோம். சகோதரியின் குழந்தைகள் சோர்ந்து போயினர். சாப்பிட உப்புமாவும் பாலும் தேவஸ்தானம் அளித்தது. ஆனால் குழந்தைக்குத் தராமல் வரிசையில் வரச் சொல்லி விரட்டிய ஊழியருடன் சண்டை போட்டதில் அதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த கொஞ்ச உணவை பகிர்ந்துக் கொண்டு கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தோம். திடீரென பல மணி நேரம் தரிசனம் கிடையாது என்றார்கள். மறுநாள் இரவு 9 மணிக்குத்தான் தரிசனம் என்றும் கூண்டை பூட்டிய காவலாளி கூறினான். அப்போது மணி இரவு மணி 3. சரி என காலைவரை தரையில் தூங்கினோம். அதிகாலை 4 மணிக்கே சுத்தம் செய்யும் பணியாளர்கள் வந்து தரையெல்லாம் தண்ணீர் ஊற்றி விரட்டியடித்தனர். ஒடுங்குவதற்கு கூட இடமின்றி கூட்டத்தைக் கண்டாலே எரிச்சல் எரிச்சலாக இருந்தது. திடீரென முடிவெடுத்து திரும்பி விட்டோம். பல கூண்டுகள் கதவுகளைத் தாண்டி வெளியே வந்தோம். பிளாக் மார்க்கெட்டில் இரவிலும் கூட லட்டு கிடைத்தது. வாங்கி பஸ்ஸையும் ரயிலையும் பிடித்து மலையிலிருந்து கீழிறங்கி சென்னை திரும்பி விட்டோம். பெண்களுக்கு சங்கடம். தரிசனம் செய்ய முடியாதது குறித்து வீணான கற்பனைகள், பயங்களும் ஆட்டிப் படைத்தன. அப்போது அப்பா உயிருடன் இருந்தார். அப்பாவிடம் கேட்டேன். திரும்பி வரலாமா இப்படி என்று. பெருமாள் கோவில் வாசலை தொட்டு வந்ததே புண்ணியம்தான் கவலைப்பட வேண்டாம் என்றார்.

அடுத்த இரண்டு வாரங்களில் எனது பிறந்தநாள். கடந்த ஆண்டு எனது பிறந்த நாள் ஏழுமலையான் சன்னதியில் கழிந்தது. இப்போதும் அப்படியே ஆகட்டும் என்று தியாகராஜ நகரில் உள்ள தேவஸ்தானம் அலுவலகம் போய் 50 ரூபாய் டிக்கட்டில் பதிவு செய்து வந்தேன். எக்ஸ்பிரஸ் ரயில்களை எதிர்பாராமல் அரக்கோணம் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் போய் அங்கிருந்து பேருந்து மூலம் திருப்பதி சென்றடைந்தேன். கிட்டதட்ட 6 மணி நேரமாகிவிட்டது. இரவு பத்துமணிக்குத் தான் தரிசன நேரம் தரப்பட்டிருந்தது. திருப்பதியில் சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் பார்த்து ஊரையும் சுற்றி நன்றாக சாப்பிட்டு, இரவு சரியாக பத்து மணிக்கு வரிசையில் நின்றேன். நள்ளிரவு 12.30 மணிக்கு தரிசனம் கிடைத்தது. அதாவது என் பிறந்தநாள் முடிந்துவிட்டது. ஆனால் பத்து மணிக்கே வரிசைக்கு வந்துவிட்டதால் பிறந்தநாளில் பெருமாளை தரிசித்த கணக்கு வைத்து அரக்கோணம் வழியாகவே திரும்பி விட்டேன்.
மூன்றாவது முறை மீண்டும் குடும்பத்தினருடன் குழந்தைகளுடன் புறப்பட்டோம். இம்முறை எல்லோரும் 50 ரூபாய் கொடுத்து பதிவு செய்துவிட்டோம். இம்முறையும் இரவு பத்துமணி தரிசனம்தான். மாலை 4.30க்கு ரயிலில் டிக்கட்டும் எடுத்து விட்டோம். ஆனால் 7 டிக்கட்டில் 3 மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டன. எனவே மீண்டும் அன் ரிசர்வ் பெட்டியில் ஏறி புளிமூட்டை போல திணிக்கப்பட்ட மக்களுடன் சண்டை போட்டபடி திருப்பதி சென்றடைந்தோம். இரவு 8 மணிக்கு மலையேற பஸ்ஸில் ஏறினால், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி சாமி தரிசனம் பண்ண திருப்பதி வந்ததாக கூறி பேருந்தை 2 மணி நேரம் கிடப்பில் போட்டுவிட்டனர். பிரணாப்பின் கார் கடந்து போன பிறகே பேருந்து மலைப்பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 11 மணிக்கே போய் சேர்ந்தோம். பரவாயில்லை என வரிசையில் போய் நின்றால் ஆச்சரியம். சர சர வென வரிசை நகர்ந்து அடுத்த ஒருமணி நேரத்திலேயே அற்புதமான பெருமாள் தரிசனம் வாய்த்தது. லட்டு பிரசாதம் வாங்கி குளத்தில் தலையி்ல் தண்ணீர் தெளித்து, உடைமைகளை வாங்கிக் கொண்டு பன்னிரண்டரைக்கே திருமலை யாத்திரை பூரணம் அடைந்துவிட்டது. பிறகு விடிய விடிய பிரதான வாசல் அருகே வெட்டவெளியில் நடுநடுங்கும் குளிரில் படுத்துத் தூங்கி விடிந்ததும் ஊர் திரும்பி வந்தோம்.

இப்படி இறைவனை அடையும் பொருட்டு எத்தனையோ பேர் எத்தனை விதமான சிரமங்களை அடைகின்றனர். திருமலைக்கு கால்நடையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. இறை நம்பிக்கை என்ற ஒற்றை துடுப்பைக் கொண்டு எத்தனை லட்சம் தோணிகள் வாழ்க்கையின் சூறைக்காற்று மற்றும் புயலை சந்திக்கின்றன. எத்தனை லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை சில கணங்கள் தரிசிப்பதற்காக நாள் கணக்கில் உடலையும் மனத்தையும் வருத்துகின்றனர். எத்தனை நாட்களாக திட்டமிடுகின்றனர். எத்தனை கோடி ரூபாய் வணிகமும் போக்குவரத்தும் வாழ்வாதாரமும் ஏழுமலையானின் புண்ணியத்தால் திருப்பதியில் வாய்த்திருக்கிறது. எத்தனை டூரிஸ்ட்டுகளால் லாட்ஜ், தியேட்டர், உணவகங்களுக்கும் இதர கோவில்களுக்கும் வருவாய் கிடைக்கிறது.

இப்படி பல்வேறு எண்ணங்களுடன் சென்னை திரும்பிய போது மனத்தில் இரண்டு எண்ணங்கள் மேலோங்கின. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அமர்த்திய பணியாளர்கள் பெருமாளை தரிசிக்க வருவோரை பிடித்து பிடித்து தள்ளுகின்றனர். ஒரு அழகான இளம் பெண் போலீஸ்காரி என்னை கூச்சமின்றி தொட்டு கிட்டதட்ட அணைத்து இறுக்கிப் பிடித்து தள்ளி விட்டாள். அந்தப் பணியாளர்கள் பெருமாள் சன்னதியருகே பல மணி நேரம் நிற்கின்றனர். பெருமாளை தரிசிக்கும் சில கணங்களுக்காக நாள்கணக்கில் மாதக்கணக்கில் நாங்கள் பல நடைமுறைச் சிக்கல்கள், பொருளாதார பிரச்சினைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க இவர்களுக்கு எப்படி இப்படி ஒரு எளிதான தரிசனம், வாய்த்த்து. பிரணாப் முகர்ஜியைப் போன்ற மனிதர்களுக்கு 40 ஆண்டுகளாக மத்திய அமைச்சராகவும் எம்பியாகவும் இருந்து அத்தனை சுகபோக சொகுசுகளை அனுபவித்தவருக்கு கடைசிக் காலத்தில் குடியரசுத் தலைவர் பதவி வேறு.
எப்படி இத்தனை கொடுப்பினை.........இவர்களுக்கெல்லாம் எளிதாக பெருமாள் தரிசனம் தருகிறாரே என்று ஆற்றாமை எழுந்தது.
கோபம் பிரணாப் மீது அல்ல. இவ்வுலகைப் படைத்த கடவுள் மீதும் அல்ல. ஆனால் இடையில் நடந்துவிட்ட பல குழப்பங்கள் மீதும் அந்த குழப்பங்களுடன் மேலும்மேலும் குழப்பத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் எளிய மனிதர்கள் மீதும் என்மீதும்தான் எனக்கு கோபம்.

அல்லது எல்லோர் மீதும்.




Thursday 30 August 2012

அறம்அழியும்காலம்

அறம் அழிந்து வரும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அறம் என்பதைப் பற்றி நமது குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்ந்து போதிக்கத் தவறி விட்டோம். மாரல் சயன்ஸ் என்ற வகுப்பும்  ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் மதப்பிரச்சார மேடையாகவே மாறிவிட்டது.
ராவணன் அடுத்தவன் மனைவியை கவர்ந்து சென்றான். இது அறத்தை மீறிய செயல். அதனால்தான் ராமன் அவனைக் கொன்றான். அறம் என்பது தனக்குரியதையும் தனக்கு உரிமை இல்லாததையும் அறிவது.
அறத்தை அறியாத சமூகத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்துவிட்டு இறந்ததாக பரபரப்பான செய்திகள் வந்ததும் அவசரம் அவசரமாக எலிகளையும் நாய்களையும் மாநகராட்சி அலுவலர்கள் வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கள் வீட்டருகில் ஜெனரல் காலின்ஸ் ரோடு என்று ஒன்று இருக்குது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வீதி இதுதான். இந்த வழக்கில்தான் தியாகராஜ பாகவதரும் கலைவாணரும் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். இந்த வீதியில் நானும் ஜெயமோகனும் பல இரவுகள் கொசுக் கடியை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நள்ளிரவு வரை இலக்கியம் பேசியிருக்கிறோம். அந்த பிரசித்தி பெற்ற வீதியில்தான் நான்கைந்து பள்ளிகள் இயங்குகின்றன. செங்கல்வராயன் பள்ளி, ஓக்ஸ் பள்ளி. பிரெசிடென்ட் ஸ்கூல். சற்றுத் தள்ளி செயின்ட் பால்ஸ் சுற்றி வந்தால் செயின்ட் ஜோசப், டவுட்டன் காரி, பெயின்ஸ் ஸ்கூல் என  கிட்டதட்ட 30 பள்ளிகள் சூழ்ந்த பகுதி இது. காலையிலும் பிற்பகலிலும் இங்கு மாணவ மாணவிகளை சீருடையில் அணி அணியாக பார்க்கலாம், போதாதற்கு வெட்னரி காலேஜ், ஜெயின் காலேஜ் என்றும் சில கல்லூரிகளும் இங்கு உண்டு.இந்த ஜெனரஸ் காலின்ஸ் வீதியின் முனையில் எப்போதும் குப்பைக் கொட்டிக் கிடக்கிறது. வார்டு எண் 58 என எழுதப்பட்ட குப்பைத் தொட்டிகள் நான்கைந்து காலியாக இருக்கிறது. வண்டி வண்டியாக அள்ளப்படாத குப்பைக் குவியல்கள் பள்ளி வாயிலருகே குவிக்கப்பட்டிருக்கிறது. எலிகள் ஏராளம். கிரிமினல்கள் நடமாட்டமும் அதிகம். சில ஆட்டோ டிரைவர்களும் வேன் ஓட்டுனர்களும் இளைப்பாறும் இடம். அதனாலேயே அங்கு குற்றவாளிகளும் வருகிறார்கள். மாலை இருட்டைப் பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களும் இங்கு அதிகமாக உண்டு. அவ்வப்போது போலீசார் நடமாட்டம் இருந்தாலும் டூவீலரில் வரும் இளசுகளை குறிவைத்து பணம் கறப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
என் மனைவி 25 ஆயிரம் ரூபாய் பையை தொலைத்துவிட்டதும் இதே தெருவில் தான். அவளது கவனக்குறைவை பயன்படுத்தி எவனோ தட்டிச் சென்றுவிட்டான், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்தால் யாரும் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. மீடியா என்றெல்லாம் சொல்லியும் புண்ணியமில்லை. வாழ்க காவல்துறையின் சேவை.

போலீசை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டாலே நகரம் குற்றவாளிகள் இல்லாமல் சுத்தமாகி விடும் என்று தோன்றுகிறது.

அது சரி அறம் பற்றி பேச வந்து இதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று கேட்கும் சந்தேகப் பிராணிகள் சற்றுப் பொறும். அறம் என்பதற்கு அரசு மருத்துவமனைகளின் அடித்தட்டு மக்களிடம் அர்த்தம் கேட்டுப் பாருங்கள். யார் கழுத்திலாவது செயின் இருந்தால் கழுத்துடன் அறுத்துவிட்டு வருவார்கள். கர்ப்பிணியாவது நோயாளியாவது எவன் செத்தால் என்ன எவ்வளவு புடுங்க முடியும் என்பதுதான் அவர்கள்  அறிந்த அறம்.ஏமாந்தால் பிறந்த குழந்தையை கடத்துவார்கள்.







Wednesday 25 July 2012

நிலையில்லாத மனிதர்கள்

நிலையில்லாத மனிதர்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
சுயம் 1
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள் என்ற எஸ்.ஜானகியின் குரலில் ஒலிக்கும் வசந்தகாலக் கோலங்கள் பாட்டு என் மனதுக்குள் இன்றும் ஒரு மெல்லிய சோகத்துடன் இசைத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் உறவுகளை நாடுவதும் அவற்றை தக்க வைக்க பாடுபடுவதும் அவை சிதறிய கணங்களில் நொறுங்கிப் போவதும், பின் மீண்டெழுந்து இன்னொரு உறவை நாடுவதுமாகவே வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. எந்த ஒரு உறவும்- நட்பு ,காதல் பாசம் என என்ன பெயரிட்டு அழைத்தாலும்- நீடிப்பதே இல்லை.
உறவு சிதைவுற நானும் ஒரு காரணமாக... இருக்கலாம். ஆனால் அதன் வினை அல்ல நான் எதிர்வினைதான். வினை எது என்றால் அது அடுத்தவரிடமிருந்து வருவதுதான். சார்த்தர் சொன்னது போல் அடுத்தவர் நரகம் என்பது என்னைப் பொருத்தவரை சரியே.
அம்மா, அப்பா, தம்பிகள், தங்கையர் ,மனைவி என பெரும் குடும்ப உறவுப் பிணைப்புகள் இருப்பினும் எல்லோரது மனங்களிலும் பாசம் இருப்பினும் நான் தனியாகவே வாழப் பழகியிருக்கிறேன். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டமாக செல்லும் சுற்றுலாக்களில் தனித்திருக்கவே விரும்பியிருக்கிறேன். ஏன் இந்தத் தனிமை உணர்வு என புரிய பலகாலம் ஆகியிருக்கிறது. முதலாவது என் நுண்ணுணர்வு. அசட்டு ஜோக்குகளுக்கு என்னால் சிரிக்க முடியாது. அடுத்த மனிதரை காயப்படுத்த தெரியாது. பணம் பகட்டு அந்தஸ்து சாதி பெயர் சொல்லி யாரையும் புகழ்வதோ இகழ்வதோ பிடிக்காது. கணக்குப் பார்த்து உறவுப் பேண தெரியாது. பொய்யாக பாசம் செலுத்த முடியாது. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்க முடியாது. சட்டென உண்மையைப் பேசாமல் பதுக்க முடியாது. முக்கியமாக நிறைய நிறைய பணம் சம்பாதிக்கத் தெரியாது.
ஆனால் என்னைச் சுற்றியிருந்த எல்லா மனிதர்களிடமும் இந்த குணங்கள் தகுதிகளாக நிரம்பியிருந்தன. அவர்கள் என்னை ஏளனம் செய்யுமளவுக்கு அவர்களிடம் அந்த செல்வங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல அவர்களின் கண்களிலிருந்து விலகிப் போய்க் கொண்டே இருந்தேன்.
இரண்டாவது பிரச்சினை அறிவு. கற்றதனால் ஆய பயன் என்ன என்று தெரியாமல் படிக்கப் படிக்க புதிய உலகங்களில் நான் பயணித்தேன். கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசியாகித் திரிந்தேன். உமர் கய்யாமின் போதையில் திளைத்தேன். இக்பாலின் தேசபக்தியில் புதைந்தேன். காரல்மார்க்சின் மனிதநேயத்தில் கசிந்தேன். பாலூறாத ஜென்னியின் மார்புக் காம்புகளில் கண்ணீரை சிந்தினேன். இறந்துவிட்ட அந்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லாத போது, பிறந்ததும் தொட்டிலே வாங்க முடியாத குழந்தைக்கு செத்தப் பிறகு சவப்பெட்டி வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன என்ற அந்த மேதையின் விச்ராந்தி மனநிலையில் நான் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதனை தரிசனம் செய்தேன். பாரதியின் கண்ணம்மாவை காதலிக்கத் தொடங்கி, ஆண்டாளின் மணமாலைக்காக பாமாலை பாட ஆரம்பித்துவிட்டேன். சித்தர்களின் வேதாந்தத்தில் திளைத்து ஓஷோவின் மெய்ஞானத்தில் முளைத்தேன். கண்ணதாசனின் திரைப்பாடல்களில் மயங்கி, புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடத்தும் கந்தசாமியிடத்திலும் கதறி அழுதேன். புத்தகங்கள் எனது வாழ்க்கையின் பிரிக்க முடியாத சுமையாகி விட்டது. புவியரசு சொன்ன மாதிரி தலைமூழ்கித் தொலைக்க ஒரு தீர்த்தக் கரை இல்லாமல் தலைச்சுமையாக இன்றுவரை சுமக்கிறேன்.
அடுத்தது அன்பு. இந்த வார்த்தையை எல்லோரும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்கள். சாப்ளின் சொன்னதுமாதிரி நாம் அதிகமாக சிந்திக்கிறோம்.மிகக் குறைவாகவே உணர்கிறோம். அன்பு என்ற சொல்லும் உணர்தலுக்குப் பதிலாக சிந்திப்பதற்காகவே மாறியிருக்கிறது.
கிடங்குத் தெரு நாவலில் ஓரிடத்தில் மனிதர்களை நான் வெறுத்துவிடுவேனா என்று பயமாக இருப்பதாக எழுதியிருப்பேன். அப்படி வெறுக்கும் அளவுக்கு பல மனிதர்கள் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அடிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர். சாக்கடைகளையும் ஆழ்துளைகளையும் திறந்துப் போட்டு போகும் தொழிலாளிகள், , பணம் கறக்கவும் புத்தகம் வாங்கவும் சிடியை அபகரிக்கவும் சுற்றிவரும் நண்பர்கள் வட்டாரம் என யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் கோபமும் பொங்கிப் பொங்கி வருகிறது. முட்டாள்கள் அலுவலகத்தில் வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் சற்றும் குறையாத தோரணையுடன் இல்லாளும் இம்சையரசியாகிறாள்.
இப்படிப்பட்ட மனநிலையில் வந்து வாய்க்கும் உறவுகள் சில சமயம் நட்பின் பெயரால் வருகின்றன. 20 ஆண்டுகளாகப் பழகிய நண்பர்கள் கூட சில்லியான ஒரு காரணத்தால் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போகிறார்கள். ஜெயமோகன் போல ,,,,,,சிலர் பின்னால் போய் குழிப் பறிக்கிறார்கள். என்னுடன் பத்து நிமிடம் பேசித் தீர்க்க அவர்களுக்கு மனம் இல்லை.நேரம் இல்லை.
பத்தாண்டுகளாகப் பழகிய தோழி ஒருவர்- மிகவும் கண்ணியமான பெண்தான்- திடீரென தொலைபேசி உறவைத் துண்டித்து விட்டார். பேசாமல் பலமாதம் இருந்து பின்னர் தானாக வந்துப் பேசினார். அவர் பேசாமல் இருந்ததைவிட என்னைக் கூப்பிட்டு நீ நண்பனாயிருக்க லாயிக்கில்லாத ஆள் என நாலு அறை விட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அப்படி எந்தத் தப்பும் நான் அவரிடம் செய்யவில்லை என்பது வேறு விஷயம்.
காதல் என்று வரும் உறவுகளும் காற்றில் கரையும் கற்பூரம் போல 2 நாட்கள் அல்லது 2 மாதங்களில் காணாமல் போய்விடுகின்றன. ஏழுஜென்ம பந்தங்களுக்காக யாரும் அழுவதாகத் தெரிவதில்லை. சிலருடன் அப்படி இப்படி பழகி அந்த வார்த்தையே கசந்துவிட்டது.
நான் மட்டும்தான் இப்படி என்று தெரிகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். நட்பு இருக்கு, காதல் இருக்கு உடலுறவு இருக்கு உறவுகள் இருக்கு பணம் சேருகிறது. பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்கள். பக்தி இருக்கிறது. கூட்டமாக சேர்ந்து தண்ணியடிக்கிறார்கள், சீட்டாடுகிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அல்லது சேர்ந்து சிரியோ சிரி என்று சிரிக்கிறார்கள். சிக்கனும் ஆடும் தின்று தின்று எருமைக்கடா மாதிரி உடலை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
மூளையே இல்லாமலும் உலகில் வாழும் கலையை கற்றுவைத்திருக்கிறார்கள்.
போதுமடா சாமி. வாழ்க்கையை இனிதே முடித்துக் கொள்ளலாம் என்றுதான் இக்கணத்திலும் தோன்றுகிறது. தோற்றுப் போன ஒரு வாழ்க்கையின் சடலத்தை அதன் நாற்றத்தை இன்னும் எத்தனை நாட்கள் சுமப்பது என்பதுதான் தெரியவில்லை. தூக்கிப் போடவாவது நாலு பேர் வேண்டுமே என்று தேடித்தேடி நாலு பேரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.
போதும் விடுங்கள் கொஞ்சம் அழுது முடிக்கிறேன்.
வாழ்க்கை அழைக்கும் வரை வாழத்தான் போகிறேன். அதன் அழைப்பு என்னை வேறு எதற்காகவோ வாழ வைத்துக் கொண்டே இருக்கிறது. அது எது...அதன் சொரூபத்தை திருப்பதி வெங்கடாசலபதியிலோ ஒரு குழந்தையின் புன்னகையிலோ எங்கேயோ நான் தரிசித்தபடியேதான் உயிரை விடுவேன்.இப்போதே அல்ல, எப்போதாவது.
இப்பதிவு என்வாழ்வுக்கான சாட்சியமாக இருக்கட்டும்.

Thursday 28 June 2012

இலக்கியவாதியின் இலக்கிய அனுபவங்கள்

நான் முதன் முதலில் கவிதை எழுதிய போது அது ஒரு காதல் கவிதைதான். அப்போதே காதல் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. யாராவது படித்தால் என்னைப் பத்தி தப்பாக நினைப்பாங்க என்ற கூச்சம் இருந்தது. அப்போது அரு.ராமநாதன் காதல் என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். தி.ஜானகிராமன் மாதிரி ஜாம்பவான்கள் எல்லாம் எழுதினாங்க...ஆனால் கருப்பு வெள்ளையில் புடவை இல்லாத பெண்கள், பிரா தெரியும் மெல்லிய நைட்டி அணிந்த பெண்கள் என ஒன்றிரண்டு படங்கள் அட்டையிலும் உள்ளேயும் இருக்கும். கதைகள் பெரும்பாலும் காதல், செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். அதனால் அதை ஒரு செக்ஸ் புத்தகம் போல பயந்தபடியேதான் படிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் நான் ஒரு காதல் கவிதை எழுதுவது கூச்சமான விஷயமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் நோட்டுப் புத்தகத்தில் கண்ணதாசன், வாலி பாடல்களைப் போல கவிதைகளை எழுதி அவர்கள் பெயரைப் போட்டு வைப்பேன். என் உறவினர்கள் யாராவது கேட்டால் சினிமாப் பாட்டு என சமாளிக்கத்தான்
நண்பன் சேகர் இந்த கவிதையில் ஒன்றை அவன் வேலை பார்த்த அச்சகத்தில் கொடுத்து ஒரு சிறுபத்திரிகையில் வரவழைத்து விட்டான். அப்ப பிடிச்ச பிசாசுதான். அடுத்து தினமலர் வாரமலரில் - அப்ப பேப்பரிலேயே வாரமலர் வரும் - அரைப்பக்கம் எனது கவிதைகள் மட்டும் பிரசுரமாயின. விண்ணில் போன ராக்கெட்டே எங்க விலைவாசியைக் கண்டாயா என்ற கவிதை இப்போ அது கிளிஷேயாகி போன பழைய சங்கதி. ஆனால் முதலில் எழுதியது நான்தான். அப்புறம் இன்னொரு கவிதை விடியாத பொழுதுகள். அதுல திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர்கன்னியின் சோகம். விடியலுக்காக காத்திருக்கும் அவள் தலைமுடி வெளுத்துப் போய் விடிந்துவிட்டது என்பதாக கவிதை முடியும். அதெல்லாம் இப்ப கவிதை இல்லை என்று தூக்கி எறியமுடியும். ஆனால் அப்ப அது பெரிய உற்சாகம்.
அப்படியே எழுதப் பழகி, நண்பர் எஸ்.அறிவுமணி குறிஞ்சி இலக்கிய வட்டம் மேடையில் மு.மேத்தா தலைமையில் கவிதை வாசிக்க என்னை நிறுத்தி விட்டார். மு.மேத்தா கண்ணீர் பூக்களால் கொடிகட்டிப் பறந்த நேரம் அது. என்னுடன் கவிதை படித்தவர் பழனிபாரதி. புரட்சியாக எழுதக் கூடிய பழனிபாரதி அன்றைக்கு சோபிக்கவில்லை. நான் வாசித்தேன் செந்நிறக் கவிதையை. மேத்தா சொன்னார் பழனிபாரதி தீ்க்குச்சிதான் ஆனால் இப்ப எரியாத குச்சி. அந்தக் குறையை தீப்பந்தம் கொண்டு போக்கிவிட்டார் ஜெகதீஷ் என்றார்.

சிரிப்பாக இருக்கு இந்த கேலிக் கூத்துகளையெல்லாம் நினைச்சால். அப்புறம் கதை எழுத ஆரம்பிச்சேன். பாக்யா, புதிய பார்வை, ஆனந்த விகடன், கல்கி என்று பல பத்திரிகைகளில் எனது கதைகள் பிரசுரமாகின.

அதன் பிறகுதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பினேன்.அன்றுமுதல் பல நூறு கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் , ஒரு நாவல் எல்லாம் எழுதியபின்னரும் பலருக்குத் தெரியாத பெயரில் வாழ நேரும் அவலம் எனக்கு. இரண்டு படத்தில் நடித்த லூசுகள் கூட பாப்புலராகும் போது 25 வருசமாக எழுதும் என் போன்ற பலர் பாப்புலர் பிகர் இல்லை,

எழுத்து என்பது விதியின் பின்னால் புறப்பட்ட 300 பேரின் சுழற்சி என்பார் நண்பர் தஞ்சை பிரகாஷ். அப்படி ஏதோ ஒருவிதியை துரத்தித்தான் நானும் பயணித்து வந்திருக்கிறேன்.

எனது பயணத்தில் நான் சந்தித்த படைப்பாளிகள் பட்டியல் மிகப் பெரியது. பலரை வலிய வீடு தேடிப் போய் பார்த்திருக்கிறேன். சிலருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால் ஒருவருடனும் எனக்கு ஒரு உறவும் இல்லை என்பதுபோலத்தான் தோன்றுகிறது.

சுஜாதா எனது கவிதை ஒன்றை ரசித்து கணையாழியில் பிரசுரித்தார். பெயர்களும் நினைவுகளும் என்பது அந்தக் கவிதை....பல நண்பர்களின் பெயரைப் பட்டியலிட்டிருப்பேன். கடைசியில் கவிதை இப்படி முடியும். எப்போதும் புதிதாக ஒரு பெயர் கிடைத்துவிடுகிறது. பழைய பெயர்களை காலம் அழித்துவிடுகிறது.

 உடுமலைப் பேட்டை ஜே.மஞ்சுளாதேவி எனக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார் . காபி டம்ளரின் அடிப்பாகம் போல நட்பு முடியும் இடத்தில் கசப்பு உருவாகும் என்று. அந்த கசப்பை இன்று வரை உணர்கிறேன்.

என்னிடம் உள்ள பிழைகள் என்ன....நான் நண்பனாகும் தகுதியற்றவனா, என்னுடன் ஏன் யாரும் நட்பாக நீடிக்கவி்ல்லை. பல வருடம் பழகியபின்னும் பிரிய பலருக்கு சுலபமாக முடிவது எப்படி.....

சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன், எம்.வி,வெங்கட்ராமன், கோவை ஞானி, ஜெயமோகன், பெரியார்தாசன், வல்லிக்கண்ணன், திகசி, வண்ணதாசன், வண்ணநிலவன், சிற்பி ,மு,மேத்தா, வைரமுத்து, புவியரசு, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், தனுஷ்கோடி ராமசாமி, பொன்னீலன். தஞ்சை ப்ரகாஷ், சுந்தர சுகன், ஷாராஜ், வா.மு.கோமு, சிட்டி, திலீ்ப்குமார், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், இன்குலாப், ஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா , புலவர் சங்கரலிங்கம் என எத்தனைப் படைப்பாளிகளை தேடித் தேடிப் போய் பார்த்துப் பேசியிருப்பேன்.இதில் சிலர் இறந்துவிட்டனர். மீதம் இருப்பவர்களில் திலீப்குமார் போன்ற சிலருடன் உறவு  இன்றும் நீடிக்கிறது. ஆனால் என்னுடன் அக்கறையுடன் பேசுகிற சிநேகம் ஏதும் மிச்சமிருக்கிறதா என்று தெரியவில்லை.

என்னுடன் பழகிய எந்த நட்பையும் தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தெரியவில்லை. பெண்களிடத்தில் பாலியலை கலக்காமல் தள்ளிப்போகும் கலையையும் நான் கற்கவில்லை. அல்லது காமத்தை கலந்த நட்பை அடையவும் தெரியவில்லை. தோழிகளின் நட்பு மலர்ந்த போதே மறைந்தும் போகிறது.


Tuesday 26 June 2012

பஷீரின் மதிலுகள்

எத்தனை முறை படித்தாலும் மனதுக்குள் மணக்கும் கதைகள் பஷீருடையவை. பாத்திமாவின் ஆடு நேஷனல் புக் டிரஸ்ட்டில் வந்தப்போது படித்தது. இன்றும் பசுமையாக நினைவில் இருக்குது. அண்மையில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் நீல பத்மனாபன் மொழிபெயர்த்த மலையாள இலக்கியத் தொகுப்பு மதிலுகள் கிடைத்தது. பல கவிதைகளை மலையாள மொழியின் வாசத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார் நீல.பத்மனாபன். 2000 ஆண்டில் வந்த தொகுப்பு. அப்போதே மட்டமான தாளில் நிதியுதவி பெற்று 75 ரூபாய் விலையில் வெளியிட்ட காவ்யா சண்முகசுந்தரம் மீது கோபம்தான் வந்தது. வாங்காமல் விடுபட்டுப் போனதற்கு இதுவும் காரணம். எப்படியோ பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது.
கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். தகழியின் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் ரசிக்க வைத்தது. ஆனாலும் நம்ம சாய்ஸ் பஷீர்தான். மீண்டும் வரிவரியாய் லயித்துப் போய் மதிலுகளைப் படித்ததும் மனதில் எண்ணங்களில் பாடலும் கண்ணீரும் வந்து கலந்தன. நாராயணீ இரவில் அழுவாளோ இல்லையோ பஷீர் நம்மை அழவைத்துவிடுவார். சிறையில் இரு மதில்களால் பிரிக்கப்பட்ட முகம் அறியாத காதலர்களின் பகிர்தல்களும் எதிர்காலமே இல்லாத அவர்களின் காதலும் அற்புதமான வாசிப்பனுபவம் தருகின்றன. இந்தக் கதையை நான் படிக்கும் போதே மதிலுகள் படமாகியிருப்பதும் நினைவில் வராமல் இல்லை. மம்முட்டி அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பாரா என்று பதறாமல் படிக்கவே முடியவில்லை. அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும். நாராயணீயாக யார் என்றே தெரியவில்லை. அதுவும் தெரியணும். அதுகிடக்கட்டும். அந்த வார்டனுடன் அடிக்கும் ஜோக்குகளும், பெண்களின் கழிவறையில் ஓட்டை போட்டு பார்க்கும் ஆடவர் வக்கிரமும் எத்தனை அற்புதமான இலக்கியமாகியிருக்கு பஷீர் சேட்டனிடம். எங்கள் மனதுக்குள் நுழைந்து பார்க்காதீர்கள், அறம் உபதேசம் எல்லாம் வெளியில் இருப்பவர்களிடம்தான் என்ற பஷீரின் தர்க்கம் அபாரம். படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள். மதிலுகள் ஒரு எழுத்துக் காவியம். அதே தொகுப்பில் ரோஸ்மேரி என்ற டீச்சரின் பேட்டியும் உள்ளது. அந்த ரோஸ் மேரி யிடம் பஷீர் காதல் கொண்டதாக மற்றொரு மலையாள எழுத்தாளர் பஷீரின் இரங்கலில் எழுதிவிட்டாராம். ரோஸ் மேரியோ அவர் எங்க பெரியப்பா மாதிரியான சொந்தம் என்கிறார். காதல் ஏதும் இல்லை என்கிறார். இன்னொரு தகவல் எதுவென்றால் ரோஸ்மேரியின் கணவர் கே.ஜி.தாமஸ். மற்றொரு மலையாள எழுத்தாளர். அவரைப் பற்றி சுந்தரராமசாமி எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். ஒருவேளை ஜே ஜே சில குறிப்புகளில் வருவாரா...பார்க்க வேண்டும். மறதி அதிகமாகிவிட்டது.


Monday 18 June 2012

கிருஷ்ணன் நம்பி கதைகள்



                                     









அமரர் கிருஷ்ணன் நம்பி சராசரி மனிதர்களின் ஆசைகளையும் நிராசைகளையும்தான் பதிவு செய்திருக்கிறார். ஊசலாடும் மனித உறவுகளையும் இன்னும் மேலான வாழ்வுக்கு ஏங்கும் நடுத்தர மக்களின் கனவுகளையும் அவர் தனது கலை சிருஷ்டியாக செய்திருக்கிறார், மிகக் குறைவான கதைகள்தாம் எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிக்கிறது.
வாழ்க்கையின் இரண்டு மகத்தான சோகங்களில் ஒன்று, நாம் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது நாம் விரும்பியதை அடைவது என்றார் பெர்ணாட் ஷா.கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இந்த முரண் நிலையை அடிப்படையாகக் கொண்டவை.மனிதன் ஒன்றை அடைய முடியாமல் போகின்ற நிலையையும் அடைந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய இழப்பையும் சரியாக கணித்த படைப்பாளிதான் கிருஷ்ணன் நம்பி.

எக்ஸன்ட்ரிக் - நடுத்தர ஆபீஸ் சிப்பந்தி ஒருவனின் கதை.எண்பது ஒரு ரூபாய் நோட்டுகள் சம்பளம் வாங்கிய கையோடு, ஆயிரம் பேருக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில் மனைவியும், ஒரு சிகரெட்டை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிற தனது பற்றாக்குறையையும் எண்ணிப் பார்க்கிறான் அவன். தெருவில் நிற்கும் ஒரு பணக்காரனின் கார் அவனது அடங்கிய ஆசைகளைக் கிளறிவிட, வாழ்க்கையை அனுபவித்து விடத் துடிக்கிறான் அவன்.
அந்த எண்பது ரூபாய் சம்பளப் பணம் அவன் ஆசைகளின் சிறகுகளானது. புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ரயிலடி வரை திரும்பி வருவது போல் கிருஷ்ணன் நம்பியின் சிப்பந்தி திரும்பி வரவில்லை. அவன் ரயிலேறி ஓடிப் போகிறான்.ஓட்டலில் அவன் விரும்பிய ஸ்டிராங் காப்பி, சர்வருக்கு தாராளமான டிப்ஸ், ஏழைச் சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் படம் பார்க்க காசு, டாக்சியில் ஊர் சுற்றல், பாலக்காட்டு வேசியிடம் டாக்சி டிரைவருக்கும் ஓசியில் பெண் இன்பம், கடைசியில் மிச்சமான பத்துரூபாயை தொலைத்து விடுவதுமாக எண்பது ரூபாயை அவன் செலவழிக்கிறான். முறைக்காதீர்கள். அந்தக் காலத்தில் எண்பது ரூபாயில் இத்தனை காரியம் செய்யலாம்.
அவன் ஒரு நாளாவது தனது விருப்பப்படி வாழ்ந்து விட்டான். அடைய முடியாதவற்றை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிராசைகள் நிறைவேறி விட்டன.என்றாலும் பிரச்சினைகள் தொடர்கதைதானே....பால்காரன், வாடகை,குழந்தைகளின் கல்வி, மளிகைக் கடை பாக்கி என்று நீண்ட பட்டியலுடனும் பற்றாக்குறையுடனும் காத்திருக்கும் அவன் மனைவிக்கு சம்பளம் நாளைக்கு என்ற பொய்யான பதில் தீர்வாகி விடாது. நாளை என்ற அந்தக் கொடூரமான பொழுது அவன் கழுத்தில் நுகத்தடியாக, முதுகில் சாட்டையாக விழப் போகிறது. அந்த ஒருநாள் இன்பத்திற்காக அவன் ஒருமாதம் துன்பத்தில் உழலப் போகின்றான்.

காணாமல் போன அந்தோணி கதையும் அதுபோலத்தான்.அந்தோணி ஒரு ஆடு. கொழு கொழுவென்று வளர்ந்த ஆடு. அதன் சொந்தக்கார கிழவி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சர்ச்சுக்குப் போகும் போது அவள் புருஷன்- கிழவன் முதல் ஆட்டம் சினிமா பார்த்து நள்ளிரவில் வீடு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் 40 வருடமாக ஒரே நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வறுமை நிலையில்தான் கிழவியுடன் குடித்தனம் நடத்தி வருகிறான்.ஆனால் சம்பளம் முழுவதையும் அப்படியே கொண்டு வந்து கிழவியிடம் கொடுத்துவிடுவான். கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட கிழவிக்கு சில திட்டங்கள் இருந்தன.சர்ச்சிலிருந்து திரும்பும் போது அந்தோணியை காணவில்லை.ஆட்டைத் தேடி கசாப்புக் கடை முதல் வயல் வாய்க்கால் வரை தேடிப் பார்த்து சலித்துப் போகிறாள். கிறிஸ்துமஸ் என்ற சுபதினம் அவளுக்கு சோகதினமாக மாறுகிறது. ஆனால் மாலையில் கொத்து வேலையாள் ஜார்ஜ் மூலம் அந்தோணி திரும்பக் கிடைத்து விடுகிறது. ஆட்டை விலைக்கு கொடுத்ததும் கிழவியின் திட்டங்கள் நிறைவேறுகின்றன.ஆம் காணாமல் போன அந்தோணி நிரந்தரமாக தொலைந்துப் போய்விட்டது.
கிருஷ்ணன் நம்பி உயர்ந்த இலட்சியங்களையும் கற்பனை இலக்குகளையும் கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கவில்லை. மிகவும் யதார்த்தமான சகல பலவீனங்களும் கொண்ட பாத்திரங்களே அவை.
சிங்கப்பூர் பணம் கதை இரு நண்பர்கள் பற்றியது. ஒருவன் ஏழை குமாஸ்தாவின் மகன். இன்னொருவன் சிங்கப்பூர் சீமானின் புதல்வன். இருவருக்கும் நட்பு முளைக்க பணக்காரப் பையன் நிறைய செலவு செய்கிறான். 120 ரூபாய் மதிப்புள்ள பைனாகுலரை பரிசாகவும் தருகிறான்.பதிலுக்கு இவனும் ஒரு தேர்ப்பொம்மையைப் பரிசளிக்க எண்ணி, கிடைத்த ஒற்றை ரூபாயுடன் வரும் போது அந்த ஒரு ரூபாயும் செல்லாத காசாகிப் போகிறது.
அந்த செல்லாக் காசாக இருப்பவர்களின் கதையைத் தான் கிருஷ்ணன் நம்பி மீண்டும் மீண்டும் எழுதுகிறார்.
நாணயம் என்ற கதையில் வரும் பிச்சாண்டி என்ற சங்கர நாராயணனுக்கு சினிமாவும் ஓட்டலும் பிடித்த விஷயங்கள். அதற்கான காசு அவனுக்கு அவன் மாமாவின் உண்டியலில் இருந்தே கிடைக்கிறது. நாணயமான குடும்பத்தைச் சேர்ந்த அவன் இந்த திருட்டைச் செய்கிறான். பின்னர் தன் களவுக்குப் பிராயச்சித்தமாக முதல் மாத சம்பளத்தை மாமாவின் உண்டியலில் போட முயலும் போது மாமியிடம் அகப்பட்டு திருடனாக பட்டம் பெறுகிறான்.

இருக்கிற வாழ்க்கையில் திருப்தியின்மையும் இன்னும் மேலான, சுகமான, சௌகரியமான, ஆசைகள் ஈடேற்றும் வாய்ப்புள்ள வாழ்நிலைக்கான துடிப்பும் கிருஷ்ணன் நம்பியின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் காணக் கிடைக்கிறது. அந்த மேலான நிலை பணத்தால் மட்டும் கிடைக்குமா.?
காலில் கட்டப்பட்ட சங்கிலி அறுபடுவதும் ஆனந்தமல்லவா....கால் சங்கிலியால் கட்டப்பட்ட மனநலம் சிதறிய பெண் ஒருத்தி ஊமைப் பையன் ஒருவனால் விடுதலை பெறுகிறாள்.ஆனால் அவன் அன்புச் சங்கிலியில் அவள் மீண்டும் விலங்கிடப்படுகிறாள். கதையின் பெயர் சங்கிலி.
உணர்ச்சிதான் அஸ்திவாரம். மேதைமை எனப்படுவது கூரைக்கு வெள்ளையடிக்கும் முயற்சி தான் என்பார் சீன அறிஞர் லீ-யு-டாங். கிருஷ்ணன் நம்பிக்கு இதை யாரோ சொல்லியிருக்கக் கூடும். அதனால்தான் மிகவும் அரிதான உணர்ச்சி இழைகளை பின்னலிட்டு தனது கதைகளை மேதைமையால் அலங்கரித்திருக்கிறார். மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மேதைமை வறட்டு வேதாந்தமாகவே முடியும் என்ற தெளிவு அவர் கதைகள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

எல்லா இதயங்களிலும் ஆசைகள் இருக்கின்றன. எல்லா இதயங்களிலும் அந்தரங்கமாகப் போற்றும் கனவுகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார வசதியற்ற பெரும்பான்மை சாமான்ய மக்களின் ஆசைகளும் கனவுகளும் ஆசைகளாகவும் கனவுகளாகவுமே தேங்கி விடுகின்றன. அவை ஒருபோதும் நிறைவேறுவதே இல்லை. நிறைவேறினால் அதற்கான விலையாக அவர்கள் தங்கள் வாழ்வையே தரவேண்டியிருக்கும்.
காலில் சங்கிலியுடன் விடுதலை வேட்கையில் உழலும் பைத்தியத்தின் கதைதான் மனித குலத்தின் கதை. நம்மைப் பற்றிய ஒரு புரிதலையும் நம் வாழ்வைப் பற்றிய ஒரு கேள்வியையும் கிருஷ்ணன் நம்பி தனது கதைகளின் மூலம் எழுப்புகிறார்.ஒரு நாள் சுகத்திற்காக மாதம் முழுவதும் துன்பப்படும் எஸன்ட்ரிக் போல நாமும் தற்காலிகமான லௌகீக சுகங்களுக்காக ஒரு நீண்ட கால வரலாற்றையே பறிகொடுத்து நிற்கிறோம். இன்றைய உலகைப் பற்றி, மதம், அரசியல், கலை , பண்பாடுகள் குறித்த நமது அலட்சியம் மாதச் சம்பளத்தை ஒரு நாளுக்காக இழக்கிற நிலையை விட எந்த வகையிலும் மேம்பட்டது அல்ல. இதுவும் அதைப் போல ஆபத்தானதும் கூட.

(கிருஷ்ணன் நம்பியின் கதைகளும் அவரைப் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடையும் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கின்றன.)

Wednesday 13 June 2012

நான்



ALL PRAYER, MEDITATION IS INDIVIDUAL, IS PRIVATE-  OSHO

MAN'S GREATEST CREATION IS HIMSELF,HIS GREATEST CREATION WILL BE HIS OWN SELF REALIZATION- OSHO

பல வருடங்களுக்கு முன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் முன்றில் புத்தகக் கடை இருந்தது. அங்கு பலமுறை போயிருக்கிறேன். அங்கேதான் கோபிகிருஷ்ணன், மா.அரங்கநாதன், அழகியசிங்கர் போன்ற பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. விஷயம் அதுவல்ல, முன்றிலை நடத்திய எழுத்தாளர் மா.அரங்கநாதனுடன் பேசும் போது எனது கவிதைகள் பற்றிய விவாதம் வந்தது. எனது கவிதைகளில் நான் என்ற தன்மை அதிகமாக இருப்பதாக அவர் குறைபாடு தெரிவித்தார்.அதுவரை அப்படியொரு விஷயமே எனக்கு தெரியவே இல்லை. அந்த நான் யார்? ஆயினும் அதன் பின்னர் மிகுந்த பிரக்ஞையுடன் நான் என்ற த்வனியை விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.
என்னைப் பற்றி எனக்கென்ன ஈடுபாடு?இது ஒருவகை மனோவியாதி என்று கூறுபவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இதனை நார்சிசசம் என்பார்கள்.தன் மீதான அதீத ஈடுபாடு என்று அதை எளிமையாக தமிழ்ப்படுத்தலாம்.அசாதாரண சுய ஈடுபாடு என்றும் கூறலாம்.இது சரியா என்று எனக்கு நானே பல முறை கேட்டுப் பார்த்து விட்டேன். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் அது பேரின்பம் என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை சந்திரபாபு பாடியதும் நினைவில் வருகிறது.
என்னை முன்னிறுத்தி நான் எழுதக் கூடாது என்று நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி எழுதுவதானால் என்னால் எழுத முடியாமல் போய் விடுமோ என்று கவலைப் படுகிறேன்.என் நண்பர்கள் மீதும் வாசகர்களிடமும் எனக்கு பிரியமும் மதிப்பும் உண்டு. ஆனால் என்னைப் பற்றி நான் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?
படைப்பாளிக்கு வாசகன் மூலம் கிடைக்கும் உறவுதான் சமூகத்துடனான அவனது உறவு. பிரதியை எழுதிவிட்டால் அது அவனுக்கு சொந்தமில்லை வாசகனுக்குரியது என்றும் போஸ்ட் மாடர்னிச ஜாம்பவான்கள் கூறுவார்கள்.ஒரு படைப்பாளி தன் படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூற முடியுமா?அப்படி சொல்லும் போதே அந்தப் பிரதி செத்துப் போகாதா?ஒருவர் தன் ஆன்மாவின் அந்தரங்கமான துடிதுடிப்பிலிருந்து அந்தப் பிரதியை எழுதவில்லை என்று அர்த்தமாகாதா?எழுத்தாளன் தனது எழுத்தின் தொடர்பறுக்க முடியுமா என்ற கேள்வியால் நான் பல சிந்தனைகளில் மூழ்கி எழுந்திருக்கிறேன்.
சுயசரிதம், சுயபுராணம், சுய தம்பட்டம், சுயநலம் போன்ற வார்த்தைகள் எல்லாம் எனது படைப்புகளின் மீது விமர்சனமாக வீசப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நான் என்னுள் மூழ்கி தீவிரம் கொள்கிறேன். எந்தப் பரிந்துரையிலும் பட்டியலிலும் யாரும் என்னை சேர்க்காத போதும் கூட நான் மட்டுமே அறிந்த ஒரு சமூகத்துடனான எனது தீவிர உறவின் மையத்திலிருந்து எனது எழுத்து பிறக்கிறது என்று கோவை ஞானி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார். சமூக உணர்வு, மனித நேயம் என்ற சொற்களின் பொய்யான சித்திரங்களில் சிக்காமல் என்வழியாகவே அதை நான் காண்கிறேன்.நான் இல்லாமல் அந்த உணர்வுகள் இல்லை.அத்தகைய மேன்மையான இலக்குகள் இல்லாமலும் நான் இல்லை.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் தன்னை மிகப் பெரிய ஆகிருதியாக முன்னிறுத்தி இலக்கியத்திற்கே தான்தான் பெரிய அத்தாரிட்டி போல சொந்தத் திராணியுடன் கருத்துகளை முன்வைக்கும் போக்கு பாரதியிடமும் இருந்தது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல படைப்பாளிகளிடமும் உள்ளதுதான். சுஜாதா கூட ஹைகூவுக்கே தான்தான் அத்தாரிட்டி போல பேசியவர்தான். அவருக்கு அதன் அரிச்சுவடி மட்டும்தான் தெரிந்திருந்தது.
எனில் என்னைப் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு? உலகைப் புரிந்துக் கொள்ள முதலில் உன்னைப் பற்றி நீ புரிந்துக் கொள் என்கிறது பௌத்தம். உலகைப் புரிந்துக் கொண்டால் அதில் உன் இருப்பைப் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது மார்க்சியம். நீ- நான் என்ற உறவுதான் சமூக ரீதியிலான உறவாகவும் உள்ளது. அதனிடையே தான் நமது வாழ்க்கையும் இருக்கிறது. எழுத்து எனக்கா சமூகத்திற்காகவா என கேள்வி எழும்போது உனக்கான கவிதையை நீ எழுது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவில் வருகிறது.
நான் எழுதுவது எனக்கேதான் என்பதான தெளிவு வந்துவிட்டது. என் வாசகர்களுக்காக மட்டுமல்லாது, என் பொருட்டும் என்னால் என்னால் என் எழுத்தை மாற்ற முடியாது. அது எப்படி வர வேண்டுமோ அப்படித்தான் வந்துக் கொண்டிருக்கும். ஒரு இலை துளிர்க்கும் திசையை யார் தீர்மானிக்கிறார்களோ அவர்களே அதை தீர்மானிக்கட்டும். ஒரு பூ மலரும் போது எந்த திசை நோக்கி மலர்கிறதோ அதுவே அதன் திக்குதிசை எல்லாம். என் வாழ்வை மாற்றும் ஆற்றலும் எனக்கில்லை. அது போகும் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். அதில் என்னையே நீர்ச்சுழல் போல வட்டமிட்டு சுழலும் நாட்களும் உழலுகின்ற காலங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.என்னை நானே புரிந்துக் கொள்வதன் மூலம் இவ்வுலகைப் புரிந்துக் கொள்ள நான் முயலுகிறேன். வாழ்க்கை எனக்கு இன்னும் சற்று ஆயாசமும் அவகாசமும் அளிக்குமானால் இந்தப் புரிதலில் இன்னும் முழுமை கிடைக்கும்.
என்னைப் பற்றி நான் எழுதுவதும் முழுக்க முழுக்க என்னைப் பற்றியதல்ல என்பதை ஒரு நுட்பமான வாசகனால் உணர முடியும். அதற்கான மௌனமான இடைவெளிகளை எனது படைப்புகள் கொண்டிருக்கும். என்னைப் பற்றி நானே பேசக் கூடாது என்று தடைகள் விதிப்பவர்களை நான் மதித்தாலும் கூட, நுண்ணறிவும் நேர்மையும் துணிவும் மிக்க ஒரு படைப்பாளியை அப்படியெல்லாம் தண்டிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மேதைமையின் திமிரோடு இதனை ஒரு கட்டளையாகவும் என்னால் கூற முடியும்.

Thursday 7 June 2012

படித்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் தேய்பிறை இரவுகளின் கதை


தேய்பிறை இரவுகளின் கதை-கீரனூர் ஜாகிர் ராஜா

கீரனூர் ஜாகிர் ராஜா மீன்காரத் தெரு என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பில் அகலக் கால் பதித்தார். அவரது சில படைப்புகளை சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஓரிருமுறை சந்தித்தும் இருக்கிறேன். அவரைப் பற்றி மற்ற நண்பர்கள் கூறிய கருத்துகள் அவரைப் பற்றிய இருண்மையான சித்திரத்தை வடித்திருந்தன. குடிப்பார் என்றார்கள். சதா போதையில் மிதப்பார் என்பார்கள். இப்படி சில நல்ல படைப்பாளிகள் போதையின் பிடியில் சிக்கியதை நான் பல முறை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

திரு. பிரபஞ்சன் அவர்கள்  ஆனந்த விகடன் இதழில் எழுதிய சிறுகதை நீரதன் புதல்வர். இதிலும் குடிப்பதை பற்றிய சில பகுதிகள் வருகின்றன. கோடைக்காலத்தில் ஏன் டாஸ்மார்க்கில் அதிகமான கூட்டம் கூடுகிறது என்றும், குடிப்பது எல்லாவற்றையும் மறப்பதற்கு அல்ல மாறாக நினைப்பதற்கு என்று பிரபஞ்சன் எழுதியிருக்கிறார்.

சர்வ சாதாரணமாக 500 ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்து குடிக்கும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன்.  ஏராளமான படைப்பாளர்கள் மீது இத்தகைய இருண்ட நிழல்கள் படிந்திருந்தன. பணம் கேட்பார்களோ என நண்பர்கள் இவர்களை விட்டு ஒதுங்குவதைப் பார்த்திருக்கிறேன். நானும் சில சமயம் தவிர்த்து விட்டிருக்கிறேன்.

இது வரை ஒருமுறை கூட ஹோட்டலில் போய் 500 ரூபாய் பில் கொடுத்து நல்ல உயர்தர உணவை நான் சாப்பிட்டதில்லை. அதிகபட்சம் சரவண பவன்தான். அதுவே 200 ரூபாய் பட்ஜெட்டை பில் தாண்டி விட்டால், அதை ஈடு செய்ய ஒரு வாரத்திற்கு கையேந்தி பவன்களில் சாப்பிடும் பிழைப்பு எனக்கு. எப்படி குடிப்பதற்காகவே இந்த நண்பர்கள் இத்தனை செலவு செய்கிறார்கள் என்ற ஆற்றாமைகள் தீருவதே இல்லை. பண்பான போதையில்லை குடியிலே, ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே என என்னதான் புத்தி சொன்னாலும் ஒருவர் மண்டையிலும் அது ஏறியதே இல்லை. மாறாக என்னை குடிக்க வைக்க கட்டாயப்படுத்துகிறார்கள். நட்பை இழந்தாலும் பரவாயில்லை குடிப்பதில்லை என்று தீர்மானமாக இருப்பதால் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.

கீரனூர் ஜாகிர் ராஜாவும் அப்படித்தான் இருப்பார் என்ற சிந்தனையில் அவர் புத்தகங்களுடன் அந்நியத்தன்மை ஏற்பட்டு விட்டதை அறிந்தேன். அது ஒரு படைப்பாளிக்கு செய்யும் நியாயமாக இருக்காது என்பதால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவரது தேய்பிறை இரவுகளின் கதை எனும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கி வந்தேன். பலமுறை படிக்க எடுத்த போதும் அதில் இருந்த முஸ்லீம் தமிழ் நடையால் மேலும் சோர்வடைந்து ஒத்திப் போட்டேன். தோப்பில் முகமது மீரான் போன்ற இஸ்லாமிய பின்புலம் உள்ள படைப்பாளிகளின் வட்டார மொழியுடன் இஸ்லாமிய சொற்களும் சர்வசாதாரணமாக கலந்து வருகின்றன. உதாரணமாக காஃபிர் .

சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் கலப்பதை கொடுங் குற்றமாக ஏசும் தமிழ் அறிஞர்கள் யாரும் தோப்பில் முகமது மீரானையோ கீரனூர் ஜாகிர் ராஜாவையோ இஸ்லாம் கலப்புக்காக விமர்சிப்பதே இல்லை. அதே போன்று ஜோஸ் டி குரூஸ், பிரான்சிஸ் கிருபா போன்றவர்கள் கிறித்துவர்கள் என்ற பிரக்ஞையுடன் விவிலியத்தின் சாயலில் புனைவு மொழியை ஏற்படுத்தினாலும் யாருக்கும் பிரச்சினையில்லை. அவாளும் இவாளும்தான் தமிழ்த்துரோகிகள்.பெரியாராலும் அம்பேத்காராலும் அடையாளம் காட்டப்பட்ட தேச துரோகிகள். பாவம் அசோகமித்திரன். பாவம் லாசரா. பாவம் ஆதவன், பாவம் தி.ஜானகிராமன்.
அது கிடக்கட்டும். ஜாகிர் ராஜா அசலான படைப்பாளிதான். அதில் சந்தேகம் இல்லை. அவரது கதைகள் மனதை வருடுகின்றன. திகைக்கவும் சிலசமயம் தடுமாறவும் வைக்கின்றன. அவர் கதை ஒன்றில் கிணற்றுக்குள் இருந்து நீளும் வளைக்கரம் போன்று ஏதோ ஒன்று நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுக் கொண்டேயிருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜா என்ற அன்புத் தோழரே குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்ற நல்ல செய்தியோடு நீங்கள் என்னை சந்திக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

Friday 1 June 2012

காமத்துப் பால்- -பாலியல் திரைப்படங்கள்

பாலியல் திரைப்படங்கள் பற்றிய என் கட்டுரையை வாசிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்க-jagdishk.dinstudio.com         

குறிப்பு


இந்த மொக்கை பிளாக்கை நம்பி ஏராளமான சினிமா கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன். பட்டென சொல்லாமல் கொள்ளாமல் அத்தனையும் நீக்கி விட்டார்கள். பல நல்ல கட்டுரைகள் காணாமல் போனாலும் சில எழுத்துவடிவில் தப்பியுள்ளன. இந்தக் கட்டுரையும் தப்பிவிட்டது. விரைவில் இப்பகுதியில் சேர்க்கிறேன். அதுவரை வாசகர்கள் பொறுக்கவும் மன்னிக்கவும்
  jagdishk.dinstudio.com - my blog on films

Thursday 31 May 2012

காமத்துப் பால்

காமம் பொங்கி வழியும் முகங்களும் கண்களும் மூடி மறைக்கும் மனங்களும் நித்தம் காணும் காட்சிகளாகி விட்டன.நடிகைகளின் வாளிப்பான உடல்களும் இணையத்தில் கிடைக்கும் நிர்வாணமும் நம்மை அலைக்கழிக்கின்றன. சுடியும் ஜீன்சும் டைட்சும் அணிந்து நடமாடும் பெண்களால் நமது இருப்பு குலைந்து விடுகிறது. புடவை கட்டியவர்களும் இடுப்பின் இறக்கத்தையும் புட்டத்து மேடுகளையும் கண்ணில் படச் செய்து மார்பின் திரட்சியால் மதிமயக்குகின்றனர். எங்கு நோக்கினும் காமமே தெரிகிறது நமக்கு. பள்ளிக்குச் செல்லும் சிறுமி முதல் அலுவலகம் செல்லும் பெண் மட்டுமின்றி பிள்ளைகள் பெற்ற தாய்மார்களும் தப்பவில்லை இந்த காமத்தின் கணையிலிருந்து. பெண்ணின் விரலைத் தொட்டுப் பார்க்கவே பல வித்தைகள் செய்கின்றனர் பயலுகள். கைக்குலுக்கவும் கையுடன் கையை இறுக்கிக் கோர்த்து பலப்பரீட்சை செய்யவும் அழைப்புகள் ஏராளமாக ஆண்களின் தரப்பில் நீளுகின்றன. பெண்களும் கூச்சமில்லாமல் தொட்டுப் பழகுகின்றனர். தி.நகரிலும் புரசைவாக்கத்திலும் வரிசையாக அமர்ந்திருக்கும் இளைஞர்களிடம் மருதாணி பூச பெண்கள் கை நீட்ட அவள் கையை தன் தொடை மேல் வைத்து மெல்ல நீவி விட்டவாறே மருதாணி பூசும் அந்த இளைஞனின் மனநிலை என்னவாக இருக்கும் என்றே யோசிக்கிறேன். வருமானமில்லாமல் திருமணமில்லை என்ற நிலை ஆண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வரன் இல்லை என்ற நிலை பெண்களுக்கு. திருமணம் இல்லாமல் பாலியல் உறவு இல்லை என்பது சமூகம்.

மணமாகி சேர்ந்து வாழும் பலரும் சேர்ந்து படுப்பதில்லை. தாலியின் எல்லையைத் தாண்டி முறை தவறினால் அது சட்டத்திலும் தப்பு என தண்டிக்கப்படும்.

பின் என்ன தான் செய்வான் ஆண் என்னதான் செய்வாள் பெண்........பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது, மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது என்று எம்ஜிஆர் பாடி வைத்தார்.

பெண்ணின் உடல் ஆணின் இலக்கு ஆகி விட்டது. ஆணிடமிருந்து கிடைக்க கூடிய அன்பை விட அவனால் கிடைக்க கூடிய வசதியான வாழ்க்கையும் ஆடம்பரமும்தான் பல பெண்களின் இலக்காகி விட்டது. இதனால் கொலைவெறிகள் அதிகமாகி விட்டன.


நண்பர்களே இப்பகுதி காமத்துக்காக எனது அர்ப்பணிப்பு.

காமம் தொடர்பான கட்டுரைகள், ஓஷோவின் எண்ணங்கள், காமத்தைத் தூண்டும் சமூகத்தின் மீதான விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டுகளின் அசல் முகங்கள், திரைப்படங்களில் காட்சி ரீதியாக கிடைக்க கூடிய பாலியல் பிம்பங்கள், காமத்தில் ரசிக்க கூடிய விஷயங்கள், குற்றங்களை உருவாக்கும் கள்ளத் தொடர்புகள் என எதை வேண்டுமானாலும் பேசலாம். நிறைய இருக்கு பகிர்ந்துக் கொள்ள. பொறுத்திருங்கள்.

Monday 28 May 2012

மகாகவி இக்பாலின் கவிதை

சினாயில் பூத்த லில்லி மலர்
- மகாகவி இக்பால் 


தமிழாக்கம்- செந்தூரம் ஜெகதீஷ்


அவன் கருணையாலும் பிரகாசத்தாலும்
உலகம் சுடர்கிறது.
கடந்த காலமும் நிகழும் அவன் புகழைப் பாடுகிறது.
ஒவ்வொரு விடியலின் வெள்ளி ரேகைகளுடன்
சூரியன் அவனுக்கு நன்றி செலுத்துகிறது.
என் உள்ளத்தின் சுடரால் நான் ஒளிர்கிறேன்.
ரத்தக் கண்ணீருடன் என் கண்களில் தாகம் பெருகுகிறது.


உலகம் அன்பினால் பிணைக்கப்பட்ட முடிவற்றதொரு சங்கிலித் தொடர்.
காதலின் கவிதையால் அதன் வழவழப்பு கூடுகிறது.
நிகழ், கடந்தகாலம், எதிர்காலம் என எதுவாயினும்
காதலின் கணம்தான் நிலைத்து விடுகிறது.


துலிப் மலர்களின் நிறத்தைப் பூசுகிறது காதல். 
உள்ளத்திலோ அதன் நெருப்பின் வெப்பமே ஆளுகின்றது.
பூமியின் இதயத்தை ஊசியால் குத்திப் பார்த்தால்
அன்பின் ரத்தம் அதன் நாளங்களில் ஓடுவதை உணரலாம்.


மனிதனின் உதடுகளில் இருந்து அன்பின் பாடல் ஒலிக்கிற போது.
தானே பூட்டிக் கொண்ட கதவுகளை அவன் திறக்கிறான்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும் மனிதனால்தான் பராமரிக்கப்படுகிறது.
ஒருவேளை இந்த விளையாட்டில் இருவருமே பங்குதாரர்கள் போலும்.


எல்லா உள்ளங்களும் அன்பின் வளையத்தில் வரவில்லை.
எல்லா மனிதர்களும் அன்பின் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை.
லில்லி மலரின் இதயம் பல நேரங்களில் கிழிந்து அதில் ரத்தம் சிந்துகிறது.


காற்றில் இலக்கற்றுத் திரியும் எய்த ஒரு அம்பைப் போல
நான் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அலைபாய்கிறேன்.
எல்லாமே என் கண்ணுக்குப் புலப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.


என் விருப்பத்தின் மாறும் மனநிலைகளுக்கேற்ப
யாரோ யாழ் மீட்டுகின்றனர்.


தோட்டத்தில் இருக்கும் வானம்பாடி கதறி அழுகின்றது.
அதன் மண்ணிலிருந்து துயரத்தைத் தவிர வேறு எதுவும் முளைக்கவில்லை.
தலைமுறைகளைக் கடந்தும் பாலைவன முட்கள் உதிரவில்லை.
ரோஜாக்கள் இளமை பூத்திருக்கும்போதே இறந்து விடுகின்றன.


எத்தனைக் காலம்தான் கூட்டுப் புழுவாய் உள்ளுக்குள் போராடுவாய் என் நெஞ்சமே.
ஒருமுறை உன் உள்மனத் தீயால் உன்னையே நீ எரித்து விடு.
உன் மணல் துகள்களால் ஒரு பலமான உடலை உருவாக்கு.
கனத்த பாறையாய் மாறி கடும் புயல்களைத் தாங்கு,
வலியின் தன்மை அறிந்த உன் இதயம் மலை போல உறுதி கொள்ளட்டும். ஆனால் அதன் இடையே ஒரு நதி பாடிச் செல்லட்டும்.




இறைவா...இவ்வுலகம் எத்தனை கோடி இன்பம் கொண்டது.
ஒவ்வொரு அணுவும் இருப்பால் மெய்சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.
காம்பிலிருந்து முகிழ்த்த ரோஜா மொட்டு கூட
வாழ்க்கையைப் பெற்றுவிட்ட பரவசத்தால் புன்னகைக்கிறது.


நேற்றிரவு செத்துக் கொண்டிருந்த புழு ஒன்று என்னிடம் சொன்னது,
நாளை காலை நான் சாம்பலாகி விடுவேன் என்றாலும் இன்று
வாழ்வின் தீயில் என்னை ஒருகணமேனும் எரியவிடு.


இன்று காலை வானம்பாடி ஒன்று பரவசத்தால் பாடிக் கொண்டிருந்தது.
என் இதயத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு கண்ணீர்த் துளியை, ஒரு பெருமூச்சை, ஓர் அழுகையை, ஒரு சோகப் பாடலை அது கிளறிவிட்டது.


அதன் பாடல் -


எனது பாடலுக்குள் வாழ்க்கையின் துன்பத்தைத் தீர்க்கும் போதையைத் தேடாதீர்கள்.
ஒரு ரோஜாவைப் போல ரத்தம் சொட்டும் இதயமும் அதன் முட்களும் தவிர என்னிடம் 
வெளி்ப்படுத்தவோ விற்பனை செய்யவோ எதுவும் இல்லை.


என்னுடன் வாழும் பறவைகளை நான் அறியவில்லை.
என் கூடு தனிமை கொண்டுள்ளது என்றது.


------------------------------------------------------------------------


எல்லா செல்வங்களையும் நான் நிராகரித்தேன்.
எல்லா அதிகாரங்களையும் மறுக்கிறேன்.


ஒரு தரிசனம் நாடி நான் சினாய் மலைக்கு வந்தேன்.
கடவுள் மனிதனைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து 
அவனை நாடி நான் வந்தேன்.


நாம் எல்லா குற்றங்களையும் மூடி மறைத்துதானே ஞானம் தேடுகிறோம்.
சந்தேகங்களின் வலைகளில் சிக்கி நம்பிக்கையைத் தேடுகிறோம்.
ஒன்றை நம்பி வேறொன்றுக்காக வாழ்ந்து
மற்றொன்றை தேடி இன்னொன்றுக்காக இறக்கிறோம்.


--------------------------------------------------------------------------
ஒரு ரோஜாவிடம் கேட்டேன்.
எதற்காக இந்த சோகம் ரோஜா மொட்டே
சுத்தம் செய்யும துடைப்பம் முதல் சிரிக்கும் தோட்டம் வரை உன்னைச் சுற்றி எவ்வளவோ இருக்கிறது. ஏன் அழுகிறாய் என்றேன்.
பனித்துளியும், வீசும் மாருதமும் வானம்பாடியின் பாடலும் காதலும் உன்னை நாடுகின்றன. உன் உள்ளம் எதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன்.


உதிர்ந்துக் கொண்டிருந்த அந்த ரோஜா ஏமாற்றத்துடன் சொன்னது
நமது வாழ்க்கை காற்றில் கரையும் சுகந்தம் 


என் இதயம் வலியால் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது
வானம்பாடியுடன் பலமணி நேரம் பேசுகிறேன்.
மலர்கள் மௌனமாயிருந்தாலும் அவற்றின் மொழியை அறிகிறேன்.


அவனது கருணைக் கடலின் ஒரு நீர்க்குமிழ் நம் வாழ்க்கை.
அவனது ஈரம் தான் நமது வேர்களை நனைக்கிறது.


ஒ என் இதயமே நீயே என் கடல், என் படகு, என் பயணம்.
தூசியிலிருந்து பூத்த மலரா நீ அல்லது வானிலிருந்து விழுந்த பனித்துளியா
எது நன்மை எது தீமை என எப்படி உரைப்பேன் உனக்கு
சிக்கலான் உண்மையல்லவா அது
வெளியே தான் ரோஜாவும் முள்ளும் தெரிகின்றன.
தண்டின் உள்ளே ரோஜாவும் இல்லை, முள்ளும் இல்லை.


எங்கிருந்து நான் வந்தேன். என் எதிர்காலம் என்ன
நான் யார்
நதியின் ஒரு அலை போன்றவன் நான்.
உள்நோக்கித் திரும்பாவிட்டால் நான் நானாக இல்லை.


அன்பு ஒவ்வொரு இதயத்தையும் நாடி வருகிறது.
ஒரு இதயத்தைக் காயப்படுத்தி இன்னொன்றை காயம் ஆற்றுகிறது.


நான் முத்தாக இருப்பவனா அல்லது அதன் சிப்பியா
நான் மதுவா அல்லது அதன் கோப்பையா எனக்குத் தெரியாது.
இதயத்திலிருந்து ஆசைகள் எழுவது எதனால்
விளக்கில் எங்கிருந்து ஒளி வருகிறது.


யார் நமது காலடியை முன்வைக்கிறார்.
நமது கண்களின் வழியாக பார்த்துக் கொண்டிருப்பது யார்.
எதனை அவர் பார்க்கிறார்.


என் மூலத்தைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
என் கல்லறைக்குப் பிறகு என் இலக்கையும் நான் அறியவில்லை.


மொட்டுக்குள் சிக்கியிருக்கும் ரோஜாவின் முனகலை நான் கேட்டேன்.
படைப்பின் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கைதி நான் என்றது.


விதி எழுதும் கதையை நம்மால் திருத்த முடியாது.
வாழ்க்கை மூன்றாக தரப்பட்டிருக்கிறது. ஒன்றை பெறுகிறோம். ஒன்றை போற்றுகிறோம் ஆனால் மூன்றாவது ஒன்றை கொன்று விடுகிறோம்.


நமது சொந்த மாடல்களை வைத்து இறைவனின் அடையாளத்தைத் தேடுகிறோம். 
நமது சட்டகங்களில் அவனது உருவத்தை வைத்து வணங்குகிறோம்.
நமது அழகால் அவன் கருணையை உருவாக்குகிறோம்.
நம் சொந்த பிம்பங்களிலிருந்து நம்மால் தப்பவே முடிவதில்லை.
எங்கே திரும்பினாலும் அவன் முகத்தில் நாம் வணங்குவது
நம்முடைய சொந்த முகத்தைத்தான்.


முன்பு அன்பு நிறைகொண்டிருந்த உலகில் இப்போது
மரணத்தின் மௌனம் ஆட்சி செய்கிறது.
என் இதயம் எப்போதோ எரிந்து விட்டது.
அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
என் ஆசைகளின் செல்வம் எங்கே களவு போனது
என் வலிகளின் புதையல்களைக் கூட யாரோ திருடிப் போய் விட்டார்.


நம் அறிவு தகரத்தையும் தங்கமாக மாற்றும்
கல்லையும் கண்ணாடியாக்கும் நமது கலை.
கவியின் ரசாயனம் விஷத்தைக் கூட அமுதமாக மாற்றுகிறது.
எனவே என் அலையும் எண்ணங்களை கவிதையிடம் திருப்பினேன்.
என் இதயத்தில் ஒளிரும் சில உண்மைகளை அறிந்தேன்.
அன்பையும் வாழ்க்கையையும் பாட எனது உதடுகளைத் திறந்தேன்.
என் வெளிப்பாடு அதன் ரகசியத்தை மேலும் மூடிமறைத்தது.


கடைசியாக காரணத்தின் துரத்தல்களிலிருந்து தப்பினேன்.
காதலின் வீதியில் ஒரு ராப்பிச்சைக்காரனாகப் பாடுகிறேன்.
எத்தனை சோகத்துடன் என் பாடல் ஒலிக்கிறது.


இக்பால் வானத்தை வளைப்பவனாக இல்லை.
அந்த தத்துவ ஞானி, கவிஞன் இப்போது பித்தனாகி விட்டான்.








Monday 14 May 2012

ஓஷோ வாழ்வும் சேதியும்

ஓஷோ வாழ்வும் சேதியும்- இருபது வயது ஆகும் முன்பே நான் காரல் மார்க்சின் சிவப்புநூல்களையும் லெனினின் தடித்த புத்தகங்களையும் படிக்க ஆர்வம் காட்டினேன். மாஸ்கோ பதிப்பகம் சார்பாக மலிவு விலையில் அந்தப் புத்தகங்கள் நியுசெஞ்சுரி புக் ஹவுஸில் கிடைத்தன. அதே போல கார்க்கி, ஷோலக்கோவ், மாயகவாஸ்கி, அந்தோன் செக்கவ், புஷ்கின் நூல்களும் கிடைத்தன. டால்ஸ்டாயும் தஸ்தேயவஸ்கியும் தமிழ்ச்சூழலுக்கு அதிகமாக தெரியாத காலம் அது. மணிக்கொடி எழுத்தாளர்களின் ஆர்வமும் சில தமிழாக்கங்களும் டால்ஸ்டாயை ஓரளவு அறிமுகம் செய்திருந்தது. கநாசுவும் எழுதியிருந்தார். ஆனால் புத்தக சைசை பார்த்து பயந்து அப்போது போரும் அமைதியும் படிக்க முடியவில்லை. எப்படியோ அன்னா கரீனினாவை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அடல்ட்ரி எனப்படும் பாலியல் பிறழ்வு புத்தகமாகத்தான் அப்போது அது தோன்றியது. புத்துயிர்ப்பு பற்றி சில இலக்கிய நண்பர்கள் ஆர்வத்துடன் பேசுவார்கள். இது 80களின் தொடக்க கால நிலை.
ஒருநாள் நானும் நண்பர் சூர்யராஜனும் பிரபஞ்சன் அவர்களின் கே.கே.நகர் வீட்டுக்குப் போனோம். அவர் கையில் பகவான் ரஜ்னிஷ் பதில்கள் என சிவப்பு அட்டை போட்ட புத்தகம் இருந்தது. அதை சூர்யா ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார். நான் அதைப் படிக்க விரும்பவில்லை.

சாமியார்களை எனக்குப் பிடிக்காத காலம் அது. ஓஷோ என்ற பெயர் அப்போது ரஜ்னிஷ் என்றே தெரிந்திருந்தது. ராணி வார இதழில் அல்லி பதில்கள் பகுதியில் பிரா பற்றியும் நடிகைகளின் நீச்சல் உடை பற்றியும் கேள்வி வருவதைப் போல தவறாமல் செக்ஸ் சாமியார் ரஜ்னிஷ் பற்றியும் கேள்வி-பதில் வரும். சில நேரங்களில் தினத்தந்தியிலும் இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் கட்டுரைகள் வரும்.அதைப் படித்து கெட்டுப் போய், ரஜ்னிஷை நிராகரித்தேன்.ஆனால் சூரியாவின் வற்புறுத்தலால் அதைப் படிக்கலானேன். எனக்கு புதிதாக ஏதோ புரிவது போல தோன்றியது. அந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் விலாசம் திருச்சியில் இருந்தது. திருச்சி எனது பால்ய கால ஊர் என்பதால் அங்கு போகும் போது ரஜ்னிஷ் டைம்ஸ் என இதழ் தமிழில் வந்துக் கொண்டிருந்தது. சுவாமி மோகன்பாரதி என்பவர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். விலை 2 ரூபாய். டாப்லாய்ட் நியூஸ் பேப்பர் வடிவில் அது இருந்தது. அதை நிறைய வாங்கி வந்தேன். அப்போது எழுத்தாளர் பாலகுமாரனும் அங்கு வந்து ரஜ்னிஷ் புத்தகங்களை வாங்கிப் போயிருந்தார்.

படிக்க படிக்க புதிய பரவசமும் சந்தோஷமும் அளித்தது ஓஷோவின் எழுத்து. படிப்படியாக காரல் மார்க்சும் லெனினும் என்னை விட்டு விலகிப் போனார்கள். கம்யூனிசப் பேயை ஓட்டி விட்ட பூசாரி ஓஷோதான். தன்னை ரஜ்னிஷ் என்று அழைக்க வேண்டாம் என்றும் ஓஷோ என்றழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால் ஓஷோ என்ற பெயரில் நான் நடத்தி வந்த செந்தூரம் சிற்றிதழில் அட்டையில் ஓஷோவைப் போட்டு அவரது எழுத்துகளை பதிப்பித்தேன். சிற்றிதழ் மற்றும் இலக்கிய வாசகர்களிடம் அதுதான் ஓஷோவைப் பற்றிய முதல் பதிவு. மோகன்பாரதியின் இதழ் சுழன்ற வட்டம் வேறு. ஒரு இலக்கியவாதியான நான் அதை நானறிந்த இலக்கிய வட்டங்களில் பரவலாக்கினேன். கவிஞர் புவியரசு செந்தூரத்தில் படித்தபின்தான் ஓஷோவை மொழிபெயர்க்க ஆர்வம் காட்டினார்.

புனே போக வேண்டும் என்றும் ரஜ்னிஷை பார்க்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் உள்ள அவர் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் என்னுள் தீராத தாகம் எழுந்தது.பல வருடங்கள் கழித்து நான் புனே போய் சேர்ந்த போது ஓஷோ மறைந்துவிட்டார்.

ஓஷோவிடம் நேருக்குநேராக பழகித்தான் அவரைப் பற்றி அறிய வேண்டிய அவசியமே இல்லாதபடி தமது நூல்களின் வாயிலாக அவர் தமது வாழ்வைப் பற்றியும் சேதியைப் பற்றியும் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.

ஓஷோவின் உலகினுள் நுழைவதற்கு முன்பு நாம் என்னவாக இருந்தோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட வேண்டும். நமது தன்முனைப்பு, சாதி, மதம், ஒழுக்கம், ஆசை, பேராசை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் ஓஷோவை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும்.

உலகில் குழந்தை பிறக்கும் போது வங்கிக் கணக்குடன், அரசாங்க வேலையுடன், கார்களுடன் , நீண்ட ஆயுளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்புடன் பிறப்பதில்லை. தாய்ப்பாலை நம்பியும் தன்னை பெற்றவர்களை நம்பியும்தான் பிறக்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை பார்ப்பதற்கு பலவீனமாக தெரியும். ஆனால் யார் தம்மை ஆதரிப்பார், வளர்ப்பார் , உணவளிப்பார் எனத் தெரியாமல் அது பிறக்கையில் எத்தனை நம்பிக்கையும் பலமும் அதனிடம் வழங்கப்பட்டிருக்கிறது என்று உணரலாம்.
குருவிடம் செல்லும் போது நம்பிக்கையுடன் செல்வது அவசியம். பணம், கற்பு என எதையோ இழந்ததாக கூறுவோர் அதனை முன்பே வேறு பல குறுக்கு வழிகளில் இழந்துவிட்டவர்கள்தான். மா ஷீலா போன்றவர்கள் ஓஷோவை களங்கப்படுத்திய கதைகள் ...அதற்கு ஓஷோ அளித்த பதில்கள்.....காமத்தைப் பற்றிய ஓஷோவின் எண்ணங்கள், அவரது அறிவாற்றல், கருணை என எத்தனையோ விஷயங்கள் உள்ளன பேசுவதற்கு.


ஓஷோவிடம் என்ன கிடைக்கும் ?

ஓஷோவை அவரது நூல்களின் வழியாக சந்திக்கும் போது, பலவிதமான அடைமொழிகள் அவருக்குத் தரலாம் என்ற எண்ணம் வருகிறது. குறும்புக்கார பெருசு என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனந்தவிகடன் கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களை எம்.ஜி.ஆர் அரசு சிறையில் அடைத்த போது, இத்தகைய அசடுகள்தான் உங்கள் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று கூறியவர் ஓஷோ.
மொரார்ஜி தேசாய் மூத்திரம் குடித்ததை அத்தனை நக்கலடித்திருக்கிறார்.
காந்தியின் ஒழுக்கத்தையும் நேருவின் சோசலிசத்தையும் இந்திரா காந்தியின் ஆணவத்தையும் காரல் மார்க்சின் கம்யூனிச கோட்பாட்டையும் ஓஷோ பலமுறை விமர்சித்திருக்கிறார். எந்த ஒரு அரசியல் கோட்பாட்டிலும் குப்பைத்தொட்டியிலும் அவருக்குப் பெரிதாக அக்கறை இருந்ததில்லை. மக்களின் மனங்களில் இத்தகைய அரசியல் தலைவர்களைப் பற்றியிருக்கும் பிம்பங்களை உடைப்பதிலும் கலைப்பதிலும் மட்டும்தான் ஓஷோவுக்கு கவனம் இருந்தது. அரசியல்வாதிகள் தான் நாட்டை சூறையாடியவர்கள் என்று பலமுறை பேசியிருக்கிறார். ஏழ்மையை வெறுத்தவர் அல்ல ஓஷோ. ஏழைகளால் விலைக்கு வாங்க முடியாத உன்னதங்கள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் சமூக அமைப்புகளையும் அதன் காவலர்களையும் துச்சமாக தூக்கியெறிந்திருக்கிறார்.
முதலில் வாழ்க்கைக்கான வசதிகளை செய்துக் கொண்டு ஞானத்தையும் அறிவையும் தேடுங்கள் என்பார் ஓஷோ. கிழிந்த ஆடையும் வயிற்றில் பசியும் தோளில் குடும்ப சுமையும் இருக்கும் மனிதனுக்கு ஞானம் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கைக் கூட சித்திக்காது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஓஷோவிடம் கிடைக்கும் முதல் அம்சம் மனிதாபிமானம்.
அவரது பல்வேறு உரைகளில் பல்வேறு விதங்களில் சகமனிதனுக்கான அக்கறையும் நேசமும் சுடர்விடுவதை உணராதவர்கள் கண்ணிருந்தும் குருடர்தான்.
மனிதன் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவன். ஆனால் அவனை அப்படி வாழ விடாத சக்திகளை அவர் இருவகையாகப் பார்க்கிறார். ஒன்று புற ரீதியானது. அரசியல், மதம், வறுமை இப்படி. மற்றொன்று அகரீதியானது. பொறாமை, தன்முனைப்பு, காமம், அறியாமை, பேராசை என மனிதனை கேவலமானவனாக மாற்றும் உணர்வுகள். புத்தர், ஏசு, நபிகள் நாயகம், கிருஷ்ணா என எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அத்தனை தெய்வப் பிறவிகளும் ஞானிகளும் படைப்பாளர்களும் இந்த அகம் புறம் சார்ந்த இருவேறு எதிரிகளை எப்படி வென்றனர் என்பதை கூறுவதில்தான் ஓஷோவுக்கு கவனம் இருக்கும். அப்படியே அவர்களை கண்மூடி பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
ஓஷோவிடம் கிடைக்கும் இரண்டாம் அம்சம் தத்துவார்த்த கலை உணர்வு.
தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், சித்தர்கள், பாஷோ, பூக்கோ, நீட்சே, சிக்மண்ட் பிராய்டு, குருட்ஜிப், எட்கர் காய்ஸ், கலீல் கிப்ரான், மைக்கேல் நேமி, மிலன் குந்தேரா, தாகூர், ஜலாலுதீன் ரூமி, உமர்கய்யாம், ஜென்குருக்கள், ஆல்பர்ட் காம்யு, சார்த்தர்  என ஆங்கிலம் வழி கிடைத்த அத்தனை படைப்பிலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தவர் ஓஷோ. திருக்குறளும் பாரதியும் ஆழ்வார்களும் அவருக்கு ஆங்கிலம் வழியாக கிடைக்காமல் போனதற்கு மலையாளம், கன்னடம், பிரெஞ்ச், ருஷ்ய மற்றும் ஜெர்மனிலிருந்து கண்ட கண்ட குப்பைகளை கூட தராதரம் தெரியாமல் சகட்டுமேனிக்குத் தமிழில் மொழிபெயர்க்கும் தமிழர்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

















Sunday 13 May 2012

ஓஷோவும் ஜெயமோகனும்





ஓஷோவைப் பற்றி தனது இணைய பக்கத்தில் ஜெயமோகன்(www.jeyamohan.in  ) அண்மையில் எழுதிய கட்டுரைகளை காண நேர்ந்தது. நிமோனியா மாதிரி ஒரு ஓஷோமானியா நோய் எனக்கு இருப்பதாக பலமுறை அவர் நேராகவே கிண்டலடித்திருக்கிறார். ஓஷோவின் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களில் 600 புத்தகங்களை படித்துவிட்டேன். நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். அதனால் அந்தப் பட்டம். தமிழ் அறிவுச் சூழலில் ஓஷோவை முதன் முதலாக தரமாக மொழிபெயர்த்து பரவலாக்கிய பெருமையும் எனக்குத்தான்.

90 களிலேயே ஜெயனுக்கு ஓஷோ மீது மரியாதை இல்லை என்பதை புரிந்துக் கொள்ள எனக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. காரணம் ஜெயமோகன் ஒரு ஒழுக்கவாதி. ஓஷோ தறுதலை, சுகவாசி, பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியவர் என்பது அவர் எண்ணம். ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுபவர் ஜெயன். அதை நானறிந்த வரை அவர் கடைபிடித்து வந்தார். அருண்மொழியைத் தவிர வேறு பெண்ணை மனத்தாலும் நினைக்காதவர். ஒரு முறை மட்டும் விளையாட்டாக ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண்ணால்தான் தன்னை மயக்க முடியும் என்றார்.அப்படி யாரிடமாவது மயங்கினாரா தெரியவில்லை.

மீடியாக்கள் வடித்த சித்திரப்படி ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார். இன்றைய நித்யானந்தாவுக்கெல்லாம் பிதாமகன் அவர்தான். ஆனால் நித்யானந்தன் ஒரு அயோக்கியன். ஓஷோ மகத்தான குரு. இந்த வித்தியாசம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.ஓஷோவைப் பற்றி விரிவாக அடுத்தடுத்து எழுத நினைக்கிறேன். அதற்கு நன்றி ஜெயமோகனுக்கு.

ஜெயமோகனுக்கும் ஓஷோவைப் பற்றி செக்ஸ் சாமியார் என்ற இந்த பிம்பம்தான் மனதுக்குள் இருக்கும் என்பதை புரிந்துக் கொள்கிறேன்.ஏனெனில் அவர் காந்தியைப் போல ஒழுக்கம் சத்தியத்தின் ஒரு பகுதி என்று நம்புகிறவர்.

ஜெயன் பெரிதும் மதிக்கும் குரு நித்ய சைதன்ய யதி மீது எனக்கும் மரியாதை உண்டு. வாழ்வில் நான் நேரடியாக அறிந்த முதல் குரு அனுபவம் நித்ய சைதன்யாவுடையது.ஒருமுறை ஜெயமோகனிடம் நித்ய சைதன்ய யதிக்கு காம உணர்ச்சி இருக்குமா என்று கேட்டேன். துறவிகளுக்கு காமம் என்ற ஒருஉணர்வை கையாளும் மனப்பக்குவம் இருக்குமா அல்லது ஓஷோ கூறுவது போல காமத்திலிருந்து தான் கடவுளை அடைய முடியுமா என்பதுதான் என் குழப்பம்.
இந்தக் கேள்வியே ஜெயனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதலில் பதிலைக் கூறாமல் தட்டிக் கழிக்க முயன்று அதெல்லாம் இல்லை. யதி அதையெல்லாம் கடந்த மகான் என்று கூறினார். எப்படி கடந்தார் என்பதுதான் என் கேள்வி.

காமத்தை அடக்காதீர்கள் என்கிறார் ஓஷோ. அடக்கினால் அது கடந்ததாக அர்த்தப்படாது. தீர்த்தால் அது ஒழுக்கமாகாது. காமமே இல்லாதவன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது. திருநங்கைகளுக்கும் காமம் உள்ளது. ஏசுவுக்கும் குருநானக்குக்கும் காமம் இருந்ததா என்பது பற்றி தகவல் இல்லை. புத்தர் சித்தார்த்தனாக இருந்த போது சிற்றின்பத்தில் திளைத்தவர்தான். யசோதரா என்ற மனைவியும் மகனும் அடைந்தவர்தான் புத்தர்.

மகாத்மா காந்தி தன் காம உணர்வுகளைப் பற்றி அவரே அவரது சுயசரிதையில் மனம் திறந்து எழுதியிருக்கிறார்.

ஆன்மீக வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் வரக் கூடிய பெரிய மனிதர்கள் காமத்தை எப்படி கடக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஆனால் நித்ய சைதன்ய யதி மீது நான் ஏதோ பழிசுமத்துவதாக எண்ணிய ஜெயன் எரிச்சல் அடைந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு முறிந்த தற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


குருவின் தன்மை பற்றியும் ஓஷோ எழுதியிருக்கிறார். முதல் குருவாக ஓஷோவையும் இரண்டாவதாக நித்ய சைதன்யாவையும் மூன்றாவதாக சூஃபி தர் நிர்வாகி தாதா ரத்தன்சந்த் அவர்களையும் நான் மானசீகமாக வரித்துக் கொண்டிருக்கிறேன். ஓஷோவைப் பார்க்கும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.
ஓஷோவைப் பார்க்க வேண்டுமென்று தீராத தாகத்துடன் நான் 1990ம் ஆண்டில் புனே போன போது தேதி 20
19 ஜனவரியில்தான் ஓஷோ காலமானார். அப்போது நான் ரயிலில் இருந்ததால் எனக்குத் தெரியாமல் போனது. ஓஷோ ஆசிரமத்துக்குப் போன போது அதிகமான கூட்டம். ஓஷோவின் உடலைப் பார்க்கக் கூட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பரபரப்பு. ஆனால் யார் முகத்திலும் இழவு வீட்டின் சோகம் இல்லை. பலர் ஒருவரை ஒருவரை அணைத்துக் கொண்டனர். சில வெளிநாட்டவர் அழுதபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் தனிமையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். ஓஷோ பிரசங்கம் செய்த நாற்காலி காலியாக இருந்தது. ஓஷோ பேச வருவார் என சிலர் சுற்றிலும் கொசுவலையால் மூடப்பட்ட அரங்கினுள் அமைதியாக காத்திருந்தனர்.
இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, மகேஷ்பட் போன்ற பல பிரமுகர்களையும் அங்கு காண முடிந்தது.





ஓஷோவின் நாற்காலியை வணங்கிவிட்டு குருவின் சொற்களை நினைத்துக் கொண்டேன். மரணத்தையும் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார் ஓஷோ.

ஜிந்தகி கோ பியார் பஹூத் தியா ஹம்னே
மௌத் சே பீ முஹபத் நிபாயேங்கே ஹம்

SAFAR படத்தில் ஒலித்த கிஷோர் குமாரின் இந்தப் பாடல்தான் எனக்கு நினைவில் எழுந்தது. வாழ்க்கையின் மீது மிகுந்த பிரியம் செலுத்தி விட்டேன். இனி மரணத்தின் மீதும் அந்தப் பிரியத்தை செலுத்துவேன் என்று கூறும் பாடல் அது.


ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓஷோவை கிரிமினல் என்றாராம். ஜெயன் கூறுகிறார். உண்மையில் ஜே.கேவுக்கும் ஓஷோவுக்கும் நடந்த சண்டை (?) பற்றியும் ஒருவர் பற்றி மற்றவர் என்ன சொன்னார்கள் என்பதையும் ஜெயன் படித்திருக்கிறாரா ?
ஜே. கிருஷ்ணமூர்த்தி பெயரால் ஓஷோ ஆசிரமத்திற்குள் அழகான ஒரு தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதையாவது ஜெயன் அறிவாரா? அதை அன்று நான் நேரில் பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களையும் நான் பெரும்பாலும் வாசித்து விட்டேன்.ஓஷோவுக்கும் ஜேகேவுக்குமான முரண்பாடு பகைமையற்றது. அது இரு நண்பர்களின் சண்டைதான்.ஆனால் நிச்சயம் ஜெயமோகன் மாதிரி ஒரு நண்பன் ஜெகதீஷ் மாதிரி ஒரு நண்பனிடம் செய்த சண்டையைப் போல் அல்ல அது.
ஜே.கே.மீது ஓஷோ எத்தனை மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு அடையாளம்தான் அந்தத் தோட்டம்.
ஓஷோவை ஆழமாக வாசிக்க வாசிக்க அற்புதமான பல தருணங்கள், பல கணங்கள் நிகழும் என்பதை அனுபவப் பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன். ஹென்றி மில்லர் முதல் லாப்சங் லாமா வரை எட்கர் காய்சிலிருந்து நீட்சே வரை என்னை பல நூல்களை வாசிக்கச் செய்தவரும் ஓஷோதான். ஓஷோவைப் படிக்கும் போது தனியாக கதறி அழுதிருக்கிறேன். வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். மௌனத்தில் உறைந்துப் போயிருக்கிறேன்.இத்தகைய எந்த ஒரு அனுபவத்தையும் ஜெயமோகனின் எந்த ஒருவரியும் ஏற்படுத்தியதில்லை.

ஒவ்வொரு முறையும் ஓஷோவின் புத்தகத்தை எடுக்கும் போதெல்லாம் அது என்னை எப்படியெல்லாம் அலைக்கழிக்குமோ எப்படியெல்லாம் என் வாழ்க்கையை மாற்றிவிடுமோ என்று பதற்றத்துடனே படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் ஓஷோமானியா என்றால் இருக்கட்டும்.

ஓஷோவின் பல புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அதில் நான்கைந்து புத்தகங்களை நானும் மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் நான் ஒரு வெண்மேகம், புதிய குழந்தை, நம்பிக்கை நட்சத்திரமாய் ஆகியவை அதிகம் சேதமில்லாமல் அச்சாகி விட்டன. ஆனால் ஹைகூ கவிதை பற்றிய பிரபஞ்ச ரகசியம் என்ற ஓஷோவின் புத்தகம் பதிப்பாளராலும் அவரது நண்பர்களாலும் சிதைக்கப்பட்டு விட்டது. அதே போல நான் 90 சதவீதம் மொழிபெயர்த்த ஒரு புத்தகம் இன்னொருவர் பெயரில் வந்துள்ளது.இந்தப் புத்தகங்களுக்காக கவிதா பதிப்பக உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் எனக்கு அளித்த நட்பு உதவி பத்தாயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். எத்தனைப் பிரதிகள் விற்றன என்பதையெல்லாம் எழுதுபவனால் ஒருபோதும் பதிப்பாளரிடம் வெள்ளை அறிக்கை கேட்க முடியாது.


ஓஷோவைப் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளுக்கு வரிக்கு வரி எதிர்வினையாற்றும் அளவுக்கு எனக்கு பொறுமையோ, மன ஊக்கமோ, கால அவகாசமோ, வாழ்க்கை வசதிகளோ இல்லை. இன்டர்நெட் ரீசார்ஜ் செய்யவே பணமின்றி தவிக்கும் நிலை எனக்கு. நினைத்தபோதெல்லாம் பிளாக்கை அப்டேட் செய்யவும் என்னால் முடியாது. ஆகவே ஜெயமோகனின் கருத்துகள் வலுவாகத் தெரியலாம். வாசக நண்பர்கள் ஓஷோவைப் படிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுமட்டும்தான் என் கோரிக்கை.முடிந்தால் ஜெயமோகன் நூல்களையும் படித்துப் பாருங்கள் ஆணவத்துக்கும் ஆன்மீகத்துக்குமான வித்தியாசம் புரியும். ஈரமற்ற அறிவின் சிரிப்பையும் அகந்தையையும் ஜெயமோகனிடம் காண முடியும். அதே சமயம் கண்ணீர் கசிய வைக்கும் ஞானத்தின் தெளிவை ஓஷோவிடம் நிச்சயம் காண முடியும்.

ஓஷோவை நன்கு அறிந்தவன் என்று எனக்கு என் மீது நம்பிக்கை உண்டு. நானறிந்தவரை ஓஷோ ஒரு ஜீனியஸ். ஒரு மகான். ஒரு அற்புதமான குரு. ஒரு அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர். ஏசுவையும் புத்தரையும் சமகாலத்தில் சந்தித்த பரவசத்தை அளிப்பவர்.

ஓஷோவே கூறியது போல அவரை பின்பற்றுபவர்களை வைத்தோ, அவரது நூல்களை நுனிப்புல் மேய்பவர்களை வைத்தோ அவரை கணித்து விட முடியாது. ஓஷோவுடன் மானசீகமாக நிகழும் அனுபவம்தான் அவரைப் பற்றிய உணர்வை உருவாக்கும்.

பாலக்காடு அருகில் வசிக்கும் நண்பர் மனோகரனிடம் ஒருமுறை ஓஷோவைப் படிக்கும்படி கேட்டுக் கொண்ட போது முதலில் மறுத்து பின்னர் படித்தார். படித்து விட்டுசொன்னைார் இனி ஓஷோவை மட்டும் படித்தால் போதும் என்ற உணர்வு எழுகிறது என்று.

ரயிலில் நான் வைத்திருந்த ஓஷோவின் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த சக பயணி புத்தகத்தை திருப்பிக் கொடுக்காமல் அதன் விலையைக் கொடுத்து கெஞ்சி கூத்தாடி அந்தப் புத்தகத்தை வாங்கிப் போனார். இப்படி எத்தனையோ அனுபவங்களைக் கூற முடியும். இவை ஒரு போதும் ஜெயமோகனின் புத்தகங்கள் தராது.

என்னுடைய வாசிப்பு அனுபவம் அறிந்தவர்களுக்கு நான் கூற விரும்பும் செய்தி இதுதான் .ஒருவர் வாழ்நாளில் கம்பனையும் ஓஷோவையும் படித்தால் போதும். தஸ்தயேவஸ்கி கூட தேவைப்பட மாட்டார். ஜெயமோகன் மாதிரி அறிவாளிகளை சுலபமாக தூக்கி கடாசிவிடலாம். அதைவிட கொஞ்சம் கண்ணதாசனும் பாரதியும் இருந்தால் தேவலாம்.

நான் வணங்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளால் ஓஷோவின் புகழ் ஜெயமோகனின் பெயரை விடவும் அதிக காலத்திற்கு நிலைத்திருக்கும்.
சலாம் அலேக்கும்.

















Monday 30 April 2012

காதலியைக் கொல்லும் வெறி

அண்மையில் வெளியான திரைப்படப் பாடல்கள் பலவற்றில் காதல் தோல்வி, பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்கள், கொலைவெறி போன்ற சப்ஜெக்ட்டுகள் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இது முந்தைய காலத்திலும் இருந்தது. எங்கிருந்தாலும் வாழ்க பாடல்தான் தோற்றுப்போன காதலர்களின் தேசிய கீதமாக இருக்கிறது. ஆனால் ஒரு நுட்பமான வித்தியாசத்தை அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே நம்மால் உணர முடிகிறது.
முந்தைய தலைமுறை ரசித்த காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பாட்டில் சுய இரக்கம் எஞ்சியிருப்பதை காணலாம். மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர் தான் யாரோ...உன்னை சூடி முடித்ததும் பெண்தானே பின் தூக்கி எறிந்ததும் அவள்தானே என்று ஏ.எம்.ராஜா அருகில் வந்தாள் பாடலில் பாடியதும் சுய இரக்கம்தான். சொன்னது நீதானா என்று உருகும் பெண் குரல், நீயில்லாத உலகத்தில் நிம்மதி இல்லை என்றும் எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்றும் காதலால் கசிந்துருகியது. ஆணுக்கு பெண்ணாலும் பெண்ணுக்கு ஆணாலும் காதலில் இன்பமும் துன்பமும் ஏற்படுவது சங்க காலம் தொட்டும் அதற்கு முன்பும் இருந்தது என்றும் கூறலாம். ஆதாமின் முதுகெலும்பை உடைத்துத்தானே கடவுள் பெண்ணைப் படைத்தான்.
ஆனால் முன்பெல்லாம் காதலுக்காக கசிந்துருகிய காதலர்கள் இப்போது கொலை வெறிக்கு மாறியது எப்படி. அதுதான் இந்த தலைமுறையிடம் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மாறுதல்.
கண்ணதாசனும் வாலியும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாட்டு எழுதிய காலங்களில் பெண் என்பவள் ஆணுக்குத் துன்பம் அளிப்பவளாக இருந்தாள். அதனால்தான் வசந்தமாளிகையில் சிவாஜிகணேசன், எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று கதறினார். புதிய பறவையில் பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்று சபித்தார். காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி என்று அதே வசந்தமாளிகையில் கேட்டார் கண்ணதாசன். அதே போல வானம்பாடியில் கடவுளை அழைத்து வந்து காதலில் மிதக்க வைத்து ஆடடா ஆடு என்று ஆட்டி வைப்பேன் என்றும் அவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான் என்றும் கவியரசின் பேனா எழுதியது.
அன்பே வா படத்தில் பாடல் எழுதிய வாலி வான்பறவை தன் சிறகை எனக்குத் தந்தால் வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன் என்றார்.
இந்தக் காதலர்கள் எல்லோரும் பெண்ணை கொல்ல வேண்டும் என்றும் பழிவாங்க வேண்டும் என்றும் கூறவில்லை. அளவற்ற காதலால் கடவுளையே திட்டினாலும் காதலியை குறை கூறவில்லை. காதல் உண்மையாக இருந்ததுதான் காரணம்.
ஆனால் இப்போதைய பாடல்களில் எவன்டி உன்னைப் பெத்தான் கையில் கிடைச்சா செத்தான் என்றும் அடிடா அவளை வெட்டுறா அவளை தேவையே இல்லை என்றும், வை திஸ் கொலைவெறிடி என்றும் வரிகள் இடம்பெறுகின்றன. இதனை இளைய தலைமுறையினர் பித்துப் பிடித்தது போல பாடித் திரிகின்றனர்.
என்னதான் நடக்கிறது.? ராணி இதழில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பேட்டியளித்தார். அதில் ஆண்கள்தான் இப்போது பெண்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களின் காதலில் உண்மை இல்லை. பாய்பிரண்டு செலவு செய்பவனாக மாறி விட்டான். போரடித்தால் ஈசியாக கழற்றி விட்டுவிடுவார்கள். செல் நம்பரை மாற்றுவதும் இடத்தை மாற்றிக் கொள்வதும் பெண்களுக்கு கை வந்த கலை. போனால் போகட்டும் என்று தொல்லை தராத சிலரை கட் பண்ணாவிட்டாலும் அவனை துன்புறுத்த வேறு வழிகளை கையாள்வார்கள். அவன் எதிரிலேயே வேறு பாய்பிரண்டுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். வண்டியில் ஒருவனுடன் போகும்போதே இன்னொருவனுடன் மொபைலில் சிரித்தபடி போகும் பெண்களை சாலையில் நிறைய காண முடிகிறது.
அண்மையில் பார்த்த காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு பாட்டு வருகிறது. இட்ஸ் ஓவர் .இட்ஸ் கான் என்று அந்தப் பாட்டு போகிறது. உறவு முடிந்துவிட்டதால் பல ஆண்கள் இப்படித்தான் பெண்களை எண்ணி எண்ணி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிக்காக தாஜ்மகால் கட்டியவன் இருக்கான். ஆனால் ஒரு செங்கல்லாவது எடுத்து வச்ச பொண்ணு இருக்காளா என்றும் ஒரு சினிமா பாட்டு கேட்கிறது.
அஜித் நடித்த தீனாவிலும் பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை என்று ஒரு வரி வருகிறது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்திலும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா பாட்டும் அதற்கு முன்பே மௌனம் பேசியதே படத்திலும் பெண்களின் துரோகம் பற்றி பாடித் தீர்த்து விட்டார். உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய் என விஜய்யும் யூத் படத்தில் கேட்டார்.
நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று டி.ராஜேந்தர் போல பாட இன்றைய தலைமுறை தயாராக இல்லை. எவன்டி உன்னைப் பெத்தான் என்றுதான் சிம்பு பாடுகிறார். இந்த மாற்றம் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் என்றுதான் தோன்றுகிறது.

பெண்களே ஜாக்கிரதை. ஆண்களின் கொலைவெறியை புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்னால் ஆண்களின் கண்ணீர் மட்டுமில்லை. ஆசிட் பாட்டில்களும் அரிவாள்களும் சுத்தி சுத்தி வருகின்றன.

அண்மையில் சிம்புவின் பாடலுக்காக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் போது முன்பு எழுதிய இ்க்கட்டுரை அர்த்தமுள்ளதாகியுள்ளது.


Friday 27 April 2012

எனக்குப் பிடித்த எனது கவிதைகள்

பூமிப் பந்து

பொய்களுக்கு எதிராகப் போராடிப் போராடி சலித்துவிட்டது.
ஸ்தூலத்தில் நிலைபெறாத வாழ்வு
சொர்க்கத்தில் எக்கேடு கெட்டால் என்ன?
பூமிக்கு பாரமாக நான்
எனது தோள்களிலோ
பூமியின் பாரம்.
பூமியைப் பந்து என்பார்கள்.
தேர்ந்த ஆட்டக்காரர்களுக்கு அது சரிதான்.
நானோ பார்வையாளன்.
எல்லோரும் சேர்ந்து என்னை ஏன் தோற்கடித்தீர்கள் ?

முகாரி

அனுபவத் துணுக்குகள், சதைகளுடன்
சிதறிக் கிடக்கும்
வாழ்க்கை வீதிகள்.
காலமரங் கொத்தியின்
ஓலம் எதிரொலிக்கும்
கானகப் பிரபஞ்சத்தில்
பாதை தவறிய பயணங்கள்.

வானத்தில் வட்டமிடும் வல்லூறுகளால் பரவும்
நிணத்தின் வீச்சம்.

எங்கோ பூத்து மணக்கும் ஓரிரு பூக்களின் வாசனையும்...
மௌனங்களில் புதைந்த அழுகைகளை
சுமந்து திரியும் எனது சிரிப்பலைகள்.

தெறித்து விழுந்த கணங்களில் தனதாவதைத் தேர்வு செய்ய இயலாத
பலவீனம்.

உடைந்து நொறுங்குகின்ற நேரங்களும் உண்டு.

காலப் பரிணாமத்தை மனப் பரிமாணங்களால் செரிக்கவே முடிவதில்லை.
தூர்வார முடியாத சகதிகளால் நிரம்பி வழியும்
கிணறுகளில்
அந்தரத்தில் தொங்கும் வாளியாய் வாழ்நாட்கள்.

நோய்ப்பட்ட மனதுக்கு காய்ச்சிய கம்பிகளையே
பாய்ச்சிப் பார்க்கிறார்கள்.

முகாரியே பாடுவதால்
அனுதாப வேடமணிந்து வரும்
வேட்டைக்காரர்களிடம்
எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் என் பிள்ளை மனம்.

எனதேயான சோகங்களையும்
சிலுவைகளையும்
உயிர்த்தெழுகிற சாபம் வேண்டாமல் சுமந்து
கரைந்து காணாமல் போகிற ஆசையுடன்
அறையப்பட்ட ஆணிகளில் தொடர்கிறது எனது தவம்.

வலியுடன் நிகழ்ந்தன யாவும்
செதில் செதிலாய் நடந்த உடைப்பு
சுக்குநூறாய் சிதறியது வாழ்க்கை.
காக்கைச் சிறகுகளில் செதுக்கப்பட்ட
கவிதைக் கனவுகள்
குரூரமாகப் பிடுங்கியெறியப்பட்டன.

மறுக்க முடியாத வலிய மௌனத்தில்
வலியுடன் நிகழ்ந்தன யாவும்.
நசுங்கிப் போன ஆன்மாக்களுக்கு நினைவுத் தூண்
யார் எழுப்புவது ?

யாவும் மறக்கப்படும்
ஒரு யுகப் புழுக்கத்தில்
யார் வியர்வைக்கு யார் விசிறுவது ?

தீய்ந்து கருகிய கனவுக் குவியல்களின்
தீசல்களிலிருந்து
ஏதேனும் ஒரு கங்கு அணையாதிருக்கத்
தேடித் துழாவும் கண்ணீரை
யார் அர்த்தப்படுத்துவது ?

சும்மா போய்க் கொண்டிருப்பவனையும் அருகழைத்து
அறை விட்டு அனுப்பும் வாழ்க்கை.

மீண்டும் மீண்டும் துரோகங்களின் சாட்டையில்
சுழலுகின்ற இந்த பம்பரத்தின் ஆட்டம் தள்ளாட்டமே.
ஆயினும் அதுதான் அதன் நடனம்.


Wednesday 25 April 2012

க.நா.சுப்பிரமணியம் என்ற இலக்கிய ஆளுமை

கநா.சு என்ற இலக்கிய ஆளுமை புத்தக வாசிப்பு என்பது ஒரு ரசனையாக இருந்த காலம் இப்போது இல்லை. பைண்டு செய்த தொடர்கதைகளின் காலம் முடிந்துவிட்டது.பேஸ்புக்கும் டிவிட்டரும், ஷாப்பிங் மால்களும் இளைஞர்களின் ஏரியாவாகி விட்டது.புத்தக வாசிப்பின் இடத்தை அசட்டுத்தனமான பெரிய பத்திரிகைகளும் சீரியல்களும் அபகரித்துக் கொண்டன.ஆயிரம் பிரதிகள் புத்தகம் அச்சிட்டு முந்நூறு பிரதிகளே விற்று, வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்கும் படைப்பாளிகளும் இப்போது குறைந்து விட்டனர். இணைய வலைப் பூ மூலம் உலகம் முழுவதும் நண்பர்களை இணைத்துக் கொண்டு துபாய், கனடா, மலேசியா என உலகம் சுற்றும் எழுத்தாளர்கள் எப்படியோ தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டுவிட்டனர். சாக்கடையிலிருந்து அழுகிய ஆப்பிளை எடுத்த புதுமைப்பித்தனின் சேரிக் குழந்தைகள் இப்போது வளர்ந்து போர்ட்டிகோவில் காரில் இருந்து இறங்கிக் கொண்டுள்ளனர். (இந்த வரி நண்பர் ஆர்.மோகனரங்கனுக்குரியது.) எழுத்து என்பது தமிழ்ச்சூழலில் பணம் பெயராத காரியமாகி விட்டது.எந்த தமிழ்ப் படைப்பாளியும் இன்று எழுத்தை ஜீவனோபயமாக கருதுவதில்லை.அரசியல், திரைப்படப் பாடல், தொலைக்காட்சி, வணிகம் என்று அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டனர்.சினிமா முதல் ஜீன்ஸ் கடைவரை எழுத்தாளர்கள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தன் எழுத்தை நம்பி ஒருமாதம் கூட குடும்பம் நடத்த முடியாது என்பதில் எல்லோருமே ஓரளவு தெளிவு பெற்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில் வாசிப்பதற்காகவே வாழ்ந்து வந்த அரிய மனிதரான க.நா.சுவின் நூற்றாண்டு நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருவாலங்காடு எனும் கிராமத்தில் வசித்த நாராயணசாமி என்ற பிராமணருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் நூலகங்களுக்குச் சென்று படிப்பதிலும் சிறுவர்களை சேர்த்து வைத்து கதை சொல்வதிலும் ஈடுபாடு செலுத்தினார். சிதம்பரத்தில் படித்து பட்டம் பெற்ற அவர் 1965 முதல் 85ம் ஆண்டு வரை டெல்லியில் வாழ்ந்தார். பின்னர் இறுதிக்காலம் வரை சென்னையில் வசித்தார். நாள்தோறும் மிக அதிகப்படியான நேரத்தை படிப்பதற்கும் எழுதுவதற்கும் செலவிட்ட அபூர்வ மனிதர் க.நா.சு. இதனால் அவரை பொறுப்பற்றவர் என்று சிலர் கூறியதுண்டு. இவ்வுலகின் ஒவ்வொரு காரியமும் தன்போக்கில் நடந்தேறும் என்பதும் அதில் தனியொரு மனிதனின் பொறுப்பு என்பது எத்தனை சிறிய பாத்திரம் என்றும் அறியாதவரல்ல க.நா.சு. வாசகராகவும் எழுத்தாளராகவும் திருப்தியடையாத க.நா.சு. தமிழ்நாட்டு வாசகர்களை உய்விக்க விமர்சகராகவும் மாறினார். இலக்கிய விமர்சனத்தின் முக்கியமான நோக்கம் இலக்கியத்துக்கு உதவி செய்வதுதான் என்றும் அவர் கூறிவந்தார். பட்டியல் போடுவதில் பிரசித்தி பெற்றவராக விளங்கிய க.நா.சு தமது பட்டியலில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் யாவரும் இன்று அவரவருக்கான மதிப்புடன் விளங்குவதைப் பார்த்தால், க.நா.சு.வின் ரசனை, தீர்க்கதரிசனம், நேர்மை ஆகியவை குறித்து விளங்கும். அவரது பட்டியல்கள் சுயவிருப்பு வெறுப்பு சார்ந்தவையல்ல. அவை ரசனையின் வெளிப்பாடுகள். பொய்த்தேவு க.நா.சு.வை படைப்பாளியாகவும் நிலைநிறுத்திய நாவல்.இது சாதியத்தை அப்பட்டமாக போற்றும் நாவல் என்று இடதுசாரிகளாலும் பெரியாரியவாதிகளாலும் இதனை தூற்றினர். கைலாசபதியும் க.நா.சு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். சாதியின் கீழ்மையை அகற்ற பொருளாதார உயர்வு பெற வேண்டும் என்றும் பிராமணியமே சிறந்த வாழ்க்கை நெறி என்று இந்நாவல் கூறுவதாக விமர்சகர்கள் கடுமையான தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் பொய்த்தேவும் நீங்காத இடம்பெற்றுவிட்டது. விமர்சித்த கைலாசபதி போன்றவர்கள்தான் காலாவதியாகிவிட்டனர். க.நா.சுவின் ஒருநாள், தாமஸ் வந்தார், சர்மாவின் உயில், பித்தப்பூ போன்ற நாவல்களும் பாராட்டைப் பெற்றன. அவதூதர் நாவலில் சித்தர் வாழ்க்கை சித்தரிக்கப்படுவதை கோவை ஞானி விரிவாக எடுத்துரைத்துள்ளார். சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஆன்மீகம் துணைக்கு வரும் என்று ஞானி,  க.நா.சுவை மெய்யியல் நோக்கில் நிலை நிறுத்துகிறார்.ஒருநாள் நாவல் இந்திய மரபின் சில அம்சங்கள் மீது க.நா.சு கொண்டிருந்த நம்பிக்கையை விளக்குவதாகவும் ஞானி கூறுகிறார். தான் வாழ்ந்த காலத்தில் இலக்கியவாதிகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் க.நா.சு.என்று குறிப்பிடுகிறார் மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். வாழ்வின் பல்வேறு அகலங்களையும் ஆழங்களையும் வெளிப்படுத்த இப்படிப்பட்ட சிம்ம சொப்பனம் தேவைதான் என்பதும் பிரகாஷின் கூற்று. இறுதிக் காலத்தில் சென்னையில் வாழ்ந்து 1988ல் காலமான க.நா.சு தமது 76 முதிய வயதிலும், பார்வையை இழந்த நிலையிலும் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு புத்தகங்களைப் படித்ததும், பதிப்பகம் பதிப்பகமாக தான் எழுதிய நூல்களை பதிப்பிக்க அலைந்ததும் துயரமான ஒரு கதையின் எழுதப்படாத வரிகள்.க.நா.சுவுக்கு உரிய கௌரவத்தை இன்றும் கூட தமிழ்ச்சூழல் அவருக்கு வழங்கவில்லை என்பதுதான் நன்றிகெட்ட செயல். ராமகாதை கூறப்படும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருப்பார் என்பார்கள் கம்பராமாயணத்துக்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள். அதே போல காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கநாசு நூற்றாண்டு விழாவில் பேசிய நான் எந்த ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கு க.நா.சு கண்களில் நீர்க்கசிய அமர்ந்திருப்பார் என்று குறிப்பிட்டேன். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்டி, தாமும் அரிய சில படைப்புகளை படைத்த க.நா.சு என்ற இலக்கிய ஆளுமை காற்று போல பிறருக்கு சுவாசமாக இருந்தவர். சில நேரங்களில் புயலாகவும் வீசியவர். ஆனால் புயலும் காற்றுதானே.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...