Saturday 3 October 2020

மேகலா திரையரங்கும் முருகன் பக்தி பாடல்களும்

சென்னை ஓட்டேரியில் மேகலா என்ற திரையரங்கில் என் பள்ளி நாட்களில் ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.எம்.ஜி.ஆர் படங்கள் அங்கு நூறு நாட்கள் ஓடிய பட்டியல்_ பலகை போட்டிருப்பார்கள்.பத்ரகாளி,மேயர் மீனாட்சி, ஆயிரம் ஜென்மங்கள்,ஆயிரம் நிலவே வா போன்ற படங்களைப் பார்த்த ஞாபகம் பசுமையாக உள்ளது.டிக்கெட் வாங்கி உள்ளே போனதும் அரை மணி நேரம் முருகன் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவை திரைப்படப் பாடல்கள் அல்ல .தனிப் பாடல்கள். உள்ளம் உருகுதையா பாட்டுக்கு உருகாதவர்கள் கிடையாது. அழகென்ற சொல்லுக்கு முருகாவை முணுமுணுக்காத உதடுகளும் இருக்காது. கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் போன்ற பாடல்களையும் மேகலாவில்தான் கேட்டிருக்கிறேன்.சில சமயங்களில் படத்தை விட இந்த பாடல்களை கேட்பதற்காகவே மேகலாவுக்குப் போவதும் உண்டு.தொடர்ந்து உலகங்கள் யாவும் என் அரசாங்கமே, மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க,கந்தன் காலடியை வணங்கினால்,திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம், நாடறியும் நூறு மலை போன்ற தேவர் படங்களில் வரும் பாடல்கள் இப்போது வரை என்னுள் ஒலிக்கின்றன. மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகய்யா பாடல்தான் 37 வயதில் நாத்திகனாக இருந்த என்னை ஒரே ஒரு மந்திர நொடியில் ஆத்திகனாக மாற்றியது.முருகனின் தனிப்பாடல்களை இயற்றிய பாடலாசிரியர் கள் யார் இசையமைப்பாளர்கள் யார் என்று கூடத் தெரியாது.சிரமப்பட்டு சிலரின் பெயர்களை பாட்டுப் புத்தகங்கள் மூலமாக அறிந்துக் கொண்டேன். கண்ட குப்பைகளை முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கும் மாணவர்கள் இது போன்ற அரிதான தனிப் பாடல்களையோ பாட்டுப் புத்தகங்களையோ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது?அப்படி யாராவது ஆய்வு செய்து ஆய்வேட்டை புத்தகமாகப் போட்டிருந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...