Thursday 28 June 2012

இலக்கியவாதியின் இலக்கிய அனுபவங்கள்

நான் முதன் முதலில் கவிதை எழுதிய போது அது ஒரு காதல் கவிதைதான். அப்போதே காதல் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. யாராவது படித்தால் என்னைப் பத்தி தப்பாக நினைப்பாங்க என்ற கூச்சம் இருந்தது. அப்போது அரு.ராமநாதன் காதல் என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். தி.ஜானகிராமன் மாதிரி ஜாம்பவான்கள் எல்லாம் எழுதினாங்க...ஆனால் கருப்பு வெள்ளையில் புடவை இல்லாத பெண்கள், பிரா தெரியும் மெல்லிய நைட்டி அணிந்த பெண்கள் என ஒன்றிரண்டு படங்கள் அட்டையிலும் உள்ளேயும் இருக்கும். கதைகள் பெரும்பாலும் காதல், செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். அதனால் அதை ஒரு செக்ஸ் புத்தகம் போல பயந்தபடியேதான் படிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் நான் ஒரு காதல் கவிதை எழுதுவது கூச்சமான விஷயமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் நோட்டுப் புத்தகத்தில் கண்ணதாசன், வாலி பாடல்களைப் போல கவிதைகளை எழுதி அவர்கள் பெயரைப் போட்டு வைப்பேன். என் உறவினர்கள் யாராவது கேட்டால் சினிமாப் பாட்டு என சமாளிக்கத்தான்
நண்பன் சேகர் இந்த கவிதையில் ஒன்றை அவன் வேலை பார்த்த அச்சகத்தில் கொடுத்து ஒரு சிறுபத்திரிகையில் வரவழைத்து விட்டான். அப்ப பிடிச்ச பிசாசுதான். அடுத்து தினமலர் வாரமலரில் - அப்ப பேப்பரிலேயே வாரமலர் வரும் - அரைப்பக்கம் எனது கவிதைகள் மட்டும் பிரசுரமாயின. விண்ணில் போன ராக்கெட்டே எங்க விலைவாசியைக் கண்டாயா என்ற கவிதை இப்போ அது கிளிஷேயாகி போன பழைய சங்கதி. ஆனால் முதலில் எழுதியது நான்தான். அப்புறம் இன்னொரு கவிதை விடியாத பொழுதுகள். அதுல திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர்கன்னியின் சோகம். விடியலுக்காக காத்திருக்கும் அவள் தலைமுடி வெளுத்துப் போய் விடிந்துவிட்டது என்பதாக கவிதை முடியும். அதெல்லாம் இப்ப கவிதை இல்லை என்று தூக்கி எறியமுடியும். ஆனால் அப்ப அது பெரிய உற்சாகம்.
அப்படியே எழுதப் பழகி, நண்பர் எஸ்.அறிவுமணி குறிஞ்சி இலக்கிய வட்டம் மேடையில் மு.மேத்தா தலைமையில் கவிதை வாசிக்க என்னை நிறுத்தி விட்டார். மு.மேத்தா கண்ணீர் பூக்களால் கொடிகட்டிப் பறந்த நேரம் அது. என்னுடன் கவிதை படித்தவர் பழனிபாரதி. புரட்சியாக எழுதக் கூடிய பழனிபாரதி அன்றைக்கு சோபிக்கவில்லை. நான் வாசித்தேன் செந்நிறக் கவிதையை. மேத்தா சொன்னார் பழனிபாரதி தீ்க்குச்சிதான் ஆனால் இப்ப எரியாத குச்சி. அந்தக் குறையை தீப்பந்தம் கொண்டு போக்கிவிட்டார் ஜெகதீஷ் என்றார்.

சிரிப்பாக இருக்கு இந்த கேலிக் கூத்துகளையெல்லாம் நினைச்சால். அப்புறம் கதை எழுத ஆரம்பிச்சேன். பாக்யா, புதிய பார்வை, ஆனந்த விகடன், கல்கி என்று பல பத்திரிகைகளில் எனது கதைகள் பிரசுரமாகின.

அதன் பிறகுதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பினேன்.அன்றுமுதல் பல நூறு கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் , ஒரு நாவல் எல்லாம் எழுதியபின்னரும் பலருக்குத் தெரியாத பெயரில் வாழ நேரும் அவலம் எனக்கு. இரண்டு படத்தில் நடித்த லூசுகள் கூட பாப்புலராகும் போது 25 வருசமாக எழுதும் என் போன்ற பலர் பாப்புலர் பிகர் இல்லை,

எழுத்து என்பது விதியின் பின்னால் புறப்பட்ட 300 பேரின் சுழற்சி என்பார் நண்பர் தஞ்சை பிரகாஷ். அப்படி ஏதோ ஒருவிதியை துரத்தித்தான் நானும் பயணித்து வந்திருக்கிறேன்.

எனது பயணத்தில் நான் சந்தித்த படைப்பாளிகள் பட்டியல் மிகப் பெரியது. பலரை வலிய வீடு தேடிப் போய் பார்த்திருக்கிறேன். சிலருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால் ஒருவருடனும் எனக்கு ஒரு உறவும் இல்லை என்பதுபோலத்தான் தோன்றுகிறது.

சுஜாதா எனது கவிதை ஒன்றை ரசித்து கணையாழியில் பிரசுரித்தார். பெயர்களும் நினைவுகளும் என்பது அந்தக் கவிதை....பல நண்பர்களின் பெயரைப் பட்டியலிட்டிருப்பேன். கடைசியில் கவிதை இப்படி முடியும். எப்போதும் புதிதாக ஒரு பெயர் கிடைத்துவிடுகிறது. பழைய பெயர்களை காலம் அழித்துவிடுகிறது.

 உடுமலைப் பேட்டை ஜே.மஞ்சுளாதேவி எனக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார் . காபி டம்ளரின் அடிப்பாகம் போல நட்பு முடியும் இடத்தில் கசப்பு உருவாகும் என்று. அந்த கசப்பை இன்று வரை உணர்கிறேன்.

என்னிடம் உள்ள பிழைகள் என்ன....நான் நண்பனாகும் தகுதியற்றவனா, என்னுடன் ஏன் யாரும் நட்பாக நீடிக்கவி்ல்லை. பல வருடம் பழகியபின்னும் பிரிய பலருக்கு சுலபமாக முடிவது எப்படி.....

சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன், எம்.வி,வெங்கட்ராமன், கோவை ஞானி, ஜெயமோகன், பெரியார்தாசன், வல்லிக்கண்ணன், திகசி, வண்ணதாசன், வண்ணநிலவன், சிற்பி ,மு,மேத்தா, வைரமுத்து, புவியரசு, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், தனுஷ்கோடி ராமசாமி, பொன்னீலன். தஞ்சை ப்ரகாஷ், சுந்தர சுகன், ஷாராஜ், வா.மு.கோமு, சிட்டி, திலீ்ப்குமார், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், இன்குலாப், ஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா , புலவர் சங்கரலிங்கம் என எத்தனைப் படைப்பாளிகளை தேடித் தேடிப் போய் பார்த்துப் பேசியிருப்பேன்.இதில் சிலர் இறந்துவிட்டனர். மீதம் இருப்பவர்களில் திலீப்குமார் போன்ற சிலருடன் உறவு  இன்றும் நீடிக்கிறது. ஆனால் என்னுடன் அக்கறையுடன் பேசுகிற சிநேகம் ஏதும் மிச்சமிருக்கிறதா என்று தெரியவில்லை.

என்னுடன் பழகிய எந்த நட்பையும் தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தெரியவில்லை. பெண்களிடத்தில் பாலியலை கலக்காமல் தள்ளிப்போகும் கலையையும் நான் கற்கவில்லை. அல்லது காமத்தை கலந்த நட்பை அடையவும் தெரியவில்லை. தோழிகளின் நட்பு மலர்ந்த போதே மறைந்தும் போகிறது.


Tuesday 26 June 2012

பஷீரின் மதிலுகள்

எத்தனை முறை படித்தாலும் மனதுக்குள் மணக்கும் கதைகள் பஷீருடையவை. பாத்திமாவின் ஆடு நேஷனல் புக் டிரஸ்ட்டில் வந்தப்போது படித்தது. இன்றும் பசுமையாக நினைவில் இருக்குது. அண்மையில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் நீல பத்மனாபன் மொழிபெயர்த்த மலையாள இலக்கியத் தொகுப்பு மதிலுகள் கிடைத்தது. பல கவிதைகளை மலையாள மொழியின் வாசத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார் நீல.பத்மனாபன். 2000 ஆண்டில் வந்த தொகுப்பு. அப்போதே மட்டமான தாளில் நிதியுதவி பெற்று 75 ரூபாய் விலையில் வெளியிட்ட காவ்யா சண்முகசுந்தரம் மீது கோபம்தான் வந்தது. வாங்காமல் விடுபட்டுப் போனதற்கு இதுவும் காரணம். எப்படியோ பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது.
கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். தகழியின் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் ரசிக்க வைத்தது. ஆனாலும் நம்ம சாய்ஸ் பஷீர்தான். மீண்டும் வரிவரியாய் லயித்துப் போய் மதிலுகளைப் படித்ததும் மனதில் எண்ணங்களில் பாடலும் கண்ணீரும் வந்து கலந்தன. நாராயணீ இரவில் அழுவாளோ இல்லையோ பஷீர் நம்மை அழவைத்துவிடுவார். சிறையில் இரு மதில்களால் பிரிக்கப்பட்ட முகம் அறியாத காதலர்களின் பகிர்தல்களும் எதிர்காலமே இல்லாத அவர்களின் காதலும் அற்புதமான வாசிப்பனுபவம் தருகின்றன. இந்தக் கதையை நான் படிக்கும் போதே மதிலுகள் படமாகியிருப்பதும் நினைவில் வராமல் இல்லை. மம்முட்டி அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பாரா என்று பதறாமல் படிக்கவே முடியவில்லை. அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும். நாராயணீயாக யார் என்றே தெரியவில்லை. அதுவும் தெரியணும். அதுகிடக்கட்டும். அந்த வார்டனுடன் அடிக்கும் ஜோக்குகளும், பெண்களின் கழிவறையில் ஓட்டை போட்டு பார்க்கும் ஆடவர் வக்கிரமும் எத்தனை அற்புதமான இலக்கியமாகியிருக்கு பஷீர் சேட்டனிடம். எங்கள் மனதுக்குள் நுழைந்து பார்க்காதீர்கள், அறம் உபதேசம் எல்லாம் வெளியில் இருப்பவர்களிடம்தான் என்ற பஷீரின் தர்க்கம் அபாரம். படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள். மதிலுகள் ஒரு எழுத்துக் காவியம். அதே தொகுப்பில் ரோஸ்மேரி என்ற டீச்சரின் பேட்டியும் உள்ளது. அந்த ரோஸ் மேரி யிடம் பஷீர் காதல் கொண்டதாக மற்றொரு மலையாள எழுத்தாளர் பஷீரின் இரங்கலில் எழுதிவிட்டாராம். ரோஸ் மேரியோ அவர் எங்க பெரியப்பா மாதிரியான சொந்தம் என்கிறார். காதல் ஏதும் இல்லை என்கிறார். இன்னொரு தகவல் எதுவென்றால் ரோஸ்மேரியின் கணவர் கே.ஜி.தாமஸ். மற்றொரு மலையாள எழுத்தாளர். அவரைப் பற்றி சுந்தரராமசாமி எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். ஒருவேளை ஜே ஜே சில குறிப்புகளில் வருவாரா...பார்க்க வேண்டும். மறதி அதிகமாகிவிட்டது.


Monday 18 June 2012

கிருஷ்ணன் நம்பி கதைகள்



                                     









அமரர் கிருஷ்ணன் நம்பி சராசரி மனிதர்களின் ஆசைகளையும் நிராசைகளையும்தான் பதிவு செய்திருக்கிறார். ஊசலாடும் மனித உறவுகளையும் இன்னும் மேலான வாழ்வுக்கு ஏங்கும் நடுத்தர மக்களின் கனவுகளையும் அவர் தனது கலை சிருஷ்டியாக செய்திருக்கிறார், மிகக் குறைவான கதைகள்தாம் எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிக்கிறது.
வாழ்க்கையின் இரண்டு மகத்தான சோகங்களில் ஒன்று, நாம் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது நாம் விரும்பியதை அடைவது என்றார் பெர்ணாட் ஷா.கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இந்த முரண் நிலையை அடிப்படையாகக் கொண்டவை.மனிதன் ஒன்றை அடைய முடியாமல் போகின்ற நிலையையும் அடைந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய இழப்பையும் சரியாக கணித்த படைப்பாளிதான் கிருஷ்ணன் நம்பி.

எக்ஸன்ட்ரிக் - நடுத்தர ஆபீஸ் சிப்பந்தி ஒருவனின் கதை.எண்பது ஒரு ரூபாய் நோட்டுகள் சம்பளம் வாங்கிய கையோடு, ஆயிரம் பேருக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில் மனைவியும், ஒரு சிகரெட்டை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிற தனது பற்றாக்குறையையும் எண்ணிப் பார்க்கிறான் அவன். தெருவில் நிற்கும் ஒரு பணக்காரனின் கார் அவனது அடங்கிய ஆசைகளைக் கிளறிவிட, வாழ்க்கையை அனுபவித்து விடத் துடிக்கிறான் அவன்.
அந்த எண்பது ரூபாய் சம்பளப் பணம் அவன் ஆசைகளின் சிறகுகளானது. புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ரயிலடி வரை திரும்பி வருவது போல் கிருஷ்ணன் நம்பியின் சிப்பந்தி திரும்பி வரவில்லை. அவன் ரயிலேறி ஓடிப் போகிறான்.ஓட்டலில் அவன் விரும்பிய ஸ்டிராங் காப்பி, சர்வருக்கு தாராளமான டிப்ஸ், ஏழைச் சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் படம் பார்க்க காசு, டாக்சியில் ஊர் சுற்றல், பாலக்காட்டு வேசியிடம் டாக்சி டிரைவருக்கும் ஓசியில் பெண் இன்பம், கடைசியில் மிச்சமான பத்துரூபாயை தொலைத்து விடுவதுமாக எண்பது ரூபாயை அவன் செலவழிக்கிறான். முறைக்காதீர்கள். அந்தக் காலத்தில் எண்பது ரூபாயில் இத்தனை காரியம் செய்யலாம்.
அவன் ஒரு நாளாவது தனது விருப்பப்படி வாழ்ந்து விட்டான். அடைய முடியாதவற்றை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிராசைகள் நிறைவேறி விட்டன.என்றாலும் பிரச்சினைகள் தொடர்கதைதானே....பால்காரன், வாடகை,குழந்தைகளின் கல்வி, மளிகைக் கடை பாக்கி என்று நீண்ட பட்டியலுடனும் பற்றாக்குறையுடனும் காத்திருக்கும் அவன் மனைவிக்கு சம்பளம் நாளைக்கு என்ற பொய்யான பதில் தீர்வாகி விடாது. நாளை என்ற அந்தக் கொடூரமான பொழுது அவன் கழுத்தில் நுகத்தடியாக, முதுகில் சாட்டையாக விழப் போகிறது. அந்த ஒருநாள் இன்பத்திற்காக அவன் ஒருமாதம் துன்பத்தில் உழலப் போகின்றான்.

காணாமல் போன அந்தோணி கதையும் அதுபோலத்தான்.அந்தோணி ஒரு ஆடு. கொழு கொழுவென்று வளர்ந்த ஆடு. அதன் சொந்தக்கார கிழவி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சர்ச்சுக்குப் போகும் போது அவள் புருஷன்- கிழவன் முதல் ஆட்டம் சினிமா பார்த்து நள்ளிரவில் வீடு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் 40 வருடமாக ஒரே நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வறுமை நிலையில்தான் கிழவியுடன் குடித்தனம் நடத்தி வருகிறான்.ஆனால் சம்பளம் முழுவதையும் அப்படியே கொண்டு வந்து கிழவியிடம் கொடுத்துவிடுவான். கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட கிழவிக்கு சில திட்டங்கள் இருந்தன.சர்ச்சிலிருந்து திரும்பும் போது அந்தோணியை காணவில்லை.ஆட்டைத் தேடி கசாப்புக் கடை முதல் வயல் வாய்க்கால் வரை தேடிப் பார்த்து சலித்துப் போகிறாள். கிறிஸ்துமஸ் என்ற சுபதினம் அவளுக்கு சோகதினமாக மாறுகிறது. ஆனால் மாலையில் கொத்து வேலையாள் ஜார்ஜ் மூலம் அந்தோணி திரும்பக் கிடைத்து விடுகிறது. ஆட்டை விலைக்கு கொடுத்ததும் கிழவியின் திட்டங்கள் நிறைவேறுகின்றன.ஆம் காணாமல் போன அந்தோணி நிரந்தரமாக தொலைந்துப் போய்விட்டது.
கிருஷ்ணன் நம்பி உயர்ந்த இலட்சியங்களையும் கற்பனை இலக்குகளையும் கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கவில்லை. மிகவும் யதார்த்தமான சகல பலவீனங்களும் கொண்ட பாத்திரங்களே அவை.
சிங்கப்பூர் பணம் கதை இரு நண்பர்கள் பற்றியது. ஒருவன் ஏழை குமாஸ்தாவின் மகன். இன்னொருவன் சிங்கப்பூர் சீமானின் புதல்வன். இருவருக்கும் நட்பு முளைக்க பணக்காரப் பையன் நிறைய செலவு செய்கிறான். 120 ரூபாய் மதிப்புள்ள பைனாகுலரை பரிசாகவும் தருகிறான்.பதிலுக்கு இவனும் ஒரு தேர்ப்பொம்மையைப் பரிசளிக்க எண்ணி, கிடைத்த ஒற்றை ரூபாயுடன் வரும் போது அந்த ஒரு ரூபாயும் செல்லாத காசாகிப் போகிறது.
அந்த செல்லாக் காசாக இருப்பவர்களின் கதையைத் தான் கிருஷ்ணன் நம்பி மீண்டும் மீண்டும் எழுதுகிறார்.
நாணயம் என்ற கதையில் வரும் பிச்சாண்டி என்ற சங்கர நாராயணனுக்கு சினிமாவும் ஓட்டலும் பிடித்த விஷயங்கள். அதற்கான காசு அவனுக்கு அவன் மாமாவின் உண்டியலில் இருந்தே கிடைக்கிறது. நாணயமான குடும்பத்தைச் சேர்ந்த அவன் இந்த திருட்டைச் செய்கிறான். பின்னர் தன் களவுக்குப் பிராயச்சித்தமாக முதல் மாத சம்பளத்தை மாமாவின் உண்டியலில் போட முயலும் போது மாமியிடம் அகப்பட்டு திருடனாக பட்டம் பெறுகிறான்.

இருக்கிற வாழ்க்கையில் திருப்தியின்மையும் இன்னும் மேலான, சுகமான, சௌகரியமான, ஆசைகள் ஈடேற்றும் வாய்ப்புள்ள வாழ்நிலைக்கான துடிப்பும் கிருஷ்ணன் நம்பியின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் காணக் கிடைக்கிறது. அந்த மேலான நிலை பணத்தால் மட்டும் கிடைக்குமா.?
காலில் கட்டப்பட்ட சங்கிலி அறுபடுவதும் ஆனந்தமல்லவா....கால் சங்கிலியால் கட்டப்பட்ட மனநலம் சிதறிய பெண் ஒருத்தி ஊமைப் பையன் ஒருவனால் விடுதலை பெறுகிறாள்.ஆனால் அவன் அன்புச் சங்கிலியில் அவள் மீண்டும் விலங்கிடப்படுகிறாள். கதையின் பெயர் சங்கிலி.
உணர்ச்சிதான் அஸ்திவாரம். மேதைமை எனப்படுவது கூரைக்கு வெள்ளையடிக்கும் முயற்சி தான் என்பார் சீன அறிஞர் லீ-யு-டாங். கிருஷ்ணன் நம்பிக்கு இதை யாரோ சொல்லியிருக்கக் கூடும். அதனால்தான் மிகவும் அரிதான உணர்ச்சி இழைகளை பின்னலிட்டு தனது கதைகளை மேதைமையால் அலங்கரித்திருக்கிறார். மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மேதைமை வறட்டு வேதாந்தமாகவே முடியும் என்ற தெளிவு அவர் கதைகள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

எல்லா இதயங்களிலும் ஆசைகள் இருக்கின்றன. எல்லா இதயங்களிலும் அந்தரங்கமாகப் போற்றும் கனவுகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார வசதியற்ற பெரும்பான்மை சாமான்ய மக்களின் ஆசைகளும் கனவுகளும் ஆசைகளாகவும் கனவுகளாகவுமே தேங்கி விடுகின்றன. அவை ஒருபோதும் நிறைவேறுவதே இல்லை. நிறைவேறினால் அதற்கான விலையாக அவர்கள் தங்கள் வாழ்வையே தரவேண்டியிருக்கும்.
காலில் சங்கிலியுடன் விடுதலை வேட்கையில் உழலும் பைத்தியத்தின் கதைதான் மனித குலத்தின் கதை. நம்மைப் பற்றிய ஒரு புரிதலையும் நம் வாழ்வைப் பற்றிய ஒரு கேள்வியையும் கிருஷ்ணன் நம்பி தனது கதைகளின் மூலம் எழுப்புகிறார்.ஒரு நாள் சுகத்திற்காக மாதம் முழுவதும் துன்பப்படும் எஸன்ட்ரிக் போல நாமும் தற்காலிகமான லௌகீக சுகங்களுக்காக ஒரு நீண்ட கால வரலாற்றையே பறிகொடுத்து நிற்கிறோம். இன்றைய உலகைப் பற்றி, மதம், அரசியல், கலை , பண்பாடுகள் குறித்த நமது அலட்சியம் மாதச் சம்பளத்தை ஒரு நாளுக்காக இழக்கிற நிலையை விட எந்த வகையிலும் மேம்பட்டது அல்ல. இதுவும் அதைப் போல ஆபத்தானதும் கூட.

(கிருஷ்ணன் நம்பியின் கதைகளும் அவரைப் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடையும் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கின்றன.)

Wednesday 13 June 2012

நான்



ALL PRAYER, MEDITATION IS INDIVIDUAL, IS PRIVATE-  OSHO

MAN'S GREATEST CREATION IS HIMSELF,HIS GREATEST CREATION WILL BE HIS OWN SELF REALIZATION- OSHO

பல வருடங்களுக்கு முன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் முன்றில் புத்தகக் கடை இருந்தது. அங்கு பலமுறை போயிருக்கிறேன். அங்கேதான் கோபிகிருஷ்ணன், மா.அரங்கநாதன், அழகியசிங்கர் போன்ற பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. விஷயம் அதுவல்ல, முன்றிலை நடத்திய எழுத்தாளர் மா.அரங்கநாதனுடன் பேசும் போது எனது கவிதைகள் பற்றிய விவாதம் வந்தது. எனது கவிதைகளில் நான் என்ற தன்மை அதிகமாக இருப்பதாக அவர் குறைபாடு தெரிவித்தார்.அதுவரை அப்படியொரு விஷயமே எனக்கு தெரியவே இல்லை. அந்த நான் யார்? ஆயினும் அதன் பின்னர் மிகுந்த பிரக்ஞையுடன் நான் என்ற த்வனியை விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.
என்னைப் பற்றி எனக்கென்ன ஈடுபாடு?இது ஒருவகை மனோவியாதி என்று கூறுபவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இதனை நார்சிசசம் என்பார்கள்.தன் மீதான அதீத ஈடுபாடு என்று அதை எளிமையாக தமிழ்ப்படுத்தலாம்.அசாதாரண சுய ஈடுபாடு என்றும் கூறலாம்.இது சரியா என்று எனக்கு நானே பல முறை கேட்டுப் பார்த்து விட்டேன். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் அது பேரின்பம் என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை சந்திரபாபு பாடியதும் நினைவில் வருகிறது.
என்னை முன்னிறுத்தி நான் எழுதக் கூடாது என்று நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி எழுதுவதானால் என்னால் எழுத முடியாமல் போய் விடுமோ என்று கவலைப் படுகிறேன்.என் நண்பர்கள் மீதும் வாசகர்களிடமும் எனக்கு பிரியமும் மதிப்பும் உண்டு. ஆனால் என்னைப் பற்றி நான் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?
படைப்பாளிக்கு வாசகன் மூலம் கிடைக்கும் உறவுதான் சமூகத்துடனான அவனது உறவு. பிரதியை எழுதிவிட்டால் அது அவனுக்கு சொந்தமில்லை வாசகனுக்குரியது என்றும் போஸ்ட் மாடர்னிச ஜாம்பவான்கள் கூறுவார்கள்.ஒரு படைப்பாளி தன் படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூற முடியுமா?அப்படி சொல்லும் போதே அந்தப் பிரதி செத்துப் போகாதா?ஒருவர் தன் ஆன்மாவின் அந்தரங்கமான துடிதுடிப்பிலிருந்து அந்தப் பிரதியை எழுதவில்லை என்று அர்த்தமாகாதா?எழுத்தாளன் தனது எழுத்தின் தொடர்பறுக்க முடியுமா என்ற கேள்வியால் நான் பல சிந்தனைகளில் மூழ்கி எழுந்திருக்கிறேன்.
சுயசரிதம், சுயபுராணம், சுய தம்பட்டம், சுயநலம் போன்ற வார்த்தைகள் எல்லாம் எனது படைப்புகளின் மீது விமர்சனமாக வீசப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நான் என்னுள் மூழ்கி தீவிரம் கொள்கிறேன். எந்தப் பரிந்துரையிலும் பட்டியலிலும் யாரும் என்னை சேர்க்காத போதும் கூட நான் மட்டுமே அறிந்த ஒரு சமூகத்துடனான எனது தீவிர உறவின் மையத்திலிருந்து எனது எழுத்து பிறக்கிறது என்று கோவை ஞானி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார். சமூக உணர்வு, மனித நேயம் என்ற சொற்களின் பொய்யான சித்திரங்களில் சிக்காமல் என்வழியாகவே அதை நான் காண்கிறேன்.நான் இல்லாமல் அந்த உணர்வுகள் இல்லை.அத்தகைய மேன்மையான இலக்குகள் இல்லாமலும் நான் இல்லை.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் தன்னை மிகப் பெரிய ஆகிருதியாக முன்னிறுத்தி இலக்கியத்திற்கே தான்தான் பெரிய அத்தாரிட்டி போல சொந்தத் திராணியுடன் கருத்துகளை முன்வைக்கும் போக்கு பாரதியிடமும் இருந்தது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல படைப்பாளிகளிடமும் உள்ளதுதான். சுஜாதா கூட ஹைகூவுக்கே தான்தான் அத்தாரிட்டி போல பேசியவர்தான். அவருக்கு அதன் அரிச்சுவடி மட்டும்தான் தெரிந்திருந்தது.
எனில் என்னைப் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு? உலகைப் புரிந்துக் கொள்ள முதலில் உன்னைப் பற்றி நீ புரிந்துக் கொள் என்கிறது பௌத்தம். உலகைப் புரிந்துக் கொண்டால் அதில் உன் இருப்பைப் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது மார்க்சியம். நீ- நான் என்ற உறவுதான் சமூக ரீதியிலான உறவாகவும் உள்ளது. அதனிடையே தான் நமது வாழ்க்கையும் இருக்கிறது. எழுத்து எனக்கா சமூகத்திற்காகவா என கேள்வி எழும்போது உனக்கான கவிதையை நீ எழுது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவில் வருகிறது.
நான் எழுதுவது எனக்கேதான் என்பதான தெளிவு வந்துவிட்டது. என் வாசகர்களுக்காக மட்டுமல்லாது, என் பொருட்டும் என்னால் என்னால் என் எழுத்தை மாற்ற முடியாது. அது எப்படி வர வேண்டுமோ அப்படித்தான் வந்துக் கொண்டிருக்கும். ஒரு இலை துளிர்க்கும் திசையை யார் தீர்மானிக்கிறார்களோ அவர்களே அதை தீர்மானிக்கட்டும். ஒரு பூ மலரும் போது எந்த திசை நோக்கி மலர்கிறதோ அதுவே அதன் திக்குதிசை எல்லாம். என் வாழ்வை மாற்றும் ஆற்றலும் எனக்கில்லை. அது போகும் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். அதில் என்னையே நீர்ச்சுழல் போல வட்டமிட்டு சுழலும் நாட்களும் உழலுகின்ற காலங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.என்னை நானே புரிந்துக் கொள்வதன் மூலம் இவ்வுலகைப் புரிந்துக் கொள்ள நான் முயலுகிறேன். வாழ்க்கை எனக்கு இன்னும் சற்று ஆயாசமும் அவகாசமும் அளிக்குமானால் இந்தப் புரிதலில் இன்னும் முழுமை கிடைக்கும்.
என்னைப் பற்றி நான் எழுதுவதும் முழுக்க முழுக்க என்னைப் பற்றியதல்ல என்பதை ஒரு நுட்பமான வாசகனால் உணர முடியும். அதற்கான மௌனமான இடைவெளிகளை எனது படைப்புகள் கொண்டிருக்கும். என்னைப் பற்றி நானே பேசக் கூடாது என்று தடைகள் விதிப்பவர்களை நான் மதித்தாலும் கூட, நுண்ணறிவும் நேர்மையும் துணிவும் மிக்க ஒரு படைப்பாளியை அப்படியெல்லாம் தண்டிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மேதைமையின் திமிரோடு இதனை ஒரு கட்டளையாகவும் என்னால் கூற முடியும்.

Thursday 7 June 2012

படித்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் தேய்பிறை இரவுகளின் கதை


தேய்பிறை இரவுகளின் கதை-கீரனூர் ஜாகிர் ராஜா

கீரனூர் ஜாகிர் ராஜா மீன்காரத் தெரு என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பில் அகலக் கால் பதித்தார். அவரது சில படைப்புகளை சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஓரிருமுறை சந்தித்தும் இருக்கிறேன். அவரைப் பற்றி மற்ற நண்பர்கள் கூறிய கருத்துகள் அவரைப் பற்றிய இருண்மையான சித்திரத்தை வடித்திருந்தன. குடிப்பார் என்றார்கள். சதா போதையில் மிதப்பார் என்பார்கள். இப்படி சில நல்ல படைப்பாளிகள் போதையின் பிடியில் சிக்கியதை நான் பல முறை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

திரு. பிரபஞ்சன் அவர்கள்  ஆனந்த விகடன் இதழில் எழுதிய சிறுகதை நீரதன் புதல்வர். இதிலும் குடிப்பதை பற்றிய சில பகுதிகள் வருகின்றன. கோடைக்காலத்தில் ஏன் டாஸ்மார்க்கில் அதிகமான கூட்டம் கூடுகிறது என்றும், குடிப்பது எல்லாவற்றையும் மறப்பதற்கு அல்ல மாறாக நினைப்பதற்கு என்று பிரபஞ்சன் எழுதியிருக்கிறார்.

சர்வ சாதாரணமாக 500 ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்து குடிக்கும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன்.  ஏராளமான படைப்பாளர்கள் மீது இத்தகைய இருண்ட நிழல்கள் படிந்திருந்தன. பணம் கேட்பார்களோ என நண்பர்கள் இவர்களை விட்டு ஒதுங்குவதைப் பார்த்திருக்கிறேன். நானும் சில சமயம் தவிர்த்து விட்டிருக்கிறேன்.

இது வரை ஒருமுறை கூட ஹோட்டலில் போய் 500 ரூபாய் பில் கொடுத்து நல்ல உயர்தர உணவை நான் சாப்பிட்டதில்லை. அதிகபட்சம் சரவண பவன்தான். அதுவே 200 ரூபாய் பட்ஜெட்டை பில் தாண்டி விட்டால், அதை ஈடு செய்ய ஒரு வாரத்திற்கு கையேந்தி பவன்களில் சாப்பிடும் பிழைப்பு எனக்கு. எப்படி குடிப்பதற்காகவே இந்த நண்பர்கள் இத்தனை செலவு செய்கிறார்கள் என்ற ஆற்றாமைகள் தீருவதே இல்லை. பண்பான போதையில்லை குடியிலே, ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே என என்னதான் புத்தி சொன்னாலும் ஒருவர் மண்டையிலும் அது ஏறியதே இல்லை. மாறாக என்னை குடிக்க வைக்க கட்டாயப்படுத்துகிறார்கள். நட்பை இழந்தாலும் பரவாயில்லை குடிப்பதில்லை என்று தீர்மானமாக இருப்பதால் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.

கீரனூர் ஜாகிர் ராஜாவும் அப்படித்தான் இருப்பார் என்ற சிந்தனையில் அவர் புத்தகங்களுடன் அந்நியத்தன்மை ஏற்பட்டு விட்டதை அறிந்தேன். அது ஒரு படைப்பாளிக்கு செய்யும் நியாயமாக இருக்காது என்பதால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவரது தேய்பிறை இரவுகளின் கதை எனும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கி வந்தேன். பலமுறை படிக்க எடுத்த போதும் அதில் இருந்த முஸ்லீம் தமிழ் நடையால் மேலும் சோர்வடைந்து ஒத்திப் போட்டேன். தோப்பில் முகமது மீரான் போன்ற இஸ்லாமிய பின்புலம் உள்ள படைப்பாளிகளின் வட்டார மொழியுடன் இஸ்லாமிய சொற்களும் சர்வசாதாரணமாக கலந்து வருகின்றன. உதாரணமாக காஃபிர் .

சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் கலப்பதை கொடுங் குற்றமாக ஏசும் தமிழ் அறிஞர்கள் யாரும் தோப்பில் முகமது மீரானையோ கீரனூர் ஜாகிர் ராஜாவையோ இஸ்லாம் கலப்புக்காக விமர்சிப்பதே இல்லை. அதே போன்று ஜோஸ் டி குரூஸ், பிரான்சிஸ் கிருபா போன்றவர்கள் கிறித்துவர்கள் என்ற பிரக்ஞையுடன் விவிலியத்தின் சாயலில் புனைவு மொழியை ஏற்படுத்தினாலும் யாருக்கும் பிரச்சினையில்லை. அவாளும் இவாளும்தான் தமிழ்த்துரோகிகள்.பெரியாராலும் அம்பேத்காராலும் அடையாளம் காட்டப்பட்ட தேச துரோகிகள். பாவம் அசோகமித்திரன். பாவம் லாசரா. பாவம் ஆதவன், பாவம் தி.ஜானகிராமன்.
அது கிடக்கட்டும். ஜாகிர் ராஜா அசலான படைப்பாளிதான். அதில் சந்தேகம் இல்லை. அவரது கதைகள் மனதை வருடுகின்றன. திகைக்கவும் சிலசமயம் தடுமாறவும் வைக்கின்றன. அவர் கதை ஒன்றில் கிணற்றுக்குள் இருந்து நீளும் வளைக்கரம் போன்று ஏதோ ஒன்று நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுக் கொண்டேயிருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜா என்ற அன்புத் தோழரே குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்ற நல்ல செய்தியோடு நீங்கள் என்னை சந்திக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

Friday 1 June 2012

காமத்துப் பால்- -பாலியல் திரைப்படங்கள்

பாலியல் திரைப்படங்கள் பற்றிய என் கட்டுரையை வாசிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்க-jagdishk.dinstudio.com         

குறிப்பு


இந்த மொக்கை பிளாக்கை நம்பி ஏராளமான சினிமா கட்டுரைகளைப் பதிவு செய்திருந்தேன். பட்டென சொல்லாமல் கொள்ளாமல் அத்தனையும் நீக்கி விட்டார்கள். பல நல்ல கட்டுரைகள் காணாமல் போனாலும் சில எழுத்துவடிவில் தப்பியுள்ளன. இந்தக் கட்டுரையும் தப்பிவிட்டது. விரைவில் இப்பகுதியில் சேர்க்கிறேன். அதுவரை வாசகர்கள் பொறுக்கவும் மன்னிக்கவும்
  jagdishk.dinstudio.com - my blog on films

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...