Sunday 20 May 2018

பாலகுமாரனுக்கு அஞ்சலி

திசைகள் பத்திரிகை முதலே பாலகுமாரன் அறிமுகம். கணையாழியில் புரியாத சில கவிதைகளும் அப்போது பரிச்சயம். பாலகுமாரனின் தொடர்கள் சாவி,குமுதம், விகடன், கல்கி இதழ்களில் வரும் போது வாரம் தவறாமல் பக்கத்தை பிரித்து சேர்த்து வைப்பேன். தாயுமானவன், அகல்யா, போன்ற தொடர்கள் பாதித்தன. மெர்ககுரிப் பூக்களையும் இரும்பு குதிரைகளையும் படித்த போது ஒரு புதுவிதமான எழுத்தால் வசியம் செய்தார் பாலா.மேகலா மாத இதழில் ஏதோ ஒரு நதியில் என பாலகுமாரனும் எங்கோ ஒரு இரவில் என சுப்ரமண்ய ராஜூவும் எழுதிய குறுநாவல்கள் தந்த ஈர்பபு இன்னும் குறையவில்லை.
பாலாவின் சிறுகதைகளில் யாதுமாகி நின்றாய் காளியும் நாவல்களில் புருஷவிரதமும் மனதில் நிலைத்து நிற்கின்றன. கட்டுரைகளில் பாலகுமாரன் எனக்கு மிகவும் பிடித்தமானவர்,
ஆன்மீகம் அவருக்கு ஒருவேஷமாக வந்து முகமாக மாறிவிட்டது. இளம் வயதில் ஏராளமான பெண் வாசகிகளைப் பெற்ற பாலகுமாரனுக்கு பெண் பித்தன் என்றொரு பெயர் இருந்தது. ஒரு சக எழுத்தாளர் பாலகுமாரன் வளசரவாக்கத்தைத் தாண்டி ஒரு பெண் வாசகியின் வீட்டைத் தேடி அலைந்ததை கதை கதையாக கூறுவார்.
ஆனால் முதிர்ந்து விட்டார் மனிதர். ராம் சுரத் குமாரோ . ஓஷோவோ ,ஜே.கிருஷ்ணமூர்த்தியோ எதுவோ அவரை வேறு பாதைக்கு தூண்டியது. ஆன்மீகம் பழகத் தொடங்கிய பின்னர் அவருடைய எழுத்திலும் கனிவு, தெளிவு சிநேகம் பிறந்தது. அந்த பாலகுமாரனின் சாதனைகளை பட்டியலிட்டால் மிகப் பெரியது.
நண்பர்கள் சூர்யராஜன்,நந்தாவுடன் சேர்ந்து நான் 1986 ல் செந்தூரம் சினிமா சிறப்பிதழ் தயாரித்தேன்.அதை பாராட்டிய இரண்டு பெரிய விஐபிக்கள் பாலகுமாரனும் இயக்குனர் மகேந்திரனும்.
இயக்குனர் மகேந்திரனை அவர் வீட்டில் ஓர் இரவு முழுவதும் மதுவாசனையுடன் பேசினேன். நான் குடிக்கவில்லை. மறுநாள் என்னைப் பாராட்டி மகேந்திரன் எழுதிய கடிதத்தில் புதுமைப்பித்தன், ஜானகிராமன் மரபின் தொடர்ச்சியாக என்னைக் காண்பதாக பாராட்டியிருந்தார்.
பாலகுமாரனுக்கு இதழை அனுப்பி வைத்து சில நாட்கள் கழித்து அவர்வீட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது என்னைப் பற்றி விசாரித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். செந்தூரம்இதழ் மிகவும் பிடித்திருந்ததாக பல முறை கூறினார்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் பாலகுமாரனை சந்திக்க முடிந்தது. குங்குமம் துணை ஆசிரியர் பரத்துடன் மந்தைவெளியில் ஒரு உணவகத்தில் சந்தித்த போது தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். ஞானக்கூத்தன்மறைவின் போது அவர் வீட்டுக்குப் போன போது பாலகுமாரன் வந்திருந்தார். சில நிமிடங்கள் பேசினார். பின்னர் ஞானக்கூத்தன்நினைவாக விருட்சம் அழகியசிங்கர் நடத்திய கூட்டத்திலும் பாலகுமாரனை சந்தித்தேன். முதுமை கனிந்து தளர்ந்திருந்தார். அக்கூட்டத்திலேயே தாம் அதிகமான நாட்கள் வாழப்போவதில்லை என்று அறிவித்தார்.
இன்று பாலகுமாரன் இல்லை. போய் வாருங்கள் பாலா இன்னொரு பிறவியில் இலக்கியம் மீண்டும் நம்மை இணைக்கும் என்று நம்புகிறேன்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...