Friday 27 November 2015

அரிதினும் அரிது கேள் 18- உன்னிடம் மயங்குகிறேன்












நான் சிறுவயது முதலே ஜேசுதாசின் ரசிகன். இந்த பாடலும் அதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். தேன்சிந்துதே வானம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை படம் பார்க்காமலேயே நேசிக்கத் தொடங்கி விட்டேன். சிவகுமார் ஜெயசித்ரா நடித்த இப்படம் இப்போது கிடைப்பது அரிது. முன்பு ஒரு விசிடி வாங்கி விட்டேன். அதுதான் என்னிடம் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் யூ டியூப்பில் கிடைக்கிறது.எந்த புண்ணியவானோ இப்படிப்பட்ட நல்ல நல்ல பாடல்களையும் யூ டியூப்பில் போட்டு பொதுவுடைமை ஆக்கி விட்டான். வாழ்க.
வி.குமார் இசையில் ஜேசுதாஸ் பாடிய வாலியின் பாடல் இது


உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே.......


ஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்

வண்ண விழிப்பார்வையெல்லாம் தெய்வீகம்
 
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புதுராகம் எழுது


( உன்னிடம் மயங்குகிறேன் )

தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
......................

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் காண்போம்

 
இந்த ஆ..... ....எனுமிடத்தில் ஜேசுதாஸ் குரல் ஒரு பெரியமந்திரம் போல என்னை கட்டுண்டு கிடக்கச் செய்திருக்கிறது. இப்போதும் ஜேசுதாஸ் பாடல்களில் எனக்குப் பிடித்த பத்து பாடல்களில் இந்தப் பாடலும் நிச்சயமாக இருக்கும்.

Tuesday 17 November 2015

அஞ்சலி -பித்துக்குளி முருகதாஸ்





கர்நாடக சங்கீதத்தைப் புரிந்துக் கொள்ள பலமுறை முயன்று போரடித்ததால் விட்டு விட்டேன். டிசம்பர் இசைக் கச்சேரிகளுக்கும் போய் பார்த்தேன். உணவுதான் ருசித்தது தவிர ராகங்களும் ஆலாபனைகளும் அல்ல. மாறாக எப்போதும் சினிமா இசைதான் என்னை ஆக்ரமித்தது.
பித்துக்குளி முருகதாசும் திரையிசை மூலம் தான் எனக்குத் தெரிய வந்தார். தெய்வம் படத்தில் நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமி மலை என்று பாடிய போது அவரே நடித்திருந்தார். மைனர் போல சட்டையும் வேட்டியும் கட்டி கருப்பு கண்ணாடி போட்டு வெண்தாடியுடன் வித்தியாசமாக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ் முதல் பார்வையிலும் குரலிலும் மனத்தில்நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

Saturday 7 November 2015

உலக சினிமா- THE LIFE OF DAVID GALE வாழ்க்கை ஒரு மின்னல் ஓவியம்-

THE LIFE OF DAVID GALE

குமுதம் தீராநதி நவம்பர் 2015 இதழில் வெளியான எனது கட்டுரை




மரண கண்டிதம் - வாழ்க்கை ஒரு மின்னல் ஓவியம்

THE LIFE OF DAVID GALE - செந்தூரம் ஜெகதீஷ்


 
நாம் பிறந்த தேதி நமக்கு தெரியும். நேரமும் கிழமையும் ஆண்டும் துல்லியமாக பதிவு செய்த பிறப்புச் சான்றிதழும் நம்மிடம் இருக்கிறது. அதில் மாற்றமும் இருக்காது. பிறவியெடுத்த யாருக்கும் பிறந்த கணம் ஒன்றுதான். அதே போல் இறக்கும் தருணமும் ஒன்றுதான். அந்த ஒரு மரண கண்டிதம்- கால நிர்ணயம் ஏனோ பலமுறை ஒத்திப் போடப்படுகிறது. நானே மூன்று முறை தற்கொலைக்கு முயன்று உயிர் வாழ்கிறேன். விபத்துகளிலும் உயிர் பிழைத்தவர்கள் உண்டு.மரணத்தின் கணத்தை தள்ளிப்போட முடியுமா, முன் கூட்டியே வரவழைக்க முடியுமா என்ற அபத்தமான கேள்விகளுக்கு பதிலே இல்லை.அது நிகழும் கணம் தான் நிகழும். மார்க் ட்வைன் என்ற எழுத்தாளர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அவர் அம்மாவிடம் யாரோ கூற அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று கூறிய அந்த தாய் அந்த கிராதகப் பயல் தலையில் இடி விழுந்து சாகக்கடவான். அவன் தண்ணீரில் சாகவே மாட்டான் என்றாராம்.இதனை மார்க் ட்வைன் நகைச்சுவையாக குறிப்பிடுவார்.

தி பைனல் டெஸ்டினேசன் என்ற திரைப்படம் 5 பாகங்களாக வந்தது. இதில் மரணத்தின் கணத்தை ஏமாற்றி விட்டால் மரணத்திலிருந்து தப்பி உயிர் வாழ முடியும் என்ற கோட்பாடு மூலம் கதாபாத்திரங்கள் தங்கள் மரணத்தைத் தள்ளிப்போட நினைப்பதும் அவர்களை மரணம் சுற்றி வளைப்பதும்தான் திரைக்கதையாக்கப்பட்டது.

மரணம் மற்றொரு வகையிலும் நிகழும். அது சட்டத்தால். மரண தண்டனை விதிக்கப்படும் போது மரணத்திற்கான கண்டிதம் எழுதப்படுகிறது. கால நிர்ணயம் செய்யப்படுகிறது.கசாப் முதல் யாகூப் மேனன் வரை தீவிரவாத குற்றங்களுக்கு ஆளானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 3 பேருக்கு மட்டும் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் விவாதங்கள் எழுகின்றன. அறிவுஜீவிகள் ஓரணியாக திரண்டு மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மத்திய அரசு நியமித்த சட்டக்கமிஷன் அண்மையில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் மரண தண்டனையை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அரிதினும் அரிதான தீவிரவாத வழக்குகளில் மட்டும் மரண தண்டனையை கடைபிடிக்கலாம் என்றும் சட்டக்கமிஷன் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதனை உள்துறை அமைச்சகம் நிராகரிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் மரண தண்டனை அவசியம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால் இப்பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்குமா நிராகரிக்குமா என்பது தெளிவாகவில்லை.
தி லைப் ஆப் டேவிட் கேல் என்ற படம் மரண தண்டனைக்கு எதிரான விவாதங்களை கிளப்புகிறது. டேவிட் கேல் ஒரு கொலைக்குற்றவாளி , ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டுக்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் சிறையில் அவன் தனது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனை தூக்கில் போடுவதற்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான். பிரபல தொலைக்காட்சி பெண் செய்தியாளருக்கு தான் பேட்டியளிக்க விரும்புகிறான்






டேவிட் கேலாக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி. பெண் நிருபராக வருபவர் டைட்டானிக் படத்தின் நாயகியாக நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட அதே கேட் வின்ஸ்லெட். அதே அழகுடன்.
முதல் காட்சியில் கேட் ஓடி வருகிறார். டேவிட்டின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த அவர் பழுதான காரை நிறுத்தி மூச்சுவாங்க ஓடோடி வருகிறார். அவர் கையில் ஓர் ஆதாரம் இருக்கிறது. டேவிட் குற்றவாளியல்ல என்று நிரூபணம் செய்யும் ஒரு முக்கிய ஆதாரம். ஆனால் காலம் கடந்துவிடுகிறது. டேவிட் கேலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கேட் வின்ஸ்லெட் உடைந்து போய் நொறுங்கி அழ கதை பின்னோக்கி சுழலுகிறது.
ஒரு கொலைக்குற்றவாளியை பேட்டியெடுக்க செல்லும் கேட் வின்ஸ்லெட்டை தனியாக செல்ல வேண்டாம் என ஆசிரியர் அறிவுறுத்துகிறார். துணைக்கு ஜாக் என்பவனை அனுப்பி வைக்கிறார். பெண் பாதுகாப்பற்றவள் என்ற ஆணாதிக்க சிந்தனையை வெறுக்கும் கேட் அரை மனதாக பாதுகாப்புத்துணையை ஏற்கிறாள்.
மழை பொழியும் முதல் நாள்- சிறைச்சாலைக்கு செல்கிறார் செய்தியாளர் பிட்சி புளூம் அதாவது கேட் வின்ஸ்லெட். முன்னதா உணவு விடுதியில் அவர் ஜாக்குடன் பேசும் போது டேவிட் கேல் ஒரு ஜீனியஸ் என தான் திரட்டிய தகவல்களை வைத்து கூறுகிறான் அவளது பாதுகாவலன். சிறைக்குள் செல்லும் கேட்டிடம் அரை மில்லியன் டாலர் பணம் தந்தால்தான் டேவிட் கேல் பேட்டி தருவார் என அவருடைய வழக்கறிஞர் பேரம் பேசுகிறார்.பல முக்கிய ரகசியங்களை டேவிட் கேல் வெளிப்படுத்துவார் என்றும் அவர் உறுதியளிக்கிறார். கேட் வின்ஸ் லெட்டும் அவர் பணிபுரியும் ஊடகமும் ரகசியங்களைக் காப்பதில் பேர் பெற்றது என்பதால்தான் பேட்டியளிக்க டேவிட் கேல் ஒப்புக்கொண்டார் என்கிறார் லாயர்.
பேட்டிக்கு தயாராகிறார் பிட்சி புளூம் என்ற இளம் பத்திரிகையாளர். பாதுகாப்பாக இரு என அறிவுரை கூறுகிறார்கள் சிறைக்காவலர்கள். இதற்கு அந்த வழக்கறிஞர் கூறும் பதில் "அவர்கள் குரூரமாகவும் அசாதாரணமாகவும் இருப்பது எப்படி என்று இங்குதான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். " என்பதே.
டேவிட் கேல் வருகிறார். தடுப்பு கம்பிகளுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் குற்றவாளியும் பேட்டி காண்பவரும் அமர்த்தப்படுகிறார்கள். தனது கதையை கூறத் தொடங்குகிறார் டேவிட் கேல்,
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றுகிறார் டேவிட் கேல்.அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம் அவரது அறிவுபூர்வமான சிந்தனையை நமக்கு வெளிப்படுத்துகிறது. தத்துவவாதி லகானின் கோட்பாடுகளை விளக்கும் வகையில் அவர் நடத்தும் அந்த வகுப்பில் அவர் மாயைகள் மற்றும் யதார்த்தம் பற்றி பேசுகிறார்.மாயைகள் யதார்த்தத்தை போல் தோன்றினாலும் யதார்த்தம் அல்ல. அவை மாயைகளே.அதை நாம் பல காலம் விரும்பி தேடிக் கொண்டிருப்போம் ,கிடைத்த கணமே அது நமக்கு தேவையற்றதாகி விடும். நாம் தேடியது அல்ல முக்கியம். நமது தேடல்தான் முக்கியம் என்று விளக்குகிறார்.
மனித மனம் மனிதாபிமானம் என்ற கொள்கையுடன் வாழ்கிறது. அதன் காரணமாக வாழ்க்கையை போட்டுக் குழப்பிக் கொள்ள தேவையில்லை. நமது சொந்த வாழ்க்கைதான் நமது கொள்கைகளின் மதிப்பு என்ன என்பதை கூறுகிறது.
பேராசிரியர் டேவிட் கேல் டெத் வாட்ச் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். மரண தண்டனைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தும் இயக்கம் அது. ஒரு நாள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடித்து கும்மாளம் போடும் போது ஒரு அழகான இளம் பெண்- படிப்பை பாதியில் விட்டவள்- டேவிட் கேலை வட்டமிடுகிறாள். முதலில் மறுக்கும் அவர் பின் பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு அவளுடன் உடலுறவு கொள்கிறார். ஆனால் அந்தப் பெண் பொய்யாக டேவிட் கேல் மீது பாலியல் வன்முறை புகார் அளிக்கிறாள்.
மறுநாள் மாகாண ஆளுனருடன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கிறார் டேவிட் கேல். அதில் ஒரு கண்ணுக்கு பதில் ஒரு கண் என பழிவெறியில் உலகம் இருந்தால் உலகமே குருடாகிப் போய்விடாதா என்ற மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டும் டேவிட். மரண தண்டனை அவசியமா என கேள்வி எழுப்ப , ஒரே ஒரு நிரபராதியாவது தூக்கில் தொங்கியதை நிரூபிக்க முடியுமா என்று கேட்டு டேவிட்டின் வாதங்களை தவிடு பொடியாக்கி விடுகிறார் ஆளுநர். இதனால் இருவருக்கும் இடையே விவாதம் தனிப்பட்ட வன்மமாக மாறுகிறது. நிகழ்ச்சியை முடித்து ஆளுநர் புறப்பட டேவிட் கேலை போலீசார் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்கின்றனர். அப்போதுதான் இது ஆளுநரின் திட்டமிட்ட சதிவேலை என அவருக்குப் புரிகிறது.
பின்னர் அந்த வழக்கிலிருந்து டேவிட் கேல் நிரபராதி என விடுவிக்கப்படுகிறார். ஆனால் அதற்குள் அவர் வாழ்க்கைக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. அவர் மனைவி அவரை விட்டு சென்று விடுகிறாள். அவர் அவமானமும் புறக்கணிப்பும் சந்திக்கிறார்.
மரண தண்டனைக்கு எதிரான இயக்கமான டெத் வாட்ச்சில் மற்றொரு தீவிர பெண் உறுப்பினர் கான்ஸ்டன்ஸ் ஹராவே .இவர் டேவிட்டிடம் நட்புடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் அவர் தமது தோழியுடனும் உடலுறவு கொள்கிறார். மறுநாள் காலையில் ஹராவே மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறாள். அவள் தலை பிளாஸ்டிக் பையால் மூடியிருக்கிறது. மூச்சு அடைத்து அவர் இறந்திருக்கலாம்.கைகளும் கால்களும் பிளாஸ்டிக் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளன. கைகளில் விலங்கு பூட்டப்பட்டு அதன் சாவியை அவளை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்திருக்கிறான் கொலைகாரன். அவள் நிர்வாணக் கோலத்தில் கிடக்கிறாள். கம்யூனிஸ அரசுகள் பயன்படுத்திய சித்திரவதைக்கு அவள் ஆளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை அவளது சடலம் கிடக்கும் காட்சி உணர்த்துகிறது. குற்றம் நடந்த இடத்தில் கடைசியாக கான்ஸ்டன்ஸ் ஹராவேயுடன் இருந்த டேவிட்டை நோக்கியே சந்தேகம் எழுகிறது. அங்கிருக்கும் தடயங்களும் அவரை குற்றவாளியாக்கி விடுகின்றன. இதனால் டேவிட் கேல் மீண்டும் பாலியல் வன்முறை வழக்கில் அதுவும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுகிறார்.மரண தண்டனைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய அவருக்கு தனது தோழியின் மரணத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விடுகிறது.
புளூம்என்ற பெண் செய்தியாளரிடம் டேவிட் தனது கதையை விவரிக்கிறார்.டேவிட்டுக்கு எதிரான ஆதாரங்கள் பலவீனமானவை என்றும் அவருக்கு சாதகமான சில தடயங்கள் கிடைக்கலாம் என்றும் கேட் வின்ஸ்லெட் நம்புகிறார். ஆனால் அவளையும் ஜாக்கையும் ஒரு மர்ம நபர் காரில் பின் தொடர்கிறார். அவர் தான் டஸ்டி ரைட். காண்ஸ்டன்ஸ் ஹராவேயின் முன்னாள் காதலன் என்பது கதையின் பிற்பகுதியில் நமக்குத் தெரிகிறது.
குற்றம் நடந்த வீட்டை ஜாக்குடன் பார்வையிடுகிறார் கேட் வின்ஸ்லெட் . டேவிட் நிரபராதி என நிரூபிக்க அவர் தடயத்தைதேடுகிறார்.
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அவளை அந்த மழையில் அந்த மர்மக்கார் துரத்துகிறது. உண்மையான கொலைகாரன் அந்தக் காரில் இருப்பதாக நினைக்கிறார் கேட்வின்ஸ்லெட். ஆனால் கான்ஸ்டன்ஸ் ஹராவேயின் முன்னாள் காதலனான அந்த நபர் டஸ்டி ரைட் முக்கியமான ஒரு ஆதாரத்தை கேட்டின் அறையி்ல் வைக்கிறான். ஒரு வீடியோ டேப் தான் அந்த ஆதாரம் .ஜாக்கும் புளூமும் அந்த வீடியோவைப் போட்டுப் பார்க்கிறார்கள். அவளை டஸ்டி ரைட்தான் கட்டிப் போடுகிறான். வீடியோவில் இந்தக் காட்சியைப் பார்த்து கேட் உண்மையான குற்றவாளி டஸ்டி ரைட்தான் என முடிவுக்கு வருகிறாள்.
ஆனால் மர்ம முடிச்சு மேலும் இறுகுகிறது. கேல் தமது கதையை இரண்டாவது நாளாக தொடர கொலை செய்யப்பட்ட ஹராவே ஒரு நோயாளி என்றுகேட் அறிகிறார். மரணத்தை எண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்தாரா் -கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹராவே அவளும் அவள் முன்னாள் காதலனும் ஒரு திட்டமிட்ட தற்கொலையை நடத்தி அதை கொலை போல் சித்தரிக்க முயற்சித்து இருந்ததை கேட் கண்டுபிடிக்கிறாள். ஒரு நிரபராதிக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதை நிரூபிப்பதற்காக ஹராவேயும் டஸ்டியும் திட்டமிட்டே டேவிட் கேலை சிக்க வைத்திருப்பதாக கேட் வின்ஸ்லெட் கருதுகிறார். அந்த வீடியோ டேப்புடன் தான் படத்தின் ஆரம்பக்காட்சியில் அவர் ஓடி வருகிறார். ஆனால் அதற்குள் தூக்குத் தண்டனைநிறைவேற்றப்பட்டு விடுகிறது. அப்பாவியான ஒருவர் மரண தண்டனை பெற்றுவிட்டார் .டேவிட் கேலின் மரணத்திற்குப் பிறகு அந்த வீடியோ டேப் வெளியாகி பெரும் விவாதங்களைக் கிளப்புகிறது. ஊடகங்கள் அரசை கண்டித்து கிளர்ந்தெழுகின்றன. பல்வேறுஇடங்களில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கின்றன.
தொடர்ந்து அந்த பேட்டிக்காக கேட் செலுத்திய கட்டணம் அவருக்கு திரும்பக் கிடைக்கிறது. அதை டேவிட் கேலின்மனைவியை சந்தித்து கொடுக்கிறாள் கேட். நிரபராதியான தமது கணவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் என்று எண்ணி பிரிந்து வந்துவிட்டது தவறு என அவர் எண்ணி கண்ணீர் விடுகிறார். தமது குழந்தையையும் மனைவியையும் இழந்த விரக்தியில்தான் டேவிட் கேல் தமது தோழியிடம் அடைக்கலம் நாடி மற்றொரு பாலியல் வன்முறை கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதை டேவிட் கேலின் மனைவி உணர்கிறார்

இதன் பின்னர் புளூமுக்கு மற்றொரு வீடியோ டேப் தபாலில் வருகிறது. இதில் டஸ்டி ரைட் என்ற ஹராவேயின் முன்னாள் காதலன் அவள் இறந்துவிட்டதை உறுதி செய்கிறான். அப்போது அவன் அருகில் டேவிட் கேல் வருகிறார். அவர் தமது கைரேகைகளை இறந்துக் கிடக்கும் ஹராவேயின் முகத்தை மூடிய பிளாஸ்டிக் பையிலும் கைவிலங்குகளிலும் திட்டமிட்டே பதிவு செய்கிறார்.
நிரபராதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற வாதத்தை உண்மையாக்க ஹராவே, ரைட் ஆகியோருடன் நடத்திய நாடகத்தில் டேவிட் கேலுக்கும் பங்கு இருந்ததை கேட்வின்ஸ் லெட் உணர்கிறார். புற்றுநோயால் மரணம் உறுதியாகிவிட்ட ஹராவை தனது கொள்கைக்காக தனது உயிரைத்தியாகம் செய்ய தற்கொலையை கொலையாக மாற்றி அவள் காதலனும் டேவிட் கேலும் நடத்திய நாடகத்தின் காட்சியை நாடகம் முடிந்துவிட்ட பிறகு காண்கிறாள் கேட் வின்ஸ்லெட்

காரில் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர், டஸ்டின் ரைட் ஒரு தேவாலயத்தில் ஏசு கிறித்து சிலுவையில் அறையப்படும் நாடகத்தை கண்டு கண்ணீர் விடுகிறான்.


----------------------------------------
இந்தப் படத்தின் காட்சிகள் முடிந்தாலும் விவாதங்கள் முடியவில்லை. மரண தண்டனை தேவைதான் என இந்திய அரசைப் போல் பலரும் தேவையில்லை எனப் பலரும் வாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். மரண தண்டனைக்கு ஆளானவர்கள் எல்லோரும் அப்பாவிகள் அல்ல. மும்பையில் 168 உயிர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் அஜ்மல் கசாப்தான். அவனைப் பிடிக்க ஒரு காவலர் உயிர்த்தியாகம் செய்தார். சாதாரண கைத்தடியுடன் .கே.47 உடன் காரி்ல் சென்றுக் கொண்டிருந்த கசாப்பை அவர் மடக்கினார்.
கசாப்புக்கு சிறையில் நான்கைந்து வருடம் வைத்து விசாரணை நடத்திய போது அவனுக்கு பிரியாணி போட்டே பல லட்சம் ரூபாய் செலவானது பாதுகாப்புக்காக பலகோடிகள் செலவானது. ஒரு கொடிய குற்றவாளிக்கு இத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா என்றும் கேள்வி எழுந்தது.
திடீரென ஒருநாள் அதிகாலை புனே ஏரவாடி சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான். அந்த செய்தியை ஜிடிவி என்ற தமிழ்த் தொலைக்காட்சி சேனலுக்காக எழுதி அதை உலகிற்கு தெரிவிக்க முதன் முதலாக வெளியிட்ட நாள் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.அதை நான் போட்ட பிறகுதான் சி.என்.என்-ஐபிஎன் உள்பட பல செய்தி சேனல்கள் பிளாஷ் நியூசாக அடித்தன

கசாப்பின் மரண தண்டனை நியாயமானதுதான் என்பதை மறுப்பவர் அதிகமில்லை. பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் மறுக்கலாம். அதே போன்று கோயமுத்தூரில் குழந்தைகளை கடத்திச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபின் இருவரையும் கொன்ற கொடியவர்களில் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போது அதை எதிர்த்தவர் யாருமில்லை. மானசீகமாக போலீசாரை பாராட்டியவர்களே அதிகம்.
பிறந்த கணத்தை எழுதி விட்ட இறைவன்தான் நமது இறப்பையும் அந்த கண்ணுக்குத் தெரியாத மர்ம நொடியையும் எழுதி வைத்து விட்டான். பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருப்பதென்பது மெய்தானே என கவிஞர் வைரமுத்துவும் எழுதி வைத்தார்.
இறப்பை சட்டம் தீர்மானிப்பதா என்பது தான் கேள்வி. அவரவர் பதில்அவரவர்க்கு. அடுத்தவரின் உயிருக்கு மதிப்பளிக்க தெரியாத குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நியாயங்களை வாதங்களால் அழித்துவிட முடியாது.
நீதி வேறாக இருப்பினும் நியாயங்கள் மாறாதவை


 jagdishshahri @gmail.com

 

 
 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...