Wednesday 22 July 2020

அஞ்சலி -கோவை ஞானி

தமிழுக்கு என் வணக்கம் கோவை ஞானிக்கு அஞ்சலி - செந்தூரம் ஜெகதீஷ் கோயமுத்தூருக்கு நைட்டியும் சுடிதாரும் விற்பதற்கு கடை கடையாக செல்லும் பணியின் நிமித்தமாக அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். அது தொண்ணூறுகளின் இடைக்காலம். கோவையில் உறவினர்கள் இருந்ததால் தங்குவதற்கு சிக்கல் இல்லை என்று கூடுதலாக ஓரிருநாட்கள் தங்குவேன். அப்போது இலக்கிய அமுதசுரபியாக இருந்த விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள், சிற்றிதழ்கள் வாங்குவேன். அதில் ஒரு இதழ் நிகழ். ஆசிரியர் கி.பழனிசாமி முகவரி காளீஸ்வரன்நகர் காட்டூர். விசாரித்த போது சில நண்பர்கள் அழைத்துப் போனார்கள். ஒற்றைப் படிக்கட்டு ஏறி முதல் மாடியில் மேலே போனால் ஒரு சிறு அறை. அறை முழுக்க புத்தகங்கள். முற்றம் தள்ளி ஒரு வீடு. வீடு என்பதால் அங்கு ஒரு புத்தகமும் இல்லை. அந்த வீட்டுக்குள் பலர் போயிருக்கவும் மாட்டார்கள்.ஆனால் பழக்கம் ஏற்பட்ட பின்னர் உரிமையுடன் அந்த வீட்டுக்குள்ளும் ஞானி அய்யா என்னை அனுமதித்தார். பல முறை அவர் திருமதி எனக்கும் இட்லியும் காபியும் கொடுத்திருக்கிறார். அவர் மகனும் என்னுடன் பேசுவார். சில நாட்களில் ஞானியின் குடும்பத்தினருள் ஒருவராக ஆகிப்போனேன். அவருக்கு புத்தகம் படித்து காட்டுவது, நிகழ் பணிகளில் படைப்புகளைத் தேர்வு செய்வது, புதிய புத்தகங்களைப் பற்றி அவருக்கு தெரியப்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. நிகழ் பணியில் நான் கூட இருந்த போது தேர்வு செய்து சில படைப்புகளை வெளியிட்டோம். அதில் ஒன்றுதான் மனுஷ்யப்புத்திரனின் கால்களின் ஆல்பம் என்ற புகழ் பெற்ற கவிதை. அக்கவிதையை சுஜாதா எடுத்துக்காட்டிய பின்னர் மனுஷ் பிரபலமானார். அதற்கு முன்பு அவர் மணிமேகலை பிரசுரமாக ஒரு மரபுக் கவிதை நூலை மட்டும் வெளியிட்டிருந்ததாக நினைவு. புத்தகங்கள் படித்து விமர்சனம் எழுதிக் கொடுப்பேன். நானும் மார்க்சீயத்தை ஓரளவு முறைப்படி கற்றுத் தேர்ந்திருந்தேன். எனவே ஞானிக்கு என் மீது கூடுதலான பிரியம் இருந்தது. நிறைய படிக்கிறவனாகவும் அவர் என்னை புரிந்துக் கொண்டதன் விளைவாக தன்னுடன் அதிக நேரம் இருக்கும்படி கேட்டுக் கொள்வார். எல்லாவற்றையும் மார்க்சீய மெய்யியல் என்ற ஒற்றைக் கோட்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்று ஞானி என்னுடன் உரையாடுவார். கடவுள் நம்பிக்கையை எப்படி அய்யா மார்க்சீயத்துக்கு உட்படுத்த இயலும் என்று கேட்பேன் .அதையும் மார்க்சீய மெய்யியலுக்குள் கொண்டு வரலாம் என்று உரைப்பார் ஞானி. அந்தவகையில் தமிழில் அவர் தான் எனக்கு நேரடியான ஆசான். ஒரு முறை இந்தியா டுடே நடத்திய கலந்துரையாடலுக்காக அவர் சென்னை வந்திருந்தார். இதழின் ஆசிரியரான வாஸந்தி ஞானி தங்குவதற்காக அறை போட்டு கொடுத்திருந்தார். ஆனால் அவர் ரயிலில் இருந்து இறங்கியதும் என் கையைப் பிடித்தபடி என் வீட்டுக்கு வந்து விட்டார். இரவில் சில நண்பர்களும் ஞானி அய்யாவை சந்திக்க வந்துவிட்டனர். விடிய விடிய இலக்கிய அரட்டைதான். என் மனைவியுடன் அன்புடன் பேசி உன் வீட்டுக்காரை எப்படிம்மா சகிச்சுக்கறே என்றார். உங்க மனைவி உங்களை சகிச்சுக்கிட்ட மாதிரிதான் என்று கூறிய பதில் கேட்டு கலகலவென சிரித்தார். அப்போது செல்போன்கள் இல்லை. வீட்டில் லேண்ட் லைனும் கிடையாது. ஒரு அறைதான். அதுவே கூடம். அதுவே முழுவீடு. ஆனால் அசௌரியகங்களை அவர் பொருட்படுத்தவில்லை. இடையில் வாஸந்தி ஞானி எங்கே போனார் என பலரிடம் கேட்டு ஒருவழியாக என்வீட்டில் இருப்பதை அறிந்து -யார் இந்த செந்தூரம் ஜெகதீஷ் - அவரைப் போன்ற பெரிய பத்திரிகையின் ஆசிரியரான பெரிய எழுத்தாளருக்கு நிகழில் எழுதக் கூடிய எழுத்தாளனை எப்படி தெரியும் - யார் இந்த செந்தூரம் ஜெகதீஷ் என்று ஆத்திரத்தில் வெடித்தார். ஒரு வழியாக என் வீட்டுக்கு பக்கத்து வீட்டு நம்பரை பெற்று அங்கு போன் செய்து ஞானியை அழைத்தார் வாஸந்தி. பேசிவிட்டு வந்த ஞானியிடம் அய்யா உங்கள் மீது வாஸந்தி ரோபமாக இருப்பாங்களே என்று கேட்டேன். ஆமாம் ஜெகதீஷ். ரூம் போட்டுக் கொடுத்திருக்காங்க நான் இங்கே உங்க வீட்டுக்கு வந்தது சுத்தமாகப் பிடிக்கலே. யார் இந்த ஜெகதீஷ்னு கேட்டாங்க....என்னை விட இந்தியா டுடேயைவிட ஜெகதீஷ் வீடு முக்கியமான்னும் கேட்டாங்க.....ஆமாம் முக்கியம்தான் என்று கூறிவிட்டேன். நாளை கலந்துரையாடலில் வரவேண்டாம் என்று சொன்னால் கூட கவலையில்லை என்றும் கூறிவிட்டேன் என்றார் ஞானி. மறுநாள் என்னையும் அழைத்துத்தான் இந்தியா டுடே கலந்துரையாடலுக்கு போனார் ஞானி. பிரபஞ்சன், சாரு நிவேதிதா போன்றோரும் அதில் பங்கேற்றனர். என்னை கலந்துரையாடலில் பங்கேற்க விடாமல் ஓரமாக ஞானியின் உதவியாளராகவே உட்கார வைத்து விட்டார் வாஸந்தி.ஆனால் அப்புறம் ஞானியும் நானும் வாஸந்தி வீட்டுக்குச் சென்ற போது நன்றாகவே உபசரித்தார். -------------- என் கவிதை நூலான இன்னும் மிச்சமிருப்பவைக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையின் சரடு ஒன்று எனது கவிதைக்குள் ளும் ஓடுகிறது என்பது அவருடைய முக்கியமான விமர்சன வரி. கிடங்குத் தெருவை படிக்க வைத்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை நான் எழுதியிருக்கக்கூடாது என்பது போன்ற அன்பும் அக்கறையும் தொனித்த விமர்சனம் அது. சில தனிப்பட்ட நபர்களால் அதை நான் பிரசுரம் செய்யவில்லை. . ஒன்று நான் எழுத வேண்டும்.அல்லது தற்கொலை செய்ய வேண்டும்.நான் இரண்டாவது வாய்ப்பை மூன்று நான்கு முறை தேர்வு செய்து தோற்றுவிட்ட பின்னர் முதல் வாய்ப்பைத் தேர்வு செய்தேன். அது ஞானிக்குப் புரியும். அந்த புத்தகம் அதிகமாக காயப்படுத்தியிருந்தது என்னைத்தான். அவர் வேறு சிலரை எண்ணியிருக்கலாம். ------------------ ஞானியுடன் என் சந்திப்புகள் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னர் குறைந்துவிட்டன. காரணம் கோவை போனது குறைந்துவிட்டதுதான். கடந்த டிசம்பர் மாத இறுதியில் கோவை போயிருந்த போது இரண்டு பேரை பார்க்க மனம் துடித்தது. ஒன்று விபத்தில் சிக்கிய என் நண்பர் ஷாராஜை. இன்னொன்று கோவை ஞானியை. என்னிடம் இருந்த நேரமோ ஒன்றரை நாட்கள். ஒரு உறவினரின் வீடு சொத்துரிமை தொடர்பாக எம்.எல்.ஏ. அமைச்சர், தாசில்தாரர் என்று அலைய வேண்டியிருந்தது. உறவினர்களிடம் பத்து நிமிடம் தலைகாட்டி தப்பிவிட வேண்டிய சூழல், இரண்டு நாள் லீவு போட்டு வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. இரண்டு பிரச்சினைகள் கையிருப்பில் பணம் இல்லை. இன்னொரு பிரச்சினை இப்போது கோவை வந்தால் தங்குவதற்கு இடம் இ்லலை. எனவே ஷாராஜையும் பார்க்க முடியாமல் ஞானியையும் சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். அதற்குப் பின் கோவிட் 19 லாக் டவுன்கள் ரயில்கள் ரத்து இப்போது கூட போக முடியாத நிலை. ஞானியின் எழுத்துகள் வாழும். அதனுடன் இனி வாழ்வேன்.

முகேஷ் -துயரமும் துள்ளலும்

முகேஷ் -துயரமும் துள்ளலும் முகமது ரஃபியைத் தவிர இன்னொரு பாடகரைத் தேர்வு செய்ய சொன்னால் அது நிச்சயம் முகேஷ்தான். அவரளவுக்கு யாரும் இத்தனை அடர்த்தியாக பாடியதில்லை. சில சமயங்களில் அவர் முகமது ரஃபியையும் மிஞ்சி விடுகிறார். 1923ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார் முகேஷ். பத்து குழந்தைகளுடைய பெற்றோரின் ஆறாவது பிள்ளை அவர். அவருடைய தந்தை ஒரு பொறியியல் நிபுணர். தாய் இசை ஆசிரியை .பத்தாவது வரை படித்து அரசுப் பணியில் சேர்ந்த முகேஷ் 1946ல் சரளா என்ற பெண்ணை மணந்தார். பணமில்லாமல் அவதிப்பட்டு மனைவியுடன் குடும்ப சுமையை சுமக்க முடியாமல் அல்லாடி அவர் ,5 குழந்தைகளையும் பெற்றார். மோதிலால் என்ற உறவினர் அழைப்பின் பேரில் மும்பைக்கு சென்றார். அங்கு சினிமாவில் வாய்ப்பு தேடிய போது நிர்தோஷ் என்ற படத்தில் பாட அழைக்கப்பட்டார். தாயிடமிருந்து இசையை கற்றதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அக்காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பாடகரான சைகலை பின்பற்றி அவரைப் போலவே சில பாடல்களை முகேஷ் பாடினார். தில் ஜல்தா ஹை என்ற ஒரு பாடல் சைகலையும் மிஞ்சி விட்டது. அந்தப் பாடலுக்கு படத்தில் நடித்தவர் அவர் உறவினர் மோதிலால்தான். பின்னர் ராஜ்கபூருடன் ஏற்பட்ட நட்பு முகேஷின் வாழ்க்கையை மாற்றியது. ஆவாரா, ஆக், ஆஹ, அனாரி, ஸ்ரீ 420 , போன்ற படங்களில் ராஜ்கபூருக்கு முகேஷின் குரல் நிரந்தரமாக பொருந்திப் போனது. பாந்தினி என்ற படத்தில் முகேஷ் பாடிய ஜானே வாலே என்ற பாடல் எழுத்தாளர் நகுலனுக்கு மிகவும் பிடித்த பாடல் .தமது படைப்புகளில் ஜானே வாலேயே நகுலன் அவ்வப்போது குறிப்பிடுவார். 1976ம் ஆண்டில் முகேஷ் காலமாகிவிட்டார் .அப்போது கண்ணீருடன் ராஜ்கபூர் நான் என் குரலை இழந்துவிட்டேன் என்றார். முகேஷின் உதட்டில் இருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் மிகச்சரியான உச்சரிப்புடன் இருந்தது. இதைப் போல் வேறு யாராலும் பாட முடியாது என்று புகழாரம் சூட்டினார் இசை மேதை சலீல் சௌத்ரி. சல் அகேலா என்ற முகேஷின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், எனது கிடங்குத் தெரு நாவலின் இறுதிப் பக்கங்களுக்கு இந்த பாடலே அடித்தளம். இதனைக் கேட்க விரும்பிய தமினினி வசந்தகுமார் என் வீட்டுக்கே வந்து பாடலை கேட்டுவிட்டு சென்றார். அதே போல் தால் மிலே நதிகே ஜல் மே என்ற பாடலைக் கேட்டுவிட்டால் உங்களால் முகேஷை மறக்கவே முடியாது. ஓ மேரே ஆக்கோன் கே பெஹ்லே சப்னே என்று லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடிய தாலாட்டுப் பாடல் ஒரு அற்புதம். லதா மங்கேஷ்கருடன் அவர் பாடிய பல டூயட் பாடல்களும் ஹிட்டாகின. ஆனால் நிஜ வாழ்க்கையில் தமது சொந்த சகோதரனாகவே முகேஷ் மீது பாசம் கொண்டிருந்தார் லதா மங்கேஷ்கர். முகேஷ் அண்ணா என்றுதான் அவரை அழைப்பார். முகேஷின் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று துள்ளல் .இன்னொன்று துயரம். மேரா ஜூத்தா ஹை ஜப்பானி என்ற பாடலில் துள்ளலை காணலாம். டம் டம் டிகா டிகா பாடலும் அதுபோலத்தான். டூயட் பாடல்களிலும் துள்ளி குதித்தோடும் துல்லியமான நீரோடையைப் போல் அவர் குரல் இசையின் மீது வழுக்கிச் சென்றது. ஆனாலும் மனம் முழுவதும் நிறைந்திருப்பவை முகேஷின் துயரப்பாடல்கள்தாம். அத்தனை அடர்த்தியும் ஆழமும் வாழ்வை அதன் மரண விளிம்பு வரை கொண்டு போய் விடுகின்றன. இந்த குரலில் இத்தனை பெரிய துயரம் எப்படி வந்தது என்று வியக்கிறேன். தற்கொலையைக் கூட தூண்டிவிடுமோ என அஞ்சுகிறேன்.வாழ்வின் வெறுமையையும் அபத்தத்தையும் தனிமையையும் துயரையும் முகேஷின் குரல் அபாரமாக பதிவு செய்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு மனநிலையால் தமிழ் மக்கள் பல ஆயிரம் அற்புதமான இந்திப் பாடல்களை இழந்துவிட்டனர். . கலையே அரசியலுக்கு மிகச்சரியான மாற்று . சினிமா பாடல்களுக்காகவாவது மீண்டும் இந்தி திணிப்பு வந்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. ---------------

ஜென் தேநீர் - ஓஷோவும் ஜென்னும் 31-35

ஜென் தேநீர் 31 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT புத்தகத்தைப் பார்க்கலாம்.... தத்துவம் என்ன ஞானம் என்பது என்ன...இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை ஓஷோ விளக்குகிறார். தத்துவம் லாஜிக்கானது. அறிவால் இயங்குவது. அறிவாளியும் ஞானியும் வெவ்வேறு தளத்தில் உள்ளவர்கள் .அறிவு தர்க்கமானது .ஆதாரம் கோருவது. ஞானம் உணர்வது அதனிடம் விளக்கம் இல்லை. " ஒரு ரோஜாப்பூவை ஆய்வு செய்யக் கொடுத்தால் அதனை இழை இழையாகப் பிய்த்துப் போட்டு ஒவ்வொரு இழையையும் ஒவ்வொரு சீசாவுக்குள் போட்டு வைத்து ரசாயனத்தை ஊற்றி அதன் தன்மையை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் அந்த ரோஜாவின் நிறம் மணம், அதன் நடனம் ஆகியவற்றை ஆராய்ச்சியால் காண முடியாது. அதற்கு ஒரு கலைக்கண்ணோட்டம் வேண்டும் " என்கிறார் ஓஷோ. "ரசாயனங்களால் ரோஜாவை அறிய முயற்சித்தால் அங்கு ரசாயனம்தான் இருக்கும் ரோஜா இருக்காது என்பார். ரோஜாவை அழித்துவிட்டால் அதன் நறுமணம், நிறம் யாவும் கண்ணுக்குப் புலப்படாத எங்கேயோ போய் மறைந்துவிடும். " " ஒருநடனக் கலைஞரை உடற்கூறாய்வு செய்தால் அவரிடமிருந்து எலும்புகள் கிடைக்கும்.அவர் உடலில் இருந்து சதையும் ரத்தமும் நரம்புகளும் கிடைக்கும். ஆனால் அந்த நடனம் கிடைக்குமா? அவருடைய கழுத்தை அறுத்துப் பரிசோதனை செய்தால் அந்தப் பாடல் கிடைக்குமா? " அறிவு என்பது திரட்டப்பட்ட குப்பை. அதை பிறரிடமிருந்து நீ பெற்றாய். ஆனால் மேதைமை என்பது உன்னுள்ளே இருப்பது. உன்னில் இருந்து எழுவது. மேதைமை என்பது உன் அன்பின் நிழல்தான் என்றும் ஓஷோ கூறுகிறார். நீ அன்பானவனாக இருந்தால் தானாகவே உன்னுள் மேதைமை எழும். நீ மேதையாக இருந்தால் தானாகவே உன்னுள் அன்பு மேலெழும். அன்பும் மேதைமையும் இருக்குமிடத்தில் தான் நடனம் இருக்கும். பாடல் இருக்கும். ஒரு குழந்தையின் வியப்பும் ஆர்வமும் இருக்கும். அறிவும் லாஜிக்கும் ஒன்றாக வளரும். அதே போன்று அன்பும் மேதைமையும் ஒன்றாக வளரும் என்கிறார் ஓஷோ. அறிவு திரட்டப்பட்டது. அது பிச்சைக்காரனின் சாப்பாடு போன்றது. பலர் தூக்கிப் போட்டதை நீ வாங்கிக் கொண்டு வருகிறாய் என்கிறார் ஓஷோ. ஞானம் ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்துவிடுவது. பல ஆண்டுகளாக முயற்சித்தாலும் அடைய முடியாதது. முயற்சியே இல்லாத ஒரு கணத்தில் ஒரு நிகழ் கணத்தில் உன்னையறியாமல் அது நிகழ்ந்துவிடும் என்றும் ஓஷோ கூறுகிறார். புத்தருக்கு இரவின் கடைசி நட்சத்திரம் உதிர்ந்ததைக் கண்டு ஞானம் பிறந்தது. தாவோ அளித் த லாவோட்சுவுக்கு ஒரு மரத்தில் இருந்து இலையைப் பார்க்கும் போது திடீரென ஞானம் உதித்தது. லாவோட்சு மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்வதைக் கண்டார், மெதுவாக மெதுவாக காற்றில் நடனமாடியபடியே அந்த இலை ஒரு பறவையின் சிறகு போல் மெல்ல மெல்ல பூமியை நோக்கி ஸ்லோ மோஷனில் விழுந்துக் கொண்டிருந்ததை ஒரு கணம் கூட தவற விடாமல் பார்த்தபடி தியானத்தில் ஆழ்ந்தார் லாவோட்சு. அந்த இலை தரையை எட்டியதும் மண்ணில் விழுந்ததும் யுரேகா என்று பெருங்குரலெடுத்துக் கத்தினார் லாவோட்சு .அவருக்கு அங்கேயே ஞானம் மலர்ந்தது.மகிழ்ச்சிப் பெருக்கால் அவர் நடனம் ஆடத் தொடங்கி விட்டார். அவருடைய சீசாவுக்குள் அடைபட்டிருந்த வாத்து வெளியே வந்துவிட்டது. ----------- ஒரு குட்டிக் கதை ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர். அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது. அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது. அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள். இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது. ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது. இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .கைதட்டி ரசித்தனர். நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர். இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது. ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர். அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும். ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர். தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது. "நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது. அப்போது அந்த ஊழியர் சொன்னார் .எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம். உன்னை இன்னும் சிங்கம் கணக்கில் சேர்க்கவில்லை. ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம். அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்" எப்படியிருக்கு கதை. நாமும் இப்படித்தான் சிங்கமாக இருந்தும் குரங்குபோல் உணவைப் பெறுகிறோம். ------------- இன்னொரு கதை ஒருமனிதன் வீட்டுக்கு ஒருவர் 24 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொண்டு வந்து டெலிவரி செய்தார். எண்ணெய் வியாபாரம் செய்யும் வீட்டு உரிமையாளருக்கு வியப்பு இத்தனை எண்ணெய் எதற்கு நான் ஆர்டர் செய்யவே இல்லையே... வீட்டில் வளர்த்துவரும் கிளியின் வேலையாகத்தான் இருக்கும் என்று கேட்கிறார் . நீதான் எண்ணெய்யை ஆர்டர் செய்தாயா ? ஆமாம் நீ சொல்வதை திருப்பிச் சொல்லும் பழக்கம் என்னிடம் உள்ளது. நீ பன்னிரண்டு ஆயிரம் லிட்டர் ஆர்டர் செய்தாய். நானும் 12 ஆயிரம் லிட்டர் ஆர்டர் செய்து விட்டேன் என்றது கிளி. இதனால் கோபம் அடைந்த வீட்டுக்காரர் கிளியின் இரண்டு இறக்கைகளையும் விரித்து சுவருடன் சேர்த்து ஆணியடித்து தொங்கப் போட்டு விட்டார். கிளிக்கு தண்டனையளிக்கப்பட்டது. தனது இறகுகளை வலியுடன் விரித்தபடி தண்டனையை அனுபவித்தபடி இருந்த கிளியின் பார்வை வீட்டுக்கு எதிரே இருந்த தேவாலயம் பக்கம் திரும்பியது. அங்கே ஏசு சிலுவையில் இருகைகளையும் விரித்தபடி அறையப்பட்ட கோலத்தை பார்த்தது கிளி. ஏசு மீது அதற்கு பரிதாபம் ஏற்பட்டது. அடப்பாவமே நீயும் பன்னிரண்டாயிரம் லிட்டர் எண்ணெய்யை கூடுதலாக ஆர்டர் செய்துவிட்டாயா ஏசுவே என்று கேட்டது கிளி. -------------------- ஜென் தேநீர் 32 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT மதம் என்பது அபினி என்றார் காரல் மார்க்ஸ். எல்லா மதங்களும் மனிதனுக்கு சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் பொய்யான நம்பிக்கைகளைத் தருகின்றன. அவர்களின் நிகழ்காலத்தைச் சுரண்டுகின்றன. அவன் ஒரு சிந்தனையின் அடிமையாகிறான். வேறு மதங்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை. மற்ற மதவாதிகளை குண்டுவைத்தும் கொல்வான், வாளால் வெட்டியும் சாய்ப்பான், துப்பாக்கியால் சுட்டும் கொல்வான். மதம் மனிதனை பண்படு்ததுவதற்குப் பதிலாக அவனை ரத்த வெறிபிடித்த ஓநாயாகவும் தந்திரம் செய்யும் நரியாகவும் மாற்றுகிறது. உங்கள் மதபோதகர்கள் பலர் ஞானசூனியன்கள் ,தந்திர நரிகள். பணம் புகழ் பெற உங்களை பலியாடு ஆக்குகிறவர்கள் . ஒளிமிக்க ஞானவான்கள் குருநானக், சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரர், ராமகிருஷ்ணர், ரமணர், ஓஷோ, விவேகானந்தர், நாராயண குரு, நடராஜ குரு ,குரு நித்ய சைதன்ய யதி , குணங்குடி மஸ்தான் சாகிபு, போன்ற பலர் இம்மண்ணில் தங்கள் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மதவாதிகளாக இல்லை. அவர்கள் மதங்களை இணைப்பவர்களாகவும் மதநல்லிணக்கத்தை காப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆன்மீக வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, நித்ய சைதன்ய யதி போன்றவர்களிடமிருந்து நீங்கள் பெறும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு புத்துயிர் அளிப்பவை. உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியவை. பைபிள், குரான், பகவத் கீதை. தம்ம பதம், குருகிரந்தம், சூஃபியிசம் போன்றவைகளைப் படிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அதன் நம்பி்க்கைகளுக்கும் ஒருபோதும் விசுவாசமாக இருக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். மதத்தைப் பின்பற்றுங்கள் .நானும் இந்துவாகத்தான் வாழ்கின்றேன். ஆனால் எனக்கு ஏசுவைப் பிடிக்கும். அல்லாவைப் பிடிக்கும். புத்தரையும் பிடிக்கும். காரணம் ஓஷோ. THE GOOSE IS OUT புத்தகத்தில் ஓஷோ காரல் மார்க்சை மேற்கோள் காட்டுகிறார். பொதுவாக மார்க்ஸ்,லெனின், ஸ்டாலின், மாவோ, கம்யூனிசம் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பவான ஓஷோ இந்த புத்தகத்தில் மதம் ஒரு அபின் என்று கூறிய மார்க்சை பாராட்டுகிறார். " காரல் மார்க்ஸ் மதத்தை போதை வஸ்து என்கிறார்.அது உண்மைதான். 99 புள்ளி 9 சதவீதம் உண்மைதான். ஆனால் புள்ளி ஒரு சதவீதம் அது உண்மையில்லை. ஒரு புத்தர், ஒரு ஏசு, ஒரு ஜரதுஷ்ட்டிரர், இவர்களைப் போன்ற ஒரு சிலர் விதிவிலக்குகளாக இந்த புள்ளி ஒரு சதவீதத்தில் அடங்குவர். போதைப் பொருள் என்பது சரியானதுதான். மக்களை போதையில் ஆழ்த்தி அவர்களை தூக்கத்தில் வைத்திருக்க உங்கள் மதவாதிகள் முயற்சிக்கிறார்கள். சகிக்க முடியாத ஒரு உலக வாழ்க்கையை உங்களை சகித்துக் கொள்ள பழக்கப்படுத்துகிறார்கள். எல்லா விதமான அடிமைத்தனங்களையும் பசி பட்டினியையும் நாளைய ஒளிமயமான எதிர்காலத்துக்காக சகித்துக் கொள்ள போதனை செய்கிறார்கள். நாளை அடுத்த பிறவியில் அல்லது சொர்க்கத்தில்தான் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் " ஜென் இன்று இப்பொழுது இக்கணம் என்கிறது. அது உங்கள் ஆனந்த நிலையை தள்ளிப்போடுவதில்லை. இப்போதே அதனை நீங்கள் கண்டடையலாம். அதை தேடவேண்டியதும் இல்லை. அது உங்கள் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகவிழிகளைத் திறந்தால் போதும். உலகம் ஏற்கனவே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அதனை மேலும் பைத்தியமாக மாற்றாதீர்கள் என்கிறார் ஓஷோ. இறுதி இலக்கு எதுவும் இல்லை. வாழ்க்கை எந்த இலக்கை நோக்கியும் செல்வதில்லை. அது இன்று இப்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. "இறுதி இலக்கு என்று எதுவும் இல்லை என்பதை தொடக்கம் முதலே தெள்ளத் தெளிவாக உணர்ந்துக் கொள்ளுங்கள்.இருப்பது எல்லாமே உடனடி நிகழ்வு தான் ( immeadiate ) ultimate என்று எதுவும் இல்லை.யாத்திரையே இலக்குதான். பயணத்தின் ஒவ்வொரு அடியும் இலக்குதான். ஒவ்வொரு நொடியும் இலக்குதான். இதை அறிய அறிவு தேவையில்லை.அறிவு இலக்குகளுக்கான வழிகாட்டிதான். எதையாவது அடைவதற்காகத்தான் அறிவு பயன்படுகிறது.இலக்கற்ற உடனடி வாழ்க்கையை அடைய அறிவு தேவையில்லை. குழந்தையின் வெகுளித்தனம் தேவை.டியோனிசிஸ் குறிப்பிடுவது போன்ற அறியாமையின் ஞான நிலை அது. ஞானி மீண்டும் குழந்தையாகிறான். அவன் கூழாங்கற்களை சேகரிப்பவனாகிறான். கடற்கரையில் கிளிஞ்சல்களைத் தேடி எடுக்கிறான். காட்டு மலர்களைப் பறித்து வருகிறான். அதையெல்லாம் வைத்து அவன் எதுவும் செய்யப் போவதில்லை. அதனை சேகரிப்பது ஒரு ஆனந்தம் .அந்த ஆனந்தத்திற்காகவே அவ்வாறு செய்கின்றான். ------------- ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று ஒரு சூதாட்ட விடுதிக்கு அழகான இளம் பெண் ஒருத்தி மினி ஸ்கர்ட் அணிந்து வருகிறாள். இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கும் ஒரு சூதாட்ட மேஜையில் வந்து அமர்கிறாள். தான் நிறைய பணத்தை சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக புலம்புகிறாள். இளைஞர்கள் இருவருக்கும் அவள் தொடைகளில் கவனம் பாய்கிறது. இத்தனை அழகான வாளிப்பான தொடைகளை இவ்வளவு அருகில் இருந்து அவர்கள் பார்க்கவில்லை. இதை அந்தப் பெண் கவனிக்கிறாள். ஒருபுழுக்கமாக இருக்கிறது என்று தனது பான்டீசை கழற்றுகிறாள். கால் மீது கால் போட்டு தனது உடல் உறுப்பு தெரிவது குறித் த கவலையில்லாமல் சூதாடுகிறாள். அவளுக்கு அதிர்ஷ்ட்டம் வீசுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் வென்று பணத்தை அள்ளிக் கொள்கிறாள். பிறகு தனது உள்ளாடையை எடுத்து அணிந்துக் கொண்டு சென்று விடுகிறாள். இளைஞர்களில் ஒருவன் கேட்கிறான் " அவள் உண்மையில் வென்றுதான் பணத்தை அள்ளிச் சென்றாளா...நீ கவனித்தாயா என்னால் கவனிக்க முடியவில்லை, அவள் கால்கள் அதன் இடுக்குகளில் இருந்து என் பார்வை அகலவே இல்லை " இன்னொரு இளைஞன் கூறுகிறான் " அடப்பாவி ஆட்டத்தை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நானும் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன்." --------------- ஜென் தேநீர் 33 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT புத்தர் தனக்கு பெண் சீடர்களை அனுமதிக்கவில்லை. புத்தர் பெண்கள் பற்றி கொண்டிருந்த அபிப்ராயம் குறித்தும் சர்ச்சைகள் எழுகின்றன. பெண்களுக்கு மெய்ஞானம் வாய்க்காது என்று புத்தர் கருதியதாக சிலர் கூறுகின்றனர். சாமியார்களிடம் சேரும் சிஷ்யைகள் பற்றி சமூகத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை. நித்யானந்தா -ரஞ்சிதா ஆகட்டும் ஓஷோ மா ஷீலா ஆகட்டும் காம களியாட்ட சங்கதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன. விஸ்வாமித்திரனின் தவத்தை கலைத்ததும் ஒரு மேனகைதான். பெண் காமத்தைத் தூண்டுபவளாக பார்க்கப்படுகிறாள். பிரம்மாச்சாரியம் பழகும் துறவிக்கு அவள் இச்சைகளைத் தூண்டுகிறாள். தன் உடலின் அழகைக் காட்டி மயக்கும் மோகினியாக இருக்கிறாள். மகாத்மா காந்திக்கும் தனது அகத்தூய்மையை பரிசோதிக்க இரண்டு பெண்கள் நடுவில் படுக்க வேண்டிய நிலைமை தேவைப்பட்டது. ஆனால் பெண்கள் என்பவர்கள் வெறும் உடல்கள் மட்டும்தானா...அவர்களுக்கும் உள்ளம், அறிவு,ஞானம் என எதுவும் இல்லையா....என்ற கேள்விக்கு பெண்ணியவாதிகளின் கோபங்களைத் தவிர வேறு பதில்கள் இல்லை. பெண் அழகாக உடை உடுத்தினால் அவள் ஆண்களை ஈர்ப்பவளாகிறாள். அழகாக சிரித்து பேசினால் ஓடிப்போய் விடுவாள். தொட்டுப் பழகினால் கற்பை இழந்துவிடுவாள். முத்தம் கொடுப்பது தவறு .உடல் ஒரு புனிதப்பொருள் அல்ல என்று கூறுவது தப்பு. உடலை மீறி அவளால் செயல்பட முடியாது. அவள் உடல்தான் முன்வந்து நிற்கிறது. ஆண் துறவியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் அதில் வீழ்கின்றான். ஓஷோவின் ஆசிரமத்தில் பெண்கள் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தனர். பெண்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கலாமா.... இதைப் பற்றி ஓஷோவின் கருத்துகள் என்ன என்பதை பார்க்கலாம். " நான் நிறைய நிறைய பெண்களுக்குத்தான் பொறுப்புகளைக் கொடுக்க விரும்புகிறேன். நான் இறந்த பின்னரும் எனது இருப்பிடத்தில் பெண்களைத் தான் அதிகளவில் பார்ப்பீர்கள். ஆண்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் . பெண்கள் ஆடுவார்கள். அனைத்து விதமான முட்டாள்தனங்களையும் செய்வார்கள். இந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார்கள் .நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று கூட உங்களுக்குத் தெரியாது ஆண் வானத்தை நோக்கி நகர்பவன். பெண் பூமிக்குள் ஆழமாக வேரூன்றுபவள். உலகின்பல பதவிகளுக்கு பெண்கள் பொறுப்பெடுத்துக் கொண்டால் போர்கள் குறைந்துவிடும். அழகான ஆடைகள் அணிகலன்கள் அதிகரிக்கும். பேஷன் ஷோக்கள் அதிகமாகும். மாடலிங் அதிகமாகும் ஆனால் ஆயுதங்கள் இருக்காது .அணுகுண்டுகள் இருக்காது. ஹைட்ரஜன் குண்டுகள் இருக்காது. எந்தப் பெண்ணுக்கும் இதில் எல்லாம் ஆர்வமே இல்லை. ஆண்தான் இவற்றையெல்லாம் விரும்புகிறான். மத சண்டைகள் குறைந்துவிடும் .ஜிகாத் மறைந்துவிடும். ஆணின் ஈடுபாடுகள் ஆபத்தானவை. அரசியல் மதம் பொருளாதாரம் யாவுமே ஆபத்தானவை." " புத்தர் பெண்களுக்கு எதிராக இருந்தார். அவர் தன்னுடன் பெண்களை சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. தனது சமயம் 5 ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்றால் பெண் சீடர்களை சேர்த்துக் கொள்ளும் போது அது 500 ஆண்டுகளில் மறைந்துவிடும் என்று புத்தர் கருதினார். ஆனால் இறுதியில் பெண்களை சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். என்னுடைய கருத்து என்னவென்றால் பெண்கள் இல்லாவிட்டால் பௌத்தம் 100 ஆண்டுகளுக்குள் காணாமல் போயிருக்கும். புத்தர் இறந்ததும் அவர் சீடர்கள் தத்துவ சண்டைகளில் ஈடுபட்டுவிட்டனர். முப்பத்து இரண்டு பிரிவுகள் உடனடியாக தோன்றின. புத்தரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்பாக அவருடை பௌத்தம் 32 துண்டுகளாக சிதறிவிட்டது. 32 தத்துவ பள்ளிகள் பிறந்துவிட்டன. முப்பத்தி இரண்டு இடைச்செருகல்கள் நிகழ்ந்துவிட்டன. யுத்தம் தொடங்கிவிட்டது. ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருடை 12 முட்டாள் சீடர்களும் மறைந்துவிட்டனர் .காணாமல் போய் விட்டனர். அவர் உடலை மூன்று பெண்கள்தான் சிலுவையில் இருந்து இறக்கி வைத்தனர். ஒரு ஆண் கூட அப்போது அங்கில்லை. மேரி மகதலீன் அங்கிருந்தார். அவர் சகோதரி மார்த்தா அங்கிருந்தார். மார்த்தா ஒரு பாலியல் தொழிலாளி என்பார்கள். ஏசுவின் தாயார் மேரி அங்கிருந்தார். எங்கே போனார்கள் அந்த 12 மூடர்கள்?அவர்கள் வாட்டிகனை நோக்கி போயிருக்கலாம் .எதிர்காலத்தில் கிறித்துவத்தை பரப்புவதற்கு போயிருக்கலாம். ஏசு கதை முடிந்துவிட்டது. இனி இதை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று போயிருக்கலாம். பெண்களுக்கு ஏசுவின் கொள்கைகள் பற்றி கவலையில்லை. அவர்கள் அவர் உடலை எடுத்து அடக்கம் செய்தனர். அவர்கள் உண்மையான பணிவிடை செய்தனர். உண்மையான தொண்டு செய்தனர். அவர்கள் ஏசு என்ற அந்த மனிதரை உண்மையாகவே நேசித்தனர். ஏசுவின் மிகவும் விஷயம் தெரிந்த நம்பகமான சீடன் யூதாஸ் தான் ஏழு வெள்ளிக்காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தான். ஆண் அறிவால் கணக்குப் போட்டு வாழ்கின்றான் .பெண் தன் இதயத்தால் வாழ்கிறாள். பெண்தான் வாழ்க்கையின் வேர். ஆண் அதிகபட்சமாக ஒரு கிளையாக முடியும். பூக்கள் பூக்கும் கிளையாக இருக்க முடியும். அழகான கிளையாக இருக்க முடியும். வானத்து நட்சத்திரங்களைத் தொட்டு விட கைகளை நீளும் கிளையாக இருக்க முடியும். ஆனால் பெண்தான் வேராக இருப்பாள்" என்கிறார் ஓஷோ. பெண்களால் தான் விடுதலை கிடைக்கும் என்றும் ஓஷோ கூறுகிறார். சீசாவுக்குள் அடைபட்ட வாத்து வெளியே வர பெண்ணின் உதவி தேவை என்கிறார் அவர் .ஞானத்தைப்பெற பல்கலைக்கழகங்களில் படிப்பது பயன்தராது. அதற்கு முற்றிலும் வேறுவகையான அணுகுமுறை தேவை. அறிவு என்பது மனத்துக்குரியது. மனம் தான் பாட்டிலை உருவாக்கி அதற்குள் வாத்தை அடைத்து வைக்கிறது. மெய்ஞானம் மனமற்றுப் போகும் நிலை. அது வாத்தை வெளியேற்றி விடும். அறிவு பாட்டிலுக்குள் வாத்தை வரைந்து அதன் அழகை ரசிக்கும். ஆனால் அது வெறும் பாட்டில்தான் .அதில் வாத்துகிடையாது. உண்மையான வாத்து பாட்டிலுக்குள் வாழ முடியாது. அதில் நீ வாத்தைப் போட்டு திணிக்கிறாய். உங்கள் கல்வியாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள். பாட்டிலுக்குள் வாத்தை ஒரு உருளைக்கிழங்கு போல திணிக்கிறார்கள், அல்லது வாத்து ஓவியத்தை வரைகிறார்கள், அது பார்ப்பதற்கு அழகாக தெரியலாம், ஆனால் நீ வெறும் பாட்டிலைத்தான் எடுத்துச் செல்கிறாய். அதன் பின் அந்த பாட்டில் கனமாகி விடுகிறது. அறிவு தன்னை வளர்த்துக் கொண்டே செல்லும் இயல்புடையது. அது வளர வளர வாத்து பெரிதாகி பாட்டிலை விட்டுவெளியே வரமுடியாமல் சிக்கிக் கொள்கிறது. " என்றும் ஓஷோ விளக்குகிறார். "எதற்காக பல்கலைக்கழகங்கள் கொடுத்த இத்தனைப் பட்டங்களை நான் சுமந்து திரிகிறேன் என்று டாக்டர் பிரீத்தம் சிங் என்னிடம் கேட்கிறார். அதை தூக்கியெறிந்து வெளியே வாருங்கள். நீங்கள் சேகரித்து வைத்துள்ள அறிவு முழுவதும் குப்பை என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள் . வெளியேறுங்கள். மனத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அக்கணமே உங்கள் வாத்தும் பாட்டிலை விட்டு வெளியேறி விடும் .அது தான் சுதந்திரம். அதற்கு வானமே எல்லை. " என்றும் ஓஷோ கூறுகிறார். ---------- ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று ஒரு விபச்சார விடுதியில் பல அழகான பெண்கள் இருந்தனர். வாடிக்கையாளர்களுக்காக மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டன. முதல் தளத்தில் நடிகைகள், அழகிகள், இளம் பெண்கள் இருந்தனர். இரண்டாம் மாடியில் மாடல் அழகிகள் , நடன அழகிகள் மூன்றாம் மாடியில் புத்திசாலித்தனமான பெண்களை விரும்பும் ஆண்களுக்காக ஆசிரியைகள் பாலியல் தொழிலுக்கு அழைத்து வரப்பட்டனர். வாடிக்கையாளர்கள் அழகான பெண்களை விட்டு விட்டு பெரும்பாலும் மூன்றாம் மாடிக்கே போக விரும்பினர். இந்த விஷயம் விடுதியின் தலைவிக்குப் புரியவில்லை. கீழ்தளத்தில் இத்தனை அழகிகள் இருக்கும் போது மூன்றாவது மாடிக்கு ஆண்கள் செல்வது ஏன் என்று புரியாமல் ஒரு வாடிக்கையாளரிடம் கேட்டாள். அந்த வாடிக்கையாளர் காரணத்தைக் கூறினார். பள்ளி ஆசிரியைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா ஒரு விஷயத்தை சரியாக செய்யாமல் விட்டால் மீண்டும் மீண்டும் செய்ய வைப்பார்கள் . அது கணக்காக இருந்தாலும் சரி கலவியாக இருந்தாலும் சரி " ----------- இன்னொரு குட்டிக் கதை ஒரு உணவகத்தில் பெண் பணியாளர் ஒருவர் சப்ளை செய்யும் போது வித்தியாசமாக நடந்துக் கொள்வதை வாடிக்கையாளர் கவனித்தார் முட்டை சூப் கொண்டு வரும் போது அந்தப் பெண்ணின் கட்டை விரல் சூப்புக்குள் இருந்தது. அதே போல் காபி கொண்டு வரும் போதும் அந்தப் பெண்ணின் கட்டை விரல் காபிக்குள் இருந்தது. இதனால் எரிச்சலைடந்த வாடிக்கையாளர் நாங்கள் சாப்பிடும் உணவில் விரலை வைக்கலாமா என கோபமாக கேட்டார். மன்னிக்கவும் என் கட்டை விரலில் வெடிப்பு இருக்கிறது. வெதுவெதுப்பான சூட்டில் கட்டைவிரலை வைத்தால் ஆறுதலாக இருக்கிறது என்றாள் அந்த பணிப்பெண். போய் உன் பின்பக்க புட்டத்தில் விரலை விடு .இன்னும் சூடாக இருக்கும். என்று கத்தினார் அந்த வாடிக்கையாளர் சமையலறையில் அப்படித்தான் வைத்திருப்பேன். அப்புறம்தான் உணவை எடுத்து வரும்போது உணவுக்குள் வைத்திருப்பேன் என்றாள் அவள். --------------- இன்னொரு கதை ஒரு கணவரும் மனைவியும் பூங்காவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காளை மாடு சீற்றத்துடன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. டார்லிங் என்றான் கணவன். "அந்த காளை மாடு முட்டிமோதுவதற்காக நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்" அய்யோ என்று அலறினாள் மனைவி. என்ன செய்யலாம்....என்றும் கேட்டாள் நான் நான்கு காலில் மண்டியிட்டு புல்லைத் தின்னப் போகிறேன். நீ எப்படியாவது உன்னைக் காப்பாற்றிக் கொள் " என்றான் கணவன். -------------------- ஜென் தேநீர் 34 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT ஓஷோ ஜென் பற்றி உரை நிகழ்த்தியவை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. புதிய வாசகர்களுக்காக முதலில் எளிய புத்தகங்களை வரிசையாய் அறிமுகம் செய்து வருகிறேன். இந்த நூலில் சீசாவுக்குள் அடைபட்ட வாத்தை வெளியேற்றும் வித்தையை ஓஷோ விளக்குவதைக் கண்டோம். இனி இதர பகுதிகளையும் காண்போம். பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வித்தியாசம் என்று ஓஷோ விளக்குகிறார். பிரார்த்தனை கூட்டாக செய்வது. பல பேர் கூடி பஜனை பாடுவார்கள். ஆனால் தியானம் என்பது தனிமையில் நிகழ்வது. ஓஷோ கூறுவதை கேட்போம்.. " தியானம் எல்லாவற்றையும் விளக்கமற்றதாக்கி விடுகிறது. தியானம் திட்டமிடப்படாத அறியாத ஓரிடத்திற்கு அழைத்துச் செல்கிறது. தியானம் மெல்ல மெல்ல உன்னை கரைத்து காண்பவரையும் காட்சியையும் ஒன்றாக்கி விடுகிறது.இது அறிவியலில் சாத்தியமற்றது.அறிவியலில் பார்வையாளர் பார்வையாளராகவே இருக்க வேண்டும். காட்சி காட்சியாகவே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் தெள்ளத் தெளிவான இடைவெளி இருக்க வேண்டும்.ஒரு கணத்துக்கு கூட நீ உன்னை மறந்துவிடக் கூடாது .உனது ஆராய்ச்சியில் உணர்வுபூர்வமாக கலந்து கரைந்துப் போய் விடக்கூடாது.அதன் மீது அன்பு செலுத்தக் கூடாது.அதிலிருந்து நீ விலகியே இருக்க வேண்டும். நீ சுடச்சுட இருக்காமல் உறைந்துப் போனவனாக இருக்க வேண்டும். இதனால் அறிவியல் மாயத்தன்மையைக் கொன்று விடுகிறது. தியானத்திற்கும் மனத்துக்கும் இடையே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பெயர்தான் இதயம். எனவே தான் கவிஞர்கள் நட்சத்திர உலகத்தில் வாழ்கின்றார்கள்.கவிஞனுக்குள் சில அம்சங்கள் அறிவியலாக இருக்கின்றன. சில அம்சங்கள் மாயத்தன்மையுடன் இருக்கின்றன..இரு வேறு துருவங்களில் வாழ்வதனால் கவிஞனுக்கு அதில் அதிகமான படபடப்பு ஏற்படுவது இயல்புதான். இதனால் கவிஞர்கள் பித்தர்களாகிறார்கள் .( பித்தனாயிருக்க அருள்வாய் -ந.பிச்சமூர்த்தி ) தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ( ஆத்மா நாம், சில்வியா பிளாத் , சாதனா ) கவிஞர்களை எப்போதுமே பைத்தியக்காரர்கள் என்றே அழைப்பார்கள்.அவர்கள் பித்த நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் இருவேறு நிலைகளில் இருப்பார்கள். ஆனால் எதிலும் நிலை கொள்ளாமல் இருப்பார்கள். அவர்கள் நிகழ் உலகிலும் வசிக்க மாட்டார்கள். இருத்தலியல் உலகிலும் இருக்க அவர்களால் முடியாது. கவிஞனுக்கு மாயத்தன்மையின் சில ருசிகள் தெரிந்திருக்கும்.அதுவும் மிக மிக அபூர்வமாக வந்து போய் விடும்.ஞானம் அடைந்தவர் அந்த மாயத்தன்மையில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். கவிஞன் அங்கு வந்து போய் விடுபவனாக இருக்கின்றான்.அவன் அதில் குதித்து அதன் ஆனந்தத்தை அடைந்து விடுவான் . எகிறி குதிப்பவன் புவி ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபடுகிறான். சில கணங்கள் குதித்தலின் ஆனந்தத்தைப் பெறுகின்றான். மீண்டும் புவி ஈர்ப்பு சக்தியால இழுக்கப்பட்டு தரையில் கால் பதிக்கிறான். கவிதை என்பது ஒரு வகை குதித்தல் . தத்தி தாவி எழுதல் .ஏதோ ஒரு கணத்தில் நீ வானத்தில் இருப்பதைப் போல் உணர்கிறாய். உனக்கு இரண்டு சிறகுகள் முளைத்தது போல் இருக்கும். ஆனால் அது கணப்பொழுதுதான். கவிஞன் மீண்டும் மீண்டும் சிகரங்களைத் தொட்டு கீழே விழுந்துவிடுகின்றான். இதனால் அவன் வேதனை அடைகின்றான். அவன் சிகரத்தின் சில காட்சிகளைக் கண்டவனாகிறான். ஆனால் சில நொடிகளில் சில நிமிடங்களில் அவன் மீண்டும் பூமிக்கு வந்துவிடுகின்றான். ஆனால் ஞானிகள் அந்த சிகரத்தில் வசிக்கிறார்கள். " மாயத்தன்மையால் தான் உலகம் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது என்பார் ஓஷோ. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் அறிய முடியாது. ரீவைண்ட் செய்து கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க நம்மால் முடியும். ஆனால் ஒரு போதும் பாஸ்ட் பார்வர்ட் செய்து எதிர்காலத்தைப் பார்க்க இயலாது. ஏன் அடுத்த நொடியைக் கூடப் பார்க்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் மர்மத்தன்மை. " மனமும் மாயத்தன்மையும் ஒன்றாக இருக்க முடியாது .இயற்கையிலேயே அவை இரண்டும் ஒன்றாக இருக்க முடியாதவை.இருளும் ஒளியும் போல, வெளிச்சம் வந்தால் இருட்டு போய் விடும். விளக்கை அணைத்தால் இருட்டு வந்துவிடும். ஏதாவது ஒன்றைத் தான் பெற முடியும் .இரண்டும் ஒன்றாக இருக்க இயலாது.இருள் என்பது ஒளியின் இன்மை" என்கிறார் ஓஷோ ( இருள் என்பது குறைந்த ஒளி -பாரதி ) --------- போதி தர்மர் ஞானம் அடைந்த போது ஏழு நாட்களுக்கு அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.சிரித்துக் கொண்டே இருந்தார். மீண்டும் மீண்டும் அவர் சிரிப்பதைக் கண்ட சீடர்கள் புரியாமல் திகைத்து நின்றனர். ஏழு நாட்களுக்குப் பிறகே அவர் சிரிப்பு நின்றது. ஏன் இத்தனை சிரிப்பு என்று சீடர்கள் கேட்டனர். போதி தர்மர் சொன்னார் எல்லாவற்றிலும் உள்ள அபத்தத்தைப் பார்த்து சிரித்தேன். " இது ஒரு பெரும் தரிசனம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்கள் , பிரச்சினைகள் அதனால் நமக்கு மனத்துக்குள் ஏற்படும் துயரங்கள் இவற்றை தூர இருந்து பார்த்து சிரிக்கக் கற்றுக் கொண்டால் அவை அத்தனையும் காணாமல் போய் விடுகின்றன. ஒரு முறை நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். சென்னையின் புட்லூர் கோவில் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இறங்கினேன். ஏராளமான ரயில்கள் வந்தும் போய்க் கொண்டும் இருந்தன. கோவிலுக்குப் போய் வந்தேன். சோடா வாங்கி தாகத்தை தணித்தேன். பின்னர் ரயில் நிலையத்தைத் தள்ளி இருந்த மண் பாதையில் நடக்கலானேன். சிறிது தூரம் நடந்தேன் .அக்கம் பக்கம் யாருமில்லை .உச்சி வெய்யில் நேரம். இதுதான் சரியான இடம் என தீர்மானித்துக் கொண்டேன். கையைப் பிடித்து இழுத்து யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள். நிம்மதியாக சாகலாம் என்று முடிவெடுத்தேன். திடீரென பொங்கிய அழுகை வந்தது. ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. அங்கிருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தேன். அழுதுக் கொண்டே இருந்தேன். நீண்ட நேரம் அழுகை நிற்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நினைத்துக் கொண்டேன். தவிர்க்கமுடியாமல் அதன் இனிய தருணங்களும் அதனுடன் வந்தன. இரண்டும் கலந்து வந்தன. குழப்பம் அடைந்தேன். அழுகை நின்றது. ரயில் தண்டவாளத்தில் தூரத்தில் ரயில வருவதைப் பார்த்து எழுந்து தண்டவாளத்தின் நடுவில் போய் அமர்ந்தேன். வெய்யில் சுட்டது. ரயில் என்னை நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் என் கதை முடியப் போகிறது. ரத்தமும் சதைக் கோளமுமாக சிதறப் போகிறேன். சட்டென யாரோ கையைப் பிடித்து இழுத்தார்கள் .அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஒருவரும்இல்லை. புட்லூர் அம்மன் வந்து கையைப் பிடித்தாளா தெரியவில்லை .அது ஒரு பெண்ணின் கையைப் போலும் இல்லை. ஏதோ ஒரு அரூபமான கை. காண முடியாத ஒரு கை என்னை இழுத்தது. என் வாழ்வில் துன்பங்களுடன் இருந்த இன்பங்களின் கையாக இருக்கலாம். எதுவோ என்னை இழுத்தது. சட்டென விலக ரயிலின் காற்று என் முகத்தில் பட்டு தடதடவென ரயில் நகர்ந்து விட்டது. அடுத்த நிமிடத்தில் தெளிவு பெற்றுவிட்டேன் ,வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ரயில் நிலையம் நோக்கி நடந்து அடுத்த ரயிலில் வீடு திரும்பி விட்டேன். இது ஒரு கணம்நேர முடிவு. கண நேர தியானம் என் உயிரைக் காப்பாற்றியது. கண நேரம் நான் நானாக இல்லாமல் இருந்தது என்னை மீட்டுக் கொடுத்தது. இப்போது நினைத்தால் அது அபத்தமானதாக தெரிகிறது .சிரிப்பு வருகிறது. அப்போது அது துன்பம். ------------- போதி தர்மருக்கும் வாழ்க்கையின் அபத்தங்களைக் கண்டு சிரிப்பு வந்தது. ஏழு நாட்கள் விடாமல் சிரி்த்து முடித்தார். ஓஷோ கூறுகிறார் " யார் ஞானம் அடைந்தவர் யார் ஞானம் அடையாதவர் என்று உங்களைப் பிரி்த்துப் பேசமாட்டேன். நீங்கள் ஞானத்தைப் புரிந்துக் கொள்வதற்கு எளிமையான உங்களுக்கு ஒளியாகக் கூடிய ஒன்றையே தருகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் சாடோ மாஸோகிஸ்ட்டுகள் ஒருபோதும் ஞானம் அடைய முடியாது" என்கிறார் ஓஷோ. யார் சாடிஸ்ட் யார் மாசோகிஸ்ட் என்பது தெரியுமா? சாடிஸ்ட் என்பவன் அடுத்தவன் துன்பத்தைக் கண்டு இன்பம் அடைபவன். சாத்தான் குளம் காவல்துறையினர் சமீபத்திய உதாரணம். மாஸோகிஸ்ட் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு இன்பம் காண்பவன், இருவரும் ஒரு முறை சந்தித்தனர். என்னை அடி என்றான் மாஸோகிஸ்ட் என்னால் முடியாது என்றான் சாடிஸ்ட் --------------------- " ஞானம் என்பது பேரானந்த நிலை . அது சீரியஸானதாக இருக்க முடியாது. அது உண்மையானதாக இருக்கும். ஆனால் சீரியஸானதாக இருக்காது ( SINCERE BUT NOT SERIOUS) ஞானம் என்பது சுத்தமான மகிழ்ச்சி. தூய்மையான ஆனந்தம்." என்கிறார் ஓஷோ. ஒரு குட்டிக் கதை ஒரு கிளி அடிக்கடி ஹிட்லர் வாழ்க என்று கத்திக் கொண்டிருந்தது .இதனால் கோபம் கொண்ட அதன் உரிமையாளர் அதனை சோறு தண்ணீ இல்லாமல் ஒரு கூண்டில் போட்டு அடைத்துவிட்டார். பின்னர் அதனை கொண்டு போய் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு நடுவில் விட்டு விட்டார். ஒரு சேவல் வந்து கிளியிடம் பேச்சுக் கொடுத்தது. உன் எஜமான் எதற்காக உனக்கு தண்டனை கொடுத்தார். இங்கே எதற்காக அழைத்து வந்தார் என்று கூறு. சரியான பதிலை சொன்னால் நான் வைப்பாக வைத்திருக்கும் நான்கு கோழிகளை உனக்குப் பரிசாகத் தருகிறேன். " கிளி கோபமாக கத்தியது " என்னைத் தனியாக இருக்கவிடு .நான் ஒரு அரசியல் கைதி " -------------- வாழ்க்கை என்பது சிரித்து ரசிக்கத்தக்கது என்கிறார் ஓஷோ. அதன் அபத்தங்களை எண்ணி எண்ணி சிரிக்கலாம். உன் உடலில் ரஸவாதம் முற்றிலுமாக வற்றி விட்டால் தான் நீ சீரியஸான மனிதனாக இருப்பாய். வாத்து எப்போதும் சீசாவுக்கு வெளியே தான் உள்ளது. அதை ஏன் சீசாவுக்குள் போட்டு அடைத்து பின் அதனை வெளியே எடுக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறாய் என்று கேட்கிறார் ஓஷோ. செய்யத் தேவையில்லாத ஒரு செயலுக்காக இந்த உலகம் இத்தனை போராடிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணியே நான் சிரிக்கிறேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன் என்கிறார் ஓஷோ. --------------------- ஜென் தேநீர் 35 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT இந்த புத்தகத்தில் புத்தரைப் பற்றி ஓரிடத்தில் ஓஷோ கூறுவதை கவனிப்போம்..." புத்தர் பிறப்பு ஒரு மாயம் என்றார். இளமை ஒரு மாயம் என்றார்.முதுமை ஒரு மாயம் என்றார் .மரணமும் ஒரு மாயை என்றார்.வாழ்க்கையின் அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் நீண்டதொரு துயரம் அது .நீங்கள் கொள்கைகளுடன் வாழ்க்கையை நடத்தினால் இது முற்றிலும் உண்மை என்பதற்கு நடமாடும் உதாரணமாக இருப்பீர்கள். ஆனால் நான் பிறப்பு மாயமில்லை என்கிறேன், வாழ்க்கை மாயமில்லை என்கிறேன். இதில் நான் புத்தருடன் உடன்படவே மாட்டேன். வாழ்க்கை ஒரு மாயமாக இருப்பதற்கு காரணமே நீதான். இல்லாவிட்டால் அது ஒரு பேரானந்தம். ஆனால் அந்த ஆனந்தத்தை உணர நீ உன் இதயத்தைத் திறந்து வைக்க வேண்டும். உன் கைகளைத் திறந்து வைக்க வேண்டும். கைகளை மூடிக்கொண்டு வாழ்க்கையை அணுகாதீர்கள்.கைகளைத் திறந்துவிடுங்கள். மிகுந்த வெகுளித்தன்மையுடன் வாழ்க்கையை அணுகுங்கள்." மனம் ஒரு ஸ்பாஞ்ச் போல கொள்கைகளை உறிஞ்சி கடைசியில் அது இதற்கு மேல் உறிஞ்சமுடியாமல் சிக்கிக் கொள்கிறது என்றும் ஓஷோ கூறுகிறார். வாழ்க்கையை திறந்த மனத்துடன் திறந்த கைகளுடன் வாழுங்கள். வெகுளியாய் வாழுங்கள் என்று ஓஷோ கூறுகிறார். திறந்த மனம் கொண்ட மனிதன் தன்னை பிறர்க்குத் தருபவன். அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. கைகளை மூடி மறைப்பவன் கருமி. சுயநலவாதி. தன் கையில் இருப்பதை மறைக்காமல் பகிர்பவனே மனிதாபிமானி. வான்கோ என்ற மாபெரும் ஓவியக் கலைஞர் பற்றிய ஒரு கதை... வான்கோ வின் ஒரு ஓவியம் கூட விற்பனையாகவில்லை. ஆனாலும் அவர் சித்திரம் தீட்டுவதில் அளவிலாத ஈடுபாடும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தார்.ஆனால் பசி அவரைக் கொன்றுவிடும் போல் இருந்தது. பட்டினிகிடந்தார். அவருடைய சகோதரர் தரும் சொற்பமான காசில் பாதியை ஓவியங்கள் தீட்டுவதற்கான மை ,பிரஷ் ,சார்ட் போன்றவற்றுக்கு செலவிட்டு பாதியில் மூன்று நாட்கள் தான் அவரால் சாப்பிட முடிந்தது. வாரத்தில் நான்கு நாட்களுக்கு உணவில்லாத நிலை. அவர் 33 வயதில் இறந்துவிட்டார்.அவர் தற்கொலை செய்துக் கொண்டார். ஆனால் அவர் தற்கொலை வாழ்க்கையை விடவும் உன்னதமானது. அவர் சாகும் முன்பு எழுதிய கடிதத்தில் நான் என் பணியை முடித்துவிட்டேன். பூரண திருப்தியுடன் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சாகும் முன்பு கடைசியாக அவர் சூரியன் மறையும் காட்சியை வரைந்திருந்தார். அந்த சித்திரத்தை வரைவது தான் அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. அதை வரைந்து முடித்ததும் அவர் விடைபெற்றுக் கொண்டார். --------------------- ஒரு கேள்வி - பைத்தியக்காரன் புத்தனாக முடியுமா ? ஓஷோ - பைத்தியக்காரன் தான் புத்தனாக முடியும். அறிவுபூர்வமான மனிதர்கள் பௌத்தர்களாக மாறலாம். புத்தனாக முடியாது. அவர்கள் கிறித்துவர்களாக மாறலாம், ஏசு கிறிஸ்துவாக மாற முடியாது .பைத்தியக்காரனால் தான் முடியும். எனது அழைப்பு பைத்தியங்களுக்கானதுதான். பைத்தியக்காரர்கள் ஞானம் அடைவதற்கான வழிகாட்டிதான் நான். ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில தத்துவவாதிகள் தப்பிச் செல்ல திட்டமிட்டனர். அவர்கள் ஒரு கள்ளச் சாவியைத் தயாரித்தனர். நள்ளிரவில் தப்பிச் செல்ல நேரம் பார்த்து அவர்கள் சாவியைக் கொடுத்து ஒருவரை அனுப்பி கதவைத் திறந்து வை என்றனர் .போனவர் திரும்பி வந்தார். என்ன ஆச்சு என்று மற்றவர்கள் கவலையுடன் கேட்டனர். காவலாளி இன்று வாயிலை பூட்ட மறந்துவிட்டான். எப்படி நான் பூட்டைத் திறப்பது என்று கேட்டார் தத்துவவாதி. உங்கள் தத்துவவாதிகள் இப்படிப்பட்டவர்கள் தாம். அவர்களால் புத்தனாக முடியாது .மறை கழன்றவரால் தான் அது முடியும் என்று ஓஷோ விளக்குகிறார். ஒரு குட்டிக் கதை ஒரு போலீஸ்காரரை நாய் கடித்து விட்டது. முதலில் அலட்சியப்படுத்திய அவர் நாளடைவில் காயம் பெரிதாகி வலிப்பதைக் கண்டு மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதித்து அந்த நாயை கொண்டு வருமாறு கூறினார். நாய் அதற்குள் செத்து விட்டது. மருத்துவருக்கு கவலை வந்துவிட்டது. மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்களே என்று கூறினார். போலீஸ்காரர் உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து கடகடவென எதையோ எழுதத் தொடங்கினார். டாக்டர் கேட்டார். முயற்சி செய்வோம் .குணமாகவும் வாய்ப்புள்ளது. அதற்குள் ஏன் உயில் எல்லாம் அவசரமாக எழுதணுமா..? போலீஸ்காரர் கூறினார். "நான் உயில் ஏதும் எழுதவில்லை. யாரையெல்லாம் கடித்து குதற வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறேன்" இன்னொரு குட்டிக் கதை ஒரு நடனமங்கைக்கு ஸ்ட்ரிப் டீஸ் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. இதை நீ சரியாக ஆடினால் உனக்கு நிரந்தரமாக வேலை தருகிறேன் என்றார் விடுதி மேலாளர். டிரம்ஸ் இசை முழங்க ஒவ்வொரு ஆடையாக கழற்றியபடி அவள் ஆடினாள் .தன் உடலை மறைக்க ஒரு ஆப்பிளை மட்டும் அவள் வைத்திருந்தாள். கடைசி துணியையும் கழற்றி வீசிவிட்டு அந்த ஆப்பிளை உடல் முழுவதும் உருட்டி உருட்டி பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படச் செய்தாள். அரங்கமே ஆர்ப்பரித்தது. ரசிகர்களுக்கு கடைசியாக வணக்கம் சொன்ன போது அவளை மறைத்த அந்த ஆப்பிளையும் அவள் தூக்கியெறிந்துவிட்டாள். அவளுடயை ஆப்பிள் நடனம் செம ஹிட். மேலாளர் மகிழ்ச்சியாக அவளிடத்தில் வந்தார்." நீ நிச்சயம் உலகப் புகழ் பெறப் போகிறாய்.உனக்காக உலகம் முழுவதும் லண்டன் ,டோக்கியோ, பாரீஸ், நியுயார்க் என பல நகரங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் " ஏன்னது நியுயார்க்கா ....வேண்டாம் என்றாள் அவள். ஏன் என்று கேட்டார் மேலாளர் "அங்கே இதே நடனத்தை என் அக்கா ஒரு பூசணிக்காயை வைத்து ஆடிக் கொண்டிருக்கிறாள்" என்றாள் அவள் ----------- சீசாவுக்குள் சிக்கிய வாத்தை வெளியேற்றுவது தொடர்பான இந்த ஜென் கதை விளக்க புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் ஓஷோ கூறுகிறார். " வாத்து என்றுமே சீசாவுக்குள் இருந்ததில்லை. பிரச்சினை இல்லாமல் வாழத்தெரியாத மனிதன் தான் வாத்தை சீசாவுக்குள் போட்டு அடைக்கிறான். வாத்தை கட்டாயப்படுத்தி சீசாவுக்குள் திணித்து பின்னர் அதனை கொல்லாமல் எப்படி வெளியில் எடுப்பது என்று கவலைப்படுகிறான். பாட்டிலை உடைக்கக் கூடாது என்றும் சாத்தியமற்ற நிபந்தனைகளை வேறு விதிக்கிறான் .வாத்தையும் கொல்லக்கூடாது. சீசாவையும் உடைக்கக் கூடாது. இப்போது வாத்து பெரிதாக வளர்ந்துவிட்டது. அது பாட்டில் முழுவதையும் நிரப்பிவிட்டிருக்கிறது. நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை. பாட்டிலை உடைத்துதான் ஆக வேண்டும் . அல்லது வாத்து சீசாவுக்குள்ளேயே செத்துப் போக வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கமுடியாதததால் மனிதன் மகிழ்ச்சியடைகிறேன். தன் பிரச்சினையைக் கூறிக் கொண்டே அந்த பாட்டிலை அவன் சுமந்து திரிகிறான். " பாட்டிலைத் தூக்கிப் போடுங்கள் . வாத்து அதற்குள் இல்லை என்கிறார் ஓஷோ. அது எப்போதோ பறந்துவிட்டது. ----------------

Friday 3 July 2020

ஜென் தேநீர் 26-30 ஓஷோவும் ஜென்னும்

ஜென் தேநீர் 26
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN THE SOLITARY BIRD CUCKOO OF THE FOREST- OSHO
சூயிபி என்பவர் தன்கா என்ற ஜென் குருவிடம் வந்தார். " எல்லா புத்தர்களின் ஆசான் யார் ?" என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பினார். புத்தருக்கெல்லாம் புத்தர் யார் என்பதை அறிய அவருக்கு ஆர்வம்.
ஆனால் தன்கா சொன்னார் போய் துடைப்பத்தை எடுத்து தரையை சுத்தமாக பெருக்கு .
இதைக் கேட்டு சூயிபி பின்னால் மூன்று அடி எடுத்து வைத்தார்.
தவறு என்றார் குரு.
மூன்றடி முன்னே வந்தார் சூயிபி.
இன்னும் ஒரு தவறு என்றார் தன்கா.
இதைக் கேட்ட சூயிபி ஒரு காலை தூக்கி இன்னொரு காலைச் சுற்றி ஒரு சுழன்று சுழன்றார்.
ஆம் நீ அடைந்துவிட்டாய் புத்தர்களின் எல்லா ஆசிரியர்களையும் நீ கடந்து விட்டாய் என்றாய் தன்கா
சூயிபி ஞானம் பெற்றார்.
----
ராஸன் என்ற ஜென் குருவின் சீடரான மியோசோ தனது குருவை முதன் முறையாக சந்தித்த போது அவர் காலைத் தொட்டு வணங்கினார். எங்கிருந்து வருகிறாய் என்று விசாரித்தார் ராஸன்.
பதிலளித்த மியோசோ  இக்கணத்தில் இங்கே என்ன நடக்கிறது என்று திருப்பிக் கேட்டார். ராஸன் அவருக்கு மிகுந்த மரியாதையுடன் தலைவணங்கினார்.  சிறிது தேநீர் அருந்து என்றார் குரு.
மியோசோ தயங்கினார். ராஸன் கூறினார். இன்று நல்லதொருநாள். இலையுதிர்காலத்தின் இதமான பருவநிலை.  நீ எங்கேயாவது வெளியே போனால் என்ன...?
மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த மியோசோ அவ்வளவுதானா இந்த குரு என்றபடி கலைந்து சென்றார்.
மறுநாளும் அவர் குருவிடம் உரையாடினார். ராஸன் கூறினார்..சிறகுகள் இன்னும் வலிமையாக வளரவில்லை. இதில் இறகுகள் இன்னும் வலுப்பெற வேண்டும். நீ போய் விடு.
அதன் பிறகு மியோசோ பேசவில்லை. ஞானம் பெறற அவர் பல குருக்களை நாடி பல நாடுகளுக்குச் சென்று விட்டார்.
----------
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்  மரணப் படுக்கையில் இருந்த மியோசோ தனது கால்களையும் கைகளையும் படுக்கையில் நன்றாக நீட்டிக் கொண்டார்.  தனது சீடர்களை அழைத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு  ஷகா நியோரி தனது இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டார். நூற்றுக்கணக்கான பிரகாசமான விளக்குகள்  ஒளிவீசின. நானும் கால்களை நீட்டியிருக்கிறேன். விளக்கொளி ஏதும் ஒளிர்கின்றனவா...
முந்தைய காலத்தில் கொக்குகள் கூட்டமாகப் பறந்தன. என்றார் ஒரு சீடர்
ஏதோ ஒரு நரி என்னிடம் தந்திரம் செய்கிறது என்று கூறிய மியோசோ ஒரு மந்திரத்தைச் சொன்னார். சரியான முறையில் எழுந்து அமர்ந்தார். அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.
---
இந்த ஜென் கதைகள் புதிர்த்தன்மை வாய்ந்தவை. பூடகமானவை . அதனுள் அர்த்தங்களை மீறிய அர்த்தங்கள் உள்ளன. மியோசோவிடம் குரு தேநீர் அருந்தும்படி கூறியபோதும் குருவை ஏற்பதில் சீடருக்குத் தயக்கம் இருந்தது. அதைக் கண்டு குரு உன் இறகுகள் மெல்லியவை. அவை பலம் பெற வேண்டும். உன் சிறகுகளுக்கு வலிமை இல்லை என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். சீடன் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை குரு அறிவார்.
இதே போல் மரணப் படுக்கையில் சரியான முறையில் உடலைக் கிடத்தினால் அமைதியாக உயிர் பிரியும் என்பது ஜென் , பௌத்த நம்பிக்கை. புத்தருக்கு தாமரை போன்ற சப்பணமி்ட்ட கோலத்தில் தான் ஞானம் பிறந்தது.
புத்தர் தலையில் கை வைத்தபடி ஒருக்களித்துப் படுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது தான் எனது உடலுக்கு சரியானது என்றும் அவர் தமது சீடரான ஆனந்தாவிடம் கூறினார். திருமாலும் பாற்கடலில்  தனது பஞ்சனையில தலையில் கைவைத்து ஒருக்களித்துப் படுப்பார். புத்தர் திருமாலின் அவதாரம் என்று கூட சிலர் நிரூபணம் செய்ய முயன்றனர். ஆனால் இது ஒரு யோக நிலை. புத்தரும் யோகிதான்.
சரியான முறையில் தாமரைப் போல் ஜென் இதை லோட்டஸ் பொசிசன் என்கிறது. அப்படி அமரும்போது ஞானம், மரணம் எது வாய்த்தாலும் அமைதியாக வாய்க்கிறது.
தியானத்தில் அமர்வதும் இத்தகைய சரியான உடல் இருப்பின் போதுதான். ஜா-ஜென் za-zen என்று இதனை ஜென் அழைக்கிறது.
கின்சான், கான்ட்டோ, செப்போ ஆகியோர் ஜா-ஜென் பழகிக் கொண்டிருந்தனர்.அப்போது தோஸன் அங்கு தேநீருடன் வந்தார்.இதனைக் கண்டதும் கின்சான் தனது கண்களை மூடிக் கொண்டார். எங்கே போகிறாய் என்று கேட்டார் தோஸன்.
நான் தியானத்தில் நுழைகின்றேன் என்றார் கின்சான்.
தியானத்துக்கு கதவுகளே இல்லை எப்படி நீ அதனுள் நுழைவாய் என்று கேட்டார் தோஸன்.
---------------
ரின்ஸாய் என்ற மகத்தான ஜென் குரு ஒருவர் தனது மரணப்படுக்கையில் சீடர்களை அழைத்தார். வாழ்நாள் முழுவதும் நான் யாரையும் பின்பற்றாமல் அசலானவனாக வாழ்ந்துவிட்டேன் .அதே போல் மரணத்திலும் இதுவரை யாரும் மரணிக்காத கோலத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் .எனக்கேற்ற உடல் கோணம் எதுவென்று கூறுங்களேன்...
சீடர்கள் ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டு திருதிருவென முழித்தனர். இது ஒரு கடினமான கேள்வி. 90 சதவீதம் பேர் தங்கள் படுக்கையில் படுத்தபடிதான் உயிர் துறக்கின்றனர். முன் ஒரு காலத்தில் ஒரு ஜென் குரு லோட்டஸ் எனப்படும் தாமரை நிலையில் அமர்ந்து உயிர் விட்டார். ஒருவர் நின்றுக் கொண்டே உயிரை விட்டார். இந்த உத்திகள் எல்லாம் பழசாகி விட்டன. புதிய உத்தி எது....சீடர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி குருவிடம் சொன்னார்கள். நீங்கள் தலை கீழாக நின்றபடி உயிர் விடலாம். இதுவரை யாரும் அப்படி செய்ததில்லை. அச்சு அசலான உத்தி இது.
சரி என்று ஏற்றுக் கொண்ட ரின்ஸாய் தலைகீழாக நின்று இறந்து விட்டார். அவர் நீண்ட நேரமாக அசையவில்லை. இறந்துவிட்டார் என்றே சீடர்கள் நினைத்தனர். ஆனால் எப்படி உறுதிசெய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.மூச்சைப் பார்த்தனர். மூச்சு இல்லை. இருதயத் துடிப்பைப் பார்த்தனர். இதயம் துடிக்கவில்லை.
ரின்ஸாயின் அக்கா ஒருவர் இருந்தார் .அவரை அழைத்தனர். நீங்கள் பார்த்து உறுதி செய்யுங்கள் என்று கேட்டனர் சீடர்கள்.
அக்கா வந்தார். அவர் ரின்ஸாயைப் பார்த்ததுமே அவர் சாகவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டார். ரின்ஸாய் சின்ன வயசுலதான் நிறைய குறும்புகள் செய்வாய் .இந்த வயதான காலத்திலுமா..எதற்கு இந்த விளையாட்டு எழுந்து நேராக நில்லு மற்ற மனிதர்கள் எப்படி சாகிறார்களோ அதே போல் செத்து விடு என்றார்.
இதை கேட்டதும் ரின்ஸாய் நேராக எழுந்து வந்தார். சிரித்தபடியே அவர் படுத்தார். தனது சீடர்களை அழைத்தார் பயப்படாதீர்கள் நான் இறந்துவிட்டேன் .எனது இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிய ரின்ஸாய் கண்களை மூடி படுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை.
---------------
ஜென்னில் சில புதிரான வாக்கியங்கள் உள்ளன. உதாரணமாக நதி மலைக்குத் திரும்புகிறது என்பார்கள். நதி மலைகளில் பிறக்கிறது. பின் படர்ந்து பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து பல கரைகளைக் கடந்து ஊர்களைக் கடந்து கடைசியாக கடலைச் சேர்கிறது. நதியின் பிறப்பிடம் மலை என்றால் சேருமிடம் கடல். ஆனால் நதி எப்படி மலைக்குத் திரும்ப முடியும் என்ற கேள்வி எழலாம் . அதுதான் ஜென். மூலத்தில் இருந்து மனித ஆன்மா பயணிக்கிறது. இதனை மீண்டும் மூலத்திற்குள் திருப்ப முடியும் என்கிறது ஜென் .நதியை கடலை நோக்கி அல்ல கடலில் இருந்து மலையை நோக்கியும் திருப்பலாம்.
அதே போன்று சிங்கம் குகையைவிட்டு வெளியே வருகிறது என்பார்கள். அதனை ஜென் சிங்கம் குகைக்குத் திரும்புகிறது என்று மாற்றி கூறுவதும் வழக்கம். குகை என்பது மனிதனின் உள் மனம். நாம் நம்முள் உள்ள சிங்கத்தை வெளியேத் திரிய விட்டோம் .வேட்டையாட விட்டோம். ரத்தக் கறைபடிய விட்டோம். இப்போது சிங்கத்தை குகைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது அது நம்மையும் கொன்று விடும். அதன்  பசி அடங்காது.
ஒரு ஜென் கவிதை
அற்புதமான நிசப்தத்தில்
ஒரு கோவிலுக்குள்
குயிலின் குரல் மட்டும் ஒலிக்கிறது
பாறைகளைத் துளைத்து.
குயிலின் குரலால் பாறைகளைத் துளைக்கச் சொல்கிறது ஜென். இது கவித்துவமானது .இதற்கு தர்க்கப் பூர்வமான விளக்கம் கிடையாது.அப்படி சொன்னால் ஜென்னைப் புரிந்துக் கொள்ள முடியாது. பாறையைப் பிளக்க கடப்பாரை  தான் தேவை என்று வாதம்செய்தால் அவுட்
நோ ஜென்.
------
இன்னும் சில ஜென் கவிதைகள்
காற்று உதிர்க்கிறது
மலர்கள் உதிர்கின்றன.
ஒரு பறவை பாடுகிறது
மலைகள் முன்பை விட கூடுதலான
மர்மங்களை கொண்டிருக்கின்றன.
----
செஸ்நட்கள்  மிகுந்த மலர்தலால்
கொத்து கொத்தாய் மலர்கின்றன
இவ்வுலக மனிதர்கள் அவற்றைப் பார்க்காமல்
கடந்து செல்கிறார்கள்
- பாஷோ
-
காற்றில் எழும்பியபடி தவழும்
காட்டு வாத்துகள்
விழவும் இல்லை பறக்கவும் இல்லை
எங்கே வேண்டுமானாலும் தரையிறங்குகின்றன
கெக்களிக்கின்றன.
- நான் ஓ மியோ
--
ஓஷோவின் ஒரு  குட்டி்க கதை
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ரஷ்யர், ஒரு கியூபா நாட்டவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார் ஆகியோர் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். வோட்க பாட்டில்களை எடுத்த ரஷ்யர் மற்ற இருவருக்கும் வேண்டிய அளவுக்கு குடிக்கக் கொடுத்து மீதி பாட்டில்களை ஓடும் ரயிலில் இருந்து வீசிவிட்டார். எதற்குத் தூக்கிப் போடணும் என்று இருவரும் கேட்க எங்கள் நாட்டில் வோட்கா ஆறாகப் பெருகி ஓடுகிறது .எவ்வளவு குடித்தாலும் அது அதிக அளவில் கிடைக்கிறது என்றார் ரஷ்யா.
அடுத்து கியூபா நாட்டவர் சிகரெட்டை எடுத்து அனைவருக்கும் தந்தார் .பிறகு மீதமுள்ள சிகரெட் பெட்டிகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினார். எங்கள் நாட்டில் சிகரெட்டுகள் தாராளமாகக் கிடைக்கின்றன .அளவுக்கு அதிகமாக உள்ளன.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பயணி ஒருவர் எழுந்து வந்தார். பாதிரியாரை அலாக்காக தூக்கி ரயிலில் இருந்து தூக்கிப் போட்டார்.
--------------------

ஜென் தேநீர் 2 7
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN AND THE ART OF ENLIGHTMENT -OSHO
ஓஷோவின் ஜென்னும் ஞானம் அடையும் கலையும் என்ற நூலின் சில பகுதிகளைக் காண்போம்....
இந்த நூலில் ஜென் குருவும் மிகச்சிறந்த ஹைகூ கவிஞருமான இக்யூ வின் IKKYU  கவிதைகளுக்கு ஓஷோ விளக்கம் அளிப்பதுடன் வழக்கம்போல தமது சீடர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். இக்யூ பாஷோவுக்கு நிகரான சிறந்த கவிஞர். பல கவிதைகள் பாஷோவின் பெயரில் இடம்பெறுகின்றன. இதில் இக்யூவின் கவிதைகள் சிலவற்றை நான் ஏற்கனவே இத்தொடரின் முந்தைய பகுதியில் அளித்திருக்கிறேன். இக்யூ ஜென் குருவான போதி தருமரின் சீடர். போதி தருமரைப் பற்றிய ஓஷோவின் பதிவுகளை கடந்த சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்தோம். இப்போது இக்யூவின் கவிதையைப் பார்ப்போம்.
எப்போதும் மழை பொழியும் சாலையில் இருந்து
மழையில்லாத ஒரு சாலைக்கு திரும்பும் வழியில் ஓய்வு
மழை பெய்தால் பெய்யட்டும்
காற்று வீசினால் வீசட்டும்.
நீண்ட காலம் முன்பிருந்தே என் இயல்பு இருத்தலில் இல்லாமல் இருப்பதுதான்.
இறந்த பின்னர் போக்கிடம் ஏதுமில்லை. எதுவுமே இல்லை.
நான் கேட்டபோது குரு பதில் அளித்தார்.
கேள்வியும் இல்லை , பதிலும் இல்லை.
அப்படியானால் எனது குரு ( போதி ) தருமருக்கு மனத்தினுள் எதுவும் இருந்திருக்காது
நமது மனங்கள் தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாதவை
அவை பிறந்த போதும் அவை இறக்கும் போதும்
சூன்யத்தின் சாரம் அதில் உள்ளது.
மூவுலகிலும் நாம் செய்த பாவங்கள் யாவும்
என்னுடனே
மங்கி மறைந்து போகும்
-----------------
இக்யூ சிறந்த கவிஞர் அல்ல என்று ஆங்கிலேய இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். அவரிடம் கவித்துவம் குறைவு என்பார்கள். ஆனால் ஓஷோ இதனை வேறுவிதமாகக் காண்கிறார். கவித்துவம் என்பது இலக்கியச் சுவை .இக்யூவின் கவிதையை இலக்கியச் சுவையாகப் பார்க்கக் கூடாது .அவை ஞானப் பரல்கள்.
ஜென் குருக்கள் பெரும்பாலும் உரைநடையாக பேச மாட்டார்கள். அப்படி பேசினாலும் அதில் புதிர்த்தன்மை இருக்கும், ஜென் குருக்கள் ஹைகூ போன்ற ஜென் கவிதை வடிவங்களை நாடினார்கள். உரை நடையில் சொல்ல முடியாதவற்றை கவிதையில் தான் கூற முடியும் என்று ஜென் நம்புகிறது.
" சாதாரண மொழியால் சொல்ல முடியாததை கவிதை மொழியால் கூற ஜென் முயற்சிக்கிறது. ஜென் கவிதையை ஒரு வாகனம் போல் பயன்படுத்துகிறது. இதனை இலக்கிய அனுபவமாக கருதாதீர்கள் .ஞானத்தின் பரவசமான நிலையாக கருதுங்கள் "என்கிறார் ஓஷோ
இந்த கவிதையைப் பற்றி ஓஷோ விளக்குகையில், " ஜென்னின் அடிப்படையான தியானங்களில் ஒன்று முகமற்றுப் போவது " என்கிறார்.
பிறப்பதற்கு முன்பு உனக்கு ஒரு முகம் இருந்தது. இறந்த பின்னர் உனக்கு ஒரு முகம் இருக்கும். பிறவியில் வரும் முகம் வேறு. கருவுக்கு முன்னால் உன் முகம் என்னவாக இருந்தது என்பது உனக்குத் தெரியாது. அதே போன்று இறப்புக்குப் பின்னர் உன் உடல் எரியூட்டப்பட்டதும் உன் முகம் என்னவாக இருக்கும் என்பதும் உனக்குத் தெரியாது.
" இதனை தொடர்ந்து தியானம் செய்யுங்கள். முகமற்ற நிலையை உணர்வீர்கள். அதுதான் உங்கள் உண்மையான முகம். முகமற்ற முகம். பிறப்பதற்கு முன்பு உங்களுக்கு முகம் இல்லை. உடல் இல்லை. மனம் இல்லை. பெயர் இல்லை. வடிவம் இல்லை. நீ இருந்தாய் .ஆனால் உன்னை எதனுடனும் அடையாளப்படுத்தவில்லை. ஒரு உயிராக மட்டும் நீ இருந்தாய் " என்கிறார் ஓஷோ.
நீண்ட காலம் முன்பிருந்தே என் இயல்பு இருத்தலில் இல்லாமல் இருப்பதுதான் என்று இக்யூ கூறுவதும் இதுதான்.
மனம் தொடக்கமும் முடிவும் இல்லாதது என்றும இக்யூ கூறுகிறார். அதில் சூன்யத்தின் வெறுமையின் சாயல் மட்டுமே உள்ளது. பிம்பங்கள் ஏதுமில்லை .மதம் இல்லை. சாதி இல்லை. பெயர் இல்லை .புகழ் இல்லை. பேங்க் பேலன்ஸ் இல்லை, எந்த அடையாளமும் அதற்கு இல்லை. அது வெறுமை மட்டுமே. அது ஒரு சொர்க்க நிலை.
வாழ்க்கை சொர்க்கத்தை இழப்பது, ஆன்மீக சமயம் அதனை மீட்பதாகும் என்றும் ஓஷோ கூறுகிறார்.
" ஒரு புகைப்படம் மட்டுமே நிரந்தரமானது. கண்ணாடி நிரந்தரமானதாக இருக்க முடியாது .புகைப்படம் புகைப்படம் தான். அதில் கண்ணீர் இருக்குமேயானால் அது எப்போதுமே கண்ணீருடன் தான் இருக்கும் .அதில் புன்னகை இருக்குமானால் அது எப்போதும் புன்னகையுடனே இருக்கும். மாறவே மாறாது.அது உயிரற்றது. அது எந்த எதிர்வினையும் செய்யாது. குரங்கு வந்து அதன் முன்னால் சேட்டை செய்தாலும் அது கண்ணீரைத் தான் காட்டிக் கொண்டிருக்கும் .சிரிக்காது. "  என்று ஓஷோ கூறுகிறார்.
குரு ஒரு கண்ணாடி. அவர் உன் முகத்தைக் காட்டுவார். அதன் முன்பு குரங்கு வந்து நின்றால் குரங்கும் அதன் சேட்டையும் தான் தெரியும் .குரு எதற்கும் பதில் அளிப்பதில்லை. அவர் உனக்கு எதிர்வினையாற்றுபவராக இருக்கிறார். அதனால் தான் போதி தர்மர் எதுவும் பதில் அளிக்கவில்லை என்கிறார் இக்யூ,
அங்கே கேள்வியும் இல்லை பதிலும் இல்லை.
" உங்கள் பதில்கள் யாவற்றையும் உதிர்த்து விடுங்கள் . தீர்வுகளை விட்டு விடுங்கள். இத்தனை காலமாக அவற்றை சுமந்து செல்கிறீர்கள். தூக்கிப் போடுங்கள். அமைதியாக இருங்கள். எப்போதெல்லாம் ஒரு கேள்வி எழுகின்றதோ அப்போதெல்லாம் மௌனத்தில் ஒரு பதிலை நீங்கள் கேட்பீர்கள். அந்த பதில் தான் பதிலாக இருக்கும். அது உங்களிடமிருந்தும் நீங்கள் படித்த புனித நூல்களில் இருந்தும் வந்த பதில் அல்ல. அந்த பதில் யாரிடமிருந்தும் வரவில்லை .எங்கிருந்தும் வரவில்லை. அது உங்கள் ஆழ்ந்த உள்மனத்தின் இன்மையில் இருந்து வந்த பதிலாக இருக்கும்" என்கிறார் ஓஷோ.
ஓஷோவின் குட்டிக் கதைகள்...
இக்யூ ஒரு குளிர் கால இரவில் ஒரு கோவிலில் தங்கினார். திடீரென நள்ளிரவில் குளிர் தாளாமல் எழுந்த அவர்  மரத்தால் ஆன புத்தர் சிலை யை கோடாரியால் பிளந்து தீ மூட்டினார். கோவில் பூசாரி அலறியடித்து ஓடி வந்தார். உனக்கென்ன பைத்தியமா , புத்தர் சிலையைப் போய் தீ மூட்டுகிறாயே...இது மிகப்பெரிய பாவம்.
உடனடியாக ஒரு குச்சியை எடுத்து சாம்பலைக் கிளறலானார் இக்யூ. என்ன தேடுகிறாய் என்று கேட்டார் பூசாரி
புத்தரின் எலும்புகளை தேடுகிறேன் என்றார் இக்யூ.
-------
கணவருக்கு ஆபீஸ் போகும் போது மனைவி தெர்மா பிளாஸ்கில் காபியைப் போட்டுக் கொடுப்பது வழக்கம். மனைவிக்கு காபி மிகவும் பிடிக்கும். ஆனால் கணவருக்கு அது பிடிக்காது. அவர் காபியை குடிக்க மாட்டார். அப்படியே திருப்பிக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கும் காபியுடன் கலந்துவிடுவார். அதை மனைவி குடித்துவிடுவாள்.
ஒருநாள் மனைவிக்கு தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகம் எழுகின்றது. கணவரைப் பற்றி கனவு காணும் போது பொறாமையும் கோபமும் அதிகரித்தது.பழிவாங்குவதற்காக அவள் காபியில் விஷம் கலந்துவிட்டாள்.
அன்றும் மாலையில் வீடு திரும்பிய கணவன் காபியை மனைவியின் காபியுடன் கலந்துவிட்டான்.
மனைவி விஷமான காபியை அருந்தி உயிரிழந்துவிட்டாள்.
வழக்கு விசாரணையில் கணவனை விடுவித்த நீதிபதி கூறினார் .தங்கள் கனவை உண்மை என நம்புகிறவர்கள் விஷம் குடித்து சாகிறார்கள் .
-------------
ஒரு ஜென் குரு போதனைக்காக அரங்கத்திற்கு வந்தார். நூற்றுக்கணக்கான சீடர்கள் கசகசவென பேசிக்கொண்டிருந்தார்கள் .குரு வந்துவிட்டார் என்றதும் அமைதியானார்கள். நீண்ட மௌனம் .குரு ஏதோ ஒரு முக்கிய பிரசங்கம் செய்வார் என்று காத்திருக்கிறார்கள்.
குரு சொன்னார் இன்று எனக்கு போடுவதற்கு நல்ல ஜட்டி கிடைக்கவில்லை. காமெடியான ஒரு ஜட்டியைப் போட்டு வந்துவிட்டேன்.
--------
ஜென் தேநீர் 2 8
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN AND THE ART OF ENLIGHTMENT -OSHO
கனவில் வாழாதீர்கள் என்று ஓஷோ கூறுகிறார். கனவுகள் நமது ஆசைகளின் பிரதிபிம்பங்கள். நமது நிறைவேறாத ஆசைகளின் காயங்கள். எனக்கு ஒருநாள் ஐஸ்வர்யா ராயுடன் கழிக்க ஆசை. ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே நான் கனவில் ஒரு மிருகமாக மாறி எனக்குப் பிடித்த நடிகையை என் விருப்பப்படி ஆட்டிப் படைக்கிறேன். இப்படி மனக்குகையில் இருந்து சிங்கத்தை ஏவி விடுகிறேன். நிஜவாழ்விலும் இதுபோன்ற கனவுகள் ஆபத்தானவை. லாக்கப்பி்ல் போலீஸ்காரர்கள் அப்பாவிகளை அடித்துக் கொல்வதும் இத்தகைய வெறித்தனத்தால்தான்.
கனவுகளில் விழித்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஓஷோ. நாம் எத்தகைய கனவுகளைக் காண்கிறோம் என்பதைக் குறித்து நமக்கு கவனமும் பிரக்ஞையும் தேவை. கனவுகளை ஒழித்துக் கட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
குருட்ஜிப்பிடம் கனவுகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று ஒருவர் கேட்டார். குருட்ஜிப் கூறினார். முடிந்தவரை ஒரே மாதிரியான கனவு காண முயற்சி செய்யுங்கள். அப்புறம் அந்த கனவு சலித்துப் போய் விடும், மற்ற கனவுகளும் வராது. அந்தக் கனவும் மறைந்துவிடும்.
இது தத்துவார்த்தமான பதிலாகத் தெரியலாம். குருட்ஜிப் தத்துவத்தால்தான் விளக்குகிறார். ஆனால் இக்யூ போன்ற ஜென் கவிஞர்கள், ஓஷோ போன்ற மேதைகள் இதனை வேறு மாதிரி விளக்குகிறார்கள்.
உங்கள் கனவுகளில் என்னை வர விடுங்கள் என்கிறார் ஓஷோ. தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நான் இப்போது நேரில் உங்கள் முன் நி்ற்பதைப் போலவே கனவிலும் நேருக்கு நேராக நிற்பதை உணர்வீர்கள். உங்கள் கனவில் ஒரேயொரு கணம் என்னைப் பார்த்தால் போதும் உங்கள் அத்தனைக் கனவுகளும் மறைந்து விடும் என்கிறார் ஓஷோ.
கனவுகள் மறையத் தான் வேண்டும். கனவுகள் மறைந்தால்தான் யதார்த்தம் உள்ளே நுழையும் என்கிறார் ஓஷோ.
கலீல் கிப்ரானின் கவிதை ஒன்று இதனை அழகாக விளக்குகிறது. ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உறங்குகிறார்கள். ஒருவன் அங்கு வந்த கிப்ரானிடம் கூறுகிறான். சத்தம் போடாதீர்கள். அவர்கள் விடுதலையைப் பற்றி கனவு கண்டுகொண்டு உறங்குகின்றனர்.
கிப்ரான் கூறினார் அவர்களை எழுப்புங்கள். அவர்களின் கனவு நனவாக வேண்டாமா....
தொழிலாளர்கள் எழுந்தனர். கிப்ரான் கேட்கிறார். நீங்கள் மடியப் போகும் இரவின் இருளாக இருக்கப் போகிறீர்களா உறங்குங்கள். விடியப் போகும் உலகின் ஒளியாக இருக்கப் போகிறீர்களா விழித்துக் கொள்ளுங்கள்.
யதார்த்தம் அமைதியானது. ஆனந்தமானது என்கிறார் ஓஷோ. கனவு மாயமானது கைவராதது. நினைவிலும் நிற்காதது. அதனால்தான் கனவுகளை ஒழித்துக் கட்டுங்கள், கனவில் விழித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் என்கிறார் ஓஷோ.
காதலைப் பற்றி ஒரு கேள்வியை ஒருவர் கேட்க ஓஷோ பதிலளிக்கிறார்.
காதல் மரணம் போன்றதுதான்.  காதலில் மரணம் நிகழ்வது நான் என்ற தன்முனைப்புக்குத்தான் என்கிறார் ஓஷோ.
காதல் ஒரு மரணம். இன்னும் சொல்லப்போனால் அது தற்கொலை. அது ஆபத்தானது. அதனால்தான் பல லட்சம் பேர் காதலுக்கு எதிரான அணியில் நிற்கிறார்கள். அவர்கள் காதல் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அகந்தையை வைத்து வாழ்கிறார்கள். அது போலியானது .ஆனால் அந்த போலித்தனமான அகந்தையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் அதுவே அவர்களுக்கு யதார்த்தம் போல் ஆகி விடுகிறது. ஆனால் போலியை எப்படி அசலாக்க முடியும். ? அது மறைந்துக் கொண்டேயிருக்கும். அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் அதனை மீண்டும் மீண்டும் உருவாக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படுகிறது .அது சுய ஏமாற்று. அதுதான் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் ஓஷோ.
காதலர்கள் வெட்டிக் கொல்லப்படும் கௌரவக் கொலகளின் காரணம் இதுதான். வாழ்க்கையை அத்தனை இறுக்கமான மனநிலையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஓஷோ.
வாழ்க்கை ஒரு பாலம் அதைக் கடந்து செல்லுங்கள். அதில் வீடு கட்டாதீர்கள் என்று ஏசு கூறியதாக பைபிளில் இல்லாத ஒரு வாசகத்தை ஓஷோ மேற்கோள் காட்டுகிறார்.
பாலத்தின் மீது வீடு கட்டி வாழாதீர்கள் என்கிறார் ஓஷோ.
இக்யூவின் கவிதைக்கு வருவோம்.
நமது பயணத்தின் இறுதியில்
ஓய்வெடுக்க ஒரு இடமில்லாமல் போனால்
நாம் எப்படி அங்கே நம்மை இழப்பதற்கு
ஒரு வழியைக் காண முடியும்?
சகயமுனி என்ற அந்த குறும்புத்தனமான மனிதர்
இந்த பூமியில் தோன்றி
எத்தனைப் பேரை தவறாக வழிநடத்திவிட்டிருக்கிறார்.
மனம் அதனை நாம் என்னவென்று அழைப்பது ?
அது காற்று வீசும் ஓசையைப் போன்றது.
பைன் மரங்களில் வீசும் காற்றைப் போன்றது. ஆனால்
இந்திய கருப்பு மையினால் வரைந்த ஓவியத்தில் வீசும் காற்று அது.
பிறந்த போது எப்படி இருந்ததோ
அப்படியே இருக்கும் மனம்
எந்த விதப் பிரார்த்தனையும் இல்லாமல்
புத்தராக மாறிவிடும்.
ஒரு பொய் பேசினால் நீ நரகத்தில் விழுவாய் என்கிறார்கள்
அப்படியானால் இல்லாதவற்றையே சொல்லி சுமந்து திரிந்த
புத்தருக்கு என்னதான் ஆகும் ?
-----------------
இந்தப் பாடலை மெதுவாக மெதுவாக வரிவரியாக தியானம் செய்தபடி வாசியுங்கள் .புத்தரைப் பொருத்தவரை பாவம் புண்ணியம் ஏதுமில்லை. புண்ணியம் என்று யோசித்தால் அது சொர்க்கம் என்ற இலக்கைத் தோற்றுவிக்கும். சொர்க்கம் தோன்றியதும் நரகமும் தோன்றிவிடும். ஒரே ஒரு பொய் கூட உங்களை நரகத்தில் தள்ளி விடும்.
இலக்கை நீங்களே தான் உருவாக்குகிறீர்கள் என்கிறார் ஓஷோ. அதன் பின் அதில் சிக்கிக் கொண்டு நீங்கள் உழல்கிறீர்கள். புத்தர் இந்த வேரையே வெட்டிச் சாய்க்கிறார்.இலக்கு என்று ஏதுமில்லை. பயணம் தான் முக்கியம் இலக்கு அல்ல.
ஆல்பர்ட் காம்யூ கூறுகிறார் உலகில் மனிதன் தீர்வு காண வேண்டிய ஒரேயொரு பிரச்சினை தற்கொலை செய்யாமல் வாழ்வது எப்படி என்பதுதான். இது மனப்பிறழ்வுப் பிரச்சினை. மெட்டா பிசிக்கல்  என்பதை ஓஷோ விளக்குகிறார்.  சார்த்தர் வாழ்க்கை அர்த்தமற்றது என்று கூறியதையும் ஓஷோ சுட்டிக் காட்டுகிறார். இது இருத்தலியல் பிரச்சினை எக்ஸிஸ்டென்ஷியலிசம்.
ஜென் அர்த்தம் தேடுவதில்லை. அது அர்த்தம் கூறுவதில்லை. அது தீர்வு காண்பதில்லை . அதனிடம் பதில் கள் இல்லை .கேள்விகளுக்கு மேலும் கேள்விகளையே ஜென் எழுப்புகிறது. கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது ஜென். அது ஒரு மலர்ச்சி .
" ஜென் மிகுந்த மலர்ச்சியுடன் முழுமையாக மலரும்போது அது சாரமாகிறது. அது நறுமணமாகிறது. மிகவும் புத்திசாலிகள் தாம் அதன் நறுமணத்தை நுகர முடியும் .அரைகுறைகள் அதனை கண்டு காயப்படுவார்கள். புரியாத ஒன்றுக்காக போராடுவார்கள்.
நான்சென் என்ற ஜென் குருவிடம்  ரிகோ என்ற சீடர் ஒருவர் வந்தார். ஒரு புதிரைப் போட்டார்.
ஒரு சீசாவுக்குள் சிறிய வாத்துக்குஞ்சை கொண்டு போடுகிறோம். வாத்து பெரியதாகி வளர்கிறது. அப்போது அதனை சீசைவை உடைக்காமல் வெளியே எடுப்பது எப்படி. சீசாவையும் உடைக்கக் கூடாது. வாத்தும் இறக்கக் கூடாது.
நான்சென் பலமாக இரு கைகளையும் தட்டி வாத்தை விரட்டுவது போல் சத்தமி்ட்டார்.
ரிகோ என்று கத்தினார் நான்சென்.
குருவே என்றார் ரிகோ
வாத்து வெளியே பறந்துவிட்டது என்றார் நான்சென்.
----------
சீசாவுக்குள்  உள்ள வாத்து போன்றவை தாம் நமது பெரும்பாலான பிரச்சினைகள், கவலைகள் என்கிறது ஜென். நாம் வாத்து போல சீசாவுக்குள் சிக்கிக் கொள்கிறோம்.  இதனால் தான் மனம் என்பது இந்திய மையால் எழுதிய சித்திரத்தில் பைன் மரத்தில் வீசும் காற்று போன்றது என்கிறார் இக்யூ.
மனத்தை என்னவென்று அழைப்பது என்று கேட்டார் இக்யூ
மனம் ஒரு டிஸ்னிலேண்ட் பொழுது போக்குப் பூங்கா என்கிறார் ஓஷோ.
அதற்கு மேல் எதுவுமில்லை. குருவின் வேலை இதுதான். உங்களுக்கு விளையாட பொம்மைகள் கொடுப்பார். தாவோ என்பார் ஜென் என்பார் .கடவுள் என்பார் ,ஞானம் என்பார் .இந்த பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென எல்லாவற்றையும் பறித்து அழித்துவிடுவார். அவர் புத்தரையே கோடாரியால் பிளந்து குளிர் காய்வார்.. எதையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காதே. பொய் மாயையைப் பிடித்து உழலாதே. போலி அசலாகாது என்கிறது ஜென்.
ஒரு குட்டிக் கதை
ஒருவர் சந்தைக்குப் போய் திரும்பிய போது தனது வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து பதறுகிறார். அந்த வீட்டில் மூன்று சிறிய குழந்தைகள் தனியாக இருக்கின்றன. அவை தீயைக் கண்டு அச்சப்படவி்ல்லை, வீட்டை விட்டு வெளியே ஓடிவரவில்லை. அதன் ஆபத்தை அவை அறியவில்லை. குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர தந்தை ஒரு உத்தியைக் கையாளுகிறார். உங்களுக்காக கடையில் இருந்து நிறைய பொம்மைகளை வாங்கி வந்திருக்கிறேன் ஓடி வாங்க என்று கத்துகிறார். உடனே அந்த மூன்று குழந்தைகளும் வீட்டை விட்டு ஓடி வெளியே வந்துவிடுகின்றன. அவரிடம் எந்த பொம்மைகளும் இல்லை.
இக்யூவும் இப்படித்தான் பொம்மைகளை கொடுப்பதாக உங்களை ஏமாற்றுகிறார் என்று ஓஷோ கூறுகிறார்.
இரவு நேரம் நிலவு காய்ந்துக் கொண்டிருந்தது. காட்டில் அலைந்து திரிந்தபடி வந்த ஒருவர் அங்கு ஒரு ஜென் ஆலயத்தைக் காண்கிறார் .அங்கு கூழாங்கற்களை ஊடுருவி ஒரு நீரோடை பாய்கிறது.காற்றின் பெருமூச்சுகள் அந்த நீரோடையின் சலசலப்புடன் சேர்ந்து குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது .ஒரு ஜென் குரு அங்கு அமர்ந்து கனப்பை மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டிருக்கிறார். அடுப்பில் இருந்து புகை மூண்டு எழுந்து காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது.
அவரிடம் பயணி கேட்கிறார் குருவே ஜென்னின் நோக்கம் என்ன ?
குரு அந்த புகையை சுட்டிக் காட்டுகிறார் .இப்படி புகை போல் ஆவதுதான் நோக்கம் என்கிறார் ஜென் குரு.
---------------------
இக்யூ சொல்வதைப் புரிந்துக் கொண்டால் உங்கள் கனவுகள் அந்தப் புகையைப் போல் கரைந்து காணாமல் போய் விடும் என்கிறார் ஓஷோ
---------
ஜென் தேநீர் 2 8
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN AND THE ART OF ENLIGHTMENT -OSHO
கடவுள் உண்டா என்பது தர்க்கப்பூர்வமான கேள்வி, இறைவன் இருக்கின்றானா அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கின்றான் என்று கண்ணதாசன் அவன் பித்தனா படத்தில் கேட்டார். முகநூல் நண்பர்கள் பலர் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை அறிவேன்.
எண்பதுகளில் தமிழ்நாட்டில் எழுந்த மார்க்சீயம், பெரியாரியம் அம்பேத்காரியம் பேரலையாக சிந்தனையாளர்களை ஆட்டிப் படைத்தது. ஆம் ஆட்டிப்படைத்தது என்றேதான் கூறுவேன். எப்படியோ என்னைப் போன்றவர்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டோம். இல்லையானால் நக்சலைட்டாகவோ தீவிரவாதியாகவோ முட்டாளாகவோ வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து செத்துப் போக நேரிடும். ஓஷோவும் அவர் அறிமுகம் செய்த ஜென்னும் தான் என்னை இறுக்கமான மனநிலையில் இருந்து இலகுவாக்கியது.
பலர் இன்னும் அப்படியேத் தான் இருக்கிறார்கள். அதனால்தான் ஜென் தேநீர் தொடருக்கு பத்து லைக்குகள் இருபது லைக்குகள், நான்கைந்து கமெண்ட்டுகள் மட்டும் வருகின்றன. நல்லது. செர்ரிக்கள் பூப்பதை எத்தனை பேர் வியந்து நின்று ரசிப்பார்கள் .கடந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று பாஷோ கூறியதையே வழிமொழிகின்றேன். இழப்பு செர்ரிகளுக்கு அல்ல.
ஜென் குரு இக்யூவைப் பற்றிய இந்த புத்தகத்தில் சீடர்களின் கேள்விகளுக்கு ஓஷோ பதில் அளிக்கிறார். அதில் கடவுளைப் பற்றியும் பேய் பயம் பற்றியும் ஓஷோ கூறுபவற்றை காண்போம்.
கடவுள் என்பதை உண்மை என்கிறார் ஓஷோ. ஈஷ்வர் சத்தியமாய் இருப்பவன் என்பார்கள். ஈஷ்வரன் சுந்தரமாய் இருப்பவன். ஈஷ்வரன் சிவமாய் இருப்பவன்.
மெய்மை, சத்தியம் அன்புதான் சிவம் என்பார்கள்.
மெய்மையை விட்டு நீ தான் தூரத்தில் இருக்கிறாய். மெய்மை உன்னை விட்டு தூரம் இல்லை என்பார் ஓஷோ. " மெய்மை இன்று இங்கே இப்பொழுதே இருக்கிறது. மெய்மை உன்னை விட்டு தூரமாக இல்லை. கடவுள் உன்னை விட்டு தூரமாக இருக்க முடியாது. கடவுள் உன்னுள்ளே நீயாக இருக்கிறார். கடவுள் நித்தியமாக இருக்கிறார். கடந்த காலமோ எதிர்காலமோ இல்லாமல் இருக்கிறார். கடவுள் எப்படி தூர விலகியிருக்க முடியும். தூரத்தில் அவருக்கு ஒரு இடம் இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். உன் மூச்சுக் காற்றில் இருக்கிறார் . உன் இதயத்துடிப்பில் இருக்கிறார். கடவுள் உன்னை விட்டுப் போய் விடவில்லை. நீதான் அவரை விட்டுவிலகிப் போய் விட்டாய் " என்கிறார் ஓஷோ.
பேய் பற்றியும் பேய் பயம் பற்றியும் ஓஷோ விளக்கம் அளிக்கிறார் .
ஒரு குட்டிக் கதை
ஒரு பேய் தன் குட்டி மிகவும் பயந்துப் போயிருந்ததைக் கண்டது .என்ன பயம் நாம்தானே பேய்கள். நம்மைக் கண்டு அல்லவா எல்லோரும் பயப்பட வேண்டும் என்று கேட்டது தாய் பேய்.
குட்டிப் பேய் சொன்னது.என் நண்பர்கள் எனக்கு மனிதர்களைப் பற்றி நிறைய கதை கதையாக சொன்னார்கள் .மனிதர்கள் வசிக்கும் இடத்தில் இருக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஆம் பேய்களும் உங்களைக் கண்டு அஞ்சுகின்றன. நீங்கள் மட்டும் பேய்களைக் கண்டு அஞ்சவில்லை என்கிறார் ஓஷோ.
" பேய்களுக்கு உடல்  இல்லை .எனவே அவை உனக்கு தீங்கு செய்யாது .அச்சம் வேண்டாம். உன் அச்சத்தில் இருந்துதான் பேய் உருவாகிறது.எந்த ஒரு காரணமும் இல்லாமல் நீயும் அச்சப்பட்டு பிறரையும் அச்சுறுத்துகிறாய். அச்சப்படுவதற்கு உனக்கு ஏதோ ஒன்று தேவை. எனவே மனிதர்கள் தங்களுக்கான பேய்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள் . அமெரிக்கர்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தாம் பேய்கள். அவர்கள் தம்யூனிஸ்ட்டுகளைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளுக்கு முதலாளித்துவம் தான் பேய். இந்துக்கள் இஸ்லாமைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள் .முஸ்லீம்கள் இந்துக்களைக் கண்டு அச்சம் அடைகிறார்கள்.
எல்லோருமே மற்ற எல்லோரையும் கண்டு அச்சப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோரைக் கண்டு அச்சப்படுகிறார்கள், பெற்றோரோ தங்கள் குழந்தைகளை நினைத்து மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்கள் ஆண்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள். மாணவர்களுக்கு ஆசிரியரைக் கண்டால் அச்சம். மாணவர்களைக் கண்டு ஆசிரியர்களும் நடுநடுங்குகிறார்கள்." என்கிறார் ஓஷோ.
அச்சம்தான் பேயை உருவாக்குகிறது .எல்லாவற்றையும் பேயாக மாற்றுகிறது.
வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க ....
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் எழுதி வைத்தார். புதுமைப்பித்தனும் பேய் இல்லை என்று தெரியும். ஆனால் பயமாக இருக்கே என்று காஞ்சனை கதையில் எழுதினார்.
மனிதனின் அடி ஆழ் மனத்துள் பயம் இருக்கிறது. இது மனவியல் பிரச்சினை என்று கூறிய சிக்மண்ட் பிராய்டு தனது நோயாளிகளை பல மணி நேரம் படுக்க வைத்து அபத்தமான விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார்.
இந்தியாவில் மனோதத்துவம் பிஸினஸ் டல்லடிப்பதற்கு காரணம் யாரும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து படுக்கையில் பல மணி நேரம் படுத்தபடி சிகிச்சை எடுக்க முடியாத நிலையால்தான் என்றும் ஓஷோ கூறுகிறார்.
மனிதன் எதனால் அச்சம் அடைகின்றான் என்று கேட்கிறார் ஓஷோ. பயம் ஏற்படும் போது அதில் நேரடியாக உள்ளே பாய்ந்து செல்லுங்கள் என்கிறார் அவர்.கண்களை மூடி பயத்துக்குள் செல்லுங்கள், பேய்களைப் பொருட்படுத்தாதீர்கள் ,நடுக்கம் வந்தாலும் பரவாயில்லை நடுங்குங்கள். ஆனால் எந்த வித விளக்கத்தையும் பேய்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். காரணமே இல்லாமல் நடுங்குங்கள், அலற வேண்டுமா ஆ என சத்தம் போட்டு அலறுங்கள் . ஆழமாக பயத்தினுள் நீங்கள் மூழ்க மூழ்க செல்ல செல்ல ஆச்சரியம் அடைவீர்கள். அங்கு எந்த அச்சமும் இல்லாத அமைதி இருக்கும். எல்லாமே அமைதியாக இருக்கும். முழுமையான அமைதியாக இருக்கும். அந்த அமைதிதான் உங்களுக்கு அச்சமற்றத்தன்மயைத் தரும். அதுதான் உங்களுக்கு ஆனந்தத்தைத் தரும் " என்கிறார் ஓஷோ.
------------
இக்யூவின் கவிதை வரிகள்....
சொர்க்கமோ நரகமோ நமக்கு அதைப் பற்றி நினைவில்லை.
எந்த அறிவும் இல்லை.
நாம் பிறப்பதற்கு முன்பு என்னவாக இருந்தோமோ அதுவாக ஆகி விட வேண்டும்.
மழை , பனி, பனிக்கட்டி, யாவும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்தவை.
ஆனால் விழுந்தபின்னர் அவை யாவும் ஒரே நீர்
பள்ளத்தில் பாயும் ஓடையாக அவை ஒன்று கலக்கின்றன.
புத்தரைத் தேடி இரவெல்லாம் நீ நடந்து சென்றால்
உனக்குள்ளே நுழையமுடியும்.
அதோ அங்கு நிற்கும் அந்த அற்புத மனிதரை
ஒரு கணம் கண்டால் போதும்
நாம் அன்பினில் தோய்ந்து விடுகின்றோம்.
-------------
ஒரு ஜென் குட்டிக் கதை
மா ட் சூ என்ற ஜென் ஞானியிடம் ஒரு தத்துவவாதி வந்தார் .ஞானம் என்றால் என்ன என்று உங்களுடன் நான் விவாதிக்க விரும்புகிறேன் என்றார் தத்துவவாதி.
சரி என்றார் மாட்சூ ...விவாதிப்பதற்கு முன்பாக முதலில் புத்தரை வணங்குவோம் என்றார்.
ஆம் நல்லதுதான். என்ற தத்துவவாதி குனிந்து புத்தர் முன் மண்டியிட்டு வணங்க குனிந்தார். அப்போது மாட்சு அவருடைய புட்டத்தில் ஓங்கி தன் காலால் ஒரு உதை விட்டார். தத்துவவாதி பல அடிதூரம் புரண்டுபோய் விழுந்தார். அதிர்ச்சியுடன் எழுந்த அவருக்கு முதலில் எதுவும் புரியவில்லை. பின்னர் தனது கேள்வியின் அபத்தத்தைப் புரிந்துக் கொண்டு கலகலவென வாய்விட்டு சிரிக்கலானார்.
தத்துவமும் ஞானமும் வெவ்வேறு. தத்துவம் பேசுபவர்கள் ஞானிகள் அல்ல .அரவிந்தர் ஒரு சந்நியாசி .ஆனால் ஞானம் அறிந்தவரல்ல என்கிறார் ஓஷோ. ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஞானத்தை தர்க்கமாகவே அறிந்திருந்தார். அவர்களை விட ரமணர் மேல் .ரமண மகிரிஷி ஞானியாகவே வாழ்ந்தார் என்கிறார் ஓஷோ. ரமணர் அதிகம் பேசமாட்டார். மௌனமாகவே இருப்பார் என்றும் கூறுகிறார் ஓஷோ
ஒரு முறை தத்துவவாதியான யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ரமணரிடம் வந்தார். கடவுளைப் பற்றி விளக்கம் கேட்டார். ரமணர் ஒரு ஜோக் புத்தகத்தை எடுத்து படிக்கும்படி யுஜி கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தாராம். என்ன இது நான் இவரை மகான் என்றுநம்பி வந்திருக்கிறேன். இவர் ஜோக் புத்தகத்தை எடுத்துக் கொடுத்த படிக்கச் சொல்கிறார்,நான் ஜேக்கடிக்கவா இங்கு வந்தேன் என்று யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி மிகவும் புண்பட்டு விட்டாராம். ஆனால் ரமணர் அளித்த மிகச்சிறந்த பதில் இது என்றும் இது கிட்டதட்ட ஜென் குருவின் விளக்கம் போன்றது என்றும் கூறுகிறார் ஓஷோ. புத்தர் தனது சீடரான மகாகாசியபருக்கு கொடுத்த மலரைப் போன்றது அது. தத்துவவாதிக்கு மாட்சூ புட்டத்தில் கொடுத்த அடி போன்றது அது. ஆனால் யுஜி கிருஷ்ணமூர்த்தி தவறவிட்டார் .அந்த ஞானத்தை அவரால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என்கிறார் ஓஷோ.
புத்தர் ஆறு ஆண்டுகளாக தியானம் செய்தார் .மிகவும் ஆழமாகவும் தீவிரமாகவும் அவர் தியானத்தில் லயித்தார். ஆனால் திடீரென அவருக்குள் உணர்தல் எழுந்தது. நான் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறேன். மரத்தில் பறவைகள் தியானம் செய்யவில்லை. மரங்கள் தியானம் செய்யவில்லை. அவை எந்த சூத்திரங்களையும் படிக்கவில்லை .இயல்பிலேயே அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன. முழு இருத்தலும் பிரபஞ்சமும் ஆனந்த லயத்தில் உள்ளது. நான் இங்கு பட்டினி கிடந்து தியானம் செய்து பல ஆண்டுகளாக இந்த மடத்தனத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் " என்றெல்லாம் எண்ணினார் புத்தர். இதை அறிய அவருக்கு பல ஆண்டுகளாகின. ஆனால் அதை அறிந்ததும் அவர் போதி மரத்தடியில் ஓய்வாக உறங்கிப் போனார். மறுநாள் காலையில் அவர் விழித்துக் கொண்ட போது அவர் ஞானம் அடைந்தவராக மாறியிருந்தார் என்று விளக்குகிறார் ஓஷோ.
ஒரு குட்டிக் கதை
முதலிரவில் மனைவியிடம் கணவன் கேட்டான் அன்பே என் பற்கள் பொய்யானவை. நான் என் பல்செட்டைக் கழற்றி வைத்தால் நீ கோபப்படமாட்டாயே....
மனைவி சொன்னாள் சேச்சே அதற்கு ஏன் கோபப்பட வேண்டும் .நானும் நிம்மதியாக இனி என் பிராவை கழற்றி வைக்கலாம் "
--------------
ஜென் தேநீர் 29
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN AND THE ART OF ENLIGHTMENT -OSHO
ஓஷோவின் நீண்ட உரைகளை முழுமையாகத் தர இயலாத காரணத்தால் என்னுடைய கட்டுரையில் சில இடங்களில் ஜம்ப் தெரிவதாக சில நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மைதான். புதுமைப்பித்தனே தனது உரைநடை தவளைப் பாய்ச்சல் நடை என்று சொன்னவர்தானே. இருக்கட்டு. சிட்டுக்குருவியின் சிறகு ஓரிடத்தில் நிற்காது என்று ராஜ்கபூர் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. எனக்கும் ஒரு கால் அந்தரத்தில் பறக்கிறது என்ன செய்ய இயல்பாகவும் அமைதியாகவும் ஆற அமரவும் எனக்கு இன்று வரை ஒரு நிழல் இல்லை. அதில்தான் இத்தனை இலக்கியமும். பரவாயில்லை.
சரி ஜென் ஞானமடையும் கலை என்ற புத்தகத்தின் இறுதிப்பகுதிக்கு வருவோம். இந்த புத்தகத்தில் இக்யூவின் கவிதைகளுக்கு உரையாற்றிய ஓஷோ தனது சீடர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்துள்ளார்.
இக்யூவின் கவிதை வரிகளைப் பார்ப்போம்....
மழை பெய்கிறது .பெய்யட்டும்.
மழை பெய்வதானால் பெய்யட்டும்.
ஆனால் மழை பெய்யாவிட்டாலும் நீ பயணிக்க வேண்டும
நனைந்த சட்டையுடன்.
செர்ரிப் பூக்கள் மலர்வதைப் பாருங்கள்.
அவற்றின் நிறமும் மணமும் அவற்றுடனே பூக்கின்றன.
பின்னர் என்றென்றைக்குமாக அவை மடிந்து மறைந்துவிடுகின்றன.
ஆனால் மீண்டும் வசந்தகாலம் வருகிறது.
பௌத்தம் தேநீர் அருந்தும் சாஸரின் வழித்த பகுதிதான்.
கூழாங்கற்களின் கிசுகிசுப்பு
படத்தில் உள்ள மூங்கில் மரங்களில் எழும் ஓசையைப் போன்றது.

செர்ரி மலர்களின் ஆயுள் அற்பமானதுதான். அவை அழகான நிறத்துடனும் மணத்துடனும் பூத்தாலும் விரைவாக மடிந்துவிடுகின்றன. அதுகுறித்து அவை கவலைப்படவில்லை. பூக்கும் போது முழுமையாகவும் பூரணமாகவும் பூத்துக் குலுங்குகின்றன.மீண்டும் வசந்தம் வருகிறது. அவை மீண்டும் மீண்டும் மலர்கின்றன என்கிறார் இக்யூ.
ஓஷோ கூறுகிறார். மனிதன் பிறக்கும்போதே அவன் மரணமும் அவனுடன் பிறந்துவிட்டது என்று. மரணத்தை வாழும்போதே பார்க்கப் பழகு என்று கூறுகிறார் அவர். அது மிகப்பெரிய அனுபவம். ஒவ்வொருநாளும் உன் உடல் இறந்துக் கொண்டிருக்கிறது. மரணத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
பௌத்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவனிக்கச் சொல்கிறது.இன்பம் ,துன்பம், எல்லாவற்றையும் ஒரு பார்வையாளராக ஒரு சாட்சியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறது.
கயிறு கட்டி நடப்பவன் இருபுறமும் சமன் செய்தபடியே ஒவ்வொரு அடியாக , கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலும் பத்திரமாக பார்த்து பார்த்து அடியெடுத்து வைப்பது போல் வாழ்க்கையை கடந்து செல்லுங்கள் என்கிறார் ஓஷோ.ஒருபுறம் இன்பம்,மறுபுறம் துன்பம், ஒருபுறம் பிறப்பு மறுபுறம் மரணம், ஆனால் அவன் நடுவில் சமன் செய்தவாறே கயிறு மீதுநடப்பதுபோன்றது தான் இந்த வாழ்க்கையும்.
போகுஜு என்ற ஜென் குருவிடம் ஒருவர் வந்தார். போகுஜூ மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மரணத்தை நோக்கி காத்திருந்தார். அப்போது அந்த மனிதன் கேட்டான் ." குருவே நீங்கள் இறந்துவிட்டால் எங்கே இருப்பீர்கள்? "
போகுஜூ கூறினார் ." நான் என் கல்லறையில் தான் படுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் என் இரண்டு கைகளும் இரு கால்களும் வானத்தை நோக்கி உயர்ந்திருக்கும்."
----------
மனம் புத்தராகவும் மாறலாம் பேயாகவும் மாறலாம் என்கிறார் இக்யூ. இது மிகவும் முக்கியமான வரி என்கிறார் ஓஷோ. புத்தன், பேய் எல்லாமே மனத்தின் கட்டமைப்புகள். பாவம் புண்ணியம் , ஞானி கிரிமினல் என பிரிவினைகளை மனம் தான் செய்கிறது.
அப்படியானால் யார் உண்மையான புத்தர் என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் ஓஷோ.
ஜென் புத்தர் என்றநபரே பிறக்கவில்லை என்றும் கூறுகிறது. அவர் வாழவே இல்லை. அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மரணமும் அடையவில்லை. ஞானமும் பெறவில்லை.
ஆனால் உண்மை வரலாறு வேறு. புத்தர் இவ்வுலகில் பிறந்தார். 82 வயது வரை வாழ்ந்தார். அவர் புராணப் பாத்திரம் அல்ல வரலாற்று பாத்திரம். காலத்தின் புரிந்துணர்வின் மீது அவர் மிகப்பெரிய தடம் பதித்துச் சென்றுள்ளார்.அவர் பிறந்தார் , ஞானம் அடைந்தார்.பல லட்சம் சொற்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 42 ஆண்டுகளாக போதனைகளை செய்தார்.
ஆனால் புத்தர் பிறக்கவில்லை ஞானம் பெறவில்லை ஒருவார்த்தை பேசவில்லை, மரணம் அடையவில்லை என்றெல்லாம் ஜென் குருக்கள் ஏன் கூறுகின்றனர்.?
புத்தர் பிறந்தார் என்பது யதார்த்தம். ஆனால் புத்தர் பிறக்கவில்லை என்று கூறுவது மன மிகை யதார்த்தம்( mind reality )  என்கிறார் ஓஷோ.
மனம்தான் புத்தர் . புத்தர் என்பது ஒரு உருவம் அல்ல. அது ஒரு உருவகம். ஞானம் என்பது ஒரு நிகழ்வல்ல .அது ஒரு நிலை.
ஓஷோ கூறுகிறார் " புத்தர் நிலை தான் ஞானம் .இங்கு யாருமில்லை. வீடு காலியாக இருக்கிறது என்பதை காண்பதாகும். இங்கு யாரும் வாழ்ந்ததில்லை. யாரும் வாழப்போவதுமில்லை. இது வெறும் வீடு.காலி வீடு. நாம் இதில் நிழல்களாக நடமாடுகின்றோம். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்று மௌனி கேட்டார்.
ஓஷோவும் இந்த உலகம் ஒரு காலி வீடு நாம் இதில் நிழல்கள் என்கிறார். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்கிறோம் ,கனவில் நடமாடுகிறோம், பின்னர் ஒருநாள் எல்லா கனவுகளும் மறைந்துவிடுகின்றன. எதுவும் இருப்பதில்லை.
இந்த கனவுமயமான வாழ்க்கையைக் குறித்து மெதுவாக மெதுமெதுவாக நீங்கள் பிரக்ஞை அடையும் போது கனவு மறையத் தொடங்கும் ,கனவு கலையத் தொடங்கும். கனவு பின்னகர்ந்துப் போகும் .பிரக்ஞை முழுமையாகும் போது கனவு மறைந்துவிடும். இதன் பிறகு நீ ஒரு புத்தனா இல்லையா ஆணா பெண்ணா .பாவியா புண்ணியவானா எதுவும் பொருட்டல்ல. உண்மையான மனிதனின் ஒரு கணநேரப்பார்வை கிடைத்தாலும் அந்த மனிதனுடன் நீ காதல் கொண்டு விடுவாய் என்கிறார் ஓஷோ.
------------------------

ஓஷோவையும் ஜென்னையும் புரிந்துக் கொள்வது எளிதல்ல. லாஜிக் இல்லாத ஒரு பார்வையை ஓஷோ தருகிறார். அவர் சுட்டிக் காட்டும் ஜென் குருக்களும் ஹைகூ கவிஞர்களும் அத்தகையவர்கள் தாம் .மழை பெய்யாவிட்டாலும் நனைந்த சட்டையுடன் பயணிப்பவர்கள் அவர்கள்.
இந்த முரண்பாடு தான் ஜென்னின் அழகு. இந்த முரண்பட்ட குறுக்கு வெட்டுத் தோற்றம் தான் ஜென்னின் சிறப்பு. ஜென் முழுவதுமே கவித்துவமானது. இதில் யதார்த்த வாழ்வின் பிம்பங்களைத் தேட வேண்டாம். ஜென் படித்தால் எனக்கு அறிவு கிடைக்குமா என்று யோசிக்க வேண்டாம் ,ஜென் படித்தால் எனக்கு என்ன லாபம் என்று சிந்திக்காதீர்கள். எதுவும் கிடைக்காது.
அப்படியானால் ஏன் ஜென் படிக்க வேண்டும் ?
அப்படியானால் ஏன் ஓஷோவைப் படிக்க வேண்டும்?
புத்தர் சொல்வது போல் ஞானம் என்பது உனக்குள் இருப்பதுதான். அதை வெளியில் தேடக் கூடாது. ஆனால் அது என்னுள்ளே இருப்பதை சுட்டிக்காட்டுவதுதான் ஜென்.
---------------------
ஜென் கதை ஒன்று
ஒரு அரசன் ஜென் குருவைப் பற்றி கேள்விப்பட்டு சபைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். வீரர்கள் அவரை சபைக்கு அழைத்து வந்தனர். ஜென் என்றால் என்ன என்று எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார் மன்னர்.
ஜென் குரு தனது மடியில் இருந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
---
இரண்டு ஜென் குருக்கள் உரையாடல்
எங்கே போகிறாய்
கால் போன போக்கில் போகிறேன்
கால்களே இல்லாவிட்டால் எங்கே போவாய்
காற்று வீசும் திசையில் போவேன்.
காற்றே இல்லாவிட்டால் எங்கே போவாய்
காய்கறி வாங்கப் போவேன்.

முதல் வரிக்கு பதில் கடைசி வரி தான் .ஆனால் ஜென் இதனை எப்படி கவித்துவமாக விளக்குகிறது பாருங்கள். சராசரி மனிதனைப் போல்தான் ஜென் குருவும் காய்கறி வாங்கப் போகிறார்.
---------------
ஜென் தேநீர் 30
ஓஷோவும் ஜென்னும் ....
செந்தூரம் ஜெகதீஷ்
OSHO -THE GOOSE IS OUT புத்தகத்தைப் பற்றியும் அதில் உள்ள ஜென் குறிப்புகளையும் இனி அலசுவோம்.
ஒரு குட்டிக் கதை ஏற்கனவே சொல்லி விட்டேன். தவறவிட்டவர்களுக்காக மீண்டும்....
நான்சென் என்ற ஜென் குருவிடம்  ரிகோ என்ற சீடர் ஒருவர் வந்தார். ஒரு புதிரைப் போட்டார்.
ஒரு சீசாவுக்குள் சிறிய வாத்துக்குஞ்சை கொண்டு போடுகிறோம். வாத்து பெரியதாகி வளர்கிறது. அப்போது அதனை சீசைவை உடைக்காமல் வெளியே எடுப்பது எப்படி. சீசாவையும் உடைக்கக் கூடாது. வாத்தும் இறக்கக் கூடாது.
நான்சென் பலமாக இரு கைகளையும் தட்டி வாத்தை விரட்டுவது போல் சத்தமி்ட்டார்.
ரிகோ என்று கத்தினார் நான்சென்.
குருவே என்றார் ரிகோ
வாத்து வெளியே பறந்துவிட்டது என்றார் நான்சென்.
-------------
இந்த கதையின் தலைப்பையே புத்தகத் தலைப்பாக வைத்து ஓஷோவின் ஜென் பற்றிய உரை  தொகுக்கப்பட்டுள்ளது.இக்கதை ஒரு ஜென் கோன். கோன் என்றால் புதிர். ஜென் கதைகளும் கவிதைகளும் புதிரானவை. ஓஷோ கூறுகிறார் " வாத்து எப்போதுமே சீசாவுக்குள்  இருந்ததில்லை. அது எப்போதுமே வெளியில் தான் இருக்கிறது. "
ஜென் ஒரு மதம் அல்ல. அது வழிபாட்டு முறையும் அல்ல, அது ஒரு தேடல், ஒரு விசாரணை. அது புனிதநூல் அல்ல , அது அ-தத்துவார்த்தமானது என்றும் ஓஷோ குறிப்பிடுகிறார்.
ஜென் குரு ஆசிரியர் அல்ல. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இடியட்ஸ் என்பார் ஓஷோ. கிளிப்பிள்ளைகளைப் போல யாரோ எப்பதோ எழுதி வைத்த செத்த பாடங்களை மீண்டும் மீண்டும் குழந்தைகளின் மூளையில் திணித்து அவர்களை மழுங்கடிக்கக்கூடியவர்கள் அறிவுசார் ஆசிரியர்களும் உயர்கல்வி படித்த பேராசிரியர்களும்தான் என்பது ஓஷோவின் விமர்சனம் .எனக்குத் தெரிந்து மிகச்சில ஆசிரியர்களையே நான் இடியட்ஸ் என்று கூறுவதற்கு கூச்சப்படுவேன். தருமபுரி தங்கமணி எசப்பன் எனக்குத் தெரிந்த அருமையான ஆசிரியர். நிறைய நண்பர்கள் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நான் கூறுவதையும் ஓஷோ கூறுவதையும் கேட்டால் கோபப்படுவார்கள். என்ன ஆனாலும் சரி ஊதுகிற சங்கை ஊதித்தான் ஆக வேண்டும். முதலில் இந்த கல்வி முறையை ஒழித்துக் கட்டியே தீர வேண்டும்.
ஜென் குரு ஆசிரியர் அல்ல. அவர் இடியட் அல்ல .அவர் ஞானி. அவருடைய போதனைகள் ஒரு குயிலின் தொலைதூரக் கூவலைக் கேளுங்கள் என்று கூறுகிறது. ஜென் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டால் ஜென் குரு புல்லாங்குழல் எடுத்து வாசிக்கிறார்.
" ஜென் குரு ஆசிரியர் அல்ல. அவர் உனக்கு எதையும் கற்றுக் கொடுக்கமாட்டார். மாறாக நீ கற்றுக்கொண்டு மண்டையில் சுமந்து திரிபவற்றையெல்லம் அவர் பிடுங்கிக் கொள்வார் " என்று ஓஷோ விளக்குகிறார்.
உனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த குரு சில உத்திகளைக் கையாளுகிறார். கைத்தட்டுவது ஒரு உத்திதான். ரிகோ வாத்து வெளியே பறந்துவிட்டது என்று குரு கத்துவதும் ஒரு உத்திதான் ரிகோவை நிகழ்காலத்திற்குள் கொண்டு வரும் உத்தி இது .அவரது கற்பனாவாதத்திற்கு -வாத்து சீசாவுக்குள் சிக்கிக் கொண்ட கற்பிதத்திற்கு குரு முடிவு கட்டுகிறார். அது ரிகோவே எதிர்பார்க்காதது என்றெல்லாம் ஓஷோ கூறுகிறார்.
கடந்த காலம் எதிர்காலம் என்ற இரண்டு மாயைகளில் இருந்து மனத்தை மீட்டு குரு நிகழ்காலத்திற்கு உன்னைக் கொண்டு வருகிறார். கைத்தட்டுவதும் கத்துவதும் அதன் உத்திகள்.  வாத்து எப்படி வெளியே வந்தது என்றே தெரியாத வகையில் அதனை வெளியேற்றி விட்டார் குரு.
ஒரு பாம்பு தன் சட்டையை உரிப்பது போல என்கிறார் ஓஷோ.
ஒரு ஜென் குரு இருந்தார். அவர் திடீரென வாய்விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டார். அவர் சீடர்கள் பயந்துவிட்டனர், குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என எல்லோரும் கவலையுடன் அவரை சூழ்ந்தனர். அக்கம் பக்கம் வசித்தவர்களும் சாமிக்கு என்ன ஆச்சு என்று விசாரிக்க வந்துவிட்டனர். அவர் திடீரென இரவில் நடனமாடுவார். பாட்டுப்பாடுவார். சத்தம் போட்டு கத்துவார் .இதனால் மற்றவர்களுக்குத் தொல்லை ஏற்படக்கூடாது என்று பாதாள அறையில் பூட்டி வைத்தனர். ஆனால் திடீரென அவர் ஓயாமல் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
ஒரு சீடர் என்ன ஆச்சு குருவே ஏன் சிரிக்கிறீர்கள் என்று விசாரித்தார்.
குரு சொன்னார் அதுதான் எனக்கும் தெரியவில்லை. என்னை பாதாள அறையில் பூட்டி வைத்தீர்கள். நான் படுக்கையில் இருந்து திடீரென தூக்கத்தில்  விழுந்துவிட்டேன். விழுந்தவன் கீழே விழாமல் மேல் நோக்கி விழுந்தேன். மனிதன் மேல் நோக்கி விழுவானா என்று சிரி்க்கத் தொடங்கி விட்டேன் என்றாராம்.
ஞானம் என்பது உங்களைக் கீழே தள்ளி விழச்செய்வது அல்ல ,மேல் நோக்கி விழச் செய்வது என்கிறார் ஓஷோ. புவி ஈர்ப்பு சக்திக்கு முரணானது இது.
-------
மனிதன் துன்பத்தையே விரும்புகிறான் .ஆனந்தத்தை அவன் அடைவதே இல்லை என்றும் ஓஷோ கூறுகிறார். துன்பம் மனத்தின் எதிர்மறை நிலை. இன்பம் சாதக நிலை . நீ துன்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஆனந்தமாக இருப்பதற்கான அர்த்தம் ஆகாது .துன்பமும் இல்லாமல் இன்பமும் இல்லாமல் இருக்கலாம் அவ்வளவுதான் உன்னால் முடியும் என்கிறார் ஓஷோ.
பைபளில்  இன்பமான மனிதனை காண முடியவில்லை. இன்பமான மனிதன் மிகுந்த புத்திமானாக இருப்பான். ஆனந்தத்தில் மிதக்க புத்திசாலியால் தான் முடியும். கற்றாரைக் காமுறுதலும் அந்தவரை இன்பம்தான்.
பைபிள் முழுவதும் தேடினாலும் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்து ஒருவரியில்லை என்கிறார் ஓஷோ. ஏகப்பட்ட பிதற்றல்கள் அதில் உள்ளன என்றும்  விமர்சிக்கிறார். மூட நம்பிக்கைகள் போற்றப்படுவதாகவும் கூறுகிறார்.  ஏழைகளைச் சுரண்டுவதுதான் கிறித்துவ ஆலயங்களின் பணியாக இருக்கிறது என்றும் ஓஷோ சாடுகிறார்.
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் என்ற தென் அமெரிக்க கவிஞன் எழுதினான் " முன்பு எங்கள் கைகளில் நிலங்கள் இருந்தன. அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது .இப்போது எங்கள் கைகளில் பைபிள் இருக்கிறது . எங்கள் நிலங்களில் அவர்களின் தேவாலயங்கள் இருக்கின்றன "
மதத்தின் பெயரால் நடைபெறும் சுரண்டல்களை ஓஷோ கண்டிக்கிறார். எல்லா மதங்களும் சுரண்டுகின்றன. ஆனால் ஜென் எதையும் சுரண்டுவதில்லை.
நிலவில் முதன்முதலாக கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் திடீரென தாம் அமெரிக்கர் என்று மறந்துவிட்டார். நிலாவை கீழே இருந்து ரசித்தவர் இன்று அதில் கால் பதித்துவிட்டார். அந்த ஆனந்தத்தில் அவர் திளைத்தார். கீழே பூமியைப் பார்த்த போது அவர் உலகை அமெரிக்கா ஆப்பிரிக்கா ரஷ்யா என பிரித்துப் பார்க்கவில்லை . ஒரே உலக உருண்டையாகத்தான் பூமியை அவர் தரிசித்தார் . அவர் ஆனந்தப் பெருக்குடன் கூறிய முதல் வாக்கியம் என் இனிய பூமியே என்பதுதான் .
ஜென்னும் உங்களை உலகை ஒரே பூமி உருண்டையாகப் பார்க்க வைக்கிறது. நிலவில் கால் பதித்த அந்த ஆனந்தப்பெருக்கை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது.
ஒரு கேள்வி - ஓஷோ வாத்து உண்மையில் வெளியே வந்துவிட்டதா .?
ஓஷோ -அது எப்போதும் உள்ளே இருந்ததில்லை. அது வெளியே தான் உள்ளது. சீசாவுக்குள் அடைந்துகிடப்பதாக நீதான் கனவு காண்கிறாய்.
இந்த கனவில் இருந்து நீ விடுபடும் போது , கனவை கலைத்துவிடும் போதுதான் சீசாவுக்குள் வாத்து சிக்கியிருக்கவில்லை என்பதை புரிந்துக் கொள்வாய் .உன் கற்பிதங்கள் மறையும் .ஆனந்தம் பெருகும்.
ஜென் என்பது ஆனந்தம்.
-------------

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...