Thursday 22 October 2015

சந்திப்பு-10 வெங்கட் சுவாமிநாதன்


தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் விமர்சகர்களில் ஒருவரான வெ.சா.எனப்படும் வெங்கட் சுவாமிநாதன் கடந்த அக்டோபர் 21 2015 அன்று காலமானதாக சற்று தாமதமாகவே எனக்குத் தெரிய வந்தது. தாமதத்திற்கு காரணம் நானும் மினி மரணத்தில் இருந்ததுதான்.கடுமையான காய்ச்சலுடன் சுயநினைவே இன்றி படுத்த படுக்கையாகவே பேப்பரைக் கூட புரட்டாமல் கிடந்தேன். என் நலம் விசாரித்த நண்பர்களின் மிஸ்டு கால்களை தேடிப்பிடித்து ஒவ்வொருவராக போன் செய்து பேசும்போது தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு தோழி உங்க அபிமான எழுத்தாளர் வெ.சா இறந்துட்டாராமே என்று கேட்ட போது ஒரு கணம் உலகம் நின்று விட்டு இயங்கியது.நிஜம்தானா...நம்பவே முடியாமல் ஜெயமோகனின் வலைதளத்தைப் பார்த்த போது அஞ்சலி செய்திகள் இருந்தன.

வெங்கட்  சுவாமி நாதனை நான் முதன் முதலில் சந்தித்தது மயிலாப்பூர் அரங்கு ஒன்றில். அப்போது 80களின் தொடக்கம். நான் எழுதத் தொடங்கிய காலம். சிசு செல்லப்பா நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு தந்தார்.பேசிய பிறகு வெகுளியாக பாராட்டவும் செய்தார். அதன் பிறகு அதே கூட்டத்தில் வெ.சாவை சந்தித்து அறிமுகமானேன். எனது படைப்புகளை சிற்றிதழ்களில் படித்திருந்தார். கோவை ஞானி, திகசி , திலீப்குமார் ஆகியோருடன் நான் பழகி வந்த காலம் என்பதால் அவர்களும் என்னைப் பற்றி கூறியிருக்கலாம், ஓரிரு வார்த்தைப் பரிமாற்றத்துடன் நீண்ட நாள் நண்பர் போல் பேசத் தொடங்கிவிட்டார். நானும் அவரது நூல்களைப் படித்திருந்தேன். அதைப் பற்றி கூறியதும் அவர் முகம் மலர்ந்தது. விரிவாகவும் ஆழமாகவும் படிக்கிற ஒரு வாசகனை கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் அவர் முகத்தில்.அதே காலகட்டத்தில் கோவை சென்றிருந்த போது, மும்பையிலிருந்து கோவைக்கு மாற்றலாகி வந்திருந்த நாஞ்சில் நாடனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு விஜயா பதிப்பகத்தில் உருவானது. அவரது நாவல்களும் சிறுகதைகளும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. சதுரங்க குதிரை அப்போது வெளியாகியிருந்தது. கோவை வஉசி பூங்காவில் அந்த நூல் பற்றி ஞானி நடத்திய நிகழ் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். விஜயா பதிப்பத்தில் நாஞ்சில் நாடனுடன் பேசும்போது வெ.சா.நீண்டகாலமாக மௌனமாக இருந்தது தமிழ்இலக்கியத்துக்கு பேரிழப்பு என நாஞ்சில் நாடன் கூறினார். அப்போது வெ.சா மீது படைப்பாளிகளுக்கு உள்ள மரியாதை மிகப்பெரியது என்பதை உணர்ந்தேன்.
  • தொடர்ந்து வெ.சாவை தொலைபேசி வாயிலாகவும் நிகழ்ச்சிகளிலும் சிலமுறை சந்திக்க நேர்ந்த போது பிரியத்துடன் பேசினார். ஒருமுறை ரஷ்ய கலாச்சார மையத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் அவஸ்தையில் இருந்தார். செந்தூரம் இங்கே வாங்க....என்னை பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விடுவீங்களா என உரிமையுடன் கேட்டார். அவருடன் கைப்பிடித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைக் கடந்து அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை வழியாக டிஎம்எஸ் பஸ் ஸடாண்ட் வரை அழைத்துப் போனார். அப்படியொரு பாதையை நான் அறிந்திருக்கவில்லை. நானாக இருந்தால் ஜெமினி பாலம் கீழ் சென்று காமராஜர் அரங்கு வழியாகவே போயிருப்பேன். இப்போது அந்தப் பாதை செம்மொழிப் பூங்காவுடன் சங்கமமாகி விட்டது போல் தோன்றுகிறது.
    டிஎம்.எஸ் பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டும் ஒரு கையால் தடியை ஊன்றியபடியும் முதுமையிலும் துடிப்போடு தனது வீடு நோக்கி செல்லும் வெ.சாவைப் பார்த்து எனக்கொரு காரை கடவுள் தரவில்லையே என மனசுக்குள் அழுதேன். ஆட்டோவுக்காவது அவர் செலவழிக்க வசதி இருந்திருக்கலாம். அவருக்கும்இல்லை எனக்கும் இல்லை.
    ஆனால் பல தலைமுறைகளாக தமிழ் எழுத்துக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் அப்படித்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்
    2008ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு வெ.சா.வை பேட்டி காண அவருடன் தொடர்பு கொண்ட போது, ஆயிரம் ரூபாய் பணம் தருவீயா என்றார். அய்யா எங்க தொலைக்காட்சியில் பணம் தரமாட்டாங்கய்யா என்றேன். அப்ப பேட்டி கிடையாது போ.....சி.எம் ( கலைஞர்) கோவிச்சுக்குவாரா பரவாயில்லை என்று சிரி்த்தபடி கூறினார்.
    என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இன்னும் மிச்சமிருப்பவைக்கு அவர் புதிய பார்வை இதழில் விமர்சனம் எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய ஜாம்பவான் எனக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என்று மகிழ்ச்சியில் தள்ளாடினேன்.
    ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள் வெ.சாவை சந்தித்த போதும் என்னைப் பற்றி பிரியத்துடன் விசாரித்ததாக கூறுவார்கள் .அவனை நான் அவன்இவன்னுதான் கூப்பிடுவேன், கோவிச்சுக்குவானா என்ன என்று அவர் கூறினாராம். என் பெயரை வெசா போன்றவர்கள் உச்சரிப்பதே எனக்கு பாக்கியம்தானே.
    வெ.சாவின்இலக்கியப் பணியைப் பற்றி பேசாமல் இப்படி கடவுள் துதி மாதிரி பாடுவதாக யாரும் கருத வேண்டாம். அறிந்தேதான் பேசுகிறேன். என்னை யாரும் மன்னிக்கத் தேவையில்லை. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் சிசுசெல்லப்பா, கநாசு, பிரமிள், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய மேதைகள் தங்கள் படைப்பாளுமையை பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தற்போது சிலர் செய்யும் இலக்கிய விமர்சனங்கள் போன்று அவை குதிரை லாடம் கட்டியது போன்ற தடாலடி விமர்சனங்கள் அல்ல..ஆழப்படித்து தீர விவாதித்து எழுப்பிய இலக்கிய அஸ்திவாரங்கள், விமர்சனம் மூலம் நல்ல இலக்கியத்தைக் கட்டிக் காத்த தூண்கள் இவர்கள்.
    எம்.வி.வெங்கட்ராம் மறைந்த போது தினமணியில் மறுநாளே ஜெயமோகன் இரங்கல் கட்டுரை எழுதி விட்டார். அச்சும் ஆகி விட்டது. அப்போது ஜெயகாந்தனின் காரில் அவருடன் மைலாப்பூர் லஸ் கார்னர் அருகே நான் அமர்ந்திருந்தேன். அப்போது ஜேகே சொன்னார் மனிதர் செத்து அவர் சாவுக்கு பால்கூட ஊத்தறதுக்கும் முன்னே இந்த ஆளுக்கு ( ஜே கே பயன்படுத்திய சொல்லை பயன்படுத்தவில்லை) என்ன அவசரம் ? அதுவும் அவர் இரண்டு கதைகள்தான் நல்லா எழுதியிருக்காருன்னு....அதைச் சொல்ல நீ யாரு...உனக்கென்ன தகுதி?
  • இப்போதைய இலக்கிய விமர்சனம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. நான் சிரித்துக் கொண்டே ஜேகேவிடம் சொன்னேன் . அய்யா நாளை உங்களுக்கும் இப்படித்தான் நடக்கும். 
  • ஜேகேவும் ரசித்தார். அதே போல் சமர்த்தாக நம்ம ஜெயமோவும் ஜே,கே,இறந்ததும் சுடச்சுட இரங்கல் கட்டுரை எழுதி பிரசுரம் செய்துவிட்டார். ஜே,கே, சொர்க்கத்தில் கூட வாய்விட்டு  சிரித்திருப்பார். அல்லது கெட்ட வார்த்தைகளால் ஜெமோவை திட்டித் தீர்த்திருப்பார்.

  • வெ.சா.வை மறுவாசிப்பு செய்து விரிவாக எழுதுவது என் கடமை. செய்வேன்.

Monday 12 October 2015

புலி விஜய் -விக்கியுடன்







விக்கியுடன் புலி படம் பார்க்க சாந்தி தியேட்டருக்குப் போயிருந்தேன், விக்கி விஜய் ரசிகன் என்று ஏற்கனவே இந்தப் பகுதியில் பதிவு செய்திருக்கிறேன். ( காண்க இளைய தளபதி விஜய் ரசிகன் )
விக்கிக்கு இது இரண்டாவது தடவை. எனக்கு முதல் முறை. அவன் விஜய் படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பான். அவனுக்காக நான் ஒருமுறை பார்ப்பேன்.
புலி படம்  ஆடியோ ரிலீசுக்கு அழைத்துப் போக விக்கி என்னை நச்சரித்தான். எனக்கு சினிமாக்காரங்க யாரையும் தெரியாது. யார் பாஸ் தருவாங்கன்னு புரிய வைக்க முடியலே. அதுவும் விழா நடப்பது மகாபலிபுரத்தில். ஆட்டோ பஸ்சுக்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து 500 ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். நான் மறுத்து விட்டேன். அவன் முகத்தை தூக்கிக் கொண்டு சரியாகப் பேசவில்லை. விஜயுடன் ஒரு செல்பி எடுப்பது அவன் ஆசை. ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனும்இளையராஜாவும் பேசியதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டே இருந்தான் விக்கி. விழா முடிந்ததும் நான் ஜெயமோகனிடம் அழைத்துச் சென்று கமலுடன் ஒரு செல்பி எடுக்க வைப்பேன் என்ற ஆதங்கம் அவனுக்கு .அதுவும் நிறைவேறவில்லை. கூட்டத்தில் பின்தள்ளப்பட்டோம். கமல் எப்படியோ இறங்கி போய் விட்டார். இளையராஜாவும் இல்லை. கடைசியில் ஜெயமோகனுடன் செல்பி எடுத்து வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதை டிலெட் செய்யவும் சொல்லி விட்டான்.
சரி விழாவுக்குத் தான் அழைத்துப் போக முடியவி்ல்லை. படத்திற்காவது அழைத்துப் போகலாம் என அவனை இரண்டாம் முறையாக புலி படம் பார்க்க அழைத்துப் போனேன். சாந்தி தியேட்டருக்குப் போனதில் ஒரு காரணம் இருந்தது. விரைவில் அந்த திரையரங்கை இடிக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. மேலும் எனது பால்ய காலத்துடன் அந்தப் படம் பின்னிப் பிணைந்திருக்கிறது. தங்கப்பதக்கம், மன்னவன் வந்தானடி, ரிஷிமூலம் போன்ற படங்கள் எல்லாம் அப்போது சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி ஆகிய திரையரங்குகளில் வெளியாகி புவனேசுவரியில் மூன்று நான்கு வாரமும் கிரௌனில் 50 நாட்களும் சாந்தியில் வெள்ளிவிழாவும் கொண்டாடுவது வழக்கம். மன்னவன் வந்தானடி புவனேசுவரியில் 100 நாள் கொண்டாடியது. தங்கப்பதக்கம் வெள்ளி விழா.
இப்போதைய படங்கள் 3 நாள் வசூலை நம்பி ஏராளமான திரையரங்குகளில் வெளியாகின்றன. எந்த தியேட்டரில் எந்தப் படம் எந்தக் காட்சி என்று யாருக்கும் தெரியாது. பேப்பர் பார்த்தால் தெரியும். போஸ்டர்கள் இல்லை.
ஆனால் ஆச்சரியமாக புலி பத்தாவது நாளிலும் ஹவுஸ்புல்லாக இருந்தது. சாந்தி திரையரங்கு மோசமாக இருந்தது. 80 ரூபாய் டிக்கட்டே அந்தக் காலத்தில் நான் பார்த்த 2 ரூபாய் டிக்கட் பெஞ்சு போலத்தான் இருந்தது. உள்ளே ஒருவர் போக வேண்டுமானால் கால்களை முட்டி மிதித்துதான் போகவேண்டும். அழகான பெண்கள் தொடைகள் உரசப் போனாலும் சிலிர்ப்பு உண்டாகும். பாடாவதி தடியன்கள் குடிபோதையில் மிதித்துவிட்டுப் போனார்கள்


படம் காமிக்ஸ் கதைதான் பேசும் பறவை, 180 வயது ஆமை , யவனராணி கோட்டை என குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி ஜாலியாகப் போகிறது. அவ்வப்போது ஸ்ருதி ஹாசனும் ஹன்சிகாவும் என்னைப் போன்ற காய்ந்துப் போன ஜென்மங்களுக்காக இடுப்பையும் தொடையையும் காட்டி அரேபியன் பெல்லி டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்கள்.


ஒருவகையில் எனது பால்ய பருவத்துடன் விக்கியின் பால்ய பருவத்தையும் இணைத்து விட்ட திருப்தி எனக்கு சாந்தி திரையரங்கின் பால்ய நினைவுகள் போல அவனுக்கும் இருக்கும் அல்லவா


புலி படம் பத்திய விமர்சனம்இல்லை. படம் போரடிக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் எனது அபிமான நாயகியான ஸ்ரீதேவிதான் அநியாயத்திற்காக வீணடிக்கப்பட்டு விட்டார். பிரபுவும் டெல்லி கணேஷ் போல முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தில் வந்து போகிறார். விஜய் விஜய் விஜய் தான் வேறு எதுவும் இல்லை படத்தில் . ஸ்ரீதர் பிரசாத் இசையில் ஜிங்கிலா ஜிங்கிலா என்று ஒரு பாட்டை விக்கி முணுமுணுத்தபடி என்னுடன் பைக்கில் வந்தான். எனக்கும் அந்தப் பாட்டு பிடித்தது. பாடினேன்.

அஞ்சலி -மனோரமா

 ஆச்சி என்று திரையுலகில் அனைவராலும் மதிக்கப்படுபவரான மனோரமா காலமானார் .ஆரம்பத்தில் நகைச்சுவையாகவும் பின்னர் பண்பட்ட குணச்சித்திர நடிகையாகவும் கதாநாயகியாக அல்லாமல் அவளின் சேடியாகவே தோன்றி பல நேரங்களில் முக்கியப் பாத்திரங்களையே விழுங்கி ஏப்பம் விட்டவர் மனோரமா.
சிறிய வயதில் என் பாட்டி திநகரில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அழைத்துப் போனார். இளம் பிராயத்தில் சிவாஜி எனக்கு பிரமிக்க வைத்த நடிகர். ஞான ஒளி, பாபு , பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் சிவாஜியை மெய் மறந்து ரசித்திருக்கிறேன். சிவாஜி வீட்டுக்குப் போன போது அவர் படப்பிடிப்புக்காக புறப்பட்டு போய் விட்டார். என் பாட்டி அழைத்துச் சென்ற நோக்கமே என்னைக் காட்டி படிப்புக்கு பணம் கேட்பதுதான். அந்தப் பணத்தை அவர் சீட்டு கட்டவும் இதர பல செலவுகளுக்கும் பயன்படுத்துவார். அதில் எனக்கும் நாலைந்து ரூபாய்கள் கிடைக்கும். அது என் சினிமா பார்ப்பதற்கான காசு. சிவாஜி வீட்டுக்குப் பிறகு நாங்கள் மனோரமா வீட்டுக்குப் போனோம். மனோரமாவை அப்போது மட்டும் நேரில் பார்க்க முடிந்தது. நடுத்தர வயதில் இருந்தார். மங்களமாக சிரித்தார். பாட்டிக்கு அள்ளி தானம் தந்தார். அவர் மகன் பூபதியை அறிமுகம் செய்தார். அவர் என்ன பேசினார் என நினைவில் இல்லை.
தொடர்ச்சியாக  திரைப்படங்களில் மனோரமாவின் நடிப்பை பின்தொடர்ந்து வந்திருக்கிறேன்
மனோரமாவை நகைச்சுவை நடிகையாகவும் பார்க்கலாம் குணச்சித்திர நடிகையாகவும் பார்க்கலாம். எப்படி பார்த்தாலும் அவர் ஆல் ரவுண்டர்தான். ரவுண்டி கட்டி ஆடும்போதும் சரி அழுது வடியும் போதும் சரி ரசிகர்களை கட்டிப் போட்டவர்தான் ஆச்சி
அபூர்வ சகோதரர்களில் கமலுடன் போட்டி போட்டு ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா
ஆச்சியின் வெற்றிடம் நிரப்பமுடியாததுதான்.


Saturday 10 October 2015

JAZBAA- ஜஸ்பா

நடிகை ஐஸ்வர்யா ராய் சுமார் 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் இது. அக்டோபர் 9ம் தேதி வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே படத்தைப் பார்த்து விடுவது நல்ல அனுபவம். தேவி பாரடைசில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். சிறுவயதில் தேவி பாரடைசில் 2 ரூபாய் 90 காசு டிக்கட்டில் படங்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது டிக்கட் விலை 120 ரூபாய்.

படம் வழக்கமான கிரைம் திரில்லர். பழிக்குப் பழி வாங்கும் படம்.தான். ஆனால் ஐஸ்வர்யா என்ற அழகு தேவதை தனது முதிர்ந்த வயதுடனும் நடிப்புடனும் நம்மை கட்டிப்போடுகிறார். மகளை கடத்தியவர் பாலியல் பலாத்காரம் கொலை செய்த ஒரு கொடியவனை தப்பச் செய்ய வாதாடும்படி லாயரான அனுராதா வர்மாவை ( ஐஸ்வர்யா ராய் ) கட்டாயப்படுத்த அவரும் அவர் ஆண் நண்பரான சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யவ்வானும்( இர்பான் பத்தான் ) ஐஸ்வர்யாவின் மகளான சனாய்னாவை( தேசிய விருது பெற்ற சிறுமி சாரா ) மீட்பதும் குற்றவாளியை கண்டுபிடிப்பதும்தான் கதை. ஷபனா ஆஸ்மி, ஜாக்கி ஷராப் போன்ற தெரிந்த முகங்கள் முக்கியப் பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். குரூரமாக கெடுக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணாக பிரியா பானர்ஜியும் ஒரு கலக்கல் நடனக்காட்சியில் மாடல் அழகி தீக்சா கவுலும் நடித்துள்ளனர்.

மும்பை நகரின் பேரழகையும் பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதையும் ஏரியல் ஷாட்டுகளில் காட்டி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையின் தாக்கம் ஒரு தனிமைப் பாடலுடன் முடிந்துவிடுகிறது. வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. இயக்குனர் சஞ்சய் குப்தா முடிந்த மட்டும் படத்தை சீராக கொண்டு செல்கிறார்.

கடற்கரை ஓரமாக நீண்ட ஒற்றையடிப்பாதையில் ஐஸ்வர்யா ராய் ஜாகிங் செய்யும் முதல் காட்சியிலிருந்து தனது காதலை மென்மையாக வெளிப்படுத்தும் இர்பானிடம் உதவியாளன் உரையாடும் காட்சி வரை படம் பிடித்தது. ஆனால் கிளைமேக்ஸ் சஸ்பென்சுக்கு இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டியதில்லை.
படத்தை ஐஸ்வர்யா ராய்க்காக மட்டுமே பார்க்கப் போயிருந்தேன். ஏமாற்றவில்லை. ஒரு அற்புதமான நடிகையாகவும் அவர் பரிணமித்துள்ளார். தாய்மையும் அழகும் அவரது புகழை மேலும் கூட்டத்தான் செய்துள்ளன.புருவங்களின் கீழ் கருவளையம் அதிகமாக பூசப்பட்ட லிப்ஸ்டிக் எல்லாம் இருந்தாலும் அவர் அழகானவர்தான். கண்கள் போதுமே.

Saturday 3 October 2015

உலக சினிமா - நயாகரா- காமத்தின் அலை புரளும் வீழ்ச்சி




அழகான பெண் கூரிய கத்தியைப் போன்றவள். அவளுடைய அழகு ஆபத்தானது. அவளுக்கும் அவளை நேசிப்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. உலக அழகிகளின் காதலர்கள் அல்லது கணவர்களின் நிலைமை பரிதாபகரமானது. எப்போது வேண்டுமானாலும் அவள் அவனை விட்டுச் செல்லக் கூடும். அவனை விட வசதியான அல்லது அழகான இன்னொருவனுடன் படுக்கையைப் பகிர்ந்துக் கொள்ளக் கூடும். அவனுடன் சேர்ந்து கணவரை கொல்லவும் திட்டமிடக்கூடும். பரிசுத்தமான அழகுடன் கம்பன் படைத்த சீதையைப் போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அழகு எந்த நேரமும் அவர்களது புனிதத்தை கலைத்து விடக்கூடியது.

நிஜவாழ்வில் அழகான பெண்ணை மணந்தவனுக்கு காண்பவன் மீது எல்லாம் சந்தேகம் வருகிறது. என் மனைவியை ஏன் வெறித்துப் பார்க்கிறாய் என முறைப்பதை பார்த்திருக்கிறோம். தன்னுடைமையாக்கிக் கொண்ட பேரழகியை இன்னொருவன் பார்க்கக் கூடாது என்பது தான் அவன் எண்ணம். முஸ்லீம் பெண்கள் இன்னும் ஒரு படி மேல். முழுவதும் புர்காவால் உடலை மட்டுமின்றி கூந்தலையும் மூடிக் கொண்டார்கள். அழகு ஆண்களைப் பித்தாக்கும். தவறிழைக்கத் தூண்டும் என்பதே இதன் அர்த்தம்
கண்களை மறைத்து விட்டால் எண்ணம் மறைந்து விடுமா என்பது தனிப் பிரச்சினை
அழகின் வஞ்சகங்கள் குறித்து ஆயிரம் பேர் எழுதி விட்டார்கள். ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் வந்து விட்டன. அதில் ஒரு அற்புதமான திரில்லர் படம் தான் நயாகரா.
1953ம் ஆண்டு டெக்னி கலரில் இப்படம் வெளியானது. டெக்னி கலர் என்பது சினிமாஸ்கோப் வருவதற்கு முன்பாக வண்ணப்படங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஈஸ்ட்மேன் கலரை விட கூடுதலாக பளிச்சென காட்சியளிக்கும் .இந்தியில் ஆன் என்ற படமும் தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மனும் டெக்னி கலரில் எடுக்கப்பட்டவை.

நயாகரா படத்தில் இரண்டு கதாநாயகிகள் .ஒருவர் உலகப் புகழ் பெற்றவரான பேரழகி மர்லின் மன்றோ. இன்னொருவர் மன்றோவைப் போல் அழகாக காட்சியளிக்க முயன்ற ஜீன் பீட்டர்ஸ்.இப்படத்தில் இரண்டு ஜோடிகள் கதாநாயகனாக நடித்தவர் மிகச்சிறந்த நடிகரான ஜோசப் காட்டன், ரோஸ் என்ற அவருடைய மனைவியாக நடித்தார் மர்லின் மன்றோ
மற்றொரு ஜோடி ஜீன் பீட்டர்ஸ் மற்றும் அவர் கணவராக நடித்த ஷோ வால்டர். மர்லினின் கள்ளக்காதலன் பாட்ரிக்காக நடித்தவர் ரிச்சர்ட் ஆலன்.

இப்படத்தின் இயக்குனர் ஹென்றி ஹாத்தவே. திரைக்கதை எழுதியவர்கள் சார்லஸ் பிரெக்கெட், ரிச்சர் பிரீன் மற்றும் வால்டர் ரெய்ஸ்ச் ஆகியோர். இசையமைத்தவர் சோல் காப்ளன். ஒளிப்பதிவாளர் ஜோ மெக் டோனால்ட்
மர்லின் மன்றோ முதல் சிலுக்கு ஸ்மிதா வரை பேரழகிகளின் வாழ்க்கை தடுமாற்றம் மிக்கது. அந்தரங்கமும் மர்மமும் நிறைந்தது. அவர்களின் அழகை ஆயிரமாயிரம் கண்கள் பருகி பசியைத் தூண்டிக் கொண்டிருப்பினும் ஓரிரு ஜோடிக் கண்கள் அவர்களை கொல்லவும் தற்கொலைக்குத் தூண்டவும் திட்டமிட்டு வந்தன.

மர்லின் மன்றோவின் மர்ம மரணத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வரை பலரின் பெயர் நாறியது.தூக்கமாத்திரை விழுங்கி அவரது வாழ்க்கை முடிந்து விட்டது. பல்லாயிரக்கணக்கானோரை தூங்க விடாமல் செய்த அந்தப் பேரழகு யாருக்கும் சொந்தமாகாமல் சிதறிப்போனது.

இப்படத்திலும் மர்லின் மன்றோ கொல்லப்படுகிறார். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் பின்னப்பட்ட திரைக்கதை நம்மை வசியம் செய்கிறது. ஒரு கிரைம் திரில்லருக்கான அடித்தளமாக காமமும் காமத்தின் கரை புரண்டோடும் உணர்ச்சி வெள்ளமும் சித்தரிக்கப்படுகிறது.

கனடா நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான நயாகராவில் புரண்டோடி பாயும் பெருக்கை காட்டியபடி ஓடும் நீரில் மின்னும் வானவில்லின் ஏழு நிறங்களுடன் படத்தின் டைட்டில் கார்டுகள் ஓடும் போதே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகிறோம்.

தாமதமாகி விட்ட தேனிலவுக்காக நயாகரா வரும் ஜோடியான பாலியும் அவள் கணவர் ரேயும் அருவியை பார்க்கும் வகையில் ஓட்டல் அறையை முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால் அன்று காலை அறையை காலி செய்ய வேண்டிய ரோசும் (மர்லின் மன்றோ) அவள் கணவரும் அறையை காலி செய்யவே இல்லை. தன் கணவர் மன நலம் சரியில்லாதவர் சிகிச்சை எடுத்து வருகிறார். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு அருவிக்குப் போய் அலைந்து திரிந்து இப்போதுதான் வந்து படுத்து தூங்குகிறார் என்பார் மர்லின். முன்னதாக அவள் கணவர் அதிகாலை 5 மணி்க்கு அருவி அருகே நடந்து வந்து அறையில் நிர்வாணக் கோலத்தில் தூங்கும் தன் அழகான மனைவியைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.

இதனால் வேறு அறைக்கு கட்லர் தம்பதிகள் மாற்றப்படுகிறார்கள். அங்கேயிருந்தும் அருவி தெரியுமா எனக் கேட்கிறாள் பாலி, தெரியும் ஆனால் சூரிய வெளிச்சம் அறைக்குள் அதிகமாக இருக்கும் என்பார் ஓட்டல் சிப்பந்தி.

மர்லின் ஷாப்பிங் செல்வதாக புறப்பட தன் கணவரின் பார்வையை அவளிடமிருந்து திருப்பி அழைத்துச் செல்வார் பாலியாக நடித்த ஜீன்.

இந்த தம்பதிகள் அருவி அருகே படமெடுக்க செல்வார்கள். மனைவியை பின்னகர்ந்து போகச் சொல்லி படமெடுப்பார் கணவர் . பின்னகரும் போது தெரியும் மர்லின் இன்னொருவரை முத்தமிட்டுக் கொண்டிருப்பது. ஷாப்பிங் போன மர்லின் நிறைய பொருட்களுடன் வருவார் என நக்கலடிப்பார் ஜீன்.

ஓட்டலில் நடைபெறும் விருந்தில் தம்பதியின் அருகே மர்லின் வந்து அமர்வார். அவர் மார்பு பிளவுகள் தெரியும் லோகட் ஆடை அணிந்திருப்பார். முழங்கால்களும் தெரியும் வகையில் தொடை விளிம்பில் நிற்கும் அந்த ரோஸ் மிடியில் ஒரு தேவதை போல் வருவார் மர்லின் மன்றோ, வந்து அமருவதற்கு முன்பாக அங்கு ஓடிக் கொண்டிருக்கும் ரிகார்ட் பிளேயரில் கிஸ் ஆப் லைப் என்ற அழகான காம இச்சையைத் தூண்டிவிடும் பாடலை அவர் விரும்பிக் கேட்பார். அந்தப்பாடலின் வரிகளை முணுமுணுத்தபடி ஹம்மிங் செய்வார். இந்தப்பாட்டு உங்களுக்கு மிகவும் பிடிக்குமா என ஜீன் கேட்க பாட்டு என்றால் இதுதான் என்பார் மர்லின். இதை பார்க்கும் மர்லினின் கணவர் ஜோசப்புக்கு ஆத்திரம் வரும். தன் மனைவியின் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் இந்தப்பாடலை அவர் வெறுக்கிறார். அவர் வேகமாக வந்து பாடிக்கொண்டிருக்கும் ரிக்கார்டை எடுத்து துண்டு துண்டாக உடைத்து எறிவார். அதை மர்லின் அதிர்ச்சியடையாமல் வழக்கமானது என்பது போல் ஒரு பார்வையை வீசுவார்
ரிகார்ட்டை உடைக்கும் போது ஜோசப்பின் கையை அது கீறி ரத்தம் வரும். முதலுதவி செய்ய ஜீன் ஜோசப்பின் அறைக்கு வருவார். இருவருக்கும் இடையே நட்பான ஒரு உரையாடல் தொடங்கும். தன் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணை மர்லினின் கணவர் நட்புடன் அணுகுவார். அப்போது அவர் நயாகராவை பல வண்ணங்களில் இரவு எட்டு முப்பது மணிக்கு வண்ணவிளக்குகள் ஒளிர ஜீனுக்கு காட்டுவார். அப்போது நடைபெறும் உரையாடலில் அவர் கூறுவார்

நயாகரா அழகானது மிகவும் அழகானதுதான். அருவிக்கு மேல் உள்ள நதியின் ஓட்டத்தைப் பார்த்திருக்கிறாயா....அது அமைதியானது. ஆரவாரம் செய்யாதது. ஒரு மரத்துண்டை தூக்கிப் போட்டால் அதுபாட்டுக்கு மிதந்து செல்லும். அலைகள் அதை தாலாட்டிக் கொண்டே அழைத்துச் செல்லும். ஆனால் வழியில் ஒரு பாறை மோதிவிட்டால் அது அலையின் ஓட்டத்தை விட்டு ஆர்ப்பரிக்கும் அலைகளின் மேற்பரப்பிலிருந்து உள்பரப்புக்குள் மூழ்கி, உள்ளே தடம் புரண்டு ஓடும் நீரின் ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் .நீ்ர் விழக்கூடிய பகுதியை நோக்கி போகும். அப்போது கடவுளே நினைத்தால் கூட அதன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது.

நயாகராவின் நீரோட்டமே நமக்கு மர்லினின் கதையை சொல்லி விடுகிறது. மர்லின் தனது காதலன் பாட்ரிக்குக்கு போன் செய்து அழைக்கிறாள். நாளை கதையை முடித்து விட வேண்டும்.இன்று ரிக்கார்டை உடைத்து எல்லோர் முன்னாலும் அசிங்கப்படுத்தி விட்டார் எனக் கூறுவார். நாளை அவரை ரெயின்போ குகைக்கு அழைத்து வா. அங்கே நான் கவனித்துக் கொள்கிறேன் என்பான் பாட்ரிக். சொல்லி போனை வைத்து அவன் படுக்கைக்கு போகும் போது கேமரா அவன் அணிந்துள்ள வெள்ளயும் கருப்பும் கலந்த ஷூக்களைக் காட்டுகிறது.

ரெயின்போ கோபுரம் என்றழைக்கப்படும் குகையும் அதன் மரப்படிகளுடனான கோபுரமும் 165 அடி உயரமானது.அதில் கரோலின் எனப்படும் இசைக்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.அதற்கான கீ போர்டும் இருக்கும். விரும்பிய பாடலை அதில் ஒலிக்கச் செய்தால் நகரம் முழுவதும் அந்த இன்னிசை ஒலிக்கும்.55 மணிகள் மர பேட்டன்களுடன் ஒலிக்கும் வகையில் கீ போர்டு அமைக்கப்பட்டது.30 கால் பெடல்களும் உண்டு. மொத்தம் 43 டன் எடை கொண்ட இவை எழுப்பும் இசை நாதம் தேனானது.

மறுநாள் காதலனை சந்திக்கும் போதும் அவள் அந்த பாடலின் ஹம்மிங் மூலம் அவன் இருப்பதை அறிகிறாள். அந்த இசை அவளை மயக்குகிறது. மர்லினுக்கு அவன் ஒரு துண்டுச்சீட்டை தருகிறான். அதில் கதையை முடித்ததும் நமக்குப் பிடித்தமான கிஸ் ஆப் லவ் பாடலை ரெயின்போ குகைக்குள் ஒலிக்கும் மணிகளில் ஒலிக்க செய்கிறேன் . புரிந்துக் கொள் என்று அதில் எழுதியிருப்பான்.

ஆனால் கதை மாறுவது இங்கேதான். காதலனை கணவர் கொலை செய்து விடுகிறார். மனைவியை ஏமாற்ற அந்த மணியில் அவளுக்குப் பிடித்த பாட்டையும் ஒலிக்க செய்கிறார். இறந்தது தான்தான் என நம்ப வைக்க காதலனின் ஷீவை இவர் அணிந்து தனது ஷீவை அவனுக்கு அணிவிக்கிறார்.

மணியில் ஒலிக்கும் தனக்கு பிடித்த பாட்டை முணுமுணுக்கும் மர்லின் காரியம் காதலனால் கச்சிதமாக முடித்து விட்டதாக புன்னகை புரிவார். ஆனால் கணவரின் உடலை அடையாளம் காண அழைத்துச் செல்லப்படும் அவர் இறந்தது கணவரல்ல காதலன்தான் என அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுவார். அவர் நினைவுகளில் அந்த மணிகளும் அந்தப் பாடலும் ஒலித்துக் கொண்டே அவரை வாட்டி வதைக்கும்.

இதனிடையே ஜீன் மர்லினின் கணவரை பார்த்து ஓடுவார். அவரை மடக்கிப் பிடித்து தான் இறந்தவனாக இருக்க விரும்புவதாக கூறுவார் ஜோசப். போலீசில் காட்டிக் கொடுக்காதே என கெஞ்சுவார். ஆனால் ஜீன் போலீசுக்குத் தகவல் சொல்லி விடுகிறாள்.

சுயநினைவு திரும்பும் மர்லின் மன்றோ தனது கணவர் தன்னைப் பின்தொடர்வதை அறிந்து தப்பி ஓடும் போது மீண்டும் ரெயின்போ குகைக்குள் மாடிப் படிகளில் ஏறிச் செல்வார் .ஜோசப்பும் அவரைக் கொல்லும் வெறியுடன் பின்தொடர்வார். ரெயின்போவின் காவலாளி கதவைப் பூட்டிச் சென்று விடுவார். தனியாக சிக்கிக்கொள்ளும் மர்லினை அவள் கணவர் கழுத்தை நெறித்துக் கொல்கிறார்.அப்போது அந்த மணிகளில் எந்தப் பாடலும் ஒலிக்காமல் அவை மௌனமாக இருக்கும்.
மர்லினின் உடல் சாய வெளியே செல்ல முயற்சிக்கும் அவர் கதவு பூட்டப்பட்டிருப்பதால் மீண்டும் தன் அழகான மனைவியின் உடலருகே வந்து தான் அவளை அளவு கடந்து நேசித்ததை வெளிப்படுத்துவார். அப்போது அவள் லிப்ஸ்டிக் ஒன்று அவள் அழகின் விஷத்தன்மையை விவரிக்கும் வகையில் அவர் கையில் கிடைக்கும்.

காலையில் கதவு திறந்ததும் தப்பிச் செல்லும் ஜோசப் ஒரு படகைக் களவாடி நயாகராவில் பயணிக்க திட்டமிடும் போது தற்செயலாக அந்தப் படகில் ஜீன் வந்து அமர்கிறாள். தற்கொலை உணர்வுடன் படகை உடைத்து வெள்ளத்தில் அதை மூழ்கடிக்கத் திட்டமிடும் ஜோசப் கடைசி கட்டத்தில் ஜீனை ஒரு பாறையில் தள்ளிவிட்டு விடுவார். பாறையில் தொற்றிக் கொள்ளும் ஜீன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட கடவுளால் கூட தடுத்து நிறுத்த முடியாத வெள்ளப்பெருக்கில் ஜோசப்பின் படகு தடம் புரண்டு அருவியில் விழுந்து காணாமல் போகும்.

நயாகராவும் மர்லின் மன்றோவும் இப்படத்தின் இருபெரும் அழகுச்சித்திரங்களாக நம் கண் முன்னே தவழுகின்றனர்.அழகும் ஆபத்தும் ஒருசேர இருக்கும் அஃறிணையாக நயாகரா நம் முன்னே கொட்டிக் கொண்டே இருக்கிறது. படம் முழுக்க பாத்திரங்களுடன் இதனைப் பொருத்தி பொருத்தி அவர்களின் உணர்ச்சி வெள்ளத்திற்கேற்ப இது தணிந்தும் ஆர்ப்பரித்தும் நமக்கு ஒரு குறியீடாக காட்சியளிக்கிறது.

இப்படத்தில் ஜீனுடன் மர்லினின் கணவர் பேசும் காட்சியில் தன் மனைவி ஆடை அணியும் விதத்தை அவர் குறை கூறுவார். அழகை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறாள் என்பார். அவர் அழகானவர்தானே வெளிப்படுத்தட்டுமே என்பார் ஜீன். முழங்கால் தெரியும் அந்த ஆடையை நீ அணிவாயா என்று கேட்பார் ஜோசப். நான் அந்தளவுக்கு அழகியும் இல்லை நாகரீகமானவளும் இல்லை என்று பதிலளிப்பார் ஜீன். அவள் ஒரு தறுதலை என ஆத்திரத்துடன் ஜோசப் கூற அதை ரசிக்காமல் ஜீன் அவனுடைய ஆணாதிக்க மனோபாவத்தை கோபத்துடன் காண்பாள்.

இந்த ஒரு காட்சிதான் படத்தை சாதாரண கிரைம் கதையிலிருந்து இலக்கியத்தரமான படமாக மாற்றுகிறது. ஹிட்ச்காக்கின் திகில் படங்களும் அகிரா குருசோவாவின் படங்களும் எப்படி சாதாரண மாத நாவல் தரத்திலான கிரைம் கதைகளாக கூறப்பட முடியாதவையோ எப்படி தாஸ்தேயவஸ்கியின் குற்றமும் தண்டனையும் போன்ற கதைகள் குற்றத்தின் தன்மையை அலசுகின்றனவோ அதைப் போல் இந்தப் படமும் கொலைக் குற்றம் புரியும் ஒரு அழகியின் கணவரது நிச்சயமற்ற தன்மை கொண்ட மனநிலையை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியிலும் ஒரு புறக்கணிப்பு ஒரு காயம் ஒரு துன்பம் ஒரு வலி மறைந்திருக்கிறது. அழகிய பெண்களின் கணவன்மார்களுக்கு துரோகத்தின் வலியாகவும் இது இருக்கக் கூடும்.
குமுதம் தீராநதி அக்டோபர் 2015 ல் அச்சான கட்டுரை இது.


Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...