Monday 3 June 2013

மூர்மார்க்கெட்

சென்னை சென்ட்ரல் நிலையத்தை ஒட்டி மூர்மார்க்கெட் இருப்பது பலருக்கும் தெரியும். முன்பு  இருந்த மூர்மார்க்கெட் இப்போது ரயில்வே புக்கிங் கவுண்டரும் புறநகர் ரயில்கள் புறப்படும் இடமும் அமைந்த கட்டிடத்தில் இருந்ததும் நாம் அறிந்திருப்போம். அந்த பழைய மூர்மார்க்கெட் தீயில் கருகியதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால் அந்தப் பழைய மூர்மார்க்கெட்டுடன் எனது பால்ய காலத்திற்கு நெருக்கமான உறவு உண்டு.

திருச்சியில் படித்துக் கொண்டிருந்த நான் குடும்பத்தின் இடம் பெயர்தல் காரணமாக, சென்னை வந்து சேர்ந்தேன். இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மாலையில் நானும் எனது நண்பன் சேகரும் விளையாடச் செல்லும் இடம் இந்த மூர்மார்க்கெட்தான்.

அப்போது அங்கே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக ஒருவர் மோடி வித்தை காட்டுவார். ஒரு நாளும் நாங்கள் அந்தச் சண்டையைப் பார்க்க முடியவில்லை. காரணம் கையில் காசு இல்லை. காசு இருப்பவர்கள் மட்டும் நிற்க வேண்டும் மற்றவர்கள் போய்விட வேண்டும் என்றும் பாம்பு-கீரி சண்டையில் காசு போட மறுப்பவர்கள் ரத்தம் கக்கி செத்து விடுவார்கள் என்றும் அந்த பாம்பாட்டி மிரட்டுவான். அதனால் நாங்கள் பயந்து ஓடியே போய் விடுவோம்.

கொஞ்சம் வளர்ந்த நிலையில் எனிட் பிளைட்டன் புத்தகங்களை வாங்க நான் மூர் மார்க்கெட் சென்றேன். பதின் பருவங்களில் அமர்சித்ர கதாவும் முத்துக் காமிக்சும் அணில் முயல் போன்ற இதழ்களும் படித்து வந்த எங்களுக்கு அட்வென்ச்சர் கதைகளில் நாட்டம் அதிகரித்தது. சங்கர்லால் துப்பறியும் கதைகள், மேதாவி சிரஞ்சீவி மர்ம நாவல்கள் மற்றும் எனிட் பிளைட்டன் நூல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனிட் பிளைட்டன் எனக்கு விரைவில் சலித்துப் போய்விட்டார். அதைவிட கனமான நூல்களில் நாட்டம் அதிகரித்து, விக்டர் ஹ்யூகோவையும் ஷேக்ஸ்பியரையும் ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட டால்ஸ்டாய், புஷ்கின். மாயகாவாஸ்கி, மாக்சிம் கார்க்கி, ஷோலக்கோவ் போன்ற நூல்கள் மீது ஆர்வம் அதிகரித்திருந்த்து.
ஆனால் மூர்மார்க்கெட் எங்கும் நிறைந்திருந்த புத்தகக் கடைகளைப் பார்க்கவே அடிக்கடி அங்கு செல்வது வழக்கமாகி விட்டது.
மூர்மார்க்கெட் எரிந்து சாம்பலாகிப் போன போது இரண்டு மூன்றுநாட்கள் சோறு தண்ணீ இல்லாமல் ஜூரமடித்துக் கிடந்தேன். இப்போது சற்று பின்னால் இருந்த அல்லிகுளத்தில் மற்றொரு மூர்மார்க்கெட் முளைத்திருக்கிறது. இங்கும் புத்தக கடைகள் இருக்கின்றன. வாரத்தில் ஒருமுறையாவது இங்கு போய்விடுகிறேன். அபூர்வமான புத்தகங்களுடன் அருகில் உள்ள பழைய பொருட்கள் சந்தையில் சில ஒரிஜினல் திரைப்பட டிவிடிக்களும் பத்து இருபது ரூபாய்க்கு கிடைக்கின்றன. பாம்புச் சண்டை நடைபெற்ற இடத்தில் இப்போது சர்க்கஸ் கூடாரம் அமைக்கிறார்கள். எத்தனையோ சினிமாப் பட டூயட்கள் படமாக்கப்பட்ட மைலேடீஸ் பூங்காவில் இப்போது காதலர்களும் தொப்பையைக் குறைக்க வரும் மார்வாடிகளும் சில ஏழைச்சிறுவர்களும்தான் காணப்படுகின்றனர்.
எனது நினைவுகளில் உள்ள மூர்மார்க்கெட்டும் இன்று நான் கண்ணெதிரில் காணும் மூர்மார்க்கெட்டும் வேறுதான். ஆனால் ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் வாசனையும் அதனுடனான எனது உறவும் நீங்காமல் இங்கு நிலைத்திருக்கிறது.



Sunday 2 June 2013

செந்தூரம் ஜெகதீஷ் - senthooram jagdish


என்னைப் பற்றி நானே எழுதியுள்ள விக்கிபீடியாவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் வழக்கமான பயோடாட்டா சமாச்சாரங்கள். அதைத் தவிர்த்து சொல்ல எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

நான் தெளிவான குழப்பவாதி. சோ கூட தோற்றுவிடுவார். சரி என நினைப்பது தவறாகவும் தவறு என நினைப்பது சரியாகவும் இருக்கும். மாத்தி யோசிப்போம் என்று நினைத்தால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும்.

விதிமீது நம்பிக்கை வலுப்பெற்றுவிட்டது. நான் வாழும் வாழ்க்கைக்கும் அதன் அத்தனை துயரங்களுக்கும் விதியைத் தவிர வேறு யாரையும் நான் குறை கூற மாட்டேன்.

சிறுவயது முதல் படிப்புதான். படிப்பு என்றால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் வெளியேதான். கன்னிமரா , அமெரிக்க, பிரிட்டிஷ் நூலகங்கள், மாவட்ட நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள். புதிய புத்தகக் கடைகள். புத்தகக் கண்காட்சிகள். பேருந்து நிலைய பத்திரிகைக் கடைகள் என எதையும் விடவில்லை.
ஜவுளிக் கடைகள் முதல் டிவி செய்தி சேனல்கள் வரை பல இடங்களில் பணியாற்றி விட்டேன். அங்காடித் தெரு வாழ்க்கையை கிடங்குத் தெரு
நாவலாக எழுதத் தெரிந்தாலும் சினிமாவாக்க தெரியவில்லை. சம்பாதிக்கவும் தெரியவில்லை,என்னுடன் பழகிய ஜெயமோகன்தான் அதை காசாக்கிக் கொண்டார். திருடினார் என நான் சொல்லமாட்டேன்.

காதல் ,நட்பு என எப்போது நான் முகம் மலர்ந்தாலும் அடுத்து அதற்கான விலையையோ வலியையோ நான் சுமக்க நேரிட்டு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை சினிமாவும் இலக்கியமும் இருகண்கள் போன்றவை எனக்கு. இவை இல்லாமல் வாழ முடியாது. இதே போல எனது குடும்பமும்  உறவுகளும் எனக்கு எத்தனை கசப்பை தந்திருந்தாலும் மனதுக்கு அவை  தேவைதான். இவையின்றி நான் வாழத் தெரியாதவன்.

ஓஷோவும் சாப்ளினும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் எனது ஆதர்ச குருமார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் முகமது ரபியும் டிஎம்.எஸ்சும் இவர்களும் இவர்களைப் போல பலர் உருவாக்கிய இசை உலகமும் எனக்கு சுவாசக்காற்று.
ஹென்றி மில்லரும் காப்காவும், இந்திப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோஜ்குமாரும் எனது உணர்வுகளுக்கு நெருக்கமானவர்கள். காரல் மார்க்சுக்கும் எனது லால் சலாம்.
ஏசு. புத்தர், ராமர், முகமது நபிகள் என எல்லாப் பெயர்களும் என்னைப் பொருத்தவரை ஒரு தோட்டத்தின் பலவகை நறுமண மலர்கள்தான்.தாமரைக்கும் ரோஜாவுக்கும் லில்லிக்கும் பகையிருப்பதாக நான் நினைக்கவில்லை, பகையைத் தூண்டுவது அரசியல், மத அரசியல்.  நான் இறைவனின் அழகான இத்தோட்டத்தில் பாடித்திரியும் பறவைதான்.


என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் இப்போது அர்த்தம் புரிந்து விட்டது. நான் அதில் மகிழ்ந்து நடமாடிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எனது அடுத்த நாவலில் படிக்கலாம்.சினிமா இயக்குனர்கள் என்னிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்துக் கொள்ளலாம்,.








சி.சு.செல்லப்பாவும் எழுத்தும்

                                                                 
c
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பா, எழுத்து என்ற தமது இதழ் மூலம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றவர். நான் அவரை சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் சந்தித்து என் பேரைக் கூறி, அவர் கதைகளைப் படித்திருப்பதாகக் கூறியதும் குழந்தையைப் போல வெகுளியாக சிரித்து என் கையைப் பிடித்து தன் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து சென்றார். வாசல் வரை அவரை வழியனுப்பும் போது பிரமீள் வந்துவிட்டார்.இருவரும் பேசிக் கொள்வதில்லை என நண்பர்கள் கூறினார்கள்.அதற்கேற்றாற்போல செல்லாப்பாவும் விடுவிடுவென விலகி சென்று யாரோ அழைக்க அவருடன் போய்விட்டார். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை திருவல்லிக்கேணி-அமீர் மகால் அருகே இருந்த அவர் வீட்டுக்குப் போனபோது, வீட்டு வாசலில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. அழைத்து வந்த நண்பர் அவரது அவசரம் காரணமாக செல்லப்பாவுடன் என்னைப் பேச விடவில்லை. அவரும் பேச ஆர்வம் காட்டவில்லை. யாரோ வந்தாங்க போனாங்க என்று நினைத்திருப்பார். ஆனால் மானசீகமாக ஒரு சீடனைப் போல ஒரு ஏகலவனைப் போல நான் செல்லப்பாவை வாசித்திருக்கிறேன். அவருடைய வாடிவாசலைவிடவும் கள்ளர் மடத்தையும் சரஸாவின் பொம்மையையும் ராட்டினம் கதையையும் நேசித்திருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் என்னால் இயன்றவரை அவருக்கு மிகச்சிறந்த அஞ்சலி செலுத்தும் வகையில் ,எழுத்து பற்றியும் செல்லப்பாவைப் பற்றியும் ஆவணப் படமாகத் தயாரித்தேன். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அதன் பிரதி இப்போது என்னிடம் இல்லை. நண்பர்கள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியை அணுகி இதுபோன்ற அரிய ஆவணப்படங்களை மீட்க எனக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். கனிமொழி மனது வைத்தால் நடக்கும்.

சிசு.செல்லப்பா பிராமணர் என அவரை எதிர்க்கும் குணம் எனக்கு இல்லை. பாரதிதான் பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று பாடினான். எந்த தலித்தும் பாடவில்லை. 

அண்மையில் நண்பர் தீபம் திருமலை எழுதிய நா.பா பற்றிய புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த போது அதில் செல்லப்பாவைப் பற்றி திருமலை எழுதிய சில பக்கங்கள் மனதை நெருடின. எத்தனை அபூர்வமான மனிதரை நமது வாழும் காலத்தில் நாம் தவறவிட்டிருக்கிறோம் என்ற வேதனையும் வலியும் அதிகமானது. எழுத்து தொகுப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் முன்வந்த போதும் சி.சு.செல்லப்பாவின் மகன் தொடர்பற்றுப் போனதும், பணத்துக்கு ஆசைப்பட்ட செல்லப்பாவின் உறவினர் ஒருவர் அதை இழுத்தடித்ததும் அவரும் மறைந்த பிறகு அந்த முயற்சி பயனற்றுப் போனதையும் திருமலை தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.  

எழுத்து இதழ்களின் தொகுப்பு ஒன்று கோவை ஞானியிடம் இருக்கிறது. அதை அவர் யாருக்கும் தரமாட்டார். ஆனால் ஞானிக்கே தெரியாமல் எப்படியோ அப்படியே அத்தொகுப்பை வேறொருவர் மூலம் லவட்டிக் கொண்டு பிரதி எடுத்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இப்போதும் அது ஞானியின் வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் கூட என்னிடம் பிரதி இருக்கிறது- பத்திரமாக.

எழுத்து இதழ்களைப் போலவே மணிக்கொடி இதழ்களும் கிடைப்பதில்லை. ஒரிஜினலான மணிக்கொடி இதழ்கள் சில எனக்குக் கிடைத்திருந்தாலும் அவற்றை பொள்ளாச்சி நசனும் சில தோழியரும் பறிமுதல் செய்துவிட்டனர். பதிலுக்கு எனக்கு மசால்தோசையும் சில நூறு ரூபாய்களும் நசன் கொடுத்திருக்கலாம். அப்படித்தான் மணிக்கொடி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நினைவில்லை.

சமீபத்தில் மூர்மார்க்கெட் போன போது செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலின் மூன்று பாகங்களும் எனக்குக் கிடைத்தன. சுமார் 200 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துவிட்டேன். செல்லப்பாவின் எழுத்துகள் அனைத்தையும் தேடித்தேடி சேகரித்திருக்கிறேன். அவரது அரிய நூல்கள் இன்னும் பல இருக்கலாம். அவற்றுக்கு ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுஜாதா போன்றோரின் மார்க்கெட்டும் இணைய ரசிகர்களும் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்ட்டம்.  கல்லூரிகளுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் தானே பதிப்பித்த தனது நூல்களை சுமந்து திரிந்த ஒரு அசடான தமிழ் எழுத்தாளனுக்கு நாம் திருப்பிக் கொடுப்பது இணையம் வழியாக பட்டுச் சட்டை போட்ட ஒரு பூர்ஷ்வா கூட்டத்தைத்தான். நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் டெர்லின் சட்டை அவர்கள் அடிவயிற்றிலிருந்து திருடியதுதான் என்ற புதுமைப்பித்தனின் குரல்தான் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...