Sunday 28 June 2020

ஜென் தேநீர் 21-25 ஓஷோவும் ஜென்னும்

ஜென் தேநீர்  21
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்



போதி சத்துவரின் கேள்வி பதில் பகுதியை நான்கு சீடர்கள் தொகுத்திருக்க அவற்றுக்கு ஓஷோ உரையாற்றிய புத்தகம் தான் வெண் தாமரை - THE WHITE CLOUDS.
இந்த நூலில் தியானம் பற்றி ஓஷோ கூறுகிறார்...." தியானமும் ஒருவகையான மரணம். விரும்பி ஏற்றுக் கொண்ட சாவு.மறைந்துவிடுதல், கரைந்து விடுதல்.
இதற்கு ஏசுநாதரின் கதை ஒன்றை கூறும் ஓஷோ ஏசு சிலுவையில் மரணம் அடைவதைத்தான் விரும்பினார் என்கிறார்.  தேவன் ஏசுவை சிலுவையில் இறக்க சம்மதித்தார். அப்போதுதான் ஏசு மீண்டும் புத்துயிர் பெற்று உயிர்க்க முடியும் என்பதால் தான் ஏசு சிலுவையில் இறந்தார்  என்கிறார் ஓஷோ.
தியானத்தைப் பயிலாமல் ஜென்னை பயில முடியாது. ஜென்னும் தியானமும் வெவ்வேறு அல்ல.
தியானம் செய்பவர் இயற்கையின் உள்ளுணர்வுடன் தனது உள்ளுணர்வை பொருத்தி விடுகிறார். இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி விடுகிறார். இயற்கைக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை .பசிக்கும் போது உண்கிறேன். உறக்கம் வரும் போது உறங்குகிறேன் என்று ஜென் கூறுவது இதைத் தான்.
வின்சென்ட் வான்கோ என்ற மாபெரும் ஓவியக் கலைஞரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஓஷோ விளக்குகிறார்.
வான்கோ என்ற புகழ் மிக்க ஓவியரிடம் ஒருமுறை ஒரு ரசிகன் கேள்வி கேட்டான். உங்கள் ஓவியங்களில் மரங்கள் எல்லாம் வானத்தில் பறப்பது போல் உள்ளன. இவை கற்பனைகள். யதார்த்தம் அல்ல, மரங்கள் ஆழமாக வேரூன்றிக் கிடப்பவை. அவற்றால் எப்படி நட்சத்திரங்களைத் தாண்டி பறக்க முடியும் ?
வான்கோ கூறினார் .அவை மரத்தின் ஆசைகள். நான் மரங்களை நெருங்கிச் சென்று அவற்றுடன்  உரையாடியிருக்கிறேன். மரங்களுக்கு நட்சத்திரங்களைத் தாண்டி பறக்கிற ஆசை உள்ளது. அவை அதில் வெற்றி பெறுகின்றவா இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால் ஒவ்வொரு மரமும் நட்சத்திரத்தைத் தாண்டி பறக்கத்தான் விரும்புகிறது.
மரங்களின் உள்ளுணர்வைத் தான் நான் பிரதிபலிக்கிறேன் என்கிறார் வான்கோ.
மெல்லிய தூறலாய் மழை பெய்து
என் சட்டையை நனைக்கும் போது
நான் புத்தரை காணாமல் கண்டுகொள்கிறேன்.
ஒரு பூவின் இதழ் மௌனமாக உதிரும்போது
நான் புத்தரின் குரலை கேட்காமல் கேட்கிறேன்
-என்கிறது ஒரு ஜென் கவிதை,
போதி சத்துவரின் பாடல் ஒன்று...
மனம் ஒரு மரக்கட்டை அல்லது கல்போன்றது.
இதில் மனிதன் ஒரு சிற்பத்தை வடிக்கிறான்.
ஒரு டிராகன் அல்லது ஒரு புலியை செதுக்குவான் எனில்
அதனைக் கண்டு அவன் அச்சம் கொள்கிறான்.
நரகத்தின் சித்திரத்தை அவனே வரைந்து அதற்கு
அவனே பயப்படுகின்ற மடத்தனம் இது.
அவன் அஞ்சாமல் இருந்தால் அனாவசியமான சிந்தனைகள்
மறைந்துவிடும்.
மனத்தின் ஒரு பகுதி காட்சியை படைக்கிறது. வாசனை, ஓசை, உணர்ச்சி போன்றவை  மனத்தால் பிறக்கின்றன.
இதனால் பேராசை , கோபம், அறியாமை எழுகிறது.
அது விதையாகி வேர் பிடித்து துன்பங்களாக வளர்கிறது.
தொடக்கத்தில் இருந்தே மனத்தின் சாரம் வெறுமையும் அமைதியும்தான்
என்பதை மனிதன் உணர்ந்திருந்தால்,
காலமும் இடமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல.
ஆனால் அவன் மனத்தை புலியாகவும் சிங்கமாகவும்  டிராகனாகவும்
பேயாகவும் மாற்றிக் கொள்கிறான்.
அவற்றின் விருப்பத்திற்கும் வெறுப்புகளுக்கும் தன்னை ஆட்கொடுக்கிறான்.
இதனை அவன் உணரும்போது ஒரு நொடியில் விடுதலை பெற்றுவிடுவான்.
-------
முல்லா நசுருதீனுக்கும் அவர் மனைவிக்கும் கடுமையான சண்டை.
உன்னை திருமணம் செய்த தருணம் தான் என் வாழ்க்கையின் மிகவும் துரதிர்ஷ்ட்டமான தருணம் என்கிறார் முல்லா.
நான் ஒன்றும் உன் பின்னால் ஓடி வரவில்லையே...நீதானே என் பின்னால் ஓடி வந்தாய் என்கிறாள் மனைவி.
ஆம் என்கிறார் முல்லா. எலிக்கூண்டு எலியின் பின்னால் ஓடுவதில்லை. எலிதான் ஓடி வந்து கூண்டில் சிக்கிக் கொள்கிறது.
--------------------------
பிக்காசோ ஒரு மாபெரும் ஓவியக் கலைஞர். ஒருமுறை ஒரு பெண் அவரிடம் வந்தாள். தன்னை சித்திரமாக வரைந்து தரும்படி கேட்டாள். பிகாசோ பெரும் தொகையை கேட்க உடனடியாக பணமும் கொடுத்தாள்.
பிகாசோ பலமாதங்களாக அந்த சித்திரத்தை வரைந்துக் கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்குப் பின் அந்தப் பெண் சித்திரத்தை வாங்க வந்தாள். அப்போது படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் .என் முகத்தில் மூக்கு இல்லை .அதை எங்கே போட்டு விட்டீர்கள்?
பிகாசோவும் குழப்பம் அடைந்தார் .மூக்கை எங்கே வைத்து தொலைத்தேன் என்று அவரும் யோசிக்கலானார்.
அவள் கணவரிடம் பிகாசோ கூறினார் .உன் மனைவிக்கு முலைகளும் இல்லை மூக்கும் இல்லை .சப்பையான ஒருத்தியை நீ மணமுடித்திருக்கிறாய்
------------------
மனிதனின் மனதுக்குள் டிராகனும் புலியும் இருப்பதாக போதி சத்துவர் கூறுகிறார். அந்த புலியும் டிராகனும் காமமும் அகந்தையும் என்றுஓஷோ விளக்குகிறார். காமம் தான் உலகை அதிகளவில் ஆட்டிப் படைக்கிறது. காமத்தால் தான் மனிதன் மிருகமாகிறான்.
ஆனால் காமத்தை காதலாக மாற்றவல்லது தியானம் என்கிறார் ஓஷோ. காதல் அனைத்தும் மீதானது. பாலின பேதம் அறியாது .அனைத்து மரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மனிதர்களையும் புழு பூச்சிகளையும் மீன்களையும் காற்றையும் கடலையும் மேகங்களையும் வானத்தையும் வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் நேசிக்க கற்றுத் தருகிறது தியானம்.
ஸ்டெல்லா புரூஸ் ஐ லவ் எவ்ரிதிங் அன்டர் தி சன் என்று அருமையான சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார்.
காமம் காதலாகவும் காதல் பிரார்த்தனையாகவும் மாறக் கூடியது என்கிறார்  ஓஷோ. காமம் பிரார்த்தனையாக மாறிவிடும்போது நீ வீடுபேறு அடைந்துவிட்டாய் என்கிறார் ஓஷோ.
தியானம் தன்னுடன் மட்டும் வாழப் பழகிக் கொள்வது. தனியாய் இருப்பதின் ஆனந்தத்தைத் தவிர அது வேறு ஒன்றுமி்ல்லை. தியானத்தை அறிந்தவர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் எந்த சஞ்சலமும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்துக் கொண்டிருப்பார். அவருக்கு தன் உள்ளார்ந்த பரவசமே போதுமானது.மற்றவர்களைப் பற்றி என்ன கவலை என்று விளக்கும் ஓஷோ அடுத்தவர் தான் நரகம் என்ற ஜீன் பால் சார்த்தரின் வரியையும் இதனுடன் பொருத்துகிறார்.
வாழ்க்கையில் இன்னொருவர் வருவது தேவையின் பொருட்டல்ல ஆடம்பரத்தின் பொருட்டு என்கிறார் ஓஷோ.
ஒரு தத்துவ அறிஞர் இன்னொரு தத்துவ அறிஞரை வழியில் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் .நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்

--------------------------------------
ஜென் தேநீர்  22
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
AH THIS என்ற ஓஷோவின் ஜென் கதைகள் மீதான உரை புத்தகமாக வந்துள்ளது. இந்த புத்தகத்தை வைத்து ஓஷோ ஜென் பற்றி கூறியதைப் பார்ப்போம்....
இந்த நூலில் சௌ சௌ என்ற ஜென் குருவின் கதைகள் உள்ளன. அவற்றுக்கு ஓஷோ விளக்கம் அளிக்கிறார். கதைகள் காப்பிரைட் உரிமை உடையவை. அனுமதியுடன் ஓஷோ அதனை மறுபடியும் பதிப்பித்துள்ளார். அவற்றை உரிய முறையில் அனுமதி பெற்றே கையாள முடியும் .எனவே கதைகளை விரிவாக கூற இயலாது .ஓஷோவின் எழுத்துகளை அவரது புத்தகங்களில் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி ஜென் பற்றிய ஓஷோவின் பொதுவான புரிதல்களை நாம் தொகுத்துக் கொள்வோம்.
தியானம் ஒருவகையான பிரார்த்தனைதான். ஓஷோவும் பிரார்த்தனையை வழக்கமாக்கிக் கொள்ளும்படி கூறுகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பிரார்த்தனை பழகுங்கள் என்கிறார் அவர். இது முரண்பாடான வாசகமாகத் தெரியும். அதை நான் புரிந்துக் கொண்ட விதத்தில் விளக்குகிறேன்.
மனிதன் கருவில் தோன்றுகிறான். தாயின் வயிற்றில் பத்து மாதம் வளர்கிறான் .இந்த பத்துமாதங்களிலும் அவனுக்கு சுவாசம், உணவு யாவும் தாயின் மூலமாக கிடைக்கிறது. கைப்பட்டாலே கலைந்து போகும் சதைக்கோலம் மாதங்கள் கனிய கனிய சிசுவாக உருக்கொள்கிறது. பிறகு சிசு வயிற்றில் தங்கமுடியாத நிலை வரும் போது பிரசவ வலி எடுத்து தாயின் யோனி வழியாக ஜனனம் எடுக்கிறது. தாயுடன் இணைந்திருந்த அதன் தொப்புள் கொடி அறுபட்டு அது தனியாக சுவாசிக்கப் பழகுகிறது.  தனியாக அதற்கு பாலூட்டப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு பரிணாமம் .அதுவரை தாயின் ஒரு அங்கமாக இருந்த சிசு இப்போது வாயும் வயிறும் வேறு என்ற நிலையில் பிறவியை எடுக்கிறது.
இந்த டெக்னாலஜியை எண்ணிப்பாருங்கள். எத்தனை குழந்தைகள் இப்படி பிறக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகத்துடன். தனித்தனி கைரேகைகளுடன், தனித்தனி குணாதிசயங்களுடன், தனித்தனி திறமைகளுடன், தனித்துவம் மிக்கதாக ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது.
இது எப்படி நிகழ்கிறது. யார் இதற்கு டிசைன் செய்தது ? யார் இதற்கு GFX செய்தது? எந்த கணினியில் எந்த போட்டோ ஷாப்பில் இதெல்லாம் செய்யப்பட்டது என்று யோசியுங்கள்.
நம்மை மீறிய மகத்தான சக்தி ஒன்று, பேராற்றல் ஒன்று , பேரறிவு ஒன்று யாருடையை கற்பனையாலும் எட்டமுடியாக பிரம்மம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதை கடவுள் என்று அழைத்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி.
அது மட்டுமா....ஒரு மனிதனின் உடற்கூறுகளைப் பாருங்கள் .மூளை, மனம், சிந்தனை, பார்வை, செவித்திறன், சுவாசம், வாசம், கை கால்கள், விரல்கள் நகங்கள், உடலின் வடிவமைப்பு.....உண்பதற்கு வாய் ருசிப்பதற்கு நாக்கு மெல்வதற்கு பற்கள். சாப்பிடுவதற்கு நீளமான கைகள், கழிப்பதற்கு புட்டம் பின்புறம் .அது வாய் அருகில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள் . கழிவு, சிறுநீருக்கு தனித் தனிப்பகுதிகள், காமத்தைத் துய்ப்பதற்கு ஆண் என்றும் பெண் என்றும் தனிப்பிறப்புகள். தனி குறிகளுடன்.
உடலின் உள்ளே பாருங்கள். எத்தனை எலும்புகள். எத்தனை நரம்புகள். இதயத்தில் இருந்து பாயும் ரத்தத்தால் இயக்கம், ஒரு சிறுவலி ஒரு சிறு கீறலைத் தாங்க முடியுமா நம்மால். ஒரு எலும்பு வேண்டாம் என தூக்கியெறிய முடியுமா...
அத்தனை டிசைன் யார் செய்தார்கள்...? உடல் சிசுவாகப் பிறந்து குழந்தையாக வளரும் போது அதன் வெகுளித்தனத்தை யார் தந்தது. அதன் விளையாட்டை லீலையை யார் செய்தது. அதன் புன்னகையை கண்ணீரை அழுகையை யார் தந்தது. அதன் வளர்ச்சியை அறிவை யார் தந்தது .அதன் இளமையை அழகை இளமையைத் துய்ப்பதற்கான ஆர்வத்தை யார் அளித்தது. அது முதுமைப் பருவத்தை 60 ஆண்டுகளுக்குப் பின் எட்டும் என்ற கணக்கைப் போட்டது யார். முதுமையின் தளர்வை ஏற்படுத்தியது யார். அந்த உடல் கடைசியில் இறந்துவிடும் போது அதுவரை அதில் இயங்கிய உயிர், சிந்தனை, மனம், ஆசைகள், கனவுகள், பேச்சு எல்லாம் எங்கே போய் விடுகிறது.
இத்தனையும் எண்ணி ஒரு நாள் தியானம் செய்துப் பாருங்கள் . நாம் இந்த பெருங்கடலின் ஒரு துளி என்று புரியும். ஒரு துளியால் ஒருபோதும் பேரண்டத்தையும் பெருங்கடலையும் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் அதனுடன் தொடர்பு கொள்ள முடியும். தியானமும் பிரார்த்தனையும் தான் அந்த மகாசக்தியுடன் நம்மை இணைக்கும் கேபிள் . செல்போனை சார்ஜ் செய்வது போன்றதுதான் தியானமும். அது மனிதனுக்கான ரீ சார்ஜ்.
ஓஷோ பிரார்த்தனை பழகுங்கள் என்று கூறுவதும் அதனால்தான்.
பிரார்த்தனையை நோக்கி நகருங்கள். பிரார்த்தனை மட்டும்தான்  உண்மையான மன நிறைவைத் தரும்.பிரார்த்தனை மட்டும்தான் இறைவன் அல்லது நமக்கு அப்பால் உள்ள ஒரு ஆற்றலை குறித்த பிரக்ஞையைத் தரும். உனக்குப் பிரியமானவர்களின் இறைமையை கடவுள்தன்மையை பார்த்ததும் உனக்கும் அந்த தன்மை வாய்க்கும்.உனக்குள் இருக்கும் இறைமையை குறித்த பிரக்ஞை உனக்கு ஏற்படும் என்கிறார் ஓஷோ.
கடவுளை அடைவதற்கான பாதையே கடவுள் தான் என்கிறார் ஓஷோ. பாதையும் இலக்குமாக இறைவனே இருக்கின்றான்.
நீட்ஷே போன்ற அறிஞர்கள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், நடிகர் நடிகைகள் என பலரும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அண்மையில் சபிதா என்ற பெண் கவிஞர் தற்கொலை செய்துக் கொண்டார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டார். புகழின் உச்சத்தில் தான் சில்க் ஸ்மிதாவும் இறந்தார். அமிதாப்பச்சன் படங்களை இயக்கிய மன்மோகன் தேசாய், நடிகை ஷோபா, இயக்குனர் குருதத், பெண் கவிஞர் சில்வியா பிளாத், எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா என தற்கொலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீளம்.
பணம், புகழ், அழகான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல நண்பர்கள், எல்லாம் இருந்தும் ஏன் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.? எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை. நிறைவுக்கு பதில் வெறுமைதான் மிஞ்சியுள்ளது என்கிறார் ஓஷோ.
ஒரு குட்டிக் கதை
ஒருவன் மன நல மருத்துவரிடம் சென்றான். நான் என்னை பலமுறை நாயாக கற்பனை செய்துக் கொள்கிறேன் .நாய் போல குரைக்கிறேன் .நாய் போல மூத்திரம் கழிக்கிறேன். நாய் போல வாலை ஆட்டுகிறேன். நாய் போல் தரையில் தூங்குகிறேன் என்று தனது பிரச்சினையை விளக்கினான்.
மருத்துவர் அவனை பரிசோதிப்பதற்காக அந்த படுக்கையில் போய் படுத்துக் கொள் என்றார்.
அதெப்படி முடியும் நாயை பின்புறமாகத்தானே உடலுறவு கொள்ள முடியும் என்றான் அவன்
-----------------------
ஜென் தேநீர்  23
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
AH THIS என்ற ஓஷோவின் ஜென் கதைகள்  புத்தகத்தை முன்வைத்து....
ஜென் ஞானம் ஞானம் என்கிறதே அது என்ன...? ஓஷோவும் இதற்கு விளக்கம் கூறுகிறார்.
அறிவு வேறு ஞானம் வேறு என்று விளக்குகிறார் ஓஷோ.
"ஞானமடைதலுக்கும் அறிவுடைமைக்கும் சம்பந்தம் இல்லை .இன்னும் சொல்லப் போனால் அறிவிலிருந்து விடுதலை பெறுவதே ஞானமாகும். அறிவை முழுவதுமாக ரஸவாதம் செய்து மாற்றுவதே ஞானமாகும் " என்கிறார் ஓஷோ.
இதை இப்படி காணலாம்.....சிறுவயது குழந்தைகளுக்கு அறிவு வளராத பருவத்தில் ஞானம் உள்ளது.அந்த ஞான ஒளியால் அவர்கள் மிகவும் அழகானவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்ததும் நமக்கு அன்பு சுரக்கிறது.அவர்கள் அத்தனை வெகுளிகளாக இருக்கிறார்கள் .அவர்களின் வெகுளித்தனம் தான் அழகு. அவர்களின் வெகுளித்தனம்தான் ஞானம். ஆனால் கல்வி குப்பைகள், பெற்றோரின் போதனை குப்பைகள், அறிஞர்களின் நடிகர்களின் அறிவுரை குப்பைகள் எல்லாம் குழந்தைகளின் மனங்களில் வெகுளித்தனத்தை மெதுவாகக் கொன்று விடுகின்றன. அவர்கள் ஆதாம் ஏவாளைப் போல் தேவனின் ஞானத் தோட்டத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உலகின் அறிவு, தொழில்நுட்ப அறிவு போன்ற பல சுமைகளை அவர்கள் சுமக்கிறாா்கள். அவர்கள் அறிவுடையவர்களாக மாறுகிறார்கள். ஆனால் குழந்தைக்குள் இருக்கும் புன்னகை நிரம்பிய ஒரு ஞானி காணாமல் போய்விடுகிறார்.
மீண்டும் நம்மை குழந்தைகளைப் போல் ஆக்குவதே ஜென்னின் செயலாக உள்ளது.
ஓஷோ சொல்கிறார்  " வெகுளித்தனம் என்பது அதிசயமாகவே எல்லாவற்றையும் காண்பது. ஆகா இது....ஆகா ....என்ற வியப்புதான் அது. தொடர்ந்து வியக்கக்கூடியவர் தான் மறைபொருளை நோக்கி செல்கிறார்.எல்லாமே அவருக்கு மர்மமாக விளங்குகிறது.தெரிந்துவிட்ட பிறகு அவை மர்மத்தை இழந்துவிடுகின்றன.ஆகா இது என்பதே பரவச நிலை.அது இல்லாமல் பரவசம் அடைய முடியாது. அறிவு உள்ளவர்களுக்கு கடவுள் கிடையாது. அவர்கள் அறிவால் தர்க்கம் செய்வார்கள். ஆனால் ஆகா என அதிசயத்தில் உழல்பவர்களுக்கு எல்லாமே தரிசனம் தான்.கடவுள் தூரம் தூரமாக இருந்தால்தான் அதனைத் தேடிச்செல்ல முடியும். "
" சமயம் என்பது அறிவல்ல....சமயம் அறிவின் எதிர்நிலையாகும். அது கவிதைநிலையாகும். அது அன்பு நிலையாகும். அது அபத்த நிலையாகும். அறிவியல் அறிவு எனில் சமயம் அறிவின்மை.நான்சன்ஸ் ஆனால் அதுதன் அதன் அழகு "
தியானம் என்பதுதான் அதன் பாதையற்ற பாதை என்பார் ஓஷோ. ." தியானம் என்பது காணுதல்,தியானம் என்பது உணர்தல், அங்கு பயம் இல்லை. யாரும் உன்னை தண்டிக்கப் போவதில்லை என்ற நிம்மதி.
குருட்ஜிஃப் என்ற மேதையைப் பற்றி ஓஷோ இப்புத்தகத்தில்  சில விவரங்களை சொல்கிறார். குருட்ஜிஃப் ஞானம் அடைந்த தத்துவவாதி. அபூர்வமாகத்தான் சில தத்துவவாதிகள் ஞானம் அடைகிறார்கள். சாக்ரடீஸ் போன்றவர்கள். நீட்ஷே ஞானத்தைத் தவறவிட்டதால் மனப் பிறழ்வுக்கு ஆளானார். தஸ்தேயவஸ்கியின் நிலையும் அதுதான். ஆனால் மைக்கேல் நேமியும் கலீல் கிப்ரானும் ஞான நிலையைஅடைந்தனர். ஜலாலுதீன் ரூமி, கபீர், குருநானக் போன்றோர் ஞானத்தைஅடைந்தனர். ஜே.கிருஷ்ணமூர்த்தி அறிவாளியாகவே இருந்துவிட்டார். ஞானத்தை அவர் தொடவே இல்லை என்பார் ஓஷோ.
ஆனால் குருட்ஜிஃப் ஞானம் அடைந்தார். அவரது மாணவர் பி.டி.ஆஸ்பென்ஸ்கி தான் குருட்ஜிஃபின் போதனைகளைத் தொகுத்து புத்தகமாக்கி அவரை உலகப் புகழ் பெறச்செய்தார். ஆனால் ஆஸ்பென்ஸ்கி ஞானம் அடைந்தவர் அல்ல.
ஆஸ்பென்ஸ்கி ஒரு புத்தகத்தை எழுதினார். அது குருட்ஜிஃபின் போதனைகள் தொகுப்பு .ஆனால் முக்கியமான சில பகுதிகளை அவரால் உணர முடியவில்லை. அதை அவர் தவற விட்டார். குருவிடம் தனது புத்தகத்தைக் காட்டிய போது இவை பகுதிகள்தாம் முழுமை பெறவில்லை என்றார் குருட்ஜிஃப். ஞானத்தின் சிதறிய வடிவங்கள்....எனவேதான் அதற்குப் பெயர் வைக்கும் போது ஆஸ்பென்ஸ்கி FRAGMENTS OF AN UNKNOWN TEACHING என்று பெயரிட்டார். உண்மையை துண்டு துண்டாக விளக்க முடியாது என்கிறார் ஓஷோ.
அப்படியானால் நீங்கள் ஏன் அதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டார் சீடர் ஒருவர்
கண்டுக்காதே என்றார் ஓஷோ.
----------
குருட்ஜிஃப் கடவுளைப் பற்றி கூறும் போது தாயையும் தந்தையையும் வணங்குபவனுக்கு கடவுள் தேவையில்லை என்கிறார். ஏன்என்றால் கடவுள் மிக்பபெரிய தாய் .கடவுள் உலகையே காக்கும் மிகப்பெரிய தந்தை. அவருக்கு முன்னால் நாம் குழந்தைகள். குழந்தைகள் தாய் தந்தையிடமிருந்து தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கின்றன.
ஒரு குட்டிக் கதை
ஒரு கடையில்நிறைய கூட்டம் இருந்தது. அமர்வதற்கான நாற்காலி எதுவும் கிடைக்காத இளம் பெண் ஒருத்தி நான் கர்ப்பிணிப் பெண் எனக்கு யாராவது அமர நாற்காலி தரமுடியுமா எனக் கேட்டாள். ஒருவர் எழுந்து இடம் கொடுக்க அந்தப் பெண் அமர்ந்தாள். பக்கத்தில் இருந்த பெண்மணிக்கு சந்தேகம். இளம் பெண்ணின் வயிறு வீங்கியிருக்கவில்லை. கர்ப்பிணி போலவே தெரியவில்லை. அவர் கேட்டார் எத்தனை  மாத கர்ப்பம் பெண்ணை ?
just now என்றாள் அந்தப் பெண் .ஒரு பதினைந்து நிமிடத்துக்கு முன்புதான் கர்ப்பம் ஆனேன்.
-----------------------
ஜென் தேநீர்  24
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN -THE SOLITARY BIRD CUCKOO OF THE FOREST
ஓஷோவின் தனியாக கூவும் காட்டுக் குயில் என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். ஜென் கதைகள் குறித்து ஓஷோ ஆற்றிய உரைகள் இவை. இந்த புத்தகம் மிகப்பழைய பதிப்பு என்னிடம் இருந்தது. அதில் பகவான் ரஜ்னீஷ் என்றே இருக்கிறது. புதிய பதிப்புகளில் ஓஷோ என பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். தமிழில் இதுவரை வந்ததாக தெரியவில்லை. ஓஷோவின் முக்கியமில்லாத புத்தகங்கள் தாம் தமிழில் மிகச்சுமாரான மொழிபெயர்ப்புகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை படிக்காதீர்கள். அதைவிட ஆங்கிலத்தில் படிக்க முயலுங்கள். மனசு வைத்தால் 3 மாதத்தில் ஆங்கிலம் கற்பதும் சாத்தியமே.
ஏன் என்றால் ஜென் புதிரானது. மிகவும் பூடகமானது .நுட்பமானது. இதைப் புரிந்துக் கொள்ள  சராசரிவாசக மனத்துடன் படிக்கக்கூடாது. ஆழமாக உணர்தல் அவசியம். அதற்கு ஆங்கிலம் அல்லது சிறந்த தமிழாக்கம்இருந்தால் நல்லது .என்னுடைய மொழியாக்கம் சிறந்தது என உறுதியுடன் கூறுவேன், ஏனெனில் எனக்கு ஆங்கிலமும் தெரியும் தமிழும் நன்றாகத் தெரியும். ஓஷோவையும் ஜென்னையும் மிக நன்றாக உணர்ந்தவன் நான்.
பாஷோவின் ஹைகூ கவிதை ஒன்று...
உனது பாடல் என்னை முன்பு எப்போதை விடவும்
அழகானவனாக மாற்றுகிறது.
உன் பாடலைக் கேட்டு எல்லாப் பறவைகளும் பாடுகின்றன.
முன்பு எப்போதும் இல்லாத தனிமைக்கு என்னைத் தள்ளுகின்றன.
ஓ தனிமைப் பறவையே.
தனியாகக் கூவும் காட்டுக் குயிலே....
ஜென் கதைகளைப் பற்றிய இத்தொடருக்கு பாஷோவின் கவிதை வரியையே ஓஷோ தலைப்பாக வைத்துள்ளார்.
ஜென் உங்களை தாமரைகளாக மாற்றுகிறது என்கிறார் ஓஷோ. வானத்தையும் நட்சத்திரங்களையும் பார்த்து நீங்கள் மலர வேண்டும்.மலர்ச்சி தான் உங்கள் விடுதலை. மலர்ச்சி தான் உங்கள் கௌரவ அடையாளம். மலர்ச்சியில் தான் உங்களுக்கான நறுமணம் இருக்கிறது என்பார்.
கஸான் என்ற ஜென்குருவிடம் ஒரு புத்த பிக்கு வந்தார்.  பாதை என்பது எது என்று கேட்டார்.
குரு பதிலளித்தார் . சூரிய ஒளி பத்தாயிரம் ஆண்டுகளாக நமது கண்களில் மின்னுகிறது. ஆனால் ஒரு மேகத்தைக் கூட அது வானத்தில் தொங்க விடுவதில்லை
பிரபஞ்சத்தைப் புரிந்துக் கொள்ள சிறந்த வடிவம் எது என்று கேட்டார் புத்த பிக்கு.
குரு பதிலளித்தார்
 சுத்தமான ஆற்று நீரில் மீன்கள் நீந்திமகிழ்ந்து விளையாடுவது அவற்றின் தவறுகளாக இருக்கலாம்.
--------------
வானத்தில் பறக்கும் பறவை ஒரு தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை என்று விளக்குகிறார் ஓஷோ.இதைத்தான் பறவைகளின் பாதை அல்லது வழித்தடம் என்று கூறுகிறோம். வானத்தின் இன்மையில் மறைந்துவிடுதல்,ஒரு தடயமும் இல்லாமல் போய் விடுதல், ஜென்னும் உங்களை உலகில் அப்படி பட்டும் படாமலும் வாழச்சொல்கிறது.எதுவும்இல்லாதவராக யாரோவாக .
-----------
இன்னொரு ஜென் கதை
கியோசன் என்ற ஜென் துறவி வானத்தில் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் இருந்த இன்னொரு ஜென் துறவியான செக்கிஸ்ட்டு கேட்டார்  முழு நிலவு பிறையாக மாறும் போது அதன் வட்டம் எங்கே போய் விடுகிறது?
கியோசன் பதிலளித்தார் - அது பிறையாகவே தெரியும் போதும் அதன் வட்டம் அங்கேயே தான் இருக்கிறது.
ஞானமும் இப்படித்தான் .சிலருக்குப் பூரண பௌர்ணமி நிலவாக காட்சியளிக்கிறது. சிலருக்கு அமாவாசையாக இருக்கிறது. சிலருக்கோ அது தேய்பிறையாகவும் இன்னும் சிலருக்கோ அது வளர்பிறையாகவும் காட்சியளிக்கிறது. ஆனால் எப்படி காட்சியளித்தபோதும் அதன் வட்டம் மறைந்துவிடவில்லை. கண்ணுக்குத் தெரியாத போதும் அது அங்கேயே தான் இருக்கிறது. மனிதனின் ஞானமும் அவனுக்குள் அங்கேயேதான் உள்ளது .அதை அவன் தேய்பிறையாக வெளிப்படுத்துகிறானா வளர்பிறையாக வெளிப்படுத்துகிறானா அல்லது பூரண ஞானத்துடன் பௌர்ணமியாக பொழிகின்றானா என்பதுதான் வேறுபாடு. புத்தர் பூர்ணிமையில் தான் ஞானம் அடைந்ததாக கூறப்படுவதும் தற்செயல் அல்ல, ரம்ஜான் பண்டிகை பிறை தெரிந்ததும் கொண்டாடப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த அர்த்தங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. ஆன்மீக நிலை அறிவியலுக்கு எதிரானது. ஆன்மீகத்தால் விளக்கம் கூற முடியாது ஆனால் உணர முடியும்.
எத்தனை அழகான நிலா
திருட வந்தவன் அதை மறந்து
பாடத் தொடங்கி விட்டான் என்கிறது ஒரு ஜென் ஹைகூ.
----------------
சகய முனி என்றழைக்கப்படும் புத்தர் தமது சூத்திரங்களில் இவ்வாறு கூறுகிறார்
யாருக்கும் எந்த ஒரு தீங்கும் செய்யாதிருத்தல்
எல்லோருக்கும் முடிந்தவரை நன்மையைச் செய்தல்
இதுதான் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல்
இதுதான் அனைத்து புத்தர்களின் போதனையாகும்.
---------
ஓஷோ செயல் செயலற்ற நிலை குறித்து இப்புத்தகத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஓய்வெடுத்தல் என்பது செயலற்ற நிலை .அனைத்து செயல்களையும் விடுத்த ஒரு நிலை. அனைத்து காரியங்களையும் விட்டு ஓய்வெடுக்கும் போது தான் நீங்கள் உங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீ்ர்கள். அந்த நிலைதான் உலகின் அனைத்து மர்மங்களையும் மூடிய கதவுகளையும் திறந்து விடுகிறது.இருத்தலின் அதிசயங்களைக் காண்கிறீர்கள்.
இந்த நிலை உங்களுக்குள் ஒரு நடனத்தை எழுப்புகிறது.நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இதுவரை கேட்காத ஆனந்தமான இசை ஒன்றை கேட்கிறீர்கள். இதனை யாரிடமும் உங்களால் மொழிபெயர்க்க முடியாது. இதுவரை நீங்கள் காணாத வண்ணங்களில் மலர்கள் மலர்வதைக் காண்கிறீர்கள். உங்கள் முழு இருப்பும் சுகந்தம் மிக்க ஒரு சோலையாக மாறுகிறது. இதைப்பற்றி எதுவும் கூற வேண்டியதில்லை. அதுவாக இருங்கள். அமைதியின் ஒளிரேகைகள் உங்களைச் சுற்றி படரத் தொடங்கிவிடும் " என்கிறார் ஓஷோ. இதுதான் தியானம். தியானம்தான் ஞானம்.
எங்கேயோ தனிமையில் காட்டுக்குயில் ஒன்று கூவுவதைக் கேளுங்கள்.கேட்டுக் கொண்டே இருங்கள். அதில் கரைந்துவிடுங்கள் என்கிறது ஜென்.
-------------
ஓஷோவின் குட்டிக் கதை
டாக்டரிடம் வருகிறாள் ஒரு கர்ப்பிணிப்பெண். எத்தனை பிள்ளைகள் என்று கேட்கிறார் டாக்டர். 14வது கர்ப்பம் என்கிறாள் அவள்.
டாக்டருக்கு டென்ஷன். சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். எதற்காக இத்தனைக் குழந்தைகள் என்று கேட்டார்
அந்தப் பெண் சொன்னாள் " நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன். ஒரு கணம் கூட அவரை விட்டு என்னால் இருக்க முடியாது "
டாக்டர் சொன்னார் நானும்தான் செயின் ஸ்மோக்கர். ஆனால் அவ்வப்போது சிகரெட்டை வாயில் இருந்து எடுத்துவிடுவேன்.
----

ஜென் தேநீர்  25
ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ZEN -THE SOLITARY BIRD CUCKOO OF THE FOREST
ஒரு ஜென் கதை
செகிட்டோ என்ற ஞானியிடம் அவருடைய சீடரான கோயி ஒரு முறை வந்து பலவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருவும் பதிலளித்தார்.
ஒரு முறை கோயி கேட்டார்...எனக்கு நீங்கள் ஒரு சொல் சொல்ல வேண்டும். இல்லையானால் நான் இங்கிருந்து போய் விடுவேன்.
குரு பதில் சொல்லவில்லை. எனவே கோயி புறப்பட்டார். அப்போது செகிட்டோ பின்னால் இருந்து அவரை ஜாரி ஜாரி என்று சத்தம் போட்டு அழைத்தார்.
கோயி லேசாக கழுத்தைத் திருப்பி தோள் வழியாக பின்னால் பார்த்தார்.
பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இதுதான். முகத்தைத் திருப்புதல். மூளையைத் திருப்புதல் .இது எப்படி இருக்கிறது என்றார் குரு.
கோயி திடீரென ஞானம் அடைந்தார்.அதன் அடையாளமாக அவர் தனது கைத்தடியைப் போட்டு உடைத்தார்.
-----------
இதைப்பற்றி ஓஷோ விளக்குகிறார். ஒரு சீடன் குருவிடம் வரும்போது குரு அவனுக்கு ஒரு இருக்கையைக் கொடுப்பார். சீடன் அதில் அமர்வான். ஒருவேளை சீடன் குருவை நிராகரித்துவிட்டால் அந்த இருக்கையில் அமர மாட்டார். நான் இந்த இடத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று முதுகைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்.
குருவை புறமுதுகு காட்டி புறக்கணித்துச் செல்லும் ஒரு சீடனை குரு திரும்பச் செய்து அவனுக்கு ஞானம் அடையச் செய்வதைத் தான் மேற்சொன்ன குட்டிக் கதை விளக்குகிறது. ஞானம் என்பது திடீரென ஏற்படுவது. பல ஆண்டுகளாக சீடன் தேடிக் கொண்டிருப்பான் ,கிடைக்காது. ஆனால் அவன் தேடாத ஒரு கணத்தில் அவனே எதிர்பாராத விதமாக அவன் ஞானம் அடைந்துவிடுவான் .அதன் அடையாளமாகத்தான் கோயி தனது கைத்தடியை உடைக்கிறார்.
ஜென் நேரடியாகப் பேசாது ஆனால் குறியீட்டுத் தன்மையுடையது. புதிரானது.
இன்னொரு கதை
ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் உம்மோன் என்ற புகழ் பெற்ற ஜென் குரு.அவரிடம் ஒரு துறவி வந்தார். அப்போது உம்மோன் அவரிடம் கேட்டார். மரத்தில் பறவைகள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டாயா ? அவை ஜென் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கின்றன.
இல்லை நான் கேட்கவில்லை என்றார் துறவி.
உம்மோன் தனது கைத்தடியை உயர்த்தினார். ஜென் என்று கத்தினார்.
------------------------
செப்போ என்ற துறவி என்கன் என்பவரிடம் போய் சீடராக சேர்ந்தார். அவருக்குத் திருப்தியில்லை. பின்னர் இன்னொரு குருவிடம் போனார்.தோசு என்ற குருவிடமிருந்தும் அவர் திரும்பி வந்துவிட்டார். பின்னர் தோகுசன் என்ற குருவிடம் சென்ற அவர் குருவிடம் ஒரு கேள்வி கேட்டார். பெருந்தகையாளரே தங்களிடம் நான் கற்றுக் கொண்ட போதனைகளை பிறருக்கு போதிக்க அனுமதி உண்டா...
இதைக் கேட்டதும் குரு அவரை பிரம்பால் நையப் புடைத்தார்.
மறுநாள் குருவின் கோபம் தணிந்ததும் செப்போ தன்னை அடித்தற்கான காரணத்தை அறிய குருவிடம் சென்றார். தோகுசன் விளக்கம் தந்தார். எனது சமயம் சொற்கள் இல்லாதது. வாக்கியங்கள் இல்லாதது. அது யாருக்கும் எதுவும் தருவது இல்லை. எப்படி நீ இதனை போதிப்பாய் ?அதனால் தான் அடித்தேன்.
இதை கேட்டதும் செப்போ ஞானம் அடைந்துவிட்டார்.
--------------------
தோசனிடம் ஒருமுறை ஒருவர் கேட்டார். மர்மங்களின் மர்மம் என்பது என்னவோ ?
அது இறந்து போன ஒரு மனிதனின் நாவைப் போன்றது என்று பதில் அளித்தார் தோசன்.
------
ஒரு முறை ஜோஷூ என்ற ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார் ....பண்டைய காலங்களின் போதனை என்னவோ ?
ஜோஷூ கூறினார் - கவனமாக கேளுங்கள், கவனமாக கேளுங்கள்
----------
ஒஷோவும் ஜென் கதைகளை கவனமாக கேளுங்கள் என்கிறார். ஒவ்வொரு குட்டிக் கதையும் ஒரு வைரம். மிகப்பெரிய தரிசனத்தைத் தரக்கூடியவை. ஒரு திடீர் ஞானத்தை உசுப்பிவிடக் கூடியவை. அவற்றை மிகவும் கவனமாக கேளுங்கள் .மிகுந்த கவனம் என்பதே ஜென்.
-----------
ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று
ஒருவர் கடையில்  எழுதுவதற்கான பேப்பர் வாங்கப் போனார். கடைக்காரன் கேட்டான். என்ன பேப்பர்
ஏதாவது ஒரு பேப்பர்
கோடு போட்டதா வெற்று்ததாளா
ஏதாவது ஒன்று சரி கோடு போட்டது கொடுங்கள்
அதில் நீங்கள் மைப் பேனாவால் எழுதுவீர்களா, பால் பாயின்ட் பேனாவால் எழுதுவீர்களா
எது கையில் கிடைக்கிறதோ அதனால் எழுதுவேன்.
கனமான தாள் வேண்டுமா மெல்லிய தாள் வேண்டுமா
எது இருந்தாலும் பரவாயில்லை .எதையாவது கொடுங்கள் .எனக்கு நேரமாகிறது .எனது பஸ் வந்து விடும்.
அப்படியா.. என்ன கலரில் வேண்டும். சிவப்பு,நீலம் ,மஞ்சள் ,வெள்ளை என பல நிறங்கள் உள்ளன.
ஏதாவது ஒரு நிறம். சரி வெள்ளையே கொடுங்கள்
என்ன விலையில் வேண்டும். குறைந்த விலையிலா உயர்ந்த விலையிலா?
இப்படி வாடிக்கையாளரிடம் சேல்ஸ்மேன் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க புயல் வேகத்தில் அந்தக் கடையில் வேகமாக நுழைந்த ஒருவர் பணத்தை எடுத்து வீசி எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு அந்த டாய்லெட் பேப்பரைக் கொடுங்கள் மிகமிக அவசரம் என்றார்.
---------------
இன்னொரு ஓஷோ கதை
ஒருவர் ஒரு பேக்கரிக்குப் போனார் .இரண்டு பன்பட்டர் ஜாம் ஒரு தேநீர் என ஆர்டர் கொடுத்தார்.
பன் தீர்ந்துவிட்டது தேநீர் மட்டும் உண்டு என்றார் கடைக்காரர்.
சரி அப்ப எனக்கு பன்னும் ஆம்லெட்டும் தாருங்கள்.
அய்யா ஆம்லட் இருக்கிறது ஆனால் பன் இல்லை .தீர்ந்துப் போய் விட்டது.
அடடா அப்படியானால் எனக்கு பன் பர்கர் தாருங்கள்
பன் பர்கர் தர இயலாது .பன் கையிருப்பு இல்லை.
அப்படியா எனக்கு பன் டோஸ்ட்டும் கிரீன் பீன்சும் கொடுங்கள்
கிரீன் பீன்ஸ் தரலாம் ஆனால் பன் இல்லையே
சரி எனக்கு கிரீம் பன் தாருங்கள்
கீரீம் பன் இல்லை.
அப்படியா சரி கிரீம் இல்லாத வெறும் பன் தாருங்கள் என்றார் வாடிக்கையாளர்
-----------

Tuesday 23 June 2020

ஜென் தேநீர் 16-20 ஓஷோவும் ஜென்னும்

ஜென் தேநீர்  16

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்



ஜென் தேநீர்  16

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்த போதிதருமர் தான் முதன் முதலாக சீனாவுக்கு ஜென்னை அறிமுகம் செய்தவராவார். அதே போல் நவீன உலகிற்கு இருபதாம் நூற்றாண்டு மனிதர்களுக்கு ஜென்னை அறிமுகம் செய்த மிகப்பெரிய மேதை ஓஷோதான். ஓஷோவின் பெயரே ஜப்பானிய மொழியில் இருப்பதுதான் .ஓஷோ என்றால்  புத்த பிட்சு என்று அர்த்தம் சொல்வார்கள்.
பகவான் ரஜ்னீஷ் என்ற பெயரில்தான் ஓஷோவை எல்லோரும் அறிந்திருந்தனர். ராணியில் அல்லி பதில்களில் பிரா பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இடம் பெறும் .அந்தக் காலத்தில் இணையம் நீலப்படங்கள் பரர்ப்பதற்கு எந்த வித வசதியும் இல்லை. முத்தக்காட்சிகள் பிகினிக்கள் இல்லாத கருப்பு வெள்ளை சினிமாக்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதிகபட்சமாக வில்லன் கதாநாயகின் சோளியை பின்புறம் கிழித்து வெள்ளை பிராவையும் முதுகையும் காட்டுவார்கள். அவ்வளவுதான். ஹீரோ பாய்ந்து வந்துவிடுவார். ஆகவே பிராவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது. பிரா என்ற சொல் எத்தனை கற்பனையையும் கிளர்ச்சியையும் தந்ததோ அத்தனை கிளர்ச்சியைத் தந்த இன்னொரு சொல் செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ் .ஆகவே கண்டிப்பாக அது குறித்தும் வாசகர்கள் ( ? ? ) கேள்வி கேட்க அல்லி பதில்களில் பதில் இருக்கும்.
பத்திரிகை தர்மங்கள் இப்படியெல்லாம் இருக்க இல்லஸ்ட்ரேடட் வீக்லி பிளிட்ஸ் போன்ற சில  ஆங்கில பத்திரிகைகளில் மா ஷீலா என்ற சிஷ்யை டாப்லெஸாக மார்புகளைக் காட்ட அவர் தலையில்  பகவான் ரஜ்னீஷ் வைத்து ஆசி வழங்குவது போல் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மா ஷீலா ரஜ்னீஷ் மீது பரபரப்பான பாலியல் புகார்களை சுமத்தி ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார். ரஜ்னீஷின் மிகப்பெரிய பக்தர்களாக இருந்த இயக்குனர் மகேஷ் பட், நடிகை ஷபனா ஆஸ்மி, நடிகர் வினோத் கன்னா போன்ற பிரபலங்களும் ரஜ்னீஷ் ஆசிரமத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டு அவருடைய பெயரை முற்றிலுமாக சேதம் செய்தனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரோனால்ட் ரீகன், அப்போதைய பி்ரதமர்கள் இந்திரா காந்தி. மௌரார்ஜி தேசாய் போன்றவர்களை ரஜ்னீஷ் கடுமையாக விமர்சனம் செய்ததால் அவர் அமெரிக்காவில்  காடாக இருந்த ஓரேகான் பகுதியை பசுஞ்சோலையாக மாற்றி தனது ஆசிரமம் அமைத்ததைப் பொறுக்க முடியாக ரீகன் அவர் மீது போதைப் பொருள் கடத்தல் ,போன்ற பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். மௌரார்ஜி தேசாய் சிறுநீர் குடிக்கும் வழக்கத்தை விமர்சித்த ரஜ்னீஷ் குற்றங்களை ஒப்புக் கொண்டு, பெரும் தொகையை அபராதமாக கட்டி வழக்குகளில் இருந்து விடுபட்ட போதும் சிறையில் கொடுக்கப்பட்ட மெல்லக் கொல்லும் விஷம் கலந்த உணவால் உடல் நலிவடைந்தார். புனே திரும்பியதும் அவருக்கு பலவகையான துன்பங்களைத் தர மௌரார்ஜி தலைமையிலான மத்திய அரசு முயற்சித்தது.
கடைசியில் ரஜ்னீஷ் என்ற தனது பெயரின் களங்கத்தைப் போக்க தனது பெயரை ஓஷோ என்று மாற்றிக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அதற்கு முன் இருந்த பகவான் ரஜ்னீஷ் என்ற பெயர் காலத்தால் மறைந்துவிட்டது .அல்லிக்கு வேறு சுவாரஸ்யமான சினிமா கிசுகிசுக்கள் கிடைத்தன. படி்பபடியாக செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ் மறைந்து ஓஷோ என்ற மகத்தான ஒரு ஞானியை அவர் புத்தகங்கள் மூலமாக இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அறியத் தொடங்கினர்.
பகவான் ரஜ்னீஷ் பெயரில் தமிழில் ஒரு புத்தகம் மட்டும் அப்போது வந்திருந்தது. சிவப்பு அட்டையுடன் இருந்த அந்த புத்தகம் பகவான் ரஜ்னீஷ் பதில்கள் என்ற பெயரில் இருந்ததாக ஞாபகம். நண்பர் பிரபஞ்சன் தான் அதை எங்கிருந்தோ வாங்கி வந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மார்க்சீய சிந்தனைகளுடன் , நாத்திகனாகவும் இருந்ததால் பகவான் என்ற பட்டத்துடன் இருந்த ரஜ்னீஷ் புத்தகத்தை படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கவிஞர் மு.நந்தா, இயக்குனர் சூர்யராஜன் ஆகிய எனது இரண்டு இனிய நண்பர்களுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் இருந்தது. அவர்கள் பிரபஞ்சனிடம் இருந்து அவர்கள் கைக்கு மாறியது. அதன் பிறகு ஒரு சுற்று சுற்றி விட்டு என் கைக்கு வந்தது. கட்டாயம் இதைப் படி என்று என் கையில் திணித்து விட்டு சென்றார் சூர்யராஜன்.
அரை மனதாக படிக்க ஆரம்பித்தேன். பகவான் ரஜ்னீஷ் என்ற அல்லி பதில்களின் செக்ஸ் சாமியார் பிம்பம் மறையத் தொடங்கி ஒரு பெரிய மேதைமையுடன் ரஜ்னீஷ் என் முன்வந்து விஸ்வரூபம் எடுத்த விண்ணுக்கும் மண்ணுக்கும் தன் காலை வைத்து அளந்த பெருமாளைப் போல் நின்றார்.
அதன் பின்னர் திருச்சிக்குப் போய் அங்கு என் பெரிய மாமனார் வீட்டில் தங்கியிருந்த போது எதிரே இருந்த ஒரு சிறிய வீட்டின் முன் பகவான் ரஜ்ஷீஷ் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என்று போட்டிருந்தது. என்னைத் தேடி ரஜ்னீஷ் வந்துவிட்டதை நான் உணரவில்லை. அந்த வீட்டில் நுழைந்த போது சுவாமி மோகன் பாரதி என்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த ( ஓஷோவும் ஜெயின் தான் ) நபர் தமிழில் பகவான் ரஜ்னீஷ் டைம்ஸ் என்ற ஆங்கில இதழின் தமிழ்ப்பதிப்பாக ஒரு சிறு பத்திரிகையை பேப்பர் டாப்லாய்ட் சைசில் வெளியிட்டு வந்தார் என அறிந்தேன். அதன் விலை இரண்டு ரூபாய் .நிறைய இதழ்களை பணம் கொடுத்து அள்ளி வந்தேன். படிக்க படிக்க பரவசமானேன். அச்சுப்பிழைகள், மோசமான மொழிபெயர்ப்புகள் என எத்தனையோ இடர்களைக் கடந்தும் பகவான் ரஜ்னீஷ் மனம் கவர்ந்தார்.
அப்புறம் பகவான் ரஜ்னீஷின் சில ஆங்கிலப் புத்தகங்கள் மும்பை, புனே பயணங்களின் போது கிடைத்தன. ஆங்கில இதழ்களையும் படித்தேன். அதில் ஒருமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னை இனி யாரும் பகவான் ரஜ்னீஷ் என்று அழைக்க வேண்டாம் என்றும் ஓஷோ என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் தமது சீடர்களுக்கு கட்டளையிட்டார். அந்த வார்த்தை ஓஷோவை தமிழில் முதன் முதலாக எழுதி செந்தூரம் இதழில் ஓஷோ கட்டுரையை வெளியிட்ட முதல் நபராக நான் அடையாளம் காணப்பட்டேன்.
ஏராளமான ஓஷோவின் நூல்களை பல ஆண்டுகள் கழித்து மொழிபெயர்த்த கவிஞர் புவியரசு திருப்பூரில் ஒரு இலக்கிய நிகழ்வின் போது சந்தித்து ஓஷோவைப் பற்றி விசாரித்தார். செந்தூரம் மூலம்தான் தாம் ஓஷோவை அறிந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
தொடர்ந்து புவியரசுக்கு முன்பே நான் ஓஷோவின் முழு புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. MY WAY THE WAY OF WHITE CLOUDS  என்ற புத்தகத்தை நான் ஒரு வெண்மேகம் என்ற பெயரில் முழுமையாக மொழிபெயர்த்தேன். மனிதனின் தன்முனைப்பு ( EGO ) வைப் பற்றிய புத்தகம் அது. இந்த புத்தகத்தைப் படித்து மிகவும் வியந்ததாக நடிகர் ரஜினிகாந்த் அப்போது குமுதம் பேட்டியில் கூறியிருந்தார். நடிகர் சத்யராஜூம் டாப் டென் புத்தகங்கள்  பட்டியலில் நான் ஒரு வெண்மேகம் புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து குழந்தை வளர்ப்பு பற்றிய புதிய குழந்தை என்ற புத்தகத்தையும் கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சியைப் பற்றிய புத்தகத்தை நம்பிக்கை நட்சத்திரமாய் என்ற பெயரிலும் மொழிபெயர்த்தேன். அவை யாவும் தரமான மொழிபெயர்ப்புகள்.
அதன் பின்னர் ஜென் ஹைகூ குறித்த ஓஷோவின் புத்தகத்தை மொழிபெயர்த்த கதையையும் அந்த மொழிபெயர்ப்பு கந்தலான கதையையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
ஓஷோ வின் புதிய குழந்தையைப் படித்து விட்டு மிகவும் அற்புதமான மொழிபெயர்ப்பு என பாராட்டிய நண்பர் ஜெயமோகன் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று என்னிடம் கூறியுள்ளார். அப்போது அஜிதனும் சாகித்யாவும் சிறிய குழந்தைகளாக இருந்தனர்.
தொடர்ந்து ஓஷோவின் உரைகள் தொகுக்கப்பட்டு அவை ஓஷோ என்ற பெயரிலேயே 700-800 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆடியோ வீடியோ வடிவிலும் ஓஷோவின்  உரைகள் அவருடைய சொந்த குரலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கிடைத்தன.
ஓஷோவின் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அவருடைய தொகுக்கப்படாத ஏராளமான பத்திரிகை கட்டுரைகளையும் ஒலி ஒளி வடிவ உரைகளையும் ஆழ்ந்து கற்றேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தார் ஓஷோ. குறிப்பாக ஏராளமான புதிய படைப்பாளிகள், கலைஞர்களை அவர் அறிமுகம் செய்தார். தஸ்தயேவஸ்கி, கலீ்ல் கிப்ரான், ஜலாலுதீன் ரூமி ,கபீர், நீட்ஷே , பிகாசோ, பாஷோ   என நீளும் ஓஷோவின் அறிமுகங்கள் எனக்கு வாசிக்க வாசிக்க புதிய உலகை உருவாக்கிக் காட்டின. அனைத்தையும் தேடித் தேடிப் படித்தேன். புத்தகங்களை வாங்குவதற்காகவே சம்பாதித்தேன். புத்தகங்களை வாங்குவதற்காகவே இந்தியா முழுவதும் பழைய புத்தகக் கடைகளில் சுற்றித் திரிந்தேன்.
குறிப்பாக  ஜென், குறித்த ஓஷோவின் நூல்கள் ஒரு நூறு இருநூறு இருக்கும். அவற்றில் என் வசம் இருப்பவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ அறிமுகம் செய்கிறேன்.
ஒரு பெரும் விருந்து காத்திருப்பது உறுதி.
-------------
பின் குறிப்பு -காப்புரிமை குறித்து
வெறுமனே ஆங்கில நூல்களை மொழிபெயர்க்காமல் மேற்கோள்களாக காட்டாமல் ஜென்னை ஓஷோ புரிந்துக் கொண்ட விதத்தையும் அவர் வழியாக நான் புரிந்துக் கொண்ட விதத்தையும் தான் எழுதப்போகிறேன். இதன் எழுத்தாக்கம் உரிமம் முழுவதும் எனக்கே சேர வேண்டும் என்றும் யாரும் இதனை களவாடவோ தங்கள் பெயரால் பிரசுரிக்கவோ முயல வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் அமைதியாக சகித்துக் கொள்ள மாட்டேன்.
இதற்கு முன்பு எனது கிடங்குத் தெருவை திருடினார்கள். என் சினிமா பாடலை இளையராஜா இசையில்  என் பெயர் போடாமல் திரையில் படமாக்கினார்கள் . நான் மொழிபெயர்த்த பலநூறு பக்கம் கொண்ட ஓஷோவின் ஜென் பற்றிய நூலை என் பெயர் போடாமல் பதிப்பித்து பல ஆயிரம் புத்தகங்கள் விற்றார்கள். இந்த அறிவுக் களவை மன்னிக்க முடியவில்லை.அதனால் ஞானத்தை நாடும் ஜென் குரு போர்வாளை எடுப்பது போல் எடுடா  கொலை வாளை என பாவேந்தரின் பாட்டை பாட ஆரம்பித்துவிடுவேன்

அதனால் தான் ஓஷோவிடமிருந்து திருடாமல் அவருடைய ஞானத்தை மட்டும் பகிர வருகிறேன். என் அனைத்து கட்டுரைகளிலும் எந்தெந்த புத்தகங்களை கையாண்டேன் என்ற  விவரத்தையும்தான் பதிவு செய்து வருகிறேன். யாரேனும் காப்புரிமை பிரச்சினை எழுப்பினால் ஆட்சேபத்துக்குரிய பகுதியை நீக்கவும் நான் தயார்.
இதுவும் ஓஷோவிடமிருந்து கற்றதுதான்.
இனி நாம் பார்க்க இருப்பது ஓஷோவின் வெண் தாமரை ( white lotus )என்ற போதி சத்துவரைப் பற்றிய புத்தகத்தை.
---------------------------------------------

ஜென் தேநீர்  17

ஓஷோவும் ஜென்னும்.
ஓஷோவின் வெண் தாமரை ( THE WHITE LOTUS )  நூலை முன்வைத்து....
செந்தூரம் ஜெகதீஷ்
போதி தருமர் என்ற  ஜென் ஞானியைப் பற்றி கூறும் போது இவரைப் போல் புளகாங்கிதம் அடையச் செய்பவர் யாரும் இல்லை என்கிறார் ஓஷோ. போதி தர்மர் என்ற பெயரே பரவசமூட்டுவதாக தமது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்  அவர் . நீண்ட வரலாற்றில் போதி தருமருக்கு நெருங்கி வரக்கூடிய ஒரேயொரு நபர் ஜார்ஜ் குருட்ஜிஃப் ( GEORGE GURUDJIEFF) மட்டும்தான் என்கிறார் .புத்தரால் கூட இந்த மனிதரை ஜீரணித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இருந்ததாக போதிசத்துவரைப் பற்றி குறிப்பிடுகிறார் .புத்தருக்கும் போதி சத்துவருக்கும் இடையே ஆயிரம் ஆண்டு கால இடைவெளி இருந்தது. ஆனால்  கால இடைவெளியே தெரியாத அளவுக்கு புத்தரி்ன் ஞானத்தை பின்தொடர்பவராக போதி தர்மர் இருந்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்.
காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவில் இருந்து  தமது குருவான புத்தரின் ஞானத்தைப் பரப்ப சீனாவுக்கு சென்றவர் போதிதர்மர். சில போதுகளில் அவருக்கு ஈடாக புத்தர் கூட இல்லை என்று வியக்கிறார் ஓஷோ.
புத்தர், ஏசுநாதர், பித்தகோரஸ். லாவோட்சு என பல சமகாலத்து ஞானவான்கள் இருந்த போதும் போதி தர்மர் தனித்துவமானவர்.
போதி தர்மர் சீனாவின் எல்லையில் கால் பதித்த போது அவரை வரவேற்க சீன மன்னர் வூ எல்லையில் அவரை உபசரித்து வரவேற்றார். புத்தரைப் போன்ற ஒரு ஞானி சீனாவுக்கு வருவதை பெருமையாக நினைத்தார் மன்னர் வூ.
ஆனால் போதி தர்மரை முதன் முதலாக நேருக்கு நேராக கண்ட மன்னர் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் போதி தர்மர்  தனது  காலணியை கழற்றி  தலையில் வைத்திருந்தார்.ஒரு காலணி தலையிலும் இன்னொரு காலணி காலிலுமாக இருந்தது.
மன்னர் சங்கடத்துடன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்.. எத்தகைய கிறுக்கனை நான் வரவேற்க வந்தேன் என்றெல்லாம் எண்ணினாா்.
ஏன் உங்கள் காலணியை தலையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மன்னர் வூ போதிதர்மரிடம் கேட்டார்.
நான் ஒரு கிறுக்குத்தனமான நபர் என்பதை முதலிலேயே தெரிவித்துவிடத்தான் காலணியை தலையில் வைத்திருக்கிறேன் என்றார் போதி தர்மர்.. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள் .அது பற்றி இப்போதே முடிவு செய்துக் கொள்ளுங்கள். அப்புறம் எதுவம் பேசக்கூடாது .இதுதான் உங்கள் மனத்தை கலைப்பதற்கான எனது உத்தி என்று கூறினார்.
மன்னர் தமது  உரையாடலைத் தொடங்கினார்
நான் நிறைய நல்ல காரியங்கள் செய்வதால்.நல் ஒழுக்கம் நிறைந்தவன் என்றார் மன்னர்.
போதிதர்மர் மன்னரின் கண்களை ஆழமாகப் பருகினார். மன்னரின் முதுகெலும்புக்குள் ஒரு நடுக்கம் தோன்றியது. மடத்தனம் என்றார் போதி தர்மர். நல் ஒழுக்கம் என்பது விழிப்புணர்வுடன் சேர்ந்து வருவதாகும் .நீ ஒரு முட்டாள். என்ன நல்லொழுக்கத்தை நீ அடைந்து விட்டாய்? நல்லொழுக்கம் என்பது ஞானத்தின் நிழல்.என்னுடன் என் நிழல் போல் வருவதே நல்லொழுக்கம் என்று போதிதர்மர்  கூறினார்.
புத்த பிக்குகளுக்காக ஆசிரமங்கள் அமைத்ததாகவும் ,ஆயிரமாயிரம் அறிஞர்களை பணியமர்த்தி புத்தரின் போதனைகளை மொழிபெயர்க்கும் பணியை கொடுத்ததாகவும் பல லட்சங்களை செலவு செய்து புத்தருக்கான சேவைகளை தமது ஆட்சியில் செய்து வருவதாகவும் மன்னர் பட்டியலிட்டார். தினமும் பல லட்சம் பேருக்கு அன்னதானம் செய்வதாகவும் மன்னர் தனது பெருமையை குறிப்பிட்டார்.
போதி தர்மர்  சிரித்தார். வயிறு வலிக்க சிரித்தார். இத்தனை பேரிடியான சிரிப்பை மன்னர் கேட்டதே இல்லை.
நீ ஒரு மிகப் பெரிய முட்டாள். உன் அத்தனை செலவுகளும் வீண் செலவுகளாகிப் போயின என்றார் போதிதர்மர் . இதனால் ஒரு பலனும் இல்லை. நீ ஏழாவது சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று எண்ணாதே. புத்த பிக்குகள் உன்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நன்றாக ஏமாற்றினர். உண்மையை அவர்கள் உன்னிடம் சொல்லவில்லை. உன்னிடம் பொய்யான வாக்குறுதிகளைத் தருகிறார்கள். அவர்கள் உன் ரத்தம் குடிக்கும் மூட்டைப் பூச்சிகள். சொர்க்கத்திற்கு போகும் ஆசையுடன் காரியங்களை தானதருமங்களை புண்ணியங்களை செய்பவன், நல் லொழுக்கத்தை பேணுபவன் நிச்சயம் நரகத்திற்குதான் செல்வான் என்றார் போதி தர்மர்.
மன்னர் கோபத்துடன் நீ எனக்கான ஆள் இல்லை என்று கூறி போய் விடுகிறார். போதி தர்மர் கூறினார். என்னை உணரக்கூடிய சரியான நபர் வரும் வரை நான் காத்திருப்பேன்.
பல காலம் கழித்துதான் ஒருவர் வருகிறார். அவர் போதிதருமரின் முதுகுக்குப் பின்னால் எதுவம் பேசாமல் 24 மணி நேரம் சும்மாவே நின்றிருந்தார். போதிதர்மரே திரும்பிப் பார்த்து கேட்க வேண்டியாகி விட்டது. என் பின்னால் ஏன் நிற்கிறாய் உனக்கு என்ன வேண்டும் ?
நீங்கள் என் பக்கம் திரும்பியிருக்காவிட்டால் நான் தற்கொலை செய்திருப்பேன் என்கிறார் அந்த நபர். தான் வாய்ச்சொல் வீரர் இல்லை என்று நிரூபிக்க உடனடியாக வாளை எடுத்து தன் விரலை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட அதனை குருவுக்கு காணிக்கை என அளிக்கிறார்.
போதி தர்மர்  புன்னகைத்தார். நீதான் என் சீடன் .இந்த மனிதனுக்காகத்தான் நான் இத்தனை காலமாக இங்கே காத்திருந்தேன்.
----------------
சீனாவில் முதல் முதலாக ஜென் பரவியது இப்படித்தான். இந்நூலில் ஓஷோ போதி தர்மரைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்ட ஒரு விலை மதிக்கமுடியாத வைரம் என்கிறார். ஆனால் பாலிஷ் செய்யப்படாத வைரம். கரடுமுரடானவர் என்றும் ஓஷோ கூறுகிறார். அதனால்தான் மன்னரையே முட்டாள் என்று விரட்டியடித்தார் போதிதர்மர். தன்னை திரும்பிப் பார்க்க செய்ய தன் விரலையே வெட்டத்துணிந்து நின்ற உயிரையே விடத் துணிந்த ஒருவன்தான் தனது சீடன் என்று ஏற்றுக் கொண்டார். அவர் தலையில் ஷூவை வைத்து சீனாவுக்குள் நுழைந்ததும் ஒரு குறியீடுதான்.
இப்போதும் கூட நாம் சீனாவுக்கு கையில் செருப்புடன் செல்ல வேண்டும் போலிருக்கிறது. அத்தனை முட்டாள் மன்னர்கள் நிரம்பிய நாடு அது.
-------------------------
ஜென் தேநீர்  18

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
போதி தர்மரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவர் பதில்களும் ......
கே - புத்தரின் மனம் என்பது என்ன?
உன் மனம்தான் அது. உன் இயல்பான சாராம்சத்தை நீ காணும்போது அதனை நீ அதுவாக அழைக்கலாம். அதுதான் SUCHNESS.இயற்கையின் மாறாத தன்மையை உனக்குள்ளே நீ கண்டால் அதனை தர்ம கயா என்று அழைக்கலாம்.அது சுதந்திரமாகவும் எளிமையாகவும் செயல்படக் கூடிய மனநிலை.மற்றவர்களால் எந்த இடையூறும் அதற்கு இல்லை.எனவே இதனை மெய்மையின் பாதை என்று அழைக்கலாம். அது பிறந்து வரவுமில்லை எனவே அது இறக்கப் போவதுமில்லை. எனவே அதனை நிர்வாணா என்றும் அழைக்கலாம் என்று போதி சத்துவர் அதற்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்த கேள்வி பதில் பகுதிக்கு தனது வெண் தாமரை நூலில் ஓஷோ பக்கம் பக்கமாக விளக்க உரை அளித்துள்ளார். ஓஷோவின் சொற்களில் படிக்க விரும்புகிறவர்கள் அவரது நூல்களை வாங்கிப் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அதனை முழுமையாக மொழிபெயர்ப்பதில் பல்வேறு உரிமை பிரச்சினைகள் உள்ளன. எனவே அதற்கு நான் போகவில்லை. போதி தர்மரை ஓஷோ  அறிமுகம் செய்யும் விதத்தை தமிழ் வாசகர்களுக்கு கொண்டு வருவதையே இந்த கட்டுரையின் நோக்கம்.
இயல்பாக இருப்பதுதான் புத்தரின் மனம் என்கிறார் போதிதர்மர். நம் வாழ்க்கை நம்மை இயல்பாக இருக்க விடுவதில்லை. எப்போதும் மற்றவர்களின் அபிப்ராயங்களுடனே உழல்கிறோம். எல்லோரும் வாழ்க்கையில் நமக்கு லைக் போடுவதில்லை .சிலர் மோசமான கமெண்ட்டும் அடிப்பார்கள். எதையாவது சொல்லி மனத்தை துன்புறுத்துவார்கள்.
மெய்மை மனநிலை பிறக்கவும் இல்லை அது இறக்கவும் முடியாது என்கிறார் போதி தர்மர் . இதனை ஓஷோ முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய கல்லறையில் அவர் விரும்பிய படியே எழுதப்பட்ட வாசகமும் இதுதான்.
ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.... பூமியில் அவர் தோன்றி கடந்து சென்றார் எனும் வகையில் ஓஷோவின் கல்லறை வாசகம் அமைந்துள்ளது.
ஆன்மா அழிவற்றது என்ற கோட்பாட்டை ஒட்டிய கருத்தியல் இது.
கடவுள் என்ன என்று தேடும் அத்தனை மனங்களும் கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வியே இதுதான். இதுதான் ஆன்மீகத் தேடலின் தொடக்கம் என்கிறார் ஓஷோ.
"புத்தர் மனம் என்பது தூய்மையான விழிப்புணர்வு. அது ஒரு கண்ணாடி மாதிரி. பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை. அது ஒரு போதும் உருவத்தைத் திருத்துவதில்லை. எதையும் திணிப்பதுமில்லை. அதற்கென கருத்து ஏதுமில்லை. அதற்கென உள்ளடக்கம் ஏதுமில்லை. எந்த சிந்தனையும் இல்லை. எந்த ஆசைகளும் இல்லை. எந்த நினைவுகளையும் அது தேக்கி வைத்துக் கொள்வதில்லை. என்றென்றைக்குமான நிகழ் யதார்த்தத்தில் ஒரு நிகழாக அது இருக்கிறது. அது நிகழ்காலத்தில் இருக்கிறது. இதே போன்று முழு விழிப்புணர்வுடன் நீ இருக்கும் போது மனம் மறைந்துவிடுகிறது .அதன் எல்லைகள் யாவும் மறைந்துவிடுகின்றன. ஒரு மகத்தான வெறுமை உனக்குள் தோன்றுகிறது.ஆனால் அந்த வெறுமை என்பதும் வெறுமை அல்ல. அது ஒரு பூரணமும் கூட. அது உன்னுள் நிரம்புகிறது.நிரம்பி வழிகிறது. வெறுமை என்பது உன் துன்பங்களை அது தூக்கியெறிந்து விட்டது. பூரணம் என்பது ஆனந்தத்தால் அது நிரம்பி வழிகிறது "என்கிறார் ஓஷோ .
புத்தரின் மனம் என்பது எது என்ற கேள்விக்கு உன் மனம் தான் அது என்கிறார் போதிசத்துவர். ஒவ்வொரு மனிதனும் புத்தர் மனநிலையுடன் தான் சிறு குழந்தைப் பருவத்தில் பிறக்கிறான். அறிவு அனுபவம் அவன் மனத்துக்குள் குப்பைகளை குவித்து விடுகிறது. மனக் கண்ணாடியில் தூசு படிகிறது. அதிகமான தூசு படிந்து கண்ணாடி உன்னை பிரதிபலிக்காமல் மங்கலாகிறது. உன் உண்மையான உருவம் தெரியாமல் நீ தடுமாறுகிறாய் என்று இந்த கேள்விக்கு ஜென் விளக்கம் தருகிறது. இதையே ஓஷோவும் கூறுகிறார்.
" கடவுளைத் தேட விரும்புகிறவர் முதலில் இந்தக் கேள்வியைத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் .இக்கேள்விக்கான பதிலை நீ புரிந்துக் கொண்டால் நீயும் புத்தர் மனநிலையில் இருப்பவன் தான். "
விழிப்புணர்வு இல்லாத புத்தர் மனம் இருப்பினும் கூட மனிதன் இயல்பிலேயே புத்தன் தான். விழிப்புணர்வு அல்லாத போதும் அவன் புத்தன்தான் என்கிறார் ஓஷோ.
ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று எனது சொற்களில்....
ஒரு யானை காட்டுவழியாக சென்றுக் கொண்டிருந்த போது ஒரு எலி கையை நீட்டி என்னை முதுகில் ஏற்றிச் செல்ல முடியுமா என்று கேட்டது. யானையும் நட்புடன் வா என்று அழைக்க எலி தாவிகுதித்து யானையின் முதுகின் மீது ஏறிக் கொண்டது. சிறிது தூரம் சென்றதும் யானையின் முதுகில் இருந்த எலி கெக்கெ பெக்கே என சிரி்த்தது. யானைக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் சிறிது தூரம் சென்றதும் யானையின் முதுகில் இருந்த எலி மீண்டும் கெக்களித்து சிரித்தது. யானைக்கு கோபம். எதற்காக சிரிக்கிறாய் சொல். நீ சொல்லாவிட்டால் என் முதுகிலிருந்து உன்னை இறக்கி விட்டு விடுவேன்.
எலி சொன்னது உன் முதுகில் அமர்ந்து இரண்டு முறை நான் உன்னுடன் உடலுறவு கொண்டேன். I RAPED YOU TWICE ஆனால் நீ கவனிக்கவே இல்லை. இதனால் தான் சிரித்தேன்
நம்மையும் எத்தனையோ பேர் இப்படி ரேப் செய்கிறார்கள் ,விழிப்புணர்வே இல்லாமல் அவர்களை நம் முதுகுகளில் சுமந்தபடியே நாமும் போய்க்கொண்டே இருக்கிறோம்.
-----------
ஜென் தேநீர்  19

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்

போதி தர்மரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் நான்கு சீடர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்புகளைப் பற்றிய ஓஷோவின் புத்தகம் தான் வெண் தாமரை ( THE WHITE LOTUS )
இந்த புத்தகத்தின் சிறப்புகளை பார்ப்போம்....
போதி தர்மரிடம் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வி
தத்தகத்தர் என்பவர் யார்
போதி சத்துவர் கூறுகிறார் தத்தகத்தர்  தான் எங்கிருந்தும் வரவில்லை எங்கும் போகவில்லை என்பதை அறிந்தவரே தத்தகத்தர்.
தத்தகத்தர் என்பது புத்தரின் இன்னொரு  பெயர். இச்சொல்லின் பொருள் எங்கிருந்தோ வந்து எங்கேயோ போகும் காற்றைப் போன்றவர் என்பதாகும். வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. அது பாட்டுக்கு வரும் அதுபாட்டுக்கு போகும். புத்தருக்கு இன்னொரு பெயர் உண்டு .அமிதாப். அமிதாப் என்றால் அவர் நிரந்தரமான ஒளி. எல்லைகளற்ற ஒளி. மனம் மறைந்துவிடும் போது அத்தனை இருளும் மறைந்து எங்கும் ஒளியாக காட்சியளிக்கிறது. இன்மை மறைந்து ஒளி நிரம்புகிறது என்பார் ஓஷோ.
புத்தரையும் அப்படித்தான் உணர முடியும். கடவுளையும் அப்படித்தான் உணர முடியும்.
 ஓஷோ இதனை குட்டிக் கதை மூலம் உணர்த்துகிறார். ஒரு சின்னக்குழந்தையிடம் அவர் தந்தை பாடம் நடத்திய போது தனது நாத்திக கருத்தை திணிக்க முயன்றார். ஆங்கிலத்தில் கடவுள் எங்கும் இல்லை என்று பொருள்படியாக GOD IN NOWHERE ஒருவரியை எழுதி குழந்தையை திருப்பி எழுதச் சொன்னார்.
குழந்தை வார்த்தையைப் பிரித்து எழுதியது GOD IS NOW HERE.
ஓஷோ மேலும் ஒரு சம்பவத்தால் விளக்கம் தருகிறார்
ரமண மகிரிஷியிடம் மரணப் படுக்கையில் ஒருவர் கேட்கிறார் நீங்கள் இறந்த பின்னர் எங்கே போவீர்கள் என்று . ரமணருக்கு புற்று நோய் இருந்தது .அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்த கேள்வியை கேட்டு சிரித்தார். நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேதான் இருப்பேன். என் உடல் மண்ணோடு மண்ணாக சாம்பலாகிப் போகும். ஆனால் நான் எங்கும் போக மாட்டேன்.
எல்லோருக்கும் மரண பயம் உண்டு. செத்த பின் மாந்தர் நிலை என்றுமறைமலையடிகள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். திபெத்தில் மரணம் குறித்த பிரபலமான புத்தகம் ஒன்று உண்டு . தற்கொலை செய்துக் கொண்ட பெண் கவிஞர் சில்வியா பிளாத் மரணம் ஒரு கலை வாழ்க்கையைப் போல அதையும் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நமது அரசாங்கங்கள் நம்மை கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறுவது இதைத்தானோ?
இறந்த பின்னர் உடல் என்ன ஆகும். ஆவிகளுடன் பேச முடியும் என்று தமிழ்நாட்டில் பலர் நம்புகின்றனர். ரவிச்சந்திரன் என்பவர் மகாபாரதத்திலும் பைபிளிலும் கூட ஆவிகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆன்மா அழியாதது என்ற இந்து மதக் கோட்பாடு பகவத் கீதையிலும் உரைக்கப்படுகிறது.
பாம்பு சட்டையைக் கழற்றுவது போல் மனிதப் பிறவி உடலை கழற்றிப் போகிறது என்பது பலரும்நம்புகிற விஷயம். ஆனால் இதற்கு சான்றுகள் இல்லை. புத்தர் முன்காலத்தில் ஒரு புத்தர் இருந்தாரே என்று கேட்பதும் அர்த்தப்பூர்வமானது.
ஜென் எப்போதும் முரண்பட்ட புதிர்கள் மூலமே உரையாடுகிறது.
ஓஷோ அதை  ஒரு ஜென் கோன் ( koan )  மூலமாக அழகாக விளக்குகிறார்.
பெரிய தொப்பை வயிறு வலிக்க சிரிக்கும் போது உலகில் ஆயிரம் வெண் தாமரைகள் மழை பொழிவதைப் போல் மலர்கின்றன.
ஞானியின் தொப்பை குலுங்க சிரிக்கும் போது வெண் தாமரைகள் மலர்வதை ஒரு கதை மூலமும் ஓஷோ விளக்குகிறார்.
ஒரு முறை புத்தரிடம் அவர் சீடர் சுபுத்தி பேசிக் கொண்டிருந்த போது கடந்த காலத்திலும் ஒரு புத்தர் இருந்தார் அவர் எதையாவது அடைந்தாரா என்று கேட்கிறார் புத்தர்
அவர் வேறொரு காலத்தைச் சேர்ந்த புத்தர் அவர் எதையும் அடையவில்லை. இங்கு அடைவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளிக்கிறார் சுபுத்தி
புத்தர் சிரித்தார். சுபுத்தி நீ  என்னிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டாயா..எதையாவது அடைந்தாயா...?
சுபுத்தி கூறுகிறார் மரியாதைக்குரியவரே நான் தங்களிடமிருந்து எதையும் அடையவில்லை. எனவே தான் உங்களை தலைவணங்கி வணங்குகிறேன்.
ஜென் இத்தகைய முரண் மிக்க வாசகங்கள் நிரம்பியது. இவற்றின் அர்த்தகம் நேரடியானது அல்ல. அனுபூதியானது.
----------------
ஜென் பற்றியும் ஜென்னை ஓஷோ விளங்கிக் கொண்ட விதமும் அவர் விளக்கம் சொன்ன விதமும் குறித்த இப்பகுதி மிகவும் முக்கியமானது. ஜென்னை ஆழ்ந்து உணர்ந்தவர் ஓஷோ. அவர் கூறாத ஜென் கதை இல்லை. அவர் சொல்லாத ஜென் விளக்கம் இல்லை. நூற்றுக்கணக்கான புத்தகங்களில் அவர் ஜென் பற்றியும் ஜென் குருமார்கள் பற்றியும் தனது வசீகரமான சொல்லாற்றல் பேச்சாற்றலால் விளக்குகிறார். அத்தனை புத்தகங்களையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். அதை இத்தொடரில் கூடுமானவரை தர முயற்சிக்கிறேன். பல அற்புத தருணங்களை அதில் நீங்கள் கடந்து செல்வீர்கள். முடிந்தால் இதன் ஞானத்தையும் ஞான ஒளியையும் கைப்பற்றுங்கள். உங்கள் வாழ்க்கையின் இருள் விலகும். கேள்விகள் மறையும், புத்தரையும் ஓஷோவையும் வணங்கி நன்றி கூற வைக்கும்.
ஓஷோவின் ஞானம் கடல் போன்றது.அதில் ஒரு கைப்பிடியைத்தான் நான் அள்ளி வருகின்றேன்.
---------
ஜென் தேநீர்  20

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ஓஷோ சொன்ன குட்டிக் கதை ஒன்று...
நான்கு சீடர்கள் மௌன விரதம் இருக்க முடிவு செய்தனர். ஒரு குகைக்குள் உட்காந்து ஏழு நாட்கள் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்க முடிவு செய்தனர். ஆனால் ஒருமணி நேரம் கூட அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. வெளியே வந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திருதிருவென முழித்தனர்.
உள்ளே விளக்கை அணைத்து வந்தோமா என்று கேட்டான் ஒருவன்
முட்டாள்...ஏழு நாட்களுக்கு எதுவும் பேசக்கூடாது என்பது நிபந்தனை...மறந்துவிட்டாயா என்றான் இரண்டாவது சீடன்
முட்டாள் நீயும்தானே பேசிவிட்டாய் என்றான் மூன்றாமவன்
நல்லவேளை நான் எதுவும் பேசவில்லை என்றான் நான்காவது சீடன்.

---இன்னும் சில ஜென் கதைகள்....
ஒரு ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான்...ஞானம் அடைவதற்கு முன்பு நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்..?
குரு சொன்னார் " நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டி வருவேன். கிணற்றில் போய் நீர் இறைத்து வருவேன் "
ஞானம் அடைந்த பிறகு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மேலும் கேட்டான் அந்த மனிதன்.
குரு சொன்னார் நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டி வருகிறேன். கிணற்றுக்குப் போய் நீர் இறைத்து வருகிறேன்.
அப்படியானால் ஞானத்துக்கு முன் ஞானத்துக்குப் பின் என்பதில் என்ன வித்தியாசம்?
குரு சொன்னார். அப்போதும் விறகு வெட்டினேன். இப்போதும் விறகுவெட்டுகிறேன். அப்போதும் கிணற்றில் நீரிறைத்தேன். இப்போதும் நீர் இறைக்கிறேன். ஆனால் முன்பு விழிப்புடன் அதை செய்யவில்லை. இப்போது அதனை விழிப்புடன் செய்கிறேன்.
----------
இன்னொரு ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான் தர்மம் என்பது என்ன?
குரு சொன்னார் எனக்குப் பசிக்கும் போது சாப்பிடுகிறேன் .தூக்கம் வரும் போது தூங்குகிறேன்.
------
கேப்டன் தான் சிறைப்பிடித்த கைதியை விடுதலை செய்ய சில நிபந்தனைகள் விதித்தான்.
முதல் நிபந்தனை முதல் கூடாரத்திற்கு போ அங்கு ஒரு பேரல் நிறைய மது இருக்கிறது. அனைத்தையும் மூச்சிவிடாமல் குடித்து விட வேண்டும்.
அடுத்த கூடாரத்தில் ஒரு அழகா ன பெண் இருக்கிறாள். காமத்தால் தாளமுடியாமல் தவி்க்கிறாள். அவளை யாரும் திருப்தி படுத்த முடிந்ததே இல்லை. அவள் கூடாரத்திற்குப் போய் ஆசை தீர உடலுறவு கொண்டு திருப்தி செய்தால்தான் அவள் உன்னை உயிருடன் விடுவாள். இ்லலையென்றால் கொன்று விடுவாள்.
மூன்றாவது கூடாரத்தில் ஒரு பசித்த சிங்கம் இருக்கிறது. அருகில் போனாலே கடித்து குதறி எடுத்துவிடும். அந்த சிங்கத்துக்கு பல நாட்களாக பல்வலி. பசியோடு இருப்பதால் அதன் அருகில் செல்ல யாருக்கும் துணிவில்லை. நீ போய் அந்த சிங்கத்தின் பல்லை பிடுங்கி எடுத்து வா. உயிருடன் திரும்பி வந்தால் உனக்கு விடுதலை
கைதி பாய்ந்தான். முதல் கூடாரத்தில் நுழைந்து மதுவை குடித்துமுடித்தான். அடுத்த கூடாரத்தில் நுழைந்தான் .பெரும் ஓசைகள், ஆ ஊ என்ற அலறல்கள் கேட்டன. ரத்த காயங்களுடன் வெளியே வந்த கைதி பல்வலியால் துடிக்கும் பெண் எங்கே இருக்கிறாள் என்று கேட்டான்.
-----------
புத்தரிடம் ஒருவன் வந்து கடவுள் இருப்பது உண்மையா என்று கேட்டான்.
இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்றார் புத்தர்
ஆனந்தா என்ற சீடர் புத்தரை கவனித்துக் கொண்டே இருந்தான். மாலையில் இன்னொருவன் வந்தான் கடவுள் இருப்பது உண்மையா என்று அதே கேள்வியை கேட்டான்.
ஆம் .கடவுள் இருப்பது உண்மைதான் என்றார் புத்தர். கடவுள் எப்போதும் இருக்கிறார். அவரைத் தேடினால் கண்டு அடையலாம் என்றார் புத்தர்
ஆனந்தா குழப்பம் அடைந்தார். காலையில் இல்லை என்கிறார் மாலையில் கடவுள் உண்டு என்கிறார் புத்தருக்கு என்ன ஆச்சு என்று ஆனந்தா யோசிக்கிறார்.
மூன்றாவதாகா ஒரு நபர் இரவில் வருகிறார் .அவரும் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறார். புத்தர் பதில் ஏதும் கூறாமல் கண்களை மூடி தியானம் செய்கிறார். நீண்ட நேரமாக பதிலை எதிர்பார்த்து புத்தரின் காலடியில் காத்திருந்த அந்த நபர் நன்றி எனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று கூறி வணங்கி சென்று விட்டான்.
ஆனந்தாவால் தாங்க முடியவில்லை. புத்தர் தியானத்தில் இருந்து மீண்டதும் கேட்டே விட்டார்.
காலையில் இல்லை என்கிறீர்கள் மாலையில் உண்டு என்கிறீர்கள். இரவில் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறீர்கள். வந்தவனும் பதில் கிடைத்து விட்டது என்று கூறிச் சென்று விட்டான் .என்னதான் நடக்கிறது இங்கே?
புத்தர் விளக்கினார்.
காலையில் வந்தவன் கடவுள் நம்பி்க்கையுடன் வந்தான் .என் வாயால் கடவுள் உண்டு என்பதை சொல்ல வைக்க அவன் விரும்பினான் ,பின்னர் தனது நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு ஊரெல்லாம் போய் புத்தரே கடவுள் இருப்பதாக ஒப்புக் கொண்டு விட்டார் என்று பிரச்சாரம் செய்வான், அவன் நம்பிக்கைக்கு என் பெயரைப் பயன்படுத்துவான். அதனால்தான் கடவுள் இல்லை என்று அவனிடம் கூறினேன்.
இரண்டாவதாக வந்தவன் கடவுளை நம்பாத நாத்திகன் .அவனும் தனது கருத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வந்தான், அதனால்தான் கடவுள் எப்போதும் இருக்கிறார், தேடினால் அடையலாம் என்று பதில் அளித்தேன்.
மூன்றாவதாக வந்தவன் கடவுள் உண்டா இல்லையா என்ற குழப்பத்தில் வந்தவன். அவனுக்கு எந்த பதிலையும் நான் கூற முடியாது. என் மௌனத்தால் அவன் மனம் சொன்ன பதிலை அவன் ஏற்றுக் கொண்டு பதில் கிடைத்துவிட்டதாக சென்றுவிட்டான்.
எல்லா பதில்களிலும் சிறந்த பதில் மௌனம்தான். மௌனத்தில் தான் அனைவருக்குமான பதில்கள் கிடைக்கின்றன. அதனால்தான் அவன் நன்றியுடன் என்னை வணங்கிச் சென்றான் என்கிறார் புத்தர்.
---------------------
ஒரு ஜென் கதை
ஒருவன் தன் மனைவிக்கு நடுங்குபவனாக இருந்தான். மனைவி அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாள். எந்த ஒரு செயலிலும் சொல்லிலும் மனைவிக்கு அஞ்சிக்கொண்டிருந்தான். அவன் மனைவி நோயுற்றாள். அவள் சாகப்போவதை அவன் உணர்ந்தான். ஒரு விடுதலை உணர்வு தோன்றுவதற்கு பதிலாக அவனுக்கு அச்சம் மேலும் அதிகமானது. அவன் மனைவி ஒரு பேயாக பிசாசாக மாறி வந்து அவனை இன்னும் அதிகமாக ஆட்டிப்படைப்பாள் என்று அச்சம் கொண்டான்.
ஒரு ஜென் குருவிடம் போனான் .தன் அச்சத்தை கூறினான். குரு அவன் கூறுவதை முழுமையாக கூர்ந்து கவனித்தார் .பின்னர் ஒரு சிறிய மூட்டையை அவன் கையில் கொடுத்தார் .இது என்ன என்று கேட்டான் அவன்.
இவை கூழாங்கற்கள். இவற்றை மூட்டையாக கட்டியிருக்கிறேன். ஆனால் இதில் எத்தனை கற்கள் இருக்கின்றன என்று உன் மனைவி பேயாக வந்தால் கேள். அவள் பதில் சொல்லாமல் மறைந்துவிடுவாள். அதுவரை நீயும் இதனை திறந்து கற்களை எண்ணக்கூடாது என்றார் ஜென்குரு.
அந்த நபர் வீட்டுக்குப் போனான். வீட்டு வாசலில் மனைவி பேய் வடிவில் காத்திருந்தாள். அவன் நடுநடுங்கி்ப் போனான்.
என்ன அந்த ஜென் குருவிடம் தானே போய்வந்தாய் ..என்னைவிரட்ட முயற்சிக்காதே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று அவள் ஆவி கூற அவன் மேலும் நடுக்கம் கொண்டான் .நான் ஜென் குருவிடம் போனது இவளுக்குத் தெரிந்துவிட்டதே என்று. ஆயினும் தன் கையில் இருந்த மூட்டையை எடுத்து அவளிடம் காட்டினான் .இதுதான் ஜென் குரு கொடுத்தது. இதில் எத்தனை கூழாங் கற்களை இருக்கின்றன என்று உன்னிடம் கேட்கச் சொன்னார் .பதில் தெரியாவிட்டால் நீ மறைந்து ஒழிந்துவிடுவாய்
மனைவியின் ஆவி திணறியது. அதற்கு பதல் தெரியவில்லை .காற்றோடு காற்றாக கரைந்து மறைந்து போனது. அதன் பிறகு அவன் வாழ்க்கையில் அது வரவே இல்லை. அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் குருவிடம் ஓடினான்.  குருவே என்ன மாயம் என்ன மந்திரம் என் மனைவியின் ஆவியை விரட்டிய ரகசியம் என்ன எனக்கு சொல்லுங்களேன் என்று கேட்டான். குரு சிரித்தார். உன் மூட்டையை அவிழ்த்து அதில் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்று எண்ணி்ப் பார் என்றார் குரு.
எண்ணினான் 11 கற்கள் இருந்தன
இதுதான் அந்த ரகசியம் என்று கூறினார் குரு. நீ மனைவியால் துன்புறுத்தப்பட்டதால் அதுகுறித்த பிரமையும் அச்சமும் உன் மனதுக்குள் இருந்தது. அவள் பேயாகவும் ஆவியாகவும் உன்னை மிரட்டிக் கொ ண்டிருந்தாள் .அது வெறும்  பிம்பம். மாயை என்று நான் கூறினால் நீ நம்ப மாட்டாய் .அதனால்தான் கூழாங்கற்களை மூட்டைக்கட்டி கொடுத்தேன். அதில் உள்ள கற்கள் எத்தனை என்று எனக்கே தெரியாது .உனக்கும் நான் கூறவில்லை. அதனால்தான் உன் மனைவிக்கும் தெரியவில்லை. அவள் ஜென்குருவிடம் போய் வந்ததை சொன்னாள் ஏன் என்றால் நீ ஜென் குருவைத் தேடி வந்தது உனக்கே தெரியும். உனக்குத் தெரிந்தது மட்டும்தான் உன் மனைவிக்கும் தெரியும். உனக்குத் தெரியாத கூழாங்கற்களின் எண்ணிக்கை அவளுக்கும் தெரியாது .அதனால் அவள் மறைந்துவிட்டாள் என்று குரு விளக்கம் தந்தார்.
-----------
முல்லா நசுருதீன் லாரி சத்தம் கேட்டால் உடல் நடுங்குவதை அவர் நண்பர் கவனித்தார். இதுபற்றி அவர் விசாரித்தார் ஏன் எப்போதும் லாரி வரும் ஓசை கேட்டால் உன் உடல் நடுங்குகிறது என்று...
முல்லா கூறினார். என் மனைவி ஒரு லாரி டிரைவருடன் ஓடிப்போனாள்
அடடா என்றார் நண்பர் அதனால்தான் நடுங்குகிறாயா
இல்லை. லாரி சத்தம் கேட்கும் போது என் மனைவியைத் திருப்பி்க் கொடுக்க  வந்துவிட்டாரோ என்று நடுங்குகிறேன் என்றார் முல்லா.
--
ஓஷோவின் வெண் தாமரை ( THE WHITE LOTUS ) புத்தகத்தில் இருந்து தொகுத்தவை. என்னுடைய சொந்த சொற்களில்,
--------------------------

ஜென் தேநீர் -செந்தூரம் ஜெகதீஷ் பாகம் 11-15

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 11
பாஷோவின் ஹைகூ கவிதைகள்....



1 விரிந்த கிளையில்
காக்கை கூடு கட்டும்
இலையுதிர் காலத்தில்
2. அந்த கிராமத்தில் யாரும்
மணியடிப்பதில்லை
அடடா வசந்தகாலங்கள் வரும்போது
என்ன செய்வார்கள்?
3. கைத்தடிகளுடனும்
நரை முடிகளுடனும்
பார்க்க வந்தனர்
கல்லறைகளை
4 அரிசி இல்லையா
அந்த நேத்தில் தட்டில்
ஒரு பூவைப் பறித்துப் போடுவோம்.
5அறுவைடைக் கால நிலா
குளத்தைச் சுற்றி நடந்தேன்
இரவு கழிந்தது
6. கூக்கூ என்று குயில் அழுகிறது
செய்வதற்கு ஒன்றுமில்லை
அந்த புதருக்கு
7 பாறை மீது தட்டான் பூச்சி
நடுப்பகல்
கனவுகள்
8 மெல்லுவது குறித்து எச்சரிக்கை
வெறுமையின் தத்துவத்தால்
பற்கள் உடைந்து போகலாம்
எனவே விழுங்கி விடுங்கள் முழுமையாக.
9 துளைகள் இல்லாத
புல்லாங்குழல்
வாசிப்பதற்கு சிரமமானது
10 வெட்டுக்கிளி
ஒன்றும் அறியாதவரை
கத்திக் கொண்டிருந்தது.
11. முதல் பனி
என் பாதை வடகிழக்கே
நட்சத்திரங்களை நோக்கி....
12. பனிக்கால நிலவொளி
மூங்கில்களிடையே மறைகிறது
அமைதியுடன் கலக்கிறது
13 உதிரும் இலை
கிளைக்குத் திரும்புகிறதா..
அட  பட்டாம்பூச்சி
14 நீயே பார்
வேர்ப்பூக்கள் நிலவொளியில்
நனைவதை
15 கலையின் பிறப்பிடம்
நெல்விதைப்போரின் பாடலுக்கு
எங்கிருந்தோ கோரஸ்
16 பனித்துளிகள்
உலகின் அழுக்கைக் கழுவ
இதைவிட வேறு எப்படி..?
17 கிளை மீது
காக்கைத் தூக்கம்
இலையுதிர்கால  மாலை
18 . வசந்தம் போகிறது
பறவைகள் அழுகின்றன
மீன்களின் கண்களிலும் கண்ணீர்
19 மழைக்கால வாழை மரம்
இரவெல்லாம் கேட்டது
இலைக் கடம்பினினில்  பெய்த மழையின் சத்தத்தை
20  அரிசியை விதைக்கும் கரங்கள்
நினைவு கூர்ந்தன
கல்லிலே அரைத்த விதைகளை
21 நான் தனியாக இருப்பதை
உணர்ந்த போது
இங்கேயும் பூத்தது ஒரு மஞ்சள் மலர்
22 கனவுகள் நேராக
குதிரை சவாரி
தூரத்து நிலவொளியில்
காலைத் தேநீரின் புகை
23 நான் உனது தோட்டத்தைப் பெருக்கி
சுத்தம் செய்து
விட்டுச் செல்கிறேன்
சருகுகளை
24 பனிப்பொழிகிறது
குரங்குக்குக் கூட
கம்பளிவேண்டும்
25 முதல் குளிர்கால மழை
நான் செல்கிறேன்
நானொரு பயணி
26 ஏழைச் சிறுவன்
நிலவைப் பார்ப்பதை விட்டு விட்டு
அரிசி ஆலைக்கு வேலைக்குப் போகிறான்
27 பட்டாம்பூச்சியே விழித்தெழு
நேரமாகிவிட்டது
நாம் இன்னும் பல மைல்கள்
பயணிக்க வேண்டும்
28 வயலட் பூக்கள்
எத்தனை மதிப்பிட முடியாதவை...
மலைப் பாதையில்
29 மழைக்காலம்
பட்டாம்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன
மல்பெரிகளின் மீது
30  பனிக்காக ஒதுங்கிய
கவிஞர்களின் கோப்பைகளில்
மின்னலடித்தது
31  இலையுதிர்காலத்தில்
பறவைகளும் மேகங்களும் கூட
வயதாகி விட்டதைப் போல் தெரிகின்றன
32 இதுதான் நறுமணம்
எந்த மரத்திலிருந்து
எங்கிருந்து ?
33 விடியலில் பூக்கும் மலர்களில்
நான் காண ஏங்குவது
கடவுளின் முகத்தை
34 நிலவு மரங்களை விட்டு
மேலெழும்பும் போது
இலைகள் மழையைப்
பிடித்துக் கொள்கின்றன.
35 நண்பர்களின் நிரந்தரப் பிரிவு
காட்டு வாத்துகள்
மேகங்களில் வழி தவறின
36 சாகும் வெட்டுக்கிளியின்
பாடலில்
எத்தனை உயிர்த்துடிப்பு
37 தேன் வடியும் மலரின்
இதயத்திலிருந்து
வெளியேறும் ஒரு குடிகார வண்டு
38 கோடைப் புல்
இலைதாம் மிச்சம்
வீரர்களின் கல்லறைகளிலே
39 பயணக் களைப்பு
காய்ந்த வயல்களில்
கனவுகள் அலையும்
40 மரம் மீது
காகம் அமர்ந்திருக்கிறது
இலையுதிர்கால சருகு போல

---------------------
இவை பாஷோ எழுதிய ஹைக்கூ கவிதைகள்.. ..இக்கவிதைகளிலும் இயற்கையின் பேரானந்தத்தை கவிஞன் தரிசிக்கிறான், குரங்குக்குக் கூட கம்பளிவேண்டும் என்று கவலைப்படுகிறது. தூரத்தில் தெரியும் காலைத் தேநீரின் புகையைக் கண்டு நடக்கிறான்.
ஜென் அற்புதமானது.
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை நாம் தொலைத்து விட்டோம். நகரமயமாக்கல் கார்களின் ஓசையில் நமக்கு குயில்களின் பாடல்கள் கேட்பதில்லை .எங்கிருந்தோ வீசும் வாசனையையும் இலையுதிர்வது போல் அமர்ந்திருக்கும் காக்கைகளையும் வழிதவறிய காட்டு வாத்துகளையும் கண்ணால் காண்பவன் ஹைகூ கவிஞன்.
பாஷோவின் பயணம் ஆங்கிலத்தில் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்பான ஒரு புத்தகத்தைப் பற்றியும் இன்னும் ஏராளமான கவிதைகளையும் பார்க்கலாம்.....
----------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 12
பாஷோவின் ஹைகூ கவிதைகள்....
1.எதுவம் செய்யாமல்
அமைதியாக இருந்தால்
வசந்தம் வருகிறது
பூக்கள் தாமே மலர்கின்றன
2 அந்த கொக்கு
நீரில் தன் முகத்தை நுழைத்து
மிதக்கிறது தூங்கியபடி
3 ஒரு கிழட்டு பைன் மரம்
ஞானம் போதிக்கிறது.
ஒரு காட்டுப் பறவை
உண்மையை உரக்க கூறுகிறது.
4 நிறைய நிறைய ஞாபகங்கள்
செர்ரி பழங்கள்
பழுக்கும் போது
5. மழைக்கால வாழை மரம்
இரவெல்லாம் கேட்டது
பேசினில் பெய்த மழையின் சத்தத்தை
6 தலைநகரை நான் வசந்தகாலத்தில்
விட்டு வந்தேன்.
இங்கு மாரிக்கால காற்று
7  கலையின் ஆரம்பம்
அதோ தூரத்து வடக்கில்
அரிசி விதைப்பவரின் பாடல்கள்
8 ஆகா அற்புதம்
பச்சை இலைகள் இளமையானவை
சூரியன் காய்கிறது
9 பள்ளிப் பையும் நீண்ட வாளும்
மே மாதத்தை கொண்டாடின
பறக்கும் மீன்களுடன்
10 வெயில் கால ஆடைகள்
நெய்து முடிக்கவில்லை
சிறகுகளைத் தேடியதால்
11  மழையை விட
கனமாக பனிப் பொழிகிறது
பணியாளனே
உன் முதலாளியை
மூங்கில் தொப்பி அணியச் சொல்
12 கோடைப் புள்ளில்
மிச்சமிருக்கின்றன
மாவீரர்களின் கனவுகள்
13 இந்த பாதையில்
யாரும் பயணம் செய்யவில்லை
இலையுகிர்கால இருட்டு
14  தொங்கும் பாலத்தில்
உயிருக்குப் போராடும்
திராட்சைக் கொடிகள்
15 ஆக்டோபசின்
மிதக்கும் கனவுகள்
கோடை நிலவின் கீழே
---------------
பூஷன் கவிதைகள்.....
1 கோடாரிகளின் ஒலி
காட்டில் தூர ஒலிக்கும்
அருகில் மரங்கொத்தி
2. சில்லிட்டது தேகம்
காலில் இடறியது
இறந்த என் மனைவியின் சீப்பு
3. பரந்த அந்த மூங்கில்
மாறிவிடும் குப்பைக் காகிதமாகவும்
துடைப்பமாகவும்
4  பட்டாணிச் செடிகள்
பூத்த நிலவொளியில்
ரகசியமாய் கடிதம் படிப்பாள்
பெண்ணொருத்தி
-------------
எழுதியவர் பெயர் தெரியாத சில கவிதைகள்....
1.என்னுடைய கிடங்கு
எரிந்து சாம்பலாகி விட்டது.
ஒளிதரும் நிலவின் காட்சியை
இனி எதுவும் மறைப்பதில்லை
2 குன்றின் முகட்டில்
மூடுபனி மெதுவாக உருகிக் கொண்டிருக்கிறது.
இயற்கை தானே படைக்கும் அழகிய கவிதை
3 மூடன் கைவிளக்கில்
நெருப்பைத் தேடுகிறான்
நெருப்பு என்னவென்று அவன் அறிந்திருந்தால்
இந்நேரம் சோறு வெந்திருக்கும்
4 தண்ணீரில் நீந்தும் வாத்து
பிம்பத்தைப் பாதுகாப்பதும் இல்லை
தண்ணீரும் அதனை தன்னிடம் வைத்துக் கொள்ள
எண்ணுவதுமில்லை
5  குட்டித் தூக்கம் போட்டு
எழுந்தேன்
வசந்தம் போய் விட்டது
6 எரிப்பதற்காகக் காத்திருந்த
மரத்துண்டுகள்
மலரத் தொடங்கின
7 .ஈக்கள் மொய்த்தன
இந்த சுருக்கம் விழுந்த
கிழட்டுக் கையிடம்
என்ன வேண்டுமாம்
8 படிக்கட்டுகளில்  மூங்கில்  நிழல்
இரவெல்லாம் அசைந்தும்
ஒரு தூசு கூட சுத்தமாகவில்லை
9 நிலவின் பிம்பம்
குளத்தின் அடிவிளிம்பு வரை பாய்கிறது
ஆனால் ஒரு சுவடும் விடவில்லை.
10 மீன்கள்
மீன்பிடிக்கத்தான்
மீனை எடு வலையை மற.
11 மின்னல் பாயும் போது
வாழ்க்கைப் பயணத்தை
சிந்திக்காதவன்
எத்தனை அதிர்ஷ்ட்டசாலி
12 பழைய குளத்தில்
சிறுதவளை குதித்தது
பிளப்....அமைதி

இவற்றில் பல கவிதைகள் பாஷோ எழுதியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-------------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 13
ஜென் ஹைகூ கவிதைகள்
1. விரைவில் மடியப் போகிறது
இசை
ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை பறவை
- பாஷோ
2. வெண் பனி மூட்டத்தில்
கடலூம் வானும் சேருமிடத்தில்
ஒற்றைச் சிவப்புக் கோடாய்
உதய சூரியன்
- ஷினோ
3. நாம் வந்து காணும் போது
இங்கேயும் அந்த எரியும் வீடு
மனிதர்கள் ஏன் புகழ்கிறார்கள்
உள்ளே வாழ்வது நல்லது என்று
- இக்யூ
4 பிளம் மரங்களின்
வாசனை ஊடுருவிச் செல்கிறது
நிலவையும்
- பூசன்
5. குளிர்மழைப் பொழிகிறது.
எனக்கொரு தொப்பி கூட இல்லை.
மறு யோசனையில்
யார் கவலைப்படுகிறார்கள் ?
-பாஷோ
6  என் ஊருக்குப் போகிறேன்
தனியே
பனிக்கால பகல் வேளையில்
நாய் குரைக்கிறது.
குரைத்துக் கொண்டே இருக்கிறது
- ஷிகி
7. அலைகளில் புதைந்து எழுகையில்
மலர்ச்சியில்
மீனவர்களும் படகுகளும்
- ஷாக்யோ
8. சீக்கிரமே சாக இருந்தாலும்
அந்தப் பறவையின் குரலில்
அதன் த்வனிதெரிவதில்லை
- பாஷோ
9. உன் தேய்ந்த குரல்
குயிலின் மென் கூவல்
மேகத்தின் உச்சத்தில் இருக்கையில்
உன் பெயர் கூறுவாயா?
 - அபுட்சு
10 அந்தப் பூவின் பனித்துளிகள்
கீழே கொட்டின
வெறும் தண்ணீராக
- காகா நோ சியோ
11. மார்ச் மாதத்தில் நான் எப்போதும்
சியாங்கலை நினைக்கிறேன்.
வாசம் மிக்க அதன் மலர்க் கொத்துகளையும்
-  பாஷோ

------------------
பாஷோவின் பாதையில் ஒரு நெடும் பயணம்
லெஸ்லி டௌனர்
( LESLIE DOWNER )
நாற்று நடும் அவர்களின்
பாடல்களில் மட்டும்தான்
சேறு படவில்லை
- பாஷோ
இந்த ஹைகூ கவிதையை நாம் படித்து ரசித்திருப்போம். ஆனால் ஹைகூ என்பது கவிஞனின் கற்பனையில் இருந்து உதிர்ந்து தாளில் பேனாவால் எழுதப்பட்டது அல்ல. அப்படி எண்ணி விட்டால் அது சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்த அறியாமையை விட கொடியது.
ஹைகூ கவிஞனின் சொந்த அனுபவம். தான் கண்ட ஒரு இயற்கையின் காட்சியை அனுபவமாக்கி கவிஞன் வடிப்பவைதான் ஹைகூ கவிதைகள்.
மூன்றடியால் விண்ணையும் மண்ணையும் பாதாளத்தையும் அளந்த வாமன வடிவம் என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹைகூ கவிதைகள் குறித்து புரிதலை உருவாக்கி அதனை வளர்த்த ஜப்பானிய கவிஞர் மாட்சு பாஷோ.
பாஷோ என்றால் ஜப்பானிய மொழியி்ல் வாழை. தன் பெயரை வாழை மரத்தில் இருந்து பெற்றுக் கொண்ட பாஷோ தன்னை வாழையுடன் ஒப்பிடுவதை பெரிதும் விரும்பினார்.
" காற்றில் உடைந்து ஃபீனிக்ஸ் பறவையின் வாலைப் போல படபடக்கும் அதன் இலைகள்
மழையில் கிழிந்துப் போனாலும் பச்சை விசிறி போல் தோற்றமளிக்கும் . மலர்கள் இருந்தாலும் அவை பகட்டாக இருப்பதில்லை. அதன் மரம் எரிப்பதற்குப் பயனற்றது. கட்டடம் கட்டவும் உபயோகப்படாது . அது கோடாரியை அறிந்ததே இல்லை. அந்த வாழை மரத்தை அதன் பயனற்ற தன்மைக்காகவே நான் மிகவும் விரும்புகிறேன் " என்று தன் குறிப்பொன்றில் எழுதினார் பாஷோ.
பாஷோ ஹைகூ கவிதைகள் எழுதியது சுகானுபவ சித்திரமாக . தமது சீடரான  சரோ என்பவரை அழைத்துக் கொண்டு ஜப்பானின் நாகரீக வாடை படராத கிராமப்புறங்களின் உள்ளே அவர் பயணம் மேற்கொண்டார். யாரும் போகாத ஜப்பானின் வடக்குப் பிரதேசங்களில் பயணம் போன அவர் வழியில் கண்ட நாற்றுகளுடன் தனது ஹைகூ கவிதைகளை ஆட விட்டார். நிலவொளியில் உள்ளூர் கவிஞர்களுடன் ஹைகூ கவியரங்கம் நடத்தினார். செர்ரிப் பழங்களை வசந்தத்தின் குறியீடாக் கண்டு கவிதை படைத்தார். சில்வண்டுகளும் சோளக் கொல்லை பொம்மைகளும் கூட அவர் ஹைகூவில்  இடம் பெற்றன. அவ்வப்போது கல்லிலும் தரையிலும்  சுவர்களிலும் கவிதைகளை அவர் பதிவு செய்தார். இந்த பயண அனுபவங்களை எல்லாம் தொகுத்து லெஸ்லி டௌனர் என்ற பெண் ஒருவர்  on the narrow road  என்று ஒரு புத்தகமாக்கினார்.
பாஷோவுக்குத் தான் எத்தனை அனுபவங்கள். அறுவடைக் கால நிலவைக் காண மலையுச்சிக்கு ஏறினார். செர்ரிப் பூக்கள் பூத்துக் குலுங்குவதைக் காண பல நூறு மைல்கள் நடந்து சென்றார். ஒரு முறை விடியற்காலையின் அரையிருட்டில் அவர் நண்பர் சரோ தேநீருக்காக அடுப்பை மூட்டுகிறாா். அதைப் பார்த்ததும் அங்கிருந்த கல்லில் ஒரு ஹைகூவை செதுக்குகிறார் பாஷோ.
நீ தீ மூட்டுகிறாய்
நான் உனக்கு ஒரு அற்புதம் காட்டுகிறேன்
அதோ பார் பெரிய பனிப்பந்து.
பயணம் முடித்து ஊருக்குத் திரும்பும் பாஷோவுக்கு வேறு சில அனுபவங்கள் .தம்பிக்குத் தலை நரைத்து விட்டது.தாயார் காலமாகி விட்டார். தம்பி தாயாரின் நினைவாக அவருடைய வெள்ளை தலைமுடியை ஒரு பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதை எடுத்து பாஷோவிடம் தருகிறான்.நீண்ட நாட்களாகப் பார்க்க முடியாமல் போன தாயின் நினைவால். நான் அழுதேன் என்று குறிப்பு எழுதுகிறார் பாஷோ. அதையும் ஒரு ஹைகூ ஆக்கினார்.
நான் என் கையில் எடுத்ததும்
சூடனா கண்ணீரால்
கரைந்துப் போகும்
இலையுதிர்கால பனித்துளி
அந்த வெள்ளை முடியை பனித்துளியாக பார்க்கிற கவிஞன் உலகிற்கு தன் காட்சிகளை கவிதைகளாக்கி விட்டுச் சென்றுள்ளான்.
பயணத்தை முடித்து சில ஆண்டுகளில் 1694ம் ஆண்டு பாஷோ மறைந்தார்.
ஆனால் பல காலம் கழித்து அவருடைய கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்ட நூல்களாகத் தொகுக்கப்பட்டு இன்று உலகப் புகழ் மிக்க ஜப்பானியக் கவிஞராக விளங்குகிறார் பாஷோ.
லெஸ்லி டௌனர் பாஷோ பயணித்த பகுதிகளின் வரைபடைத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு நெடிய பயணம் மேற்கொண்டார். பாஷோவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி ஜப்பானின் தொழில்நுட்பமும் நாகரீகமும் தொடாத கிராமப்புறங்களுக்கும் மலைகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். பாஷோவின் கண்களாலேயே அந்த ஹைகூ கவிதைகள் பிறந்த இடங்களை அவர் தரிசித்தார். அந்த அனுபவங்களையே அவர் தனது புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார். ஏராளமான புதிய பாஷோவின் கவிதைகளையும் அவர் சேகரித்து தந்தார்.
என் தனிமையைக்
கொண்டாட எனக்கொரு
நண்பன் வேண்டும்
தேநீர் கோப்பையை சுடச்சுட இறக்கி விட்டு அதைப் பகிர ஆளில்லாத தனிமையில் பாஷோ எழுதுகிறான் ,
------------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 14
ஜென் ஹைகூ
the secrets of the universe என்ற ஓஷோவின்  ஹைகூ கவிதைகள் குறித்த உரை நூலை தமிழில் நான் பிரபஞ்ச ரகசியம்  என்று மொழிபெயர்த்தேன். கவிதா பதிப்பக உரிமையாளர் திரு .சொக்கலிங்கம் அவர்கள் இந்நூலை வெளியிட்டார். இந்நூலில் என்னை ஆக்ரமித்து ஓஷோவின் சீடர் என்ற உரிமையாலும் என் நட்பாலும் சுவாமி அம்ரித் யாத்ரி என்பவரும் தனது பெயரை போட்டுக் கொண்டார். பல கவிதைகளை அவர் ஓஷோவின் அர்த்தம் மாறாமல் இருக்க திருத்தினார். ஆனால் அதில் கவிதைகள் செத்துப் போயின. எனது உயிர்ப்பான மொழிபெயர்ப்பையும் கவிதை என்ற இலக்கிய வடிவத்தையும் அறியாததால் வந்த சிக்கல் இது. ஓஷோவுக்கு விசுவாசம் காட்டி கவிதையைக் கொன்றுவிட்டார். இது தவிர மேலும் 4 நூல்களை நான கவிதா பதிப்பகத்திற்கு மொழிபெயர்த்தேன். இதுவரை 5 புத்தகங்களையும் பலப்பல ஆயிரமாயிரம் பிரதிகள் விற்றதில் மொத்தமாக 6 ஆயிரம் ரூபாயும் சில புத்தகங்களும் தான்  எனக்கு கொடுத்தார். 5 நூல்களும் பல லட்சம் பிரதிகள் விற்றதை அறிகிறேன். ஒரு நூலில் எனது பெயரே இல்லை.
நல்ல மனிதர் என்று எழுத்தாள நண்பர் பிரபஞ்சனால் பாராட்டு பெற்றவர் திரு. சொக்கலிங்கம். அவரே இப்படி செய்தால் என்ன சொல்வது...அவரிடம் ஒருமுறை ஆற அமர்ந்து பேசிப் பார்க்க வேண்டும்.
எனக்கு பிரபஞ்ச ரகசியம் நூலை மீண்டும் மொழிபெயர்க்கத் தோன்றியது. முடியவில்லை, சரி இத்தொடரில்  பிரபஞ்ச ரகசியம் நூலின் சில பகுதிகளையாவது எனது தரமான மொழியாக்கத்தில் தர முடியும் என்று நம்புகிறேன். இந்நூலின் முதல் பதிப்பு 1997 ஆம் ஆண்டு வெளியானது.
அந்நூலின் முன்னுரையாக நான் எழுதியது...
தமிழில் ஹைகூ கவிதைகள் என்ற பெயரில் குப்பைகள் அச்சாகிக் கொண்டிருக்க மறுபுறம் போலிப் பண்டிதர்களின் ஹைகூ விளக்கங்கள்... கவிதையின் ஆத்மா புரியாகவர்கள்தாம் கவிஞர்களாகவும் கவிதை விமர்சகர்களாகவும் மாறிப் போன ஒரு துரதிர்ஷ்ட்டமான தமிழ்ச்சூழலில் மிகவும் அதிர்ஷ்ட்டவசமாக ஓஷோவின் இந்நூல் வெளியாகியுள்ளது. இதிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் காட்சிகளின் ஊடாகத் தெறிக்கும் அனுபவம். இயற்கையின் மீதான கட்டற்ற காதல். அது மட்டுமின்றி ஓர்  பிரபஞ்ச தரிசனம் கொண்டவை . இதிலுள்ள ஹைகூ கவிதைகளும் இதர ஜென் கவிதைகளும் இரத்தமும் சதையுமாக அசலானவை. இக்கவிதைகளுக்கான ஓஷோவின் உரைகள் இரத்தினச் சுருக்கம் எனலாம் .
கவிதையைப் பேசவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் குருவாக இதில் ஓஷோ பங்களித்துள்ளார். அவர் பேசியவைகளை விட பேசாமல் விட்ட மௌனங்கள் அடர்த்தியானவை. அர்த்தப் பூர்வமானவை. அவற்றை இந்நூலில் காணலாம்.
நல்ல கவிதைக்கு உரை  வேண்டியதே இல்லை. அது தானே பேசும் . மொழி புரிந்தால் போதும். எனினும் எது நல்ல கவிதை என்ற கேள்வி எப்போதும் இருப்பதால், இக்கவிதைகளின் சிறப்பைப் பற்றி ஓஷோ மிகவும் அரிய பங்களிப்பை அளித்துள்ளார்.
மூலத்தில் இந்நூலை கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி வெளியிட்டனர். தமிழில் அவ்வாறு பெரும் பொருட் செலவில் வெளியிட வாய்ப்பி்ல்லை.
இந்நூலை  மொழிபெயர்க்க கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பேன்.
----
நூலில் இருந்து.....
குயிலின் கூவல்
அதை விட சிறப்பாக செய்ய அதற்கு வேறு எதுவுமி்லலை
அந்த காட்டுச் செடிக்கும் தான்.
- இஸ்ஸா
சோம்பேறிகளுக்கு நி்ச்சயம் ஒரு தகுதி உள்ளது.ஒரு போதும் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்வதில்லை என்கிறார் ஓஷோ.
-----------
சோளக் கொல்லை பொம்மை
நெல் வயலில்
யாருக்கும் பயனற்று
விழிப்புணர்வு அற்று.
- டோஜன்
ஓஷோ கூறுகிறார்
வாழ்வின் லட்சியம் என்பது எல்லா லட்சியங்களிலிருந்தும் விடுபடுவது. உள்ளத்தின் மையத்தை நோக்கி நகர்வது. அதுவே காற்றில் நடனமாடும் மலர்களுடன் கலந்து நடனமாடும். நட்சத்திர மண்டலத்துடன் ஒரு நடனத்தில் கலந்துவிடும். ஒரு பிரபஞ்சப் பரவசம் அங்கே ஏற்படும். எந்த கவலையும் இல்லை. மனம் என்று எதுவுமே இல்லை. அதுவே உலகுடன் இரண்டறக் கலந்துவிடும் பேரானந்த நிலை.
------
நிலவொளியில் குளிக்கும்
மூங்கில் மலர்களைக் காண
நீயாகத் தான் விழிகளைத் திறக்க வேண்டும்
-யாரோ
ஓஷோவின் உரையில் இருந்து..
உன்னைத் தவிர யாரையும் விசுவாசம் செய்யாதே. உனக்குள் நீ அசைக்க முடியாத அளவு நம்பிக்கைக் கொள். அந்த ஆழ்ந்த நம்பிக்கை உனக்கு ஒரு வழியை உண்டாக்கும். அந்த பாதையில் நடந்து நீ குருவை அடையலாம். எவ்வித முயற்சியும் செய்யாதே. அமைதியாக அதனை நிகழ அனுமதித்து விடு. காலடி ஓசைகளையும் உரத்து எழுப்பாதே . வாழ்வில் நீ பாக்கியசாலியாக இருந்தால் ஒரு குருவை உன்னால் காண முடியும்.
----
இந்த இடத்தில் மூங்கில் மலர்கள் பூத்திருப்பதைக் காண நீ விழிகளைத் திறக்க வேண்டும் என்ற கவிதையின் வரியை கூர்மையாக கவனியுங்கள். எதுவும் நம்மிடமிருந்தே தோன்ற வேண்டும் என்கிறார் ஓஷோ. மூங்கிலிலும் மலர்கள் தாமாகவே மலர்கின்றன. காலடி ஓசையை உரத்து எழுப்பாதே என்கிறார் ஓஷோ. மலர்கள் மலர்வது அத்தனை மெலிதான ஓசை. அதைக் கேட்க முடியாமல் போய் விடும். பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற திரைப்படப் பாடலையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
----------
பட்டாம்பூச்சிகள்  பின் தொடர்கின்றன
சவ ஊர்வலத்தை
சவப்பெட்டியின் மீது மலர் வளையம்
- மேய் விட்சு
பிறப்பு இறப்பு இரண்டையும் சாட்சியமாக இருந்து கவனிக்க வேண்டும் என்கிறார் ஓஷோ. பட்டாம்பூச்சிகளுக்கு மலர்களில் இருந்து தேன் வேண்டும். அது சவப்பெட்டியில் சாத்தப்பட்ட மலர் வளையமாக இருந்தாலும் சரி. வாழ்வையும் சாவையும அவை பிரித்துப் பார்ப்பதில்லை.
-----------
நிலவில் லயித்தபடி
வீட்டை நோக்கி நான் நடக்கும்போது
என்னுடன் நடக்கிறது எனது நிழல்
ஓஷோவின் உரையில் இருந்து...
யாரும் என்னுடன் இல்லை. என் நிழல் மட்டும் என்னருகில் நடந்து வருகிறது.இந்த அழகான அற்புதமான உலகத்தைப் பார்த்து விட்டு ஆன்மா என்ற வீட்டை நோக்கி நான் செல்கிறேன். அப்போது அங்கு யாரும் என்னுடன் இருக்க மாட்டார்கள். எனது நிழல் கூட இருக்காது. எனது ஏகாந்தம் பூரணமானது.
------
வீட்டை நோக்கி நடக்கும்போது கூடவே நடந்து வரும் நிழல் கூட உள்நோக்கிப் போகும் போது விட்டு விலகிப் போய்விடுகிறது என்கிறார் ஓஷோ.
ஒரு இந்தி திரைப்படப் பாடலில் முகமது ரஃபி பாடுவார்
மனிதனுக்கு இப்படியும் ஒரு காலம் வரும்
அவன் நிழல் கூட நடுத்தெருவில் அவனை விட்டுவிட்டுச் சென்று விடும்.

ஓஷோ கூறுவது பேரானந்த நிலை .நிழலும் அற்றுப்போகும் நிலை. முகமது ரஃபியின் பாடல் உரைப்பது கையறு நிலை. வாழ்க்கை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை. நிழலையும் கூட அது இழக்கிறது. மனிதனை நிழல் கூட விட்டு விட்டுப் போய் விடுகிறது. நடுத்தெருவில் நிழலில்லாது நிற்கிறான்.
நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீ எனத் தெரியாதா அன்பே அன்பே என்று வாலி எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
நிழல் அகன்று விடுவதற்கும் விட்டு விலகி விடுவதற்குமான வேறுபாட்டை தியானம் செய்து பாருங்கள்.
-------
லெஸ்லி டௌனர் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளைக் காண்போம்.
பாஷோ சுமோ கோவிலுக்கு போகிறார் .அப்போது அவர் ஒரு ஹைகூ எழுதுகிறார்.
சுமோ ஆலயம்
மரநிழலில் அமர்கையில்
இசைக்காத புல்லாங்குழலின் இசை
காதில் ஒலிக்கிறது.
இன்னொரு கவிதை
இந்தப் பாதையில் யாருமில்லை.
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர்கால இருளில்
யமோட்டோ என்ற போர் வீரனின் கல்லறைஅருகில் அமர்கிறார் பாஷோ. அப்போது அவர் எழுதிய குறிப்பு இது...
மலைகள் பெயர்ந்து விழுகின்றன. நதிகள் தங்கள் பாதையை மாற்றிக் கொள்கின்றன. பழைய பாதைகளின் மீது புதிய பாதைகள் போடப்படுகின்றன.கற்கள் பூமிக்குள் புதைந்து போகின்றன.பழைய மரங்கள் சாய்ந்து புதிய தளிர்கள் முளைக்கின்றன.காலம் போகிறது.ஒரு சகாப்தத்தை இன்னொரு சகாப்தம் மாற்றியமைக்கிறது.எதுவும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது.இதோ என் கண்களுக்கு  முன்னால் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.இது சந்தேகமே இல்லாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.இதன் மூலம் பழைய கால மனிதர்களின் இதயங்களை என்னால் பார்க்க முடிகிறது.இந்த பயணத்தை பயனுள்ளதாக இதுவே மாற்றுகிறது.இப்பொழுது உயிருடன் இருப்பதற்கான மகிழ்ச்சியை இந்த கல்லறை ஏற்படுத்துகிறது.பயணம் தந்த துன்பங்களையும் வலிகளையும் மறந்து நான் ஆனந்தமாக அழத் தொடங்கினேன்...

---------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 15
On the narrow road -Lesley Downer புத்தகத்தை அலசுவோம்...
பாஷோ ஒரு பயணி. தனது சீடரான சரோவை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்களை மேற்கொண்டவர். எனது வீடே எனது பயணம் தான் என்று கூறியவர். சரோவும் கவிதை ரசிகர். கவிதை எழுதக் கூடியவர். பாஷோவின் நெருங்கிய நண்பர். இருவரும் கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்தனர். எங்கள் இருவருக்கும் வீடு இல்லை. இந்த பிரபஞ்சமே எங்கள் வீடு என்று எழுதினார் பாஷோ.
ஒரு கிராமத்தில் புதிய அரிய வகை மலர் ஒன்று மலர்கிற காலம் என்பதை இருவரும் அறிகின்றனர். பண்டைய ஜப்பானிய கவிஞர்கள் பலரும் அந்த மலரின் சிறப்பை புகழ்ந்து எழுதியுள்ளனர். இதனைக் காண பாஷோவுக்கும் சரோவுக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அதன்பிறகு ஊர்சுற்றியின் கால் சும்மா நிற்குமா...எத்தனையோ தூரமாக இருந்தாலும் ஒரு மலரைப் பார்ப்பதற்காக கால்நடையாகவே இருவரும் புறப்பட்டு விட்டனர்.  ஜப்பானில் இது ஒரு வழக்கமாகவும் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மலர்களைப் பரர்ப்பதற்கு இன்றும் ஜப்பானில் சுற்றுலாக்கள் உண்டு.
வழியில் சந்தித்த பலரிடம் அந்த மலரின் பெயரை சொல்லி அது எங்கே மலர்ந்திருக்கிறது என்று விசாரித்தனர். இரண்டு வயதான நபர்கள் துறவிகள், கவிஞர்கள்  கட்சுமி கட்சுமி என்று அந்த மலரின் பெயரை விசாரித்தபடி சென்றுக் கொண்டிருந்தனர். வழியில் சந்தித்த பலரும் அவர்களை பைத்தியங்களாக நினைத்திருக்கக் கூடும். மாலை வரை தேடியும் அவர்களால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியன் மறையத் தொடங்கியது. அப்போது ஒருவர் வழிகாட்டினார்...இரண்டு பைன் மரங்கள் ஒன்றாக இருக்கும். அதை கடந்து சென்றால் அந்த மலர்கள் பூக்கும் பகுதியை அடையலாம் என்று அறிந்து இருவரும் மகிழ்ச்சியுடன் வேக வேகமாக நடந்தனர். ஆனால் இரவு அடர்த்தியாகி விட்டதால் இருவரும் புகுஷிமாவில் இரவைக் கழிக்க அங்கு தங்கினர்.
காலையில் எழுந்ததும் பாஷோ அங்கிருந்த ஒரு சிறிய கல்லின் மீது ஒரு ஹைகூ எழுதினார்...
ஆகா அற்புதம்
பச்சை இலைகள், இளம் தளிர்கள்
சூரியன் ஒளி வீசுகிறது.
பின்னர் பாஷோ அந்த கட்சுமி என்ற அரிய வகை மலரையும் அங்கிருக்கும் பிளம் காடுகளையும் ரசித்திருக்கக் கூடும். நமக்கு அது குறித்த குறிப்புகள் இல்லை.
பாஷோ தேடிச் சென்ற அந்தப் பகுதியில் தான் இப்போது ஜப்பானில் புகுஷிமாவைக் கடந்து சென்றால் பிளம் காடு உள்ளது. அந்த பிளம் காடுகளில் புத்தம் புதிய பிளம் மலர்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாஷோவும் சாரோவும் கால்நடையாகவே புகுஷிமாவைக் கடந்து பிளம் மலர்கள் பூப்பதைப் பார்க்க சென்றிருந்தனர் என்று எழுதுகிறார் நூலாசிரியர் லெஸ்லி டௌனர்.அவரும் அப்பகுதிக்குப் பயணித்து அந்த பிளம் காடுகளில் பிளம் மரங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தார். பாஷோவும் சரோவும் கட்சுமி என்ற ஜப்பானிய மொழியில் பிளம் மலர்களைத் தேடித்திரிந்து பார்த்த நாட்களை நினைவுகூர்ந்தபடி நின்றார்.
இதே போன்று ஒருலாரி டிரைவரின் உதவியுடன் லெஸ்லி டௌனர் பாஷோ  பயணம் சென்ற மருயமா அரண்மனைக்கும் அங்குள்ள பழைய கால கோவிலுக்கும் செல்கிறார். பாஷோ அந்த அரண்மனை பற்றி எழுதியுள்ளார். ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து அந்த அரண்மனை சிதிலமடைந்து விட்டது. அதைப் பற்றி அப்பகுதி மக்களுக்கே தெரியவில்லை. அந்தப் பகுதியை ஒருவழியாக கண்டைந்து அந்த கோவிலை லெஸ்லி தேடுகிறார்.
அங்கு அப்போது ஸ்ட்ராபெர்ரி மலர்களும் கனிகளும் பூக்கும் காலம் .ஒரு உள்ளூர் வாசியிடம் வழிகேட்கும் போது அவர் வழியை காட்டியதுடன் கையில் ஒரு அட்டைப் பெட்டியில் ஸ்ட்ரா பெர்ரி பழங்களையும் கொடுத்து அழைத்துச் செல்கிறார்.. இத்தகைய அனுபவங்களையே பாஷோவும் நாடிச் சென்றிருப்பார்,
அங்கு அந்தக் கோவிலின் பழைய சுவர் ஒன்று இடிந்த நிலையில் இருப்பதை லெஸ்லி கண்டுபிடிக்கிறார். அந்த சுவரில் பல கவிதைகளை எழுதி வைத்ததாக பாஷோ தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
அந்த சுவரில் மாட்சு பாஷோ என்ற பெயரையும் அவர் பதித்த கவிதைகளையும் கண்டுபிடிக்க தமது ஆய்வை மேற்கொள்கிறார் லெஸ்லி.
உள்ளூர் நபர்  பாட்ஷோ ஜூன் மாதம் இங்கு வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜூன் மாதத்தில் அப்பகுதியி்ல் ஆண்பிள்ளைகள் திருவிழா நடைபெறும் .அதாவது ஆண் பிள்ளை உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொடி ஏற்றப்படும். இதே போல் தனியாக பெண் பிள்ளைகள் தினமும் திருவிழாவாக அப்பகுதியில் கொண்டாடப்படுவது வழக்கம். பாஷோ வந்த காலம் ஆண்பிள்ளைகள் திருவிழா நடந்துக் கொண்டிருக்கும் காலம்.
அந்த கோவிலுக்குச் சென்று ஒரு டீ கிடைக்குமா என்று கேட்கிறார் லெஸ்லீ. அந்தக் கோவிலில் பழங்கால  சாமுராய் போர் வீரனின் நீண்ட வாளும் குறுவாளும் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அதைப் பற்றி பாஷோ தனது பயணக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். பாஷோ சொல்ல சொல்ல சரோ அதை தனது டைரியில் குறித்துக் கொள்வது வழக்கம்.
அங்கிருந்த ஒரு பெண்அந்த கோவிலின் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருக்கும் பண்டைய பொருட்களைப் பார்வையிடுகிறார் லெஸ்லி.
பழைய மரப்பெட்டியில் தங்கமும்  தாமிர இலைகளும் போட்டு மூடி வைக்கப்பட்ட அந்த நீண்ட வாளை எடுத்துக் காட்டுகிறார்கள். அது ஒரு காலத்தின் ஜப்பானின் வீர அடையாளம்.
நீண்ட நேரம் அதனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் லெஸ்லி. இந்த இடத்தில் ஒருகாலத்தில் பாஷோவும் சரோவும் இந்த வாளை பார்த்து மயங்கி தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்திருப்பதால் பல நூற்றாண்டுகளைக் கடந்து இதனை லெஸ்லியால் பார்க்க முடிந்திருக்கிறது.
----------
ஜப்பானிய ஜென் துறவை மட்டுமல்ல வீரத்தையும் போதித்திருக்கிறது. பல ஜென் துறவிகள் சிறந்த வாள் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.ஜப்பானிய போர்க்களப் பயிற்சிகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
யுத்தப் பயிற்சிக் கலை என்றொரு புத்தகம் ஜப்பானில் பிரசித்தி பெற்றது. (THE ART OF WAR -SUN-TZU)  இந்த நூலில் சுன்- சூ எழுதுகிறார் வாழ்வா மரணமா என்பது ஒரு பொருட்டல்ல . எனவே இதனை நிராகரிக்க முடியாது. யுத்தக் கலை 5 அம்சங்களைக் கொண்டுள்ளது. 1. அறத்தை பாதுகாக்கும் சட்டம் 2 சொர்க்கம் 3 பூமி 4 கட்டளையிடுபவர் 5 முறைகளும் ஒழுக்கமும்.
முதல் அம்சம் ஆள்வோரின் உத்தரவுக்குப் பணிந்து போரிடுவது, இரண்டாவது அம்சம் சொர்க்கத்தை ஆளும் இறைவனின் கட்டளைப்படிநடப்பது. மூன்றாவது அம்சம் பூமியில் வசிக்கும் மனிதர்களின் நன்மைக்காக போரிடுவது, நான்காவது அம்சம் கட்டளையிடும், போர்ப்படையை வழிநடத்திச் செல்லும் தளபதிக்குப் பணிவது, நா்ன்காவது அம்சம் போர்வீரனின் ஒழுக்கமும் பயிற்சி முறைகளும். ஒரு போரை வெல்ல இந்த 5 அம்சங்களே காரணமாக இருப்பதாக யுத்தக் கலை புத்தகம் விளக்குகிறது.
ஜென் கூடாரங்களில் யுத்தமும் ஒரு தியானமாக கருதப்பட்டது. கூரிய வாளின் முனை மீது கவனம் செலுத்துபவனே போர்வீரன். அவனுக்கு அந்த வாளின் முனையைத் தான் தெரியும் .எதிரிலிருக்கும் நபரைத் தெரியாது. அந்த கூரிய முனை எங்கெல்லாம் பாய்கிறது யாரையெல்லாம் சாய்க்கிறது என்பதை பயிலுவதே போர்க்கலை.
----------------------
ஓஷோ ஜென் பற்றியும் ஜென்குருமார்களைப் பற்றியும் தமது நூல்களில் ஏராளமான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். ஓஷோவின் நூல்களில் பயணித்தால் ஜென் பற்றி பல புதிய சிந்தனைகள் நமக்குப் பிறக்கின்றன. இனிவரும் பகுதிகளில் ஓஷோவின் ஜென் அனுபவங்களை பார்ப்போம்.
----------------------------------------

ஜென் தேநீர் -செந்தூரம் ஜெகதீஷ் பகுதிகள் 1-10



முகநூலில் நான் எழுதும் தொடரின் முதல் 10 பகுதிகள்.....

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்



கோப்பை 1
ஜென் என்றால் என்ன ? இதனை புரிந்துக் கொள்ளாமல் எதையும் புரிந்துக் கொள்ள இயலாது.
காலையில் ஒரு ஜென் துறவி தேநீர் அருந்துகிறார்.
எங்கும் அமைதி
செவ்வந்தி்ப பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கின்றன ....என்று பாஷோ ஒரு ஹைகூவில் கூறுகிறார்.
ஜென் என்பது சான் chan  என அழைக்கப்படுகிறது. நவீன மொழி அதனை zen  என்று தத்தெடுத்துக் கொண்டது. இதன் மூலச் சொல் தியானம் என்பதுதான். தியானம் என்பது பௌத்த மரபு. புத்தர் 6 ஆண்டு கடும் தவம் புரிந்து தியானத்தின் பயனால் ஞானம் அடைந்தார்.
தியானம் என்பது என்ன? சத்தமும் இடையூறும் மிகுந்த நமது அன்றாட வாழ்க்கையில் தியானத்துக்கு இடமுண்டா ?
காலையில் எழுந்ததும் புத்துணர்வுடன் இருக்கிறோம். நாள் பொழுதும் மனம் என்ற கண்ணாடி சேகரித்த தூசு உறக்கத்தால் துடைக்கப்படுகிறது. நமது வலிகள், சலனங்கள், ஏக்கங்கள், துன்பங்கள் அத்தனையும் கண்ணீரால் உதிர்த்துவிட்டு நம்மையறியாமல் உறங்கி விடுகிறோம். அந்த நேரத்தில் மனம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.எப்படி?
மனம் அப்போது மனமற்ற நிலைக்குச் செல்கிறது. அதென்ன மனமற்ற நிலை.? மனமற்றநிலை தான் தியானம். மனம் ஓசைகள் நிரம்பியது. சதா படபடக்கிறது.
ஒரு குட்டிக் கதை..
காற்றில் கொடி படபடக்கிறது என்கிறார் ஒரு ஜென் துறவி. கொடி என்பது மனித வாழ்க்கையாக எண்ணலாம். இல்லை காற்றுதான் படபடக்கிறது என்கிறார் இரண்டாவது துறவி. இதில் கருத்துமுதல் வாதமும் பொருள்முதல் வாதமும் உள்ளன. அகத்தால் புறம் படபடக்கிறது என்பது ஒரு கோணம். இல்லை புறத்தால் அகம் படபடக்கிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்ற புகழ் பெற்ற மாசேதுங்கின் கவிதையை நினைவு கூரலாம். சரி ஆனால் கொடியும் படபடக்கவில்லை, காற்றும் படபடக்கவில்லை, மனம் தான் படபடக்கிறது என்கிறார் மூன்றாவது துறவி. இதுதான் ஜென் கோணம். ஜென் மனத்தையே இயங்கு விசையாகக் காண்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது தாவி ஓடி நம்மை துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. எனவே மனத்தை நிலைப்படுத்துவதே தியானம்.
மனம் நிலை கொள்ளுமா....அந்த கடலுக்கு ஏதடி சாந்தி என்ற தமிழ்ப்பாடல் நினைவுக்கு வருகிறது. கடல் கொந்தளிப்புடன் பேரலைகளை எழுப்புகிறது. கரையில் அதன் அலைகள் கிடைத்தவற்றையெல்லாம் சுருட்டி வாரிக்கொண்டு போகின்றன. கடல் அப்படித்தானா....இல்லை சற்று நிதானமாக கவனித்தால் தெரியும் கடல் அமைதியானதும் கூட .நடுக்கடலில் ஆழம் மிக்க பகுதிகளில் கடல் அமைதியாக தியானிக்கிறது. கடலின் தியானத்தை நாம் அறியவில்லை. அதன் அலைக்கழிப்பை மட்டுமே அறிந்திருக்கிறோம்.
மனக்கடலையும் அலைக்கழிப்பின்றி தியானத்தில் உறைய வைத்திருந்தால் தெரியும் கொடி அசைவதும் காற்று அசைவதும் ஒன்றுடன் ஒன்று உறவு என்று. இரவும் பகலும் ஒன்றுடன் ஒன்று உறவு என்று. இன்பமும் துன்பமும் ஒன்றுடன் ஒன்று உறவு என்பது.
இரவு உறக்கம் ஒரு தியான நிலைதான். ஆனால் பிரக்ஞையற்றது. நம் புலன்கள் மயக்க நிலையில் உறக்கத்தைத் தழுவிக் கொள்கின்றன.
காலையில் புத்துணர்வுடன் எழுகிறோம். மனம் துடைக்கப்பட்டு நிச்சலனமாகி விடுகிறது. ஒரு புதிய காலை நம்மை பறவைகளின் கூச்சலுடன் வரவேற்கிறது. செவ்வந்திப்பூக்கள் கொத்து கொத்து கொத்தாகப் பூக்கின்றன. ஒரு துறவி தேநீர் அருந்த அமர்கிறார். எங்கும் அமைதி என்பது வெளியில் மட்டுமல்ல. எங்கும் அமைதியேதான். அந்த அமைதியுடன் தேநீரைப் பருகுகிறார்.
ஜென் தேநீர் அருந்துவதை ஒரு குறியீடாகக் கொள்கிறது. தினசரி நாம் அருந்தும் தேநீரிலிருந்தே தியானத்தைப் பழகிக்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் இதைவிட எளிய உபாயம் இல்லை. தேநீர் வாங்கியதும் மடக்மடக்கென இரண்டு மிடறுகளில் குடித்து விட்டு அவசரமாக ஓடுபவர்கள் அதிகம். அவர்களுக்கு அது ஒரு ஊக்க பானம். சுடச்சுட கிடைக்கும் ஒரு பசிபோக்கி.
ஆனால் ஜென் தேநீர்  அருந்துவதை தியானமாக மாற்றுகிறது. தேநீரை சூடாகவும் இல்லாமல் ஆறாமலும் மிதமான சூட்டுடன் ஒவ்வொரு துளியையும் ருசித்து ருசித்து அதன் தேயிலை, சர்க்கரை, சூடு, புகை, நாவில் அது ஏற்படுத்தும் சுவை என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வேறு எதனையும் சிந்திக்காமல் அதுவாகவே மாறிவிட வேண்டும் .தேநீர் பருகுபவரும் தேநீரும் ஒரே நிலையில் சங்கமிக்க வேண்டும். அதுவே தியானம்.
ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.
இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்குகிறது.
முதல்  கோப்பை என் வறண்ட உதடுகளையும் தொண்டையையும் நனைக்கிறது.
இரண்டாவது கோப்பை என் தனிமையின் துயரமான சுவர்களைத் தகர்க்கிறது.
மூன்றாவது கோப்பை என் ஆன்மாவின் வறண்ட நீரோடைகளைத் தேடி ஐந்தாயிரம் கதைகளைத் தேடுகிறது.
நான்காவது கோப்பையால் கடந்த கால துயரங்கள் மறைந்துப் போகின்றன.
ஐந்தாவது கோப்பை என் எலும்புகளையும் நரம்புகளையும் புதுப்பிக்கின்றது.
ஆறாவது கோப்பை அருந்தும் போது நான் இறந்த ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
ஏழாவது இறுதிக் கோப்பை எனக்கு தாங்க முடியாத பேரின்பத்தை வழங்குகிறது.

தியானம் வலி மிகுந்தது அல்ல. அது யோகாவைப் போல் உடலை வருத்தி செய்வது அல்ல. அது பேரின்பமானது என்பதை ஏழாவது கோப்பையை பருகக்கூடிய ஜென் மாணவன் உணர்கிறான்.
ஜென்னை பழகுவதற்கு வேறென்ன செய்யலாம். எதுவும் செய்யாமல் இருங்கள். சற்றே செயலற. ஜென் நிகழும் தானாகவே. அது எப்போதும் போல் இன்றும் இப்போதும் நிகழ்கிறது. செவ்வந்திப் பூக்கள் பூக்கின்றன கொத்து கொத்து கொத்தாக .
------------------------------
ஜென் தேநீர்  - செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 2
ஜென் எப்படி பிறந்தது ?  இது பற்றி ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று உள்ளது. ஜென் பிறக்க காரணமாக இருந்தவர் போதி சத்துவர். ஆம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அவர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக சீனா சென்றார். துறவியான அவருக்கு 500க்கும் மேற்பட்ட சீடர்கள் சேர்ந்தனர். ஒரு முறை ஜென் பற்றி தனது சீடர்களுக்கு வகுப்பெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தார் போதி சத்துவர்.
அவர் பேசத் தொடங்கியதும் ஒரு குயில் அந்த மரத்தில் வந்து அமர்ந்து இனிமையாகப் பாடத் தொடங்கியது. போதிசத்துவர் பேசுவதை நிறுத்திக் கொண்டார். குயில் ஓயாமல் பாடி விட்டு பறந்து சென்றது. இன்றைய வகுப்பு முடிந்துவிட்டது என்றார் போதி சத்துவர். அப்போதுதான ஜென் பிறந்தது .
இன்னொரு குட்டிக் கதை உள்ளது. கௌதம புத்தரின் பிரதான சீடரான ஆனந்தா மூலமாக ஜென் பிறந்ததை அக்கதை விளக்குகிறது.
எப்படியோ ஜென் பிறந்துவிட்டது. ஜப்பான், சீனா ,தாய்லாந்து ,தைவான் போன்ற பல நாடுகளில் ஜென் மரபு தழைத்தோங்கி விட்டது.
பொதுவாக ஜென் என்பது குரு -சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக வளர்ந்தது. எனவே அதில் திரிபுகளும் இடைச்செருகல்களும் தவிர்க்கப்பட முடியாது.
அசலான ஜென் கலையை புத்தரின் போதனைகள் வழியாக மீட்டெடுக்கலாம். தம்ம பதம் தான் ஆதார சுருதி.
ஓஷோ ஒரு மகா ஞானி, பெரும் அறிவுக் கடல். அவரும் ஜென் பற்றி கணிசமாக பேசியிருக்கிறார். இவற்றை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக காண்போம். டாக்டர் சுசுகி , ஆலன் வாட்ஸ் போன்ற அறிஞர்களும் ஜப்பானிய ஜென் மாஸ்டர்கள் எழுதிய நூல்களும் என் கைவசம் ஏராளமாக உள்ளன. அவற்றையும் ஆராயலாம்.
ஒரு குட்டிக் கதை
ஒருவன் ஜென் குருவிடம் சிஷ்யனாக சேர விரும்பி சென்றான், அவரிடம் தனது சந்தேகங்களைக் கொட்டிக் கொண்டே இருந்தான் .அவற்றுக்கு முடிவு இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை சந்தேகங்களுக்கும் இந்த குருவால் விடை தர முடியுமா என்ற கூடுதல் சந்தேகம் அவனுக்கு இருந்தது. குரு அவன் மனப்போக்கைப் படித்து விட்டார். அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. அவனுக்கும் தமக்கும் இரண்டு கோப்பை தேநீர் வைத்தார். தமது கோப்பையில் நிரம்ப தேநீரை நிரப்பி அடுத்து அவன் கோப்பையிலும் ஊற்றினார். சீடன் பேசிக் கொண்டேயிருந்தான். குருவும் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார். அந்த கோப்பை நிரம்பி தேநீர் கீழே வழியத் தொடங்கியது. இதைக் கண்டு சீடன் அதிர்ச்சி அடைந்தான். சட்டென தன்னுணர்வு தோன்ற அவன் குருவை வணங்கினான்.
ஜென் ஒரு வட்டத்தைப் போல் தொடங்குகிறது. வட்டம் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி கால் வட்டம், அரைவட்டமாக வளர்கிறது. பின்னர் முழு வட்டமாகி பூரணம் அடைகிறது. இந்த பூரண வட்ட நிலை முழு நிலவை பௌர்ணமியை குறிப்பதாகும். முழுப் பௌர் ணமி நாளில் தான் புத்தர் ஞானம் அடைந்தார் .அமாவாசை என்பது இருட்டு. இருட்டு என்பது துயரம். ஒளி என்பது ஞானம். துயரத்தில் இருந்து மனிதன் ஞானத்தை நோக்கிச் செல்கிறான்.அதற்கு ஜென் உதவுகிறது. வட்டத்தை கணந்தோறும் கடந்து செல்ல ஜென் உதவுகிறது.
ஒரு  ஜென் கவிதை
மனிதர்கள் அந்த பனிமலைக்குச் செல்ல பாதை எது எனக் கேட்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு பாதையும் பனிமலைக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை
( அது பாதையற்ற பாதை )
கோடை வானம் கொளுத்துகிறது. ஆனாலும் பனி உருகவே இல்லை.
சூரியன் தினமும் வந்தாலும் மூடுபனி அதை வென்று விடுகிறது.
என்னை பின்பற்றி வரும் நீ எதை அடையப் போகிறாய்? உன்
மனமும் என் மனம் போல் ஆகும் போது இங்கே நீ வந்து சேர்வாய்.
- ஹான்சுன்
இன்னொரு ஜென் கவிதை
எந்த வழியாக நீ வந்தாய் ?
இரவின் கனவுப் பாதையை பின்பற்றி நீ இங்கு வந்தாயா ?
பனி இன்னும் அடர்த்தியாகவே இருக்கிறது.
அது எப்போது மலைகளை விட்டு பின்வாங்கும்?
- ரையோகன்

-பனி மலை பாதை யாவும் குறியீடுகள் .இவற்றை இன்றைக்கு தியானம் செய்யுங்கள் கனவுப்பாதைகளைப் பின்தொடருங்கள். மலையின் குளிர்ச்சி தெரிகிறதா பாருங்கள். எதையாவது அடைய முடியுமா என ஏங்குங்கள். ஜென் உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.
----------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 3
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
-கவியரசர் கண்ணதாசன்
ஜென் ஹைகூ கவிதை போல வரிதான் இது. ஒரு அம்சம் குறைகிறது.இயற்கையைப் பற்றிய ஒரு வரி இருந்தால் இதுவும் ஹைகூ தான். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்.....இதுதான் ஜென்னின் போதனை.
ஜென்னின் அடிப்படை என்ன என்று கேட்பவர்கள் சற்று அமைதியுடன் இருங்கள் இந்த பாதை அதை நோக்கித் தான் பயணிக்கிறது. ஆங்கிலத்தில் பல நூல்கள் ஜென்னின் அடிப்படையை விலக்க முயற்சிக்கின்றன. அதில் ஒரு புத்தகம் ZEN ESSENTIALS இதனை தொகுத்து எழுதியவர்கள் Kazauki Tanahashi, Tensho David ஆகியோர்.
இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஏராளமான குட்டிக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக ஜென்னை விளக்குகின்றனர். புத்தகத்தின் சில அம்சங்களை காண்போம்.
புத்தர் சித்தார்த்தனாகப் பிறந்தார். ஆனால் அவர் யாசகம் பெற்று வாழும் துறவு வாழ்க்கையை நாடிப்போனார்.
அவருக்கு முழு உலகமும் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால்  அவர் மறுத்துவிட்டு ஓடிப்போனார்.
அவர் கவிதைகள் எழுதவில்லை.-ஆனால்
கவிதை பிறக்கும் முன்பே கவிதையைக வாழ்ந்தார்.
அவர் தத்துவங்களை போதிக்கவில்லை
அவர் தத்துவங்கள் கொட்டிய சாணியை சுத்தம் செய்தார்
அவருக்கு ஒரு முகவரி இல்லை.
அவர் ஒரு தூசுப் பந்துக்குள் வாழ்ந்தபடி உலகத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்
என்கிறது  ஜங் குவாங் என்பவர் எழுதிய ஒரு கவிதை.
புத்தர் பற்றி ஓஷோ கூறிய ஒரு குட்டிக் கதை.....
புத்தர் தமது அரண்மனையை விட்டு ஞானத்தை நாடிப் போனார். மீண்டும் அவர் கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தார். அப்போது அவர் மனைவி யசோதா கேட்டார் .நீங்கள் தேடிச் சென்றதை அடைந்து விட்டீர்களா...?
ஆம் என்றார் புத்தர்.
அப்படியானால் இங்கே இருந்திருந்தால் அதை உங்களால் அடைந்திருக்க முடியாதல்லவா..?
புத்தர் கூறினார்.  இங்கேயும் அதை நான் அடைந்திருக்க முடியும்
யசோதா திருப்பிக் கேட்டார். அப்படியானால் ஏன் ஓடிப் போனீர்கள்?
புத்தர் கூறினார் இங்கேயும் அதை அடைந்திருக்க முடியும் என்று நான் ஓடிப்போய் தட்டுத் தடுமாறி பல சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து தான் தெரிந்துக் கொண்டேன்.
ஜென் என்பது தேடிப் போவதல்ல. தேடுதல் அகத்தால் ஆனது. அது புறம் சார்ந்தது அல்ல. புத்தருக்கு போதி மரத்தடியில் தான் ஞானம் விளையும் என்பதில்லை. வீட்டின் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போதும் ஞானம் பெறலாம். சில ஞானிகள் மனைவி அடித்த டம்ளரால் மண்டையில் ஞானம் பெற்றதாக கூறுவார்கள்.
ஞானம் எங்கும் உள்ளது. ஒரு பறவையின் பாடலில், ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பில் ,மழைத்துளியின் சிதறலில், காற்றின் வருடலில், சிறிய குழந்தையின் புன்னகையில் எதிலும் லயித்து ஞானத்தை அடைந்து விடலாம். தற்செயலாக பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டும் ஞானம் வரலாம் தானே...
சரி ஜோக்ஸ் apart.
இந்த புத்தகம் பல குட்டிக் கதைகள் வாயிலாக ஜென் ஞானம் எப்படி பிறக்கிறது என்பதை விளக்குகிறது. அதில் சிலவற்றை காண்போம்.
நான்குவான் என்ற குருவிடம் ஒரு சீடன் வந்து கேட்டான்.  அந்தப் பனிமலைக்குப் போக பாதை எது ?
குரு சொன்னார் இந்த கோடாரி நன்றாக மரம் வெட்டுகிறது. இதனை நான் சந்தையில் முப்பது சென்ட்டுக்கு வாங்கி வந்தேன்.
மீண்டும் அந்த சீடன் கேட்டான் ...நான் கோடாரியின் விலையைக் கேட்கவில்லை. அந்தப் பனிமலைக்குப் போகும் பாதை எது என்றுதான் கேட்டேன்.
குரு மறுபடியும் சொன்னார். நான் இந்த கோடாரியை சந்தையில் வாங்கி வந்தேன் .இதில் வெட்டும் போது நன்றாக இருக்கிறது.
சீடன் ஞானம் பெற்றான்.
இக்கதை புதிரானது. ஜென் கதைகள் பெரும்பாலும் புதிரானவையே .நேரடி அர்த்தங்கள் ஆகாது. மெய்யியல் வழி தரிசனங்கள் சாத்தியமே.
கோடாரி நன்றாக வெட்டுகிறது என்பது மரத்தை மட்டும் வெட்ட அல்ல உன்னைப் போன்ற மரமண்டைகளையும் வெட்ட என்ற ரீதியில் குரு கோபத்தை உள்ளடக்கி கூறுகிறார். மேலும் எப்போதும் சீடர்கள் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு  ஜென் குரு நேரடியாக பதில் கூற மாட்டார். அவர் ஒரு மறைமுக பதிலையே கூறுவார்.
கேள்விக்கு சம்பந்தமில்லாத ஒரு பதிலாகவும் இருக்கும். அது தர்க்கத்தை உடைப்பதற்காக குரு கையாளும் உத்தி .விளக்கங்கள் மேலும் சந்தேகங்களையும் மேலும் தர்க்கங்களையும் உருவாக்கும் . அதனை வெல்ல இதுபோன்ற மறைமுக பதில்களையே குரு கையாளுகிறார்.
ஒரு முறை குருவிடம் ஒருவன் கேட்டான் ஞானம் அடைவது எப்படி ?
குரு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
மறுநாளும் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான் .மீண்டும் அறைந்தார் குரு.
மூன்றாவதுநாள் அறைவாங்கத் தயாராக அவன் கன்னங்களைத் தேய்த்துக் கொண்டு குருவிடம் வந்து நின்றான். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
குரு அவனை அலாக்காக தூக்கி ஜன்னல்வழியா வீதியில் வீசியெறிந்தார்.
பலத்த அடிபட்டு வீடு திரும்பிய சீடன் தனது முயற்சியில் சற்றும் சளைக்காமல் அடிவாங்கத் தயாராகி மீண்டும் குருவிடம் வந்தான் .ஞானம் என்றால் என்ன என்று அவன் கேட்டான்.
குரு சட்டென சீடனின் காலில் விழுந்து வணங்கினார். அடி உதையை எதிர்பார்த்து வந்த சீடன் அதிர்ச்சியில் திடீரென ஞானம் அடைந்தான்.
இது போன்ற கேள்விகள்கேட்கும் சீடர்களை குரு பிரம்பால் அடிப்பதும் வழக்கம். ஜென் குருவின் கையில் பிரம்பு கட்டாயமிருக்கும்.
-----------
டோங்சான்  என்ற குருவிடம் வந்த சீடன் ஒருவன்  இன்று சபையில் எதைப் பற்றி பேசப்போகிறீர்கள் என்று கேட்டார்
புத்தரின் உடல் வழியாக ரிலாக்ஸ் செய்வது பற்றி பேசப் போகிறேன் என்றார் குரு. நான் பேசும் போது நீயும் கேட்பாய் என்றார்.
குரு சொன்னார் நான் பேசாதவரை காத்திரு. அதன் பின் நீ அதைக் கேட்பாய்
----------
ஒரு ஆசிரமத்தில் புத்தரின் சூத்திரங்களை ஒருதொழிலாளியை விட்டுப் படிக்கச் சொன்னார் குரு. அவன் புத்தகத்தைப்புரட்டி சூத்திரங்களைப் படிக்கலானான். குரு சொன்னார் என்ன செய்கிறாய் .நீ ஒழுங்காகப் படி...
உடனே அந்த தொழிலாளி ஒரு காலைத் தூக்கி ஒற்றைக் காலில் கட்டைவிரலில் நின்றபடி சூத்திரங்களைப் படிக்கலானான்.
----------
சாவ் சாவ் என்ற சீடன் ஒருவன் குருவின் ஆசிரமத்தின் வாசலில் நின்று சத்தம் போட்டு உள்ளே யாராவது இருக்கிறீர்களா எனக் கத்தினான், குருவோ பக்கத்தில் தான் இருந்தார். அவர் உடனடியாக கைமுட்டியை மடக்கி அவனைக் குத்துவது போல் சைகை காட்டினார்.
இங்கே படகை செலுத்த முடியாதபடி தண்ணீர் சேறாக கலங்கிக் கிடக்கிறது என்ற சாவ் சாவ் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
வேறொரு ஆசிரமத்திற்கும் சென்று இதே போன்று உள்ளே யாராவது இருக்கிறீர்களா என்று சத்தம் போட்டு கேட்டார்.
அந்த ஆசிரமத்தில் இருந்த குருவும் அடிப்பது போல் கையை ஓங்கினார் .சாவ் சாவ் அவரை வணங்கிவிட்டு கூறினார்.
நீங்கள் விட்டுத் தொலைக்கலாம் .வாழ விடலாம். கையால் பிடித்து நெருக்கலாம். கொலையும் செய்யலாம்.
இதை கேட்ட அந்த குருவும் சாவ் சாவை வணங்கினார்.
இது தான் ஜென் குறியீட்டுக் கதைகள் .

இதில்  ஒரு கதையை இன்று தியானம் செய்யுங்கள் . ஜென் புரியக் கூடும்.
----------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 4
ஹகுயின் என்ற குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அதில்  சத்சு என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒருத்தி. வெகு விரைவில் அவள் குருவின் ஆசியால் ஞானம் பெற்று விட்டாள். ஒரு முறை அவள் ஒரு பெட்டி மீது அமர்ந்திருந்த போது அவள் தந்தை கேட்டார். இந்த பெட்டியில் புத்தர் சிலை இருக்கிறது. அதன் மீதே அமரலாமா .....அவள் திருப்பிக் கேட்டாள். புத்தர் இல்லாத இடம் காட்டுங்கள் நான் அங்கே போய் அமர்கிறேன் .
இன்னொரு முறை இன்னொரு துறவி கேட்டார். குவிந்து கிடக்கும் குப்பையிலிருந்து வெள்ளை மண் -( white china clay கப் சாசர் தயாரிக்கப் பயன்படுவது) உடைப்பது என்ன பயன் தரும்? அவர் கூற விரும்பியது புத்தரின் சிலையை உடைப்பது பயன் தருமாஎன்பது. உடனடியாக சத்சு தன் கையில் இருந்த டீ கோப்பையையும் பீங்கான் ஜாடியையும் கீழே போட்டு உடைத்தாள். துறவி தலைவணங்கி சென்று விட்டார்.
ஜென் குருவுக்கும் சீடனுக்கும் இடைவிடாத ஓர் உரையாடல் இருக்கும். வார்த்தைகளின் வலையில் இருந்து தப்பி ஓடுவார்கள். புதிராகப் பேசுவார்கள். ஜென் கோன்  ( zen koan ) என்று இதனை அழைப்பார்கள். ஒரு கை ஓசை என்பதும் ஒரு ஜென் கோன்.
ஒரு சீடன் குருவிடம் கேட்டான். ஒரு கை ஓசை என்பது என்ன ...குரு அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
இன்னொரு சீடனும் இதே கேள்வியை குருவிடம் கேட்டான். குரு அவனை வெளியே கொட்டிய மழையை பார்த்துவிட்டு வா என்றார். மழை பெய்த ஓசையைக் கேட்டதும் அவன் ஒருகை ஓசையை அறிந்தான்.
இப்படி பல ஜென் கதைகள் உள்ளன.
குருவும் சீடனும் கவிதைகள்அல்லது கோன்கள் வழியாக உரையாடுகிறார்கள். குருவை சீடன் அடிப்பதும் உண்டு. சீடன் அடிவாங்குவதும் சகஜம்.
புத்தரை வழியில் சந்தித்தால் அவரை எரித்து விடு என்பதும் ஒரு ஜென் கோன். புத்தரை சுமந்துக் கொண்டு திரியாதே என்பது இதன் அர்த்தம்.
ஒரு மழைநாளில் குருவும் சீடனும் புத்தர் கோவிலில் வழிபாடு செய்துக் கொண்டிருந்த போது மாட்டிக் கொண்டனர். அவர்கள் வீடு திரும்ப இயலவில்லை. குரு நீண்ட நேரமாக புத்தரை வழிபாடு செய்தார். ஊதுவத்தி ஏற்றினார், மலர்களால் அலங்கரித்தார். பலமுறை விழுந்து வணங்கினார்.
இரவு நீண்டது. மழையும் நின்றபாடில்லை. இரு துறவிகளும் ஓராடையை மட்டும் அணிந்திருந்ததால் உடலில் குளிரும் நடுக்கமும் அதிகரித்தது. குரு பக்குவப்பட்டவர். ஆனால் சீடனால் குளிர் தாங்க முடியவில்லை ,அவன் உடல் வெடவெடத்து நடுநடுங்கியது.
குரு சிறிதும் யோசிக்கவில்லை. தான் பல மணிநேரம் வழிபாடு செய்த புத்தர் சிலையை எடுத்தார். அது மரத்தால் ஆன சிலை. தனது கோடாரியால் அதனை இரண்டாகப் பிளந்தார். தீ மூட்டினார். சீடனும் அவரும் குளிர்காய்ந்தனர்.
சீடனுக்கு குழப்பம். சிறிது நேரம் முன்பு வரை இத்தனை வழிபாடு செய்த சிலையை பட்டென போட்டு பிளந்துவிட்டாரே என்று. கேட்டான் .
குரு சொன்னார் அப்போது அது புத்தர்.இப்போது இது மரம்.
------
ஜென் மரபு வழக்கமான ஆன்மீக மரபுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்து மதம் சடங்குகளை அடிப்படையாக கொண்டது. சடங்குகள் இல்லாமல் இந்து மத வழிபாடு இல்லை. இஸ்லாமியர் 5 முறை தொழுகை நடத்த வேண்டியது கட்டாயம். தொழுகைக்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதும் அவசியம். சிறுவயதில் திருச்சியில் இருந்த போது ஒரு மசூதிக்கு அப்பா அழைத்துச் செல்வார். நாங்கள் சிந்தி குடும்பம். சிந்திக்கள் அடிப்படையில் சீக்கியர்களுக்கு நெருக்கமான இனத்தவர். குருநானக்கை வணங்குவோம், அதே சமயம் ராமர், கிருஷ்ணர், லட்சுமி , உமையவள், விநாயகர், அனுமன், முருகன் உள்ளிட்ட அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் கலந்துக் கொள்வோம்.அவ்வப்போது மசூதிக்கும் செல்வதுண்டு. நான் என் பிறந்த நாளில் சர்ச்சுக்குப் போவதும் வழக்கம்தான். இது ஒரு சூஃபி வழிபாட்டு முறையாகும்.
ஆனால் ஜென் அப்படியல்ல. அதிலும் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உண்டு. ஆனால் வீடு பேறு தேடும் இந்துவுக்கும் ஞானம் சித்திக்க காத்திருக்கும் ஜென் துறவி்க்கும் வேறுபாடு உண்டு.
ஜென் மரபு தனி மரபாகும். அதன் தொடக்கம் புத்தரிடமிருந்து வந்தது. புத்தர் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஞானியாக வணங்கப்படுகிறார். அவர் மரபு அறிவு சார்ந்தது. மனிதனின் மனம் தான் அறிவு உற்பத்தியாகும் ஊற்று. மனம் தான் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. மனம் தான் கட்டுப்பட மறுக்கிறது. மனம் வெல்லும் கலையை ஜென் கலை.
குரு சீடன் என்ற இருவேறு தளங்களில் ஜென் வளர்கிறது . போதிப்பவரும் கற்பவரே. கற்பவனும் போதிப்பவனே. ஓஷோ இதனை அடிக்கடி குறிப்பிடுவார்.
ஒரு ஜென் குருவிடம் சீடனாக சேர ஒருவன் வந்தான். குரு அவனை சேர்த்துக் கொள்ள மறுத்தார். அவன் சொன்னான் நீங்கள் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்கிறேன். அப்படியா அருகில் ஒரு மூங்கில் காடு இருக்கிறது. அங்கே போய்  மூங்கிலோடு மூங்கிலாக இருந்து தவம் செய் என்றார் குரு.
சீடன் போய் பல நாட்களாகி விட்டன. அவன் திரும்பி வரவே இல்லை. ஒன்று அவன் ஓடிப்போயிருக்க வேண்டும். அல்லது மூங்கில் காட்டில் பாம்பு கடித்து இறந்துவிட்டிருக்க வேண்டும். குருவுக்கு கவலை வந்து விட்டது. தள்ளாத உடலையும் தாங்கிக் கொண்டு தனது கைத்தடியை எடுத்துக் கொண்டு மெதுவாக அவர் மூங்கில் காட்டைநோக்கி நடந்தார்.
மூங்கில் காட்டில் ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தபடி குரு நகர்ந்தார். அப்போது அங்கே அந்த சீடன்  மூங்கில்களுக்கு மத்தியில் தானும் ஒரு மூங்கிலைப் போல் நின்றுக் கொண்டிருந்தான். காற்று வீசும் போது மூங்கில்கள் அசைந்தன. அவனும் மூங்கிலைப் போல் வளைந்து அசைந்தான். காற்று இல்லாத போது மூங்கில்கள் அசையாமல் நின்றன. அவனும் அசையாமல் நின்றான்.
குரு அவனைத் தட்டி எழுப்பினார். அவன் தவத்தில் இருந்து மீண்டான். என்ன  இது என்று கேட்டார் குரு. ஒரு மூங்கிலின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வாழ்ந்துப் பார்த்தேன் என்றான் சீடன்.
குரு அவனை ஆசீர்வதித்தார். அவன் ஞானம் அடைந்தான்.
ESSENTIAL ZEN புத்தகத்தின் சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்......
ஜென் பற்றி ரிச்சர்ட் பேக்கர் என்ற அறிஞர் இவ்வாறு கூறுகிறார்.. ." ஜென் என்பது நமக்கு மத்தியில் அமைதியாக நம்மை நாம் அமர்த்துவது எப்படி என்று கற்பது. நமது மூச்சுக் காற்று, நமது இதயம், போன்றவற்றை அடுத்தவர்கள் வாழும் உலகின் மத்தியில்  அமர்த்துவது. மனம் வழியாக புற உலகம் முழுவதையும் கடந்து போகச் செய்தல் .இதன் மூலம் அகமும் புறமும் இன்றி ஆகிப்போவது.
நான்குவான் என்ற குருவிடம் சாவ்சாவ் என்ற சீடர் கேட்டார் . பாதை எனப்படுவது எது?
குரு சொன்னார் சாதாரணமான மனம் தான் பாதை.
அதை நான் முயற்சி பண்ணட்டுமா என்று கேட்டார் சாவ் சாவ்
முயற்சி செய்தால் நீ தவறவிட்டு விடுவாய் என்றார் குரு நான்குவான்
முயற்சியே பண்ணாமல் அதை நான் அறிந்துக் கொள்வது எப்படி என்று சீடர் திருப்பிக் கேட்டார்.
குரு நான்குவான் சொன்னார். அறிந்தது அறியாதது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பாதைக்கும் அதற்கும் தொடர்பில்லை. அறிதல் ஒரு மாயை. அறியாமை ஒரு பேதைமை .முயற்சியே இல்லாத வழியை நீ நாடினால்  வாசல் கதவுகள் தானாக அகலத் திறக்கும் என்று குரு சொன்னதுடன் மேலும் கூறினார் .இதனை மறுப்பதற்கோ வாதாடுவதற்கோ ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறாய்
இதை கேட்டதும் சீடன் ஞானம் அடைந்தான்.
முன்பு கூறியது போல் தர்க்க நிலையில் இருந்து அ-தர்க்க நிலைக்கு நம்மை தள்ளுவதுதான் ஜென்னின் முயற்சியற்ற முயற்சி. பாதையற்ற பாதை.
தர்க்கம் செய்ய வாதாட என்ன இருக்கிறது. மறுப்பதற்கு என்ன இருக்கிறது.
ஒரு முறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார். நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா..?
ஓஷோ கூறினார். வாழ்க்கையில் எதனையும் இல்லை என்ற மறுப்போடு தொடங்காதீர்கள். ஆம் இருக்கிறது என்று ஏற்கப் பழகுகங்கள். இன்மையை இருப்பால் வெல்லுங்கள். கடவுள் நம்பிக்கையும் அப்படித்தான்.
உண்டு என்றால் உண்டு.இல்லை என்றால் இல்லை.
மறுக்க என்ன இருக்கிறது.?
----------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை 5
Essential zen
பிரான்ஸ் நாட்டு கிராமத்தில் விருந்தினர்களுக்கு தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தாள் ஓர் இளம் மங்கை. எல்லா கோப்பைகளும் ஒரே அளவில் இருந்தன. எல்லாவற்றிலும் தேநீர் ஒரே அளவு இருந்தது. இப்படி தேநீர் பரிமாற அவள் ஜப்பானில் உள்ள ஒரு ஜென் மையத்தில் இருந்து பயிற்சி பெற்று வந்திருந்தாள். அப்போது தேநீர் பருக அங்கு வந்த தட்ச் நத் ஹன் ( Thich Nhat Hanh)  என்ற ஜென் குரு அவள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்து புன்னகைத்த குரு ஒவ்வொரு கோப்பையிலும் தனது விரலை செலுத்தி தேநீரை நக்கிப் பார்த்தார். அவள் அவரை வணங்கினாள்.
இந்த கதை என்ன சொல்ல வருகிறது. ODD , ABSURD, NONSENSE  என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். தேநீர் கோப்பைக்குள் விரலை விடும் ஜென் குரு ஒரு perfect master  ஆக காட்சியளிக்கிறார். வேண்டுமானால் அவர் அந்தக் கோப்பைகளை உடைத்திருக்க முடியும். ஒரு ஜென் குரு அப்படித்தான் செயல்படுவார்.
இது என்ன கிறுக்குத்தனம். இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று உங்கள் மனம் கேட்கும். மூளை பதறும். அது லாஜிக்கான உலகில் வாழப் பழகியது. லாஜிக்கை மீறும் எந்த ஒரு செயலும் பைத்தியக்காரத்தனம். கவிதை எழுதுவது பைத்தியக்காரத்தனம். ஜன்னலில் அமர்ந்த புறாவுடன் பேசுவது பைத்தியக்காரத்தனம். பணத்தை சேர்த்து வைக்காமல் பிறருக்கு வாரி வழங்குவது பைத்தியக்காரத்தனம். காக்கைக்கு திதி வைப்பது பைத்தியக்காரத்தனம். இப்படி பல்வேறு பைத்தியக்காரத்தனங்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை விமர்சிக்கிறோம். கண்டிக்கிறோம். எள்ளி நகையாடுகிறோம்.
சிறு குழந்தைகளைப் பாருங்கள். எத்தனை துடிப்பு எத்தனை லாஜிக்கற்ற பைத்தியங்கள் அவை. எத்தனை அன்பு எத்தனை பாசம் .எத்தனை குதூகலம், எத்தனை ஆனந்தம். கவலையற்ற ஜீவன்கள் வேறு உண்டா....
குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகமில்லை. அதிகபட்சம் தினமும் தான் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் உறவால் சில சம்பவங்களையும் அவை நினைவில் கொள்ளும். ஆனால் நான்கு வயது வரைதான் அதுவும். அதன் பிறகு எல்லா கடந்த காலமும் அழிந்து புதிய நினைவை அவை தேக்கிக் கொள்ளப் பழகும். உங்களுக்கு ஒரு வயதிலோ இரண்டு வயதிலோ ஏதாவது ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா பாருங்கள். வராது. நான்கு ஐந்து வயது முதல் நினைவு வளரும். அது மனம் பிறக்கும் தருணம். அதற்கு முன் மனமற்ற நிலையில் குழந்தைகள் இருக்கின்றன. அதனால்தான் அவை குதூகலமாக இருக்கின்றன. கவலையற்று இருக்கின்றன. ஆதாமும் ஏவாளும் வசித்த தேவலோக தோட்டத்தில் வசிப்பவை குழந்தைகள் தாம். பதின் வயதுகளில் அவை காமப் பாம்பு கடித்த ஆப்பிளைக் கடித்து அந்த தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. அவை தங்கள் வெகுளித்தனத்தை இழந்து விடுகின்றன. நபக்கோவ் ( nabokov ) தனது நோபல் பரிசு பெற்ற லோலிதா நாவலில் 13 வயது வரைதான் பெண்கள் தேவதைகளாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதனால்தான் சிறுமியைப் புணர அவர் கதாநாயகன் விரும்புகிறான். பெண்களுக்குத் தீட்டு வந்ததும் அவர்கள் புனிதமான நிலையை இழந்துவிடுகிறார்கள் என்பார் நபக்கோவ் . ஏவாள் தேவனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் நட்ட குழி என்ற நிலைக்கு மாறுகிறாள். யாரையும் காதலிக்க அவளால் முடியும். யாரையும் தன்னைத் தொட அனுமதிக்கும் வாய்ப்பு அவளுக்கு உண்டு. ஆண்களைப் போல் பெண்கள் அனுமதிக்காக ஏங்குவதில்லை. ஒரு புன்னகையும் ஒரு கண்ணசைவும் ஆயிரம் ஆண்களை வரிசையில் நிற்க வைத்துவிடும். பெண்கள் மீது யாரும் பாலியல் புகார் கூறமுடியாது .
மலரே மலரே நீ யாரோ ....உன்னை சூடி முடித்ததும் பெண்தானே இன்று தூக்கியெறிந்ததும் அவள்தானே என்று ஆண் உருகி பாடுகிறான். ( ஏஎம் ராஜாவின் பழைய தமிழ்ப்பாடல்)
அதனால்தான் குழந்தைகளின் உலகம் வெகுளி்த்தனமானது. மனமற்ற நிலையில் அவர்கள் தேவனின் சொர்க்க பூமியில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நான்கு வயது முதல் தொடங்கும் நினைவு வளர்கிறது. கல்வி குவிக்கும் குப்பைகள்,தொலைக்காட்சிகள்,  வணிகத் திரைப்படங்கள், மாஸ் ஹீரோக்கள், கிரிக்கெட், வீடியோ கேம்ஸ், பப்ஜி போன்ற பல குப்பைகள் குழந்தைகளின் மனங்களில் தூசாகப் படிகின்றன. அவற்றுடன் அவை வளர்கின்றன. நவீன உலகின் நச்சுப்பாம்புகள் இவை. ஆப்பிளைக் கொடுத்து இவை விஷம் கக்குகின்றன. குழந்தைகள் தேவனி்ன் தோட்டத்தில் இருந்து வெளியேறுகிறார்கள்
ஓஷோ சொல்வார் மனிதனுக்கு இயற்கை பின்னோக்கிச் செல்லும் ஆற்றலைத் தந்துள்ளது. நான்கு வயது வரை நமது நினைவு பின்னோக்கி செல்லும். அதன் பிறகு அந்த கேசட் ஸ்ட்ரக் ஆகி விடும். ரீவைண்ட் லிமிட் அதுவரைதான். ஆனால் முன்னோக்கி போக முடியாது . no fast forward. அடுத்த கணம் என்ன என்று கூற முடியாது. எதுவும் நடக்கலாம். ஒரு கணத்தில் எத்தனையோ விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. ஒரு கணத்தில் கொலை நடந்து விடுகிறது. ஒரு கணக்கில் ஒருவரின் வாழ்க்கையே வீணாகிப் போகிறது. ஒரு கணத்தில் மரணம்வந்து விடுகிறது. kahani kismat ki  என்ற பழைய இந்திப் படத்தில் (தர்மேந்திரா நடித்தது ) முகேஷ் பாடிய ஒரு பாடலில் ஒரு வரிவருகிறது.உன் வாழ்நாளில் ஒரு நாள் கூட குறையப் போவதில்லை, கூடவும் போவதில்லை. ஒருநாள் என்பது கூட அதிகம். ஒரு கணம் கூட கூடாது குறையாது. எழுதியவன் எழுதிவிட்டான்.
வாழ்க்கையின் முன்னோக்கி காணும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. ஜோதிடங்கள்  பொய்ப்பது இதனால்தான். கடந்த காலத்தைவைத்து எதிர்காலத்தை கணி்க்கமுடியாது. அந்த ஆற்றல் மனிதர்களுக்கு இயற்கை அளிக்கவில்லை .எனவே இக்கணம் தான் உண்மை. இக்கணமே உன் வாழ்க்கை என்கிறது ஜென்.
ஞானம் என்பது தண்ணீரில் பிரதிபலிக்கும் நிலவைப் போன்றது. நிலவு நீரில் நனைவதும் இல்லை. நிலவின் பிம்பத்தால் நீரும் உடையவில்லை. ஒரு அலைகூட எழுப்பவில்லை .அப்படியே சலனமற்று அது நிலவின் பிம்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.
இன்னும் சொல்கிறது ஜென் .....முழுநிலவும் முழு வானமும் புல்லின்மீதான ஒரு பனித்துளியில் பிரதிபலிக்கிறது. பனித்துளியின் ஆழம்தான் நிலவின் உயரம் என்றும் ஜென் கணிக்கிறது.
இது நிலவுக்கு ராக்கெட் விடும் அறிவியலுக்கு எதிரான ஒரு வாக்கியம். ஆனால் கவித்துவமானது. லாஜிக் இல்லாததது. அதுதான் அதன் அழகு.
ஜென் பாதையில் நடப்பவர் லாஜிக்கான சிந்தனைகளை கைவிடவேண்டும் .கடந்த கால நினைவுகளைக் கைவிட வேண்டும். எதிர்கால கவலைகளை கைவிட வேண்டும். ரித்விக் கட்டக் என்ற வங்காள திரைப்பட மேதை ஒரு முறை கூறினார் ...நான் என் மூலத்தை அறிய மீண்டும் என் தாயின் கர்ப்பப் பைக்குள் போக வேண்டுமா ?
கர்ப்பத்துக்குள் வரும் முன்பு நாம் எங்கிருந்தோம். ...என்னவாக இருந்தோம். மரணத்திற்குப் பின் என்ன ஆகப்போகிறோம். எங்கே போகிறோம்?
மனித மனம் பூட்டப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் நினைவோட்டம் செல்லாது .மரணத்தின் கணத்திற்குப் பின் மனம் இயங்காது. எதுவும் தெரியாது.
மனம் போட்டுள்ள மூடுதிரைகளுக்கு நடுவே வாழ்க்கை நடனமாடுகிறது. திரை விலகும் போதுமம் தெரிவதில்லை. திரை விழும் போதும் தெரிவதில்லை. அதைத் தான் ஜென் உணர்கிறது உணர்த்துகிறது.
----------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை   6
Essential zen - புத்தகத்தை பற்றிய பதிவுகள் ...
ஜென் குரு பாவோச்சி விசிறியால் தன்னை விசிறிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவருடைய சீடன் " குருவே காற்றுதான் எங்கும் உள்ளதே..அது சென்றடையாத இடமே இல்லை. பிறகு ஏன் நீங்கள் விசிறிக் கொண்டிருக்கிறீர்கள்? "
காற்றின் இயல்பு நிரந்தரமாக எங்கும் வீசுவதை நீ புரிந்துக் கொண்டாலும் அது அனைத்து இடங்களிலும் சென்றடைவதை நீ புரிந்துக் கொள்ளவில்லை என்றார் குரு.
எங்கும் சென்றடைவதன் அர்த்தம்தான் என்ன என்று கேட்டான் சீடன்.
குரு பதில் கூறவில்லை. தன் விசிறியை எடுத்து மீண்டும் வேகமாக விசிறலானார். சீடன் புரிந்துக் கொண்டு தலை வணங்கினான்.
இன்னொரு ஜென் கதை....
ஹாகுயின் என்ற குரு தனது பெண் சீடர் ஒருவருக்கு  போதனை செய்தார். அவர் முடித்ததும் அந்தப் பெண் கேட்டாள் எனக்காக அதனை மீண்டும் கூற முடியுமா...அது ஒரு நீளமான பிரசங்கம். மீண்டுமா என்று குரு சோர்வானார். சரி என்று மீண்டும் பேச முற்பட்ட போது அந்தப் பெண் அவரை வணங்கிவிட்டு நன்றி கூறி சென்றுவிட்டாள். அவள் போன பிறகு குரு தனக்குள் கூறிக் கொண்டார்....இந்த சின்னஞ்சிறு பெண்ணால் நான் தூக்கியெறியப்பட்டு விட்டேன்.
இன்னொரு கதை...
நான்குயின், குயிசங், மாயோ ஆகிய மூன்று ஜென் துறவிகள் தங்கள் குருவை சந்திக்க நீண்ட பயணம் மேற்கொண்டனர் .வழியில் நான்குயின் மண்ணில் ஒரு வட்டம் போட்டார். இதை நீங்கள் இருவரும் புரிந்துக் கொண்டால் குருவிடம் அழைத்துச் செல்கிறேன் என்றார்.
குயிசங் ஓடிப் போய் வட்டத்தின் உள்ளே அமர்ந்துக் கொண்டார். மாயோ வட்டத்தை சுற்றி ஓடினார்.
அப்படியானால் நாம் குருவை காண வேண்டிய அவசியமில்லை என்றார் நான்குயின்.
குயிசங் திருப்பிக் கேட்டார் அப்படி உங்களை நினைக்க வைப்பது எது...?
இந்த மூன்று கதைகளும் ஜென் புதிர்களுடையவை. விசிறியை எடுத்து வீசும் குருவும் , குருவை மீண்டும் பிரசங்கம் செய்யக் கோரி கேட்காமல் சென்று விட்ட சிஷ்யையும் , மணலில் வட்டமிட்ட ஒருவரும், அதில் உள்ளே போய் அமர்ந்த ஒருவரும், அந்த வட்டத்தை சுற்றி வந்த ஒருவரும் அபாரமான ஜென் ஞானிகள். அவர்கள் குருவிடம் கற்க ஏதுமில்லை. சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் ஏதுமில்லை.
ஜப்பானைச் சேர்ந்த ஜென் துறவி ரோஷி பிலிப் கப்லாவ் ( Roshie Philip Kapleau )  1912ம் ஆண்டு பிறந்து தமது 91 வது வயதில் காலமானார்,. அவர் ரின்ஜாய் என்ற பிரபலமான ஜென் குருவின் வழிவந்தவர். அவர் ஜென் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவருடைய பேட்டி ஒன்றை சொல் புதிது இதழுக்காக நான் மொழிபெயர்த்தேன். அந்தப் பேட்டியை பார்க்கலாம்....
ஜென் எங்கே தோன்றியது ? இந்தியாவிலா?  சீனாவிலா ? ஜப்பானிலா ? ரோச்சஸ்டர் பல்கலைக் கழக மாணவர்கள் ஆதியக் கல்வி பயில ஒரு ஜென் முகாமை அடைந்தனர். தியான மண்டபடம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் கருத்து கூறும் படி பணிக்கப்பட்டனர்.
ஜப்பான் மாணவன் என் கடுமையைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சுவற்றில் வைக்கோல் பாய் மாட்டப்பட்டுள்ளதை கண்டேன். ஜப்பானியர் அப்படி செய்ய மாட்டார்கள். ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களிலும்  இப்படி இல்லை இது ஏன் எனநான் கேட்கலாமா என்று ரோஷியை நோக்கி கேட்டான்.
ரோஷி - அது சுவற்றின் வர்ணங்களை சிதறடிக்காத ஒரு மைய வண்ணத்தைத் தருகிறது.
அடுத்து சீன மாணவன் ஜப்பானிய மாணவரிடம் கேட்டான்.  ஜப்பானியர் செய்வதுதான் சரியான ஜென் முறை என்கிறாயா? ஜென் என்று நீங்கள் அழைக்கிறீர்களே...அது உண்மையில் சான் ( Chan )  சீனாவில் இருந்துதான் அது வந்தது.
இதைக் கேட்ட இந்திய மாணவன் இருவரையும் நோக்கி கூறினான். சாக்கிய முனி புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் இருவருமே மறந்துவிடுகிறீர்கள். பௌத்தம் தோன்றியது சீனாவிலோ ஜப்பானிலோ அல்ல இந்தியாவில் தான்.
அமெரி்க்கரான ஜென் துறவி ரோஷி பிலிப் கூறினார் .எங்கள் அமெரிக்க கலாசாரம் இந்த மூன்று கலாசாரங்களையும்  சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை நீங்கள் மூவரும் ஏன் மறுக்க வேண்டும் ? பௌத்தம் என்ற கடலுக்குள் உங்கள் மூன்று நாடுகளும் நதிகளைப் பொழிந்துள்ளன. ஆனால் இந்த நீர் பலப்பல அமெரிக்கர்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறது. புத்தரின் பாதை சர்வதேசியமானது. அனைத்துக் கலாசாரங்களையும் கடந்தது. புத்தரை இந்தியாவிலோ சீனாவிலோ ஜப்பானிலோ மட்டும் தேட முடியாது. எங்கெல்லாம்  புத்தரை வணங்கி பௌத்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் உள்ளனரோ அங்கெல்லாம் புத்தர் உள்ளார்
பர்மாவைச் சேர்ந்த மாணவர் கேட்டார் " அப்படியானால்  புத்தரை என் நாட்டிலும் காணலாம். அங்கு 50 ஆயிரம் பௌத்த துறவிகள் உள்ளனர்.மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை செலுத்துகின்றனர். புத்தரை நாங்கள் பகோடாக்களிலும் ( pagoda )  எங்கள் இல்லங்களிலும் வைத்து வழிபாடு செய்கிறோம். இந்நாள் வரை உலகில் வாழ்ந்தவர்களில் மகத்தான ஞானி என்று அவரை வணங்குகிறோம்.
ரோஷி - நீங்கள் தியானம் செய்வதுண்டா...?
பர்மா மாணவர் -இல்லை .பல்கலைக் கழகத்தில் அதற்கான கடுமையான முறைகள் உண்டு. எனினும் எனக்கு நேரமே கிடைப்பதில்லை.
ரோஷி பிலிப் - புத்தரை பர்மாவில் காண முடியும். ஆனாலும் நீ அவரைத் தேடி அடைய வேண்டும்.
சீன மாணவனிடம் திரும்பிய ரோஷி பிலிப் நீ என்ன கூறுகிறாய் என்றார்
சீன மாணவர் - தியானத்தில் ஈடுபாடு உண்டு. ஆனால் எனது அறை மிகச்சிறியது.என் அறைக்குள் இருப்போர் இரவும் பகலும் பெரும் சத்தத்துடன் இசையை ஒலிக்க விடுகின்றனர். என்னால் படிக்கவே முடியவில்லை . தியானம் எப்படி செய்வது?
ரோஷி பிலிப் - உனக்கும் புத்தர் ஒரு அந்நியரே.
பின்னர்  இந்திய மாணவரிடம் திரும்புகிறார்.
இந்திய மாணவர் -என் குடும்பம் இந்து குடும்பம்தான். ஆனால் புத்தரின் போதனைகளுக்கும் எங்களின் வழிபாடுகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.
ரோஷி பிலிப் -இந்து மதத்தில் தியானம் உண்டா ?
இந்திய மாணவர் - உண்டு. ஆனால் எனக்கு நேரமில்லை .தியானத்தை விட அதிகமாக நான் யோகா பயிலுகிறேன்.
ரோஷி பிலிப் -சாக்கிய முனி யோகாவை போதித்தாரா ?
பின்னர் ஜப்பான் மாணவரிடம் கேட்டார் ...நீ தியானம் செய்வதுண்டா....?
ஜப்பான் மாணவர் கூறினார். இல்லை குருவே. நீங்கள் அதனை கற்றுத் தாருங்கள்.
ரோஷி பிலிப் கூறினார் உங்கள் அனைவருக்கும் முதல் பாடமே இதுதான்.
சாக்கிய முனி யோகாவை போதித்தாரா என்று ரோஷி கேட்ட போதும் அதன் பதிலையும் அவர் அறிந்திருந்தார். புத்தர் தியானத்தில் அமர்ந்தது யோகநிலையில்தான். ஒரு மிகச்சரியான தாமரைப் பூ மலர்வது போன்றது புத்தரின் யோக நிலை அமர்தல். அதுவும் யோகாதான். லோட்டஸ் என்பார்கள். ஒரு ஜென் துறவி மிகச்சரியான ஞான நிலையில் சரியான போஸில் அமர்ந்துவிட்டாலே அதுவே அவருக்கு ஞானத்தை அளிக்கும் என்பார்கள்.
------------------------
சாக்கிய முனி புத்தர் துறவிகளின் கூட்டத்தில் உரையாட அழைக்கப்பட்ட போது ஒரு பூவை உயர்த்திப் பிடித்தார். சீடர் மகா காசியபர் உடனே சத்தம் போட்டு கடகடவென சிரிக்கலானார். ஜென் மிகுந்த நறுமணத்துடன் மலர்ந்து விட்டது.

---------------------------------------------------------------------------------
((ரோஷியின் உரையாடல்கள் தொடரும்....அதன் பின் ஜென் ஹைகூவைப் பற்றிய மிகப்பெரிய தொகுப்பு --))-
-------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்

கோப்பை   7
1சில ஜென் கவிதைகளைப் பார்ப்போம்.....
பனிக்காலம்
காட்டின் மூடுபனி படர்தலில்
ஏழு நட்சத்திரங்கள் நடந்து செல்கின்றன
-   சீன் நாகாகவா
2  அமைதியான மனத்தின்  மையத்தில்
தவழ்கிறது நிலவு
மின்மினிகள் ஒளியாக மாறுகின்றன
- டோகன்
3 மிதமான மழை தூசியை எழுப்பிச் செல்கிறது
குளிர்ந்த தென்றல் காற்று சுத்தமாகிறது
மூச்சுக்குள் உறைந்த மூச்சுக்காற்று.
பண்டைக் கால மணல் கோட்டைகளை எங்கேயும் காணவில்லை.
-எட் பிரவுன்
4. கனவுகள் நிரம்பிய உலகில்
இன்னும் தூங்கிக் கொண்டிருப்பது....
பிறகு மீண்டும் பேசுவது
கனவுகளைப் பற்றியே கனவு காண்பது....
அப்படியே இருக்கட்டும்...
- ரைகோன்
5 என்ன வேடிக்கை சிரிப்பு வருகிறது...
அந்த நடிகன் தேநீர் பரிமாறிக் கொண்டிருக்கும்போது
தன்னை நானாக நினைத்துக் கொள்கிறான்...
- லவோ ஹார்ஸ்மன்
6. பிறப்பு, முதுமை, நோயுறுதல், மரணம்
ஆரம்பம் தொட்டே இதுதான் பாதை
இப்படித்தான் எப்போதும் நிகழ்கின்றன.
இந்த வாழ்க்கையில் இருந்து விடுபடும் எந்த ஒரு சிந்தனையும்
கூட்டுக்குள் கிடக்கும் நத்தையைப் போன்றது.
சஞ்சலப்படும் மனிதன் தியானத்தை நோக்கித் திரும்புகிறான்.
ஆனால் உணர்ந்தவனுக்கு தேட ஒன்றும் இல்லை.
சொல்வதற்கும் எதுவுமில்லை என்றும் அவன் அறிவான்.
தன் வாயை அதனால் பொத்திக் கொண்டு கிடப்பார்
- நிகிச் கியூ
7 . இலையுதிர்காலத்தில்  மீண்டும் இதனை
பார்க்கும் நம்பிக்கையுடன் இருக்கையில்
மாலையில் தெரியும் நிலவைப் பார்த்து என்னால் எப்படி தூங்க முடியும்?
- டோகன்
8. மரங்களின் கீழ், பாறைகளின் மத்தியில், ஒரு குடிசை வீடு
கவிதைகளும் புனித பிரதிகளும் அங்கு ஒன்றாக வசிக்கின்றன.
என் பையில் இருக்கும் புத்தகங்களை என்னால் எரித்து விட முடியும்.
ஆனால் என் இதயத்திற்குள் பதிந்த வரிகளை எப்படி அழிக்கமுடியும்?
- இக்யூ
9.மூங்கில் காட்டுக்குள் கேட்கிறது
புல்லாங்குழலின் இசை
மூங்கில், மூங்கில் காட்டுக்குத் திரும்பி வந்துவிட்டது.
-பால் ரெபி
10. உன் சாட்டையையும்  எருது பற்களைப் பிடிக்கும்
கவண் போன்றவற்றையு் உன்னால் தூக்கியெறிய முடியாது.
விட்டால் அந்த எருது தறிகெட்டுப் பாயும் என்று பயப்படுகிறாய்.
ஆனால் அமைதியாக இருக்கப் பழகி விட்டால், அந்த எருது
கயிறு இல்லாத போதும்  உன்னைப் பின்தொடர்ந்து சாதுவாக வருகிறது
11 .மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த எருதுவை நீ மடக்கிப் பிடித்துவிட்டாய்
ஆனால் அது இன்னும் மிகுந்த பலத்துடன் தான் இருக்கிறது.
அதன் உடல் வலிமையானது.
சில நேரங்களில் அது தரையை முட்டி பாய்ந்து ஓடுகிறது.
சில சமயங்களில் அது மூடுபனிக்குள் ஓடி மறைந்துவிடுகிறது.
-----------------
கடைசி இரு கவிதைகளையும் எழுதியவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
எருது என்பதும் காளைமாடு என்பதும் ஜென் அடையாளங்களில் ஒன்றாகும். மனதுதான் காளை. அதுதான் முரண்டு பிடிக்கும் மாடு. மனம் ஒரு குரங்கு என்பார்கள் அல்லவா,...ஜென் அதனை மாடு என்கிறது. முட்டி மோதும் மாடு, மூடுபனிக்குள் ஓடி ஒளியும் மாடு. வலிமை மிக்க மாடு, கயிறு இல்லாத போது சாதுவாக பின்தொடரும் மாடு என்று இதற்கு சூட்டப்பட்டுள்ள படிமங்களை கவனியுங்கள். இதுதான் ஜென்னின் சூட்சுமம்.
ஜென் கவிதைகள் பெரும்பாலும் சிறிய வைரக்கற்கள் போன்றவை. விலை மதிப்பு மிக்கவை. பூரணத்துவத்துடன் ஜொலிப்பவை. உடனே அர்த்தம் புரியாத வரிகள் அசை போட அசை போட ஆனந்தம் தருபவை.
ஜென் கவிதைகள் வழியாக தன்னை வாரிவழங்குகிறது. அதை தரிசிக்க ஒரு கவிஞனாகவோ கவிதையின் ரசிகனாகவோ இருக்க வேண்டியது அவசியம்.
-----------
இனி  சொல் புதிது இதழில் எனது மொழிபெயர்ப்பில் வெளியான  ஜப்பானிய ஜென் துறவி ரோஷி பிலிப்பின் மேலும் சில உரையாடல்களைக் காண்போம்....
--------------
நான் ஜென் பற்றி பேசுவதானால் ஜென் பற்றி பேசுவதாகாது....
கே. தயவுசெய்து எனக்கு ஜென் என்றால் என்னவென்று விளக்குங்கள்.
ரோஷியுடன் வந்த இரண்டு மாணவர்கள் தரையில் இரண்டு பாய்களை விரிக்கின்றனர். ஒன்றில் ரோஷி அமர இன்னொரு பாயில் சற்றுத் தள்ளி மற்றவர்கள் அமர்கின்றனர்
ஜென் என்றால் என்ன என்று கேட்கிறார்  ஒரு மாணவர்.
ரோஷி ஒரு வாழைப்பழத்தை உரித்து அதை உண்கிறார்...
மாணவர் -அவ்வளவுதானா...வேறேதும் விளக்கம் தர முடியுமா?
ரோஷி - அருகில் வா
மாணவர் வருகிறார். ரோஷி கூறுகிறார் நீயே ருசித்துப் பார்...
மாணவர் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு வணங்கி நகர்கிறார்.
இரண்டாவது மாணவர்  பார்வையாளர்களை நோக்கி உங்களுக்கு இது புரிகிறதா எனக் கேட்டர்.
பதில்.. இல்லை...இல்லை...இல்லை...
மாணவர் -முதல் தரமான ஜென் விளக்கத்தை கண்டீர்கள். வேறு ஏதும் கேள்விகள் உண்டா..?
ஒரு நீண்ட மௌனம்
ஒருவர் கேட்கிறார் - ரோஷி எங்களுக்கு இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. ஜென் என்றால் என்ன என்று சொல்லிக் காட்ட வேண்டும்
ரோஷி - சரி ,,,வானத்தில் மீன்கள் பறக்கின்றன. கடலில் பறவைகள் நீந்துகின்றன.
கேள்வி கேட்டவர் - எனக்குப் புரிவது போல் உள்ளது
அனைவரும் சிரிக்கிறார்கள்.
இரண்டாவது கேள்வியாளர் - ஜென் குறித்து மேலும் ஒரு விளக்கம் கூறுங்களேன்.
ரோஷி - நான் ஜென் பற்றி பேசுவதானால் அது ஜென் பற்றி பேசுவதாகாது.
------------------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   8
ஞானத்தைப் பற்றி படிப்பது என்பது ஷூவுக்குள் காலைச் சொறிந்து விடுவது போல்,,,,
ஜென் குரு ரோஷி பிலிப்புடன் உரையாடல்....
கே- ஞானத்தை குறித்து படித்த பிறகு அது என்னவென்று என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. பல நேரங்களில் நிச்சயமாக வாழ்வின் ஒளியைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இத்தகைய புரிந்து கொள்வதற்கும் ஜென் விழிப்புணர்வுக்கும் என்ன வேறுபாடு?
ரோஷி -  விழிப்புணர்வு குறித்து படிப்பது பசியெடுக்கும் போது ஆரோக்கியம் குறித்து படிப்பதற்குச் சமம்.அது வயிற்றை நிரப்புமா? நிச்சயமாக இல்லை. நீ மென்று ருசித்து உண்ணும் உணவுதான் திருப்தியளிக்கும். இதை விழிப்புணர்வுக்கும் ஞானத்திற்கும் ஒப்பிடலாம்.ஆனால் நீ உண்ணுகிற உணவு கூட ஆரோக்கியத்துக்கு இடம் தராது. அது செரிமானம் ஆக வேண்டும். அது போலத்தான் விழிப்புணர்வும். இறுதியாக சுழித்தல். நான் ஞானம் அடைந்தவன் என்ற எண்ணத்தையும் கூட நீ தவிர்க்கவேண்டும். பூமிக்கும் சொர்க்கத்திற்கும் இடையே சுதந்திரமாக நடமாட வேண்டும். உன் காலில் சொறி ஏற்பட்டால், அதை வெறும் காலில் சொறிந்து விடுவது நல்லதா ஷூவுக்குள் காலைச் சொறிந்துவிடுவது நல்லதா....?
கே - இயற்கையிலேயே வெறும் காலில் சொறிவதுதான் நல்லது.
ரோஷி - ஞானத்தைப் பற்றி படிப்பது கூட ஷூவுக்குள் காலை சொறிந்து விடுவதுதான். ஞானம் என்பது எழுதப்படாத புத்தகங்களையும் படிக்கக் கூடிய ஆற்றலைத் தருகிறது.நீட்ஷே தனது கடைசி காலத்தில் பார்வையை இழந்ததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, நான் என்னையே படிக்கலானேன் என்றார்.
----------------------------------
ஜென் குட்டிக் கதைகள்.
1. ஒரு துறவி சவ்சவ் குருவிடம் வந்தார். நான் இப்போதுதான் புதிதாக இந்த ஆசிரமத்துக்கு வருகிறேன். எனக்கு சில உபதேசங்களைக் கூறுங்கள்... என்றார்.
குரு கேட்டார் - நீ முதலில் சாப்பிட்டாயா..?
துறவி - ஆம் வந்தவுடன் சாப்பாடு போட்டார்கள். இப்போதுதான் தட்டை வைத்து விட்டு வந்தேன்.
குரு- அப்படியானால் போய் உன் தட்டைக் கழுவி விட்டு வா.
2. ஒரு சீடர் குருவிடம் புத்தர் என்பது என்ன என்று கேள்வி கேட்டார். கேள்வி கேட்டவரின் மனதுக்குள் புத்தர் என்ற பிம்பம் வெறும் ஒற்றைச் சொல்லாக சுழலுவதைக் கண்ட குரு அதை சிதைக்கும் வண்ணம் பதிலளித்தார் " துடைப்பக்கட்டை "
3. பாய்சல் என்ற குரு அன்றைய உரைக்குப் பிறகு ஒரு முதியவர் மட்டும் நிற்பதைக் கண்டார். அந்த கிழவர் சொன்னார் " நான் ஒரு காட்டு ஓநாயின் ஆன்மா. நான் மனிதனல்ல. கடந்த பிறவியில் நான் இந்த ஆசிரமத்தில் தலைமை குருவாக இருந்தேன். நான் மறுபிறவி பெற்று 500 ஆண்டுகள் காட்டு ஓநாயாக திரிந்தேன். இதிலிருந்து விலக இயலவில்லை. எனக்கு உதவ முடியுமா..?
குரு அவர் பிறவிப் பிணியிலிருந்து முக்தியளித்தார். மறுநாள் ஓநாயின் சடலம் அங்கிருப்பதை கண்ட சீடர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய குரு கட்டளையிட்டார்.
ஓநாய்க்கு மரியாதையுடன் இறுதிச் சடங்கா என சீடர்கள் குழப்பம் அடைந்தார்கள், குருவுக்கு என்னவோ ஆகி விட்டது. அல்லது இதுவும் ஒரு ஜென் பாடம் போலும் என்று எண்ணி விட்டார்கள்.
4 .சவ் சவ்விடம் ஒருவர் வந்தார். ஒருவரின் கையில் ஒன்றுமே இல்லை. அவர் அந்த வெறுமையை என்ன செய்வது என்று கேட்டார்
கீழே போட்டு உடைத்து விடு என்றார் குரு.
"நான் எதுவும் கொண்டு வராத போது எதை நான் கீழே போட்டு உடைப்பது என்று அவர் திருப்பிக் கேட்டார்.
அப்படியானால் அதை அள்ளி எடுத்துக் கொண்டு போ என்றார் சவ் சவ்,
5. டெசங் என்ற குரு நீண்ட தூரம் கால்நடையாகப் பயணித்து வழியில் ஒருநதியைக் கண்டார். ஒரு சிறிய படகில் சூழ்நிலைகளை அனுசரித்துப் பயணித்தார். நாளடைவில் அவர் படகை விட்டு இறங்காததால் படகுத் துறவி என்றே அழைக்கப்பட்டார்.
ஒருநாள் கரையோரம் படகை நிறுத்தி அவர் அமர்ந்திருந்த போது அந்தப் பக்கமாக வந்த அதிகாரி ஒருவர் " மகத்தான குரு என்ன செய்கிறார் ?" என்று விசாரித்தார்.
குரு தன் இருக்கையை எடுத்துக் காட்டினார் .இது உனக்குப் புரிகிறதா..புரியவில்லை  என்றார் அதிகாரி.
நான் துடுப்புப் போட்டு தூய நீரை சிதறடிக்கிறேன். ஆனாலும் தங்கமீன் அரிதாகவே கிடைக்கிறது என்றார் குரு.
6 . ஒரு முறை விருந்தினர்  ஒருவர் குருவிடம் கேட்டார்.
வெறுமையை எப்படி பிடிப்பது?
குரு என்னால் முடியும் என்றார். உன்னால் முடியுமா என்று விருந்தினரிடம் குரு திருப்பிக் கேட்டார்.
முடியும் என்று சவாலுடன்  கூறிய விருந்தினர்  குருவின் கையைப் பற்றி பாவனைகளை செய்து காட்டினார்.
குரு சொன்னார்  உண்மையிலேயே உனக்கு வெறுமையைப் பிடிக்கத் தெரியாது.
பின் வேறு எப்படி பிடிப்பதாம் என்று விருந்தினர் திருப்பி்க கேட்டார் .
அருகில் வா என்று அழைத்த ஜென் குரு அவன் மூக்கைப் பிடித்து அவன் அலற அலற பலம் கொண்ட மட்டும் திருகி இப்படித்தான் என்றார்.
7 மாட்சு என்ற மிகப் பெரிய ஞானியிடம் ஒரு தத்துவவாதி வந்தான். வந்தவுடன் எனக்குநேரமில்லை. ஞானம் அடைவது எப்படி என்று உடனே எனக்கு விளக்குங்கள் என்றான்.
புத்தரின் சிலை அருகில் அமர்ந்திருந்த மாட்சு, முதலில் புத்தரை வணங்கி விட்டு அப்புறம் இதுபோன்ற பெரிய விஷயங்களைப் பேசலாமே என்றார்.
சரி என்று கூறிய தத்துவவாதி, புத்தரின் சிலை முன்பு மண்டியிட்டான் .மாட்சு எழுந்து வந்து அவன் புட்டத்தில் ஓங்கி ஒரு உதை விட்டார். உடனே அந்த தத்துவவாதி தன் கேள்வியின் அபத்தம் உணர்ந்து சிரிக்கலானான்.
8 ஒரு ஜென் மாணவன் கேட்டான் - குருவே என் சந்தேகங்களைத தீர்த்து வையுங்கள் .ஆன்மா அமரத்துவம் உடையதா...உடல் சாகும் போது ஆன்மா மீண்டு விடுகிறதா ? மறுபிறவி எடுத்து நாம் உதிரியாகச் சிந்துகிறோமா அல்லது முழுவடிவம் கொள்கிறோமா...நமது நினைவுகள் எங்கே போகின்றன.
சீடன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக குரு பதிலளித்தார்.
"உன் தேநீர் ஆறி்க் கொண்டிருக்கிறது. அதை முதலில் குடி."
---------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   9
ஜென் ஹைகூ கவிதைகள்
1 .தன்னிலிருந்து எழுகிறது
தன்னிலிருந்து விழுகிறது
இலையுதிர் கால பனித்துளி
கோடைக்காற்று எந்த இடையூறும் செய்வதில்லை.
- நி புட்சு
2. விலகியிரு
உலகம் உன்னுடையது
நீ மாமிசத்தில் கரைந்த புத்தன் .
- புனன்
3. மழைக்கு நடுவில் சூரியன் நீடிப்பது
நெருப்பின் ஆழத்திலிருந்து
தூய நீரை இறைக்கவா....
- டோகன்
4. மனம் -அதை என்னவென்று அழைப்பது
அது பைன் மரங்களிடையே ஓசை எழுப்பும்
காற்று
- டோகன்
5. கடலைக் கடக்க முயன்ற
பட்டாம்பூச்சிகளை
காணவில்லை
-டோகன்
6. நெல் வயல் உச்சியில் வைக்கோல் பொம்மை
எத்தனை கவனமற்று
எத்தனை பயனற்று
-  டோகன்
7 .முன் தோட்டத்து பைன் மரங்கள்
ஏன் கோணலாக வளர்கின்றன
என்று கேட்காதே
அவற்றின் ஒழுங்கு
அவற்றின் உள்ளே உள்ளது.
- சோசெகி
8. நிலவைப் பார்த்து ரசித்த பின்
என்னுடன் வீடு திரும்புகிறது
என் நிழல்.
- சோடொ
9. மாலையில் மழையடித்தால்
பாதுகாப்புத் தேட வேண்டும்.
ஆனால் வெறும் பனிதான் என்று எண்ணுவதால்
நனைந்து விடுகிறோம்.
- டாயோ
10 என் நித்திய சுயத்தின் முன் நிற்பவளே
முதல் பார்வையிலிருந்தே நீ என் காதலியானாய்
-டாயோ
11. வசந்த கால கடல்
பகலில் அது எழுகிறது விழுகிறது
ஆம் எழுகிறது விழுகிறது
- பூசன்
12.நீரில் நிலவின் பிம்பம்
மீண்டும் மீண்டும் உடைகிறது
ஆனால் அங்கேயே இருக்கிறது.
-சோசு
13 என் கால்கள் மெலிந்தவை
எனினும்
யோஷினோ மலைக்குப் போகிறேன்.
பூக்கள் மலர்கிற இடத்திற்கு..
- இஸா
14. மலைப்பாதை அறிய
அதில் ஏறி இறங்கி வரும்
மனிதனிடம் கேள்
-இஸா
15. அடுத்த தங்குமிடத்தில்
நம்மை வரவேற்கும் புன்னகை
நம்மை வழியனுப்பவும் செய்கிறது
- இஸா
16. பட்டாம்பூச்சிகள் நேயத்துடன்
பூக்கள் மீது அமர்ந்தன.
ஆனால் சவப்பெட்டி மீது
-மீ செட்சு
17 .என் பத்தடி குடிசைக்குள்
இருந்தது வசந்தம்
இங்கு எதுவுமே இல்லை
ஆனால் எல்லாம் இருக்கிறது
- சோ டொ
18 இவ்வுலகம் ஒரு பனித்துளி...
பனித்துளிதான் உலகம்
ஆனால்,...ஆனால்....
- இஸா
( இக்கவிதை  இஸா  தன் குழந்தையின் மரணத்தின் போது எழுதியது)
19  கடந்த காலம் , நிகழ் காலம், எதிர்காலம்
என்ன செய்து விட இயலும் ?
மெழுகுவர்த்தி அணைக்கப்பட்டுவிட்டது
வைரம் திரும்புகிறது சாம்பலுக்கு
-செங்காய்
20 இக்காலத்தில் மக்களுக்கு ஏன் அவசரம்?
புதர்களின் கனவுகள் பச்சை
நீர்  உயிர்ப்பானது
பூரணத்தின் ஓர்மை துல்லியமானது.
பூரணத்தின் ஓர்மைக்குள் நேராக ஊடுருவுகிறார்கள்
அரிதானவர்கள்.
- டாயோ
---------
இன்னும் ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. இக்கவிதைகளை சும்மா ஒரு மேலோட்டமான வாசிப்புக்குப் பின் கடந்து செல்லக்  கூடாது. ஒவ்வொரு கவிதையும் இயற்கையுடன் ஒரு உறவு கொண்டாடுகிறது.ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு ஜென் அனுபவம் உள்ளது. ஒவ்வொரு கவிதையிலும் வாழ்க்கையை குறித்த ஒரு தரிசனமும் விசாரணையும் இருக்கிறது.
முதல் கவிதை.. இலையுதிர் கால பனித்துளிக்கு கோடைக் காற்று எந்த இடையூறும் செய்வதில்லை என்ற வரியை கவனியுங்கள். பனித்துளி கனமானது அல்ல. தக்கையானது. ஒரு சிறு சலனத்தில் அது இலையுதிர்கால இலையைப் போலவே உதிரக்கூடியது. ஆனால் காற்று அதற்கு இடையூறு செய்வதில்லை என்கிறது ஜென். அதாவது காற்றும் பனித்துளி நின்றிருக்க உதவி செய்கிறது. பனித்துளி தான் எப்போது விழ வேண்டும் என்று நினைக்கிறதோ அப்போது மட்டும் விழுகிறது. இக்கவிதையை அசைபோட்டால் ஒரு பனித்துளிக்குள் உலகத்தையே தரிசிக்க முடியும்.
மாமிசத்தில் கரைந்த புத்தன் நீ என்கிறது இன்னொரு கவிதை. ஒவ்வொரு மனிதனும் புத்தன் தான். புத்தம் சரணம் கச்சாமி என்பது மாமிசத்திற்குள்  உடலின் இச்சைகளுக்குள் உடலின் கோப தாபங்களுக்குள் உடலின் மெழுகுக்குள் சுடராக மறைந்திருக்கிறது. சுடர் எரிய எரிய மெழுகு கரையும். ஆன்மா வளர வளர உடலின் தேவைகள் குறையும் என்கிறது ஜென்.
மனத்தை பைன் மரங்களுக்கு இடையில் ஓசை எழுப்பும் காற்று என்கிறது இன்னொரு கவிதை.
மனம் குரங்கு, மனம் காளை என்றெல்லாம் பார்த்தோம். இ்பபோது மனம் பைன் மரங்களுக்கு இடையே ஓசை எழுப்பும் காற்று என்கிறது ஜென். பைன் மரங்கள் யாவை .அதன் குணாதிசயம் என்ன என்று ஆழமாக யோசிக்க யோசிக்க கவிதை வேறு இடத்துக்கு நகர்கிறது.
பைன் மரங்கள் ஏன் கோணலாக வளர்கின்றன என்று கேட்காதே என்கிறது இன்னொரு கவிதை. கோணலாக இருப்பதுதான் பைன் மரங்களின் ஒழுங்கு. அது அதனுள்ளே இருக்கிறது. உன் ஒழுங்கு வேறு அதை வைத்து பைன் மரத்தை எடை போடாதே.
நெல் வயல் உச்சியில் உள்ள வைக்கோல் பொம்மை எத்தனை கவனமற்று எத்தனை பயனற்று வயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறது மற்றொரு கவிதை. அது ஒரு பார்வையாளன் மட்டும். பறவைகள் அதைக் கண்டு மனிதன் காவலுக்கு இருப்பதாக எண்ணி வயல்களை விட்டு விலகியிருக்கும். ஆனால் ஒரு வைக்கோல் பொம்மையால் ஒரு ஈயைக் கூட விரட்ட முடியாது .அது பயனற்றது. உலக வாழ்க்கையை ஒரு வைக்கோல் பொம்மை போல் பார்த்து பார்வையாளனாகவே வாழ்வது குறித்தும் இக்கவிதை உணர்த்துகிறது. தாமரை இலை நீர்த்துளி போல என்பார் கவிஞர் தாகூர்.
என் அருமை நண்பர் கவிஞர் மு.நந்தா பெரியாரியம் மார்க்சியம் எல்லாம் படித்தவர் என்றாலும் அவர் அடிப்பைடயில் ஒரு ஜென் துறவி போலத்தான் வாழ்ந்தார். ஒரு முறை நான் வேலைக்குப் போகவில்லை. மனம் நிறைய துன்பங்கள், ஆனால் என் சம்பளத்தை நம்பி 5 ஜீவன்கள் உண்டு. எனக்கு அது பெரும் கவலை. வேலையை விட்டு விட்டால் சோத்துக்கு வழியில்லை. அப்போது கவிஞர் நந்தாவை சந்தித்தேன். அவர் என் முக வாட்டத்தைப் புரிந்துக் கொண்டார். அவர் சொன்னார் ஜக்கி நீ வேலையை விடாதே ஆனால் வேலைக்குப் போய் சம்பாதித்து கொடுப்பாய் என்ற நம்பிக்கையை உன் குடும்பத்திடமிருந்து எடுத்து விடு. இது மிகப்பெரிய தரிசனமாக எனக்குத் தோன்றியது. நந்தா கூறினார் என் வீட்டில் நான் சம்பாதித்துத் தருவேன் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. எப்படியோ காசு வருகிறது .எப்படியோ குடித்தனம் நடக்கிறது.
இது பொறுப்பற்ற பதில் தான். ஆனால் ஜென் இதை வைக்கோல் பொம்மையுடன் ஒப்பிட்டு எத்தனை கவனமற்று ,எத்தனை பயனற்று என்கிறது.
பொதுவாக ஜென் துறவிகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பார்கள். ஒரு வீட்டின் முன் வரவேற்கும் அதே புன்னகைதான் மறுநாள் காலையில் விடைபெறும் போதும் வழிஅனுப்பி வைக்கிறது என்கிறது ஜென். இவ்வுலகிலும் பயணிகள் தாமே நான் பிறக்கும் போது புன்னகைப்பவர்கள் இறக்கும் போது கண்ணீரிலும் புன்னகைக்கத்தானே செய்கிறார்கள். சிலருக்கு தொல்லை விட்டது. சிலருக்கு சொத்து கிடைக்கிறது. சிலருக்கு வேலை கிடைக்கிறது .இப்படி ஏதோ ஒன்று புன்னகையை வரவைக்கிறது.
என் தந்தை இறந்த போது எனக்குப் புன்னகை வரவில்லை அழுகைதான் வந்தது. ஆனால் அழுகையும் புன்னகையின் இன்னொரு பக்கம் தான் என்று புரிந்துக் கொள்ள நாளானது.
இன்னொரு ஜென் கவிதை மழையை வெறும் பனிதான் என்று எண்ணி வழியில் நனைந்து விட்டதை சொல்கிறது. மலைகளில் பயணிக்கும் துறவிகளுக்கு பனியும் மழையும் ஒன்றுதான் போலும்.
இவ்வுலகம் பனித்துளி என்கிறார் இஸா என்ற கவிஞர். பனித்துளிதான் ஆனால் ஆனால் என்ற முடியாத கேள்விகளுடன்
அவருடைய குழந்தை இறந்து விட்டது. அதன் துயரம் உலகை மாயையாக நினைக்க வைக்கிறது. அந்த மாயையிலும் ஒரு ஆனால் எழுகிறது.. .குழந்தையின் மரணத்தை பனித்துளி உலகமாகப் பார்க்க முடியவில்லை.
கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது .ஏனெனின் வைரம் மீண்டும் சாம்பலாவது விதி.
ஆனால் பூரணம் பெற்றவர்கள் இறப்பதில்லை அவர்கள் பூரணத்துவத்தில் கலந்து விடுகிறார்கள் என்கிறது இன்னொரு கவிதை. பூரணத்தில் நேரடியாக ஊடுருவுகிறார்கள் அவர்கள். ஆனால் எதற்கு இவ்வளவு அவசரம்...?
------
பின் குறிப்பு
இக்கட்டுரைகளின் முழு தமிழ் காப்புரிமை இதன் ஆசிரியருக்கே ( செந்தூரம் ஜெகதீஷ்)  உரியது. குட்டிக் கதைகள், கவிதைகள் பல்வேறு நூல்களில் இருந்து பயன்படுத்தியது.
--------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை   10
ஜென் ஹைகூ கவிதைகள்
1   குடத்துக்குள் நீரில்லை
நீருக்குள் நிலவில்லை
வானத்தில் வட்டமிடுகிறது வட்ட நிலா
- யாரோ
2. மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும்
நீ பயணம் செய்ய வேண்டும்
நனைந்த சட்டையுடன்
- இக்யு
3. இலைகள் உதிர்ந்து
ஒன்றின் மீது ஒன்று விழுகின்றன.
மழை
மழையை அடித்துத் துவைக்கிறது.
- யாரோ
4 .மாலையில் சேவல் கூவி
விடியலை அறிவிக்கிறது
நள்ளிரவில் சூரிய ஒளி தெரிகிறது
- யாரோ
5 இசைவு மிக்க நண்பனோடு
பேசப்படாத ஒரே வார்த்தை
சையனோரா
- யாரோ
6. அறிவிக்கப்படாத காதல் கசப்பானது
வெயில் காலத்தில் புதர்களிடையே
வளரும் லில்லியைப் போல்
- யாரோ
7 .வசந்த கால செர்ரி பூக்கள் தம்
மணமிழந்து விட்டன
நீ காற்று வீசுவதற்கு முன்பே
வந்திருக்க வேண்டும்
-இளவரசி சிக் ஷி
8 . வசந்த கால மழை
எல்லாமே வளர்கிறது
மேலும் அழகாக
- காகானோ சியோ
9 உன் அடங்கின குரல்
மலைகளில் அதிகமாக எதிரொலிக்கிறது.
குயிலே உன் பெயரைக் கூறு
 -அபுட்சு
10 . பூவின் மீது உள்ள பனிநீர்
சிந்தப்படும் போது
அது வெறும் நீர்
- காகானோ சியோ
11. இலையுதிர்காலத்தின் பிரகாசமான நிலவு
எத்தனை தொலைவு நான் நடந்தாலும்
மேலும் தொலைவுக்குள் செல்கிறது
அறியப்படாத ஆகாயத்தில்
-- காகானோ சியோ
12. பனிக்கால சீகல்
தன் வாழ்நாளில் அதற்கொரு வீடில்லை.
மரணத்தில் கல்லறையும் இல்லை.
- காடோ சூசன்
13. இன்னும் புத்தனாகவில்லை
இந்த பைன்மரம்
சோம்பலுடன் கனவு காண்கிறது
- இஸா
14. எங்கே போனார்கள் மனிதர்கள்?
இங்கே பூச்சிகளும்
புதர்களும்தான் உள்ளன
- இஸா
15. காட்டில் நுழையும் போது
நிலவு ஒரு  புல்லைக் கூட  அசைப்பது இல்லை.
நீரில் நுழையும் போது
ஓர் அசைவைக் கூட எழுப்பவில்லை.
- இஸா
16 .நான் என்ன அறிந்துக் கொண்டேன்?
சூனியத்தின் கடவுளுக்கு
முகம் கூட இருட்டு
- யாகூ சாய்
17 காதைச் செவிடாக்கும் அலறல்
ஒரு திருடன் என் உடலிலிருந்து
தப்பி விட்டான்
- யாகூ சாய்
18 சேகரித்தவை யாவும் குப்பை
இன்றைய போதனை இதுதான்
நிலம் , கடல்,
விழிப்பற்று நட தனியாக.
- செய்கென் சாய்
19 .அடித்தளம் இல்லாத மூங்கில் கூடையில்
நிலவை வைத்தேன்
மனமற்ற பாத்திரத்தில்
தூய காற்றை சேகரித்தேன்
- செய்கென் சாய்
20 தசாப்தமாக காட்டில் கனவு கண்டு
குளத்தின் கரை சிரி்க்கிறது
புத்தம் புதிய சிரிப்பு
- செய்கென் சாய்
21 பனி படர்ந்த வயல்களிடையே
ஒற்றைக் கோடாக
நதி
- செய்கென் சாய்
22 அழகிய புகைப்படத்தில் உள்ள
அழகான மேகம் போல
புத்தாண்டின் முதல் சூரியோதயம்
--ஷூ சாய்
-----------------------
இந்த ஜென் கவிதைகளை அலசுவோம். இவற்றிலும் அனேகமாக ஓர் இயற்கை காட்சி இருக்கிறது. ஒரு ஞானப் பாதை இருக்கிறது. ஒரு விட்டேத்தி மனம் இருக்கிறது. ஒரு கவியின் ஆன்ம விசாரம் இருக்கிறது.
மழை பெய்யாவிட்டாலும் நீ பயணம் போக வேண்டும் நனைந்த சட்டையுடன் என்றான் ஒரு கவிஞன்
பயணம் துறவிகள், ஞானிகளின் வாழ்க்கை. வாழ்க்கையை ஒரு பயணமாகவே கழித்தவர்கள் அவர்கள். ஓஷோ கூட ஆசைப்பட்டார் நான் ஒரு பயணத்தின் போது மரணம் அடைய வேண்டும் என்று.
பயணம் என்பது காடு மலை வயல் என போவது ஒரு வகை என்றால் இயற்கையுடன் இணைந்து அதனை தரிசித்து அதனை கவிதையாக்குவது ஒரு வகை. ஜென் துறவிகள் சுற்றுலாப் பயணிகள் அல்ல. அவர்கள் எப்போதும் நனைந்த சட்டையுடன் தான் பயணிக்கிறார்கள். நனைதல் பற்றிய பயம் இல்லாமல் போனால் தான் இந்த நிலை வரும்.
மழையை மழை அடிக்கிறது என்று காண்கிறார் இன்னொரு கவிஞர். மழையைப் பற்றிய ஒரு காட்சியாக மட்டும் இதை காண்பீர்களா என்ன...
நண்பனுடன் பேசப்படாத ஒரே வார்த்தை சையனோரா என்று கூறுகிறார் ஒரு ஜென் கவிஞர்.
சையனோரா என்பது ஜப்பானில் பிரிவைக் குறிக்கும். விடைபெறுதலாகும். எப்போதும் விடை பெற முடியாத ஒருவரே நண்பர்.
செர்ரிப் பூக்கள் வாசனை இழப்பதற்கு முன்பு நீ வந்திருக்க வேண்டும் என்கிறாள் தன் காதலனிடம் ஒரு காதலி, இழந்த காதலின் துன்பம் இதில் கரைந்தோடுகிறது.
குயிலின் பெயரை தெரிந்துக் கொள்ள ஒருவருக்கு ஆசை
காட்டில் எத்தனை நடந்தாலும் நிலவை எட்ட முடியவில்லை என்கிறார் இன்னொருவர். அது ஆகாயத்தில் மேலும் ஆழத்துக்குப் போய் விடுகிறது. நிலவு என்பதை இங்கே பூரணம் என்றும் ஞானம் என்றும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.
புத்தனாகாத ஒரு பைன் மரம் சோம்பல் முறிப்பதைக் காண்கிறார் இன்னொரு ஜென் பயணி
சீகலுக்கு வீடும் இல்லை கல்லறையும் இல்லை என்று அவதானிக்கிறார் இன்னொரு கவி
சூனியத்தில் கடவுளின் முகமும் இருட்டு என்கிறார் இன்னொரு கவி
காட்டில் நடந்து செல்லும் நிலவு ஒரு இலையைக் கூட அசைப்பதில்லை ஒரு நீரலையைக் கூட எழுப்புவதில்லை ...எத்தனை அற்புதமான கவிதை இது. உலக வாழ்க்கையை இப்படி கடந்து செல்கிறார்கள் ஜென் துறவிகள் அவர்களுக்கு இது ஒரு பாதை ஒரு பயணம் மட்டும் தான் இலக்கு அல்ல.
-------------------------------------









Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...