Sunday 15 July 2018

மெரீனா




ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் என்று புகழ் பெற்றது நம்ம சென்னையின் மெரீனா கடற்கரை. 
அண்மையில் புனேயில் இருந்து வந்த சில உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் மெரீனாவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள போன போது ஏற்பட்ட அனுபவம் உகந்ததாக இல்லை.
எங்கு நோக்கினும் மணல் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், எஞ்சிய உணவுகள், பாட்டில்கள், மலம் 
சிறுவயதில் மண்ணில் தேடித் தேடி கிளிஞ்சல்களைப் பொறுக்கிய நினைவு வந்தது. இனி கிளிஞ்சல்கள் கூட இருக்காது.

மும்பையின் ஜூஹூ கடற்கரையும் இதுபோலத்தான் இருந்து, ஆனால் தொடர் முயற்சியின் காரணமாக இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது என்றார் உறவினர்.
உணவகங்கள், கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு கடற்கரையின் சுத்தம் பேணப்படுகிறது. அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை அழைத்து கடற்கரையை சுத்தம் செய்ய மும்பை மாநகராட்சி நிர்வாகம் பிரச்சாரம் செய்கிறது. மாணவர்களையும் சமூக நல ஆர்வலர்களையும் இயற்கை காவலர்களையும் அழைத்து குப்பைகளை அள்ளுகிறது.
இந்த முறையை ஏன் சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை என்று தெரியவில்லை. மிகப்பெரிய திறந்தவெளி குப்பைத்தொட்டியாக காட்சியளித்த மெரீனாவை ஏக்கத்துடன் பார்த்தபடி திரும்பினேன்.
அண்மையில் ஜல்லிக்கட்டு  போன்ற இத்துப்போன பழைமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களால் போலீ்ஸ் கெடுபிடியும் அதிகமாக உள்ளது. வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிரமப்பட்டு காரை நிறுத்த இடம் பிடித்தோம்.

அங்கு வி்ற்பனை செய்யப்பட்டவற்றில் விவேகானந்தா காபி அற்புதம். ஆனால் வடமாநிலத்தவரிடம் எங்கள் கிராமத்து உணவு என பீற்றிக் கொண்டு வாங்கிக் கொடுத்த வரகு புட்டு யாரையும் கவரவில்லை. ருசியும் இல்லை விலையும் அதிகம். அரிசி புட்டு இல்லையாம். வடகு, கம்பம் போன்ற புட்டு விற்ற நபரைச் சுற்றி நூறு பேர் காத்திருந்தனர். அரை மணி நேரம் காத்திருந்து வாங்கிய கேழ்வரகு புட்டு 40 ரூபாயை தண்டமாக்கி விட்டது.

எப்படியெல்லாம் அழிக்கிறார்கள் எங்கள் மெரீனாவை.....

Saturday 14 July 2018

சந்திப்பு -கி.அ.சச்சிதானந்தம்

அஞ்சலி / சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம பார்ப்பதற்கு எளிமையாக காட்சியளிக்கும் இலக்கியவாதி அவர். மௌனியின் கதைகளை முதன் முதலாக அவர் தான் பதிப்பித்தவர். மௌனி, கநாசு போன்ற ஜாம்பவான்களுடன் நேராக பழகும் வாய்ப்பை பெற்றவர். எந்த ஒரு பெரிய மேதையும் இப்படித்தான் எளிமையாகக் காட்சியளிக்கிறார்கள். இவர்களின் எளிமையைக் கண்டு நாம் இவர்களை சாதாரண மனிதர்களாக எண்ணி ஏமாந்துவிடுகிறோம். ஆனால் இவர்கள் அசாதாரணமானவர்கள், அவர்கள் தாம் தமிழையும் இலக்கியத்தையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். சச்சிதானந்தம் அத்தகைய ஒரு எளிய மனிதர். எனக்கு எம்.வி.வெங்கட்ராமை பார்க்கும் போதும் சிசுசெல்லப்பாவை பார்க்கும் போதும் , வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோரை பார்க்கும் போதும் தோன்றியதுதான்.....சச்சிதானந்தம் போன்றோரை பார்க்கும் போதும் ஒரே அலைவரிசையில் எண்ணுவது இதுதான். அவர்களைை தொட்டு வணக்கம் சொல்ல வேண்டும்.ஏற்கனவே சச்சிதானந்தத்தை திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் பலமுறை பார்த்திருக்கிறேன். கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சிக்காக மௌனியைப் பற்றி அவரிடம் ஒரு நீண்ட பேட்டியும் எடுத்திருக்கிறேன். இம்முறை சந்தித்த போது வயதால் தளர்ந்திருந்தார். வண்டியில் உட்கார சிரமப்பட்டார். அருகில் உள்ள அச்சகத்தில் கொண்டு போய் விடச் சொன்னார். அச்சகத்தில் வங்க எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கை சுயசரிதத்தை அச்சிடக் கொடுத்தாராம். அவரே பதிப்பிக்கிறாரா என அறிய முற்பட்ட போது புத்தகம் பதிப்பித்து பட்ட கடன்களையும் , பரண்களில் அடுக்கி வைத்த புத்தகக் கட்டுகளையும் ,குடும்பத்தில் பட்ட வேதனைகளையும் சுருக்கமாக சொன்னார். வயதாயிருச்சு இனி அந்த மாதிரி தவறெல்லாம் செய்ய முடியாது என்று சிரித்தார். இப்போதுதான் பிரிண்டிங் ஆன் டிமாண்ட் சிஸ்டம் வந்துருக்கே என்றேன். ஒரு பிரதி கூட அச்சிடலாம் என்று அவருக்கு புரிய வைத்தேன். என்ன செலவாகும் என விசாரித்தார்.கிடங்குத் தெரு மறுபதிப்புக்காக நான் விசாரித்த தகவலை கூறினேன். 160 பக்கங்கள் புத்தகம் 100 பிரதிகள் எனில் 4 ஆயிரம் ரூபாய் ஆகலாம் என கூறினேன். அப்படியா ....விசாரிக்கணும் என்றார். எழுத்தாளனே பதிப்பாளனாகவும் அவனே தனது நூல்களின் சேல்ஸ்மேன் ஆகவும் வாழும் பரிதாபம் குபரா காலம் முதல் சச்சிதானந்தம் காலம் வரை மாறவே இல்லை. கொரோனாவால் 3.10.2020 காலையில் மறைந்துவிட்ட சச்சிதானந்தத்திற்கு என் மனப்பூர்வமான அஞ்சலி

Friday 6 July 2018

நடனம் ஆடினேன்

நடனம் ஆடினேன்
ஒரு பழைய பதிவு...கொரோனா காலத்தில் பலரும் நடனம் ஆடி வீடியோக்களைப் பதிவேற்றி வருவதைப் பார்க்கும் போது இது பொருந்துவதாக இருக்கிறது...
முன்பு ஒரு முறை உறவினர் திருண நிகழ்ச்சியில் பலரும் கட்டாயப்படுத்தியதன் பேரில் நடனம் ஆடினேன். வாழ்க்கையில் நான் இரண்டு முறை மட்டும் பொது இடத்தில் நடனம் ஆடியிருக்கிறேன்.வீட்டில் பலமுறை தனியாக இருக்கும் போது ஆடுவது தனி டிராக்.
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இது பொது இடத்தில் நான் ஆடிய நடனம். சில ஸ்டெப்ஸ்தான். ஆனால் நன்றாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். ஒரு அழகான பெண்ணிடம் போய் எத்தனை மதிப்பெண்கள் என கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நூற்றுக்கு நூறு என்றாள். ரொம்பவும் அதிகம்தான்.
பல்வேறு நடனங்களை நான் திரையிலும் மேடைகளிலும் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீநிதியின் கதக் நடனம், மீனாட்சி சேஷாத்திரியின் பாம்பு நடனம் , சுதா சந்திரனின் ஒற்றைக்கால்நடனம், கமல்ஹாசனின் குரூப் நடனம், மிதுன் சக்ரவர்த்தியின் டிஸ்கோ டான்ஸ், அமிதாப் பச்சனின் பங்கரா நடனம் விஜய் ஆடும் நடனம், அஜித்தின் டோலுமா டாலுமா, சிலுக்கு ஸ்மிதாவின் கிக்கேற்றும் நடனம்,ஜிமிக்கி கம்மல் நடனம் ,சின்னக் குழந்தைகளின் நடனம், குத்துப்பாட்டு நடனம், சாவு நடனம் என பார்த்தவை பல.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத் தெரியுமா
என்று சூர்யா ஆடிப்பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே என்ற சூப்பர் ஸ்டாரின் நடனமும் மிகவும் பிடிக்கும்.
பல நிஜவாழ்வில் போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரின் அதிகார நடனங்களையும் பார்த்திருக்கிறேன்.
வீட்டில் தனியாக இருக்கும் போது எனக்குப் பிடித்த ஒரு பாட்டைப் போட்டு நடனமாடுவது என் வழக்கம்.
நடனம் உற்சாகம்,மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் கே.பாலசந்தர் இயக்கிய ஏக் தூஜே கேலியே படத்தில் கமல்ஹாசனுக்கு அது துயரத்தைக் கொட்டுவதற்காக ஆடும் தெரபி.
தகிட தகிட தில்லானா என்று சலங்கை ஒலியிலும் இளையராஜா இசையில் கமல் கிணற்றின்மேல் ஏறி ஆடுவார் அல்லவா
நடனத்தைப் பற்றி ஓஷோநிறைய பேசியிருக்கிறார். அவர் கூறுவது ஆன்மாவின் நடனங்கள் பற்றி.நிஜிலன்ஸ்கி என்ற நடனக்கலைஞன் நடனமாடி ஆடி ஆடி தானே நடனமாக, நடனமும் கலைஞனும் பிரிக்க முடியாத ஒரு கட்டத்திற்குப் போய்விடுவதை விவரிப்பார்.
நண்பர் அண்ணாச்சி கவிஞர் விக்ரமாதித்தியன் தில்லாலங்கடி தில்லாலங்கடி டோய் தெம்மாங்கு பாடும் மனசைத் தொலைச்சிடாதே டோய் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.
எழுத்தாளர் சுஜாதாவிடம் அந்தக் கவிதையை காட்டிய போது வாங்கி குமுதத்தில் பிரசுரம் செய்தார்.
தெம்மாங்கு பாடும் மனசுடன் வீட்டில் தனியாக ஆடிய நடனம் தான் ஒரு மேடையில் அரங்கேறியது.
மனதில் இருந்த துன்பங்கள் ரத்தமாகவும் சீழாகவும் கண்ணீராகவும் வழிந்ததை யாரும் பார்க்கவில்லை.

Thursday 5 July 2018

படித்தது -குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

படித்தது -

குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

புலவர் தில்லை எழிலனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் புலவர் சங்கரலிங்கம். புலவர் சங்கரலிங்கம் புலமைப்பித்தனிடம் உதவியாளராக இருந்து பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நீண்ட காலம் உதவியாளராகப் பணிபுரிந்தார். சங்கரலிங்கம் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் பூங்குன்றனும் ஜெயலலிதாவிடம் பணிபுரிந்து இப்போது விசாரணை, வருமான வரி சோதனை என சோதனையான காலங்களில் இருக்கிறார்.
நிற்க.
புலவர் தில்லை எழிலன் பெரம்பூர் பிருந்தா திரையரங்கு அருகே உள்ள டான் பாஸ்கோவில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். நாங்கள் அழைத்ததன் பேரில் சில கவியரங்களில் கலந்துக் கொண்டார். மரபுக்கவிதை எழுதக்கூடியவர். இப்போது அவர் எங்கே என எனக்குத் தெரியாது.30 ஆண்டுகளாக அவர் பெயரை எங்குமே நான் கேள்விப்பட்டதில்லை.
அவர் எழுதிய குன்று நில மக்கள் எனும் புத்தகம் பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. தில்லை எழிலன் என்ற பெயரைப் பார்த்து ஆர்வமாக எடுத்தேன். 
குன்று நில மக்கள் என்பது குறிஞ்சி நில மலைப்பகுதியைச் சார்ந்து வாழ்ந்துவரும் குறவன் என்றழைக்கப்படும் ஒரு இனத்தைப்பற்றியது. மனித இனத்தின் முதல்குடியாகவும் ஆதிகுடியாகவும் தோன்றியவர்கள் இவர்களே என்கிறார் நூலாசிரியர்.
முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்ப்பெண் குறத்திதான் என்று கூறுகிறார்.மறத்தி என்பது குறப்பெண்ணே என்பது அவர் கூற்று.

நரிக்குறவர்கள் குறவர்களா என்றொரு அத்தியாயம். ஏறத்தாழ 30 ஆயிரம் நரிக்குறவர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதாக 1995 ல் வெளியான நூலில் அவர் பதிவு செய்கிறார். 

ஒளிவிளக்கு படத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏ சிங்கா ஏசிங்கி எனப்பாடி ஆடும் பாடலினால் அவர்கள் அனைவரின் வாக்குகளும்இரட்டை இலைக்கே போய்விடுகின்றன.

குறவர்கள் வேறு நரிக்குறவர்கள் வேறு என்று கூறுகிறார் ஆசிரியர்.தமிழ்க்கடவுளான முருகன் குறவரே என்றும் அகத்தியர் குறவரே என்றும் விளக்குகிறார்.ராமாயணத்தில் குகன், மகாபாரதத்தில் ஏகலைவன் உள்ளிட்டோரும் குறவர் இனத்தவரே என்பதும் ஆசிரியரின் முடிவு
குறி சொல்லும் குறவர்களின் சோதிட அறிவு போன்றவற்றையும் வேட்டைத் தொழிலையும் ஆசிரியர்விளக்குகிறார்.
நாட்டு வைத்தியத்தின் முன்னோடிகளாகவும் குறவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.அவர்களின் பச்சைக் குத்துதல். பூப்படைதல், பஞ்சாயத்து, திருமணம், மரணச்சடங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ள தில்லை எழிலன் கூடைபின்னுதல், வேட்டையாடுதல் போன்ற அவர்களின் தொழில்களையும் பட்டியலிடுகிறார். தொல்காப்பியம், திருக்குறள் ,சங்கநூல்கள் தொட்டு பாரதி வரை இலக்கியத்தில்குறவர்கள் பற்றிய பதிவுகளையும் நினைவுகூர்கிறார்.இறுதியாக குறவர்கள் பற்றிய ஆங்கிலநூல்களின் பட்டியலையும் தந்துள்ளார்.
நமது முன்னோடிகளை அறியாமல் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்று இந்நூல் உணர்த்துகிறது.


Tuesday 3 July 2018

தனியே செல்லும் பயணி

தனியே செல்லும் பயணி 

இந்த வரியை எங்கே படித்தேன் என்று தோன்றவில்லை. ஏனோ இது என் ஆழ்மனத்தில் இருந்து அடிக்கடி மேல் விளிம்புக்கு வந்து திரும்பிச் செல்கிறது. வாழ்க்கையில் நான் தனிமையில் தான் அதிககாலம் வாழ்ந்திருக்கிறேன். உறவுகள் நட்புகள்  இருந்தாலும் கூட கூட்டத்திலும் தனிமையே உணர்ந்திருக்கிறேன். அரங்குகளில் தனியாக அமர்ந்திருக்கிறேன். கிடங்குத் தெரு நாவலில் சல் அகேலா என்ற முகேஷின் பாடல் ஒன்றை நாவலின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டேன். சல் அகேலா என்றால் தனியாக செல் 

தனியாக செல் தனியாக செல் 
உன் திருவிழாக் கூட்டம் பின்னால் நின்று விட்டது
நீ தனியாக செல்

இதே போல் ஆலங்குடி சோமுவும் இரவும் வரும் பகலும் வரும் பாடலில் 
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் என எழுதியுள்ளார்.
இந்த தனிமையைப் பற்றி ஒருநெடுங்கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. இதே தலைப்பில் இக்கதையை நீங்கள் ஏதேனும் ஒரு பத்திரிகையில் படிக்க நேரிடும் போது எனக்கு நாலு வரி எழுதிப் போட மறக்காதீர்கள்.

Monday 2 July 2018

தமிழ்மணவாளனின் மகன் திருமண இலக்கிய விழா

கடந்த ஜூன் 30ம் தேதி பெரியார் திடலில் முனைவர் ம. எத்திராசு என்ற கவிஞர் தமிழ்மணவாளன் தமது மகன் விமலாதித்தன்- மணமகள் கா.நித்யகுமாரி திருமண விழாவை இலக்கிய விழாவாகவே நடத்தி விட்டார்.
வாசலில் வரவேற்கும் பேனர்களில் பெண் படைப்பாளர்களின் முகங்கள், இலக்கிய அமைப்புகளின் பட்டியல் என்றும் உள்ளே அரங்கில் ஒளித்திரையிலும் இலக்கிய எழுத்தாள திரைப்பட நண்பர்களுக்கு வரவேற்பு

வாசலிலேயே நண்பர்- கவிஞரும் கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியருமான சொர்ணபாரதி தமது வாழ்த்து மடலுடன் வரவேற்றார். உள்ளே நுழைந்தால் திருமணவிழாவா இலக்கிய விழாவா என வியப்பூட்டும் இலக்கியமுகங்கள்
சூர்யராஜன், நிமோஷிணி, இளம்பிறை, பழனிபாரதி, வே.எழிரசு, பா. உதயகண்ணன். மணிஜி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், அழகிய சிங்கர், ரவிசுப்பிரமணியம், க்ருஷாங்கினி, பாரவி, என திரும்பிய இடமெல்லாம் இலக்கிய நண்பர்கள்.
இசை கச்சேரி அருமை .பழைய விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களை சன் ஸ்ருதி இசைக்குழுவினர் வாத்தியங்களில் இசைத்து மயங்க வைத்தனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்தும் பரிசும் வழங்க நின்றிருந்த கூட்டம் தமிழ்மணவாளன் அன்புக்கு சாட்சியமாக இருந்தது. மாப்பிள்ளையுடன் கைகுலுக்கி வாழ்த்தும் போது சொன்னேன் உன் தந்தையைப் போல் நீயும் அன்பை சம்பாதித்து வை என்று.
பெரியார் திடல் திருமணம் என்பதால் அதுவும் சனிக்கிழமை மாலை என்பதால் பிரியாணி இருக்கும் எனநினைத்துவிட்டேன். மனைவியையும் விக்கியையும் அழைத்துச் செல்லவில்லை.விக்கி பிரியாணி இருந்தால் போன் பண்ணு வந்துவிடுவேன் என்றான். நான் அசைவத்தை அதிகமாக விரும்பி உண்ண மாட்டேன்.
ஆனால் திருமணத்தில் வழக்கமான சைவ உணவுதான். ருசி ஓகேதான் என்ற போதும் எனக்கு உள்ள சர்க்கரை , பல்வலி போன்ற பிரச்சினைகளால் குறைவாகத்தான் சாப்பிட்டேன்.
சூர்யராஜன் சாப்பிடாமலேயே சென்றுவிட்டார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
கடைசியில் உணவை முடித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமையும் வெத்தலையையும் ஏக்கத்துடன் பார்த்தபடி வீட்டுக்குத்திரும்பினேன்.





Sunday 1 July 2018

படித்தது -மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், சிற்பியின் ஒளிச்சிற்பம், வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்குலாப் கவிதைகள் போன்ற புத்தகங்களுக்கு முக்கிய இடம் உண்டு. எழுத்தின் பக்கமும் இலக்கியத்தின் பக்கமும் என்னை இழுத்ததில் இந்தப் புதுக்கவிதை புத்தகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. அன்றைய இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் இது போன்ற கவிதை நூல்களை கையில் வைத்திருப்பார்கள். அன்னம், அகரம், விஜயா பதிப்பகம், போன்ற பதிப்பகங்கள் இத்தகைய நூல்களைப் பதிப்பித்தன. 
மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் வந்த புதிதிலேயே வாசித்தவர்களில் நானும் ஒருவன். 
கவிஞர் எஸ். அறிவுமணி புரசைவாக்கத்துப் பேனாக்காரன் என்றொரு கவிதைத் தொகுப்பை போட்டிருந்தார். அவர் வீட்டுக்குப் போய் பார்த்த போது அன்புடன் பழகி நட்புடன் ஒட்டிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் கவிதைப் புத்தகம் போட்டாலேயே பெரிய கவிஞர் என்ற பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. அப்படி நினைத்திருந்த அறிவுமணி இப்படி ஒரு பிள்ளை மனத்துடன் இருப்பார் எனநினைக்கவில்லை.
அறிவுமணியின் உதவியால் பலரதுநட்பு  கிடைத்தது. பேராசிரியர் பெரியார்தாசன், சூர்யராஜன்,மு.நந்தா போன்றவர்களுடன் நல்லநட்புநிலை உருவானது. ஒருமுறை பிரசிடன்சி காலேஜ் அழைத்துப் போய் கவிஞர் மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினார். 
மேத்தாவை அப்போது புதுக்கவிதையின் தாத்தா என எதுகைக்காக பாராட்டுவார்கள். அந்தக் கால கவிஞர்கள் போல் அவர் பேனாவுடன் போஸ் கொடுக்கும் படங்கள் அவரை பெரிய கவிஞராக சித்தரித்தன.






மேத்தா தமது கண்ணீர் பூக்களுக்கான ஒரு விமர்சன வாசக கூட்டத்தை நடத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நானும் பங்கேற்று கண்ணீர்ப் பூக்களில் எனக்குப் பிடித்த கவிதைகளை வாசித்து கருத்துகளை முன்வைத்தேன். 
இதைத் தொடர்ந்து மாதவரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கவியரங்கில் மு.மேத்தா என்னை கவிதை பாட அழைத்தார். அதுவரை முழுதாகஒரு கவிதையைக் கூட கவிதை எனக் கூறும்படி எழுதவில்லை. மேத்தா தலைமையில் பாடப்போகிறோம் என்று ஒரு கவிதையை எழுதினேன். உருவகம் மேத்தா பாணிதான்.
எனக்கொரு அம்மா வேண்டும் என்ற அக்கவிதை தாய்க்காக ஏங்கும் ஒரு தாயில்லா பிள்ளையின் உருக்கமான குரலாக வெளிப்பட்டது.அது மேத்தாவின் உள்ளத்தைத் தொட்டது. தொடர்ந்து அறிவுமணி நடத்திய குறிஞ்சி இலக்கிய வட்டக் கூட்டத்தில் மு.மேத்தா, நா.காமராசன் , முத்துலிங்கம் போன்ற கவிஞர்கள் முன்னிலையில் கவிபாடினேன். 

இன்குலாப்புடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த போது மேத்தாவிடமிருந்தும் அவர் போன்ற கவிஞர்களிடமிருந்தும் விலக ஆரம்பித்தேன்.நாளையே தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கப் போகிறது என்று மூளைச்சலவைக்கு ஆளானேன். கம்யூனிசப் புத்தகங்கள், தீவிரமான எழுத்துகள், ரஷ்யமொழிபெயர்ப்புகள் தவிர வேறு எதையுமே படிக்கத் தோன்றவில்லை. 

என் மனைவி கைவளையல்களை கழற்றினாள் .நீங்கள் கண்ணீர்ப்பூக்களைப் படிக்கிறீர்கள் என்று மேத்தா எழுதியிருந்தார். இன்குலாப் ஒரு கூட்டத்தில் கேட்டார் உங்கள் மனைவி அடகுவைத்த வளையல்களைத் திருப்பிக் கேட்டதால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா மேத்தா ....

ஒரு கவியரங்கில் மேத்தா முன்னிலையில் சிவப்புக் கவிதை படித்த போது பழனி பாரதி என்னை ஏமாற்றி விட்டார் .ஆனால் ஜெகதீஷ் சின்னத் தீக்குச்சியாக சுட்டார் என்று பாராட்டினார்,.இன்னொரு கூட்டத்தில் எங்களுக்கு மேத்தாக்களும் வைரமுத்துகளும் தேவையில்லை மார்க்சுகளும் லெனின்களும் தான் தேவை என்று அவர் முகத்துக்கு எதிரேயே படித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு மேத்தா ஒதுங்கினார். கவிஞர் நந்தாவின் நாளை வேறு சூரியன் நூல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு அழைக்க நான், சூர்யராஜன், நந்தா மூவரும் பிரசிடன்சி கல்லூரி போய் மு.மேத்தாவை சந்தித்த போது, அதுதான் ஜெகதீஷ் இருக்காரே நான் எதற்கு என நழுவினார்.

பலபலப் பல ஆண்டுகள் கழித்து மு.மேத்தாவை தஞ்சையில் சந்தித்தேன். சுந்தர சுகன் உயிருடன் இருந்தபோது தமது தாயாரின் நினைவாக நடத்திய கூட்டத்தில் நான் கலந்துக் கொண்ட போது மு.மேத்தாவும் வந்திருந்தார். அடையாளம் கண்டு பேசினார். வயதான தோற்றத்துடன் இருந்த மேத்தா என்னைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போது நான் கம்யூனிசத்தை விட்டும் வெகு தூரம் விலகி ஓஷோவுக்கு வந்து ஓஷோவை விட்டும் வெகு தூரம் வந்துவிட்டேன். அதன் சாயையை அவர் என்முகத்திலும் பேச்சிலும் கண்டுபிடித்திருக்கக் கூடும்.

கண்ணீர்ப்  பூக்களை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன் சொல் அலங்காரங்கள் ,சின்ன சின்ன நுட்பங்கள் அப்படியே இருக்கின்றன .சின்ன வயசில் ருசித்து சாப்பிட்ட ஒரு பலகாரம் போல இன்றும் கண்ணீர்ப் பூக்கள் இனிக்கின்றன. ஆனால் அத்தகைய கவிதைகளில் இருந்தும் நான் வெகுதூரம் விலகி வந்துவிட்டேனே.தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி கவிதையை இப்போதும் ஒதுக்காமல் படிக்க முடியும்.அதே போல் செருப்புடன் ஒரு பேட்டியும் நல்ல வார்ப்புதான்.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த ஒரு நல்ல கவிதை

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்.

அக்காலத்தில் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. இக்கால கவிஞர்கள் பெண் வீட்டார் சப்பையான ஒரு பெண்ணுக்குக் கூட மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா , அரசு உத்தியோகம் இருக்கா, பேங்க் பேலன்ஸ் இருக்கா என கேட்டு செய்யும் அளப்பறைகளை எழுதினால் என்ன...

மு.மேத்தா இப்போதும் காலாவதியாகி விடவில்லை. ஆனால் அவருடைய காலத்தில் அவர் முடிசூடா மனனன்தான்.

ஆனாலும் வண்ண நிலவன் போல் மேத்தாவை நோக்கி வீசப்படும் ரோஜாக்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கட்டும்  என்று கூற ஆசைப்படுகிறேன். 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...