Saturday 3 October 2020

SPB_MGR

ஆயிரம் நிலவே வா.. 2 SPB_MGR எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி.பி.தொடர்ந்து ஏராளமான எம்.ஜி.ஆர். படங்களுக்காக தமது இனிய குரலையளித்து பல பாடல்கள் ஹிட்டாக உதவினார்.அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே பாடிய எஸ்.பி.பி. பட்டிக்காட்டு பொன்னையா, சங்கே முழங்கு போன்ற படங்களில் பாடினார் .தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் வாலி எழுதிய வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் பாடல் சூப்பர் ஹிட்டானது.வழக்கமாக எம்.ஜி.ஆர்.படத்தில் கொள்கை தத்துவப் பாடல்களை டி.எம்.எஸ்.தான் தமது கணீர் குரலால் பாடி அந்தப் பாடலை முழக்கம் ஆக்குவார்.ஆனால் இந்தப் பாட்டில் தன் தாயின் மனம் குளிர மகன் பாடுவதாக அமைந்த பாட்டுக்கு எம்.ஜி.ஆரும் மெல்லிசை மன்னரும் புத்திசாலித்தனமாக எஸ்.பி.பி.யின் மென்மையான குரலைப் பயன்படுத்தினர் .இதனால் இந்தப் பாடல் முழக்கமாக மாறாமல் மகன் தாய்க்குப் பாடிய தாலாட்டு போல கேட்போரை மயங்க வைத்தது.குறிப்பாக மற்றவர்க்கு வாழும் உள்ளம் என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ என்ற வரியை எஸ்.பி.பி.பாடிய அழகு எம்.ஜி.ஆரின் தாயன்புக்கும் தொண்டு உள்ளத்துக்கும் மகுடமாக அமைந்து விட்டது.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் படத்தின் பிற்பகுதியில் வரும் கண்ணதாசனின் அவள் ஒரு நவரச நாடகம் பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதே போன்று நேற்று இன்று நாளையில் புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடும் போது நான் தென்றல் காற்று பாடலும் எஸ்.பி.பி.யின் குரலுக்காக பெரிதும் ரசிக்கப்பட்டது .அதே படத்தில் எஸ்.ஜானகியும் எஸ்.பி.பி.யும் பாடிய அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ என்ற அவினாசி மணி எழுதிய டூயட் பாடலும் கேட்க கேட்க இனிமையானது.நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே பாடலை டி.எம் சௌந்தரராஜனுடன் எஸ்.பி.பி. பாடினார். நான் ஒரு மேடைப் பாடகன் என்ற பாட்டையும் இப்படத்தில் எஸ்.பி.பி.பாடினார்.இந்த இரண்டு பாடல்களுக்கும் எம்.ஜி.ஆர்.வாயசைக்கவில்லை.அவர் தம்பியாக படத்தில் தோன்றும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன்தான் பாடி நடித்தார். அதிலும் நாளை நமதே பாடலில் தருமம் உலகிலே இருக்கும் வரையிலே என்று எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வரியைக் கூட எஸ்.பி.பி.யைப் பாட வைத்து சந்திரமோகனுக்கு விட்டுக் கொடுத்தது எம்.ஜி.ஆரின் பெருந் தன்மை.தொடர்ந்து இதயக் கனியில் இதழே இதழே பாடலை எம்.ஜி.ஆருக்கு பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நவரத்னம் படத்தில் புலமைப்பித்தன் எழுதி வாணி ஜெயராமுடன் உங்களில் என் அண்ணாவைப் பார்க்கிறேன் பாட்டையும் பா டினார்.இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.எஸ்.வியின் மாயஜால இசையில் வாலி எழுதிய கனவு டூயட் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் மிக ஆழகாக லயித்துப் பாடினர். பாடலின் இசை சட்டென மாறி மாறி ஜாலம் செய்தது.இயற்கை யாகவே ஆணழகன் ஆன எம்.ஜி.ஆரும் அழகான இந்தி நடிகை ராதா சலூஜாவும் பலவித உடைகளிலும் செட் அரங்குகளிலும் ஆடிப் பாடிய இப்பாடல் கண்ணுக்கும் செவிக்கும் பேரின்ப பெருவிருந்து. சிறு வயதில் இப்பாடலுக்காகவே படத்தை ஏழெட்டு முறையும் அதன் பின் நூறு முறை கேட்டு ரசித்து இன்னும் கூட சலிக்கவே இல்லை. மீனவ நண்பன் படத்தில் வாணி ஜெயராமுடன் எஸ்.பி.பி.பாடிய நேரம் பௌர்ணமி நேரம் பாடலும் இனிமையானது.நல்லதை நாடு கேட்கும் படத்திலும் எம்.ஜி.ஆருக்காக மூன்று பாடல்களை எஸ்.பி.பி.பாடினார்.இப்படம் MGR முதலமைச்சர் ஆனதால் முழுமை பெறாமல் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் இப்படத்தின் எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளை தமது அவசர போலீஸ் 100 படத்தில் இணைத்தார்.பின்னர் முழுமை பெறாத நல்லதை நாடு கேட்கும் படமும் சில திரையரங்குகளில் வெளியாகி மறைந்து போனது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...