Sunday 14 August 2016

அஞ்சலி நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார் என்று தொலைபேசியில் வந்த தகவலை நம்ப முடியவில்லை. எனக்கு முத்துக்குமாரை நன்கு தெரியும்.
முத்துக்குமாரை முதன் முதலாக காஞ்சிபுரத்தில் பார்த்தேன். இலக்கிய வட்டம் வெ.நாராயணன் ( அவரும் இன்று இல்லை) ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். அது தோப்பில் முகமது மீரானின் சாய்வுநாற்காலி விமர்சனக்கூட்டம் . அதில் பேசினேன். அப்போதுதான் நா.முத்துக்குமார் அறிமுகமானார். அண்ணே உங்க கதை ஒண்ணு கல்கியில் வந்திருக்கு என்றார். அப்படியா தெரியாதே என்றபோது ஓடிப்போய் தன் காசில் கல்கியை வாங்கி வந்தார். கொடூரக் கனவுகள் பெயரில் வெளியான அந்தக் கதையை நான் தலைப்பு வேறு வைத்து என் தொகுப்பில் இணைத்திருக்கிறேன்.
அதன் பிறகு ஓரிருமுறை சென்னை இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர் கவிதையை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த போது கைகுலுக்கி வாழ்த்தினேன். தொடர்ந்து பட்டாம் பூச்சிகள் விற்பவன் என்ற கவிதை நூலை வெளியிட்டார். அவருடைய பட்டாம் பூச்சிகள் விற்பவன் வெளியீட்டு விழாவில் நான் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சு சர்ச்சைக்கு ஆளாகி அறிவுமதி போன்றவர்களுடன் முரண்பட்டு சிறிய சண்டை சர்ச்சைகளுக்குப் பிறகு நாங்கள் சமாதானமாகிப் போனோம். நாம் நண்பர்களாகவே நீடிப்போம் என்று அண்ணன் அறிவுமதி புத்தகக் கண்காட்சியில் கைகுலுக்கினார்.பின்னர் இன்னொரு முறை நண்பர் ஃபீலிக்ஸ் ஜெரால்டின் திருமண விழாவில் முத்துக்குமாரை பார்த்த போது மிகப்பிரபலமான பாடலாசிரியராகி விட்டார். ஆனாலும் அகம்பாவம் ஏதுமில்லை. கூப்பிட்ட போது என்ன அண்ணே என்று அதே பிரியத்துடன் பேச வந்தார். என் கணிப்புகள் பொய்யாகி விட்டன முத்து. நீங்க ஜெயிச்சுட்டிங்க நான் தோத்ததுல ரொம்ப சந்தோஷம். நல்லா எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்க என்று கைக்குலுக்கி பேசினேன். அவர் முகம் மலர்ந்தது. தன் விசிட்டிங் கார்டை கொடுத்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்க என்றார்.

அதன் பிறகு ஓரிரு சந்திப்புகள். ஓரிரு தொலைபேசி உரையாடல்கள். அவர் இத்தனை சிறிய வயதில் காலமாகி விடுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாக இதை நான் விரும்பவேயில்லை. நான் செத்துப் போயிருக்கலாம். வாழ்க்கையை ஒரு வெறுமையுடனும் சூன்யத்துடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.பெயர் , புகழ். அழகான குடும்பம் வெற்றி என எல்லாம் இருந்த முத்துக்குமார் சாக வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அழுகிறது. நான் செத்தால்  அதிகபட்சம் பத்து இருபது பேர்தான் உண்மையாக  அழுவார்கள்.

மிகவும் வருத்தம் தான் முத்துக்குமார் .ஏன் போய்விட்டாய் நண்பனே...





Saturday 13 August 2016

செந்தூரம்

செந்தூரம் என்றால் ஏதோ ஒரு ஊர் என்று நினைத்துக் கொண்டு என்னை சென்னைவாசி அல்ல என்று முடிவு கட்டி விட்டாராம் ஒரு நண்பர். அவர் காலச்சுவடு அலுவலகத்திலும் போய் கேட்டிருக்கிறார். செந்தூரம் என்ற ஊர் எங்கே என்று. அவர் என்னிடம் கூறிய போது இப்படியும் அறியாமையா என்று கருதினேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
செந்தூரம் கையெழுத்துப்  பத்திரிகையிலிருந்து அச்சானது. செந்தூரம் இதழில் இன்குலாப், பெரியார்தாசன், பிரபஞ்சன், எம்ஜி வல்லபன், இயக்குனர் ஜெயபாரதி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சூர்யராஜன், ஷாராஜ், வா.மு.கோமு போன்ற பலரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
 19 செந்தூரம் இதழ்கள் மற்றும் செந்தூரம் இலக்கிய வட்டத்தின் நூற்றுக்கணக்கான புத்தக வெளியீட்டுவிழாக்கள், நிகழ்ச்சிகளில் எனது பெயர் செந்தூரம் என்ற பெயருடன் ஒட்டிக் கொண்டது. இதனால் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதுவும் இருபது வருடங்களாகி விட்டது.




பல நூறு கட்டுரைகள், இரண்டு கவிதைப்புத்தகங்கள், கிடங்குத்தெரு நாவல், மாசோக்கிசம் பற்றிய மொழிபெயர்ப்பு நாவல், சிறகுப்பருவம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவும் வெளியாகி உள்ளன. மேலும் இணையத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த வலைப்பக்கத்தில் 185 க்கும் மேற்பட்ட பதிவுகளை செய்து சுமார் 21 ஆயிரம் வாசகர்களை எட்டியிருக்கிறேன்.என்னைப் பற்றிய விவரம் ஒரு சிலவே ஆயினும் கூகுள் தேடலிலும் கண்டுபிடிக்க முடியும். ஓஷோவை தீவிர வாசகர்கள் மற்றும் சிற்றிதழ் வட்டத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட முதல் நபர் நான்தான். அதே போல் சீரியஸான சினிமா சிறப்பிதழ் தயாரித்த முதல் சிறுபத்திரிகையும் செந்தூரம்தான். அதன் பின்னர் தான் சலனம் முதல் காட்சிப்பிழை வரை பல பத்திரிகைகள் தோன்றின.

முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவன் என்ற முறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயர் பதிவானது. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங்களையும் சிற்றிதழ்களின் வரலாற்றையும் 22 வாரங்களுக்கு அரைமணி நேரம் நிகழ்ச்சியாக வழங்கியிருக்கிறேன். அசோகமித்திரன், ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தன், வாமு,கோமு, மனுஷ்யபுத்திரன், வாமனன் போன்ற பலரின் பேட்டிகளையும் அதில் பதிவு செய்திருக்கிறேன்.






இனிமேல் செந்தூரம் பற்றியோ செந்தூரம் ஜெகதீஷ் பற்றியோ யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் .இதற்காகவே இந்த பதிவு .இது கூகுளில் போய் சேர்ந்து விடும.இனி தமிழில் செந்தூரம் என்று யாராவது டைப் செய்தாலே போதும் இந்த பதிவு கூகுளில் தோன்றும். 

என்னைத் தொடர்பு கொள்ள  சிருஷ்டி 6 புரசை நெடுஞ்சாலை சென்னை 6000007 என்ற முகவரிக்கு எழுதலாம். அல்லது இமெயில் மூலம் இணையலாம். jagdishshahri@gmail.com 
பேஸ்புக்கில் senthuram jagdish



Thursday 11 August 2016

எம்.ஜி.வல்லபன் எனும் ஜீனியஸ்

பாடலாசிரியர்,  பத்திரிகையாளர், இயக்குனர்
எம்.ஜி.வல்லபன் நினைவுகள்

செந்தூரம் ஜெகதீஷ்

மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் 
ஊர்வலம் போகின்றான்.....
கரும்புவில் படத்தில் ஜேசுதாஸ் பாடிய இளையராஜா இசையமைத்த இநத்ப் பாடலைக் கேட்டவர்கள் எம்.ஜி.வல்லபனை நினைத்துக் கொள்வார்கள். தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனியிடத்தைப் பெற்றவர் எம்.ஜி.வல்லபன்.
வடசென்னையின் கல்வி பெறாத ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து படித்து பட்டதாரியானவர் வல்லபன்.ஏராளமான ஆங்கில, இந்திப்படங்களைப் பார்த்து தமது ரசனையை வளர்த்துக் கொண்டார்.மாறுபட்ட திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொண்டார். நண்பர் சூர்யராஜன் அவருடன் பணியாற்றியுள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் சூர்யாவும் நானும் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த வல்லபன் சார் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். சில சமயம் நன்றாக ஆடை அணிந்து அழகாக ஹீரோ போல மிடுக்காக காட்சியளிப்பார். சில நேரம் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டையணியாத வெற்று மார்பில் ஒரு துண்டைப் போர்த்தியபடி மலையாளிகள் பாணியில் அமர்ந்து எங்களுடன் மணிக்கணக்கில் பேசுவார். பேச்சு அதிகமாக கமல்ஹாசன் மற்றும் இளையராஜா பற்றி இருக்கும். அவர் பிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். இதனால் ஆப் தி ரெக்கார்டாக பல கிசுகிசுக்களை எங்களிடம் தெரிவிப்பார். மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைக்குப் பின்னால் உள்ள குணாதிசயங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கும் .அதைப் பதிவு செய்தால் கொலை குத்து விழும். வேண்டாம்.
பேசும் படம் இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய வல்லபன், பின்னர் பிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியாக மாறினார். அந்த க் காலதத்தில் சிறுபத்திரிகைகள் சினிமாவை நிராகரித்தன. காரணம் சிறுபத்திரிகை நடத்தியவர்களுக்கு சினிமா மீது எந்த அக்கறையும அது குறித்த அறிவும் இல்லை. தமிழ்நாட்டைத் தாண்டி சினிமா எப்படி இருக்கிறது என்பதை அசோகமித்திரனைத் தவிர வேறு யாரும் எழுதியதாக நினைவில்லை. பெரிய பத்திரிகைகளில் வரும் சினிமா செய்திகளும் சரி, சினிமா பத்திரிகைகளும் சரி நடிகர் நடிகைகளின் வண்ணப்படங்களுக்கு கொடுத்த இடத்தை சினிமா தொடர்பான எழுத்தாக்கங்களுக்குத் தரவில்லை. இக்குறையை அறிந்தவரான எம்.ஜி.வல்லபன் பார்ப்பதற்காக சினிமா பத்திரிகையை நடத்தாமல் படிப்பதற்காக ஒரு பத்திரிகையாக பிலிமாலயாவை வளர்த்தார். இதனால் அவர் தனி கவனம் பெற்றார். சத்யஜித்ரே, நிமாய்கோஷ், ஷியாம் பெனகல் போன்ற இந்தியாவின் உன்னத திரைப்பட வல்லுனர்களையெல்லாம் தமது இதழ் மூலம் வல்லபன் தமிழ் வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்தார். பிலிமாலயாவில் வெளியான அவரது ஜீனியஸ் பதில்கள் பகுதி மிகவும் வரவேற்பைப் பெற்றது. இன்று பைண்டு செய்யப்பட்ட பிலிமாலயா இதழின் நான்கைந்து வால்யூம்களைப் புரட்டிப்பார்த்தால் அந்தக்காலத்தில் நல்ல சினிமாவுக்கான தாகமும் அதற்கான ஒரு பத்திரிகையை வெளியிடும் ஈடுபாடும் எம்.ஜி.வல்லபனிடம் காணக்கிடைக்கிறது.
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானையே எதிர்த்து நின்ற நக்கீரன்தான் உலகின் முதல் பத்திரிகையாளன் என்று தமது நெற்றிக்கண் நாவலில் அமரர் நா.பார்த்தசாரதி குறிப்பிட்டார்.பத்திரிகையாளனின் அடிப்படை குணமான கேள்வி எழுப்புதல் எம்.ஜி.வல்லபனிடத்தில் காணப்பட்டதில் வியப்பில்லை. அவரது கேள்வி புகழின் உச்சத்தில் இருந்த பலரின் தகுதிகளைப் பற்றியது என்பதால் சிலரை அது எரிச்சலூட்டியது. எதற்கும் அஞ்சாத துணிச்சலான கருத்துகளால் அவர் பலரது கசப்புகளுக்கும் கோபதாபங்களுக்கும் ஆளானார். ஆயினும் ப்ரீலான்ஸ் ஜர்னலிசம் (free lance  ) எனப்படும் சுதந்திரப் பத்திரிகையாளர்களை தமிழகத்தில் உருவாக்கியவர் எம்.ஜி.வல்லபன்தான். இது குறித்து திரு பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் நான் நேரில் பேசிய போது உலகப் பட விழாக்களுக்கு ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என செல்லும் வழக்கம் கொண்டவராக வல்லபன் இருந்ததை நினைவுகூர்ந்த அவர் உண்மையலி ஜீனியஸ் பதில்கள் எழுதிய ஜீனியஸ்தான் அவர் என நினைவுகூர்ந்தார். தங்கள் கட்டுரைகளை கேட்டு வாங்கிப் போட்டு பத்திரிகையின் சன்மானம் கொடுத்து சுதந்திரப் பத்திரிகையாளர்களை ஊக்குவித்ததில் எம்.ஜி.வல்லபன்தான் முதல் நபர் என்று பிலிம் நியூஸ் ஆனந்தன் கூறியுள்ளார்.








பத்திரிகைத் துறையிலிருந்து சினிமாவுக்கு சென்ற எம்.ஜி.வல்லபன் பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதினார். இளையராஜா இசையில் தர்மயுத்தம், கரும்புவில், பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம் மாறாத பூக்கள், மண்வாசனை போன்ற படங்களில் 80க்கும் மேற்பட்ட பாடல்களை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். இன்று அநதப் பாடல்களை எழுதிய அவர் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டு கங்கை அமரனோ வைரமுத்துவோ அந்தப்பாட்டை எழுதியிருக்கக்கூடும் என்று எண்ண வைக்கிறது.
தர்மயுத்தம் படத்தில் மிகவும் புகழ் பெற்ற ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பாடலை எழுதிய பிறகும் கூட ரஜினிகாந்த் தம்மை சந்திக்க மறுத்ததைக் கண்டித்து,  ரஜினியை பேட்டி எடுப்பதும் படம் எடுப்பதும் பத்திரிகையாளரின் உரிமை என்று குரல் கொடுத்தார் எம்.ஜி.வல்லபன்.எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்தபோது கூட பத்திரிகையாளர்களை தவிர்த்தது இல்லை என்பதையும் அப்போது வல்லபன் சுட்டிக்காட்டினார்.பத்திரிகையாளர்களை மதிக்காத ரஜினி அந்தப் பண்பை வளர்த்துக் கொள்ளாமல் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று அன்றே துணிச்சலோடு எழுதியவர் வல்லபன்.
மணிரத்தினம் இயக்கிய இதயகோவில் மற்றும் ஆர்.ரங்கராஜன் இயக்கிய உதயகீதம் ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் வல்லபன். இந்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமது சொந்த கதை வசனத்தில் தானே இயக்கிய தைப்பொங்கல் படமும் பிரமாதமாக பேசப்பட்டது. 
இளையராஜாவுக்கு புகழால் தலைக்கனம் அதிகரித்து வைரமுத்து அவரிடம் இருந்து விலகினார். வாலி, புலமைப்பித்தன்,நா.காமராசன், மு.மேத்தா, முத்துலிங்கம் என மற்ற பாடலாசிரியர்கள் தயவை நாட வேண்டிய நிலை இளையராஜாவுக்கு ஏற்பட்டது. கங்கை அமரனும் வல்லபனும் தொடர்ந்து இளையராஜாவுக்கு பாடல்களை எழுதினார்கள். இத்தகைய சூழலில் , இளையராஜாவின் ஆணவத்தை அடக்க புதிய இசையமைப்பாளர்களை கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் முயன்றனர். இளையராஜாவுக்கு தொடர்ந்து படங்கள் தந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் இந்தியில் உச்சத்தில் கொடி கட்டிப்பறந்த லட்சுமிகாந்த் பியாரேலாலை உயிரே உனக்காக படத்தில் கொண்டு வந்தனர். இதிலும் வல்லபன் அந்நிறுவனத்துடன் இருந்த தொடர்பால் பாடல் எழுதினார். இதே போல் அந்த காலகட்டத்தில் பாடும் வானம்பாடி, தாய் வீடு போன்ற படங்களுக்கு பப்பிலஹரி இசையமைத்தார் . மணிரத்தினமும் இளையராஜாவை கைவிட்டு ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்தார். ரோஜா மூலம் ரகுமான் உச்சத்திற்கு போன போது இளையராஜாவின் சாம்ராஜ்யம் சரியத்தொடங்கியது. இந்த நிகழ்வுகள் குறித்து அப்போது வல்லபன் எங்களுடன் மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.
ஹாலிவுட் சினிமாவில் கிளைமேக்ஸ் பற்றி சடன்பிரேக் போட்டது போன்ற முடிவுகள் என்று தமது கட்டுரையொன்றில் எம்.ஜி.வல்லபன் பதிவு செய்தார். அதே போல் அவர் வாழ்க்கைக்கும் சடன் பிரேக் போட்டது மரணம்.
2003ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் எம்.ஜி.வல்லபன் மறைந்தார். சிறிய வயதிலேயே நிகழ்ந்த அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
வல்லபன் மறைந்தாலும் அவரது புகழை கூறும் சாதனைகள் திரையுலகின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன. பன்னீரில் நனைந்த அவருடைய பாடல்கள் என்றும் அழியாப் புகழுடன் எங்கெங்கோ ஒலிக்கின்றன. வல்லபனுக்கு வினோதினி என்ற மனைவியும் அர்ச்சனா, அபிலாஷ் என்ற இரண்டு வாரிசுகளும் உள்ளனர். குடும்பத்தினரைப் பொருத்த வரை அவர் மிகவும் அன்பான மனிதராகவே இருந்தார்.
அவருடைய குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய போது, அவருடைய பாடல்களை அடையாளம் கண்டு தொகுத்து தனி எம்.பி 3 அல்லது ஆடியோ சிடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவருடைய பிலிமாலயா இதழ் தொகுப்புகளை நூலாக்கவும் எம்.ஜி.வல்லபனுடைய கட்டுரைகளையும் பேட்டிகளையும் தொகுக்கவும் வேண்டும். இந்தப் பணியில் இப்போதைக்கு சூர்யாவும் நானும் மட்டும் இறங்கியிருக்கிறோம். பல நல்ல உள்ளங்கள் நிதியுதவியுடன் ,அரிய புகைப்படங்கள், தகவல்களை தந்தும் கை கொடுக்கலாம்.

Monday 8 August 2016

உலக சினிமா - உறவுச் சிக்கல்களின் மறுபக்கம்- intimate strangers


குமுதம் தீராநதி ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை 




உலக சினிமா
உறவுச் சிக்கல்களின் மறுபக்கம்
INTIMATE STRANGERS பிரெஞ்ச் திரைப்படம் -2004
இயக்குனர்- பேட்ரிஸ் லீகானே ( patrice le conte) 
செந்தூரம் ஜெகதீஷ்


எதுவும் என்றும் மாறலாம் மனசுதானே காரணம் என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தும் படம் இது. மனதிற்குள் அறியாமல் மனிதன் போட்டு வைத்த மர்மமுடிச்சுகள் அவிழும் போது ஏற்படும் உறவுச்சிக்கல்களையும் அவற்றின் மறுபக்கத்தையும் இப்படம் சித்தரிக்கிறது.
ஆண் பெண் உறவு அந்தரங்கமானது. அன்பும் காமமும் அதன் இரண்டு பக்கங்கள். ஆண்களை நேசிக்கும் பெண்களுக்கு அது ஒரு ஏற்பாடு. வாழ்க்கைக்கான ஒரு ஒப்பந்தம். ஒரு உடன்பாடு. தனது உடலை முழுவதுமாய் ஆணுக்கு கொடுக்கும் முன்பாக பெண் தனது வாழ்நாள் பாதுகாப்பை நினைக்கிறாள். அவன் கடைசி வரை இதே அன்புடன் தன்னை நடத்துவானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுவது இயல்புதான். அப்படி அவன் நடக்காத போது உறவுகள் தொடர்கதையாகாமல் சிறுகதையாகி விடுகிறது. 
ஆணுக்கோ பெண்ணின் உறவு ஒரு கேளிக்கை. சில சமயங்களில் அது ஒரு ஆராதனை. சில சமயங்களில் அது ஒரு ஆலாபனை. சில சமயங்களில் அது  ஆண்மையின் நிறைவு. சில சமயங்களில் பிள்ளைப் பிராயத்தின் குதூகலம். அதனால்தான் இப்படத்தில் வரும் டாக்டர் மோனியர் காதலிக்கும் போது நாம் சிறுபிள்ளைகள் போல் மாறி விடுகிறோம் என்று கூறுகிறார். மற்றவர்களுக்கு அசட்டுத்தனமாகத் தெரியும் காரியங்கள் காதலர்களின் கண்களுக்கு அப்படி தெரிவதில்லை. 
கணவனை ஆழமாகக் காதலிக்கிறவள் அன்னா ( சாண்டிரின் போனாயர்) ஆனால் போதிய பொருளாதார வசதியில்லாத கணவன். இல்லாதவனை இல்லாலும் வேண்டாள் என்பதாக அவர்களின் காதலுக்கு பொருளாதாரம் தடையாக வருகிறது. அவன் வேலைக்குப் போக விரும்பவில்லை. அவள் சூட்கேஸ்கள் விற்கும் ஒரு கடையில் வேலைக்குப் போய் தேவைகளை சமாளிக்கிறாள். இருவருக்கும் இடையிலான பிளவு அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையில் இல்லாமை வந்து படுத்து விடுகிறது. இருவரையும் சேர விடாமல் பண்ணுகிறது. நான்கே வருட இல்லற வாழ்க்கையில் அவன் அவளை விட்டு விலகி விட்டான். 30 நாட்கள் தேனிலவு முடிந்தால் கணவனும் மனைவியும் சகோதர சகோதரிகளாக மாறி விடுகிறார்கள் என்பார் ஓஷோ. அவர்களின் தொடுதலில் தீ இல்லை. அனல் மூச்சுகள் இல்லை. ஆறிப்போன காபியை யார்தான் விரும்புவார்...ஒருவரில் ஒருவர் முயங்குதல், அணைத்தல், முத்தமிடுதல், உடலில் தலைமுதல் கால் வரை வருடுதல், ஆசை தீர உடலுறவு கொள்ளுதல் ஏதுமில்லாத ஒரு வெற்று இல்லறத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு ஆணின் உறவு தேவைப்படுகிறது. அவள் உடல் இளமையானது. அழகானது. அந்த அழகுக்கும் இளமைக்கும் கண்ஜாடை காட்டினால் ஆயிரம் பேர் வரிசையில் நிற்பார்கள். ஆனால் அவள் கணவனையே நேசிக்கிறாள். அவனது ஸ்பரிசத்துக்காக அதன் பழைய நினைவுகளிலேயே வாழந்துக் கொண்டிருக்கிறாள். மனது அவளுக்கு பாரமாகிறது. அழுத்துகிறது. அழ வைக்கிறது. புகை பிடிக்கப் பழகுகிறாள். அதுவும் உதவவில்லை. 
தொலைபேசி புத்தகத்தின் மஞ்சள் பக்கங்களில் மனநல நிபுணர் டாக்டர் மோனியரைப் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவரைத் தேடி அவள் செல்கிறாள். அதுதான் படத்தின் தொடக்க காட்சி.
டாக்டர் மோனியர் எந்த பிளாட்டில் வசிக்கிறார் என குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் கேட்கிறாள் அன்னா. அவர் ஆறாவது மாடியில் வசிப்பதாக கூறுகிறார் அந்தப் பெண். ஆனால் பிளாட் நம்பர் தப்பாக சொல்லி விடுகிறாள். 
ஆறாவது மாடிக்குப் போகும் அன்னா தப்பான பிளாட் நம்பரில் காலிங் பெல்லை அழுத்த ஒரு நடுத்தர வயது மனிதர் கோட்டும் சூட்டுமாக கதவைத்திறக்கிறார். அவரை டாக்டராக நினைத்து தான் அப்பாயின்ட்மென்ட் பெற்று வந்ததாக கூறி உள்ளே வருகிறாள். அவரோ ஒரு வருமான வரி தொடர்பான கணக்காளர். யாரோ வாடிக்கையாளர் என நினைக்கிறார். ஆனால் அந்தப் பெண் தன் அந்தரங்க வாழ்க்கையை மனம் திறந்து பேச ஆரம்பிக்கிறாள். நடுநடுவே அழுகிறாள். ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கம் அவள் வாய்மூலமாகவே தன் முன் வெளியாவதைக் கேட்க அவர் ஆர்வம் கொள்கிறார். தாம் டாக்டர் அல்ல என்று கூறினாலும் ஆமாம் தெராபிஸ்ட்டுகள் முறையான மருத்துவர்கள் இல்லை என தமக்கும் தெரியும் என்று கூறுகிறாள் அன்னா. அதற்குமேல் உண்மையை போட்டு உடைக்க வில்லியம் என்ற அந்த மனிதருக்கும் மனசு இல்லை.
வில்லியம் மணமாகி விவாகரத்து பெற்றவர். மனைவி வேறு ஒரு உடற்பயிற்சி ஆசிரியனுடன் உறவாடி கணவரை விட்டு பிரிந்து விட்டாள். ஆனால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசும் நண்பர்களாக நீடிக்கிறார்கள். எப்போதாவது முத்தமிடவும் புதிய காதலன் முன்னாள் கணவருக்கு அனுமதிக்கிறான்.
தமதுமாஜி மனைவியிடம் புதிதாக வந்த பெண்ணான அன்னாவைப் பற்றி கூறுகிறார் வில்லியம். அழகான பெண்ணோ என்ற லேசான பொறாமையுடனும் தமது முன்னாள் கணவர் மீண்டும் ஒரு காதல் வலையில் சிக்குவது குறித்த திருப்தியில் தனது குற்ற உணர்வை மறைப்பதற்கும் அந்த மனைவிக்கு ஒரு சந்தர்ப்பம் அது. நீயாக முதலில் உன் காதலை அந்தப் பெண்ணிடம் கூறக்கூடாது என நிபந்தனை விதிக்கிறாள். அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவளுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம் அதற்கு நீ குறுக்கே நிற்காதே என்றும் அறிவுறுத்துகிறாள்.
தொடர்ந்து அன்னாவும் வில்லியமும் உரையாடுகின்றனர். எதிரே இருப்பவன் ஒரு அந்நியன் என்ற உணர்வில்லாமல், தான் நாடி வந்த மருத்துவனும் அவன் அல்லன் என்று தெரியாமல் அவள் தன் மனதின் கதவுகளைத்திறந்து தனது உணர்வுகளைக் கொட்டுகிறாள்.பேசக்கூட தமக்கு யாருமில்லை என்றும் யாரிடமாவது மனம்திறந்து பேசாவிட்டால் தான் பைத்தியமாகி விடுவேன் என்றும் அன்னா கூறும் போது அவள் பேசுவதை மறுக்க வில்லியமால் முடிவதில்லை. தான் வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்வதில் தனது கணவனுக்கு ஆட்சேபமில்லை என்கிறாள் அன்னா. அது அவர்கள் இருவரிடையிலான புதிய உறவுக்கு பச்சைக் கொடியாக பார்க்கப்படுகிறது.
ஏன் உன் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்ற வில்லியமின் கேள்விக்கு இனி அது மிகவும தாமதமான முடிவு என்கிறாள் அன்னா. திருமணமான ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து பெறா த உறவு ஒரு சடலம் போல் வாழ்நாளெல்லாம் சுமக்கக் கூடியது என்று அன்னா உணர்த்துகிறாள்.
அவள் யாரைத் தேடி இவரிடம் வந்தாளோ அந்த உண்மையான டாக்டருடன் வில்லியம் ஆலோசிக்கிறார். டாக்டர் மோனியர் கூறுகிறார் காதலில் விழுந்துவிட்டால் அதை கடைசி வரை போய் பார்த்துவிடு....எங்கே அது கொண்டு செல்கிறது என்பதை கவனி. ஏமாற்றாதே. அதே சமயம் அதனுடன் செல்லவும் தயங்காதே. ஒரு கட்டத்தில் நீ யார் என்ற உண்மையை அவளுக்குக் கூறு. இப்போதே கூற வேண்டாம். அவள் பேச வேண்டியவற்றை பேசி முடிக்கட்டும். எந்தப் பெண்ணும் அந்நியமான ஒரு ஆணிடத்தில் தனது உள்ளத்தை திறந்து தனது அந்தரங்கத்திலும் அந்தரங்கமாக புதைந்து கிடக்கும் ரகசியங்களைப் பேச மாட்டாள். உன்னிடம் அவள் பேசுகிறாள் என்றால் உன் மீது ஒரு மரியாதை கலந்த நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை வாழ விடு. சிதைத்து விடாதே. நீயே அவளுடைய மனநோய்க்க மருந்தாக முடியும் என்கிறார் மருத்துவர்.
காதலிக்கும் போது பெண் சுகம் பித்துப்பிடிக்க வைக்கிறது. நாம் சிறுபையன்கள் போல் ஆகி விடுகிறோம். நமது வயது அந்தஸ்து யாவற்றையும் மறந்துவிடுகிறோம். ஆனால் அதுதான் காதலின் சக்தி என்று விளக்குகிறார் டாக்டர் மோனியர்.
அன்னாவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கி அவளுக்கு நல்லதொரு நண்பனாக மாறிவிடும் வில்லியம் அவ்வப்போது தனது முன்னாள் மனைவி, டாக்டர் மோனியர் ஆகியோரின் ஆலோசனைப்படி அன்னாவிடம் தனது உறவின் பாதையில் ஒவ்வொரு அடியாக முன்னே எடுத்து வைத்து செல்கிறார்.
ஒரு கட்டத்தில் அன்னாவின் கணவரையும் அவர் சந்திக்கிறார். அன்னாவுக்கும் அவள் கணவனுக்குமான உறவில் ஏதேனும் ஆனந்தம் எஞ்சியிருந்தால் அதை தான் பறித்துவிடக்கூடாது என்பதே அவரது நல்ல நோக்கம்.
ஆனால் திருமண உறவை ஒரு சடலம்போலத்தான் அதன் துர்நாற்றத்துடன்தான் அன்னா சுமந்துக் கொண்டிருக்கிறாள் என்ற தெளிவு ஏற்பட்டு அவர் தமது உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறார். ஆனால் அதற்கு முன்பு அன்னாவிடம் தான் அவள் தேடி வந்த டாக்டர் அல்ல என்பதையும் சொல்லிவிட வேண்டும்.
ஒரு நாள் சொல்லிவிடுகிறார். அன்னா கோபம் கொண்டு அவரை விட்டு பிரிந்து செல்லலாம். அவர் தன்னை ஏமாற்றியதாக வழக்குத் தொடரலாம். ஊரைக்கூட்டி அசிங்கப்படுத்தலாம். அவள் எதை செய்தாலும் சரி தான் அவளை நேசித்தது நிஜமானது. அவள் அந்தரங்கத்தினுள் சென்றது தவறுதான் என்ற போதும் சென்ற பிறகு அவள் மீதான அனுதாபத்தால் அவளை ஆழமாகக் காதலித்ததும் நிஜமானதுதான். அந்த காதலை அவள் ஏற்றாலும் சரி நிராகரித்தாலும் சரி.
அன்னை நிராகரிக்கவில்லை. அவனை நம்புவதா இல்லையா என்ற சிறிய குழப்பத்தையும் அவள் நீக்கி விடுகிறாள். இத்தனை நாட்களாக தனது கண்ணீரையும் காம உணர்வையும் ஒருவித அனுதாபத்துடன் சுண்டுவிரல் கூட தன் மீது படாமல் கண்ணியமான முறையில் கேட்டு ஆறுதல் தந்த ஒரு மகத்தான மனிதனை அவள் தன் எதிரே காண்கிறாள்.  தான் தேடி வந்தது தப்பான நபரையல்ல, சரியான நபரைத்தான் என்று அவள் உறுதி கொள்கிறாள். முதன் முறையாக வில்லியம் அவளை முத்தமிடுகிறான். இருவருக்கும் ஒரு புதிய உறவு, ஒரு புதிய உலகம் மலர்கிறது. அந்தரங்கமான இரண்டு அந்நியர்கள் ஒருவராகி சங்கமிக்கிறார்கள்.
இந்த நுணுக்கமான கதையை மிகவும் நேர்த்தியாக இயக்கியுள்ளார் பிரெஞ்ச் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பேட்ரிஸ் லீகானே. வழக்கமாக இதுபோன்ற ஆண்பெண் உறவு தொடர்பான கதைகளில் பெரிய அளவில் காட்டப்படும் படுக்கையறை நிர்வாணக்காட்சிகள் இந்தப்படத்தில் அறவே இல்லை. அப்படிப்பட்ட படம் என கற்பனையால் பார்த்தால் ஏமாற்றம்தான் எஞ்சும். உரையாடல் புரியாமல் படத்தை பாஸ்ட் பார்வர்டு செய்தாலும் படத்தின் ஜீவனை நாம் இழந்துவிடுவோம் . ஆனால் நல்ல வேளை அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி வசூலைக் குவித்தது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா போன்ற விழாக்களில் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றது. 
அன்னாவாக நடித்த நடிகை சாண்டரினா அழகோ அழகு. இருண்ட கண்களில் அவர் காட்டும் உணர்ச்சிகள் அபாரமானவை. ஹை ஹீல்ஸ் காலணிகளுடன் அவள் டாக்டரை நாடி வரும் காட்சியில் தொடங்கி அவர் வில்லியமாக நடித்த ஃபேப்ரிஸ் லூச்சினியின் மனத்தை மட்டுமல்ல நமது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறார்.
பேப்ரிசின் நடிப்பு தனித்து சொல்ல வேண்டியது. ஒரு கண்ணியமான மனிதனுக்கு கடவுள் தந்த பரிசாக அந்த காதல் இதழ் இதழாக மலர்வதை படம் முழுவதும் ஒரு அற்புதமான நறுமணத்துடன் ரசிக்க முடிகிறது.
மழலைப்பட்டாளம் படத்தில் கௌரி மனோகரியை கண்டேன் என்ற பாடலில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது போல் வயதோடு வந்தாலும் காதல் அது வயதாகி வந்தாலும் காதல் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
காதல் வந்தால் நாம் சிறுபையன்கள் போல் நமது வயதை மறந்து துள்ளித்திரிகிறோம் என்று டாக்டர் மோனியர் கூறியது உண்மைதான். மீண்டும் நமது பால்யகாலத்தையும் இளமைக்காலத்தையும் அசை போட வைக்கிறது இப்படம்.
மீண்டும் ஒரு முறை யயாதி தனது மகனிடம் வரம் கேட்கக் கூடும்.

Sunday 7 August 2016

கபாலி - சூப்பர் ஸ்டார்களின் முடிவுரையா...?

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிகிறதா...?
செந்தூரம் ஜெகதீஷ்

கபாலி படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் , தற்போது தமிழ் சினிமாவில் வசூலை வாரிக் குவிக்கும் நாயகர்களின் காலம் முடிவுக்கு வந்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம். ரஜினியே ஆனாலும் படத்தின் கதையோ திரைக்கதையோ தொய்வடைந்தால் படம் அவ்வளவுதான் என்பதை ஏற்கனவே பாபா மாதிரியான படங்கள் நமக்கு சொல்லி விட்டன.
ஒரு கதைக்கும் கதாசிரியருக்கும் யாரும் மெனக்கெடவில்லை. கதைதான் படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்ள நமது சூப்பர் ஸ்டார்களின் மனசாட்சியும் அகந்தையும் இடம் கொடுப்பதில்லை. இயக்குனர்களும் அமெச்சூர்த்தனமான சிந்தனைகளையே பெரிய காவிய கனவுகளாக கண்டுவருகின்றனர்.
எந்த ஒரு கதாசிரியரை அழைத்து திரையுலம் மரியாதை செய்திருக்கிறது? எந்த படைப்பாளியை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது.?
சுஜாதாவுக்கே தமது கதைகள் சினிமாவில் படமாக்கப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை. இப்போது சினிமாவில் எழுதிக் கொண்டிருக்கும் நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் கவிதையே ஒழங்காக எழுதத்தெரியாத பாடலாசிரியர்களுக்கும் சினிமா பற்றிய ரசனையும் அறிவும் சூன்யம்தான் என்பதைத்தான் மீண்டும்மீண்டும் தமிழ்த்திரைப்படங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சினிமாவில் புதுமைப்பித்தனும் முயற்சி செய்து தோற்றார். ஆனால் இப்போதும் சினிமாவாக்கக் கூடிய பல நல்ல கதைகள் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் உள்ளன. எப்போதோ ஒருமுறை மகேந்திரன் போன்ற இயக்குனர்கள்தாம் உதிரிப்பூக்கள் என்ற தரமான வெற்றிப்படத்தைத் தந்து கதை புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்று நேர்மையாக டைட்டில் கார்டு போடுவார்கள்.
ஜெயகாந்தன் சினிமாவிலும் பெரிதாகப் பேசப்பட்டார். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பீம்சிங் இயக்கியது என்பதால் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஜெயகாந்தன் இயக்கிய சில படங்கள் அதிக கவனம் பெறவே இல்லை. காரணம் சினிமா குறித்த தேர்ச்சியும் பயிற்சியும் ஜே.கே.வுக்கு இல்லை.
கு.ப.ரா. , க.நா.சு., லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரின் புகழ்பெற்ற கதைகள் கூட சினிமாக்கப்படவில்லை. அந்த எழுத்தாளர்களை எந்த இயக்குனரும் எந்த சூப்பர் ஸ்டாரும் மரியாதை செய்யவில்லை. அவர்களின் கதைகளை படமாக்குவது பற்றி கனவுகூட கண்டதில்லை. பாலுமகேந்திரா கதை நேரம் என தொலைக்காட்சித் தொடர் இயக்கிப் பார்த்தார். முன்னதாக இயக்குனர் ஸ்ரீதர் பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள் கதையைப் படமாக்கினார்.
கதைகளை சுட்டு சினிமா எடுக்க உதவி இயக்குனர்கள் பரபரக்கிறார்கள். சிலர் மற்றவர்களின் கதைகளையே தங்கள் கதைகளாக விற்று விடுகிறார்கள். சிலர் பாடல்களைக் கூட திருடி பிழைக்கிறார்கள். இசை பற்றி சொல்லவே வேண்டாம். இளையாராஜா கூட இசைத்திருட்டிலிருந்து தப்பவில்லை. கஸ்மே வாதே பியார் வஃபா என்ற மன்னாடேயின் உப்கார் பட இந்திப் பாடலைத்தான் ஜேசுதாசை பாட விட்டு கனவு காணும் வாழ்க்கை யாவும் என்று இளையராஜா இசைத்தார்.
கதைகள், கவிதை வரிகள், இசை என எல்லாவற்றையும் சுட்டு விடத்தான் தமிழ் சினிமா தேர்ச்சி பெற்றுள்ளது. சில நேரம் ஹாலிவுட்டிலிருந்து சில நேரம் பாலிவுட்டிலிருந்து சில நேரம் நமது அப்பாவி தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து.
அப்போது எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற இயலும்? ஷங்கர், மணிரத்னம், பாலா , பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களில் உயிர்ச்சத்து எங்கிருந்து வரும். ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும், வாலியும்  வைரமுத்துவும் பல படங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆர்.சுந்தரராஜன், பாக்யராஜ், கலைமணி, ஆர்.செல்வராஜ் போன்ற பல சிறந்த கதாசிரியர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். இவர்களையும் சினிமா சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சினிமா முதலில் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். சினிமா பார்க்க வரும் ரசிகன் முதலில் தனது சில மணி நேரங்களை சுவாரஸ்யமாகக் கழிக்கத்தான் வருகிறான். அந்த சுவாரஸ்யம் சில நேரம் ரஜினி மூலம் ,சில நேரம் இளையராஜா மூலம் சில நேரம் சந்தானம் மூலம் சிலநேரம் மணிரத்னம் மூலம் அவனுக்குக் கிடைக்கும் போது மகிழ்கிறான். இல்லையென்றால் அவன் யாரையும் பார்க்காமல் தூக்கிப் போட்டு போய்விடுகிறான்.
சினிமாவை திரையரங்கில் பார்ப்பது என்பது இப்போது ஒரு நபருக்கு 300 ரூபாய் செலவாகிறது. பாதி டிக்கட்டுக்கு போய்விடும். பார்க்கிங், ஆட்டோ, பெப்சி, பாப்கார்ன் என்று இதர செலவுகளுக்கு இந்தப் பணம் போதாது. திருட்டு சிடி மலிவானது. அதைவிட இலவசமாக டவுன்லோடு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்போனிலேயே பலர் சினிமா பார்க்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கை நாடி ரசிகனை வரவழைக்க நல்ல கதைகளும் நல்ல நட்சத்திரங்களும் நல்ல இயக்குனர்களும் இணைந்துதான் முயற்சிக்க வேண்டும். நல்ல இசையும் பாடல்களும் இருந்தால் இரண்டாவது முறையும் திரையரங்குக்கு வருவார்கள்.
இவை யாவும் இன்று குறைந்து வருகிறது. நல்ல நடிகர்களே இல்லையா என்று கேட்குமளவுக்கு நாளொரு புதுமுகம். ஒரு படம் இரண்டு படத்துடன் அவர் அம்பேல். உடலைக்காட்டும் கதாநாயகிகள் பத்து முதல் 30 படங்கள் வரை தாக்குப் பிடிக்கிறார்கள். பாடலாசிரியர்கள் ஏராளமானோர் வந்துவிட்டாலும் பாடல்களே இல்லாமல் தான் படங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒலிப்பவை எல்லாம் குத்துப்பாடல்கள் ,கானா பாடல்கள் தாம். அவை டாஸ்மாக் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் கேட்டு மகிழ முடியாதவை.
கபாலி மாதிரியான மிகப் பெரிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி ஏமாற்றத்தில் முடியும் போது சினிமாவில் சூப்பர் ஸ்டார்களின் காலம் இருக்கா இல்லையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. அடுத்து விஜய் படம் வரப்போகிறது. கமலின் விஸ்வரூபம் 2 வரப்போகிறது. அஜித்தின் படம் வரப்போகிறது. இந்தப் படங்களும் இந்த அக்னிப் பரீட்சையில் தீக்குளிக்கத்தான் வேண்டும்.
சில தயாரிப்பாளர்களின் பேராசை. இரண்டு மூன்று நாட்களிலேயே நூறு முதல் 500 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கக் கூடிய வணிகபுத்தி, திரையரங்குகளின் அடாவடித்தனம். கட்டணக் கொள்ளை. எதையும் விலை கொடுத்து வாங்கி விடத்துடிக்கும் ஐடி நிறுவனங்கள், கவர் கொடுத்தால் நாலு நட்சத்திரம் தந்து விமர்சனம் எழுதும் பத்திரிகைகள், நாளுக்கு நூறு முறை டிரைலரையும் படக்காட்சிகளையும் போட்டு பார்வையாளர்களை அதிகப்படுத்த நினைக்கும் தொலைக்காட்சிகள் என சினிமாவை எல்லோருமே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கவும் .தமிழ் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் கன்னடம் தவிர மற்ற மொழிகளிலும் ஹாலிவுட்டிலும் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.தென்இந்தியப் படங்கள் தமிழ்சினிமாக்களின் நகல்களாகவே இருக்கின்றன.
வங்காளப் படங்களும் இந்திப் படங்களும் அபூர்வமான ரசாயன மாற்றத்துக்கு ஆளாகி வருகின்றன. ரஜினியை விட பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன் இப்போது வயதான கிழவனாக ஒரு பழைய ஸ்கூட்டரை எட்டி உதைத்தபடி வில்லனிடமிருந்து அடிவாங்காமல் தப்புவதற்கு  ஒளிந்து செல்லும் சாதாரண மனிதராக நடிக்கிறார். நூற்றுக்கணக்கான படங்களில் வில்லன்களை புரட்டி எடுத்தவர்தான் அமிதாப்.ரஜினியும் கமலும் அப்படி நடிக்கத் தயாரா என்று தெரியவில்லை.
 தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு ரசிகர்களை மனநலம் பிறழ்வுடயைவர்களாக மாற்றும் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் துணிந்து நடிக்கிறார். விஜய்யும் அஜித்தும் அப்படி நடிப்பார்களா என்று தெரியவில்லை.
சத்யஜித்ரே, மிர்ணாள் சென், ரித்விக் கடக் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய வங்காள படங்கள் இன்று மெல்ல மெல்ல ஹாலிவுட் படங்களின் பாலியல், படுக்கயறைக் காட்சிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அங்கு எடுக்கப்படுவது புளுபிலிம்கள் அல்ல , மீனவர்களின் வாழ்க்கையும் கிராமப்புற பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், பெண்ணியமும்தான் இந்த திரைப்படங்களின் அடிநாதமாக உள்ளது.
சினிமாவை இரண்டு விதமாக பார்க்கலாம்.  கலையம்சம் மாறாமல் குறைந்தபட்ச வணிக சமரசங்களுடன் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள். தமிழில் இத்தகைய படங்களாக சில முன்னுதாரணங்களை சொல்ல முடியும்.
அவள் அப்படித்தான், அவர்கள், அழியாத கோலங்கள், நிழல்கள், சின்னத்தாயீ, சில நேரங்களில் சில மனிதர்கள், உதிரிப்பூக்கள்,அழகி,  சாட்டை, போன்ற படங்கள் காலம் தோறும் வந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு வகை பெரிய நட்சத்திரங்களை வைத்து வணிக ரீதியான படங்கள். இவை பொழுதுபோக்கையே பிரதான அம்சமாக கொண்டிருக்கும். இதற்கும் ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. சில நடிகர்களின் மிகச்சிறந்த சில படங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
எம்ஜிஆர் (அன்பே வா) சிவாஜி ( பாசமலர்) ரஜினி ( பாட்சா ) கமல் ( நாயகன்) விஜய்( குஷி ) அஜித் ( காதல் கோட்டை) சூர்யா ( மௌனம் பேசியதே) விக்ரம் ( ஐ) சிம்பு ( விண்ணைத்தாண்டி வருவாயா ) தனுஷ் ( காதல் கொண்டேன்) சிவகார்த்திகேயன் ( எதிர்நீச்சல் )
இந்தப் படங்களில் பொதுவான அம்சம் சிறந்த நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை ,நெளிய வைக்காத காட்சிகள், அருமையான பாடல்கள், மயக்கும் இசை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த வகைப்  படங்கள்தாம் இந்த நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. இந்த வகைப் படங்கள்தாம் இந்த நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்குகின்றன. இந்தப் படங்களில் கதைக்காகத்தான் ரசிகர்கள் இந்த நட்சத்திரங்களையும் ரசித்தார்கள்.
பல திரைப்படங்களை பார்க்கவே முடியவில்லை. மிகச்சிறந்த படங்கள் என விருது வாங்கிய படங்களும் சரி ஆகா ஓகோ என பத்திரிகைகளால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட அண்மைக்கால படங்களும் சரி, மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் சரி சகிக்கவே முடியாதபடி தான் பலபடங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. டிவிடியாக இருந்தால் ஓட்டி விரட்டி விடலாம்.
எனில் சூப்பர் ஸ்டார்களின் காலத்தைத் தக்க வைக்க ஒரு சினிமா நல்ல கதையம்சம், நல்ல நடிப்பு, நல்ல திரைக்கதை, நல்ல இசை, பாடல்கள், நல்ல இயக்குனர் ஆகியவற்றுடன் பணம் பிடுங்காத திரையிடல் தேவை. இதுதான் சூப்பர் ஸ்டார்களை சூப்பர் ஸ்டார்களாக தக்க வைக்கும். இதில் ஓரம்சம் குறைந்தாலும் அது ரஜினி படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி ரசிகர்கள் கைவிட்டு விடுவார்கள்.இதை உணர வேண்டியவர்கள் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் அவர்களை வைத்து இயக்கும் சூப்பர் இயக்குனர்களும்தான். ரசிகர்களை குறை சொல்லி பயனில்லை. நல்ல சரக்குதான் சந்தையில் விலை போகும். இது ஒரு சாதாரண வியாபாரிக்குக்கூடத் தெரியும்.

------------------------------------

கமல்ஹாசன் - கலைஞன் பாதி கடவுள் பாதி

கலைஞன் பாதி நாயகன் பாதி -கமல்ஹாசன்
செந்தூரம் ஜெகதீஷ்
கமலின் அழகான சுருள் முடியும் மீசையும் பளிச்சிடும் தோற்றமும் நடிப்பாற்றலும் அறிவார்ந்த பேச்சும் என் பால்ய காலம் தொட்டு என் கண்முன்னே நிறுத்திவிட்ட பிம்பங்கள் கலைக்க முடியாதவை. அவர் நடித்துள்ள பாத்திரங்கள் அகலாதவை.
ஆனந்த ஜோதியில் எம்ஜிஆருடன் சின்னஞ்சிறுவனாக தோன்றி தேவிகாவின் மடியில் தாலாட்டுப் பாட்டு கேட்ட அந்த சிறுவன் கமல், களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகும் போதே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற உருக்கமான சுந்தரபாகவதரின் பாட்டால் பல லட்சம் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துவிட்டார்.
கமலுக்குள் ஒரு மகத்தான கலைஞர்  இருப்பதை கண்ட இயக்குனர் கே.பாலசந்தர் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை  போன்ற படங்களின் மூலம் கமல்ஹாசனை ரசிகர்களுக்குப் பிடித்தமானவராக மாற்றினார். அது தவிர பருவகாலம், குமார விஜயம், தங்கத்தில் வைரம், பட்டிக்காட்டு ராஜா, கன்னிபூஜை ,மேல்நாட்டு மருமகள் , உணர்ச்சிகள்,  போன்ற பல தமிழ் மலையாளப் படங்களில் கமல்ஹாசன் புகழ் பெறத் தொடங்கினார். ஒல்லியான உடலுடன் அரும்பு மீசை முகத்துடன் கமல் நடித்த அந்தக்காலப் படங்களில் உருவத்தை மீறி தனது நடனத்தாலும் நடிப்பாலும் கமல் கதாநாயகனாக நடித்தவர்களை ஓரம் கட்ட தொடங்கினார்.
எனக்கு கமல் என்ற நடிகரை பிடித்ததே பட்டிக்காட்டு ராஜாவில்தான். சிவகுமார் அந்தப் படத்தின் கதாநாயகனாக படம் முழுவதும் வந்தாலும் பத்து அல்லது இருபது நிமிடங்களே வந்த கமல் மனதுக்குள் நிறைந்தார். உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் என்ற சங்கர் கணேஷ் இசையில் வாலியின் பாடலுக்கு கமல் ஆடிய போது திரையரங்கமே கொண்டாடியது.







தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களின் நாயகனாக கமல் வளர்ச்சி பெற்றார். அவர்கள், நிழல் நிஜமாகிறது, மூன்று முடிச்சு, மரோசரித்திரா, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களும் நீயா , குரு, மீண்டும் கோகிலா, ஆடுபுலி ஆட்டம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, லலிதா, கல்யாணராமன், சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் கமல்ஹாசனை முழுமையான கதாநாயகனாக மாற்றியமைத்தன. பாத்திரங்களின் தன்மையறிந்து அதற்கு புதிய பரிமாணம் தந்து நடிப்பால் அதை மெருகேற்றிய கமலின் ஆர்வமும் ஈடுபாடும் தேயாமல் வளர்ந்தது. சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, உயர்ந்தவர்கள், ராஜபார்வை, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் அவர் கலைஞராக வளர்ந்தாலும் இன்னொரு புறம் சகலகலா வல்லவன், விக்ரம், சட்டம் என் கையில், காக்கி சட்டை, காதல் பரிசு, தூங்காதே தம்பி தூங்காதே, சட்டம், சவால், உயர்ந்த உள்ளம் போன்ற படங்களில் வணிகத் தேவைக்காக அவர் மாஸ் நாயகனாகவும் வளர்ந்து வந்தார்.
மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன்,நாயகன் போன்ற படங்கள் கமலுக்கு உச்சத்தைத் தொட உதவின. தமக்கு போட்டியாகவும் சூப்பர் ஸ்டாராகவும் வளர்ந்து விட்ட ரஜினியின் வெள்ளிவிழா படங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு நடிகராக கமல் மட்டுமே நீடித்து நின்றார். அவர் காலத்தில் நடித்த சிவகுமார், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்ற மூத்த நடிகர்கள் திரைத்துறையில் இருந்தாலும் வயதாகி ஓய்வு பெறும் நிலைக்குபோனார்கள். கதாநாயகனாக அறிமுகமான விஜயகுமார், ஜெய்கணேஷ், ராஜேஷ் போன்ற பல நடிகர்கள் கூடிய சீக்கிரமே குணச்சித்திரப் பாத்திரங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது கமல் மற்றும் ரஜினியின் வளர்ச்சியால்தான்.
அதே காலகட்டத்தில்தான் அவர் இந்தியில் ஏக் தூஜே கே லியே, சனம் தேரி கசம், சாகர், ராஜ்திலக், யாத்கார், கிரப்தார் , சத்மா, ஏக் நயீ பஹேலி உள்ளிட்ட இந்திப்படங்களிலும் நடித்துவந்தார். மலையாளத்தில் ஈட்டா, சாணக்கியா , மதனோற்சவம் போன்ற படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் கன்னடத்தில் கோகிலா போன்ற படங்களிலும் நடித்தார்.
குள்ளனாக நடித்த அப்பு கதாபாத்திரமும் தெற்றுப்பல்லுடன் கூடிய கல்யாணராமன் பாத்திரமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதன் விளைவாக தமது ஒவ்வொரு படத்திலும் தோற்றத்தை மாற்றி நடிக்கலானார் கமல். தசாவதாரம் படத்தில் பல மணி நேரம் மேக்கப் போட்டு பத்து அவதாரங்களை காட்டி விட்டார் .ஆனால் இந்த மேக்கப் வியாதி பிடித்துப் போக கதாபாத்திரங்களின் அழுத்தமான உணர்வுகளை விட மேக்கப் சாதனங்களையே கமல் நம்பத்தொடங்கியதன் விளைவாக அவரது பல படங்கள் தோல்வியைத் தழுவின. அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த ஹேராம், குணா, ஆளவந்தான் போன்ற படங்கள் மண்ணைக் கவ்வின. அழகான தோற்றத்தில் நடித்த கலைஞன், சிங்காரவேலன் போன்ற படங்களும் கமல் நடிக்கவேண்டிய படங்களே அல்ல.





மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற படங்கள் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டன. இந்தியன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, அன்பே சிவம் போன்ற படங்கள் கமல் என்ற கலைஞனை நம்மிடமிருந்து பறித்துவிடாமல் பாதுகாத்தன.
சோதனைகள் சூழ்ந்த போதும் சோதனை முயற்சிகள் சோர்வுறாமல் அவர் விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களின் மூலம் கமல் தனது மாஸ் ஹீரோ ஸ்தானத்தை தக்க வைத்துக் கொண்டார். அரசியல் மற்றும் மதரீதியான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்த அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருவழியாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலையீட்டால் இந்தப் பிரச்சினை தணிந்தது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மிகச்சிறந்த கலைஞர்தான் கமல். சந்தேகமே இல்லை.நடிப்புடன், திரைக்கதை, வசனம், பாடல், கவிதை, இயக்கம் போன்ற பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கே.பாலசந்தரின் குருகுலத்தில் பயின்றதனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கே.ஜே.ஜேசுதாஸ், கண்ணதாசன் போன்றவர்களுடன் தமது படங்களை மெருகேற்றிக் கொண்ட கமல் பிற்காலத்தில் இளையராஜா, வாலி, வைரமுத்து என தமது படங்களின் தேவைக்கேற்ற கலைஞர்களை நாடினார். தற்போது அவர் கிப்ரான் போன்ற சாதாரண இசையமைப்பாளர்களைக் கூட பெரிதாக நினைக்கத்தொடங்கிவிட்டார்.
தேசிய விருதுகள். பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ ,மேஸ்ட்ரோ போன்ற பல விருதுகளையும் காதல் இளவரசன், கலைஞானி, உலகநாயகன் ,ஆஸ்கர் நாயகன் என பல பட்டங்களையும் பெற்றவர் கமல்ஹாசன் . அண்மையில் ஜெயமோகன் மகாபாரத நூல் வெளியீட்டுவிழாவில் ரசிகர்களின் கைத்தட்டல் மாறாமல் தனது இலக்கிய ஈடுபாட்டை தக்க வைத்துக் கொண்ட கமல்ஹாசனை காண முடிந்தது.
சொந்த வாழ்க்கையில் வாணி கணிபதி, சரிகா, கௌதமி என பலருடன் உறவுகளை வளர்த்து சிலவற்றை துண்டித்துக் கொண்டார். நடிகை ஸ்ரீதேவியுடன் ஜோடி சேர்ந்த காலங்களில் அவருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். ஸ்ரீப்பிரியா, ஜெயப்பிரதா, அம்பிகா போன்ற சில நடிகைகளுடன் அவர் பேர் அடிபட்டது. ஆனால் அதையெல்லாம் கடந்துவிட்டார் கமல்.
இப்போது அவர் மகள்கள் ஸ்ருதியும் அக்சராவும் திரையுலகில் கால்பதித்துவிட்டனர். ஸ்ருதி முன்னனிநடிகையாகி விட்டார். கமல்இன்றும் ஒய்வுபெறாத முன்னணி நடிகராகவே நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் ஏராளமான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்தாலும் ரஜினியின் கபாலிக்கும் கமலின் சபாஷ் நாயுடுவுக்கும் எதிர்பார்ப்புகள் சிறிதும் குறைந்துவிடவில்லை.
ஒரு பக்குவமான நடுத்தர வயதைக் கடந்து செல்லும் கமல்ஹாசனை எனக்கு இப்போதும் பிடிக்கிறது. அவர் நடித்த பாபநாசத்தைவிடவும் உத்தமவில்லன் நல்லபடம் என்பேன். ஆளவந்தான் படப்பிடிப்பின் போது நடிகை ரவீணா டாண்டனுடன் மொட்டைத் தலை பளபளக்க சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள என்.டி.டி.வி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனை தனி ஆளாக வரவேற்று அமர வைத்து சில மணித்துளிகள் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் மறையாதவை.அந்தப் படத்தின் ஆரம்பக்காட்சிக்கு ஒன்றிரண்டு வசனங்களை எழுதிக் கொடுத்ததும் நான்தான்.
யாரைப் பார்த்து பிரமித்து நாம் வளர்ந்தோமோ யாருடைய நடிப்பால் நாம் சினிமா பைத்தியமாகவே ஆகிப்போனோமோ யாரால் நமது உள்ளுணர்வையும் ரசனையையும் செதுக்கிக் கொண்டோமோ அவரை நேரி்ல் பார்க்கும் போது ஒரு எளிய ரசிகனாக நான் வாயடைத்துப் போயிருக்கிறேன்.கடவுளை நேரில் பார்த்து எந்த வரமும் கேட்காமல் வந்துவிட்ட ஒரு மனிதனை ஆத்மாநாம் என்ற கவிஞர் காட்டியிருப்பார். அனேகமாக அந்த கடவுள் கமலாகவும் அந்த பக்தன் நானாகவும் இருக்கக்கூடும்.
சினிமாவை கமல் நேசிக்கிறார். அதே போன்று சினிமாவுடன் கமலை நேசிக்கக்கூடியவன் நான். அவரது மருதநாயகம், பொன்னியின் செல்வன் கனவுகள் நனவாகுமோ இல்லையோ ...பட்டை விபூதியைப் பூசிக் கொண்டு கையில் ஒரு சிங்கப்பூர் பொம்மையுடன் ஜூனியர் ஜூனியர் என்று பாடுவாரே ஒரு துயரம் கலந்த சிரிப்புடன்...... அந்த கமல் போதும் என் போன்றவர்களுக்கு.

மணிக்கொடி இதழ்







புதையல்

மணிக்கொடி இதழ்

செந்தூரம் ஜெகதீஷ்



தமிழ் இலக்கியத்தை வணிக எழுத்துகளின் பிடியிலிருந்து மீட்டு அதை இலக்கிய வடிவில் செப்பனிட்டு  உலகத் தரத்திற்கு தமிழில் சிறுகதைகளை எழுதிய ஏராளமான படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியதால் மணிக்கொடியின் வரலாறு தனித்து நிற்கிறது.
மகாத்மா காந்தி உப்பு எடுப்பதற்காக தண்டிக்குப் பயணம் மேற்கொண்ட போது இந்திய நாட்டு சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சியின் போது 1933ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தோன்றியது மணிக்கொடி. தினசரி பத்திரிகையாக தொடங்கிய இதழை சீனிவாசன், வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகிய மூன்று பேர்  ஆங்கில பத்திரிகைகளுக்கு நிகரான நாளேடாக  நடத்த கனவு கண்டனர். அந்த இலட்சியம் பக்கம்தோறும் ஒளிவீசியது.
பாரதி பாடியது மணிக்கொடி, காந்தி ஏந்தியது மணிக்கொடி, சுதந்திரப்போராட்டத்தில் பல்லாயிரம் இளைஞர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி என்று அதன் தலையங்கம் முழங்கியது.
எட்டு பக்கங்களுடன் முதல் இதழ் வெளியானது. அதன் விலை அப்போது ஓர் அணா. அடுத்த சில ஆண்டுகளில் அது சிறுகதைக்கான இதழாக பத்திரிகை வடிவில் மாறியது. பாரதிக்குப் பின்னர் இலக்கிய மறுமலர்ச்சியில் இருந்த தேக்கத்தை உடைத்து, மணிக்கொடியால் செறிவான படைப்புகளையும் பங்களிப்பையும் அளிக்க முடிந்தது. சிறுகதை, கட்டுரை, நவீன கவிதை மற்றும் இலக்கிய விமர்சனங்களுக்கான புதிய வாசலை அது திறந்தது. அந்த வாசல் வழியாக புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம்,சிட்டி உள்ளிட்ட பல முக்கியப் படைப்பாளிகள் தமிழில் அறிமுகமாயினர்.
1934ம் ஆண்டு முதல் மணிக்கொடி இதழ் அட்டையுடன்  வார இதழாக மாறியது. அதன் உள்ளடக்கமும் மாறியது. ஆனால் அந்த இதழும் நின்று, மூன்றாவது கட்டமாக 1935ம் ஆண்டில் பி.எஸ்.ராமையாவை ஆசிரியராக கொண்டு சிறுகதைகளுக்கான இதழாக மாறியது. அத்துடன் காந்தி என்றொரு இதழும் இலவச இணைப்பாக வழங்கப்பட்டது.அதன் விலை அப்போது இரண்டு அணா.
வார இதழாக இருந்த மணிக்கொடியை கதைப் பத்திரிகையாக மாற்றி தொடர்ந்து நடத்துவது என்ற கருத்து மின்வெட்டுப் போல் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது என்றும் அந்த கணங்கள்தான் வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் வரை நிலைத்துநின்று எத்தனை நூறு பேர்களின் சிந்தனையைப் பாதிக்கப்போகிறது என்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்கே புரிந்தது என்கிறார் பி.எஸ்.ராமையா தமது மணிக்கொடி காலம் நூலி்ல்.
கல்கி, ஆனந்த விகடன் போன்ற வணிகப் பத்திரிகைகளுடன் கருத்தியல் ரீதியாக முரண்பட்ட மணிக்கொடியில் உலகத்தரத்திலான படைப்புகளை அதன் பஞ்சைப் பராரிகளான படைப்பாளிகள் எழுதிக் குவித்தனர். எந்த காலத்திலும்  எந்த எழுத்தாளரும் சாதிக்க முடியாத அளவுக்கு அந்த சாதனை அமைந்துவிட்டது.
பாவேந்தர் பாரதிதாசனும் மணி்க்கொடி எழுத்தாளர்தான்.அவர் மணிக்கொடியில்  கவிதைகள் எழுதியிருக்கிறார். பரிதி கண்டோம். பரிதி கண்டோம் என முழங்கிய தை என்ற கவிதையில்,
உயிரினில் உடலினில் ஒவ்வொரணுவிலும்
வெயிலைப் பாய்ச்சினான் விரிகதிர்த் தந்தை
பனிப்புகை பிணிவகை பயங்காட்டு சாக்காடு
இனியில்லை !பகைக்கினிமேல் உதை விழும் போன்ற எழுச்சி மிக்க வரிகளுடன் பாரதிதாசன் எழுதினார் என்பதை தமது ஆய்வு நூலி்ல்  எடுத்துரைக்கிறார் பேராசிரியர் க.உமா மகேஸ்வரி.
வணிக ரீதியான இலக்கியச் சூழலுக்கு மாற்றாக தீவிரமான இலக்கிய இயக்கத்தை மணிக்கொடி எழுத்தாளர்கள் உருவாக்கினர்.
"கதை எழுதியவர்களுக்கு மணிக்கொடி ஒரு ரூபாய் கூட சன்மானம் கொடுக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் அதில் எழுதியவர்கள் விகடனுக்கு எழுத விரும்ப மாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். இரண்டு பத்திரிகைகளும் இலக்கிய சிந்தனை, மதிப்பு, தரங்களில் வெவ்வேறு எல்லைகளில் இருந்தன " என்றும் பி.எஸ்.ராமையா குறிப்பிடுகிறார்.
லா.ச.ரா. , தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற எழுத்தாளர்களும் மணிக்கொடியில் எழுதியவர்கள்தாம். மணிக்கொடிக்காக நிதி திரட்ட நவயுகம் பிரசுராலயம் என்ற பதிப்பகத்தையும் மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடங்கினர். ஆனால் எத்தனையோ முயற்சிகளும் பலனளிக்காமல் எல்லோரும் வறுமையில் தள்ளாடினர். பாரதியைப் போலவே புதுமைப்பித்தனும் குபராவும் வறுமைக்கு மத்தியில் தமிழை மேன்மைப்படுத்திவிட்டு மறைந்தனர். அதற்கு முன்பாக 1938ம் ஆண்டிலேயே மணிக்கொடி  தனது ஆயுளை முடித்துக் கொண்டது.
இந்த சில வருடங்களில் அதன் சாதனை இன்று வரை நீடிக்கிறது. அம்மைக்காலம் வரை வணிக ரீதியான இதழ்களுக்கும் தீவிர இலக்கியத்தை நாடுவோருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்துவந்தது. வணிக இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்கும் இடையிலான முரண், இடைவெளி, கருத்தியல் வேறுபாடு யாவுமே மணிக்கொடி வளர்த்த மரபு தான் எனலாம்.
ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று குமுதம் தீராநதியையும் விகடன் தடம் என்ற இதழையும் தீவிர இலக்கியத்திற்காக நடத்திக் கொண்டிருக்கின்றன. சிறுபத்திரிகைகளில் மட்டும் எழுதிய தீவிர எழுத்தாளர்கள் பலரும் பெரிய பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.  பயணம் தொடர்ந்தாலும் பாதையும் இலக்குகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. எனினும் அசலான படைப்பாளிகளின் மங்காத தோற்றத்துடன் மறையாத ஒரு நினைவாக நம் முன் நின்றுக் கொண்டிருக்கிறது மணிக்கொடி காலம்.
-------------------

கு.ப.ராஜகோபாலன் கதைகள்

புதையல்

கு.ப.ராஜகோபாலன் கதைகள் 
செந்தூரம் ஜெகதீஷ்


மணிக்கொடி தந்த கும்பகோணம் எழுத்தாளர்களில் முக்கியமானவர் கு.ப.ரா.அவர் சிறப்பாசிரியராக இருந்து வெளியிட்ட கிராம ஊழியன், சாலிவாஹணன் நடத்திய கலாமோகினி ஆகிய இதழ்களிலும் அவர் கதைகள் எழுதினார். 
புதுமைப்பித்தனைப் போலவே அவரும் 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தார். முப்பது வயதுக்கு மேல் கதைகள் எழுத ஆரம்பித்த அவர் பத்தாண்டுகளில் பத்து தலைமுறைக்கும் மேலாக நீடிக்க கூடிய கதைகளை எழுதிவிட்டார்.
குடும்ப உறவுகளின் உளவியல் சிக்கல்களை கு.ப.ரா போல் சொன்னவர்கள் யாருமில்லை. 1902ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏதோ ஒரு தேதியில் பிறந்த கு.ப.ரா.வின் பெற்றோர் பட்டாபிராமய்யர், ஜானகி அம்மாள்.
1918ம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரியில் சேரும் போது தந்தை காலமானார். குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு. அந்த நிலையிலும் அவர் கல்லூரியில் படித்து வந்தார். திருச்சிக்கு வந்த கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை நேரில் கேட்ட பாதிப்பி்ல் எழுத ஆரம்பித்தார் கு.ப.ரா. ஆர்வத்தால் அவர் வங்க மொழியையும் கற்றுக் கொண்டார்.
கு.ப.ராவுக்கு ந.பிச்சமூர்த்தியின் நட்பு கிடைத்ததும் இருவரும் இரட்டையர்கள் எனுமளவுக்கு எங்கும் ஒன்றாக காணப்பட்டனர். 24 வயதில் மணமுடித்த ராஜகோபாலனுக்கு அம்மணி மனைவியாக வாய்த்தார்.
தாலுகா அலுவலகத்தில்  ஏழாண்டுகள் பணியாற்றிய கு.ப.ராவுக்கு இக்காலத்தில் மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. கண் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தமது ரெவின்யு இன்ஸ்பெக்டர் பணியை இழந்து தமது சகோதரியும் எழுத்தாளருமான கு.ப.சேது அம்மாளுடன் சேர்ந்து கதைகளை எழுதத் தொடங்கினார். அப்போது சிகிச்சைக்குப் பிறகு அவர் பார்வையை திரும்பப் பெற்றார். ஆனால் வேலையை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவி்ல்லை.
பின்னர் எழுத்தாளர் சிட்டி அவருக்காக வானொலியில் ஒரு வேலையை முயற்சித்த போதும் எழுத்தை நம்பி வாழும் முடிவுடன் சென்னைக்கு வந்தார் கு.ப.ராஜகோபாலன்.
அங்கு அவர் தனது நண்பர்களான ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா உள்ளிட்டோருடன் தமது எழுத்துப் பணியை மேற்கொண்டார். 
முழு நேர எழுத்தாளனாக வாழும் மனிதருக்கு அது ஒரு தற்கொலைக்கு சமமாக இருந்தது. துன்பமும் போராட்டமுமாக இருந்த வாழ்க்கையால் அவர் சோர்வடையவில்லை. மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, ஹனுமான், கலா மோகினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களி்ல் கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.வானொலியில் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.வீட்டின் திண்ணையில் புத்தகம் விற்று குடும்பத்திற்கு அன்னம் சம்பாதித்தார்.
பாரதி மகாகவியா என்று சர்ச்சை அப்போது இலக்கிய உலகில் பொங்கியது. புதுமைப்பித்தன், ந,பிச்சமூர்த்தி, கு.ப.ரா, வ.ரா ஆகியோர் தனித்தனியாக பாரதி மகாகவிதான் என வரிந்துக் கட்டிக் கொண்டு குரல் கொடுத்தார்கள். இதை சவாலாக ஏற்று கு.ப.ராவும் சிட்டியும் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் பாரதியின் கண்ணன் பாடல்களை வைத்து எழுதினார்கள். அது பின்னர் ஒரே புத்தகமாக வெளியானது. தொடர்ந்து பாரதி சங்கம் நிறுவிய மணிக்கொடி எழுத்தாளர்கள் பாரதி மகாகவிதான் என நிறுவினார்கள். இன்று நாம் மகாகவி பாரதி என்றழைக்க காரணம் இந்த மணிக்கொடி எழுத்தாளர்கள்தான்.
79 சிறுகதைகள், சில நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என கு.ப.ராவின் படைப்புகள் தற்போது எட்டு தொகுப்பு நூல்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவை ஒரேமுழுத் தொகுப்பாகவும் வந்துள்ளன.
ஆயினும் சிறுகதைகளில்தான் கு.ப.ராவின் ஆளுமை பிரகாசி்க்கிறது. ராஜகோபாலனின் உற்ற தோழராக விளங்கிய கரிச்சான் குஞ்சு கு.ப.ராவின் கதைகள் பற்றி விரிவாக ரசித்து எழுதியுள்ளார். மிகவும் சாதாரண மனிதர்களைப் பற்றித்தான் கு.ப.ரா எழுதியிருக்கிறார். ஆனால் மிகவும் அசாதாரணமான மனநிலைகளை அவர் தமது கதைகளில் சித்தரித்துள்ளார். சமுத்திரத்தில் புயலை எழுப்பும் மனித உள்ளங்களை கு.ப.ரா சித்தரித்ததாக கூறும் கரிச்சான் குஞ்சு, கு.ப.ராவின் பாத்திரங்கள் தஞ்சை மாவட்டத்தின் காவிரிக் கரையோர மக்கள் என்பதை எடுத்துரைக்கிறார். அவரது கதாபாத்திரங்களின் கஷ்டங்கள், வாழ்வின் நெருடலில் அவர்கள் தவிக்கும் தவிப்பை,வடிக்கும் கண்ணீரை, புலம்பும் புலம்பல்களை தனது குரலை உயர்த்தாத வண்ணம் கு.ப.ரா தமது இலக்கியச்சிறப்பு வாய்ந்த பேரமைதியில் சித்தரித்தார் என்று கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.
கு.ப.ரா.வின் கதைகள் உருவ அமைதியும் உளவியல் ரீதியான உள்ளடக்கமும் கொண்டவை. தமிழ்இலக்கிய மறுமலர்ச்சியின் காலம் என்று புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி ஆகியோர் எழுதிய காலத்தைத்தான் இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். 
கு.ப.ராவின் கதைகளில் ஆற்றாமை, பன்னைச் செங்கான், சிறிது வெளிச்சம், கனகாம்பரம், நூருன்னிசா, விடியுமா, மோகினி போன்ற கதைகள் இன்றும் அதன் அழகோடு மிளிருகின்றன. பெண்களின் மன இயல்புகளை மையமாக வைத்து எழுதியவர் கு.ப.ரா. அவர் கதைகள் மூலம் நம் நாட்டு பெண்களுக்கு அநீதி இழைத்து விட்டார் என்று சக எழுத்தாளரான ந.சிதம்பர சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த கு.ப.ரா. " நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப்பற்றி்த் தான் எழுதுகிறேன்  என்பது தான் குற்றச்சாட்டு "என்று குறிப்பிடுகிறார்.
" நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரையிலும் என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் எங்கே திரும்பினாலும் அவைதாம் கண்ணில் படுகின்றன"என்று கு.ப.ரா. கூறியதாக சிட்டி சிறிது வெளிச்சம் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
சிறிது வெளிச்சம் கதையில் கு.ப.ரா கையாண்ட பிரச்சினை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு. இதனால் மனைவியுடன் நெருங்கும் அண்டை வீட்டு இளைஞன். சாவித்திரிக்கும் அவள் கணவனுக்கும் இடையே நடைபெறும் சண்டையில்  பக்கத்து வீட்டு இளைஞன் துணிந்து தலையிடுகிறான். கோழைதான் பெண்டாட்டியை அடிப்பான் என்று கண்டிக்க கணவன் கோபத்துடன் சென்று விடுகிறான். அழகான அந்த மனைவி சாவித்திரி ஆறுதல் தேடி அவனிடமே அடைக்கலமாகிறாள். இந்த சிறிது வெளிச்சம் போதும் என் வாழ்க்கைக்கு என்று சாவித்திரி கூறுகிறாள். கடைசியில் அந்த வெளிச்சத்தாலும் அவளை காப்பாற்ற முடியவில்லை.
இதே போன்று ஆற்றாமை கதையிலும் பெண்ணின் மன உணர்வை சித்தரிப்பதில் கு.ப.ரா அபாரமாக வெற்றி பெறுகிறார். கணவனும் மனைவியும் ஒன்று கூடி மகிழ்வதை பொறுக்காத தனிமையில் துணை இல்லாத ஒரு பெண்ணின் ஆற்றாமையை இக்கதை சித்தரிக்கிறது. கடைசியில் வீட்டுக்கு வரும் ஒருவரை படுக்கையறை கதவைத் தட்ட வைத்து விடுகிறாள்.அதிலொரு குரூர திருப்தி அவளுக்கு. அந்நியன் முன் அரைகுறை ஆடையுடன் நின்ற மனைவியைக் கண்டு கணவன் கோபம் கொள்ள இருவருக்கும் இடையே சண்டை மூண்டு விடுகிறது. அன்றைய இன்ப இரவைஅவர்களிடமிருந்து தட்டிப் பறித்து விட்ட குரூர திருப்தியுடன்  திருப்திதானா பேயே என்று அந்த தனிமை மங்கை அழுவதுடன் கதை முடிகிறது.








மேலோட்டாமாக பார்த்தால் பாலியல் பிறழ்வு, ஏக்கத்தைக் கொண்ட கதைகளாக இருப்பினும்  கு.ப.ராவே கதையின் கதை என்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல் காந்தத் துண்டுதான் இழுக்கக் கூடிய  பல சிறிய இரும்புத்துண்டுகளைப் போலவே சில நிகழ்ச்சிகளை தமது கதைகள் ஆகர்ஷித்துக் கொள்வதாக கூறுகிறார்.
1944ம் ஆண்டில் ஏப்ரல் 27ம் தேதி நோயால் அவதியுற்ற கு.ப.ராஜகோபாலன் காலமானார். கடைசியாக தி.ஜானகிராமனிடம் ஒருவாய் தண்ணீர் கேட்டு குடித்த பி்ன் உயிர் துறந்தார். இது பற்றி தமது வழிகாட்டி என்ற கட்டுரையில் குறிப்பிடும் தி.ஜானகிராமன், கடைசி ஒரு வார காலம் தன் மனதுக்குள் இருள் சூழ்ந்து இருந்தது என்கிறார்.கு.ப.ராவின் உயிர் பற்றி ஒரு அச்சமும் ஏக்கமும் வயிற்றி்ல் நமநமவென்று கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்ததாக ஞாபகம்...என் தகப்பனார் என் மனைவி இருவரிடமும்தான் நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன் .கரிச்சான் குஞ்சுவும் என்னோடு சேர்ந்து அழுதுக் கொண்டிருந்தான் என்று தி.ஜானகிராமன் குறிப்பிடுகிறார். ராஜகோபாலன் கிடந்த கிடையும் பட்ட சித்ரவதையும் ஒரு அநிச்சயத்தையும் கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன என்று தனது வேதனையைக் கூறுகிறார் தி.ஜானகிராமன்.
உள்ளடக்கம் தான் கதையின் உருவ அமைதியை தீர்மானிக்கிறது என்று நம்பிக்கை உடையவர் கு.ப.ரா. எழுதும்போது உரிய இடம் வந்ததும் பேனா நின்று விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய பேனா அப்படி ஒரு கணத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டது. 

ரவிச்சந்திரன் -கள்ளம் இல்லாத பிள்ளை நிலா




கலை நிலவு  ரவிச்சந்திரன் 
கள்ளம் இல்லாத பிள்ளை நிலா...

செந்தூரம் ஜெகதீஷ்


மிகக்குறைந்த நடிகர்களே ரசிகர்கள் மனங்களில் பார்த்தவுடன் பிடித்துப் போகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த வரிசையில் தனித்து ஒளி வீசியவர் நடிகர் ரவிச்சந்திரன்.
சிறுவயது முதலே நான் ரவிச்சந்திரனின் ரசிகன். மூன்றெழுத்து,நான், ரங்கராட்டினம், சபதம், போன்ற ரவிச்சந்திரனின் படங்களை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.அவர் நடித்த முதல் படம் காதலிக்க நேரமில்லை.இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனுக்காக பலரை வரவழைத்திருந்தார். அப்போது அலுவலகத்தில் இயக்குனர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் ஒரு வாலிபர் மட்டும் கால் மேல் கால் போட்டு சிகரெட் ஊதிக்கொண்டிருந்தான். இயக்குனரை அவன் கவனிக்கவில்லை. ஆனால் இயக்குனர் அவனை கவனித்துவிட்டார். விஸ்வநாதன் வேலை வேண்டும் என்று ஆடிப்பாட திமிரும் ஈகோவும் மிக்க ஸ்டைலான ஒரு ஹீரோ ஸ்ரீதருக்கு கிடைத்துவிட்டார்.
ரவிச்சந்திரன் ஜெயலலிதாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். குமரிப்பெண்,நான், மூன்றெழுத்து, ஆகிய படங்கள் நினைவில் நிற்பவை. பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக் கோழி, ஆடு பார்க்கலாம் ஆடு, போதுமோ இந்த இடம் போன்ற பாடல் காட்சிகளில் மிகவும் ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தினார் ரவிச்சந்திரன். இன்றைய ஜெயலலிதாவை நினைத்து இத்தனை ஆளுமை மிக்க ஒரு பெண்மணியை துப்பாக்கியைக் காட்டி ஆடு பார்க்கலாம் ஆடு என நாயகன் ஒருவன் ஆட்டி வைப்பதை அவர் கட்சியினர் உட்பட யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனாலும் ஒரு பெண்ணிடம் போகும் போது சாட்டையுடன் போ என்ற ஆணாதிக்க மொழியில் நீட்சே கூட விதிவிலக்கு இல்லைதானே.
ரவிச்சந்திரனின் ஆண்திமிர் மிக்க தோரணையும் ஸ்டைலும் அலாதியானது. அறிந்தோ அறியாமலோ அவர் நடிப்பில் அது பாலின் மீதான ஆடையைப் போல் படர்ந்துவிட்டது. ஜெய்சங்கர் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்ட போதும் எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும்தான் நின்றார்கள். 
உத்தரவின்றி உள்ளே வா ரவிச்சந்திரனின் அற்புதமான படங்களில் ஒன்று. கோபு பாபு வசனம் எழுதி சிவி ராஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படம் முழு நீள நகைச்சுவை படம். தயாரிப்பாளர் ஸ்ரீதர் தான்.
ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய மூவரும் ஒரே பெண்ணை காதலிக்கும் கதை. நாயகி காஞ்சனா. இந்தப்படத்தில் மெல்லிய சேலையில் லோ ஹிப் கட்டி காஞ்சனா மிக அழகாக இருப்பார். விஸ்வநாதனிடமிருந்து பிரிந்த டி.கே.ராமமூர்ததி இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதினார்.
மூன்று பேரும் கதாநாயகியை நினைத்து பாடும் ஒரு டூயட் பாடல் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா.....இந்தப் பாடலை தொடக்கத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவார். முதலில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடனமாடுவார். ஆனால் அவருக்கு வாய்ஸ் கிடையாது. பல்லவியும் முதல் சரணமும் எல்,ஆர்.ஈஸ்வரியே பாடிவிடுவார். ஆனால் மூர்த்திக்கு புதர் மறைவில் காஞ்சனாவுக்கு முத்தம் கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது.
நாகேஷ் தொடாமலே டூயட் பாடுவார். ஒரு சங்கீத வித்வானைப் போல் நடையுடை பாவனையை அற்புதமாக வெளிப்படுத்துவார் நாகேஷ்... அவருடைய பகுதிக்கு டி.எம்.சௌந்திரராஜன் குரல்
பூமியில் மானுட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண....என்று பாடி நாகேஷ் சென்று மறைவார். இதுவரை பரதநாட்டிய உடையிலும் சேலையிலும் நடித்த காஞ்சனா அடுத்துமாடர்ன் பெண்ணாக அழகான சல்வார் குர்தா அணிந்து வருவார். ரவிச்சந்திரனும் மிக ஸ்டையான உடையுடன் இளமை பொங்க தானேதான் காஞ்சனாவுக்குப் பொருத்தமான ஜோடி என்பதைப் போல் அழகாக நடனமாடுவார்....அவருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் இளமை பொங்கும் குரல்...
கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ...என்று ரவிச்சந்திரன் பாடியாடும் அழகுக்காகவே அந்தப் படத்தை பித்து பிடித்தவன் போல் சிறுவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். ரவிச்சந்திரனுக்கு வெறும் எஸ்.பி.பி ஹம்மிங் மட்டுமே கொடுத்த மற்றொரு பாடலான காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாட்டிலும் ரவிச்சந்திரனின் உடல்மொழி அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது.மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி என்ற பாட்டும் ரசிகர்களை கொள்ளை கொண்டது.
இப்படி ரொமாண்டிசத்தில் திரைவெளியில் புதுக்கவிதையை வடித்த ரவிச்சந்திரன் அதே கண்கள் படத்தில்  பலரை கொலை செய்யும் மர்ம வில்லனை விரட்டி கண்டு பிடிக்கும்  பாத்திரத்திலும் ரசிகர்களை கவர்ந்தார். புகுந்தவீடு, மாலதி, காவியத்தலைவி, பத்துமாத பந்தம் போன்ற குடும்ப பாங்கான படங்களிலும் ரவிச்சந்திரன் தனித்து தெரிந்தார். 
ஜெய்சங்கருடன் ரவிச்சந்திரன் சில படங்களில் இணைந்து நடித்தார். இதில் கே.பாலசந்தர் இயக்கிய நான்கு சுவர்கள் படமும் ஒன்று .இந்தப்படத்தில் சதா சண்டை போடும் ரவிச்சந்திரனையும் ஜெய்சங்கரையும் இருவரின் தாய் கைவிலங்குப் பூட்டி விடுவார். இருவரும் கைவிலங்குடனே சண்டை போடுவதும் ரவிச்சந்திரன் ஓ மைனா என பாடுவதும் ரசிகர்களின் கொண்டாட்டமாக அமைந்துவிட்டது.
காதல் ஜோதி அண்ணாவின் கதை வசனத்தில் உருவான கதை. இதிலும் ரவிச்சந்திரனுடன் ஜெய்சங்கர் நடித்தார். ரவிச்சந்திரனுக்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி தந்து பாடிய சாட்டை கையில் எடுத்து என்ற பாடலுக்காக பலமுறை தியேட்டருக்கு ஓடிய நினைவுகள் இன்றும்உள்ளன. முறுக்கிய மீசையுடன் முரட்டுத்தனமும் மென்மையும் கலந்த அந்த பாத்திரம் அவருக்கு அழகாய் பொருந்திப் போனது. 
நிமிர்ந்து நில், எதிரிகள் ஜாக்கிரதை, மீண்டும் வாழ்வேன், பம்பாய்மெயில் போன்ற ஆக்சன் படங்களிலும் ரவிச்சந்திரன் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
தமது வயதான காலத்தில் மகனுக்காக இயக்குனராகவும் மாறினார் ரவிச்சந்திரன். ஆனாலும் அவர் நடித்த ஊமை விழிகள் படத்தில் குதிரை வண்டியி்ல் பெண்களை விரட்டும் அந்த முரட்டு வில்லன் பாத்திரத்தை மிகவும் ரசித்தோம் அல்லவா...
71 வயதி்ல் உடல் செயலிழந்து மரணம் அடைந்தார் ரவிச்சந்திரன். அவருக்கு கலைநிலவு, கலைஞர் திலகம் என்றெல்லாம் பட்டங்கள் ரசிகர்களால் வழங்கப்பட்டன. மலேசியாவில் பிறந்த அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்தார்.
இன்றைய தலைமுறையினருக்கு ரவிச்சந்திரனின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தியாளர் தம்பிராஜா போன்ற பல நண்பர்களுடன் நான் பேசும் போதெல்லாம் நாங்கள் அதிகமாகப் பேசுவதே ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் பற்றித்தான்.
ஓரளவுக்கு ரவிச்சந்திரன் நடித்த பெரும்பாலான படங்கள் டிவிடி வடிவில் கிடைக்கின்றன. ஆனால் நாம் தொலைக்காட்சியில் போடும் படங்களை மட்டும் ஓசியில் பார்க்க பழகிவிட்டோம். அல்லது திருட்டு சிடியில் புதுப்படங்களைப் பார்ப்போம். இதுபோன்ற ஜீவன் மிக்க கலைஞர்களின் அபாரமான காலகட்டத்தை கண்முன் கொண்டு வருவதற்கு தனிப்பட்ட தேடலும் தனி டிவிடி கலெக்சனும் மிக அவசியம் என்பதை நான் நிதர்சனமாக புரிந்துக கொண்டிருக்கிறேன்.
நிலவு தேய்ந்தாலும் மறைவதில்லை.
------------------------------------------------------

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...