Tuesday 25 August 2015

அரிதினும் அரிது கேள் 17 பித்தென்று சிரிப்பது உள்நினைவு......

ஒரு தலைராகம் படத்தை எத்தனையோ முறை பார்த்திருப்பேன்.எனது வயதில் உள்ள பலரும் அந்தப் படத்தை பலமுறை பார்த்திருப்பார்கள்.





புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்களுக்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவே மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி , ஜெய்சங்கர்,முத்துராமன்,சிவகுமார் என யாராவது ஒருவரே நாயகனாக இருக்க வேண்டும். அல்லது மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர் என மிகப்பெரிய டைரக்டர் படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டருக்கு செல்வார்கள் ரசிகர்கள். இப்போது கண்ட கழுதையும் நடிக்கலாம், கண்ட நாயும் டைரக்டராகிவிடலாம். திறமையான இளைஞர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சாட்டை, எதிர்நீச்சல், தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,  போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன.
ஒருதலை ராகம் படத்தில் அனைவரும் புதுமுகங்கள், ஹீரோ சங்கர் மலையாள நடிகர். நடிகை ரூபா கன்னட நடிகை.






கதைவசனம் பாடல்கள்,இசை என பல துறைகளை கைப்பற்றிய டி.ராஜேந்தர் யார் என்றே யாருக்கும் தெரியாது. இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகரும் புதியவர்கள். தயாரிப்பாளர் இவர்களை நம்பி படம் எடுத்தது ஆச்சரியம்தான், அப்போது இளையராஜா கொடி கட்டி பறக்கத் தொடங்கிய காலம். எம்.எஸ்.வியும் தன் பங்குக்கு உச்சத்தில் இருந்தார். இதில் டி.,ராஜேந்தரின் இசை சக்கைப் போடு போட்டதுதான் இப்படத்திற்கு முதல் வெற்றிக்கான காரணமாகி விட்டது.

லீனா மீனா கீதா ராதே ரேகா என பெயர்களைப் பட்டியலிட்டு முதல் பாடல் ஒலித்த போதே தியேட்டரில் விசில் பறந்தது.
கூடையிலே கருவாடு என்ற பாடு அரவாணிகள் பாடுவதாக அமைந்தது. மலேசியா வாசுதேவன் அதை அற்புதமாக பாடியிருந்தார்.
வாசமில்லா மலரிது என்ற எஸ்.பி.பியின் பாடல் இடைவேளைக்கு முன் வந்த போது மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்

அதற்குப் பின்னர் 4 பாடல்கள் இடம் பெற்றன. கடவுள் வாழும் கோவிலிலே பாடலை பாடிய ஜெயச்சந்திரன் பிரமாதமான அழுத்தம் தந்து ரசிகர்களை கசிந்துருக வைத்தார்.
இது குழந்தை பாடும் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி இனிய தாலாட்டுக் கவிதை ஒன்றை வாசித்தார். டி,ஆர் படித்த தமிழ் அவருக்கு கை கொடுத்தது




இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

நடைமறந்த கால்கள்தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்
வடம் இழந்த தேர் அது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்.
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணைக் கண்டு உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இதையடுத்து டி.எம்.எஸ். பாடிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. நான் ஒரு ராசியில்லா ராஜா செம ஹிட்டான பாட்டு என்றாலும் இறுதிப்பாட்டான என் கதை முடியும் நேரமிது பாடல்தான் என் உள்ளத்தில்இடம் பிடித்த அற்புதமான பாடல்,

என் கதை முடியும் நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் இல்லமிது
அணையே இல்லா வெள்ளமிது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது-அது
இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது.

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே-அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன்
உருவாய் எரிவது என் மனது


பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில்
பேதையும் வரைந்தாள் சில கோடு
பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன்
வித்தொன்று போட்டது அவள் உறவு
ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறந்திடும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

இந்த படம் வந்த போது முதல்நாளி்ல் பார்த்து வந்தவன் என் பால்ய ஸ்நேகிதன் ரமேஷ். எனது உறவுக்கார பையன்தான். என் வயதுதான். இருவரும் நிறைய படங்கள் பார்ப்போம். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போக என்னையும் புரசைவாக்கம் ராக்சி தியேட்டருக்கு அழைத்துப் போனான்,( இப்போது அந்த இடத்தில்தான் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறது) பல முறை பித்துப்பிடித்தது போல் இந்தப் படத்தை நாங்கள் பார்த்தோம்,


சங்கர் பெல்பாட்டம் பேண்ட், ஏகப்பட்ட தலைமுடி என இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்திப் போனார்.






ரூபா ஒரு அற்புதம். உடல் முழுவதும் சேலையால் மூடிக் கொண்டு கண்களாலேயே தனது காதலையும் தவிப்பையும் வெளிப்படுத்தினார்.





சந்திரசேகர் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து ஒரு ஜோடிப் புறாவின் கதை சொல்லி மாணவர்களை உருகி அழ வைத்தார்.தும்புவின் காமெடியையும் ரசித்தார்கள்.

இப்படத்தின் மூலம் டி,ராஜேந்தர் ஸ்டாராகி விட்டார். அவர் அடுத்து இயக்கிய வசந்த அழைப்புகள், ரயில் பயணங்கள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி, மைதிலி என்னைக் காதலி போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கும் திரையிசைக்கும் வரப்பிரசாதமாக அமைந்தன. ஆனால் உயிருள்ள வரை உஷாவுக்கு பிறகு அவர் மச்சி அவ துப்பினா எச்சி என தடம்புரண்டு விட்டார்.இன்று வரை அவரை டண்டணக்கா எனத்தான் கிண்டலடிக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத் தெரிந்த ராஜேந்தர் ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது என எழுதத் தெரிந்தவர். பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு என மயக்க தெரிந்தவர்







பின்குறிப்பு
படங்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படவில்லை. இணையத்தில் கிடைத்தவையே. அதற்குரியவர்களுக்கு நன்றி.


Sunday 23 August 2015

சந்திப்பு 3 - சூர்யராஜன்

சூர்யராஜனுடன் எனதுநட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவது.இது எனக்கே ஆச்சரியம். என்னுடன் ஒருவராவது இத்தனை காலம் தொடர்ந்து பிரியாமல், அதே பிரியத்துடன் இருக்கிறாரே என்று.





எண்பதுகளின் தொடக்கத்தில் நான் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பணி புரிந்துக் கொண்டிருந்தேன். கதை, கவிதைகளில் ஆர்வம் இருந்தது .ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என்னுடைய சில கவிதைகள் தாய், சாவி, முத்தாரம், தினமலர் போன்ற சில இதழ்களில் பிரசுரமாகியிருந்தன. அப்போது வைரமுத்து திருத்தி எழுதிய தீர்ப்புகளும் வைகறை மேகங்களும் வெளியிட்டிருந்தார். மு.மேத்தாவின் கண்ணீர் பூக்களும் சிற்பியின் ஒளிச்சிற்பமும் இன்குலாப் கவிதைகளும் , நா.காமராசனின் கருப்பு மலர்களும் அப்துல்ரகுமானின் பால்வீதியும் மீராவின் கனவுகள், கற்பனைகள், காகிதங்களும் பிரபலமான கவிதைத் தொகுப்புகளாக விளங்கின. நான் ஏராளமான கவிதை நூல்களை வாங்கி்ப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் எஸ்,அறிவுமணியின் கவிதைகள் அப்போது மனதை கவர்ந்தன. அவர் புரசைவாக்கத்தில் இருந்ததால் மிகவும் நெருக்கமானவர் போல் தோன்றினார். எளிதாக பார்க்க முடியும் போல பட்டது. அப்போது நாங்கள் இருந்த வாடகை வீட்டின் கூடத்திலேயே அவ்வப்போது இலக்கியக்கூட்டங்கள் நடத்துவோம், ஏழெட்டு நண்பர்கள் வருவார்கள். புலவர் சங்கரலிங்கம்( அவர் மகன் பூங்குன்றன்தான் இப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிச் செயலர்)
டி.ஆர்.சுதா, லீலாவதி, சீதா, நரசிம்ம மூர்த்தி, சேகர் என எனது நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்தது.

அப்போது ஒரு கூட்டத்தை பெரிதாக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலகத்தின் சிறிய அறையை வாடகைக்குப் பிடித்தோம். கவிதை வாசிப்போர் பட்டியலும் தயார். அப்போது தலைமை ஏற்க யாரை அழைப்பது என யோசித்த போது உடனடியாக அறிவுமணியின் பெயர் நினைவில் எழுந்தது. அவர் வீட்டுக்கே போய் விட்டேன். ரத்தினசபாபதி தெருவில் சிறிய அறையில் இருந்த அறிவுமணி உடனடியாக கூட்டத்திற்கு வர ஒப்புக் கொண்டார்,அடுத்த சில நாட்களில் அவர் இனிமையான நண்பராகி விட்டார். அவர் மூலம் எனக்கு பல நண்பர்கள் வாய்த்தனர். அதில் முக்கியமானவர்கள் சூர்யராஜன், நந்தா, பேராசிரியர் பெரியார்தாசன்.

சூர்யாவும் நந்தாவும் இரட்டையர்கள் போல் எங்கும் ஒன்றாகவே காணப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அபாரமான திறமைசாலிகள்,பேச்சில் வல்லவர்கள், ஆழமான படி்பபாளிகள். அற்புதமான படைப்பாளர்கள்.

அப்போது திரைப்பட முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எனக்கும் திரைப்பட ஆர்வம் இருந்தபடியால் அவர்களுடன் நெருங்கிப் பழகினேன், சில மாதங்களில் என் வாழ்வில் என்றும் நீங்காத இடத்தை இருவரும் பெற்று விட்டனர்

சூர்யாவுடன் என் நட்பு இறுக்கமானது. அடுத்தவரின் மூச்சுக்காற்றை அழுத்தாத அளவுக்கு இறுக்கமும் சுதந்திரமும் மிக்கது. பல மகிழ்ச்சியான மற்றும் துயரமான தருணங்களில் சூர்யாவுடன் தான் நான் இருந்திருக்கிறேன். இன்றும் அவர்தான் என் நண்பர்கள் வரிசையில முதலிடத்தில் இருக்கிறார்,

சூர்யாவுக்கும் எனக்கும் இன்னொரு நண்பர் உடன்பிறவா சகோதரனாக வந்து இணைந்தார். அவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி இணைந்த இன்னொருவர் மறைந்த பாடலாசிரியர் எம்ஜி வல்லபன்

சூர்யாவுக்கு சினிமா, இலக்கியம் இரண்டிலும் நல்ல பரிச்சயம். பரிச்சயம் என்பதை விட அனுபவம் என்றும் அனுபவம் என்பதை விட ஆழமான அனுபூதி என்றும் கூறலாம், மூச்சாக சுவாசித்தார். அவரிடம் நான் பல அற்புதமான பழக்கங்களை கற்றுக்கொண்டேன். படிப்பது, படம் பார்ப்பது என்ற அம்சங்கள் இன்றுவரை என் வாழ்வில் பிரிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் சூர்யாதான்,

சூர்யாவின் தாய் எனக்கொரு தாய் போலத்தான் இருந்தார். சில சங்கடமான சூழல்களால் அவர் வீட்டிற்கு அதிகமாக செல்ல முடியாத போதும் பார்க்கும் போதெல்லாம் என்னை குற்ற உணர்வால் தவிக்க வைத்தார். தன் மகனை நல்ல ஆளாக்கி பார்க்க அவர் துடித்த துடிப்பு ஓரளவுக்கு என் மூலம் நிறைவேறியதால் அவர் முகம் முழுவதும் ஒளிவீசியது. எனக்கும் திருப்தியாக இருந்தது.ஆனால் அவர் மறைந்து விட்ட போது நான் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டேன்.

சூர்யாவின் குடும்பம் எனக்கு அந்நியமானதல்ல. அவர்கள் யாவரும் ஏதோ ஒரு இனம் புரியாத ரத்த உறவுகள் போல தான் இன்றும் தோன்றுகிறது. அத்தனை தூரம் நாங்கள் பழகியிருக்கிறோம் , சூர்யாவின் சில பழக்க வழக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பல முறை கருத்தியல் ரீதியாக அவர் எனக்கு எதிராகப் பேசிய போதும் நான் ஒருபோதும் அவரை விலக்க நினைத்ததில்லை. விலகவும் நினைக்கவில்லை,

சூர்யா என்ற மனிதரைப் பற்றி பலவித மாறுபட்ட அபிப்ராயங்களை கேட்டிருக்கிறேன். யாரும் அவர் திறமையையும் நல்ல உள்ளத்தையும் மறுக்கவில்லை. அதைமட்டும்தான் அவரிடம் நான் எதிர்பார்த்து செல்கிறேன்,

சூர்யாவைப் பற்றி எழுத இந்த இடம் போதாது. ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால் நல்ல நட்புக்கு நூற்றுக்கணக்கான சொற்களால் ஆராதனை செய்வதை விட ஒரு துளி கண்ணீராலும் ஒரு சிறு புன்னகையாலும் ஆராதிப்பதில் நம்பிக்கை உடையவன் நான். இதுபோதும்.















Saturday 22 August 2015

சந்திப்பு 2 பாலுமகேந்திரா

இயக்குனர் பாலுமகேந்திரா மீது அதிகமாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அவர் சிறந்த கேமராமேன், மூன்றாம் பிறை என்ற நல்லதொரு படத்தை இயக்கியிருந்தார். அவ்வளவுதான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு. ஆனால் முள்ளும்மலரும் மாதிரியான படங்களில் அவர் கேமராவின் அழகு சாதாரண ரசிகனான என்னை பிரமிக்க வைத்தது. நடிகர்-நடிகைகள் அத்தனை அழகாக இருந்தார்கள், கருப்பான ரஜினி கூட களையாக இருந்தார்.
பாலுமகேந்திரா மீதான மதிப்பு கூடாமல் போனது ஏன் என எண்ணினால் அவர் இயக்கிய அனேகமான படங்கள் சற்று மிகையாகப் பாராட்டப்பட்டு விட்ட மீடியம் படங்கள்தாம். இன்னொரு முக்கிய விஷயம் ஷோபாவின் தற்கொலை.






இந்த பிம்பங்களை உதறி பாலுமகேந்திராவையும் நல்லதொரு திரைக்கலைஞராக மனது ஏற்கப்பழகியிருந்தது. அழியாத கோலங்கள், வீடு, மறுபடியும் போன்ற படங்கள் மூலம் தன்னை தனித்துவம் வாய்ந்த ஒருவராக பாலுமகேந்திரா பதிவு செய்திருந்தார்.
அவரை முதல்முறை சந்தித்தது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது தியாகராய நகரில் கோமல் ஸ்வாமிநாதனின் சுபமங்களா சார்பில் கூட்டம் ஒன்றுநடைபெற்றது.இதில் கலந்துக் கொள்ள என் வீட்டில் தங்கியிருந்த ஜெயமோகனுடன் சென்றேன். அப்போது கோவையில் லில்லி தேவசகாயம் பெயரில் விருதுகள் அளிக்கப்பட்டன. இன்குலாப்புக்கு விருது கொடுத்ததால் தாம் அந்த விருதை வாங்க மாட்டேன் என ஜெயமோகன் மறுத்திருந்தார். இதனால் அவர் பலரின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார்.
இக்கூட்டத்தில் ஜெயமோகன் பேசும் போது அறிவுமதி போன்ற சிலர் அவர் மீது பாய்ந்தனர். கடும் வாக்குவாதம் கைகலப்பாக முடியக் கூடிய சூழல். ஜெயமோகனை அழைத்து அல்லது இழுத்து நான் வெளியே வந்துவிட்டேன். அப்போது ஒரு கார் வந்து எங்களை ஏற்றிக் கொண்டது. அந்தக் கார் பாலு மகேந்திராவின் கார்தான். அறிவுமதி அவர் உதவியாளராக இருந்தார். அறிவுமதி பேசுவது தப்பு என பாலு மகேந்திரா கூறினார். யூ ஷூட் பி வெரி கேர்புல் என ஜெயமோகனுக்கு அறிவுரை கூறினார்.நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 -ல் குங்குமம் வார இதழில் நான் பணியாற்ற நேர்ந்த போது, பாலுமகேந்திராவை பேட்டி எடுக்க விரும்பினேன். காரணம் அவர் தமிழ்த்திரைப்படங்களைப் பாதுகாக்க புனே திரைப்படப் பயிற்சி மையம் போல் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஒரு கருத்தை ஒரு கூட்டத்தில் கூறியதாக புதிய பார்வை இதழில் வெளியான ஒரு செய்திதான் அவரை சந்திக்கத் தூண்டியது. இதழின் பொறுப்பாசிரியர் திரு. முருகன் அவர்கள் அனுமதியளித்ததும் பாலு சாரின் வீட்டுக்குப் போனேன்.
சாலி கிராமத்தில் முதன்முதலாக அந்த வீட்டு வாசலில்மிதித்த போது வாசல் திறந்திருந்தது. நடிப்பு பயிற்சிக்காக அங்கு வந்த சிலர் வெளியே வந்தார்கள் .சார் இருக்காரா எனக் கேட்டேன், இருப்பதாக கூறினார்கள். காத்திருந்தேன். அவர் உதவியாளர் ஒருவர் வந்து விவரம் கேட்டார், பத்திரிகை பேட்டிக்காக வந்திருப்பதாக சொன்னேன். 5 நிமிடங்களில் வெளியே வாசல் அருகே வந்து நின்ற பாலுமகேந்திரா உங்களை யார் உள்ளே விட்டது பேட்டியெல்லாம்கிடையாது போய்ட்டு வாங்க என விரட்ட ஆரம்பித்தார். எனக்கு அவமதிப்பாகவும் மரியாதைக் குறைவாகவும் பட்டது. வாழ்க்கையில் ஆயிரமாயிரம் புறக்கணிப்புகளும் விரட்டுதல்களும் சந்தித்தவன் தான்நான். ஆனால் காரணமே இல்லாமல் நான் யார் எனக்கூட தெரியாமல் இப்படி பேசுகிறாரே என கோபம். சில சமயம் நான் பாலுமகேந்திராவை விட பெரிய கலைஞன் என எண்ணிக் கொள்வேன். அப்படித்தான் அன்றும் தோன்றியது.
சார் நான் எழுத்தாளன், சிற்றிதழாளன், என் நாவலுக்காக தேசிய விருது வாங்கியிருக்கேன், நீங்க நேசிக்கும் அதே சினிமாவை நானும் வெறித்தனமா நேசிச்சு அத்தனை உலகப் படங்களையும் பார்த்திருக்கிறேன். இயக்குனர் மகேந்திரனே என்னைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் என என்னைப் பற்றி வார்த்தைகளை வீசியதும் சற்று கூர்மையாக என்னைப் பார்த்து அமைதியானார் பாலுமகேந்திரா, ஜெயமோகனுடன் காரில் ஏற்றிச் சென்ற சம்பவத்தையும் நினைவுகூர்ந்தேன். உள்ளே வாங்க என்று அழைத்துச் சென்று அமர வைத்து சாரி என்றார்.
ஒரு படைப்பாளிக்கு அவர் தரும் மரியாதை அவர் மீதான மதிப்பை உயர்த்தியது. பேட்டிக்காக வருபவர்கள் தம்மீது அவதூறுகளை இறைத்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். ஏழு ஆண்டுகளாக பத்திரிகைக்கு பேட்டி தரவில்லை என்றும் கூறினார். எனக்காக குங்குமம் இதழில் பேட்டியளிக்க ஒப்புக் கொண்டார். கேள்விகளை தாளில் எழுதிக் கொடுத்தேன். தேநீர் வரவழைத்து உபசரித்து அனுப்பி வைத்தார். மீண்டும் சாரி என்றார்

மறுநாள் போன போது பதில்களை எழுதி வைத்திருந்தார். அப்போதும் அமர வைத்து பிச்சமூர்த்தி புதுமைப்பித்தன் பற்றி சிறிது நேரம் பேசினார். தமிழ் இலக்கியச் சூழல் பற்றி நான் கூறியவற்றை ஆர்வமாக கேட்டார்.

அந்த சிறப்பான பேட்டி குங்குமம் இதழில் பிரசுரமானது. அப்புறம் பாலு மகேந்திரா காலமாகிவிட்டார் என்று பத்திரிகையில் படித்த போது சாலி கிராமம் ஓடத்தான் கால்கள் துடித்தன. ஆயினும் வழக்கமாக மரண வேளைகளில் இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்து விடுவேன். இறந்த நபர் எனக்குள் வாழ்பவராக இருப்பதே இதன்முதன்மையான காரணம்


பாலுமகேந்திராவும் அழுத்தமாக என் மனதுக்குள் இடம் பிடித்துக் கொண்டார். அவருக்குள் இருந்த ஒரு மென்மையான மனிதன், உணர்ச்சிகரமான ஒரு கலைஞன், தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு சாதனையாளன் இருந்ததை நான் புரிந்துக் கொண்டேன். கலை மீதான அவருடைய ஈடுபாடு ஒரு துளிக்கூட சந்தேகம் எழாத வகையில் நிஜமானது.

அவர் எனக்களித்த பேட்டி.........
காத்திருக்கவும் பதிவு செய்கிறேன்.




















Thursday 20 August 2015

சந்திப்பு 1 சுந்தர ராமசாமி


எழுத்தாளர் சுந்தர ராமசாமியை எனக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தவர் நண்பரும் விமர்சகருமான திரு வேதசகாயகுமார்.அப்போதே சுந்தரராமிசாமிக்கு சிற்றிதழ்களில் மட்டும் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த என் பெயர் தெரிந்திருந்தது என்பது எனக்கு ஆச்சரியம் .தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் எனது மாமாவின் நிறுவனத்திற்காக விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி சுடிதார். நைட்டி சாம்பிள்களுடன் ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஊர் ஊராகப் போகும் நாட்களில் ஓய்வு நேரத்தில் எழுத்தாளர்களையும் பழைய புத்தகக் கடைகளையும் திரையரங்குகளையும் நாடிச் செல்வது வழக்கமாக இருந்தது. மனதுக்கு அதில்தான் மகிழ்ச்சி கிடைத்தது.கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. திருப்பதிக்கே போனாலும் சாமி கும்பிடாமல்தான் திரும்பி வருவேன்.
நாகர்கோவிலில் வேதசகாயகுமாரைப் பார்க்கவும் போனேன். அவர் எனக்கு ஏற்கனவே சில நண்பர்கள் மூலம் பாலக்காட்டு சித்தூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அறிமுகம் ஆகியிருந்தார். தமிழில் இலக்கிய விமர்சனம் என்ற அடர்த்தியான சிறிய புத்தகத்தை எழுதியிருந்தார்.அவர் மீது இயல்பாகவே மதிப்பு இருந்தது. அவர் வீட்டில் என்னை உபசரித்து காலை உணவருந்த வைத்து, அவர் தான் சுந்தர ராமசாமி வீட்டுக்கு அழைத்துப் போனார். அதுவரை சுந்தர ராமசாமி என்பவர் என் ஆதர்ச எழுத்தாளராக ஏதோ ஒரு கனவு தேசத்தில் வாழ்பவராகத்தான் தோன்றினார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்து தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த நாவல் இதுதான் என்று கூவித்திரிந்துக் கொண்டிருந்தேன். பசுவய்யா கவிதைகள், சுந்தரராமசாமியின் பல சிறுகதைகள், கட்டுரைகள், அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழ்கள் என நிறையப் படித்திருந்தேன். அப்போது அவர் தசராவின் கணையாழி இதழில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருந்தார். இளையராஜா பாடல்கள் பற்றியும் அவர் அதில் எழுதியதாக நினைவு, நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் ஒரு டூயட் பாடலை சிலாகித்தும் குறிப்பிட்டிருந்தார்.  இத்தகைய சூழலில் அவரை நான் சந்திக்க சென்றேன். முதலில் கண்ணன் வரவேற்றார். அவரது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கேதான் முதன் முதலாக சு.ராவை பார்த்தேன். ஒரு வெள்ளை சட்டையோ ஜிப்பாவோ அணிந்து வேட்டி கட்டியிருந்தார். வெண்தாடி, கண்ணாடி, சிரிக்கும் முகம் ஆழ்ந்து நோக்கும் கண்கள், அன்பு கனிந்த பேச்சு வாங்க ஜெகதீஷ் என மலர்ந்து வரவேற்றது இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

வேதசகாயகுமார் போன பிறகும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பேசினார். தமிழ் இலக்கியச்சூழல் பற்றியே அதிகமாக பேச்சு இருந்தது. கோவையிலிருந்து வந்ததால் கோவை ஞானி பற்றிவிசாரித்தார். சென்னை வாழ்க்கை எப்படி எனக் கேட்டார். ஜி.நாகராஜன் பற்றிய தமது அனுபவங்களை விவரித்தார். சிற்றிதழ்களில் புதிதாக எழுதுபவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் கேட்டார். நானும் ஷாராஜ், வாமு கோமு போன்ற சில பெயர்களை அவரிடம் கூறினேன். தஞ்சை ப்ரகாஷ் பற்றியும் குறிப்பிட்டேன். ஜெயமோகன் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஜெயமோகன் தருமபுரியில் அல்லது திருப்பத்தூரில் இருந்தார்.

சுந்தர ராமசாமியுடன் கநாசு பற்றி பேசும்போது அவரது மொழிபெயர்ப்புகள் மிகவும் அவசரகதியில் மூலத்திலிருந்து விலகிச் செல்வதை சுட்டிக் காட்டினேன். இது அவரை ஆழமாக யோசிக்க வைத்தது. ஒப்புக் கொள்வது போலும் மறுப்பது போலவும் இருவிதமான பாவனைகளை அவர் வெளிப்படுத்தினார். நீங்க சொல்வது உண்மையாயிருக்கலாம். நீங்க நிறையப் படிக்கிறீங்க....ஆனாலும் ஜெகதீஷ், கநாசு மொழிபெயர்ப்பதற்காக தேர்வு செய்த படைப்புகள் யாவும் தமிழுக்கு கட்டாயம் வரவேண்டிய படைப்புகள்தானே. அவரைத் தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்யவில்லையே என தமது நண்பருக்காக சு.ரா வாதாடியதும் நான் மேற்கொண்டு விவாதிக்காமல் ஆமோதித்தேன்.
தமிழில் மூலப்பிரதியையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை கூட வந்ததில்லையே எனக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. கடைசியில் தமது கணையாழி பதில்கள் பற்றி கேட்டார். அய்யா அதை நிறுத்தி விடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். முன்னே இருந்த கணையாழிக்கு மதிப்பு இருந்தது. இப்ப இருக்கிற கணையாழிக்கு அந்த தராதரமே இல்லை. அதில் எழுதுவது உங்களுக்குத்தான் கௌரவக்குறைவு என்றேன். அப்படியா என சிரித்தார். அடுத்த மூன்று அல்லது நான்குமாதங்களில் சுந்தர ராமசாமி பதில்கள் பகுதி நிறுத்தப்பட்டது.

அன்றிரவு கண்ணன் தமது குடும்பத்தினருடன் ஒரு காரில் அழைத்துச் சென்று ஒரு மிகப்பெரிய உணவு விடுதியில் அற்புதமான விருந்து வைத்தார். கேட்டால் தமக்கு திருமண நாள் என்றார். வாழ்த்தி வந்து விட்டேன்

சுந்தர ராமசாமி கதைகள் தொகுப்பில் இல்லாத ஒரு கதை அப்போது என்னிடம் இருந்தது. அந்தக் கதையின் பெயர் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது கல்கி தீபாவளி மலரில் வந்தது. அதன் பிரதியை அனுப்பும்படி சுரா கேட்டுக் கொண்டார். அதை அனுப்பிய போது அக்கதை தன்னிடம் இல்லை எனக்கூறி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை தமது அடுத்த தொகுப்பில் இணைத்துக் கொண்டார். ஆனால் கதையைத் தேடித்தந்ததாக அவர் வேறு ஒருவரின் பெயரை போட்டிருந்தார். என் பெயர் ஏன் விடுபட்டது என இன்று வரை எனக்குத் தெரியாது.

பின்னர் ஒருமுறை சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள காஞ்சி ஓட்டலில் சுராவின் இல்ல திருமண விழாவுக்காக போயிருந்த போது அவரைப் பார்த்தேன் .ஆனால் பேச இயலவில்லை. தங்கர்பச்சான் உட்பட ஏராளமான நண்பர்களும் அங்கு இருந்தனர்.

பின்னர் சென்னையில் ஆதம்பாக்கத்தில தமது உறவினர் வீட்டிற்கு சு.ரா வந்திருந்த போதும் அவரை நேரில் பார்த்து சந்தித்துப் பேசியிருக்கிறேன். மூன்றாவது முறை நண்பர் ஜெயமோகனுக்காக சொல்புதிது இதழ் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த போது, ஜெயகாந்தன் அவர்களையும் சுந்தர ராமசாமி அவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். சு.ராவை அழைத்து வரும் பொறுப்பை ஜெயமோகன் ஏற்றுக் கொண்டார்.(அப்போது அவர் மாற்றலாகி தக்கலை சென்று விட்டார். )

ஜெயகாந்தனை நண்பர் அன்புவுடன் சந்தித்த போது உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒரு பைசா கூட பெறாமல் தனது காரில் நேரத்திற்கு நிகழ்ச்சிக்கும் வந்துவிட்டார். சு.ராவும் ரயில் பிடித்து ஆதம்பாக்கம் வந்து விட்டார். அங்கிருந்து ஆட்டோ வைத்து அவர் நிகழ்ச்சிக்கு வந்தார். நாங்கள் அழைக்கப் போயிருந்தோம். சில காரணங்களால் ஜெயமோகனால் வர இயலவில்லை
வஐசெ ஜெயபாலன், பிரபஞ்சன், சா.கந்தசாமி உள்பட ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இறுதி உரை சுராவா ஜேகேயா என பல நண்பர்கள் பிரச்சினை எழுப்பி ஈகோவைக் கிளப்பிவிட முயன்றனர். ஆனால் சுராவிடம் இதை நாசூக்காக சொன்ன போது தயக்கமே இல்லாமல் ஜே.கே மகத்தான எழுத்தாளர் அவர்தான்இறுதியில் பேச வேண்டும் என்றார்.இதையே ஜேகேவிடம் காதைக் கடித்த போது அவரும் சொல்லி வைத்தாற் போல் சுராவே இறுதியாகப் பேச வேண்டும் என்றார். கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது சரிதான்.
ஒருவழியாக ஜெயகாந்தன் இறுதியாகப் பேசுவது என முடிவானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுராவை சந்திக்க முடியாமல் போனது. தக்கலை போய் ஜெயமோகன் வீட்டில் தங்க நேர்ந்த போதும் அவர் பத்னாபபுரம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று காட்டிய போதும் சுராவை சந்திக்க முடியாமலே திரும்பி வந்துவிட்டேன்.

திடீரென சன் டிவியில் நான் இரவில் பணிபுரிந்த நாளில் சு.ரா இறந்துவிட்டார் என கண்ணன் அனுப்பிய குறுஞ்செய்தியை விடியற்காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.ஒரு ஸ்க்ரோல் போடவும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.  வேலையை ராஜினாமா செய்யும் மனநிலையுடன் விரக்தியுடன் வீடு திரும்பிவந்தேன்.
அப்போது சூர்யா மலையாள டிவியில் சுகுமாரன் பணிபுரிந்து வந்தார்.
அவர்கள் கேமராவை வைத்து சுராவீட்டில் லைவ்வாக அவர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். அன்றும் இரவுப் பணிக்கு பத்து மணிக்கு வரவேண்டிய நான் இரவு ஏழு மணிக்கே அழைக்கப்பட்டேன். அன்று காலையில் ஏழுமணி செய்திகளில் போட வேண்டிய சுரா மரணம் குறித்த செய்தியை இரவு எட்டு மணி செய்திகளுக்காக எழுதிக் கொடுத்தேன்.

சுரா மறைந்துவிட்டார் என்பதை ஏற்கவே மனது ஒப்பவில்லை. அந்தசிரித்த முகம் இன்றும் மனதுக்குள் நிற்கிறது. நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களில் என் காலத்தில் நான் சந்தித்தவர்களில் எம்.வி.வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா, சிட்டி, கோவை ஞானி,அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா, பிரமிள். பிரபஞ்சன் உள்ளிட்டோர் மீது அளவுகடந்த மரியாதை என்றும் எனக்கு இருக்கும்.

எனக்குப் பிடித்த மௌனியும், நா.பாவும் புதுமைப்பித்தனும் பிச்சமூர்த்தியும் குபாராவும் இன்னும் பலரும் உயிருடன் இருந்த போது நான் அவர்களை சந்திக்க முடியாத காலத்தின் இடைவெளியும் தூரத்தின் இடைவெளியும் இருந்தது.
சுந்தர ராமசாமியின் மறைவுக்குப் பிறகு அவரைப் போல் ஒரு எழுத்தாளரையும் கண்டதில்லை அவரைப் போல் ஒரு புன்னகைக்கும் முகத்தையும் கண்டதில்லை. கண்ணனை சந்திக்கும் போதெல்லாம் எனக்குத் தவிர்க்க முடியாமல் சுராவின் நினைவு வந்துக் கொண்டே இருக்கும்.

எனக்குப் பிடித்த சு.ராவின் வரிகள்......











Tuesday 18 August 2015

அரிதினும் அரிது கேள் 16 நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக......

இந்தியில் யாதோன் கீ பாரத் என்ற படம் தர்மேந்திராவும் ஜீனத் அமனும் நடித்தது. தமிழில் இது எம்ஜிஆர். லதா நடிப்பில் நாளை நமதேயாக மாறியது. இந்தியில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான நசீர் ஹூசேன். இவர் பியார் கா சாயா, ஹம்கிசீசே கம் நஹின் போன்ற படங்களையும் இயக்கியவர். பாடல்களுக்கு முக்கியத்துவம் தருபவர். அண்ணன்-தம்பி, காதலன்-காதலி பிரிந்து சென்று சேர்வதுதான் இவரது கதைக்களம். இசையை இழைத்து உணர்ச்சிகரமாக எடுப்பதில் வல்லவர். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் யாதோன்கீ பாரத்தும் ஹம் கிசீசே கம் நஹின் படத்திற்கும் நிச்சயம் இடமுண்டு. ஷோலேக்குப் பிறகு அம்ஜத்கான் வில்லன்தனம் செய்த படம் ஹம் கிசீசே கம் நஹின்.
யாதோன் கீ பாரத் பழி வாங்கும் கதைதான். சிறுவயதில் பிரிந்துப் போன மூன்று சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள். இந்தியில் தர்மேந்திரா, விஜய் அரோரா. தாரிக் நடித்த வேடங்களில் தமிழில் எம்ஜிஆர் 1, எம்ஜிஆர் 2 தெலுங்கு நடிகர் சந்திரமோகன்
                       

தமிழில் இந்தப்படத்தை எடுப்பதில் ஒரு ஆபத்து இருந்தது. என்னதான் ஆக்சன் படமாக இருப்பினும் இசையில்லாமல் இந்தப் படத்தை கற்பனை செய்யவே முடியாது. ஆர்.டி.பர்மன் உச்சத்தில் இருந்த காலம் அது.அவர் இசைக்கு இந்தியாவே ஆடிப்பாடியது. தமிழில் எம்.எஸ்விக்கோ இலையுதிர் காலம். பலநூறு படங்களில் தனது சாதனையை முடித்து ஓய்விற்கு செல்லும் நிலையில் இருந்தார். பாடல்களை இந்திக்கு இணையாக கொண்டு வரவேண்டிய சவால் இருந்தது. படத்தின் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இந்தியில் ஜீலி போன்ற படங்களையும் சில சீரியசான படங்களையும் இயக்கியிருந்தார். ஜூலிக்கும் ஆர்.டி பர்மன்தான் இசை. இந்நிலையில் இந்த சவாலை அவர் மெல்லிசை மன்னரை நம்பி ஏற்றுக் கொண்டார். எம்ஜிஆருக்கும் இசை அறிவு இருந்தது. இந்தியுடன் ஒப்பிட்டால் இதை விட அது நன்றாயிருந்தது என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக இந்திப் பாடல்களைத் தழுவாமல் அதை அப்படியே விட்டு விட்டு புத்தம் புதிய இசையை தரும்படி எம்எஸ்.வியிடம் எம்ஜிஆர் கேட்டுக் கொள்ள மெல்லிசை மன்னரும் அருமையான ஆறு பாடல்களுடன் வந்துவிட்டார். அன்பு மலர்களே என்ற முதல் பாடலை பி.சுசிலா பாடினார். இரண்டாவது பாடலான நான் ஒரு மேடைப்பாடகன் பாடலை டி.எம்.எஸ். எஸ்.பி.பி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்கள். மூன்றாவது பாடலான நீல நயனங்களில் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள். 







 நான்காவது பாடலான  என்னை விட்டால் யாருமில்லை பாடலை ஜேசுதாஸ் பாடினார். ஐந்தாம் பாடலான
காதல் என்பது காவியமானால் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள். கடைசிப்பாடலான அன்பு மலர்களே பாடலை டி.எம்.எஸ் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடினார்கள். 

எம்ஜிஆர் படங்களுக்கு அப்போது ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். எஸ்.பிபியும் பாடினார் என்றாலும் இந்தப்படத்தில் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பியின் குரல் தரப்பட்டதால் இரட்டை வேடத்தில் நடித்த எம்ஜிஆருக்காக டி.எம்.எஸ், ஜேசுதாஸ் ஆகியோர் குரல் கொடுத்தனர்
இதில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் எனக்குப் பிடித்த பாடல்களில் காதல் என்பது காவியமானால் தனித்து நின்றது. காரணம் அதன் வரிகளும் டியூனும்தான். பாடல்கள் அனைத்தையும் எழுதியவர்
கவிஞர் வாலி 

காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்-அந்த
கதாநயகன் உன்னருகே இந்த கதாநாயகி வேண்டும்

பெ-சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு 
அவள் நாயகன் இன்றி தனித்திருந்தால் அந்தக்காவியம் கிடையாது
நான்பாடும் இலக்கியம் நீயல்லவோ
நாள்தோறும் படித்தது நினைவில்லையோ
ஆண்-காதல் என்பது காவியமானால் கதாநாயகி வேண்டும் அந்த
கதாநாயகி உன்னருகே இந்த கதாநாயகன் வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக- உந்தன்
நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனேம்மா
உனக்கந்த பொருள்கூறத் துடித்தேனேம்மா.

பெ- வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல் என்னை தாங்கிய திருக்கரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால் வந்து
பாய்ந்திடும் வளைக்கரமே 
நீ தீண்டும் இடங்களில் குளிரானது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது


இதே போல் மற்றொரு பாடலான நீல நயனங்களில் பாடல் மூலத்தில் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சுராலியா ஹே தும் னே ஜோ தில்கோ என்ற பாடலுக்கானது. இதிலும் தமிழில் வேறொரு இனிய கானத்தை அளித்து சாதித்தார் மெல்லிசை மன்னர்
பெண்-
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன்
கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது. 
ஐவகை அம்புகள் கைகளில் ஏந்திட
 மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
ஆண்
கனவு ஏன் வந்தது.
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததோ அதன்
கோல வடிவங்களில் பலகோடி
நினைவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் தொடுக்க வெட்கம் உண்டாகுமோ

பெண்
அந்த நாள் என்பது கனவில்நான் கண்டது
காணும் மோகங்களின் காட்சி நீ தந்தது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததே

மாயக்கண் கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாற என்று என்னை ருசி பார்த்ததோ
ஆண்
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

இதில் கடைசி இரண்டு வரிகளில் வாலி மாயாஜாலம் பண்ணயிிருப்பார். பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கிறது என்ற வரிகளை  என் உடலும் மனமும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. இளமைக்கு இதை விட ஆராதனை இல்லை. இதை விட அழகியல் இல்லை
ஜேசுதாசின் குரலும் பி சுசிலாவின் குரலும் இந்த இரு பாடல்களுக்கும் செய்து விட்ட மேன்மை என்ன என்பதையும் மெல்லிசை மன்னர் ஆர்.டி பர்மனுக்கு சளைத்தவரல்ல என்று நிரூபணம் செய்ததையும் இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.


Sunday 9 August 2015

அரிதினும் அரிதுகேள் 15 மௌனம் என்பது மொழியின் பதம்...

ஜேசுதாசின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். அவரது தீவிர ரசிகன் என்றும் சொல்லலாம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவை டி.எம்.எஸ்க்கு பிறகு கைப்பற்றிய அற்புதமான பாடகர். அவர் மீதும் எனக்கும் கிறக்கம் உண்டு என்றாலும் ஏனோ ஜேசுதாஸ் ஒருபுள்ளி அதிகமாக பிடிக்கும். அதற்கு காரணம் புரியவில்லை. என் குரலையும் ஜேசுதாஸ் குரல் போல மாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறேன். அவரைப் போல உச்சரிக்க பழகியிருக்கிறேன். அந்தமான் காதலியில் அவர் திருக்கோவிலே ஓடி வா என்பதை தெருக்கோவிலே ஓடி வா என பாடியதாக கிண்டலடித்தவர்கள் உண்டு. தெருவிலும் கோவில் உண்டு இருக்கட்டும் என வாதிட்டவன் நான். ஜேசுதாஸ் என்ன உச்சரித்தாலும் அது அமுதம். எப்படி உச்சரித்தாலும் தேவாமிர்தம் என மயக்கம் கொண்ட காலங்கள் உண்டு. பழனிக்குப் போயிருந்த போது ஒருமுறை பேருந்திலிருந்து இறங்கியதும் கண்ணில் பட்டது டாக்டர் சிவா பட போஸ்டர், திருச்சியிலிருந்து சென்னைக்குப் பதிவு செய்திருந்த ரயில் டிக்கட்டை ரத்து செய்துவிட்டு அன்றிரவு டாக்டர் சிவாவை பத்தாவது அல்லது பதினைந்தாவது முறை பார்க்கப் போய்விட்டேன். காரணம் ஜேசுதாசின் மலரே குறிஞ்சி மலரே பாட்டு.
ஜேசுதாஸ் பாடிய உன்னிடம் மயங்குகிறேன் போன்ற பழைய பாடல்களை நான் மெய்மறந்து கேட்டு ரசித்தவன். அதில் வாழ்வு என் பக்கம் என்ற படத்தில் முத்துராமனும் லட்சுமியும் பாடுவதாக ஒரு பாடலை ஜேசுதாசும் சசிரேகாவும் பாடினார்கள்.பாடலாசிரியர் கண்ணதாசன், இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். லட்சுமி படத்தில் ஒரு பேசா மடந்தை. முத்துராமன் அவரை மணமுடித்து முதலிரவில் பேச வைக்கப் போவதாக சவால் விட்டு பாடும் பாடல் வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு .....லட்சுமியின் வெட்கம் கலந்த புன்னகை, பாட்டுக்கேற்ற ஹம்மிங்,,,,இளமை முத்துராமனின் முதிர்ந்த ஆனால் பக்குவப்பட்ட கண்ணியமான தோற்றம் என பாடலை அற்புதமாக படைத்திருப்பார்கள் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அதை மூடும் மலர்களின் மீது


நாணம் என்பது ஒருவகை கலையின் சுகம்
மௌனம் என்பது மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே


வீணை பேசும்....


காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக் கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே

பாடலின் இறுதியில் ஒரு நீண்ட ஹம்மிங்குடன் ஜேசுதாசும் சசிரேகாவும் முடிப்பார்கள். பாடல் இனிய வசந்தத்தின் நீரோடை போல மனதுக்குள் சலசலத்தபடியே இருக்கிறது.

Wednesday 5 August 2015

அரிதினும் அரிதுகேள் 14 இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை....




குழந்தையும் தெய்வமும் என்றொரு கருப்பு வெள்ளைப் படம். இப்படத்தில் ஜெய்சங்கர்-ஜமுனா ஜோடியாக நடித்தனர்.காதலித்து மணம் முடித்த பின் பிரிந்து விடும் தம்பதிகள் குழந்தைகளால் ஒன்று சேர்வதுதான் படத்தின் கதை. இப்படத்தில் பாடல்களை கண்ணதாசனும் வாலியும் எழுதினர். இதனால் எந்தப் பாட்டு கண்ணதாசன் எந்தப் பாட்டு வாலி என்ற குழப்பம் வருவது இயல்பு. எனக்குத் தெரிந்தவரை  என்ன வேகம் நில்லு பாமா, அன்புள்ள மான்விழியே,நான் நன்றி சொல்வேன் ஆகிய பாடல்களை வாலியும் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, கோழி ஒரு கூட்டிலே, பழமுதிர்ச்சோலையிலே ஆகிய பாடல்களை கண்ணதாசனும் எழுதியுள்ளனர்.அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க்காதலில் ஓர் கவிதை என்ற பாடலை டி.எம்.எஸ்-பி.சுசிலா பாடினர். இதே போல் இப்படத்தில் இன்னொரு டூயட் பாடலும் இடம் பெற்றது. நான் நன்றி சொல்வேன் என்ற அந்தப் பாடல் மிக இனிமையானது.









பாடியவர்கள் : P.சுசீலா மற்றும் m.s. விஸ்வநாதன் ( ஹம்மிங்)


நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
பின்பு மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

இதில் இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை, எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமையில்லை என்ற வரிகள் அபாரமானவை. இசையின் சந்தத்தில் பொருந்தி விடும் இந்த வரிகளுக்கு சுசிலா தந்த அழுத்தமும் பரிமாணமும் அற்புதம் படத்தில் நடித்த ஜெய்சங்கரும் ஜமுனாவும் இளமை ததும்ப இருப்பார்கள். ஜமுனா இன்னொரு சரோஜாதேவி ஆகிவிடக்கூடியவர். அத்தனை அழகான கண்கள். பாவனைகள். கருப்பு வெள்ளையிலும் பளிச்சிடும் சிவந்த மேனி. அந்தக்காலத்து நாயகிகள் போல தழைய தழைய புடைவை கட்டிக் கொண்டிருப்பார். இடுப்பு பகுதியில் அரை விரல் மட்டும் தெரியும் அளவுக்கு ரவிக்கை மூடிக்கொண்டிருக்கிறது. அந்த சிறிய இடைவெளியில் ஜெய்சங்கரின் விரல்கள் தொட்டும் தொடாமலும் தரக்கூடிய பரவசம் இப்போதைய பாடல்களில் இல்லை. காதலும் காமமும் கலையாக முடியும் என்று நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
இதே ஜமுனாதான் பின்னர் கமல்ஹாசனின் தாயாக தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நானாக நான் இல்லை தாயே பாடல்காட்சியில் நடித்தார். இதே ஜமுனாதான் மிஸ்ஸியம்மாவிலும் நடித்தார்.
ஜமுனா அந்தக் காலத்து அழகான தெலுங்கு நடிகை. நிறைய தெலுங்குப் படங்களில் என்.டி.ஆர். கிருஷ்ணா போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இப்படத்தை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். இதற்காகவே ஒருமுறை பாண்டிச்சேரி போனேன். என் தேடல் வீண் போகவில்லை. சுமாரான பிரிண்டுடன் ஒரு டிவிடி கிடைத்தது. எப்போதாவது தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும். பல ஆண்டுகள் கழித்தப்பின்னர் மோசர் பேர் நிறுவனம் இப்படத்தின் செம்பதிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் எனக்குப் பிடித்த இந்தப் பாடலுடன் படத்தின் இதர இனிய பாடல்களையும் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு
 இப்படம் பற்றி ராண்டர் கை ஆங்கிலத்தில் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைக்கிறேன். உரிமை அவருக்கே.

Jai Shankar, Jamuna, Kutti Padmini, G. Varalaskhmi, Nagesh, ‘Major' Sundararajan, ‘Malaysia' (Magic) Radhika

One of the many successful live-action movies of Walt Disney is The Parent Trap(1961), featuring famed Hollywood star Maureen O'Hara and noted British actor Hayley Mills (as the twins; she was then 15). The movie, which was all about family sentiment and twin girls bringing together their separated parents, had a long and successful run in India.
Noted actor and screenwriter ‘Javert' N. Seetharaman adapted the Hollywood movie in Tamil, making changes in the screenplay to suit the local milieu. It was produced by AV. Meiyappan in more than one Indian language.
Titled Kuzhandaiyum Deivamum (1965), it was directed by the successful director-duo Krishnan-Panju and had the Bond type hero Jai Shankar and the multilingual star Jamuna as the separated parents. Talented Kutti Padmini played the twins with the right mix of innocence and mischief. The film was a box-office success and enjoyed a 100-day run, the benchmark of success in South Indian Cinema, in many places. If a film scores a 25-week run, it is rated as a mega hit!
One of the major factors contributing to the success of the movie was its melodious music composed by M. S. Viawanathan. Many of the songs became hits and are still remembered today. The hits include ‘Kozhi oru koottiley' (lyrics: Kannadasan; voice: M. S. Rajeswari), ‘Pazhamudhir solaiyiley' (Kannadasan, P. Susheela), ‘Anbulla mannavaney' (Vali, Susheela, T. M. Soundararajan), ‘Kuzhandaiyum deivamum' (Kannadasan, Susheela), ‘Naan nandri solven' (Vali, Susheela) and ‘Enna vegam sollu bhamaaa (Vali, Soundararajan, A. L. Raghavan and chorus).
The film was remade in Telugu as Letha Manasulu (1966) with Jamuna, Haranath and Kutti Padmini in lead roles. Directed by the same duo, it, however, did not enjoy the same success as the Tamil original.
But Meiyappan hit the bull's eye with the Hindi version, Do Kaliyan (1967). Directed by Krishnan-Panju, it featured noted stars Mala Sinha and Biswajeet as the couple. The role of the twins was enacted by Baby Sonia who made a splash. Later as a young woman and known as Neetu Singh, she was a successful Hindi film star. Soon she married the top star of that day, Rishi Kapoor, and retired from films. Do Kaliyan was a silver jubilee hit and further brightened the radiant image of Meiyappan and AVM Studios.
Krishnan-Panju had many hits in many languages, including Hindi, to their credit. Both of them began in a modest manner in Coimbatore, with Krishnan working as a laboratorian and Panju (Panchapakesan) as an assistant director and script assistant. Panju had also worked with Ellis R. Dungan as one of his assistants. He was also a talented film editor and edited all his films and signed his name as ‘Panjabi!'
Remembered for the interesting storyline, Kutti Padmini's performance and melodious songs.




Tuesday 4 August 2015

அரிதினும் அரிது கேள் 13 மழைச்சாரலில் இளம் பூங்குயில்


மழைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா, துணை நீயல்லவா
இந்த கீதம் நான் பாடும் நாள் அல்லவா

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைகூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழிதேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இன்ப நாதம் கலையாத இசையானது
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
இதில் சசிரேகா ஹம்மிங் மட்டும் பாடியிருப்பார்.ஜேசுதாசின் குரல் மிக இனியமையாகவும் இளமையாகவும் ஒலிக்கிறது. முத்துராமனின் ஆரம்பக் காலப் படங்களி்ல் பிபிஸ்ரீநிவாஸ் பின்னணி பாடியிருப்பார். போலீஸ்காரன் மகள், காதலிக்க நேரமில்லை, என்மகன், நெஞ்சில் ஒரு ஆலயம், போன்ற படங்களை கூறலாம், காதலிக்கும் நேரமில்லை படத்தில் நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா பாடலையம் ஜேசுதாஸ் பாடினார், அதையும் பிபிஸ்ரீநிவாஸ்தான் என பலரும் நினைத்து விட்டனர். அப்போது ஜேசுதாஸ் புதியவர். பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜேசுதாசும் முத்துராமனுக்கு தூண்டில் மீன், எல்லோரும் நல்லவரே போன்ற படங்களில் பாடியிருக்கிறார்கள். எஸ்.பி.பி. சம்சாரம் என்பது வீணை என மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் முத்துராமனே பாடுவது போல் அற்புதமாக தனது குரலை வழங்கினார். அதே படத்தில் ஜேசுதாசும் வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் என பாடினார். இதில் ஜேசுதாசின் குரல் முத்துராமனுக்கு அற்புதமாக பொருந்தியது. இதன் காரணமாக மேலும் சில பாடல்கள் ஜேசுதாஸ் பாடி முத்துராமன் நடித்திருந்தார்.  இந்தப் பாடல் ஜேசுதாஸ் பாடல்கள் கலெக்சன்களில் (உரிமம் பெறாத சிடி) கிடைக்கிறது. you tube ல் இப்படமும் பாடல்களும் கிடைக்கின்றன. இதுபோன்ற பாடல்களை முறைப்படி பாதுகாக்க அரசும் சரி, கோடி கோடியாக சம்பாதிக்கும் திரையுலகமும் சரி கவலைப்படுவதாக தெரியவில்லை. என்னைப் போன்ற அற்பமான ரசிகர்கள்தான் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.
சங்கர் கணேஷ் இசையமைத்த ஒரு குடும்பத்தின் கதை படத்திலிருந்து இந்தப் பாடலை நான் பலமுறை கேட்டு மகிழ்கிறேன். முத்துராமன், சுமித்ரா ,நந்திதா போஸ் ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் இயக்குனர் துரை. பாடலாசிரியர் கண்ணதாசனா வாலியா என்று தெரியவில்லை. ஜேசுதாசும் பி.எஸ்.சசிரேகாவும் பாடிய இப்பாடல் மழைக்காலத் தென்றல் போல் பலமுறை என்னைத் தாலாட்டியிருக்கிறது.

--------------------------------

Monday 3 August 2015

இந்திய சினிமா - வழி தெரியாத வழிகாட்டி -Dev Anand's GUIDE

ஆர்.கே.நாராயண் எழுதிய கைடு கதையை படமாக்கி நடித்தவர் தேவ் ஆனந்த். அந்தப் படம் சினிமா வரலாற்றில் ஒருமுக்கியமான படம்.குமுதம் தீராநதி ஆகஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரை இது......




நடிகன் இயக்குனராகவும் இருக்க முடியும் என்பதை பாலிவுட்டில் பலர் நிரூபித்துள்ளனர். இதில் ராஜ்கபூர், தேவ் ஆனந்த், குருதத், பிரோஸ் கான், மனோஜ்குமார் போன்றோரின் படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தேவ் ஆனந்தின்  இளைய சகோகதரர் விஜய் ஆனந்தும் மூத்த சகோதரர் சேத்தன் ஆனந்தும் நடிகர்கள்தாம். அவர்கள் இருவரும் சில நல்ல படங்களையும் இயக்கியுள்ளனர். இந்த சகோதரர்களில் ஒருகட்டத்தில் தேவ் ஆனந்துக்கும் சேத்தன் ஆனந்துக்கும் முரண்பாடு வலுத்தது. ஆர்.கே.நாராயணின் தி கைடு நாவலை படமாக்க நினைத்திருந்த சேத்தன் ஆனந்த் அந்தப் படத்திலிருந்து விலகி வேறொரு படம் எடுக்கப் போய் விட்டார். அதனால் தனது இளைய சகோதரனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை அளித்தார் தேவ் ஆனந்த்.திரைக்கதையை இருவரும் எழுதினார்கள். வஹிதா ரஹ்மான் கதாநாயகியாக நடித்தார். இசை எஸ்.டி.பர்மன். பாடல்கள் ஷைலந்தர்.
இப்படத்தின் ஆங்கில பதிப்பும் ஒன்று தயாரிக்க தேவ் ஆனந்த் திட்டமிட்டார். பெர்ல் எஸ் பக் என்ற ஆங்கில எழுத்தாளர் கதைவசனம் எழுத தேட் டானியலவஸ்கி என்ற இயக்குனர் இயக்குவதாக முடிவானது. வஹிதா ரஹ்மானுக்கு ஆங்கிலப் பயிற்சியையும பெண் எழுத்தாளரான பெர்ல் எஸ் பக் செய்துக் கொண்டிருந்தார்.
இந்தப் படத்தை தயாரிக்கும் போது நிகழ்ந்த சில சம்பவங்களை தேவ் ஆனந்த் தமது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். சேத்தன் ஆனந்துடன் வலுத்த மோதலால் படப்பிடிப்பில் தமது கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடிக்க முடியாமல் போன தேவ், முதலில் ஆங்கிலப்படத்தை முடிக்க முடிவு செய்தார். இந்த முடிவை அறிவித்ததும் சேத்தன் ஆனந்தும் ஹகீகத் என்ற படத்தை நடிகர் ராஜ்குமாரை வைத்து இயக்க சென்று விட்டார். அப்போதுதான் இந்திப்படத்தை இயக்க தமது கோல்டி என்ற தம்பியான விஜய் ஆனந்தை இயக்குனராக்க தேவ் ஆனந்த் முடிவு செய்தார்.
இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியளித்தது. பைத்தியக்காரத்தனம் என்றனர். இத்தனை பெரிய படத்தை இவர் தாங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தேவ் ஆனந்த் கூறிய விளக்கம்இது "மகத்தான கலைப்படைப்புகள் யாவும் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தோன்றியவைதாம். உன்னுள்ள பித்தின் ரேகை ஒன்று ஓடிக்கொண்டிருக்க வேண்டும், இயல்புகளிலிருந்து அது தளைகளை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டும்" அத்தகைய பைத்தியக்கார கலைஞர்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று தேவ் ஆனந்த் உறுதியாக நம்பினார்.1965ஆம் ஆண்டு வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
கைடு படம் என்ன சொல்கிறது?
ராஜூ ஒரு சுற்றுலா வழிகாட்டி.தொல்பொருள் ஆய்வாளரான ஆங்கிலேயர் மார்க்கோ தமது இளம்  மனைவி ரோசியுடன் ஆராய்ச்சிக்காக வருகிறார்.கணவரின் ஆய்வு காரணமாக தனிமைக்கு தள்ளப்படுகிறாள் ரோசி. சுற்றுலா வழிகாட்டியான ராஜூ அவளை நெருங்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போது ரோசியின் கடந்த காலத்தை அவன் அறிகிறான். ரோசி ஒரு வேசியின் மகள். தாயைப் போல தொழில் செய்ய மனமில்லாமல் ஒருவனுக்கு மனைவியாக வாழ ஆசைப்படுகிறாள். இதையடுத்து நிறைய பணம் வாங்கி கிழவரான மார்க்கோவுக்கு அவள் தாய் மணமுடித்து விடுகிறாள். மார்க்கோவுடன் ரோசி மகிழ்ச்சியாக இல்லை. அவனிடமிருந்து விலக நினைக்கிறாள். ரோசியை ராஜூ தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான், சமூகம் அவளை ஒரு விலைமாதுவின் மகளாகவே பார்க்கிறது. அவள் கணவர் மார்க்கோவும் ரோசியைத் தேடி வருகிறார். அப்போது ராஜூவுக்கு வருமானம்இல்லை. வசதி இல்லை. வேறு வழியில்லாமல் ராஜூவுக்கு ஏற்படும் அவமதிப்பையும் துன்பத்தையும் தவிர்க்க ரோசி மீண்டும் கணவருடன் செல்கிறாள். மனமுடைந்த ராஜூ பணம் சம்பாதிக்கும் வெறியுடன் ஒரு மோசடி வழக்கில் சிக்கிக் கொள்கிறான்.பணம் கையாடல் செய்ததாக அவன் கைது செய்யப்படுகிறான். 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து விடுதலையான ராஜூ மன நிம்மதியின்றி அலைகிறான்.
சுற்றுலா வழிகாட்டியான ராஜூவுக்கு தன் வாழ்க்கையை எந்த திசையில் நகர்த்துவது என்று வழி தெரியவில்லை.துறவு மேற்கொள்ள முடிவு செய்கிறான். ஆன்மீகத்தில் அவன் நாட்டம் அதிகரிக்கிறது. இதனால் காவி கட்டி அவன் ஊர் ஊராகத் திரிகிறான்.
துன்பம் இல்லை, இன்பமும் இல்லை
நாட்களும் இல்லை, உலகங்களும் இல்லை
மனிதனும் இல்லை, இறைவனும் இல்லை
நான் மட்டுமே இருக்கிறேன். நான். நான். என்ற தரிசனம் அவனுக்கு ஏற்படுகிறது.
ஓரிடத்தில் அவன் ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறான். அப்போது அவன் சொன்ன வாக்கு பலித்தது என்பதால் அவனிடம் விசேஷமான சக்தியிருப்பதாக ஊர் நம்புகிறது.
அந்தப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மழை இல்லை. விவசாயிகள் பட்டினி கிடக்கிறார்கள். அவன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேண்டுதல் செய்தால் மழை பெய்யும் என உள்ளூர் பூசாரிகள் வதந்தியைக் கிளப்பி விட மக்கள் ராஜூ மீது தங்கள் நம்பிக்கையைத் திணிக்கிறார்கள்.மக்களின் அன்பு அவனை ஆட்கொள்கிறது. ஒருபுறம் ரோசியும் அவன் தாயும் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தனது பாவங்களைத் தீர்க்க ஒரு புனிதமான காரியத்திற்காக உண்ணாவிரதம் இருப்பது என ராஜூ முடிவு செய்கிறான். மக்களின் வாழ்க்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முடிவு செய்ய ராஜூ விழிப்புணர்வை அடைகிறான். 12 வது நாளில் அதிசயமாக மழை பெய்கிறது. ஆனால் ராஜூவின் ஆன்மா இறைவனுடன் கலந்துவிடுகிறது. அவன் உடலைக்கண்டு ரோசி கதறி அழுகிறாள்.
ஆன்மா இறப்பதில்லை, அதன் உடல் மட்டுமே இறக்கிறது என்ற பகவத் கீதையின் சாரத்துடன் படம் முடிகிறது.
தேவ் ஆனந்த் இப்படத்தில் நடித்த போது அவர் நடித்த ஹம்தோனோ, சிஐடி, ஆஸ் பாஸ், அஸ்லி நக்லி, ஹவுஸ் நம்பர் 44 போன்ற பல படங்கள் சக்கைப் போடு போட்டன. உச்சத்தில் இருந்த அவர் காவி கட்டி நடித்து கடைசியில் இறந்துவிடுவதாக கதை அமைக்கப்பட்டால் படம் ஓடாது என்று பலரும் எச்சரித்தனர். ஆனால் தேவ் ஆனந்த் படத்தின் கதை மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். திருமணமான கதாநாயகியை காதலிப்பதையும் இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று ஜாம்பவான்கள் பலர் தேவ் ஆனந்தை எச்சரித்தனர். ஆனால் இந்திய மக்கள் இக்கதையை ஏற்கும் மனநிலைக்கு தயாராகி விட்டதாக நம்பினார் தேவ் ஆனந்த்.
அடுத்தவன் மனைவியை காதலிப்பது, காதலியால் நிராகரிக்கப்படுவது, குற்றம் புரிவது, சிறை செல்வது, ஆன்மீக விழிப்பைப் பெற்று பொதுமக்களுக்காக தனது உயிரைத்தியாகம் செய்வது என பல தளங்களுக்கு நகரும் இப்படம் தேவ் ஆனந்த் என்ற மகத்தான நடிகரை புடம் போட்ட பொன்னாக மாற்றியது. மிகை உணர்வுகள் இல்லாத யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் தேவ் ஆனந்த்.





இப்படத்தின் கதாநாயகி வஹிதா ரஹ்மான் படத்தில் அழகழகான புடைவைகளை கட்டிக் கொண்டு பேரழகியாக காட்சியளித்தார். ஒரு காட்சியில் இரவுநைட்டியில் மார்புகள் பிதுங்க புரண்டு படுத்தார். அநேகமாக அவர் நடித்ததில் அதிகபட்ச கவர்ச்சி காட்சி இதுதான்.
கணவனுக்கும் காதலனுக்கும் இடையே உணர்ச்சிப் போராட்டம் நடத்தும் போது, கணவன் மார்க்கோ ஒரு பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து துடிதுடிப்பார். காதலனின் ஆழமான காதலையும் அவர் புரிந்துக் கொள்பவராக இருப்பார்.ஆனால் மீண்டும் கணவனிடமே திரும்பிச் சென்று காதலனை கைவிட்டு இயல்பான இந்தியப் பெண்ணாக மாறுவார்.
இப்படத்தின் பலம் எஸ்.டி.பர்மனின் இசை. வழி தெரியாத வழிகாட்டியான ராஜூவுக்காக பின்னணியில் தாதா பாடிய பாடல் ஒன்று அற்புதமானது.
யஹான் கோன் ஹை தேரா முசாபர் தூ ஜாயேகா கஹான் என்ற அந்தப் பாடல் உனக்கென யார் இருக்கிறார்கள், பயணியே நீ போவது எங்கே என்று கேட்கிறது. முதுமை தொனிக்கும் தாதாவின் குரலில் இப்பாடல் ராஜூவின் தனிமையை மிகவும் அடர்த்தியாக்கி காட்டுகிறது.
முகமது ரபி-லதா மங்கேஷ்கர் பாடிய ஆஜ் பிர் ஜீனே கீ தமன்னா ஹை( இன்று மீண்டும் வாழ்வதற்கான எண்ணம் தோன்றியது )
முகமது ரபி பாடிய கியா சே கியா ஹோ கயா பேவபா...., தின் டல் ஜாயே ராத் ந ஜாயே போன்ற பாடல்களும் படத்தை மெருகேற்றின.
கிஷோர்குமார்-லதா மங்கேஷ்கர் பாடிய காத்தா ரஹே மேரா தில் என்ற பாடல் அந்தக் காலத்தின் சூப்பர் ஹிட் பாடல்



இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது உள்பட ஏராளமான விருதுகளும் பாராட்டுக்களும் கிடைத்தன.
இப்படத்தில் மனிதனின் உள் ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறியுள்ளார் தேவ் ஆனந்த்.
" பணம் இழந்து பிச்சைக்காரனாக, குற்றவாளியாக சமூகத்தாலும் காதலியாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதன் தனது ஆன்மாவின் அன்பு என்ற மாபெரும் செல்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த விளையாட்டுதான் பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படங்களை விட உள்மனத்தை தொடும் சிறந்த திரைப்படங்களைப் படைக்கிறது."
----------------------
தேவ் ஆனந்தின் திரைப்படங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். கிளாசிக் எனப்படும் காவியங்கள் ஒன்று வணிகப்படங்கள் என்ற குப்பைகள் இரண்டு
தேவ் ஆனந்தின் புல்லட், வாரண்ட், ஹம் நவ்ஜவான்,ஸ்வாமி தாதா போன்ற படங்களை குப்பை என ஒதுக்கி விடலாம். இந்தப் படங்களைப் பார்த்து தேவ் ஆனந்தை எடை போட்டால் விரைவில் அவரை மறந்துவிடுவோம்.
ஆனால் வணிக ரீதியாக சில நல்ல படங்களையும் தேவ் ஆனந்த் அளித்திருக்கிறார்.அதில் கிளாசிக் வகையாக மாறிய படங்களும் உண்டு. ஜானி மேரா நாம் தமிழில் சிவாஜி -ஜெயலலிதா நடிப்பில் ராஜா என வந்துள்ளது. தேரே மேரே சப்னே அழகான ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்பையும் ஆசைகளையும் படம் பிடித்தது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அண்ணன் தங்கை பாசத்தை புதிய பரிமாணத்தில் விளக்கியது. இப்படத்தில் தம்மாரோ தம் பாடல் அந்தக் காலத்தில் செம ஹிட்டாகியது. இந்தப்பாடலின் ரீமிக்ஸிஸ் தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். ஆனாலும் ஜீனத் அமன் போட்ட ஆட்டம்தான் டாப்.இந்த வரிசையில் ஜீவல் தீப், ஹீரா பன்னா, கேம்பிளர், பிரேம் பூஜாரி போன்ற படங்களும் தேவ் ஆனந்தின் சிறந்த படங்களாக மதிப்பிடப்படுகின்றன.
கேம்பிளர் படம் தாஸ்தாயவஸ்கியின் சூதாடி கதையை அடிப்படையாகக் கொண்டது.
மோசமான குப்பைப் படங்களில் தேவ் ஆனந்த் நடித்தும் இருக்கிறார். இயக்கியும் இருக்கிறார். இதில் ஹம் நவ்ஜவான் படத்தில் வக்கிரம் பிடித்த ஒரு வில்லன் இருக்கிறான் . அவன் பெண்களின் பேண்டீசை கழற்றுவதில் மன்னன். சீருடை அணிந்த பள்ளி மாணவிகளை தலைகீழாக கவிழ்த்து பேண்டீசை கத்தியால் வெட்டி எறிவான். அவனிடம் ஒருநாள் தபு சிக்கிக் கொள்வாள்.தபு இந்தப் படத்தில் பதின் பருவம் கொண்ட பெண்.ஸ்கூல் யூனிபார்மில் அவளை கடத்தி வரும் வில்லன் சட்டை பட்டனை கழற்றி உள்ளே கைவிடுவதும் பேண்டீசை வெட்டி எறிவதும் சற்று தூக்கலான செக்ஸ் காட்சியாக மாறியது.
இதே போன்று கேங்ஸ்டர் படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சியில் துணை நடிகை ஒருவரின் முழு மார்பும் தெரிய வில்லன் கற்பழித்துப் போட்டு போவான். பாதிரியாராக வரும் தேவ் ஆனந்த மேலாடை இல்லாத அந்தப் பெண்ணின் உடலை பார்த்து நிற்க அவர் மீது பழி வரும்.
இந்தக்காட்சிகள் சென்சாரில் எப்படி தப்பி வந்தன என்பது தெரியவில்லை. மிகச்சிறந்த படமான பிரேம் பூஜாரியின் சர்வதேச பதிப்பிலும் தேவ் ஆனந்த் நிர்வாணக்காட்சிகளை படமாக்கியிருந்தார்.
தேவ் ஆனந்த் மற்றும் அவர் சகோதரர்கள் சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோர் இயக்கிய சிறந்த படங்களாக கைடு தவிர ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பிரேம் பூஜாரி, ஜானி மேரா நாம், தேரே மேரே சப்னே, ஜீவல் தீப் , பனாரசி பாபு உள்ளிட்ட படங்களுடன் அவர்  பிறரின் இயக்கத்தில் நடிகராக பணியாற்றிய சில நல்ல படங்களும் உள்ளன. இதில் ஓரிரு படங்களை தேவ் ஆனந்தின் நண்பரான குருதத் இயக்கியுள்ளார்.
தேவ் ஆனந்தின் தொடக்க கால கருப்பு வெள்ளைப்படங்களில் முகமது ரபி பாடியிருக்கிறார். கைடு படத்தில் முகமது ரபியின் பாடல்கள் பேரானந்தம். ஆனால் அவரது பிற்காலப்படங்களில் கிஷோர் குமாரின் குரல் தேவ் ஆனந்தின் உடல் மொழிக்கு கச்சிதமாகப் பொருந்திப் போனது. எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் போன்ற இசையமைப்பாளர்கள் தேவ் ஆனந்துக்கு முகமது ரபியை விட கிஷோரின் குரல் அழகாக பொருந்திப் போவதாக நம்பினர். கிஷோர் குமார் பாட்டுப்பாட வாய்ப்பு தேடி மும்பை வந்த போது தேவ் ஆனந்த் தான் அவருக்கு முதல் வாய்ப்பை அளித்தார்.ஜித்தி படத்தில் இடம் பெற்ற கஜல் பாடல் ஒன்றை தேவ் ஆனந்துக்காக கிஷோர் குமார் பாடினார். எஸ்டி பர்மன் சில பாடல்களை தேவ் ஆனந்திற்காக பாடியிருக்கிறார். அதில் பிரேம் பூஜாரி பாடலும் கைடு படப் பாடலும் தனித்துவம் மி்க்கவை.
தன்னுடன் கதாநாயகியாக கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த கல்பனா கார்த்திக்கை மணம் முடித்துக் கொண்ட தேவ் ஆனந்துக்கு தமது கதாநாயகிகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. குறிப்பாக ஜீனத் அமன் மீது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் ஜீனத்தை அவர்தான் அறிமுகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜீனத் தேவ் ஆனந்தை கைவிட்டு ராஜ்கபூருடன் ஐக்கியமாகி அவரது சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் முற்றும் துறந்த கோலத்தில் நடித்ததும் தேவ் ஆனந்த் மனம் உடைந்துவிட்டார்.இதே போல் ஆரம்ப காலங்களில் கருப்பு வெள்ளைப்பட கதாநாயகியான சுரையா மீதும் தேவ் ஆனந்த் ஒருதலைக்காதல் கொண்டு ஏமாற்றம் அடைந்தார்.
முதிர்ந்த வயதிலும் படத்தை இயக்க முயன்றவர் தேவ் ஆனந்த் அமீர்கானை வைத்து அவர் இயக்கிய கிரிக்கெட்டை மையமாக கொண்ட அவ்வல் நம்பர் , ஜாக்கி ஷராப் மீனாட்சி சேஷாதிரியை வைத்து இயக்கிய சச்சே கா போல் பலா, ஜீனத் அமனுடன் அவர் நடித்த இஷ்க் இஷ்க் இஷ்க், அம்பானியின் குடும்பப் பெண்ணாக மாறிய டீனா முனிம் நடித்த தேஸ் பர்தேஸ்  போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அவரது மே சோலா பரஸ்கீ, லவ் அட் டைம்ஸ் ஸ்குவேர்,  மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்ர் (2005) போன்ற இறுதிக்காலப்படங்கள் எடுபடவில்லை.2011ம் ஆண்டில் தேவ் ஆனந்த் காலமானார்.
பணம், புகழ் அந்தஸ்து எல்லாம் இருக்கும்போது உலகம் தலைக்கு மேல் வைத்து உன்னைக் கொண்டாடும். அது இறங்கி விடும்போது காலில் ஒரு புழுவைப் போல் மிதித்து நசுக்கி விடும் என தேவ் ஆனந்த் ஒருமுறை குறிப்பிட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அவரது புகழும் வெற்று அஞ்சலிகளால் நசுக்கப்பட்டது.
கைடு படம் தேவ் ஆனந்தின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். உலகின் சிறந்த படங்களில் ஒன்று கைடு. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதாலும் இந்தி பேசுவதாலும் அகிரா குருசோவா போன்ற சர்வதேச இயக்குனர்களின் சிறந்த படங்களுக்கு நிகராகாது என கருதினால் அது அபத்தமானது.
மிகச்சிறந்த நடிகரும் படைப்பாளருமான தேவ் ஆனந்த் எப்போதும் என்போன்ற ரசிகர்களால் நினைக்கப்படுவார்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...