Saturday 10 October 2020

சென்னை ஓட்டல்கள்

இன்று காலை டிபன் சாப்பிடப் போன கடை அருகில் எவனோ வாந்தியெடுத்த மஞ்சள் சோத்தை இரண்டு அழகான மைனாக்கள் கொத்தி கொத்தி ஒவ்வொரு பருக்கையாக உண்பதைக் கண்டேன்.அழகியல் என்பதன் ஒட்டு மொத்த அர்த்தமும் சிதறி சின்னாபின்னமானது.அதே கடையில் இரண்டு பூரி வாங்கி பிய்த்துப் போட்டதில் நூறு காகங்கள் எங்கிருந்தோ பறந்து வந்தன.சில காக்கைகள் இரண்டு துண்டுகளை கவ்விக் கொண்டு போக கிடைக்காத சில காகங்கள் நான் இன்னும் இரண்டு பூரி வாங்குவேனா என்று காத்திருந்தன. உலகில் உள்ள அத்தனை காகங்களுக்கும் பூரி வாங்க நம்மால் முடியாது என்ற ஞானோதயம் உதிக்க நகர்ந்தேன்.இதற்கிடையில் ஒரு எலி மெல்ல காக்கைக் கூட்டத்தில் புகுந்து தனக்கு ஒரு பூரி துண்டை கவ்விக் கொண்டு மறைந்து விட்டது. நான் மனதுக்குள் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன். இத்தனைக் காலமாக என் வீடு புகுந்து புத்தகங்களைக் கடித்துக் குதறிய எத்தனை எலிகளை இரக்கமே இல்லாமல் கல்லால் அடித்துக் கொன்றிருப் பேன் என்று எண்ணி வருந்தி னேன்.முதல் முறையாக ஒரு எலிக்கும் என் பூரி உணவாக தானம் செய்யப்பட்டிருக்கிறது.இனி என் வீட்டில் எலி வந்தால் நானே பல புத்தகங்களை தின்னக் கொடுத்து விடுவேன்.ஜெயமோகனின் ஒரு வெண்முரசு புத்தகம் அந்த எலிக்கு ஒரு வருஷத்துக்கு உணவாகும்.இப்படியெல்லாம் யோசித்து வீடு வரும்போது நினைத்தேன். இன்னொரு பிறவி இருந்து நான் எலியாகவோ காக்கையாகவோ அந்த மைனாவாகவோ பிறந்து இப்படி உணவுக்கும் எச்சத்துக்கும் அல்லாடும் இழிபிறப்பாக எடுத்து விடுவேனோ என்று அச்சமும் அருவருப்பும் ஏற்பட்டது.அப்போதுதான் இன்னொரு ஞானோதயம் பிறந்தது.அடடா நான் ஏன் அடுத்த பிறவியைப் பற்றி யோசித்து மனத்தை குழப்ப வேண்டும். இதோ இப்போது நான் மனிதனாக நிற்கிறேன்.எலிக்கும் காக்கைக்கும் மைனாவுக்கும் ஓரளவுக்கு தினமும் பூரியோ வடையோ வாங்கிப் போட முடியும். நானும் வாயார வயிறார ருசித்து என் விருப்பப்படி சாப்பிட முடியும். இந்த அருமையான பிறவியை ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் இனிதாக வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீடு திரும்பி வந்தேன்.மனம் முழுதும் இறைவனுக்கு நன்றி மலர்ந்து மணம் பரப்பியது.. உண்ணும் நீரும் உணவும் தினம் தந்த இறைவனே..... உமக்கே நாம் நன்றி கூறுவோம்..என இளையராஜா பாடல் மனசுக்குள் ஒலித்தது. --------------------------- சென்னை யில் சைவ ஓட்டல்களுக்கு தட்டுப்பாடு என ஒரு பதிவு போட்டேன்.அசைவ ஓட்டல்கள் நிலை அதைவிட கேவலம். ஒரு ஓட்டலில் பிரிட்ஜில் வைத்த நேத்தைய குழம்பை தருவதாக நண்பர் ஒருவர் குறைபட்டார். இன்னொரு முறை சேப்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற நாயர் மெஸ் போனால் 15நிமிடம் கழித்து சர்வர் இலையை போட்டார்.இன்னும் 5 நிமிடம் கழித்து ஒருவர் சாதம் போட்டார்.இன்னும் 5 நிமிடம் சாதம் சூடு ஆறிய பிறகு சர்வர் ஓரு குழம்பு ஊத்தி மறைந்து விட்டார்.அது கறிக் குழம்பா சிக்கன் குழம்பான்னு தெரியாம பசியில ருசி தெரியாமல் நானும் நண்பரும் சாப்பிட்டு சைட் டிஷ் கேட்ட போது மட்டன் ஐட்டம் எதுவும் கொரோனா வால் போடவில்லையாம் வறுத்த வஞ்சிர மீன் இருந்தது. விலை ஒரு துண்டு₹ 180.சரி மீன் குழம்பு இருக்கான்னு கேட்டால் இப்ப உங்களுக்கு ஊத்துனதே மீன்குழம்புதான்.பீஸ் காலியாயிருச்சு என்றார்.ஏதோ பாவமுன்னு பரிதாபப்பட்டு அவர் கொடுத்த ஆம்லேட் ரஸம் சாதம் சாப்பிட்டு கவுச்சி சாப்பாட்டுக்கு ₹260 பில்+₹10 டிப்ஸ் கொடுத்து வந்தோம். என் மனதில் ஒரு வன்முறை தோன்றியது தமிழ் இந்தி பிரச்சினை மாதிரி ஒரு தமிழ் மலையாள பிரச்சினை யைக் கிளப்பி இந்த நாயரை கேரளாவுக்கு விரட்டி விடலாமான்னு யோசித்து யாதும் ஊரே என்ற என் முப்பாட்டன் பாட்டைப் பாடி மிகுந்த சோர்வுடன் வீடு திரும்பி வந்தேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...