Tuesday 6 June 2017

இந்திய சினிமா குருதத்தின் பியாசா

இந்திய சினிமா
பியாசா  
இயக்குனர் - குருதத் 
சில துளி கண்ணீரும் சில பெருமூச்சுகளும்.....
செந்தூரம் ஜெகதீஷ்


குமுதம் தீராநதி ஜூன் 2017 இதழில் வெளியான கட்டுரை







குருதத் என்ற நடிகரும் இயக்குனரும்  1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தனது வாடகை வீட்டில் இறந்துக் கிடந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று படவுலகம் பேசியது. அதிகமான மதுவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடித்துவிட்டதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் நடிகை மாலா சின்ஹாவுடன் புதிய படம் பற்றி பேச இருந்ததாக அவர் மகன் அருண் தத் கூறினார். இதனால் குருதத்தின் மரணம் இயற்கையான மிகையான குடியாலும் மாத்திரைகளாலும் நிகழ்ந்த மரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எது எப்படியோ 39 வயதில் ஒரு மகத்தான கலைஞன் மரணித்து விட்டான்.
1953ம் ஆண்டு கீதாதத் என்ற நடிகையும் பாடகியுமான பெண்ணை குருதத் மணமுடித்தார். அவர் அப்போது லதா மங்கேஷ்கருக்கு போட்டியாக கருதப்பட்டார். மூன்றாண்டு மண வாழ்வில் மூன்று குழந்தைகளை அவர்கள் பெற்றனர். தருண், அருண் மற்றும் நீனா. ஆனாலும் குருதத்தின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. அதிகமான புகை, மது  என்ற சகல கெட்டப் பழக்கங்களும் குருதத்தை ஆட்கொண்டதால் அவர் மனைவிக்கு கடும் அதிருப்தி நிலவியது. நடிகை வகீதா ரஹ்மானுடன் குருதத்திற்கு திருமணத்திற்கு பிறகு உறவு ஏற்பட்டதும் இந்த மணவாழ்க்கை முறிய ஒரு காரணமாக இருக்கக்கூடும். இறப்பதற்கு முன் குருதத்தும் கீதாவும் பிரிந்துவிட்டனர். கீதா தத்தும் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 41 வயதில் காலமானார்.
குருதத்தின் நெருங்கிய திரையுலக நண்பர்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான தேவ் ஆனந்த். குருதத் இயக்கிய சிஐடி போன்ற படங்களில் தேவ் நடித்தார். தமது சுயசரிதையில் குருதத்தின் மரணம் பற்றி தேவ் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். ரொமான்சிங் வித் லைப் என்ற அந்த புத்தகத்தில் தேவ் ஆனந்த் இவ்வாறு எழுதினார்
" குருதத் இறந்த செய்தி கிடைத்த போது படப்பிடிப்பை ரத்து செய்து கிளம்பி விட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் வீட்டுக்கு நேராக காரை செலுத்தினேன். நான்தான் முதலில் அங்கு சென்றேன்.  அவர் உடல் கிடந்த அறைக்கு நேராக சென்றேன். அங்கு வேறு யாருமில்லை. நானும் குருதத்தின் உடலும் மட்டுமே. அவர் முகம் நீலம் பாரித்து கிடந்தது. அவர் அருகே அவர் அருந்திய நீல நிற மதுக் கோப்பை பாதி நிரம்பிக் கிடந்தது. தன்னைக் கொல்ல அதைத்தான் அவர் குடித்திருந்தார். போய்வருகிறேன் நண்பா என்று அவர் கூறுவது போல் இருந்தது. என் இதயம் சுக்குநூறாக சிதறியது. அமைதியாக நான் என் காரை நோக்கி நடந்தேன். பின்னர் அவர் இறுதிச்சடங்கின் போது சிதையில் எரிக்கும் முன்பு நடிகர் ராஜ்கபூர் குருதத்தின் முகத்தை வாஞ்சையுடன் தடவினார். அப்போது ராஜ்கபூரின் முகத்தில் ஒரு துயரமான புன்னகை இருந்தது. குருதத்திற்கு பிரியா விடை கொடுத்துவிட்ட போதும் அவருடைய இழப்பை நான் திரையுலகில் எப்போதும் உணர்ந்தவண்ணம் இருக்கிறேன் "
குருதத்தின் வாழ்க்கை துயரமானது. அந்த துயரம் எதனால் ஏற்பட்டது என்பதை அவருடைய இரண்டு திரைக்காவியங்கள் வாயிலாக நம்மால் ஓரளவுக்கு அறிய முடியும். பியாசா, காகஸ் கே ஃபூல் ஆகிய இரண்டு படங்களும் குருதத்தின் வாழ்க்கையை சொல்லக் கூடியவை.
ஆனால் பியாசாவுக்கு காரணம் குருதத்தின் நண்பரும் கவிஞருமான சாஹிர் லுத்வியானி. சாஹிர் அமிருதா ப்ரீதம் என்ற பஞ்சாபி பெண் கவிஞரை காதலித்து அந்த காதல் முறிந்த நிலையில் அதை படமாக்க குருதத் விரும்பினார். பியாசா உருவானது. இதில் சாஹிர்தான் பாடல்களை எழுதினார். இசை மேதை எஸ்.டி பர்மன் இசையமத்தார். முகமது ரஃபி , ஹேமந்த் குமார், கீதாதத் குரல்களில் இப்படத்தில் ஒலித்த பாடல்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு காரணமாகின.
50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு கருப்பு வெள்ளைப்படம். மெதுவாக நகரும் காட்சிகள். நடனம், ஆடல் பாடல் இல்லை. ஜானி வாக்கரின் சில நகைச்சுவைக் காட்சிகள் தவிர பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை .ஆனாலும் ரசிகர்கள் பியாசாவை ரசித்தார்கள். இன்றும் கூட அந்தப் படம் உலக சினிமாக்களில் முதல் நூறு பட்டியலில் இடம்பிடித்து விடுகிறது. மிகச்சிறந்த இந்திப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இப்படம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. அந்தக்காலத்தில் கொல்கத்தாவில் அறிவு ஜீவிகள், படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தனர். இப்போதும் என்று கூறினால் மறுக்கமாட்டேன். அந்த அறிவுஜீவிகளுக்கு மகாகவி தாகூரின் தாக்கத்தால் கவிதைகளின் மீது அலாதியான ஆர்வம் இருந்தது. இப்படத்தில் விஜய் என்ற பாத்திரத்தில் ஒரு கவிஞனாகத்தான் குருதத் தோன்றினார்.





முதல் காட்சியில் ஒரு பூங்காவில் குருதத் படுத்துக் கொண்டு மலர்களையும் அதில் அமரும் வண்டையும் ரசித்து ஒரு கவிதை புனைவார். உங்கள் ஆனந்தமான உலகிற்கு தர என்னிடம் எதுவும் இல்லை. சில பெருமூச்சுகளும் சில துளி கண்ணீரையும் தவிர என்று அந்தக் கவிதையில் கூறுவான் விஜய். அப்போது யாரோ ஒரு கனவானின் தடித்த பூட்சு கால்கள் அந்த புல்தரையின் மீது அமர்ந்த வண்டை நசுக்கி விட்டுச் செல்லும்.
குடும்பத்தில் இரண்டு அண்ணன்களால் அவமதிக்கப்பட்டு தாயின் பாசத்தைக் கூட பெற முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான் , தனது கவிதை நோட்டுகளை தேடும் போது அண்ணன்கள் அதை பழைய பேப்பருடன் விற்று விட்டதாக தெரிவிக்கின்றனர். பழைய பேப்பர் கடையில் போய் விசாரி்த்தால் அதை யாரோ ஒரு பெண் விலை கொடுத்து வாங்கிவிட்டுச் சென்றதாக கடைக்காரன் கூறுகிறான்.
மற்றொரு கோப்புடன் பதிப்பாளரை சந்தித்து தமது கவிதைகளை அச்சிடக் கேட்கிறான். ஆனால் அந்த பதிப்பாளர் எனக்கென்ன பைத்தியமா உன் குப்பைகளை சுமக்க என்கிறான். ஆம் நீங்கள் கழுதை என்று எனக்கும் தெரியும் என்று வெளியேறுகிறான் விஜய்
விஜய் .பிழைக்கத் தெரியாதவன், சம்பாதிக்க முடியாதவன் சதா கவிதை எழுதி ஊர் சுற்றுகிறவன் என்று அவன் தூற்றப்படுகிறான். நண்பன் அறையில் அடைக்கலம் தேடி அங்கு அவன் ஒரு விலைமாதுடன் களிப்பதைக் கண்டு சாலையில் நடந்து செல்லும் போது ஒரு பெண் பாடுவதைக்கேட்கிறான். அது அவன் எழுதிய பாடல்தான். அந்தப் பெண்ணின் பெயர் குலாப். அவள் ஒரு விலை மாது. தனது கவிதை நோட்டு தேடி அவளைப் பின்தொடரும் விஜய் மீது அவள் நம்பிக்கை கொள்ளாமல் பணமில்லை என்று ஓசியில் சுகம் பெற வந்தவனாக நினைத்து அவமதித்து அனுப்பிவிடுகிறாள். அப்போது அவன் கையில் இருந்த காகிதக் கட்டில் இருந்து ஒரு தாள் கீழே விழுகிறது. அதில் அவன் கவிதை. அந்த கையெழுத்து அவளிடம் உள்ள நோட்டுப்புத்தகத்தில் உள்ள அதே கையெழுத்துதான். தான் அவமதித்தது உண்மையில் தான் மிகவும் மரியாதை வைத்துள்ள ஒரு மகத்தான கவிஞனை என்று உணர்ந்து வருந்துகிறாள் குலாப்
மறுநாள் ஒரு சாலையில் தன் முன்னால் காதலியை சந்திக்கிறான் விஜய். மீனா என்ற பெண் ஒரு காரில் இருந்து இறங்கிச் செல்கிறாள். அந்த காரில் சாமான்களை ஏற்றும் ஒரு பணியாள் கூலியை அழைக்க கோட்டு சூட்டு போட்ட படித்த இளைஞனான விஜய் கூலியை சுமக்க அவனிடம் ஒரு ரூபாய் துட்டை வீசி விட்டு போகிறான் பணியாள்.
ஓட்டலுக்குப் போய் சாப்பிட அமர்கிறான். பணம் வைத்திருக்கிறாயா என்று பாதி உணவின் போது கடை உரிமையாளர் கேள்வி கேட்க கையில் இருந்த நாணயத்தை வீசி எறிகிறான். இந்த காசு செல்லாது இது ஓட்டை விழுந்தது. வேறு இருக்கா என கடைக்காரர் ஏச வேறுபணம் இல்லாததால் பாதி உணவை பறித்து அவரை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் கடை ஊழியர்கள். அப்போது பணத்தை கொடுத்துவிட்டு அருகில் அமரும் குலாப் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பேசுகிறாள். தம்மையும் மரியாதையுடன் பேசும் ஒருவரை கண்டு அவள் கண்களில் ஈரம் சுரக்கிறது.
இதனிடையே ஒரு விழாவில் மேடையில் கவிதை பாட அழைக்கப்படுகிறான் விஜய். அவனை அழைத்தவள் மீனா- விஜய் காதலை அறிந்த தோழி. அவன் துயரமான கவிதையை வாசிக்க கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்து மகிழ்ச்சியாக ஏதும் பாடு என பணிக்கிறது. அப்போது விஜய் கூறுகிறான். இந்த சமூகம் எனக்கு என்ன தந்ததோ அதைத்தான் நான் திருப்பித் தரமுடியும்.
அப்போது கோஷ் என்ற முன்னணி பதிப்பாளர் ஒருவர் தனதுவிசிட்டிங் கார்டை கொடுத்து வந்து பார்க்குமாறு சொல்கிறார். மறுநாள் அவர் அலுவலகத்தில் அவன் செல்லும் போது அவர் வேலை போட்டுக் கொடுக்கிறார். கவிதைகளை அச்சிட அவன் கேட்கும்போது பார்க்கலாம் என மழுப்புகிறார். உண்மையில் அவருடைய நோக்கம் தனது மனைவியான மீனாவுக்கும் விஜய்க்கும் காதல் நீடிக்கிறதா என்பதை உளவு பார்ப்பதுதான்.
ஒருநாள் கோஷ் ஒரு கவியரங்கத்திற்கு விஜய்யை அழைக்கிறார்.அங்கு அவர் மனைவியும் விஜய்யின் முன்னாள் காதலியுமான மீனாவும் இருக்கிறாள். புகழ் பெற்ற கவிஞர்கள் பெண்களின் உடலைப் பற்றியும் மதுக்கோப்பைகளைப் பற்றியும் பாடுகிறார்கள். விஜய் ஒரு பாடலைப் பாடுகிறான்..
ஜானே ஓ கைசே லோக் தே ஜின்கோ பியார் கோ பியார் மிலா என்ற அற்புதமான பாடல் ஹேமந்த் குமார் இசையில் ஒலிக்கிறது.
காதலித்து காதலை அடைந்தவர்கள் எத்தகையவர்கள்....எனக்கோ மலர்கள் கேட்ட போது முட்களால் ஆன மாலைதான் கிடைத்தது.
ஒவ்வொரு துணையும் ஓரிரு அடி உடன் நடந்து விலகிப் போயினர்.பைத்தியக்காரனின் கையைப் பிடித்து நடக்க யாருக்கும் இங்கே நேரம் இல்லை.எனக்கோ எனது நிழல்கூட அந்நியமாகிப் போனது என்று அந்தப் பாடல் ஒலிக்கிறது. பாட்டு முடிந்ததும் மீனா தனியறையில் விஜய்யை சந்திக்கிறாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம். உனக்கோ வேலையில்லை, வருமானமில்லை, சதா கவிதைகளைத் தவிர வேறுசிந்தனையே இல்லை. உன்னால் என் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்திருக்காது என்று மீனா கூற அதனால்தான் பணக்கார பதிப்பாளர் ஒருவரை மணம் முடித்துக் கொண்டாயா என்று கேட்கிறான் விஜய். இங்கே நீ வரக்கூடாது. மறந்துவிடு என்றுஅவளுக்கு அறிவுரை கூறுகிறான்.நான் மணவாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை என்று அவள் அழுகிறாள். மகிழ்ச்சி என்பது அடுத்தவர்களின் சந்தோஷத்தில் கிடைப்பது. அது உனக்கு ஒருபோதும் புரியாது.அதனால்தான் நீ மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறாய் என்று விஜய் கூறுகிறான். அப்போது அவர்கள் உரையாடலை கதவுக்குப் பின்னே மறைந்து கேட்டுக் கொண்டிருக்கும் மீனாவின் கணவர் அவனை வேலையை விட்டு நீ்க்கி விடுகிறார்.
இதனிடையே குலாப்புடன் விஜய்க்கு நட்பும் காதலும் மலர்கிறது.ஆனால் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்திகளால் குடிபோதைக்கு அடிமையாகிறான். கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் அவன் பாடும் ஒருபாடல் முகமது ரபியின் அற்புதமான குரலில் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. சிவப்பு விளக்கு பகுதிகளில் உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், சகோதரிகளைத் தேடுங்கள் என்ற டால்ஸ்டாயின் சிந்தனை பாடலாக பரிணமிக்கிறது.களைப்படைந்த கொலுசுக் கால்கள், தபலா வாசித்து வீங்கிய விரல்களைப் பற்றி விஜய் கவலை கொள்கிறான். இந்தியாவைப் பற்றி பெருமை பேசுவோர் இங்கு வந்து பாருங்கள் என்கிறான்.
விஜய் ஒருநாள் இரவில் விரக்தியில் தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தை நோக்கி போகிறான். அப்போது பிச்சைக்காரன் ஒருவனுக்கு தனது கல்வி மற்றும் கௌரவத்தின் அடையாளமாக விளங்கும் கோட்டை தானமாக தருகிறான். ரயில் முன் பாய செல்லும்போது பின் தொடரும் பிச்சைக்காரன் தண்டவாளத்தின் இடுக்கில் சிக்கிக் கொள்ள அவனை மீட்க விஜய் போராட வேகமாக வந்த இரயிலில் இருவரும் அடிபட்டு விழுகின்றனர். பிச்சைக்காரன் செத்துப் போகிறான் .விஜய் சுயநினைவிழந்து எங்கோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். கோட்டை பார்த்து விஜய் இறந்துவிட்டதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.
விஜய்யின் கவிதைகளை அச்சிட நினைக்கும் குலாப் தனது நகைகளை கொடுத்து மீனாவிடம் பேசுகிறாள். அப்போது அங்கு வரும் மீனாவின் கணவர் கோஷ் விஜய்யின் கவிதைகளை அச்சிடுகிறார். விஜய்யின் மரணம் ஏற்படுத்திய அனுதாபத்தாலும் துயரம்மிக்க வரிகளாலும் விஜய்யின் கவிதைகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. வியாபாரிகள் தலைதூக்குகிறார்கள். விஜய்யின் நண்பன் ஷியாம் தன்னிடம் உள்ள விஜய்யின் கவிதைகளை கொடுத்து லாபத்தில் பங்கு கேட்கிறான். அதுவரை தம்பியை வெறுத்த இரு அண்ணன்களும் நாங்கள்தான் உரிமையாளர்கள் என பங்கு கேட்டு வருகிறார்கள். போட்டி பதிப்பாளர்கள் அவர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்.





இந்நிலையில் விஜய்க்கு சுயநினைவு திரும்புகிறது. தனது கவிதைகளை நர்ஸ் ஒருத்தி படிப்பதைக் கண்டு தான் விஜய் என்று அவன் கூறுகிறான். ஆனால் மருத்துவர்கள் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவனாக கருதுகிறார்கள். தகவல் அறிந்து அங்குவந்து விஜய் உயிருடன் இருப்பதை அறிந்த கோஷ் அவன் இறந்துவிட்டதாகவே இருந்தால்தான் கவிதைகள் விற்கும் என்று கணக்குப் போடுகிறார். அவனை அடையாளம் தெரிந்தவர்களை விலைக்கு வாங்குகிறார். நண்பன், சகோதரர்கள் உட்பட யாருமே விஜய்யை அடையாளம் காண மறுத்துவிடுகிறார்கள். விஜய்க்கு நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் தோன்றும் விஜய் உருக்கமாக ஒரு பாடல் பாடுகிறான்.







இங்கு நட்புக்கு மதிப்பில்லை. அன்புக்கு மதிப்பில்லை, காதலுக்கு மதிப்பில்லை. காதலும் இங்கு ஒரு வியாபாரம்....இது உங்கள் உலகம் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எரித்துவிடுங்கள் இந்த உலகை என்று அவன் பாடுகிறான்.  மனநலம் பாதித்த ஒருவன் விஜய்யின் புகழை களவாட வந்திருப்பதாக கருதி மக்கள் அவனை அடித்து விரட்டுகிறார்கள். விஜய்யை அவன் தோழி குலாப்பும் நண்பர் ஜானி வாக்கரும் சந்திக்கிறார்கள் ,விஜய் தன் அடையாளத்தை மீட்க வேண்டும் என்கிறார்கள். போட்டி பதிப்பாளர் உதவ முன்வருகிறார். மீண்டும் விஜய்யின் நண்பன் ஷியாமும் சகோதரர்களும் விலை பேசப்படுகிறார்கள்.
பெரும் திரளாகக் கூடிய கூட்டத்தில் அவன்தான் விஜய் என நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நான் விஜய் இல்லை என்றுவெளியேறுகிறான் விஜய். அதற்கு அவன் ஒரு விளக்கம் கூறுவான். எனக்கு எந்த ஒரு தனிநபர் மீதும் கோபம் கிடையாது.நண்பனை நண்பனாகவும் சகோதரனை சகோதரனாகவும் இருக்க விடாத இந்த பொருளிய சமூகம் மீதுதான் எனக்குப் புகார் என்கிறான் விஜய் .படத்தில் உயிர்நாடியான வசனங்களை எழுதியவர் ஆப்ரர் ஆல்வி.
அந்த ஊரை விட்டே அவன் தன் தோழி குலாபுடன் வெளியேறுகிறான்.
படத்தின் ஒரு காட்சியில் , குழாய் நீரை திறந்து விஜய் தண்ணீர் குடிக்க முயற்சிப்பதை மீனா காரில் இருந்தபடி பார்க்கிறாள். குழாயில் தண்ணீர் வரவில்லை. விஜய் தாகத்துடன் நடந்து செல்வதை பார்க்கிறாள். அவன் தாகமாக இருக்கவே சபிக்கப்பட்டவன். அவளோ மனசாட்சியையும் காதலையும் விற்று விட்டு காரில் செல்ல விதிக்கப்பட்டவள். ஒவ்வொரு வெற்றியடைந்த மனிதனின் பின்னாலும் தோல்வியுற்ற ஒரு மனிதனின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. இதுதான் பியாசா சொல்லும் பாடம்.
--------------------------------------------------------------------------------------------------

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...