Tuesday 6 October 2020

வேலை வேலை வேலை தேடித் தேடி ....

என் ஆயுளின் பாதியை ஜவுளிக்கடை களில் கழித்து விட்டேன்.37 வயது வரை என் மாதச் சம்பளம் ₹3000 தான். ஒரு கட்டத்தில் வேலையில்லாமல் சிரமப்பட்டு கிடந்த போது பிலிமாலயா ஆசிரியர் எம்.ஜி.வல்லபனை கோடம்பாக்கம் அலுவலகத்தில் சந்தித்து வேலை கேட்டேன்.மிகுந்த அன்புடன் விசாரித்து வேலை இல்லை என்றார்.நீங்கள் ஒரு சிறந்த இலக்கியவாதி நிறைய படிக்கக் கூடிய அறிவாளி உங்களுக்கு வேலை கொடுத்து நாளை பத்திரிகை பேட்டிக்காக கவுண்டமணி அல்லது செந்திலிடம் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேதைமை புரியாது.தாங்கள் வெற்றி பெற்று விட்டதால் தங்களை பெரிய மேதைகளாக கருதி அவர்கள் உளறுவதையெல்லாம் நீங்கள் எழுதி வரவேண்டும். அதுவும் படப்பிடிப்பு தளத்துக்குப் போனால் ஒரு வாய் தண்ணீர் கூட தராமல் கடும் வெய்யிலிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பார்கள். உங்கள் வாழ்க்கையை இந்த திசை நோக்கி திருப்பி விட நான் விரும்பவில்லை .பணம் தேவையென்றால் உதவுகிறேன் என்று கூறி மேஜை டிராயரில் இருந்து நூறு ரூபாய் தாள்கள் இருபதை எண்ணி வைத்தார். அவரை கையெடுத்து கும்பிட்டு எனக்கு பஸ்சுக்கும் சாப்பாட்டுக்கும் நூறு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டேன். இன்னொரு முறை பிரபஞ்சன் ஒரு பரிந்துரை கடிதம் எழுதிக் கொடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். கோடம்பாக்கம் குங்குமம் அலுவலகம் சென்று ஆசிரியர் சாருப்ரபா சுந்தரை பார்த்து பிரபஞ்சன் தந்த கடிதத்தை கொடுத்தேன். உங்களுக்கு எழுத்தாளர்களை தெரியுமல்லவா...அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் கையால் சமைக்க வைத்து அந்த சமையலின் ருசி செய்முறை எல்லாம் எழுதி வாருங்கள். முதலில் ஜெயகாந்தன் வீட்டுக்கு போகலாம் என்றார் சாருப்ரபா . இதைவிட கவுண்டமணி செந்தில் பேட்டி எடுப்பது தேவலாம் என்று எண்ணிக் கொண்டேன். சார் ஜே.கே.யிடம் பேட்டி எடுக்கலாம். சமைக்க சொன்னால் கோபத்தில் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாலும் அறைந்து விடுவார் என்று சொல்லிப் பார்த்தேன். வேண்டும் என்றால் நடிகர் நடிகைகளிடம் கேட்கலாம் என்றேன். ஜே.கே இல்லைன்னா சுஜாதா, வைரமுத்து என்று யாரிடமாவது கேட்டு எழுதி வாங்க என்றார் சாருப்ரபா. ஜெயகாந்தன் வீட்டுக்கு போன் போட்டு பேசினேன்.நான் நினைத்ததைப் போலவே கோபத்தில் கர்ஜித்தார்.அடுத்து அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதற்கு முன்பு பயந்து போனை வைத்து விட்டேன்.வைரமுத்து விடம் பேசினேன். தமக்கு நேரமில்லை என்று நாகரீகமாக மறுத்து விட்டார். அடுத்து கடைசி முயற்சியாக சுஜாதாவுக்கு போன் செய்தேன்.இந்த ஐடியாவை யார் தந்தது என்று கேட்டார். சாருப்ரபா என்று சொன்னதும் அவனுக்கு என்ன பைத்தியமா.. அந்த முட்டாளிடம் நான் முட்டாள் என்று திட்டியதாக சொல்லுங்கள் இது போன்ற முட்டாள்களிடம் வேலை செய்யாதீர்கள் என்று போனை வைத்து விட்டார். நான் சுஜாதா திட்டியதை கூறாமல் வேலை வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டேன்.பிரபஞ்சனிடம் நடந்ததை சொன்ன போது மிகவும் வேதனைப்பட்டார் .பல ஆண்டுகள் கழித்து புரசைவாக்கம் பாலம் கட்டப்பட்டதால் என் சிறிய ஜீன்ஸ் கடையில் வியாபாரம் சரிந்தது கழுத்து வரை கடன்கள் ஏறியதால் மீண்டும் வேலை தேடல். ஒருமுறை நண்பர்,எழுத்தாளர் திலீப்குமார் வீட்டுக்கு ஜெயமோகனுடன் போன போது ஜெகதீஷ்க்கு எங்கேயாவது ஒரு வேலை வாங்கி தர முடியுமா என்று ஜெயன் கேட்க திலீப்குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த ஒரு விளம்பரத்தை தந்து விண்ணப்பிக்க சொன்னார்.அது என்.டி.டி.வி நிறுவனத்திற்கான பணி. இன்டர்வியூவிற்கு அழைத்தனர் . அன்று என்னிடம் போடுவதற்கு ஒரு நல்ல சட்டைகூட இல்லை.கொடியில் காய்ந்த ஈரமான ஒரு கருப்புச் சட்டையைப் போட்டு கையில் இருந்த 30 ரூபாயுடன் பஸ் பிடித்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலக முகவரிக்குப் போனேன். ஊடகத்துறை யின் ஜாம்பவான் பிரணாய் ராய்தான் இன்டர்வியூ நடத்திக் கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில்கேட்ட முதல் கேள்வி கம்ப்யூட்டர் இயக்கத் தெரியுமா? சார் ஐ ஆம் எ புவர்மேன்.என் வாழ்க்கையில் இப்பொழுது தான் ஒரு கம்ப்யூட்டரை பார்க்கிறேன் என்றேன்.அசந்து விட்டார் பிரணாய் ராய்.ABCD தெரியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்க தெரியும் என்று கூறினேன். ஒன் டூ த்ரீ தெரியுமா என்று கேட்க தெரியும் என்றேன் . Computer is nothing but abcd and 123 I will teach you to operate a computer என்று கூறிய பிரணாய் ராய் என் தமிழ் அறிவை சோதிக்க இன்னொரு நபரிடம் அனுப்பினார். அவர் தற்போது ஏ.என்.ஐ.யில் பணிபுரியும் மூத்த செய்தியாளர் மணி .அவர் என்னைப் பார்த்ததும் ஓ ஜெகதீஷா.. எப்படி இருக்கீங்க என்று கைகொடுத்தார். You know him என்று மணியிடம் பிரணாய் கேட்டார்.யெஸ் சார் என்று கூறிய மணி தமிழின் ஒரு சிறந்த எழுத்தாளர் நம்மிடம் வேலை தேடி வந்திருக்கிறார் என்று கூறினார். மணியை பல முறை ஜெயகாந்தன் வீட்டில் சந்தித்திருந்தேன்.ஜே.கே .நான் படிப்பாளி என அறிந்து பாராட்டுவதை மணி அறிந்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் விஜய் டிவி செய்திகளுக் காக எனக்கு வேலை உறுதியானது.முதலில் 4 மணி நேர பகுதிநேர வேலைக்கு என ₹ 4000 சம்பளம் தந்தனர். பின்னர் முழு நேர வேலையாக ₹ 14000 வரை கிடைத்து 4 ஆண்டுகள் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன்.இந்தியாவின் மிகப் பெரிய ஜாம்பவான்கள் ராஜ்தீப் சர்தேசாய்,பர்கா தத்,சுனில் பிரபு,சஞ்சய் பின்ட்டோ,ஜெனிஃபர் அருள் போன்றவர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி,பாத்திமா பாபு,நீயா நானா கோபிநாத்,முருகேஷ்,சுசி திருஞானம், மலர்விழி,மோசஸ் ராபின்சன், ஃபீலிக்ஸ் ஜெரால்டு,மதிவாணன், போன்ற துடிப்பு மிக்க ஒரு டீமுடன் பல ஆண்டுகளுக்கு நட்புடன் பணியாற்றினேன்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...