Sunday 4 October 2020

எஸ்.பி.பியும் கே.பாலசந்தரும்.

ஆயிரம் நிலவே வா 5 எஸ்.பி.பியும் -கே.பாலசந்தரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் , ஜேசுதாஸ் ஆகிய இரண்டு பெரிய பாடகர்களை உருவாக்கியதில் இயக்குனர் கே.பாலசந்தருக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய பாலசந்தர் தாம் முதலில் இயக்கிய நீர்க்குமிழி படத்தில் இருந்து தொடர்ந்து சில படங்களில் டி.எம்.எஸ். சீர்காழி. ஏ.எல்.ராகவன், பிபி.ஸ்ரீநிவாஸ் போன்ற பாடகர்களை பாட வைத்தார். எஸ்.பி.பியை கண்டடைந்த படம் நவக்கிரகம். ஜெய்சங்கர் லட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் எஸ்.பி.பி. சுசிலாவுடன் இணைந்து பாடிய உன்னைத் தொட்ட காற்றுவந்து என்னைத் தொட்டது என்ற இனிமையான பாடல் இடம்பெற்றது.வி.குமார் இசையில் பாடலை வாலி எழுதினார். ஆரம்பம் இன்றே ஆகட்டும்...ஆறேழு நாட்கள் போகட்டும் என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் காவியத் தலைவியில் எஸ்.பி.பி.பாடினார். கண்ணதாசன் பாடலுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் தொடர்ந்து பாலசந்தரின் படங்களில் எஸ்.பி.பிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மீண்டும் ஜெய்சங்கர்-லட்சுமி ஜோடிக்கு அரங்கேற்றம் படத்தில் ஆரம்ப காலத்தில் பயமிருக்கும் அம்மம்மா அதிலே சுகமிருக்கும் பாடலை அளி்த்தார் வி.குமார். பாடலாசிரியர் கண்ணதாசன். அந்த காலத்தில் புகழ் பெற்ற ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் இணைந்து நடித்த நான்கு சுவர்கள் படத்தில் எஸ்.பி.பி.க்கு இரண்டு பாடல்கள் .கே.பாலசந்தர் இயக்கிய முதல் வண்ணப்படமும் அதுதான். இந்தப் படத்தில் ஓ மைனா என்று ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலானது. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வி.குமார் இசையில் வாலி எழுதிய கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு என்று எஸ்.பி.பி. ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார். அதன்பிறகு கமல்ஹாசன் நடிக்க பலகுரல் மன்னன் சலனுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை எஸ்.பி.பியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது புரிந்ததம்மா என்ற இறுதி வரிகளை எஸ்.பி.பி. ஒரு சுய தன்னிரக்கம் தொனித்த சிரிப்புடன் முடிப்பார். அதே போல் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்த ஒரு ஆலமரம் என எஸ்.பி.பி கதை சொல்லும் பாணியில் பாடுவதும் பல்லாக்கு யானைகள் பரிவட்டம் போட்டதை விவரிக்கும் போதும் தமது குரலால் மாயாஜாலம் செய்து அனைவரையும மகிழ்வித்தார். நான் அவனில்லை படத்தில் எஸ்.பி.பி- கோரஸ் இணைந்து பாடிய ஹரே நந்தா ஹரே நந்தா கோகுல பாலா என்ற கவியரசரின் பாடல் எம்.எஸ்.வி இசையில் மிகப்பெரிய ஹிட். அந்தப் பாடல் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. மன்மத லீலையில் கமல்ஹாசனுக்கு இரண்டு பாடல்களை எஸ்.பி.பி பாடினார். மன்மத லீலை என்ற டைட்டில் பாடல். அதை விட சுகம்தானா சொல்லு கண்ணே என்ற கிளைமேக்ஸ் பாடலை எஸ்.பி.பி. பிசுசிலாவுடன் பாடினார். மிகவும் இனிமையான இந்த பாடல் கவனம் பெறாமல் போனது வருத்தமானது. பட்டினப் பிரவேசம் படத்தில் வயலின் இசையில் எஸ்.பி.பி பாடிய வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா பாடல் ஒரு அற்புதம். ரஜினி நடிப்பில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய தப்புத்தாளங்கள் என்ற டைட்டில் பாடலையும் என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற பாடலையும் கே.பாலசந்தர் படத்தில் எஸ்.பி.பி பாடினார். நூல்வேலியில் நானா பாடுவது நானா, 47 நாட்களில் மான் கண்ட சொர்க்கங்கள் ,அக்னி சாட்சியில் சரிதாவுடன் இணைந்து பாடிய கனா காணும் கண்கள் மெல்ல போன்ற பாடல்கள் எஸ்.பி.பியின் அற்புதமான அவதாரங்கள். நிழல் நிஜமாகிறது படத்தில் எம்.எஸ்.வி இசையில் கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ என பாடிய பாடல்களும் இனிமையானவை. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்து , தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே பாடல்களை எஸ்.பி.பி மிகுந்த உருக்கத்துடன் பாடி நம்மை பரவஸப்படுத்தினார். இப்படத்தில் கண்ணதாசனின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலும் அற்புதமானது. தில்லுமுல்லு படத்தின் டைட்டில் பாடலையும் ராகங்கள் பதினாறு நான் பாட பாட்டையும் ரஜினிக்காக பாடினார் எஸ்.பி.பி. அவர்கள் படத்தில் அங்கும் இங்கும் பாதை உண்டு என்ற பாடலையும் ஜூனியர் ஜூனியர் பாடலையும் எஸ்.பி.பி பாடினார். இந்த இரண்டு பாடல்களும் எத்தனை அற்புதமானவை என்று கேட்டு மகிழ்ந்தவர்களுக்குத் தெரியும். அச்சமில்லை அச்சமில்லையில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் ஈரோடு தமிழன்பனின் கையில காசு வாயிலே தோசை பாடலையும் ஆவாரம்பூ ஆரேழு நாளா என்ற வைரமுத்துவின் பாடலையும் பாடி புகழ்பெறச் செய்தார் எஸ்.பி.பி. உன்னால் முடியும் தம்பியில் புலவர் புலமைப்பித்தன் பாடல்களை இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, உன்னால் முடியும் தம்பி, அக்கம்பக்கம் பாரடா பாடல்களுடன் முத்துலிங்கம் எழுதிய இதழில் கதை எழுதும் நேரமிது என்ற இனிய டூயட்டையும் எஸ்.பி.பி. சித்ராவுடன் பாடினார். அழகன் படத்தில் மம்முட்டிக்காக சாதி மல்லிப் பூச்சரமே என்ற இனிய பாடலை புலவர் எழுத பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இசை மரகதமணி புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கேளடி கண்மணி பாடகன் சங்கதி , கல்யாண மாலை ஆகிய பாடல்களுடன் மேலும் சில பாடல்களை எஸ்.பி.பி பாடினார் .இசை இளையராஜா. டூயட் படத்தில் என் காதலே என் காதலே என்ற பாடலையும் அஞ்சலி அஞ்சலி பாடலையும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இப்பாடல்கள் இன்றளவும் புகழுடன் விளங்குகின்றன. பாடலாசிரியர் வைரமுத்து எல்லாவற்றுக்கும் மேலாக மரகதமணி இசையில் எஸ்.பி.பி பாடிய அழகான இரண்டு பாடல்கள் இங்கு தனியாக குறிப்பிட வேண்டும். வானமே எல்லை என்ற இந்தப் படத்தில் நீ ஆண்டவனா தாய்தந்தை தான் உனக்கில்லையே பாடலையும் ஜணகன மண சொல்லி ஜதி சொல்லும் நேரம் என்றும் பாடிய எஸ்.பி.பி ஏன் அழ வேண்டும் என்று கேட்டு பூமிக்கு நன்றி சொல்லி புறப்பட்டுவிட்டார். ------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...