Thursday 28 June 2018

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கிறது என்று டி.எம்.எஸ் பாடிய 5 லட்சம் படப்பாடல் கேட்டிருப்பீர்கள். இப்போது வளையல்களைக் குலுங்க குலுங்க யாரும் போடுகிறார்களா தெரியவில்லை. ஆனால் பெண் வாசனை எங்கும் உண்டு.
இருசக்கர வாகனங்களில் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து பருத்த தொடைகளை காலின் வளைவுகளை சதைக் கோளங்களை அல்குல் இணையும் இடத்தை புட்டத்தை காட்டி விட்டு விர்ரென பறக்கும் மங்கையரை துரத்துவது வேடிக்கையான விளையாட்டாகப் போய் அது மோகத்தீயாகி விடுகிறது.
பெண் ஒரு போகப்பொருளாக ஏன் தன்னை ஆக்கிக் கொள்கிறாள் என்று புரியவில்லை. பார் பார் என் உடலை என்று அத்தனை விதமாக அதை ஆண் பார்வைக்கு படையல் வைக்கிறாள். ஜீன்ஸ், டைட் லெகிங்ஸ்,மினி ஸ்கர்ட் இப்போது ஷார்ட்ஸ் கூட போடுகிறார்கள். சேலை கட்டினாலும் இடுப்பை தாராளமாக காட்டுவதும் முதுகு தெரிய ரவிக்கை அணிவதும் இயல்பானதாகி விட்டது.
அண்மையில் மலையாள பத்திரிகையின் அட்டைப்படத்தில் திறந்த மார்புடன் பாலூட்டும் ஜில்லு ஜோசப் என்ற மாடல் பெண்ணின் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஆபாசம் பார்ப்பவரின் பார்வையில் இருக்கிறது என்று தீர்ப்பளித்தார். தமிழக அரசோ பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறையைக் கட்டிக் கொடுத்துள்ளது.
பத்திரிகைகள், இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் என பல இடங்களில் பிகினி அணிந்த பெண்கள், டாப்லெஸ் நடிகைகள் என நாளொரு மேனி பொழுதொரு வண்ணம். அதிலும் இலியானாவின் டூ பீஸ் நீச்சலை பார்க்காதவர்கள் துரதிர்ஷ்ட்டசாலிகள்.
மோகத்தை எப்படிஅடக்குவது....பெண்ணுடன் உடல் உறவு அத்தனை சுலபமல்ல.பலவித மன உளைச்சல்களைத் தரக்கூடும். 
காமுகன் பட்டம் தரும் .பணத்தை செலவழிக்க வைக்கும். பொய்யான காதல் நாடகமாட வைக்கும். பாலியல் வழக்குகளில் அலைய வைக்கும். 
எனில் எதற்காக என்னைத் தூண்டுகிறாய் பெண்ணே.....
ஜஸ்ட் லைக் தட் செக்ஸ் ஓகே எனக் கூறும் பெண்ணிடம் பயம் வருகிறது. அப்படியொரு பெண்ணை பார்க்கவில்லை என்றாலும். 

முகநூலில் நட்புடன் ஒரு பெண் பழகினால் அடுத்து அவள் தொலைபேசி எண், நேரில் சந்திப்பதற்கான ஒரு தேதி, என அடுத்த கட்டத்திற்கு வேகமாக போய் விடுகிறோம். 
13 வயதுப் பெண் ஒருத்தி என்னை சந்திக்க வருவதாக தேதி .இடம் குறித்துவிட்டாள். நான் போகாமல் தவிர்த்து விட்டேன். அவளை என் முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து நீ்க்கினேன். 
இதுவே 30 வயதுப் பெண்ணாக இருந்தால் போயிருக்கக் கூடும்.

எப்போதும் மனசாட்சி சுத்தமாக இருக்குமா எனத் தெரியவில்லை. 
மோகத்தீ என்னை எரித்துக் கொன்று விடும் போலிருக்கிறது.

பெண் என்பவள் ஸ்பரிசம், சுகம் எனக்கு பழகியதுதான் என்றபோதும் கடந்த பல ஆண்டுகளாக அதற்கு ஏங்கியபடிதான் வாழ்க்கை கழிகிறது.
அதற்குக் காரணம் உடலைத் தாண்டி மனதுக்குள் ஒரு பசி இருக்கிறது என்று கூறினால் அது பொய்யல்ல.
பணம் தந்து பேரின்பம் தரும் மசாஜ் சென்டர்களின் அழைப்பு தொலைபேசியில் தினமும் குறுஞ்செய்தியாக வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அணுகியதில்லை.
மும்பையில் காமதிபுராவிலும் புனேயில் சுக்கரவார்ப்பேட்டையிலும் வரிசையாக சாலையில் நிற்கும் பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னையிலும் அண்ணா நகர், தங்கசாலை பகுதிகளில் பேருந்து நிலையத்தில் அழைத்த அழகான பெண்களை ஏனோ அணுகாமல் ஓடி வந்துவிட்டேன்.

அப்படியானால் பெண்ணை நான் விரும்பவில்லையா என்றால் அதிகமாக விரும்புகிறேன் என்றுதான் பதிலளிப்பேன்.

நான் அதிகமாக விரும்பும் ஒரு பெண் என்னை அழைத்தால் என்னால் எப்படி மறுக்கமுடியும். அப்படி நான் நேசிக்கக் கூடிய பெண்ணைத்தான் இத்தனைப் பெண்களிடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ

Tuesday 26 June 2018

படித்தது- யுகபாரதியின் தெருவாசகம்

யுகபாரதியின் தெருவாசகம்

நண்பர் கவிஞர் யுகபாரதியின் தெருவாசகம் கவிதைத் தொகுப்பை படிக்க நேர்ந்தது. உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தொகுப்பு. விகடனில் தொடராக வந்து புத்தகம் ஆகியுள்ளது.

யுகபாரதியின் மனப்பத்தாயம் படித்திருந்தேன். தஞ்சை ப்ரகாஷின் ஆசி பெற்ற கவிஞர் என்று அவர் மீது பிரியமும் உண்டு. ஆனால் கவிதைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இளம் வயது, படிப்பு அனுபவம் குறைவு போன்ற காரணங்கள் இருந்தாலும் பழனிபாரதி அறிவுமதி நா.முத்துக்குமார் வகையறாவில் சேராமல் தனித்து இருக்க வேண்டும் என ஆசை. அது அளித்த ஏமாற்றத்தால் பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசும் போது யுகபாரதியின் கவிதைகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும். இப்போதுள்ள நிலையில் இந்தக் கவிதைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று நான் பேசினேன். இந்த விமர்சனத்தால் மேடையில் இருந்த ஆண்டாள் பிரியதர்சினி கொதித்து எழுந்தார். அதை தீர்மானிக்க நீங்கள் யார். காலம் தீர்மானிக்கட்டும் என்று பேசினார். நான் சொன்னேன்.நான்தான் காலம். காலம் என் வாய் வழியாகத்தான் பேசுகிறது.நாங்கள்தான் தீர்மானிக்கிறோம் என்று.
இறுதியாகப் பேசிய நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் , நான் அறிந்தவரை செந்தூரம் ஜெகதீஷ் சிறந்த படைப்பாளி நிறைய படிக்கக் கூடியவர்.கவிதைகளின் தரம் அறிந்தவர் அவர் விமர்சனம் நியாயமாக இருக்கும். தவிர யுகபாரதி மேல் அவருக்கு எந்த காழ்ப்புணர்வும் கிடையாது. அவர் கருத்தை நாம் ஏற்கிறோமோ இல்லையோ அதற்குரிய மதிப்பு தரப்பட வேண்டும் எனப் பேசினார்.
தெருவாசகம் தொகுப்பிலும் அதே கருத்தைத்தான் மீண்டும் கூற வேண்டியிருக்கிறது. கவிதைகள் எனில் பிரம்மராஜன், பிரமிள், பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், அபி,  பசுவய்யா, ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், தேவதேவன்,  சுகுமாரன், வில்வரத்தினம், சேரன், வ.ஐ.செ.ஜெயபாலன், ராணிதிலக், யூமா வாசுகி, லட்சுமி மணிவண்ணன், கண்டராதித்தன், காலபைரவன், விக்ரமாதித்யன், சங்கர் ராமசுப்பிரமணியன், கல்யாண்ஜி, கலாப்ரியா, நகுலன், ஷண்முகசுப்பையா, சி.மணி, கௌரிஷங்கர்,  என என்னிடம் ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் யுகபாரதி இல்லை. ஆனால் அப்துல்ரகுமான், மு.மேத்தா,வைரமுத்து, நா.காமராசன், எஸ்.அறிவுமணி, மீரா, புவியரசு, சிற்பி என்று இன்னொரு பட்டியல் போட்டால் அதில் யுகபாரதிக்கும் முக்கியமான இடம் உண்டு. பிரச்சினை அவர் எந்தப் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்பதுதான். தஞ்சை ப்ரகாஷ் போன்ற நுட்பமான படைப்பாளியிடம் பழகி அவர் வழியாக வளரக்கூடிய இளம் கவிஞர் என்றுதான் யுகபாரதியை நினைத்திருக்கிறேன்.

அவர் எழுதிய சினிமா பாடல்களில் காதல் பிசாசே (ரன்) கண்ணம்மா, கண்ணை காட்டு போதும் ( றெக்கை) கூடை மேல கூடை வச்சு , பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், செந்தூரா செந்தூரா போன்ற பாடல்களை நான் பலமுறை விரும்பிக் கேட்கிறேன் .அவர் மிகச்சிறந்த பாடலாசிரியராக மலர்ந்துவிட்டார். மகிழ்ச்சிதான். வைரமுத்துவும் நல்ல பாடலாசிரியர்தான்.ஆனால் கவிதை மதிப்பீட்டில் அவர் எங்கே இருப்பார் என்பதை காலத்திடமே விட்டுவிடுகிறேன் .காலத்தின் குரலாக நான் பேசினால் பலர் சண்டைக்கு வருவார்கள்.

தெருவாசகம் தொகுப்பிலும் கரகாட்டக்காரி முதல் இஸ்திரி போடுபவன், போக்குவரத்து காவலர், உதவி இயக்குனர் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்நிலையை கவிதையாக்க முயற்சித்துள்ளார் .எஞ்சியது வெறும் சொல் வளமும் ஓசை நயமும்தான் .கவிதைக்கான பாதையில் அவர் பயணித்தாலும் அதன் இலக்கை அவர் எட்டவில்லை. 

நீ என்ன பெரிய கவிஞனா என்று கேட்பது தெரியும். ஒரு கவிதை உதாரணம் சொல்லவா....
பயணங்கள் என்றொரு கவிதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமானது. எனது அந்தக் கவிதை தொகுப்பிலும் இடம் பெற்றது. கவிதை சாதாரணமானதுதான் . ஓடும் பேருந்துகளில் ஒரு சேல்ஸ்மேனாக நான் பயணித்த அனுபவம்தான் கவிதை. ஆனால் அது கவிதையாகி விடாது. அதனால்தான் இறுதி வரியை இப்படி அமைத்தேன்

ஓடும் சக்கரங்களில் ஒருகணம் ஓடாமல் மனத்தை இருக்க செய்தபடி தொடர்கின்றன எனது பயணங்கள் 

இங்குதான் கவிதை எட்டிப்பார்க்கிறது. ஒரு அனுபவம் அகவயப்படும்போது புறம் அகமாகும்போது கவிதை பூக்கிறது. 





படித்தது -சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள்

படித்தது

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள் 




சுஜாதா எழுதிய பழைய கட்டுரைகளின் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் சின்ன சின்ன கட்டுரைகள் என வெளியிட்டது. பழைய எனக் குறி்ப்பிடுவதன் காரணம் கணையாழியில் 80 களில் படித்த ஒரு கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது.
டெலிவிஷனில் இரண்டு சானல் வந்துவிட்டது. முதல் சானலில் ராஜீவ் காந்தியும் இரண்டாவது சானலில் ராஜீவ் காந்தியும் காட்டுகிறார்கள் ..... என்று உள்ளது.
இப்போதைய தொலைக்காட்சியில் ஆயிரம் சேனல்களுக்கு மேல் உள்ளன. ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன.
இதே போன்று புதுக்கவிதை, கம்ப்யூட்டர் போன்ற கட்டுரைகளும் அலாதிப் பழையது. புதுக்கவிதையின் கைடு போல் தன்னை நினைத்துக் கொண்டு அபத்தமாக எதையாவது உளறுவது சுஜாதாவின் வாடிக்கை. அப்படித்தான் இதில் உள்ள புதுக்கவிதை கட்டுரையில் கவிதைக்கு நான்கு மரபுகள் இருப்பதாக கூறியுள்ளார்.
மோஸாட்டின் வாழ்க்கையை சித்தரிக்கும் உலக சினிமாவான அமேடியன் பற்றிய கட்டுரை சிறப்பு.
தான் பார்த்த திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், நியுயார்க் அனுபவங்கள் என பல பதிவுகளை சுஜாதா இதில் செய்துள்ளார்.
தமது கதைகள் திரைப்படமாக்கப்பட்ட அனுபவம் பற்றிய சுஜாதாவின் வரிகள் அவருக்கே உள்ள நகைச்சுவை கலந்த ஐரனியுடன் (irony )எழுதப்பட்டுள்ளன.
விக்ரம் படம் உருவான கதையை அவர் விவரித்துள்ளார் .கமல் கதை கேட்ட விதம், ராஜசேகர் சுஜாதா கமல் மூவரும் விக்ரமுக்காக சீன் சீனாக யோசித்து எழுதிய அம்புலிமாமா கதை என சுஜாதாவின் விளையாட்டை ரசிக்கலாம். அம்ஜத்கான் ,ஜனகராஜ் காமெடி தமாஷாக இருந்ததாம். சகிக்கவில்லை படத்தில்.
இதே போல் தமது கரையெல்லாம் செண்பகப்பூ கதை ஆனந்த விகடனில் தொடராக வந்து முடிந்த போது அந்தக் கதையை படமாக்க உரிமம் கேட்டு ஒரு கிரிக்கெட் டீம் அளவுக்கு தயாரிப்பாளர்கள் தமது வீட்டை வட்டமிட்டதை எழுதிய அவர் காகித சங்கிலிகள் சாவியில் வந்த போது நேரிட்ட அனுபவத்தை விவரிப்பது கிளாஸ்.
முதலில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கமல் அம்பிகா முதலிரவு காட்சியுடன் படமானது. ஆட்டுக்கிடா வெட்டும் காட்சியும் வந்தது. கதையில் ஆட்டுக்கிடா இல்லையே என பஞ்சுவிடம் விசாரித்த போது அது காமெடி டிராக் என விளக்கம் தரப்பட்டதாம். படத்தில் அதை இதை என எதை எதையோ மாற்றி விட்டார்கள். கடைசியில் அது என் கதையே இல்லை என சுஜாதாவே சந்தோஷமாக கை கழுவிவிட்டாராம்.
இரண்டாவதாக இதே கதையை படமாக்க சி.வி.ராஜேந்திரன் வந்தார். லீகல் பிரச்சினைகள் வராமல் இருக்க பஞ்சு அருணாசலத்திடம் பேசி அக்கதையை சுலக்சணாவை வைத்து படமாக்கினார்கள். வைரமுத்து பொய்முகங்கள் என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப உருகி உருகி அத்தனை பொய்முகங்களையும் பட்டியலிட்டு பாடல் எழுதினார்.
மூன்றாவதாக ஒருவர் காகிதச் சங்கிலிகள் கதையை படமாக்க தொலைபேசியில் அழைத்த போது சுஜாதா என்ன செய்தார்? ராங் நம்பர் எனக் கூறி தொலைபேசி வயரையே பிடுங்கி எறிந்துவிட்டாராம்.
பழைய சோறுதான் ஆனால் ஆங்காங்கே பச்சைமிளகாய் போல் சுஜாதா டச் இல்லாமல் இல்லை.

Sunday 24 June 2018

கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன்

இன்று கண்ணதாசன் -எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்

24 ஜூன்
கண்ணதாசன் பாடல்களுடன் வளர்ந்தவன் நான். அந்தப் பாடல்களுக்கு இசையமைத்து என் மனம் கவர்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

கண்னதாசன் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ் என பலருக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இதே போல் எம்.எஸ்.வி.யும் வாலி, புலமைப்பித்தன் உள்பட ஏராளமானோரின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இருந்தாலும் எம்.எஸ்.வி -கண்ணதாசன் காம்பினேசன் அற்புதங்களை நிகழ்த்தியது.
எனக்குப் பிடித்த பாடல்கள் ஏராளம்...இதோ ஒரு சிறிய பட்டியல்

1ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா -அவன்தான் மனிதன்
2.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாச மலர்
3 நீ வருவாய் என நான் இருந்தேன் -சுஜாதா
4. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் - நெஞ்சிருக்கும் வரை
5 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் -நெஞ்சில் ஒரு ஆலயம்
6.இருமனம் கொண்ட திருமண வாழ்வில் -அவர்கள்
7.ஏழு ஸ்வரங்களில் எத்தனைப் பாடல் -அபூர்வ ராகங்கள்
8 கேட்டதும் கொடுப்பவனே - தெய்வமகன்
9. உள்ளத்தில் நல்ல உள்ளம் -கர்ணன்
10.பொன்னை விரும்பும் பூமியிலே -ஆலயமணி
11. கண்ணா நீயும் நானுமா -கௌரவம்
12.அம்மம்மா தம்பி என்று நம்பி -ராஜபார்ட் ரங்கதுரை
13. சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் - மன்னவன் வந்தானடி
14. எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் -எங்கமாமா
15 நான் உன்னை அழைக்கவில்லை -எங்கிருந்தோ வந்தாள்
16. கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான் -ராமு
17 எங்கே நிம்மதி -புதிய பறவை
18 பார்த்த ஞாபகம்இல்லையோ -புதிய பறவை
19 தேவனே என்னைப் பாருங்கள் -ஞான ஒளி
20 சின்னவளை முகம் சிவந்தவளை -புதிய பூமி
21 ஓடும் மேகங்களே -ஆயிரத்தில் ஒருவன்
22 ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
23 பூமாலையில் ஓர்மல்லிகை -ஊட்டி வரை உறவு
24. கிண்கிணி என வரும் மாதா கோவில் மணி ஓசை- தவப்புதல்வன்
25 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -குழந்தையும் தெய்வமும்
26 மயக்கமா கலக்கமா -சுமைதாங்கி

இந்தப் பாடல்கள் ஒலித்தால் என் உலகம் ஸ்தம்பித்து விடுகிறது. என்மனம் அற்றுப்போகிறேன்.மிதக்கிறேன். காற்றாகவும் இசையாகவும் கவிதை வரியாகவும் ஆகிப் போகிறேன்.


Saturday 23 June 2018

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடியப் போகிறதா.?

சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிகிறதா...?செந்தூரம் ஜெகதீஷ்






தற்போது தமிழ் சினிமாவில் வசூலை வாரிக் குவிக்கும் நாயகர்களின் காலம் முடிவுக்கு வந்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம். ரஜினியே ஆனாலும் படத்தின் கதையோ திரைக்கதையோ தொய்வடைந்தால் படம் அவ்வளவுதான் என்பதை ஏற்கனவே பாபா மாதிரியான படங்கள் நமக்கு சொல்லி விட்டன.
ஒரு கதைக்கும் கதாசிரியருக்கும் யாரும் மெனக்கெடவில்லை. கதைதான் படத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்ள நமது சூப்பர் ஸ்டார்களின் மனசாட்சியும் அகந்தையும் இடம் கொடுப்பதில்லை. இயக்குனர்களும் அமெச்சூர்த்தனமான சிந்தனைகளையே பெரிய காவிய கனவுகளாக கண்டுவருகின்றனர்.
எந்த ஒரு கதாசிரியரை அழைத்து திரையுலம் மரியாதை செய்திருக்கிறது? எந்த படைப்பாளியை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது.?
சுஜாதாவுக்கே தமது கதைகள் சினிமாவில் படமாக்கப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை. இப்போது சினிமாவில் எழுதிக் கொண்டிருக்கும் நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் கவிதையே ஒழுங்காக எழுதத்தெரியாத பாடலாசிரியர்களுக்கும் சினிமா பற்றிய ரசனையும் அறிவும் சூன்யம்தான் என்பதைத்தான் மீண்டும்மீண்டும் தமிழ்த்திரைப்படங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
சினிமாவில் புதுமைப்பித்தனும் முயற்சி செய்து தோற்றார். ஆனால் இப்போதும் சினிமாவாக்கக் கூடிய பல நல்ல கதைகள் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் உள்ளன. எப்போதோ ஒருமுறை மகேந்திரன் போன்ற இயக்குனர்கள்தாம் உதிரிப்பூக்கள் என்ற தரமான வெற்றிப்படத்தைத் தந்து கதை புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்று நேர்மையாக டைட்டில் கார்டு போடுவார்கள்.
ஜெயகாந்தன் சினிமாவிலும் பெரிதாகப் பேசப்பட்டார். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பீம்சிங் இயக்கியது என்பதால் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. ஜெயகாந்தன் இயக்கிய சில படங்கள் அதிக கவனம் பெறவே இல்லை. காரணம் சினிமா குறித்த தேர்ச்சியும் பயிற்சியும் ஜே.கே.வுக்கு இல்லை.
கு.ப.ரா. , க.நா.சு., லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரின் புகழ்பெற்ற கதைகள் கூட சினிமாக்கப்படவில்லை. அந்த எழுத்தாளர்களை எந்த இயக்குனரும் எந்த சூப்பர் ஸ்டாரும் மரியாதை செய்யவில்லை. அவர்களின் கதைகளை படமாக்குவது பற்றி கனவுகூட கண்டதில்லை. பாலுமகேந்திரா கதை நேரம் என தொலைக்காட்சித் தொடர் இயக்கிப் பார்த்தார். முன்னதாக இயக்குனர் ஸ்ரீதர் பி.எஸ்.ராமையாவின் போலீஸ்காரன் மகள் கதையைப் படமாக்கினார்.
கதைகளை சுட்டு சினிமா எடுக்க உதவி இயக்குனர்கள் பரபரக்கிறார்கள். சிலர் மற்றவர்களின் கதைகளையே தங்கள் கதைகளாக விற்று விடுகிறார்கள். சிலர் பாடல்களைக் கூட திருடி பிழைக்கிறார்கள். இசை பற்றி சொல்லவே வேண்டாம். இளையாராஜா கூட இசைத்திருட்டிலிருந்து தப்பவில்லை. கஸ்மே வாதே பியார் வஃபா என்ற மன்னாடேயின் உப்கார் பட இந்திப் பாடலைத்தான் ஜேசுதாசை பாட விட்டு கனவு காணும் வாழ்க்கை யாவும் என்று இளையராஜா இசைத்தார்.
கதைகள், கவிதை வரிகள், இசை என எல்லாவற்றையும் சுட்டு விடத்தான் தமிழ் சினிமா தேர்ச்சி பெற்றுள்ளது. சில நேரம் ஹாலிவுட்டிலிருந்து சில நேரம் பாலிவுட்டிலிருந்து சில நேரம் நமது அப்பாவி தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து.






அப்போது எப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற இயலும்? ஷங்கர், மணிரத்னம், பாலா , பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களில் உயிர்ச்சத்து எங்கிருந்து வரும். ஏ.ஆர்.ரகுமானும், இளையராஜாவும், வாலியும்  வைரமுத்துவும் பல படங்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆர்.சுந்தரராஜன், பாக்யராஜ், கலைமணி, ஆர்.செல்வராஜ் போன்ற பல சிறந்த கதாசிரியர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். இவர்களையும் சினிமா சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சினிமா முதலில் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். சினிமா பார்க்க வரும் ரசிகன் முதலில் தனது சில மணி நேரங்களை சுவாரஸ்யமாகக் கழிக்கத்தான் வருகிறான். அந்த சுவாரஸ்யம் சில நேரம் ரஜினி மூலம் ,சில நேரம் இளையராஜா மூலம் சில நேரம் சந்தானம் மூலம் சிலநேரம் மணிரத்னம் மூலம் அவனுக்குக் கிடைக்கும் போது மகிழ்கிறான். இல்லையென்றால் அவன் யாரையும் பார்க்காமல் தூக்கிப் போட்டு போய்விடுகிறான்.
சினிமாவை திரையரங்கில் பார்ப்பது என்பது இப்போது ஒரு நபருக்கு 300 ரூபாய் செலவாகிறது. பாதி டிக்கட்டுக்கு போய்விடும். பார்க்கிங், ஆட்டோ, பெப்சி, பாப்கார்ன் என்று இதர செலவுகளுக்கு இந்தப் பணம் போதாது. திருட்டு சிடி மலிவானது. அதைவிட இலவசமாக டவுன்லோடு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. செல்போனிலேயே பலர் சினிமா பார்க்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கை நாடி ரசிகனை வரவழைக்க நல்ல கதைகளும் நல்ல நட்சத்திரங்களும் நல்ல இயக்குனர்களும் இணைந்துதான் முயற்சிக்க வேண்டும். நல்ல இசையும் பாடல்களும் இருந்தால் இரண்டாவது முறையும் திரையரங்குக்கு வருவார்கள்.
இவை யாவும் இன்று குறைந்து வருகிறது. நல்ல நடிகர்களே இல்லையா என்று கேட்குமளவுக்கு நாளொரு புதுமுகம். ஒரு படம் இரண்டு படத்துடன் அவர் அம்பேல். உடலைக்காட்டும் கதாநாயகிகள் பத்து முதல் 30 படங்கள் வரை தாக்குப் பிடிக்கிறார்கள். பாடலாசிரியர்கள் ஏராளமானோர் வந்துவிட்டாலும் பாடல்களே இல்லாமல் தான் படங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒலிப்பவை எல்லாம் குத்துப்பாடல்கள் ,கானா பாடல்கள் தாம். அவை டாஸ்மாக் தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் கேட்டு மகிழ முடியாதவை.
மிகப் பெரிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி ஏமாற்றத்தில் முடியும் போது சினிமாவில் சூப்பர் ஸ்டார்களின் காலம் இருக்கா இல்லையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.  ரஜினி, கமல், விஜய், அஜித் நடித்த படங்களும் இந்த அக்னிப் பரீட்சையில் தீக்குளிக்கத்தான் வேண்டும்.
சில தயாரிப்பாளர்களின் பேராசை. இரண்டு மூன்று நாட்களிலேயே நூறு முதல் 200 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கக் கூடிய வணிகபுத்தி, திரையரங்குகளின் அடாவடித்தனம். கட்டணக் கொள்ளை. எதையும் விலை கொடுத்து வாங்கி விடத்துடிக்கும் ஐடி நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, கவர் கொடுத்தால் நாலு நட்சத்திரம் தந்து விமர்சனம் எழுதும் பத்திரிகைகள், நாளுக்கு நூறு முறை டிரைலரையும் படக்காட்சிகளையும் போட்டு பார்வையாளர்களை அதிகப்படுத்த நினைக்கும் தொலைக்காட்சிகள் என சினிமாவை எல்லோருமே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்கவும் .தமிழ் சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் கன்னடம் தவிர மற்ற மொழிகளிலும் ஹாலிவுட்டிலும் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.தென்இந்தியப் படங்கள் தமிழ்சினிமாக்களின் நகல்களாகவே இருக்கின்றன.
வங்காளப் படங்களும் இந்திப் படங்களும் அபூர்வமான ரசாயன மாற்றத்துக்கு ஆளாகி வருகின்றன. ரஜினியை விட பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன் இப்போது வயதான கிழவனாக ஒரு பழைய ஸ்கூட்டரை எட்டி உதைத்தபடி வில்லனிடமிருந்து அடிவாங்காமல் தப்புவதற்கு  ஒளிந்து செல்லும் சாதாரண மனிதராக நடிக்கிறார். நூற்றுக்கணக்கான படங்களில் வில்லன்களை புரட்டி எடுத்தவர்தான் அமிதாப்.ரஜினியும் கமலும் அப்படி நடிக்கத் தயாரா என்று தெரியவில்லை.
 தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு ரசிகர்களை மனநலம் பிறழ்வுடயைவர்களாக மாற்றும் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் துணிந்து நடிக்கிறார். விஜய்யும் அஜித்தும் அப்படி நடிப்பார்களா என்று தெரியவில்லை.
சத்யஜித்ரே, மிர்ணாள் சென், ரித்விக் கடக் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய வங்காள படங்கள் இன்று மெல்ல மெல்ல ஹாலிவுட் படங்களின் பாலியல், படுக்கையறைக் காட்சிகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அங்கு எடுக்கப்படுவது புளுபிலிம்கள் அல்ல , மீனவர்களின் வாழ்க்கையும் கிராமப்புற பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், பெண்ணியமும்தான் இந்த திரைப்படங்களின் அடிநாதமாக உள்ளது.
சினிமாவை இரண்டு விதமாக பார்க்கலாம்.  கலையம்சம் மாறாமல் குறைந்தபட்ச வணிக சமரசங்களுடன் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள். தமிழில் இத்தகைய படங்களாக சில முன்னுதாரணங்களை சொல்ல முடியும்.
அவள் அப்படித்தான், அவர்கள், அழியாத கோலங்கள், நிழல்கள், சின்னத்தாயீ, சில நேரங்களில் சில மனிதர்கள், உதிரிப்பூக்கள்,அழகி,  சாட்டை, போன்ற படங்கள் காலம் தோறும் வந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு வகை பெரிய நட்சத்திரங்களை வைத்து வணிக ரீதியான படங்கள். இவை பொழுதுபோக்கையே பிரதான அம்சமாக கொண்டிருக்கும். இதற்கும் ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. சில நடிகர்களின் மிகச்சிறந்த சில படங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
எம்ஜிஆர் (அன்பே வா) சிவாஜி ( பாசமலர்) ரஜினி ( பாட்சா ) கமல் ( நாயகன்) விஜய்( குஷி ) அஜித் ( காதல் கோட்டை) சூர்யா ( மௌனம் பேசியதே) விக்ரம் ( ஐ) சிம்பு ( விண்ணைத்தாண்டி வருவாயா ) தனுஷ் ( காதல் கொண்டேன்) சிவகார்த்திகேயன் ( எதிர்நீச்சல் )
இந்தப் படங்களில் பொதுவான அம்சம் சிறந்த நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை ,நெளிய வைக்காத காட்சிகள், அருமையான பாடல்கள், மயக்கும் இசை என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த வகைப்  படங்கள்தாம் இந்த நடிகர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. இந்த வகைப் படங்கள்தாம் இந்த நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்குகின்றன. இந்தப் படங்களில் கதைக்காகத்தான் ரசிகர்கள் இந்த நட்சத்திரங்களையும் ரசித்தார்கள்.
பல திரைப்படங்களை பார்க்கவே முடியவில்லை. மிகச்சிறந்த படங்கள் என விருது வாங்கிய படங்களும் சரி ஆகா ஓகோ என பத்திரிகைகளால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட அண்மைக்கால படங்களும் சரி, மிகப்பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் சரி சகிக்கவே முடியாதபடி தான் பலபடங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.
எனில் சூப்பர் ஸ்டார்களின் காலத்தைத் தக்க வைக்க ஒரு சினிமா நல்ல கதையம்சம், நல்ல நடிப்பு, நல்ல திரைக்கதை, நல்ல இசை, பாடல்கள், நல்ல இயக்குனர் ஆகியவற்றுடன் பணம் பிடுங்காத திரையிடல் தேவை. இதுதான் சூப்பர் ஸ்டார்களை சூப்பர் ஸ்டார்களாக தக்க வைக்கும். இதில் ஓரம்சம் குறைந்தாலும் அது ரஜினி படமானாலும் சரி விஜய் படமானாலும் சரி ரசிகர்கள் கைவிட்டு விடுவார்கள்.இதை உணர வேண்டியவர்கள் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் அவர்களை வைத்து இயக்கும் சூப்பர் இயக்குனர்களும்தான். ரசிகர்களை குறை சொல்லி பயனில்லை. நல்ல சரக்குதான் சந்தையில் விலை போகும். இது ஒரு சாதாரண வியாபாரிக்குக்கூடத் தெரியும்.

Friday 22 June 2018

மந்திரம் கோடி இயக்குவோன் -1

மந்திரம் கோடி இயக்குவோன் தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குனர்கள் 1 ஏ.சி.திருலோகசந்தர் செந்தூரம் ஜெகதீஷ் நானெனும் பொய்யை நடத்துவோன் நான் ஞானச்சுடர் வானில் செல்வோன் நான் பாரதி சிறுவயதில் மோரல் சயன்ஸ் வகுப்பில் பாடப்புத்தகமாக இருந்தது விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் நாவலின் சுருக்கப் பதிப்பு.நாவலைப் புரிந்துக் கொள்ள ஆங்கில ஆசிரியை அளித்த உரைகள் மிகவும் உதவிகரமாக இருந்தன.முழுக்கதையும் இப்போது நினைவில் இல்லை என்றாலும் ஒரு சம்பவம் மனதுக்குள் அழுத்தமாக சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. தேவாலயத்தில் வெள்ளி விளக்குகளைத் திருடுவான் நாயகனான ஜீன் வால்ஜின். அவன் தப்பிச்செல்லும் போது போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்வான். போலீசார் அவனை பாதிரியாரிடம் அழைத்து வருவார்கள். அவனை பாதிரியார் முன்னிலையில் விசாரிக்கும் போது, தான் திருடவில்லை என்று கூறி அவன் தப்ப முயற்சிப்பான். அப்போது பாதிரியாரும் அவன் திருடவில்லை .தான் பரிசாகத்தான் இரண்டு வெள்ளி விளக்குகளை ஜீன் வால்ஜினுக்கு தந்ததாக கூறுவார். இக்காட்சி பகைவனுக்கருள்வாய் என்ற ஏசுவின் போதனையை வெளிப்படுத்தியது. இதனால் மனம் திருந்தி ஜீன் வால்ஜின் பாதிரியாரின் கால்களைப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதான். திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலில், வறுமை நினைத்து பயந்துவிடாதே,திறமை இருக்கு மறந்துவிடாதே என்பார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றும் அதே பாடலில் பொன் எழுத்துகளால் பதித்துவைத்தார்.
விக்டர் ஹ்யூகோவின் நாவலைத் தழுவி திரைப்படமாக தமிழில் ஏழை படுத்தும் பாடு எடுக்கப்பட்டது. பின்னர் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய ஞான ஒளி படத்திலும் இந்த நாவலின் பாதிப்பு கதையோட்டத்தில் இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்ச்சிகரமான நடிப்பும் சட்டத்தின் நீண்ட கரங்களுடன் விரட்டும் மேஜர் சுந்தர்ராஜனின் பாத்திரமும் காவலே சட்ட வேலியே உன்பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ என்ற கண்ணதாசனின் காவிய வரிகளும் இப்படத்தை கருப்பு வெள்ளையில் கிடைத்த கட்டித் தங்கமாக ஜொலிக்க வைத்தன. ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு சிறந்த படம் அவன்தான் மனிதன். இதிலும் கண்ணதாசனின் பாடல் வரிகளை மிஞ்சிய நடிப்பை சிவாஜி வெளிப்படுத்தினார். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலும் சரி மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என்ற பாடலும் சரி படத்தின் வைர மகுடங்கள். மனிதன் நினைப்பதுண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் தனியாக கூறப்பட வேண்டியது. ஒரு காட்சியில் கடற்கரையில் சிவாஜி பாடியபடி நடந்து வர எங்கிருந்தோ பறந்து வரும் வெள்ளைப்புறா ஒன்று சிவாஜியின் தோளிலும் முழங்கையிலும் அமர சிவாஜி நடந்து செல்லும் உடல்மொழியின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் கண்முன்னே அந்தக் காட்சி நிழலாடுகிறது. கண்ணதாசன் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதியி்ல் கவியரசரிடம் ஒரு வாசகர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். நான்கு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகிறோம் என்ற வரிக்கு அர்த்தம் கேட்ட அந்த கேள்வியில் இரண்டு கைகள், இரண்டு கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் மனிதன் நடனமாடுகிறான் என்ற பொருளை வாசகர் அர்த்தப்படுத்தியிருந்தார். இதுகுறித்து கவியரசரிடம்விளக்கம் கேட்ட போது அவர் மற்றொரு விளக்கமும் அளித்தார். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை பற்றி திருக்குறள் போதிக்கிறது. இந்த மூன்றிலும் தேர்ந்த மனிதன்தான் வீடுபேறு அடைவதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆனால் இவை நான்கும் கூட மனிதனை ஆட்டிப் படைக்கும் விலங்குகள்தாம் என்று கண்ணதாசன் தெரிவித்தார். எம்ஜிஆரின் அன்பே வா படத்தையும் ஏசி திருகோலசந்தர் இயக்கினார். டாக்டர் சிவா, பத்ரகாளி ,தெய்வமகன், ராமு, எங்க மாமா, அதே கண்கள்,பாரத விலாஸ்,பாபு, தர்மம் எங்கே, எங்கிருந்தோ வந்தாள், அவள், இருமலர்கள், தங்கை, வணக்கத்துக்குரிய காதலியே, விஸ்வரூபம்( சிவாஜி கணேசன் நடித்தது) போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார். இப்படங்களில் எனக்குப் பிடித்த பல விஷயங்களைப்பட்டியலிட முடியும். அன்பே வா எம்ஜிஆருக்கு ஒரே ஒரு சண்டைக்காட்சியுடன் எடுக்கப்பட்ட படம். முழுநீளவண்ணப்படம். கிட்டதட்ட பத்துபாடல்கள். எம்ஜிஆரும் சரோஜாதேவியும் திரையை அத்தனை அழகாக மாற்றுவார்கள். என் பள்ளிப்பருவத்தில் இப்படத்தைப் பார்த்த நினைவுகள் பசுமையானவை. பள்ளிக்கூட அரங்கி்ல் என் கடைசி தம்பியை மடியில் வைத்து அன்பே வா படத்தைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் பல முறை டிவிடியில் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்றும் அப்படம் உயிர்ப்புடன் உள்ளது. உள்ளம் என்றொரு கோவிலிலே என்ற பாடல்  காதலியின் பிரிவுக்கு கட்டியம் கூறும் பாடல். அசோகனின் கதாபாத்திரம் அபாரமானது. டாக்டர் சிவா தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மருத்தவரின் கதை. ஆனால் அப்படம் அந்தக் காலத்தில் சரியாகப் போகவில்லை என்று கேள்வி. மலரே குறிஞ்சி மலரே என்ற அற்புதமான பாடல் இதில் இடம் பெற்றது. நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் பாடலில் மஞ்சுளா டூ பீஸ் பிகினி அணிந்து தமிழ் சினிமாவை பாலிவுட் ரேஞ்சுக்கு மாற்றினார்.இப்படத்தின் பாடல்களையும் வாலிதான் எழுதினார். பாபு படம் மற்றொரு உதாரணம். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடலில் வாலியும் விஸ்வநாதனும் மாயாஜாலம் செய்தார்கள். ஒரு ரிக்சா ஓட்டியின் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை இது. தர்மம் எங்கே படத்தில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். விடுதலைக்காகப் போராடும் புரட்சிக்காரர்களின் கதை. சிவாஜிக்கு ஜோடி ஜெயலலிதா .படுகவர்ச்சியாக ஒரு கேபரே ஆட்டம் ஆடியிருப்பார். சிவாஜியுடன் முத்துராமனும் நடித்தார். சிவாஜிக்கு அறிமுகப் பாடல் ஒன்று உள்ளது சுதந்திர பூமியில் பலவகை மலர்கள் என்ற அந்தப் பாடலில் சூரியன் செல்லும் திசையின் எல்லாம் செல்லும் சூரியகாந்தி என்றும் திறமை இருப்பவன் எங்கிருந்தாலும் உலகம் அவனிடம் ஓடும் என்றும் கண்ணதாசன் எழுதியிருந்தார். வீரம் எனும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள், பள்ளியறைக்குள் வந்த புள் ளி மயிலே போன்ற இனிய பாடல்களும் இப்படத்தில் இடம் பெற்றன. எங்கிருந்தோ வந்தாள் இந்தியில் கிலோனா என்ற பெயரில் சஞ்சீவ் குமார் மும்தாஜ் நடித்த படத்தின் ரீமேக். தமிழில் சிவாஜியும் ஜெயலலிதாவும் நடித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவாஜி நடித்திருப்பார் .இப்படத்திலும் பாடல்களை கண்ணதாசனே எழுதினார். இப்படத்திலும் என்ன தவறு செய்து விட்டேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை. வந்து பிறவந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை போன்ற அற்புதமான வரிகளை கவியரசர் எழுதினார். ஏசி திருலோகசந்தர் இயக்கிய மற்றொரு படம் அவள். இதில் சசிகுமார் கதாநாயகனாகவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஸ்ரீகாந்தும் நடித்தனர். இதுவும் இந்தியில் தோரகா என்ற பெயரில் வெளியான படம் .இந்தியில் ராதா சலூஜாவும் அனில்தாவனும் நடித்தனர். ராதா சலூஜா பின்னர் எம்ஜிஆருடன் இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க படங்களில் நடித்தார். தோரகா என்றால் அந்தக் காலத்தில் கற்பழிப்பு எனப் பொருள்படும் படி பத்திரிகைகள் எழுதின. ஆனால் தோ-ரஹா என்பது இரண்டு பாதைகள் எனப் பொருள்படும்.கற்பழிப்பு காட்சிகள் அதிகளவில் இடம் பெற்ற திரைப்படங்களின் காலத்தை அப்படம் உருவாக்கியது. நாகரீக வாழ்க்கைக்கு அடிமையாகும் கணவன் மனைவியை காமுகனிடம் பறி கொடுக்கும் கதை.இந்தியில் பலாத்கார காட்சி-ரூபேஷ்குமார் என்ற வில்லன் நடிகர் ராதா சலூஜாவின்  வெள்ளை பிராவை கிழித்து எறியும் வரை கோரமாக படமாக்கப்பட்டிருந்தது. தமிழில் இந்த வில்லன் வேடத்தை ஸ்ரீகாந்த் ஏற்றார். இந்திப்படம் அளவுக்கு இதில் பலாத்கார காட்சி அத்தனை குரூரமாக இல்லை. வெண்ணிற ஆடை நிர்மலாவும் கூடிய வரை கிளாமராக நடிக்க முயன்றார். ஆனால் ராதா சலூஜா அளவுக்கு எடுபடவில்லை. இப்படத்தின் நாயகனான சசிகுமார் பின்னர் தீ விபத்து ஒன்றில் மனைவியைக் காப்பாற்ற முயன்று தானும் தீயில் கருகி உயிரிழந்தார். தெய்வ மகன் படத்தில் கேட்டதும் கொடுப்பவனே பாடலும் ராமு படத்தில் கண்ணன் வந்தான் பாடலும் உருக்கமான பக்தி கீதங்கள், இரண்டுமே கண்ணதாசனின் பாடல்கள் தாம். இ்ததகைய பாடல்களைத் தேர்வு செய்து படமாக்குவதில் ஏ.சி திருலோகசந்தர் தனித்துவம் பெற்றவராக இருந்தார். வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்த படம். ராஜேந்திரகுமார் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட கதை. தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் வாக்கை ஊர்மக்கள் நம்புவதும் வாக்கு பலிக்காத போது போலி என வெறுப்பதும் கதை.
பத்ரகாளியும்  எழுத்தாளர் மகிரிஷி எழுதிய கதை. தன்னை அழித்தவனை பத்ரகாளி அவதாரமாக பழி வாங்கும் பெண்ணின் கதை. சிவகுமாருடன் ஜோடியாக நடித்திருந்த ராணி சந்திரா என்ற மலையாள நடிகை விமான விபத்தில் பலியானார்.
விஸ்வரூபம் படத்தில் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அற்புதமானது. அநேகமாக அந்தப் பாடல் யாரிடமும் இருக்காது. ஜெயம் ஆடியோஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட டிவிடியில் சுமரான ஒரு பிரிண்டில் கிடைக்கிறது. கிடைத்தால் அதிர்ஷ்ட்டம்தான் அள்ளிக்கொள்ளுங்கள். சிவாஜியும் சுஜாதாவும் நடித்த இப்படத்தில் அந்தப் பாடல் இதுதான்.... நான் பட்ட கடன் எத்தனைையோ பூமியில் பிறந்து அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்தும்-செல்வம் ஆயிரம் இருந்தும்... தாயிடம் பெற்ற கடன் ,தகப்பனிடம் பெற்ற கடன் என்று ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற்ற கடன்களைப் பட்டியலிட்ட கவிஞர், எந்தக் கடனிலும் மிகப்பெரியது நல்ல மனைவியின் சேவை. அந்த கடனை அடைப்பதற்கு பல பிறவிகள் தேவை என்று பாடலை முடிப்பார். ஏசி திருலோகசந்தர் எனக்கு எப்போதும் பிடித்த இயக்குனர். அவர் மறைந்தாலும் அவர் திரைப்படங்கள் காவியங்களாக தமிழ் சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

Thursday 21 June 2018

ழான் பால் சார்த்தர்

ழான் பால் சார்த்தர்- 

JEAN PAUL SARTRE 

சார்த்தர்- பிறந்தநாள் 21 ஜூன் 
சார்த்தரின் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி சேகரித்துள்ளேன். அதிலும் being and nothingness புத்தகம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றழைக்கப்படும் இருத்தலியல் குறித்த புத்தகம் என்பதால் அதன் கடுமையான மொழி நடையை மீறி பல முறை வாசித்து பாதியில் நிறுத்திவிட்டேன். அந்தப் புத்தகம் ஒரு பழைய பேப்பர் கடையில் 5 ரூபாய்க்கு வாங்கினேன் என்பதுதான் வேடிக்கை.

சார்த்தர் பற்றி நண்பர்- எழுத்தாளர் பிரபஞ்சன் பல மேடைகளில்  பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சார்த்தரை கைது செய்ய பிரான்ஸ் போலீசார் நடவடிக்கை எடுத்த போது அதை ரத்து செய்த அப்போதைய பிரெஞ்ச் அதிபர் சார்த்தர்தான் பிரான்ஸ் பிரான்சையே கைது செய்வீர்களா எனக் கேட்டாராம்.
சார்த்தரின் சில தமிழ் பதிப்புகளும் வந்துள்ளன. அவற்றின் மொழிபெயர்ப்புகள் இலகுவாக இல்லை என்பதுடன் சார்த்தரே இலகுவாக வாசிக்கக் கூடிய நபரல்ல என்பதும் முக்கியம்.
வெ.ஸ்ரீராம் போன்ற சிலர்தான் ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் போன்றவர்களை சிறப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.
சார்த்தரின் இலக்கிய மதிப்பீடுகள், மார்க்சீய கண்ணோட்டங்கள், இருத்தலியல் கோட்பாடுகள் போன்றவை முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவுகள். சைமன் டி போவர் என்ற பெண்மணியுடன் சார்த்தர் கொண்டிருந்த நட்பும் பெரிதாக பேசப்பட்டது. பெண்ணிய நூல்களின் ராணியாக திகழ்ந்தவர்தான் சைமன் டி போவர்.
நோபல் பரிசு அளிக்கப்பட்ட போதும் அதனை வாங்க மறுத்தவர் சார்த்தர். ஒரு எழுத்தாளன் ஒருபோதும் நிறுவனமாகிவிடக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
மிகப் பெரிய ஆளுமையாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய சார்த்தரின் உலகை இன்னும் ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்போதைக்கு சுபம்.

Wednesday 20 June 2018

மாத நாவல்கள் படிக்கலாமா ?

மாத நாவல்கள் படிக்கலாமா?


இன்று காலை முதல் பல்வேறு யோசனைகள். ஏதாவது லைட்டாக படிக்க வேண்டும். குமுதத்தைப் புரட்டியாகிவிட்டது. மனம் நிரம்பவில்லை
பலநாட்களாக படிக்கலாமா வேண்டாமா என்று எடுத்து வைத்திருந்த பத்து பன்னிரண்டு மாத நாவல்களை எடுத்து ஒரே மூச்சாக படிக்கலானேன்.
எல்லாமே பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. தமிழ்ச்செல்வி, ஆர்.கீதாராணி, பத்மா துரை, சி.வி. இந்திராணி, லதா சரவணன் என்றெல்லாம் பெயர்களை நீங்களும் அறிந்திருக்கலாம்.
பெரும்பாலும் ஒரே மாதிரியான எழுத்து. சினிமா பாட்டை தலைப்பாக கொண்டது, காதல், தனிக்குடித்தனம், மாமனார் மாமியார்., குழந்தை வளர்ப்பு, கணவருடன ் பிரிவு ,முன்னாள் காதலன், நட்பு, தோழிகள், குடும்பம் என்று ஒரே செக்கில் சுற்றிவரும் மாடுகள் போல் இந்த நாவல்கள்.
இந்தப் பெண்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன். பெண்ணின் மனதுக்குள் ஆண்தான் மறைந்திருக்கிறான். ஆண்களின் குரூரம் சிறிதும் குறையவில்லை. ஆண்களின் உலகிலே வளர்ந்த பெண்கள் ஆண்களைப் போல் சிந்திப்பது தவிர்க்க முடியாதது.
அவர்கள் எழுதும் வர்ணனைகள், பாலியல் உறவு யாவும் இப்படித்தான்.
உதாரணமாக லதா சரவணன் எழுதிய உன் பேரைச் சொல்லும் போதே நாவலில் சில வரிகள்...
அவன் கைககளைப் பிடித்துக் கொண்டாள் வர்ணிகா. என்மனம் என்றுமே உங்கள் வசம்தான் சித்து என்று சொல்வதைப் போல.வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலையில் அவனை அணைத்துஅவன் உதடுகளோடு தேன் இதழ்களை அவள் பொருத்த அவன் நெகிழ்ந்து போய் இனிய அதரங்களை சுவைத்தான்.
அப்பப்பா என்ன முரட்டுத்தனம்
பொய்யான சலிப்போடு விலகினாலும் அவன் கைகள் அணைப்பை விடுவிக்காததால் அவன் விருப்பம் அறிந்து மீண்டும் முகம் பொருத்த இந்த முறை முரட்டுத்தனம் அவளிடமிருந்தது.

இப்படி எழுதுவது இளம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆதிகாலத்து பழை யஉத்தி. இதை எழுத்தாளர்கள் இன்னும் கைவிடவில்லை. அதிலும் பெண்கள்..

அந்தக் காலத்திலும் மாத நாவல்கள் வந்தன. ஜெயகாந்தனின் புகழ் பெற்ற நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள், இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் நாவல்களும், பாலகுமாரனின் புருஷ விரதம், இரவல் கவிதை போன்றவை மாத நாவல்களில் படித்ததுதான்.
தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கநாசு, சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி, கல்கி, போன்ற பலரின் புகழ் பெற்ற நூல்களும் மாத நாவல்களாக வெளியாகி உள்ளன.
அந்த காலத்தில் பிடிசாமி, சந்திரமோகன் ,மேதாவி போன்ற திகில் எழுத்தாளர்கள் எழுத்துகள் தான் ஆரம்ப கால வாசிப்புக்கு துணை நின்றன. நடராஜ் திரையரங்கு ( இப்போது இடிக்கப்பட்டு விட்டது.) வாசலில் பாட்டு புத்தகமும் மாதநாவலும் விற்கிற ஒரு வியாபாரி இருந்தார். அருகில் புளியந்தோப்பு பகுதியில் அவர் வீடு. அப்போது நடராஜா தியேட்டரில் தர்மேந்திரா, அமிதாப் , ஜித்தேந்தர் நடித்த இந்திப் படங்கள் தான் வெளியாகும். அவற்றைப் பார்க்க போனால் சினிமா செலவுடன் மாத நாவலுக்காகவும் பணம் எடுத்துச் செலல்வேன். புளியந்தோப்பில் உள்ள தமது வீட்டுக்கு அந்த வியாபாரி அழைத்துப் போவார். கட்டுக் கட்டாக இருக்கும் பழுப்பு நிறப்பக்கங்கள் கொண்ட மலிவான மாத நாவல்களையும் பாட்டுப்புத்தகங்களையும் அள்ளி வருவேன் .ராஜேஷ்குமாரிந் எழுத்தில் ஒரு வசீகரம் இருந்தது. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா , போன்ற சிலர் படிப்பில் சுவை கூட்டியவர்கள். ராணி முத்து அந்தக் காலத்தில் வெளியிட்ட மு.வரதராசன், கல்கி, சாண்டில்யன் போன்றோரின் மாத நாவல்கள் இப்போது பொக்கிஷம் போல தோன்றுகின்றன.
மாத நாவல்களில் என்னதான் இருக்கு என்றறிய இளம் வயதில் மூர்மார்க்கெட் போய் 300 மாதநாவல்களை வாங்கி வந்து படித்துப்பார்த்திருக்கிறேன், ராஜேஷ்குமார் , சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன், ராஜேந்திர குமார், போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் நூற்றுக்கு 5 மட்டுமே மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. தாஜ்மகாலுக்கு குண்டு வைக்கும் ஒரு தீவிரவாதி பற்றிய சுபாவின் நாவலும் நரேன் சுசிலா துப்பறியும் நாவல்களும் பரத் சுசிலா துப்பறியும் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களும் வாசிக்க சுவையாக இருந்தன. சிலவற்றை திரைப்படமாகவும் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானவை தரமில்லாத மொக்கை எழுத்துகள்.

அப்போதே அவற்றை தூக்கிப் போட்டு விட்டேன்.

ஆனால் பெண் எழுத்தாளர்களின் வருகையால் மீண்டும் புற்றீசல்கள் போல் மாத நாவல்கள் பெருகிவிட்டன. இவற்றின் வாசகர்களும் பெண்கள்தாம்.
அம்பையைப் போல் . ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, ஆர்.சூடாமணி, உமா மகேஸ்வரியைப் போல யாராவது எழுதினால் பரவாயில்லை. அப்படி யாரும் இல்லை என்பதுதான் ஏமாற்றமாய் இருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஒரு நூறு நாவல்களை இனி தொடர்ந்து வாசிக்கப் போகிறேன். சொ,கலைவாணி, பத்மா கிரகதுரை, முத்துலட்சுமி ராகவன், டெய்சி மாறன், அனிதா குமார் என ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இதில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலர் யார் என்றே தெரிவதில்லை. சிலரை முகநூலில் காண முடிகிறது.


எந்த ஒரு நாவலும் வித்தியாசமாக இருந்தால் கட்டாயம் குறிப்பிடுகிறேன். இல்லையானால் இருக்கவே இருக்கு பழைய பேப்பர் கடை.....
===========================










Tuesday 19 June 2018

படித்தது- தி.சந்தானம் கவிதைகள்

தி சந்தானம்  எழுதிய நீ மற்றும் நான் -கவிதைகள்

இன்று வீட்டில் இருந்த பழைய புத்தகங்களை சுத்தம் செய்து அடுக்கும் போது ஒரு சிறிய கவிதைப் புத்தகம் மயிலிறகு போல் என் மடியில் வந்து விழுந்தது. அதுதான் இந்த கவிதைப் புத்தகம். அகரம் பதிப்பகம் 1993ல் வெளியிட்டது. அப்போதைய விலை ரூ 12.
எண்பதுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறுபத்திரிகை மற்றும் பெரிய பத்திரிகைகளில் கவிதை எழுதியவர் சந்தானம் என்று தெரிகிறது.இப்போது அவர் கவிதை எழுதுகிறாரா என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் ,அவர் யார், முகம் எப்படி எதுவும் எனக்குத் தெரியாது.
கவிதைகளும் அப்துல் ரகுமான்,மீரா, சிற்பி, புவியரசு,மு.மேத்தா பாணிதான். ஆனாலும் இந்த நூலை குறிப்பிடக் காரணம் முன்னே சொன்னது போல் அது ஒரு மயிலிறகு மாதிரிதான்.
அக்காலக் கட்டத்தில் ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து என் கண்ணீரை எல்லாம் கொட்டுவதற்காக நான் உருகி, தற்கொலையைத் தவிர எதையும் நினைக்காத நாளில்லை.அத்தருணத்தில் என்னை சிரிக்கவைப்பதாக சத்தியம் செய்த தோழி ஒருத்தி பிரிவதற்கு சில நாட்களுக்கு முன் தந்த புத்தகம் அது. அவளுக்குத் திருப்பித் தர மறந்துவிட்டேன். 
புத்தகத்தில் உள்ள ஆல்பர்ட ் காம்யூவின் மேற்கோளைத்தான் அவள் தன் பிரிவுக்கான காரணமாக பச்சை மையில் அடிக்கோடிட்டு தந்தாள்.

ஆல்பர்ட் காம்யூ மேற்கோள் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் தருகிறேன்

என்னை வழிநடத்தாதே என்னால் பின்தொடர இயலாது

என்னைப் பின்தொடராதே வழிநடத்தவும் என்னால் ஆகாது

என் கூட வா. என் நண்பனாக இரு.


இதற்காகத்தான் இந்தப் புத்தகம் மிகவும் பழம்பெரும் பொக்கிஷம் 
போல் என்னிடம் உள்ளது. 
தி.சந்தானத்தின் கவிதைகள் குறித்து கவிஞர் மீரா எழுதிய முன்னுரையில் இருந்து சில வரிகளே இந்நூலுக்கான விமர்சனமாக கொள்ளலாம்.

முன்னுரையில் -கவிஞர் மீரா

நிராகரிப்பின் சின்ன சின்ன விசும்பல்கள் என்னுள்ளே என்னுள்ளே....
இந்த கவிதைதான் இப்போது என்னுள்ளே என்னுள்ளே...

Monday 18 June 2018

நீ எங்கே என் நினைவுகள் அங்கே.....

நீ எங்கே என் நினைவுகள் அங்கே... மன்னிப்பு என்றொரு படம். ஜெய்சங்கர் லட்சுமி வெண்ணிற ஆடை நிர்மலா நடித்தது. இப்படத்தில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே ....நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் என்றொரு பாடல் உண்டு. படத்தில் 3 முறை வரும் .முதல் முறை பி.சுசிலா மகிழ்ச்சியாக பாடியது. இரண்டாவது முறை பி.சுசிலா சோகமாக பாடியது. மூன்றாவது முறை டி.எம்.எஸ் மெலோடியாக மகிழ்ச்சியும் சோகமுமாக பாடியது.பாடலாசிரியர் வாலி. இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு< இந்தப் பாடல் சிறுவயது முதலே என் மனதுக்குள் எப்போதும் எதிரொலிக்கும் ஒரு பாடல். வாழ்க்கையில் யாரையாவது பிரிய நேரிடும் போதும் யாரையாவது நினைக்க நேரிடும் போதும் இந்தப் பாடல் தவிர்க்க முடியாமல் ஆஜராகி விடும். காரணம் இதன் எளிமையான வரிகள். காதலின் பிரிவினையை இதை விட இனிமையாக கூற முடியுமா... சமீபத்தில் காலா பாடல்களைக் கேட்டபோது கண்ணம்மா கண்ணம்மா என்ற சந்தோஷ் நாராயண் இசையில் ஒலிக்கும் பாடல் இத்தகைய காதல் சோகத்தை சுமப்பதாக இருந்தது. ஆறாத ஆறாத காயங்கள் ஏது....தொடுவானம் நெடுவானமாகி தொடுகின்ற நேரம் தொலைதூரம் போனதே என்ற நல்ல வரிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.பாடலாசிரியர் கு.உமாதேவி காதலியை நினைத்தும் காதலனை நினைத்தும் சோலோவாக பாடும் சோகமான பாடல்களை ஒரு முள் போல் மனதில் வாங்கிக் கொண்டு ரத்தம் சொட்ட கண்ணீர் சிந்தும் உள்ளங்கள் ஏராளம் உண்டு.>இழப்பின் வலியும் புறக்கணிப்பின் வலியும் காதலில் அதிகம். பழைய காதலை எண்ணி உருகும் போது உள்ளம் உடைந்து நொறுங்குகிறது. நிகழ்காலம் முழுவதுமே நொடிப்பொழுதில் கரைந்து காணாமல் போய் விடுகிறது. கடந்த காலத்தில் அலைந்து திரியும் மனம் மீண்டும் நிகழுக்கு வருவதற்குள் பலநூறு பிறவிகளைக் கடந்து வருகிறது. காதலின் காயங்களுக்காக ஆசைப்படுங்கள் என்ற கலீல் கிப்ரானின் வரியும் அவ்வப்போது மனதுக்குள் மின்னலடிக்கிறது. காதலிக்காதவர்கள் பாதிதான் வாழ்ந்தார்கள். காதலித்தவர்கள் பலர் வாழவே இல்லை. வாழவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் மறந்துவாழ்வார்கள். சிலர் மறக்கமுயல்வார்கள். சிலர் மறக்கமுடியாமல் அவதிப்படுவார்கள்.நிகழ்கால வாழ்க்கையில் ஒரு வாழ்க்கைத்துணை. பிள்ளைச் செல்வங்கள்,சமூக கௌரவம், காலத்தின் தூரம், தூரத்தின் தூரம், மனதுகளின் தூரம் யாவும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே போகும்.ஆனால் இந்த வலி மட்டும் மிச்சமிருக்கும் நிரந்தரமாக. அதனால்தான் நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் முதல் கண்ணம்மா வரை மனதுக்குள்முள் தைக்கும் பாடல்கள் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன போலும்

Sunday 17 June 2018

இறைவன் ஒருவனே

இறைவன் ஒருவனே

சீக்கிய மரபில் வளர்ந்த சிந்தி இனத்தில் பிறந்தவன் நான். பாகிஸ்தானில் சிந்துநதியின் மிசை நிலவினிலே வாழ்ந்தவர்கள் எனது மூதாதையர்கள். பிரிவினையின் போது பல கோடிமதிப்புடைய சொத்துகளை முஸ்லீம் வெறியர்களிடம் பறிகொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ரயிலின் கூரைகளில் ஏறி பயணம் செய்து இந்தியா வந்த இந்து-சீக்கியர்களில் ஒருவர்தான் என் தாத்தா. அப்போது என் தந்தை கைப்பிள்ளை.அகதிகளாக வந்தவர்களுக்கு அப்போதைய இந்திய அரசாங்கம் உப்பை விற்க அனுமதியளித்து திருச்சியில் எங்களை குடியேற்றியது.அப்பா அங்குஉப்பு விற்றபடி படித்தார். கணக்கு எழுதப் பழகி புதுமைப்பித்தனின் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் போல் ஒருரூபாய் கூட கையாடல் செய்யாத நேர்மையான குமாஸ்தாவாகவும் கேஷியராகவும் கணக்குப்பிள்ளையாகவும் ராமச்சந்திரன் என்ற செல்வந்தரிடம் பணியாற்றினார்.தாத்தா உப்பு விற்றுவந்தார். வாடகை வீட்டில் ஒரு அறையில் உப்பு குவியல்குவியலாக கிடக்கும். படியளந்து தாத்தா பையுடன் வருவோருக்கு பரிமாறுவாராம். தாத்தாவுக்கு என் மேல் அலாதிப் பிரியம், உயிர் . எப்போதும் அவர்மடியில்தான் கிடப்பேன். பாகிஸ்தான் சிந்து பகுதியில் புகழ் மிக்கவராக விளங்கிய தத்தாசிங்( Thadha singh) மகனான சீத்தல்தாசின் பேரன் என்ற பெருமை எல்லாம் அப்போது எனக்கு விளங்கவில்லை.
தெரிந்தோ தெரியாமலோ தாத்தாவுக்குப் பின்னர் அந்த இடத்தை அப்பா எடுத்துக் கொண்டார்.அப்பா மடியில் அடங்காமல் நான் துள்ளும்போது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். அந்தப் பழைய கருப்பு வெள்ளைப்படம் இன்னும்என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
இது ஏதோ என் சுயபுராணமோ சுயசரிதையோ அல்ல. அறிவுமதி பச்சியப்பன், நா.முத்துக்குமார் போன்ற சிலரால் மார்வாடி என துவேசத்துடன் நான கடுமையாக கழுவி ஊற்றப்பட்ட நாட்களை நினைத்தும் இதை நான் எழுதவில்லை.என் அருகில் நிற்கக்கூட பயந்து பழனிபாரதி போன்றவர்கள் ஒதுங்கி விலகி நின்ற நாட்கள் அவை.
போகட்டும்.
அப்பாவும் சீக்கிய மரபில் பற்றுக் கொண்டவர்தான். ஏக் ஓம்கார் சத்னாம் நிர்பவ் நிர்மய் அகால மூரத் அஜூனி என சிறுவயதில் இருந்தே ஜப்புஜிசாஹிம் வாசகங்கள் மனப்பாடம். ( JAPUJI SAHIB)

ஏக் ஓம்கார் என்றால் ஒன்றே ஒங்காரம் அதாவது இறைவன் ஒருவனே

சத்னாம் -சத்தியமே அவன் பெயர்

பிற்காலங்களில் சீக்கிய புனிதத் தலங்களை தரிசித்தேன். அமிர்தசரஸ் பொற்கோவில், நான்தேத்தில் உள்ள 11 குருதுவாராக்கள், டெல்லியில் பங்களா சாகிப், சாந்தினி சவுக்கில் உள்ள குருதுவாரா, உள்ளிட்ட இடங்களுக்குப் பயணித்து குரு கிரந்த சாகிப் நூலை ஆங்கிலத்தில் வாங்க தேடியலைந்தபோதும் கிடைக்கவில்லை. ஆடியோ வடிவில் ஜப்புஜி சாகிப் கிடைத்தது. 


அப்போது தம்பி விஜய் மூலம் அறிமுகமானார் பாய் சமன்ஜித் சிங். (Bhai Chamanjit singh)




பாய் சமன்ஜித் சிங் சீக்கியர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான மிகப்பெரிய மகான். குருநானக்கின் வாரிசாக , அவர் மரபில்வந்த ஆன்மீக ஞானியாக போற்றுகின்றனர். அவருடைய குரலில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. டெல்லியில வசித்து வரும் அவரை குடும்பத்துடன் போய் சந்தித்து அவர் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். நான்தேதிலும் அவருடைய நிகழ்ச்சியை இரவு முழுக்க விடிய விடிய குருதுவாராவில் கேட்டது மறக்கமுடியாத அனுபவம்
அன்பு, பக்தி, இஸ்லாமிய படையெடுப்போரால் கொன்று குவிக்கப்பட்ட சீக்கியத் தலைவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு போன்றவற்றை அவர் தமது பிரசங்கம் மூலம் விளக்குவார். தாயையும் தந்தையையும் மதிக்க அவர் எப்போதும் கூறுவார்.
அவருடைய குரலில் ஏக் ஓம் கார் என்ற ஜப்புஜி சாகிப்பின் வாசகமும் க்யா லாகி மேரே என்பது போன்ற கீதங்களையும் யூடியூப்பில் கேட்கலாம். டெல்லி, அமிர்தரஸ் போன்ற இடங்களில் டிவிடிக்களாகவும் கிடைக்கலாம்.
எனக்கும் பஞ்சாபி மொழி தெரியாது. ஆனால் அவர் பாடுவதைக் கேட்டு கண்களில் கண்ணீர் ததும்பும். ஆழ்வார்கள், ஆண்டாள், மீரா வரிசையில் வந்தவர் போல் உருகி உருகி பாடுவார். இன்று -17.6.2018 சென்னையில் அவருடைய கச்சேரியை மீண்டும் ஜி என் செட்டி சாலையில் உள்ள குருதுவாராவில் கேட்டு மகிழ்ந்தேன்.
meetha laage tune jo kiya என்றொரு பாடலைப் பாடும் போது அழுதேன். நீ தந்தவை எல்லாம் இனிமையானவை எனஇறைவனுக்கு நன்றி கூறும் பாடல் அது.
அவருடன் சில நிமிடங்கள் பேசவும் முடிந்தது. தம்பி தன் வீட்டுக்கும் அவரை அழைத்துவந்திருந்தான்.இத்தனை பெரிய மகான் எங்கள் குடும்பத்தினருடன்  பேசுவதைக் காண பேரானந்தம்.

சென்னைக்கு அவர் அடுத்த முறை கச்சேரி செய்யும் போது இங்கு முன்கூட்டியே பதிவு செய்துவிடுகிறேன் . இறைவன் ஒருவனே எனநம்பிக்கை கொண்ட நண்பர்கள் குருதுவாராவுக்கு வாருங்கள். அந்த அனுபவத்தை உணருங்கள். 
குருதுவாராவில் முக்கியமான நடைமுறைகள் இவை
தலையை  பெரிய கர்ச்சீப் அல்லது சிறிய தொப்பியால்மூட வேண்டும். முடியை மறைப்பது சீக்கியர் வழக்கம்
கை கால்களைக் கழுவிய பின்னரே குருதுவாராவில் நுழைய வேண்டும்.
இறைவனை வணங்கி உண்டியலில் சிறிய காணிக்கை-பத்து ரூபாய் கூட போதும் செலுத்தி வந்து சம்மணமிட்டு அமர வேண்டும். கால் ஊனம், வலி இருந்தால் நாற்காலியில் அமரலாம்.
கச்சேரி முடிந்த பிறகு குரு கிரந்த சாகிப் புனிதநூலில் இருந்து வாசகம் ஒன்றை வாசிப்பார்கள். அது அன்றைய நாள் ஜோதிடம் போல் அனுபூதியாக ஒலிக்கும்.
பின்னர் கையில் சுடச்சுட கராவ் பிரசாதம் கொடுப்பார்கள். கராவ் என்றால் கேசரி.ரவா கேசரி.
இறுதியாக லங்கர் எனப்படும் விருந்தும் உண்டு. லங்கரில் தால்,சப்பாத்தி, காய்கறிகள், சலாட், சாதம், மோர் போன்றவை இடம்பெறுவதுவழக்கம். வீணடிக்காமல் வேண்டியதை உண்ண வேண்டும் ஏனெனில் அது பிரசாதம். வாங்கும் போது இரு கையை நீட்டி பிச்சையெடுப்பது போல் பெற வேண்டும். இறைவனிடம் கையேந்துங்கள்.

அவ்வளவுதான். 














Saturday 16 June 2018

கே.வி.மகாதேவன் நூற்றாண்டு

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் தேவர் பிலிம்ஸ் படங்கள் வழியாக கே.வி.மகாதேவனின் இசை காதுகளில் தேன்பாய்ச்சிய காலம் ஒன்று இருந்தது. அவை யாவும் எம்ஜிஆர் நடித்த கருப்பு வெள்ளை படங்கள். தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், போன்ற படங்கள் தொடங்கி எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண், நல்ல நேரம் , பல்லாண்டு வாழ்க வரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் கே.வி.எம். சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் ,தில்லானா மோகனாம்பாள், குங்கும், இருவர் உள்ளம், சத்யம், வசந்த மாளிகை , உத்தமன் போன்ற படங்களும் கே.வி.மகாதேவனின் புகழ் மகுடத்தில் மின்னும் வைரக்கற்களாகும்.படிக்காத மேதையில் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா பாட்டும் , எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற பாட்டும் யார் மனதிலும் மறையாது சில படங்களில் எஸ்.எஸ்.ஆருக்கும் இசையமைத்தார்.முதலாளி படத்தில் வரும் ஏரிக்கரை மேல போறவளே பெண்மயிலே பாடல் மிகவும் பிரசித்தம். வானம்பாடியில் கடவுள் மனிதனாகப்பிறக்க வேண்டும், ஏட்டில் எழுதி வைத்தேன், கங்கைக் கரை தோட்டம் போன்ற பாடல்கள் காதில் இன்பத்தேன் ஊற்றுபவை. இதில் கல்லும் கனியாகும் படத்துக்காக நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும். கே.வி.மகாதேவனுக்கு கண்ணதாசன் மீது அலாதி பிரியம். அவர் தான் பாடல்கள் எழுத வேண்டும் என்பார். ஆனால் பின்னாட்களில் வாலியும் புலமைப்பித்தனும் அவருக்கு பாடல்களை எழுதிய போது அவையும் பெரிய அளவில் பாடப்பட்டன. பல்லாண்டு வாழ்க படத்தில் நா.காமராசன் எழுதிய போய்வா நதியலையே பாட்டும் புலமைப்பித்தன் எழுதிய ஒன்றே குலம்என்று பாடுவோம் பாடலும் ஜேசுதாஸ் குரலில் நம்மை மெய்மறக்கச் செய்த நாட்கள் அவை. எனக்கு நினைவில் இருக்கும்;ஒரு சம்பவம. அப்போது சிடிக்கள் அதிகமாக கிடைக்காது. ஆடியோ கேசட்டுகள்தாம். நானும் பித்துப்பிடித்தவனாக ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க், மியூசில் வோர்ல்ட் கடைகளுக்கு வாரம்தவறாமல் போய் விடுவேன். கண்ணில் படும் அத்தனை நல்ல பாடல் கேசட்டுகளையும் வாங்கி வந்து சேகரிப்பேன். கிடைக்காத பாடல்களை ரிட்சி தெருவில் போய் 30 ரூபாய்க்கு ஒரு கேசட் வீதம் ரிக்கார்டிங் செய்து வருவேன். இப்போது அந்த கேசட்டுகளை கேட்க சரியான மியூசிக் சிஸ்டம்இல்லாமல்அத்தனையும் மூர்மார்க்கெட்டிலும் பழையபேப்பர் கடைகளில் கிலோ12 ரூபாய்க்கும் விற்று காலி பண்ணி விட்டேன்.மடத்தனம்தான். எத்தனை அரிய பாடல்கள். இனி அவை அந்த ஒரிஜினல் ஹெச்எம்வியின் துல்லியமான ஆடியோவுடன் கிடைக்குமா....பேசாமல் அவற்றை சிடி வடிவில் மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது வேறு வடிவில் கணினியில் சேகரித்து வைத்திருக்கலாம். நேரமின்மை. பணமின்மை ஆர்வமின்மை அல்லது இடமின்மை காரணமாக அவை என்னை விட்டுநீங்கிப் போய்விட்டன. ஒரு முறை ஜெமினி பார்சன் காம்பிளக்சில் நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் கண் மருத்துவமனை நடத்தி வரும் இடத்தின் பேஸ்மேன்ட் பகுதியில் ஒரு ஆடியோ ஷாப் இருந்தது. அங்கு கே.வி.மகாதேவன் இசையமைத்த ஆடியோ கேசட்டுகள் 1,2 என கிடைத்தன. அற்புதமான பாடல்கள். பல பாடல்கள் எம்.எஸ்.வி இசையமைத்ததாக நான் நினைத்திருந்தவை. வாமனன் கே.வி.மகாதேவன் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவசியம் படித்து பாருங்கள்.இதே போல் வி.குமார், ஷ்யாம், வி.தட்சிணாமூர்த்தி, விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், சிவாஜி ராஜா, எல்.வைத்தியநாதன், ஆர். சுதர்சனம், ஆர்.கோவர்த்தனன், டி.ஆர்.பாப்பா, போன்ற இசை மேதைகளின் திறன்கள் குறித்து மிகவும் குறைவாக எழுதப்பட்டுள்ளது. எம்.எஸ்.வி-ராமமூர்த்தி மற்றும் இளையராஜாவின் நீண்ட நெடுங்கால திரையிசை ஆட்சியில் இந்த மேதைகளுக்கும் தனி ராஜ்ஜியமே உண்டு. பல பாடல்களை கண்ணதாசன், வாலி பாடல்கள் எனநினைத்து ஏமாந்து விடுவோம். கடைசியில் பார்த்தால் அவை பூவை செங்குட்டவன்( நான் உங்கள் வீட்டுப் பிள்ளை) ஆலங்குடி சோமு ( இரவும் வரும் பகலும் வரும்)அவினாசிமணி( அங்கே வருவது யாரோ ) என தெரிய வரும். அதே போல்தான் கே.வி.மகாதேவன் பாடல்களை எம்.எஸ்.வி பாடல்களில்இருந்து தனியாக பிரித்து விடுவது சுலபம். வசந்த மாளிகையும் உத்தமனும் சிவாஜிக்காக கே.வி.மகாதேவன் இசைத்தார். அந்தப் பாடல்களைக் கேளுங்கள். இசைக்கருவிகளின் ஒலி, பாடல் வரிகளுக்குத் தரும் அழுத்தங்கள் போன்றவற்றில் ;கே.வி.மகாதேவனின் தனிமுத்திரை தெரியும். கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களில் எனக்குப்பிடித்த பாடல்களின் பட்டியல் மிகப்பெரியது. ஆனால் ஒரே ஒரு பாட்டை சொல்ல வேண்டும் என்றால் எதைச் சொல்வேன்.. கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ....அந்தப் பாடல் எனக்காகவே கண்ணதாசனும் கே.வி.மகாதேவனும் உருவாக்கியது போல் இருக்கும்.

Friday 15 June 2018

உலக சினிமா -மிலாரபா

உலக சினிமா
மிலா ரபா -MILAREPA  -திபெத்திய திரைப்படம்
பாதையை வழிநடத்தும் வெளிச்சம்
செந்தூரம் ஜெகதீஷ்






கர்மத்தின் வினையை பகவத் கீதையும் உரைக்கிறது. தம்மபதமும் விளக்குகிறது. மனிதன் தனது கர்மவினைகளுக்குரிய வாழ்வை நடத்திச் செல்கிறான். அதனால்தான் அவன் செயல்களுக்கு உரிய காரணம் நமக்கு விளங்குவதில்லை. கர்மத்தை மாற்ற கடவுளாலும் முடியாது. ஆனால் நமது பாதையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச இறைவனின் அருள் தேவை. அது கர்மத்தின் விளைவாய் ஏற்பட்ட துன்பங்களை புரிந்துக் கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் கடந்து செல்லவும் உதவும்.
இப்படியொரு சிந்தனையை மையமாகக் கொண்டு திபெத்திய பௌத்த மரபின் அடிப்படையில் உருவான படம் மிலா ரபா.
மிலா ரபா யார்?
11ம் நூற்றாண்டில் வாழ்ந்த திபெத்தின் மகாகவி, ஆன்மீக குரு அதற்கு முன் அவர் ஒரு கொலையாளி- தனது குடும்பத்தை வஞ்சித்தவர்களை பழிக்குப் பழி வாங்கி பேரழிவை உருவாக்கியவர். ஆனால் வன்முறையால் எதையும் அடைய முடியாது என்ற ஞானம் அவருக்கு பௌத்த சிந்தனை மூலம் கிடைக்கிறது.
மிலா ரபாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் நெதின் சோக்லிங் இயக்கிய திரைப்படம் இது.
திபெத்தில் முன்னொரு காலத்தில் பறக்கும் யோகிகள் இருந்தனர் என்பார்கள். 11ம் நூற்றாண்டின் திபெத் இமய மலைப்பிரதேசம் ரிஷிகளாலும் ஞானிகளாலும் நிரம்பியிருந்தது. அவர்கள் எண்ணற்ற அதிசயங்களை செய்தார்கள். தந்த்ரா கலையை அவர்கள்தான் போதித்தார்கள். மந்திர சக்திகளை கைக்கொண்டு மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு சாதாரண இளைஞன் மகா கவியாகவும் கவி ஞானியாகவும் மாறியது எப்படி?
மீலா ரபாவின் தந்தை பெயர்தான் மிலா. மிலாரபாவின் உண்மையான பெயர் தோபகா , தோபகா என்றால் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியான செய்தி, தமக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியால் தந்தை மிலாரபாவுக்கு வைத்த பெயர் அது. பால்ய ஸ்நேகிதி ஜேசாவுடன் ஆடிப்பாடி மகிழ்சசியுடன் வளர்ந்து வரும் சிறுவன் தோபகாவுக்கு தந்தையின் எதிர்பாராத மரணத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல் நிகழ்கிறது.
தமது மரணப்படுக்கையில் மனைவி மற்றும் ஆண் பெண் என இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் படி சகோதரன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார் மிலா. தனது சொத்துகள் முழுவதையும் அவர்களை நம்பி ஒப்படைத்துவிடுகிறார். தோபகாவின் சித்தப்பாவும் அத்தையும் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு அவன் தாயை கொடுமைப்படுத்துகிறார்கள். ஒருவேலைக்காரியைப் போல் நடத்துகிறார்கள். நாய்க்குப் போடும் எலும்பைக் கூட தரமாட்டார்கள். பாட்டுப் பாடுவதால் சிறுவன் மிலாரபாவுக்கு அடியும் உதையும் கிடைக்கிறது. குடும்ப கஷ்டம் தெரியாமல் பாட்டு என்ன பாட்டு என்று ஏசுகிறாள் அத்தை.
மிலாரபா வளர்ந்து விட்டான் .இப்போது இவன் இளைஞன். வலிமையானவன். குதிரை சவாரி செய்வான். ஜேசாவுடன் அவன் காதலும் வளர்ந்துள்ளது. தாய் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாள். ஊரே திரண்டு வருகிறது. சித்தப்பாவும் அத்தையும் வருகிறார்கள். என் மகன் பெரியவனாகிவிட்டான். என் கணவரின் சொத்துகளை கொடுங்கள் என்று கேட்கிறாள் அந்த தாய். ஆனால் பணம் ஏதுமில்லை என்றும் உன் கணவருக்கு கடனாக நாங்கள் கொடுத்த பணம்தான் நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்றும் பச்சையாகப் புளுகுகிறார்கள் அவர்கள். ஊரும் அவர்கள் பக்கம் இருக்கிறது. ஊரில் பெரிய மனிதர்கள் அவர்கள்தானே. அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்களிடம்தானே கையேந்த வேண்டும்.
விருந்து நிகழ்ச்சியில் தாயை அடித்த சித்தப்பாவை தாக்குகிறான் மிலாரபா. அவனை பத்து பேர் சூழ்ந்துக் கொண்டு நையப்புடைக்கிறார்கள். ஆள் பலம் இருந்தால் படை திரட்டி வா இல்லையென்றால் எங்களுக்கு பில்லி சூனியம் வைத்து விடு என்கிறாள் அத்தை அகங்காரமாக.
தாய் உள்ளத்தில் பழி உணர்வு தோன்றுகிறது. அப்போது வீட்டுக்கு ஒரு யோகி இரவு நேரத்தில் அடைக்கலம் நாடி வருகிறார். விளக்கில் எண்ணெய் இல்லாத நிலையில் அவர் மாய சக்தியால் விளக்கு எண்ணெய் இல்லாமல் ஒளி வீசுகிறது. தனது மகனை மாய சக்திகளை கற்றுவரும்படி தூண்டுகிறாள் தாய். நீ பில்லி சூனியம் , கருப்பு ஏவல் போன்ற சித்து வேலைகளை கற்று வந்து உன் சித்தப்பாவையும் அத்தையையும் கொன்று விடு என்று கட்டளையிடுகிறாள் தாய். அப்படி நீ செய்யாவிட்டால் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் எச்சரிக்கை விடுக்கிறாள்.
மிலா ரபா மாயாஜாலங்களைக் கற்க நான்கு மாதம் நெடும்பயணம் மேற்கொள்கிறான். அவன் பழி உணர்வை மறக்காதிருக்க அவன் கழுத்தில் பவள மாலை ஒன்றை அணிவிக்கிறாள் தாய். காதலியும் தன் பங்குக்கு ஒரு சங்கிலியும் சோற்றுமூட்டையில் வைத்து கட்டித் தருகிறாள்.
அற்புதமான காடுகள் மலைகளை கடந்து மிலாரபாவின் குதிரை பறக்கிறது. கேமராவின் மூலம் இந்திய -திபெத் எல்லையில் உள் ள இமயமலையின் கண்குளிரச்செயும் பேரழகை நாம் பார்த்தபடி மிலாரபாவை பின்தொடர்கிறோம்.
இரவு நேரத்தில்  கனப்பு மூட்டி ஓய்வெடுக்கிறான் மிலாரபா. அப்போது அங்கே ஒரு பயணி வருகிறான். தன் பெயர் தர்மா என்று அறிமுகம் செய்து இரவு அவனுடன் இருக்க அனுமதி கோருகிறான். மிலாரபாவும் அவனும் இரவு முழுவதும் பேசி நண்பர்களாகிவிடுகிறார்கள். காலை எழுந்து இருவரும் குதிரைகளில் செல்லும் போது சித்தப்பாவின் படையினர் அவர்களைக் கொல்ல துரத்துகிறார்கள். இருவரும் தப்பிச்செல்ல தர்மா ஒரு மந்திரம் ஏவுகிறான். எதிரிகள் வரும் பாதையில் மூடு பனி சூழ்கிறது. இதனால் அவர்கள் வழிதவறிச்செல்கிறார்கள். மற்றொரு இரவுப் பொழுதில் இருவரும் ஓய்வெடுக்கையில் எதிரிகள் எந்த நேரத்திலும் வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறான் மிலாரபா. வர மாட்டார்கள் என உறுதியாக கூறுகிறான் தர்மா. " அவர்கள் மனங்களில் ஊடுருவி மாயையை ஏற்படுத்தி விட்டேன். மூடுபனியில்  சிக்கியதாக அவர்கள் நம்பி்க் கொண்டிருக்கிறார்கள் .பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டார்கள்" என்று விளக்குகிறான் தர்மா.
தமக்கு மாயாஜால வித்தைகளை கற்றுத்தரும் யோகிகளிடம் அழைத்துச் செல்லுமாறு மிலாரபா கூறுகிறான். தர்மா மிலாரபாவை தமது தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கிறான் . தர்மாவின் தந்தை மிகப்பெரிய யோகி. எதிரியை வெல்ல அவர் சில சூட்சுமங்களை மிலாரபாவுக்கு கற்றுத்தருகிறார். அதில் முதல் பாடம் தான் கர்மவினை,
ஒருவர் செய்யும் நற்செயல்கள் வெண்ணிற நாட்களாகவும் தீமைகள் கரிய நாட்களாகவும் மாறுகின்றன. வெண்ணிற நாட்களில் நமது பலம் ஓங்கும். நாம் நினைத்த காரியங்கள் நடக்கும். நாம் சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம். எதிரியை வெல்ல நினைத்தால் வெல்லலாம். ஆனால் கரிய நாட்கள் தோல்வியை தரும். அவமானம், இழப்பு, வேதனை, துன்பத்தைத் தரும். உனது கரிய நாட்களில் எதிரியுடன் மோதாதே .அவனை விட்டுவிலகிவிடு. ஆனா்ல் எதிரியின் கரிய நாள் தெரிய வரும் போது உன்னுடைய வெண்ணிற நாட்களில் அவன் மீது படையெடு. அவனை அழிப்பது சுலபம் என்கிறார் குருஜி.
பாவம் மாய வித்தைகள்தான் ஏழைகள் தங்கள் அநீதிக்கு பயன்படுத்தும் ஆயுதம் என நினைப்பதாக மிலா ரபா மீது அவர் பரிதாபம் கொள்கிறார்.
ஆனால் அவரிடம் கல்லை பறக்க வைப்பது போன்ற சில வித்தைகளைக் கற்றாலும் மிலாரபாவுக்கு திருப்தி வரவில்லை. இந்த சின்ன சின்ன கண்கட்டு வித்தைகளால் என் பலம் வாய்ந்த எதிரிகளை என்னால் அழிக்க முடியாது. எனக்கு மிக மிக ரகசியமான வித்தைகளை கற்றுத்தாருங்கள் என்று குருவிடம் கோருகிறான் மிலா ரபா.
அப்போது யோன்டன் என்ற குருவிடம் மிலாரபாவை அனுப்பி வைக்கிறார் தர்மாவின் தந்தை.
மிலா ரபா அவரிடம் தனது கதையைக் கூறி மகத்தான வித்தைகளை தமக்கு கற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கிறான். ஒரு குருவானவர் தனது சீடனுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் கற்றுத் தரக்கூடிய மந்திர தந்திர சக்திகளை நான் கற்றுத் தருகிறேன் என்று யோன்டன் கூறுகிறார். ஏழு நாட்களுக்கு இதைப் பயில தியானம் மேற்கொள்ளுமாறு அவர் கூற மிலாரபா ஏழு நாள் தியானத்தில் அமர்கிறான்.
அப்போது அவன் மனம் ஒருமுகப்படவில்லை. எண்ணங்கள் அலை மோதுகின்றன. தியானம் கலைகிறது .உன் மனம் உன் வசம் இல்லை என்கிறார் குருஜி. ஆம். தாயின் துன்பங்கள், காதலியின் பிரிவு, எதிரிகளின் துரோகம் அவனை அலைக்கழிக்கிறது.
மாயையான எண்ணங்களில் நீ சிக்கி்க் கொண்டால் உன்னால் எதையும் சாதிக்க முடியாது. மனத்தை வசப்படுத்து என்றும் மேலும் ஏழு நாட்கள் தியானம் செய்யுமாறும் கூறுகிறார் குரு.
அடுத்த ஏழு நாட்களில் மிகப்பெரிய மந்திர சக்திகளைப் பெறுகி்றான் மிலா ரபா.
ஆயிரமாயிரம் அமானுஷ்ய சக்திகள், பேய் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள், ஆவிகள் யாவும் மிலாரபாவின் உடலுக்குள் அடங்குகின்றன.
தனது சொந்த ஊருக்குத் திரும்பி அங்கு பேரழிவை ஏற்படுத்தும் புயலை கிளப்புகிறான் மிலா ரபா. விறகு வெட்டி வரும் ஒரு மூதாட்டி அவன் அருகே ஓய்வெடுக்கும் போது அவன் மந்திர சக்திகளால் ஊரையே அழித்து நாசம் செய்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறாள். அந்தக் கண்ணீர் மிலா ரபாவை சுடுகிறது.
சித்தப்பா, அத்தை உள்பட தீங்கு செய்தவர்கள் அனைவரும் அழிந்து விடுகிறார்கள்,அவர்களுடன் ஆயிரமாயிரம் அப்பாவிகளும் அந்த ஊழிப்பெருவெள்ளத்திலும் புயலிலும் உயிரிழந்துவிட்டார்கள். எங்கும் சடலங்கள். அனாதையான குழந்தைகள், விதவையான பெண்கள். ஆதரவற்ற முதியவர்கள் என்று மனிதத்தின் கோரமான காட்சிகள் மிலாரபாவை உலுக்குகின்றன.
இரவுகளில் அவனால் தூங்க முடியவில்லை. மிகப்பெரிய மனித துயருக்கு தாம் காரணமாகி விட்டோம் என்று அவன் தவி்க்கிறான். தன் அருகில் படுத்திருந்த கிழவியின் சுருக்கம் தோய்ந்த முகத்தில் வழிந்த கண்ணீர் மனிதத்திற்காக வடித்த கண்ணீர் என்பதை அவன் உணர்கிறான். அவனுள் மாபெரும் மனிதநேயமும் அற உணர்வும் எழுகிறது. அப்போது இரவில் அவன் ஒரு புத்த ஆலயத்தில் அடைக்கலம் நாடிச் செல்கிறான். அங்குள்ள புத்தபிட்சு ஒருவர் புத்தரின் தம்மபதத்தை அவனுக்கு வாசிக்கிறார். அதில் உள்ள போதனைகளை அவனுக்கு உரைக்கிறார்.
பழிவாங்கும் உணர்வால் எதையும் நீ அடைய மாட்டாய்.எதிரிகள் முடிவற்றவர்கள் , நீ அவர்களை அழிக்க அழிக்க அவர்கள் மேலும் மேலும் பெருகி வருவார்கள். நீ அவர்களைப் பழி வாங்க அவர்கள் உன்னை பழி வாங்குவார்கள். இது ஒரு தீராத நோய். எதிரிகள் வெளியுலகில் இல்லை. அவர்கள் உன் மனதுக்குள் தான் இருக்கிறார்கள். உன் மனம் தீமையான எண்ணங்களால் நிரம்பும் போது இந்த எதிரிகள் தோன்றுவார்கள் ,மனத்தை கட்டுப்படுத்து எதிரிகள் மாயமாகிவிடுவார்கள் என்று போதிக்கிறார் அந்த பிட்சு
பாதகமான செயல்களை செய்யாதே சாதகமான செயல்களில் கவனம் செலுத்து என்று புத்தபகவான் கூறியதை வேதவாக்காக உணர்கிறான் மிலாரபா.
மனித குலத்திற்கு தீமை செய்ய நினைப்பது தீய உணர்வுகளைத் தூண்டுவதுதான் நமது தீவினைக் கர்மாவாக மாறுகிறது என்பதையும் மிலாரபா உணர்கிறான். அவை நமது கரியநாட்களாகவும் மாறுகின்றன.
மனிதர்களுக்கு நன்மையைச் செய்வது ,மனிதகுலத்தின் துன்பங்களைத் துடைக்க சேவை செய்வது, மனிதத்திற்காக இயங்குவது நமது வெண்ணிற நாட்களாகி அவை கர்மாவின் துன்பங்களைத் துடைக்க பாதைக்கு வெளிச்சமாகின்றன என்றும் மிலா ரபாவின் விழிப்புணர்வு உரைக்கிறது.
மரணம் பற்றியும் சிந்திக்கிறான் மிலா ரபா. மரணம் முடிவல்ல ஒரு தொடர்ச்சி. முந்தைய கர்மவினைகள் மனிதனை துரத்துகின்றன. அதை மாற்றுவது எப்படி என்று கேட்கிறான் மிலாரபா.
மாபெரும் ஞானிகளை உன்பாதையி்ல் வந்து உன்னை வழிநடத்திச் செல்ல அனுமதி. புத்தர் போன்ற மகத்தான ஞானிகள் அந்தப் பாதையின் வெளிச்சமாக உன்னை வழிநடத்திச் செல்வார்கள் என்று புத்தபிட்சு கூறுகிறார். இறைவன் அளி்த்த மகத்தான மனிதப்பிறவியை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மிலா ரபா உணர்கிறான். அன்று முதல் அவன் சாதாரண நபரில் இருந்து ஞானம் அடைகிறான். அவனும் ஒரு ஞானியாகிறான். ஞானத்தின் பாதையில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.







இப்படம் கொலைவெறியுடன் பழிக்குப் பழி வாங்கத் துடித்த மிலா ரபாவின் வாழ்க்கையின் முற்பகுதியை மட்டும் உரைக்கிறது. மிலா ரபா ஞானமடைந்து தனது தாய் தந்த பழி உணர்வின்  அடையாளமான பவள மாலையை கழற்றுவதும் காதலி தந்த மலையை கூட கழற்றி விட்டு பந்தங்களில் இருந்துவிடுபடுவதும் படத்தின் இரு சிறிய காட்சிகளில் விளக்கப்படுகிறது.
படத்தின் தொடக்கம் முதலே மனத்தை மயக்கும் ஓர் அசீரிரீ போல் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது, அந்த அசீரிரீ நம் மனங்களை படத்தின் மனநிலைக்கு தயார் செய்கிறது.
2006ம் ஆண்டில் வெளியான இ்ப்படத்தின் இரண்டாம் பாகம் 2009 ல் வெளியாகும் என்று படத்தின்  இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது வரவே இல்லை. அந்த இரண்டாம் பகுதியில்தான் மிலா ரபா தனது ஆன்மீக குருவை சந்திக்கும் படலம் உள்ளது.
மிலா ரபாவின் கவிதைகளை ஓஷோ அடிக்கடி மேற்கொள் காட்டுவதுண்டு. மிலா ரபாவை தேடி அலைந்த நாட்கள் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மோதிலால் பனாரசிதாஸ் கடையில் மிலா ரபாவின் கவிதைகள் புத்தகமும் மிலா ரபாவின் வாழ்க்கையை விளக்கும் புத்தகமும் வாங்கி வந்து பத்தாண்டுகள் ஆகி விட்டன. தமிழாக்கம் செய்ய்பட வேண்டிய எண்ணற்ற அரிய பொக்கிஷங்களில் மிலாரபாவின் கவிதைகளும் உண்டு. மிலா ரபாவைப் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியாகி இருப்பது அந்த மகத்தான கவிஞானியைப் புரிந்துக் கொள்ள ஒரு எளிய மார்க்கமாகி விட்டது. சில நேரங்களில் ஒரு புத்தகம் அல்லது ஒரு திரைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தியானம், லயிப்பு, நம்மை அற்புகமான உணர்வுகளுக்கு ஆட்படுத்துகிறது. நமது தீய எண்ணங்கள் கரைந்து விடுகின்றன. நாம் ஞானிகளாகவே மாறிவிடுகிறோம்.

Thursday 14 June 2018

ஜெயகாந்தன் நினைவுகள்

ஜெயகாந்தன் நினைவுகள்





ஜெ.கே என்று நினைக்கப்படும் ஜெயகாந்தனுடன் நானும் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஜெயமோகனுடன் அவரை ஒரு பேட்டியும் எடுத்து ஜெமோவின் கத்திரிக்கு பலியாகி அவரை பிரதான பேட்டியாளராக்கி சொல்புதிது இத ழில் வெளியாகி புத்தகத்திலும் தொகுக்கப்பட்டது. ஜெ.கே.வை அதிக கேள்விகள் கேட்டு அதிகளவி்ல் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்கியவன் நான்தான். ஜெமோ அப்போதுதான் ஜெயகாந்தனை முதன்முதலாக சந்திக்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு ஜெ.கே.சாந்தமாகவே பதில் அளித்தார்.

ஜெயகாந்தன் பற்றி கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்ற பெயரில் உரை நிகழத்தி கட்டுரை வடிவில் தமிழ் இந்துவிலும் வந்திருக்கிறது.
ஜெயமோகனும் வைரமுத்துவும் மட்டும்  ஜெயகாந்தன் போன்றோரை குறித்து எழுத முடியும் என்ற பிம்பத்தை தமிழ்ச்சூழல் ஏற்படுத்தியுள் ளது. இதனை உடைக்கப் போகிறேன். விரைவில் இப்பகுதியில் ஜெ.கே குறித்த பதிவுகளைப் பார்க்கலாம்.

ஜெயகாந்தனின் சில கூட்டங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் எந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டாலும் ஜெகதீஷ் வரலீயா என நண்பர்களிடம் விசாரிப்பதை அறிந்திருக்கிறேன்.
அவருடைய வீட்டில் கூடும் சமபந்தி அரட்டைகளிலும் பல பகல், இரவுகள் கழிந்துள்ளன. ஒருமுறை வேசிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். விபச்சார விடுதிகளில் உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், சகோதரிகளைத் தேடுங்கள் என்ற டால்ஸ்டாயின் மேற்கோளை ஜெ.கே தமது நாவல் ஒன்றி்ல் பயன்படுத்தியதை நான் இடைமறித்து சுட்டிக்காட்டினேன். ஒரு நிமிடம் மௌனமாக ஆழ்ந்து யோசித்தார். எந்த நாவல் என என்னைக் கேட்டார். இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் நாவல், மேகலா மாத இதழாக வந்தது என்று கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஒரு எழுத்தாளனுக்கு இதை விட பெரிய மகிழ்ச்சி இருக்காதுதான். பாருங்க எவ்வளவு ஆழமா உள்வாங்கி படிச்சிருக்கான். அதனால்தான் அவனுக்கு அது நினைவுல பதிஞ்சிருக்கு என்று பாராட்டினார். அதன் பிறகு எந்த கூட்டத்திலும் அவர் கண்கள் என்னைத் தேடுவதை அறிவேன்.
காந்தி கண்ணதாசனின் மகன் திருமணத்திற்கு சென்ற போது ஜெ.கே.வந்திருந்தார். நடந்து மேடை நோக்கி போன அவர், வழிமறி்த்து வணக்கம் சொன்ன என்னை கண்டு புன்னகைத்தார். பின் மேடையில் இருந்துதிரும்பி வரும் போது நான்கு நாற்காலிகள் தள்ளி உட்கார்ந்திருந்த என் அருகே உட்புகுந்து என் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றார். அந்த அன்பு எனக்கு அற்புதமாக இருந்தது.
எம்.வி.வி. இறந்த போது தினமணியில் மறுநாளே ஜெமோ ஒரு கட்டுரை எழுதினார். எம்.வி.வியின் இரண்டு நாவல்கள் மட்டும்  பொருட்படுத்தத்தக்கவை என்று ஒரு விமர்சனம் அதில் இருந்ததாக நினைவு. அன்று மாலை மயிலாப்பூர் லஸ் கார்னர் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே ஒரு காரில் அமர்ந்திருந்த ஜெயகாந்தனுடன் பேசிக் கொண்டிருந்த போது ஜெயமோகனை வசை பாடினார்.
மனுசன் செத்து பால்கூட ஊத்தியிருக்க மாட்டாங்க அதுக்குள்ள விமர்சனம் எதுக்கு....என்று சீறினார் ஜெ.கெ.
சார் உங்களுக்கும் அதுதான் நடக்கும் என்றேன். அவர் கோபம் அதிகமானது. அப்புறம் என்னவெல்லாம் திட்டினார் என்பதை என்னால் நினைவில் வைக்க முடியவில்லை. அவருக்கும் அதுதான் நடந்தது.



Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...