Wednesday 7 October 2020

எஸ்.பி.பியும் சிவகுமாரும்

ஆயிரம் நிலவே வா 9 எஸ்.பி.பியும் சிவகுமாரும் சிவகுமார் பல படங்களில் இரண்டாவது நாயகனாகவும் அதை விட கூடுதலான படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் அவருக்கு டிஎம்.எஸ் . ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் குரல் கொடுத்த போதும் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் பாடியுள்ளார். சிவகுமாரின் படங்களில் எஸ்.பி.பி. பாடிய சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியல் மிக நீளமாக இருக்கும். என் நினைவில் இருப்பவை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். சில பாடல்கள் சிவகுமார் படத்தில் இருந்தாலும் அவர் பாடியதாக இருக்காது. அதையும் கவனிக்க வேண்டும். எங்கம்மா சபதம் படத்துக்கு அன்பு மேகமே இங்கு ஓடி வா என்ற பாடலை விஜயபாஸ்கர் இசையில் பாடினார் எஸ்.பி.பி. கண்மணி ராஜா படத்தில் காதல் விளையாட கட்டிலிடு கண்ணே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எண்ணங்களின் இன்ப நடனம் பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும் என்ற வரியை அவர் பாடிய அழகு மிகவும் பிடிக்கும். மூன்று தெய்வங்கள் படத்தில் முள்ளில்லா ரோஜா என்ற பாடல் பித்து பிடிக்க வைத்த காலம் ஒன்று இருந்தது. இன்றும் அது இனிய பாடல்தான். பணத்துக்காக படத்தில் யாருமில்லை இங்கே சுகம் சுகம் என்ற டூயட் பாடல் கிக்கான குரலில் கிறங்க வைப்பது. மதன மாளிகையில் ஒரு சின்னப்பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது என்று பாடிய எஸ்.பி.பி. அம்மா பாடல்கள் வரிசையில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டினார். புலவர் புலமைப்பித்தன் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.பி.சீனிவாசன். தேன் சிந்துதே வானம் என்ற டூயட்டில் நம்மையும் மழையி்ல் சொட்ட சொட்ட நனைய வைப்பார் பாலசுப்பிரமணியம். தங்கத்திலே வைரம் படத்தில் ஜேசுதாசும் எஸ்.பி.பியும் பாடிய என் காதலி யார் சொல்லவா என்ற பாடல் மிகவும் ரசித்த பாடல். இருபெரும் பாடகர்கள் தங்கள் வித்தியாசத்தை பதிவு செய்துள்ளனர். உறவாடும் நெஞ்சம் படத்தில் வரும் ஒருநாள் உன்னோடு ஒரு நாள் என்ற பாடலும் புவனா ஒரு கேள்விக்குறியில் வரும் விழியிலே மலர்ந்தது பாடலும் ராஜா என்பார் மந்திரி என்பார் பாடலும் இடம் பெற்றன. இதை ரஜினி பாடியிருப்பார். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா படத்தில் ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை பாடலையும் தேங்காய் சீனிவாசனுக்காக சின்னப்புறா ஒன்று பாடலையும் எஸ்.பி.பி பாடியிருப்பார். இசை அமைத்தவர் இளையராஜா. வண்டிச்சக்கரம் சிலுக்கு ஸ்மிதா அறிமுகமான படம். அவருக்கு சிலுக்கு என்ற பெயர் தந்த பாடலையும் எஸ்.பி.பி பாடினார். வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை சிலுக்கோட கையால் வாங்கிக் குடி என்று குடிமக்களை ஆட்டம்போட வைத்த பாட்டு அது. அதே படத்தில் தேவி வந்த நேரம் என்ற அழகான டூயட்டையும் வாணி ஜெயராமுடன் பாடினார் எஸ்.பி.பி. இசை சங்கர் கணேஷ் சிட்டுக்குருவி படத்தில் என்கண்மணி உன் காதலி என்ற பாடல் மிகவும் ஹிட்டான பாடலாகும். பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி என்ற வாலியின் இன்னொரு பாடலும் கேட்க இனிமையானது. பூந்தளிர் படத்துக்கு மனதில் என்ன நினைவுகளோ என்ற பாட்டையும் வா பொன் மயிலே என்ற பாட்டையும் இளையராஜா இசையில் பாடினார். கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். இதில் எஸ்.பி.பிக்கு இரண்டு பாடல்கள் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை புதுமை என்று புலமைப்பித்தன் எழுதிய பாடலை இளையராஜாவுக்கும் நான் உன்னை நினைச்சேன் என்ற வாலியின் பாடலை சங்கர் கணேஷ்க்கும் பாடினார். பட்டிக்காட்டு ராஜாவில் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் என்ற எவர்கிரீன் பாடலை கமல்ஹாசனுக்குப் பாடிய எஸ்.பி.பி. அதே படத்தில் கதாநாயகனான சிவகுமார் பாடுவது போல் என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான் என்ற அழகான பாடலை வாணி ஜெயராமுடன் பாடினார். இசை சங்கர் கணேஷ். பாடலாசிரியர் வாலி. அவன் அவள் அது படத்தில் இல்லம் சங்கீதம், ஏணிப்படிகளில் பூந்தேனில் கலந்து, ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு , அக்னி சாட்சியில் கனா காணும் கண்கள் மெல்ல, போன்ற பாடல்களை எஸ்.பி.பி சிவகுமாருக்காக பாடினார். உன்னை நான் சந்தித்தேன் படத்தில் இளையராஜா இசையில் தேவன் தந்த வீணையும் இன்று நீ நாளை நான் படத்தில் தாழம்பூவே கண்ணுறங்கு பாடலும் எஸ்.பி.பியின் வைரங்கள். ----------------

1 comment:

  1. நன்றி சார் நல்ல பாடலை ஞாபகப்படுத்தினீர்கள்.... எப்போதே கேட்டிருந்ததை நினைவு பதிவு பகுதியில் இருந்து தோண்டி எடுப்பது சொல்ல முடியாத சின்ன சந்தோஷம்.... (தங்கத்திலே வைரம் படத்தில் ஜேசுதாசும் எஸ்.பி.பியும் பாடிய என் காதலி யார் சொல்லவா என்ற பாடல்)

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...