Wednesday 25 July 2012

நிலையில்லாத மனிதர்கள்

நிலையில்லாத மனிதர்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
சுயம் 1
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள் என்ற எஸ்.ஜானகியின் குரலில் ஒலிக்கும் வசந்தகாலக் கோலங்கள் பாட்டு என் மனதுக்குள் இன்றும் ஒரு மெல்லிய சோகத்துடன் இசைத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் உறவுகளை நாடுவதும் அவற்றை தக்க வைக்க பாடுபடுவதும் அவை சிதறிய கணங்களில் நொறுங்கிப் போவதும், பின் மீண்டெழுந்து இன்னொரு உறவை நாடுவதுமாகவே வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. எந்த ஒரு உறவும்- நட்பு ,காதல் பாசம் என என்ன பெயரிட்டு அழைத்தாலும்- நீடிப்பதே இல்லை.
உறவு சிதைவுற நானும் ஒரு காரணமாக... இருக்கலாம். ஆனால் அதன் வினை அல்ல நான் எதிர்வினைதான். வினை எது என்றால் அது அடுத்தவரிடமிருந்து வருவதுதான். சார்த்தர் சொன்னது போல் அடுத்தவர் நரகம் என்பது என்னைப் பொருத்தவரை சரியே.
அம்மா, அப்பா, தம்பிகள், தங்கையர் ,மனைவி என பெரும் குடும்ப உறவுப் பிணைப்புகள் இருப்பினும் எல்லோரது மனங்களிலும் பாசம் இருப்பினும் நான் தனியாகவே வாழப் பழகியிருக்கிறேன். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டமாக செல்லும் சுற்றுலாக்களில் தனித்திருக்கவே விரும்பியிருக்கிறேன். ஏன் இந்தத் தனிமை உணர்வு என புரிய பலகாலம் ஆகியிருக்கிறது. முதலாவது என் நுண்ணுணர்வு. அசட்டு ஜோக்குகளுக்கு என்னால் சிரிக்க முடியாது. அடுத்த மனிதரை காயப்படுத்த தெரியாது. பணம் பகட்டு அந்தஸ்து சாதி பெயர் சொல்லி யாரையும் புகழ்வதோ இகழ்வதோ பிடிக்காது. கணக்குப் பார்த்து உறவுப் பேண தெரியாது. பொய்யாக பாசம் செலுத்த முடியாது. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்க முடியாது. சட்டென உண்மையைப் பேசாமல் பதுக்க முடியாது. முக்கியமாக நிறைய நிறைய பணம் சம்பாதிக்கத் தெரியாது.
ஆனால் என்னைச் சுற்றியிருந்த எல்லா மனிதர்களிடமும் இந்த குணங்கள் தகுதிகளாக நிரம்பியிருந்தன. அவர்கள் என்னை ஏளனம் செய்யுமளவுக்கு அவர்களிடம் அந்த செல்வங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. நான் மேலும் மேலும் பிச்சைக்காரனைப் போல அவர்களின் கண்களிலிருந்து விலகிப் போய்க் கொண்டே இருந்தேன்.
இரண்டாவது பிரச்சினை அறிவு. கற்றதனால் ஆய பயன் என்ன என்று தெரியாமல் படிக்கப் படிக்க புதிய உலகங்களில் நான் பயணித்தேன். கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசியாகித் திரிந்தேன். உமர் கய்யாமின் போதையில் திளைத்தேன். இக்பாலின் தேசபக்தியில் புதைந்தேன். காரல்மார்க்சின் மனிதநேயத்தில் கசிந்தேன். பாலூறாத ஜென்னியின் மார்புக் காம்புகளில் கண்ணீரை சிந்தினேன். இறந்துவிட்ட அந்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லாத போது, பிறந்ததும் தொட்டிலே வாங்க முடியாத குழந்தைக்கு செத்தப் பிறகு சவப்பெட்டி வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன என்ற அந்த மேதையின் விச்ராந்தி மனநிலையில் நான் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதனை தரிசனம் செய்தேன். பாரதியின் கண்ணம்மாவை காதலிக்கத் தொடங்கி, ஆண்டாளின் மணமாலைக்காக பாமாலை பாட ஆரம்பித்துவிட்டேன். சித்தர்களின் வேதாந்தத்தில் திளைத்து ஓஷோவின் மெய்ஞானத்தில் முளைத்தேன். கண்ணதாசனின் திரைப்பாடல்களில் மயங்கி, புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடத்தும் கந்தசாமியிடத்திலும் கதறி அழுதேன். புத்தகங்கள் எனது வாழ்க்கையின் பிரிக்க முடியாத சுமையாகி விட்டது. புவியரசு சொன்ன மாதிரி தலைமூழ்கித் தொலைக்க ஒரு தீர்த்தக் கரை இல்லாமல் தலைச்சுமையாக இன்றுவரை சுமக்கிறேன்.
அடுத்தது அன்பு. இந்த வார்த்தையை எல்லோரும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார்கள். சாப்ளின் சொன்னதுமாதிரி நாம் அதிகமாக சிந்திக்கிறோம்.மிகக் குறைவாகவே உணர்கிறோம். அன்பு என்ற சொல்லும் உணர்தலுக்குப் பதிலாக சிந்திப்பதற்காகவே மாறியிருக்கிறது.
கிடங்குத் தெரு நாவலில் ஓரிடத்தில் மனிதர்களை நான் வெறுத்துவிடுவேனா என்று பயமாக இருப்பதாக எழுதியிருப்பேன். அப்படி வெறுக்கும் அளவுக்கு பல மனிதர்கள் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அடிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர். சாக்கடைகளையும் ஆழ்துளைகளையும் திறந்துப் போட்டு போகும் தொழிலாளிகள், , பணம் கறக்கவும் புத்தகம் வாங்கவும் சிடியை அபகரிக்கவும் சுற்றிவரும் நண்பர்கள் வட்டாரம் என யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் கோபமும் பொங்கிப் பொங்கி வருகிறது. முட்டாள்கள் அலுவலகத்தில் வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் சற்றும் குறையாத தோரணையுடன் இல்லாளும் இம்சையரசியாகிறாள்.
இப்படிப்பட்ட மனநிலையில் வந்து வாய்க்கும் உறவுகள் சில சமயம் நட்பின் பெயரால் வருகின்றன. 20 ஆண்டுகளாகப் பழகிய நண்பர்கள் கூட சில்லியான ஒரு காரணத்தால் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போகிறார்கள். ஜெயமோகன் போல ,,,,,,சிலர் பின்னால் போய் குழிப் பறிக்கிறார்கள். என்னுடன் பத்து நிமிடம் பேசித் தீர்க்க அவர்களுக்கு மனம் இல்லை.நேரம் இல்லை.
பத்தாண்டுகளாகப் பழகிய தோழி ஒருவர்- மிகவும் கண்ணியமான பெண்தான்- திடீரென தொலைபேசி உறவைத் துண்டித்து விட்டார். பேசாமல் பலமாதம் இருந்து பின்னர் தானாக வந்துப் பேசினார். அவர் பேசாமல் இருந்ததைவிட என்னைக் கூப்பிட்டு நீ நண்பனாயிருக்க லாயிக்கில்லாத ஆள் என நாலு அறை விட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். அப்படி எந்தத் தப்பும் நான் அவரிடம் செய்யவில்லை என்பது வேறு விஷயம்.
காதல் என்று வரும் உறவுகளும் காற்றில் கரையும் கற்பூரம் போல 2 நாட்கள் அல்லது 2 மாதங்களில் காணாமல் போய்விடுகின்றன. ஏழுஜென்ம பந்தங்களுக்காக யாரும் அழுவதாகத் தெரிவதில்லை. சிலருடன் அப்படி இப்படி பழகி அந்த வார்த்தையே கசந்துவிட்டது.
நான் மட்டும்தான் இப்படி என்று தெரிகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். நட்பு இருக்கு, காதல் இருக்கு உடலுறவு இருக்கு உறவுகள் இருக்கு பணம் சேருகிறது. பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்கள். பக்தி இருக்கிறது. கூட்டமாக சேர்ந்து தண்ணியடிக்கிறார்கள், சீட்டாடுகிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அல்லது சேர்ந்து சிரியோ சிரி என்று சிரிக்கிறார்கள். சிக்கனும் ஆடும் தின்று தின்று எருமைக்கடா மாதிரி உடலை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
மூளையே இல்லாமலும் உலகில் வாழும் கலையை கற்றுவைத்திருக்கிறார்கள்.
போதுமடா சாமி. வாழ்க்கையை இனிதே முடித்துக் கொள்ளலாம் என்றுதான் இக்கணத்திலும் தோன்றுகிறது. தோற்றுப் போன ஒரு வாழ்க்கையின் சடலத்தை அதன் நாற்றத்தை இன்னும் எத்தனை நாட்கள் சுமப்பது என்பதுதான் தெரியவில்லை. தூக்கிப் போடவாவது நாலு பேர் வேண்டுமே என்று தேடித்தேடி நாலு பேரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.
போதும் விடுங்கள் கொஞ்சம் அழுது முடிக்கிறேன்.
வாழ்க்கை அழைக்கும் வரை வாழத்தான் போகிறேன். அதன் அழைப்பு என்னை வேறு எதற்காகவோ வாழ வைத்துக் கொண்டே இருக்கிறது. அது எது...அதன் சொரூபத்தை திருப்பதி வெங்கடாசலபதியிலோ ஒரு குழந்தையின் புன்னகையிலோ எங்கேயோ நான் தரிசித்தபடியேதான் உயிரை விடுவேன்.இப்போதே அல்ல, எப்போதாவது.
இப்பதிவு என்வாழ்வுக்கான சாட்சியமாக இருக்கட்டும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...