Tuesday 20 October 2020

35 ஆண்டு இலக்கிய வாழ்வு -செந்தூரம் ஜெகதீஷ்

35 ஆண்டுகள் இலக்கிய வாசிப்பு ....வீடு வீடாக ,கூட்டம் கூட்டமாக சென்று சி.சு.செல்லப்பா,எம்.வி.வெங்கட்ராம்,வெங்கட் சுவாமிநாதன், அசோகமித்திரன்,கோவை ஞானி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஞானக்கூத்தன்,இன்குலாப்,தமிழன்பன்,மு.மேத்தா,நா.காமராசன்,வைரமுத்து,பொன்னீலன், பிரபஞ்சன் உள்பட நூற்றுக்கணக்கான ஆளுமைகளை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். என் பெயர் தெரியாத யாரும் இலக்கிய உலகில் இருக்க மாட்டார்கள். இருப்பினும் எல்லா பட்டியல்களிலும் என் பெயரை பெத்த பெருமாள்கள் யாரும் சொல்ல மாட்டார்கள். என் பெயரையோ என்னுடன் பல ஆண்டுகளாக பழகியதையோ மறப்பார்கள். அல்லது மறைப்பார்கள்.நான் நாள்தோறும் எழுதுவதை வாசிக்க எனக்கொரு வாசகப் பரப்பு விரிவடைந்து கொண்டு இருப்பது குறித்தும் கவனிக்க மாட்டார்கள். பட்டியலில் பெயர் இல்லை என்பதல்ல என் குறை. பட்டியலிடும் போது பெயர்கள் விடுபடுவது இயல்பு. நானும் தமிழின் முக்கிய கவிஞர்கள் என வாசிப்பு அனுபவத்தில் 200 பெயர்களைப் பட்டியலிட்ட போது குறைந்தது 50 பேரை விட்டு விட்டதை நிதர்சனமாக உணர்ந்தேன். ஆனால் என் இருப்பையே இல்லாமல் செய்கின்ற தமிழ்ச் சூழலின் கோர முகம்தான் எல்லோரிடமும் தெரிகிறது. எனது எழுத்துலக வாழ்வில் இரண்டு விருதுகளையும் என்னுடன் நூறுசதம் இணக்கம் கொண்ட ஆறேழு நண்பர்களையும் எந்த ஒரு நல்ல கருத்துக்கும் படைப்புக்கும் மனம் நிறைந்த வரவேற்பு கூறும் சில அபூர்வமான வாசக நண்பர்களையும் பெற்றுள்ளேன்.பொருள் இழப்பு காலம் இழப்பு என கணக்கிட்டால் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகத் தெரியலாம். ஆனால் இதைவிட ஓர் அர்த்தப் பூர்வமான வாழ்க்கையை வேறு எப்படி வாழ்ந்த போதும் நான் அடைந்திருக்க மாட்டேன்.கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட் என்ற ஆங்கில எழுத்தாளர் கூறியது போல நாம் என்னவாக ஆகிறோம் என்பது முக்கியமல்ல. நாம் என்னவாக இருக்கிறோமோ அதுவே முக்கியம்.இன்றைய என் வாழ்க்கை ஏக்கங்களும் போதாமைகளும் நிரம்பியதாக இருந்த போதும் என் கவிதையில் கூறியது போல எனக்கான இருளில் மறைந்துள்ளது எனக்கான ஒளி.

இன்று வாசித்த புத்தகம் 1-6

இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ----------------- 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா? --------------------------- 3 லியோ டாலஸ்டாயின் நீதிக் கதைகள்.தமிழாக்கம் முல்லை முத்தையா. போரும் அமைதியும்,புத்துயிர்ப்பு,அன்னா கரீனினா போன்ற பிரம்மாண்டமான நாவல்களை எழுதியவர் டாலஸ்டாய்.மகாத்மா காந்தி தனது அகிம்சை கொள்கையை டால்ஸ்டாய் மூலம் பெற்றதாக குறிப்பிட்டார். டால்ஸ்டாய் எழுத்துகளை தமிழில் கு.ப.ரா.உள்பட பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.என்னிடம் சுமார் 30 தமிழாக்கங்கள் உள்ளன.அதில் ஒன்று முல்லை முத்தையா மொழிபெயர்த்த நீதிக் கதைகளின் தொகுப்பு. உழைப்பு,ஊக்கம், அன்பு, எளிமை,ஏழ்மை,தெய்வசிந்தனை,கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்கிறார் முல்லை முத்தையா.எளிமையான தமிழ் நடையில் டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைகள் வாசிக்க சுகம் அளிக்கின்றன. அவருடைய புகழ்பெற்ற கதையான ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும் என்ற கதை இத்தொகுப்பில் பேராசைக்காரன் என்ற பெயரில் உள்ளது.அதே போல கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கதை அழகானது.ஒரு பாரசீக துறவி தனது நாத்திக கருத்துகளால் மன்னரால் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் சூரத் நகருக்கு வருகிறார்.அவர் உதவிக்கு ஒரு கருப்பின அடிமையையும் அவர் அழைத்து வந்துள்ளார். அங்கு ஒரு டீ ஷாப்பில் பல்வேறு நாட்டவர் இருக்க அடிமை ஒரு சிறிய விக்ரகத்தை தன்னை எப்போதும் காக்கும் கடவுள் என்று கூற தர்க்கம் உருவாகிறது. ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு மதத்தவரும் தனது தெய்வம் தான் உயர்ந்தது என்று வாதாடுகின்றனர்.ராகு கேது குறித்தும் கூட ஒருவர் பேசுகிறார். நடுநிலையுடன் அனைவரின் வாதங்களையும் கேட்டு கப்பல் கேப்டன் ஒருவர் டால்ஸ்டாயின் குரலாக தனது கருத்தை முன் வைக்கிறார்." எல்லா மதங்களையும் இணைப்பதற்காக கடவுள் தாமே தோற்றுவித்த ஆலயம் இந்த உலகம் தான் .அதற்கு நிகரான ஆலயத்தை மனிதர்கள் கட்டிவிடவில்லை.கடவுளைப் பற்றி மனிதனுடைய கருத்து எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடியும் என்றும் கப்பல் தலைவர் கூறுகிறார். தெளிவான சிந்தனை யுடன் கதையை முடிக்கிறார் டால்ஸ்டாய். ------------------------------------------------------------------ 4 நா.காமராசனின் சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள். எண்பதுகளில் சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் அப்துல் ரகுமான் தலைமையில் நான் கவிதை வாசித்த போது என் கவிதையில் பெரிய உருது கவிஞர்களின் தாக்கம் இருப்பதாக கூறிய அப்துல் ரகுமான் நா.காமராசன் போல ஜெகதீஷ் வளர்வார் என்று கூறினார். அதுவரை நா.காமராசனை பெரிய கவிஞர் என்று எண்ணியதில்லை.முதல் சந்திப்பிலேயே என்னை நா.காமராசனுடன் ஒப்பிட்டு விட்டாரே என்று கருப்பு மலர்களை மீண்டும் படித்தேன்.ஆனால் அது என்னை கவரவில்லை. சரி கவிக்கோ சும்மா ஒரு புகழ்ச்சிக்கு சொன்னது என்று எண்ணி மறந்து விட்டேன்.நா.காமராசன் கவியரசு பட்டம் போட்டுக் கொண்டார். கண்ணதாசனை விட தான் பெரிய கவிஞர் என்று பேட்டி கொடுத்தார்.இதே போல வைரமுத்துவும் கவியரசு பட்டத்துக்கு ஆசைப்பட்டு கடும் எதிர்ப்பு எழுந்ததால் கலைஞர் அவருக்கு கவிப்பேரரசு பட்டம் கொடுத்ததும் தனிக் கதை.நல்ல வேளை கண்ணதாசன் தப்பினார். என்னைப் பொருத்தவரை கவியரசு என்றால் அது கண்ணதாசன் மட்டும்தான். நா.காமராசனின் இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.பல ஆண்டுகள் கழித்து படிக்கும் போது நா.காமராசன் எழுத்தில் ஒரு ஆழமான தேடலும் எளிமையான தத்துவமும் இருப்பதை உணர முடிகிறது.இதைத்தான் அன்று கவிக்கோ குறிப்பிட்டார் போலும்.இது ஒரு வசன கவிதை புத்தகம். நட்பு,தாய்,புரட்சி, காதல் ,குழந்தைகள் என்று நா.காமராசன் வடித்த சொற் சித்திரங்கள் இதில் உள்ளன.மகாபலிபுரம் பற்றி எழுதிய வரிகள் படித்து ரசிக்கத் தக்கவை.கவிஞர்களின் நூல் நிலையமே கடற்கரை என்கிறார். பன்னீர் மலர்கள் உதிர்வதை வெவ்வேறு காலங்களில் வேறு வேறு அர்த்தத்தில் காண்கிறார். நட்பை கூறுகையில் யாரோ ஒருவன் தனிமைத் தீவுக்குப் போகும் போது ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களை எடுத்துச் செல்ல விரும்பினானாம்.எனக்கு மட்டும் அப்படி ஒரு தனிமை பாக்கியம் கிடைக்கும் என்றால் வேதனைகளெல்லாம் கரைகிறவரை அழுவதற்குத் தேவைப்படுகிற கண்ணீரை என் கண்களில் எடுத்துச் செல்வேன் என்று கூறுகிறார் நா.கா .மனிதனை அதிகமாக அழ வைப்பது காதல் என்றால் அந்த கண்ணீரைத் துடைப்பது நட்பின் கரங்கள் அல்லவா... ஆனால் நம்மை நமது நண்பர்கள் கூட சில நேரங்களில் அழச் செய்து விடுகிறார்கள். அதனால்தான் எப்போதாவது யாருடைய உள்ளத்தையாவது நான் புண்படுத்தியிருந்தால் அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள் என்று விடைபெறுகிறான் கவிஞன். ----------------------------- 5 இயக்குனர் சேத்தன் ஆனந்த் நடிகர் தேவ் ஆனந்தின் அண்ணன். கைடு படத்தை இயக்கும் போது தேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். இதனால் அந்தப் படத்தை கடைசி தம்பியான விஜய் ஆனந்த் இயக்கினார். சேத்தன் இயக்கிய 18 படங்களும் முக்கியமானவை. இந்த புத்தகத்தில் தமது திரைப்பட அனுபவங்களை வழங்கியுள்ளார்.போட்டோ ஆல்பம் போல ஏராளமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் படங்கள் கொண்ட இந்த புத்தகத்தை நேற்று மூர்மார்க்கெட்டில் வாங்கி வந்து கீழே வைக்க மனமில்லாமல் படித்தேன்.சேத்தன் ஆனந்த் இயக்கிய ஹஸ்தே ஜக்கம் ( புன்னகைக்கும் காயங்கள் ) டாக்சி டிரைவர், ஹக்கீகத் ( யதார்த்தம்) ஹீர் ராஞ்சா போன்ற படங்கள் நினைவுத் திரையில் ஓட இந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியது சிலிர்க்க வைத்த அனுபவம். முகமது ரஃபி ,லதா மங்கேஷ்வர் போன்ற அற்புதமான பாடகர்கள் பாடிய மிகச்சிறந்த சில படங்கள் சேத்தன் படங்களில் இடம் பெற்றன.ஹீர் ராஞ்சா வில் ரஃபி பாடிய யே துனியா என்ற பாடல் 12 நிமிடங்கள் ஓடக்கூடிய பாடல்.காதலில் தோல்வி யடைந்த ஒரு மனிதன் ஆன்மீகத்தை நாடி புனித யாத்திரை செல்வதாக இப்பாடல் பல புண்ணிய தலங்களிலும் பாலைவனத்திலும் படமாக்கப்பட்டது.ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ஆறு மனமே ஆறு என்ற பாடலும் அப்படிப்பட்டதுதான். இதே போல ஹஸ்தே ஜக்கம் படத்தில் லதா மங்கேஷ்வர் பாடிய பேதாப் தில்கீ தமன்னா என்ற பாடல் ஆழம் மிக்கது.இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு சேத்தன் ஆனந்துக்கு ஒரு சல்யூட் வைப்போம். ------------------- 6 வ.ரா.வை ஒரு தலைமுறையே அறியாமல் இருப்பது துரதிர்ஷ்ட்டம். தமிழ் உரைநடை முன்னோடி அவர் .புனைவு அல்லாத எழுத்தை சுவையாக எழுதினார். அவரது சொர்க்கத்தில் சம்பாஷனை ஒரு கற்பனை சித்திரம்.சொர்க்கத்தில் பச்சையப்பரும் பட்டினத்தாரும் சந்தித்து பேசுகிறார்கள்.பெண்களை பேய் என்று கூறிய பட்டினத்தாரைக் கண்டிக்கிறார் பச்சையப்பர். தன்மயக்கத் தால் (ஈகோவால்) ஏற்படும் யுத்தங்கள், ஆண் பெரியவன் என்ற பைத்தியக்காரத்தனங்களை விவாதிக்கிறார்கள்.கண்ணகியும் ஆண்டாளும் சந்தித்து பேசும்போது தமிழின் சிறப்பை சிலாகிக்கிறார்கள்.மீண்டும் தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்படுகிறார்கள்.பாரதியும் கம்பனும் அம்பிகாபதியை அருகில் வைத்து காதலின் பெருமை பேசுகிறார்கள்.தெனாலிராமன்/காளமேகம், இளங்கோ/சாத்தனார், மாதவி /தமயந்தி என பல்வேறு உரையாடல்கள் வ.ரா.வின் தெளிந்த நீரோட்டம் போன்ற எழுத்து நடையால் மனம் கவர்கின்றன. வ.ரா.வின் நூல்கள் அனைத்தும் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும்.

Saturday 17 October 2020

மனப்பிறழ்வு நேரங்கள்

மனப் பிறழ்வு நேரங்கள் வாய்க்கும் போது ஒரு இசை அல்லது ஒரு ஆழமான புத்தகம் அல்லது மனம் விரும்பும் ஒரு தோழமை இருப்பது நலம். வாழ்க்கை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு. இதனை துயரில்லாமல் கடந்து விட வேண்டும். யாருமறியா தனிமையில் மரணம் எங்கே அழைத்துச் செல்லும் என்று யாரும் அறியார்.யாக்கைத் திரியின் கடைசி சுடரை பொத்தி காக்கின்றேன்.அழகும் இளமையும் இயக்கமும் இருக்கும் வரை என் பின்னால் சிலர் இருப்பார்.அவர்களில் ஒரு ஆறுதலை தேடிக் கொள்ளவும் வேண்டும். இதுவரை வாழ்ந்ததற்கான கண்ணீருடன் சில புன்னகைகளை என்னுடன் நான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இன்று வாசித்த புத்தகம் 1-2

1இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ------------------------------------ 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா?

Thursday 15 October 2020

எஸ்.பி.பியும் ரஜினிகாந்த்தும்

ஆயிரம் நிலவே வா 16 எஸ்.பி.பி.யும் ரஜினிகாந்த்தும் ரஜினிகாந்த் கதாநாயகனாக முதல் முறை பெயர் பெற்ற படம் புவனா ஒரு கேள்விக்குறி. இதில் ரஜினிக்கு மிகச்சிறந்த ஒருபாடலை இளையராஜா இசையமைக்க பஞ்சு அருணாசலம் எழுதிய ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள என்ற பாடல் படமாக்கப்பட்டது. அது ரஜினியின் முதல் அரசியல் பாடலாகவும் இப்போது தெரிகிறது. பல்லவி அப்படி...இதனைப் பாடியவர்கள் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும்.அதே படத்தில் விழியிலே மலர்ந்தது பெண் என்னும் பொன் அழகு என்று இன்னொரு பாடலையும் எஸ்.பி.பி ரஜினிக்குப் பாடினார். சதுரங்கம் படத்தில் ரஜினி்க்கு ஜோடியாக பிரமீளா நடித்திருந்தார். இந்தப் படத்தில் மதனோற்சவம் ரதியோடுதான் பாடலை எஸ்.பி.பி வாணி ஜெயராமுடன் ரஜினிக்குப் பாடினார். வாலி இயற்றிய பாடலுக்கு இசையமைத்தவர் வி.குமார். வணக்கத்துக்குரிய காதலியே ஸ்ரீதேவிக்கும் ரஜினிகாந்த்துக்கும் முதல் கெமிஸ்ட்ரி உருவாக்கிய படம். இளமை ததும்பும் ஸ்ரீதேவியை ரஜினி தூக்கிக் கொண்டு ( மினி ஸ்கர்ட்டில் ) ஆடிப்பாடினார். இதில் ரஜினிக்கு அறிமுகப்பாடல் hey i am the king of kings என்று தொடங்கி கொட்டு கொட்டு மேளம் கொட்டு என்ற பாடலுக்கு எஸ்.பி.பி. குரல் கொடுத்தார். பாடல் கண்ணதாசன். இசை எம்.எஸ்.வி. மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை பாடலை கங்கை அமரன் எழுத இளையராஜா இசையமைத்தார். காளி என்ற ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைத்த முக்கியப் பாடல் இது.இதனை எஸ்.பி.பி தன் இனிமையான குரலால் அழகு செய்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான தப்புத் தாளங்கள் படத்திலும் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களை எஸ்.பி.பி. விஜயபாஸ்கர் இசையில் ரஜினிக்காகப் பாடினார். தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதங்கள் என்றும் என்னடா பொல்லாத வாழ்க்கை என்றும் பாடல்கள் பிரபலமாயின. என் கேள்விக்கென்ன பதில், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் போன்ற படங்களிலும் எஸ்.பி.பியின் பாடல்கள் இடம்பெற்றன. ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ பாடலை எஸ்பிபி லயித்துப் பாடினார். இளையராஜா இசையமைத்த பஞ்சு அருணாசலத்தின் பாடல் அது. பில்லாவில் மெல்லிசை மன்னர் இசையில் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களும் ரஜினியின் வளர்ச்சிக்கு கை கொடுத்தன. மை நேம் இஸ் பில்லா என உச்சஸ்தாயியில் பாடிய எஸ்.பி.பி நாட்டுக்குள்ள எனக்கொரு பேரிருக்கு என்ற பாடலையும் ரஜினிக்குப் பாடினார். அன்புக்கு நான் அடிமை படத்தில் இளையராஜா இசையில் காத்தோடு பூ உரச பாடலையும் காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் என்ற கதைப் பாடலையும் வாலி எழுத எஸ்.பி.பி பாடினார். காளி படத்தில் இளையராஜா இசையில் கண்ணதாசன் எழுதிய வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்துப் பார்ப்போம் வாடா நைனா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதே போல் பொல்லாதவன் படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசனின் நானே என்றும் ராஜாவும் நான் பொல்லாதவன் பாடலும் ரசிகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானாம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா என்று வாணி ஜெயராமுடன் பாடிய டூயட் பாடல் பேரின்பம். ஜானி படத்தில் கங்கை அமரன் எழுதிய செனோரிட்டா ஐ லவ் யூ பாடலையும் இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி.பி. கழுகு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ஒரு பூவனத்துல பாடலும் பிரபலமானது. தில்லு முல்லு படத்தில் ராகங்கள் பதினாறு பாடலையும் தில்லுமுல்லு என்ற தலைப்புப் பாடலையும் கவிஞர் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையி்ல் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ராணுவ வீரன் படத்தில் வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் என்ற பாடலை ரஜினிக்காகப் பாடினார் எஸ்.பி.பி. புலமைப்பித்தன் எழுதிய இப்பாடல் தீவிரவாதத்திற்கு எதிரானது. MSV இசையமைச்ச இப்படத்தில் சொன்னால்தானே தெரியும் என்று இன்னொரு இனிய பாடல் உள்ளது. தனிக்காட்டு ராஜாவிலும் எஸ்.பி.பி, பாடிய கூவுங்கள் சேவல்களே பாடல் சிறப்பானது. வாலி எழுதி இளையராஜா இசையமைத்த சந்தனக் காற்றே என்ற இன்னொரு டூயட் பாடலு்ம் கேட்க கேட்க இனிமையானது. போக்கிரி ராஜாவில் விடிய விடிய சொல்லித் தருவேன் பாடலும் இனிமையாக இருந்தது. கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையமைத்தார். மூன்று முகம் படத்தில் நான் செய்த குறும்பு பாடல் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதியது. இதே படத்தில் தேவாமிர்தம் பெண்தான் என்ற வைரமுத்துவின் பாடலும் ஹிட்டானது. துடிக்கும் கரங்கள் படத்தில் எஸ்.பி.பி இசையமைத்து நான்கைந்து பாடல்களைப் பாடினார். இதில் தன இசையில் தானே பாடிய அடடா இதுதான், மேகம் முந்தானை போன்ற பாடல்கள் சிறப்பானவை. புலவர் புலமைப்பித்தன் , கங்கை அமரன் பாடல்களை எழுதினர். டிஎம்எஸ் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமாக தனது குரலை மாற்றியமைத்தது போலவே கமலுக்கும் ரஜினிக்கும் எஸ்.பி.பி தமது குரலை மாற்றிக் காட்டினார். ரஜினிக்கு மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், மனோ , டிஎம்எஸ் உள்பட பல பாடகர்கள் குரல் கொடுத்த போதும் எஸ்.பி.பியின் குரல் அவருக்கு தனி ஆளுமையை உருவாக்கித் தந்தது. நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊர் சிங்காரி என்று ரஜினிக்கு பாடிய பாடல் உற்சாகமானது. எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலுடன் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா தம்பிச்சண்டைப் பிரசண்டன் பாட்டையும் நிழல் கண்டவன் நாளும் இங்கே பாடலையும் எஸ்.பி.பி. பாடினார். இந்தப் படத்தில் மற்ற மற்ற எல்லாப் பாடல்களும் கமலுக்குப் பாடினார். இதில் எம்.எஸ்.வியும் ரஜினிக்கு குரல் கொடுத்து சிவசம்போ என்ற பாட்டை வெளுத்து வாங்கினார். கைகொடுக்கும் கை என்ற மகேந்திரன் இயக்கிய படத்தில் தாழம்பூவே வாசம் வீசு என்ற பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுத இளையராஜா இசையமைத்தார். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் முத்தாடுதே முத்தாடுதே மோகம் என்ற பாடலை எஸ்.பி.பி பாடினார். வாலி எழுதிய நம்ம முதலாளி என்றொரு பாடலையும் இப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். நான் சிவப்பு மனிதன் படத்தில் வைரமுத்து எழுதிய வீரியமான பாடல் காந்தி தேசமே காவல் இல்லையா...இதில் உச்சஸ்தாயியில் எஸ்.பி.பி ரஜினிக்காக பாடினார். இசை இளையராஜா.இந்தப் படத்தில் வெண்மேகம் மண்ணில் வந்து என்ற புலமைப்பித்தனின் பாடலையும் பொன்மானே சங்கீதம் பாட வா என்ற முமேத்தாவின் பாடலையும் எஸ்.பி.பி பாடியுள்ளார். பாலு மகேந்திரா ரஜினியை வைத்து இயக்கிய படம் உன் கண்ணில் நீர் வழிந்தால் இந்தப்படத்தில் ரஜினியின் உதடுகளில் வெள்ளைத் தழும்புகள் காணப்பட்டன. குழப்பமான திரைக்கதை. ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த பாத்திரம் என்று படம் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கண்ணில் என்ன கார்காலம் என்ற பாடல் இனிமையானது.பாடல் வைரமுத்து. படிக்காதவன் படத்தில் வாலி எழுதிய ராஜாவுக்கு ராஜா நானே, வைரமுத்து எழுதிய ஜோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு போன்ற பாடல்களை இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி பாலசுப்பிரமணியம். மிஸ்டர் பாரத்தில் காத்திருக்கேன் கதவைத் திறடி என்ற பாடலையும் என்னம்மா கண்ணு என்ற பாடலையும் எஸ்.பி.பி பாடினார்.இசை இளையராஜா. விடுதலை இந்தியில் வந்த குர்பானி படத்தின் ரீமேக் படமாகும். இந்தப் படத்தில் விஷ்ணுவரதன், சிவாஜி கணேசனுடன் ரஜினி நடித்திருந்தார். மூவருக்கும் எஸ்பிபியின் குரலில் பாடல்கள் இருந்தன. சந்திரபோஸ் இசையில் புலமைப்பித்தன் எழுதிய ராஜாவே ராஜா என்ற பாடலும் வாலி எழுதிய நீலக்குயில்கள் இரண்டு, தங்கமணி ரங்கமணி வாம்மா ஆகிய பாடல்களும் இடம் பெற்றன. ரங்கா படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பட்டுக்கோட்டை அம்மாளு என்ற வாலியின் பாடலையும் எஸ்.பி.பி பாடினார். தாய் வீடு இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரியின் மெட்டுகளைத் தழுவி சங்கர் கணேஷ் இசையமைத்த படம். இதில் வாலி எழுதிய உன்னை அழைத்தது பெண், அழகிய கொடியே ஆடடி போன்ற பாடல்களை பாடினார். நான் அடிமை இல்லை என்ற படமும் இந்தி ரீமேக் தான். இந்தப் படத்தில் ரஜினிக்கு இசையமைத்தவர் கன்னட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். ஒரு ஜீவன்தான் உன்பாடல்தான் என்ற பாடலும் வா வா இதயமே என் ஆகாயமே என்ற பாடலும் இனிமையானவை. பாடல்களை வாலி எழுதினார். கே.பாலசந்தர் இயக்கிய வேலைக்காரன் படத்தில் மு மேத்தா எழுதி இளையராஜா இசையமைத்த தோட்டத்திலே பாத்தி கட்டி பாடலை எஸ்.பி.பி பாடினார். சிங்காரமாம் ஊரு இது சென்னையின்னு பேரு ஊரைச் சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு....வரிகள் பட்டித் தொட்டியெல்லாம் ஒலித்தன. ஊர்க்காவலன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சித்ராவுடன் பாடிய பாடல் மாசி மாசம்தான் கெட்டி மேள தாளம்தான் பாடலை வைரமுத்து எழுதினார். மனிதன் படத்தில் சந்திரபோஸ் இசையிலும் வைரமுத்து எழுதிய வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் பாடல் உருக்கமானது. குரு சிஷ்யன் படத்தில் கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன் என்று ரஜினிக்கும் பிரபுவுக்கும் மாறி மாறிப் பாடினார் எஸ்.பி.பி. அழகான பாடல் இது. வாலி எழுத இளையராஜா இசை. வா வா வஞ்சி இளமானே என்று சித்ராவுடன் பாடிய டூயட்டும் பேசப்பட்டது.இதில் பிரபு சீதா நடித்தனர். சிவப்புச்சூரியன் படத்தில் மிஸ்டர் மிராண்டா என்ற வாலியின் பாடல் இடம் பெற்றது.இசை எம்.எஸ்.வி. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பூவே பூவே வா என்ற பாடல் ஹிட் .ஆனால் அது ரஜினிக்குப் படமாக்கப்படவில்லை. இளையராஜா இசையில் வாலி எழுதியது. அடுத்த வாரிசு படத்தில் இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய காவிரியை கவி்க்குயிலே கண்மணியே வாவா பாடலும் பேசக்கூடாது என்ற பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். தங்கமகன் படத்தில் இளையராஜா இசையி்ல் புலமைப்பித்தன் எழுதிய ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் சுகமானது. அடுக்கு மல்லிகை ஆள் புடிக்குது என்ற நா.காமராசன் பாடலும் வாவா பக்கம் வா என்ற முத்துலிங்கம் பாடலும் பூமாலையே தோள் சேரவா என்ற வாலியின் பாடலும் சக்கைப் போடு போட்ட பாடல்களாகும். ஆயிரம் நிலவே வா 18 எஸ்.பி.பி.யும் ரஜினியும் தொடர்ச்சி 3 ரஜினிக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் மிகச்சிறப்பாகப் பொருந்தியது. சில நேரங்களில் கமலை விடவும் கூடுதலாக. காதலின் தீபம் ஒன்று பாடல் அதில் ஒன்று. தம்பி்க்கு எந்த ஊரு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல் இது. இதே போல் தர்மத்தின் தலைவன் படத்தில் தென்மதுரை வைகை நதி பாடலை சொல்லலாம். இந்தப் பாடலில் ரஜினியின் நடை உடை பாவனையுடன் எஸ்.பி.பியின் குரல் இளையராஜா இசையில் தாலாட்டியது. பாடல் வாலி. தர்மதுரை படத்தில் ஆணென்ன பெண்ணன்ன என்ற பாடலை கங்கை அமரன் எழுதினார். சந்தைக்கு வந்த கிளியை பஞ்சு அருணாசலம் எழுதினார். இசை இளையராஜா. கொடி பறக்குது படத்தில் சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,அன்னை மடியில் கண்திறந்தோம், ஓ காதல் என்னை காதலிக்கவில்லை என்ற பாடல்கள் இடம் பெற்றன. ஹம்சலேகா இசையமைக்க வைரமுத்து எழுதினார். பாரதி ராஜா 16 வயதினிலேவுக்குப் பிறகு ரஜினியை வைத்து இயக்கிய படம் இது. நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று ஒரு படம். கன்னட நடிகர், இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கிய படம். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை. இசையமைத்தவர் ஹம்சலேகா. ரஜினிக்கு ஜூகி சாவ்லாவும் ரவிச்சந்திரனுக்கு குஷ்பூவும் ஜோடியாக நடித்தனர். குஷ்பூ இதில் முத்தக்காட்சியிலும் நீச்சல் உடையிலும் கவர்ந்தார். இந்தப் படத்தின் தொடக்க டைட்டில் பாடல்காட்சி தொடங்கி எஸ்.பி.பி பாடல்கள் வர்ண ஜாலமாடின. சின்னக் கண்ணம்மா, என் தாயின் மணிக்கொடியே ,நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன் பாடல்களை வைரமுத்து எழுதினார். ஒன் டூ த்ரீ பாடலை எழுதிய முத்துலிங்கம் வீடு கட்டி விளையாடலாமா என்ற பால்ய கால காதலை சித்தரிக்கும் ஒரு சிறப்பான பாடலை எழுதியிருக்கிறார். அதை எஸ்.பி.பி.யும் ஜானகியும் பிரமாதமாகப் பாடியிருப்பார்கள். தளபதி இளையராஜா இசையில் உச்சததைத் தொட்ட படம் . இதில் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்னும் பஞ்சமில்லை என்ற பாடலை எஸ்.பி.பி. ஜேசுதாசுடன் இணைந்து பாடினார். வாலி எழுதிய இப்பாடல் எஸ்.பி.பி. ஜேசுதாஸ் நட்பையும் ரஜினி-மம்முட்டி நட்பையும் ஒரே நேரத்தில் சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. மன்னன் படத்தில் ரஜினிக்கு இளையராஜா இசையில் ராஜாதி ராஜா , சண்டி ராணியே. அடிக்குது குளிரு, கும்தலக்கடி கும்தலக்கடி கும்மா ஆகிய பாடல்களை வாலி எழதினார். அண்ணா மலை ரஜினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. இதில் தேவா இசையில் வைரமுத்து எழுதிய வந்தேன்டா பால்காரன் , அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ ஆகிய பாடல்களுடன் வெற்றி நிச்சயம் என்ற பாடலை எஸ்.பி.பி. சிறப்பாகப் பாடி மகிழ வைத்தார். எஜமான் படத்தில் ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் எனக்கு எப்போதும் பிடித்த பாடல். வாலி எழுதி இளையராஜா இசையமைத்த இப்பாடல் எப்போது ஒலித்தாலும் என் உலகம் இயக்கமின்றி அப்பாடலில் மூழ்கி விடுகிறது. நிலவே முகம் காட்டு, அடி ராக்குமுத்து ராக்கு ,ஆலைப்போல வேலைப் போல போன்ற பாடல்களையும் வாலி எழுதினார். உழைப்பாளி படத்திலும் ரஜினிக்கு உழைப்பாளியும் நானே ஒரு கோலக்கிளி வந்தது வந்தது மானே போன்ற பாடல்களைப் பாடினார்.அம்மா அம்மா எனதாருயிரே என்ற பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதினார். வீரா படத்திலும் இளையாராஜா இசையில் கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட பாடலை பஞ்சு அருணாசலமும், மாடத்திலே என்ற பாடலை வாலியும் எழுத எஸ்.பி.பி பாடினார். முத்து படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுத எஸ்.பி.பி ஒருவன் ஒருவன் முதலாளி, கொக்கு சைவ கொக்கு பாடல்களைப் பாடினார். அதே போல் அருணாசலம் படத்திலும் அதான்டா இதான்டா, மாத்தாடு மாத்தாடு, தலைமகனே என வைரமுத்து, பழனிபாரதி, காளிதாசன் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். பாட்ஷா படத்தில் மீண்டும் தேவா இசையில் வைரமுத்து எழுதிய நான் ஆட்டோக்காரன், நீ நடந்தால் நடை அழகு, ஸ்டைலு ஸ்டைலுதான், ரா ரா ராமையா, பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ஆகிய பாடல்களை ஹிட்டாக்கினார் எஸ்.பி.பி. சந்திரமுகி படத்தில் வாலி எழுதிய தேவுடா தேவுடா பாடலையும் பா விஜய் எழுதிய அத்திந்தோம் என்ற பாடலையும் பாடினார் எஸ்.பி.பி. இசையமைத்தவர் வித்யாசாகர். பாபா , சிவாஜி எந்திரன் படங்களிலும் ரஜினிக்கு எஸ்.பி.பி பாடினார். பேட்ட படத்தில் ராமன் ஆண்டாலும் ரீமிக்ஸ் பாடலையும் தர்பார் படத்தில் சும்மா கிழி என்ற விவேக்கின் பாடலையும் ரஜினிக்கு பாடினார் எஸ்.பி.பி. வரவிருக்கும் அண்ணாத்தே படத்திலும் ரஜினிக்குப் பாடியிருக்கிறார் (

Tuesday 13 October 2020

இந்தி சினிமா பாடல்கள்

ஐம்பது அறுபதுகளில் வெளியான பல இந்திப் படங்களில் தத்துவம் பக்தி சார்ந்த பாடல்கள் நிறைய இடம் பெற்றன. உலகில் கடவுளைத் தவிர யாரும் துணை இல்லை.உறவுகள் பொய்.பாவம் செய்தால் கெடுதல் வரும் புண்ணியம் செய்தால் நன்மை வரும்.ஏழைகளுக்கு உதவுங்கள். தர்மம் செய்யுங்கள். பணத்தை பெரிதாக நினைக்காதீர்கள்.எதுவும் நிலையற்றது. உங்கள் மாட மாளிகைகளை விட்டுச் செல்ல வேண்டும். எதுவும் உங்கள் கூட வராது.தாயானாலும் தந்தையென்றாலும் மனைவி என்றாலும் யாரும் உங்களுடன் உயிர் பிரியும் போது உடன் வர மாட்டார்கள். இரண்டு நாட்கள் அழுது மறந்து விடுவார்கள் என்றெல்லாம் போதனைகள் அந்தப் பாடல்களில் கொட்டிக் கிடக்கும்.எழுபதுகளுக்குப் பிறகு தத்துவம் பக்திப் பாடல்கள் குறைந்தன.காதலின் கொண்டாட்டமும் பிரிவின் துயரமும் பாடல்களில் இடம் பெற்றன. கடந்த மார்ச் முதல்தேதி மும்பையில் இருந்தபோது புறநகர்ப் பகுதியான கல்யாண்/உல்லாஸ்நகர் 5 பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடைக்குப் போனேன்.டிவிடிக்கள் விற்பனை செய்த கடைகள் எல்லாம் செல்போன் கடைகளாக மாறி விட்டன.எஞ்சிய ஓரிரு கடைகளில் அதுவும் ஒன்று. கடைக்காரரும் கையில் உள்ள சிடிக்களை விற்று காலி செய்து கடையை மூட முடிவு செய்துவிட்டார்.அவரிடம் மிகப்பெரிய புதையலாக பழைய இந்திப் படங்களும் பாடல்களின் வீடியோக்களும் இருந்தன. அப்பகுதி சிந்தி இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி.சிந்தி மக்களுக்கு இதைப் போன்ற பழைய பக்தி உபதேசப் பாடல்கள் மீது தீராத மோகம் உள்ளது.என் உடலிலும் சிந்தி ரத்தம் ஓடுவதால் எனக்கும் அவை மிகவும் பிடித்தமானவை.அந்த கடையில் வரும் சிந்தி வாடிக்கையாளர்கள் ஒரு பாடலுக்கு ஒரு படத்தை வாங்க விருப்பம் இல்லாமல் தங்களுக்குப் பிடித்த பக்தி,தத்துவப் பாடல்களை ரிக்கார்டிங் செய்து வாங்கிச் செல்வார்கள். இதில் ஊரை விட்டுப் போனவர்கள் இறந்து விட்டவர்கள் என பதிவு செய்த அரிய பாடல் தொகுப்புகளை வாங்காமல் விட்டுச் சென்றனர்.அப்படி ஒரு 35 டிவிடிக்கள் தலா 15 ரூபாய்க்கு தந்தார்.மொத்தமாக அள்ளி வந்தேன் அந்தப் பாடல்களின் புதையலை.முகமது ரஃபி,முகேஷ்,மன்னாடே,பிரதீப்,கிஷோர்குமார், லதா மங்கேஷ்வர் போன்ற என் அபிமான பாடகர்கள் பாடிய பல பாடல்களை பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது. மிகையான காட்சி அமைப்பு. செயற்கையான நடிப்பு என இன்று அந்தப் பாடல்களைக் கிண்டலடிப்பது சுலபம்.ஆனால் அந்த காலத்து அறமும் மெய்யியலும் அந்தப் பாடல்களில் உண்டு. உதாரணமாக ஒரு பாடலை குறிப்பிடுகிறேன்...ஏழைகளின் குரலைக் கேளுங்கள் இறைவன் உங்கள் குரலைக் கேட்பான் .ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் ஆதரவற்ற முதியோரிடம் கருணை காட்டுங்கள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. பாடலாசிரியர் ஷகில் பதாயூனி.இசையமைப்பாளர் ரவி பாடியவர்கள் முகமது ரஃபி,ஆஷா போன்ஸ்லே.படம் தஸ் லாக். ------------------------- ஜவஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கு காட்சிகளுடன் முகமது ரஃபியின் பாடல்.. கடைசி பகுதி ரஃபிக்கும் பொருந்தும் .. ஏன் சந்தனக் கட்டைகளை அடுக்கி வைக்கிறீர்கள். நான் எரிந்து மறைந்து விடும் உடல் அல்ல..சாம்பலாகி காற்றில் கரைத்து விடுங்கள். வாழ்க்கை யில் நீங்கள் தடுக்கி விழும் இடத்தில் உங்களை தாங்கிக் கொள்வேன்.. (பல்லவி என் குரலைக் கேளுங்கள்....) இந்த பாடல் ரஃபிக்காகவும் எழுதப்பட்டது போல இருக்கும். Kyon sanvaree hai ye chandan ki chitaa mere liye Main koi jism nahin hoon ke jalaaoge mujhe Raakh ke saath bikhar jaaoongaa main duniya mein Tum jahaan khaaoge thokar vaheen paaoge mujhe Har kadam par hai nae mod ka aagaaz suno Meri aawaaz sunopyaar ke raaz suno Maine ek phool jo seene pe sajaa rakhaa tha -------------------------------------------------------------

எஸ்.பி.பியும் கமல்ஹாசனும்

ஆயிரம் நிலவே வா...13 எஸ்.பி.பி.யும் கமல்ஹாசனும். இந்த தலைப்பு அச்சம் தருகிறது.காரணம் அத்தனை இனிய பாடல்களை எஸ்.பி.பி.யும் கமலும் தந்துள்ளனர். எதை சொல்வது எதை விடுவது? ஆரம்ப கால கமலுக்கு எஸ்.பி.பி.பாடிய சில பாடல்கள் மிகவும் இளமைத் துள்ளலுடன் இருப்பவை. பட்டிக்காட்டு ராஜாவில் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதிய உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில், சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலும் வாலி எழுதிய கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம், அவள் ஒரு தொடர்கதை படத்தில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கடவுள் அமைத்து வைத்த மேடை, மோகம் 30 வருஷம் படத்தில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய சம்சாரமாம் சங்கீதமாம், பட்டாம்பூச்சி படத்தில் பசி எடுக்கிற நேரத்தில் உன்னைப் பார்க்கணும் என்ற புலமைப்பித்தன் பாடலை சங்கர் கணேஷ் இசையிலும் தங்கத்தில் வைரம் படத்தில் என் காதலி யார் சொல்லவா என்று ஜேசுதாசுடன் பாடியதும் இனிய பாடல்கள்.மாலை சூடவாவில் வாலி எழுதி விஜயபாஸ்கர் இசையமைத்த பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் , மன்மத லீலையில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ். வி.இசையமைத்த மன்மதலீலை மயக்குது ஆளை ,சுகம்தானா சொல்லு கண்ணே என பல பாடல்கள் நினைவில் ஆடி வரும்.லலிதா படத்தில் தன் அக்காவாக நடித்த சுஜாதாவுடன் கமல் நடனமாட மெல்லிசை மன்னரின் மயங்க வைக்கும் பியானோ இசையில் கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல் ஒன்று உள்ளது. சொர்க்கத்திலே முடிவானது என்ற அந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் பாடினார்கள். மறக்க முடியாத பாடல் இது.இதே போல நீலமலர்கள் படத்தில் எம்.எஸ்.வி/கண்ணதாசன் கூட்டணியில் கமலுக்கு தன் இனிமையான ஹம்மிங்குடன் எஸ்.பி.பி.பாடிய பாடல் பேசும் மணிமொட்டு ரோஜாக்களே...குரு படத்திலும் இதே போல இளையராஜா இசையில் ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டு கள் என்ற பாடலும் குழந்தைகளுடன் ஆடிப்பாட வைக்கும் அழகான பாடல். அதே படத்தில் பேரைச் சொல்லவா, பறந்தாலும் விட மாட்டேன் போன்ற பாடல்கள் சக்கை போடு போட்டன. ஆடுபுலி ஆட்டம் படத்தில் வானுக்குத் தந்தை எவனோ என்ற கண்ணதாசனின் பாடல் என் நினைவை விட்டு நீங்காது. கோவில் பார்த்து சொல்லு உந்தன் கவலை.போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை. வானில் மூன்றாம் பிறை வரும் போது வாசலில் துண்டை இட்டு திருக் குரான் ஓது. துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை என்று அற்புதமாகப் பாடினார் எஸ்.பி.பி.அபாரமாக நடித்தார் அன்றைய கமல்.இன்றைய பகுத்தறிவு கமல் இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.இதே படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய உறவோ புதுமை பாடலும் இனிமையானது.இசை விஜயபாஸ்கர். நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான்,இலக்கணம் மாறுதோ போன்ற கண்ணதாசன் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை .இசை விஸ்வநாதன் .அவர்கள் படத்தில் எஸ் பி.பி.பாடிய ஜூனியர் ஜுனியர், அங்கும் இங்கும் பாதை உண்டு ஆகிய கண்ணதாசன்/MSV பாடல் களும் பேரின்பம் தருபவை. பாலு மகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் படத்தில் மாபெரும் இசை மேதை சலீல் சௌத்ரி இசையில் கங்கை அமரன் எழுதிய நான் எண்ணும் பொழுதில் ஏதோ சுகம் என்ற பாடலையும் பாடிய எஸ்.பி.பி. நீயா படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதிய நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா என்ற மிகமிக இனிய பாடலை பாடினார் ...இந்த பாடலில் அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை என்ற வரியில் கமல் வென்றாரா எஸ்.பி.பி.வென்றாரா என பந்தயமே கட்டலாம்.என்னைப் பொருத்தவரை இருவருமே வென்றனர்.இப்படத்தில் ஒரு கோடி இன்பங்கள், உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை பாடல்களை ரவிச்சந்திரன் மற்றும் விஜயகுமார் பாடி நடித்தனர்.கண்ணதாசன் எழுதிய இன்னொரு அற்புதமான எஸ்.பி.பி.யின் பாடல் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா பாடலுக்கும் கமல் வாயசைக்கவில்லை... வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு கண்ணதாசனின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலையும் பாரதியின் தீர்த்தக்கரையினிலே, நல்லதோர் வீணை செய்தே பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி நம்மை மகிழ்வித்தார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாரதி கண்ணம்மா,யாதும் ஊரே,எங்கேயும் எப்போதும் , இனிமை நிறைந்த உலகம் இருக்கு,காத்திருந்தேன் காத்திருந்தேன்,நிழல் கண்டவன் நாளும் இங்கே,யூ ஆர் லைக் எ ஃபவுண்டன்,போன்ற இனிய பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. எஸ்.ஜானகியுடன் வெறும் ஹம்மிங்கில் நினைத்தாலே இனிக்கும் பாடலைப் பாடி அசதாதினார்.பாடல்கள் கண்ணதாசன் இசை எம்.எஸ்.விஸ்வநாதன். உல்லாசப் பறவைகள் படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த ஜெர்மனி யின் செந்தேன் அழகே பாடலும் பல முறை கேட்டு ரசிக்கத் தக்கது.இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இளையராஜா இசையில் வாலி எழுதிய ஒரே நாள்,என்னடி மீனாட்சி ஆகிய இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.சட்டம் என் கையில் படத்தில் சொர்க்கம் மதுவிலே பாடலும் ஹிட்டாக வும் ஹாட்டாகவும் இருந்தது. மீண்டும் கோகிலா படத்தில் ராதா ராதா நீ எங்கே பாடலும் இளையராஜா இசையில் மயக்கியது.வாலி எழுதிய 3 பாடல்களை எஸ்.பி.பி.ராம் லட்சுமண் படத்தில் இளையராஜா இசையில் பாடினார். விழியில் உன் விழியில் ,நடக்கட்டும் ராஜா,நான்தான் உன் அப்பன்டா, ஆகிய வாலியின் பாடல்களுடன் வைரமுத்து எழுதிய ஓணான் ஒன்று, வாலிபமே வா வா ஆகிய பாடல்களையும் இப்படத்தில் எஸ்.பி.பி.பாடினார்.இதே போல் இளையராஜா இசையில் எஸ்.ஜானகியுடன் பாடிய வைரமுத்து பாடல் அந்திமழை பொழிகிறது பாடலும் அபாரமானது. சிம்லா ஸ்பெஷல் படத்தில் எம்.எஸ்.வி. இசையில் வாலி எழுதிய உனக்கென்ன மேலே நின்றாய் பாடலில் கமல் தவளையைப் போல நடனமாடி சொதப்பினாலும் எஸ்.பி.பி.தன் குரலால் உயிர் தந்து பாடலை தூக்கி நிறுத்தினார். சங்கர்லால் படத்தில் வைரமுத்து எழுதி இளையராஜா இசையமைத்த தெரியும் தெரியும் விஷயம் தெரியும் பாடலும் புலமைப்பித்தன் எழுதிய இளங்கிளியே இன்னும் விளங்கலியே பாடல்களும் ரசிக்கக் கூடியவை. சட்டம் படத்தில் கங்கை அமரன் இசையில் வாணி ஜெயராமுடன் எஸ்பிபி பாடிய வா வா என் வீணையே,அம்மம்மா சரணம் உன் பாதங்கள்,பாடல்கள் சுகமானவை. இப்படத்தில் ஒரு நண்பனின் கதையை அற்புதமாகப் பாடினார் எஸ்.பி.பி. மலேசியா வாசுதேவனுடன் இணைந்து நண்பனே எனது உயிர் நண்பனே பாடலையும் எஸ்பிபி பாடினார். பாடல்கள் எழுதியவர் வாலி. தாயில்லாமல் நானில்லை படத்தில் நடிகனின் காதலி நாடகம் ஏனடி என்ற பாடலை சங்கர் கணேஷ் எஸ்.பி.பி. பாட வாலி எழுதினார். எனக்குள் ஒருவன் படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடல் ஆட வைக்கும். எங்கே எந்தன் காதலி , முத்தம் போதாதே ஆகிய டூயட் பாடல்களும் இனிமையானவை. ஒரு கைதியின் டைரி படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் நான்தான் சூரன் பாடல் கமலுக்கான ஹீரோயிச பாட்டு. காக்கிச் சட்டையில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஹிட்டான பாடல்களாகின. புலவர் புலமைப்பித்தன் எழுதிய கண்மணியே பேசு பாடலும் வாலி எழுதிய நம்ம சிங்காரி சரக்கு பாடலும், நா.காமராசன் எழுதிய வானிலே தேனிலா ஆடுதே பாடுதே ஆடலாமா பாடலும் அவினாசிமணி எழுதிய பூப்போட்ட தாவணி பாடலும் பலமுறை கேட்டாலும் சலிக்காதவை. இதே போன்று உயர்ந்த உள்ளம் படத்தில் வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே பாடலை எஸ்.பி.பி பாடினார். ஓட்டச் சட்டிய வச்சுக்கிட்டு , என்ன வேணும் தின்னுங்கடா என்ற ஜாலியான பாடல்களும் இதில் இடம் பெற்றன. பாடலாசிரியர் வாலி, இசை இளையராஜா. ஜப்பானில் கல்யாணராமன் படத்திலும் இரண்டு பாடல்களை எஸ்.பி.பி கமலுக்காகப் பாடினார். நானும் ஒரு தொழிலாளி என்று ஸ்ரீதர் இயக்கிய படத்தில் 5 பாடல்களை எஸ்.பி.பி. பாடியுள்ளார். காதல் பரிசு படத்தில் புலமைப்பித்தன் எழுதிய கூக்கூ என்று குயில் கூவாதோ பாடலும் முத்துலிங்கம் எழுதிய காதல் மகராணி கவிதைப் பூ விரித்தாள் பாடலும் இனிமையான பாடல்கள். கமலின் நடனமும் நவரஸமும் ரசிக்கத்தக்கது. அம்பிகாவும் ராதாவும் இந்தப் பாடல்களில் கொள்ளை அழகு. அந்த ஒரு நிமிடம் படத்தில் வேங்கை வெளியே வருது வருதுவருது விலகு விலகு என்ற பாடலும் இளையராஜா இசையில் வாலி எழுதி புகழ் பெற்ற பாடல். சத்யா படத்தில் லதா மங்கேஷ்கருடன் வளையோசை கல கலவென பாடலை வாலி எழுத, இளையராஜா இசையில் எஸ்.பி.பி .பாடினார். உன்னால் முடியும் தம்பி என்ற கே.பாலசந்தர் படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு , உன்னால் முடியும் தம்பி, அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா பாடல்களை எஸ்பிபி மிக அழகாகப் பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் பாடல்களை புலமைப்பித்தன் எழுதினார். இதழில் கதை எழுதும் நேரமிது என்ற முத்துலிங்கம் எழுதிய டூயட்டையும் சித்ராவுடன் பாடினார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கையை வச்சா, உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன், புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, வாழ வைக்கும் காதலுக்கு ஜே ஆகிய பாடல்களையும் எஸ்.பி.பி. கமலுக்கு மகுடம் சூட்டி வைரங்களாகப் பதித்துத் தந்தார். பாடல்களை வாலி எழுத இளையராஜா இசையமைத்தார். உன்னை நினைச்சேன் பாடல் பழைய கிளிஷே வரிகளுடன் இருந்தாலும் கூட எஸ்.பி.பியின் சோகம் ததும்பும் குரலும் கமலின் குள்ளர் நடிப்பும் பாடலின் மீது பெரும் இரக்கத்தை வரவழைத்தன. வெற்றி விழாவில் வாலி இளையராஜா கூட்டணியில் பூங்காற்று உன் பேர் சொல்ல என்ற நினைவில் ஆடக்கூடிய டூயட்டையும கமல் எஸ்.பி.பியின் குரலில் பாடினார். தேவர் மகன் படத்தில் சாந்துப் பொட்டு, வானம் தொட்டுப் போனான் பாடல்களையும் வாலி எழுதி இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். கலைஞன் படத்திலும் சிங்காரவேலனிலும் கமலுக்காக எஸ்.பிபி பாடியிருக்கிறார். மகா நதி படத்தில் ஷோபனா என்ற கர்நாடக பாடகி மகளாக நடிக்க கமல் பாடிய ஸ்ரீரங்க நாதனின் பாதம் பாடல் காவிரியின் மண் மணத்தையும் கொண்டு வந்து வீசுகிறது. இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.பி.பியும் பிசுசிலாவும் பாடிய வாலியின் பாடல் கப்பலேறிப் போயாச்சு .... ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் கேட்கக்கூடிய பாடலாக இது இருக்கும். இந்தப் படத்தில் மாயா மச்சிந்தரா பாடலும் சிறப்பானது. அவ்வை சண்முகியில் வேலை வேலை ஆம்பளைக்கும் வேலை என்ற பாடலையும் கமலுக்கு எஸ்.பி.பி பாடினார். இசை தேவா. இதில் தந்தைக்கு இங்கு தாய் வேஷம் என்ற வரியில் எஸ்.பி.பியின் குரலுக்கு கமலின் கண்கள் மட்டுமல்ல நமது கண்களும் கலங்கத்தான் செய்தன. வாழ்வே மாயம் படத்தில் நீலவான ஓடையில் பாடலையும் வந்தனம் என் வந்தனம் பாடலையும் தேவி ஸ்ரீதேவி பாடலையும் வாலி எழுத கங்கை அமரன் இசையில் பாடியுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

Saturday 10 October 2020

சென்னை ஓட்டல்கள்

இன்று காலை டிபன் சாப்பிடப் போன கடை அருகில் எவனோ வாந்தியெடுத்த மஞ்சள் சோத்தை இரண்டு அழகான மைனாக்கள் கொத்தி கொத்தி ஒவ்வொரு பருக்கையாக உண்பதைக் கண்டேன்.அழகியல் என்பதன் ஒட்டு மொத்த அர்த்தமும் சிதறி சின்னாபின்னமானது.அதே கடையில் இரண்டு பூரி வாங்கி பிய்த்துப் போட்டதில் நூறு காகங்கள் எங்கிருந்தோ பறந்து வந்தன.சில காக்கைகள் இரண்டு துண்டுகளை கவ்விக் கொண்டு போக கிடைக்காத சில காகங்கள் நான் இன்னும் இரண்டு பூரி வாங்குவேனா என்று காத்திருந்தன. உலகில் உள்ள அத்தனை காகங்களுக்கும் பூரி வாங்க நம்மால் முடியாது என்ற ஞானோதயம் உதிக்க நகர்ந்தேன்.இதற்கிடையில் ஒரு எலி மெல்ல காக்கைக் கூட்டத்தில் புகுந்து தனக்கு ஒரு பூரி துண்டை கவ்விக் கொண்டு மறைந்து விட்டது. நான் மனதுக்குள் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன். இத்தனைக் காலமாக என் வீடு புகுந்து புத்தகங்களைக் கடித்துக் குதறிய எத்தனை எலிகளை இரக்கமே இல்லாமல் கல்லால் அடித்துக் கொன்றிருப் பேன் என்று எண்ணி வருந்தி னேன்.முதல் முறையாக ஒரு எலிக்கும் என் பூரி உணவாக தானம் செய்யப்பட்டிருக்கிறது.இனி என் வீட்டில் எலி வந்தால் நானே பல புத்தகங்களை தின்னக் கொடுத்து விடுவேன்.ஜெயமோகனின் ஒரு வெண்முரசு புத்தகம் அந்த எலிக்கு ஒரு வருஷத்துக்கு உணவாகும்.இப்படியெல்லாம் யோசித்து வீடு வரும்போது நினைத்தேன். இன்னொரு பிறவி இருந்து நான் எலியாகவோ காக்கையாகவோ அந்த மைனாவாகவோ பிறந்து இப்படி உணவுக்கும் எச்சத்துக்கும் அல்லாடும் இழிபிறப்பாக எடுத்து விடுவேனோ என்று அச்சமும் அருவருப்பும் ஏற்பட்டது.அப்போதுதான் இன்னொரு ஞானோதயம் பிறந்தது.அடடா நான் ஏன் அடுத்த பிறவியைப் பற்றி யோசித்து மனத்தை குழப்ப வேண்டும். இதோ இப்போது நான் மனிதனாக நிற்கிறேன்.எலிக்கும் காக்கைக்கும் மைனாவுக்கும் ஓரளவுக்கு தினமும் பூரியோ வடையோ வாங்கிப் போட முடியும். நானும் வாயார வயிறார ருசித்து என் விருப்பப்படி சாப்பிட முடியும். இந்த அருமையான பிறவியை ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் இனிதாக வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீடு திரும்பி வந்தேன்.மனம் முழுதும் இறைவனுக்கு நன்றி மலர்ந்து மணம் பரப்பியது.. உண்ணும் நீரும் உணவும் தினம் தந்த இறைவனே..... உமக்கே நாம் நன்றி கூறுவோம்..என இளையராஜா பாடல் மனசுக்குள் ஒலித்தது. --------------------------- சென்னை யில் சைவ ஓட்டல்களுக்கு தட்டுப்பாடு என ஒரு பதிவு போட்டேன்.அசைவ ஓட்டல்கள் நிலை அதைவிட கேவலம். ஒரு ஓட்டலில் பிரிட்ஜில் வைத்த நேத்தைய குழம்பை தருவதாக நண்பர் ஒருவர் குறைபட்டார். இன்னொரு முறை சேப்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற நாயர் மெஸ் போனால் 15நிமிடம் கழித்து சர்வர் இலையை போட்டார்.இன்னும் 5 நிமிடம் கழித்து ஒருவர் சாதம் போட்டார்.இன்னும் 5 நிமிடம் சாதம் சூடு ஆறிய பிறகு சர்வர் ஓரு குழம்பு ஊத்தி மறைந்து விட்டார்.அது கறிக் குழம்பா சிக்கன் குழம்பான்னு தெரியாம பசியில ருசி தெரியாமல் நானும் நண்பரும் சாப்பிட்டு சைட் டிஷ் கேட்ட போது மட்டன் ஐட்டம் எதுவும் கொரோனா வால் போடவில்லையாம் வறுத்த வஞ்சிர மீன் இருந்தது. விலை ஒரு துண்டு₹ 180.சரி மீன் குழம்பு இருக்கான்னு கேட்டால் இப்ப உங்களுக்கு ஊத்துனதே மீன்குழம்புதான்.பீஸ் காலியாயிருச்சு என்றார்.ஏதோ பாவமுன்னு பரிதாபப்பட்டு அவர் கொடுத்த ஆம்லேட் ரஸம் சாதம் சாப்பிட்டு கவுச்சி சாப்பாட்டுக்கு ₹260 பில்+₹10 டிப்ஸ் கொடுத்து வந்தோம். என் மனதில் ஒரு வன்முறை தோன்றியது தமிழ் இந்தி பிரச்சினை மாதிரி ஒரு தமிழ் மலையாள பிரச்சினை யைக் கிளப்பி இந்த நாயரை கேரளாவுக்கு விரட்டி விடலாமான்னு யோசித்து யாதும் ஊரே என்ற என் முப்பாட்டன் பாட்டைப் பாடி மிகுந்த சோர்வுடன் வீடு திரும்பி வந்தேன்.

கூட்டத்தில் தனித்திருத்தல்

கூட்டத்திலும் தனித்திருத்தல் ஒரு புகழ் மிக்க சூஃபி வாசகம்.நிறைய இந்தி சினிமா பாடல்களிலும் இது எடுத்தாளப் பட்டது.என் வாழ்க்கை முழுக்க இதை நான் அனுபவமாக உணர்ந்திருக்கிறேன்.உறவினர்கள் மிக நெருங்கிய நண்பர்கள் என்று யாருடனும் ஒட்டாமல் ஒரு விலகலுடன் தான் வாழ்கின்றேன்.நான் காணும் பல குழந்தைகள் மிகுந்த அன்பைப் பகிர்வதால் அவர்களிடம் மட்டும் என்னை மறந்து கரைந்து போய் விடுகிறேன். என் வாழ்க்கை கூடிக் களிப்பதல்ல. அது தனிமையைத் தழுவியது. இத்தனிமை பல நேரங்களில் வரமாக இருந்தாலும் சில நேரங்களில் வெண்தணலாக சுடுகின்றது. யாராவது என் தவம் கலைத்து என்னை ஆட்டம் போட வைக்க மாட்டார்களா என்ற எண்ணம் எழுகின்றது.நிகோஸ் கஸான்ட்சாகிஸ் ஜோர்பா என்றொரு நாவல் எழுதினார். இதில் தொழிலாளியான ஜோர்பா நடனமாடியபடி முதலாளியை யும் ஆட அழைப்பான். முதலில் கௌரவம் பார்த்து தயங்கும் முதலாளி மது மயக்கத்திலும் இசையிலும் தன்னை மறந்து ஆடத் தொடங்கியதாக அந்த நாவலில் எழுதினார். என் நடனங்களை நான் என் உள்ளத்தில் தான் ஆடியிருக்கிறேன்.நேசம் மிக்க ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல திரைப்படம் ஓரு நல்ல பாடல் ஒரு உற்சாகமான விடுமுறை வாய்க்கும் போதுதான் நான் நடனத்தை உணர்கிறேன். எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவார்.. என் பாடல் நான் பாட பலராடுவார்.. என்னோடு யார் ஆடுவார்..

எஸ்.பி.பியும் வாலியும்

ஆயிரம் நிலவே வா 11 -எஸ்.பி.பியும் வாலியும். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அதிகமாக பாடல்களை எழுதியவர் வாலி.வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்,அன்பு மலர்களே,கனா காணும் கண்கள் போன்ற பாடல்களை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.சங்கர் கணேஷ் இசையில் பட்டிக்காட்டு ராஜா படத்தில் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடல் புகழ்பெற்ற பாடலாகும். அவள் படத்தில் கீதா ஒருநாள் பழகும் உறவல்ல பாடலை சசிகுமாருக்கு எழுதினார் வாலி. சங்கர் கணேஷ் இசையில் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்ற பாடலும் வி.குமார் இசையில் ராஜநாகம் படத்தில் இடம்பெற்ற இனிய பாடலாகும். நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் மடை திறந்து தாவும் நதியலை நான் என்று சந்திரசேகர் பாட வாலி எழுதிக் கொடுத்தார்.இந்தப் பாடலில் புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று இளையராஜா பாடுவது போல படமாக்கப்பட்டது. இளையராஜா வுக்கே இதில் பின்னணி பாடினார் எஸ்.பி.பி.இதே போன்று புதுப்புது அர்த்தங்கள் படத்திலும் இளையராஜாவுக்கு கல்யாண மாலை பாடலில் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்தது . என்றும் அன்புடன் படத்தில் இளையராஜா இசையில் துள்ளித் திரிந்ததொரு காலம் பாடலையும் புது வசந்தம் படத்தில் S.A ராஜ்குமார் இசையில் போடு தாளம் போடு பாடலையும் வாலி எழுதினார். கமல்,ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக், மோகன்,பாக்யராஜ் படங்களில் வாலி ஏராளமான பாடல்களை எஸ்.பி.பி.க்கு எழுதினார். இவற்றை அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக பார்ப்போம்.

மீண்டும் மலர்கிறது செந்தூரம் இதழ்

எப்போதும் காலத்தை கடந்து முன்னோக்கி செல்பவனே கலைஞனாக நிலை பெறுகிறான்.காலத்தின் புறமுதுகுக்குப் பின்னே ஒளிபவனை காலம் கைகழுவி விடுகிறது.நாம் காலத்தின் முன் செல்வோம் செந்தூரம் எப்போதும் காலத்தின் முன்னேதான் சென்றது.சினிமாவை சிற்றிதழ்கள் தீண்டத் தகாததாக ஒதுக்கிய போது 1986ம் ஆண்டு சினிமா சிறப்பிதழை வெளியிட்டு சினிமாவுக்கும் தீவிர இலக்கிய வாசிப்புக்குமான இடைவெளியை குறைத்தது செந்தூரம். செக்ஸ் சாமியார் ரஜ்னீஸ் என்று தமிழ்ப் பத்திரிகைகள் எழுதிய போது கடந்த நூற்றாண்டில் மாபெரும் மேதையென ஓஷோவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது செந்தூரம். யாரும் தொடாத உச்சங்களை பல நூல்களை அறிமுகம் செய்தது.சார்த்தர்,ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஃபிராய்டு,காஃப்காவை தந்தது.எம்.ஜி. வல்லபன்,இயக்குனர் ஜெயபாரதி, இன்குலாப் பேட்டிகள் இடம் பெற்றன.கண் பார்வை மங்கி படிக்க சிரமப்பட்ட நிலையிலும் செந்தூரம் படிக்க ஆர்வம் குறையாமல் இருப்பதாக எழுதினார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன் வரிசையில் உங்கள் பெயரை மறக்காமல் வைத்திருப்பேன் என்று கடிதம் எழுதினார் இயக்குனர் மகேந்திரன். இந்த நினைவுகளுடன் மீண்டும் செந்தூரம் மலர்கிறது .அது தொடர்பான விவரங்களை தெரிவிக்கிறேன்.உங்கள் உதவியும் ஊக்கமும்தான் இதன் ஆயுளை தீர்மானிக்கும். நல்ல தரமான படைப்புகளை தயக்கமின்றி அனுப்பி வைக்கலாம். கூடிய வரையில் பிரசுரம் செய்ய சிரத்தை எடுப்பேன்.ஆசிரியர் குழு சந்தா விவரம் ஒரு வாரத்தில் அறிவிக்கிறேன்.வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தொடர்புகளுக்கு jagdishshahri@gmail.com -------------------------------------------------------- செந்தூரம் இதழுக்கு சந்தா விவரம் கேட்டு 40 பேர் விசாரிக்க ஆகா எடுத்ததும் 40 இதழ்கள் உறுதி என நினைத்தேன்.ஆனால் இதுவரை 4 பேர் மட்டுமே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி வைத்தனர்.மற்றவர்களும் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.இதுவரை நான் யாரிடமும் பணத்துக்கு கையேந்தி நின்றதில்லை.மிக மிக நெருக்கடி மிகுந்த தருணங்களில் பட்டினி கூட இருந்திருக்கிறேன்..இது என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.சில உறவினர்களும் சில நண்பர்களும் தாமாக முன்வந்து உதவியதையும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன். என் இறுதிகாலத்தைப் பற்றியும் என் சேமிப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா என்ற பட்டுக்கோட்டை யார் பாடலைத்தான் பின்பற்றி வருகிறேன்.உடலில் கடைசி அசைவு உள்ள வரை உழைத்து வாழ்வேன். அதற்காகவும் நான் யாரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லை. கொரோனா நோயாளியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு செயற்கை சுவாசத்துடனும் மரண பயத்திலும் கிடந்த போது என் மனதுக்குள் ஓடிய ஒரே எண்ணம் இதிலிருந்து மீண்டு விட்டால் நிறைய எழுத வேண்டும் என்பதே .மீண்டு வந்த பின்பு முகநூலில் என் எழுத்தின் வேகத்தையும் வீரியத்தையும் நீங்கள் அறிவீர்கள். என் தரம் எது என்று என் 30 ஆண்டுகால இலக்கிய வாழ்க்கையும் சாட்சியாக உள்ளது. செந்தூரம் மீண்டும் தொடங்குவது குறித்து மிகுந்த தயக்கம் இருந்தது. ஆனாலும் துணிந்து விட்டேன். குறைந்தது 200 பேராவது சந்தா செலுத்தி அதன் ஆயுளை உறுதி செய்யுங்கள். வசதி படைத்த நண்பர்கள் விருப்பம் இருப்பின் கூடுதல் பணத்தை தாருங்கள். முதலும் கடைசியுமாக இந்த மடிப் பிச்சை கேட்கிறேன். நீங்கள் தரும் பணத்துக்கு தரமான இலக்கியப் படைப்புகளை திருப்பி தர நான் உறுதியளிக்கிறேன் அதற்கு தான் செந்தூரம். மீண்டும் என் வங்கி விவரத்தை தருகிறேன்.டிஜிட்டல் பிசாசு தீராத பசியுடன் காயசண்டிகை போல வாயைப் பிளந்து எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது.மீண்டும் சிற்றிதழ் இயக்கத்தின் தொடர்ச்சியை செந்தூரம் மீட்டுத் தரும் என்று நம்புகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் ஊரில் சிற்றிதழ் தொடங்குங்கள் மாற்று இதழுக்கு அனுப்பி வையுங்கள். சிற்றிதழ் களின் முதுகில் ஏறி லட்சக்கணக்கில் சம்பாதித்த துரோகங்களை தோலுரித்து அவர்களை அலற வைப்போம். ------------------------- ெந்தூரம் அறிவிப்பு வந்ததும் உடனடியாக பலர் வாழ்த்து கூறி சந்தா விபரம் கேட்டனர்.விபரங்களை தந்து விட்டேன். நண்பர்கள் ஷேர் செய்யவும். K.Jagadish பெயரில் காசோலை மூலம் அல்லது வங்கிக்கணக்கில் செலுத்தலாம். 2021 ஓராண்டில் பத்து இதழ்கள் வரும்.கூட போனசாக ஒரு ஜம்போ சைஸ் சிறப்பிதழை 2022 ஜனவரியில் வெளியிட்டு சந்தாவை புதுப்பிவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறேன். அதிகளவில் பிரதிகள் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும். விளம்பரம் தரலாம். புத்தக விளம்பரம் கால்பக்கம் குறைந்தபட்ச கட்டணம் ₹ 100 மட்டுமே. மற்ற விளம்பரம் முழுப் பக்கம் ₹ 500 அரைப் பக்கம் ₹250.விளம்பரம் இமெயில் மூலம் அனுப்பவும். அவசியம் எனில் நேரிலும் பெற்றுக் கொள்ளப்படும். விவரம் இதோ... செந்தூரம் இதழுக்கு சந்தா ₹ 200 .பத்து இதழ்களுக்கானது. பணம் செலுத்தி உங்கள் பெயர் விலாசம் இமெயில் அல்லது தபால் கார்டில் தெரிவிக்கவும். விவரங்கள் இதோ..... K.Jagadish a/c no.0943101026443 Canara bank choolai ifsc code CNRB 0000943 email jagdishshahri@gmail.com. contact Address Srishti palace towers no.6 puraswalkam high road Chennai 600112

எஸ்.பி.பியும் வைரமுத்துவும்

ஆயிரம் நிலவே வா 12 எஸ்.பி.பி.யும் வைரமுத்துவும் இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் வைரமுத்துவின் திரையுலக வாழ்க்கைக்கு இளையராஜாவும் பாரதிராஜாவும் வாசலைத் திறந்து வைத்தனர். அந்தப் பாடலை ஒரு தரமான பாடலாக மாற்றினார் எஸ்.பி.பி. ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் என்றும் வானம் எனக்கொரு போதி மரம் என்றும் வைரமுத்துவின் உயிர்ப்பான வரிகளுக்கு தன் குரலால் அழகு செய்தார் எஸ்.பி.பி. தொடர்ந்து பல படங்களில் வைரமுத்து பாடல்களுக்கு எஸ்.பி.பியின் குரல் வரமாக அமைந்தது. பாலைவன ரோஜாக்களில் எங்களின் கதை உள்பட இரண்டு பாடல்கள் இடம் பெற்றன. இசை சங்கர் கணேஷ். விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தின் தலைப்பு பாடலையும் எஸ்பிபி பாடினார். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாரதிராஜா படங்களுக்கு வைரமுத்து எழுதி எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகவும் உயர்ந்த இசைக் கோர்வை கொண்டவை. சில பாடல்கள் வருணையால் வரம்பு மீறினாலும்.... கடலோரக் கவிதைகளில் போகுதே போகுதே என் பைங்கிளி் வானிலே -இளையராஜா கேப்டன் மகள் படத்தில் எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று -ஹம்சலேகா வேதம் புதிது படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா - தேவேந்திரன் போன்ற பாடல்களும் காதல் ஓவியம் படத்தில் இளையராஜா இசையில் எழுதிய நதியில் ஆடும் பூவனம், சங்கீத ஜாதி முல்லை, குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ போன்ற பாடல்கள் கிளாஸிக் ரகம். மண் வாசனையில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலும் எஸ்.பி.பி. குரலில் இளையராஜா இசையில் ரசிகர்களை தாலாட்டிய காதல் மெலோடி. தலைவாசல் படத்தில் உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி என்று பாலபாரதி இசையில் பாடினார் எஸ்.பி.பி. அருமையான டூயட் பாடல் இது. கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரன் இயக்கி நடித்த பருவ ராகம் படத்தில் ஹம்சலேகா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன .அதற்கு வைரமுத்துவின் வரிகளும் முக்கியக் காரணம். பாடும் இளம் குயில்களே பாடல் எனக்குப் பிடித்த பாடல். இளமைத் துள்ளல் மிக்கது. பூவே உன்னை நேசித்தேன் போன்ற இதர பாடல்களும் இனிமையானவை. சங்கர் குரு படத்தில் என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறே என்ற பாடல் இடம்பெற்றது. இசை சந்திரபோஸ். ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நினைவெல்லாம் நித்யாவில் இளையாராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். தோளின் மேலே பாரமி்ல்லை, பனிவிழும் மலர்வனம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், நீதானே எந்தன் பொன்வசந்தம் போன்ற பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரோஜா படத்தின் காதல் ரோஜாவே பாடலும் புகழ் பெற்றது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் நிறைய பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து ஜென்டில் மேன் படத்தில் என் வீட்டுத் தோட்டத்தில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாடல்களும் பிரசித்தி பெற்றவை. ஜோடி படத்தில் பிரசாந்த் நடிப்பில் வெள்ளி மலரே பாடலும் ரசிக்கத்தக்கது. ஸ்டார் படத்தில் மனசுக்குள் ஒரு புயல் அடித்தது பாடலையும் ரசிகா ரசிகா என்ற பாடலையும் வைரமுத்து எழுதி எஸ்.பி.பி பாடினார். அல்லி அர்ஜூனா படத்தில் சொல்லாயோ சோலைக்கிளியும் ஒரு இனிய கானம். இதே போன்று கே.பாலசந்தர் இயக்கத்தில் அஞ்சலி அஞ்சலி , காதலே என் காதலே என்று டூயட் படத்தில் இடம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையின் பாடல்களும் வைரமுத்துவுக்கு வாய்த்த வைரங்கள். கமல் ரஜினி அஜித் , சத்யராஜ், மோகன், விஜயகாந்த் , கார்த்திக் போன்ற பல நடிகர்களுக்கும் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். அதை வரும் அத்தியாயங்களில் விரிவாக காண்போம். கண்ணதாசன், வாலி ,வைரமுத்து, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன், பாடல்களையும் மணிரத்தினம், பாரதிராஜா, பாக்யராஜ் இயக்கத்திலும் எஸ்பிபி பாடிய பாடல்களும்ஏராளமாக உள்ளன. இளையராஜா இசை ,ஏ.ஆர். ரகுமான் ,சங்கர் கணேஷ், தேவா , பரத்வாஜ், வித்யாசாகர் , எஸ்.ஏ.ராஜ்குமார் , டி.ராஜேந்தர் இசையிலும் இதர இசையமைப்பாளர்கள் இசையிலும் பல கவிஞர்களின் பாடல்களையும் எஸ்பிபி பாடியுள்ளார். இவற்றை ஒரு குறுக்கு வெட்டு வரலாறாக தொகுக்க முயலுகிறேன்.

Wednesday 7 October 2020

எஸ்.பி.பியும் சிவகுமாரும்

ஆயிரம் நிலவே வா 9 எஸ்.பி.பியும் சிவகுமாரும் சிவகுமார் பல படங்களில் இரண்டாவது நாயகனாகவும் அதை விட கூடுதலான படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் அவருக்கு டிஎம்.எஸ் . ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் குரல் கொடுத்த போதும் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் பாடியுள்ளார். சிவகுமாரின் படங்களில் எஸ்.பி.பி. பாடிய சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியல் மிக நீளமாக இருக்கும். என் நினைவில் இருப்பவை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். சில பாடல்கள் சிவகுமார் படத்தில் இருந்தாலும் அவர் பாடியதாக இருக்காது. அதையும் கவனிக்க வேண்டும். எங்கம்மா சபதம் படத்துக்கு அன்பு மேகமே இங்கு ஓடி வா என்ற பாடலை விஜயபாஸ்கர் இசையில் பாடினார் எஸ்.பி.பி. கண்மணி ராஜா படத்தில் காதல் விளையாட கட்டிலிடு கண்ணே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எண்ணங்களின் இன்ப நடனம் பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும் என்ற வரியை அவர் பாடிய அழகு மிகவும் பிடிக்கும். மூன்று தெய்வங்கள் படத்தில் முள்ளில்லா ரோஜா என்ற பாடல் பித்து பிடிக்க வைத்த காலம் ஒன்று இருந்தது. இன்றும் அது இனிய பாடல்தான். பணத்துக்காக படத்தில் யாருமில்லை இங்கே சுகம் சுகம் என்ற டூயட் பாடல் கிக்கான குரலில் கிறங்க வைப்பது. மதன மாளிகையில் ஒரு சின்னப்பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது என்று பாடிய எஸ்.பி.பி. அம்மா பாடல்கள் வரிசையில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டினார். புலவர் புலமைப்பித்தன் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.பி.சீனிவாசன். தேன் சிந்துதே வானம் என்ற டூயட்டில் நம்மையும் மழையி்ல் சொட்ட சொட்ட நனைய வைப்பார் பாலசுப்பிரமணியம். தங்கத்திலே வைரம் படத்தில் ஜேசுதாசும் எஸ்.பி.பியும் பாடிய என் காதலி யார் சொல்லவா என்ற பாடல் மிகவும் ரசித்த பாடல். இருபெரும் பாடகர்கள் தங்கள் வித்தியாசத்தை பதிவு செய்துள்ளனர். உறவாடும் நெஞ்சம் படத்தில் வரும் ஒருநாள் உன்னோடு ஒரு நாள் என்ற பாடலும் புவனா ஒரு கேள்விக்குறியில் வரும் விழியிலே மலர்ந்தது பாடலும் ராஜா என்பார் மந்திரி என்பார் பாடலும் இடம் பெற்றன. இதை ரஜினி பாடியிருப்பார். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா படத்தில் ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை பாடலையும் தேங்காய் சீனிவாசனுக்காக சின்னப்புறா ஒன்று பாடலையும் எஸ்.பி.பி பாடியிருப்பார். இசை அமைத்தவர் இளையராஜா. வண்டிச்சக்கரம் சிலுக்கு ஸ்மிதா அறிமுகமான படம். அவருக்கு சிலுக்கு என்ற பெயர் தந்த பாடலையும் எஸ்.பி.பி பாடினார். வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை சிலுக்கோட கையால் வாங்கிக் குடி என்று குடிமக்களை ஆட்டம்போட வைத்த பாட்டு அது. அதே படத்தில் தேவி வந்த நேரம் என்ற அழகான டூயட்டையும் வாணி ஜெயராமுடன் பாடினார் எஸ்.பி.பி. இசை சங்கர் கணேஷ் சிட்டுக்குருவி படத்தில் என்கண்மணி உன் காதலி என்ற பாடல் மிகவும் ஹிட்டான பாடலாகும். பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி என்ற வாலியின் இன்னொரு பாடலும் கேட்க இனிமையானது. பூந்தளிர் படத்துக்கு மனதில் என்ன நினைவுகளோ என்ற பாட்டையும் வா பொன் மயிலே என்ற பாட்டையும் இளையராஜா இசையில் பாடினார். கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். இதில் எஸ்.பி.பிக்கு இரண்டு பாடல்கள் நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை புதுமை என்று புலமைப்பித்தன் எழுதிய பாடலை இளையராஜாவுக்கும் நான் உன்னை நினைச்சேன் என்ற வாலியின் பாடலை சங்கர் கணேஷ்க்கும் பாடினார். பட்டிக்காட்டு ராஜாவில் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் என்ற எவர்கிரீன் பாடலை கமல்ஹாசனுக்குப் பாடிய எஸ்.பி.பி. அதே படத்தில் கதாநாயகனான சிவகுமார் பாடுவது போல் என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான் என்ற அழகான பாடலை வாணி ஜெயராமுடன் பாடினார். இசை சங்கர் கணேஷ். பாடலாசிரியர் வாலி. அவன் அவள் அது படத்தில் இல்லம் சங்கீதம், ஏணிப்படிகளில் பூந்தேனில் கலந்து, ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு , அக்னி சாட்சியில் கனா காணும் கண்கள் மெல்ல, போன்ற பாடல்களை எஸ்.பி.பி சிவகுமாருக்காக பாடினார். உன்னை நான் சந்தித்தேன் படத்தில் இளையராஜா இசையில் தேவன் தந்த வீணையும் இன்று நீ நாளை நான் படத்தில் தாழம்பூவே கண்ணுறங்கு பாடலும் எஸ்.பி.பியின் வைரங்கள். ----------------

Tuesday 6 October 2020

மூர் மார்க்கெட் புத்தகக் கடைகள்

மூர் மார்க்கெட் பத்தி ஒரு முத்திரை சிறுகதையை என்னிடமிருந்து எழுத்தாளர் தமயந்தி கேட்டுப் பெற்று தினமலர் இணைப்பு இதழில் பிரசுரம் செய்தார்.அக்கதை பின்னர் எனது சிறுகதைத் தொகுப்பான அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடான சிறகுப் பருவம் தொகுப்பில் இடம் பெற்றது.அது எனக்கே பிடித்த நல்லதொரு கதை. அக்கதையின் களமான மூர்மார்க்கெட்டுக்கு இன்று போயிருந்தேன்.பல நல்ல புத்தகங்களுடன் வெளியே ரோட்டில் இந்தி தமிழ் மலையாளம் ஆங்கிலப் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்கள் பத்து அல்லது இருபது ருபாய்க்கு கிடைக்கும். இன்று யாரோ முகமது ரஃபி முகேஷ் ஆஷா போன்ஸ்லேயின் ஒரிஜினல் ஆடியோ சிடிக்களை போட்டு போனார்கள்.புத்தம் புதுசாக பளபளப்பாக இருந்ததால் கடைக்காரர் 40 50 என விலை சொன்னார்.என்னிடம் எல்லாப் பாடல்களும் உள்ளன.அதனால் ஆசை ஆசையாய் அந்த செட்டைப் பார்த்து வைத்துவிட்டேன்.இன்னொரு ரசிகர் பாய்ந்து வந்து அள்ளிக் கொண்டார்.விட்டுக் கொடுத்து நகர்ந்தேன்.இன்னொரு கடையில் புதிய மலையாளப் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்கள் கிடைத்தன.8 படங்களைத் தேர்வு செய்த போது ₹300 கேட்டதால் வைத்து விட்டேன். எனக்கேத்தபடி ₹ 20க்கு கிடைத்த நாசர் இயக்கிய அவதாரம் , விக்ரம் நடித்த தில் மற்றும் சில இந்திப் படங்களை வாங்கி வந்தேன். வாங்கி வந்த 5 புத்தகங்கள் 1.பவித்ரா நந்தகுமாரின் வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 2.பல்லவர் கதைகள் 3.அக்னி நதி குர் அதுல்ஜன் ஹைதரின் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்,4.கண்ணதாசனின் சிவப்புக் கல்லு மூக்குத்தி 5 Mystic songs of Meera ஆகியவை .மன நிறைவுடன் வீடு திரும்பினேன்.இனி நான் உறக்கம் வரும் வரை படிக்க வேண்டும்.குட் நைட்.

வேலை வேலை வேலை தேடித் தேடி ....

என் ஆயுளின் பாதியை ஜவுளிக்கடை களில் கழித்து விட்டேன்.37 வயது வரை என் மாதச் சம்பளம் ₹3000 தான். ஒரு கட்டத்தில் வேலையில்லாமல் சிரமப்பட்டு கிடந்த போது பிலிமாலயா ஆசிரியர் எம்.ஜி.வல்லபனை கோடம்பாக்கம் அலுவலகத்தில் சந்தித்து வேலை கேட்டேன்.மிகுந்த அன்புடன் விசாரித்து வேலை இல்லை என்றார்.நீங்கள் ஒரு சிறந்த இலக்கியவாதி நிறைய படிக்கக் கூடிய அறிவாளி உங்களுக்கு வேலை கொடுத்து நாளை பத்திரிகை பேட்டிக்காக கவுண்டமணி அல்லது செந்திலிடம் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேதைமை புரியாது.தாங்கள் வெற்றி பெற்று விட்டதால் தங்களை பெரிய மேதைகளாக கருதி அவர்கள் உளறுவதையெல்லாம் நீங்கள் எழுதி வரவேண்டும். அதுவும் படப்பிடிப்பு தளத்துக்குப் போனால் ஒரு வாய் தண்ணீர் கூட தராமல் கடும் வெய்யிலிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பார்கள். உங்கள் வாழ்க்கையை இந்த திசை நோக்கி திருப்பி விட நான் விரும்பவில்லை .பணம் தேவையென்றால் உதவுகிறேன் என்று கூறி மேஜை டிராயரில் இருந்து நூறு ரூபாய் தாள்கள் இருபதை எண்ணி வைத்தார். அவரை கையெடுத்து கும்பிட்டு எனக்கு பஸ்சுக்கும் சாப்பாட்டுக்கும் நூறு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டேன். இன்னொரு முறை பிரபஞ்சன் ஒரு பரிந்துரை கடிதம் எழுதிக் கொடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். கோடம்பாக்கம் குங்குமம் அலுவலகம் சென்று ஆசிரியர் சாருப்ரபா சுந்தரை பார்த்து பிரபஞ்சன் தந்த கடிதத்தை கொடுத்தேன். உங்களுக்கு எழுத்தாளர்களை தெரியுமல்லவா...அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் கையால் சமைக்க வைத்து அந்த சமையலின் ருசி செய்முறை எல்லாம் எழுதி வாருங்கள். முதலில் ஜெயகாந்தன் வீட்டுக்கு போகலாம் என்றார் சாருப்ரபா . இதைவிட கவுண்டமணி செந்தில் பேட்டி எடுப்பது தேவலாம் என்று எண்ணிக் கொண்டேன். சார் ஜே.கே.யிடம் பேட்டி எடுக்கலாம். சமைக்க சொன்னால் கோபத்தில் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாலும் அறைந்து விடுவார் என்று சொல்லிப் பார்த்தேன். வேண்டும் என்றால் நடிகர் நடிகைகளிடம் கேட்கலாம் என்றேன். ஜே.கே இல்லைன்னா சுஜாதா, வைரமுத்து என்று யாரிடமாவது கேட்டு எழுதி வாங்க என்றார் சாருப்ரபா. ஜெயகாந்தன் வீட்டுக்கு போன் போட்டு பேசினேன்.நான் நினைத்ததைப் போலவே கோபத்தில் கர்ஜித்தார்.அடுத்து அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதற்கு முன்பு பயந்து போனை வைத்து விட்டேன்.வைரமுத்து விடம் பேசினேன். தமக்கு நேரமில்லை என்று நாகரீகமாக மறுத்து விட்டார். அடுத்து கடைசி முயற்சியாக சுஜாதாவுக்கு போன் செய்தேன்.இந்த ஐடியாவை யார் தந்தது என்று கேட்டார். சாருப்ரபா என்று சொன்னதும் அவனுக்கு என்ன பைத்தியமா.. அந்த முட்டாளிடம் நான் முட்டாள் என்று திட்டியதாக சொல்லுங்கள் இது போன்ற முட்டாள்களிடம் வேலை செய்யாதீர்கள் என்று போனை வைத்து விட்டார். நான் சுஜாதா திட்டியதை கூறாமல் வேலை வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டேன்.பிரபஞ்சனிடம் நடந்ததை சொன்ன போது மிகவும் வேதனைப்பட்டார் .பல ஆண்டுகள் கழித்து புரசைவாக்கம் பாலம் கட்டப்பட்டதால் என் சிறிய ஜீன்ஸ் கடையில் வியாபாரம் சரிந்தது கழுத்து வரை கடன்கள் ஏறியதால் மீண்டும் வேலை தேடல். ஒருமுறை நண்பர்,எழுத்தாளர் திலீப்குமார் வீட்டுக்கு ஜெயமோகனுடன் போன போது ஜெகதீஷ்க்கு எங்கேயாவது ஒரு வேலை வாங்கி தர முடியுமா என்று ஜெயன் கேட்க திலீப்குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த ஒரு விளம்பரத்தை தந்து விண்ணப்பிக்க சொன்னார்.அது என்.டி.டி.வி நிறுவனத்திற்கான பணி. இன்டர்வியூவிற்கு அழைத்தனர் . அன்று என்னிடம் போடுவதற்கு ஒரு நல்ல சட்டைகூட இல்லை.கொடியில் காய்ந்த ஈரமான ஒரு கருப்புச் சட்டையைப் போட்டு கையில் இருந்த 30 ரூபாயுடன் பஸ் பிடித்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலக முகவரிக்குப் போனேன். ஊடகத்துறை யின் ஜாம்பவான் பிரணாய் ராய்தான் இன்டர்வியூ நடத்திக் கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில்கேட்ட முதல் கேள்வி கம்ப்யூட்டர் இயக்கத் தெரியுமா? சார் ஐ ஆம் எ புவர்மேன்.என் வாழ்க்கையில் இப்பொழுது தான் ஒரு கம்ப்யூட்டரை பார்க்கிறேன் என்றேன்.அசந்து விட்டார் பிரணாய் ராய்.ABCD தெரியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்க தெரியும் என்று கூறினேன். ஒன் டூ த்ரீ தெரியுமா என்று கேட்க தெரியும் என்றேன் . Computer is nothing but abcd and 123 I will teach you to operate a computer என்று கூறிய பிரணாய் ராய் என் தமிழ் அறிவை சோதிக்க இன்னொரு நபரிடம் அனுப்பினார். அவர் தற்போது ஏ.என்.ஐ.யில் பணிபுரியும் மூத்த செய்தியாளர் மணி .அவர் என்னைப் பார்த்ததும் ஓ ஜெகதீஷா.. எப்படி இருக்கீங்க என்று கைகொடுத்தார். You know him என்று மணியிடம் பிரணாய் கேட்டார்.யெஸ் சார் என்று கூறிய மணி தமிழின் ஒரு சிறந்த எழுத்தாளர் நம்மிடம் வேலை தேடி வந்திருக்கிறார் என்று கூறினார். மணியை பல முறை ஜெயகாந்தன் வீட்டில் சந்தித்திருந்தேன்.ஜே.கே .நான் படிப்பாளி என அறிந்து பாராட்டுவதை மணி அறிந்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் விஜய் டிவி செய்திகளுக் காக எனக்கு வேலை உறுதியானது.முதலில் 4 மணி நேர பகுதிநேர வேலைக்கு என ₹ 4000 சம்பளம் தந்தனர். பின்னர் முழு நேர வேலையாக ₹ 14000 வரை கிடைத்து 4 ஆண்டுகள் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன்.இந்தியாவின் மிகப் பெரிய ஜாம்பவான்கள் ராஜ்தீப் சர்தேசாய்,பர்கா தத்,சுனில் பிரபு,சஞ்சய் பின்ட்டோ,ஜெனிஃபர் அருள் போன்றவர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி,பாத்திமா பாபு,நீயா நானா கோபிநாத்,முருகேஷ்,சுசி திருஞானம், மலர்விழி,மோசஸ் ராபின்சன், ஃபீலிக்ஸ் ஜெரால்டு,மதிவாணன், போன்ற துடிப்பு மிக்க ஒரு டீமுடன் பல ஆண்டுகளுக்கு நட்புடன் பணியாற்றினேன்.

casablanca

காதலி:நேற்று இரவு நீ எங்கே இருந்தாய்? காதலன்: அத்தனை பழைய விஷயங்களை நான் ஞாபகத்தில் வைத்து கொள்வதில்லை. காதலி: இன்று இரவு என் படுக்கையறைக்கு வருவாயா..? காதலன்: அவ்வளவு முன் கூட்டியே திட்டமிடுவதில்லை. இரவில் படுக்கையில் சந்தித்து பேசுகிறார்கள். அவள் ஏதோ கேட்க அவன் இடைமறித்து நாம் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்க மாட்டோம் என்று உறுதியளித்ததை மறந்து விட்டாயா ? எனக் கூறுகிறான். ஆம் மறந்து விட்டேன்.என் எல்லா கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் இருக்கிறது என்று கூறியபடி அவள் அவனை நெருங்கி உதடுகளில் முத்தமிடுகிறாள்.இக்காட்சி இடம் பெற்ற கருப்பு வெள்ளை காவியத் திரைப்படம் காஸ்பிளான்கா. நடித்தவர் உலகப் பேரழகி இங்கிரிட் பெர்க்மென்.முத்தமிட்ட அந்த வயதான நடிகர் மீது பொறாமை ஏற்படுகிறது.

எஸ்.பி.பி. ஜெமினி-முத்துராமன்

ஆயிரம் நிலவே வா - 8 எஸ்.பி.பி.யும் ஜெமினி கணேசனும். ஜெமினி கணேசனுக்கு சாந்தி நிலையத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற இனிமையான டூயட்டை பாடிய எஸ்.பி.பி அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் மங்கையரில் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று இரண்டு பாடல்களைப் பாடினார். காவியத் தலைவி படத்தில் ஆரம்பம் இன்றே ஆகட்டும்.... என்ற பாடல் இடம் பெற்றது. சுடரும் சூறாவளியும் படத்தில் அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடலும் இனிமையானது. புன்னகை படத்தில் நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம் என்ற பாடலை டி.எம்.எஸ் உடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி. நான் அவனில்லை படத்தில் ஹரேநந்தா பாடல் புகழ் பெற்றது. ---------------- எஸ்.பி.பியும் முத்துராமனும் முத்துராமனுக்கும் சில இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடினார். எல்லோரும் நல்லவரே படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய படைத்தானே பிரம்ம தேவன் பாடல் வி.குமார் இசையில் பாடினார் எஸ்.பி.பி. மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய சம்சாரம் என்பது வீணை பாடலை எஸ்.பி.பி பாடிய அழகை கேட்டுக் கொண்டே இருக்கலாம். என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசைக்கிளியின் கூடு....பல காதல் கவிதை பாடி பரிமாறும் இன்பங்கள் கோடி....மனம் குணம் ஒன்றான முல்லை போன்ற வரிகளை அவர் ரசித்து ரசித்து பாடி நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார். பிரியா விடை படத்தில் வி.குமார் இசையில் ராஜா பாருங்க என்ற வாலியின் பாடல் அருமையானது. நடன அமைப்பும் வித்தியாசமானது. இது ஒரு இந்திப்படத்தின் ரீமேக் ஆகும். வாணி ராணியில் இரண்டு பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. முல்லைப்பூ பல்லக்கு பாடல் சிறப்பானது. வைரம் படத்துக்குப் பிறகு சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து மீண்டும் பாடினார் எஸ்.பி.பி. நான் என்றால் அது அவளும் நானும்.... இப்பாடல் முத்துராமனுக்கும் பெருமை சேர்த்தது. தூண்டில் மீன் படத்தில் வாழ்வில் சௌபாக்கியம் வந்தது என்று முத்துராமன் லட்சுமி பாடிய டூயட்டில் எஸ்.பி.பி. தன் அழகான குரலால் ஒரு வித அலங்காரம் செய்திருப்பார்...ஆகா... என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம் போன்ற வரிகள் உயிர்பெற்று நடனமாடுகின்றன... ------------------------------

Sunday 4 October 2020

எஸ்.பி.பியும் கே.பாலசந்தரும்.

ஆயிரம் நிலவே வா 5 எஸ்.பி.பியும் -கே.பாலசந்தரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் , ஜேசுதாஸ் ஆகிய இரண்டு பெரிய பாடகர்களை உருவாக்கியதில் இயக்குனர் கே.பாலசந்தருக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. எம்ஜிஆரின் தெய்வத்தாய் படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய பாலசந்தர் தாம் முதலில் இயக்கிய நீர்க்குமிழி படத்தில் இருந்து தொடர்ந்து சில படங்களில் டி.எம்.எஸ். சீர்காழி. ஏ.எல்.ராகவன், பிபி.ஸ்ரீநிவாஸ் போன்ற பாடகர்களை பாட வைத்தார். எஸ்.பி.பியை கண்டடைந்த படம் நவக்கிரகம். ஜெய்சங்கர் லட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் எஸ்.பி.பி. சுசிலாவுடன் இணைந்து பாடிய உன்னைத் தொட்ட காற்றுவந்து என்னைத் தொட்டது என்ற இனிமையான பாடல் இடம்பெற்றது.வி.குமார் இசையில் பாடலை வாலி எழுதினார். ஆரம்பம் இன்றே ஆகட்டும்...ஆறேழு நாட்கள் போகட்டும் என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் காவியத் தலைவியில் எஸ்.பி.பி.பாடினார். கண்ணதாசன் பாடலுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் தொடர்ந்து பாலசந்தரின் படங்களில் எஸ்.பி.பிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மீண்டும் ஜெய்சங்கர்-லட்சுமி ஜோடிக்கு அரங்கேற்றம் படத்தில் ஆரம்ப காலத்தில் பயமிருக்கும் அம்மம்மா அதிலே சுகமிருக்கும் பாடலை அளி்த்தார் வி.குமார். பாடலாசிரியர் கண்ணதாசன். அந்த காலத்தில் புகழ் பெற்ற ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் இணைந்து நடித்த நான்கு சுவர்கள் படத்தில் எஸ்.பி.பி.க்கு இரண்டு பாடல்கள் .கே.பாலசந்தர் இயக்கிய முதல் வண்ணப்படமும் அதுதான். இந்தப் படத்தில் ஓ மைனா என்று ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலானது. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வி.குமார் இசையில் வாலி எழுதிய கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு என்று எஸ்.பி.பி. ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார். அதன்பிறகு கமல்ஹாசன் நடிக்க பலகுரல் மன்னன் சலனுடன் இணைந்து எஸ்.பி.பி பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை எஸ்.பி.பியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது புரிந்ததம்மா என்ற இறுதி வரிகளை எஸ்.பி.பி. ஒரு சுய தன்னிரக்கம் தொனித்த சிரிப்புடன் முடிப்பார். அதே போல் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்த ஒரு ஆலமரம் என எஸ்.பி.பி கதை சொல்லும் பாணியில் பாடுவதும் பல்லாக்கு யானைகள் பரிவட்டம் போட்டதை விவரிக்கும் போதும் தமது குரலால் மாயாஜாலம் செய்து அனைவரையும மகிழ்வித்தார். நான் அவனில்லை படத்தில் எஸ்.பி.பி- கோரஸ் இணைந்து பாடிய ஹரே நந்தா ஹரே நந்தா கோகுல பாலா என்ற கவியரசரின் பாடல் எம்.எஸ்.வி இசையில் மிகப்பெரிய ஹிட். அந்தப் பாடல் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. மன்மத லீலையில் கமல்ஹாசனுக்கு இரண்டு பாடல்களை எஸ்.பி.பி பாடினார். மன்மத லீலை என்ற டைட்டில் பாடல். அதை விட சுகம்தானா சொல்லு கண்ணே என்ற கிளைமேக்ஸ் பாடலை எஸ்.பி.பி. பிசுசிலாவுடன் பாடினார். மிகவும் இனிமையான இந்த பாடல் கவனம் பெறாமல் போனது வருத்தமானது. பட்டினப் பிரவேசம் படத்தில் வயலின் இசையில் எஸ்.பி.பி பாடிய வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா பாடல் ஒரு அற்புதம். ரஜினி நடிப்பில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய தப்புத்தாளங்கள் என்ற டைட்டில் பாடலையும் என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற பாடலையும் கே.பாலசந்தர் படத்தில் எஸ்.பி.பி பாடினார். நூல்வேலியில் நானா பாடுவது நானா, 47 நாட்களில் மான் கண்ட சொர்க்கங்கள் ,அக்னி சாட்சியில் சரிதாவுடன் இணைந்து பாடிய கனா காணும் கண்கள் மெல்ல போன்ற பாடல்கள் எஸ்.பி.பியின் அற்புதமான அவதாரங்கள். நிழல் நிஜமாகிறது படத்தில் எம்.எஸ்.வி இசையில் கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ என பாடிய பாடல்களும் இனிமையானவை. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்து , தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்திலே பாடல்களை எஸ்.பி.பி மிகுந்த உருக்கத்துடன் பாடி நம்மை பரவஸப்படுத்தினார். இப்படத்தில் கண்ணதாசனின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலும் அற்புதமானது. தில்லுமுல்லு படத்தின் டைட்டில் பாடலையும் ராகங்கள் பதினாறு நான் பாட பாட்டையும் ரஜினிக்காக பாடினார் எஸ்.பி.பி. அவர்கள் படத்தில் அங்கும் இங்கும் பாதை உண்டு என்ற பாடலையும் ஜூனியர் ஜூனியர் பாடலையும் எஸ்.பி.பி பாடினார். இந்த இரண்டு பாடல்களும் எத்தனை அற்புதமானவை என்று கேட்டு மகிழ்ந்தவர்களுக்குத் தெரியும். அச்சமில்லை அச்சமில்லையில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் ஈரோடு தமிழன்பனின் கையில காசு வாயிலே தோசை பாடலையும் ஆவாரம்பூ ஆரேழு நாளா என்ற வைரமுத்துவின் பாடலையும் பாடி புகழ்பெறச் செய்தார் எஸ்.பி.பி. உன்னால் முடியும் தம்பியில் புலவர் புலமைப்பித்தன் பாடல்களை இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, உன்னால் முடியும் தம்பி, அக்கம்பக்கம் பாரடா பாடல்களுடன் முத்துலிங்கம் எழுதிய இதழில் கதை எழுதும் நேரமிது என்ற இனிய டூயட்டையும் எஸ்.பி.பி. சித்ராவுடன் பாடினார். அழகன் படத்தில் மம்முட்டிக்காக சாதி மல்லிப் பூச்சரமே என்ற இனிய பாடலை புலவர் எழுத பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இசை மரகதமணி புதுப்புது அர்த்தங்கள் படத்தில் கேளடி கண்மணி பாடகன் சங்கதி , கல்யாண மாலை ஆகிய பாடல்களுடன் மேலும் சில பாடல்களை எஸ்.பி.பி பாடினார் .இசை இளையராஜா. டூயட் படத்தில் என் காதலே என் காதலே என்ற பாடலையும் அஞ்சலி அஞ்சலி பாடலையும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இப்பாடல்கள் இன்றளவும் புகழுடன் விளங்குகின்றன. பாடலாசிரியர் வைரமுத்து எல்லாவற்றுக்கும் மேலாக மரகதமணி இசையில் எஸ்.பி.பி பாடிய அழகான இரண்டு பாடல்கள் இங்கு தனியாக குறிப்பிட வேண்டும். வானமே எல்லை என்ற இந்தப் படத்தில் நீ ஆண்டவனா தாய்தந்தை தான் உனக்கில்லையே பாடலையும் ஜணகன மண சொல்லி ஜதி சொல்லும் நேரம் என்றும் பாடிய எஸ்.பி.பி ஏன் அழ வேண்டும் என்று கேட்டு பூமிக்கு நன்றி சொல்லி புறப்பட்டுவிட்டார். ------------------

Saturday 3 October 2020

உணவுப் பழக்கம்

பொதுவாக உணவில் எனக்கென சில பிரத்தியேக மனத் தடைகள் உண்டு. யாருடைய வீட்டுக்கு போனாலும் சாப்பிடத் தயங்குவேன். அல்லது குறைவாக சாப்பிடுவேன் .சுந்தர ராமசாமியுடன் காலை டிபன் சாப்பிட்டு இருக்கிறேன்.ஜெயமோகன் மாமியார் வீட்டில் பட்டுக்கோட்டையில் சாப்பிட்ட கறிசோறு நினைவில் ருசிக்கிறது. தருமபுரி,திருப்பத்தூர்,தக்கலையில் அவர் வீட்டில் சில வேளைகள் அருண்மொழி சமைத்த உணவும் சாப்பிட்டேன்.கோவை ஞானி மேட்டூர் அனுராதா பாலக்காடு நண்பர்கள் போன்றோரின் வீடுகளிலும் ஓரிரு வேளை உண்டதுண்டு. தனுஷ்கோடி ராமசாமியின் வீட்டில் தோசை சாப்பிட்டேன்.ஆனால் இவை விதிவிலக்குகள்.என் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் சாப்பிட மாட்டேன் இதை பலரும் குறையாக கூறுவார்கள். சுகன் போன்ற சில நண்பர்கள் சிலர் என் மனமறிந்து ருசியாக சாப்பிட ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்வார்கள். வெளியே அதிகமாக சாப்பிட்டும் பல வேளைகளில் உண்ண வழியில்லாமலும் இருந்ததன் விளைவு இது.இன்று விரும்பியதை உண்ண முடியும் வசதிகள் உள்ளன .என் மனைவியும் அருமையாக சமைப்பாள். ஆனால் உணவு குறைந்து விட்டது.எப்போதாவதுதான் முழுத் திருப்தி கிடைக்கிறது.

மேகலா திரையரங்கும் முருகன் பக்தி பாடல்களும்

சென்னை ஓட்டேரியில் மேகலா என்ற திரையரங்கில் என் பள்ளி நாட்களில் ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.எம்.ஜி.ஆர் படங்கள் அங்கு நூறு நாட்கள் ஓடிய பட்டியல்_ பலகை போட்டிருப்பார்கள்.பத்ரகாளி,மேயர் மீனாட்சி, ஆயிரம் ஜென்மங்கள்,ஆயிரம் நிலவே வா போன்ற படங்களைப் பார்த்த ஞாபகம் பசுமையாக உள்ளது.டிக்கெட் வாங்கி உள்ளே போனதும் அரை மணி நேரம் முருகன் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவை திரைப்படப் பாடல்கள் அல்ல .தனிப் பாடல்கள். உள்ளம் உருகுதையா பாட்டுக்கு உருகாதவர்கள் கிடையாது. அழகென்ற சொல்லுக்கு முருகாவை முணுமுணுக்காத உதடுகளும் இருக்காது. கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் போன்ற பாடல்களையும் மேகலாவில்தான் கேட்டிருக்கிறேன்.சில சமயங்களில் படத்தை விட இந்த பாடல்களை கேட்பதற்காகவே மேகலாவுக்குப் போவதும் உண்டு.தொடர்ந்து உலகங்கள் யாவும் என் அரசாங்கமே, மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க,கந்தன் காலடியை வணங்கினால்,திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம், நாடறியும் நூறு மலை போன்ற தேவர் படங்களில் வரும் பாடல்கள் இப்போது வரை என்னுள் ஒலிக்கின்றன. மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகய்யா பாடல்தான் 37 வயதில் நாத்திகனாக இருந்த என்னை ஒரே ஒரு மந்திர நொடியில் ஆத்திகனாக மாற்றியது.முருகனின் தனிப்பாடல்களை இயற்றிய பாடலாசிரியர் கள் யார் இசையமைப்பாளர்கள் யார் என்று கூடத் தெரியாது.சிரமப்பட்டு சிலரின் பெயர்களை பாட்டுப் புத்தகங்கள் மூலமாக அறிந்துக் கொண்டேன். கண்ட குப்பைகளை முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுக்கும் மாணவர்கள் இது போன்ற அரிதான தனிப் பாடல்களையோ பாட்டுப் புத்தகங்களையோ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது?அப்படி யாராவது ஆய்வு செய்து ஆய்வேட்டை புத்தகமாகப் போட்டிருந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.

அழகு சாதனங்கள்

பொதுவாக அழகுசாதனங்களுக்கு அதிகம் செலவழிப்பது இல்லை .கோல்கேட் பேஸ்ட்டும் மார்கோ ஹமாம் சோப்புகளும் எப்போதாவது லைஃப்பாயும் போதும் என்ற பொன் மனத்துடன்தான் பல ஆண்டுகளாக உடலை சுத்தம் செய்து வருகிறேன்.சின்ன வயதில் அம்மா பாண்ட்ஸ் பவுடர் முகத்தில் அப்பி பள்ளிக்கு அனுப்பிய பழக்கத்தால் இப்பவும் லைட்டா பவுடர் பூசுவேன்.உடலில் சில தோல் அரிப்புகள் சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட்டதால் மருத்துவர் பரிந்துரை செய்த கிரீம்களையும் மெடிக்கல் சோப்புகளையும் பயன்படுத்தி வந்தேன்.பல ஆயிரம் ரூபாயைக் கரைத்துவிட்டு பாதிதான் குணமானது.சில ஆயுர்வேத மருந்துகள் கஷாயம் ஒரளவுக்கு பலன் தந்தது.அதற்கு கூட ₹4 ஆயிரம் போச்சு. இப்ப வயசும் கூடிப் போச்சா...அலங்காரம் மீது ஆசைப்பட்டு ஒரு ஷோரூமில் நுழைந்தேன். அங்கிருந்த இளம் பெண் பல வித கிரீம்களையும் சோப்புகளையும் காட்டினாள். விலை மிக அதிகம்தான்.சட்டென என் கையைப் பிடித்த அந்தப் பெண் புறங்கையில் ஒரு சொட்டு கிரீமைத் தடவி ஸ்பெஷல் ஆஃபர் என ஏதேதோ கூறி 199 க்கு தம்மாத்துண்டு க்ரீமை என் தலையில் கட்டி விட்டாள்.அவள் கைப்பட்ட ஸ்பரிசத்தில் இன்னும் இரண்டு பேஸ் வாஷ் தலைமுடிக்கு ஜெல் அப்புறம் வெண்ணையால் செய்யப்பட்ட சோப் போன்ற வற்றை ₹700 க்கு வாங்கி வந்தேன் .இப்பவாவது நம்மையும் ஒரு பெண் விரும்புவாளான்னு பார்க்கணும்.வயசாயிருச்சு கோவாலுன்னு ஒரு மைண்ட் வாய்சை யாரும் கேட்கவில்லைதானே

புதிய கவிதைகள் செந்தூரம் ஜெகதீஷ்

1 என் நட்பை துண்டித்து நடந்து சென்றீர்கள் மனம் கனக்க நான் நின்றதை நீங்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை . உயிருக்கு உயிராக காதலித்த போது காதலிப்பது போல நாடகமாடி அடுத்தவனுடன் கைகோர்த்து சென்றீர்கள் . வாயில் விஷத்தை விழுங்கிய போதும் நீங்கள் ஏன் என்று கூட கேட்கவில்லை. இப்போது நட்பில் தோயவும் காதலில் கலக்கவும் நம்பிக்கை இல்லாத ஒரு கணத்தில் உறைந்து விட்டேன். உங்கள் நட்பும் காதலும் இனி எனக்கு தேவையில்லை. கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு என்னை மீட்டெடுக்க வேண்டும் .இன்னொரு நட்பிலும் காதலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். மீண்டும் நான் வழிந்தொழுக வேண்டும். 2இயல்பாக இருக்க முடியவில்லை. இருக்கிறேன். அழாமல் இருக்க முடியவில்லை. சிரிக்கிறேன். புலம்பலையும் கூட கிண்டலடிக்கும் காலத்தில் விழிகளில் வழிகின்ற நீரை எப்படியோ மறைக்கிறேன். இளமையெல்லாம் வெறும் கனவுமயம் என்றான் கவியரசன். கனவுகளும் வலிக்கும் என்றால் விழிகளைத் திறக்கவும் அஞ்சி மூடவும் அஞ்சி ஒரு மீளாத் துயரில் என் இரவுகள் பாதியில் கலைந்த உறக்கத்தில் கழிகின்றன. 3 தனிமையில் வாழ்கிறவனிடம் நட்பின் ஆனந்தம் பற்றி கேட்கிறார்கள். பிரிவுகளிலேயே வாழ்கிறவனிடம் பெண் இன்பம் பேசுகிறார்கள். கால்கள் துவள நடந்தவனிடம் சக்கரை கரைய இன்னும் நடக்க ச் சொல்கிறார்கள். உண்மையை அணைத்தபடி ஆழ உறங்குபவனை தட்டி எழுப்பி பொய்யுரைக்க பழக்குகிறார்கள். வேண்டாம் என விலகி நின்றாலும் வம்பளக்கிறார்கள். வாழ்ந்தேன் என்று சொல்ல முடியவில்லை வாழ்ந்ததைச் சொல் என்கிறார்கள். குடும்பம் குழந்தைகள் என குதூகலமாக வாழ்கின்றவர்களுக்கு எப்படிச் சொல்வேன் வாழத் தெரியாத என் வலிகளை. 4 மனம்தான் சத்ரு.மனம்தான் மித்ரன். இரு வேறு நிலைகளில் மனம் ஆடும் ஆட்டத்தை இன்னொரு மனம் ரகசியமாக கண்டு ரசிக்கிறது. ஒரு மனம் ஞானம் தேட ஒரு மனம் காமத்தில் உழலுகின்றது. இரண்டையும் சமன்படுத்தி வாழ்க்கைக்கு ஏற்ப நடிக்க கற்றுத்தருகிறது இன்னொரு நனவிலி மனம் . எல்லாம் கலைத்துப் போட்டு ஒரு நீளமான வெறுமையில் வாழப் பழகிக் கொள்கிறேன். தனியாக பிறந்து தனியாக பிரியும் இப்பயணம் தனிமையைக் கண்டு ஏன் அஞ்சுகிறது...

ஆயிரம் நிலவே வா 1 -எஸ்.பி.பியும் கேவி.மகாதேவனும்

SPB ஆயிரம் நிலவே வா. .. செந்தூரம் ஜெகதீஷ். 1.கே.வி. மகாதேவன் 1969ம் ஆண்டு அடிமைப் பெண் படத்தில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இருபதுகளில் இருந்த எஸ்.பி.பியை அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்பு அவர் எம்.எஸ்.வி.இசையில் சாந்தி நிலையம் குழந்தை உள்ளம் படங்களில் பாடியிருக்கிறார். ஆனால் அடிமைப் பெண் முதலில் வந்து விட்டது. இதனால் ஆயிரம் நிலவே வா தான் எஸ்.பி.பி.யின் முதல் பாடலாகும்.புலவர் புலமைப்பித்தன் எழுதிய இப்பாடலை பி.சுசிலாவுடன் இணைந்து பாடினார்.எஸ்.பி.பியின் குரலைக் கேட்டதுமே எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது. பி.பி.ஸ்ரீ நிவாஸ் ஏ எம் ராஜா போன்ற பாடகர்களை விட எஸ்.பி.பி.யின் இளமையான குரலை பரிசோதனை செய்து பார்க்க எம்.ஜி.ஆர் துணிந்து விட்டார்.வழக்கமான டி.எம்.எஸ் பி சுசிலா டூயட்டிலிருந்து புதிய பூங்காற்றாக பாலசுப்பிரமணியத்தின் குரல் ரசிகர்களைத் தாலாட்டியது.அதில் வரும் ஹம்மிங் எஸ்.பி.பியின் தனித்துவமாக அவர் பின்னர் பாடிய பெரும்பாலான பாடல்களிலும் அவர் குரலுடன் குரலாகப் பொருந்திப் போனது.எஸ்.பி.பியின் குரலுடன் அவருடைய ஹம்மிங் பிரிக்க முடியாததாகி விட்டது. தொடர்ந்து கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பி.பாடிய சில அற்புதமான பாடல்கள் வெளியே தெரியாமல் போய்விட்டன. சங்கராபரணம் போன்ற தெலுங்கு படங்களில் கே.வி.எம். பாலாவை பாட வைத்தார்.அதை யாராவது தெலுங்கு தெரிந்தவர் கூறினால் கேட்போம்.தமிழில் சிவாஜி,கமல்,ஜெயசித்ரா நடித்த சத்யம் படத்தில் கமலுக்கு இரண்டு டூயட்டுகளைப் பாடினார் எஸ்.பி.பி. இரண்டு பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார் . அழகாம் கொடி சிறிது அதிலும் உந்தன் இடை சிறிது...என்ற பாடலும் கல்யாண கோவிலில் தெய்வீகக் கலசம் என்ற பாடலும் மிகவும் இனிமையானவை.இதே போன்று வாணி ராணி படத்தில் முத்துராமனுக்கு முல்லைப் பூ பல்லக்கு போவதெங்கே பாட்டும் பூமியில் தென்றல் பல்லாண்டு பாடுது பாடலும் கேட்க கேட்க தேனமுது.ஏணிப்படிகள் படத்தில் சிவகுமாருக்கு எஸ்.பி.பி.பாடிய பூந்தேனில் கலந்து.....ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு பாடல்கள் கே.வி.எம் இசையில் கொட்டிய முத்துக்கள். உத்தமன் படத்தில் படகு படகு ஆசைப் படகு பாடலும் இனியது. லைலா அனார்கலி காதல் பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலில் மணல்வெளி மேலே மனமகன் இருக்க மணமகள் பல்லாக்கில் போகின்றாள் மனதையும் கல்லாக்கி போகின்றாள் என்று எஸ்.பி.பி உருகிப் பாடியதைக் கேட்டால் இழந்த காதல் நினைவுகள் நம்மை அழச் செய்துவிடும். ஞானக்குழந்தை அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை போன்ற இன்னும் சில படங்களில் கே.வி.எம்.இசையில் எஸ்.பி.பி. பாடியிருக்கிறார். எழுபதுகளில் மெல்லிசை மன்னர் உச்சத்துக்கு போய் கே.வி.எம்முக்கு வாய்ப்புகள் குறைந்ததால் எஸ்.பி பியால் அதிகமாக அவரது இசையில் பாட முடியவில்லை.

SPB_MGR

ஆயிரம் நிலவே வா.. 2 SPB_MGR எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி.பி.தொடர்ந்து ஏராளமான எம்.ஜி.ஆர். படங்களுக்காக தமது இனிய குரலையளித்து பல பாடல்கள் ஹிட்டாக உதவினார்.அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே பாடிய எஸ்.பி.பி. பட்டிக்காட்டு பொன்னையா, சங்கே முழங்கு போன்ற படங்களில் பாடினார் .தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் வாலி எழுதிய வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் பாடல் சூப்பர் ஹிட்டானது.வழக்கமாக எம்.ஜி.ஆர்.படத்தில் கொள்கை தத்துவப் பாடல்களை டி.எம்.எஸ்.தான் தமது கணீர் குரலால் பாடி அந்தப் பாடலை முழக்கம் ஆக்குவார்.ஆனால் இந்தப் பாட்டில் தன் தாயின் மனம் குளிர மகன் பாடுவதாக அமைந்த பாட்டுக்கு எம்.ஜி.ஆரும் மெல்லிசை மன்னரும் புத்திசாலித்தனமாக எஸ்.பி.பி.யின் மென்மையான குரலைப் பயன்படுத்தினர் .இதனால் இந்தப் பாடல் முழக்கமாக மாறாமல் மகன் தாய்க்குப் பாடிய தாலாட்டு போல கேட்போரை மயங்க வைத்தது.குறிப்பாக மற்றவர்க்கு வாழும் உள்ளம் என்னவோ அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ என்ற வரியை எஸ்.பி.பி.பாடிய அழகு எம்.ஜி.ஆரின் தாயன்புக்கும் தொண்டு உள்ளத்துக்கும் மகுடமாக அமைந்து விட்டது.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் படத்தின் பிற்பகுதியில் வரும் கண்ணதாசனின் அவள் ஒரு நவரச நாடகம் பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதே போன்று நேற்று இன்று நாளையில் புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடும் போது நான் தென்றல் காற்று பாடலும் எஸ்.பி.பி.யின் குரலுக்காக பெரிதும் ரசிக்கப்பட்டது .அதே படத்தில் எஸ்.ஜானகியும் எஸ்.பி.பி.யும் பாடிய அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ என்ற அவினாசி மணி எழுதிய டூயட் பாடலும் கேட்க கேட்க இனிமையானது.நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே பாடலை டி.எம் சௌந்தரராஜனுடன் எஸ்.பி.பி. பாடினார். நான் ஒரு மேடைப் பாடகன் என்ற பாட்டையும் இப்படத்தில் எஸ்.பி.பி.பாடினார்.இந்த இரண்டு பாடல்களுக்கும் எம்.ஜி.ஆர்.வாயசைக்கவில்லை.அவர் தம்பியாக படத்தில் தோன்றும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன்தான் பாடி நடித்தார். அதிலும் நாளை நமதே பாடலில் தருமம் உலகிலே இருக்கும் வரையிலே என்று எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வரியைக் கூட எஸ்.பி.பி.யைப் பாட வைத்து சந்திரமோகனுக்கு விட்டுக் கொடுத்தது எம்.ஜி.ஆரின் பெருந் தன்மை.தொடர்ந்து இதயக் கனியில் இதழே இதழே பாடலை எம்.ஜி.ஆருக்கு பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நவரத்னம் படத்தில் புலமைப்பித்தன் எழுதி வாணி ஜெயராமுடன் உங்களில் என் அண்ணாவைப் பார்க்கிறேன் பாட்டையும் பா டினார்.இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.எஸ்.வியின் மாயஜால இசையில் வாலி எழுதிய கனவு டூயட் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் மிக ஆழகாக லயித்துப் பாடினர். பாடலின் இசை சட்டென மாறி மாறி ஜாலம் செய்தது.இயற்கை யாகவே ஆணழகன் ஆன எம்.ஜி.ஆரும் அழகான இந்தி நடிகை ராதா சலூஜாவும் பலவித உடைகளிலும் செட் அரங்குகளிலும் ஆடிப் பாடிய இப்பாடல் கண்ணுக்கும் செவிக்கும் பேரின்ப பெருவிருந்து. சிறு வயதில் இப்பாடலுக்காகவே படத்தை ஏழெட்டு முறையும் அதன் பின் நூறு முறை கேட்டு ரசித்து இன்னும் கூட சலிக்கவே இல்லை. மீனவ நண்பன் படத்தில் வாணி ஜெயராமுடன் எஸ்.பி.பி.பாடிய நேரம் பௌர்ணமி நேரம் பாடலும் இனிமையானது.நல்லதை நாடு கேட்கும் படத்திலும் எம்.ஜி.ஆருக்காக மூன்று பாடல்களை எஸ்.பி.பி.பாடினார்.இப்படம் MGR முதலமைச்சர் ஆனதால் முழுமை பெறாமல் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் இப்படத்தின் எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளை தமது அவசர போலீஸ் 100 படத்தில் இணைத்தார்.பின்னர் முழுமை பெறாத நல்லதை நாடு கேட்கும் படமும் சில திரையரங்குகளில் வெளியாகி மறைந்து போனது.

எழுதும் கலை

எழுதும் கலை. எனது எழுத்து நடை சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் கூறுவார்கள்.எனது புத்தகங்களை வாசித்து நாஞ்சில் நாடன் தங்கர் பச்சான் அசோகமித்திரன் வல்லிக்கண்ணன் போன்ற பல எழுத்தாளர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டனர். நல்ல எழுத்து நடை என்பது வாசிப்பு மற்றும் பயிற்சியினால் மட்டும் அமைவதில்லை.என்னை விட பேரறிஞர் சிலர் நாலுவரி தெளிவாக எழுதத் தெரியாமல் தடுமாறுவதை கவனித்து வருகிறேன்.நல்ல எழுத்து நடை அமைய நல்ல மனமும் இருக்க வேண்டும் .ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் சிறுகதையை புதுமைப்பித்தன் எழுதிய சாபவிமோசனம் கதையுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதில் இறைவன் அவதாரமான ராமனே சீதையின் கற்பை சந்தேகித்து அக்னிப் பிரவேசம் செய்யச் சொல்வதை கண்டிக்கும் வகையில் பு.பி.எழுதியிருப்பார்.சீதை தூய்மையானவள் ஆனால் சந்தேகம் தீயில் இறங்கச் செய்தது.ஜே.கே.கதையில் கங்கா என்ற புனிதநதியின் பெயர் சூடிய பெண் ஒரு மழைநாளில் முகம் தெரியாத அந்நியனுடன் உணர்ச்சி வசப்பட்டு தன் கற்பை காருக்குள் இழந்து வீடு திரும்பி தாயிடம் சொல்லி அழுகிறாள்.தாய் ஒரு குடம் தண்ணீரை மகள் தலையிலே கொட்டி நீ சுத்தமாயிட்டே என்பாள்.சந்தேகம் நெருப்பில் தீக்குளிக்கச் செய்கிறது. ஆனால் தாய்மை தண்ணீர் ஊற்றி பாவத்தை சுத்தம் செய்கிறது.இதனை நான் எழுதும் போது தாய்மையின் கருணையுடன் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டியதாக எழுதினேன்.தாய்மையின் கருணை என் மனதுக்குள் இருந்தது. அதுதான் எழுத்தில் வந்தது .அதுதான் என் எழுத்துக் கலையாகவும் நடையாகவும் வெளிப்பட்டது.இதை ஜெயகாந்தனிடம் சொல்லும் போது அவரும் தாய்மையின் கருணையோடு என்ற வரியை மிகவும் ரசித்து தலையை அசைத்து புன்னகைத்தார்.எனக்கு அது பெருமிதமான ஒரு தருணம்.

எஸ்.பி.பி.யும் நடிகர் திலகமும்

ஆயிரம் நிலவே வா 3 . எஸ்.பி.பி.யும் நடிகர் திலகமும் பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆரால் அறிமுகமான போதும் அவரை விட சிவாஜி க்குத்தான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.MSV சுமதி என் சுந்தரியில் சிவாஜிக்கு பொட்டு வைத்த முகமோ என்று பாட வைத்தார்.பட்டி தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலித்தது. இன்றளவும் மிகச்சிறந்த டூயட் பாடலாக இது இருக்கிறது. வசந்தா என்ற பாடகி ஹம்மிங் பாடினார். தொடர்ந்து சிவாஜிக்கு எஸ்.பி.பாடினார். யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே என கௌரவம் படத்தில் பாடியதும் இனிமையானது.திரிசூலம் படத்தில் காதல் ராணி கட்டில் இருக்கு பாடலைப் பாடிய எஸ்.பி.பி. தன் உடன் பிறவா சகோதரன் போல பழகிய கே.ஜே.ஜேசுதாசுடன் இரண்டு கைகள் நான்கானால் என்ற அற்புதமான பாடலைப் பாடினார்.கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம் என்ற வரிக்கு எஸ்.பி.பி தந்த அழுத்தமான உச்சரிப்பு அருமை .சிவகாமியின் செல்வன் படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது என காதல் ரசம் சொட்ட சொட்ட பாடினார் எஸ்.பி.பி.இந்திப்படமான ஆராதனாவின் ரீமேக்கான இப்படத்தில் இப்பாடல் காட்சி முக்கியமானது.இந்தியில் கிஷோர்குமார் பாடிய ரூப் தேரா மஸ்தானா பாட்டைத்தான் தமிழில் பாடினார் எஸ்.பி.பி. ராஜா படத்தில் இரண்டில் ஒன்று பாடலும் புகழ் பெற்றது. வாணி ராணி குலமா குணமா சத்யம் நாம் பிறந்த மண் அண்ணன் ஒரு கோவில் ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற பல சிவாஜி படங்களில் எஸ்பிபி பாடிய போதும் சிவாஜிக்கு குரல் தரவில்லை. டி.எம்.எஸ் வயதாகி பின்னர் மறைந்து விட்ட பின்னர் சிவாஜிக்கு பாட வேறு குரல்கள் பொருந்தவில்லை.இளையராஜா எஸ்.பி.பி.யையும் மலேசியா வாசுதேவனையும் பாட வைத்து காலமிட்ட வெற்றிடத்தை ஓரளவுக்கு நிரப்பினார்.கவரிமான் படத்தில் பூப்போல உன் புன்னகையில்,நான் வாழ வைப்பேன் படத்தில் திருத்தேரில் வரும் சிலையோ , என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்துப் பாடல்கள் ஆகிய எஸ்.பி.பி.யின் பாடல்கள் கிளாஸிக் ரகம்.இமயம் படத்தில் இமயம் கண்டேன் பாட்டையும் ரசிக்கலாம்.உத்தமன்,லாரி டிரைவர் ராஜாக் கண்ணு,வாழ்க்கை,சந்திப்பு போன்ற பல படங்களில் எஸ்.பி.பி.பாடினார்.பட்டாக்கத்தி பைரவன் படத்தில் எஸ்.பி.பி பாடிய எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஒரு பொன் முத்து.அதே போல வேண்டும் வேண்டும் உந்தன் உறவு பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எஸ்.பி.பியும் இயக்குனர் ஸ்ரீதரும் -

ஆயிரம் நிலவே வா 4 எஸ்.பி.பியும் இயக்குனர் ஸ்ரீதரும் இயக்குனர் ஸ்ரீதர் தமது படங்களில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர். அவர் பாடல்களைப் படமாக்கும் விதமும் புதுமையானது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் பாடல்களைப் பார்த்தால் தெரியும் .நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலை ஒரு கதவு மூடி திறப்பதை காட்சிப்படுத்தி படமாக்கிய விதம் அருமையானது. அதே போல் பெரும்பாலும் இன்டோரில் ( வீட்டுக்குள் அல்லது மருத்துவமனைக்குள்) நடப்பது போன்ற காட்சியமைப்புகளுக்கு ஏற்ப பாடல்களைப் படமாக்கியதில் மிகப்பெரிய கலைஞர் அவர். ஸ்ரீதர் தாம் தயாரித்த உத்தரவின்றி உள்ளே வா மற்றும் தாம் இயக்கிய அவளுக்கென்று ஓரு மனம் , சாந்தி நிலையம் போன்ற படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வாய்ப்பு தந்தார். அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்ற பாடலை மழையில் ஜெமினி கணேசன் பாடுவதாக ஸ்ரீதர் படமாக்கியிருப்பார். அதில் தொடக்கத்தில் எஸ்.பி.பி பாடிய நீளமான ஹம்மிங் திரையில் ஒலிக்கத் தொடங்கியதுமே பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. ரசிகர்கள் பாடல்களுக்காகவே படத்துக்கு மீண்டும் மீண்டும் வந்தனர். அதே போன்று சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற டூயட்டை பி.சுசிலாவுடன் எஸ்.பி.பி பாடினார். இன்று வரை மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. உத்தரவின்றி உள்ளே வா படத்தை ஸ்ரீதர் இயக்கவில்லை. என்ற போதும் அதில் உத்தரவின்றி உள்ளே வா என்ற டைட்டில் பாடலுக்கு டி.எம்.எஸ். எஸ்.பி.பி. எல்.ஆர் ஈஸ்வரியை பாட வைத்தார் எம்.எஸ்.வி. நாகேஷ்க்கு டி.எம்.எஸ் குரலையும் ரவிச்சந்திரனுக்கு இளமையான எஸ்.பி.பியும் பாட பாடல் செம ஹிட்டானது. அதே படத்தில் உன்னைத் தொடுவது இனியது என்ற பாடலையும் பாடிய எஸ்.பி.பி பாடலின் ஒரு சிறிய பிட்டுக்கு நாகேஷூக்கும் குரல் கொடுத்திருப்பார். எஸ்.பி.பி குரலில் நாகேஷ் பாடியதும் இதுதான் முதல் முறை. மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி என்று எஸ்.பி.பி. பிசுசிலா பாடிய பாடலும் இப்படத்தில் மிகவும் பிரபலமானது. பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஸ்ரீதர் எஸ்.பி.பியை பாட வைத்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்று இளையராஜா இசையில் வாலி எழுதிய பாடல் அற்புதம். பாடலின் தொடக்கத்திலேயே படத்தில் ஸ்ரீபிரியா கமலிடம் வாட் எ லல்வி சாங் என்பார் .உண்மைதான். அதே படத்தில் வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொகையறாவுடன் என்னடி மீனாட்சி என்று எஸ்.பி.பி. பாடிய பாடல் இன்றளவில் மேடைப்பாடல்களில் தனி இடம் பெற்றுள்ளது. கமலின் நடிப்பும் நடனமும் ரஜினிகாந்த்தின் ரியாக்சனும் இதில் சிறப்பாக இருந்ததும் ஒரு காரணம். தென்றலே என்னைத் தொடு படத்தில் கவிதை பாடு குயிலே குயிலே, புதிய பூவிது பூத்தது என்ற பாடல்களை எஸ்.பி.பி. மோகனுக்காக பாடினார். அதை விட முத்தாய்ப்பாக நினைவெல்லாம் நித்யாவில் பனிவிழும் மலர்வனம், ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், தோளின் மேலே பாரம் இல்லை , நீதானே எந்தன் பொன் வசந்தம் என்று எஸ்.பி.பி பாடிய பாடல்கள் தேனிசையாக இனித்தன. பாடல்களை வைரமுத்து எழுத இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதர் எம்.ஜி.ஆருக்கு இயக்கிய மீனவ நண்பன் படத்திலும் எஸ்.பி.பியின் நேரம் பவுர்ணமி நேரம் என்ற இனிமையான பாடல் இடம் பெற்றது.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...