Saturday 24 August 2019

பதிவுகள் 1 சுந்தர ராமசாமி

பதிவுகள் 1 சுந்தர ராமசாமி





எனது ஆதர்ச எழுத்தாளர்களில் பாரதியும் புதுமைப்பித்தனும் மௌனியும் இன்னும் ஒரு பத்து இருபது எழுத்தாளர்களும் உள்ளனர். ஆனால் நான் சந்தித்த எனது சமகால எழுத்தாளர்களில் அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம், சுந்தர ராமசாமி என்றுதான் வரிசைப்படுத்த வேண்டும். ஆனால் மற்ற இருவரையும் மிகுந்த மரியாதையுடன் நகர்த்தி சுந்தர ராமசாமியையே நான் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளராக சந்தித்து மகிழ்ந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன்.
ஏன் சுந்தர ராமசாமிக்கு முதலிடம்.....அவருடைய ஜே.ஜே.சில குறிப்புகள் ஒரு pseudo intellectual நாவல் என்றும் ஜான் அப்டைக்கின் பெக் எ புக் என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியவர் என்றெல்லாம் தமிழ்ச்சூழலில் விமர்சித்தார்கள். நானும் பெக் எ புக எல்லாம் படித்துப் பார்த்தேன். அது சுராவின் மேதைமைக்கு கால் தூசி பெறாது விடுங்கள்.
சுந்தர ராமசாமியை எனக்கு புத்தகங்கள் வாயிலாகத்தான் முதலில் அறிமுகம். ஒரு அதி தீவிர வாசகனாக என்னை தன் படைப்புலகிற்குள் சுந்தர ராமசாமி வளைத்துக் கொண்டார். அவரை சந்திப்பேன் என்றும் அவருக்கு பிரியமானவராக இருப்பேன் என்றும் கனவில் கூட நினைத்ததில்லை. பக்தன் கடவுளைக் கண்ட உணர்வுதான் அது.
சுந்தர ராமசாமி என்ற பெயரே முதன் முதலாக ஈர்த்தது. ஈர்த்ததுஎன்ற சொல் எத்தனை கொடூரமானது என்பார் எம்ஜி வல்லபன் அவர்கள். சரிதான். ஆனால் வேறு எப்படி சொல்வது. படைப்புகளில் உச்சத்தில் ஜெயகாந்தனையும் நா.பார்த்தசாரதியையும் வைத்து கொண்டாடியவன் நான்.அவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் வாசித்து தேனில் திளைத்த வண்டு போல்தான் இருந்தேன். இதனிடையே ஒரு இலக்கிய நண்பர், கவிஞர் இப்போதும் முகநூலிலும் பத்திரிகை உலகிலும் இருப்பவர் கேட்டாரே ஒரு கேள்வி....ஜெயகாந்தனை எல்லாம் ஏன் படிக்கணும்....எனக்கு ஜே.கே. தேவையில்லை ...என்றார்
பல இளைஞர்கள் இந்தமன நிலையில் இருக்கிறார்கள். ஆனால் சுந்தர ராமசாமி கூறுவார் புதுமைப்பித்தன், குபரா, மௌனி, கநாசு போன்றவர்களுக்கு எல்லாம் பின்னால் வந்தவன் நான் என்று....முன்னோடிகளை மதிக்கிற முதல் பாடத்தை நான் சுந்தர ராமசாமியிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
சுந்தர ராமசாமியின் ஜே. ஜே .சில குறிப்புகள் நாவலை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எண்பதுகள் என நினைவு...கன்னிமரா நூலகத்திற்கு தினமும் படிப்பதே வேலையாக கொண்டு செல்லும் நண்பர்கள் சூர்ய ராஜன், மு.நந்தாவுடன் நானும் வேலையை விட்ட நாட்களில் கூட செல்வதுண்டு. நூறு வேலைகள் மாறியிருக்கலாம். பலநூறு முறை கன்னிமரா சென்றிருக்கலாம். ஒருமுறை தேவி தியேட்டரில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒருவாரம் படம் பார்க்க லீவு கேட்டு கிடைக்காததால் 400 ரூபாய் சம்பளத்தில் இருந்த வேலையை தூக்கிப் போட்டு வந்தேன்.
அப்படி கன்னிமரா செல்லும் நண்பர்களுக்கு தமது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கேண்டீனில் பொங்கலும் டீயும் வாங்கித் தருவார் நண்பர் நிமோஷிணி விஜயகுமாரன். அவர் அரசு அலுவலர் நிரந்தரமான சம்பளம் உடைய நண்பர் அப்போது அவர்தான்.
ஒருநாள் ஒரு இளைஞனை மரத்தடியில் சந்தித்தோம. கையில் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் வைத்திருந்தான். வாங்கிப் பார்த்தால் வரிக்கு வரி அடிக்கோடிட்டு வைத்திருந்தான். சில வரிகள் மிகவும் பாதித்தன. அதுதான் சுந்தர ராமசாமி என்னை வளைத்த முதல் தருணம்.
என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெருவில் செல்லும் ஒவ்வொருவரையும் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்று ஜே.ஜே. கூறுவான்.
பலர் அந்த மனநிலையில்தான் அன்று இருந்தோம். வேலையில்லை, குடும்பத்திற்கு சுமையாகவும் பாரமாகவும் இருந்தோம். அம்மிக்ல்லைப் பெற்று எடுத்தால் சட்னி அரைக்கவாவது உதவியிருக்கும் என்று அம்மாவும் அப்பாவும் தங்கள் பொருளாதார சுமைகளால் எங்களை சவட்டிக் கொண்டிருந்த நேரம் அது.
அந்த இளைஞனின் பெயர் இப்போது நினைவில்லை. திரு என ஏதோ ஆரம்ப எழுத்து மட்டும் நினைவில் இருக்கிறது. அவனிடம் பேச்சு கொடுத்த போது திருநெல்வேலியில் இருந்து அப்பாவின் மளிகைக்கடையில் ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டதாக கூறினான். ஏன் என்றால் ஜே.ஜே.சிலகுறிப்புகளை காட்டினான். வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய அவன் ஆயிரம் ரூபாய் தீர்ந்த பின் என்ன செய்யப்போகிறாய் என்று நாங்கள் கேட்ட போது தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றான்.
ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகம் எனக்கு மிகப் பெரிய பயத்தை ஏற்படுத்தியது. அதை அவன் கையில் வைத்திருந்தால் ஆபத்து என நான் வாங்கிக் கொண்டேன். அவனையும் என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
இரவில் அம்மா, அப்பா, தம்பிகளின் முறைப்பையும் தாங்கிக் கொண்டு அவனுக்கும் சோறு போட்டு அவனுடன் மொட்டை மாடியில் படுத்து மறுநாள் காலையில் கன்னிமரா நோக்கி நடந்தே சென்றோம்....நண்பர்களும் வந்து வி்ட்டனர். ஆளாளுக்கு அவனை மூளைச் சலவை செய்து விட்டோம். வாழ்க்கை மிகப்பெரிது வாழ்வது அரிதினும் அரிதானது என்றெல்லாம் அவனுக்குப் புரிய வைத்து அவன் காசிலேயே திருநெல்வேலிக்கு டிக்கட் எடுத்து அவனை அனுப்பி வைத்தோம். அவன் அப்பா எண்ணை வாங்கி தொலைபேசியில் பேசி மகனுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அன்புடன் நடத்துமாறும் தண்டிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம். அதன் பின்னர் அந்த இளைஞனை இன்று வரை சந்திக்கவில்லை. ஆனால் அவன் தந்த ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் எனது வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. சுந்தர ராமசாமி என்ற பெயரும் அவருடைய ஜே.ஜே சில குறிப்புகள் நாவலும் என்னை அவருக்கு மிகவும் நெருக்கமான மனநிலைக்கு கொண்டு சென்றது. அவர் யார் எங்கே வாழ்கிறார் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தேன்.
கோவை ஞானி அய்யா அவர்கள் மூலமாக சுந்தர ராமசாமியைப் பற்றி அதிகமாக அறிய முடிந்தது. அடிக்கடி ஞானி வீட்டுக்குச் செல்லும்போது சுந்தர ராமசாமியைப் பற்றி அவர் படைப்புகள் பற்றி ஆர்வமாக பேசுவேன். ஞானிக்கு இடதுசாரி மனநிலை. அவர் டி.செல்வராஜ், பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமியைப் பிடிக்கும் என்றாலும் அவர் ஒரு பணக்காரர் என்றும் மேல்தட்டு எழுத்தாளர் என்றும் ஞானிக்கு ஒரு எண்ணம் இருந்திருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. பின்னர் ஜெயமோகன், வேதசகாயகுமார் போன்றோருடனான நட்பும் சந்திப்புகளும் சுந்தர ராமசாமியை நான் நேசிப்பது சரிதான் என்று வலிமையான எண்ணத்தை தந்தன.
சுந்தர ராமசாமியை சந்தித்தால் என்னுடன் பேசுவாரா என்ற தயக்கம் இருந்தது. ஒருநாள் நாகர்கோவிலுக்கு எனது நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்பாக நான் அடியெடுத்து வைத்தேன். அந்த ரூட்டுக்கு வேறு ஆள் போட்டிருந்தார்கள் என்பதால் என்னால் கோவை, சேலம் தாண்டி போக முடிவதில்லை. எப்படியோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகில் அப்போது 25 ரூபாய்க்கு மிகவும் அசுத்தமான ரூம் கிடைக்கும் .மூத்திர நாற்றம், மூட்டைப்பூச்சி நிறைந்த கட்டில் எல்லாம் கிடைக்கும். வேறு வழியில்லை. ரயில் பேருந்து கட்டணத்திற்காக ஒரு தொகையை ஒதுக்கினால் கையில் சில நூறு ரூபாய்கள் தான் இருக்கும். அதுதான் ரூமுக்கும் சாப்பாட்டுக்கும் புத்தகங்களுக்கும்.
இரவில் ரூமில் தங்கிவிட்டு காலையில் கன்னியாகுமரி கோவிலுக்கு சென்றேன். அதற்கு முன்பாக தென்குமரிக் கடலில் சூரிய உதயத்தை கண்ணால் கண்டு மகிழ்ந்தேன். விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி சென்று வந்தேன். கடைசியாக காலையில 9 மணியளவில் வேதசகாயகுமாரின் வீட்டை கண்டுபிடித்து சென்றடைந்தேன். அப்போது ஜெயமோகன் திருப்பத்தூரிலோ தருமபுரியிலோ இருந்தார்.
வேதசகாயகுமார் உபசரித்து என்னை சுந்தர ராமசாமியின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். காலச்சுவடு மீண்டும் வர ஆரம்பித்த நேரம் அது. கண்ணன் அறிமுகமானார். அவர் காலச்சுவடு தட்டச்சு பணிகளையும் வீட்டையும் காட்டினார். உடனே இணக்கமான நண்பரைப் போல் பழக ஆரம்பி்தது விட்டார். சில நிமிடங்கள் கழித்து வெள்ளை வேட்டி கோடு போட்ட சட்டையுடன் சுந்தர ராமசாமி என்னை வரவேற்றார். .
சுந்தர ராமசாமி என்னை வரவேற்றார் என்ற இந்த வரியை அத்தனை சாதாரணமாக தாண்டிப் போய்விடாதீர்கள். அது ஒரு வரலாற்றுத் தருணம். ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பின்னால் மிகப்பெரிய எழுத்தாளனாக வரப்போகிற ஒருவனை வரவேற்ற தருணம். கிடங்குத் தெரு எழுதினபிறகு இப்படி கூறுகிற தைரியம் எனக்கு வந்துள்ளது. அந்த நாவலில் ராஜா கூறுவான்...நான் ஒரு ஜீனயஸ் இதை நீங்கள் நம்புங்கள் மிகுந்த பணிவுடன் தான் இதனைக் கூறுகிறேன். இதை ஒரு ஆணையிட்டும் என்னால் கூற முடியும்.
சுந்தர ராமசாமியிடம் என்னைக் கவர்ந்த அம்சமே அந்த படைப்புத் திமிர்தான். படைப்பதனால் என்பெயர் இறைவன் என்ற மன நிலையை சுந்தர ராமசாமி தான் எனக்கு முதன் முதலில் நேரடியான அனுபவமாக தந்தார். ஒரு மிகச்சிறந்த படைப்பாளி எல்லா முதலமைச்சர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், உலகத் தலைவர்கள், ஏன் ஒட்டு மொத்தமனித குலத்தைவிடவும் ஒரு அடி உயர்ந்தவர்கள்தான் என்ற எண்ணம் வலுவாக சுந்தர ராமசாமியிடமிருந்துதான் நான் பெற்றுக் கொண்டேன்.
கண்ணன் காலச்சுவடு பணிகளை எனக்கு காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை காத்திருந்த சுந்தர ராமசாமி பொறுமை இழந்து வாங்க என்று என்னை அழைத்து தன் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார், காலை டிபன் கொடுத்தா்கள். பேசிக் கொண்டும் பின் அமர்ந்தும் பல மணி நேரம் அவருடன் உரையாடினேன். கிட்டதட்ட 12 மணிக்குதான் விடைபெற்றேன்.
அந்த உரையாடலில் நினைவில் பதிந்ததை மட்டும் கூறுகிறேன். சரிபார்க்க சுராவும் இப்போது இல்லை. தவறு இருந்தால் நானே பொறுப்பு மன்னித்துக் கொள்ளுங்கள்.
எனக்கு முதல் ஆச்சரியம் என் பெயரை அவர் தெரிந்து வைத்திருந்தார். செந்தூரம் சிற்றிதழ் வாயிலாகவும் எனது படைப்புகளை கணையாழி , தீபம், நிகழ், உள்ளிட்ட  இலக்கிய இதழ்களின் வாயிலாகவும் ஞானி, வேதசகாயகுமார், ஜெயமோகன் போன்ற நண்பர்கள் நேர்ப்பேச்சிலும்என்னை அவர் அறிந்திருந்தார் என்பது எனக்கு தாளாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிரே இருப்பவன் யார் அவன் இலக்கியத் தகுதி என்ன அவனுடன் என்ன உரையாட வேண்டும் என்பதையும் அப்போது ஒரு பாடமாக சுந்தரராமசாமியிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
முதலில் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பற்றி பேச்சுவந்தது. நீங்க நிறைய படிக்கிற ஆளுன்னு கேள்விப்பட்டேன். நீங்க படிச்ச புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள் என்றார் சு.ரா.
ஜெகதீஷ் வரை தெரிந்து வைத்திருந்த அநத் ஆளுமைக்கு முன்னால் நான் மிகச்சிறியவனாக தெரிந்தேன். ஆனாலும் அவர் அறியாத ஒரு படைப்புலகில் என் மூலமாக அவர் பிரவேசிக்க முயற்சிப்பதாக எடுத்துக் கொண்டேன். மேலும் இளம் படைப்பாளர்களுக்கு எத்தகைய புத்தகங்களில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறது என்பதை அவர் சோதிக்க நினைத்திருக்கலாம்.
ஜெயமேகன், சு.வேணுகோபால், குமாரசெல்வா, ஷாராஜ், சூர்யராஜன் , நந்தா, அறிவுமணி, கோணங்கி, பாவண்ணன் என்று அப்போது நான் படித்த பழகிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் பேசுவதை கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவர் புன்னகையுடன் பேசினார்.
பின்னர் பேச்சு புதுமைப்பித்தன் முதல் ஜி.நாகராஜன் வரை திரும்பியது. ஜி.நாகராஜன் தமது வீட்டுக்கு வந்து குடிக்க காசு கேட்பதையும் அவருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கையையும் மிகச்சிறந்த ஒரு படைப்பாளி எப்படி சிதைந்து போனார் என்பதையும் சுரா வாயிலாக கேட்ட போது மனம் கலங்கியபடியே இருந்தது. ஜிநாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே , குறத்திமுடுக்கு உள்ளிட்ட படைப்புகளைப் படித்திருந்திருந்ததால் எனக்கு சுராவுடன் உரையாட தயக்கம் இல்லை. அடுத்து கிருஷ்ணன் நம்பி பற்றியும் பேசினோம், இந்த நினைவுகளையெல்லாம் தொகுத்து புத்தகமாக்க வேண்டுமம் என்று நான் சுராவிடம் கேட்டுக் கொண்டேன். பின்னர் அரவிந்தன் தொகுத்த சுராவின் நினைவோடை நூல் வரிசைகளுக்கு அன்றைய எனது கோரிக்கை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தொடர்ந்து க.நா.சு பற்றியும் பேசினோம். நான் சொன்னேன் கநாசு மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை பற்றி நான் சந்தேகம் எழுப்பினேன். சுருக்கியும் மாற்றியும் எழுதியிருப்பதாக நான் எண்ணுவதை தெரிவித்தேன். இது அவருக்கு புதிய செய்தியாக இருந்தது. அத்தனை உன்னிப்பாக கநாசுவின் மொழிபெயர்பபுகளை படித்து யாரும் பேசியதில்லை என்றார். இதுவரை தமிழில் மூல நூலையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுதப்படவில்லை என்று அப்போது சுந்தர ராமசாமி கூறினார். பின்னர் எனது புகாருக்கு பதிலளிக்கும் விதமாக தமது நண்பரான கநாசுவை விட்டுக் கொடுக்காமல் ,கநாசு மொழிபெயர்த்ததில் குறைகள் இருக்கலாம்.ஆனால் எது எல்லாம் தமிழுக்கு அவசியம் வரவேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை நூல்களையும் அவர் தானே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என்றார். என்னால் மறுக்கவே முடிவில்லை.
கணையாழி அப்போது தசரா அறக்கட்டளையின் வெளியீடாக வந்துக் கொண்டிருந்தது. அதில் சுரா கேள்வி பதில் எழுதிக் கொண்டிருந்தா்ர. இளையராஜாவின்  இசையில் வெளியான அவதாரம் படத்தில் தென்றலது உன்னிடத்தில் என்ற பாடல் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று சுந்தர ராமசாமி அதில் பதிவுசெய்திருந்தார். அது பற்றியெல்லாம் அவர் ஆர்வமாக கேட்டார். காப்கா பற்றிய பதிவு சிறப்பாக இருந்ததாக கூறினேன். ஆனால் சார் கணையாழி பழைய மரியாதையை இழந்துவிட்டது. இப்ப அதுல நீங்க எழுதினா அது உங்களுக்குத்தான் கௌரவக் குறைவு என்று கூறினேன். இது அவருக்கு மிக்பபெரிய வியப்பை ஏற்படுத்தியது. செம்மலர்  சுந்தர ராமசாமியை அங்கீகரிப்பதாக ஒரு முறை எழுதிய போது அதற்கு கடிதம் எழுதிய சுந்தர ராமசாமி, செம்மலர் என்னை அங்கீகரிப்பது ஒரு பொருட்டல்ல, நான் செம்மலரை அங்கீகரிக்கிறேனா என்பதுதான் முக்கியம் என்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் .அதனை சுட்டிக் காட்டினேன். கணையாழிக்கும் இது பொருந்தும் என்ற எனது கருத்தை அவர் உள்வாங்கிக் கொண்டார் .அடுத்த சில மாதங்களில் கணையாழியில் சுராவிந் கேள்வி பதில் நிறுத்தப்பட்டது. சுரா தொடர்ந்து எழுதியிருக்கலாம் என்று இப்போது வருத்தத்துடன் எண்ணிக் கொள்கிறேன். ஏனென்றால் அந்தக் காலத்தில் குமுதத்தில் எழுதக்கூடாது தசரா கணையாழியில் எழுதக் கூடாது என்ற மிகுந்த தவறான எண்ணங்களுடன்தான் நாங்கள் தீவிர இலக்கியம் வாசித்தும் எழுதியும் வந்தோம்.
சுந்தர ராமசாமியின் வீட்டில் அவருடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவையும் உற்சாகத்தையும் தந்தது. திருநெல்வேலி இளைஞன் ஜேஜே சில குறி்ப்புகள் படித்துவிட்டு தற்கொலை எண்ணத்துடன் சென்னை வந்து எங்களிடம் சி்க்கிய கதையை நான் அவருக்கு சொல்லவில்லை.ஒருவன் தனது மனப்பிதற்றல், பிறழ்வுக்கு குறிப்பிட்ட புத்தகத்தையோ, நபரையோ, திரைப்படத்தையோ குற்றம் கூறுவதும் காரணமாக்குவதும் அபத்தம் என்பதை நானும் புரிந்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். அதன் பின்னர் நானும் இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவன்தான். வாழ்க்கையின் இறுக்கமான தருணங்களில் வழிகாட்டும் ஒளியாக கடவுள் இல்லாத போது இலக்கியமோ இசையோ உதவக்கூடும் என்பதை தான் எனதுஅனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். நல்ல நட்பும் சில சமயங்களில்  வாழ்க்கை மீதான நேசத்தை உருவாக்கும். அப்படித்தான் எனது வாழ்க்கை கழிந்துள்ளது.
சொல் புதிது இதழ் வெளியீட்டு விழாவுக்காக சுந்தர ராமசாமி சென்னை வந்தார். ஜெயமோகன் அழைத்திருந்தார். நான் ஜெயகாந்தனை அழைத்தேன். அவரும் விழாவுக்கு வந்துவிட்டார். பிரபஞ்சன், சா.கந்தசாமி, வஐசெ ஜெயபாலன், எம்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஒரே மேடையில் தோன்றினர். அந்த விழாவில் என்னால் பேச முடியவில்லை. மிகப்பெரிய எழுத்தாளர்களாக நான் மதிக்கக்கூடிய நான்கு பேர் ஒரு மேடையில் இருப்பதை பரவசமான அனுபமாக உணர்ந்தாலும் ஜெயமோகன் கலந்துக் கொள்ள இயலவில்லை.வேலை இல்லாத மனச்சோர்வு, கையில் காசு இல்லாத வேதனை, வீட்டில் காத்திருந்த பிரச்சினைகள் எல்லாமுமாக நான் ஊமையாக பேசிவிட்டு போனேன்.
முன்னதாக காலையில் ஆழ்வார்ப்பேட்டையில் சுரா தங்கியிருந்த உறவினர் வீட்டில் போய் அவரை பார்த்தேன். மிகுந்த பிரியத்துடன் வரவேற்று பேசினார். அவருடைய அன்பு கனிந்து ஆகர்ஷித்தது. என்னை மிகவும் நெருக்கமானவனை போல் அவர்  ஏற்றுக் கொண்டார். அப்புறமும் ஒருமுறை சென்னை காஞ்சி ஓட்டலில் சுரா இல்லத்திருமண விழா வரவேற்பறையில் அவரை சந்தித்த போதும் அந்த பிரியத்தை என்னால் உணர முடிந்தது.
சுந்தர ராமசாமி மறைந்த போது கண்ணன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நாகர்கோவில் போக முடியவில்லை. கையில் காசு இல்லை.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கிடங்குத் தெரு நாவல் சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது என்றும் அவரே காலச்சுவடில் எழுத நினைத்தார்  என்றும் கண்ணன் எழுதிய கடிதம் மூலம் அறிந்துக் கொண்டேன். அந்த நாவலுக்கு பாஷா பாரதிய சம்மான் என்ற தேசிய விருதும் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருதும் பெற்ற மகிழ்ச்சியை விட அந்த இரண்டு வரிகள் எனக்குத் தந்தன. கிடங்குத் தெருவும் ஜேஜே சில குறிப்புகளும் ஒரே அவஸ்தையை கூறுகின்றன. ஒன்று சுந்தர ராமசாமியின் பார்வையில் மற்றொன்று செந்தூரம் ஜெகதீஷின் பார்வையில்....
சுந்தர ராமசாமி பதிவுகள் நிறைந்தது

Monday 5 August 2019

ரசனை சினிமா 2

ரசனை சினிமா

ரசனை சினிமா 11
அவர்கள் -1977
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரவிக்குமார், சுஜாதா ,லீலாவதி மற்றும் ஜூனியர் பொம்மை
பாடல்கள் -கவியரசு கண்ணதாசன்
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் -கே.பாலசந்தர்
அனு , பரணி, ராமநாதன், ஜனார்தன், லீலாவதி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒரு சுட்டியான பொம்மையும் இப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளது. காதலிக்கும் பரணியை விட்டு மும்பை செல்லும் அனு அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் விருப்பத்திற்கு இணங்கி பண உதவி செய்யும் ராமனாதனை மணக்கிறாள். பரணிக்கு அவள் போட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை.
ராமனாதன் ஒரு சாடிஸ்ட் .மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துகிறான். ஆனால் அழக்கூடாது என்ற உறுதி கொண்டிருக்கும் அனு அவனை விட்டுப் பிரிந்து கைக்குழந்தையுடன் மீண்டும் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அவளது அலுவலக சகாவான ஜனார்தன் ஒருதலையாய் அனுவை காதலிக்கிறான். ஆனால் காதலை சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. மீண்டும் பழைய காதலன் பரணியை சந்தித்து கடிதங்களுக்கு பதில் வராத காரணத்தை தெரிந்து மீண்டும் அவனுடன் பழகுகிறாள் அனு. ஆனால் ராமநாதன் திருந்தியவனாக அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். கணவனா, காதலனா என தடுமாறும் அனுவுக்கு மனதார நேசிக்கும் இன்னொருவன் அருகில் இருப்பது புரியவில்லை. இந்த முக்கோண காதல் இல்லை நான்கு கோண காதல் கதையை மிகவும் லாவகமாக கையாண்டார் பாலசந்தர்.
அவருடைய பெண் பாத்திரங்களில் அனுவுக்கு சிறப்பிடம் உண்டு. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அனு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன் ஆக இருப்பாள். சுஜாதாவின் நடிப்பு அற்புதம். பரணியாக ரவிக்குமார் , கொடூர கணவனாக ரஜினிகாந்த். அப்பாவி ஜனார்தனாக கமல்ஹாசன், ஆகியோர் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் என்றால் அந்த பொம்மை செம்மை.
ஜூனியர் ஜூனியர் என்று கமல் பாடும் அந்தப்பாடல் தேன் வெள்ளம்.
சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகிறாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடிஓடுகிறாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய் என்றும்
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா என்றும் கமல் அந்த பொம்மைக்கு உபதேசிப்பதும் பேரழகு .ஆனால் அந்த பொம்மைக்கு பாடவும் பேசவும் தெரியாது. பேசுவதும் பாடுவதும் கமல்தான் என்ற உண்மை புரியும் போது சுஜாதா உடைந்து அழுதுவிடும் இறுதிக்காட்சி கவிதை.
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அவர்கள் முக்கியமானது.
இப்படியொரு தாலாட்டு பாடவா என்ற பாடலில் கண்ணன் அவன் கைகளில் குழல் இருந்தது அந்த கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது என்றும் , அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைந்தாள், ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள் என்றும் அனு பாடுகிறாள்.
அதே அனுதான் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடலில் பிள்ளை பெற்றும் பிள்ளையானேன். பேசிப் பேசி கிள்ளையானேன். கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன் என்று புதுமைப் பெண்ணாய் தோன்றுகிறாள்.
ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கமலுக்கு விட்டுக் கொடுத்து அடக்கமாகவும் அமர்க்களமாகவும் நடித்திருந்தார். எல்லோரது நடிப்பையும் கமல் தூக்கி சாப்பிட்டு விட்டார். கமலுக்குள் ஒரு மகத்தான கலைஞர் இருப்பதைக் கண்ட பாலசந்தர் தமது படங்களில் கமல்ஹாசனை வித்தியாசமான பாத்திரங்கள் கொடுத்து ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாற்றினாா்.
சினிமாவை கமல் நேசிக்கிறார். அதே போன்று சினிமாவுடன் கமலை நேசிக்கக்கூடியவன் நான். அவரது மருதுபாண்டியன் , பொன்னியின் செல்வன் கனவுகள் நனவாகுமோ இல்லையோ, அரசியலில் அவர் ஆட்சியைப் பிடிப்பாரோ சிவாஜி கணேசன் மாதிரி திரும்பி வருவாரோ தெரியாது. ஆனால் நெற்றியில் பட்டையாக விபூசி பூசிக் கொண்டு கையில் ஒரு சிங்கப்பூர் பொம்மையுடன் ஜூனியர் ஜூனியர் என்று பாடுவாரே ஒரு துயரம் கலந்த சிரிப்புடன் அந்த கமல் போதும் என் போன்றவர்களுக்கு
------------------------------------------------------------
11. மாடி வீட்டு ஏழை -1981
சிவாஜி கணேசன், சுஜாதா, ஸ்ரீப்பிரியா, நாகேஷ்,வி.கே.ராமசாமி, ரஜினி சர்மா
கதை தாசரி நாராயண ராவ்
திரைக்கதை வசனம் -கலைஞர் மு.கருணாநிதி
பாடல்கள் வாலி  இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் அமிர்தம்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம். தமிழில் கலைஞரின் கைவண்ணத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மனைவி-கணவன் சென்ட்டிமென்ட் கதை. ரசிகர்களை கண்ணீர் பிழிய வைக்கும் சிவாஜி- சுஜாதாவின் ஹைகிளாஸ் நடிப்பும் ஆங்காங்கே  சமூகக் கருத்துகளுடன் சுவையான வசனங்களினால் கவரும் கலைஞரும் படத்தை காப்பாற்றுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் இளவயது கலைஞரின் தோற்றத்தில் அவர் உரை நிகழ்த்தும் முன்னுரையும் உண்டு.
எப்போதும் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நான் மாடி வீடுகளிலும் ஏழைகளைப் போல் வாழ்பவர்களைப் பற்றி சிந்திக்கத் தவறுவதில்லை என்று கலைஞர் குறிப்பிடுகிறார்.
கோட் சூட் போட்ட நவ நாகரீக இளைஞன் செந்தமிழில் பேசுகிறான். அதை காதலியும் ரசிக்கிறாள். இதே கோட் சூட் போட்ட பெரிய சிவாஜி பியூனாக வேலை பார்க்கிறார். இப்படிப்பட்ட அபத்தங்களை மன்னித்தால் படத்தை ரசிக்கலாம்.
பணக்கார ஜமீன்தாரின் மகன் என தப்பான ஆளை வீட்டில் அனுமதிக்கும் வி.கே.ராமசாமி அவன் ஏழை என அறிந்ததும் விரட்டுகிறார். அவர் மகள் லட்சுமி அந்த ஏழையை காதலித்து மாடி வீட்டை விட்டு குடிசை வீட்டு்க்குவந்து அவனோடு வாழ்கிறாள்
அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்குநான் கொடுத்தேன் இந்த நல்விருந்து என்ற அற்புதமான ஒரு பாடலுடன் கணவனுக்கு மோர் சாதத்தையும் கடைசி கரண்டி தோசையைும் ஊட்டுகிறாள். இந்தப் பாடலை தயவு செய்து கேளுங்கள் ....இசையரசி பி.சுசிலாவின் குரலில் ஒரு இனிமையும் டி.எம்.எஸ் குரலில் ஒரு சோகமும் கலந்து இப்பாடல் இரண்டு முறை ஒலிக்கிறது. இந்த மகத்தான பாடலை மீண்டும் மீண்டும் கேட்டால் ஆனந்தம். இதற்காகவே இந்தப் படம் என் மனதுக்குப் பிடித் தபடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
------------------------------------------------------------------
12  பாடு நிலாவே 1987
மோகன், ரவிச்சந்திரன், சோமாயாஜூலு, செந்தில், நதியா, அனுஜா, ஜெயலலிதா, கலாரஞ்சனி, மோகனப்பிரியா
கதை ஆர்.செல்வராஜ்  வசனம் ஈ .ராமதாஸ் திரைக்கதை எம்ஜி வல்லபன்
பாடல்கள் வாலி இசை இளையராஜா இயக்கம் கே.ரங்கராஜ்
மோகன் படம் என்றாலே பாட்டுதான், அதுவும் இளையராஜா பாட்டுதான். கதை எல்லாம் அப்புறம் என நம்பி எடுக்கப்பட்ட பல படங்கள்வெற்றிகரமாக ஓடின. ஆனால் சில படங்கள் ஏமாற்றம் தந்தன. அதில் ஒரு படம்தான் இது.
கதையை கோட்டை விட்டு இளையராஜாவை மட்டும் நம்பியதன் விளைவு.. இரண்டு பாடல்கள் செம ஜோராக கொடுத்தார். ஆனாலும் படத்தை காப்பாற்ற முடியவில்லை.
மலையோரம் வீசும் காத்து பாடலும் சிறைக்குள் மோகன் நதியா பாடும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பாடலும் இளையராஜாவின் அமுதங்கள்.
ரவிச்சந்திரன் கம்பீரமான வில்லன்வேடத்தில் கவர்கிறார். கவர்ச்சிக் கன்னிகள் அனுஜா, ஜெயலலிதா, மோகனப்பிரியா  இரண்டு கைக்குட்டை ஆடைகளுடன் குளிக்கிறார்கள், அதை விட அழகாக நதியா இருக்கிறார். முழங்கால் தெரியும் ஸ்கர்ட் அணிந்த கொழு கொழு நதியாதான் உலகின் பேரழகியோ எனவியக்க வைக்கிறார். அதிலும் கால் முட்டிக்கும் பாதங்களுக்குமான இடைப்பட்ட கால்பகுதியின் சதை நதியாவைப் போல் வேறு பெண்ணிடம் பார்க்கமுடியாது. அதை அவர் விதவிதமான ஆடைகளில் அழகாக வெளிப்படுத்துவார். அந்தக் காலத்தில் நடிகர்கள் தொடக்கூடாது, கவர்ச்சி காட்டமாட்டேன் என்று பலவித கண்டிஷன்கள் போட்டவர் நதியா. ஆனால் உடலின் கவர்ச்சியை அவரால் மறைக்கமுடியவில்லை. மூடிய ஆடைகளிலும் அவர் அவ்வளவும் அல்வாதான்.
கதை அட போங்கப்பா.....திரைக்கதை நம்ம வல்லபன் சார்...அதற்காகவும் இப்படத்தை பாருங்கள்.
-----------------------------------------------------------------------
13  பார்த்த ஞாபகம் இல்லையோ  -1985
ஆனந்த் பாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ராதாரவி, ராஜீவ் , ரம்யா கிருஷ்ணன், ஹேமா சவுத்ரி
கதை வசனம் -பேகன்
பாடல்கள் வாலி இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் -நாகேஷ்
மிகப்பெரிய நடிகர் நாகேஷ்....இயக்குனர் அவதாரம் எடுத்த படம் இது. எல்லா பெரிய ஹீரோக்களும் தங்கள் மகனையும் நாயகனாக்கி விட படாத பாடு பட்டார்கள். இதில் வென்றவர்கள் சிவாஜியும் முத்துராமனும், சிவகுமாரும் ,தியாகராஜனும் டி..ராஜேந்தரும்தான் . சிவாஜி மகன் பிரபுவும் முத்துராமன் மகன் கார்த்தி்க்கும் பின்னர் சிவகுமார் மகன்கள் சூர்யாவும் கார்த்தியும், தியாகராஜனின் மகன் பிரசாந்தும் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசனும் மிகப்பெரிய ரவுண்டு கட்டி புகழ் பெற்றனர்,
பாக்யராஜின் மகன் சாந்தனு, பாரதிராஜாவின் மகன் மனோஜ், சத்யராஜின் மகன் சிபி, விஜயகுமாரின் மகன் அருண்விஜய் , நாகேஷின் மகன் ஆனந்த் பாபு போன்றவர்கள் திறமை மிக்க வர்களாக இருந்த போதும் அவர்களுக்கு ஒரு படத்தை தனியாக தோளில் சுமக்கும் அளவுக்கு திராணி இல்லை. சில நல்ல படங்களில் அவர்கள் நடித்தனர் என்பதைத் தவிர .
ஆனந்த்பாபு உண்மையிலேயே நடனமாடத் தெரிந்த அற்புதமான நடிகர். அவர் தந்தை நாகேஷின்  அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாட்டு நடனத்தை யார்தான் மறக்கமுடியும் .... இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ( தொடைகள் வெள்ளை வெளேர் ) ஒரு பாலே நடனமாடி மகிழ்விக்கிறார்.
ஆனால் நடனத்துடன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டுவதிலும் உடல் மொழியிலும் அவர் தமது தந்தையை பின்பற்றவில்லை, அதை பிரபு மிக அழகாக செய்து தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இரட்டை வேடத்தில் நடித்தார். ராதாரவியிடம் வளர்ந்த ஒருத்தியை ஆனந்த்பாபு காதலிக்கிறார். பின்னர் ராஜீவின் மனைவியாக இன்னொரு ரம்யா கிருஷ்ணனை சந்தித்து மனம் வாடுகிறார். அவர் வேறு இவர் வேறு என்று புரிந்துக் கொள்வது கிளைமேக்ஸ். ராதாரவியின் வில்லத்தனம் எடுபடுகிறது. ராஜீவ் ஒரு ஜென்டில்மேன் நடிகர்.
இப்படத்தின் சிறப்புகளில் ஒருவர் ஹேமா சவுத்ரி மன்மத லீலை படத்தில் மனைவி அமைவதெல்லாம் பாட்டுக்கு கமலுடன் கையில் டிரான்சிஸ்டர் வைத்து நடிப்பாரே அந்த அழகான கன்னட நடிகை அவரேதான்....இப்படத்தில் அவருடைய கவர்ச்சி விருந்தும் உண்டு
படத்தில் கௌரவ வேடம் ஏற்ற நாகேஷ் எம்.எஸ்.வியின் குரலில் ஒருபாட்டு பாடுகிறார். எனக்குத் தெரிஞ்ச வரையிலே என்ற அந்தப் பாட்டு ஏனோ சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஜெயகாந்தன் எழுதி நாகேஷ் நடித்து எம்.எஸ்.வி பாடிய கண்டதை சொல்கிறேன் பாடல் மாதிரி வரவில்லை. படமும் பூட்டகேஸ்
----------------------------------------------------
14. புது வசந்தம் -1990
முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி, சுரேஷ், குமரிமுத்து, ஜெய்கணேஷ், விஸ்வம் சித்தாரா
பாடல்கள் வாலி,முத்துலிங்கம், எஸ்.ஏ.ராஜ்குமார்
இசை எஸ்.ஏ. ராஜ்குமார்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் விக்ரமன்
சீதை கெட்டுப் போகணும்னு நினைச்சிருந்தா அயோத்தியிலேயே கெட்டுப் போயிருக்கலாம். அசோக வனத்துல கெட்டுப் போக வேண்டிய அவசியம் இல்லை.
காதலோட புனிதம் தெரியாத உன்னோட வாழ்றதை விட நட்போட புனிதம் தெரிஞ்ச அவங்க நாலு பேரோட வாழ்றதை நான் பெருமையா நினைக்கிறேன்.....
இந்த இரண்டு வசனங்களே அடிப்படையாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் அருமையான திரைக்கதை, வசனம் இசை பாடல்களால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. முக்கியமாக ஆண் பெண் நட்பு புனிதமானது என்பதை இது நிரூபித்தது.
இன்றுநட்பு என்ற பெயரில் பல மோசடிகள் நடக்கின்றன. செலவு பண்ணத்தான் அவ ஒரு லூசைத்தேடுறா.. பொழுது போக்கவே அவனும் அவளைத்தேடுறான். ரெண்டு பேருமே ரொம்ப பொய்யா பழகுறா...எல்லாம் முடிஞ்சதும் நட்பு என்று கைக்குலுக்கி பிரியறா... இது கழுகு படத்தில் ஒரு பாட்டு.
இன்றைய காலத்தின் நட்பும் காதலும் பொய்யாகத்தான் இருக்கிறது. பலருக்கு இரண்டுக்குமான வித்தியாசமே தெரியாது. பெண்கள் பிடித்த ஆண்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். அவர்களின் எல்லை என்ன என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா என்ற கவிஞர் முத்துலிங்கத்தின் பாடலை இரண்டு முறை இப்படம் ஒலிக்கிறது. ஒன்று ஜேசுதாஸ் குரலில் இன்னொன்று எஸ்.பி.பி , பி,சுசிலா குரலில்
பாடுவதால் வாழுகிறோம்... சோகம்இல்லையே என்ற வரி பித்துக் கொள்ள வைத்திருக்கிறது..
படத்தை மீண்டும் முழுசாகப் பார்த்தேன். பத்து இருபது நிமிடம் காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டால் இன்றும் கூட எந்த ஒரு உலக சினிமாவுக்கும் ஈடான அருமையான தமிழ்ப்படம்தான்.
---------------------------------------------------------------------------
15 மன்னவன் வந்தானடி 1975
சிவாஜி கணேசன், நம்பியார், நாகேஷ், மஞ்சுளா, ஜெயசுதா
கதை, வசனம் - பாலமுருகன்
பாடல்கள் - கண்ணதாசன், வாலி இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் பி.மாதவன்
நாட்டைத் திருத்தும் நாகரீக கோமாளி தர்மராஜாவாக சிவாஜி கணேசன் கிறுக்குத்தனமாக நடித்த முதல் பகுதியை விட கோட் சூட்டுடன் டிப்டாப் மாப்பிள்ளையாக நம்பியாரை ஆட்டிப் படைக்கும் பி்ற்பகுதியில் மனம் கவர்கிறார். கொடிய முதலாளி நம்பியாரின் மகள் மஞ்சுளாவை காதலித்ததால் அடியாட்களால் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்படும் தர்மராஜா புதிய அவதாரம் எடுத்து ஃபாரின் ரிட்டன் மாப்பிள்ளையாக வந்து கலக்குவது கதை.
இப்படத்தில் சிவாஜியின் தங்கையாக ஜெயசுதா அழகாக நடித்திருப்பார். காதலித்து கணவனால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையுடன் வறுமையில் வாடும் போது சிவாஜி பிள்ளைக்கு ஒரு தாலாட்டு பாடுவார்
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கு...
கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்து தோடு
அன்னைக்கு வீடு இன்றுசின்னஞ்சிறு கூடு
மாமன் அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு....
உள்ளத்தை உருக்கும் இப்பாடலுக்கு இசை அற்புதமான தாலாட்டு கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்த்து செய்த மாயாஜாலம். மலர்ந்தும் மலராத பாச மலர் பாடலில் தங்கை பாடுவாள்...மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவான்......இதுவும் அப்படிப்பட்ட பாசப்பாடல். மஞ்சுளாவுடன் சிவாஜி பாடும்  காதல் ராஜ்ஜியம் எனது அங்கு காவல் ராஜ்ஜியம் உனது என்ற கவியரசரின் பாடலும் தித்தி்ப்பு., வாலியும் இப்படத்திற்கு 2 கொள்கைபாடல்கள் எழுதினார். நான் நாட்டைத் திருத்தப் போறேன் என்ற முதல் பாடலைவிட இவர்கள் நமது பங்காளிகள் என்ற இறுதிப் பாடல் சிறப்பு.
அய்யா சாமி ஆண்டவனே எனும் அழுகுரல் ஓயவில்லை
ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள் அடிதடி நின்றதில்லை
அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள் பறப்பதில் குறைச்சல் இல்லை  என்ற வரிகளும்
ஏழையின் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும் என்ற வரியும் சந்திராயன் காலத்தில் நினைவுகூரத்தக்கவை. அன்று இந்தியா ஒரு ஏழை நாடு. இன்று சந்திராயன் 2 சாதனையை நிகழ்த்தவில்லையா...
சிவாஜி கணேசன் என்ற அற்புதமான நடிகரின் பல்வேறு பரிமாணங்களில் இதுவும் ஒரு ரசிக்கத்தக்க படம்தான்.
----------------------------------------------------------
16. சொர்க்கம் நரகம் 1977
சிவகுமார், விஜயகுமார், நாகேஷ், படாபட் ஜெயலட்சுமி, பத்மப்ரியா
பாடல்கள் கண்ணதாசன் இசை சங்கர் -கணேஷ்
இயக்கம் -ஆர்.தியாகராஜன்
குடும்பத்தை சொர்க்கமாகவும் நரகமாகவும் மாற்றுவது பெண்ணின் கையில் தான் உள்ளது என்பதை விளக்கும் படம். இரண்டு தோழிகள். இருவருக்கும் திருணமாகிறது.படாபட் ஜெயலட்சுமி அன்பான கணவர் சிவகுமாரை டார்ச்சர் செய்து சந்தேகப்பட்டு சொர்க்கமான தனது இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார். பத்மப்பிரியா தனது குடிகார பொம்பளை பொறுக்கி புருஷனுக்கு சேவைகள் செய்து அவன் அன்பை வென்று திருத்தி நல்ல மனிதனாக மாற்றுகிறாள். நரகமான அவளது குடும்ப வாழ்வு சொர்க்கமாகிறது.
வீடு என்பது பெண்களால் ஆனது என்பதை இப்படம் கூறுகிறது. தெலுங்கில் தாசரி நாராயண ராவ் கதையில் இயக்கிய படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்ய்பட்டது.
இப்படத்தின் சிறப்பு சங்கர்கணேஷ் -கண்ணதாசன் காம்பினேஷனில் வந்துள்ள சூப்பர் பாடல்கள்.
இரண்டுகிளிகள் என்ற பி.சுசிலா பாடிய முதல் பாடல் கண்ணதாசனின் வைர வரிகளால் மின்னுகிறது.
தங்கப் பதுமை அங்கம் யாவும் தழுவும் கைராசி
தழுவித் தழுவி தன்னை மறந்து மயங்கும் மகராசி
----------
இங்கே உடல் இல்லை சாந்தி இல்லை
குங்குமம் பூசி அம்மா  பாவம் இவள் ராசி
------------என இருவேறு பெண்களின் வாழ்வை நாலே வரிகளில் சொல்லிவிடுகிறார். சுசிலாவின் குரல் தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா...
அடுத்த பாடல் மல்லுவேட்டிமடித்துக் கட்டும் மச்சான் ஒரு மயிலக்காளை அந்தக் காலத்தில் சக்கைபோடு போட்ட பாடல். இதே போல்  பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வம் எங்கே பாடலும் இனிமை.
டி.எம்.எஸ் குரலில் வரும் ஒரு சோகப்பாடல் அற்புதம்.
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு....
இப்படம் இன்றும் ரசிக்கும்படியாக இதில் நடித்த நடிகர்கள், குறிப்பாக சிவக்குமார் படாபட் பத்மப்ரியா ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கின்றன .நமது வீட்டில் வசிப்பவர்களுடன் பேதங்களின்றி அன்புடனும் அக்கறையுடனும் பேசக் கற்றுக் கொடுக்கிறது இந்தப் படம்.
--------------------------------------------------------
17  அவளுக்கென்று ஓரு மனம் 1971
ஜெமினி கணேசன், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், வி.எஸ்.ராகவன், காஞ்சனா, பாரதி
பாடல்கள் கண்ணதாசன்  இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் ஸ்ரீதர்
லலிதா, மீனா, கண்ணன் ,கோபால் என்ற நான்கு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் தமது பாணியில் இயக்கிய காதல் கதை. லலிதாவாக பாரதி முதல் காட்சியில் நீச்சலுடையில் தோன்றும்போதே மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்.
மலர் எது என் நெஞ்சம்தான் என்று சொல்வேனடி....காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி என்று பி.சுசிலாவின் இனிமையான பாடல் ஒலிக்க நீச்சல் உடைகளில் அழகிகள் நீருக்கு மேலேயும் அடியிலும் மிதக்கும் காட்சிகள்...ஆம் under water photography உத்தியில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் அந்தக் காலத்தில் செம ஹிட். இதே உத்தியைப் பயன்படுத்தி ஸ்ரீதர் பின்னர் தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் ஜெயஸ்ரீயை நீச்சல் உடையில் நீந்த விட்டு புதிய பூவிது பூத்தது என்றுஇளையராஜா பாடலை படமாக்கினார். இருப்பினும் அவளுக்கென்று ஒரு மனம் படத்தி்ல் பாரதியின் கவர்ச்சியும் நடிப்பும் இசையும் பாடலும் ஏ கிளாஸ். அதாவது அடல்ட்ஸ் ஒன்லி .
கேமரா கோணங்களைப் பயன்படுத்துவதில் ஸ்ரீதருக்கு தனி உத்தி உண்டு. இதிலும் அப்படித்தான் இப்பாடலில்  ஜெமினி அணிந்திருக்கும் கருப்பு கூலிங்கிளாசிலும் பாரதி நீந்துவதை காண முடிகிறது.
கயவனை நம்பி காதல் கடிதம் எழுதிய தோழியின் மானத்தை காக்க தன்னையே பறிகொடுக்கும் பாரதி கடைசியில் வில்லனை சுட்டுக் கொன்ற சிறைக்கு செல்கிறாள். அவள் காதலித்த கண்ணனையும் தோழிக்கே மணமுடித்து தியாக மெழுகுவர்த்தியாக நிற்கிறாள். ஜெமினி, பாரதி ஆகியோரின் ஆடைகள் இப்படத்தில் மிகவும் மாடர்னாக இருக்கின்றன. முத்துராமனும் அப்படித்தான் அழகான சட்டைகளை அணிந்துள்ளார். அவர் வில்லன் என்பதைத்தான் மனம் ஏற்கவில்லை. அத்தனை டீசன்ட்டான நடிப்பு. ஜெமினிக்கு வழக்கமாக தரப்படும் கனமான பாத்திரமில்லை. பாரதியே மொத்த படத்தையும் சுமக்கிறார். ஜெமினி்க்கு எஸ்பிபி குரலில் இரண்டு மூன்று பாடல்கள் உண்டு .ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது பாட்டும். மங்கையரின் மகராணி மாங்கனி போல் பொன்மேனி என்ற பாடலும் ரசிக்க ரசிக்க திகட்டவே இல்லை. எல்லாவற்றையும் விட எஸ்.ஜானகி குரலில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல் தேனிசை. காற்றில் ஆடும் மலை என்னை பெண்மை என்றது. காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது என்ற கவியரசரின் பாடல் வரிகளைப் போல் இன்று யாரும் எழுதுவதில்லை. பாடல்கள் செத்துக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம் அல்லவா....பழைய பாடல்களே ஆறுதல்அளிக்கின்றன.
--------------------------------------------------------------

ரசனை சினிமா 1

ரசனை சினிமா என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடர்

1சினிமா - மீனவ நண்பன் -(1977)
எம்.ஜி.ஆர். லதா ,வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ,சச்சு
பாடல்கள் வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம்
இசை எம்.எஸ்..விஸ்வநாதன்
இயக்கம் ஸ்ரீதர்
எம்ஜி ஆரின் வயதான தோற்றத்திலும் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து லதா வாணி ஜெயராமின் இனிமையான குரலில் பாடும் போது நம்பத்தான் தோன்றுகிறது. வழக்கமான எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடனங்களும் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் சற்று குறைவுதான். மீனவர் வாழ்வை சித்தரித்த படகோட்டி அளவுக்கு கூட கதையம்சமும் இல்லை .ஆனாலும் இப்படத்தை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் பார்த்தேன். காரணம் எம்ஜிஆர் மட்டுமல்ல பாடல்களை தந்த இசையமைப்பாளரும கவிஞர்களும்தான்
புலவர் புலமைப்பித்தன் எழுதி நேருக்குநேராய் வரட்டும் என்ற முதல் பாடலில் தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளுடன் எம்ஜிஆரின் கொள்கையை பொருத்திய விதம் அழகு....
வாலி எழுதிய பட்டத்து ராஜாவும் பாடலில்
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது. பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது.
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு இதுதான் பாடம் அய்யா
நான் என்ன சொல்வதுநாட்டினில் நடப்பதுகண் கொண்டு பாருமய்யா என கருணாநிதியின் வீழ்ச்சியை சித்தரிக்கும் அரசியல்நெடி ஆஹா பேஷ் பேஷ்....
ஜேசுதாஸ்-வாணிஜெயராம் குரலில் தங்கத்தில் முகமெடுத்து என்ற முத்துலிங்கத்தின் பாடல் ஒரு கிளாசிக் ஜெம்.
நேரம் பவுர்ணமி நேரம், பொங்கும் கடலோசை போன்ற பாடல்களும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.
ஸ்ரீதரின் முக்கோண காதல் கதைகள் பதித்த முத்திரைகள் இப்படத்தில் இல்லை. எம்ஜிஆர் என்ற தனிநபரின் ஆளுமையும் லதாவின் கவர்ச்சியும் சில அழகான பாடல்களும்தான் இப்படத்தில் காலம் கடந்து எஞ்சியிருக்கின்றன.
அது சரி ஏன் இதுபோன்ற பழைய படங்களை பார்க்காமல் விடுகிறோம். .....பல சாதனையாளர்கள் இணைந்து படைத்ததை ருசிப்பதில் என்ன தன்முனைப்பு நமக்கு?
ஒரு எம்ஜிஆர் ரசிகனாக பார்த்தேன் .ரசித்தேன்
---------------------------------------------
2 காளி ( 1980)
ரஜினிகாந்த், விஜயகுமார், சீமா, படாபட் ஜெயலட்சுமி, சுபா, ரீனா, மேஜர் சுந்தர்ராஜன், வெ.ஆ.நிர்மலா
பாடல்கள் கண்ணதாசன் ,வைரமுத்து
திரைக்கதை மகேந்திரன் ,ஒளிப்பதிவு அசோக்குமார்
இசை இளையராஜா இயக்குனர் ஐ.வி. சசி
அக்கா மற்றும் அவர் இரண்டு குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட காளி தனது அக்காவின் கணவரையும் குழந்தைகளையும் கொடூரமாக கொன்று விட்ட வில்லனை பழிவாங்கும் கதைதான். நியாயமாக இப்படத்தின் கதாநாயகன் விஜயகுமார்தான் ஆனால் அவருடைய மார்க்கெட்டின் இறங்குமுகம்...ஒரு நடிகராக மட்டுமின்றி சூப்பர் ஸ்டாராகவும் ரஜினியின் ஏறுமுகம் டைட்டில் ரோலை ரஜினிக்கு தந்துவிட்டது. ஆனால் வாழு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் பாடல் ரஜினியை பாடவிடாமல் விஜயகுமாரையே பாட வைத்து விட்டனர். அப்போது ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் பிரச்சினை இருந்தது .ரஜினியின் வளர்ச்சியால் எம்ஜிஆர் அவருக்கு தொல்லை கொடுத்ததாக சொல்வார்கள். சில மஞ்சள் பத்திரிகைகள் ரஜினியை மனநலம் பாதித்தவராக சித்தரித்தன. ரஜினியும் அப்போது நிலை தடுமாறி இருந்தார். அந்தப் பாடலில் கண்ணதாசன் குசும்பாக ஒரு வரி எழுதினார்...
உன் பேரையும் என்பேரையும் ஊரார் சொன்னால் இந்திரனும் சந்திரனும் நடுங்கிட வேண்டாமா ......சந்திரன்,,ராமச்சந்திரன்...எம்.ஜி.ராமச்சந்திரன் என்றெல்லாம் கட்டுடைப்பு செய்துக் கொண்டே போகலாம்....ஆனால் ரஜினி பாடியிருந்தால்தான் இந்த பிரச்சினை....பாடியது கையில் அதிமுக முத்திரை குத்திய விஜயகுமார்....அதனால் பிரச்சினையாகவில்லை.
இந்தப் படத்தில் வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதினார். அடடா அது எந்தப் பாடல் எனத் தேடினால் காளி உத்தமசீலி என்றொரு பக்தி பாடல் .அடி ஆடு பூங்குயிலே. அழகழகா பூத்திருக்கு போன்ற மற்ற பாடல்களை எல்லாம் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார்.
மகேந்திரன் திரைக்கதை அசோக்குமார் ஒளிப்பதிவு என பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சூப்பர்ஸ்டார் உதயமாகி வரும் காலங்களின் பதிவாக இந்தப் படம் உள்ளது. பார்க்கத் தானே போறே இந்த காளியோட ஆட்டத்தை என்று இன்றும் ரஜினி வசனம் பேசுகிறார். அந்த காளி தான் முள்ளும்மலரும் படத்தில் வேறொரு நடிப்பின் உச்சத்திற்கு போனார். அதே காளி என்ற பெயரிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டது.இதே படம் தெலுங்கிலும் தயாரானது. விஜயகுமார் வேடத்தில் சிரஞ்சீவி ரஜினியுடன் நடித்தார்.
இப்படத்தை பார்க்கத் தோன்றுவது அன்றைய ரஜினியின் ஸ்டைல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் ஆரம்பகால இசை ஜாலங்களுக்காகத்தான்.
------------------------------------------------------
ரசனை சினிமா 4
செந்தூரம் ஜெகதீஷ்.
உத்தரவின்றி உள்ளே வா 1977
ரவிச்சந்திரன், நாகேஷ், வெ.ஆ.மூர்த்தி , காஞ்சனா, சச்சு
கதை வசனம் -கோபு
தயாரிப்பு சித்ராலாயா - ஸ்ரீதர்
பாடல்கள் -கண்ணதாசன்
இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்
ரவிச்சந்திரனின் அற்புதமான படங்களில் ஒன்று. கோபு கதை வசனம் எழுதி என்.சி சக்ரவர்த்தி இயக்கிய இத்திரைப்படம் முழு நீள நகைச்சுவை படம். தயாரிப்பாளர் ஸ்ரீதர் தான்.
ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய மூவரும் ஒரே பெண்ணை காதலிக்கும் கதை. நாயகி காஞ்சனா. இந்தப்படத்தில் மெல்லிய சேலையில் லோ ஹிப் கட்டி காஞ்சனா மிக அழகாக இருப்பார்.
மூன்று பேரும் கதாநாயகியை நினைத்து பாடும் ஒரு டூயட் பாடல் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா.....இந்தப் பாடலை தொடக்கத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவார். முதலில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடனமாடுவார். ஆனால் அவருக்கு வாய்ஸ் கிடையாது. பல்லவியும் முதல் சரணமும் எல்,ஆர்.ஈஸ்வரியே பாடிவிடுவார். ஆனால் மூர்த்திக்கு புதர் மறைவில் காஞ்சனாவுக்கு முத்தம் கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது.
நாகேஷ் தொடாமலே டூயட் பாடுவார். ஒரு சங்கீத வித்வானைப் போல் நடையுடை பாவனையை அற்புதமாக வெளிப்படுத்துவார் நாகேஷ்... அவருடைய பகுதிக்கு டி.எம்.சௌந்திரராஜன் குரல்
பூமியில் மானுட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண....என்று பாடி நாகேஷ் சென்று மறைவார். இதுவரை பரதநாட்டிய உடையிலும் சேலையிலும் நடித்த காஞ்சனா அடுத்துமாடர்ன் பெண்ணாக அழகான சல்வார் குர்தா அணிந்து வருவார். ரவிச்சந்திரனும் மிக ஸ்டையான உடையுடன் இளமை பொங்க தானேதான் காஞ்சனாவுக்குப் பொருத்தமான ஜோடி என்பதைப் போல் அழகாக நடனமாடுவார்....அவருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் இளமை பொங்கும் குரல்...
கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ...என்று ரவிச்சந்திரன் பாடியாடும் அழகுக்காகவே அந்தப் படத்தை பித்து பிடித்தவன் போல் சிறுவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். ரவிச்சந்திரனுக்கு வெறும் எஸ்.பி.பி ஹம்மிங் மட்டுமே கொடுத்த மற்றொரு பாடலான காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாட்டிலும் ரவிச்சந்திரனின் உடல்மொழி அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது.மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி என்ற பாட்டும் ரசிகர்களை கொள்ளை கொண்டது.
--------------------------------------------------------
5 ராஜபார்ட் ரங்கதுரை 1973
சிவாஜிகணேசன். ஸ்ரீகாந்த், டி.கே.பகவதி, வி.கே.ராமசாமி,நம்பியார், சசிகுமார், பூர்ணம் விசுவநாதன், சுருளிராஜன், செந்தாமரை
உஷாநந்தினி, ஜெயா, குட்டி பத்மினி, மனோரமா
கதை வசனம் -பாலமுருகன்
பாடல்கள் -கண்ணதாசன் இசை எம்.எஸ்,விஸ்வநாதன்
இயக்கம் -பி.மாதவன்
சிவாஜி கணேசன் படங்களில் இரண்டு அம்சங்கள் நிச்சயம். சோகம், பந்தம் . இவை இரண்டுமே இந்தப் படத்தில் தூக்கலாக இருக்கின்றன. உலகிலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான். அதை மீண்டும் இப்படம் நிரூபிக்கிறது. ஏழை ராஜபார்ட் ரங்கதுரை என்ற நாடக நடிகராக தோன்றும் சிவாஜி தனது தம்பியின் அன்பைப் பெற தவிக்கும் படம். தம்பியோ படித்து பணக்காரர்கள் சகவாசத்தால் அண்ணனின் தியாகத்தை மறக்கிறான். அப்போது சிவாஜி பாடும் அம்மம்மா தம்பி என்று நம்பி ....பாடலில் கண்ணதாசன் உச்சத்தைத் தொட்டிருப்பார்.
கண்ணில் நீர்ப்பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகின்றது
அது பாசம் அன்றோ இது வேஷம் அன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்குப் பிள்ளையல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ
இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் திருப்பூர் குமரனாகவும் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டாகவும் நடித்திருப்பார் .டூ பீ ஆர் நாட் டூ பீ என்ற வசனம் பேசும் சிவாஜியின் நடிப்பு ஈடு இணையற்றது.
ஜின்ஜினிக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி என்ற பாடலும் அபாரமானது.
பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்துக் கதை உள்ளத்துல இருக்கு
என்றும் இது மேல் புறத்தில் கசப்பு கீழ்புறத்தில் இனிப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு என்றும் தன் வாழ்க்கையை பாடி வைத்த அந்த நாடகக் கலைஞன் கண்ணை விட்டு மறையவே இல்லை. நலிந்தநாடகக் கலைஞ்ர்கள் மற்றும் அழியும் நிலையில் இருந்த நாடகக் கலையை இந்தப் படம் சித்தரிப்பதால் இன்றும் இது காலம் கடந்த பொக்கிஷமாக திகழ்கிறது.
------------------------------------------------------
6 மேயர் மீனாட்சி 1977
ஜெய்சங்கர் , கே.ஆர்.விஜயா, விஜயகுமார், ஸ்ரீப்ரியா, ரோகிணி, வி.கே.ராமசாமி, சோ, சுருளிராஜன், மனோரமா, மனோகர்
மூலக்கதை சுகி. சுப்பிரமணியம் பாடல்கள் கண்ணதாசன், வாலி
இசை எம்.எஸ்.விஸ்வநாதன், இயக்கம் -மதுரை திருமாறன்
சாதாரண குப்பை பொறுக்கும் மீனாட்சி ஊர் பெரிய மனிதர் வி.கே.ராமசாமியின் அசல் முகத்தை அறிந்து மேயராகப் போட்டியிட்டு அவருடைய வில்லத்தனங்களுக்கு முடிவு கட்டுகிறாள். நீங்கள் விரும்பும் வரை மேயராக இருப்பேன். இல்லாவிட்டால் மீண்டும் குப்பை பொறுக்கப்போய் விடுவேன் என்று ஆபிரகாம் லிங்கன் தனது செருப்புத் தைக்கும் குலத்தொழில் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியது போல் கூறுகிறாள். அத்துடன் படம் முடிகிறது. இந்தப் படத்தின் ஹீரோ கே.ஆர்.விஜயாதான். அவருடை புசுபுசு உடம்புக்கு குப்பை பொறுக்கும் பெண் என்பதை நம்பமுடியவில்லை. ஜெய்சங்கர் இருந்தாலும் இரண்டு மூன்று சண்டைகள், பாடல்களுடன் சரி...பாடல்கள் இந்தப் படத்தின் சிறப்பம்சம். திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி ( ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்) கண்டேன் கல்யாணப் பெண் போன்ற கோலம் ( எஸ்.பி.பி- பி.சுசிலா ) எவளோ ஒரு பெண்ணாம் அது நானில்லையாம் ( வாணி ஜெயராம் ) கொடி விட்ட சிறுமுல்லை மலரே ( வாணி ஜெயராம் ) ஆகிய பாடல்கள் மீணடும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமை.
ஸ்ரீப்ரியா பலாத்காம் செய்யப்பட்டு இறந்துவிடுவா்ர. ரோகிணி குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் . சிறு வயதில் சென்னை மேகலா திரையரங்கில் இந்தப் படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். இப்போதும் பார்த்தேன். படம் போரடிப்பது போல் தோன்றினாலும் பாடல்கள் மனதுக்குள் ரீங்காரமிடுகின்றன. கூடவே கே.ஆர்.விஜயா என்ற புன்னகை அரசியின் நடிப்பும்.
----------------------------------------
7 உனக்காக நான் -1976
இந்தியில் அமிதாப் பச்சன் வளர்ந்துக் கொண்டிருந்த நேரம்...அப்போது ராஜேஷ் கன்னா சூப்பர் ஸ்டாராக இருந்தார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர். ஆனந்த் ,நமக் ஹராம் போன்ற படங்கள் நினைவில் நிற்பவை. நமக் ஹராம் கதையில் மூன்றாவதாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் வில்லன் நடிகர் ருசா முராத் நடித்திருப்பார். அவர் வில்லன் நடிகராக பல பிட்டு படங்களிலும் பின்னர் நடித்தவர். இப்போதும் மதம் சார்ந்த அரசியல் கருத்துகளை ஊடகங்களில் பேசி வருபவர். தமிழில் அந்த பாத்திரத்திற்கு நாகேஷ் உயிர் கொடுத்தார். மூலக்கதை குல்சார் . இந்தியில் வசனமும் பாடல்களும் அற்புதம்.
என் மரணத்திற்குப் பின்னர் என் வீட்டை சுத்தம் செய்யும் போது உங்களுக்கு பாதி அருந்திய மதுவுடன் சில கோப்பைகள் கிடைக்கலாம். சில உடைந்த மனோரதங்கள் கிடைக்கலாம்... என்றெல்லாம் கவி்த்துவமாக வரிகள் விழும்.
தமிழில் இப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்திருந்தனர். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுத சிவி ராஜேந்திரன் இயக்கினார். லட்சுமி சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். காதல் மன்னன் ஜெமினி்க்கு ஜோடியே இல்லாத படம். தொழிற்சங்க பிரச்சினையால் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் வர்க்க ரீதியாக பிரிந்து நிற்கும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது.
தமிழில் பாடல்களை கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்,விஸ்வநாதன் இசையமைத்தார்.
ராமு ஐ லவ் யூ....ராஜா ஐ லவ் யூ என்ற நண்பர்களின் பாடலை டி.எம்.எஸ், ஜேசுதால் ஆகிய இரண்டு பெரிய பாடகர்கள் இணைந்து பாடினர். இத்தகைய தருணம் தமிழ் சினிமா இசையில் ஒரு அபூர்வம்தான்.
இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் தூரம் அதிகமில்லை என்று ஆரம்பித்து
கம்பனிடம் சோழன் கண்ட சுகம்....கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்....இது காவிய காலத்து அன்பு மனம்,பசும் பாலையும் நீரையும் சேர்த்த விதம் என்றெல்லாம் கவியரசரின் கற்பனை வான்நோக்கி உயர்ந்த பாடல் அது....
அதே போல் ஜேசுதாஸ் தனித்துப் பாடும் பாடல் இறைவன் உலகத்தைப் படைத்தானாம் ......மறக்கமுடியாத தேனமுது.
மரணப் படுக்கையில் இருக்கும் கவிஞர் நாகேஷ். அவர் எழுதிய பாடலை ஜெமினி பாடுவதாக காட்சியமைப்பு
உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போல
பட்டம் போல் அவர் பளபளப்பார்
பட்டினியால் இவர் இளைத்திருப்பார்
என்றும்,
இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன். வறுமை முழுவதும் தீ்ர்ந்த பின்னே மறுபடி ஒருநாள் நான் வருவேன்
என்றும் கண்ணதாசனின் வரிகள் கண்ணீரைத் தொட்டு விடும்.
நினைவில் நிற்கும் படங்களில் உனக்காக நான் சிறப்பானதுதான்.
----------------------------------------------------
ரசனை -சினிமா  8
சிரித்து வாழ வேண்டும் -1974
எம்ஜிஆர், லதா, காஞ்சனா, நம்பியார்
பாடல்கள் வாலி ,புலமைப்பித்தன்
இசை எம்.எஸ்,விஸ்வநாதன்
இயக்கம் -எஸ்.எஸ்.பாலன்
இந்தியில் ஒரே இரவில் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக்கிய படம் ஜன்ஜிர் (zanzeer) சல்மான் கானின் தந்தையான சலீம் மற்றும் பிரபல பாடலாசிரியரான ஜாவேத் அக்தரும் இணைந்து கதை வசனம்எழுதிய படம். அந்தக் காலத்தில் ஷோலே, தீவார் என இந்த ஜோடி வசனம் எழுதிய படங்கள் இந்தியில் சக்கை போடு போட்டன. இநதியாவின் மிகச்சிறந்த திரைக்கதைவசனகர்த்தாக்களாக சலீம் ஜாவேத் ஜோடி பேசப்பட்டது.( இரண்டாவது இடத்தில் நம்ம பாக்யராஜ் சார் பேசப்பட்டதும் உண்டு)
ஜன்ஜிர் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய எம்ஜிஆர் இந்தப் படத்தை எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் நடித்தார். இந்தியில் அமிதாப்பின் நண்பராக பிரான் நடித்த முஸ்லீம் வேடத்திலும் தமிழில் எம்ஜிஆரே நடித்தததால் அவருடைய இரட்டை வேட படங்களின் வரிசையில்இந்தப் படமும் இடம் பெற்றது.
முஸ்லீம் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் ரகுமான். அவர் தோன்றும் முதல் காட்சியில் ஒரு பிரமாதமான பாடல் இடம் பெற்றது. பாடலாசிரியர் வாலி.
மேரா நாம் அப்துல் ரகுமான்....இந்தப் பாடலின் வரிகள் நினைவில் பசுமையாக உள்ளன.
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நிறைந்தான் ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பை சொல்வான்
தாய் தந்தையை கொன்றவனை ராமு என்ற கதாநாயகன் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பழிக்குப் பழிவாங்கும் கதைதான் . ஆனால்அற்புதமான ஆக்சன் படம். இந்தியில் ஜெயா பச்சன் நடித்த வேடத்தில் தமிழில் லதா கூடுதலான கவர்ச்சி காட்டி நடித்தார். கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன் என்ற பாடலிலும் பொன் மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ பாடலிலும் லதாவையும் வாணி ஜெயராம் ,எஸ்.ஜானகி குரல்களையும் ரசிக்கலாம்.
இப்படத்தில் வி்ல்லன் ராமுவின் பெற்றோரை சுடும் போது பீரோ மறைவில் மறைந்து பார்க்கும் சிறுவன் ராமுவின் கண்களில் தெரிவது வி்ல்லனின் கையில் உள்ள ஒரு பிரேஸ்லட் .அதில் குதிரை வீரன் முகமூடி அணிந்து இருக்கும் உருவம் அவன் மனதில் பதிந்து இரவின் கனவுகளில் ஆட்டிப்படைக்கும். அச்சமூட்டும் கொலைகாரனின் முகமூடி குதிரை வீரன் படிமம் சிறுவயதில் பார்த்த இந்தப் படத்தில் காட்சியாய் விரிந்த போது எம்ஜிஆர் என்ற சூப்பர் ஹீரோவுக்காக மனம் ஏங்கத்தொடங்கி விடும்.
எம்ஜிஆரின் வெற்றி இதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்ததில்தான் இருந்தது. தனக்குப் பொருத்தமானவற்றை தனக்கேற்ற விதத்தில் மாற்றியவர். இந்தப் படம் எம்ஜிஆரின் சிறப்புக்கு இன்னொரு சான்று.
-----------------------------------------------------
9 அன்னக்கிளி -1976
சிவகுமார் , சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த்,, எஸ்.வி.சுப்பையா, படாபட் ஜெயலட்சுமி
கதை ஆர்.செல்வராஜ்
திரைக்கதை வசனம் பாடல்கள் - பஞ்சு அருணாச்சலம்
இசை -இளையராஜா
இயக்கம் -தேவராஜ் மோகன்
இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்த படம் அன்னக்கிளி. இப்படம் வெளியான போது நான் ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதல்நாளிலேயே படம் பார்க்க கெயிட்டி திரையரங்குக்கு போனேன். காரணம் சுஜாதா. . எனது கருப்பு வெள்ளை நாயகிகளில் சுஜாதாவுக்கு தனி இடம் உண்டு.
அன்னக்கிளி படம் பார்க்க போன போது கெயிட்டி திரையரங்கில் பத்து பேர் கூட இல்லை. படம் ஓடத் தொடங்கியதும் முதல் காட்சியில் சிவகுமார் கிராமத்திற்கு வாத்தியார் பொறுப்பேற்க வருவார் .நீங்க வருவது தெரியாதே கடிதம் போடலீயா என விசாரிப்பார் சுப்பையா. கடிதம் போட்டேன் என்பார் சிவகுமார். அப்போது தபால்காரன் அந்த கடிதத்துடன் வருவான். மெலிதான நகைச்சுவையும் வாழ்வின் அபத்தத்தையும் விளக்கும் இக்காட்சியில் இருந்தே படம் கவரத் தொடங்கிவிட்டது. அன்னக்கிளியே ஒன்னைத் தேடுதே என்ற முதல் பாடல் கிராமிய இசையுடன் எஸ்.ஜானகியின் குரலில் ஒலித்த போது மனம் படத்தில் முழுதாக ஒன்றி விட்டது.
படம் பார்க்க பார்க்க இசை வசீகரித்தது. சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேண்டும் என்றபாடலில் சந்தோஷமும் சோகமும் இழையோடும். மச்சானைப் பார்த்தீங்களா பாட்டில் திரையரங்கில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து ஆடத் தொடங்கினர். டி.எம்.எஸ். குரலில் மீண்டும் அன்னக்கிளியே ஒன்னைத் தேடுதே என்று சோகமாக இழைத்த போதும் பி.சுசிலாவின் உள்ளம் உருக்கும் அக்கக்கோ எனும் கீதம் ஒலித்த போதும் படம் பிரமாதம் என பட்டது.மீண்டும் மீண்டும் அதே படத்தை அடுத்தமூன்று நாட்களுக்கு பார்த்தேன், கூட்டம் கொஞ்சம்கூடியிருந்தது. ஒருவாரம் கழித்து மீண்டும் போன போது டிக்கட் கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். இசைஞானி இளையராஜா என்ற மகத்தான கலைஞனை தமிழகம் கொண்டாடத் தொடங்கி விட்டது. இப்படத்தின் வெற்றிக்கு பஞ்சு அருணாசலத்தின் நேர்த்தியான திரைக்கதையும் பாடல்களும் ஒருமுக்கியக் காரணம். அதே போல் சிவகுமாரின் பண்பட்ட நடிப்பை பலமுறை இப்படத்தில் ரசிக்கிறேன். ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு பிறகு சுஜாதாவுடன் சிவகுமார் பேசும் காட்சியில் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு அணைத்துக் கொண்டு சுஜாதா சுதாரி்த்துக் கொண்டு வாத்தியாரய்யா போய் விடுங்கள் என்று கதறும் போது இப்படம் காவியமாகிவிட்டது. இன்று வரையிலும் இது ஒரு காவியம்தான் தமிழ்சினிமாவுக்கு.
-----------------------------------------------------

ரசனை புத்தகம் 2

ரசனை என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடரின் இரண்டாம் பாகம்

கு. அ.தமிழ் மொழியின் ஹைகூ கவிதைகள்
சிறகின் கீழ் வானம்
புதுச்சேரி தந்த பெண் கவிகளில் ஒருவர் கு.அ.தமிழ்மொழி .தமிழில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் முக்கியப் படைப்பாளி. இத்தொகுப்பு அவருடைய பதின் பருவத்தில் வெளியானதாக இருக்கலாம் என்பதை பின் அட்டையி்ல் உள்ள  புகைப்படம் விளக்குகிறது. தச்சன் இதழுக்கு அவர் அளி்த்த பேட்டி, அவருடைய புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள் பட்டியல், முன்னுரைகள், அணிந்துரைகள் என இத்தொகுப்பு ஒரு களஞ்சியமாக விளங்குகிறது.
சரி கவிதைகள்....?
ஹைகூ வடிவம் எழுத சுலபமானது. ஆனால் அதை கவிதையாக்குவதுதான் கடிதனமானது. தெறிப்புகள் போல் சிந்தையில் உதிப்பதையெல்லாம் பதிவு செய்வதல்ல கவிதை. பாஷோவும் பூஷணும் ஷிகியும் ஜப்பானில் ஹைகூ எழுதிய போது இயற்கையை பாடுவதை ஒரு நிபந்தனையாக ஏற்றார்கள். நீண்ட மோனத்தில் தவமிருக்கும் ஓணான், சிறகிசைக்கும் பட்டாம்பூச்சிகள், அரிசி இல்லாத தட்டில் பிரதிபலித்த நிலவின் காட்சி, வெட்டுக்கிளியின் பாடல் , தானாக வளரும் புற்கள், குளத்தில் குதிக்கும் தவளை என அவர்கள் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கினார்கள். ஏழு அசைகளில் எழுதிவிட்டால் அதுஹைகூ ஆகி விடாது. அது கவிதையாக பரிணமிக்கும் தருணங்கள் அபூர்வமானது.
தமிழ் மொழியின் பல ஹைகூக்கள் தெறிப்புகள்தாம். நிறைய பெரியாரிய சிந்தனைகள், அரசியல் கேலிகள், விமர்சனங்கள், கருத்தியல்கள் அதில் தெறிக்கின்றன. ஒரு பெண்ணின் சிந்தனைப் பரப்பில் நகையையும் புடவையையும் தொலைக்காட்சி சீரியல்களையும் சமையலையும் கோவிலையும் தாண்டி இத்தகைய சிந்தனைகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கவைதான்.
ஆனால் இத்தொகுப்பில் கவிதைகளாகவும் மலர்ந்திருக்கின்றன சில வரிகள்....
ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்     என்ற ஹைகூ கவிதை ஒரு தெறிப்புதான். அப்துல்ரகுமான் போல் புத்தகங்களே எங்கள் குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள் என்ற அளவுக்குக் கூட இது பரிணமிக்கவில்லை. ஆனால் ஆறுமுகனிடம் பன்னிரு கைகள் கேட்கும் வரம் கவித்துவமானதே. அதை விட "கண்களைப் பார்க்கிறேன் கண்ணாடியில்" என்ற இன்னொரு சிறு கவிதை அட்டகாசமாக இருக்கிறது.
ஒற்றைப் பனையில்
கிளியின் பொந்து
பருந்திற்கு அஞ்சி
 என்ற கவிதை கிட்டதட்ட ஹைகூவின் முழுமைக்கு நெருங்கி வருகிறது. அதே போல்
எண்ண முடியா பொத்தல்கள்
கருப்புப் போர்வைக்குள்
விண்மீன்கள்
சிறப்பாக இயற்கையைத் தொட்டு கவிதையாக பூத்திருக்கிறது.
நான் வளர்கிறேன் சிறிதானது சட்டை என்றும் நேரம் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது கடிகாரம் என்றும் மேலும் சில வரிகளையும் இத்தொகுப்பில் ரசிக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------
கவிஞர் புவியரசு-வின் கவிதைகள்
1ஒருமுக்கிய அறிவிப்பு
2 கையொப்பம்
வானம்பாடி தந்த கவிகளில் முக்கியமானவர் புவியரசு. கோவையில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து வந்திருக்கிறேன். காரணம் ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தொகுப்பின் முதல் பதிப்பில் நண்பர் சூர்யராஜன் சுட்டிக் காட்டிய ஒரு நல்ல கவிதை.....அந்தக் கவிதையை வாசகர்களும் அனுபவிக்க முழுமையாக தருகிறேன்....
இருக்கும் வெளிச்சத்தை என்ன செய்வது ?
காசிக்குப் போய் கங்கையில் மூழுகி
கர்மத்தைத் தொலைக்கலாம்.
விழித்திருந்து விழித்திருந்து
பெற்று வளர்த்துப் போற்றிய
வெளிச்சத்தை எங்கே தொலைப்பது?
கொஞ்ச நாளாகவே
இதன் வெப்பம் தாங்காமல்
தலை பற்றி எரிகிறது.
உறக்கம் சாம்பலாய்ப் போயிற்று
கண்ணைத் திறந்தால்
அதுவே தெரிகிறது
வாயைத் திறந்தால்
அதுவே வருகிறது
கொஞ்ச நாளாய் எனக்குப் பயமாக இருக்கிறது.
என்னை எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள்.
ஒரு தீர்த்தக்கரை இருந்தால் சொல்லுங்களேன்.
தலைமுழுகித் தொலைக்கிறேன்.
மற்ற வானம்பாடி கவிஞர்களிடமிருந்து புவியரசுவை தனித்துக் காட்டுவது இது போன்ற கவிதைகள் தாம். இவை புதுக்கவிதையின் அகநானூறு. ஆங்கிலத்தில் spiritual poems வரிசையில் கலீல் கிப்ரான், ஜலாலுதீன் ரூமி, ஹபீஸ், காலிப் போன்றவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள். தமிழில் புவியரசுவிடமும் எப்போதாவது அப்துல் ரகுமானிடமும் இந்த சாயல்கள் இருக்கின்றன. எனது கவிதைகளையும் மேற்கத்திய பாதிப்புகளில் இருந்து விடுவித்து கிழக்கு தேச மகான்களின் சொற்களுடன் ஒப்பிடுவதில் பேரானந்தம் பெற்றிருக்கிறேன். தமிழில் ஓஷோவை மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வரியும் இத்தகைய கவிதையனுபவமாக விரிகிறது. புவியரசுவும் நிறைய ஓஷோ நூல்களை மொழிபெயர்த்தார். முதன் முதலாக செந்தூரம் இதழ் மூலம்தான் ஓஷோவை தெரிந்துக் கொண்டதாக ஒரு முறை திருப்பூரில் சந்தித்த போது கூறியிருந்தார்.
புவியரசுவின் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் வாசிக்கிற போது பல வரிகள் கவர்கின்றன. சில கவிதைகள் காலாவதியாகி விட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
பிடித்த வரிகள் சில....
உள்ளில் நிழல் மூட்டிய நெருப்பு
உண்மையை நோக்கி நாக்கை நீட்டும் பசியோடு...
------------.
மருண்ட மான்களின் கனைப் பொலியும்
குளி்ர் நிழலும் குறிஞ்சிப்பூ மணமும்
இடையரின் புல்லாங் குழலிசையும்
பொய்யாய் பழங்கனவாய்ப் போயின
(ஒரு முக்கிய அறிவிப்பு -புவியரசு வெளியீடு விஜயா பதி்ப்பகம் கோவை)
----------
இது மண் சாலை அன்று
ஒரு காலத்தில்
நீரோடிக் கொண்டிருந்த உனது நதி
நீ அமெரிக்காவுக்கு
சம்பாதிக்கப் போயிருந்த போது
இதை விற்றுவிட்டார்கள்
----------
எருக்கஞ்செடிக்கும் பூப்பூக்கும்
உரிமை உள்ளது
--------
பூ
காமத்தின் கவித்துவப் படிமம்
காமத்தின் விகசிப்பு
காதல் அதன் நறுமணம்
-------
பலத்த காற்றுக்காகக் காத்திருக்கும்
பழுத்த இலைகளின்
பைத்தியக்காரத்தனம்
எனக்கு இல்லை
----------------------------------------------------------------------------------------
சோழமா தேவியின் கவிதைகள்
வானமே முதலடி
இவரைப் பற்றி அதிகம் தெரியாது. பழைய புத்தகக் கடையில் கிடைத்த இவருடைய முதல் கவிதைத் தொகுப்பை இவர் பெயரால் ஈர்க்கப்பட்டு வாங்கினேன். வெற்றிப்பேரொளி, சல்மா போன்றோர் வாழ்த்தியுள்ளனர். படித்தால் பெரும்பாலும் காதல் கவிதைகள். ஆரம்ப கால எழுத்தின் அத்தனை பலவீனங்களும் மிக்க தொகுப்புதான். இதுபோன்ற படைப்புகள், தொகுப்புகள் பெண் என்பதைத் தாண்டி விமர்சிக்கப்படும் போது பின்வரிசைக்கு தள்ளப்படலாம். ஆனால் இதனையும் ஒரு பொருட்டாக மதித்து இங்கு ரசனையில் குறிப்பிடுவதற்கு காரணம் சோழமா தேவி போன்ற பெண்கள் எழுத்தின் பக்கம் தீவிரம் கொள்ளவேண்டும் என்றுதான்.
கண்டது கனவாக இருந்தால்
மறுபடி காணப்பெற்றால்
அப்பொழுது அந்தப் பார்வையை அடையாளம் காண்பேனா?
அள்ளி அணைப்பேனா
அமைதியாய் போவேனா
என்ற காதல் உயிர்ப்பு கவிதையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போது சோழமா தேவி எழுதலாம் என்றுதான் தோன்றுகிறது.
இதே போல் படையல் என்ற கவிதை கற்பு, பெண்ணின் கணவர் மீதான ஈர்ப்பு குறித்து சிலாகிக்கிறது. ஒரு பெண் குரலுடன் இதை பார்ப்பதே நல்லது.
எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு பகுதி இந்த கவிதை நூலில் கிடைத்தது
பயம்
வெட்கம்
பண்பாடு
கலாச்சாரம்
ஒழுக்கம்
பற்றி வருத்தப்பட நேரமில்லாமல்
வசியப்பட்டு நிற்கிறேன்
அந்த இன்பம் தந்த இம்சையில்
கூச்சப்பட்ட மாலை
மறைந்தே போனது.
------------------------------------------------------------------------------
ஓவியம் -நன்றி லதா ரகுவின் முகநூல் பக்கத்தில் இருந்து....
-------------------------------
தி.பரமேசுவரியின் கவிதைகள்
தனியள்
ஒருசில இலக்கிய சந்திப்புகளில் பரமேசுவரியை சந்தித்து இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் ஆசிரியையாக இருக்கிறார். ஒரு முறை எனக்கு கிடங்குத் தெரு நாவல் குறித்து தொலைபேசியில் விமர்சனம் செய்தார்.
தமிழறிஞர் மா.பொ.சியின் பேத்தி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பர்கள் சூர்யராஜனும் அண்மையில் மறைந்த மு. நந்தாவும் மா.பொ.சியின் பேச்சுக்கு ரசிகர்கள். நான் அவரை அதிகம் அறியவில்லை என்று வெட்கப்படுகிறேன்.
பரமேசுவரியின் கவிதைகள் மற்ற பெண் கவிகளின் எழுத்தை விடவும் தீவிரம் கொண்டவை. கருத்துகளிலும் சரி சொற்களிலும் சரி அவருடைய எழுத்து எளிதில் கவனத்தை கவரக்கூடியதாக இருக்கிறது.
மீன்களை மட்டுமே ஓவியம் தீட்டும் ஒருத்தி கடற்கன்னியாக மாறிவிடும் ரஸவாதத்தை ஒரு கவிதை பேசுகிறது.பாம்பு பிடாரனின் மகுடிக்கு மயங்கும் நாகத்தை ஒரு கவிதை சொற்சித்திரமாக்குகிறது. வீட்டுக்குள் புகுந்து ஸ்நேகமான ஒரு நாகம் பற்றிய கவிதையும் நுட்பமானது.
துரோகக் கத்திகள் அறுத்தெடுத்த சிரமேந்தி ஆடத் தொடங்குகிறேன்  ஊழிக்கூத்து என்று காளி அவதாரமும் எடுக்கிறார்.
அமர்ந்திருந்த பறவை பறந்துவிட்டது
அசைந்துக் கொண்டிருந்தது
கிளை
என்றும் கவிதை படைக்க முடிகிறது இவரால்,
இதே போல் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெருங்கதவின் முன் நின்றுக் கொண்டிருக்கிறேன் என்ற படிமமும்,
கடவுளாய் உணர்ந்ததுண்டு சில கணங்களுக்கு என்று கூறிவிட்டு, கடவுளும் சாத்தானும் ஒன்றுதானோ என சந்தேகிக்கும் போதும்
பரமேசுவரியின் கவித்துவ சுவைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. ஆனால் இந்த அன்புத் தோழிக்கு அப்சல் குருவின்மேல் என்ன அக்கறை என்றுதான் புரியவில்லை.
பிரக்ஞை வெளியீடு
044-24342771
------------------------------------------------------------------------------

அகிலா ஜ்வாலாவின் கவிதைகள்
பெயர் தெரியாத பூவின் வாசம்
தலைப்பை பார்த்து சினிமா பாட்டு மாதிரி இருக்கிறது என்று கருதாதீர்கள். புத்தகத்திற்கு தலைப்பு வைத்தவர் அகிலாவின் மனம் கவர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான். முன்னுரையும் எழுதித் தந்தார். ஆங்கிலப் பேராசிரியை என்று அகிலா பற்றி தெரிகிறது. தினமலர் போன்ற இதழ்களில் ஜ்வாலா என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். பேஸ் புக்கிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகிலா பெயரிலும் ஜ்வாலா பெயரிலும் தேடிப் பார்த்தேன் .கிடைக்கவில்லை .நண்பர்களுக்கு தெரிந்தால் அவருக்கும் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

தொலைத்தது என்னில் எனில்
தேடிக் கொண்டிரு உன்னை
திமிங்கலமாய் விழுங்கி உன்னை
என்னுள் புதைத்துக் கொண்ட பெருங்டல் நான்
என்ற கவிதையை நா.முத்துக்குமாரும் சிறப்பானது என குறிப்பிட்டிருக்கிறார்.
எங்கே ஒளித்து வைக்க உன் அன்பை என்று கேட்கும் கவிஞர் நிலவை ஒளிக்கத் தெரியாத பௌர்ணமி வானத்தை தனது முகமாக பாவிக்கும் இடம் நயம்.
மழை பற்றி கவிதை எதற்கு
மழையே கவிதைதான் என்றும் நறுக் குகிறார்.
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை சொல்கிறேன். என்னைப் பற்றி நான் பலமுறை உணர்ந்த ஒருவிஷயம்தான்.
யாரேனும் வெறுத்தால் வருத்தமாயிருக்கிறது
இத்தனை நேசத்தை தொலைக்கிறார்களே என....
-------------------------------------------------------------------------------
சங்கர ராம சுப்பிரமணியன் கவிதைகள்
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்
தமிழின் சமகால கவிஞர்களில் சங்கர ராம சுப்பிரமணியன் அதிகமாக கவனிக்கப்படும் இளம் படைப்பாளிகளில் ஒருவர். கவிதைகளில் இவரது தனித்துவம் தெரிகிறது. ஆனால் எந்த ஒரு கவிதையும் மகத்தான கவிதை என்று கூறமுடியாத குறைப்பிரசவங்களாகவே காட்சியளிக்கின்றன. சொற்களின் மீது மயக்கம் தெளிதலே நல்ல கவிதை. நவீன பிம்பங்களை சொற்களாக்கி கவிதைகளாக்க முயற்சித்து தோற்றவர்கள் ஏராளம். இத்தொகுப்பின் தலைப்பு முதற்கொண்டே நான் ரொம்ப நவீன கவியாக்கும் என்ற எகத்தாளத்துடன் உள்ளன கவிதைகள்.மிகச்சில கவிதைகளை மட்டும் ரசிக்க முடிந்தது.
ரயில் கடல் என்றொரு கவிதை....ரயிலை முதன் முறையாக பார்ககிற மகளுடன் பயணிக்கிற தந்தை பற்றிய கவிதை...
இணைபிரியாத தண்டவாளங்கள்
கடலுக்குள் உறைந்திருக்கும் கடல்களின் பேச்சை
கடல்-ரயில் தன் இருட்டில் தடதடத்து உரைப்பதை
முழுமையும் என் மகளிடம் சொல்ல முடியாது
என்று என்னவோ சொல்ல வருகிறார்...சொல்லவில்லை.
கிளி ஜோஸ்யம் என்ற கவிதை மட்டும் ஓரளவுக்கு கவிதையாக முயற்சிக்கிறது.
பின் மலர் 1, 2 என்ற இரண்டு கவிதைகள் மரணததைப் பற்றி பேசுபவையாக தலைப்புக்கு பொருந்தி வருகின்றன. இரண்டு கவிதைகளிலும் மரணம் ஒரு பூனையை போல் கூரை வழியாக வருவதும், தன்னை எரித்து அஸ்தியைக் கரைத்த பின் குருவியாவேன், குதிரையாவேன் என்று சொல்வதும் அழகானவை. இது போன்ற கவிதைகளை எழுதக்கூடிய ஒருநல்ல கவிஞனின் சுமாரான கவிதைத் தொகுப்பு இது.
--------------------------------------------------
ஸ்ரீவள்ளியின் கவிதைகள்
பொன்கொன்றை பூக்க வந்த பேய் மழை
ஏப்போதோ புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம். படிக்கவில்லை. எடுத்து படிக்க ஆரம்பித்த போது ஸ்ரீவள்ளியின் கவிதைகள் தவறவிடக் கூடாதவை என்ற எண்ணம் மேலோங்கியது. யார் இந்த ஸ்ரீவள்ளி எனத்தெரியாது. மனுஷ்யப்புத்திரன், பெருமாள்முருகன், அரவிந்தன் என அவரை அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.
மன நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற போனதாக முன்னுரையில் சொல்கிறார். ஆனால் எழுதித்தான் கடக்கவேண்டும் என்று அசோகமித்திரன் கூறியதை நினைவில் இருத்தி தனது கவிதை புனையும் நிலைப்பாட்டை அடைந்ததாகவும் கூறுகிறார்.
என் நினைவுகள் என்னுடையவையாக இல்லாத போது
எதை நான் நினைவு கூர்வது என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்ரீவள்ளி
வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது
பசிய கிளையோடு ஒரு மரம்
உலகமா முடிந்துவிட்டது என அதன் மேல் ஏறி விளையாடுகிறது ஒரு அணில்
என்ற வரிகள் துன்பத்தையும் வீழ்ச்சியையும் கடக்க விளையும் நம்பிக்கைகள்.
பிரிவின் உருவம் ஒரு சிறந்த காதல் கவிதையாக பரிணமிக்கிறது. எப்போதும் எதுவும் முதல்முறை அல்ல கவிதையும் மிகச்சிறந்த பதிவு.
உன் சுட்டுவிரலால் என்னைத் தொட்டாய்
அப்போது நான் ஒரு பிரபஞ்சம் ஆனேன்
பால்வீதியாக விரிந்தேன்.
கோளாக ஒரு பாதையில் ஒழுங்குபட்டேன்
என்னை நானே சுற்றிக் கொண்டு கிறுகிறுத்தேன்
எரிகல்லாகச் சஞ்சரித்தேன்
விண்மீனாக வெடித்துப் பற்றியெரிந்தேன்
என்ற வரிகள் கிளர்ச்சியூட்டுகின்றன. கவிதையின் பால் மனம் லயிக்க வைக்கின்றன. தேர்ந்த சொல்லழகும் கருத்தும் கைகோர்க்கின்றன.
மறு கல்லில் எத்தனை கடவுள்கள் ஏறினாலும்
எப்போதும் தாழ்ந்கே இருக்கிறது
பாவங்களின் தராசுத் தட்டு என்றும் ஸ்ரீவள்ளியின் கவிதை கவர்கிறது. தீர்த்தயாத்திரை ஒரு முழுமையான அனுபவத்தை தருகிறது.சந்திப்பு என்ற கவிதை மற்றொரு இனிய காதல் கவிதை.
என்னோடுதான் இருக்கிறாய், பிறகு போன்ற கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழுக்கு ஒரு நல்வரவு ஸ்ரீவள்ளி. அவர் நிறைய எழுத வேண்டும்.
வெளியீடு சஹானா sahanapublication@gmail.com
---------------------------------------------
யாழன் ஆதி கவிதைகள்
யாருமற்ற சொல்
தமிழின் அழுத்தமான பதிவுகளைக் கொண்ட கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் யாழன் ஆதி.2012ம் ஆண்டு வெளியான இத்தொகுப்பு மட்டும் கையில் இருக்கிறது. மற்ற தொகுப்புகளை படிப்பதிலும் ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.
இத்தொகுப்பில்  உள்ள கவிதைகளைப் பின் தொடர்ந்தால் ஆதியின் கவிமனத்தின் கதவுகள் திறக்கின்றன. சில கவிதைகளில் அவை பிரம்ம ராட்சசனாக அச்சுறுத்துகின்றன.
வானத்து சந்திரனின் நீலத்தை கூற வந்து.கவிஞா் எங்கே போகிறார் பாருங்கள்.
சிறுபிராயத்தில் என் வகுப்புத் தோழி அணிந்திருந்த பாவாடையின் அதே நீலம்.
எனது ஊரும் ஆறும் மிகச்சிறந்த கவிதை. அவர் வாழும் ஆம்பூர் நகரை மையமாகக் கொண்டது.கடைசி கொருக்கையையும் சாகடிக்கும் தோல் வியாபாரம் வீட்டில் தண்ணீரை மாசுபடுத்தியதை கூறுகிறார்.
கால்கழுவ ஒரு தண்ணீரையும் சோறாக்க ஒரு தண்ணீரையும்
குளிக்க ஒரு தண்ணீரையும் வேதியியல் ஆய்வகத்தன்மையில்
வைத்திருக்கிறது வீடு.
மெல்ல நிறம் மாறும் எங்கள் தோட்டத்து மலர்கள்
மணமற்ற அவற்றில் கசிகிறது
தோல் வாசம்.
சில மென்மையான காதல் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு.
வெப்பத்தை தடவி வருகின்ற கண்களின் வெண்படத்தில்
ஒரு சுவரொட்டியைப் போல ஒட்டிச் செல்கிற மனம் கொண்டவராய் தம்மை அடையாளம் காட்டுகிறார் யாழன் ஆதி.
மழைப் பயணம். அப்படியே ஆகக் கடவது , ஆகிய இரண்டுகவிதைகளையும் தமிழ்இலக்கிய உலகம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
பின்னுரையில் கவிஞர் கூறுவது போல் எல்லாவற்றையும் விட முக்கியமானது வாழ்க்கை.
--------------------------------வெளியீடு நீர்க்கண்ணாடி ஆம்பூர்  9597908481
வண்ணை சிவா கவிதைகள் -நதியின் பயணம்
எப்போதோ பத்து ரூபாய்க்கு போட்ட ஒரு ஹைகூ புத்தகத்தை விமர்சித்து இப்ப என் மானத்தை ஏன் வாங்கனும் என சிவா முணுமுணுப்பது தெரிகிறது. கையில் கிடைத்ததை விடுவேனா... ஹைகூ என்ற பெயரில் சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுகிறார். சில கவிதைகள் புன்னகைக்க வைப்பதுடன் சரி. எப்படி இது போன்ற தொகுப்புகளை மதிப்பீடு செய்வது என்றே தெரியவில்லை .எனக்கு இந்த தொகுப்பை விட சிவா முக்கியமானவராக இருக்கிறார். இலக்கியத்தின்பால் அவருக்கு இருக்கும் தொடர்ந்த ஈடுபாடு, பங்கேற்பு தற்போது அவர் எழுதும் கவிதைகளில் காணப்படும் வளர்ச்சி என சேர்த்தே தான் இந்த தொகுப்பை மதிப்பிட வேண்டும் அல்லவா....
என் கைகளை குறுக்கே போட்டு சிவாவை தடுத்துவிட விரும்பவில்லை. அவரே சொல்வது போல்
கைகளை குறுக்கே நீட்டினால்
நின்று போகுமோ நதியின் பயணம்?
இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகவிதை
இருட்டில்  தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன் தீப்பெட்டியை
--------------------------------------------------------------
சஷ்டி பிரியா கவிதைகள்
கனவு தேவதையே
கவிஞர் மீராவின்  கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் பாணியில் சிறிய காதல் கவிதைகள். அந்த அளவுக்கு இல்லை.
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவியாக இருந்த ம.சஷ்டி பிரியா திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு போட்ட முதல் தொகுப்பு இது.தொடர்ந்து அவர் எழுதுகிறாரா....ஓய்ந்துவிட்டாரா எனத் தெரியவில்லை. பெரும்பாலானவை காதல் கவிதைகள். படிக்கிறவயதில் இளம் மனதுக்குள் எழும் சலனங்கள். இவற்றை கவிதையாக்குவதற்கான இலக்கியப் பயிற்சியோ அனுபவமோ சொல்வளமோ இல்லாத நிலையிலும் பலர் இப்படித்தான் கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். தன் பெண் மன ஆசைகளை கூறாமல் தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு எழுதுவதால் இரவல் உணர்ச்சிகளுடன் கவிதைகள் ஒட்டாமல் நிற்கின்றன. என்றைக்குஉணர்வு பூர்வமான கவிதையை சஷ்டி பிரியா எழுதுகிறாரோ அதுவரை காத்திருப்போம். இத்தொகுப்பி்ல் சில சிறிய தெறிப்புகள் உள்ளன. இதில் ஒன்று...
காற்று என்னுடன் பேசும் மொழிகளை
என்னால் அறிய முடிகிறது
நீ என்னுடன் இருக்கும் போது
-மலர்க்கண்ணன் பதிப்பகம் moneyezhilan@gmail.com
----------------------------------------------------------

Saturday 27 July 2019

சந்திப்பு -கவிஞர் எஸ்.அறிவுமணி

திருச்சியில் கவிஞர் அறிவுமணியை சந்தித்தேன். கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டும் மிகுந்த அன்புடன் வரவேற்று பேசினார். நல்ல மனம் மிக்க மனிதர் அவர். அவருடைய கவிதை வரிகளில் ஒன்று சோற்றுக்கூடையை பசியோடு சுமப்பவர்கள்... இதனை பெரியார்தாசன் தமது கூடட்ங்கள் அனைத்திலும் மேற்கோள் காட்டுவார்.
அறிவுமணி சென்னை புரசைவாக்கத்தில் இருந்தார். பணி நிமித்தமாக திருச்சிக்கு மாறினார். 300 மைல் தூரம் வந்துட்டதால் நான் செத்துப் போனதாக கூட ஒரு பெண் கவிஞர் யாரிடமோ பேசினார் என வருத்தப்பட்டார். அவருக்கு போன் போட்டு ஹலோ நான் அறிவுமணி ஆவி பேசுகிறேன். இன்று இரவு உங்களை தாக்க காலன் வரப்போகிறான் என்று சொல்லுங்கள் மணி இதற்காக போய் வருந்தலாமா...என்றேன்.
வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் .கவிதைகளுக்காக சிறுபத்திரிகை நடத்த வேண்டும். கவிஞர்களுடன் பேச வேண்டும் ,எப்போதும் கவிஞனாக மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுமணியின் கனவுகள் இன்று வரை நிறைவேறவில்லை. வயது 66 ஆகிவிட்டதாக கூறினார். முதுமை ,மரண பயம் குடும்பப் பிரச்சினைகள் அவர் மனத்தை வாடடுகின்றன.. பெரியார்தாசன், பிரபஞ்சன், அப்துல் ரகுமான், இன்குலாப், நந்தா என தாம் நேரித்த மனிதர்களின் மரணத்தை எண்ணி கலங்குகிறரா். முமேத்தா, சூர்யராஜன், வண்ணை வளவன், விஜயகுமார், ( நிமோஷிணி) போன்றவர்களுக்கு வயதாகி விட்டதாக வும் வருந்துகிறார். ஆர்.மோகனரங்கன் போன்ற காணாமல் போன சிலரைப் பற்றியும் விசாரிக்கிறார். தன் சொந்த பிரச்சினைகள் ஒருபுறம் அழுத்தும் அழுத்தத்தால் ஓரிருமுறை கண்கலங்கியதையும் பார்த்தேன். முடிந்தவரை நம்பிக்கையான சொற்களையே பேசி சமாதானம் செய்து திரும்பினேன். மாலையில் ரயிலில் சென்னை திரும்பும் போது அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு .....உங்கநல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ஜெகதீஷ் என வாழ்த்தி வைத்து விட்டார். எனக்கு அழுகை வந்தது.

Sunday 14 July 2019

ரசனை -புத்தகம் 1

முகநூல் பகுதியில் senthooram என்ற எனது பக்கத்தில் புத்தகங்கள் பற்றியும் சினிமா பற்றியும் எழுதி வருகிறேன். இதில் புத்தகம் குறித்த கட்டுரைகள்
1-5 
ரசனை -புத்தகம்
செந்தூரம் ஜெகதீஷ் 

1 -ஸ்ரீலெஜா வின் கவிதை நூல்- கமுகம் பூ 
குழித்துறை ஸ்ரீதேவிகுமார் தாவரவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் திருமதி ஸ்ரீலெஜாவின் முதல் கவிதைத் தொகுப்பு இது...அவருடைய இயற்பெயர் தெரியவில்லை. 
முன்னுரை எழுதியுள்ள பொன்னீலன் அய்யா அவர்கள், ஸ்ரீலெஜாவின் கவிதைகளில் காமாட்சிப் பாட்டி நீலியோடு நட்புகொண்டுஉறங்குவதையும் ஆள் உயர கருநாகமும் நியாயத்திற்கு கட்டுப்பட்டுநிற்பதையும் சிலாகிக்கிறார்.
கவிதைகள் தென்தமிழகத்தின் கவிமொழியுடன் கலந்த பெண் மொழியுடன் படிக்க அழகாகஇருக்கின்றன. குமரி மாவட்டத்தின் ஓணம் பண்டிகை, 
அம்மியில் அரைத்த விழுதுடன் 
ஆற்று மீன் குழம்பு
உரலில் இடிக்கப்பட்ட சிகப்பரிசி பொடியுடன் 
தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்த
குழாய் புட்டு
போலத்தான் இருக்கின்றன இவரது கவிதைகள்..எளிய மனிதர்கள், பால்ய காலம் , இயற்கை மீதான காதல் என்று புறவயம் சார்ந்தே சிந்திக்கிறார். கவிதையின் ஒரு கிளை புறம் நோக்கி வானுயர விரிந்தாலும் இன்னொரு வேர் அகம் நோக்கி ஆழ்மனதுக்குள் பேசப்படாத ரகசியங்களை நோக்கி பாயும் போது இவருடைய கவிதைக் களத்திற்கு ஒரு புதிய எழுச்சி கிடைக்கும் என்று நம்பலாம். வாழ்த்துகள் ஸ்ரீலெஜா.
தொடர்புக்கு - இ மெயில்.. sunjaysree@gmail.com
----------------------------------------------------------------------
2  சுதா உலக ஒளியின் கவிதைகள் -ஓர் அறிமுகம்
எழுது எழுது 
விழியோரம் நீரிருக்கும் வரை
இதழ்க்கடையோரம்
சிரிப்பிருக்கும் வரை
எனக்கென எனக்கென
நெஞ்சில் நினைவிருக்கும்வரை
நினைவில் நான் அகலும் வரை

சுதாவை சந்தித்தது கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. கையில் வைத்திருந்த ஜெயகாந்தனின் இறந்த காலங்கள் சிறுகதைத் தொகுப்பை 28 சி பேருந்தின் படிக்கட்டில் தொற்றிய நிலையில் என்னிடமிருந்து வாங்கிய ஒரு கல்லூரி மாணவி அப்போதுஅவர். தொடர்ந்து புத்தக வாசிப்பு பகிர்தல்கள் நட்பாக மாறியது.வழக்கமாக காதல் கண்றாவி இல்லாத நட்பாக இன்று வரை சுதாவுடனான நட்பு நீடிப்பது வியப்புதான். ஆரோக்கியமான சிந்தனைகளும் கபடமற்ற மனமும் இருந்தால் ஆண் பெண் நட்புக்குத் தடையே இல்லை என்று இன்று வரை உணரச் செய்தவர் சுதா.
சுதா கவிதைகள் எழுதுவார். எங்கள் செந்தூரம் இலக்கிய வட்டம் கவியரங்குகளிலும் இதர கல்லூரி மேடைகளிலும் அவர் கவிதைகள் வாசிப்பதை அறிந்திருக்கிறேன். கவிதைகளைக் குறித்தும் நவீன கவிதையின் இலக்கும் போக்குமம் குறித்தும் அவரிடம் விவாதிக்கக் கூடாது. மனத்தில் பட்டதை அழகான எழுத்தால் வடிக்கத் தெரிந்தவர் . 
பெண்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெண் கவிஞர்களின் கவிதைகளே விற்பனையாகின்றன. சிலர் உடலை மையப்படுத்தி பாலியல் உணர்வுகளை வடிப்பதை கவிதையி்ல் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.அது குறித்த விமர்சனத்திற்கு இடம் இது அல்ல. சுதாவின் கவிதைகள் தொலைநோக்கும் இலக்குகளும் கொள்கைகளும் கொண்டவை. கருத்தியல் உலகின் சுதந்திரமான ராணி அவர்.
சுதாவை கவிதைகள் எழுதி புத்தகமாக வடிக்கக் கூறிய போது உடனே ஆர்வத்துடன் அதற்கான காரியத்தில் இறங்கிவிட்டார். அதற்கு காரணம் இத்தனை நாளாக எழுதி வைத்ததெல்லாம் யாராவது வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வுதான். மற்றபடி பணம் புகழ் போன்றவற்றுக்கு அவர் மயங்க மாட்டார்.
எழுத்தின் மீதான விமர்சனமும் படைப்பின் மீதான தராதரமும் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் சுதாவின் உள்ளுணர்வு புரியும். உண்மையே விட உயர்ந்த தரம் வேறில்லை.
சுதாவின் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்கள், துன்பங்கள் நேர்ந்துள்ளன. அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் தன் மகனின் நினைவாக வசந்தன் நூலகம் நடத்தி வருகிறார். ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் அறிவையும் போதிக்கும் தூய்மையான பணியை மேற்கொண்டு வருகிறார்.
அவருக்குத் துணையாக நிற்கும் உலக ஒளி பாராட்டுக்குரியவர். 
இந்த தொகுப்பின் மூலம் சுதா உலக ஒளியின் உலகம் தனது வாசலை திறக்கிறது. நண்பர்களுக்கு இங்கு இடம் உண்டு. படைப்புகள் குறித்து நீங்கள்  அவரிடம் விவாதிக்கலாம். இதன் மூலம் அவர் படைப்புகள் மேலும் சிறக்கலாம்.
அன்புடன்
நீரும் பாறையும் -கவிதைகள் 
சுதா உலக ஒளி
முதல் பதிப்பு - மார்ச் 2019
வெளியீடு 
செந்தூரம் பதிப்பகம்
சிருஷ்டி 
6 புரசை நெடுஞ்சாலை
சென்னை-600007 
----------------------------------------------------------------------
3. வாணி கபிலனின் 2 கவிதை நூல்கள்
கடலோடும் காதல் 
வாழ்க்கை
போதிக்கிறார்கள் யானைக்கு 
பறப்பது சுகமென்று
காலில் சங்கிலி போட்டு விட்டு
என்று எழுதத் தெரிந்தவர்தான் வாணி கபிலன். வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் சென்னை கவிஞர். ஆனால் கவிதை என்பது இரண்டு மூன்று வரிகளில் முடிந்து விட வேண்டும் என்று இவரும் மற்றவர்களைப் போல் தப்பாக நினைக்கிறார். நகுலனின் இரு நீண்ட கவிதைகளையும் பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும் படித்திருக்கலாம். 
பெண்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள்.ஆர்வத்துடன் புத்தகமும் போட்டு விடுகிறார்கள், சில நூறுபிரதிகள் எப்படியோ போய்விடுகின்றன. கவிதை குறித்த விமர்சனங்களோ கவனமோ அவை பெறுவதில்லை. முக்கியப் படைப்பாளிகள் பலருக்கு அது ஒரு பொருட்டேயில்லை. யாரோ எதையோ அசட்டுத்தனமாக எழுதிக் குவிக்கிறார்கள் என்பதே பொதுபுத்தி. எனக்கும் அப்படித்தான் ஒருகாலத்தில் தோன்றியது.எனது எண்ணத்தை மாற்றியவர் கோவை ஞானி அவர்கள். பெண்களிடம் உங்கள் இலக்கிய படிப்பு, படைப்பாற்றல் போன்றவற்றை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் குடும்பம், வீடு, குழந்தைகள் என்ற வட்டத்தில் இருந்து எழுத வருவதே பெரிது. எழுதட்டும். எழுத விடுங்கள். தீவிரமான ஈடுபாடு இருந்தால் அவர்களாகவே தங்கள் படைப்பின் பலவீனத்தை அறிந்து பலப்படுத்திக் கொள்வார்கள் என்றெல்லாம் ஞானி அய்யா பேசியது மனதுக்கு பிடித்திருந்தது. 
ஆனால் இத்தகைய தொகுப்புகளை யாரேனும் கவனப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்கு ரசனை ஒரு வாய்ப்பாக இருக்கிறது. 
வாணி கபிலனின் கடலோடும் காதல் தொகுப்பு இயற்கை கடற்கரை சார்ந்த காட்சிகளைப் பதிவு செய்கிறது. 
கடற்கரை மணலில் 
கையளவு குழியில்
தேங்கிய மழை நீர்
தீர்த்தது தாகத்தை
காக்கைக்கும் நாய்க்கும் என்று எழுதுகிறார் வாணி கபிலன். இதே போல் தனது முதல் தொகுப்பான வாழ்க்கையிலும் சில அழகான தெறிப்புகள் தென்படுகின்றன.
மௌனம் சம்மதம் என
மகிழ்ந்து கொள்கிறாய்
மறுப்பைக் கூறவும் 
மறுப்பது புரியாமலே என்றொரு கவிதை ஒரு நற்சான்று.
விவாணி பதிப்பகம்
vivanipbs@gmail.com
-------------------------------------------------------------
செந்தில் வஸந்த் கவிதைகள்
வஸந்த் செந்தில் என்ற பெயரில் எழுதுபவரும் இவரும் ஒருவர்தான் என்று நினைக்கிறேன், மருத்துவப் பணியாற்றி வருகிறார். இ்த்தொகுப்பு 2014ம் ஆண்டில் பரிதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு டிஸ்கவரி புக் பேலசில் நோ ஸ்டாக் என்று காட்டுகிறது. வாசகர்களே தேடிக் கொள்ளட்டும் என விட்டு விடுகிறேன்
இக்கவிதைகளுக்கு மா.அரங்கநாதன் முன்னுரையும் கந்தர்வன் பின்னுரையும் எழுதியுள்ளனர். மலை பற்றிய கவிதையை மிகச்சிறந்த கவிதை என்கிறார் மா.அரங்கநாதன்.
ரிஷிகளைப் போல
பிரம்மாண்ட மௌனம் 
என்று மலையை வர்ணிக்கிற போதே கவிதை நமது மனதுக்குள் அமரத் தொடங்கி விடுகிறது அதே மௌனத்துடன்.....
எங்கிருந்தும் மலை பார்க்கலாம்
மலையிலிருந்து எங்கும் பார்க்கலாம் என்ற வரிகளும் சிறப்பு. 
பூவை செங்குட்டவன் எம்ஜிஆருக்கு புதிய பூமி படத்தில் ஒரு பாடல் எழுதினார். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்ற அந்தப் பாடலில் உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே என்று குறிப்பிட்டு எழுதினார். மலை என்றாலும் கோபுரம் என்றாலும் உயர்வுதான் அதன் சிறப்பு. உள்ளத்தையும் மலைபோல் உறுதியாகவும் உயர்வாகவும் வைத்திருக்கலாம்.
கந்தர்வனுக்குப் பிடித்த கவிதை ஆம்புலன்ஸ் பயணம் ...ஒரு மரணத்தை எதிர்நோக்கிய புதுமாப்பிள்ளை விழித்தால் கால்களை இழந்து புது மனைவியின் தோளில் சாய்ந்து நடக்க நேரிடக்கூடிய சோகத்தை இக்கவிதை விவரிக்கிறது. நீ கண் திறந்தால் என்ற கடைசி வரி பதற வைக்கிறது.
"படித்தபின் வெகுநேரம் அவதிக்குள்ளாக்கும் கவிதை " என்று கந்தர்வன் கூறுவது உண்மைதான்.
அது தவிர  அப்பாவின் அஸ்தி என்ற கவிதையும் எனக்குப் பிடித்திருக்கிறது. அப்பாவின் மார்பு எலும்பைப் பார்த்து கதறி அழும் மகனாக நான் உணர்ந்த துக்கத்தை மீண்டும் ஏற்படுத்தியது இக்கவிதை. நான் எட்டி உதைத்த மார்பு என கவிஞர் கூறுகிறார். 
மேலும் பல நல்ல வரிகளை ஆங்காங்கே கோடிட்டு வைக்க முடிகிறது. ஒரு நல்ல தொகுப்புதான். ஆனால் விலையும் பக்கங்களும் அதிகம்.அப்போதை 200 ரூபாய் போட்டிருக்கிறார்கள். இப்போது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------




Thursday 4 July 2019

புத்தக வாசிப்பு

புத்தக வாசிப்பு சிறுவயது முதலே பழகிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபிள்ஸ் போன்றவை பாடத்திலேயே இடம் பெற்றிருந்தன. அது தவிர ராமாயணமும் மகாபாரதமும் தீராத காதலை ஏற்படுத்தின. வளர் பருவத்தில் நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் அறிமுகமாகி கவனத்தில் பதிந்தனர். பின்னர் புதுமைப்பித்தனும் பாரதியும் ஆட்டிப் படைத்தனர். தொடர்ந்து மணிக்கொடி எழுத்தாளர் வரிசை, தீபம், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த ஆதவன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என தீவிரம் அடைந்த வாசிப்பு ஆங்கில கல்வி தந்த பயிற்சியால் உலக இலக்கியங்களின் பக்கமும் திரும்பியது. மார்சல் பிரவுஸ்ட், மிச்சல் பூக்கோ, மரியோ வர்காஸ் லோசா, காப்ரியல் கார்சியா மார்க்யூஸ் , தஸ்தயவஸ்கி.காப்கா, ஹென்றி மில்லர் தல்ஸ்தோய் என பரந்து விரிந்த வாசிப்பு ஒரு கட்டத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமும் ஓஷோவிடமும் வந்து சிக்கிக் கொண்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்த போது கம்பர் கைகொடுத்தார். கம்பனின் தமிழ் என்னை வேறு எதையும் சிந்தி்க்க விடாமல் செய்தது. கம்பராமாயண கூட்டங்களில் பங்கேற்றேன். சில காலம் உடல் நோய், மன உளைச்சல், வாழ்வின் பரிதவிப்புகள் காரணமாக புத்தகத்தைத் தொடாத நாட்கள் அதிகரித்தன. ஆனால் அதிலிருந்தும் மீண்டு மீண்டும் வாசிப்புக்கு என்னை உட்படுத்திக் கொண்டு வருகிறேன். வாசித்த புத்தகங்கள் ஏராளம். ஒரு குறிப்பு கூட அதைப்பற்றி பதிவு செய்யாமல் இருப்பது உறுத்தலாகிறது. அதை விட வாசிக்காமல் இருக்கும் புத்தகங்களின் சுமை....என் ஆயுள் முடியும் முன்பு வாசித்தும் எழுதியும் விட்டால் நிம்மதி 

Monday 29 April 2019

படித்தது- ராஜ சுந்தரராஜனின் நாடோடித் தடம்

அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ராஜசுந்தர் ராஜனின் நாடோடித் தடம் புத்தகத்தை வாங்கி வந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.
புத்தகம் ஒரு சுயசரிதை போலும நாவல் போலும் கட்டுரை போலும் மாறி மாறி இழுத்துச் செல்கிறது.
இந்த நூலின் மையம் பெண்கள்- பெண் சுகத்தைத் தேடிய பயணங்கள் என்று கூறலாம். ஒரே வரியில் சொன்னால் தமிழின் best erotic litretaure

கான்புர், குண்டக்கல், மும்பை, டெல்லி,கோடம்பாக்கம், பரோடா என பல இடங்களில் திரிந்து பலவகைப் பெண்களைப் புணர்ந்து பெண்ணின் தடம் தேடிய அந்த நாடோடி வாழ்க்கையுடன் சொந்த வாழ்க்கையின் இல்லறம், இலக்கியம், புரிதல் மனிதநேயம் போன்ற பலவகை அம்சங்களுடன் ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய உலகை நமக்கு அறிமுகம் செய்கிறது. ஜி.நாகராஜன் தொடங்கி வைத்த அந்த ஒற்றையடிப் பாதையில் பயணிக்கிறது இவரது புத்தகம். 
பாலியல் சார்ந்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் போதுமானதாக இல்லை. மிகவும் மென்மையான முறையில் தி.ஜானகிராமன், குபரா போன்ற எழுத்தாளர்கள் எழுதினார்கள். பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களை அதை நாகரீகப்படுத்தினார்கள். ( உட்கார் என்றால் படுக்கிற ஜாதி )
சாரு நிவேதிதாவின் பேண்டீசுக்குள் விரல் விடும் ராசலீலா எழுத்தும் முழு அளவிலான இலக்கியத்திற்கான போதாமையுடன் தான் உள்ளது.
பிரபஞ்சன் அற்புதமாக முயன்றார். ஆனால் அவராலும் ஒழுக்கத்தின் லட்சுமணக்கோட்டை தாண்ட முடியவில்லை. சு.வேணுகோபாலன், ஜீ.முருகன், வாமு கோமு போன்ற சில படைப்பாளிகள் இதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். 

ஆனால் ஒரு ஹென்ரி மில்லர், எரிக்கா ஜங், அனாய்ஸ் நின், டி.ஹெச்.லாரன்ஸ் மரியா வர்கோஸ் லோசா போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் தரத்தில் தமிழில் எரோடிக் இலக்கியம் இல்லை. எனது கிடங்குத்தெரு நாவலின் சில பக்கங்களில் அந்த முயற்சி இருப்பதை காணலாம்

தமிழ்ப் படைப்பாளிகள் பெரும்பாலோர் தமிழ்ப் பண்பாடு தவறாதவர்கள். ஒழுக்க சீலர்கள், மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத உத்தம சீலர்கள் .அல்லது அப்படி வேஷம் போட்டு திரிபவர்கள்
முழுமையாக தன்னை அவிழ்த்துப் போட்டு தனது உடல் மனம் சிந்தனை பற்றி சிறிதும் வெட்கமும் குற்ற உணர்வும் இல்லாமல் ஒரு பாவமன்னி்பபும் கோராமல் நான் இப்படித்தான் இருந்தேன் என்று கூறக்கூடிய ஒரு துணிவு தமிழில் முதன் முறையாக ராஜசுந்தரராஜனிடம் பார்க்கிறேன். 

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறுமியுடன் லாட்ஜில் சிக்கிய அந்த பகுதி உயிர்ப்பான ஒரு சிறுகதை... சிறுமியை அடிக்கச் சொன்ன அந்த போலீஸ்காரன் இருந்தால் அவன் குண்டியை நசுக்க வேண்டும் என்ற கோபமும் வெறித்தனமும் ஏற்படுகிறது. மனிதாபிமானமே இல்லாத எல்லா போலீஸ்காரர்களையும் ஒரு அடியாவது ஓங்கி அடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ரகசிய ஆசையே உள்ளது.

இந்தப் புத்தகத்தை ஏன் வாங்கினேன் தெரியவில்லை . அது எனக்காக அங்கு காத்திருந்தது. வாழ்த்துகள் ராஜசுந்தரராஜன் உங்கள் வாசகனாகிவ ிட்டேன். இனி உங்கள் புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்குவேன். இந்த புத்தகத்தைத் தவறவிடாமல் கைப்பற்றியதற்காக மனம் நூறு முறை மகிழ்ச்சி கொள்கிறது. 


வெளியீடு
வாசக சாலை பதிப்பகம்
9942633833
9790443879
vasagasalai@gmail.com


Wednesday 16 January 2019

புத்தக திருவிழா 2019

சென்னை புத்தக காட்சிக்கு தொடர்ந்து நான்கைந்து தினங்களாகப் போனேன். பல நண்பர்களை சந்திக்க முடிந்தது முதல் மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யப்புத்திரன், சூத்ரதாரி, கால சுப்பிரமணியம், நிழல் திருநாவுக்கரசு, அழகியசிங்கர், பா.ராகவன், வசந்தகுமார், ரவிசுப்பிரமணியன், அமுதபாரதி , காலச்சுவடு கண்ணன் உள்பட பலருடன் சில மணி்த்துளிகள் உரையாடி எனது இருப்பையும் அவர்களின் உறவையும் புதுப்பித்துக் கொண்டேன்.
பா.ராகவனின் யதி நாவல் பிரமிக்க வைத்தது. வாங்கினேன். படிக்கவும் தொடங்கி விட்டேன். கீரனூர் ஜாகிர்ராஜாவின் நான்கு புத்தகங்கள், பெண் எழுத்தாளர்களின் சிறுகதை நூல்கள், கவிதை நூல்கள், தோப்பில் முகமது மீரானின் சிறுகதை முழுத் தொகுப்பு ,அழகிய சிங்கர் கவிதைகள் என வாங்கிய புத்தகங்கள் இம்முறை அதிகம். சாருவின் பழுப்பு நிற பக்கங்கள் பகுதி 2, 3 மற்றும் மெதுசாவின் மதுக்கோப்பை ஆகியவை வாங்கினேன். கையெழுத்திட்டு தந்தார். ஜீரோ டிகிரி பதிப்பாளர்கள் காயத்ரியையும் ராம்ஜியையும் அறிமுகம் செய்து வைத்தார். அபூர்வமான நபர்கள் என்று முதல் சந்திப்பிலேயே தோன்றியது.
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் மற்றும் சில புத்தகங்கள் வாங்கினேன். அவர் கையெழுத்திட்டார்.
நண்பர் எம். கோபாலகிருஷ்ணன்( சூத்ரதாரி) எழுதிய மனைமாட்சியும் இந்த ஆண்டின் முக்கிய புதுவரவாக கருதுகிறேன். படிக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கின்றன. படிக்கிறேன். எழுதுகிறேன்.
எனது புத்தகம் ஏதும் இந்த ஆண்டும்  வெளியாகவில்லை. அடுத்த புத்தக காட்சிக்குள் நானே பதிப்பாளராகி விட வேண்டும் அல்லது இருக்கும் நல்ல பதிப்பாளர்கள் சிலருடன் உறவை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.




Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...