Tuesday 12 December 2017

அஞ்சலி -சசிகபூர்

அஞ்சலி
இரண்டாம் நாயகன் - சசிகபூர்
செந்தூரம் ஜெகதீஷ்

இளம் பள்ளிப்பருவத்தில் சினிமா ஆசைகள் துளிர்விட்ட காலம் அது. தர்மேந்திரா நடித்த அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மெல்லிய மீசை முளைத்த  பதின் பருவத்தில் காதல் காட்சிகளுடன் கூடிய இளமையான இந்திப்படங்களையும் ரசிக்கப் பழகியிருந்தேன். ஆனால் திருச்சியில் இருந்து சென்னை குடியேறி வந்து இந்திப்படங்களைப் பார்ப்பதே அரிதினும் அரிதாகி விட்டது. காரணம் தமிழ்ப்படங்களை குறைந்த கட்டணத்தில் ராக்சியிலோ புவனேசுவரியிலோ மேகலாவிலோ பார்த்துவிடலாம். ஆனால் இந்திப்படங்களைப் பார்க்க தேவி தியேட்டருக்குத்தான் போக வேண்டும். தேவி பாரடைசில் இந்திப்படங்கள் போடுவார்கள். ஆனால் பால்கனி டிக்கட் 2 ரூபாய் 90 காசுகள், பேருந்து வழிச்செலவு எல்லாம் சேர்த்தால் குறைந்தது ஆறு ஏழு ரூபாய் இருந்தால்தான் பார்க்க முடியும். எங்கள் பட்ஜெட் 40 காசுகள் தந்து சரஸ்வதியில் குறத்தி மகன் பார்ப்பதுடன் திருப்தி அடையும். எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு 50 நாட்கள் கழித்துதான் குறைந்த விலையில் டிக்கட் கிடைக்கும். அப்போது சவுகார்ப்பேட்டை வட இந்தியர்களை நம்பி சால்ட் குவார்ட்டர்ஸ் நடராஜாவிலும் தற்போது நேரு ஸ்டிடேயம் உள்ள இடத்திற்கு எதிரே முன்பு இருந்த அசோக் தியேட்டரிலும் (( பின்னர் சிவசக்தி என்று பெயர் மாறியது)) செகன்ட் ரன் எனப்படும் இரண்டாம் சுற்றுக்கு இந்திப் படங்களைத் திரையிடுவார்கள். அதைப் பார்க்க ஓடுவோம்.
அப்போது அறிமுகமான நடிகர்தான் சசிகபூர். கபி கபி,  தீவார் போன்ற அமிதாப் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக வந்து மனதைக் கவர்ந்த அந்த மென்மை மிக்க முகம் மறக்கமுடியாத வகையில் பதிந்து விட்டது. அவருடைய காந்தக் கண்கள், புன்னகைக்கும் உதடுகள், சிவந்த நிறம், கோட்டு சூட்டு அணியும் போது எந்தப் பெண்ணும் ஆசை கொள்ளச் செய்யும் பேரழகு என இந்திப்பட உலக எம்ஜிஆர் போலத்தான் இருந்தார் சசிகபூர். 
பல படங்களில் இரண்டாம் நாயகனாகவும் ஷர்மிளி, ஃபகீரா, ஜப் ஜப் ஃபூல் கிலே , சத்யம் சிவம் சுந்தரம், போன்ற படங்களில் அவர் முதல் நாயகனாகவும் நடித்திருந்தார். ஏற்ற வேடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் தமது முதிர்ந்த நடிப்பால் மனநிறைவை தந்த நடிகர் அவர்.
தீவார் படம் அவருக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த படம். இயக்குனர் யஷ் சோப்ராவின் இந்தப் படத்தின் கதை வசனகர்த்தாக்கள் சலீம்-ஜாவேத். சலீம் நடிகர் சல்மான் கானின் அப்பா. ஜாவேத் இன்றும் முக்கியமான பாடலாசிரியர். அப்படத்தில் அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய வசனங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் சசிகபூருக்காவும் ஒரு வசனம் எழுதப்பட்டது. அந்த வசனம் அமிதாப்பின் அத்தனை வசனங்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அண்ணன், தம்பியாக நடித்த சசிகபூரும் அமிதாப்பும் பிரிந்துவிடுவார்கள். அமிதாப் கள்ளக் கடத்தல் கோஷ்டியுடன் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிப்பார். சசிகபூர் தனது ஏழைத்தாயுடன் நேர்மை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியாக வருவார். ஒரு கட்டத்தில் அமிதாப் தனது அண்ணன் மற்றும் தாயை அடையாளம் கண்டு தம்முடன் வந்து வாழும் படி அழைப்பார். அம்மா மறுத்துவிடுவார். கறை படிந்த உனது சொர்க்கம் வேண்டாம் எனது இந்த சின்ன வீடு எனக்கு சொர்க்கம் என்று அந்த அம்மா கூறுவார். அப்போது சசிகபூருக்கும் அமிதாப்புக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறும். என்னிடம் கார் இருக்கிறது, பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது.சேவை செய்ய சேவகர்கள் இருக்கிறார்கள் உன்னிடம் என்ன இருக்கிறது என்று அமிதாப் வெடித்து எகிற அமைதியாக ஒற்றை வசனத்தில் சசிகபூர் அமிதாப்பை எதிர்கொள்வார் " என்னிடம் அம்மா இருக்காங்க"
சசிகபூரின் பண்பட்ட நடிப்புக்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கபி கபியில் தனது மனைவியின் முன்னாள் காதலை அறிந்த கணவனாக அதைக் காட்டிக் கொள்ளாமல் மனைவி மீது அளவற்ற பிரியம் செலுத்துபவராக நடிக்க சசிகபூரால் முடிந்தது. அந்த கதாபாத்திரத்தின் அற்புதம் சொல்லில் அடங்காதது. இதே போன்று மனோஜ் குமார் நடித்து இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் படத்திலும் சசிகபூர் மனோஜ்குமாரின் காதலியான ஜீனத் அமனை பணத்தால் கவர்ந்து நிச்சயம் செய்யும் காட்சியில் ஜீனத் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் போது சசிகபூரி்ன் ஆளுமை இவர் கதாநாயகன்-நாயகி இடையே வந்த வில்லன் அல்ல இரண்டாம் நாயகன்தான் என்று எண்ண வைக்கும்.
இரண்டாம் இடத்தில் இருப்பதில் வலி உள்ளது .மகாபாரதத்தில் அந்த வலி பீமனுக்கு இருந்ததை எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல் சித்தரித்தது. அரசியல் கட்சிகளில் இரண்டாம் இடங்களில் இருப்பவர்களை கேட்டால் சொல்வார்கள். எத்தனை அவமானங்களையும் வலிகளையும் அவர்கள் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால் சினிமாவில் பெரும்பாலான படங்களில் இரண்டாம் நாயகனாகவே நடித்த சசிகபூருக்கு அந்த வலி இல்லை. மாறாக அவருடைய பாத்திரங்கள்தாம் ரசிகர்களின் மனங்களில் தீராத இன்பத்தையும் வலியையும் ஒருசேர ஏற்படுத்தின.
சசி கபூருக்கு சினிமா மீது அதீத காதல் இருந்தது போலவே நாடகத்திலும் பெரும் ஈடுபாடு இருந்தது. ஒருபுறம் வணிக ரீதியான வெற்றிப் படங்களில் கனவானாக அவர் வந்தாலும் மறுபுறம் வித்தியாசமான பாத்திரங்களிலும் அவர் நடித்தார். ஷியாம் பெனகலின்  ஜூனூன், இஸ்மாயில் மெர்ச்சன்ட் இயக்கிய ஹீட் அண்ட் டஸ்ட், அபர்ணா சென் இயக்கிய 36 சவுரங்கி லேன் போன்ற படங்களில் வித்தியாசமான சசிகபூராக அவதாரம் எடுத்தார். ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ் பெற்ற நாவலை படமாக எடுத்த அவர் தாமே இயக்கிய சித்தார்த்தா என்ற அந்தப் படத்தில் இந்திய சினிமாவின் முழு நிர்வாணக் காட்சியையும் படமாக்கினார்.
பலத்த கண்டனங்கள், விமர்சனங்களை மீறி கலைக்கு ஆபாசம் என்பதே காண்பவர் பார்வையில்தான் என்று வாதாடினார். நடிகை சிமி துணிச்சலுடன் அந்த நிர்வாணக்காட்சியில் முழு உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்திருந்தார்.
சசிகபூர்  நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் இளைய சகோதரர். தமது தந்தை பிருத்வி ராஜ் கபூருடன் பல நாடகங்களிலும் அவர் பணியாற்றினார். திரைப்பட பாரம்பரியம் மி்க்க கபூர் குடும்பத்தின் ஒளிவிளக்காக விளங்கினார் சசிகபூர் , ஷம்மி கபூருக்கு வயது அதிகமாகி உடல் பருக்க தொடங்கிய நிலையில் சசிகபூரே ரோமாண்டிக்கான பாத்திரங்களுக்கு வெகுவாகப் பொருந்தினாார். பின்னாளில் சசிகபூருக்கும் அதே போன்ற பிரச்சினைகள் உருவான போது பாபியில் அறிமுகமான ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார். இன்று ரன்பீர் கபூர் வரை அந்த நடிப்பு பாரம்பரியம் தொடர்கிறது.
பத்மபூஷண், தாதாசாகேப் பால்கே விருது போன்ற உயரிய கௌரவங்களைப் பெற்றுள்ள சசிகபூர் பலமாதங்களாக நோய் காரணமாக சக்கர நாற்காலியில் தான் காட்சியளித்தார். வயது முதிர்ந்த நிலையிலும் அவரை யாராலும் ஒதுக்கி விட முடியவில்லை. வீடு தேடி அவருக்கு தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கியது.

தமது 79வது வயதில் சசிகபூர்  டிசம்பர் 4ம் தேதி மாலை 5.50 மணியளவில் காலமாகி விட்டார். இவர் மறைவு திரையுலகின் மிகப்பெரிய வெற்றிடம் என்று இரங்கல் செய்திகள் குவிகின்றன. வழக்கமான சம்பிரதாயமான இரங்கல் சொற்கள்தாம். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே மிகப் பொருத்தமானவையாக மாறுகின்றன. சசிகபூர் அத்தகைய மேன்மை மிக்க மனிதர்.
சசி கபூர் இல்லாத சினிமா எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் சசிகபூர் இல்லாத சினிமா எப்படி இருந்திருக்கும் என்று அவரை ரசித்த என்போன்ற நடுத்தர வயது ரசிகர்கள் கற்பனை கூட செய்ய முடியாது. அழகான அந்த முகமும் புன்னகையும் நினைவில் என்றும் சிரித்துக் கொண்டே நிழலாடிக் கொண்டிருக்கும்.

Sunday 3 December 2017

பயணம் 10 -ராஜமுந்திரி -ஆந்திரா

உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் ராஜமுந்திரிக்கு பயணித்தேன். ராஜமுந்திரி பற்றி எனக்கு என்ன தெரியும்? அங்கு கோதாவரி நதி ஓடுகிறது. மிகப்பெரிய ரயில் பாலம் இருக்கிறது. ராஜமுந்திரி அருகே பாலியல் தொழில் புரியும் ஒரு கிராமம் -பெத்தாபுரம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சுகுமாரன் குங்குமம் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நண்பர்கள் வட்டத்தில் பெத்தாபுரம் போகணும் என்பது ஒரு லட்சியக் கனவாக இருந்த இளமைக்காலமும் ஒன்று இருந்தது. எந்த ஆசையும் வெறும் கனவாகவே நின்று போனது போல இதுவும் அங்கேயே முடிந்து போனது.
அப்புறம் ராஜமுந்திரி அருகே அரக்கு பள்ளத்தாக்கின் இயற்கை அழகைப் பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை படித்திருந்தேன். ரயில் நிலையத்திலும் அரக்கு பள்ளத்தாக்கு செல்பவர்கள் இங்கே இறங்கவும் என்று பலகை இருப்பதை கவனித்தேன்.
இரவு தன்பாத் வண்டியில் சென்ட்ரலில் இருந்து பயணம் -கிளம்பும் போது கிட்டதட்ட 2 மணி நேரம் தாமதம். அதனால் பகலில் 11 மணிக்கு பதிலாக 1 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். வழியில் தெனாலி ரயில் நிலையம் பார்த்தேன். தெனாலி ராமன் கதைகள் நினைவிலாடின. விஜயவாடாவுக்கு ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். ஆனாலும் கிருஷ்ணா நதியின் அழகான பாலம், மலைக்குன்றுடன் கூடிய அந்த நகர ரயில் நிலையம் அருகே இருக்கும ்பி.எஸ்.என்.எல் கட்டடம் அந்த நகரை நான் ஒருநாள் சுற்றிப்பார்த்த நினைவுகளை கோர்க்க முயன்றது. விஜயவாடாவில் மழை தூறும் ஒரு நாள் அது. நண்பர் தேவராஜூடன் சுற்றி வந்து அருமையான ஆந்திரா சாப்பாடு சாப்பிட்டதும் நினைவுக்கு வந்தது. ருசிகள் மறக்காதவை. அப்போது மலையாள பிட்டு படம் ஒன்று தெலுங்கில் டப்பிங் செய்து ஓடிக் கொண்டிருந்தது. மழைக்கு அங்கேதான் ஒதுங்கினோம். சென்னையில் இருந்து சுமார் ஏழு மணி நேர ரயில் பயணத்தில் எளிதாக அடையக்கூடிய விஜயவாடா போன்ற நகரங்களை ஏன் மீண்டும் பார்க்கத் தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக போக வேண்டும்.
விஜயவாடாவை கடந்து ராஜமுந்திரியை சென்றடைந்தோம். கல்யாண மண்டபத்தில் அறை. அருமையான உணவு வகைகள், அற்புதமான அலங்காரம் ,இசை ,நடனம் அழகான மனிதர்கள் என பொழுது ரம்மியமாகவே இருந்த போதம் மனம் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தது. பெத்தாபுரம் தானா என்று என்னை நான் கேட்டுக் கொண்டேன். இல்லை. வேறு என்ன , இலக்கியம், சினிமா,ஆன்மீகம், ஆந்திரா சாப்பாடு, கடைவீதிகள் என வழக்கமாக ஒவ்வொரு பயணத்திலும் நான் தேடும் பல்வேறு ரசனைகள் நினைவில் தோன்றின. ஆட்டோ பிடித்து புறப்பட்டு விட்டேன். கடைவீதியில் ஒன்றும் கிடைக்கவில்லை. சில வகை ஊறுகாய்கள், பொடிகள், அப்பளம் வாங்கி வந்தோம். பேக்கரிகளில் சில ருசியான கேக்குகள் கிடைத்தன. காதிம்ஸ் கடையில் ஒரு ஷூ வாங்கினேன். அப்புறம் செய்தித்தாள்கள், இளநீா் சர்பத், ராஜமுந்திரியின் ஓட்டல் ருசியறிய ஆட்டோக்காரனிடம் கேட்டு சத்யா என்றொரு டிபன் ஓட்டலுக்குப் போனோம். அங்கு பெசரட் ஆர்டர் செய்தால் நம்மூர் ஆனியன் தோசை போல் ஏதோ ஒன்றுவந்தது. ஒரேயொரு தேங்காய் சட்னி தவிர மற்ற எல்லா சட்னிகளும் சாம்பாரும் இனிப்பாய் இனித்தன.வாயில் வைக்க முடியவில்லை. அய்யோ ஆநதிராவே உன் மிர்ச்சி எங்கே?
மறுநாள் காலையிலேயே கோதாவரி பார்க்க புறப்பட்டோம். கோதாவரி கரையில் உடைகளைக் களைந்து நீராடிய அனுபவம் ஹரித்துவாரை நினைவுபடுத்தியது. ஆனால் கோதாவரி படிகளில் பாசி படர்ந்து இருந்ததால் அதிகமாக ஆற்றுக்குள் இறங்க பயமாக இருந்தது. சில படிகள் மட்டும் இறங்கி கம்பியை பிடித்தபடி நீராடினேன். ஒரு நதியில் இரண்டு முறை இறங்க முடியாது என்று ஹெராகுலிட்டிஸ் கூறியதை மனதில் ஓடவிட்டு ஓடும்நீரைப் பார்த்துக் கொண்டே குளித்து முடித்தேன்.



அங்கு காணப்பட்ட பிரம்மாண்டமான சிவலிங்கத்தைக் கண்டு சிவன் கோவில் எங்கே என்று விசாரித்த போது பக்தர் ஒருவர் பரவசத்துடன் கோடி லிங்கங்கள் கோதாவரியில் மிதந்து வந்ததை விவரித்தார். அந்த லிங்கங்கள் காசிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய அவர் ஒரே ஒரு லிங்கம் அருகில் உள்ள கோடிலிங்கம் கோவிலில் வைத்து வணங்கப்படுவதாக கூறியதால் ஆர்வத்துடன் ஆட்டோ பிடித்து கோதாவரி கரையோரம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த கோடிலிங்கம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தரிசித்தோம்.

மீண்டும் கல்யாண மண்டபத்தில் அடைக்கலமாகி மறுநாள் காலை கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை மழையில் நனைய திரும்பினோம்.

மீண்டும் ராஜமுந்திரிக்குப் போவேனா என யோசித்தேன். மீண்டும் மீண்டும் பெத்தாபுரம் தான் மனதில் ஆடியது. ஒரு கிராமமே பாலியல் தொழில் செய்வது எத்தனை வேதனையான விஷயம் என்றுதான் இப்போது தோன்றுகிறது. பாலியல் இச்சைகள் என்றுமே பூர்த்தியாகாது என்றபோதும் , ஏனோ கோடி லிங்கங்கள் குறித்து எண்ணிய போது பெத்தாபுரத்தை விரைப்புடன் வட்டமிட்ட  ஆண்குறிகளையும் அது பற்றி எழுதித் தீர்த்த பத்திரிகைகளையும் இளம் வயதுகளில் அது ஏற்படுத்திய சலனங்களையும் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை

Thursday 14 September 2017

ஓஷோவும் நானும்


நவீன விருட்சம் அழகிய சிங்கரின் வலைதளப் பதிவில் இருந்து.......நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்
-ஜெகதீஷ்



விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.  செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் 'ஓஷோவும் நானும்' என்ற தலைப்பில் உரையாட உள்ளார்.  தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்.  எப்படி அவருக்கு ஓஷோ மீது ஈடுபாடு வந்தது போன்ற விபரங்களை சனிக்கிழமை அன்று உரை ஆற்றுவார்.  யாவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.  அழைப்பிதழைத் தயாரித்த நண்பர் கிருபானந்தனுக்கு என் நன்றி. 


ஓஷோவும் நானும் உரை -வீடியோ யூடியூப்பில் காணக் கிடைக்கிறது. நவீன விருட்சம் இணைய தளத்திலும் காணலாம். அழகிய சிங்கருக்கு எனது நன்றிகள்.


Wednesday 30 August 2017

பயணம்-9 மதுரை

வரும் செப்டம்பர் 2017  3 மற்றும் 4 தேதிகளில் மதுரை, திருச்சியில் நண்பர்கள் என்னை சந்திக்கலாம். மதுரை தமுக்கம் மைதானத்தில் 3ம் தேதி புத்தகக் கணகாட்சியில் இருப்பேன். 4ம் தேதி பிற்பகல் திருச்சியில் மீண்டும் 5ம் தேதி சென்னையில்

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வேண்டி்க கொண்ட பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததாக என் அம்மா கூறுவார். ஆகவே நான் மீனாட்சி வரம் தந்து பிறந்த பிள்ளை. இதுவே மதுரைக்கும் எனக்குமான உறவை மேலும் பலப்படுத்துகிறது..
மதுரைக்கு தொழில்நிமித்தமாகவும் பயணமாகவும் பல முறை போயிருக்கிறேன் .நண்பராக ஜெயமோகன் அறிமுகமானதும் அங்குள்ள அகரம் புத்தக கடையில்தான். மதுரை நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து அங்குள்ள பழைய புத்தகக் கடைகளில் பல புதையல்களை கண்டெடுத்திருக்கிறேன். திருநெல்வேலி அல்வாவும் மதுரை ஜிகர்தண்டாவும் வில்லாபுரம் மலையாள பிட்டு படங்களும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்களைத் தந்துள்ளன. மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களிலும் இரவு முழுதும் தங்கியிருந்த அனுபவங்களும் உண்டு. கையில் போதிய பணம் இல்லாமல் இரவில் ரோட்டோர கடைகளில் சுடச்சுட இட்லி சாப்பிட்டு விடிய விடிய தூங்கா நகரான மதுரையில் சுற்றித்திரிந்திருக்கிறேன்.
மதுரையில் எனக்குப் பிடித்த மற்றொரு இடம் அழகர்கோவில், அங்குள்ள குரங்குகள் நீண்ட நாள் உறவுகள் போல் அத்தனை இணக்கமாக இருந்தன.

மலையில் பழமுதிர்ச்சோலையில் குடியிருக்கும் குமரனைப் பார்க்கப் போகையிலும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலைப் பாடியபடி செல்லும் போதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறது.
மதுரையை குறித்து தமிழ்சினமாக்கள் ஏற்படுத்திய பிம்பம் சற்று அச்சமூட்டும். ஆனால் மதுரை அத்தனை ஆபத்தான நகரம் இல்லை.

இம்முறை மதுரை போன போது அங்கு புத்தகக் கடைகள் குறைந்திருந்தன. இருக்கும் சில கடைகளிலும் கல்லூரி பாடப்புத்தகங்களே அதிகமாக காணப்பட்டன. மதுரை போய் புத்தகம் வாங்காமல் திரும்பிய பயணம் அனேகமாக இதுதான்.

புட்டு, இடியாப்பம், இட்லி, தோசை, போன்ற உணவு ருசிகளில் குறையில்லை .ஆனால் விளக்குத்தூண் ஜிகர்தண்டாவுக்கு 60 ரூபாய் கொடுத்தும் ஒரு கரண்டி பாஸந்தி போட மாட்டேன் என்று கடை ஊழியர் பிடிவாதம் பிடித்தார். கூடுதலாக பணம் தருவதாக கூறிய போதும், கேமரா இருக்கு சார் போட முடியாது என்றும் அவர் பயத்துடன் கூறினார். அது ஸ்பெஷல் ஜிகர்தண்டா என்று கூறி 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால்தான் பாஸந்தி போடுவாராம். அது வெளியூர்க்காரனான எனக்கு எப்படித்  தெரியும் ? 40 ரூபாய் தருவதாக கூறிய போதும் மாற்றத்தக்கது அல்ல என்று கூறிவிட்டார்.
பாஸந்தி இல்லாத ஜிகர்தண்டா என்ன ஜிகர்தண்டா பணம் சேர சேர வணிகர்களுக்கு திமிரு அதிகமாகி விடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். சாதாரண சிறிய கடையாக விளக்குத்தூண் பகுதியில் பாஸந்தியுடன் கூடிய ஜிகர்தண்டாவை 20 ரூபாய்க்கு சாப்பிட்ட நினைவு இன்றும் இனிக்கிறது.சுகர் வேறு பார்டர் லெவலை தாண்டி பயமுறுத்துகிறது இத்துடன் ஜிகர்தண்டாவுக்கு குட்பை. சென்னையிலும் இப்போது ஜிகர்தண்டா கடைகள் முளைத்துள்ளன .ஆனால் மதுரையை விட அது எந்த வ கையிலும் மேன்மை இல்லை.


Tuesday 4 July 2017

உலக சினிமா -தனிமைக்குத் துணையான காதல்

குமுதம் தீராநதி
 ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை
HENRY AND JUNE


Image result for henry and june
தனிமைக்கு  துணையான காதல்
செந்தூரம் ஜெகதீஷ்
“Everybody says sex is obscene. The only true obscenity is war.” 
― Henry Miller, Tropic of Cancer

உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், அந்தோன் செக்கவ், பிரான்ஸ் காப்கா, காப்ரியல் கார்சியா மார்க்யூஸ், இவான் துர்க்னேவ், நிக்கோலய் கோகல், ஓ ஹென்றி, மாப்பசான் என பட்டியலிட்டுக் கொண்டே போனாலும் யாருடைய பட்டியலிலும் சட்டென இடம் பிடிக்காத சில பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானவர்கள் டி.ஹெச்.லாரன்சும் ஹென்றி மில்லரும். இதற்கு காரணம் இவர்கள் பச்சையாக செக்ஸைப் பற்றி கூசாமல் எழுதியவர்கள். கிறித்துவ விழுமியங்களுடன் வந்த விமர்சகர்களும் இடதுசாரி உணர்வுடன் வந்த நவீன படைப்பாளிகளும் இவர்களைப் புறக்கணி்த்தனர். ஆபாசம் என்று ஒரே வார்த்தையில் இந்த மகத்தான மேதைகள் புறக்கணிக்கப்பட்டார்கள் . ஹென்றி மில்லரின் நூல்கள் சுமார் 27 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தன. 
செக்ஸ் என்பது ஆபாசமல்ல , போர்தான் மிகப்பெரிய ஆபாசம் என்பார் ஹென்றி மில்லர்
மார்சல் பிரவுஸ்ட்டையும் டி.ஹெச் லாரன்சையும் நேசிக்கும் இளம் பெண் எழுத்தாளர் அனாய்ஸ் நின். பாரீசில் தமது கணவரான ஹ்யூகோவுடன் வாழ்கிறார். இலக்கியம் வழியாக தனது செக்ஸ் அனுபவங்களை அவர் எழுத முயற்சிக்கிறார். அவரது வீடு முழுவதும் நிர்வாணப் படங்கள் ,ஓவியங்கள் .கணவர் தெரபிக்கு அழைத்துச் செல்கிறார். தெரபி செய்யும் நிபுணர் திடீரென  அனாய்ஸ் நின்னை முத்தமிடுகிறார். இதை அவள் தனது கணவரிடம் கூறுகிறாள். முத்தம் தானே பரவாயில்லை என்கிறார் கணவர். ஆனால் மீதிக்கதையை அவள் கணவரிடம் கூறவில்லை.
ஹ்யூகோ ஒருநாள் ஹென்றி மில்லரை அழைத்து வருகிறார். ஹென்றி வளர்ந்து வரும் எழுத்தாளர். அவருக்கு எழுத முடிகிறதே தவிர அதை அச்சடித்து புத்தகமாக்க வசதியில்லை. அவரிடம் டி.ஹெச்.லாரன்ஸ் பற்றி அனாய்ஸ் நின் பேசுகிறாள். லாரன்ஸ் செக்சை விவிலியம் போல் எழுதுகிறார். பிறப்பு இறப்பு போல் செக்சும் இயல்பான ஒரு விஷயம் என்பது ஹென்றி மில்லரின் தர்க்கம்.இந்த ஹென்றியோ சாதாரண மனிதனின் பாலியல் பிறழ்வுகள் பற்றி கூற விரும்புகிறான் என்கிறார் மில்லர். உடலுறவு ஒரு சுய விடுதலையாக வேண்டும் என்பதற்காக எழுதுவதாக கூறுகிறார் ஹென்றி மி்ல்லர்.
ஹென்றி மில்லருக்கு அனாய்ஸ் நின்னின் சைக்கிளைப் பிடிக்கிறது. ஹ்யூகோ தனது சைக்கிளை ஹென்றிக்கு பரிசாக தருகிறார். ஹ்யூகோ குதிரை வண்டியில் சவாரி செய்ய சைக்கிளில் அனாய்ஸ் நின்னுடன்  ரேஸ் விடுகிறார் ஹென்றி
ஹென்றியை ரசிக்க ஆரம்பிக்கிறாள் அனாய்ஸ் . தன்னைப் போலவே இருப்பதாக கருதுகிறாள். தனது கணவரின் ஆண்மையை விட தனது பெண்மைத்தன்மை மேலோங்கி இருப்பதை உணரும் அவள் அந்தப் பெண்மையை அடக்கி ஆளும் ஒரு ஆண்மகனுக்காக ஏங்கவும் செய்கிறாள். ஹென்றி தன் மனைவி ஜூன் குறித்து அவளிடம் பேசுகிறான். அவளுக்கு ஒரு கள்ளத் தொடர்பு இருந்தது. அதை ஹென்றி அறிந்ததும் அவள் அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். போகும் முன்பு ஹென்றியிடம் நீ ஒரு எழுத்தாளனாக தோற்றுவிட்டாய். அழகு உனக்கு ஒரு ஜோக் என சண்டை போடுகிறாள். 
விரக்தியி்ல் குடித்து மயங்கும் ஹென்றி விலை மாதரிடம் சென்று தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்.அப்போதுதான் ஹென்றி Tropic of Cancer என்ற நாவலை எழுதி வருகிறார். இதை தாம் அச்சிட பணம் உதவி செய்வதாக கூறுகிறாள் அனாய்ஸ். ஒரு புறம் ஹென்றிக்கும் அனாய்சுக்கும் நட்பு இறுகுகிறது. மறுபுறம் அனாய்ஸ் ஹென்றியின் மனைவி ஜூனை சந்திக்கிறாள். அவருடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டாயா என கேட்கிறாள் ஜூன். இல்லை நட்புதான் என்கிறாள் அனாய்ஸ் .இதை ஜூன் சாதகமாக்கிக் கொண்டு தனது கணவரின் தோழியை ஓரு பாலின சேர்க்கைக்கு அழைக்க அதற்கு அனாய்ஸ் இணங்குவதற்கு ஒரு காரணம் இவள் ஹென்றியின் படுக்கையை பகிர்ந்துக் கொண்ட மனைவி என்பதுதான்.
நாம் ஏன் தயக்கங்களால் நிரம்பியிருக்கிறோம்? நம்மை இழந்துவிடுவோம் என பயப்படுகிறோமா?நம்மை இழக்காமல் நம்மை கண்டுபிடித்துக் கொள்வதற்கு எந்த வித வழியும் இல்லை என்ற ஹென்றி மில்லரின் வரிகள் அவளுக்கு நினைவில் எழுகின்றன.
ஹென்றி மீது வளரும் தனது காதலை மறைக்க முடியாமல் தவிக்கும் அனாய்ஸ் ஒரு கட்டத்தில் ஹென்றியின் இச்சைக்கு இணங்குகிறாள். ஹென்றிக்கும் அனாய்ஸ் நின்னின் கட்டுரைகளைப் படித்து டி.ஹெச். லாரன்ஸ் மீது அளவுக்கு அதிகமான மரியாதை எழுகிறது. லாரன்சை நான் புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டேன் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார்.
 ஒரு பெண்ணாக மலர்ந்த காலம் வலியும் துன்பமும் மிக்கது என்று தனது டைரியில் பதிவு செய்கிறாள் அனாய்ஸ் . நான் வலிக்காக அழவில்லை, வலியை இழக்கத் தொடங்கி விட்டதால் அழுதேன் என்றும் அவள் எழுதுகிறாள். வலியுடனே வாழப்பழகி விட்ட நான் அந்த வலியில்லாத வெறுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறுகிறாள் அனாய்ஸ் 
ஒரு கலைஞன் கலைஞனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்குத் தேவை தனிமைதான் என்று கூறும் ஹென்றி அனாய்சிடம் இருந்து விலகியிருக்க முடிவு செய்கிறார். தனது கணவருக்கு துரோகம் இழைக்கும் குற்ற உணர்ச்சியால் அந்த உறவைத் துண்டித்து விட அனாய்சும் முடிவெடுக்கிறாள்.  நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன். என் வெட்கத்தையும் ஏமாற்றத்தையும் தனிமையில் அசை போட விரும்புகிறேன். நான் சூரிய ஒளியையும் வீதிகளில் கிடக்கும் கற்களையும் எந்த துணையும் இல்லாமல் ரசிக்க விரும்புகிறேன். எந்த உரையாடலும் எனக்குத் தேவையில்லை. என்னுடன் நான் மட்டும் முகத்திற்கு முகம் நேராக இருக்க வேண்டும். எனது இதயத்தின் இசை மட்டும்தான் எனக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று தனது நாவலில் எழுதுகிறார் ஹென்றி மில்லர். 
வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் கோழைகளாக இருக்கிறோமா, ஹீரோக்களாக மாறுகிறோமா என்று அது கவலைப்படுவதில்லை. அதற்கு எந்த வித ஒழுக்கமும் இல்லை. அதனை நாம் புரிந்துக் கொண்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். எவ்வித கேள்வியும் எழுப்ப மாட்டோம். நாம் எதை காண மறுக்கிறோமோ எதை பார்க்கக்கூடாது என்று கண்களை மூடிக் கொள்கிறோமோ எது நம்மால் மறுக்கப்படுகிறதோ நம்மை இழிவுபடுத்துவதாக நினைக்கிறோமோ அதுதான் கடைசியில் நம்மை தோற்கடித்துவிடுகிறது. அருவருப்பாகவும் வலி மிகுந்ததாகவும் தீயதாகவும் இருக்கும் ஒன்றே அழகாகவும் பலமாகவும் மாறக்கூடும். மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடும் திறந்த மனத்துடன் அதனை நாம் எதிர்கொள்வதே சிறந்தது.அத்தகையோருக்கு ஒவ்வொரு கணமும் பொன்னானது.
இவ்வாறு நினைக்கும் ஹென்றி மில்லருக்கு தனிமையும் காமத்தின் களியாட்டத்தின் இடையே தேவைப்படுகிறது. தனித்திருத்தலும் துணை தேடி அலைதலுமே அவருக்கு வாழ்வாக பரிணமிக்கிறது. இலக்கு என்பதை அடைவது அல்ல தேடிக் கொண்டிருப்பதே என்று அவருடைய தேடல் தொடர்கிறது. 
அனாய்ஸ் நீ வரும் போது காலம் கனவாய் கடந்து விடுகிறது. நீ போகும் போதுதான் உன் இருப்பை நான் பூரணமாக உணர்கிறேன். ஆனால் அது காலம் கடந்த நினைப்பு. நீ என்னை விட்டு போய் விட்டாய், முதன் முறையாக உறவில் நேர்மையாக இருக்கும் ஒரு பெண்ணை நான் கண்டிருக்கிறேன். நீ என்னை ஏமாற்றலாம் என்று கூட எனக்கு நீ அனுமதியளித்தாய். தோட்டத்தின் வழியாக நடந்து செல்லும் போது நான் அதனை நினைத்துக் கொள்கிறேன். ஒரு போதும் உனக்கு துரோகமிழைக்க என்னால் முடியாது. பெண்கள் விஷயத்தில் நான் ஒழுக்கமானவன் அல்ல.  நான் பெண்களை நேசிப்பவன். அல்லது வாழ்க்கையை நேசிப்பவன். ஏதோ ஒன்று எது எனத் தெரியாது. ஆனால் நீ சிரித்துக் கொண்டேயிரு அனாயிஸ் ,எனக்கு உன் சிரிப்பு மிகவும் பிடிக்கிறது. நீ மட்டும்தான் அறிவுபூர்வமான சகிப்புத்தன்மை கொண்ட பெண்ணாய் தெரிகின்றாய். உன்னிடம் என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரியாது ஆனால் இது ஏதோ ஒரு மாயம் போல் நிகழ்ந்து விட்டது. நான் உன்னிடம் எல்லாவற்றையும் கேட்க போகிறேன். ஏனென்றால் நீ அதனை ஊக்குவிக்கிறாய்.நீ நிஜமாகவே பலசாலியான பெண்தான். சாத்தியமற்றதையும் நீ ஊக்குவிக்கிறாய் என்றெல்லாம் ஹென்றிமில்லர் அனாய்ஸ் நின்னுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனாய்ஸ் நின்னின் உதவியால் ஹென்றி மி்ல்லரின் முதல் நாவல் டிராபி்க் ஆப் கேன்சர் அச்சாகிறது. அத்துடன் ஹென்றிக்கும் அனாய்சுக்குமான காதல் உறவு முடிகிறது. ஆனால் இருவரும் காலம் முழுவதும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அனாய்ஸ் தன் கணவரிடம் திரும்பிச் செல்கிறாள் .கணவரிடம் நடந்ததைக் கூறி தான் அவரைத்தான் காதலிப்பதாக கூறுகிறாள். ஹென்றியுடன் பழகியது அவள் தனக்கான தேடலின் ஒரு பகுதி என்பதை அவரும் புரிந்துக் கொள்கிறார்.
அனாய்ஸ் நின்னும் அவள் கணவர் ஹ்யூகோவும் குதிரை வண்டியில் செல்ல ஹென்றிமில்லர் தனது சைக்கிளில் வண்டியுடன் ரேஸ் விட்டு அதனை கடந்து செல்வதுடன் படம் முடிகிறது.
இப்படத்தில் பிரெட் வார்ட் ஹென்றி மில்லராக நடித்து அவருடைய உடல் மொழியை மிகச்சிறப்பாக கையாண்டிருந்தார்..உமா த்ரூமேன் மில்லரின் மனைவி ஜூனாகவும் மாரிய டி மெடிரோஸ் என்ற நடிகை அனாய்ஸ் நின் பாத்திரத்திலும் தோன்றியிருந்தனர். இப்படத்தில் சில புகழ் பெற்ற பாடல்களும் கவிதை வரிகளும் இடம் பெற்றன. செக்ஸை மையமாக வைத்த படம் என்றாலும் நீலப்படங்கள் போல் இல்லாமல் இலக்கிய விவாதம் கூடிய படமாக அமைந்ததால் இதற்கு மரியாதை கிடைத்தது.சில காட்சிகள் நிர்வாண உடலுறவு காட்சிகளாக அமைந்து விட்டதால் படத்திற்கு ஆர் என்ற தணிக்கை சான்று தரப்பட்டது. காப்மேன் என்ற இயக்குனர் இதனை இயக்கியிருந்தார். இந்த காப்மேன் தான் மிலன் குந்தரோவின் நாவலையும் படமாக்கியவர். 
ஹென்றி-அனாய்ஸ்-ஜூன் உறவை மையமாக வைத்து அனாய்ஸ் நின் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. இப்படம் மிகச்சிறந்த ஒளி்ப்பதிவுக்காக ஆஸ்கருக்கு பரிந்துரை  செய்யப்பட்டது
ஆனால் ஆபாசம் எனக்கூறி இப்படத்தை ஹென்றி மில்லரின் சொந்த நாடான அமெரிக்கா 27 ஆண்டுகள் தடை செய்திருந்தது.  ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் தடை விதித்தன. . காலம் தடைகளை நீக்கியது. ஹென்றி மில்லரை ஆபாச எழுத்தாளராக பார்த்தவர்கள் அவருக்கான இலக்கிய மரியாதையை புரிந்துக் கொண்டனர். அப்படம் வசூலை வாரிக்குவித்தது. 
ஹென்றி மில்லரின் நாவல்கள் டிராபிக் ஆப் கேன்சர் மட்டுமின்றி டிராபிக் ஆப் கேப்ரிகார்ன், நெக்சஸ், பிளக்சஸ், செக்சஸ் போன்றவையும் சரி இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தடம் தப்பிய பாதத்தின் நடனமாயிருந்தாலும் அது ஒரு பரிசுத்தமான இலக்கிய ஆன்மாவின் நடனம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

-----------------------
Image result for henry and june


Tuesday 6 June 2017

இந்திய சினிமா குருதத்தின் பியாசா

இந்திய சினிமா
பியாசா  
இயக்குனர் - குருதத் 
சில துளி கண்ணீரும் சில பெருமூச்சுகளும்.....
செந்தூரம் ஜெகதீஷ்


குமுதம் தீராநதி ஜூன் 2017 இதழில் வெளியான கட்டுரை







குருதத் என்ற நடிகரும் இயக்குனரும்  1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தனது வாடகை வீட்டில் இறந்துக் கிடந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்று படவுலகம் பேசியது. அதிகமான மதுவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடித்துவிட்டதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் நடிகை மாலா சின்ஹாவுடன் புதிய படம் பற்றி பேச இருந்ததாக அவர் மகன் அருண் தத் கூறினார். இதனால் குருதத்தின் மரணம் இயற்கையான மிகையான குடியாலும் மாத்திரைகளாலும் நிகழ்ந்த மரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எது எப்படியோ 39 வயதில் ஒரு மகத்தான கலைஞன் மரணித்து விட்டான்.
1953ம் ஆண்டு கீதாதத் என்ற நடிகையும் பாடகியுமான பெண்ணை குருதத் மணமுடித்தார். அவர் அப்போது லதா மங்கேஷ்கருக்கு போட்டியாக கருதப்பட்டார். மூன்றாண்டு மண வாழ்வில் மூன்று குழந்தைகளை அவர்கள் பெற்றனர். தருண், அருண் மற்றும் நீனா. ஆனாலும் குருதத்தின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. அதிகமான புகை, மது  என்ற சகல கெட்டப் பழக்கங்களும் குருதத்தை ஆட்கொண்டதால் அவர் மனைவிக்கு கடும் அதிருப்தி நிலவியது. நடிகை வகீதா ரஹ்மானுடன் குருதத்திற்கு திருமணத்திற்கு பிறகு உறவு ஏற்பட்டதும் இந்த மணவாழ்க்கை முறிய ஒரு காரணமாக இருக்கக்கூடும். இறப்பதற்கு முன் குருதத்தும் கீதாவும் பிரிந்துவிட்டனர். கீதா தத்தும் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 41 வயதில் காலமானார்.
குருதத்தின் நெருங்கிய திரையுலக நண்பர்களில் ஒருவர் இயக்குனரும் நடிகருமான தேவ் ஆனந்த். குருதத் இயக்கிய சிஐடி போன்ற படங்களில் தேவ் நடித்தார். தமது சுயசரிதையில் குருதத்தின் மரணம் பற்றி தேவ் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். ரொமான்சிங் வித் லைப் என்ற அந்த புத்தகத்தில் தேவ் ஆனந்த் இவ்வாறு எழுதினார்
" குருதத் இறந்த செய்தி கிடைத்த போது படப்பிடிப்பை ரத்து செய்து கிளம்பி விட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் வீட்டுக்கு நேராக காரை செலுத்தினேன். நான்தான் முதலில் அங்கு சென்றேன்.  அவர் உடல் கிடந்த அறைக்கு நேராக சென்றேன். அங்கு வேறு யாருமில்லை. நானும் குருதத்தின் உடலும் மட்டுமே. அவர் முகம் நீலம் பாரித்து கிடந்தது. அவர் அருகே அவர் அருந்திய நீல நிற மதுக் கோப்பை பாதி நிரம்பிக் கிடந்தது. தன்னைக் கொல்ல அதைத்தான் அவர் குடித்திருந்தார். போய்வருகிறேன் நண்பா என்று அவர் கூறுவது போல் இருந்தது. என் இதயம் சுக்குநூறாக சிதறியது. அமைதியாக நான் என் காரை நோக்கி நடந்தேன். பின்னர் அவர் இறுதிச்சடங்கின் போது சிதையில் எரிக்கும் முன்பு நடிகர் ராஜ்கபூர் குருதத்தின் முகத்தை வாஞ்சையுடன் தடவினார். அப்போது ராஜ்கபூரின் முகத்தில் ஒரு துயரமான புன்னகை இருந்தது. குருதத்திற்கு பிரியா விடை கொடுத்துவிட்ட போதும் அவருடைய இழப்பை நான் திரையுலகில் எப்போதும் உணர்ந்தவண்ணம் இருக்கிறேன் "
குருதத்தின் வாழ்க்கை துயரமானது. அந்த துயரம் எதனால் ஏற்பட்டது என்பதை அவருடைய இரண்டு திரைக்காவியங்கள் வாயிலாக நம்மால் ஓரளவுக்கு அறிய முடியும். பியாசா, காகஸ் கே ஃபூல் ஆகிய இரண்டு படங்களும் குருதத்தின் வாழ்க்கையை சொல்லக் கூடியவை.
ஆனால் பியாசாவுக்கு காரணம் குருதத்தின் நண்பரும் கவிஞருமான சாஹிர் லுத்வியானி. சாஹிர் அமிருதா ப்ரீதம் என்ற பஞ்சாபி பெண் கவிஞரை காதலித்து அந்த காதல் முறிந்த நிலையில் அதை படமாக்க குருதத் விரும்பினார். பியாசா உருவானது. இதில் சாஹிர்தான் பாடல்களை எழுதினார். இசை மேதை எஸ்.டி பர்மன் இசையமத்தார். முகமது ரஃபி , ஹேமந்த் குமார், கீதாதத் குரல்களில் இப்படத்தில் ஒலித்த பாடல்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு காரணமாகின.
50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு கருப்பு வெள்ளைப்படம். மெதுவாக நகரும் காட்சிகள். நடனம், ஆடல் பாடல் இல்லை. ஜானி வாக்கரின் சில நகைச்சுவைக் காட்சிகள் தவிர பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை .ஆனாலும் ரசிகர்கள் பியாசாவை ரசித்தார்கள். இன்றும் கூட அந்தப் படம் உலக சினிமாக்களில் முதல் நூறு பட்டியலில் இடம்பிடித்து விடுகிறது. மிகச்சிறந்த இந்திப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இப்படம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. அந்தக்காலத்தில் கொல்கத்தாவில் அறிவு ஜீவிகள், படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தனர். இப்போதும் என்று கூறினால் மறுக்கமாட்டேன். அந்த அறிவுஜீவிகளுக்கு மகாகவி தாகூரின் தாக்கத்தால் கவிதைகளின் மீது அலாதியான ஆர்வம் இருந்தது. இப்படத்தில் விஜய் என்ற பாத்திரத்தில் ஒரு கவிஞனாகத்தான் குருதத் தோன்றினார்.





முதல் காட்சியில் ஒரு பூங்காவில் குருதத் படுத்துக் கொண்டு மலர்களையும் அதில் அமரும் வண்டையும் ரசித்து ஒரு கவிதை புனைவார். உங்கள் ஆனந்தமான உலகிற்கு தர என்னிடம் எதுவும் இல்லை. சில பெருமூச்சுகளும் சில துளி கண்ணீரையும் தவிர என்று அந்தக் கவிதையில் கூறுவான் விஜய். அப்போது யாரோ ஒரு கனவானின் தடித்த பூட்சு கால்கள் அந்த புல்தரையின் மீது அமர்ந்த வண்டை நசுக்கி விட்டுச் செல்லும்.
குடும்பத்தில் இரண்டு அண்ணன்களால் அவமதிக்கப்பட்டு தாயின் பாசத்தைக் கூட பெற முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான் , தனது கவிதை நோட்டுகளை தேடும் போது அண்ணன்கள் அதை பழைய பேப்பருடன் விற்று விட்டதாக தெரிவிக்கின்றனர். பழைய பேப்பர் கடையில் போய் விசாரி்த்தால் அதை யாரோ ஒரு பெண் விலை கொடுத்து வாங்கிவிட்டுச் சென்றதாக கடைக்காரன் கூறுகிறான்.
மற்றொரு கோப்புடன் பதிப்பாளரை சந்தித்து தமது கவிதைகளை அச்சிடக் கேட்கிறான். ஆனால் அந்த பதிப்பாளர் எனக்கென்ன பைத்தியமா உன் குப்பைகளை சுமக்க என்கிறான். ஆம் நீங்கள் கழுதை என்று எனக்கும் தெரியும் என்று வெளியேறுகிறான் விஜய்
விஜய் .பிழைக்கத் தெரியாதவன், சம்பாதிக்க முடியாதவன் சதா கவிதை எழுதி ஊர் சுற்றுகிறவன் என்று அவன் தூற்றப்படுகிறான். நண்பன் அறையில் அடைக்கலம் தேடி அங்கு அவன் ஒரு விலைமாதுடன் களிப்பதைக் கண்டு சாலையில் நடந்து செல்லும் போது ஒரு பெண் பாடுவதைக்கேட்கிறான். அது அவன் எழுதிய பாடல்தான். அந்தப் பெண்ணின் பெயர் குலாப். அவள் ஒரு விலை மாது. தனது கவிதை நோட்டு தேடி அவளைப் பின்தொடரும் விஜய் மீது அவள் நம்பிக்கை கொள்ளாமல் பணமில்லை என்று ஓசியில் சுகம் பெற வந்தவனாக நினைத்து அவமதித்து அனுப்பிவிடுகிறாள். அப்போது அவன் கையில் இருந்த காகிதக் கட்டில் இருந்து ஒரு தாள் கீழே விழுகிறது. அதில் அவன் கவிதை. அந்த கையெழுத்து அவளிடம் உள்ள நோட்டுப்புத்தகத்தில் உள்ள அதே கையெழுத்துதான். தான் அவமதித்தது உண்மையில் தான் மிகவும் மரியாதை வைத்துள்ள ஒரு மகத்தான கவிஞனை என்று உணர்ந்து வருந்துகிறாள் குலாப்
மறுநாள் ஒரு சாலையில் தன் முன்னால் காதலியை சந்திக்கிறான் விஜய். மீனா என்ற பெண் ஒரு காரில் இருந்து இறங்கிச் செல்கிறாள். அந்த காரில் சாமான்களை ஏற்றும் ஒரு பணியாள் கூலியை அழைக்க கோட்டு சூட்டு போட்ட படித்த இளைஞனான விஜய் கூலியை சுமக்க அவனிடம் ஒரு ரூபாய் துட்டை வீசி விட்டு போகிறான் பணியாள்.
ஓட்டலுக்குப் போய் சாப்பிட அமர்கிறான். பணம் வைத்திருக்கிறாயா என்று பாதி உணவின் போது கடை உரிமையாளர் கேள்வி கேட்க கையில் இருந்த நாணயத்தை வீசி எறிகிறான். இந்த காசு செல்லாது இது ஓட்டை விழுந்தது. வேறு இருக்கா என கடைக்காரர் ஏச வேறுபணம் இல்லாததால் பாதி உணவை பறித்து அவரை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் கடை ஊழியர்கள். அப்போது பணத்தை கொடுத்துவிட்டு அருகில் அமரும் குலாப் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பேசுகிறாள். தம்மையும் மரியாதையுடன் பேசும் ஒருவரை கண்டு அவள் கண்களில் ஈரம் சுரக்கிறது.
இதனிடையே ஒரு விழாவில் மேடையில் கவிதை பாட அழைக்கப்படுகிறான் விஜய். அவனை அழைத்தவள் மீனா- விஜய் காதலை அறிந்த தோழி. அவன் துயரமான கவிதையை வாசிக்க கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்து மகிழ்ச்சியாக ஏதும் பாடு என பணிக்கிறது. அப்போது விஜய் கூறுகிறான். இந்த சமூகம் எனக்கு என்ன தந்ததோ அதைத்தான் நான் திருப்பித் தரமுடியும்.
அப்போது கோஷ் என்ற முன்னணி பதிப்பாளர் ஒருவர் தனதுவிசிட்டிங் கார்டை கொடுத்து வந்து பார்க்குமாறு சொல்கிறார். மறுநாள் அவர் அலுவலகத்தில் அவன் செல்லும் போது அவர் வேலை போட்டுக் கொடுக்கிறார். கவிதைகளை அச்சிட அவன் கேட்கும்போது பார்க்கலாம் என மழுப்புகிறார். உண்மையில் அவருடைய நோக்கம் தனது மனைவியான மீனாவுக்கும் விஜய்க்கும் காதல் நீடிக்கிறதா என்பதை உளவு பார்ப்பதுதான்.
ஒருநாள் கோஷ் ஒரு கவியரங்கத்திற்கு விஜய்யை அழைக்கிறார்.அங்கு அவர் மனைவியும் விஜய்யின் முன்னாள் காதலியுமான மீனாவும் இருக்கிறாள். புகழ் பெற்ற கவிஞர்கள் பெண்களின் உடலைப் பற்றியும் மதுக்கோப்பைகளைப் பற்றியும் பாடுகிறார்கள். விஜய் ஒரு பாடலைப் பாடுகிறான்..
ஜானே ஓ கைசே லோக் தே ஜின்கோ பியார் கோ பியார் மிலா என்ற அற்புதமான பாடல் ஹேமந்த் குமார் இசையில் ஒலிக்கிறது.
காதலித்து காதலை அடைந்தவர்கள் எத்தகையவர்கள்....எனக்கோ மலர்கள் கேட்ட போது முட்களால் ஆன மாலைதான் கிடைத்தது.
ஒவ்வொரு துணையும் ஓரிரு அடி உடன் நடந்து விலகிப் போயினர்.பைத்தியக்காரனின் கையைப் பிடித்து நடக்க யாருக்கும் இங்கே நேரம் இல்லை.எனக்கோ எனது நிழல்கூட அந்நியமாகிப் போனது என்று அந்தப் பாடல் ஒலிக்கிறது. பாட்டு முடிந்ததும் மீனா தனியறையில் விஜய்யை சந்திக்கிறாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம். உனக்கோ வேலையில்லை, வருமானமில்லை, சதா கவிதைகளைத் தவிர வேறுசிந்தனையே இல்லை. உன்னால் என் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்திருக்காது என்று மீனா கூற அதனால்தான் பணக்கார பதிப்பாளர் ஒருவரை மணம் முடித்துக் கொண்டாயா என்று கேட்கிறான் விஜய். இங்கே நீ வரக்கூடாது. மறந்துவிடு என்றுஅவளுக்கு அறிவுரை கூறுகிறான்.நான் மணவாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை என்று அவள் அழுகிறாள். மகிழ்ச்சி என்பது அடுத்தவர்களின் சந்தோஷத்தில் கிடைப்பது. அது உனக்கு ஒருபோதும் புரியாது.அதனால்தான் நீ மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறாய் என்று விஜய் கூறுகிறான். அப்போது அவர்கள் உரையாடலை கதவுக்குப் பின்னே மறைந்து கேட்டுக் கொண்டிருக்கும் மீனாவின் கணவர் அவனை வேலையை விட்டு நீ்க்கி விடுகிறார்.
இதனிடையே குலாப்புடன் விஜய்க்கு நட்பும் காதலும் மலர்கிறது.ஆனால் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்திகளால் குடிபோதைக்கு அடிமையாகிறான். கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் அவன் பாடும் ஒருபாடல் முகமது ரபியின் அற்புதமான குரலில் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. சிவப்பு விளக்கு பகுதிகளில் உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், சகோதரிகளைத் தேடுங்கள் என்ற டால்ஸ்டாயின் சிந்தனை பாடலாக பரிணமிக்கிறது.களைப்படைந்த கொலுசுக் கால்கள், தபலா வாசித்து வீங்கிய விரல்களைப் பற்றி விஜய் கவலை கொள்கிறான். இந்தியாவைப் பற்றி பெருமை பேசுவோர் இங்கு வந்து பாருங்கள் என்கிறான்.
விஜய் ஒருநாள் இரவில் விரக்தியில் தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தை நோக்கி போகிறான். அப்போது பிச்சைக்காரன் ஒருவனுக்கு தனது கல்வி மற்றும் கௌரவத்தின் அடையாளமாக விளங்கும் கோட்டை தானமாக தருகிறான். ரயில் முன் பாய செல்லும்போது பின் தொடரும் பிச்சைக்காரன் தண்டவாளத்தின் இடுக்கில் சிக்கிக் கொள்ள அவனை மீட்க விஜய் போராட வேகமாக வந்த இரயிலில் இருவரும் அடிபட்டு விழுகின்றனர். பிச்சைக்காரன் செத்துப் போகிறான் .விஜய் சுயநினைவிழந்து எங்கோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். கோட்டை பார்த்து விஜய் இறந்துவிட்டதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.
விஜய்யின் கவிதைகளை அச்சிட நினைக்கும் குலாப் தனது நகைகளை கொடுத்து மீனாவிடம் பேசுகிறாள். அப்போது அங்கு வரும் மீனாவின் கணவர் கோஷ் விஜய்யின் கவிதைகளை அச்சிடுகிறார். விஜய்யின் மரணம் ஏற்படுத்திய அனுதாபத்தாலும் துயரம்மிக்க வரிகளாலும் விஜய்யின் கவிதைகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. வியாபாரிகள் தலைதூக்குகிறார்கள். விஜய்யின் நண்பன் ஷியாம் தன்னிடம் உள்ள விஜய்யின் கவிதைகளை கொடுத்து லாபத்தில் பங்கு கேட்கிறான். அதுவரை தம்பியை வெறுத்த இரு அண்ணன்களும் நாங்கள்தான் உரிமையாளர்கள் என பங்கு கேட்டு வருகிறார்கள். போட்டி பதிப்பாளர்கள் அவர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்.





இந்நிலையில் விஜய்க்கு சுயநினைவு திரும்புகிறது. தனது கவிதைகளை நர்ஸ் ஒருத்தி படிப்பதைக் கண்டு தான் விஜய் என்று அவன் கூறுகிறான். ஆனால் மருத்துவர்கள் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவனாக கருதுகிறார்கள். தகவல் அறிந்து அங்குவந்து விஜய் உயிருடன் இருப்பதை அறிந்த கோஷ் அவன் இறந்துவிட்டதாகவே இருந்தால்தான் கவிதைகள் விற்கும் என்று கணக்குப் போடுகிறார். அவனை அடையாளம் தெரிந்தவர்களை விலைக்கு வாங்குகிறார். நண்பன், சகோதரர்கள் உட்பட யாருமே விஜய்யை அடையாளம் காண மறுத்துவிடுகிறார்கள். விஜய்க்கு நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் தோன்றும் விஜய் உருக்கமாக ஒரு பாடல் பாடுகிறான்.







இங்கு நட்புக்கு மதிப்பில்லை. அன்புக்கு மதிப்பில்லை, காதலுக்கு மதிப்பில்லை. காதலும் இங்கு ஒரு வியாபாரம்....இது உங்கள் உலகம் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எரித்துவிடுங்கள் இந்த உலகை என்று அவன் பாடுகிறான்.  மனநலம் பாதித்த ஒருவன் விஜய்யின் புகழை களவாட வந்திருப்பதாக கருதி மக்கள் அவனை அடித்து விரட்டுகிறார்கள். விஜய்யை அவன் தோழி குலாப்பும் நண்பர் ஜானி வாக்கரும் சந்திக்கிறார்கள் ,விஜய் தன் அடையாளத்தை மீட்க வேண்டும் என்கிறார்கள். போட்டி பதிப்பாளர் உதவ முன்வருகிறார். மீண்டும் விஜய்யின் நண்பன் ஷியாமும் சகோதரர்களும் விலை பேசப்படுகிறார்கள்.
பெரும் திரளாகக் கூடிய கூட்டத்தில் அவன்தான் விஜய் என நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நான் விஜய் இல்லை என்றுவெளியேறுகிறான் விஜய். அதற்கு அவன் ஒரு விளக்கம் கூறுவான். எனக்கு எந்த ஒரு தனிநபர் மீதும் கோபம் கிடையாது.நண்பனை நண்பனாகவும் சகோதரனை சகோதரனாகவும் இருக்க விடாத இந்த பொருளிய சமூகம் மீதுதான் எனக்குப் புகார் என்கிறான் விஜய் .படத்தில் உயிர்நாடியான வசனங்களை எழுதியவர் ஆப்ரர் ஆல்வி.
அந்த ஊரை விட்டே அவன் தன் தோழி குலாபுடன் வெளியேறுகிறான்.
படத்தின் ஒரு காட்சியில் , குழாய் நீரை திறந்து விஜய் தண்ணீர் குடிக்க முயற்சிப்பதை மீனா காரில் இருந்தபடி பார்க்கிறாள். குழாயில் தண்ணீர் வரவில்லை. விஜய் தாகத்துடன் நடந்து செல்வதை பார்க்கிறாள். அவன் தாகமாக இருக்கவே சபிக்கப்பட்டவன். அவளோ மனசாட்சியையும் காதலையும் விற்று விட்டு காரில் செல்ல விதிக்கப்பட்டவள். ஒவ்வொரு வெற்றியடைந்த மனிதனின் பின்னாலும் தோல்வியுற்ற ஒரு மனிதனின் கண்ணீரும் ரத்தமும் கலந்திருக்கிறது. இதுதான் பியாசா சொல்லும் பாடம்.
--------------------------------------------------------------------------------------------------

Friday 24 March 2017

asokamithran -அசோகமித்திரன் காலமானார்

அஞ்சலி
அசோகமித்திரன்  காலமானார்
செந்தூரம் ஜெகதீஷ்







அசோகமித்திரனுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு உண்டு. ஒரு மானசீகமான தந்தையுடன் பேசுவது போல் மரியாதை கலந்த அன்புடன்தான் அவருடன் பழகியிருக்கிறேன்.
90 களின் மத்தியில் கோவை களம் கூட்டத்தில் கோவை ஞானியுடன் வ.உ.சி பூங்காவில் அசோகமித்திரனை முதன் முதலாக சந்தித்தேன். அவருடைய சில சிறுகதைகளையும் தண்ணீர், கரைந்த நிழல்கள் போன்ற நாவல்களையும் படித்திருந்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போன முகமும் புன்னகையும் கொண்டிருந்தார்.
மீண்டும் மீண்டும் சென்னையில் பல முறை அவரை சந்திக்கும் போதெல்லாம் நீங்க கோயமுத்தூர் தானே என்று கேட்டு வைப்பார். சென்னைதான் என்றால் நம்ப மாட்டார்.
ஒருமுறை சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து ஒரு மகத்தான எழுத்தாளர் உருவாக முடியாது என்று ஜெயமோகன் ஒரு வறட்டுத்தனமான வாதத்தை முன்வைத்த போது உடனடியாக ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் சுட்டிக்காட்டினேன். மழுப்பினார். பின்னர் அதே ஜெயமோகன்தான் அசோகமித்திரன் மலரை கனவு இதழுக்காக தொகுத்து எனது கட்டுரையும் வாங்கிப் போட்டார்.18வது அட்சக்கோடு பற்றி நான் எழுதினேன்.
காலப்போக்கில் ஜெயகாந்தனையும் மிஞ்சி அசோகமித்திரனின் பெயர் எனது பட்டியலில் முதலிடம் பிடிக்கத் தொடங்கியது. அவர் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரானார். முகநூலில் பழைய இந்திப் பாடல்கள் குறித்த விவரம் கேட்டு எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். பதில் அனுப்புவேன்.
அசோகமித்திரன் காலமானார் என்று 2017 மார்ச் 23ம் தேதி தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூஸ் பார்த்து லேசாக மனம் அதி்ர்ந்தது. அவர் வயது, முதுமை, அண்மையில் அவரை விருட்சம் கூட்டத்தில் சந்தித்த போது தென்பட்ட தளர்ச்சி அவருடைய வெற்றிடம் நிகழ இருப்பதை உணர்த்தியதால் பெரிய அதிர்ச்சியில்லை.அவர் மறைவதற்குள் அவருடைய முழுமையான வாசிப்பை மீண்டும் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்.
24ம் தேதி காலையில் ஏழரை மணிக்கே வேளச்சேரியில் உள்ள அவருடைய இல்லத்தில் அவர் உடலுக்கு ஒரு ரோஜா மாலையை சாத்தி விட்டு வணங்கினேன். இரவு உணவு அருந்தி எட்டு மணி வாக்கில் ஐஸ்கிரீம் சாப்பிட்டார் என்றும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் இருந்த காரணத்தால் அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அமைதியாகிவிட்டார் என்றும் அவர் குடும்பத்தினர் கூறினர். மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததாக உறுதி செய்தனர்
காலையிலேயே ஏராளமான மீடியா கேமராக்களும் செய்தியாளர்களும் அவர் வீட்டின் முன் திரண்டு விட்டனர். பின்னர் ஒவ்வொருவராக பலர் வரத் தொடங்கினர்.
இந்திரா பார்த்தசாரதி,  ந.முத்துசாமி, கவிஞர் வைரமுத்து, அம்ஷன் குமார், திருப்பூர் கிருஷ்ணன், பாவை சந்திரன், வண்ணதாசன், வண்ண நிலவன், ஆ.இரா.வேங்கடாசலபதி, அரவிந்தன், யுவன் சந்திரசேகர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, பாக்கியம் ராமசாமி, நரசய்யா என அந்த வளாகம் எழுத்தாளர்களால் நிரம்பியது.
பத்து மணி வரை இருந்து வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அசோகமித்திரனின் மறைவும் வெற்றிடமும் தமிழ் இலக்கியச்சூழலில் மட்டுமல்ல எனது மன உலகிலும் நீண்ட காலம் நினைவில் இருக்கும்.



அசோகமித்திரனின் உள்மனப் பயணங்கள்
(என் பயணம்...அசோகமித்திரன் )
செந்தூரம் ஜெகதீஷ்
அசோகமித்திரனின் நாவல்களைப் போலும் சிறுகதைகளைப் போலும் அவருடைய கட்டுரைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு. அவர் எழுதிய கட்டுரைகள் அவர் எழுத்தின் நுட்பங்களுடன் கூடியவைதான். தன்னைப் பற்றியும் தனது செகந்திராபாத் வாழ்க்கையைப் பற்றியும் அவர் பலமுறை எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த கட்டுரைத் தொகுப்பு.
பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி திரும்பி வராத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அசோகமித்திரன் அதையும் நகைச்சுவை கலந்த பதிவாக்குகிறார். "என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் ஸ்டாம்பின் சுற்றுவடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட  இடங்களில் முத்திரையடித்துத் திருப்பி அனுப்பி விடுவார்கள்.ஒரே ஒருமுறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான்  வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பி அனுப்பியது" என்கிறார்.
தனது கதைகளை உருவ அமைதியுடன் அமைப்பதில் அசோகமித்திரனுக்கு அலாதியான பிரியம் உண்டு. அவரே கூறுவது போல நிறைய கதாபாத்திரங்களும் அதனால்தான் அவர் கதைகளில் இடம் பெறுகின்றனர். உத்திக்காக கதை எழுதுவதில் அசோகமித்திரனுக்கு நம்பிக்கையில்லை. இன்று கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் கதையை பின்னுக்குத் தள்ளி உத்தியையே கதையாக்கி விடுகிறார்கள். பிரதியின் கட்டுடைத்தல் என்றும் இதனை கூறுகிறார்கள். அதனால்தான் கோணங்கியின் ஆரம்பக்கால எழுத்துகளைப் படித்து வியந்த என் போன்ற வாசகர்கள் இன்று அவரிடமிருந்து விலகி அந்நியமாகி நிற்கிறோம்.
" உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச்சிறந்ததாக நினைக்கிறேன்." என்கிறார் அசோகமித்திரன். இதற்கு எனக்கு உடனே புதுமைப்பித்தனின் எழுத்துகள்தான் நினைவுக்கு வருகின்றன. புதுமைப்பித்தனே அதிக உத்திகளை தமிழுக்குப் பயன்படுத்திய எழுத்தாளர். அவருடைய காஞ்சனையும் செல்லம்மாளும் சிற்பியின் நரகமும் பொன்னகரமும் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஒரே உத்திதான் என யாராவது கூற முடியுமா?
அதே போல் கதைகள் ஒருவரின் சொந்த அனுபவம் சார்ந்தவை என்ற நம்பி்க்கையும் அசோகமித்திரனுக்கு உள்ளது. மணிக்கொடி எழுத்தாளர்கள் பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சி.சு.செல்லப்பா போன்றவர்கள் ஒரே கதைக்கருவை எடுத்துக் கொண்டு தனித்தனியாக கதை எழுதுவார்களாம். ஆனால் சரஸாவின் பொம்மை கதையை பி.எஸ்.ராமையாதான் வடிவம் முழுமை பெறச் செய்து அதன் இறுதிப்பகுதியை எழுதிக் கொடுத்ததாக செல்லப்பா கூறியுள்ளார். இருப்பினும் சரஸாவின் பொம்மையை ராமையா எழுதியிருக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியது. அது செல்லப்பாவால்தான் எழுத முடியம். ஒரு நல்ல எடிட்டரின் வேலையைத்தான் ராமையா செய்திருக்கிறார் எனக் கொள்ளலாம். மேலை நாடுகளின் புகழ் பெற்ற நாவலாசிரியர்கள் ஊதியம் தந்து எடிட்டர்களை பணியமர்த்திக் கொள்கிறார்கள். தமிழில் அது நண்பர்களுக்கு இடையே தற்செயலாக நிகழ்ந்துள்ளது.
அசோகமித்திரனைப் பொருத்தவரை " என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆனால் நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதிவிடுவார்களோ என்ற பயம் இல்லை" என்கிறார்.
அசோகமித்திரனின் நகைச்சுவை ததும்பும் வரிகளும் இக்கட்டுரைகளின் ஊடாக விரவிக்கிடக்கின்றன....தமிழ் வாத்தியார் என்றாலே மீனாட்சி சுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் போல் இருக்கிறது என்றும் பாரதியார் சுருக்கமாகவே பள்ளுப் பாடியிருக்கலாம் என்றும் , ஹைதராபாதில் அன்று கொலைக்குற்றத்துக்கு அடுத்தபடியான பெரிய குற்றம் சைக்கிளுக்கு விளக்கு இல்லாமல் ஓட்டிப் போவதுதான் என்றும் அசோகமித்திரன் போகிற போக்கில் எழுதிச் செல்லும் வரிகள் வாசகனை நின்று நகைக்கச் செய்து சிந்திக்கவும் செய்கின்றன.
ஹெல்மட் அணிவது பற்றியும் அவர் தமது கருத்தை பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளார். ஹெல்மட் அணிய சட்டம் கட்டாயப்படுத்துகிறது. தலையை காக்கவும் உயிரைப்பாதுகாக்கவும் தான் என்று கூறப்படுகிறது. இதில் உடன்பாடு இல்லாத போதும் சட்டத்திற்கு பயந்தும் அபராதத்தை வெறுத்தும் ஹெல்மட் அணிய கட்டாயப்படுத்தப்படுகிறோம்.
" இந்த கவசங்கள் ஏதோ விண்வெளிப் பயணத்திற்கு செய்யப்பட்டதுபோல் இருக்கிறது.ஒரு மாட்டு வண்டியின் வேகத்திற்குப் போகும் இருசக்கர வண்டியில் போகிறவர் விண்வெளிவீரர்கள் அணிவது போன்றதொரு கவசத்தை அணிந்துக் கொண்டு போவது அந்த இருசக்கர வண்டியையே கேலி செய்வது போல் இருக்கிறது "என்கிறார்.
ஜூன் 6 அல்லது 7ம் தேதி செகந்திராபாதில் மழை பெய்யும் என்றும் அந்தக்காலத்து ரேடியோவை ஆன் செய்தால் வால்வு சூடேற சில நிமிடங்கள் ஆகும் என்றும் தகவல்களும் அவருடைய எழுத்துகளில் குவிந்துக் கிடக்கின்றன.
கரைந்த நிழல்கள் அசோகமித்திரனின் முக்கியமான நாவல் . அதை சினிமா பற்றிய முக்கியமான நாவல் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அப்படி அழைத்தால் அந்த நாவலின் தோல்வியைத்தான் குறிக்கும் என்று அசோகமித்திரன் கூறுகிறார். அதை தமிழின் சிறந்த நாவல் என்று மட்டுமே கூறவேண்டும்.
நான் கிடங்குத் தெருவை முடித்த பிறகு மீண்டும் விரிவாக எழுத வேண்டும் என்று ஏராளமானோர் கூறிவருகின்றனர். சரியென்று ஒப்புக் கொண்டாலும் பத்து ஆண்டுகளாக அதை முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டு போனது. இந்த நிலை  முன்னர் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
" சிலரின் இயல்பு ஒரு காரியம் ஒருதடவை முடிந்தது என்று ஏற்பட்டால் மீண்டும் அதனை அணுகமாட்டார்கள். என் இயல்பு அப்படித்தான். எழுதும் போது ஏராளமான அவகாசம் எடுத்துக் கொண்டு பலமுறை படித்து மாற்றங்கள் செய்தாலும் , ஒரு முறை எழுதி முடித்தாகி விட்டது என்று கீழே வைத்த பிறகு உறவே துண்டிக்கப்பட்டு விடுகிறது "என்கிறார்.
அமெரிக்காவில் இருந்த போது அவர் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளும், சில பேட்டிகளும் இந்த தொகுப்பில்இடம் பெற்றுள்ளன.
சென்னை தி நகர் தாமோதரன் தெரு, செகந்திரபாத், அமெரிக்கா என வாழ்க்கைச் சூழலுக்கேற்ப எங்கெங்கோ வாழ்ந்த தனது வாழ்வையும் அதன் தாக்கத்தால் உருவான எழுத்தையும் பற்றிய அசோகமித்திரனின் பதிவுகள் அந்தந்த காலத்தின் இலக்கிய சாட்சியங்களாக கிடைக்கின்றன. அவருடைய மறைவுக்குப் பின்னர் இவை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

என் பயணங்கள் - அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம் வெளியீடு

நன்றி கல்வெட்டுபேசுகிறது மாத இதழ்

Saturday 11 March 2017

பயணம் 8 -திருச்சி- கோவை

திருச்சிக்கு செல்வதென்றால் எப்போதும் சந்தோஷம்தான் எனக்கு. எனது பால்ய கால நினைவுகள் கொட்டிக் கிடக்கும் ஊர். மெயின்கார்டு கேட் மைக்கேல் ஐஸ்கிரீம், காவிரி ஆறு ( இப்ப காய்ந்து கிடக்கு ) ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, உறையூர், தென்னூர், வயலூர், ஜங்சன், சத்திரம்  பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர் ,காந்தி மார்க்கெட், பாலக்கரை என சுற்றி சுற்றி நடந்த நாட்கள் நினைவில் என்றும் தங்கியிருப்பவை. நான் படித்த காம்பியன் பள்ளியைப் பார்ப்பதும் , மலைக்கோட்டை அருகே பழைய புத்தகக் கடைகளில் பொக்கிஷங்களை கண்டெடுப்பதும் தனிசுகம், நன்னாரி சர்பத், கோனார் மோர்-வெண்ணெய், சரஸ்வதி கபேயில் அருமையான முழுச்சாப்பாடு,திருச்சி கபேயின் கேரட் சாம்பார் என வாய்க்கும் ருசியான உணவுகளை சுவைப்பதும் சுகமோ சுகம். டிவைன் என்பார்களே அதுதான்.

திருச்சியில் நான் பார்த்த பல திரையரங்குகளை காணவில்லை. ஜூபிடர்,  ராக்சி , கெயிட்டி, வெலிங்டன் போன்றவை இப்போது இல்லை என நினைக்கிறேன். எப்படியோ கோகினூர், மாரீஸ் போன்றவை பிழைத்திருக்கின்றன

திருச்சியில் நண்பர்கள் அதிகமாக இல்லை என்றாலும் இப்போது கவிஞர் எஸ்.அறிவுமணி அங்கு இருக்கிறார். கவிதைக்காரன் என்ற சிற்றிதழையும் வண்ண மயில் என்றொரு இதழையும் நடத்தியுள்ளார். நிறைய கவிதைகள் எழுதிக் குவிப்பார். பேராசிரியர் பெரியார்தாசன் அவருடைய அருமையான ஒரு வரியை மேடைதோறும் குறிப்பிடுவார் சோத்துக் கூடையை பசியோடு சுமப்பவர்கள் என்பது அந்த வரி
அறிவுமணி வைரமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்தார். இருந்தார் என்பதற்கு அடையாளம் வைரமுத்து ஒன்றும் குசேலன் ரஜினியும் இல்லை அறிவுமணி ஒன்றும் அப்படத்தில் வரும் பசுபதியும் இல்லை. சினிமா வேறு வாழ்க்கை வேறுதான்
ஆனால் அறிவுமணி நிறைவாக வாழ்கிறார். தனதுகுடும்பம், வேலை, பழைய இருசக்கர வாகனம், கையளவுக்கு காசு, சி்க்கனம், கோவில் திருவிழாக்கள், ஒண்டிவீரன் கருப்பணசாமி தரிசனம், உறவுக்கார தோழமைகள், வாசகர்கள், முகநூல் நண்பர்கள் என தனது சின்னஞ்சிறிய உலகையும் வண்ணமயமாக்கிக் கொள்ளத் தெரிந்த இனிய நண்பர் அவர்

அறிவுமணியுடன் சில மணி நேரம் கழித்த பின்னர் நண்பர் ஆர்.கே.ரவியும் நானும்  கோவைக்குப் பயணப்பட்டோம்.
அங்கு மீண்டும் நண்பர் ஷாராஜூடன் சந்திப்பு

ஷாராஜ் தனது ஓவியக் கண்காட்சியின் கனவுகளுடன் இருந்தார். எழுத்து என்பது மனசுக்கு வலி தரும் அனுபவம். ஆனால் ஓவியம் தான் எனக்கு கொண்டாட்டம் என்று ஷாராஜ் கூறினார். எனது கோப்பைகளி்ல வண்ணம் நிரம்பியிருக்கும் போது எனக்கு மது தேவைப்படுவதில்லை என்றும் கவிதையாக கூறினார். நிறைய யோசிக்க வைத்தது.

எனக்கும் எழுத்து வலிதான் என்பதை கிடங்குத் தெரு வாசித்தவர்கள் உணர முடியும். ஆனாலும் நான் எழுத்தைத்தான் நாடிச் செல்கிறேன். கோவையிலும் வலி நிறைந்த அனுபவங்கள் உண்டு அதற்காக கோவை செல்லாமல் இருக்க முடியுமா.....

விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவை சந்தித்தது கூடுதலான மகிழ்ச்சியை அளித்தது. அன்பும் கனிவும் மிக்க ஒரு பெருந்தகை அவர்

எத்தனை வலிகள் இருப்பினும் இதுபோன்ற சில மகிழ்ச்சிகளும் மறக்க முடியாத நினைவுகளும் தானே வாழ்க்கை

மருதமலை முருகனையும் தரிசி்த்து வந்தோம். டூவிலரில் மலை ஏறிச் சென்றது இனிய அனுபவம். 

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2017


குமுதம் தீராநதி பிப்ரவரி ,மார்ச் இதழ்களில் வெளியான கட்டுரைத் தொடர்


சென்னை சர்வதேச திரைப்பட விழா படங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்






இருளில் பூத்த கனவு மலர் ( பிரான்ஸ்)
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 2017ல் திரையிடப்பட்ட படம்....
செந்தூரம் ஜெகதீஷ்
மனித மனம் இருமை நிறைந்தது. இருட்டுக்குள் இருந்துதான் ஒவ்வொரு கலையும் வெளிப்பட்டு உன்னதம் பெறுகிறது. கலைஞனின் மன உழல்வுகளும் கண்ணீரும் வெளியே தெரிவதில்லை. ஆனால் கலை போற்றப்படுகிறது.
டான்சர் ( நடன மங்கை ) என்ற இந்தப் படம் ஒரு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நடன மங்கையின் உண்மைக் கதையைத் தழுவியது. பிரான்சின் புகழ் பெற்ற நடனக்காரி லூயி புல்லர் மற்றும் அவருடைய போட்டியாளர் இசடோரா டங்கன் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. இதன் திரைக்கதையை தாமஸ் பிடேகன் மற்றும் சாரா தெய்போட் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இயக்குனர்  ஸ்டபெனி டி குயிஸ்ட்டோ (Stéphanie Di Giusto. )
கடந்த டிசம்பர்  இறுதியில் இப்படம் திரையிடப்பட்டது. புத்தாண்டு பிறந்த 5வது நாளிலேயே இது சென்னை ரசிகர்களுக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் காணக் கிடைத்தது. ஆனால் இப்படம் திரையிட்ட ஐநாக்ஸ் திரையரங்கில் குறைந்த அளவே இருக்கைகள் நிரம்பியிருந்தன. காலை 9.30 மணிக் காட்சி என்பதாலோ என்னவோ இப்படத்தை நிறைய ரசிகர்கள் தவற விட்டனர். ஆனால் அடுத்த காட்சி ஒரு வேசியைப் பற்றிய படம் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உண்மையில் மக்கள் நல்ல படங்களைக் காண வருகிறார்களா அல்லது சென்சார் செய்யப்படாத படுக்கையறைக் காட்சிகளுக்காக வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
லூயி பில்லர் என்ற நடன மங்கையை இப்போது யாருக்கும்நினைவில்லை. ஆனால் நவீன நடக்கலையை வடிவமைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.லா லூயி என பிரான்ஸ் மக்கள் அவரை அழைத்திருந்தனர். அவர் ஒரு நடனப் புயலாக இருந்தார். நடனத்தை சந்தைப்படுத்தியவர்களுக்கு வசூலை வாரிக் குவித்தார். புல்லரின் சுழன்றாடும் நடனமில்லையென்றால் இன்றைய நடனக்கலை இத்தனை உயரங்களை எட்டியிருக்க முடியாது. புல்லரின் சுழல் நடனச் சித்திரங்கள், கோட்டோவியங்கள், சிற்பங்கள், படங்கள் யாவும் இப்போதும் காணக்கிடக்கின்றன.
புல்லரின் பாத்திரத்தில் நடித்தவர் நடன மங்கையும் நடிகையுமான சோகோ. சோகோவின் தனிப்பட்ட நடனக்கழுவினர் இந்த படத்திற்கான நடனங்களை வடிவமைத்தனர்.
 தந்தையுடன் லூயி புல்லர் அமெரிக்காவின் ஒரு மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு முறை தனது பாத் டப்பில் குளிக்கும் போது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார். பாத் டப்பில் ஓட்டை விழுந்து ரத்தம் கலந்த செந்நீர் கொட்டுவதில் இருந்து அவள் தந்தையின் மரணத்தைப் புரிந்துக் கொள்கிறோம். பின்னர் லூயி நியுயார்க்கில் உள்ள தமது தாயாரிடம் செல்கிறார். தாயார் ஒரு தேவாலயத்தில் தம்மை அர்ப்பணித்து விட்டவர். தந்தையை பற்றி குறை கூறும் போது நீ அவரை புரிந்துக் கொள்ளவில்லை அம்மா என்று பிரெஞ்ச் மொழியில் மகள் கூறுகிறாள். தாயிடம் நேரில் பேச பயம். லூயிக்கோ மேடை நாடக நடிகையாக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் தாய்க்கு தன்னைப் போல் கிறிஸ்துவ சமயத்திற்கு தமது மகளையும் தாரை வார்க்க வேண்டும் என்று ஆசை. மகளின் கூந்தலை வெட்டி கருப்பு கவுன் அணியச் செய்து அவளை தன்னைப் போல் மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் நடிகையாகும் ஆசையில் புல்லர் ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஒரு நாடக கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டுச் செல்கிறாள். அங்கு மேலாடை இல்லாத நடிகை கேட்  அருகில் போர் வீராங்கனை போல் கவசமும் ஆடைகளும் அணிந்த புல்லர் அமர வைக்கப்படுகிறாள். அவள் ஸ்கர்ட்டை தூக்கி நிர்வாணமாக்க இயக்குனர் முயற்சிக்க, அதற்கு இணங்க மறுக்கிறாள் புல்லர்.
ஆனால் அந்த நிர்வாண நடிகை அருகில் அமர்ந்து எடுத்த படம் தாய்க்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மகளின் புகைப்படத்தை தீயிட்டுப் பொசுக்குகிறாள். இந்நிலையில் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்து மேடையில் ஒரு காட்சியில் நடிக்கிறாள் புல்லர். அப்போது ஒரு விபரீதம் நிகழ்கிறது.
புல்லருக்கு நீண்ட வெள்ளை அங்கி ஆடையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் கைகளை மூடும் நீண்ட ஸ்லீவ்களும் உண்டு. அந்த ஸ்லீவ் களுக்குள் நீண்ட மூங்கில்களை மறைத்து வைத்திருக்க வேண்டும். ஆவியைப் போல் அவள் கைகளை நீட்டிக் கொண்டே கண்களை மூடியவாறு கல்லறையில் நடந்து வர வேண்டும் என்பதே காட்சி .ஆனால் அவள் அணிந்திருந்த தொள தொள பாவாடை இடுப்பில் நிற்காமல் நழுவுகிறது. தனது மானத்தைக் காப்பாற்ற புல்லர் முயன்று தடுக்கி விழுகிறாள். பார்வையாளர்கள் எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் தன்னை சுதாரித்துக் கொண்ட அவள், எழுகிறாள். பாவாடையை ஒரு கையாலும் தமது அங்கியை ஒருகையாலும் பிடித்து சுழன்று சுழன்று அந்த இயலாமையான தருணத்தை ஒரு நடனமாக மாற்றுகிறாள். அவள் சுழன்றாட சுழன்றாட நவீன நடனத்தை அவள் கண்டுபிடித்துவிடுகிறாள். மக்கள் மெய் மறந்து கைத்தட்டுகிறார்கள். அவள் ஒரு நடனமங்கையாக அவதரித்துவிட்டாள்.
ஆனால் வியாபாரிகள் அவள் நடன டிசைன்களையும் நடன ஸ்டைலையும் காப்பியடிக்கிறார்கள். நிர்வாண நடிகை கேட் அவளைப் போலவே நீண்ட அங்கியை அணிந்து மூங்கில்களை வைத்து சுழன்று ஆடுகிறாள். இது என் நடனம் நீ எப்படி ஆடலாம் என கத்துகிறாள் புல்லர்.
கலையைத் திருடுபவர்களுக்கும் வணிகமாக்குபவர்களுக்கும் கலையை உருவாக்கியவரின் வலி தெரியுமா...?
அவள் நடனத்தால் கவரப்பட்ட ஒரு அரசர் குல வாலிபர் அவளை அடைய முயற்சிக்கிறார். கவுன்ட் லூயிஸ் என்பவர் அவளை தமது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அவள் இணங்கவில்லை. இந்நிலையில் அவருடைய பணம் கட்டுக்கட்டாக இருப்பதைப் பார்த்து அதைத் திருடி அவள் அங்கிருந்து தப்பிச் செல்கிறாள். தன் கனவைத் தேடி அவள் நியுயார்க்கை விட்டு பாரீசுக்கு குடிபெயர்கிறாள். ராயல் பாலே நடன மேடைகளில் ஆட வேண்டும் என்பதே அவளுக்கு இலக்காக இருக்கிறது. அங்கு அவள் ஒரு பிரபல கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்கிறாள் முதலில் நிராகரிக்கும் மார்ச்சந்த் என்ற நடன கம்பெனி மேலாளர் பின்னர் அவள் திறைமை உணர்ந்து வாய்ப்பு அளிக்கிறார். தமது நடனங்களுக்காக தாம் செலவு செய்யத் தயார் என்கிறாள் புல்லர். அவள் வண்ண விளக்குகளை கேட்கிறாள். கண்ணாடியைக் கேட்கிறாள். நீண்ட அங்கிகளைக் கேட்கிறாள். நடன நிகழ்ச்சியின் செலவுகள் கூடுகின்றன. ஆனால் அவள் வணிக ரீதியாக தோற்கவில்லை. ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவள் நடனத்தை அங்கீகரிக்கின்றனர். பத்திரிகைகள் அவளை புகழ்ந்து தள்ளுகின்றன. மார்ச்சந்தின் உதவியாளரான பெண் கேப்ரியல் புல்லரின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறாள். பணமும் புகழும் புல்லருக்கு கொட்டுகிறது. அவளைத் தேடி வரும் கவுண்ட் லூயிசுக்கு திருடிய பணத்தைத் திருப்பித் தருவதாக அவள் கூறுகிறாள். ஆனால் அவரோ அவள் உடலைக் கேட்கிறார்.
இந்நிலையில் லூயி புல்லரின் நடனக்குழுவுக்கு மற்றொரு நடனக்காரி வருகிறாள். இசாடோரா என்ற அந்தப் பெண் சிலகாலம் புல்லரின் குழுவில் பணியாற்றுகிறாள். அவள் ஜப்பானிய கெய்ஷா போன்ற நடனமாடுவதில்  வல்லமை பெற்றவள். அவளதுநடன பாவங்கள் புல்லரைக் கவர்கின்றன. அவளை தம்முடன் மேடையில் ஆட ஒப்பந்தம் செய்கிறார். இந்நிலையில் இசாடோராவின் மீதான அதிக அன்பினால் ஓரினச் சேர்க்கைக்கும் புல்லர் துடிக்கிறாள். ஆனால் அவளை ஒதுக்கிவிட்டுச் செல்லும் இசாடோரா மற்றொரு கம்பெனியால் விலை பேசப்பட்டு புல்லருக்கு துரோகம் இழைத்து தப்பிச் சென்றுவிடுகிறாள்.
மிகுந்த மன உளைச்சலுடன் தவிக்கும் புல்லர் நட்பின் துரோகத்தாலும் தமது கலையின் இருண்ட காலத்தாலும் மீள முடியாமல் பரிதவிக்கிறாள். அவளால் நடக்கவே முடியவில்லை, போதையில் தள்ளாடி விழுகிறாள் .மனம் உடைந்து நொறுங்கி அழுகிறாள். அவளால் எப்படி ஆட முடியும். ஆனால் செட்டுகளுக்காக நிறைய செலவாகிவிட்டது. பணம் வாரியிறைக்கப்பட்டு விட்டது. இனி என்ன செய்வாள் புல்லர் ?இருட்டிலிருந்து ஒரு கனவு மலராக அவள் மறுபடியும் மலர்ச்சிக் கொள்வதும் தமது கலையின் மூலமாகத்தான். மேடையில் துயரம் ததும்ப அவள் ஆடும் கிளைமேக்ஸ் நடனத்தின் இறுதியில் புல்லர் மேடையில் விழுந்துக் கிடக்கிறாள். தமது நடனம் தோல்வியில் முடிந்ததாக அவள் நினைக்கும் போது ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். நல்ல கலையை ரசிக்க எப்போதும் தரமான ரசிகர்கள் இருப்பார்கள் எனப் புரிந்துக் கொண்டு அவர்களுக்குத் தலை வணங்குகிறாள் புல்லர்.
கண்கவரும் நடனக்காட்சிகளுடன் இனிய பின்னணி இசை பல நேரங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை நினைவூட்டுகிறது. இப்படம் சற்றே மெதுவாக நகர்வது போல் தெரிந்தாலும் அதன் நடனக்காட்சிகள் நம்மை நிமிரச் செய்கின்றன.
ஒரு கனவு மலர் பூத்திருப்பது போல் தமது நடனத்தால் வசீகரித்த அந்த நடனக்காரி புல்லர், துரோகத்தாலும் மன உழல்வினாலும் இருளில் தள்ளப்பட்ட போதும் அதிலிருந்து அவளை கலைதான் மீட்டது. கலை கனவு மலரைப் போல் அவளை இருளில் இருந்து ஒளி மிக்க மலராக மலரச் செய்து விட்டது.
-------------------------------------------------------------------------------------



THE CUT - தி கட் - ஜெர்மனி 2014
இயக்குனர் -ஃபதி அகின் ( Fatih Akin)
கடந்த 2016 திரைப்பட விழாவில் திரையிட முயற்சித்து முடியாமல் போன இத்திரைப்படம் இந்த 2017ம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்  ஜெர்மன் தூதரக மாக்ஸ் முல்லர் பவன் இயக்குனரின் உதவியால் திரையிடப்பட்டது. இத்திரைப்பட விழாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  இந்த படம் தனித்து நிற்கிறது.
மார்டின் நகரில் கதை தொடங்குகிறது.நாசரேத் என்ற பொற்கொல்லர் தமது குடும்பத்துடன் அங்கு வசித்துவருகிறார். கத்திரிக்கோல் கூர் தீட்டுவது போன்ற வேலைகளையும் அவர் செய்து வருகிறார். அவருக்கு ஒரு உதவியாளர். முதலாம் உலகப் போர் மூண்ட நேரம் அது. ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் முஸ்லீம் அல்லாத கிறித்துவ சிறுபான்மையர் கட்டாயமாக போருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் மதம்மாறி முஸ்லீம்களாக மறுக்கப்படுகிறார்கள். மறுப்பவர்களை துப்பாக்கித் தோட்டாவை வீணடிக்காமல் வாளால் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். அதுதான் கட். நாசரேத்தும் அவர் தோழர்களும் இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் சாலை செப்பனிடும் பணிக்கு ஒரு பாலைவன குன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்ரே அவர்கள் செப்பனிட்ட பாதையில் ஆர்மேனிய அகதிகள் நடந்து செல்வதைப் பார்க்கின்றனர். அதில் ஒரு பெண்ணை முஸ்லீம் வீரர்கள் பலவந்தமாக புணர்ந்து கொன்றுவிடுகின்றனர். அதன் குழந்தை கதறி அழுகிறது. போருக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை மதம் மாற்ற சுல்தான் கட்டளையிட மறுப்பவர்கள் கழுத்து அறுபட்டு சாகிறார்கள். கழுத்தை அறுக்கும் வேலைக்கு சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒரு மனிதாபிமான கைதி நாசரேத்தி்ன் கழுத்தை முழுதாக அறுத்துவிடாமல் சிறிய காயம் மட்டுமே ஏற்படுத்துகிறான். நாசரேத் மயங்கி விழுகின்றான்.( தற்காலங்களில் தீவிரவாதிகள் வீடியோவில் பத்திரிகையாளர்களையும் அப்பாவி பிணைக்கைதிகளையும் கழுத்தை அறுத்துக் கொல்லும் குருரம் நினைவுக்கு வருகிறது )
கழுத்தில் காயம் அடைந்த நாசரேத் பேச்சுத் திறனை இழக்கிறான். அவன் மனம் முழுக்க அவன் மனைவியுடன் சந்தோஷமாக இருந்த போது பாடிய ஜானோ ஜானோ என்ற இனிய பாடல் அவன் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளான தனது பதின்பருவ மகள்களையும் எண்ணி ஏங்குகிறான். அப்போது அவனை காப்பாற்றிய கைதியே அங்கு வந்து அவன் காயத்துக்கு மருந்தளித்து உணவும் நீரும் தந்து அழைத்துச் செல்கிறான், அப்போது துருக்கியின் பாலைவனக் கொள்ளையர்கள் அவர்களை வழிமறிக்கின்றனர். அவர்கள் நிலையை அறிந்து அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கி்ன்றனர். ஒருமுறை ஒருவரை கொள்ளையடிக்க முயன்ற போது அவர் தனது ஊர்க்காரர் என்பதை அறிகிறான் நாசரேத். ஆனால் அவர் ஒரு முஸ்லீம். தனது மனைவிகள், குழந்தைகளுடன் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு குதிரை வண்டியில் செல்லும் போது சிக்கி விடுகிறார். முஸ்லீம்களுடன் நேற்றுவரை சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த ஆர்மேனிய கிறித்துவரான நாசரேத்துக்கு இனம் புரியாத வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்காக சிறிது உணவை மட்டும் விட்டு விட்டு இதரப் பொருட்களைக் கொள்ளையடிக்குமாறு தனது சகாக்களிடம் செய்கையால் கூறுகிறான் பேச முடியாத நாசரேத். அப்போது அந்த முஸ்லீம் நபர் பெண்களும் குழந்தைகளும்  ரா-ச-லன் எனும் பாலைவன கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறுகிறார். இதனையடுத்து தமது குடும்பத்தைத் தேடி ரா-ச-லன் செல்ல புறப்படுகிறான் நாசரேத் ,அவனுக்கு தனது காலணிகளையும் கம்பளிப் போர்வையையும் தந்து உதவுகிறான் அவனைக் காப்பாற்ற கைதி. துருக்கி கொள்ளையர்கள் அவனுக்கு செலவுக்கு பணமும் குடிநீரும் தருகிறார்கள். .
ரா-ச-லன் கிராமத்தில் பட்டினி, நோயால் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள். பல குழந்தைகள் உயிரிழந்த பெற்றோரை புதைக்கக்கூட முடியாமல் சுருண்டுக் கிடக்கிறார்கள். போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்தான் என்ற கோரக்காட்சியை அங்கு நாம் காண்கிறோம். என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல்  பாலையின் நடுவே பரிதவிக்கும் நாசரேத்தின் நிலை பரிதாபகரமானது. அப்போது ஒரு சோப்பு வியாபாரி வழியில் அவனைக் காண்கிறார் .அவனை தனது சோப்புக் குவியலில் வைத்து மறைத்து எல்லை தாண்டி தனது ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவருடைய சோப்பு பாக்டரியில் பல ஆர்மேனிய அகதிகளுக்கு அவர் அடைக்கலம் தந்தது தெரிய வருகிறது. அவரும் ஒரு முஸ்லீம்தான். துருக்கிகளுக்கும் அவனை காப்பாற்றிய சிறைக்கைதியும் கூட முஸ்லீம்கள் தான். சாதாரண மக்களுக்கும் ஆர்மேனியர்களுக்கும் எந்த வித பகையுணர்வும் இல்லை. போரால் நிகழும் வன்முறைகளுக்கும் அப்பாவி முஸ்லீம் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுவதும் அரசியல் காரணங்களால் நிகழ்வது என்பதை நாம் உணர்கிறோம். இப்போதும் தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லீம் மக்களின் நல்வாழ்வும் நற்பெயரும் களங்கப்படுகிறது . தமது மனைவி இறந்துவிட்டதையும் தமது மகள்கள் லெபனானில் உயிருடன் இருப்பதாகவும் ஒரு தகவலை அங்கு அவன் சந்திக்கும் தனது முன்னாள் உதவியாளன் மூலம் தெரிந்துக் கொண்டு லெபனான் பயணிக்கிறான் நாசரேத்.  தமது மகள்கள் படித்த பள்ளிக்கு சென்று தேடிப்பார்க்கையில் அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டு  அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. மகள்களின வளர்ந்த தோற்றத்திலான புகைப்படமும் அவனுக்கு பள்ளியில் இருந்து கிடைக்கிறது.
அப்போதுதான் தனதுமகள்களுக்கு திருமணம் நின்று போன தகவல் கிடைக்கிறது. இரட்டைப் பிறவிகளான அந்த பெண்களில் லூசினே என்ற பெண் போர் வன்முறையில் கால் ஒன்றை இழந்து விட்டதால் அவள் திருமணம் நின்று விட்டதை அறிகிறான். தனது தங்கையை விட்டு தாமும் மணமுடிக்க விரும்பாத ஆர்சினேவும் தங்கையை அழைத்து கியூபா சென்று விட்டாள்.
கியூபா முகவரிக்கு அவர்கள் ஒரு தந்தியை அனுப்புகிறார்கள். தமதுமகள்கள் பணியாற்றும் தையல் நிறுவனம் அது. ஆனால் அதன் முதலாளியோ பதில் தந்தி அனுப்பி அந்தப் பெண்கள் தற்போது அங்கு இல்லை என்றும் எங்கே எனத் தெரியவில்லை என்றும் தந்தி மூலம் பதில் கூறுகிறார். வேறு வழியில்லாமல் கியூபாவுக்கு சென்று தனது மகளை தேட கப்பலில் கியூபா தலைநகரான ஹவானாவுக்குச் செல்கிறான் நாசரேத் லெபனான் மகாகவி கலீல் கிப்ரான் பிறந்த மண். கியூபாவோ புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பூமி இந்த ஊர்களின் காட்சிகள் நமக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன.
 அவனுக்கு கியூபாவில் அடைக்கலம் தரும் நண்பரான கிறித்துவர் ஒருவர் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டாயா எனக் கேட்கிறார். ஆம் என சைகையால் கூறுகிறான் நாசரேத் .நம்பிக்கையை இழக்காதே எனக்காக சர்ச்சுக்கு வா என அழைக்கிறார் அவர். அவனும் செல்கிறான். சர்ச்சில் தமது ஊனமான மகள் லூசியாவை மணமுடிக்க மறுத்துவிட்ட செல்வந்தனை சந்திக்க நேரிடுகிறது. ஆத்திரத்தில் அவனை ஒரு ஆளில்லாத இடத்தில் மடக்கி அடித்து உதைக்கிறான் நாசரேத், இரண்டு பெண்களும் அமெரிக்கா சென்று விட்டதையும் அறிகிறான்.
அவனிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தமது குடும்பத்தைத் தேடி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு மதுவைக் கடத்தும் கப்பலில் பயணிக்கிறான் நாசரேத்
புளோரிடாவில் அவன் ஒரு கிராமத்தில் புகுந்து அங்கு வேட்டைக்காரர்களால் விரட்டப்பட்டு ஒரு புகை ரயிலில் ஏறி தப்பும் பரபரப்பான காட்சிகளுக்குப் பிறகு ஒரு சிறிய கிராமத்தில் ஊனமான ஒரு பெண்ணை சந்திக்கிறான் .அவள்தான் தன் மகள் லூசியானா என அறிந்து கண்ணீர் சிந்துகிறான். அவள் முன்னே நடந்து செல்ல பின்தொடர்ந்து அவளை லூசியானா என அழைக் க வாயெடுக்கிறான். அதுவரை தடைபட்டிருந்த அவன் பேச்சு மீண்டும் அவனுக்கு கிடைக்கிறது. அவன் குரல் கேட்டு அவள் திரும்புகிறாள். உணர்ச்சிகரமான இந்த காட்சியில் கைத்தட்டல்கள் அரங்கை அதிர வைக்கின்றன. பாபா ( அப்பா) நீ என்னை தேடி வந்திட்டியா பாபா என அந்த மகள் உருகும் காட்சி பிள்ளைப் பாசம் எத்தகைய பேறு என்று நம்மை துடிதுடிக்க வைக்கிறது. ஊனமுற்ற தனக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்ட சகோதரி ஆர்சினி நோயால் இறந்து விட்டதாக கூறுகிறாள் லூசினி . இருவரும் ஆர்சினியின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
மிகச்சிறந்த மனித நேயம் தெறிக்கும் இப்படத்தில் தாஹிர் ரஹிம் ஆர்மேனிய அகதி நாசரேத்தாக அற்புதமாக நடித்துள்ளார். தமது மகள்களைத் தேடி விபச்சார விடுதிகளிலும்  உயிரற்ற சடலக்குவியல்களிலும் அவர் தேடிப் பரிதவிக்கும் காட்சிகள் நம்மை படம் என்பதையும் மறந்து கண்ணீரி்ல் மிதக்க வைக்கின்றன. ஜானோ ஜானோ என்ற தனது மனைவியின் காதல் குரலால் உந்தப்பட்டு பல பயணங்களுக்குப் பிறகு தனதுமகளை நாசரேத் இறுதிக் காட்சியில் சந்திப்பது ஒரு காவியப் பயணமாக மாறுகிறது.
என்னதான் போரும் மதவெறியும் இனவெறியும் மனிதர்களைப் பிரித்து ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்பவர்களாகவும் வன்முறை இழைப்பவர்களாகவும் அநீதி இழைப்பவர்களாகவும் மாற்றினாலும் மனித நேயமும் அன்பும் பாசமும் தான்  அவனுடைய சொர்க்கமயமான வாழ்க்கையை மீட்க முடியும் என்று அற்புதமான செய்தியுடன் இப்படம் முடிகிறது.





Fragements of love - பியூரிட்டோ ரிகோ-2016
இயக்குனர் - பெர்ணாண்டோ வலேஜோ (fernando vallego)
கொலம்பிய நாவலாசிரியர் ஹெக்டர் அபாத் பாசியோலின்சியின் நாவலை மையமாக வைத்த காதல் கதை. ஆயிரத்தி ஒரு இரவுக் கதைகளைப் போல் தினமும் இரவில் காதலனுக்கு தனது முன்னாள் காதலர்கள் பற்றி கூறும் ஒரு காதலியின் கதை இது.
சூசனும் ரோட்ரிக்கும் காதலர்களாக மாறுகிறார்கள். சூசன் ரோட்ரிக்கின் நண்பனின் நிச்சயம் செய்யப்பட்ட பெண். அவனுக்கு துரோகமிழைத்து இவனுடன் சரஸமாடுகிறாள். அவன் ஒரு பியானோ கலைஞன். ஆனால் அண்மைக் காலமாக ஒரு காதல் தோல்வியின் காரணமாக மனமுடைந்து தனது இசையை கோர்க்கும் வேலையை அவன் மறந்துவிட்டான். சூசனுடனான முறைதவறிய காதல் அவனுக்கு புதிய ஆசைகளையும் கனவுகளையும் மகிழ்ச்சியையும் தருகிறது .தனது இருண்ட கடந்த காலத்தை அவன் கடந்து வர முயற்சிக்கிறான். ஆனால் சூசன் எத்தகைய பெண்?  5
சூசனுக்கு ஏகப்பட்ட காதலர்கள். அவள் ஒவ்வொரு நாளும் ஒரு காதல் கதையை அவனுக்குக் கூறுகிறாள்.முதலில் அதை கேட்க தாம் விரும்பவில்லை என்று கூறும் ரோட்ரிக் படிப்படியாக அவள் வசியத்திற்கு ஆட்பட்டு அவள் தனது காதல் களியாட்டங்களைக் கூறுவதை கேட்பதில் ஆர்வம் கொள்கிறான். ஊருக்குள் குண்டு வெடிப்புகளும் வன்முறைகளும் நிகழும் போது படுக்கையறையில் இத்தகைய காதல் கதைகளின் இடையே கிடைக்கும் உடலுறவு சுகம் அவனுக்கொரு இளைப்பாறுதல் தருகிறது. ஆனால் யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான இடைவெளிகள் குறையக் குறைய, சூசன் மீதான தனது அன்பும் காதலும் அதிகரி்த்து அவள் இல்லாமல் ஒருகணம் கூட வாழ முடியாத இயலாமை அவனை உறுத்துகிறது. தமக்கும் சூசன் துரோகம் செய்து தன்னையும் ஒரு முன்னாள் காதலனாக்கி அந்தக் கதையையும் யாரிடமாவது அவள் கூறுவாள் என்று அவன் கலங்குகிறான். அவளை சோதிக்க புதிய காதலன் போல் ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அவளை உணவு விடுதிக்கு வர அழைப்பு விடுக்கிறான். சூசனும் புதிய காதலனை சந்திக்க உணவு விடுதிக்கு செல்வதால் தனது எண்ணம் சரிதான் என்று அவன் கணிக்கிறான்.
பிறகு அவளது குடியிருப்பில் மாற்று சாவி மூலம் சென்று ஒளிந்துக் கொள்கிறான் . சூசன் புதிய காதலனுடன் அங்கு வருகிறாள். இருவரும் ஆடைகளைக் களைந்து மதுவருந்தி உடலுறவுக் கொள்வதை ஒளிந்திருந்து பார்க்கிறான். கோபத்தில் வந்தவனின் காலணி ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றுவிடுகிறான்.
மறுநாள் காலையில் சூசனை சந்தித்து சண்டை போடுகிறான். பாவம் அவர் ஒரு காலணியுடன் வீட்டுக்குப் போனார் என புதிய காதலன் பற்றி சூசன் பேச ஆத்திரமும் ஆசையும் கொண்டு அவளை சோபாவில் சாய்த்து ஆத்திரம் தீர உடலுறவுக் கொள்கிறான். அப்போது அவளும் கண்ணீர் விடுகிறாள். எத்தனையோ பேரிடம் நான் படுத்திருந்தாலும் உன்னைத்தான் காதலிக்கிறேன். உன்னுடன்தான் அதிகமான நேரம் இருக்கிறேன் என்று அவள் உள்ளம் திறந்து கூறுகிறாள். அவன் அதனை நம்ப மறுத்து இனி ஒருபோதும் உன்முகத்தில் முழிக்க மாட்டேன் என்று கூறி பிரிந்து செல்கிறான். இசை உலகில் தனது எதிர்காலம் நாடி அவன் விமானத்தில் பயணிக்கும் போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவன் இறந்துவிட்டதை சூசன் கேட்கிறாள்.
சூசனாக நடித்த கொலம்பியா நாட்டின் ஆஞ்சலிக்கா பிளாண்டன் அழகான நடிகை. அதிக அளவிலான நிர்வாண காட்சிகளும் உடலுறவுக் காட்சிகளும் இல்லாத போதும் அவள் சிரிப்பும் ஒருசில காட்சிகளில் அவள் காட்டும் தொடைகளும் மார்பகங்களும் நம்மை கிறங்கடிக்கின்றன.
ஒரு கலைஞனுக்கு ஏற்படும் கிரியேட்டிவ் பிளாக் எனப்படும் மனத்தடையை காதல் மீட்பதையும் அதுவே அவனுக்கு வேறொரு மனத்தடையை ஏற்படுத்துவதையும் இப்படம் சித்தரிக்கிறது. நவீன காலத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காதலர்களுடன் இருப்பதையும் அந்த காதலர்களுக்கு எந்த மனசாட்சி குறுகுறுப்பும் இல்லாமல் துரோகம் செய்வதையும்  சூசனின் பாத்திரப்படைப்பு மூலம் அறிகிறோம். அழகான பெண்கள் ஒருவனுடன் மட்டும் இருக்க வேண்டும் என்ற நியதிகள் பொய்த்துப் போயின. அழகில்லாத பெண்கள் மட்டும் கற்புக்கரசிகளாக இருக்கலாம் போலும். அழகிகளை சுற்றி வட்டமிடுபவர்கள் ஏராளம். அவர்களில் வேண்டியவர்களைத் தேர்வு செய்து படுக்கை வரை அழைத்துச் சென்று உடனடியாக மறப்பதும் பெண்களுக்கு எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆயிரத்து ஒரு இரவுகள் என்ற அரேபிய பாலியல் கதைகள் சமகால வாழ்வுடன் பொருந்திப் போகின்றன



தனிமை - Lonely - ஈரான் 2016
இயக்குனர் -பஹாரா சதேகி ஜாம் ( Bahareh sadeghi jam)
திருமணமாகி மகிழ்ச்சியாக இல்லாத தம்பதியர் அமீர் அலி மற்றும் ஷார்சத்தின் இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகிறது .தங்கள் மகிழ்ச்சிக்காக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாள் ஷார்சத். ஆனால் உடலுறவு மூலம் அதை சாத்தியமாக்க கணவனால் இயலவில்லை. அதனால் செயற்கை முறை கருத்தரிப்புக்கு அவள் மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை நாடுகிறாள். கணவரின் விந்தணுக்களை கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க செய்யமுடியும் என மருத்துவர் விளக்குகிறார். கணவரை விந்து வங்கிக்கு அழைத்துச் செல்கிறாள் .ஆனாலும் அவள் கனவு நிறைவேறாமல் போகிறது. கணவருடைய மனநிலைப் பிறழ்வும் இடைவெளியும் அதிகரித்து விட துயரமான ஒரு முடிவை நோக்கி படம் நகர்கிறது. சற்றே சலி்ப்பையும் பொறுமையின்மையையும் ஏற்படுத்திய படம் இது. அழகான நடிகை யின் முகத்திற்காக சகித்து உட்கார வேண்டியிருந்தது.




Load - மெக்சிகோ 2016
இயக்குனர் ஆலன் ஜான்சர் காவிகா ( Allen jonnssor gavica )
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழும் கதைக்களத்துடன் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். சென்னை பளாசோ திரையரங்கில் சாய்ஸ் என்ற மற்றொரு திரைப்படம் காணப்போன போது அந்தப் படத்தை ரத்து செய்து இதனை போட்டனர் விழாக்குழுவினர்.
அரை மனத்துடன் படத்தில் போய் உட்கார்ந்தால் படம் நிமிர வைத்துவிட்டது. தாமேமி செவ்விந்தியர் இனத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஸ்பானிய உயர்குல பெண் ஒருத்தியை லோடாக பாதுகாப்புடன் அரசவைக்கு கொண்டு செல்ல பாதிரியார் ஒருவரால் பணிக்கப்படுகிறான். அந்தப் பெண் தனது கணவரைக் கொன்ற சிற்றரசரான தனது தந்தைக்கு எதிராகவும் சிறையில் அடைபட்டிருக்கும் செவ்விந்தியர்களின் புரட்சியாளனை விடுவிக்கவும் முக்கிய சாட்சியம் கூறப்போகிறாள். ஆனால் தனது அழகு ததும்பும் சுமையுடன் காடுகளில் திரியும் நாயகனின் எதிரி அவனது அண்ணன்தான். அந்த அழகியை நேசிக்கும் தளபதி அவன் அண்ணனை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களை காடுகளிலும் மலைகளிலும் அருவிகளிலும் வேட்டையாடுகிறான். என் மகள் சாட்சியம் கூற விடாமல் சிறைப்பிடித்து அழைத்து வந்தால் பாதி ராஜ்ஜியமும் மகளையும் தருகிறேன் என்கிறான் அவள் தந்தை.
அண்ணனுக்கு தம்பி மேல் என்ன பகை? அவன் மணமுடிக்க பார்த்து வைத்த பெண் தம்பியைத் தேர்வு செய்து மணமுடித்துவிட்டதால் ஆத்திரம். ஒரு ஆண் குழந்தையைப் பெற்று அந்தப் பெண் இறந்துவிட்டதையும் அந்த சிறுவனுக்குஅம்மை நோய் போட்டிருப்பதையும் வேறு சில காட்சிகளின் மூலம் நாம் அறிகிறோம்.
தன் பொறுப்பில் உள்ள ஒருசுமை என்ற அளவில்தான் அந்த அழகியை லோடு டெலிவரி பாயாக ஏற்று பயணிக்கிறான் நாயகன். வழியில் இயற்கையின் ஆபத்துகளுடன் எதிரிகளையும் அவன் சமாளிக்கும் போதுதான் அவள் மீது காதல் வயப்படுகிறான் .அவன் நேர்மை , அன்பு , திடாத்கரமான உடல்வாகு என அவளும் அவன் மீது ரகசியமாக காதல் கொள்கிறாள். இருவரிடைய கனிந்த காதலுடன் அவர்கள் பயணம் நிறைவு பெறுகிறது. அவள் இலக்கை அவள் அடைகிறாள். அவளை துரத்தி வந்த தளபதி தன் உயிரை மாய்த்து தியாகம் செய்கிறான். இந்த படத்தில் நாயகியாக நடித்த மாரியா வல்வார்டே மிக அழகான நடிகை. ஒருகாட்சியில் அருவியி்ல் உடலைக் கழுவும் போது தனது கால் அழகை மட்டும் காட்டுகிறார். படம் முழுக்க உடல் மறைக்கும் அங்கியுடன் மூடிய அழகாகவே மேகம் மறைத்த நிலவாக காட்சியளிக்கிறார் மாரியா.
தனது நோயுற்ற மகனை அருவியில் வீசியெறிந்த அண்ணனைக் கொல்லும் வெறியுடன் பாய்கிறான் நாயகன். ஆனால் எதிரிகளின் கட்டாயத்தால் அதை செய்ய நேரிட்டதை கூறும் அண்ணன் உயிரற்ற சடலத்தையே  அருவியில் எறிந்ததாக கூறுவது நல்லதொரு திருப்பம். அவனுக்கும் அம்மை நோய் பரவியிருப்பதை பார்த்து கொல்லாமல் செல்கிறான் தம்பி
அண்ணனாக நடித்தவரும் அற்புதமான நடிகராக இருக்கிறார். அவர் குதிரைகளுடன் ஓடிவரும் ஓட்டம் அபாரம். செவ்விந்தியர்களின் வீரம், உடல் பலம் திடம் ஆகியவற்றை இப்படம் உணர்த்துகிறது.





Twa-tiu-tiann -தைவான் 2014
இயக்குனர் டியன் லுன் யே ( Tian -lun-yeh)
இது தைவானியர்கள் ஜப்பானியரின் ஆதிக்கத்திற்கு எகிராக போராடிய கதை. ஆனால் நூறு வருடங்கள் பின்னோக்கி காலவெளியில் பயணிக்கும் ஒரு இளைஞன் மூலம் கூறப்படுகிறது. இதில் மெலிதான காதல் துயரம், தாய்ப்பாசம், விடுதலையுணர்ச்சி போன்ற உணர்வுகளும் சித்தரிக்கப்படுகின்றன, அழகும் திறமையும் மிக்க நடிகர்கள் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். காமிக்ஸ் கற்பனையும் கலந்த கதை. உலகம் எவ்வளவு பெரியது என்று தைவான் மக்களுக்கு ஜப்பானியர்கள் தாம் காட்டினார்கள் என்றொரு வசனம் வருகிறது. ஆனால் தைவானியர்களை மிகவும் சிறியவர்களாகவும் அதுதான் மாற்றிவிட்டது என்று வசனத்தின் அடுத்த வரி கூறுகிறது.







ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து தைவான் மீளும் உலகிலேயே அதிகமான உயரமுடைய வர்த்தக கோபுரத்தை தைவான் மக்கள் கட்டுவார்கள் என்ற தைவானி்ன் பிதாமகரான அரசியல் தலைவர் சூளூரை செய்வதை எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு வந்த பேராசிரியரும் அவர் மாணவனான கதாநாயகனும் உறுதி செய்கின்றனர்.
கடைசியில் தனது கடந்த கால காதலியை அவள் காலத்திற்கு திருப்பி அனுப்பும் நாயகன் அது உனது பொற்காலம். அதில் நீ வாழ்ந்து முடிந்துவிட்டாய். இது எனது பொற்காலம். இதை நான் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று கூறி அவளை முத்தமிட்டு விடை கொடுத்து அனுப்பிவைக்கும் காட்சி ஒரு அழகான ஹைகூ கவிதை.படத்தில் இடம்பெறும் தைவான் பாடல் ஒன்றும் அதன் நடன அமைப்பும் அற்புதம்.




The violin player - இந்தியா 2016
இயக்குனர்-  பவுதாயின் முகர்ஜி ( Bauddayeen mukherji)
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட இந்திப்படம் இது.
திரையில் பின்னணி இசைக்காக வயலின் வாசிக்கும் கதாநாயகனின் வறுமையுடன் படம் தொடங்குகிறது.அவன் மனைவி ஒரு துணை நடிகை. ஒருநாள் மும்பை மின்ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு இயக்குனர் தமது படத்திற்கு சோலோவாக வயலின் வாசிக்க இருபதாயிரம் ரூபாய் சம்பளம் பேசி அவனை அழைத்துச் செல்கிறார். சர்ச் கேட் அருகில் ஒரு பாழடைந்த மாடி வீ்ட்டில் அவர் எடுத்த நீலப்படத்திற்கு பின்னணி இசைக்கோர்ப்புக்காக அவன் வயலின் வாசிக்கிறான். அந்த நீலப்படத்தில் நடித்திருப்பது அவன் மனைவிதான்.
கனத்த இதயத்துடன் வீடு திரும்பும் அவன் தனது மனைவியை அடித்துக் கொல்கிறான். தன் வயலினை அடித்து நொறுக்குகிறான். அவள் உயிரற்ற உடல் மீது காறித்துப்புகிறான். ஆனால் அது கற்பனை, கனவுதான். கதவைத் திறந்து என்ன என்று கேட்கும்மனைவியிடம் தனக்கு வேலை கிடைத்து பணம் சம்பாதித்து வந்ததை கூறுகிறான். அவள் மகிழ்ச்சியாக கதவை சாத்துவதுடன் படம் முடிகிறது.
ART CLEANSES THE DUST GATHERED FROM EVERYDAY LIFE -கலை தினசரி வாழ்க்கையில் நாம் சேகரித்த அழுக்குகளைக் கழுவி விடுகிறது என்ற பிகாசோவின் பொன்மொழியுடன் படம் முடிகிறது.
------------------------------------------
Revelations ஆங்கிலம்-தமிழ்
இயக்குனர் விஜய் ஜெய்பால்
தமிழும் ஆங்கிலமும் கலந்த ரிவீலேசன்ஸ் படம் மந்தமான மதிய நேரத்து வெயிலைப் போல் ஆரம்பித்து சிலுசிலுவென வீசும் மாலைத் தென்றலாய் தவழ்ந்து அடர்த்தியான இருளை நோக்கி முடிகிறது. படத்தில் இளம் மனைவியாக நடித்துள்ள லட்சுமிபிரியா தனது மாடிவீட்டில் குடியிருக்கும் வயதான சேத்தன் மீது ஆசைப்படுவதுதான் கதை. சென்னையை விட்டு கொல்கத்தா வந்து குடியேறிய சேத்தன் யார், அவர் பின்னணி என்ன  , லட்சுமி பிரியாவுக்கு கணவரை விட்டு வேறொரு வயதான நபர் மேல் ஆசை ஏன், லட்சுமியின் கணவரும் ஆபீசில் தீபா என்ற பெண்ணுடன் ஆழமான முத்தங்களைப் பரிமாறி பின்னர் உடலுறவுக் கொள்ளாமல் ஓடி வந்தது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. மிகவும் எதிர்பார்த்த முடிவாகி விட்டதால் படத்தின் திரைக்கதையில் தொய்வு. அதிலும் சேத்தனின் நடிப்பு மட்டமான தொலைக்காட்சித் தொடரை நினைவுபடுத்துகிறது.அவருக்கு அழகான லட்சுமியுடன் ஒருமுத்தக் காட்சி வேறு. நம் காதிலும் மூக்கிலும் புகை வரத்தான் செய்கிறது. லட்சுமிபிரியாவின் நடிப்பு மனதில் நிற்கிறது. காட்டன் புடவைகளிலும் கையில்லாத கொல்கத்தா பாணி ரவிக்கைகளிலும் சுடிதார்களிலும் நல்ல வளர்த்தியான உடல்வாகுடன் மனதை கவர்கிறார் லட்சுமி பிரியா சந்திரமவுலி.







தமிழிலும் மாயா, கலப்படம் ,கௌரவம் . சுட்டகதை போன்ற சில  படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் இயக்குனர்கள் இவரை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழமான உணர்வுகளை மிகவும் அழகாக வெளியிடுகிறார். நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றிச் சுழலும் இப்படத்தில் 70 சதவீத வசனங்கள் தமிழில்தான் இருக்கின்றன.
இப்படம் பூசன் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் ஜெய்பாலுக்கு இது முதல் முழு நீளப் படம் . சில குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக் கருவை தேர்வுசெய்த அவர் அதில் ஆபாசத்தை கலக்காமல் ( சில முத்தக்காட்சிகள் விதிவிலக்கு) ஆண்களின் பிரச்சினையையும் ஆண்களின் பலவீனத்தைப் பயன்படுத்த நினைக்கும் பெண்களின் உணர்வுகளையும் அழகாக கூறியுள்ளார். குறிப்பாக அலுவகத் தோழியாக வரும் இளம் பெண் அர்பிதாவின் சாகச நடிப்பு, பணத்தைப் பிடுங்க பழகும் எத்தனையோ பெண்களை குறித்த எச்சரிக்கையை உருவாக்கிவிடுகிறது.
Love and other casatropies -denmark 2016
இந்தப் படத்தை யாராவது தேர்வு செய்து பார்த்தார்கள் என்றால் அவர்களைப் பாராட்ட வேண்டும். கதை சுருக்கத்தைப் படித்து படத்தைப் பார்க்கப் போனது அற்புதமான அனுபவமாக இருந்தது. படத்தின் நாயகி ரோசா ஒரு வெற்றிகரமான தெராபிஸ்ட், மனநல நிபுணி. அவள் கணவன் பிரெட்ரிக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. மெக்கானிக்கான அவன் அந்த பெண்ணுடன் வாழ்வதை அறியாமல் அந்தப் பெண்ணுக்கே மன நல சிகிச்சையளிக்கிறாள் ரோசா. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தனது கணவன்தான் என்று அறிகிறாள் ரோசா. இப்போது அந்தப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறாள். கணவரின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமலும் டீன் ஏஜ் மகள் மற்றும் சிறுவயது மகனின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமலும் தடுமாறும் அந்த நடுத்தர வயதின் தடுமாற்றங்களை, பெண்ணிய உணர்வுகளை மிகவும் அற்புதமாக வெளியிடும் கதாபாத்திரமாக ரோசா பரிணமிக்கிறது.ஒரு கட்டத்தில் ஒரே ஆணால் வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களும் நேருக்கு நேர் சந்திப்பதும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளுவதும் இருவருக்கும் இடையே இணக்கம் ஏற்படுவதும் படத்தில் அற்புதமான நிகழ்வு என்றால் மறுபுறம் கணவரைப் பழிவாங்க ரோசாவும் வேறு ஒருவனுடன் முதல் பார்வையிலேயே காமம் கொண்டு அவனுடன் உடலுறவு கொள்வதும் கணவனின் நண்பன் முத்தமிடும் போது பரவாயில்லை என்று இயல்பாக இருப்பதும் படத்தின் தன்மையை மிகவும் வேறொரு மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. நண்பனுடன் மனைவி தொடர்பு கொண்டிருப்பதாக மாடியில் சுவர் ஏறி வந்து சத்தம் போடும் கணவன் தொபுகடீரென கீழே விழுந்து விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவது துயரமான சிரிப்பை வரவழைக்கிறது. அதே மருத்துவமனையின் இன்னொரு வார்டில் தான் அந்தப் பெண்ணுக்கும் பிரசவம் நடக்கிறது. தனது கணவனின் காதலிக்குப் பிறந்த குழந்தையை எடுத்து கணவரிடம் காட்டுவதற்காக ரோசாசெல்வதுடன் படம் முடிந்துவிடுகிறது. மிகவும் கவித்துவமான ஒரு முடிவுக்கு முன்னோட்டமாக ரோசாவின் இரண்டு குழந்தைகளும் பிறக்கப் போகும் தங்கள் தம்பி பாப்பாவுக்காக பொம்மை செய்து அனுப்பி வைப்பதைச் சொல்லலாம்.
ரோசாவாக நடித்துள்ள கிறிஸ்டினா அல்பெக் தமது நடிப்பால் நம்மை படத்தின் இறுதிவரை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ஒரு காட்சியில் அவர் முழு உடலையும் நாம் பார்க்கிறோம். கணவராக நடித்தவரும் முதிர் காதலியாக நடித்த மற்றொரு நடிகையும் தங்கள் பாத்திரங்களை நன்றாக உணர்ந்து நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் தாயுடன் வாக்குவாதம் செய்து தனது மேல் சட்டையை அத்தனை பேர் மத்தியிலும் அவிழ்த்து வீசும் இளம் பெண்ணாக நடித்தவர் பாத்திரம் இன்றைய இளம் தலைமுறையின் அப்பட்டமான வெளிப்பாடு.
Personal shopper - France 
மவுரீன் என்ற இளம் பெண் கடை கடையாக சென்று விதம் விதமான கவுன்களை வாங்குகிறார். பர்ஸ்கள், காலணிகள், லிப்ஸ்டிக் போன்ற அலங்கார சாதனங்களை பை பையாக வாங்கிக் கொண்டு வருகிறார். இதுதான் அவர் தொழில். பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும் .அதுவும் விலையுயர்ந்த நகைகள், ஆடம்பர ஆடைகளை வாங்கிக் குவிப்பதென்றால் சொல்லவும்வேண்டுமா.. .அதையே தொழிலாகக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படிஇருக்கும்? அவள் வாங்கும் அந்த ஆடைகளும் ஆபரணங்களும் அவளுக்கானது அல்ல. அவளது எஜமானியான கைரா என்ற நடிகைக்கானது. மவுரீனுக்கு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அறியப்படாத ஆவிகளிடம் இருந்து அவள் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆவியுடன் உரையாடுகிறாள். காதல் வயப்படுகிறாள், பேய்க்கதையாகவும் மர்மக்கதையாகவும் செல்லும் திரைப்படம் கிளைமேக்சில் உளவியல் ரீதியான படமாக மாறிவிடுகிறது. இப்படத்தின் இயக்குனர் ஆலிவர் அசாயஸ்.
படவிழாவில் திரையிடப்பட்ட பல படங்கள் சுமார் ரகம் என்று பொதுவான கருத்து இருந்தாலும் சன் ஆப் சால், சேல்ஸ் மேன் போன்ற பிரசித்தி பெற்ற ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் அதிகமான படங்களைப் பார்க்க முடியாமல் அங்கும் இங்கும் திரையரங்குகளை நோக்கி அலைய வேண்டியதைத் தவிர்த்திருக்கலாம்.
திரைப்பட விழாவில் பார்க்கும் படங்களைப் போல் வேறு எங்கும் இத்தகைய படங்களைப் பார்க்க முடியாது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. குறைகள் இருப்பினும் சினிமாவை ஆழமாய் நேசிக்கும் ஒரு ரசிக மனத்தால் இதை புறக்கணித்துவிட முடியாது


Sunday 5 March 2017

ஷாராஜ் கவிதைகள்

நண்பர் ஷாராஜின் கவிதை நூல் கௌதம புத்தனின் கசாப்புக் கடை வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் பாமரன், வாமு கோமு , ஸ்ரீபதி பத்மனாபா, கவிஞர் மகுடேஸ்வரன் உள்ளிட்டோருடன் கலந்துக் கொண்டு நூலைப் பெற்று உரை நிகழ்த்தினேன்
ஷாராஜின் கவிதைகள் எதிர்மனநிலை கொண்டவை. தஞ்சை ப்ரகாஷூடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் சொந்த வாழ்வின் அலைக்கழிப்புகள், அவதானிப்புகளும் ஒரு கலைஞனை எதிரான மனநிலைக்கு கொண்டு செல்வதை குருதத்தின் பியாசா படத்தை மேற்கோள் காட்டி பேசினேன். இந்த வகையில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஷாராஜ் தான் முன்னோடி என்றும் குறிப்பிட்டேன்.

Thursday 12 January 2017

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு

புத்தகக் கண்காட்சிக்கு மீண்டும் இருமுறை சென்று வந்தேன். சினிமா, கவிதை புத்தகங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன. மு.முருகேஷின் ஹைகூ ஆய்வு போன்றவற்றையும் அதன் உழைப்பு கருதி வாங்கினேன்.
நற்றிணை பதிப்பகம் யுகனுடன் சிறிது நேரம் பேசியதி்ல் பதிப்புத்துறையிலும் தமிழ் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஈடுபாடும் பிரியமும் அளவற்றது எனத் தெரிந்துக் கொண்டேன். இப்படி ஒரு வாசகர் பதிப்பாளராக இருப்பது எழுத்தாளர்களுக்கு பெரும் பேறு. அவர் சினிமா பற்றி வெளியிட்ட ஒரு புத்தகம் விலை ரூ 300 தான் ஆனால் அதன் அச்சும் தரமும் இதுவரை தமிழ்ப் பதிப்புலகம் காணாதது.
பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்புகள், அசோகமித்திரனின் கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் மிகவும் நேர்த்தியாக வெளியிட்டுள்ள யுகன் ஜெயமோகனின் மகாபாரதத் தொடரையும் அற்புதமாக வெளியிட்டுள்ளார். இப்படியெல்லாம் புத்தகங்கள் அச்சாக வேண்டும் என்ற கனவு எந்த எழுத்தாளனுக்குத்தான் இல்லை. என்னுடைய புத்தகங்கள் சிலவற்றையும் நற்றிணை மூலம் வெளியிட முயற்சிக்கிறேன்.
யுகனுடன் பேசும் போது சந்தித்த இன்னொரு முக்கிய நபர் பல்லடம் மாணிக்கம் அவர்கள். விருதாச்சலத்தில் மிகப்பெரிய நூலகம் வைத்துள்ளார். திருக்குறள் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். கோவை ஞானியின் களம் கூட்டங்களின் போது தொண்ணூறுகளில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீண்ட இடைவெளியில் நோயாலும் வயதின் முதிர்வாலும் சிறிய தளர்ச்சி உடலில் இருந்தாலும் அவருடைய அதே ஆர்வத்தை காண முடிந்தது. தீராநதியில் வெளியாகும் எனது சினிமா கட்டுரைகளை படித்து வருவதாக கூறினார்.
அதே போல் எழுத்தாளர் தேவகாந்தனை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. பழைய எழுத்தாளர்கள் நண்பர்கள் என புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. கௌதம சித்தார்த்தன், கால சுப்பிரமணியன், பாஸ்கர் சக்தி, என எத்தனையோ நண்பர்களை மீண்டும் பார்ப்பதில் மனம் மகிழ்ந்து வந்தேன்.
வரும் வழியி்ல் வழக்கம் போல் பழைய புத்தகங்களை வேட்டையாடினேன்.

-----------------------------------
மறுநாளும் புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் சூர்யராஜனுடன் சென்றிருந்தேன். முன்னாள் சினிமா இயக்குனரான அவர் பழைய பாசத்தில் பியூர் சினிமா அரங்கில் இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் நூலை வாங்கினார். நான் காலச்சுவடு பதிப்பகத்தில் சுந்தர ராமசாமி நேர்காணல்கள், நானும் என் எழுத்தும் போன்ற நூல்களை வாங்கினேன். எஸ்.சண்முகத்துடன் சிறிது நேரம் பேசினேன். எல்லா நண்பர்களும் கிடங்குத்தெரு பற்றி விசாரிக்கிறார்கள். அந்த நாவலின் இடத்தை வேறு எந்த புத்தகமும் ஈடு செய்யவில்லை என்ற நண்பர்கள் சிலரின் கருத்து நீண்ட யோசனையை ஏற்படுத்தியது.
 இன்னொரு நாவல் விரைவில் வெளியிட வேண்டும். கிடங்குத் தெருவை விடவும் பெரிதாகவும் ஆழமாகவும்......எழுதிக் கொண்டிருக்கிறன்.




சந்திப்பு - அம்பை

எழுத்தாளர் அம்பையின் கதைகள் மீது எனக்கு இளம் வயது முதலே ஈர்ப்பு உள்ளது. சென்சிபல்என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான இலக்கியம் அவருடையது. அவர் யார் எனத் தெரியாமல்தான் பல ஆண்டுகளாக அவர் கதைகளை சிற்றிதழ்களிலும் பின்னர் காட்டில் ஒரு மான், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற தொகுப்புகளிலும் வாசி்த்திருக்கிறேன். நண்பராக இருந்த ஜெயமோகன் நடத்திய சொல்புதிது இதழில் அம்பை கதைகளைக் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சியின் விருட்சம் அரங்கில் தற்செயலாக அம்பையை சந்திக்க நேர்ந்தது. அழகிய சிங்கர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அட நீங்கதானா செந்தூரம் ஜெகதீஷ் என மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிய அவர், எனது கிடங்குத் தெரு நாவலை மிகவும் விரும்பியதாக கூறினார். ஐ லவ் தட் நாவல் என்று அவர் கூறுவதைக் கேட்க எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சுந்தர ராமசாமியும் அந்த நாவலை விரும்பியிருக்கிறார் என்று காலச்சு வடு கண்ணன் முன்பு எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிந்தது. பிரம்மராஜனும் காலச்சுவடு கட்டுரையில் அந்த நாவலை குறிப்பிட்டார். நாஞ்சில் நாடன் மிக சுவாரஸ்யமான இலக்கியப் படைப்பு எனப் பாராட்டியிருக்கிறார். கோவை ஞானி, பிரபஞ்சன், க.மோகனரங்கன் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது எனக்கு மிகவும் பெருமையானதுதான். அம்பையும் இந்தப்பட்டியலில் இணைந்தார். அந்த நாவல் போதிய கவனம் பெறாமல் போய்விட்டதாக ஒரு சிறு ஏக்கம் இருக்கிறது. மறுபதிப்புக்கும் தயாராகி வருகிறேன். நான் அந்த நாவலைப் பற்றி எழுதுகிறேன் என்றார் அம்பை. கடைசியில் அவரிடமிருந்து விடைபெறும் போதும் மகிழ்ச்சியை தெரிவித்த அவர் இந்தியில் உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறினார்.( மஜா ஆயா அம்பை எனும் ஆளுமையிடம் பேசிய சில மணித்துளிகள் முக்கியமானவை. இலக்கியத்தில் இதையெல்லாம் யாராவது பதிவு செய்தால் தேவலாம்.

Saturday 7 January 2017

புத்தகக் கண்காட்சி 2017

இரண்டாவது நாளிலேயே புத்தகக் கண்காட்சிக்குப் போவது வழக்கம். இம்முறையும் சென்றேன். காரணம் அதிக கூட்டமில்லாத நிலையில் பொறுமையாக புத்தகங்களைத் தேடலாம் என்பதே. கூட்டத்தில் தேடுவது சிரமம் ,மேலும் விரும்பும் விரும்பாத நண்பர்கள் சூழ்ந்துவிடுவார்கள். சிலரைத் தவிர்க்க முடிந்தாலும் சிலரைத் தவிர்க்க முடியாது. சிலருடன் பேச விரும்பினாலும் நேரம் இருக்காது. இப்படிப்பட்ட சிக்கல்கள் தொடக்க நாட்களில் இருக்காது.
க்ரியா பதிப்பகத்தில் சார்லஸ் பௌதேலரின் கவிதை நூல், மணற்கேணி வெளியிட்ட தேன்மொழியின் மூன்று கவிதைத் தொகுதிகள் , முத்துகாமிக்ஸ் அரங்கில் இரண்டு இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், இரண்டு சிஐடி லாரன்ஸ் டேவிட் காமிக்ஸ், குதிரைவீரன் பயணம் வெளியிட்ட சி.மோகன் சிறப்பிதழ், படச்சுருள் ,நிழல் சினிமா இதழ்கள், எடிட்டர் பி.லெனின் எழுதிய சினிமா ரசனை புத்தகம் போன்ற நூல்களை வாங்கி வந்தேன்,கடலில் இது கையளவுதான்.

எஸ்,ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதாவின் அனைத்து நூல்களையும் வாங்க வேண்டும். புதிய நாவல்களை வாங்க வேண்டும். சினிமா தொடர்பான புத்தகங்களையும் க்ரியா அகராதியையும் டாக்டர் இல்லாத இடத்தில் நூலையும் பூமணியின் அஞ்ஞாடியையும் சாகித்ய அகாடமி வெளியீடான தமிழ் இலக்கிய வரலாறு ( சிற்பி, நீல பத்மனாபன் தொகுத்தது ) அகநி வெளியீடான சிவனடியின் வரலாற்று தொகுதிகள், பெண் படைப்பாளிகளின் நூல்கள், பாலகுமாரன் சுஜாதாவின் சில புத்தகங்கள், மனுஷ்யபுத்திரன் கவிதைகள், பிரமீள், பிரம்மராஜன் தொகுப்புகள் என வாங்க வேண்டிய புத்தகங்கள் ஏராளமாக கண்ணில் தட்டுப்பட்டன.
பெரும்பாலும் புத்தகங்கள் விலை 400, 500 என இருப்பதால் வாங்க இயலுவதில்லை, ஒரு சில மட்டும் அடுத்த ரவுண்டில் வாங்குவேன்.

தமிழினி பதிப்பத்தில் வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்துப் பேசினேன். மற்றபடி புத்தகக் கண்காட்சியில் ஈர்ப்பும் ஆர்வமும் குறையத் தொடங்கியுள்ளது .பணமி்ன்மை, எனது புத்தகங்கள் வெளி வராமை, வேலை குறித்த எதிர்காலம் முதுமை குறித்த கவலைகள், இருக்கும் புத்தகங்களையே படிக்க முடியாமல் பராமரிக்க முடியாமல் இருக்கும் இயலாமை என பலவித காரணங்கள் இருக்கலாம். எழுத்தாளர்களின் போலியான முகங்களை கசப்பான அனுபவங்களூடாக கண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம். நல்ல எழுத்தாளர்கள் நல்ல மனிதர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனமாக இருக்கிறது. பதிப்பாளர்களோ கடைந்தெடுத்த அயோக்கிய கொள்ளையர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கசப்பான அனுபவம், நல்ல பதி்ப்பாளர்கள் நல்ல வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். வியாபாரிகளுடன் எனக்கு ஒருபோதும் ஒட்டுதல் இருந்ததில்லை.
ஆனாலும் புத்தகங்களுடனான உறவு முடிவதே இல்லை. புத்தகக் கண்காட்சி முடித்து திரும்பும் வழியில் எனக்கு மட்டும் தெரிந்த ஒரு பழைய புத்தகக் கடையில் பாலிவுட் சினிமா பற்றிய இரண்டு ஆங்கில நூல்கள், சில ஆங்கில நாவல்கள், ஏராளமான ஆங்கில பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு இரண்டு புத்தக மூட்டைகளுடன் வீடு திரும்பினேன். இரண்டாவது மூட்டையின் செலவு வெறும் ரூ 150 மட்டும்தான்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...