Tuesday, 20 October 2020

35 ஆண்டு இலக்கிய வாழ்வு -செந்தூரம் ஜெகதீஷ்

35 ஆண்டுகள் இலக்கிய வாசிப்பு ....வீடு வீடாக ,கூட்டம் கூட்டமாக சென்று சி.சு.செல்லப்பா,எம்.வி.வெங்கட்ராம்,வெங்கட் சுவாமிநாதன், அசோகமித்திரன்,கோவை ஞானி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சுஜாதா, ஞானக்கூத்தன்,இன்குலாப்,தமிழன்பன்,மு.மேத்தா,நா.காமராசன்,வைரமுத்து,பொன்னீலன், பிரபஞ்சன் உள்பட நூற்றுக்கணக்கான ஆளுமைகளை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். என் பெயர் தெரியாத யாரும் இலக்கிய உலகில் இருக்க மாட்டார்கள். இருப்பினும் எல்லா பட்டியல்களிலும் என் பெயரை பெத்த பெருமாள்கள் யாரும் சொல்ல மாட்டார்கள். என் பெயரையோ என்னுடன் பல ஆண்டுகளாக பழகியதையோ மறப்பார்கள். அல்லது மறைப்பார்கள்.நான் நாள்தோறும் எழுதுவதை வாசிக்க எனக்கொரு வாசகப் பரப்பு விரிவடைந்து கொண்டு இருப்பது குறித்தும் கவனிக்க மாட்டார்கள். பட்டியலில் பெயர் இல்லை என்பதல்ல என் குறை. பட்டியலிடும் போது பெயர்கள் விடுபடுவது இயல்பு. நானும் தமிழின் முக்கிய கவிஞர்கள் என வாசிப்பு அனுபவத்தில் 200 பெயர்களைப் பட்டியலிட்ட போது குறைந்தது 50 பேரை விட்டு விட்டதை நிதர்சனமாக உணர்ந்தேன். ஆனால் என் இருப்பையே இல்லாமல் செய்கின்ற தமிழ்ச் சூழலின் கோர முகம்தான் எல்லோரிடமும் தெரிகிறது. எனது எழுத்துலக வாழ்வில் இரண்டு விருதுகளையும் என்னுடன் நூறுசதம் இணக்கம் கொண்ட ஆறேழு நண்பர்களையும் எந்த ஒரு நல்ல கருத்துக்கும் படைப்புக்கும் மனம் நிறைந்த வரவேற்பு கூறும் சில அபூர்வமான வாசக நண்பர்களையும் பெற்றுள்ளேன்.பொருள் இழப்பு காலம் இழப்பு என கணக்கிட்டால் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகத் தெரியலாம். ஆனால் இதைவிட ஓர் அர்த்தப் பூர்வமான வாழ்க்கையை வேறு எப்படி வாழ்ந்த போதும் நான் அடைந்திருக்க மாட்டேன்.கேத்தரீன் மான்ஸ்ஃபீல்ட் என்ற ஆங்கில எழுத்தாளர் கூறியது போல நாம் என்னவாக ஆகிறோம் என்பது முக்கியமல்ல. நாம் என்னவாக இருக்கிறோமோ அதுவே முக்கியம்.இன்றைய என் வாழ்க்கை ஏக்கங்களும் போதாமைகளும் நிரம்பியதாக இருந்த போதும் என் கவிதையில் கூறியது போல எனக்கான இருளில் மறைந்துள்ளது எனக்கான ஒளி.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...