Monday 30 April 2012

காதலியைக் கொல்லும் வெறி

அண்மையில் வெளியான திரைப்படப் பாடல்கள் பலவற்றில் காதல் தோல்வி, பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்கள், கொலைவெறி போன்ற சப்ஜெக்ட்டுகள் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இது முந்தைய காலத்திலும் இருந்தது. எங்கிருந்தாலும் வாழ்க பாடல்தான் தோற்றுப்போன காதலர்களின் தேசிய கீதமாக இருக்கிறது. ஆனால் ஒரு நுட்பமான வித்தியாசத்தை அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே நம்மால் உணர முடிகிறது.
முந்தைய தலைமுறை ரசித்த காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பாட்டில் சுய இரக்கம் எஞ்சியிருப்பதை காணலாம். மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர் தான் யாரோ...உன்னை சூடி முடித்ததும் பெண்தானே பின் தூக்கி எறிந்ததும் அவள்தானே என்று ஏ.எம்.ராஜா அருகில் வந்தாள் பாடலில் பாடியதும் சுய இரக்கம்தான். சொன்னது நீதானா என்று உருகும் பெண் குரல், நீயில்லாத உலகத்தில் நிம்மதி இல்லை என்றும் எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்றும் காதலால் கசிந்துருகியது. ஆணுக்கு பெண்ணாலும் பெண்ணுக்கு ஆணாலும் காதலில் இன்பமும் துன்பமும் ஏற்படுவது சங்க காலம் தொட்டும் அதற்கு முன்பும் இருந்தது என்றும் கூறலாம். ஆதாமின் முதுகெலும்பை உடைத்துத்தானே கடவுள் பெண்ணைப் படைத்தான்.
ஆனால் முன்பெல்லாம் காதலுக்காக கசிந்துருகிய காதலர்கள் இப்போது கொலை வெறிக்கு மாறியது எப்படி. அதுதான் இந்த தலைமுறையிடம் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மாறுதல்.
கண்ணதாசனும் வாலியும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாட்டு எழுதிய காலங்களில் பெண் என்பவள் ஆணுக்குத் துன்பம் அளிப்பவளாக இருந்தாள். அதனால்தான் வசந்தமாளிகையில் சிவாஜிகணேசன், எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று கதறினார். புதிய பறவையில் பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்று சபித்தார். காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி என்று அதே வசந்தமாளிகையில் கேட்டார் கண்ணதாசன். அதே போல வானம்பாடியில் கடவுளை அழைத்து வந்து காதலில் மிதக்க வைத்து ஆடடா ஆடு என்று ஆட்டி வைப்பேன் என்றும் அவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான் என்றும் கவியரசின் பேனா எழுதியது.
அன்பே வா படத்தில் பாடல் எழுதிய வாலி வான்பறவை தன் சிறகை எனக்குத் தந்தால் வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன் என்றார்.
இந்தக் காதலர்கள் எல்லோரும் பெண்ணை கொல்ல வேண்டும் என்றும் பழிவாங்க வேண்டும் என்றும் கூறவில்லை. அளவற்ற காதலால் கடவுளையே திட்டினாலும் காதலியை குறை கூறவில்லை. காதல் உண்மையாக இருந்ததுதான் காரணம்.
ஆனால் இப்போதைய பாடல்களில் எவன்டி உன்னைப் பெத்தான் கையில் கிடைச்சா செத்தான் என்றும் அடிடா அவளை வெட்டுறா அவளை தேவையே இல்லை என்றும், வை திஸ் கொலைவெறிடி என்றும் வரிகள் இடம்பெறுகின்றன. இதனை இளைய தலைமுறையினர் பித்துப் பிடித்தது போல பாடித் திரிகின்றனர்.
என்னதான் நடக்கிறது.? ராணி இதழில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பேட்டியளித்தார். அதில் ஆண்கள்தான் இப்போது பெண்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களின் காதலில் உண்மை இல்லை. பாய்பிரண்டு செலவு செய்பவனாக மாறி விட்டான். போரடித்தால் ஈசியாக கழற்றி விட்டுவிடுவார்கள். செல் நம்பரை மாற்றுவதும் இடத்தை மாற்றிக் கொள்வதும் பெண்களுக்கு கை வந்த கலை. போனால் போகட்டும் என்று தொல்லை தராத சிலரை கட் பண்ணாவிட்டாலும் அவனை துன்புறுத்த வேறு வழிகளை கையாள்வார்கள். அவன் எதிரிலேயே வேறு பாய்பிரண்டுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். வண்டியில் ஒருவனுடன் போகும்போதே இன்னொருவனுடன் மொபைலில் சிரித்தபடி போகும் பெண்களை சாலையில் நிறைய காண முடிகிறது.
அண்மையில் பார்த்த காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு பாட்டு வருகிறது. இட்ஸ் ஓவர் .இட்ஸ் கான் என்று அந்தப் பாட்டு போகிறது. உறவு முடிந்துவிட்டதால் பல ஆண்கள் இப்படித்தான் பெண்களை எண்ணி எண்ணி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிக்காக தாஜ்மகால் கட்டியவன் இருக்கான். ஆனால் ஒரு செங்கல்லாவது எடுத்து வச்ச பொண்ணு இருக்காளா என்றும் ஒரு சினிமா பாட்டு கேட்கிறது.
அஜித் நடித்த தீனாவிலும் பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை என்று ஒரு வரி வருகிறது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்திலும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா பாட்டும் அதற்கு முன்பே மௌனம் பேசியதே படத்திலும் பெண்களின் துரோகம் பற்றி பாடித் தீர்த்து விட்டார். உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய் என விஜய்யும் யூத் படத்தில் கேட்டார்.
நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று டி.ராஜேந்தர் போல பாட இன்றைய தலைமுறை தயாராக இல்லை. எவன்டி உன்னைப் பெத்தான் என்றுதான் சிம்பு பாடுகிறார். இந்த மாற்றம் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் என்றுதான் தோன்றுகிறது.

பெண்களே ஜாக்கிரதை. ஆண்களின் கொலைவெறியை புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்னால் ஆண்களின் கண்ணீர் மட்டுமில்லை. ஆசிட் பாட்டில்களும் அரிவாள்களும் சுத்தி சுத்தி வருகின்றன.

அண்மையில் சிம்புவின் பாடலுக்காக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் போது முன்பு எழுதிய இ்க்கட்டுரை அர்த்தமுள்ளதாகியுள்ளது.


Friday 27 April 2012

எனக்குப் பிடித்த எனது கவிதைகள்

பூமிப் பந்து

பொய்களுக்கு எதிராகப் போராடிப் போராடி சலித்துவிட்டது.
ஸ்தூலத்தில் நிலைபெறாத வாழ்வு
சொர்க்கத்தில் எக்கேடு கெட்டால் என்ன?
பூமிக்கு பாரமாக நான்
எனது தோள்களிலோ
பூமியின் பாரம்.
பூமியைப் பந்து என்பார்கள்.
தேர்ந்த ஆட்டக்காரர்களுக்கு அது சரிதான்.
நானோ பார்வையாளன்.
எல்லோரும் சேர்ந்து என்னை ஏன் தோற்கடித்தீர்கள் ?

முகாரி

அனுபவத் துணுக்குகள், சதைகளுடன்
சிதறிக் கிடக்கும்
வாழ்க்கை வீதிகள்.
காலமரங் கொத்தியின்
ஓலம் எதிரொலிக்கும்
கானகப் பிரபஞ்சத்தில்
பாதை தவறிய பயணங்கள்.

வானத்தில் வட்டமிடும் வல்லூறுகளால் பரவும்
நிணத்தின் வீச்சம்.

எங்கோ பூத்து மணக்கும் ஓரிரு பூக்களின் வாசனையும்...
மௌனங்களில் புதைந்த அழுகைகளை
சுமந்து திரியும் எனது சிரிப்பலைகள்.

தெறித்து விழுந்த கணங்களில் தனதாவதைத் தேர்வு செய்ய இயலாத
பலவீனம்.

உடைந்து நொறுங்குகின்ற நேரங்களும் உண்டு.

காலப் பரிணாமத்தை மனப் பரிமாணங்களால் செரிக்கவே முடிவதில்லை.
தூர்வார முடியாத சகதிகளால் நிரம்பி வழியும்
கிணறுகளில்
அந்தரத்தில் தொங்கும் வாளியாய் வாழ்நாட்கள்.

நோய்ப்பட்ட மனதுக்கு காய்ச்சிய கம்பிகளையே
பாய்ச்சிப் பார்க்கிறார்கள்.

முகாரியே பாடுவதால்
அனுதாப வேடமணிந்து வரும்
வேட்டைக்காரர்களிடம்
எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் என் பிள்ளை மனம்.

எனதேயான சோகங்களையும்
சிலுவைகளையும்
உயிர்த்தெழுகிற சாபம் வேண்டாமல் சுமந்து
கரைந்து காணாமல் போகிற ஆசையுடன்
அறையப்பட்ட ஆணிகளில் தொடர்கிறது எனது தவம்.

வலியுடன் நிகழ்ந்தன யாவும்
செதில் செதிலாய் நடந்த உடைப்பு
சுக்குநூறாய் சிதறியது வாழ்க்கை.
காக்கைச் சிறகுகளில் செதுக்கப்பட்ட
கவிதைக் கனவுகள்
குரூரமாகப் பிடுங்கியெறியப்பட்டன.

மறுக்க முடியாத வலிய மௌனத்தில்
வலியுடன் நிகழ்ந்தன யாவும்.
நசுங்கிப் போன ஆன்மாக்களுக்கு நினைவுத் தூண்
யார் எழுப்புவது ?

யாவும் மறக்கப்படும்
ஒரு யுகப் புழுக்கத்தில்
யார் வியர்வைக்கு யார் விசிறுவது ?

தீய்ந்து கருகிய கனவுக் குவியல்களின்
தீசல்களிலிருந்து
ஏதேனும் ஒரு கங்கு அணையாதிருக்கத்
தேடித் துழாவும் கண்ணீரை
யார் அர்த்தப்படுத்துவது ?

சும்மா போய்க் கொண்டிருப்பவனையும் அருகழைத்து
அறை விட்டு அனுப்பும் வாழ்க்கை.

மீண்டும் மீண்டும் துரோகங்களின் சாட்டையில்
சுழலுகின்ற இந்த பம்பரத்தின் ஆட்டம் தள்ளாட்டமே.
ஆயினும் அதுதான் அதன் நடனம்.


Wednesday 25 April 2012

க.நா.சுப்பிரமணியம் என்ற இலக்கிய ஆளுமை

கநா.சு என்ற இலக்கிய ஆளுமை புத்தக வாசிப்பு என்பது ஒரு ரசனையாக இருந்த காலம் இப்போது இல்லை. பைண்டு செய்த தொடர்கதைகளின் காலம் முடிந்துவிட்டது.பேஸ்புக்கும் டிவிட்டரும், ஷாப்பிங் மால்களும் இளைஞர்களின் ஏரியாவாகி விட்டது.புத்தக வாசிப்பின் இடத்தை அசட்டுத்தனமான பெரிய பத்திரிகைகளும் சீரியல்களும் அபகரித்துக் கொண்டன.ஆயிரம் பிரதிகள் புத்தகம் அச்சிட்டு முந்நூறு பிரதிகளே விற்று, வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்கும் படைப்பாளிகளும் இப்போது குறைந்து விட்டனர். இணைய வலைப் பூ மூலம் உலகம் முழுவதும் நண்பர்களை இணைத்துக் கொண்டு துபாய், கனடா, மலேசியா என உலகம் சுற்றும் எழுத்தாளர்கள் எப்படியோ தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டுவிட்டனர். சாக்கடையிலிருந்து அழுகிய ஆப்பிளை எடுத்த புதுமைப்பித்தனின் சேரிக் குழந்தைகள் இப்போது வளர்ந்து போர்ட்டிகோவில் காரில் இருந்து இறங்கிக் கொண்டுள்ளனர். (இந்த வரி நண்பர் ஆர்.மோகனரங்கனுக்குரியது.) எழுத்து என்பது தமிழ்ச்சூழலில் பணம் பெயராத காரியமாகி விட்டது.எந்த தமிழ்ப் படைப்பாளியும் இன்று எழுத்தை ஜீவனோபயமாக கருதுவதில்லை.அரசியல், திரைப்படப் பாடல், தொலைக்காட்சி, வணிகம் என்று அவர்கள் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டனர்.சினிமா முதல் ஜீன்ஸ் கடைவரை எழுத்தாளர்கள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தன் எழுத்தை நம்பி ஒருமாதம் கூட குடும்பம் நடத்த முடியாது என்பதில் எல்லோருமே ஓரளவு தெளிவு பெற்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில் வாசிப்பதற்காகவே வாழ்ந்து வந்த அரிய மனிதரான க.நா.சுவின் நூற்றாண்டு நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருவாலங்காடு எனும் கிராமத்தில் வசித்த நாராயணசாமி என்ற பிராமணருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் நூலகங்களுக்குச் சென்று படிப்பதிலும் சிறுவர்களை சேர்த்து வைத்து கதை சொல்வதிலும் ஈடுபாடு செலுத்தினார். சிதம்பரத்தில் படித்து பட்டம் பெற்ற அவர் 1965 முதல் 85ம் ஆண்டு வரை டெல்லியில் வாழ்ந்தார். பின்னர் இறுதிக்காலம் வரை சென்னையில் வசித்தார். நாள்தோறும் மிக அதிகப்படியான நேரத்தை படிப்பதற்கும் எழுதுவதற்கும் செலவிட்ட அபூர்வ மனிதர் க.நா.சு. இதனால் அவரை பொறுப்பற்றவர் என்று சிலர் கூறியதுண்டு. இவ்வுலகின் ஒவ்வொரு காரியமும் தன்போக்கில் நடந்தேறும் என்பதும் அதில் தனியொரு மனிதனின் பொறுப்பு என்பது எத்தனை சிறிய பாத்திரம் என்றும் அறியாதவரல்ல க.நா.சு. வாசகராகவும் எழுத்தாளராகவும் திருப்தியடையாத க.நா.சு. தமிழ்நாட்டு வாசகர்களை உய்விக்க விமர்சகராகவும் மாறினார். இலக்கிய விமர்சனத்தின் முக்கியமான நோக்கம் இலக்கியத்துக்கு உதவி செய்வதுதான் என்றும் அவர் கூறிவந்தார். பட்டியல் போடுவதில் பிரசித்தி பெற்றவராக விளங்கிய க.நா.சு தமது பட்டியலில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் யாவரும் இன்று அவரவருக்கான மதிப்புடன் விளங்குவதைப் பார்த்தால், க.நா.சு.வின் ரசனை, தீர்க்கதரிசனம், நேர்மை ஆகியவை குறித்து விளங்கும். அவரது பட்டியல்கள் சுயவிருப்பு வெறுப்பு சார்ந்தவையல்ல. அவை ரசனையின் வெளிப்பாடுகள். பொய்த்தேவு க.நா.சு.வை படைப்பாளியாகவும் நிலைநிறுத்திய நாவல்.இது சாதியத்தை அப்பட்டமாக போற்றும் நாவல் என்று இடதுசாரிகளாலும் பெரியாரியவாதிகளாலும் இதனை தூற்றினர். கைலாசபதியும் க.நா.சு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். சாதியின் கீழ்மையை அகற்ற பொருளாதார உயர்வு பெற வேண்டும் என்றும் பிராமணியமே சிறந்த வாழ்க்கை நெறி என்று இந்நாவல் கூறுவதாக விமர்சகர்கள் கடுமையான தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் பொய்த்தேவும் நீங்காத இடம்பெற்றுவிட்டது. விமர்சித்த கைலாசபதி போன்றவர்கள்தான் காலாவதியாகிவிட்டனர். க.நா.சுவின் ஒருநாள், தாமஸ் வந்தார், சர்மாவின் உயில், பித்தப்பூ போன்ற நாவல்களும் பாராட்டைப் பெற்றன. அவதூதர் நாவலில் சித்தர் வாழ்க்கை சித்தரிக்கப்படுவதை கோவை ஞானி விரிவாக எடுத்துரைத்துள்ளார். சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஆன்மீகம் துணைக்கு வரும் என்று ஞானி,  க.நா.சுவை மெய்யியல் நோக்கில் நிலை நிறுத்துகிறார்.ஒருநாள் நாவல் இந்திய மரபின் சில அம்சங்கள் மீது க.நா.சு கொண்டிருந்த நம்பிக்கையை விளக்குவதாகவும் ஞானி கூறுகிறார். தான் வாழ்ந்த காலத்தில் இலக்கியவாதிகளுக்கும் மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் க.நா.சு.என்று குறிப்பிடுகிறார் மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். வாழ்வின் பல்வேறு அகலங்களையும் ஆழங்களையும் வெளிப்படுத்த இப்படிப்பட்ட சிம்ம சொப்பனம் தேவைதான் என்பதும் பிரகாஷின் கூற்று. இறுதிக் காலத்தில் சென்னையில் வாழ்ந்து 1988ல் காலமான க.நா.சு தமது 76 முதிய வயதிலும், பார்வையை இழந்த நிலையிலும் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு புத்தகங்களைப் படித்ததும், பதிப்பகம் பதிப்பகமாக தான் எழுதிய நூல்களை பதிப்பிக்க அலைந்ததும் துயரமான ஒரு கதையின் எழுதப்படாத வரிகள்.க.நா.சுவுக்கு உரிய கௌரவத்தை இன்றும் கூட தமிழ்ச்சூழல் அவருக்கு வழங்கவில்லை என்பதுதான் நன்றிகெட்ட செயல். ராமகாதை கூறப்படும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருப்பார் என்பார்கள் கம்பராமாயணத்துக்கு உரை எழுதிய தமிழ் அறிஞர்கள். அதே போல காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கநாசு நூற்றாண்டு விழாவில் பேசிய நான் எந்த ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கு க.நா.சு கண்களில் நீர்க்கசிய அமர்ந்திருப்பார் என்று குறிப்பிட்டேன். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தமிழ் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்டி, தாமும் அரிய சில படைப்புகளை படைத்த க.நா.சு என்ற இலக்கிய ஆளுமை காற்று போல பிறருக்கு சுவாசமாக இருந்தவர். சில நேரங்களில் புயலாகவும் வீசியவர். ஆனால் புயலும் காற்றுதானே.

Monday 23 April 2012

சனிப் பெயர்ச்சி

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல முக்கிய கோவில்களைப் பார்த்திருக்கிறேன். தெய்வ நம்பிக்கையும் 40 வயதுக்குப் பிறகு இயல்பாக வந்து விட்டது. ஆனால் கடவுளிடம் எனக்காக எதையும் கேட்டதில்லை. எப்போதாவது கொஞ்சம் பணம் கேட்டிருக்கலாம். பணத்தால் பட்ட அவமானங்கள்தான் அதற்கு காரணம். ஜெயமோகன் அழைத்தார் என்று உதகைக்கு ஒருமுறை பயணம் போனேன். அது ஆன்மீகப் பயணம். அப்போது நாராயண குருவின் வழி வந்த குரு நித்ய சைதன்ய யதி உயிருடன் இருந்தார். அவரது ஆஸ்ரமத்திற்கு கவிஞர் தேவதேவன், சூத்ரதாரி, ஆர்.கே., மோகனரங்கன் உள்ளிட்ட நண்பர்கள் சென்றோம்.குரு என்ற வார்த்தையே எனக்கு விலகலை தந்துவிட்டது. அப்போது கடவுள் நம்பிக்கைக்கு முழுதாக ஆட்பட்டுவிடவில்லை இந்த மனம். அகந்தையாலும் அறிவாலும் அது ததும்பிக் கொண்டிருந்தது. குரு என ஒருவரை ஏற்பதும் அவர் காலில் விழுந்து வணங்குவதும் அதுவரை நான் என் வாழ்நாளில் செய்ததே இல்லை. நான் வணங்கியதெல்லாம் பெற்றோரையும் வயதில் பெரியவர்களான சில உறவினர்களையும்தான். அதுவும் அரைமனத்துடன். ஜெயமோகனே காலில் விழுந்து குருவை வணங்கியதைப் பார்த்ததும் அதுவரை யார் என்றே தெரியாத நித்ய சைதன்ய யதியின் காலில் நானும் விழுந்து வணங்கியபோது என் அகந்தை நொறுங்கிப் போயிருந்தது. கடவுள் நம்பிக்கை வளர்ந்து ஒரு நாவல் எழுதும் அளவுக்கு அது பெருகியிருக்கும் நிலையில் சனிப்பெயர்ச்சி பற்றியும் ராசிபலன்கள் பற்றியும் ஈடுபாடு வந்திருப்பது அபத்தமாக தோன்றியது.இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. சனிபகவான் ஏழரை வருடம் ஆட்டிப் படைப்பார் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் முப்பத்திஏழரை வருடம் ஆட்டிப் படைத்தார். ஆம் நாற்பது வயதுவரை நிம்மதியே இல்லை. அதன்பிறகு ஆறேழு ஆண்டுகள் சுமுகம். ஆனால் மீண்டும் சனிபகவான் வக்ரமாகிவிட்டார். வாழ்க்கையைப் பற்றி பலவிஷயங்கள் புரியவே இல்லை. எதை நம்புவது எதை நம்பக் கூடாது என்று இந்த நடுத்தர வயதில் குழப்பம் வருவது அதுவும் இத்தனை புத்தகங்களைப் படித்து தேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இத்தகைய குழப்பம் எங்கு கொண்டுபோய் முடிக்கும் என்றே தெரியவில்லை. சரி எழுதி வைப்போம் என அதையே நாவலாக எழுத ஆரம்பித்துவிட்டேன். எழுத எழுத தெளிவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஒருமுறை கோயமுத்தூர் போயிருந்தேன். கோவை என் மனதுக்குள் அலையெழுப்பும் நகரம். இலக்கியம், காதல், நட்பு சார்ந்த எத்தனையோ நினைவுகள் அந்த நகருடன் கலந்துள்ளன. கோவையில் என் தோழியுடன் ஒரு கோவிலுக்குப் போயிருக்கிறேன். அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் அப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. மழையில் நனைந்தபடி நாங்கள் ஒரு கோவிலில் ஒதுங்கினோம்.அந்தக் கோவில் வாசலில் நான் நின்றுவிட்டேன். உள்ளே போகவில்லை. ஆனால்அவள் வற்புறுத்தி அழைத்துப் போய் விபூதியும் வைத்துவி்ட்டாள். அதன் பிறகு அவளை நான் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்துப் போய் அவளும் என் வாழ்க்கையில் இருந்து விலகிப் போய்விட்டாள். திடீரென இம்முறை அந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஏன் என்றே புரியவில்லை. அன்று சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்குப் போகணும் என்ற போதும் அன்று காலை நான் பாட்டுக்கு மருதமலை முருகனைப் பார்க்க கிளம்பிவிட்டேன். மருதமலை மாமணியே முருகையா என்ற மதுரை சோமுவின் குரல் என் மனமெங்கும் நிறைந்திருந்தது. மருதமலை போய் திரும்பி வந்து, காந்திபுரம் புறநகர்ப் பேருந்து நிற்கும் பகுதியில் நின்றிருந்த போதுதான் அருகில் அந்தக் கோவில் இருப்பது நினைவுக்கு வந்தது. பழைய நினைவுகளை அசைபோட்டபடி நான் அந்தக் கோவிலை நாடி சென்றேன். என்ன ஆச்சரியம் அது பெருமாள் கோவில்தான். அதுவரை அது எந்தக் கோவில் என்ற நினைவே இல்லை. ஆனால் தோழி விபூதி கொடுத்தாளே அது எப்படி என்ற கேள்வியுடன் கோவிலுக்கு உள்ளே நுழைந்த போதுதான் ஒருபுறம் விநாயகர் சன்னதியும் மறுபுறம் பெருமாள் சன்னதியும் அமைந்த சமய நல்லிணக்க கோவில் என்று புரிந்தது. கோவிலுக்குப் போய் பிள்ளையாரையும் பெருமாளையும் வணங்கி திரும்பி வெளியே வந்தால் ஒரு கிளி ஜோசியக்காரன் கண்ணில் பட்டான். கிளிக்கு ஒரு நெல்மணியாவது கிடைக்கட்டும் ஜோசியம் பாருங்கள் என்ற நண்பன் எஸ்.அறிவுமணியின் கவிதை ஞாபகம் வந்து அவனிடம் போனேன். அப்புறம் பார்த்தால் அவன் கைரேகை கூட பார்ப்பானாம். அவன் வரைந்த ரேகை படங்கள் கவனத்தைக் கவர்ந்தன. அதுவரை கைரேகையை பார்த்தது இல்லை. சரி பார்ப்போம் என கையை நீட்டினேன். அதற்கு முன்பே அவனிடம் எவ்வளவு காசு என கேட்டுவிட்டேன். 20 ரூபாய் என்றான். சரிதான் என்று கையை நீட்டியதும், நம்புங்கள் அதுவரை கண்ணில் படாத ஒரு விநாயகர் சிலை அந்த கிளிக் கூண்டின் மீது இருந்தது.அதை எடுத்து உள்ளங்கையில் வைத்து மந்திரம் சொன்னான். பிறகு கிளியை சீட்டெடுக்க சொல்லி ரேகையும் பார்த்தான். போன வருடம் கடும் கஷ்டம் சோதனை எல்லாம் சந்திச்சிருப்பீங்க, உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றான். அடப்பாவி என மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். சனிபகவான், குரு, செவ்வாய் எல்லாமே உங்களுக்கு எதிரான கிரகத்தில்இருந்து தொல்லை கொடுத்திருப்பாங்க என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டே போனான். கைரேகையில் மூன்று கோடுகளைக் காட்டி இது புத்தி ரேகை, இது தனரேகை. இது ஆயுள் ரேகை என்று சுட்டிக்காட்டினான். புத்திரேகை நல்லா இருக்கு நீங்க பெரிய கலைத்துறை சாதனையை செய்வீங்க என்றான். சந்தோஷமாக இருந்தது. ஆயுள் ரேகையும் கெட்டி. இனி உங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் விபத்தும் பயமும் கிடையாது என்றான். அப்பாடி நிம்மதி. அடுத்து தனரேகை அதில்தான் சிக்கல். இரண்டு முக்கோணங்கள் தனரேகை அருகில் காட்டி இதுதான் தடங்கல் என்றான். இப்படி பேசிப்பேசியே மேலும் 150 ரூபாய் கவர்ந்துவிட்டான் அந்த ஜோசியக்காரன். முக்கோணத்தை அழிக்க பழனிமுருகன் கோவிலில் தரப்படும் நாகபூஷணம் என்ற பிரசாதத்தை உள்ளங்கையில் வாங்க வேண்டும் என்றான். நாகபூஷணம் உள்ளங்கையில் முக்கோணம் உள்ள இடத்தில் படும்போது அந்த தோஷம் நீங்கும் என்றும் கூறி அவனே நாகபூஷணத்தை பொட்டலம் கட்டி தந்துவிட்டான். கையிலும் கொடுத்தான். அவன் சொன்னபடி அதில் தண்ணீரைக் கலந்து என் முகத்தைப் பார்த்து நெற்றியில் பூசியும் தலைவிதி மாறவில்லை. முக்கோணமும் அழியவில்லை.ஏப்ரல் மாதம் முதல் மறுமலர்ச்சி வரும் என்றும் அந்த சோதிடன் சத்தியமாக தெரிவித்தான். ஏப்ரலும் வந்துவிட்டது. ஒருபக்கம் பியூர் ஹம்பக் என தெரிகிறது. மறுபுறம் மனசு விடைதெரியாத கேள்விகளுக்கு ஏதேனும் ஒரு விடையை அறிந்துவிட அலைபாயுகிறது. சனிபகவான் இப்போது எங்கே பயணம் மேற்கொண்டுள்ளாரோ... சனியும் குருவும் ராகுவும் கேதுவும் உள்ளங்கை ரேகையில் இருப்பது உண்மையானால், நாகபூஷணம் என்ற பழனியாண்டவன் சன்னதி பிரசாதத்திற்கு மகிமை இருப்பது உண்மையானால் என் வாழ்க்கையை உன்னிப்பாக கவனிக்கிறேன். மறுமலர்ச்சி வருமா என்று பார்க்க.

Friday 20 April 2012

ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்

இருட்டிலிருந்து நான் வந்தேன். எல்லா தீச்சுவாலைகளை விடவும் உன்னை நான் நேசிக்கிறேன் இருளே.! தீ எல்லோருக்கும் ஒளிவட்டங்களை ஏற்படுத்துகிறது. வெளியே உள்ள யாரும் அதனுள்ளே வசிக்க முடியாது. ஆனால் இருள் எல்லாவற்றையும் உள் இழுத்துக் கொள்கிறது. சகல அதிகாரங்களும் மனிதர்களும் அதில் அடங்கிப் போகின்றன. எனக்கு இரவுகளில் நம்பிக்கை உண்டு. முதலில் என் வாழ்க்கை என்னிடம் நல்லவிதமாகத் தான் இருந்தது. அது என்னை கதகதப்புடன் வைத்திருந்தது. தைரியம் அளித்தது. அப்படித்தான் அது எல்லா இளைஞர்களிடமும் உள்ளது. ஆனால் எனக்கு எப்படி தெரியும் ? வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமல் நான் இருந்தேன். ஆண்டுக்கு ஆண்டு அது ஒன்றுமில்லை என்று ஆனது. நல்லதாக புதிதாக ஏதுமில்லை. பிரமிப்பு தருவதாகவும் இல்லை. மையம் இரண்டாக பிளவுபட்டது போல் இருந்தது. அது அதன் குற்றமல்ல. அது என் குற்றமும் அல்ல. இருவரிடத்திலும் அதிகமான பொறுமை இல்லை. மரணத்திடமும் அவகாசம் இல்லை. அது வருவதை நான் கண்டேன். என்ன கோரமான காட்சி அது. அது வந்து என்னை எடுத்துச் சென்றது. என்னுடையது என்று கூறத்தக்க எதையும் அது தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. என்னுடையது என்று எனக்கு சொந்தமாக என்ன இருந்தது? என் துயரம் கூட என்னுடையதில்லை. அது விதி கொடுத்த கடன். விதி மகிழ்ச்சியை மட்டும் விரும்புவதில்லை. அது வலியையும் அலறல்களையும் கேட்டுப் பெறுகிறது. அதுவும் பாதி விலைக்கு கேட்கிறது. விதி என்னிடமிருந்து யாவற்றையும் இலவசமாகப் பெற்றுக் கொண்டது. நான் காலியானதும் அது வெளியேறியது. கதவு மட்டும் திறந்தே கிடந்தது. முதலில் பால்யகாலம் எல்லைகளற்று, கட்டுப்பாடுகளற்று, இலக்குகளற்று.பிறகு திடீரென பயங்கரம். வகுப்பறைகள், ஆசிரியர்கள். எல்லைகள், ஆக்ரமிப்புகள். பெரும் இழப்பிலும் உணர்ச்சியிலும் விழுதல் தோல்விகள் நசுக்கப்பட்டவன் இப்போது நசுக்குகிறான். தனது தோல்விக்கு அடுத்தவரை பழி தீர்க்கிறான். நேசிக்கப்பட்டு, அஞ்சப்பட்டு, அவன் மீள்கிறான், மல்லுக்கட்டி போராடி ஜெயிக்கிறான். பிறரை அடக்குகிறான். பிறகு வெளிச்சத்தில் அவன் தனித்து நிற்கிறான். முதலிடத்தை நோக்கிச் செல்வதாக நினைப்பு.... அப்போது கடவுள் தன் மறைவிடத்திலிருந்து வெடித்தெழுகிறார். தமிழாக்கம்- செந்தூரம் ஜெகதீஷ்

Thursday 19 April 2012

மணிக்கொடி எழுத்தாளர்- ந.பிச்சமூர்த்தி

தமிழ் புதுக்கவிதைக்கு பாரதிக்குப் பின்னர் அடித்தளம் அமைத்து வடிவமைத்ததில் ந.பி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது. மணிக்கொடியில் ந.பி எழுதியதென்னவோ 12 கவிதைகள்தான். ஆனால் இதுதான் தமிழின் ஆரம்பக்கால புதுக்கவிதை. இரட்டையர்கள் என்று அழைக்கப்படும் கு.ப.ராவும் நபியைப் போல் மணிக்கொடியில் கவிதைகள் எழுதிய போதும் கவிதைகளை விட கதைகளால் அதிகம் பேசப்பட்டார். இதே போல் ந.பி.யும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

 காபூலிக் குழந்தைகள், வானம்பாடி, பதினெட்டாம் பெருக்கு போன்ற கதைகள் தமிழ்ச்சிறுகதையின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்தியவை.
தமிழ்நாட்டின் தாகூர் என்றழைக்கப்பட்டவர் பிச்சமூர்த்தி.கும்பகோணத்தில் நடேச தீட்சிதர்-காமாட்சியம்மாளுக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ந.பி. அவருக்கு வேங்கட மகாலிங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளிப்படிப்பும் பட்டப்படிப்பும் முடித்த ந.பிச்சமூர்த்தி சென்னை சட்டக் கல்லூரியில், படித்து வழக்கறிஞரானார். பின்னர் நவ இந்தியா பத்திரிகையிலும் பணியாற்றினார்.
வ.ரா. இயக்கிய ஸ்ரீராமானுஜர் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ந.பிச்சமூர்த்தி ஆரம்பத்தில் ஆங்கிலத்தில்தான் கதைகளை எழுதிவந்தார். மேடையில் பாரதியின் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், கண்ணன் பாடல்களை படித்த பரவசத்தில் இனி தமிழில் மட்டும் எழுத வேண்டும் என்று உறுதியை மேற்கொண்டார்.வால்ட் விட்மனின் புல்லின் இதழ்களைப் போல தமிழிலும் கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் 1934ம் ஆண்டில் செய்யுள், தளை, எதுகை மோனை போன்ற விலங்குகளை உடைத்தெறிந்து கவிதையை விடுதலை செய்தார்.ந.பிச்சமூர்த்தி எழுதிய காட்டு வாத்து, குயிலின் சுருதி, வழித்துணை ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரது வாழ்நாளிலேயே அச்சாகியுள்ளன. சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழ் புதுக்கவிதையை இயக்கமாக வளர்த்தது.
அறிவியல் புனைகதைக்காக சுஜாதாவை சிலாகிக்கும் நமக்கு அத்தகைய மரபையும் தமிழில் தொடங்கியவர் ந.பிச்சமூர்த்திதான் என்றால் ஆச்சரியமாக தெரியும். உண்மைதான். அவருடைய விஞ்ஞானக் கதையில் ரோபோவும் வருகிறது.அறிவியலை மனித வாழ்வின் அழிவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று அறத்தையும் அறிவியலையும் இணைக்கிறார் பிச்சமூர்த்தி. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பிச்சமூர்த்தி எழுதியிருப்பதை அசோகமித்திரன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை சாகித்ய அகடமி வெளியிட்டுள்ளது.
ந.பிச்சமூர்த்தி சென்னையில் மூன்று மகள்களுடன் வாழ்ந்து 1976ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி காலமானார். அவருடைய 136 சிறுகதைகள் ஞானக்கூத்தன் அழகிய சிங்கர் ஆகியோரின் முயற்சியால் மதிநிலையம் மூலம் மூன்றுதொகுப்புகளாக வந்துள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட கதைகளை நான்தான் தேடிக் கொடுத்தேன்.
( கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் என்ற பெயரில் வெளியான நிகழ்ச்சி. திரு.ஞானக்கூத்தனின் பேட்டியும் இடம்பெற்றது )

மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா

மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா மணிக்கொடி பத்திரிகை முழுவதும் சிறுகதை பத்திரிகையாக மாற்றப்பட்டதில் ராமையாவின் பங்கு முக்கியமானது. சிறந்த கதைகளை தமிழுக்கு அளித்தவர் ராமையா. மலரும் மணமும் போன்ற அவரது கதைகளில் விதவைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளுடன் ஆண், பெண் உறவில் நிலவிய உளவியல் ரீதியான சிக்கல்களையும் கையாண்டார். நல்ல இலக்கியம் எது என்பதில் மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருந்தது. சி.சு.செல்லப்பா அவர்கள் ஒருமுறை ராமையாவை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது மூத்த எழுத்தாளர் என்ற முறையில் ராமையா சொன்ன கருத்து முக்கியமானது. அது என்ன தெரியுமா ? எழுத்தாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். வாழ்க்கையில் துன்பம் இருக்கிறது.இன்பம் இருக்கிறது. அதே போல் தீமையும் நன்மையும் இருக்கிறது.புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கிறது.இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாக எழுதிவிட முடியும், திறமை உள்ள எழுத்தாளனால். ஆனால் தீமையும் புன்மையும் கயமையும் எத்தனை அழகுபடுத்தப்பட்டாலும ; இலக்கியச் சரக்கு ஆகாது.அந்தத் தன்மைகளை சிறப்புப் படுத்திக் காட்டும் எழுத்து அப்போதைக்கு இலக்கியத் தரம் உள்ளதாக ஒரு மயக்கத்தை எழுப்புமேயன்றி நிலைத்து நிற்கவே நிற்காது. இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எந்த நாட்டிலும் நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் இலக்கியங்களைப் பார்த்தால் விளங்கிவிடும். அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் இதை மதிப்பதில்லை.வருங்கால தலைமுறைகள் அதை மதிக்கவே மதிக்காது தெளிவாகவே கூறுகிறார் ராமையா. அதுமட்டுமல்ல....வாசகர்களுக்கும் அவர் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். எழுத்தின் உயர்வு வாசகனின் ரசனையில்தான் உள்ளது. சாப்பிடுகிறவன் சுவைத் தகுதிக்கு அளவுதான் சமையல் ருசி அமையும் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. உங்களுக்குக் கிடைக்கும் இலக்கியத்தின் தரம் உங்கள் சுவைத் தகுதி அளவுக்குத்தான் இருக்கும். ராமையாவின் இந்தக் குரல் தரமான எழுத்தாளர்களை உருவாக்குவதில், அவர்களை அடையாளம் காண்பதில், அவர்களை பெருமைப்படுத்துவதில், வாசகர்களின் பங்களிப்பைக் கோருகிறது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் பாடியது போன்ற நிலைமை உண்மையான எழுத்தாளனுக்கு இனி ஏற்படக் கூடாது என்பதுதான் பி.எஸ்.ராமையாவின் ஆதங்கம். திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியில் 1905ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி சுப்பிரமணியம்-மீனாட்சி அம்மாளின் மகனாகப் பிறந்தவர் ராமையா. வத்தலகுண்டுவை ஆங்கிலயேர் காலத்தில் பத்தலகுண்டு என அழைப்பது வழக்கமாக இருந்தபடியால் அவர் பி.எஸ்.ராமையா ஆனார். மகாத்மா காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக வளர்ந்த ராமையா ஜவுளிக்கடைகளிலும் அதுபோன்ற வேறு சில உத்தியோகங்களிலும் வேலை பார்த்தார். 1930ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவர் கலந்துக் கொண்டார்.தேசிய இயக்கங்களின் போராட்டங்களிலும் அவர் கலந்துக் கொண்டு சிறை சென்றார். சிறையை விட்டு வெளியே வந்த பிறகு அவர் ஒரு இலக்கியவாதியாக மலர்ந்தார்.ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவரது மலரும் மணமும் கதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. கதையில் பெயரைக் கூட எழுதாமல் அனுப்பி விட்டார். விகடன் அந்தக் கதையைப் போட்டு விட்டு ஆசிரியர் தனது பெயரை குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டது.தொடர்ந்து ராமையாவின் கதைகள் விகடன்,கல்கி, தினமணி போன்ற பிரபல பத்திரிகைகளில் வெளியாகி ஆயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தன.1935ம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்த மணிக்கொடி இதழுக்குப் புத்துயிர் அளித்து அதை சிறுகதைப் பத்திரிகையாக மாற்றினார் ராமையா. மாதம் இருமுறை சில ஆயிரம் பிரதிகள் வெளியான மணிக்கொடி மூலம் ஏராளமான எழுத்தாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.வி.வெங்கட்ராம் போன்ற சகாக்களின் கதைகளைப் போட்டு அவர்களைப் பாராட்டி மகிழ்வதில் பேரின்பம் கண்டார் ராமையா. திரைப்படத் துறையிலும் ராமையாவின் கதைகள் பிரசித்தி பெற்றன.ஜெமினி ஸ்டூடியோவிலும் அவர் சிலகாலம் பணியாற்றினார். மதனகாமராஜன், பக்த நாரதர் படங்களின் திரைக்கதையை வடிவமைத்தவர் ராமையா. ஆனால் ஜெமினியில் அவர் பணி நீடிக்கவில்லை. திலீப்குமார் நடித்த ஆன் இந்திப் படத்துக்கு தமிழில் திரைக்கதை வசனம் எழுத எஸ்.எஸ். வாசனால் பணியமர்த்தப்பட்ட ராமையா புனேயில் தங்கியிருந்த போது குதிரைப்பந்தயம் மீது அவருக்கு நாட்டம் சென்றது. இது பற்றி எனக்கு பேட்டியளித்த திரு.அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் ராமையாவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்றும் நிறைய பணம் தந்தார் என்றும் தெரிவித்தார்,. ராமையாவுக்கு குதிரை ரேஸ் மீது பித்து என்றும் குதிரை பந்தயம் மூலம் தான் சம்பாதித்த பணம் அத்தனையும் இழந்ததாகவும் அசோகமித்திரன் தெரிவித்தார். பிற்காலத்தில் பிரெசிடன்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள் படங்களுக்கும் ராமையா கதை திரைக்கதை அமைப்பதில் பணியாற்றினார். போலீஸ்காரன் மகள் ஸ்ரீதர் இயக்கிய சிறந்த படம்.இப்படி எழுத்திலும் சினிமாவிலும் மாறி மாறி இயங்கி வந்த ராமையாதான் மணிக்கொடி எழுத்தாளர்களிலேயே அதிகமான கதைகளை எழுதியவர். அவர் எழுதிய கதைகளின் எண்ணிக்கை 304. இதைப்பற்றி விரிவாக சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி, சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் ஒன்றையும் எழுதிய அவர் நா.பார்த்தசாரதி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, தீபம் இலக்கிய இதழில் மணிக்கொடி காலம் என்ற அற்புதமான இலக்கிய ஆவணத்தை நமக்கு அளித்தார். நான்கு பிள்ளைகள் மூன்று பெண்கள் என குடும்பம் நடத்திய ராமையா தமது 78 வது வயதில் 1983ம் ஆண்டு தொண்டையில் புற்றுநோய் உருவாகி காலமானார். புகையிலை போடுவதை நிறுத்தாத அவர் தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை எழுதுவதையும் நிறுத்தவில்லை. பி.எஸ்.ராமையாவின் சில புத்தகங்களை அல்லயன்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ( கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் சேனலில் புதையல் என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்து வடிவம் இது. டிவியில் ராமையா பற்றி திரு.அசோகமித்திரனின் 15 நிமிட பேட்டியும் இடம்பெற்றது )

Monday 16 April 2012

தவற விட்ட இரங்கல்கள்

சுந்தர ராமசாமி எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்த நாளில் இருந்தே அவரைப் போலத்தான் எழுத வேண்டும் என்பது தீர்மானமாகி விட்டது. எனது நாவல் கிடங்குத் தெருவும் அதன் தாக்கம் கொண்டிருப்பதுதான்.
சுஜாதாவுடன் நிறைய முரண்பாடுகள் இருந்தபோதும், அவரது கணேஷ் வசந்த் முதல் ஜீனோ வரை பலதரப்பட்ட பாத்திரங்களிலும் உட்காரச் சொன்னால் படுக்கிற பெண்களிடமும் மனதை பறிகொடுத்திருக்கிறேன்.
எம்.வி.வெங்கட்ராம்- மணிக்கொடி எழுத்தாளர்களில் கடைசியாக மறைந்தவர். இரண்டுமுறை அவர் வீட்டில் சந்தித்த நினைவுகள் என்றும் மறவாதவை.
எனது சமகாலத்தவரான இந்த மூன்று பெரிய எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி என்னை மிகவும் அலைக்கழித்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் மூவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துக் கொள்ள என்னால் முடியவில்லை. இன்றும் அந்த வருத்தம் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது.
சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த எழுத்தாளர். அவரை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் சந்திக்கும் போது ஏற்பட்ட பரவசம் இன்றும் உடலில் உணர முடிகிறது. திரு.வேதசகாயகுமார் என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைத்தார்.அவரும் என்னைப் பற்றி அறிந்திருந்தார். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது. தீவிரமாக எழுதும் இளம்படைப்பாளிகள் யார் என்ன புத்தகம் எழுதியிருக்காங்க என்று ராமசாமி ஒரு குழந்தையைப் போல ஆர்வமாக கேட்டார்.தான் அதிகம் பேசாமல் என்னை பேசவிட்டு பொறுமையாக கேட்டார். இது எனக்கு தந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் சொல்லிமாளாது. நானாக கேட்ட பிறகு ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, க.நா.சு பற்றி கூறினார். ஜி.நாகராஜன் பற்றி சொல்லும்போது குடிகாரர் என்பது போல் சுந்தரராமசாமி பேசினாரோ என்று தோன்றுகிறது. வீட்டிற்கு வந்து ஜி.நாகராஜன் அடிக்கடி பணம் கேட்பார் என்றும் கூறியதாக ஞாபகம். ஆனாலும் ஜி.நாகராஜன் மீதான சுந்தர ராமசாமியின் அபிமானம் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரம்பியிருந்தது.
க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் பற்றி எனக்கிருந்த மனக்குறையை கூறினேன். ஆழ்ந்த யோசனையில் மூழ்கிய அவர் சில நிமிடங்கள் கழித்து, கநாசுவின் மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை என்று கூறினாலும் அவர் மொழிபெயர்க்க தேர்வு செய்த புத்தகங்களும் படைப்புகளும் அற்புதமானவை அல்லவா என்றார். மேலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை மூல நூலுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரைகூட எழுதப்படவில்லை என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டார். உண்மை என்று நானும் ஒப்புக் கொண்டேன்.
கணையாழியில் தாம் எழுதி வந்த கேள்வி பதில் பகுதியை பற்றி அபிப்ராயம் கேட்டார் சுந்தர ராமசாமி. அது தசரா கணையாழி. சார் அதில் எழுதுவது உங்கள் தகுதிக்கு உகந்தது அல்ல. அது பழைய கணையாழி மாதிரி இல்லை என்றேன்.அப்படியா என்று சிரித்த அவர் அடுத்த சில இதழ்களுக்குப் பின்னர் கேள்வி பதிலை முடித்துவிட்டார்.
சொல்புதிது வெளியிட ஜெயமோகன் எனக்கு பொறுப்புகளை தந்தார். ஆனால் பணம் இல்லை. எப்படியும் சுந்தர ராமசாமியை அழைத்து தான் வந்துவிடுவதாக கூறியிருந்தார் ஜெயமோகன். நான் ஜெயகாந்தனை அழைக்க முயன்றேன். ஒரே மேடையி்ல் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன் ஆகியோரை நிறுத்திப் பார்க்க ஆசைப்பட்டேன்.
சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடிப்பதுபோல் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் பங்கேற்ற ஒரே இலக்கிய விழா என்ற பெருமையை சொல்புதிது விழா பெற்றது. ஜெயமோகனால் வரமுடியவில்லை என்றாலும் வஐ.செ.ஜெயபாலன், சா.கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதி உரையை சுந்தரராமசாமி பேசுவதா ஜெயகாந்தன் பேசுவதா என எங்களுக்குள் ஒரே பரபரப்பு. சுந்தர ராமசாமியே ஜெயகாந்தன் இறுதியாக பேசட்டும் என கூற இல்லை இல்லை சுந்தர ராமசாமி இறுதியாக பேசட்டும் என ஜெயகாந்தன் கூற இருபெரும் எழுத்தாளர்களின் பண்பையும் ரசித்தபடி சுந்தர ராமசாமியை பேசவிட்டு பின்னர் ஜெயகாந்தன் இறுதி உரை நிகழ்த்தினார்.
சுந்தர ராமசாமி மறைவுச் செய்தி கேட்ட போது யாராவது நாகர்கோவில் வரை போய் வர செலவுக்குப் பணம் கொடுத்திருந்தால் போயிருப்பேன். என் சக்திக்கு தினமணியில் படித்து தெரிந்துக் கொண்டேன்.
 சுஜாதாவுடன் 3 அல்லது 4 முறை நேரிலும் சிலமுறை தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறேன். 90 களில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த அவர் ஞானியுடன் பேசும்போது அருகில் நானும் இருந்தேன்.ஞானி என்னை சுஜாதாவிடம் அறிமுகம் செய்தார்.உங்கள் கதைகள் எல்லாவற்றையும் இவர் படித்திருக்கிறார் என்று ஞானி கூறிய போதும் சுஜாதா அதைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வாரம் பாக்யா இதழில் வந்த அவர் கதையைப் பற்றி நான் பேசுவதையும் அசுவாரஸ்யமாகவே கேட்டார்.ஞானியிடம் மட்டும் பேச அவர் விரும்புவதாகவும் தன்னை விட குறைந்த புகழ் உள்ளவர்களிடம் பேச விரும்பவில்லை என்பது போலவும் அவர் புறக்கணிப்பு என்னை துன்புறுத்தியது.
அப்போது நானும் என் நண்பர்களும் கடும் சிரமத்தில் தவித்துக் கொண்டிருந்தோம். சிறுபத்திரிகை நடத்துவதும் கூட்டம் நடத்துவதுமாக எங்கள் இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தோம்.
நண்பர் பண்ருட்டி ரவி, சிறகு என்றொரு பத்திரிகை கொண்டு வந்தார்.அவரிடம் சுஜாதாவுக்கு ஒரு பிரதியை அனுப்பும்படி சொன்னேன். அப்போது கணையாழி கடைசி பக்கத்தில் சுஜாதா எழுதி வந்தார். அதனால்  ரவியும் ஆர்வமாக அனுப்பி வைத்தார். அதன்படியே சிறகில் வந்த நண்பர் ஒருவரின் கவிதையை பிரசுரித்த சுஜாதா சிறகு பற்றி எழுதியதுடன் ரவிக்கு சிந்து பதிப்பகத்தின் பணிக்கு நியமனமும் செய்தார். நாங்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டோம். சிந்து பதிப்பகம் அப்போது கமல்ஹாசன், புவியரசு, காந்தி கண்ணதாசன், சுஜாதா போன்ற பெரிய பெயர்கள் சம்பந்தப்பட்ட பதிப்பகமாக மாறியது. புத்தகம் போட வசதியற்ற ஏழை படைப்பாளிகளின் முதல் நூலை வெளியிடுவதுதான் அவர்களது நோக்கம். முதல் புத்தகமாக சிறகில் கவிதை எழுதிய நண்பரின் கவிதைத் தொகுப்பு வெளியிட திட்டமிடப்பட்டது. அந்த நண்பர் அப்போதுதான் கவிதை எழுத பழகிக் கொண்டிருந்தார். அதிகமான கவிதைகளும் அவரிடம் இல்லை.சுஜாதா தொகுப்பு போடுவார் என அவரும் அவசர அவசரமாக எழுதிக் குவித்தார். எப்படியோ தொகுப்பு வந்துவிட்டது. ஆனால் எந்த நோக்கத்துக்காக சிந்து பதிப்பகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. காரணம் அந்த நண்பர் ஏழை அல்ல.சொந்த வீடும் அரசு உத்தியோகமுமாக வசதியாகத்தான் இருந்தார். அவர் மனைவியும் அரசு ஊழியர். மாதம் 50 ஆயிரத்திற்கு வருமானம் இருந்தது. ஆனால் 1984 முதல் எழுதிவந்த நான் வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்தேன். எனது புத்தகம் எதுவும் வரவில்லை. கடைசியாக ஒருவழியாக சிந்து பதிப்பகம் மூடப்படும்போது அதன் கடைசி புத்தகமாக 1999ல் இன்னும் மிச்சமிருப்பவை என்ற என் கவிதைத் தொகுப்பு நண்பர் ரவியின் தனிப்பட்ட முயற்சியால் வெளியானது.ஆனால் அதில் சுஜாதாவுக்கு பங்கு இல்லை. கமலும் விலகி விட்டிருந்தார். சிந்து பதிப்பக உரிமையாளர் திரு முரளிதரனுக்கு மட்டும்தான் நன்றி கூற வேண்டும்.
இன்னும் மிச்சமிருப்பவை தொகுப்புக்கு ஞானி முன்னுரை எழுத ஜெயமோகனிடம் பின்னுரை வாங்கிப் போட்டிருந்தேன். அப்போது ஜெயமோகனை அதிகமாக யாருக்கும் தெரியாது.
அந்தப் புத்தகத்தை சுஜாதாவுக்கு நான் அனுப்பவில்லை. தமிழ்நாட்டிலேயே சுஜாதாவுக்கு கவிதைத் தொகுப்பு அனுப்பாத கவிஞன் நான் மட்டும்தான். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அய்யா.இதைப் பற்றி நானும் சௌந்தர சுகனில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
கவிதை நூலை வெளியிட ஒப்புக்கொண்ட ஞானக் கூத்தனும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ராஜமார்த்தாண்டன், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், பேராசிரியர் பெரியார்தாசன் ஆகியோர் கவிதைகளைப் பாராட்டினார்கள்.
இதனிடையே சுஜாதாவை இன்னும் சிலமுறை சந்திக்க நேர்ந்தது.
குங்குமத்தில் சாருப்பிரபா சுந்தர் ஆசிரியராக இருந்தபோது பிரபஞ்சன் அவர்களின் பரிந்துரையுடன் வேலை கேட்டு போனேன். சுஜாதா,ஜெயகாந்தன், வைரமுத்து ஆகியோரை சந்தித்து அவர்களை சமையல் செய்ய வைத்து அதை சாப்பிட்டு ரெவியூ எழுத வேண்டும் என்று சாருப்பிரபா சொன்னார். ஜெயகாந்தனிடம் கேட்ட போது என் மேல் உள்ள பிரியத்தால் அடிக்காமல் விட்டார். சுஜாதாவை தொலைபேசியில் கேட்ட போது, சாருப்பிரபாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று நான் கேட்டதாக சொல்லுங்கள் என்றார் சுஜாதா. நானும் அப்படியே போய் சாருப்பிரபாவிடம் சொன்னேன்.
அந்த வேலை அத்துடன் போய்விட்டது.
இன்னொருமுறை சுஜாதாவை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து ஹைகூ சிறப்பிதழாக வந்த செந்தூரம் இதழை கொடுத்தேன். மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
இன்னொரு முறை ஜெயமோகன் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த போது அதை சுஜாதாவிடம் சில அத்தியாயங்கள் படித்துக் காட்ட விரும்பினார். அவருக்கு சுஜாதாவுடன் அறிமுகம் இல்லை. நான் அவரை அழைத்துப் போனேன். இருவரும் ஆழ்வார்கள் பற்றி நான்குமணி நேரம் பேசித் தீர்த்தனர். அதை ஒரு பார்வையாளனாக பசியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
குமுதம் ஆசிரியராக இருந்தபோதும் பார்த்திருக்கிறேன். நல்ல கவிதைகளை தொகுத்து வாரம் ஒன்றாக போட விரும்பி அந்த வேலையை எனக்கு தந்தார். நான் தந்த கவிதைகளையும் பிரசுரித்தார்.
சுஜாதா மறைந்த செய்தி கேட்ட போது என்னால் சென்னையில் இருந்தும் போக முடியாத காரணம் என எதைச் சொல்வது என்றே புரியவில்லை.மேற்கண்ட சம்பவங்களில் ஏதாவது ஒன்றாக அல்லது என் வறுமை உள்ளிட்ட துன்பங்களையும் மனச்சோர்வையும் காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
எம்.வி.வெங்கட்ராமை அவருடைய கடைசி சில ஆண்டுகளில்தான் சந்திக்க முடிந்தது. காதுகள் நாவல் வெளியான நேரம் அவரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதலுடன் கும்பகோணம் சென்றேன். தோப்புத் தெருவில் உள்ள அவர் வீட்டைத் தேடி கண்டுபிடித்தேன். சிறிய அறிமுகத்திற்குப் பின்னர் ஒரு மரநாற்காலியை கொண்டு வந்து போட்ட அவர் இது கு.ப.ரா. உட்காரும் நாற்காலி என்றார்.எல்லாரும் போயிட்டாங்க.நான் மட்டும் இருக்கேன் என தன் மணிக்கொடி நண்பர்களை நினைத்து ஆதங்கப்பட்டார்.என் மூதாதையரின் நாற்காலி என்ற பயபக்தியுடன் அதில் உட்கார்ந்து அவரிடம் மணிக்கணக்கில் பேசினேன்.தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள் ஆகியவை பற்றி தீராத துன்பத்துடன் பேசிய அவர் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறக்கவே கூடாது என்றார்.
இந்த அனுபவத்தை கட்டுரையாக்கி அப்போது சுபமங்களாவுக்கு அனுப்பி வைத்தேன். எம்.வி.வியும் காதுகளும் என்ற கட்டுரை சுபமங்களாவில் பிரசுரமானது. அதன் பின்னர் கோவையில் கோமல் சுவாமிநாதனை சந்தித்த போது, நான் எழுத நினைச்ச கட்டுரையை நீங்க எழுதிட்டீங்க.
என கையைப் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
இதையடுத்து எம்.வி.விக்கு சாகித்ய அகடமி அறிவிக்கப்பட்டது. அவருக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதினேன்.பதில் எழுதினார். பிறகு மீண்டும் ஒருமுறை கும்பகோண் போய் அவர் வீட்டை அடைந்து, அய்யா என்னை நினைவிருக்கிறதா என்று கேட்ட போது, உங்களை எப்படி மறக்க முடியும் உங்களால்தான் எனக்கு சாகித்ய அகடமியே கிடைத்தது. சுபமங்களாவில் நீங்கள்தான் காதுகள் பத்தி சிறப்பா எழுதியிருந்தீங்க என்றார். அது அதிகப்படியானது போல் எனக்கு கூச்சமாக இருந்தது,
அவருடன் பேசி திரும்பி வந்த சில மாதங்களில் அவர் காலமான செய்தி கிடைத்தது. அப்போது என்னால் கும்பகோணம் செல்ல இயவில்லை.
மாதந்தோறும் இரங்கல் செய்திகள் வருகின்றன. சிவாஜி கணேசன் முதல் பிரமிள் வரை, சுகந்தி சுப்பிரமணியன் முதல் ஸ்டெல்லா புரூஸ் வரை பலரது மரணச் செய்திகள் மனதை அலைக்கழித்தன. மாதந்தோறும் அஞ்சலிக் குறிப்புகள் வருகின்றன. கடைசியாக மறைந்த ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி குங்குமம் இதழில் இரண்டு பக்கம் செய்தி வர வைத்த நிம்மதி இருக்கிறது. கோபி கிருஷ்ணன் போன்ற சிலரது இறுதி நிகழ்ச்சிக்குப் போய் வந்திருக்கிறேன். அடுத்த மாதம் எனக்கே கூட இரங்கல் குறிப்பு வெளியாகலாம். வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.
நான் விரும்பிய, நேசித்த சிலரை மீண்டும் பார்க்க முடியாது என்பதைத் தவிர சாவு எதை சாதித்து விடமுடியும்.
பலரது உணர்வுடனும் எழுத்துடனும் கலந்துவிட்ட நானும் கூடுமானவரை அவர்களை என் விழிகளில் நிலை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்து விட இயலும். 









Sunday 15 April 2012

மணிக்கொடி எழுத்தாளர்கள்.




மறைந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி ,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி உள்ளிட்ட பலரைப் பற்றி கலைஞர் செய்திகள் சேனலிலும், சத்தியம் தொலைக்காட்சியிலும் 50க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி ஒளிபரப்பினேன்.

மேலும், கண்ணதாசன்,  நகுலன், பிரமீள், கநாசு, சம்பத், ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி ஆகிய முக்கிய எழுத்தாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன். கிடைத்தற்கரிய அவர்களின் புகைப்படங்கள், குடும்பத்தாரின் பேட்டிகளுடன் அசோகமித்திரன், சச்சிதானந்தன். திருப்பூர் கிருஷ்ணன், சா.கந்தசாமி, வாமனன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, மனுஷ்யப்புத்திரன் உள்ளிட்டோரின் பேட்டிகளும் இந்த எழுத்தாளர்களின் நினைவலைகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த  வீடியோ ஆவணங்களின் ஒரு சில பதிவுகள் மட்டுமே என்னிடம் உள்ளன. பெரும்பாலானவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே பாதுகாக்கப்படுகின்றன. பல ஆவணங்கள் ்அதன் அருமை தெரியாத சில கத்துக்குட்டிகளால் அழிக்கப்பட்டு விட்டன.எது மிச்சமிருக்கு என்று எனக்கே தெரியவில்லை.

என்னிடம் உள்ளவற்றை சரிபார்க்கவும் என்னிடம் அவகாசம் இல்லை. உப்பு புளி மிளகாய்க்காக ஓடியாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில் வெற்றிகரமாக விக்கிபீடியாவில் குபரா வைப்பற்றி பதிவு செய்துவிட்டேன். அவரது ஆவண வீடியோவும் என்னிடம் உள்ளது. இந்த வலைதளத்தில் பதிவு செய்ய தொழில்நுட்பம் தெரியும் போது உங்களுக்கு கிடைக்கலாம்.
ஆயினும் இந்தப் படங்களை தயாரிக்கும் போது நான் எழுதிய ஸ்கிரிப்ட்டுகளை பிரதி எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன். அவற்றை உங்களுக்கு கட்டுரைகளாக  எனது வலைப் பகுதியில் தருவேன்.
இப்படிப்பட்ட முக்கியமான காரியங்களை செய்யும் பலரையும் சந்திக்க விரும்புகிறேன். நாம் சில விஷயங்களுக்கான தொழில்நுட்பத்தை அறிந்து, நிதி ஆதாரத்தையும் தேடிக் கொண்டால் பல அற்புதமான ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் அல்லவா ?





Saturday 14 April 2012

குங்குமம்- வந்தாச்சு பகுதி

குங்குமம் வார இதழில் சில பேட்டிகள், கட்டுரைகளுடன் வந்தாச்சு என்ற பகுதியையும் எழுதி வந்தேன். அந்தப் பகுதியை நான் எழுதுவதை நிறுத்தியாகிவிட்டது. வேறு யாரோ இதைத் தொடர்கிறார்கள். கடைசியாக நான் எழுதியது ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் டிவிடி பற்றித்தான். முதன்முறை டிவிடியாக வந்த பழைய படங்களைப் பற்றியே எழுதியதால் அப்பகுதிக்கு ஒரு கிளாசிக் லுக் வந்திருந்தது. ஆனால் புத்தகங்களும் சிற்றிதழ்களும் புதிதாக வந்தவையே இடம் பெற்றன. வாசகர்கள் பழைய குங்குமம் இதழ்களைப் பார்த்து புதிதாக வந்தாச்சு பகுதியில் அந்த சுவை இல்லை என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Tuesday 10 April 2012

சந்திப்பு 8 பிரபஞ்சன் என்ற மனிதர்

இலக்கிய உலகில் புதிதாக நுழைந்த போது, 1980களில், எனக்கும் நண்பர் சூர்யராஜனுக்கும் சமகாலத்தின் ஆதர்ச எழுத்தாளர்களாக இருந்தவர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் மற்றும் திலீப்குமார் ஆகியோர் மட்டுமே. லாசரா, சுஜாதா, போன்ற சிலரையும் தீவிரமாக வாசித்தோம்.இதில் ஜெயகாந்தனுடனும் சுந்தரராமசாமியுடனும் அசோகமித்திரனுடனும் பழகும் வாய்ப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது. ஆனால் பிரபஞ்சனும் திலீப்குமாரும் மிகவும் நெருக்கமாக மாறிப் போனார்கள். அதற்கு காரணம் அவர்களின் இயல்பான சுபாவம்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத, எந்த ஒரு மனிதரையும் அலட்சியப்படுத்தாத, எந்த ஒரு பகிர்தலையும் இருதரப்புக்கும் சாத்தியமாக்க முடிந்த அற்புதமான மனிதர்களாக திலீப்குமாரும் பிரபஞ்சனும் இருந்தனர்.
பிரபஞ்சன் என்ற ஆகிருதியை அவரது பிரும்மம் கதையைப் படித்ததும் நொடிப்பொழுதும் தாமதமின்றி புரிந்துக் கொண்டேன். அப்போது அவர் நாவல்களை அதிகம் எழுதியிருக்கவில்லை,மணிமணியான சிறுகதைகள் எழுதியிருந்தார்.குங்குமம், குமுதம் என பத்திரிகைகளில் பணியாற்றி தனக்கான அக வெளியைத் தேடி வெளியேறியிருந்தார். குமுதம் குவார்ட்டர்சை அவர் காலி செய்த போது, மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து அவரது மூட்டை மூட்டையான புத்தகங்களை சுடும் வெயிலில் கே.கே.நகரில் புதிய வீட்டிற்கு அவர் எடுத்துச் செல்ல உதவியபோது அவருடனான நெருக்கம் அதிகரித்தது.
அது 1986ம் ஆண்டு. எனக்கு திருமணமான புதிது. பிரபஞ்சனை வாரம் ஒரு முறையாவது பார்த்து விட துடிப்போம் நானும் சூர்யாவும். திருமணமான புதிது என்பதால் மனைவியிடம் சொல்லாமல் எங்கேயும் போகமுடியவில்லை. என் நண்பர்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள் என்ற பிம்பம் என்மீது படிந்திருந்ததால், நண்பர்களை சந்திப்பதை என் அம்மாவும் மனைவியும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி முடிவெட்டப் போவதாகவும் சினிமாவுக்குப் போவதாகவும் பொய் சொல்லி பிரபஞ்சனை கே.கே.நகருக்குப் போய் பார்த்து வருவேன்.
குடும்பத்தை பாண்டிச்சேரியில் பிரிந்து தனியாக இருக்கும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு போட ஆசைப்பட்டு ஒருநாள் மனைவியிடம் பிரியாணி செய்யச் சொல்லி அவரை அழைத்து வந்தேன். அப்போது பிரியாணி முழுவதும் தீய்ந்து கருகி விட்டது. அரைக்கிலோ கறியையும் பாஸ்மதி அரிசியையும் என் மனைவி வீணாக்கமாட்டாள் என்பதால் இதை தற்செயல் என்று நம்பினாலும், அதன் பிறகு அவர் வீட்டுக்கு வருவதில்லை. ஒருமுறை நான் வீடு காலி செய்யும் போது வந்து, ஆட்டோவில் ஏராளமான புத்தகங்களை அள்ளிச்சென்றார்.
பின்னர் அவர் மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, சந்தியா என பல நாவல்களை எழுதி சாகித்ய அகடமி வரை பேசப்பட்டார்.
எப்போதும் பண நெருக்கடியுடனும், வாழ்க்கையின் சோர்வுடனும், பெண்கள் மீதான மதிப்பு கலந்த காதலுடனும் இருந்த அவரை நாங்கள் எப்போதுமே உடன்பிறவா சகோதரராகவே நேசித்திருக்கிறோம்.
வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் அவருக்கும் எனக்குமான இடைவெளிகளை அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் அவரது தொலைபேசி அழைப்பு. இப்போது பீட்டர் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற போது வழக்கம் போல சரவண பவன் வரை காபி சாப்பிட அழைத்துப் போனார். இப்படி நூற்றுக்கணக்கான பேருடன் காபி சாப்பிட நடந்துப் போன அனுபவங்களையும் பேசிய விஷயங்களையும் அவரால் தொகுக்க முடிந்தால் அது சமகால இலக்கியத்திற்கு மிகப் பெரிய கொடையாக இருக்கும்.
பத்திரிகைகள் கதைகளை பிரசுரிப்பதை, தீராத பாவமாக கருதுகின்றன என்பதால் முன்பு போல உற்சாகமாக எழுத முடியாமல் தவிக்கிறார்.மனைவியை இழந்தது, மகன்களை வெளிநாடு அனுப்பி பிரிந்து வாழ்வது போன்ற குடும்பச் சூழல்களும் பல்வேறு இழப்புகளும் அவரது இருப்பைக் குலைத்திருக்க கூடும். ஆனால் பிரபஞ்சன் என்ற படைப்பாளியும் மனிதரும் அப்படியே இருந்தனர். கூடவே அவர் வாசிப்பும். வீடுநிறைய இப்போதும் புதிய புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன.
உயிர் எழுத்து இதழில் தொடராக இளம் படைப்பாளிகளைப் பற்றி எழுதி வரும் பிரபஞ்சன் எனது கிடங்குத் தெரு நாவலைப் பற்றி எழுதவும் விருப்பம் தெரிவித்தார். அந்தப் புத்தகம் வந்து 6 ஆண்டுகளாகிவிட்டது. பாஷா பாரதி சம்மான், தஞ்சை பிரகாஷ் என விருதுகள் கிடைத்தன. அந்த நாவலையும் அதில் எழுதப்படாத பல விஷயங்களையும், தழுவி எடுக்கப்பட்ட வசந்தபாலனின் அங்காடித்தெருவும் வந்து போய்விட்டது. அந்த புத்தகத்தை மறுபதிப்பு போட பதிப்பாளர்கள் முன்வரவில்லை. மீண்டும் தமிழினியே போடலாம், என்னிடம் சில ஆயிரங்கள் இருந்தால் சாத்தியமாகலாம். என் நாவல் பற்றி பிரபஞ்சன் எழுதும் அளவு நான் வளர்ந்து விட்டேனா அல்லது எழுத வேண்டிய காலம் தவறி்ப்போய் விட்டதா என்று தெரியவில்லை.மறுபதிப்பு வரட்டும்.அப்புறம் பார்க்கலாம் சார்.




பணக் கஷ்டம்

பணக் கஷ்டம்.
இன்று காலை செய்தி வாசிக்கும் நண்பர் மோசஸ் ராபின்சனை சந்தித்த போது, தொப்பையை குறைப்பது பற்றி வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். பட்டினி டயட், நடைப்பயிற்சி என என்ன செய்தும் குறையவில்லை என்று நான் கூறிய போது, இது பணத் தொப்பை என்றார் நண்பர் மோசஸ்.
அதே நாள் மாலையில் நண்பர் சங்கரிடம் பேசும்போது உங்களுக்கு பணம் கஷ்டம் எல்லாம் தீர்ந்துப் போயிருக்கும் இல்லையா சார் என்றார். அவரும் என் தொப்பையை பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
நண்பர்களே வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். பெட்ரோல் போடவும் காசில்லை. இந்த மாதம் பணம் தராவிட்டால் வீட்டில் சாப்பிட வழியில்லை,வாடகை கட்டவும் வக்கில்லை. எனது வயதும் அனுபவமும் அதிகமாகி சிறிய சமரசங்களுக்குப் பணியாமல் போவதால் வரும் துன்பம் இது. இப்படிச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் நிலை எனக்கு மட்டும் தெரியும்.
கடந்த ஆண்டு ஒரு பெரும் துன்பத்திற்கு உள்ளாகி, பணியை இழந்து, ஒரு ரூபாய் வருமானம் இல்லாமல் 6 மாதமாக வீட்டில் இருந்த போதும், பல இடங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு போய் அவமானம் பட்டதும் கிடைத்த வேலையிலும் அவமதிப்புகளை தாங்கி வெளியே வந்ததும் பெரிய கதை.
இத்தனை உளைச்சல்களில் நண்பர்கள் நான் வசதியாக இருப்பதாக நினைப்பதற்கு காரணம் என் உடலின் இளமைத் தோற்றமும் தடிமனும் தொப்பையும்.
நான் என்ன செய்வேன் என் நண்பர்களே.? பட்டினியும் எலும்பும் தோலுமாக நான் இருந்து விட்டால் மட்டும் என்ன செய்ய முடியும். என் மீது பரிதாபம் வந்து கடன் தரலாம், பிச்சை போடலாம், முகத்தைத் திருப்பி போய் விடலாம். இதைத் தானே செய்ய முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கஷ்டம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் கஷ்டம் எல்லாம் பணக்கஷ்டம் காரணமாக வந்ததுதான். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு என்று பாடுகிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். இருக்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்தபடி.

Sunday 8 April 2012

செந்தூரம் ஜெகதீஷ்

http://senthooramjag.blogspot.in

Saturday 7 April 2012

செந்தூரம் ஜெகதீஷ் 

1. இன்னும் மிச்சமிருப்பவை  கவிதைகள்

2. கிடங்குத் தெரு - நாவல் - பாஷா பாரதி சம்மான் தேசிய விருதும், தஞ்சைப் பிரகாஷ் இலக்கிய விருதும் பெற்றது.
3. செந்தூரம் ஜெகதீஷ் கவிதைகள்
4. சிறகுப் பருவம் - சிறுகதைத் தொகுப்பு
5. காதல் தேவதை- மாசோக்கிசத்தைப் பற்றிய மாசோக்கின் நாவல் மொழியாக்கம்
6. பிரபஞ்ச ரகசியம் - ஓஷோ -மொழியாக்கம்
7. புதிய குழந்தை - ஓஷோ-மொழியாக்கம்
8. நான் ஒரு வெண்மேகம் - ஓஷோ - மொழியாக்கம்
9. நம்பிக்கை நட்சத்திரமாய் - ஓஷோ-மொழியாக்கம்

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் 22 வாரங்களுக்கு சிற்றிதழாளர்கள் மற்றும் படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சி தயாரித்து இயக்கியிருக்கிறேன்.இதில் கநாசு, கண்ணதாசன், புதுமைப்பித்தன், கு.பரா, மௌனி, பி.எஸ்.ராமையா போன்ற படைப்பாளிகளும் மணிக்கொடி முதல் உயிர்மை வரையிலான பல்வேறு சிறுபத்திரிகைகளும் இடம்பெற்றன.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...