Thursday 5 November 2020

இன்று வாசித்த புத்தகம் 16-22

இன்று வாசித்த புத்தகம் 16 வாக்கு கவிதைகள் ரிஷி. தமிழ் அறிவுத்தளம் நன்கு அறிந்த பெயர் லதா ராமகிருஷ்ணன். ரிஷி என்ற பெயரில் கவிதைகள் , அனாமிகா என்ற பெயரில் கதைகளும் எழுதி வருகிறார். நிறைய மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். அவருடைய கவிதைகள் நுன்ணுணர்வு கொண்டவை. நிறைய பத்திரிகைகளில் அவரை வாசித்து நூல் வடிவிலும் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் கடற்கரை மணல் எங்கும் ஓடித் திரிந்து கிளிஞ்சல் சேகரிக்கும் குழந்தைக் குதூகலமும் காலத் துளிகள் நாளும் பேதுறும் வயோதிகக் கலக்கமுமாக கவிதை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். வலி நிவாரணி தரும் வலி ஒரு அழகான எழுத்து. இன்னொரு கவிதையில் வகைவகையாய் மிகை பிம்பம் தரித்து காகித வாள் சுற்றித் திரிகிறாள் நாளும் என்று எழுதிச் செல்கிறார். எனக்கு மட்டுமான கடல் இன்னொரு நல்ல கவிதை. எத்தனையோ கால்களுடன் என் கால்களையும் நனைத்து விட்டுப் போகிறது கடல். அதில் என்னை மட்டும் தொட்டுப் போன நீர்மணிகளைத் திரட்டியெடுத்து என் நினைவடுக்குகளில் பத்திரப்படுத்தி வைக்கும் வகையறியாது திகைத்து நிற்கிறேன் நான் மிகை ஆனந்தம் போலவே பெயரறியாத் துயரொன்றின் பெயரும் கடலாகவே... என்று கவிதையை முடிப்பது ரசிக்க வைக்கிறது. கடவுளின் பூமி என்ற இறுதிக் கவிதையில் பெண்ணிய கோபமும் தாய்மையின் கனிவும் கலந்து வருகிறது. பெண்டாளப்பட்ட பின் துண்டாடப்பட்ட பிறப்புறுப்புகள் பெண் கடவுளர்களை ஊனமாக்கின என்று எழுதிய ரிஷி கவிதையை இப்படி தொடர்கிறார் .ஆண்மையழித்தன பரப்ரும்மாக்களின் மரணித்து விட்ட கண்மணிகளில் இறுதிப் பதிவாய் மதம் பிடித்த பார்வைகளின் மூர்க்கம் தெருவோரம் அறுந்து கிடக்கும் கருப்பையிலிருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு குட்டிக் கடவுள் என்று முத்திரை பதிக்கிறார். ---------------- இன்று வாசிக்கும் புத்தகம் 17 Heroes of Olympus .The son of Neptune. Rick Riordan. பழைய புத்தகக் கடையில் அள்ளி வந்த புதையல்களில் இதுவும் ஒன்று. மிகை புனைவு கதைகள் சிறு வயதில் நம்மை ஈர்க்கின்றன. தெய்வங்கள், பிசாசுகள்,இறக்கை முளைத்த ராட்சசிகள் ....பறவைகள், விலங்குகள் என நமது கற்பனை வெளியை விரிவுபடுத்துபவை இத்தகைய மாயஜால கதைகள்.இவை படிக்க மிகவும் சுவாரஸ்யமான கதைகள்.கிரேக்க குட்டிக் கடவுள்களின் வீரதீர சாகஸம் என்றால் நான் விழுந்து தொழுது படிப்பேன்.அத்தனை சுகமான வாசிப்புகள் .இந்த புத்தகமும் அப்படித்தான்.கையில் எடுத்ததுமே விறு விறு என பல பக்கங்கள், பல அத்தியாயங்கள் போனதே தெரியவில்லை.மெதுசா என்ற அரக்கியைக் கொன்றதற்கு பழி தீர்க்க பெர்சி என்ற குட்டிக் கடவுளை இரண்டு அரக்கிகள் அவர்கள் மெதுசாவின் சகோதரிகள், நம் நாயகன் பெர்சியைத் துரத்தோ துரத்து என துரத்தி அழிக்க வருகின்றனர். கடலில் மூழ்கி உயிர் பிழைத்த பெர்சிக்கு பழைய நினைவுகள் யாவும் அழிந்து விட்டன...அவன் எப்போது மெதுசாவைக் கொன்றான்,ஏன் கொன்றான் என்று அவனுக்கு சுத்தமாக நினைவில்லை.அவனுக்கு தன் பெயர் பெர்சி என்பதும் தான் ஒரு டெமி காட் என்பதும் தெரியும் .அவனுக்கு தன்னையன்றி நினைவில் நிற்கும் ஒரேயொரு பெயர் அன்னாபெத்.யார் இவள்? அவனது உயிருக்கு உயிரான காதலியாக இருக்கும். சபிக்கப்பட்ட இந்த குட்டிக் கடவுள் பெர்சி யார் ...அவனும் ஹேசல்,ஃபிராங்க் ஆகிய இரண்டு குட்டிக் கடவுள்களையும் தேவர் குலத்தைக் காக்க அந்த சர்வ வல்லமைப் படைத்த தேவன் ஏன் அனுப்பி வைத்தான்?தேவர்களுக்கு என்ன ஆபத்து? அதனை இந்த மூன்று டெமி காட்ஸ் எப்படி தங்கள் சாகஸங்களால் சாதித்துக் காட்டினர்.. பெர்சி அன்னாபெத்தை சந்திக்க முடிந்ததா? இப்படி பல கேள்விகள் எழுப்பி படித்துக் கொண்டிருக்கிறேன்.முழுக் கதையையும் தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக இருக்கிறது அல்லவா...அசுக்கு புசுக்கு நான் சொல்ல மாட்டேன். நானே படித்து நானே ரசித்து. ....எப்பவாவது கிராபிக்ஸ் கலக்கலுடன் பாகுபலி மாதிரி ஒரு பிரம்மாண்டமான சினிமாவாக எடுக்கலாம். யாராவது பத்து இருபது கோடி செலவு செய்ய தயார் என்றால் சொல்லுங்கள். கதையை தமிழ் ஏழுத்தாளர் ஒருவர் தன் பெயரில் சுட்டாச்சு சுட்டாச்சு... பெரிய டைரக்டரிடம் அதனை பல லட்சம் பணத்துக்கு வித்தாச்சு வித்தாச்சு என்று யாரோ அழுகிறார் போல இருக்கு. அடப் பாவமே....இத்தனை கற்பனை வறட்சியா.... ----- இன்று வாசித்த புத்தகம் 18 Khushwant singh on women,sex,love, and lust. குஷ்வந்த் சிங் ஒரு பத்தி எழுத்தாளர் .பிரபல ஆங்கில நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் எண்ணியதெல்லாம் எழுதிக் குவித்தார்.அவை நூற்றுக்கு மேற்பட்ட புத்தகஙாகளாக தொகுக்கப்பட்டுள்ளன.பெண் உடல் பாலியல் இன்பம் சார்ந்த அவர் எழுத்துகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தப் புத்தகம் அவரது 90வது வயதில் வெளிவந்தது. மும்பையில் அழகான மன நலம் பாதித்த ஒரு மெல்லிய வேட்டியை மட்டுமே ஆடையாக உடலை மறைத்து வாழ்ந்த அந்த பெண் ஒரு நாள் மழையில் தனது வேட்டியைக் களைந்து நிர்வாணமாக குளிப்பதை பார்க்கிறார். இன்னொரு அத்தியாயத்தில் ஸ்வீடனின் நிர்வாண கடற்கரையில் கண்ட காட்சிகள் குறித்து விவரிக்கிறார்.பேண்ட்டை கழற்ற தமக்கு தயக்கம் இல்லை என்றும் தலைப்பாகையை கழற்றி தனது நீண்ட கூந்தலை காட்டுவதற்கு சங்கடப்பட்டதாகக் கூறுகிறார். ஓஷோவின் தந்த்ரா டெக்னிக் பற்றிய பதிவில் கூட்டுக்குழு உடலுறவு முறைகள் பாலியல் இச்சைகளில் இருந்து விடுதலை தருமா என சந்தேகம் எழுப்புகிறார்.காமனைத் தொழுதால் ராமனை அடையலாம் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை சிலாகித்து காமத்திலிருந்து கடவுள் படிக்கத்தக்க புத்தகம் என்று பரிந்துரை செய்கிறார்.புத்தகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் முதல் உருது கவிதைகள் வரை மேற்கோள்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு அத்தியாயம் ரயிலில் செல்லும் புதுமணத் தம்பதிகள் ஊர்போய் முதல் இரவை கொண்டாட பொறுமை இல்லாமல் ரயிலிலேயே முதலிரவைக் கொண்டாடிய காட்சியைக் கூறுகிறார்.அவர்களின் நிர்வாணக் கோலத்தை கண்டு திடீரென மின்விளக்கை எரிய விட்ட போது அவர்கள் பதறாமல் சாவதானமாக ஆடைகளை திருத்தி எழுந்ததை கூறுகிறார்.செக்ஸ் பற்றி மனம் திறந்து பேசுவதும் பாலியல் பிறழ்வுகள்,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம் நுகர்தல் போன்றவை பாவங்கள் அல்ல என்று கூறுகிறார் குஷ்வந்த் சிங். -------------------- இன்று வாசித்த புத்தகம் 19 சி.மோகன் கட்டுரைகள். தமிழ் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் நண்பர் சி.மோகன் புதிய பார்வை,தீராநதி போன்ற இதழ்களில் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து இது தொடர்பாக அவரிடம் நேரிலும் பாராட்டி இருக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை மீண்டும் ஒரே மூச்சாக இரண்டரை மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.மனதுக்குள் தஸ்தாயவஸ்கி, ஜி.நாகராஜன், சம்பத் ஆகிய மூன்று ஆளுமைகள் தான் மனம் முழுவதையும் ஆக்ரமித்துள்ளனர்.இதற்கு சி.மோகன் மேற்கோள் காட்டும் காஃப்காவின் வரிகள்தான் காரணம்.மகிழ்ச்சி தரும் எழுத்தை விடவும் துன்பத்தையும் வலியையும் தருகிற எழுத்தே பெரிது என்று காஃப்கா கூறுகிறார். "நம்மை விட அதிகமாக நாம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போலவோ தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக் கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் "என்று கூறுகிறார் காஃப்கா. தஸ்தாயவஸ்கி குறித்து சில கட்டுரைகளை செம்மைமாக எழுதியிருக்கிறார் மோகன் .இந்தக் கட்டுரைகள் தஸ்தாயவஸ்கி எழுத்தை முதல் முறையாக வாசிக்க வரும் வாசகனை கைப்பிடித்து அந்த மாய உலகினுள் அழைத்துச் செல்லும்.தஸ்தாயவஸ்கியை படிக்கத் தொடங்கிய அந்த நாள் தன் முதல் காதலை விட முக்கியமானது என்று ஹென்றி மில்லர் கூறுகிறார். கடவுள் என்ற கைவிளக்கை ஏந்திய தஸ்தாயவஸ்கி சரணடைதல், துன்பங்களை ஏற்றல்,குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று ஆன்மசுத்தி அடைதல் ஆகியவற்றிலேயே மனித விமோசனம் தங்கியிருந்த தென கருதினார் என்று குறிப்பிடுகிறார் சி.மோகன். இதே போன்று ஜி.நாகராஜன் இறுதி நாளில் கூட இருந்த அனுபவத்தை சி.மோகன் பதிவு செய்துள்ளார்.ஜி.நாகராஜனின் அழுகிய உடல் மதுரையில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டது என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் சி.மோகனின் பதிவு அப்படி ஒன்றும் ஜி.நாகராஜன் அனாதையாக சாகவில்லை என்று உறுதி செய்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை விடச் செய்கிறது. மிகவும் குளிராக இருக்கிறது.சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் தீரும் என்று ஜி.நாகராஜன் தம்மிடம் கூறியதைப் பதிவு செய்துள்ளார் சி.மோகன். மேலும் பல ஆளுமைகள் சி.மோகனின் எழுத்தால் நினைவுகளில் புத்துயிர் பெறுகின்றனர்.சுந்தர ராமசாமி, ஆதிமூலம்,ஆனந்த குமாரசாமி, நிமாய் கோஷ்,எம்.பி. சீனிவாசன்,கோபிகிருஷ்ணன் போன்றோரின் நினைவுகள் போற்றி பாதுகாக்க வேண்டியவை.சி.மோகனின் அத்தனை எழுத்துகளும் நான் வாசிக்க விரும்பும் எழுத நினைக்கும் எழுத்துகளாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை மட்டும் என்னால் உடன்பட முடியவில்லை. தமிழில் மிகச்சிறந்த நாவல்களே இல்லை என்று கூறுகிறார்.என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் எழுத முயற்சி செய்தேன். சுந்தர ராமசாமி எழுதி விட்டார். --------------------------- இன்று வாசித்த புத்தகம் 20 திரும்பிப் பார்க்கையில்... ஷாஜி. திரையிசை தொடர்பான கட்டுரைகள் மூலம் கவனம் பெற்றவர் ஷாஜி. டி.எம்.எஸ். பற்றி சிறப்பாக எழுதியவர் சீர்காழி கோவிந்தராஜன் குறித்து மட்டமாக எழுதினார் .பொதுவாக ஜெயமோகன்,ஷாஜி மாதிரி மலையாள மனம் படைத்தவர்களுக்கு தமிழக கலைஞர்கள் மீது ஒருவித கேவலமான எண்ணம் இருப்பதை அவதானித்திருக்கிறேன்.இக்கட்டுரை தொகுப்பில் பிரபஞ்சனை குறித்த கட்டுரையில் தன் மீது பிரபஞ்சன் ஏன் கோபம் கொண்டார் என புரியவில்லை என்கிறார் ஷாஜி. எனக்கு இதுதான் காரணம் என்று தோன்றியது. ஜெயமோகன், சாரு நிவேதிதா ஷாஜி போன்றவர்கள் தமிழ் மணிக்கொடி எழுத்தாளர்களை தயிர்வடை எழுத்து என்று கூறுவதற்கு வெட்கப்படவில்லை . தமிழில் இரண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டன என்று கூறத் தயங்கவில்லை. விஷ்ணுபுரத்தை தன் தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்த பிரபஞ்சனைத் தூக்கி எறிய சிறிதுகூட நாணவில்லை.புதுமைப்பித்தன் மீது மூத்திரம் அடிப்பதும் பிறகு அவரை உயர்த்திப் பிடிப்பதும் தமிழ்ச் சூழலில் தான் நிகழும். பிரபஞ்சன் மீது உண்மையான மதிப்பையும் பிரியத்தையும் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன்.அவரது கடைசி காலங்களை சிரமமின்றி கழிக்க பத்து லட்சம் ரூபாய் நிதித் திரட்டி தந்தார்.அந்த விழாவில் உணவு இடைவேளையின் போது பிரபஞ்சன் என்னுடன் இருந்தார் .சார் தயவுசெய்து இந்தப் பணத்தை பத்திரமாக வைத்து உங்கள் ஆடம்பரம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.அப்போது அவர் கண்கலங்கியது.ஆமாம் ஜெகதீஷ் எஸ்.ரா.எனக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கையில் பணமில்லை. பிரபல மூத்த நடிகர் ஒருவர் 5லட்சம் ரூபாய் கொடுத்து உதவியதாக பிரபஞ்சன் கூறினார். இந்த புத்தகத்தில் இயக்குனர் மிஷ்கின் உதவியதாக ஷாஜி கூறுகிறார். மிஷ்கினும் உதவி இருக்கலாம். இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கட்டுரைகள் சில உள்ளன. ரித்விக் கட்டக் பற்றிய இரண்டு கட்டுரைகள் சிறப்பாக எழுத ப்பட்டுள்ளன.சத்யஜித் ரேக்கும் ரித்விக் கட்டக்குக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்றும் ரே கட்டக்கின் ரசிகராக இருந்தார் என்றும் ஷாஜி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொகுப்பில் பல அருமையான கவிதைகளையும் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார் ஷாஜி. அந்த கவிதைகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவை. -------------------- இன்று வாசித்த புத்தகம் 21 ஒத்திகைகள் பார்வையாளர்களுக்கல்ல...சூர்யராஜன் Suriya Rajan. இருசம்மா என்ற சிறுகதையை செந்தூரம் இதழில் எழுதிய நண்பர் சூர்யராஜன் இதயத்துக்கு நெருக்கமான நண்பர்.35 ஆண்டுகளைக் கடந்து இணக்கம் குறையாத நட்பு அது.எனது அறிவுத் திரியை சுடர விட்ட தீபமாகவே நான் அவரை மதிக்கிறேன். என் ஆசான் என்றுகூட சொல்வேன். இந்தப் புத்தகம் என்னிடம் உள்ள போதும் மூர்மார்க்கெட்டில் பார்த்து வாங்கி வந்தேன். மீண்டும் வாசித்த போது இப்போது எங்களுடன் இல்லாத இரண்டு நண்பர்களின் நினைவு கண்கலங்க வைத்தது.கல்யாணசுந்தரம் என்ற நண்பர் சூர்யாவின் எழுத்துகளுக்காகவே சிந்தனாலயா பதிப்பகம் ஆரம்பித்து வறுமையே வெளியேறு என்ற சூர்யாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த கட்டுரை தொகுப்பையும் அவரே 2007ம் ஆண்டு வெளியிட்டார். ஒரு நாவல் எழுதவும் ஆசைப்பட்ட கல்யாணசுந்தரம் வீட்டுக்கு நண்பர்களுடன் செல்லும் போது நாவலிஸ்ட் என்று நக்கலடிப் பார் கவிஞர் மு.நந்தா.நான் இழந்து தவிக்கும் இன்னொரு நல்ல நண்பர் நந்தா.அவர் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். "கல்யாணசுந்தரத்தின் வீட்டையொட்டி ஒரு தோட்டம் இருந்தது. பேருக்குத்தான் அது தோட்டமே தவிர ஒரே ஒரு நாவல் மரம்தான் அங்கே இருந்தது. அதுதான் எங்கள் போதிமரம். " என்று நந்தா அழகாக பதிவு செய்து விட்டார். இத்தொகுப்பில் சினிமா என்றால் சத்யஜித் ரே,குருதத்,ஹிட்ச்காக் என்றும் இலக்கியம் என்றால் கு.ப.ரா., க.நா.சு.,பிரமிள்,அசோகமித்திரன் என்றும் தனிப்பட்ட அனுபவங்கள் என்றும் செறிவான கட்டுரைகளை சூர்யராஜன் எழுதியுள்ளார்.இதில் மகளும் ஒருநாள் தாயாவாள் என்ற கட்டுரை நெகிழ வைக்கும். "பெண் போகும் பொழுது கொண்டு செல்வது சீர்செனத்தி மட்டுமல்ல....பெண்ணைப் பெற்ற தாய்க்கு புகுந்த வீட்டில் தன் மகள் எதிர்கொள்ள வேண்டிய மனிதர்கள் சந்தர்ப்பங்கள் இவை சுமுகமாக அமைய வேண்டுமே என்கிற ஆதங்கம் ( அவள் சுகமாகவே இருப்பாள் ) அந்தத் தாய் ஒரு பாட்டம் அழுதுத் தீர்க்கிறாள்.அந்த அழுகையின் மூலம் தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறாள் அந்தத் தாய்.அந்தத் தந்தையோ இவளுக்கு கணவன்,பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் மனைவியின் அழுகையை சமாதானப்படுத்துவதாக பாவனை செய்து தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறான் " என்று எழுதியுள்ளார் சூர்யராஜன். தனது மூத்த மகளுக்கு மணம் முடித்த நிலையில் அவர் தனக்காகவும் பெண்ணைப் பெற்ற அத்தனை தாயுள்ளங்களுக்காகவும் எழுதிய வரிகளாகவே இதனை நான் வாசித்தேன். ---------------------- இன்று வாசித்த புத்தகம் 22 ரெஹம் கான் பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி ரெஹம் கான். இப்போது நாற்பது வயதைக் கடந்த சுதந்திரமான பெண்ணாக வெளிநாட்டில் வசிக்கிறார். லிபியாவில் முதல் திருமணம் இளம் வயதிலேயே நடந்து விட்டது. கணவர் அடித்துத் துன்புறுத்தியவர். 12 ஆண்டுகள் குடும்ப வனமுறையைப் பொறுத்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் வாழும் ரெஹம் கான் ஒரு நாள் தன் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் பொங்கி எழுகிறார். போலீசை அழைத்து கணவரிடமிருந்து விடுதலை பெறுகிறார். அழகுக் கலை நிபுணராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை நடத்திச் சென்றவர் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானை இரண்டாம் கணவராக மணம் முடிக்கிறார். இம்ரான் கானின் அரசியலிலும் ஈடுபட்டு அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார். இந்த சுயசரிதையில் அவர் பல பொது விவகாரங்களைத் தான் விவாதித்து இருக்கிறார். பெண்களின் சுதந்திரம், நாட்டுப் பற்று போன்றவை இதில் உள்ளன. ஆனால் தனிப்பட்ட அந்தரங்க சம்பவங்கள் அதிகமாக இல்லை. அந்நிய ஆடவருடன் கைகுலுக்கவும் அனுமதி மறுக்கப்பட்ட குடும்பம், சமூகப் பின்னணி கொண்ட ரெஹம் கான் அரை சலாமுடன் தன்னிடம் கை நீட்டும் ஆடவர்களைத் தவிர்ப்பதைப் பதிவு செய்கிறார். 9 வயது சிறுமியாக இருந்த போது வயதான உறவினர் ஒருவர் லிப்டில் வைத்து உதட்டில் முத்தம் கொடுத்ததாக அதன் நினைவு இன்று வரை அருவருப்பு தருவதாக கூறுகிறார். ஆண்களைப் பற்றி கூறுகையில் தன் அன்பை அவர்களால் பெற முடியாத சூழல்களே அதிகம் என்றும் குறிப்பிடுகிறார். மூர் மார்க்கெட்டில் வாங்கி வந்த இந்த பெரிய புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட்டேன். அதற்கு காரணம் அழகான ரெஹம்கானின் முகமும் நெருடாத புத்தக ஆக்கமும்தான்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...