Tuesday 23 June 2020

ஜென் தேநீர் -செந்தூரம் ஜெகதீஷ் பாகம் 11-15

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 11
பாஷோவின் ஹைகூ கவிதைகள்....



1 விரிந்த கிளையில்
காக்கை கூடு கட்டும்
இலையுதிர் காலத்தில்
2. அந்த கிராமத்தில் யாரும்
மணியடிப்பதில்லை
அடடா வசந்தகாலங்கள் வரும்போது
என்ன செய்வார்கள்?
3. கைத்தடிகளுடனும்
நரை முடிகளுடனும்
பார்க்க வந்தனர்
கல்லறைகளை
4 அரிசி இல்லையா
அந்த நேத்தில் தட்டில்
ஒரு பூவைப் பறித்துப் போடுவோம்.
5அறுவைடைக் கால நிலா
குளத்தைச் சுற்றி நடந்தேன்
இரவு கழிந்தது
6. கூக்கூ என்று குயில் அழுகிறது
செய்வதற்கு ஒன்றுமில்லை
அந்த புதருக்கு
7 பாறை மீது தட்டான் பூச்சி
நடுப்பகல்
கனவுகள்
8 மெல்லுவது குறித்து எச்சரிக்கை
வெறுமையின் தத்துவத்தால்
பற்கள் உடைந்து போகலாம்
எனவே விழுங்கி விடுங்கள் முழுமையாக.
9 துளைகள் இல்லாத
புல்லாங்குழல்
வாசிப்பதற்கு சிரமமானது
10 வெட்டுக்கிளி
ஒன்றும் அறியாதவரை
கத்திக் கொண்டிருந்தது.
11. முதல் பனி
என் பாதை வடகிழக்கே
நட்சத்திரங்களை நோக்கி....
12. பனிக்கால நிலவொளி
மூங்கில்களிடையே மறைகிறது
அமைதியுடன் கலக்கிறது
13 உதிரும் இலை
கிளைக்குத் திரும்புகிறதா..
அட  பட்டாம்பூச்சி
14 நீயே பார்
வேர்ப்பூக்கள் நிலவொளியில்
நனைவதை
15 கலையின் பிறப்பிடம்
நெல்விதைப்போரின் பாடலுக்கு
எங்கிருந்தோ கோரஸ்
16 பனித்துளிகள்
உலகின் அழுக்கைக் கழுவ
இதைவிட வேறு எப்படி..?
17 கிளை மீது
காக்கைத் தூக்கம்
இலையுதிர்கால  மாலை
18 . வசந்தம் போகிறது
பறவைகள் அழுகின்றன
மீன்களின் கண்களிலும் கண்ணீர்
19 மழைக்கால வாழை மரம்
இரவெல்லாம் கேட்டது
இலைக் கடம்பினினில்  பெய்த மழையின் சத்தத்தை
20  அரிசியை விதைக்கும் கரங்கள்
நினைவு கூர்ந்தன
கல்லிலே அரைத்த விதைகளை
21 நான் தனியாக இருப்பதை
உணர்ந்த போது
இங்கேயும் பூத்தது ஒரு மஞ்சள் மலர்
22 கனவுகள் நேராக
குதிரை சவாரி
தூரத்து நிலவொளியில்
காலைத் தேநீரின் புகை
23 நான் உனது தோட்டத்தைப் பெருக்கி
சுத்தம் செய்து
விட்டுச் செல்கிறேன்
சருகுகளை
24 பனிப்பொழிகிறது
குரங்குக்குக் கூட
கம்பளிவேண்டும்
25 முதல் குளிர்கால மழை
நான் செல்கிறேன்
நானொரு பயணி
26 ஏழைச் சிறுவன்
நிலவைப் பார்ப்பதை விட்டு விட்டு
அரிசி ஆலைக்கு வேலைக்குப் போகிறான்
27 பட்டாம்பூச்சியே விழித்தெழு
நேரமாகிவிட்டது
நாம் இன்னும் பல மைல்கள்
பயணிக்க வேண்டும்
28 வயலட் பூக்கள்
எத்தனை மதிப்பிட முடியாதவை...
மலைப் பாதையில்
29 மழைக்காலம்
பட்டாம்பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன
மல்பெரிகளின் மீது
30  பனிக்காக ஒதுங்கிய
கவிஞர்களின் கோப்பைகளில்
மின்னலடித்தது
31  இலையுதிர்காலத்தில்
பறவைகளும் மேகங்களும் கூட
வயதாகி விட்டதைப் போல் தெரிகின்றன
32 இதுதான் நறுமணம்
எந்த மரத்திலிருந்து
எங்கிருந்து ?
33 விடியலில் பூக்கும் மலர்களில்
நான் காண ஏங்குவது
கடவுளின் முகத்தை
34 நிலவு மரங்களை விட்டு
மேலெழும்பும் போது
இலைகள் மழையைப்
பிடித்துக் கொள்கின்றன.
35 நண்பர்களின் நிரந்தரப் பிரிவு
காட்டு வாத்துகள்
மேகங்களில் வழி தவறின
36 சாகும் வெட்டுக்கிளியின்
பாடலில்
எத்தனை உயிர்த்துடிப்பு
37 தேன் வடியும் மலரின்
இதயத்திலிருந்து
வெளியேறும் ஒரு குடிகார வண்டு
38 கோடைப் புல்
இலைதாம் மிச்சம்
வீரர்களின் கல்லறைகளிலே
39 பயணக் களைப்பு
காய்ந்த வயல்களில்
கனவுகள் அலையும்
40 மரம் மீது
காகம் அமர்ந்திருக்கிறது
இலையுதிர்கால சருகு போல

---------------------
இவை பாஷோ எழுதிய ஹைக்கூ கவிதைகள்.. ..இக்கவிதைகளிலும் இயற்கையின் பேரானந்தத்தை கவிஞன் தரிசிக்கிறான், குரங்குக்குக் கூட கம்பளிவேண்டும் என்று கவலைப்படுகிறது. தூரத்தில் தெரியும் காலைத் தேநீரின் புகையைக் கண்டு நடக்கிறான்.
ஜென் அற்புதமானது.
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை நாம் தொலைத்து விட்டோம். நகரமயமாக்கல் கார்களின் ஓசையில் நமக்கு குயில்களின் பாடல்கள் கேட்பதில்லை .எங்கிருந்தோ வீசும் வாசனையையும் இலையுதிர்வது போல் அமர்ந்திருக்கும் காக்கைகளையும் வழிதவறிய காட்டு வாத்துகளையும் கண்ணால் காண்பவன் ஹைகூ கவிஞன்.
பாஷோவின் பயணம் ஆங்கிலத்தில் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்பான ஒரு புத்தகத்தைப் பற்றியும் இன்னும் ஏராளமான கவிதைகளையும் பார்க்கலாம்.....
----------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 12
பாஷோவின் ஹைகூ கவிதைகள்....
1.எதுவம் செய்யாமல்
அமைதியாக இருந்தால்
வசந்தம் வருகிறது
பூக்கள் தாமே மலர்கின்றன
2 அந்த கொக்கு
நீரில் தன் முகத்தை நுழைத்து
மிதக்கிறது தூங்கியபடி
3 ஒரு கிழட்டு பைன் மரம்
ஞானம் போதிக்கிறது.
ஒரு காட்டுப் பறவை
உண்மையை உரக்க கூறுகிறது.
4 நிறைய நிறைய ஞாபகங்கள்
செர்ரி பழங்கள்
பழுக்கும் போது
5. மழைக்கால வாழை மரம்
இரவெல்லாம் கேட்டது
பேசினில் பெய்த மழையின் சத்தத்தை
6 தலைநகரை நான் வசந்தகாலத்தில்
விட்டு வந்தேன்.
இங்கு மாரிக்கால காற்று
7  கலையின் ஆரம்பம்
அதோ தூரத்து வடக்கில்
அரிசி விதைப்பவரின் பாடல்கள்
8 ஆகா அற்புதம்
பச்சை இலைகள் இளமையானவை
சூரியன் காய்கிறது
9 பள்ளிப் பையும் நீண்ட வாளும்
மே மாதத்தை கொண்டாடின
பறக்கும் மீன்களுடன்
10 வெயில் கால ஆடைகள்
நெய்து முடிக்கவில்லை
சிறகுகளைத் தேடியதால்
11  மழையை விட
கனமாக பனிப் பொழிகிறது
பணியாளனே
உன் முதலாளியை
மூங்கில் தொப்பி அணியச் சொல்
12 கோடைப் புள்ளில்
மிச்சமிருக்கின்றன
மாவீரர்களின் கனவுகள்
13 இந்த பாதையில்
யாரும் பயணம் செய்யவில்லை
இலையுகிர்கால இருட்டு
14  தொங்கும் பாலத்தில்
உயிருக்குப் போராடும்
திராட்சைக் கொடிகள்
15 ஆக்டோபசின்
மிதக்கும் கனவுகள்
கோடை நிலவின் கீழே
---------------
பூஷன் கவிதைகள்.....
1 கோடாரிகளின் ஒலி
காட்டில் தூர ஒலிக்கும்
அருகில் மரங்கொத்தி
2. சில்லிட்டது தேகம்
காலில் இடறியது
இறந்த என் மனைவியின் சீப்பு
3. பரந்த அந்த மூங்கில்
மாறிவிடும் குப்பைக் காகிதமாகவும்
துடைப்பமாகவும்
4  பட்டாணிச் செடிகள்
பூத்த நிலவொளியில்
ரகசியமாய் கடிதம் படிப்பாள்
பெண்ணொருத்தி
-------------
எழுதியவர் பெயர் தெரியாத சில கவிதைகள்....
1.என்னுடைய கிடங்கு
எரிந்து சாம்பலாகி விட்டது.
ஒளிதரும் நிலவின் காட்சியை
இனி எதுவும் மறைப்பதில்லை
2 குன்றின் முகட்டில்
மூடுபனி மெதுவாக உருகிக் கொண்டிருக்கிறது.
இயற்கை தானே படைக்கும் அழகிய கவிதை
3 மூடன் கைவிளக்கில்
நெருப்பைத் தேடுகிறான்
நெருப்பு என்னவென்று அவன் அறிந்திருந்தால்
இந்நேரம் சோறு வெந்திருக்கும்
4 தண்ணீரில் நீந்தும் வாத்து
பிம்பத்தைப் பாதுகாப்பதும் இல்லை
தண்ணீரும் அதனை தன்னிடம் வைத்துக் கொள்ள
எண்ணுவதுமில்லை
5  குட்டித் தூக்கம் போட்டு
எழுந்தேன்
வசந்தம் போய் விட்டது
6 எரிப்பதற்காகக் காத்திருந்த
மரத்துண்டுகள்
மலரத் தொடங்கின
7 .ஈக்கள் மொய்த்தன
இந்த சுருக்கம் விழுந்த
கிழட்டுக் கையிடம்
என்ன வேண்டுமாம்
8 படிக்கட்டுகளில்  மூங்கில்  நிழல்
இரவெல்லாம் அசைந்தும்
ஒரு தூசு கூட சுத்தமாகவில்லை
9 நிலவின் பிம்பம்
குளத்தின் அடிவிளிம்பு வரை பாய்கிறது
ஆனால் ஒரு சுவடும் விடவில்லை.
10 மீன்கள்
மீன்பிடிக்கத்தான்
மீனை எடு வலையை மற.
11 மின்னல் பாயும் போது
வாழ்க்கைப் பயணத்தை
சிந்திக்காதவன்
எத்தனை அதிர்ஷ்ட்டசாலி
12 பழைய குளத்தில்
சிறுதவளை குதித்தது
பிளப்....அமைதி

இவற்றில் பல கவிதைகள் பாஷோ எழுதியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-------------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 13
ஜென் ஹைகூ கவிதைகள்
1. விரைவில் மடியப் போகிறது
இசை
ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை பறவை
- பாஷோ
2. வெண் பனி மூட்டத்தில்
கடலூம் வானும் சேருமிடத்தில்
ஒற்றைச் சிவப்புக் கோடாய்
உதய சூரியன்
- ஷினோ
3. நாம் வந்து காணும் போது
இங்கேயும் அந்த எரியும் வீடு
மனிதர்கள் ஏன் புகழ்கிறார்கள்
உள்ளே வாழ்வது நல்லது என்று
- இக்யூ
4 பிளம் மரங்களின்
வாசனை ஊடுருவிச் செல்கிறது
நிலவையும்
- பூசன்
5. குளிர்மழைப் பொழிகிறது.
எனக்கொரு தொப்பி கூட இல்லை.
மறு யோசனையில்
யார் கவலைப்படுகிறார்கள் ?
-பாஷோ
6  என் ஊருக்குப் போகிறேன்
தனியே
பனிக்கால பகல் வேளையில்
நாய் குரைக்கிறது.
குரைத்துக் கொண்டே இருக்கிறது
- ஷிகி
7. அலைகளில் புதைந்து எழுகையில்
மலர்ச்சியில்
மீனவர்களும் படகுகளும்
- ஷாக்யோ
8. சீக்கிரமே சாக இருந்தாலும்
அந்தப் பறவையின் குரலில்
அதன் த்வனிதெரிவதில்லை
- பாஷோ
9. உன் தேய்ந்த குரல்
குயிலின் மென் கூவல்
மேகத்தின் உச்சத்தில் இருக்கையில்
உன் பெயர் கூறுவாயா?
 - அபுட்சு
10 அந்தப் பூவின் பனித்துளிகள்
கீழே கொட்டின
வெறும் தண்ணீராக
- காகா நோ சியோ
11. மார்ச் மாதத்தில் நான் எப்போதும்
சியாங்கலை நினைக்கிறேன்.
வாசம் மிக்க அதன் மலர்க் கொத்துகளையும்
-  பாஷோ

------------------
பாஷோவின் பாதையில் ஒரு நெடும் பயணம்
லெஸ்லி டௌனர்
( LESLIE DOWNER )
நாற்று நடும் அவர்களின்
பாடல்களில் மட்டும்தான்
சேறு படவில்லை
- பாஷோ
இந்த ஹைகூ கவிதையை நாம் படித்து ரசித்திருப்போம். ஆனால் ஹைகூ என்பது கவிஞனின் கற்பனையில் இருந்து உதிர்ந்து தாளில் பேனாவால் எழுதப்பட்டது அல்ல. அப்படி எண்ணி விட்டால் அது சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்த அறியாமையை விட கொடியது.
ஹைகூ கவிஞனின் சொந்த அனுபவம். தான் கண்ட ஒரு இயற்கையின் காட்சியை அனுபவமாக்கி கவிஞன் வடிப்பவைதான் ஹைகூ கவிதைகள்.
மூன்றடியால் விண்ணையும் மண்ணையும் பாதாளத்தையும் அளந்த வாமன வடிவம் என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹைகூ கவிதைகள் குறித்து புரிதலை உருவாக்கி அதனை வளர்த்த ஜப்பானிய கவிஞர் மாட்சு பாஷோ.
பாஷோ என்றால் ஜப்பானிய மொழியி்ல் வாழை. தன் பெயரை வாழை மரத்தில் இருந்து பெற்றுக் கொண்ட பாஷோ தன்னை வாழையுடன் ஒப்பிடுவதை பெரிதும் விரும்பினார்.
" காற்றில் உடைந்து ஃபீனிக்ஸ் பறவையின் வாலைப் போல படபடக்கும் அதன் இலைகள்
மழையில் கிழிந்துப் போனாலும் பச்சை விசிறி போல் தோற்றமளிக்கும் . மலர்கள் இருந்தாலும் அவை பகட்டாக இருப்பதில்லை. அதன் மரம் எரிப்பதற்குப் பயனற்றது. கட்டடம் கட்டவும் உபயோகப்படாது . அது கோடாரியை அறிந்ததே இல்லை. அந்த வாழை மரத்தை அதன் பயனற்ற தன்மைக்காகவே நான் மிகவும் விரும்புகிறேன் " என்று தன் குறிப்பொன்றில் எழுதினார் பாஷோ.
பாஷோ ஹைகூ கவிதைகள் எழுதியது சுகானுபவ சித்திரமாக . தமது சீடரான  சரோ என்பவரை அழைத்துக் கொண்டு ஜப்பானின் நாகரீக வாடை படராத கிராமப்புறங்களின் உள்ளே அவர் பயணம் மேற்கொண்டார். யாரும் போகாத ஜப்பானின் வடக்குப் பிரதேசங்களில் பயணம் போன அவர் வழியில் கண்ட நாற்றுகளுடன் தனது ஹைகூ கவிதைகளை ஆட விட்டார். நிலவொளியில் உள்ளூர் கவிஞர்களுடன் ஹைகூ கவியரங்கம் நடத்தினார். செர்ரிப் பழங்களை வசந்தத்தின் குறியீடாக் கண்டு கவிதை படைத்தார். சில்வண்டுகளும் சோளக் கொல்லை பொம்மைகளும் கூட அவர் ஹைகூவில்  இடம் பெற்றன. அவ்வப்போது கல்லிலும் தரையிலும்  சுவர்களிலும் கவிதைகளை அவர் பதிவு செய்தார். இந்த பயண அனுபவங்களை எல்லாம் தொகுத்து லெஸ்லி டௌனர் என்ற பெண் ஒருவர்  on the narrow road  என்று ஒரு புத்தகமாக்கினார்.
பாஷோவுக்குத் தான் எத்தனை அனுபவங்கள். அறுவடைக் கால நிலவைக் காண மலையுச்சிக்கு ஏறினார். செர்ரிப் பூக்கள் பூத்துக் குலுங்குவதைக் காண பல நூறு மைல்கள் நடந்து சென்றார். ஒரு முறை விடியற்காலையின் அரையிருட்டில் அவர் நண்பர் சரோ தேநீருக்காக அடுப்பை மூட்டுகிறாா். அதைப் பார்த்ததும் அங்கிருந்த கல்லில் ஒரு ஹைகூவை செதுக்குகிறார் பாஷோ.
நீ தீ மூட்டுகிறாய்
நான் உனக்கு ஒரு அற்புதம் காட்டுகிறேன்
அதோ பார் பெரிய பனிப்பந்து.
பயணம் முடித்து ஊருக்குத் திரும்பும் பாஷோவுக்கு வேறு சில அனுபவங்கள் .தம்பிக்குத் தலை நரைத்து விட்டது.தாயார் காலமாகி விட்டார். தம்பி தாயாரின் நினைவாக அவருடைய வெள்ளை தலைமுடியை ஒரு பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதை எடுத்து பாஷோவிடம் தருகிறான்.நீண்ட நாட்களாகப் பார்க்க முடியாமல் போன தாயின் நினைவால். நான் அழுதேன் என்று குறிப்பு எழுதுகிறார் பாஷோ. அதையும் ஒரு ஹைகூ ஆக்கினார்.
நான் என் கையில் எடுத்ததும்
சூடனா கண்ணீரால்
கரைந்துப் போகும்
இலையுதிர்கால பனித்துளி
அந்த வெள்ளை முடியை பனித்துளியாக பார்க்கிற கவிஞன் உலகிற்கு தன் காட்சிகளை கவிதைகளாக்கி விட்டுச் சென்றுள்ளான்.
பயணத்தை முடித்து சில ஆண்டுகளில் 1694ம் ஆண்டு பாஷோ மறைந்தார்.
ஆனால் பல காலம் கழித்து அவருடைய கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்ட நூல்களாகத் தொகுக்கப்பட்டு இன்று உலகப் புகழ் மிக்க ஜப்பானியக் கவிஞராக விளங்குகிறார் பாஷோ.
லெஸ்லி டௌனர் பாஷோ பயணித்த பகுதிகளின் வரைபடைத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு நெடிய பயணம் மேற்கொண்டார். பாஷோவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி ஜப்பானின் தொழில்நுட்பமும் நாகரீகமும் தொடாத கிராமப்புறங்களுக்கும் மலைகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். பாஷோவின் கண்களாலேயே அந்த ஹைகூ கவிதைகள் பிறந்த இடங்களை அவர் தரிசித்தார். அந்த அனுபவங்களையே அவர் தனது புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார். ஏராளமான புதிய பாஷோவின் கவிதைகளையும் அவர் சேகரித்து தந்தார்.
என் தனிமையைக்
கொண்டாட எனக்கொரு
நண்பன் வேண்டும்
தேநீர் கோப்பையை சுடச்சுட இறக்கி விட்டு அதைப் பகிர ஆளில்லாத தனிமையில் பாஷோ எழுதுகிறான் ,
------------------------------------------------

ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 14
ஜென் ஹைகூ
the secrets of the universe என்ற ஓஷோவின்  ஹைகூ கவிதைகள் குறித்த உரை நூலை தமிழில் நான் பிரபஞ்ச ரகசியம்  என்று மொழிபெயர்த்தேன். கவிதா பதிப்பக உரிமையாளர் திரு .சொக்கலிங்கம் அவர்கள் இந்நூலை வெளியிட்டார். இந்நூலில் என்னை ஆக்ரமித்து ஓஷோவின் சீடர் என்ற உரிமையாலும் என் நட்பாலும் சுவாமி அம்ரித் யாத்ரி என்பவரும் தனது பெயரை போட்டுக் கொண்டார். பல கவிதைகளை அவர் ஓஷோவின் அர்த்தம் மாறாமல் இருக்க திருத்தினார். ஆனால் அதில் கவிதைகள் செத்துப் போயின. எனது உயிர்ப்பான மொழிபெயர்ப்பையும் கவிதை என்ற இலக்கிய வடிவத்தையும் அறியாததால் வந்த சிக்கல் இது. ஓஷோவுக்கு விசுவாசம் காட்டி கவிதையைக் கொன்றுவிட்டார். இது தவிர மேலும் 4 நூல்களை நான கவிதா பதிப்பகத்திற்கு மொழிபெயர்த்தேன். இதுவரை 5 புத்தகங்களையும் பலப்பல ஆயிரமாயிரம் பிரதிகள் விற்றதில் மொத்தமாக 6 ஆயிரம் ரூபாயும் சில புத்தகங்களும் தான்  எனக்கு கொடுத்தார். 5 நூல்களும் பல லட்சம் பிரதிகள் விற்றதை அறிகிறேன். ஒரு நூலில் எனது பெயரே இல்லை.
நல்ல மனிதர் என்று எழுத்தாள நண்பர் பிரபஞ்சனால் பாராட்டு பெற்றவர் திரு. சொக்கலிங்கம். அவரே இப்படி செய்தால் என்ன சொல்வது...அவரிடம் ஒருமுறை ஆற அமர்ந்து பேசிப் பார்க்க வேண்டும்.
எனக்கு பிரபஞ்ச ரகசியம் நூலை மீண்டும் மொழிபெயர்க்கத் தோன்றியது. முடியவில்லை, சரி இத்தொடரில்  பிரபஞ்ச ரகசியம் நூலின் சில பகுதிகளையாவது எனது தரமான மொழியாக்கத்தில் தர முடியும் என்று நம்புகிறேன். இந்நூலின் முதல் பதிப்பு 1997 ஆம் ஆண்டு வெளியானது.
அந்நூலின் முன்னுரையாக நான் எழுதியது...
தமிழில் ஹைகூ கவிதைகள் என்ற பெயரில் குப்பைகள் அச்சாகிக் கொண்டிருக்க மறுபுறம் போலிப் பண்டிதர்களின் ஹைகூ விளக்கங்கள்... கவிதையின் ஆத்மா புரியாகவர்கள்தாம் கவிஞர்களாகவும் கவிதை விமர்சகர்களாகவும் மாறிப் போன ஒரு துரதிர்ஷ்ட்டமான தமிழ்ச்சூழலில் மிகவும் அதிர்ஷ்ட்டவசமாக ஓஷோவின் இந்நூல் வெளியாகியுள்ளது. இதிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் காட்சிகளின் ஊடாகத் தெறிக்கும் அனுபவம். இயற்கையின் மீதான கட்டற்ற காதல். அது மட்டுமின்றி ஓர்  பிரபஞ்ச தரிசனம் கொண்டவை . இதிலுள்ள ஹைகூ கவிதைகளும் இதர ஜென் கவிதைகளும் இரத்தமும் சதையுமாக அசலானவை. இக்கவிதைகளுக்கான ஓஷோவின் உரைகள் இரத்தினச் சுருக்கம் எனலாம் .
கவிதையைப் பேசவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் குருவாக இதில் ஓஷோ பங்களித்துள்ளார். அவர் பேசியவைகளை விட பேசாமல் விட்ட மௌனங்கள் அடர்த்தியானவை. அர்த்தப் பூர்வமானவை. அவற்றை இந்நூலில் காணலாம்.
நல்ல கவிதைக்கு உரை  வேண்டியதே இல்லை. அது தானே பேசும் . மொழி புரிந்தால் போதும். எனினும் எது நல்ல கவிதை என்ற கேள்வி எப்போதும் இருப்பதால், இக்கவிதைகளின் சிறப்பைப் பற்றி ஓஷோ மிகவும் அரிய பங்களிப்பை அளித்துள்ளார்.
மூலத்தில் இந்நூலை கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி வெளியிட்டனர். தமிழில் அவ்வாறு பெரும் பொருட் செலவில் வெளியிட வாய்ப்பி்ல்லை.
இந்நூலை  மொழிபெயர்க்க கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பேன்.
----
நூலில் இருந்து.....
குயிலின் கூவல்
அதை விட சிறப்பாக செய்ய அதற்கு வேறு எதுவுமி்லலை
அந்த காட்டுச் செடிக்கும் தான்.
- இஸ்ஸா
சோம்பேறிகளுக்கு நி்ச்சயம் ஒரு தகுதி உள்ளது.ஒரு போதும் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்வதில்லை என்கிறார் ஓஷோ.
-----------
சோளக் கொல்லை பொம்மை
நெல் வயலில்
யாருக்கும் பயனற்று
விழிப்புணர்வு அற்று.
- டோஜன்
ஓஷோ கூறுகிறார்
வாழ்வின் லட்சியம் என்பது எல்லா லட்சியங்களிலிருந்தும் விடுபடுவது. உள்ளத்தின் மையத்தை நோக்கி நகர்வது. அதுவே காற்றில் நடனமாடும் மலர்களுடன் கலந்து நடனமாடும். நட்சத்திர மண்டலத்துடன் ஒரு நடனத்தில் கலந்துவிடும். ஒரு பிரபஞ்சப் பரவசம் அங்கே ஏற்படும். எந்த கவலையும் இல்லை. மனம் என்று எதுவுமே இல்லை. அதுவே உலகுடன் இரண்டறக் கலந்துவிடும் பேரானந்த நிலை.
------
நிலவொளியில் குளிக்கும்
மூங்கில் மலர்களைக் காண
நீயாகத் தான் விழிகளைத் திறக்க வேண்டும்
-யாரோ
ஓஷோவின் உரையில் இருந்து..
உன்னைத் தவிர யாரையும் விசுவாசம் செய்யாதே. உனக்குள் நீ அசைக்க முடியாத அளவு நம்பிக்கைக் கொள். அந்த ஆழ்ந்த நம்பிக்கை உனக்கு ஒரு வழியை உண்டாக்கும். அந்த பாதையில் நடந்து நீ குருவை அடையலாம். எவ்வித முயற்சியும் செய்யாதே. அமைதியாக அதனை நிகழ அனுமதித்து விடு. காலடி ஓசைகளையும் உரத்து எழுப்பாதே . வாழ்வில் நீ பாக்கியசாலியாக இருந்தால் ஒரு குருவை உன்னால் காண முடியும்.
----
இந்த இடத்தில் மூங்கில் மலர்கள் பூத்திருப்பதைக் காண நீ விழிகளைத் திறக்க வேண்டும் என்ற கவிதையின் வரியை கூர்மையாக கவனியுங்கள். எதுவும் நம்மிடமிருந்தே தோன்ற வேண்டும் என்கிறார் ஓஷோ. மூங்கிலிலும் மலர்கள் தாமாகவே மலர்கின்றன. காலடி ஓசையை உரத்து எழுப்பாதே என்கிறார் ஓஷோ. மலர்கள் மலர்வது அத்தனை மெலிதான ஓசை. அதைக் கேட்க முடியாமல் போய் விடும். பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற திரைப்படப் பாடலையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
----------
பட்டாம்பூச்சிகள்  பின் தொடர்கின்றன
சவ ஊர்வலத்தை
சவப்பெட்டியின் மீது மலர் வளையம்
- மேய் விட்சு
பிறப்பு இறப்பு இரண்டையும் சாட்சியமாக இருந்து கவனிக்க வேண்டும் என்கிறார் ஓஷோ. பட்டாம்பூச்சிகளுக்கு மலர்களில் இருந்து தேன் வேண்டும். அது சவப்பெட்டியில் சாத்தப்பட்ட மலர் வளையமாக இருந்தாலும் சரி. வாழ்வையும் சாவையும அவை பிரித்துப் பார்ப்பதில்லை.
-----------
நிலவில் லயித்தபடி
வீட்டை நோக்கி நான் நடக்கும்போது
என்னுடன் நடக்கிறது எனது நிழல்
ஓஷோவின் உரையில் இருந்து...
யாரும் என்னுடன் இல்லை. என் நிழல் மட்டும் என்னருகில் நடந்து வருகிறது.இந்த அழகான அற்புதமான உலகத்தைப் பார்த்து விட்டு ஆன்மா என்ற வீட்டை நோக்கி நான் செல்கிறேன். அப்போது அங்கு யாரும் என்னுடன் இருக்க மாட்டார்கள். எனது நிழல் கூட இருக்காது. எனது ஏகாந்தம் பூரணமானது.
------
வீட்டை நோக்கி நடக்கும்போது கூடவே நடந்து வரும் நிழல் கூட உள்நோக்கிப் போகும் போது விட்டு விலகிப் போய்விடுகிறது என்கிறார் ஓஷோ.
ஒரு இந்தி திரைப்படப் பாடலில் முகமது ரஃபி பாடுவார்
மனிதனுக்கு இப்படியும் ஒரு காலம் வரும்
அவன் நிழல் கூட நடுத்தெருவில் அவனை விட்டுவிட்டுச் சென்று விடும்.

ஓஷோ கூறுவது பேரானந்த நிலை .நிழலும் அற்றுப்போகும் நிலை. முகமது ரஃபியின் பாடல் உரைப்பது கையறு நிலை. வாழ்க்கை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை. நிழலையும் கூட அது இழக்கிறது. மனிதனை நிழல் கூட விட்டு விட்டுப் போய் விடுகிறது. நடுத்தெருவில் நிழலில்லாது நிற்கிறான்.
நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீ எனத் தெரியாதா அன்பே அன்பே என்று வாலி எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
நிழல் அகன்று விடுவதற்கும் விட்டு விலகி விடுவதற்குமான வேறுபாட்டை தியானம் செய்து பாருங்கள்.
-------
லெஸ்லி டௌனர் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளைக் காண்போம்.
பாஷோ சுமோ கோவிலுக்கு போகிறார் .அப்போது அவர் ஒரு ஹைகூ எழுதுகிறார்.
சுமோ ஆலயம்
மரநிழலில் அமர்கையில்
இசைக்காத புல்லாங்குழலின் இசை
காதில் ஒலிக்கிறது.
இன்னொரு கவிதை
இந்தப் பாதையில் யாருமில்லை.
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர்கால இருளில்
யமோட்டோ என்ற போர் வீரனின் கல்லறைஅருகில் அமர்கிறார் பாஷோ. அப்போது அவர் எழுதிய குறிப்பு இது...
மலைகள் பெயர்ந்து விழுகின்றன. நதிகள் தங்கள் பாதையை மாற்றிக் கொள்கின்றன. பழைய பாதைகளின் மீது புதிய பாதைகள் போடப்படுகின்றன.கற்கள் பூமிக்குள் புதைந்து போகின்றன.பழைய மரங்கள் சாய்ந்து புதிய தளிர்கள் முளைக்கின்றன.காலம் போகிறது.ஒரு சகாப்தத்தை இன்னொரு சகாப்தம் மாற்றியமைக்கிறது.எதுவும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது.இதோ என் கண்களுக்கு  முன்னால் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது.இது சந்தேகமே இல்லாமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.இதன் மூலம் பழைய கால மனிதர்களின் இதயங்களை என்னால் பார்க்க முடிகிறது.இந்த பயணத்தை பயனுள்ளதாக இதுவே மாற்றுகிறது.இப்பொழுது உயிருடன் இருப்பதற்கான மகிழ்ச்சியை இந்த கல்லறை ஏற்படுத்துகிறது.பயணம் தந்த துன்பங்களையும் வலிகளையும் மறந்து நான் ஆனந்தமாக அழத் தொடங்கினேன்...

---------------------
ஜென் தேநீர்
செந்தூரம் ஜெகதீஷ்
கோப்பை 15
On the narrow road -Lesley Downer புத்தகத்தை அலசுவோம்...
பாஷோ ஒரு பயணி. தனது சீடரான சரோவை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்களை மேற்கொண்டவர். எனது வீடே எனது பயணம் தான் என்று கூறியவர். சரோவும் கவிதை ரசிகர். கவிதை எழுதக் கூடியவர். பாஷோவின் நெருங்கிய நண்பர். இருவரும் கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்தனர். எங்கள் இருவருக்கும் வீடு இல்லை. இந்த பிரபஞ்சமே எங்கள் வீடு என்று எழுதினார் பாஷோ.
ஒரு கிராமத்தில் புதிய அரிய வகை மலர் ஒன்று மலர்கிற காலம் என்பதை இருவரும் அறிகின்றனர். பண்டைய ஜப்பானிய கவிஞர்கள் பலரும் அந்த மலரின் சிறப்பை புகழ்ந்து எழுதியுள்ளனர். இதனைக் காண பாஷோவுக்கும் சரோவுக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அதன்பிறகு ஊர்சுற்றியின் கால் சும்மா நிற்குமா...எத்தனையோ தூரமாக இருந்தாலும் ஒரு மலரைப் பார்ப்பதற்காக கால்நடையாகவே இருவரும் புறப்பட்டு விட்டனர்.  ஜப்பானில் இது ஒரு வழக்கமாகவும் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மலர்களைப் பரர்ப்பதற்கு இன்றும் ஜப்பானில் சுற்றுலாக்கள் உண்டு.
வழியில் சந்தித்த பலரிடம் அந்த மலரின் பெயரை சொல்லி அது எங்கே மலர்ந்திருக்கிறது என்று விசாரித்தனர். இரண்டு வயதான நபர்கள் துறவிகள், கவிஞர்கள்  கட்சுமி கட்சுமி என்று அந்த மலரின் பெயரை விசாரித்தபடி சென்றுக் கொண்டிருந்தனர். வழியில் சந்தித்த பலரும் அவர்களை பைத்தியங்களாக நினைத்திருக்கக் கூடும். மாலை வரை தேடியும் அவர்களால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியன் மறையத் தொடங்கியது. அப்போது ஒருவர் வழிகாட்டினார்...இரண்டு பைன் மரங்கள் ஒன்றாக இருக்கும். அதை கடந்து சென்றால் அந்த மலர்கள் பூக்கும் பகுதியை அடையலாம் என்று அறிந்து இருவரும் மகிழ்ச்சியுடன் வேக வேகமாக நடந்தனர். ஆனால் இரவு அடர்த்தியாகி விட்டதால் இருவரும் புகுஷிமாவில் இரவைக் கழிக்க அங்கு தங்கினர்.
காலையில் எழுந்ததும் பாஷோ அங்கிருந்த ஒரு சிறிய கல்லின் மீது ஒரு ஹைகூ எழுதினார்...
ஆகா அற்புதம்
பச்சை இலைகள், இளம் தளிர்கள்
சூரியன் ஒளி வீசுகிறது.
பின்னர் பாஷோ அந்த கட்சுமி என்ற அரிய வகை மலரையும் அங்கிருக்கும் பிளம் காடுகளையும் ரசித்திருக்கக் கூடும். நமக்கு அது குறித்த குறிப்புகள் இல்லை.
பாஷோ தேடிச் சென்ற அந்தப் பகுதியில் தான் இப்போது ஜப்பானில் புகுஷிமாவைக் கடந்து சென்றால் பிளம் காடு உள்ளது. அந்த பிளம் காடுகளில் புத்தம் புதிய பிளம் மலர்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாஷோவும் சாரோவும் கால்நடையாகவே புகுஷிமாவைக் கடந்து பிளம் மலர்கள் பூப்பதைப் பார்க்க சென்றிருந்தனர் என்று எழுதுகிறார் நூலாசிரியர் லெஸ்லி டௌனர்.அவரும் அப்பகுதிக்குப் பயணித்து அந்த பிளம் காடுகளில் பிளம் மரங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்தார். பாஷோவும் சரோவும் கட்சுமி என்ற ஜப்பானிய மொழியில் பிளம் மலர்களைத் தேடித்திரிந்து பார்த்த நாட்களை நினைவுகூர்ந்தபடி நின்றார்.
இதே போன்று ஒருலாரி டிரைவரின் உதவியுடன் லெஸ்லி டௌனர் பாஷோ  பயணம் சென்ற மருயமா அரண்மனைக்கும் அங்குள்ள பழைய கால கோவிலுக்கும் செல்கிறார். பாஷோ அந்த அரண்மனை பற்றி எழுதியுள்ளார். ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து அந்த அரண்மனை சிதிலமடைந்து விட்டது. அதைப் பற்றி அப்பகுதி மக்களுக்கே தெரியவில்லை. அந்தப் பகுதியை ஒருவழியாக கண்டைந்து அந்த கோவிலை லெஸ்லி தேடுகிறார்.
அங்கு அப்போது ஸ்ட்ராபெர்ரி மலர்களும் கனிகளும் பூக்கும் காலம் .ஒரு உள்ளூர் வாசியிடம் வழிகேட்கும் போது அவர் வழியை காட்டியதுடன் கையில் ஒரு அட்டைப் பெட்டியில் ஸ்ட்ரா பெர்ரி பழங்களையும் கொடுத்து அழைத்துச் செல்கிறார்.. இத்தகைய அனுபவங்களையே பாஷோவும் நாடிச் சென்றிருப்பார்,
அங்கு அந்தக் கோவிலின் பழைய சுவர் ஒன்று இடிந்த நிலையில் இருப்பதை லெஸ்லி கண்டுபிடிக்கிறார். அந்த சுவரில் பல கவிதைகளை எழுதி வைத்ததாக பாஷோ தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
அந்த சுவரில் மாட்சு பாஷோ என்ற பெயரையும் அவர் பதித்த கவிதைகளையும் கண்டுபிடிக்க தமது ஆய்வை மேற்கொள்கிறார் லெஸ்லி.
உள்ளூர் நபர்  பாட்ஷோ ஜூன் மாதம் இங்கு வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜூன் மாதத்தில் அப்பகுதியி்ல் ஆண்பிள்ளைகள் திருவிழா நடைபெறும் .அதாவது ஆண் பிள்ளை உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கொடி ஏற்றப்படும். இதே போல் தனியாக பெண் பிள்ளைகள் தினமும் திருவிழாவாக அப்பகுதியில் கொண்டாடப்படுவது வழக்கம். பாஷோ வந்த காலம் ஆண்பிள்ளைகள் திருவிழா நடந்துக் கொண்டிருக்கும் காலம்.
அந்த கோவிலுக்குச் சென்று ஒரு டீ கிடைக்குமா என்று கேட்கிறார் லெஸ்லீ. அந்தக் கோவிலில் பழங்கால  சாமுராய் போர் வீரனின் நீண்ட வாளும் குறுவாளும் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அதைப் பற்றி பாஷோ தனது பயணக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். பாஷோ சொல்ல சொல்ல சரோ அதை தனது டைரியில் குறித்துக் கொள்வது வழக்கம்.
அங்கிருந்த ஒரு பெண்அந்த கோவிலின் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருக்கும் பண்டைய பொருட்களைப் பார்வையிடுகிறார் லெஸ்லி.
பழைய மரப்பெட்டியில் தங்கமும்  தாமிர இலைகளும் போட்டு மூடி வைக்கப்பட்ட அந்த நீண்ட வாளை எடுத்துக் காட்டுகிறார்கள். அது ஒரு காலத்தின் ஜப்பானின் வீர அடையாளம்.
நீண்ட நேரம் அதனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் லெஸ்லி. இந்த இடத்தில் ஒருகாலத்தில் பாஷோவும் சரோவும் இந்த வாளை பார்த்து மயங்கி தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்திருப்பதால் பல நூற்றாண்டுகளைக் கடந்து இதனை லெஸ்லியால் பார்க்க முடிந்திருக்கிறது.
----------
ஜப்பானிய ஜென் துறவை மட்டுமல்ல வீரத்தையும் போதித்திருக்கிறது. பல ஜென் துறவிகள் சிறந்த வாள் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்.ஜப்பானிய போர்க்களப் பயிற்சிகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
யுத்தப் பயிற்சிக் கலை என்றொரு புத்தகம் ஜப்பானில் பிரசித்தி பெற்றது. (THE ART OF WAR -SUN-TZU)  இந்த நூலில் சுன்- சூ எழுதுகிறார் வாழ்வா மரணமா என்பது ஒரு பொருட்டல்ல . எனவே இதனை நிராகரிக்க முடியாது. யுத்தக் கலை 5 அம்சங்களைக் கொண்டுள்ளது. 1. அறத்தை பாதுகாக்கும் சட்டம் 2 சொர்க்கம் 3 பூமி 4 கட்டளையிடுபவர் 5 முறைகளும் ஒழுக்கமும்.
முதல் அம்சம் ஆள்வோரின் உத்தரவுக்குப் பணிந்து போரிடுவது, இரண்டாவது அம்சம் சொர்க்கத்தை ஆளும் இறைவனின் கட்டளைப்படிநடப்பது. மூன்றாவது அம்சம் பூமியில் வசிக்கும் மனிதர்களின் நன்மைக்காக போரிடுவது, நான்காவது அம்சம் கட்டளையிடும், போர்ப்படையை வழிநடத்திச் செல்லும் தளபதிக்குப் பணிவது, நா்ன்காவது அம்சம் போர்வீரனின் ஒழுக்கமும் பயிற்சி முறைகளும். ஒரு போரை வெல்ல இந்த 5 அம்சங்களே காரணமாக இருப்பதாக யுத்தக் கலை புத்தகம் விளக்குகிறது.
ஜென் கூடாரங்களில் யுத்தமும் ஒரு தியானமாக கருதப்பட்டது. கூரிய வாளின் முனை மீது கவனம் செலுத்துபவனே போர்வீரன். அவனுக்கு அந்த வாளின் முனையைத் தான் தெரியும் .எதிரிலிருக்கும் நபரைத் தெரியாது. அந்த கூரிய முனை எங்கெல்லாம் பாய்கிறது யாரையெல்லாம் சாய்க்கிறது என்பதை பயிலுவதே போர்க்கலை.
----------------------
ஓஷோ ஜென் பற்றியும் ஜென்குருமார்களைப் பற்றியும் தமது நூல்களில் ஏராளமான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். ஓஷோவின் நூல்களில் பயணித்தால் ஜென் பற்றி பல புதிய சிந்தனைகள் நமக்குப் பிறக்கின்றன. இனிவரும் பகுதிகளில் ஓஷோவின் ஜென் அனுபவங்களை பார்ப்போம்.
----------------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...