Thursday 3 December 2015

சென்னையில் ஒரு நூற்றாண்டுக்கான மழை




கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வரலாறுகாணாத வெள்ளத்தில் தத்தளி்க்கிறது சென்னை நகரம். நான் இத்தனை மழையை எனது வாழ்நாளில் இரண்டாவது முறையாக சென்னையி்ல் பார்க்கிறேன். முதல் அனுபவம் எனது திருமணத்திற்கு முந்தைய நாளில்.மறுநாள் திருமண ரிசப்ஷனில் மாப்பிள்ளையாக நிற்க வேண்டிய கோலத்தில் இருநத நான் முந்தின இரவு வீட்டை விட்டு ஓடிப்போனேன். ஏழு ஆண்டுகளாக காதலித்தவளை மணமுடிக்கும் தருணத்தில் ஒருவன் ஓடிப்போவதன் பின்னால் உள்ள சமூக, மற்றும் மனவியல் சிக்கல்களை சில வரிகளில் சொல்லி விட முடியாது.
அப்போது இரவைக் கழிக்க இடமில்லாமல் சிவசக்தி தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன். அநேகமாக அது ராம்சே பிரதர்சின் பேய்ப் படம் ( இப்ப தமிழ்சினிமாவில் பேய்ப்பட சீசன்- பே்ய்கள் இயக்கி பிசாசுகள் நடித்து ரத்தக் காட்டேரிகள் ரசிக்கிற சினிமா)
படம் முடித்து சிவசக்தி தியேட்டரிலிருந்து பெரியமேடு வரை கொட்டும் மழையில் நனைந்தபடி மாநகராட்சி கட்டடம் எதிரே உள்ள டீக்கடையில் தஞ்சம் புகுந்தேன். இரவில் நடுங்கும் குளிரில் நனைந்த உடலுடன் ஏராளமான மன வலியுடன் நான் கழித்த இரவில் மழை விடாமல் கொட்டியது. பகலில் மழையிடம் தோல்வியடைந்து நான் வீட்டுககுத் திரும்பி விட்டேன். திருமணமான கையுடன் ஒருவாரம் கடும் காய்ச்சல்
இந்த அனுபம்தான் மழையைப் பற்றிய மிகவும் பாதிப்பான அனுபவம் எனக்கு. அது ஒருநாளில் பெய்த பருவமழைதான்

பருவமழை பொழிய பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ  -இவள்
பருவமழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே என்ற ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் படப்பாடலை கேட்கும்போது எனக்கு எனது வாழ்க்கைதான் நினைவுக்கு வரும்
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை என்று நான் இத்தனைக்காலம் பாடிப்பறந்து வாழ்ந்து விட்டேன். ஈடில்லாத அன்பும் , மனிதநேயமும் கற்றதனால் பெற்ற ஞானமும் இல்லாமல் போயிருந்தால் தற்கொலை அல்லது கொலையில் எனது கதை முடிந்து போயிருக்கும்.

 அது எனது வாழ்க்கையை மாற்றிவிட்ட சாதாரண மழை
ஆனால் இப்போது பெய்த மழையோ பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பாக அடு்க்குமாடிக் குடியிருப்புகளில் கார் சகிதம் வாழ்ந்தவர்களே அகதிகள் போல் வெளியேறி அடுத்த வேளை உணவுக்காக அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.
மழையால் 269 பேர் உயிரிழந்தனர். நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். பல ஆயிரம் குடும்பங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர். நான் என் வீட்டில் என் பொருட்களுடன் இந்த நிமிடம் வரை பாதுகாப்பாகவே இருக்கிறேன்,
மும்பையில் மழையை பார்த்திருக்கிறேன் அடைமழை இடுப்புக்கும் மேலே மழைநீரில் நடந்தபடி இந்துமாதா திரையரங்கு அருகே உள்ள சத்திரத்தில் தங்குவதற்காக தாதர் ரயில் நிலையத்திலிருந்து தலையில் சூட்கேசை வைத்து நடந்த நாளும் நினைவில் இருக்கிறது. ஆனால் மும்பை மழை பயமுறுத்தவில்லை. என்னிடம் இழப்பதற்கு அந்த சூட்கேசும் சில நூறு ரூபாய்களும் தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் என் வீட்டை என் விக்கியை என் மனைவியை நான் இப்போது நேசிப்பது போல் எப்போதும் நேசிக்கவில்லை என்றே தோன்றுகிறது.இந்த மழை நான் பிரியமாக நேசிக்கும் மனிதர்களையும் எனது காலகாலமாக சேகரித்த நூல்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட அரிய பொக்கிஷங்களையும் இழக்கச்செய்துவிடுமோ என்ற பயம்தான் ஒவ்வொரு கணமும் மனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டை இழப்பது உறவுகளை பறிகொடுப்பது , வாழ்வாதாரத்தை வருமானத்தை இழப்பது என்ற சோகத்தை இந்த மழைக்காலம் மற்றவர்களின் அனுபவம வாயிலாக என் முகத்தில் அறைந்து உணர்த்திக் கொண்டிருக்கிறது.














No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...