Wednesday 23 December 2015

சந்திப்பு 9 எம்ஜிஆர்





24,10.2015 எம்ஜிஆரின் 28வது நினைவு தினம்



மக்கள் திலகம் எம்ஜிஆரின் ரசிகன் நான். சிறுவயதில் பார்த்த அவர் திரைப்படங்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை என என்வாழ்க்கைக்கு புதிய பாதையை வகுத்துள்ளன. இன்று ஓஷோ முதல் பாரதி வரை நான் அறிஞர்களின் பாதையில் நடக்க காரணம் இந்த வரிகளும் எம்ஜிஆரும்தான்.

அண்ணா நினைவிடத்திற்கு எம்ஜிஆர் அஞ்சலி செலுத்த வந்த போது  அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். கையில் மக்கள் குரல் நாளிதழில் எம்ஜிஆர் பற்றி டி.ஆர்.ஆர் .கட்டுரை.

சமாதியில் அவர் வந்து காரில் இறங்கிய போது உற்சாகமாக கையசைத்த ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு பதினெட்டு வயது. ஆனால் எப்படியோ என் கையில் இருந்த மக்கள் குரல் நாளிதழை கவனித்து விட்ட எம்ஜிஆர் அத்தனை கூட்டத்திலும் என்னைத் தேடி அருகில் வந்து என் கன்னத்தை செல்லமாக தட்டிச் சென்றார். அன்றே ஜென் ம சாபல்யம் அடைந்து விட்டேன்.
இன்று அதே அண்ணா சமாதி அருகே எம்.ஜி.ஆரின் சமாதிக்கு செல்லும் போதெல்லாம் அவர் என் கன்னத்தைத் தொட்டு தட்டிய ஸ்பரிசம் கண்களில் ஈரம் கோர்க்கிறது. அரசியலுக்கு அப்பால் ஒரு அற்புதமான மனிதரை ஒருநாளாவது வாழ்வில் சந்தித்த மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தான் தவற விட்டு விட்டேன். சந்திக்க முடியவே இல்லை.

----------------------------------
ஜனவரி மாதம் 2016ல் உரிமைக்குரல் இதழின் சார்பி்ல் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாளும் அன்பே வா படத்தின் பொன் விழாவும் சென்னை திநகர் பிட்டி தியாகராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இசைக்குயில் பி.சுசிலா, வசனகர்த்தா ஆரூர்தாஸ், பாடலாசிரியர் முத்துலிங்கம் போன்றவர்கள் எம்ஜிஆர் பற்றியும் இப்படத்தைப் பற்றியும் தங்கள் அனுபவங்களைப் பேசினார்கள். பொதுவாக எம்ஜிஆரின் கருணை மனம், வள்ளல் குணம் போன்றவையும் வாழ்வில் அவர் அடைந்த வெற்றிகளும் குறித்தே பேச்சுகள் இருந்தன.எம்ஜிஆர் பாடல்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அன்பே வா படத்தைப் பொருத்த வரை நான் எனது பள்ளிப்பருவத்தில் மடியில் எனது சிறிய தம்பியை அமர வைத்து பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது. அதன்பிறகு இப்படத்தை குறைந்தது ஏழெட்டு தடவை பார்த்து விட்டேன். பாடல்கள் மனனம் செய்து விட்டேன் .உள்ளம் என்றொரு கோவிலிலே பாடலும் ஏய் நாடோடி பாடலில் எம்ஜிஆரின் துள்ளலான நடனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. மெல்லிசை மன்னரும் வாலியும் மாயாஜாலம் பண்ணியிருக்கிறார்கள். சரோஜாதேவி கொள்ளை அழகு. காஷ்மீர் சிம்லா காட்சிகள் தீவிரவாதத்தால் நாம் இழந்த சொர்க்க்த்தை ஏக்கத்துடன் காணச் செய்கின்றன. நாகேஷூம் இ்ப்படத்தில் மி்க அற்புதமாக நடித்திருப்பார். லவ் பேர்ட்ஸ் பாடலில் அபிநய சரஸ்வதியின் விரல் அசைவுகளை பல ஆண்டுகள் கழித்து மாதுரி தீக்சித் சாஜன் படப்பாடலில் பயன்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார்.
எம்ஜிஆரின் அரசியலில் எனக்கு பெரிய நாட்டமில்லை என்றாலும் அவரது படங்களும் பாடல்களும் இன்றும் எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருபவையாக உள்ளன.



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...